வாக்குமூலம் – அத்தியாயம் 1

எல்லோரும் சொல்வது போல்தான் சொல்ல வேண்டியதிருக்கிறது. நேற்று நடந்த மாதிரிதான் இருக்கிறது. ஆனால், இருபத்தாறு வருஷங்கள் முடிந்துவிட்டன. பூனை நடப்பதுபோல் சப்தமில்லாமல் வாழ்க்கை ஊர்ந்து போயிருக்கிறது. இத்தனை வருஷங்கள் கழித்து இந்த வாழ்க்கையை அலசி ஆராய்ந்து ஆகப் போகிறதென்ன? பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, திரும்பவும் இந்த வாழ்வைத்தான் வாழ வேண்டியதிருக்கிறது. இதே வீடு, இதே அடுப்பங்கரை, இதே கணவர், இதே பிள்ளைகள், மாமா, அத்தை. ”அம்மா, எனக்கு உப்புமா வேண்டாம்.” ”அம்மா, சாயந்தரம் மியூஸிக் க்ளாஸ் இருக்கு. வர லேட் ஆகும்.” ”அம்மா, மாடி வீட்டு ஆன்ட்டி வந்திருக்காங்க” என்று கீதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வஸந்தா, ”வேற ஒண்ணுமில்ல அக்கா, ரெண்டு இனுக்கு கருவேப்பலை வேணும்” என்று, அவசர அவசரமாக எவர்சில்வர் சம்புடத்தில் ரவிக்கு டிபனை எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் போதே எதிரே வந்து நிற்பாள்.

சமாளித்து மாளாது. ரவியுடைய அப்பா, எந்தக் கவலையுமில்லாமல் காலை தினசரி படித்துக் கொண்டிருப்பார்கள். மாமா, இரண்டாவது காபி கேட்பார்கள். சமாளிப்பு, சமாளிப்பு. உலகமே சமாளிப்பில்தான் ஓடிக்கொண்டிருக்கிறதோ என்னவோ? நான் என்ன பெரிய படிப்பாளியா, இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு?

நாகலிங்கப் பூவின் வாசனை இத்தனை நெருக்கடி, களேபரத்திலும் மூக்கைத் துளைக்கிறது. திருநெல்வேலியில் காந்திமதி அத்தை இருக்கிற வளவில், பின்னால் வாய்க்காலுக்குப் போகிற முடுக்கில் ஒரு உயரமான நாகலிங்க மரம் நிற்கிறது. பூக்கிற காலத்தில் பூத்துத் தள்ளிவிடும். இளஞ்சிவப்பும் வெள்ளையுமாய் உதிர்ந்து கிடக்கும் பூவை, பூவென்றுகூடப் பாராமல்தான் எல்லோரும் மிதித்துக்கொண்டு போவார்கள். தை மாதம் வாசலில் கோலம் போட்டு சாணிப் பிள்ளையார் பிடித்து பூசணிப் பூவையும், பீர்க்கம் பூக்களையும் அழகாகச் சொருகி வைத்திருந்தால், உச்சியில் வெயில் ஏறுகிறதற்குள் ஏதாவதொரு சாணிப் பிள்ளையாரைப் பூவுடன் சேர்த்து யாராவது மிதித்துவிட்டுத்தான் போகிறார்கள். என்ன செய்ய முடியும்? இதற்கெல்லாம் என்ன செய்ய முடிந்தது?

திருநெல்வேலியிலாவது சாணிப் பிள்ளையார் பிடித்துப் பீர்க்கம் பூ குற்றி வைக்கச் சாணி கிடைக்கும். இந்த ஊரில் சாணிக்கு எங்கே போவது? எஃப். எம்.மில் எப்போதாவது பழைய பாட்டுப் போடுவான். அதைக் கேட்டுக்கொண்டே பாட்டில் லயித்துவிட்டால் தோசை கருகிப்போகிறது. பாட்டுக் கேட்பது முக்கியமா, தோசை முக்கியமா? பீர்க்கம் பூ, பழைய பாட்டு எல்லாம் திருநெல்வேலியோடு போயிற்று. நான் திருநெல்வேலிக்காரியுமில்லை, மெட்ராஸ்காரியுமில்லை. இரண்டும் கெட்டான். இந்த ஊரிலிருக்கிற எல்லாருமே இரண்டும் கெட்டான்கள்தான்.

டி.வி.யில் பழைய படம் போட்டால் பார்க்க வேண்டுமென்று தோன்றும். ஆனால், மாமாவுக்கும் அத்தைக்கும் ஸீரியல் பார்க்க வேண்டும். ஒரு ஸீரியல் விட்டுவிடக் கூடாது. பிள்ளைகளுக்கு கார்ட்டூன், அனிமேஷன், ரவி அப்பாவுக்கு நியூஸ். டி.வி.யில் பழைய சினிமாப் பாட்டுகளை காலை நேரத்தில்தான் போடுகிறார்கள். காலையில் சமையல் வேலையைப் பார்ப்பதா, சினிமாப் பாட்டைப் பார்த்துக்கொண்டிருப்பதா? அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் ரேடியோ பெட்டி கிடையாது. எதிர்த்த சாலாச்சி அக்கா வீட்டு ரேடியோதான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கும். சிலோன் ரேடியோவில் பழைய பாட்டுக்களைப் போட்டுக்கொண்டே இருப்பான். சிட்டி பரீதா முகமது நேயர் விருப்பத்தில் கேட்கிற பாட்டுக்களை ஊர் உலகத்துக்கே பிடிக்கும். சாலாச்சி அக்கா வீட்டில் எல்லா வீடுகளையும் போல பட்டாசலில் ரேடியோ இருந்தது. ஆனால், எங்கள் வீட்டு அடுப்பாங்கரை வரை பாட்டு கேட்கும்.

சிட்டி பரீதா முகமது நேயர் விருப்பத்தில் கேட்கிற பாட்டுக்களைக் கேட்டுக் கேட்டு, அவளைப் பார்க்க வேண்டுமென்று தோன்றும். அவள் எப்படி இருப்பாள்? மூணு-பீ-யில், கூடப் படித்த சுலைகா மாதிரி சுருள் சுருளான முடியுடன் இருப்பாளா? சுலைகா பேசினால் கிளி பேசுகிற மாதிரி இருக்கும். ரெஹானாவுக்கும் கூட நல்ல நீளமான முடி. பேட்டையிலிருந்து வருகிற சுலைகா, ரெஹானா கொசவன்தட்டி தெரு சந்திரா, பெரிய தெரு சங்கரி எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்களோ? இனிமேல் எந்த ஜன்மத்தில் அவர்களைப் பார்க்கப் போகிறோம்?

‘சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே’ என்று பாடிக்கொண்டிருக்கும்போதே, டக்கென்று ‘செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி’ என்று ரேடியோ செய்தி சொல்ல ஆரம்பித்துவிடும். சாலாச்சி அக்கா வீட்டு அண்ணன்தான் ரேடியோவைத் திருப்பியிருப்பான். இந்த ஆம்பளைகளுக்கு அப்படி அந்த நியூஸில் என்னதான் இருக்கிறதோ? பெண்கள் எல்லாம் கோவில், விரதம், பண்டிகை என்றிருக்கிற மாதிரி, இந்த ஆம்பளைகள் நியூஸ் கேட்பது, பேப்பர் படிப்பது என்று ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.

திருநெல்வேலிக்குப் போனால் குறுக்குத் துறை ஆற்றுக்குப் போக வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன். போன தடவை போயிருந்த போதும் குறுக்குத் துறைக்குப் போக முடியவில்லை. ‘ஆத்துல தண்ணி எங்க ஓடுது? கன்னங்கரேல்னு சாக்கடைதான் ஓடுது’ என்று ரவியோட அப்பா சொல்லி, என்னை ஆற்றுக்கே போகவிடவில்லை. தாயைப் பழித்தாலும் தண்ணியைப் பழிக்கலாமா என்பார்கள். என்ன நிறத்தில் தண்ணீர் ஓடினாலும், அது ஆறு அல்லவா? குறுக்குத் துறையில் போய் குளிக்க வேண்டும் என்று நினைத்த மாதிரி, ரத்னா டாக்கீஸில் சினிமா பார்க்க வேண்டும் என்றும் நினைத்தேன். இருந்ததே மூணு நாள். இதில் எங்கெல்லாம்தான் போக?

மெட்ராஸுக்கு வந்த புதிசில் ஊர் ஞாபகம் இருந்துகொண்டே இருக்கும். வீட்டு வேலையெல்லாம் ஒழிந்து மத்தியானம் கண்அயர்கிற நேரத்தில், ஊரில் சாலாச்சி அக்கா வீட்டுப் பட்டாசலில் ஆடிய தாயம், வளவோடு சேர்ந்து நெல்லையப்பர் கோவிலுக்குப் போனது, தென்காசியிலிருந்து வந்திருந்த தெய்வநாயகிச் சித்தியோடும், அந்த வீட்டுச் சித்தப்பாவோடும் பாப்புலர் டாக்கீஸில் படம் பார்க்கப் போனது, மெத்தை(மாடி)யில் எல்லோரும் ஜமுக்காளம் விரித்துப் படுத்தபிறகும் தூக்கம் வராமல் ஊர்க் கதைகளை எல்லாம் பேசிக்கொண்டிருந்தது என்று கடல் அலை மாதிரி பழைய ஞாபகங்கள் பழைய ஞாபகங்கள் புரண்டு புரண்டு வரும். கஷ்டம் தொண்டையை அடைக்கும்.

திருநெல்வேலியை நினைத்து மருகி மருகி என்ன செய்ய? இனிமேல் இந்த ஜென்மத்தில் அந்த ஊரில் போய் இருக்கவா போகிறோம். இந்த மெட்ராஸில் வீடும் வாங்கியாயிற்று. கீதா அடுத்த வருஷம் காலேஜ் போய்விடுவாள். ரவியும் இன்னும் இரண்டு வருஷம் கழித்து காலேஜுக்குப் போக ஆரம்பித்து விடுவான். கபாலி கோயிலும் வட பழனி கோயிலும்தான் சதம். சினிமாவுக்கெல்லாம் போய் எவ்வளவோ காலமாச்சு. டி.வி. வந்த பிறகு தியேட்டருக்குப் போய் படம் பார்ப்பதே மறந்து போய்விட்டது. என்றைக்காவது பீச்சுக்குப் போவோம். சேர்மாதேவியிலிருந்து மாரியப்பன் அத்தான் வந்திருந்தார்கள். அத்தான் ரொம்பப் பக்திமான். அவர்களுக்காக ஒரு டாக்ஸியை வாடகைக்கு அமர்த்தி திருவேற்காடு, மாங்காடு, அஷ்டலட்சுமி கோயில், அறுபடை முருகன் கோவில், கபாலி கோவில் எல்லாம் போனோம். ரவியோட அப்பா வரவில்லை. ஆபீஸ் வேலை அது இது என்று சொல்லித் தப்பித்துவிட்டார்கள்.

மாரியப்பன் அத்தான் அண்ணா சமாதிக்குப் போக ஆசைப்பட்டார்கள். வெளியூரிலிருந்து வருகிற எல்லோரும் ஆசைப்படுகிறதுதான். ‘மாமா, நீங்க வேணும்னா போயிட்டு வாங்க’ என்று இவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். ‘எவனாவது சமாதியைப் போய்ப் பார்ப்பானா?’ என்று என்னிடம் தனியாகச் சொன்னார்கள். எனக்கு அவர்கள் வரமாட்டேன் என்று சொன்னது ஆச்சரியமாக இல்லை. அஷ்டலட்சுமி கோவிலில் ஒவ்வொரு மாடியில் ஒவ்வொரு அம்மனின் சன்னதி இருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு, ‘ஆகமம் ஆகமம்னு சொல்றாங்க. இப்படி மாடி மேலே மாடி கட்டி அம்பாளை பிரதிஷ்டை பண்ணியிருக்காங்களே. இது எந்த ஆகமத்திலே சொல்லியிருக்கு? மாடி சன்னதியிலே பக்தர்கள் நின்னா, அவங்க காலுக்குக் கீழே கீழ் தளத்திலே ஒரு சன்னதி இருக்கிறது என்ன நியாயம்? என்று சொல்லி அந்தக் கோவிலுக்குள்ளேயே வரவில்லை. கடற்கரை மணலில் போய் உட்கார்ந்துவிட்டார்கள். நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போயிருந்தபோதும் இப்படித்தான், இதெல்லாம், இவ்வளவு உயரமா சாமி சிலை வைக்கிறதெல்லாம் காலத்தோட கோலம்னு சொன்னாங்க ரவியோட அப்பா. ‘எல்லாமே மெகா சைஸ்ல இருக்கணும்ங்கிறது இந்தக் காலத்து பேஷன். சாமியையும் ஒசர ஒசரமாச் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க’ என்று சொன்னாங்க. எனக்கு நாமக்கல் ஆஞ்சநேயர், சுசீந்திரம் ஆஞ்சநேயர் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. ‘அதெல்லாம் உயரமாததானே இருக்கு’ன்னு சொல்லவில்லை. எதற்கு வம்பு என்று விட்டுவிட்டேன்.

எல்லாவற்றிலும் இரண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்தான். இத்தனைக்கும் ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்துச் செய்த கல்யாணம்தான். ரவியோட அப்பா எனக்கு மாமா பையனும்கூட. இரண்டு பேருமே சம்பந்தமூர்த்தி கோவில் தெருவில் ஒரே வளவில் வளர்ந்தவர்கள்தான். ஐந்தாறு வீடுகள் தள்ளி அவர்கள் வீடு இருந்தது. சின்ன வயதில் அவர்கள், இப்படி எதை எடுத்தாலும் ஏறுக்கு மாறாகப் பேசியதாக எனக்கு ஞாபகமே இல்லை. அம்மாவாசை, பௌர்ணமி, வெள்ளிக் கிழமை, ஒரு நல்ல நாள் – பொல்லாத நாள் எதுவும் கிடையாது. ஆச்சி, தாத்தாவுக்கு திதி கொடுப்பதில்லை. ‘இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை’ என்று சொல்லி வாயை அடைத்துவிட்டால் என்ன செய்ய முடியும்? திதி கொடுக்காவிட்டால் அந்தப் பாவம் சந்ததிகளைத்தானே பாதிக்கும்?

‘யார் சொன்னது?’

‘யாரும் சொல்லவா செய்யணும்? காலங் காலமா நம்ம வீடுகள்ல செஞ்சுக்கிட்டு வாரதை எதுக்காகச் செய்ய மாட்டேன்னு அடம் புடிக்கணும்? நம்ம பிள்ளைகள்லாம் நல்லா இருக்க வேண்டாமா? பித்ருக்கள் பாவம் சும்மா விடுமா?’

‘செத்துப் போனவங்கள்லாம் நமக்குக் கெடுதல் பண்ணுவாங்கன்னு ஏன் நெனைக்கிறே?’

‘எதைச் சொன்னாலும் குண்டக்க மண்டக்கப் பேசுனா என்ன செய்யிறது?’ என்று அலுத்துப் போய்விடும் எனக்கு. ராகு காலம், நல்ல நேரம்ன்னு சொன்னால், ‘பஸ், ரயிலெல்லாம் ராகு காலத்துல பொறப்படாமலா இருக்கு’ன்னு சொல்லி வாயை அடைச்சிருவாங்க இவங்க. அதுக்காக வீட்டிலே ஒரு நல்லது கெட்டது நடத்தாமல் முடியுமா? நான் என்ன செய்ய முடியும்? நல்ல நாள், கெட்ட நாள், ராகு காலம், எம கண்டம் இதெல்லாம் நானா உண்டாக்குனேன்? இதுல எல்லாம் ஒண்ணும் இல்லன்னா காலண்டர்ல இதையெல்லாம் எதுக்குப் போட்டிருக்கான்?

‘இதெல்லாம் நம்பிக்கை… அவ்வளவுதான்.’

‘கல்யாணத்துக்கு நல்ல நாள், நல்ல முகூர்த்த நேரம் பாத்துத்தானே பண்ணுதாங்க? இதுல எல்லாம் ஒண்ணும் இல்லாமலா நேரங் காலமெல்லாம் பாக்குறாங்க…’

‘இதெல்லாம் இந்தியாவுல உள்ள இந்துக்கள் பார்க்கிறது. உலகத்துல எந்த நாட்டுலயும் இந்த நல்ல நேரம், கெட்ட நேரமெல்லாம் பாக்குறது கெடையாது. பூமியே உருண்டை. இதுல கெழக்கு, மேக்கு எது? உருண்டையில தெசையைப் பாக்க முடியுமா சொல்லு…’

‘சூரியன் உதிக்கிற தெசை கெழக்கு.’

‘சூரியன், பூமி, நட்சத்திரங்கள் எல்லாம் பந்து மாதிரி உருண்டை. எல்லாம் சுத்திக்கிட்டே இருக்குன்னு பாடத்துல படிச்சிருக்கியா இல்லியா? சுத்திக்கிட்டே இருக்கும்போது தெசை எல்லாம் எப்படிப் பார்ப்பே?’

‘யாரோ சொன்னதைத்தான நீங்களும் சொல்லுதிங்க? அந்த மாதிரித்தான் நானும் சொல்லுதேன்…’

ரவியோட அப்பா இப்பிடி சொல்லிச் சொல்லியே எனக்கே வரவர ஒண்ணுலேயும் பிடிப்பு இல்லாமப் போச்சு.

பால் திரிஞ்சு போன மாதிரி, மனசே திரிஞ்சு போச்சு. குத்து விளக்கை விளக்கிச் சாமி கும்பிட முடியவில்லை. ஏதோ தப்புப் பண்ணுகிற மாதிரி ஆயிட்டுது. சம்பந்த மூர்த்தி கோவில் தெருவுல நான், சரசக்கா, செண்பகம் எல்லாரும் சாயந்தரம் ஆனா வெளக்கைப் பொருத்தி சாமி கும்புடுவோம். தேவாரமெல்லாம் படிப்போம். நாங்க ரெண்டு தேவாரத்தைப் படிச்சிட்டு வெளையாடப் போயிருவோம். ஆனால், பாஞ்சாலி ஆச்சி ரொம்ப நேரம் தேவாரம் பாடிக்கிட்டே இருப்பாள். பாஞ்சாலி ஆச்சி தோசைக்கு அரைக்கும்போது, புறவாசலில் பூப் பறிக்கும்போது கூட தேவாரத்தை முணுமுணுத்துகிட்டே இருப்பாள். அதனால்தான் அவளுக்கு நல்ல சாவு கிடைத்தது.

பொம்பளையாகப் பொறந்து, இப்படி விளக்கேத்திக் கும்பிட முடியாமல் போன எனக்கு எப்படி நல்ல சாவு வரும்? போச்சு, போச்சு, சம்பந்த மூர்த்தி கோவில் தெருவுடன், திருநெல்வேலியுடன் எல்லாமே போய்விட்டது. ஏதோ ஜடம் மாதிரி இந்த ஊரில் வாழ்ந்துக்கிட்டிருக்கிறேன். இந்த அப்பார்ட்மெண்ட் வீட்டில் ராத்திரியும், பகலும் மாறி மாறி வருவதைத் தவிர ஒண்ணுமே தெரிய மாட்டேன் என்கிறது. தீபாவளி ஒண்ணுதான் பெரிசா, வெடியெல்லாம் போடுகிறதால் தெரிகிறது. வைகாசி விசாகம், ஆடி அம்மாவாசை, ஆவணி ஞாயித்துக் கெழமை, பொங்கல் எதுவுமே இந்த ஊருக்கே இல்லை.

ஊரிலே பொங்கல் வருகிறது என்றாலே ஒரு மாசமா வேலை நடக்கும். வெள்ளை அடிக்கிறது என்ன, அடுப்புக்கட்டி போடுகிறது என்ன என்று ஒரே அமர்க்களமாக இருக்கும். பொங்கலுக்கு முன்தினம் ராத்திரி தெருவை அடைச்சு கோலம் போடுவோம். இங்கே மார்பிள் தரையில், தினசரி காலையில், இரண்டு கம்பியை வாசலுக்கு முன்னால் இழுத்தால், அது பளிச்சுன்னு தெரியாது. மார்பிளும் வெள்ளை, கோலப் பொடியும் வெள்ளை. எப்படித் தெரியும்? இப்பிடி ஒன்றா இரண்டா? எல்லாவற்றையும் சகித்துக் கொண்டுதான் காலத்தை ஓட்ட வேண்டியதிருக்கிறது. இனிமேல் எந்த ஜென்மத்திலாவது திருநெல்வேலிக்கு, சம்பந்த மூர்த்தி கோவில் தெருவுக்குப் போக முடியுமா?

Series Navigationவாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன் >>

4 Replies to “வாக்குமூலம் – அத்தியாயம் 1”

 1. இன்னும் திருநெல்வேலி பற்றி எழுத என்ன இருக்கறது என்ற நிலையில் வண்ண நிலவனின் இத்தொடர் மீண்டும் ஊரின் நினைவைத தூண்டுகிறது. சேது வேலுமணி சென்னை

 2. சமீபத்தில் அரை நூற்றாண்டைக் கடந்த ஒரு கல்லறையைப் பார்க்கவேண்டி நூறு கி..மீ பைக்கில் போனேன். நெறைய பேருக்குள்இருக்கத்தான் செய்கிறது சமாதியைக் காண வேண்டும் என்கிற துடிபப்பு. அங்கு செல்லும்போது காலம் கடந்துபோன தடயத்தின் பிரம்பிப்பு ஆட்கொண்டுவிடுகிறது…..வாழ்த்துகள் “வாக்குமூலம்” ற்கு

 3. ஒரு நாவல் களம் துவங்கி நீண்ட பயணம் மேற்கொள்ள அந்த “”ஸ்டேஜ் செட்டிங்””

  அற்புதமாகச் செய்து விடுகிறார் வண்ண நிலவன்.

  விவியன் ரிச்சர்ட்ஸ், லாரா, டெண்டுல்கர் எவ்வாறு 150+ ரன்கள் அடிக்க தாங்கள் சந்திக்கும் முதல் 4 பந்துகளில் “ஸ்டேஜ் செட்டிங்ஸ்” செய்வார்களோ அது போலவே.

  ——-

  கதாபாத்திரங்களை கேசுவலாக, எளிதாக போகிற போக்கில் அறிமுகம் செய்யும் வித்தைக் காரர், வாசகர்களுக்கு எவ்வித சிரமும் அளிக்காமல் அறிமுகம் செய்கிறார்.
  நாவல் ஒரு நதி போல சிரமம் இல்லாமல் ஓடுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.