வெட்டிவேர்

டச்சு கவர்னராக இருந்தவரும், தாவரங்கள் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தவருமான வான் ரீட் (Hendrik Adriaan van Rheede tot Drakenstein) கேரள வைத்தியரான இட்டி அச்சுதனுடன் (Itty Achudan,) இணைந்து ‘மலபாரின் தோட்டம்’ என்று பொருள் படும் Hortus Malabaricus 1 என்னும் கேரள தாவரங்கள் குறித்த விரிவான நூலை எழுதினார். 12 தொகுதிகளாக 1678இல் வெளிவந்த இவை ஒவ்வொன்றும் 500 பக்கங்களையும் பல செப்புத் தகடுகளையும் கொண்டவை. இட்டி அச்சுதன் வைத்திருந்த தலைமுறைகளாக அவர் குடும்பத்தினரின் வைத்திய தொழிலுக்கு உதவிய, ஆயிரக்கணக்கான மூலிகைகளின் விவரங்கள் அடங்கிய பழங்கால பனை ஓலைச்சுவடிகளின் உதவி கொண்டே வான் ரீட் இந்த தொகுப்பை உருவாக்கினார்.

அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் 742 தாவரங்களில் வெட்டிவேரும் ஒன்று. அவரே அந்த நூலில் குறிப்பிடுவதன் பொருட்டு வெட்டிவேரின் மலர்தலைப் பார்த்த கடைசி நபராக இருப்பார் என்று ரீட் அறிந்திருக்கவில்லை. மீண்டும் மீண்டும் தண்டுப்பதியன்கள் மூலம் சாகுபடி செய்யபட்டதாலோ என்னவோ தென்னிந்தியாவின் வெட்டிவேர் வகைகள் அதன் பிறகு மலர்வதை நிறுத்திவிட்டன. தென்னிந்திய வகை வெட்டிவேரில் மலர்தலை கடைசியாக பார்த்து ஆவணப்படுத்திய வான் ரீட் மற்றும் அச்சுதனின் மிக முக்கியமான இந்த பணியின் பொருட்டு அவர்களை கௌரவிக்கும் விதமாக இருவர் பெயர்களும் தாவரங்களுக்கு இடப்பட்டன (Achudemia, பேரினம், Entada rheedei).

வெட்டிவேர் ஆசியாவைத் தாயகமாக கொண்டது. வெட்டிவேரின் வட இந்திய, தென்னிந்திய என்னும் இரு வகைகளில் வட இந்திய வகைகள் வழக்கம் போல் மலர்ந்து கொண்டிருக்கின்றன.

கோடைகாலத்தில் தென்னிந்தியாவெங்கும் உலை போல் கொதிக்கும் காலநிலையில் இருந்து மக்களைக் காப்பாற்றிக் குளிர்விக்க வெட்டிவேர் மற்றும் நனனாரி சர்பத்துகளும், தர்பூசணியும், இளநீரும் எப்போதும் கிடைக்கும். வீடுகளில் பானைத் தண்ணீரில் நன்னாரி அல்லது வெட்டிவேர் போட்டு வைத்து நல்ல வாசனையும் குளிர்ச்சியுமாக அருந்தப்படும். வெட்டிவேர் தட்டிகளில் நீர் தெளித்த இயற்கைக் குளிரூட்டிகளும் பரவலாக புழக்கத்தில் இருக்கின்றன.

பலர் நன்னாரியும் வெட்டிவேரும் ஒன்றென கருதுகிறார்கள் அப்படி அல்ல.

நன்னாரி என்பது Hemidesmus indicus என்னும் தாவர அறிவியல் பெயருடைய ஒரு குறுஞ்செடி. அதன் வேர் நல்ல நறுமணத்துடன் இருக்கும். Indian sarsaparilla என்று அழைக்கப்படும் இதன் வேர்கள் கடினமாக இருக்கும். நன்னெட்டி என்றும் அழைக்கப்படும் இத்தாவரத்தின் வேர்களும் கோடையின் வெப்பத்தை ஈடுகட்ட நீரில் இடப்படுகின்றதன. நன்னாரி சர்பத்தும் பிரபலம். நன்னாரி உடல் உஷ்ணத்தை தணிப்பது உள்ளிட்ட ஏராளமான மருத்துவ பயன்களும் கொண்டது.

வெட்டிவேர் என்பது Chrysopogon zizanioides என்னும் அறிவியல் பெயர் கொண்ட கொத்துப்புல் வகை தாவரம். கிரைசோபோகோன் என்றால் லத்தீன மொழியில் பொன்னிற தாடி என்று பொருள் இதன் மலர் குவைகள் சூரிய ஒளியில் மின்னுவதை பேரினப்பெயர் குறிக்கிறது. பெரும்பாலும் இவை நீர் நிலைகளின் கரைகளில் காணப்படுவதால் சிற்றினப்பெயரான ஜைஜனோய்டஸ் ’ஆற்றங்கரையோரம்’ என பொருள்படும்.

கஸ் அல்லது குஸ் புல் (‘Khus.grass’) என்றும் அழைக்கப்படுகின்ற வெட்டிவேருக்கு -தமிழில் குருவேர், உசிர், வீராணம். விழல்வேர், விளாமிச்சை வேர், இருவேலி, என்னும் பெயர்களும் உண்டு. மலையாளத்தில் இதற்கு ராமச்சம்புல் என்று பெயர்.

வெட்டிவேர் 5 லிருந்து 7 அடி உயரம் வரை வளரும். இலைகள் நீண்டு கத்தி போன்ற விளிம்புகளுடன் இருக்கும், இதன் வேர் தொகுப்பு அதிகபட்சமாக மண்ணுக்கடியில் 13 மீட்டர் வரை செல்லும். அருகருகே வளரும் செடிகளின் வேர்கள் மண்ணுக்கடியில் ஒன்றுடன் ஒன்று பிணைந்து வலைப்பின்னல் போல காணப்படும்.

வட இந்திய காட்டு வெட்டிவேர் வகையில் மலர்களும், முளைக்கும் திறனுள்ள விதைகளும் உருவாவதால் இவை வேகமாக பல்கிப் பெருகும்.. தென்னிந்தியாவின் சாகுபடி செய்யப்படும் வகை பல ஆண்டுகளாக மலர்களை உருவாக்குவதில்லை எனவே இவற்றிலிருந்து விதைகளும் உருவாவதில்லை. தண்டுப்பதியன்கள் மூலமே இவை இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மலரும் காலம் வரையில் இவ்விரண்டு வகைகளுக்கும் வேறுபாடு கண்டுபிடிப்பது கடினம்,

தென்னிந்திய வகைகள் தடிமனான தண்டுகள், அதிகக் கிளைகளற்ற வேர் தொகுப்பு , அகலமான இலைகள் மற்றும் வேர்களில் எண்ணையின் அளவும் அதிகமாகக் கொண்டிருக்கும். இரண்டு வகை வெட்டிவேர்களும் மிக விரைவாக வளரும் இயல்புடையவை 3 வாரங்களில் 60 செ மீ ஆழம் வரை வேர்கள் வளரும் இதன் வேரை பயன்பாட்டிற்காக வெட்டி எடுத்த பின் இலைகளுக்கும் புல்லுக்கும் நடுவில் உள்ள பகுதியான தண்டுப்பதியன் எனப்படும் இணைப்பை (slip) வெட்டி எடுத்து, மீண்டும் புதிதாக நட்டுப் பயிரிடுவதால் இது வெட்டி வேர் என வழங்கப்படுகிறது. இதன் வேர் கருப்பு நிறமாக நல்ல நறுமணத்துடன் இருக்கும். இதனைப் பெண்கள் நறுமணத்திற்காகவும், உடல் குளிர்ச்சிக்காகவும், தலைப்பின்னலில் அணிவதுண்டு.

இது ஒரு பல்லாண்டுத் தாவரம். மிக குறைவான பராமரிப்பு தேவைப்படும் இது, மாசுபட்ட நிலங்களிலும் செழித்து வளரக்கூடியது. நிலத்தின் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியன எப்படி இருந்தாலும் வெட்டிவெர் செழித்து வளரும். அலுமினியம், மேங்கனீஸ், கேட்மியம், நிக்கல், காப்பர் போன்ற உலோக மாசுக்கள் இருக்கும் நிலங்களிலும் வேட்டிவேர் வளரும். அத்தகைய மாசுகளை அகற்ற வெட்டிவேர் அங்கே பயிரிடப்படுவதும் உண்டு. மாசுகளைச் சுத்திகரிக்கப் பயன்படுத்திய வெட்டிவேரை பானங்களுக்கோ, இதர மருந்துப் பொருட்கள் தயாரிப்புக்கோ பயன்படுத்துவதில்லை.

மழைப்பொழிவு உள்ள பகுதிகளில், மிக வறண்ட பிரதேசங்களில், மழை மறைவுப் பிரதேசங்களிலும் இவை நன்கு வளரும்.

வெட்டிவேரின் இலைகளும் பானம் தயாரிக்க பயன்படும். வெட்டிவேரின் வேர்களிலிருந்து காய்ச்சி வடிகட்டுதல் மூலம் நறுமணத் தைலம் தயாரிக்கப்படுகிறது. பண்டைய இந்தியாவில் வெட்டிவேரும் அதிலிருந்து எடுக்கப்பட்ட நறுமணத்தைலமும் வெகுவாக பயன்பாட்டில் இருந்தது.

16 ஆம் நூற்றாண்டில் அக்பரின் அரசாங்க நிர்வாகம் குறித்து அவரது அமைச்சரவையில் இருந்த அபுல் ஃபாஸில் (Abul Fazl) பெர்சிய மொழியில் எழுதிய அக்பரின் நிர்வாகம் என்னும் பொருள்படும் Ain-i-Akbari, யில் அக்பரே வெட்டிவேர்களை திரைச்சீலைகளாக கோடைக்காலத்தில் பயன்படுத்துவதை முதன்முதலில் கண்டறிந்தார் என்று குறிப்பிட்டிருக்கிறது.

பிரிட்டிஷ் இந்தியாவில் பணியாளர்களால் வெளியிலிருந்து இழுக்கப்படும் பங்காக்களின் காற்று போதுமான அளவு குளிர்ந்ததாக இல்லாத கோடைக்காலங்களில், ஜன்னல்களில் அமைத்திருக்கும் வெட்டிவெர் தடுப்புக்களில் நீர் தெளிக்க வென்றெ தனிப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு இருந்தனர். இப்போதும் இந்தியக் கிராமங்களில் பல வீடுகளில் வெட்டிவேரால் கூரை அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நன்கு அமைக்கப்பட்ட வெட்டிவேர் கூரைகள் சுமார் 20 வருடங்களுக்கு உழைக்கும். இப்போது பல தங்கும் விடுதிகளும் வெட்டிவேர் கூரைகள் கொண்டிருக்கின்றன.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தியா வெட்டிவேரை ஏற்றுமதியும் செய்துகொண்டிருக்கிறது. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட கிரேக்க மாலுமி ஒருவரின் பயணக் குறிப்பில் இந்தியாவிலிருந்து பெருமளவில் கப்பலில் வெட்டிவேர் ஏற்றுமதியானது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2000 வருடத்திற்கு முன்பான சங்க இலக்கியங்களில் ஓமலிகை என்னும் பெயரில் குளிக்கும் போது பயன்படுத்தப்படும் நறுமண பொருட்களில் ஒன்றாக வெட்டிவேர் குறிப்பிடபட்டுள்ளது.

முகலாயர் ஆட்சிக்காலத்தில் நறுமணப் பொருட்கள் மிக அதிக அளவில் உபயோகத்தில் இருந்தன, கன்னோஜ் அப்போது இந்தியாவின் நறுமணப் பொருட்களின் தலைநகரென்று அழைக்கப்பட்டது அங்கு ரோஜா, வெட்டிவேர் மற்றும் மல்லிகை ஆகியவை நறுமணத் தைலங்களுக்காகவே சாகுபடி செய்யப்பட்டன. கன்னோஜில் வெட்டிவெரிலிருந்து உண்டாக்கப்பட்ட பல வகையான அத்தர்கள் அப்போது தயாரிக்கப்பட்டன. அவற்றின் மிட்டி அத்தர் (‘Mitti attar’) மிகவும் பிரபலமாக இருந்தது.

வெட்டிவேரிலிருந்து நறுமணத்திற்கு காரணமான சுமார் 150 வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பயிரிட்டு 18 மாதங்களில் வேரை எண்ணெய்க்காக அறுவடை செய்யலாம். மண்வாசனை வீசும் வெட்டிவேர் எண்ணெய் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதிலிருந்து ஏராளமான நறுமணப் பொருட்களும் அழகுசாதனப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. பெண்களுக்கான நறுமணத் திரவியங்களில் பிரபலமான Caleche, Chanel, Dior Essence, Parure, Opium, Guerlain, Christian Dior, Givenchy, ஆகியவற்றிலும் ஆண்களுக்கான சில நறுமணத் திரவியங்களிலும் வெட்டிவேர் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் வெட்டிவெர் வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுகிறது.

வெட்டிவேரின் எல்லா பாகங்களுமே பாரம்பரிய மருத்துவ முறைகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன. பசியுணர்வைத் தூண்டவும், சிறுநீரைப் பெருக்கவும், உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும், வியர்வை பெருகவும் கிருமித் தொற்றுகளுக்கு எதிராகச் செயல்படவும் வெட்டிவெர் பயன்படுகிறது.

புதிதாக தோண்டி எடுக்கப்பட்ட வெட்டிவேர் கிழங்குகள், பாம்பு மற்றும் தேள் கடிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. வெட்டிவேரிலிருந்து தேநீரைப் போல தயாரிக்கப்படும் பானம், பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. வெட்டிவேர் கஷாயம், பித்தப்பையில் கற்களைக் கரைக்க, வியட்னாமிலும் பிலிப்பைன்ஸிலும் பயன்படுகிறது. முடக்குவாதத்துக்கு வெட்டிவெர் இலைப்பசை பயன்படுத்தப்படுகிறது .

வெட்டிவேர் மேற்கண்ட சிகிச்சைப் பயன்களோடு, நிலத்தில் மண்ணரிப்பையும் தடுக்கும். இதன் பரவலான வேர்தொகுப்பினால் உலகெங்கிலும் இப்படிப்பட்ட பயன்பாடு அதிகரித்திருக்கிறது, குறிப்பாக விவசாய நிலங்களில்.

தமிழக தேயிலை எஸ்டேட்டுகளில், மலைச் சரிவுகளின் விளிம்பில் வெட்டிவெர் வளர்ந்திருப்பதை காணலாம், சுமார் 100 நாடுகளில் வெட்டிவெர் இந்த பயன்பாட்டிற்காகவே பயிரிடப்படுகிறது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மண் அரிப்பு இந்திய விவசாயத்தின் மிகப் பெரும் சிக்கலாக உருவாகி இருந்தது உலக வங்கியில் இருந்து ரிச்சர்ட் க்ரிம்ஷா (Grimshaw) மற்றும் ஜான் க்ரீன்ஃபீல்ட் (Greenfield) என்னும் இரு விவசாய ஆராய்ச்சியாளர்கள் இதன் தீர்வுக்காக இந்தியாவின் பல மாநிலங்களுக்குப் பயணித்தார்கள். அப்போது கர்நாடகாவில் ஒரு குக்கிராமத்தில் வெட்டிவேரை விவசாயிகள் மண் அரிப்பை தடுக்க பயன்படுத்துவதைக் கவனித்தார்கள்.

மண் அரிப்பை தடுப்பதோடு, மழைநீர் வடிந்து வீணாவதையும் நிலங்களின் விளிம்புகளின் வளரும் வெட்டிவேர் 75 சதவீதம் தடுப்பதையும அவர்கள் கண்கூடாக பார்த்தார்கள். பின்னர் ,The Vetiver Network (TVN), எனப்படும் வெட்டிவேர் தொழில்நுட்பம் 20 முக்கிய நகரங்களில் தோற்றுவிக்கப்பட்டது, அதன் பிறகு இந்தியாவிலும் சீனாவிலும் விவசாய நிலங்களின் வரப்புகளிலும் விளிம்புகளிலும் வெட்டிவேரை வளர்க்கும் வெட்டிவேர் தொழில்நுட்பம் வெகு வேகமாக பரவியது. சீனாவில் இப்போதும் அலங்காரப் புல்வெளிகளிலும் வெட்டிவேரே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

வெட்டிவேர் தொகுப்பு நீரிலிருக்கும் மாசுக்களை உறிஞ்சி கொள்வதால் நீர் சுத்திகரிப்பில் இது மிக இன்றியமையாத பங்காற்றுகிறது.

கூரை, ஜன்னல் தடுப்பு மட்டுமல்லாது வெட்டி வேரிலிருந்து கோடையில் அணிந்து கொள்ளத் தொப்பிகள் வீட்டு உபயோகப் பொருட்கள், கூடைகள் இவற்றோடு இப்போது வெட்டிவேர் செருப்புகளும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றன. 400 ரூபாயிலிருந்து கிடைக்கும் இவற்றின் குளிர்ச்சி அளிக்கும் தன்மையால் கோடையில் இவற்றின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது. ஆன் லைன் வர்த்தகத்திலும் வெட்டிவேர் செருப்புக்கள் கிடைக்கின்றன.

பீஹாரில், சகோதர சகோதரியின் உறவைக் கொண்டாடும் Sama Chakeva எனப்படும் பண்டிகையின் போது ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் பரிசுப்பொருட்களை சிக்கி வேர்2 எனப்படும் வெட்டிவேர் கூடைகளில்தான் இடுவார்கள். வெட்டிவேரால் செய்யப்பட்ட அண்ணன் தங்கை பொம்மைகளும் அப்போது ஆயிரக்கணக்கில் செய்யப்பட்டு விற்பனையாகும். சிக்கி புல்லிலிருந்து செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்கு உலகச் சந்தையில் தேவை அதிகரித்திருக்கிறது. பாரம்பரியமான இந்த கலையைக் கெளரவிக்கும் பொருட்டு இந்த கைவினைப் பொருட்களுக்கென தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.3

ஃபிஜி தீவில் கரும்பு வயல்களின் ஓரங்களில் அடர்த்தியாக வெட்டிவேர் வளர்ந்திருப்பதை காணலாம். ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வெட்டிவேர் அடைக்கப்பட்ட மெத்தைகள் தலையணைகள் புழக்கத்தில் உள்ளன தென்னிந்தியாவில் வெட்டிவேரில் பின்னப்பட்ட பாய்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

தண்ணீரை இயற்கையாக குளிரூட்ட மற்றும் சுத்திகரிக்கப் பயன்படும் ‘சப்தவர்க்கம்’ எனப்படும் 7 மூலிகைகளுள், வெட்டிவேர் முக்கியமானது.

வெட்டிவேர், வெட்டிவினின் (Vetivenene) வெட்டிவோன் (Vetivone), குஷிமோன் (Kushimone) ஆகிய தாவர வேதிப்பொருட்களை உள்ளடக்கியது. இதன் இலைகளிலிருக்கும் சிசனால் (Zizanal) மற்றும் எபிசிசனால் (Epizizanal) போன்ற ஆல்டிஹைடுகள், இயற்கை பூச்சி விரட்டிகளாகவும் செயல்படுகின்றன.

இந்தோனேசியா உலகில் அதிகமாக வெட்டிவேர் தயாரிக்கும் நாடுகளில் முதன்மையாக உள்ளது. சீனாவும் பிரேசிலும் மிகக்குறைந்த அளவில் வெட்டிவேர் எண்ணெயைத் தயாரிக்கின்றன.

உலர்ந்த வெட்டிவேரை உடைகள் வைத்திருக்கும் அலமாரிகளில், படுக்கைக்கடியிலும் வைத்துக்கொண்டால் சிறு சிறு பூச்சிகள் அண்டாது நல்ல நறுமணமும் இருக்கும்.

மின்குளிரூட்டிகளின் விலையில் பத்தில் ஒரு பங்கு விலை கொண்டிருக்கும் வெட்டிவேர் தடுப்புக்களை அடுத்த கோடையிலாவது வாங்கலாம். வீட்டைக் குளிர்வித்து, வெளியே வெப்பத்தை அதிகப்படுத்தாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த, உடலுக்கும் இயற்கையான குளிர்ச்சியையும் நல்ல நறுமணத்தையும் அளிக்கும் இவற்றை தயாரிக்கும் பாட்டாளி மக்களின் வாழ்விற்கும் ஒரு கை கொடுப்பது போலிருக்கும்.

***

அடிக்குறிப்புகள்:

1. https://en.wikipedia.org/wiki/Hortus_Malabaricus

2. https://gaatha.com/sikki-grass-craft-bihar/

3. https://www.hindustantimes.com/cities/patna-news/special-postal-covers-released-to-honour-and-popularise-bihar-s-unique-sikki-craft-101629899772478.html

One Reply to “வெட்டிவேர்”

  1. அன்பு மிகு லோகமாதேவி- இத்தனை சிரத்தை எடுத்து வெட்டி வேர் குறித்த உங்கள் படைப்பு மணக்கிறது. All Your research oriented creations deserve the best appreciation.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.