லீலாதேவி

அன்று காவேரியைப் பார்த்த போது கங்கையைத்தான் நினைத்துக்கொண்டேன். கங்கையோடு ஒப்பிடுகையில் மிகவும் சிறியது ஆனால் நீர்தானல்லவா ? பாரத தேசத்தில் ஓடும் நீரெல்லாம் கங்கைதானே. நீர் அமைதியாய் நடப்பது- கங்கை காவேரி எதுவாகட்டும் – மனம் குளிர்ந்து நிறைந்துவிடுகிறது. ஆனால் ஆச்சர்யம், எப்படி கங்கையில் எங்களுக்கு இருந்த அதே வரவேற்பு இங்கு காவேரியிலும். எனக்கு தமிழ்நாட்டை நினைத்தாலே நினைவில் முகங்கள்தான் எழுகின்றன. அவ்வளவு முகங்கள். மணிக்கணக்காகக் காத்திருந்து, குழுமி, தொட முயன்று ஆசீர்வதிக்கச் சொல்லி எத்தனை முகங்கள். மனித வெள்ளம்தான் மனதில் எழுகிறது காவேரியை மீறி தமிழ்நாட்டை நினைத்தாலே. அது மட்டுமா அவ்வளவு ஆரஞ்சு அவ்வளவு கடலை கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்டவற்றையெல்லாம் வழியில் தானம் செய்தபடியே வந்தோம். அவ்வளவும் ஒரு குழந்தையைப் போல் இருக்கும் சிரிக்கும் மனிதரைக் காண. கங்கையிலிருந்து காவேரி வரை அதே பெரும் ஜனத் திரள் அதே விரிந்த கண்கள். இங்கு மட்டுமா என்ன? அதற்கு சென்ற வருடம் லண்டன் சென்ற போது அங்கும் திருவிழா போல் ஜனத்திரளாமே. நடந்துதான் போவேன் என்று அடம். வழக்கம்போல் துண்டு உடுத்திக்கொண்டு. குளிருக்கு ஒரு போர்வையை போர்த்திவிட்டார்களாம். நடந்து செல்லும் வழியிலிருக்கும் லண்டன் தங்கும் விடுதிகளில் இவரைப் பார்க்க மட்டும் அவ்வளவு கூட்டமாமே. லண்டன் கங்கை காவேரி என்று இப்படி மக்கள் வந்து மேல் விழுகிறார்கள். ஆராதிக்கும் தரிசிக்கும் வியக்கும் கண்கள். மன்றாடும் கண்கள். ஏன்? அப்படி எதை தரிசிக்கிறார்கள்? உண்மையின் ஜ்வாலை பாபுஜி. ஆம் உண்மையின் ஜ்வாலைதான். சொல்லும்போது உடல் புல் அரிக்கிறது அதே நேரம் சோகம் ஒன்றும் கவ்வுகிறது. ஆனால் பாபுஜீ என்னைப் பொறுத்த வரை குழந்தைதான். அந்த சிரிப்பு மட்டும் போதுமே!


பாபுஜி என்னை குழந்தையிலிருந்தே அறிவார். எனக்கு லீலாதேவி எனப் பெயரிட்டதே பாபுதான். என் மாமா சோனிலால் பாபுவின் சீடர், பக்தர் என எதுவும் சொல்லலாம். சோனிலால் மாமாவின் வீடு லால்பட் கிராமத்தில் உள்ளது. பாபு தண்டி யாத்திரையின் போது நான் லால்பட்டில் இருந்தேன். அவ்வளவு ஜனத் திரள். தமிழ்நாட்டில் நான் பார்ப்பது போலவே அவ்வளவு ஜனத்திரள். தண்டி யாத்திரையின் போது சோனிலால் மாமாவின் வீட்டில் ஒரு இரவு தங்கினார் பாபு. அன்று பாபுவிற்குத் தேவையானவற்றை நானே செய்து கொடுத்தேன். கிச்சிலிப் பழமும் கொஞ்சம் ஆட்டுப் பாலில் செய்த கோவா. கொஞ்சம் கடலை. எல்லாம் ஒரு தட்டில் வைத்து நான்தான் அவருக்குக் கொடுத்தேன். சோனிலால் மாமா அறிமுகம் செய்தார் என்னை… அவரை நிறுத்தி “பெயர் சொல்ல வேண்டாம். நான்தான் இவளுக்கு பெயர் வைத்தேன். லீலாதேவி.. ஏதாவது லீலை செய்து இந்த குற்றம் நிறைந்த ஆத்மாவை மஹாத்மாவாக இல்லாவிட்டாலும் வெறும் ஒரு தூய்மையான ஆத்மாவாக மாற்றிவிடேன்” என்று பல்தெரிய முகம் மலர சிரித்தார்.


லால்பட்டில் தங்கியிருந்தது போலவே தமிழ்நாட்டு பிரவேசத்தில் காவேரிக் கரையோரம் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தோம் அன்று.கடைசி ஆளாக பிரயாணக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டேன். பாபு அநாவசியமாக பிரயாணத்தில் யாரையும் சேர்த்துக் கொள்வது இல்லை. செலவேறியதாக, அதுவும் மக்கள் பணத்தில் செய்யப்படும் பயணங்கள் செலவேறியதாக இருக்க பாபு ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் நான் ஒவ்வொரு முறை ஆஷ்ரமம் செல்லும் போதும் வேலையை இழுத்துப் போட்டு செய்வேன். வீட்டில் அப்படி இல்லை, ஆனால் ஆஷ்ரமம் சென்றால் அப்படி. தமிழ்நாடு செல்லப்போகும் ஜாகையில் இயல்பாக நானும் ஒருத்தி ஆனேன். பாபுவை கவனித்துக்கொள்வது என் வேலை. என்னோடு சேர்த்து நான்கு பெண்கள் இருந்தோம். மீரா பென், கிஷான் பென், சுதா பென் மற்றும் நான். காவேரியை வெரித்து பார்த்துக்கொண்டு கங்கை லண்டன் தன்டி என அலைந்துகொண்டிருந்தவளை மீரா பென்தான் அழைத்தார். “லீலா, பாபு கூப்பிடுறார்”.


நான் பின்புறம் வழியாக வீட்டினுள் சென்றேன். ஒரே நேராக நீண்ட விடு. வாசலில் ஒரு உருவம்.. யார்? சோனிலால் மாமாவா? ஆம் மாமாதான். வியாபார நிமித்தமாக மாமா அடிக்கடி மெட்ராஸ் வரக்கூடியவர். பாபுவை பார்த்துச் செல்ல வந்திருக்கலாம். ஆனால் அதோடு நிறுத்தி இருக்க மாட்டார். எனக்கு அறிவுரைக் கூறும்படி பாபுஜீயிடம் சொல்லிச் சென்றிருப்பார். இப்போது பாபு அழைப்பதன் நோக்கம் அதுவாகவே இருக்கலாம். நான்கு வருடம் முன்பு எனக்கும் கிஸான் லாலுக்கும் திருமணம் நடந்தது. பாபுவின் தலைமையில் நடக்க வேண்டும் என நான் அப்பா அம்மா மாமா அனைவருமே விரும்பினோம். ஆனால் பாபுவால் வர முடியவில்லை. எனக்கு ரொம்பவும் வருத்தம். பாபு அனுப்பிய கடிதம் வந்து சேர்ந்தது. அன்புள்ள லீலாதேவி என கோணல் மாணலான கிறுக்கலான எழுத்தில் துவங்கியது அக்கடிதம்.


பாபுவிற்கு நடுக்கூடத்தில் வெள்ளை நிற மெத்தையும் வெள்ளைநிறத்தில் திண்டும் போடப்பட்டிருந்தது. காலை மடித்து கையை ஊன்றி அமர்ந்திருந்தார் பாபு. எதிரில் அவரைக்காண வந்த ஐந்து தமிழ்நாட்டுக்காரர்கள். கையில் ஒரு முடிப்புடன். பயணத்தின் நோக்கமே இதுதான், தீண்டாமை ஒழிப்பிற்காகப் பணம் பொருள் கொடை பெறுவது. அருகே பாபா காக்கா நின்று தமிழை ஹிந்தியிலும் ஹிந்தியை தமிழிலும் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். நான் ஒரு ஓரமாக அவர்கள் செல்லும் வரை அங்கு நின்றேன். தண்டியின் போது இங்கு இவர்கள் ஒரு கடலோர ஊரில் உப்பெடுத்ததாகச் சொன்னார்கள். பாபு கைகூப்பி நன்றி தெரிவித்தார். ஒருவர் உணர்ச்சிவப்பட்டு அழுதார். பின் செல்லும்போது நால்வரும் மஹாத்மா காந்திக்கு ஜே கோஷமிட்டார்கள் தமிழில். சென்றபின் பாபு அழைத்தார் “லீலா இங்க வா”.


அருகில் சென்ற என்னை இருக்கையில் கையைப்பிடித்து அமர்த்தினார்.


“சோனி வந்திருந்தான்” என்றார்.


” “

“என்ன ஒன்னும் சொல்லக் காணும்.. கிஸான் எங்க? நானும் கேக்கவேயில்லையே உன்னைய”


” “

“லீலா… சோனி சொன்னான்.நீ கிஸான் கூட சண்ட போட்டுட்டுத்தான் ஆஷ்ரமம் வந்தியாமே.. கிஸானை எனக்குத் தெரியும். நல்ல பையன் அவன். அவன் கூட நீ ஏன் சண்ட போடுற”


“நான் எங்க போட்டேன் பாபுஜி.. அவர்தான் சண்ட போட்டார்.. என் அன்புக்குரிய பாபுஜீ என்ன வந்து காரணம் கேக்குறீங்க”


வாய்விட்டு சிரிப்பு “எனக்கு தெரியும் லீலா வாயாடின்னு… ஆனா அவன் சண்ட போட்டதுக்கான காரணத்த அவன் அவன்கிட்டயே கேட்டுக்கட்டும். நீ சண்ட போட்ட காரணத்த நீதான் உன்கிட்ட கேக்கணும் லீலா. உன் மேல தப்பே இல்லன்னாலும் தப்பு பண்ணின கிஸான மன்னிக்காத தப்பு உன்னிதுதானே. சக மனுஷனோட தீமைய மன்னிச்சிட்டே இருக்கணும் பொறுத்துகிட்டே இருக்கணும், அவன் கிட்ட இருக்குற நன்மை வெளிப்படுற வரைக்கும். அதுதான் அஹிம்சையோட வழி. அன்போட வழிங்குறது அதுதான்.” பாபு அமைதியாக இருந்தார். “உன் கணவன பொறுத்துக்க முடியாட்டி நாளைக்கு ஒரு தேசத்த எப்டி பொருத்துப்ப… எப்டி மன்னிப்ப…. வீட்லதான் ஆரம்பிக்குது தேசத்தோட பணி, அஹிம்சைப்பணி.”


” “

“ஒன்னும் சொல்லாட்டி எப்டி.. நீ கிஸான மன்னிக்கனும்.. நான் உன்ன மன்னிக்கச்சொல்லி கிஸானுக்கு கடிதம் போடுறேன்,” என்றார்.

“சரி பாபுஜி”


“இப்ப போ நாம கிளம்பணும். நேரமாச்சு. பஜனையும் முடிச்சிடலாம். இன்னக்கி நீ பாடணும் பஜன்ல. இந்த பேப்பர்ல உன் வீட்டு முகவரிய எழுதிட்டுப் போ” என்றார்.


நான் எழுதியபடி “பாபு” என்றேன்.


“சொல்லு லீலா”


“நீங்க லண்டன் போனப்போ ஒரு குட்டிப் பையன் “ஹே காந்தி உன் ட்ரவுஸர் எங்கே” என்று கேட்டானாமே”

“ஹ்ஹாஹாஅஹா சுட்டிக்காரப்பயல்”

பாபு சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். அவர் சிரிக்கையில் அவ்வளவு அழகு. நான் மீண்டும் உள் கூடம் வந்த போது பாபு என்னை மன்னிக்கக்கோரி கிஸானுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்.

காலம் ஓடிச் சென்றது. நான் இதனை எழுதிக்கொண்டிருக்கும்போது பாபு இல்லை. வருடத்திற்கு நான்கைந்து முறையாவது பாபுவை சந்தித்துக்கொண்டிருந்தேன். பாபு எனக்கு கிஸானுக்கும் சமாதானம் செய்து வைத்தபடியேதான், தேசத்தை விடுதலை நோக்கி அழைத்துச் சென்றார். பாபுவின் சொல்லுக்கு தேசம் செவி மடுத்தது. பாபு பேசியது தலைவர்களிடமல்ல கோடி கோடியாக இருந்த எளிய மக்களிடம். எளிய உண்மையை பேசினார். “நான் எளியன்” என்று பாபு சொல்வதுண்டு. பாபு முன் வைத்ததும் எளிய நேரடியான உண்மையைத்தான். பாபுவின் சொற்களில் சொல்ல வேண்டுமெனில் “மலையைப் போன்ற கடலைப் போன்ற பழையது… உண்மையே கடவுள்.” ஆனால் உண்மையை நோக்கி இட்டுச் செல்கையில் மந்தை உடைந்து சிதறிச் சென்றது. பாபுவை நினைக்கையில் சண்டையிடும் குழந்தைகளிடன் மன்றாடும் தாய்தான் அவர் எனத் தோன்றுகிறது. குழந்தைகள் உண்மையிலேயே மோசமாகச் சண்டையிட்டன. பாபுவின் சொல் கேளாமல் புரியாமல் சண்டையிட்ட குழந்தைதான் நானும். இதற்கிடையில் சோனிலால் மாமா இறந்து போனார். தனி நபர் சத்தியாகிரகத்தின் போதுதான் இறந்துபோனார் போலீஸ் தாக்குதலில். என்னைப் பற்றி பாபுவிடம் சொல்ல யாரும் இல்லாமல் போனார்கள்.

பின்பு நான் சற்றும் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது. தேசம் பிரிந்தது. பிரிவினை பற்றி பலவருடங்களாக பேச்சு இருந்த போதும் தேசம் பிரிந்த விதம் வெகுவாக உலுக்கியது. பிணங்கள் நிறைந்த ரயில் பற்றிய செய்திகளும், அக்கம் பக்கம் வாழ்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொல்லும் செய்தியும்… ஜாலியன் வாலா பாக் பற்றி சோனி மாமா சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனினும் குரூரம் பிரிவினை. பாபுவின் இந்தியாவில் இது நிகழ்கிறதென என்னால் நம்ப முடியவில்லை. பாபு தனக்கே உரிய எளிய உண்மைகளில் உறுதியான பிடிவாதத்தோடு நின்றார். பாகிஸ்தானுக்கு கஜானாவில் பாதி கொடுக்க வேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்தார். இக்காலக்கட்டத்தில்தான் பாபுவைக் கொல்ல வேண்டும் எனும் ஒரு பேச்சு எழுந்தது. மக்களுக்காகவே வாழும் பாபுபை மக்கள் எப்படி வெறுத்தார்கள்? என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.. நான் பாபுவை வெறுக்கவில்லையா? இல்லவே இல்லை என மனம் சொல்கிறது. ஆனால் ஒரு ஓரம், வீட்டின் இருளடைந்த மூலையில் இழைபின்னி வாழும் இருப்பையே அறிவிக்காத ஒரு சிலந்தியைப்போல ஒரு வெறுப்பு?


கிஸானைப் பற்றி பாபு பேச்செடுக்கவேயில்லை. பாபு தேசத்தை வழி நடத்துபவர். அவருக்கு இந்த நினைவு எப்படி இருக்கும் என நான் யோசித்ததுண்டு. ஆனால் பாபு நம் சிக்கலான மன ஓட்டத்துக்கு சிக்காத எளிமையுடைவர். சுதந்திரம் கிடைத்த பின்னும் கூட இது பாபு கண்ட சுதந்திர இந்தியா அல்ல என்பதை அவ்வளவு நிதர்சனமாக நான் உணர்ந்தேன். பாபு வாடிவிட்டதாக எனக்குத் தோன்றுவதுண்டு. அதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாபுவோடு இருக்க விழைந்தேன். அன்று பிர்லா மந்திருக்கு நான் வந்த போது முதலில் மீரா பென்னைத்தான் சந்தித்தேன் சாந்தமான முகத்தோடு முக்காடிட்ட வெள்ளை ஆடையில் அமைதியாக புன்னகைத்தார். பாபு பக்கத்திலிருந்த விசாலமான அறையில் இருப்பதாகச் சொன்னார். நான் மெல்ல நோக்கினேன். நாற்காலி ஒன்றில் தலை கவிழ அமர்ந்திருந்தார். நேருஜீயும் பட்டேல்ஜீயும் பேசிக்கொண்டிருந்தார்கள். சற்று கார சாரமாக உரையாடல் நிகழ்ந்துகொண்டிருந்தது. பாபுவிற்கு இன்னொரு சண்டையை சமாதானம் செய்யும் பணி. சற்று நேரத்தில் பஜனுக்கு காலம் பிந்திவிட்டதாக எழுந்தார். கதவோரம் நின்ற நான் அருகில் சென்றேன். பாபு என்னைப் பார்க்கவில்லை. என் தோளினைத் தொட்டவர் என் முகத்தைப் பார்த்தார். “லீலா” என்றவர் எதுவும் பேசவில்லை. பாபு மனம் வேதனையில் இருப்பது எனக்குத் தெரிந்தது.

பின் பாபு கேட்டார் “கிஸான் எப்டி இருக்கான்?” என்றார்.

பாபுவின் கைகளை மனுவின் கைகளுக்கு மாற்றிவிட்டு பாபுவின் காலணிகளை எடுத்து வந்து அவர் முன் வைத்தேன்.

“கிஸான் எப்டி இருக்கான்னு கேட்டேன்” என்றார் பாபு மறுபடியும்.

“தெரியல பாபுஜி” என்றேன்.

பாபு வேதனையின் அமைதியில் ஆழ்ந்து நின்றார்.

பின் பஜனுக்கு நடந்தபடி “உன் கிட்ட பேசணும். ஓடிடாத. கிஸானுக்கு இன்னொரு கடிதம் போடணும். முடிஞ்சா ரெண்டு பேரையும் ஒண்ணா வச்சுப் பேசணும்.”

நான் எதுவும் பேசவில்லை. நானும் கிஸானும் பிரிந்து நாலரை வருடம் மூன்று மாதமாகிறது. பாபுவை அன்று சந்தித்தது நாலரை வருடம் மூன்று மாதம் கழித்துதான். நான் பாபுவிற்கு என்ன சொல்வது? முயல வேண்டாம் பாபு என எப்படிச் சொல்வது.

அங்கு தங்கியிருந்த நாட்களில் அவ்வப்போது பாபு என்னைப் பார்க்கும்போது செய்ய வேண்டிய பணி ஒன்றை நினைவுப்படுத்தி மனதில் குறித்துக்கொள்வதைக் காண முடிந்தது. ஆனால் அதற்கு அமையவேயில்லை. பாபு என்னுடன் பேசியதிலிருந்து இரண்டு நாட்களில் அந்த துப்பாக்கி வெடித்தது. நான் மூர்ச்சையுற்று விழுந்தேன்.

பின் என் கைக்குக் கிடைத்தது, பாபு கிஸானுக்கு எழுதிய கடிதம். மன்றாட்டுதான். மன்றாடும் பாபுவை நான் கைவிட்டேன். இன்று வரை பாபு என்னிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார். ஆனால் இன்றுவரை நான் பாபுவை கைவிட்டுக்கொண்டே இருக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.