மல்லிகா ஹோம்ஸ்

தமிழில்: ஷியாமா

திருவாளர் சுவாமிநாதன், சைவ உணவு ஹாலில் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு, தன்னுடைய அடுக்குமாடி வீட்டிற்கு திரும்ப நடந்து கொண்டிருக்கையில், திடீரென இறந்து போனார். அவர் எனக்கு சற்று முனனால் தான் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் தன் நடை வேகத்தைக் குறைத்ததை நான் பார்த்தேன். வேகமான காலடிகள் கொண்டிருந்த அவரது நடை, வேகம் குறைந்தும் கூனல் விழுந்தது போலும் மாறியது. அவரது இடது கை தொங்கிவிட்டது. அவர் நடை தளர்ந்து சுருண்டு தரையில் விழுந்தார். நான் வேகமாகப் போய் அவரை தாங்கிப் பிடித்திராவிட்டால், அவரது தலை சிமெண்ட் தரையில் மோதி யிருக்கும். கண்டிப்பாக ரத்தம் கொட்டியிருக்கும். ஆனால் நான் வேகமாக நடந்து அவர் கீழே விழுவதற்கு முன், என்கைகளை விரித்ததில், அவர் நேரடியாக என் கைகளில் விழுந்தார். வெகு ஜாக்கிரதையாக அவரது தலைக்கு கீழேயிருந்து என் கையை எடுத்து அவரை சிமெண்ட் தரையில் உட்கார வைத்தேன். அவரருகே அமர்ந்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவரது இடது கண், வலது கண்ணை விடக் கீழே இறங்கியிருந்தது. இடது கன்னம் தொங்கிப் போய் கீழே விழுந்து விடும் போலிருந்தது.

ஆம்புலன்ஸ் வரும் வரை நான் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தேன். என் கணவர் இறந்த பிறகு, அதுதான் நான் முதல் முறையாக ஒரு ஆணின் கைகளைத் தொடுவது. அவரது உடலில் இருந்த வெதுவெதுப்புக்கு மாறாக, விரலில் அணிந்திருந்த சதுரவடிவ வைர மோதிரம், இறுகிக் குளிர்ந்திருந்தது. ஸ்ட்ரெச்சரில் அவர் உடல் ஏற்றப்படுவதற்கு முன்பாக, அவர் ஒரு முறை கண்களை திறந்து, என்னை பார்த்து “ரேணுகா” என்று கூறியபடியே என் கைகளை அழுத்தினார். தன் மனைவியை கூப்பிடுமாறு அவர் என்னிடம் சொன்னாரா, அல்லது என்னைத் தன் மனைவி என்று நினைத்துக் கொண்டாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஹாஸ்பிடல் போய்ச் சேர்வதற்கு முன்பாகவே அவர் இறந்து விட்டிருந்தார். அவருக்கு வயது எழுபத்தைந்து. என் கணவர் உயிருடன் இருந்திருந்தால் இருவரும் சம வயதினராக இருந்திருப்பார்கள்.

அவருடைய மரணம் தான் இங்கு நிகழ்ந்த முதல் மரணம். இது வயதானவர்கள் தங்கும் இடமாக இருந்ததால், ஏற்றுக் கொவதற்குக் கடினமாக இருந்தது. மல்லிகா ஹோம்ஸ் புதிய கட்டிடம். அதன் முதல் குடியேறிகள், நான் உள்பட, இரண்டு வருடம் முன்பு தான் குடியேறியிருந்தோம்.

மல்லிகா ஹோம்ஸின் பணியாளர்கள் எவ்வளவு சிறப்பாக சுவாமிநாதனின் மரணத்தைக் கையாண்டார்கள் என்று சில நாட்களுக்கு முன்புதான், என் மகள் கமலாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நேரத்தை வீணாக்காமல் எல்லா ஏற்பாடுகளையும் மிகவும் கச்சிதமாகச் செய்தார்கள். முழு வளர்ச்சியடைய, கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும் “கோல்டன் ட்யூ ட்ராப்ஸ்” செடிகளையும், புதிதாக வெட்டி விடப்பட்டிருந்த புல்வெளியையும், நசுக்கி சிதைத்துக் கொண்டு, ஆம்புலன்ஸ் வண்டி வந்து நின்றது.

“கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றாள் கமலா.

மல்லிகா ஹோம்ஸ் அவ்வளவு ஒன்றும் மோசமான இடம் இல்லை. உண்மையில், அது மிகவும் நல்ல இடம் தான். சென்னை மாதிரியான நகரங்களிலிருந்து வருகிற என்னைப் போன்ற நகரவாசிகளுக்கு, கொஞ்சம் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தோன்றியது. கோயம்புத்தூருக்கு வெளியே, தம்பூர் சாலையும், தேசிய நெடுஞ்சாலை 181ம், சந்திக்குமிடத்தில், மல்லிகா ஹோம்ஸ் அமைந்துள்ளது. நடுவாந்தரமான நகரத்தை விட்டகன்று, அதன் புறநகர் பகுதிகளுக்குச் சென்றதில், மல்லிகா ஹோம்ஸை உருவாக்கியவர்களுக்கு அதிக இடம் கிடைத்த காரணத்தினால், நாங்கள் பெரிதும் பாராட்டுகிற பல வசதிகளில் அவர்களால் முதலீடு செய்ய முடிந்தது. வழுக்காத கற்கள் பாவப்பட்ட குளியலறைகள், தெர்மோஃபாயிலாலான அலமாரிகள், இப்போது பிரசித்தியாக இருக்கிற வழவழப்பான மரத் தரைகள், வரைந்த சித்திரம் போன்ற அழகான இயற்கை காட்சிகள் நிறைந்த தோட்டங்கள் மற்றும் புல்வெளிகள், மின்வெட்டு ஏற்படுகையில் தொடர்ந்து எட்டு மணி நேரம் ஓடக்கூடிய ஹோண்டா இன்வெர்ட்டர்கள்.

நான் இங்கே வசிக்க அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டுமென்று, என் கமலா எனக்கு அடிக்கடி நினைவூட்டுவாள். தென்னிந்தியாவிலேயே, இத்தகைய வசதிகள் நிறைந்த இரண்டாவது இடம் இதுதானாம். இங்குள்ள வீடுகளும் மிக விரைவில் விற்றுத் தீர்ந்தன. இருப்பினும், என் மகள், எவ்வளவுதான் கவனத்துடன் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் இந்த இடத்தைப் புகழ்ந்தாலும், அவளால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மாற்றிவிடவே முடியாது. மல்லிகா ஹோம்ஸ், வேறு போக்கிடம் இல்லாதவர்களுக்கான ஓர் இடம்.

நாங்கள் இங்கு மேல் நடுத்தர வர்க்கத்தினர். எங்களுக்கு சொந்தமாக மருத்துவமனைகளோ தொழிற்சாலைகளோ அல்லது பெரும் நிலப்பரப்புகளோ இல்லை. மாறாக, அத்தகையோருக்காகப் பணி புரிகிறோம்- புரிந்தோம். அவர்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்தவர்கள். என்னதான் புல்வெளி களையும், போகன்வில்லா கொடிகளையும், ஓலியாண்டர் செடிகளையும் எங்கள் தோட்டக்காரர்கள் மிக அருமையாக பராமரித்த போதும், அவர்கள் இங்கு வரமாட்டார்கள். வீடு நிறைய வேலைக்காரர்களுடனும், குழந்தைகளுடனும், நகரத்தில் இருக்கும் தங்கள் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் வசிப்பதையே விரும்புவார்கள். பணக்காரர்களின் குழந்தைகள் பணக்காரர்களாகவே இருப்பார்கள். அதிர்ஷ்டத்தை அவர்கள் வேறு இடத்தில் தேடமாட்டார்கள்.

என்னைப்போலவே, மல்லிகா ஹோம்ஸில் குடி இருப்பவர்களில் பெரும்பாலானோர், தங்கள் மகனையோ அல்லது மகளையோ வெளிநாட்டிற்குத் தாரை வார்த்திருப்பவர்கள். அந்த காரணத்தினால் தான் நாங்கள், எங்கள் குடும்பங்களோடு இல்லாமல், இத்தகைய ஓய்வுபெற்ற முதியோர் சமூகமும் தனியார் மருத்துவமனையும் ஒருங்கிணைந்த அமைப்புகளில் வசித்துக் கொண்டிருக்கிறோம். என் கமலா, இருபத்தியைந்து வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு வெளியேறினாள். அவள் தற்போது, அட்லாண்டாவின் புறநகர் பகுதியிலி ருக்கும் ஒரு சிறிய நகரத்திலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் சிங்க்ரோஸ் சிஸ்டம்ஸ் என்னும் நிறுவனத்தில் உதவி நிர்வாக இயக்குனராக வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

ரேணுகா சுவாமிநாதனுக்கும் இரண்டு குழந்தைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். ஒருவர் ஜெர்மனியிலும் மற்றவர் ஆஸ்திரேலியாவிலும். சுவாமிநாதனின் ‘காரியங்களின்’ ஏற்பாட்டை கவனிப்பதற்காக அவர்கள் ஏற்கனவே வந்திருக்கக்கூடும்.

நான் ரேணுகாவுக்காக பச்சை நிறத்தில் அருமையான மோஹேர் கம்பளியாலான ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருக்கிறேன். காரியங்கள் முடிந்த பிறகு ரேணுகா தன் மகனோடு கொஞ்ச நாட்கள் இருப்பதற்காக அடிலைட் செல்லவிருக்கிறார். நான்தான் அவரிடம் “கட்டாயம் போய்விட்டு வாருங்கள். சுவாமிநாதனின் மறைவுக்குப் பிறகு, உடனடியாகத் தனியாக இருப்பதென்பது பெரும் மனச்சோர்வை உண்டாகும்” என்று சொன்னேன். அவரது மகன், அங்கு சினிமா தியேட்டரில் மேனேஜராக இருக்கிறாராம். அடிலைட் பல்கலைக்கழகத்தில் அவரால் பட்டப் படிப்பை முடிக்க முடியவில்லை. ஆனால் எப்படியோ வேலை ஒன்றை தேடிக் கொண்டு அங்கேயே தொடர்ந்து இருக்க வழி செய்து கொண்டு விட்டார். ரேணுகா என்னிடம் இதைப் பகிர்ந்து கொண்டபோது, நான், ” நல்லது தானே!” என்று சொன்னேன். நான் மனதார நினைத்ததும் அது தான்.

மல்லிகா ஹோம்ஸில், குழந்தைகள் அமெரிக்காவில் இருக்கிற பெற்றோர்களுக்கு, குழந்தைகள் துபாயிலோ கத்தாரிலோ இருக்கும் பெற்றோரை விட மதிப்பு அதிகம். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, மற்றும் ஏனைய மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் குழந்தைகளைப் பெற்றவர்கள், மேற்சொன்ன இரண்டு பிரிவுகளுக்கும் இடையே வருவார்கள். மத்திய கிழக்கு நாடுகளுக்கு கீழாக, ஆப்பிரிக்கா கருதப்படுகிறது. அங்கு செல்வது கடினமானதென்பதும் அந்நாட்டின் வாழ்க்கைமுறையை நம்மவர்கள் புரிந்துகொள்ளும் விதமுமே இதற்குக் காரணம். நம் குழந்தைகள் என்ன வேலை செய்கிறார்கள், எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், நம் பேரக்குழந்தைகள் புத்திசாலிகளா அல்லது சாதாரண அறிவு படைத்தவர்களா – இவை எல்லாமும் கூட கருத்தில் கொள்ளப்படுகிறன. குழந்தைகள் அதி புத்திசாலிகளாகவும், பேரக்குழந்தைகள் மக்குகளாகவும் அமைந்துவிடுவது, மாபெரும் சோகம்.

ரேணுகாவிற்காக ஸ்வெட்டர் பின்ன நான் வாங்கிய கம்பளி நூலின் விலை ஒரு மீட்டர் ஐந்து ரூபாய். இது நான் வழக்கமாக கொடுப்பதை விட அதிகம் தான் எனினும், இது சரிதான் என நான் முடிவு செய்தேன். ஸ்வெட்டர் அவரது கண்களின் பசுமையை எடுத்துக்காட்டுவதோடல்லாமல், ஆஸ்திரேலிய குளிருக்கும் நன்றாக இருக்கும். அடிலெய்டின் சீதோஷ்ண நிலையை நான் இணையத்தில் தேடியபோது, அது பத்து டிகிரிக்கும் கீழே போகக்கூடும் என்றது. கூடவே, மரணம் என்பது, ஒருவரை உறையச் செய்ய வல்லது. ரேணுகா வெதுவெதுப்பாக உணர வேண்டும் என நான் விரும்பினேன். என் கணவர் இறந்த சில மாதங்களில், ஒருவிதக் குளிர், கோடை மாதங்களிலும் என்னை வாட்டியது.

* * *

என் கணவரின் மரணம்தான் என்னை மல்லிகா ஹோம்ஸிற்குக் கொண்டு வந்தது. அவர் இறந்த பிறகு, கமலா இங்கு வந்து, எங்கள் சென்னை அடுக்ககக் குடியிருப்பில் இரண்டு வாரங்கள் தங்கினாள். நான் சிவப்புப் பொட்டு இட்டுக் கொள்ள வேண்டுமென்றும், வழக்கம் போல எல்லா நகைகளையும் போட்டுக்கொள்ள வேண்டுமென்றும் என்னை வற்புறுத்தினாள். “இது உன் வாழ்க்கையின் முடிவில்லை அம்மா. இந்த மாதிரி விஷயங்களிலெல்லாம் எனக்கு நம்பிக்கையும் இல்லை” என்றாள் அவள்.

கால் விரலில் அணிந்திருந்த மெட்டியை மட்டும் கழற்றி விட வேண்டும் என்று நான் வற்புறுத்தினேன். ஆரம்பத்தில் அவற்றை கழற்ற முடியவில்லை. கமலா முயன்று பார்த்து, பாதியிலேயே முயற்சியை கைவிட்டாள். நாற்பத்தைந்து வருடங்களாக, கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலிலேயே தான் அந்த வெள்ளி வளையங்கள், விரலை அழுந்தப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. என் எடை கூடக் கூட, சதை வெள்ளி வளையங்களை மூடிக்கொண்டு அதன் மீதே சுருண்டு கொண்டது. கடைசியாக, முப்பது நிமிடத்திற்கு மேல், கால்களை சோப்பு தண்ணீரில் நனைத்து வைத்திருந்ததில், எனக்கு வெற்றி கிட்டியது.

கமலா எங்களது மூங்கில் ஸோஃபாவில் சரிந்து கிடந்தாள். பல வருடங்கள் அவள் உபயோகப்படுத்திய, பதின்ம வயதுப் பெண்ணாக கால்களை ஸோஃபாவுக்கு வெளியே நீட்டிக் கொண்டு, ஸமர்செட் மாமைத் தலைக்கு மேல் பிடித்தபடி, அவள் படித்த அதே ஸோஃபா. அழுத அழுகையில் அவள் கண் மை கரைந்திருக்கும். நாங்கள் இருவருமே இம்மாதிரியான செயல்களை செய்திருக்கிறோம்.

அம்மா இங்கே வந்து என்னோடு சற்று படுத்துக் கொள்ளேன் என்று அவள் அழைத்தாள். ஒரு கையில் கிரிக்கெட் பந்தையும், மறுகையில் துண்டுப்பிரசுரங்கள் அடங்கிய சிறு கையேடு போன்ற ஒன்றையும் வைத்திருந்தாள். என் கணவருக்கு கிரிக்கெட் பிடிக்கும். இந்தியா வந்ததிலிருந்தே கமலா அந்தப் பந்தைக் கையில் வைத்துக் கொண்டிருந்தாள்.

“நகர்ந்து கொள்” என்றேன்.

சோஃபாவில் ஒருவரையொருவர் நெருக்கியபடி படுத்திருந்தோம். எங்கள் இடுப்புகள் இடித்துக்கொண்டன. அம்மாவும் மகளும். அப்போதுதான் அவள் மல்லிகா ஹோம்ஸைக் குறித்து முதன்முதலாகக் குறிப்பிட்டாள். என்னிடம் அந்த கையேட்டைக் கொடுத்தாள்.

“திறந்து பார். புல்வெளிகள் எவ்வளவு அழகாக இருக்கின்றன பார். பிருந்தாவன் தோட்டத்தை போலவே இருக்கின்றன”

அந்தக் கையேடு, அமெரிக்காவில் இருக்கும் கமலாவின் தோழி பத்மினி வேணுகோபாலிடமிருந்து வந்திருந்தது. பத்மினியின் பெற்றோர் அப்போதுதான் மல்லிகா ஹோம்ஸிற்கு குடிபெயர்ந்திருந்தார்கள்.

“வீட்டைப் போலவே அனைத்து வசதிகளும் – எந்தக் கவலையும் இன்றி – சுற்றிலும் நிறைய நண்பர்கள்” கமலா வாய்விட்டுப் படித்தவாறே என்னை ஆவலுடன் பார்த்தாள்.

“யோசனை செய்து பார்” என்றாள்.

“யாருடைய நண்பர்கள்?”

“நீ தேடிக் கொள்வாய்.”

“நீ என்னை வற்புறுத்த முடியாது. பல வருடங்கள் முன்பு, நீ அமெரிக்கா போன போது நான் உன்னைத் தடுத்து நிறுத்தி இருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்றேன்.

“அதுவும் இதுவும் ஒன்றல்ல,” என்றாள் அவள். எழுந்து என்னைத் தாண்டி குதித்து ஸோஃபாவிலி ருந்து கீழே இறங்கினாள். “கண்டிப்பாக இரண்டும் ஒன்றில்லை”

அடுத்த நாள் இரவு நான் குளியலறையில் வழுக்கி விழுந்தேன். பெரிய காயம் எதுவும் ஏற்படாத போதிலும், கமலாவை என்னால் தடுக்க முடியவில்லை. மவுண்ட் ரோடு ஜஃபார் கடையிலிருந்து பீச் மெல்பா வேண்டுமென்று அவள் சிறுமியாக அடம் பிடித்த போதிருந்த உறுதியை, இப்போதும் அவள் குரலில் என்னால் கேட்க முடிந்தது. நான் இறங்கி வரும் வரை அவள் நிறுத்தப்போவதில்லை.

“இப்போது நீ என்னுடைய பொறுப்பு,” என்றாள். கீழே விழுந்ததில் வலது மணிக்கட்டில் சுளுக்கு ஏற்பட்டதால் என்னால் தலைவாரிக் கொள்ள முடியாது போனதால், கமலா எனக்கு தலை வாரி விட்டாள்.” நான் ஏற்கனவே உனக்காக ஒரு இடத்தை புக் செய்து, இன்று அதற்கான முன் பணத்தையும் அனுப்பி விட்டேன்,” என்றாள்.

என்னுடைய நரைத்த மயிரை தளர்வாக கொண்டையாகக் கட்டிய பிறகு, குழந்தையைப் போல, என் தலையைத் தடவினாள். அவளுடைய நீளமான, பின்னலிடப்பட்ட கூந்தலிலும் வெள்ளை முடிகள் தோன்ற ஆரம்பித்திருந்தன.

“இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு. நாங்களும் வந்து உன்னைப் பார்க்க முடியும்,” என்றாள்.

என்னை மல்லிகா ஹோம்ஸில் கொண்டு சேர்ப்பதற்காக, அவள் தன் பயணத்தை ஒரு வாரம் தள்ளிப் போட்டுக் கொண்டாள்.

* * *

இரண்டு வருடங்கள் கழிந்தும் அவர்கள் இன்னும் வந்து பார்க்கவில்லை. அடுத்த மாதம் இதே சமயம் அவர்கள் எல்லோரும் இங்கு வருவதாக இருந்தது – கமலா, மாப்பிள்ளை அருண் மற்றும் பேத்தி வீணா. கமலா தன் பயணத்திட்டத்தை தெரிவித்தவுடனேயே நான் அவர்களுக்காக படுக்கையறையை தயார் செய்தேன். புதிய படுக்கை விரிப்புகளையும், ஒரு ஆள் படுப்பதற்கான படுக்கை ஒன்றையும் வாங்கினேன். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு கமலா பேசியபோது, தான் மட்டும் தனியாக வரப் போவதாகச் சொன்னாள். அருண் வேலையில் பிஸியாக இருப்பதாகவும் வீணா புதிய வேலையில் சேர்ந்திருப்பதாகவும் சொன்னாள்.

அவர்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கும் என நினைக்கிறேன். இந்த இடம் ஒரு உல்லாசப்போக்கிடம் போலத்தான் இருக்கிறது. இங்கு நீச்சல் குளங்கள் உள்ளன. ஒரு பையன் ஒரு நாளில் பலமுறை நீண்ட வலையை வைத்து, விழுந்திருக்கும் இலைகளை சுத்தம் செய்து கொண்டே இருக்கிறான். சைவ அசைவ உணவுகள் தனித்தனி சமையலறைகளில் சமைக்கப்படுகின்றன. இங்கு டென்னிஸ் போட்டிகள் நடக்கின்றன. ஓய்வறையின் பெரிய திரையில், தமிழ் ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்கள் காண்பிக்கப்படுகின்றன. யோகா, நடைப்பயிற்சி செய்வோர் குழு, சீட்டு விளையாடுவோர் குழு, பொது இடத்தில் நாங்கள் கட்டி இருக்கும் சிறிய கோவிலில் கூடும் இந்து பிரார்த்தனை குழு என எல்லாமும் இருக்கின்றன. சிறிய இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ பிரார்த்தனை குழுக்களும், இங்கு வசிப்பவர்களின் வீடுகளில் கூடுகின்றன. கமலா சொல்வதுபோல, மல்லிகா ஹோம்ஸ், அனைத்தையும் “உள்ளடக்கியது”

ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ஆல்ஃபரெட்டா நகரில் ஒரு குறையும் இல்லை. விசாலமான வாழுமிடத்தையும், தனி நபர்க்குரிய அந்தரங்கத்தையும், அமெரிக்கா உறுதி செய்தாலும் அந்த நாடு, வாழ ஏங்குகிறது. வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினால், சாலை முடிவற்று நீள்கிறது. ஒன்றன்பின் ஒன்றாக விரைவு உணவு விடுதிகள். வெண்டீஸ், மெக்டொனால்ட்ஸ், வாஃபில் ஹவுஸ். மாலையில் வண்ண விளக்குகள் பளீரென எரிந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. “கோவில்களைப் போல” என்று நான் எண்ணிக் கொள்வேன். பலசரக்குக் கடை அவர்கள் வீட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. எந்த மாதிரியான இடம் அது? மக்கள் வாழ்க்கையை ரசிக்க வண்டிகளில் விரைந்து கொண்டிருந்தார்கள். யாருக்கும் யாரிடமும் பேச நேரமில்லை. ஆனாலும் எல்லோரும் உள நோய் மருத்துவரிடம் சென்று கொண்டிருந்தார்கள்.

நாங்கள் அங்கு சென்றிருந்தபோது, “இங்கிருந்து பத்து நிமிட தூரத்தில் ஸ்டார்பக்ஸ் இருக்கிறது. நாம் போகலாமா?” என்று கேட்டாள் கமலா.

“பத்து நிமிடங்களா? ஒரு செடியை நட்டு, நானே கொட்டைகளைப் பறித்து, எனக்கான காப்பி பொடியை அரைத்துக் கொண்டு விடுவேன்” என என் கணவரிடம் கூறினேன். அவர் என் கைகளின் மீது தனது உள்ளங்கையை வைத்து “ஷ்! அவள் கேட்டு விடப் போகிறாள்” என்று எச்சரித்தார்.

அவர் அவளை செல்லம் கொடுத்து கெடுத்திருந்தார். சிறந்த பள்ளிக்கூடம். சிறந்த ஆசிரியர்கள். அவளுக்குத் தேவையான ஆடைகள். அவள் விரும்பிய புத்தகங்கள். அவள் சினிமாவுக்குப் போகட்டுமே. அவள் ஓய்வெடுக்கட்டுமே. உன்னோடு கூட அவளையும் சமயலறைக்குள் இழுக்காதே என்பார். அவளைத் தொந்தரவு செய்யாதே. நிம்மதியாக இருக்க விடு. அவளை அவள் போக்கில் விட்டுவிடு.

ஆல்ஃபரெட்டாவில், அவரும், என்னைப் போலவே செய்ய ஏதுமின்றிச் சோர்ந்து போனாலும், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவருக்கும் ஸ்டார்பக்ஸின் தீய்ந்துபோன காப்பிச் சுவை பிடிக்கவில்லை. கமலாவும் அருணும் வேலையிலும், வீணா பள்ளியிலும் பிசியாக இருக்கையில், நாங்கள் நாள் முழுவதும் தபால்காரரைத் தவிர வேறு யார் முகத்தையும் பார்க்காமல் இருக்க வேண்டியிருந்தது, எங்களை மிகவும் சோர்வடையச் செய்தது. சென்னையில் நகரின் நடு மையத்தில் வசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். தெருவில் எழும் பல்வேறு சத்தங்களாலும் கூச்சல்களாலும் என் நாள் நிரம்பி இருக்கும். கல் வீசி எறியும் தூரத்தில் எனக்கு தேவையான அனைத்தும் கிடைத்தது.

அவர்கள் இந்த வீட்டை வாங்கும்போது, “அமெரிக்காவில் நகரத்தில் வசிப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை” என்று கமலா சொன்னாள். அழுக்கு, பாதுகாப்பின்மை, வண்டியை நிறுத்த முடியாத அளவு இடப்பற்றாக்குறை, மோசமான பள்ளிகள். அவள் சொன்னதென்னவோ “அமெரிக்கா” என்றாலும், தான் பிறந்து வளர்ந்த வீட்டை பற்றித்தான் சொல்கிறாளோ என யோசிப்பதை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

உங்களுக்கு முற்றிலும் தேவைப்படாத, அறைகள் நிரம்பிய பெரிய காலியான வீட்டை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்ய முடியும்? அவள் இதைப் பற்றி பேசுவதில்லை. ஆனால், உள்ளூர அவள் இதை உணர வேண்டும். என்ன இருந்தாலும் அவள் என் பெண். உயரமான விதானங்களும், உத்தரத்தில் வெளிச்சம் வருவதற்காக பொருத்தப்பட்ட கண்ணாடிகளும் கொண்ட அவளது வீடு, மல்லிகா ஹோம்ஸை விட எந்த விதத்திலும் சிறந்ததில்லை.

“நல்லவேளை, அவள் அமெரிக்காவில் வசிக்கப் போகிறாள்” என்று, பல வருடங்களுக்கு முன்பு ஜார்ஜ்ஜியா டெக்கிலிருந்து அவளுக்கு அனுமதிக் கடிதம் வந்த அன்று நான் என் கணவரிடம் கூறினேன்.

“அவள் எங்காவது கண்டிப்பாகப் போகத்தான் வேண்டுமென்றால், அது அமெரிக்காவாகவே இருக்கட்டும்” என்றேன்

* * *

நான், கமலாவின் தோழி பத்மினியின் பெற்றோர், வேணுகோபால் தம்பதியரோடு அமர்ந்து சாப்பிட்டேன். உணவு பரிமாறப்படுவதற்காக காலித் தட்டுடன் அமர்ந்திருந்த டாக்டர் வேணுகோபால் சுவாமிநாதனின் மரணம் குறித்து நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார்.

“எனக்கு அது அறிவுசார் ஆர்வம்” என்றார். அவர் ஓய்வு பெற்ற இதயநோய் நிபுணர். அவரது மனைவி லட்சுமி, ஆரோக்கியமான அழகான பெண்மணி. முடி நரைத்திருந்தாலும், பல வருடங்களாக சந்தனம் பூசி வருவதால், அவருடைய தோல், பட்டு போல் மிருதுவாக இருந்தது. நாங்கள் அசைவ உணவறையில் அமர்ந்திருந்தோம். ஷர்மா தம்பதியரும் எங்களோடு இருந்தார்கள். வேணுகோபால் தம்பதியரும் ஷர்மா தம்பதியரும் எப்போதும் சேர்ந்துதான் உட்காருவார்கள். நான் இங்கு வந்த புதிதில், ஒரே ஒருமுறை, என்னை அவர்களோடு அமர அழைத்தார்கள். அது வரவேற்பும் நன்றி கூறலும் இணைந்த அழைப்பு. கமலா என்னை மல்லிகா ஹோம்ஸில் சேர்த்து விட முடிவு செய்த போது, வேணுகோபால் தம்பதியினருக்கு, நண்பரை அறிமுகப்படுத்தியதற்காக “ஊக்கப்பரிசாக” ஊட்டிக்கு இலவசமாகப் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததது.

ஷர்மா தம்பதியினரும் வேணுகோபால் தம்பதியினரும், ஜின் அருந்திக் கொண்டிருந்தனர். டாக்டர் வேணுகோபால், எனக்காக, வண்டியில், மதுபானங்களை விநியோகித்துக் கொண்டிருப்பவரை அழைத்தார். நான் லைம் சோடாவை ஆர்டர் செய்தேன். மதுபானங்களுக்கு அதிகப்படியாக விலை விதிப்பார்கள். எனக்கு பணத்தை விரயம் செய்வது பிடிக்காது.

சுவாமிநாதன் எப்படிக் கீழே விழுந்தார், எப்படி அவர் முகம் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டது, அவர் பேச்சு குழறியது மற்றும் அவர் தன் மனைவியின் பெயரைச் சொன்னது என்பதைப்பற்றியெல்லாம் நான் விவரித்ததை கேட்டபிறகு, டாக்டர் வேணுகோபால், அது பெரும்பாலும் நிலையற்ற ரத்த ஓட்ட குறைவு காரணமாக ஏற்பட்ட பக்கவாதமாகவே இருக்கக்கூடும் எனவும், ரத்தக் கசிவால் ஏற்பட்ட பக்கவாதமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கருதினார்.

“நிச்சயமாக அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்” என்றார் அவர். தான் இந்த முடிவுக்கு வந்தது குறித்து அவருக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவருக்கு திருத்தமாக கத்தரிக்கப்பட்ட கிரே நிற தாடியும் அதே நிறத்தில் மீசையும் இருந்தது. அவரது வலது கை விரல் மேலே எழும்பியது. அவர் எதையோ யோசிப்பது போல, தனது மீசையைத் தடவி முறுக்கி விட்டுக்கொள்ளப் போகிறார் என நான் நினைத்துக்கொண்டிருக்கையில், அவர் தன் விரலை நேராக என் பக்கம் நீட்டினார்.

“பக்கவாதத்தால் உயிர் பிரிவதென்பது மிகவும் அரிதான நிகழ்வு. வேறு ஏதேனும் பிரச்சினைகளும் இருந்ததா என நான் யோசிக்கிறேன். ஒருவேளை தலைக்காயம் ஏதேனும் ஏற்பட்டிருக்குமோ?” அவர் கிட்டத்தட்ட குற்றம்சாட்டுகிற தொனியில் கேட்டார்.

அவர் எவ்வளவு மென்மையாகக் கீழே விழுந்தார் என்பதை நான் மறுபடியும் விவரிக்கிறேன்.

விரும்பத்தகாத விதத்தில் இல்லை என்ற போதிலும், டாக்டர் வேணுகோபால் தொண்டையை செருமிக் கொண்டார். “ஹ்.. இருந்தாலும், சிமெண்ட் தரை மிகவும் கடினமானது தானே”

“அவர் என் கையில்தான் விழுந்தார்” எனச் சொல்ல வாயெடுத்தேன். ஆனால் நிறுத்திக்கொண்டேன். அது நான் கொடுக்கத் தேவையில்லாத வாக்குமூலம் என்று எனக்குத் தோன்றியது.

வெள்ளை உடையணிந்த உணவு பரிமாறுபவர், சிவப்பு நிறத்தில், காரசாரமாக வேகவைத்த பருப்புடன் வந்தார். ஷர்மா மற்றும் வேணுகோபால் தம்பதியர், அவரை தங்கள் தட்டில் இருந்த சிறிய எவர்சில்வர் கிண்ணத்தில் வேகவைத்த பருப்பைப் பரிமாற அனுமதித்தனர். வேண்டாம் என தெரிவிக்கும் வகையில் நான் கைகளால், என் தட்டில் இருக்கும் கிண்ணத்தை மூடிக் கொண்டேன்.

“அவர்கள் உண்மையிலேயே மிகவும் கண்ணியமான தம்பதியினர். இப்படி கணவனை இழப்பது குறித்து யோசிக்கவே பயமாக இருக்கிறது” என்றார் திருமதி ஷர்மா.

இரு தம்பதியருக்கு நடுவே ஒற்றை ஆளாய் அமர்ந்திருக்கும் என்னைப் பார்த்தபடியே, “இப்படி திடீரெனத் தன் துணையை இழப்பது எப்படி இருக்கும் என்று தான் நான் சொல்ல வந்தேன்” என்றார்.

இப்போதெல்லாம் இம்மாதிரியான பேச்சுக்கள் என்னைக் காயப்படுத்துவது இல்லை.

“கண்டிப்பாகத் தனிமைப்பட்டுத்தான் போகிறோம். ஆனால் வாழ்க்கை ஓடிக் கொண்டேதான் இருக்கிறது” என்று முறுவலித்தபடியே கூறினேன்.

திருமதி ஷர்மா நிம்மதியுடன், உற்சாகமாகத் தலையசைத்தார். உட்புறம் திருப்பி விடப்பட்ட அவரது முடிக்கற்றைகளும் அவரோடு கூடவே அசைந்தன. நான் பெரிய மனத்துடன் பேச்சை மாற்றினேன்.

இன்று நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று திருமதி வேணுகோபாலிடம் கூறினேன். அவர் பிளாக் பிரின்ட் செய்யப்பட்ட, கையற்ற சல்வார் கமீஸ் அணிந்திருந்தார்.

“என்னோடு ஷாப்பிங் செய்ய வாருங்கள்,” என அழைத்தார். “நான் இந்தத் துணியை “பாத்ஷா”வில் தான் வாங்கினேன். எனக்கு மிகப் பிரமாதமான தையல்காரர் ஒருவர் அமைந்திருக்கிறார்” என்றார்.

அவரது அழைப்பு போலியானது என்று எனக்குத் தெரியும். நான் எப்படி உடை அணிகிறேன் என்பதை அவர் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் சாதாரணமான ஆடைகளைத் தான் அணிவது வழக்கம். எப்போதாவதுதான் புது துணி வாங்குவேன். எப்படி இருந்தாலும், “பாத்ஷா” போன்ற கடைகளில் நான் பணத்தை வீணடிக்க மாட்டேன்.

“இளைய தலைமுறையினருக்குப் பொருந்தலாம். கமலாவுக்கு ஒருவேளை பிடிக்கக் கூடும். அவள் ஒன்றும் அத்தனை இளவயதினள் இல்லை,” என்றேன்.

தன் மகளும் இளவயதுக்காரி இல்லை என்று திருமதி வேணுகோபால் சொல்லியிருந்தால் அது அவருக்கு மதிப்பாக இருந்திருக்கும். ஆனால் அவர் அப்படிச் சொல்லாமல் வெறுமனே புன்னகைத்ததில், நான் மட்டும் என் மகளை விட்டுக் கொடுத்துவிட்டேனோ என எனக்குத் தோன்றியது.

சாதத்துடன் கலந்து பிசைந்தவாறு “இன்று சிக்கன் குருமா மிகப் பிரமாதமாக இருக்கிறது” என்றார் திருமதி ஷர்மா. நான் கையில் அணிந்திருந்த ஃபிட்பிட் கடிகாரத்தைப் பார்த்து, “புதிதாக வாங்கியதா?” என்றார்.

“என் மகள் பரிசளித்தது” என்றேன்.” நாம் நடக்கும் காலடிகளை இது கணக்கிடுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது எட்டாயிரம் காலடிகளாவது நடக்கவேண்டும் என்று கமலா சொல்கிறாள்,” என்றேன்.

“நாங்கள் கால்ஃப் விளையாடுவோம். அதிலேயே எங்களுக்குத் தேவையான உடற்பயிற்சி கிடைத்துவிடுகிறது. எனவே தனியாகக் கணக்கெடுக்க தேவையில்லை” என்றார் திருமதி ஷர்மா.

நான் தலையசைத்தேன்.

வயதான காலத்தில், உங்கள் அந்தஸ்து, உங்கள் உடலோடு இணைக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் உடலை வைத்துக்கொண்டு எதையெல்லாம் செய்ய முடியும் , எதையெல்லாம் செய்ய முடியாது என்பதைப் பொருத்தது. சில சமயம், உங்கள் உடலை வைத்துக்கொண்டு, என்ன செய்ய முடியும் என நீங்களாகக் கூறுவதும் கூட.

“பத்மினி எங்களுக்கும் ஃபிட்பிட் கடிகாரம் வாங்கித் தந்தாள். நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள் இல்லையா?” என்றார் திருமதி வேணுகோபால்.

“எதற்காக?” என்று நான் கேட்க நினைத்தேன். டாக்டர் வேணுகோபால் முன்புறம் குனிந்து “அவர்களுக்காகவா?” என்றார்.

எங்கள் மகன் கலிஃபோர்னியாவிலிருந்து , ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் தான் வருகிறான்,” என்றார் திருமதி ஷர்மா.

பத்மினி வருவதே இல்லை என்றார் டாக்டர் வேணுகோபால். அவரது கண்கள் என் கண்களைச் சந்தித்தன. அவற்றில் நான் குழந்தைத் தனத்தையும், வருத்தத்தையும் ஒருசேரக் கண்டேன். “நான் இன்னொரு கிளாஸ் குடிக்க போகிறேன்,” என்றார் அவர்.

“அவள் மிகவும் பிசியாக இருக்கிறாள். இந்த வருடம் நிறுவன இயக்குனராக பதவி உயர்வும் கிடைத்திருக்கிறது,” என்றார் திருமதி வேணுகோபால்.

டாக்டர் வேணுகோபால், ரகசியமான குரலில், “ரேணுகா இங்கிருந்து போகப் போகிறார் தெரியுமா?” என்றார். அவரது கண்கள் என் முகத்தில் எதையோ தேடின.” இது உங்களுக்கு தெரியுமா?”என்று கேட்டார்.

இல்லை என்று மறுக்கும் போது, உடனடியாக எனக்கு புரிந்து விடுகிறது. இது கணவன் அல்லது மனைவியை இழந்தவர்களுக்கு வழக்கமாக நடப்பதுதான். ரேணுகா தன் குழந்தைகளோடு இருக்க வெளிநாட்டுக்கு போகப் போகிறாராம்.

“எங்கே? மகளுடன் ஜெர்மனிக்கா அல்லது மகனுடன் ஆஸ்திரேலியாவுக்கா? எனக் கேட்டேன்.

இரண்டு பேருடனும் பாதி பாதி காலத்தைக் கழிப்பதென்பது மிகக் கொடூரமாக இருக்கும் என நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். இரண்டு இடங்களிலும் நிரந்தரமான, தற்காலிகக் குடியேறி.

“இரண்டும் இல்லை” என்றார் டாக்டர் வேணுகோபால். “அவர் திரும்ப சென்னைக்குப் போகப் போகிறார். அவருடைய மகனும் மகளும் தங்கள் குடும்பத்தோடு சென்னைக்குத் திரும்ப இருகிறார்கள். அடுத்தடுத்தாற்போல இருக்கும் மூன்று வீடுகளை வாங்கப் போகிறார்கள்.”

“ஆனால், அவர்களுக்குப் பேரக்குழந்தைகள் இருக்கிறார்களே?”

“நமது இந்தியப் பள்ளிகளில் சேர்த்து விடுவார்கள்”

தம்மிடம் இந்த தகவல்கள் இருப்பது குறித்தும் அதை அவர் தான், ரேணுகாவின் தோழியும் சுவாமிநாதனின் மரணத்துக்கு சாட்சியாகவுமிருந்த என்னிடம் பகிர்ந்து கொண்டார் என்பது குறித்து டாக்டர் வேணுகோபாலுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் சாப்பிட்டு முடித்து விட்டேன். இரண்டாவது சுற்று மதுபானங்களுக்காகக் காத்திருக்கத் தோன்றவில்லை.

“கமலாவிடமிருந்து தொலைபேசி அழைப்பை எதிர்பார்க்கிறேன் என்று கூறி நான் மன்னிப்பு கோரி, அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.

டாக்டர் வேணுகோபால் எனக்கு சல்யூட் அடிக்கிறார். “கண்டிப்பாக அவர்களது தொலைபேசி அழைப்புகளை நாம் தவற விடக்கூடாது. இல்லாவிட்டால் அவர்களைப் பிடிக்கவே முடியாது. கமலாவை விசாரித்ததாக சொல்லுங்கள்” என்றார்.

நான் எழுந்து நடக்க ஆரம்பித்தேன். கமலா ஆல்ஃபரெட்டாவிலும் பத்மினி பக்ஹெட்டிலும் வசிக்கிறார்கள் என்ன அவர் கூறிக் கொண்டிருப்பது என் காதில் விழுகிறது.

“வாகன நெரிசல் இல்லாமலிருந்தால், முப்பது நிமிட டிரைவ் ” என்கிறார் திருமதி வேணுகோபால்.

* * *

வீடு திரும்பியதும் கமலாவைத் தொலைபேசியில் அழைத்தேன்.

அங்கு அவர்களுக்கு சனிக்கிழமை காலை. அவளைத் தொடர்பு கொள்ள முடிகிற மிக அபூர்வமான நேரம்.

“இன்று நான் வேணுகோபால் தம்பதியரோடு இரவுச் சாப்பாடு சாப்பிட்டேன்”

“ஆஹா! உனக்கு அங்கே நண்பர்கள் கிடைத்திருப்பது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”

“மிக நல்ல ஒரு துணிக்கடையை பற்றி எனக்குத் தெரியவந்தது. நாம் போகலாம். நானும் நீயும்.”

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு,”நான் என் பயணத்தைக் கொஞ்சம் ஒத்தி வைக்க வேண்டியிருக்கும்” என்றாள்.

“ஏன்?”

“வேலை தான். வேறென்ன?”

“இங்கு நல்ல நெட் கனெக்ஷன் இருக்கிறது. நீ இங்கே வந்து வேலை செய்”

“ஸாரிம்மா.”

” உன்னை விடு.” என்னால் குரலிலிருந்த எரிச்சல் மறைத்துக்கொள்ள முடியவில்லை. “வீணாவை இங்கு அழைத்து வரவேண்டும் என்று நீ உண்மையிலேயே எப்போதாவது முயற்சிசெய்திருக்கிறாயா? அல்லது அவள் எப்போதும் பிஸியாக தான் இருக்கப் போகிறாளா? ஐந்து வருடங்களாக அவள் இந்தியா வரவேயில்லை.”

“அவள் கண்டிப்பாக உன்னை பார்க்க வருவாள் அம்மா. இப்ப உடனடியாக முடியாது.”

“என் சாவுக்கு அவளைக் கூட்டி வா.”

“அம்மா….?”

எனக்கு போனை வைத்து விட வேண்டும் போல் இருந்தது. ஆனால், திடீரென, என் கைகளின் மீது தன் உள்ளங்கையை வைக்கும் என் கணவரின் நினைவு வந்தது.. நான் குரலை மென்மையாக்கி கொண்டேன்.

“வீணா எப்படி இருக்கிறாள்?”

கமலா பெருமூச்சு விடுகிறாள்.

“வாழ்க்கை குறித்து மிகவும் குழம்பி இருக்கிறாள். அவளுக்கு ஜார்ஜியா அக்வேரியத்தில் தற்காலிகமாக வேலை கிடைத்திருக்கிறது.”

“அறிவியல் சம்பந்தப்பட்ட வேலையா?”

“இல்லை. அங்கு இருக்கும் மிருகங்களுக்கான உணவை நறுக்குகிற வேலை.”

கமலா பேசிக்கொண்டேயிருந்தாள். ஆனால் நான் கேட்பதை நிறுத்தி யிருந்தேன்.

நான் என் மகளின் மகளை, வீங்கிய விழிகளுடன் இறந்துபோன மீன் ஒன்றை, வீங்கிய விழிகளுடன் உயிருடனிருக்கும் மீனுக்கு உணவாக, கசாப்புக் கடைக்காரர் போல, துண்டமிட்டுக் கொண்டிருப்பதை கற்பனை செய்து பார்த்தேன். வீணா ஏன் இவ்வளவு குழப்பத்தில் இருக்கிறாள்? அவளுக்கு இன்னமும் தன் தாய் தேவைப்படுகிறாள் என்பதை எல்லாம் சொல்லி விடலாமா என ஒரு கணம் நினைத்தேன். மறுபடியும், என் கணவர் எப்படி என்னை மென்மையாக எச்சரித்திருப்பார் என்பது நினைவுக்கு வந்தது. நான் எதுவும் பேசவில்லை.

கமலாவுக்கு பிறகு என்னால் மேற்கொண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. வழக்கமாக மாதவிடாய் காலம் நிற்பதற்கு பத்து வருடங்கள் முன்பாகவே, எனக்கு மாதவிடாய் நின்று விட்டது. இல்லாவிட்டால், நாங்கள் அவளுக்கு கூடப் பிறந்தவர்களை கொடுத்திருக்க முடியும். ஆனால், கமலாவைப் பொருத்தவரை இது அவளுடைய தேர்வு. ஆனால் வேலையோடு கூட இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதென்பது கண்டிப்பாக சாத்தியப் பட்டிருக்காது. இதனால் பாதிப்புக்குள்ளானது வீணாதான். நீண்ட நேரத்தை குழந்தை பராமரிப்பு மையத்தில் செலவழித்துவிட்டு, பெரிய, ஆளரவமற்ற வீட்டுக்குத் திரும்பி, ஏராளமான பொம்மைகள் இருந்தும், கூட விளையாட ஆள் இல்லாமல் தவித்தாள்.

இப்போதெல்லாம் நான் ஆல்ஃபரெட்டா போகாதபடியால் – பயணம் என்னை மிகவும் களைப்படையச் செய்து விடுவதால் – என் ஞாபகத்தில் இருந்து நான் அந்த வீடு எப்படி இருந்தது என்று நினைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே நுழைந்ததுமே நீண்ட வழி ஒன்று சமையலறைக்குச் செல்லும். கருப்பு வெள்ளைச் சதுரங்களாலான சமையலறை மேடையில் தான் நான் வீணாவுக்காக தினமும் சுவையான தின்பண்டங்களைத் தயாரிப்பேன். சமையலறையிலிருந்து குடும்ப அறைக்குள் நுழைய, கார்பெட்டால்

மூடப்பட்ட இரண்டு படிகள் இறங்கி வர வேண்டும். நான் அந்தப் படிகளில் இடறி விழுந்து விடுவேன் என கமலா எப்போதும் பயப்படுவாள். மாடிக்குப் போகும் வழியில் பாதிப் படிகள் ஏறியதும் வருகிற சமதளத்தில் தான் வீணா எப்பொழுதும் தன் கோலிக்குண்டுகளை வீசி எறிவாள். அவை படிகளில் உருண்டு விழுவதைப் பார்க்க அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

பேசி முடித்துவிட்டு கண்களை மூடிக் கொண்டதும், இரவு வெகுநேரம் சென்ற பின்னும் கமலாவின் டிஷ் வாஷர் வேலை செய்யும் சத்தமும், அவளுடைய துணி உலர்த்தும் எந்திரம் சுழற்றிச் சுழற்றி துணிகளைக் காயவைக்கும் சத்தமும் காதில் கேட்டுக்கொண்டிருந்தது.

* * *

சுவாமிநாதனின் காரியத்துக்கு நான் வெளிர் ஆரஞ்சு நிற மைசூர் சில்க் புடவையைக் கட்டி கொண்டேன். நானறிந்தவரை, ரேணுகா, பகட்டில்லாத, பாரம்பரிய உடைகளே சிறந்தவை என நினைப்பவர். இருப்பினும் நான் பளிச்சிடும் வண்ணத்தில் புடவையைத் தேர்ந்தெடுத்தேன். இதுவும் ஒரு கொண்டாட்டம் தானே. சுவாமிநாதன் இறந்து பதினான்காம் நாள் இந்த காரியம், துக்கம் கடைபிடிக்க வேண்டிய காலம் நிறைவுற்றது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்காக நடக்கிறது. இருப்பினும், துக்கம் பாராட்டுதல் ஒருபோதும் முடிவுறுவதில்லை. கணவன் அல்லது மனைவிக்கு, அது கண்டிப்பாக முடிவதேயில்லை. நான் ரேணுகாவின் ஸ்வெட்டரை பின்னி முடித்து விட்ட போதிலும், எடுத்துக் கொண்டு செல்லவில்லை. வருடத்தின் மிக அதிகம் குளிர் வாய்ந்த நாளில் கூட, சுட்டுப் பொசுக்கும் சூரியன் இருக்கும் சென்னையில், ஸ்வெட்டருக்கு என்ன உபயோகம்?

சுவாமிநாதனின் காரியம், மல்லிகா ஹவுஸின் பொது ஹாலில் சிறப்பாக நடந்தது. அவர்களுடைய வீடு மிகவும் சாதாரணமானது. அந்த வீடு இத்தனை மனிதர்களையும் கூட்டத்தையும் தாங்கி இருக்காது. நான் சரியான நேரத்தில் போயிருந்தபோதிலும், பூசாரி பூஜையை ஏற்கனவே முடித்திருந்தார்.

“நாங்கள் சீக்கிரமாகவே பூஜையை முடித்து விட்டோம். எல்லோரையும் வெகு நேரம் காத்திருக்க செய்யவேண்டாம் என்று நினைத்தோம். எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிட வேண்டும் என்று விரும்பினோம்” என்றாள் ரேணுகாவின் மகள். அம்மாவைப் போலவே வெளிர் பச்சை நிறக் கண்கள் கொண்ட அழகான முப்பது வயது பெண். கழுத்தில் மரகதக்கல் வைத்த நெக்லஸ் அணிந்திருந்த அவள், தன் மயில்கழுத்து நிற பட்டுப்புடவையை அடிக்கடி சரி செய்து கொண்டிருந்தாள். இந்த காலக் குழந்தைகளுக்கு இந்திய உடைகளை சரியாக அணியத் தெரியவில்லை என்பதை நான் கவனித்தேன். பெரும்பாலான சமயம், தளர்வான மேற்சட்டைகளையும் பாவாடைகளையுமே அணிகிறார்கள்.

“நீங்கள் திரும்பிப் போகிறீர்களாமே ?”என்றேன்.

அவள் “ஆமாம்,” என்றாள்

நான் அவளிடம் மேற்கொண்டு கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. அவளுக்கு இன்னும் நிறைய பேரை பார்க்க வேண்டியிருக்கும். அது மட்டுமில்லாமல், நான் யார் என்று கூட அவளுக்குத் தெரிந்திருக்காது. நான் கை கழுவிக்கொண்டு திருமதி ஷர்மாவின் அருகே போடப்பட்டிருந்த வாழை இலையின் முன் சாப்பிட உட்கார்ந்தேன்.

“பாட்டியா விவகாரம் பற்றி கேள்விப்பட்டீர்களா?” என்று அவர் என்னிடம் கேட்டார். “உங்கள் கணவர் அவர்களிடம் தானே வேலை செய்தார்?”

“ஆமாம். ஆனால் நான் எதையும் கேள்விப் படவில்லை,” என்றேன்.

திருமதி பாட்டியா, தன் மகன் ப்ரிஜின் மீது இருநூறு கோடிக்கு வழக்கு தொடர்ந்திருக்கிறாராம். மகள் செர்ரியின் மீது நூறு கோடிக்கான வழக்காம். ”எவ்வளவோ பணம் இருந்தும், இந்த பணக்காரர்கள் இப்படி அடித்துக் கொள்கிறார்கள்” என்றபடியே அவர் தலையசைத்தார்.

“நான் அவரை ஒருமுறை பார்த்திருக்கிறேன். என் கணவர் பாட்டியா எலக்ட்ரிகல்சில் தான் வேலை செய்தார். பார்ப்பதற்கு நல்ல மாதிரியாகத்தான் தெரிந்தார்” என்றேன்.

“எல்லோருக்கும் நல்லவர் தான். ஆனால், தன் குழந்தைகளுக்கு மட்டும்தான் இல்லை” என்றார் திருமதி ஷர்மா.

எவர்சில்வர் பக்கெட்டில் உணவு பதார்த்தங்களை எடுத்துக்கொண்டு, ஆட்கள் பரிமாற வந்தார்கள். நான் கையால் சாதத்தையும் சாம்பாரையும் கலந்து பிசைந்து கொண்டேன். சாதாரண சாப்பாடுதான். ஆனாலும், மல்லிகா ஹோம்ஸின் சமையல்காரர்கள் சமைப்பதிலிருந்து வித்தியாசமாக இருந்ததால், மகிழ்ச்சியாக இருந்தது.

புறப்படுவதற்கு முன்பாக ரேணுகாவிடம் ஒருமுறை பேசினேன். அவர் சாதாரண பருத்திப் புடவை தான் அணிந்திருந்தார். அவர் பொட்டு, தோடு, வளையல்கள் மற்றும் மெட்டி அனைத்தையும் கழற்றியிருந்தார். அவர் ஏதுமற்று மூளியாகவும், எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடியவர் போலவும் காட்சி அளித்தார்.

இப்படித்தான் நடக்கிறது. இத்தனை காலமாக இவற்றை அணிந்து கொண்டிருந்ததால், இவை நமது ஆடையாகவே மாறிவிடுகிறது.

நான் என் வருத்தத்தைத் தெரிவித்தேன்.

“வந்ததற்கு நன்றி,” என்றார் அவர். இதற்கு முன் இந்தச் சொற்றொடரை, அவர் பலரிடம் பலமுறை கூறி இருக்க கூடும்.

முதல்முறையாக, அவர் முகத்தில் இருந்த சுருக்கங்களை கவனித்தேன். முகம் முழுவதும், மூக்குக்கு மேலே கூட. இருந்தாலும் அவரது கண்கள், பளீரென்றும், எப்போதும் போல ஊடுருவிப் பார்க்க வல்லதாகவும், சிந்தனை வயப்பட்ட தாகவும் இருந்தன.

“கடைசியில் அவர் உங்களைத்தான் தேடினார்,” என்றேன்.

“நீங்கள் அந்த சமயத்தில் அங்கு இருந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்றார் அவர்.

* * *

சுவாமிநாதனின் காரியங்கள் முடிந்த சில நாட்கள் கழித்து, அசைவ உணவு ஹாலில் கருவாடு பரிமாறியதால், அந்த நாற்றத்தைச் சகிக்க முடியாமல், நான் சைவ உணவு ஹாலுக்கு வந்தேன். ஒரு காலத்தில் நான் அதை மிகவும் விரும்பிய போதும், இப்போதெல்லாம் என்னால் அதன் நாற்றத்தை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. ஹாலின் பின்புறம் இருந்த நான்கு பேருக்கான மேஜையில் நான் தனியாக அமர்ந்திருந்தேன். நான் மௌனமாக அந்த ஹாலை கவனித்தபோது, அதில் நிரம்பியிருந்த சோகம், என்னைத் தாக்கியது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட எல்லா முதியவர்களும் அந்த ஹாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இது பரிதாபகரமானது. நாகரீகமற்றது என்றும் கூட சிலர் நினைக்கக்கூடும்.

வயதானவர்கள் இளையவர்களோ டும், இளையவர்கள் வயதானவர்களோடும் இருக்க வேண்டும். பல தலைமுறைகளாக அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது: குழந்தைகள் பாட்டிகளின் மடியில் தூங்குவதும், தாத்தாக்களின் தோள்களில் அமர்வதும். அப்போது எல்லோரும் நெரிசல் மிகுந்த வீட்டில்தான் வசித்தார்கள்.

இன்று என் அருகே அமர யாரும் வரவில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியளித்தது. எவரிடமேனும் எதையாவது எக்குத்தப்பாக பேசி, அதனால் என் பெயர் கெட்டுப் போகக் கூடும். நான் சப்பாத்தியையும் பீன்ஸ் கூட்டையும் சீக்கிரமாகச் சாப்பிட்டுவிட்டு குழாயடியில் கைகளை கழுவிக் கொண்டேன்.

நன்றாக இருட்டுவதற்கு முன் இன்னும் ஆறாயிரம் அடிகள் நடக்க வேண்டும் என என்னுடைய “ஃபிட் பிட்” கடிகாரம் சொன்னது. நான் வழக்கமாகப் போகும் வழியில் போகாமல், சிறிய ஃப்ளாட்கள் இருக்கும் இடத்தை நோக்கி சென்றேன். ரேணுகாவின் ஃபிளாட் இருக்கும் இடத்தை நோக்கி. நான் அங்கே போனதும் அவர் வீட்டில் சன்னமான மஞ்சள் திரைச்சீலை திறந்து இருப்பதைப் பார்த்தேன். நான் உள்ளே எட்டி பார்த்தேன். வீடு காலியாக இருந்தது.

அவர் இங்கிருந்துபோக வேண்டுமென்று துடித்திருக்கக்கூடும். நான் கதவுக் குமிழ் மீது கை வைத்தேன். கதவு திறந்திருந்தது.

பின்னால் யாரோ வருகிற ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தேன். ரேணுகா.

“நீங்கள் வீட்டில் இருக்கிறீர்களா என பார்க்க வந்தேன்,” என்றேன். நான் கதவை அவசரமாக மூடிவிட்டுத் தள்ளி நின்றேன். ஆளில்லாத வீட்டுக்குள் செல்ல முயன்றதில் எனக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.” நீங்கள் உடனடியாக கிளம்பி விடுவீர்கள் இல்லையா?” என்று ஒப்புக்கு கேட்டேன்.

பற்களுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த பச்சைப்பட்டாணித் துண்டை அவர் நாக்கால் துழாவி அகற்றுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். அவருடைய குழந்தைகளின் மனம் மாறிவிட்டிருக்குமோ என எனக்கு ஒரு கணம் தோன்றியது. அவர்கள் வெளிநாட்டிலும் ரேணுகா இங்கே தனியாக எங்களோடு இருக்கப்போகிறார்.

“நீங்கள் ஆஸ்திரேலியாவில் அணிந்து கொள்வதற்காக நான் ஒரு ஸ்வெட்டர் பின்னியிருக்கிறேன். ஆனால் அதற்கு இப்போது எந்த உபயோகமும் இல்லை.”

“எல்லாம் வெகு விரைவாக நடந்து முடிந்து விட்டது,” என்றார் அவர்.

“என் மகள் அடுத்த மாதம் வருவதாக இருக்கிறாள்,” என்றேன். “எங்கள் வீட்டை ரிப்பேர் செய்து அதில் எப்போதாவது வரும்போது வசிக்க வேண்டுமென அவள் நினைக்கிறாள். அப்படி நடந்தால் நாம் இருவரும் எலியட்ஸ் பீச்சில் சேர்ந்து நடக்க முடியும்,” என்றேன்.

ரேணுகா ஆச்சரியத்துடன் என்னை அணைத்துக் கொண்டார்.

“இந்த காலத்துக் குழந்தைகள் எவ்வளவு ஆசையாக இருக்கிறார்கள்!”

அவர் என்னை அணைத்துக் கொண்டது குறித்தும் நான் சொன்ன பொய் குறித்தும், நானே அதிர்ச்சி அடைந்தேன். நான் சொன்னதைச் சரிசெய்ய முயற்சி செய்தேன்.

“நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். என் மகள் அமெரிக்காவில் மிக நன்றாக இருக்கிறாள். அடிக்கடி வந்து போக வேண்டுமென்று மட்டும்தான் நினைக்கிறாள்,” என்றேன்.

“நான் வீட்டைப் பூட்டிவிட்டு போவதற்காக வந்தேன். இந்த வீட்டை விற்றால் தான் சென்னையில் புது வீடு வாங்க முடியும்,” என்றார் ரேணுகா.

“நீங்கள் புறப்படுவதற்கு முன் நான் உங்களுக்கெனப் பின்னிய ஸ்வெட்டரைத் தருகிறேன். எப்போதாவது மாலை நேரங்களில் கடற்கரையில் நடக்கும் போது நீங்கள் அதை அணிந்து கொள்ளலாம்,” என்றேன்.

“கடற்காற்றை அனுபவித்து எத்தனை நாளாயிற்று!” என்றார் அவர்.

* * *

எட்டாயிரம் காலடிகள் முடியும்வரை நான் மல்லிகா ஹோம்ஸைச் சுற்றி நடந்தேன். நான் ரேணுகாவிடம் ஏன் அப்படிப் பொய் சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. மல்லிகா ஹோம்ஸில் இருப்பதிலேயே மிகச் சிறிய, ஒரெயொரு படுக்கையறை கொண்ட ஃப்ளாட்டில் வசித்த ரேணுகாவிடம். ரேணுகாவின் மகன் ஒரு திரையரங்கில் சாதாரண மேனேஜர். நான் இதை திரும்பத் திரும்பச் சொல்வதைப் போல கற்பனை செய்து கொள்கிறேன். வேணுகோபால் தம்பதியரிடம் ஷர்மா தம்பதியரிடம், எங்கள் துணிகளை இஸ்திரி போட்டு தரும் நபரிடம்.

கமலா குழந்தையாக இருந்தபோது எங்கள் சென்னை வீட்டில் வந்து தன் கடைசி நாட்களை கழித்த என் அப்பாவின் நினைவு, எந்தக் காரணமுமின்றி, வருகிறது. உப்பில்லாத அரிசிக் கஞ்சியை குடித்துவிட்டு, தன் பொக்கை வாயோடு அவர் எதோ பழைய தமிழ் பழமொழியொன்றைச் சொல்வார். மோவாய்க்கட்டையில், அரிசிக் கஞ்சிச் சொட்டுக்களை வழிய விட்டபடி, “இதுக்கு அது மோசம்: அதுக்கு இது மோசம்” என்று சொல்வார்.

மல்லிகா ஹோம்ஸில் அஸ்தமன நேரம் நெருங்கிவிட்டது. இரவின் மிக இருண்ட பகுதியில், காலை முழுவதுமாக இரவாக மாறுகிற, எவர் கையிலும் அகப்படாத அந்த நொடியில், நான் நிதானமாக ஒலியாண்டர் செடிகளின் அழகை ரசித்தேன். நடுவில் வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட வெள்ளை மலர்கள். மல்லிகா ஹோம்ஸின் மதிற்சுவர் மீது படர்ந்திருக்கும், பளீரிடும், அடர் மெஜந்தா நிற பூக்கள் நிறைந்த, பருத்த தண்டுடைய போகன்வில்லா கொடிகள். சில பூக்கள் ஒரு புறம் ஒட்டிக்கொண்டிருக்க, சில அதிர்ஷ்டக்காரப் பூக்கள் மறுபுறம் விழுந்திருந்தன.

* * *

  • மூலக் கதை: இங்கிலிஷில் பிரசுரமான பத்திரிகை ‘க்ராண்டா’ என்கிற காலாண்டிதழ் சஞ்சிகை.
  • Title: Malliga Homes
  • Author: Sindya Bhanoo
  • Winner of the Disquiet Prize for Fiction 2020.

3 Replies to “மல்லிகா ஹோம்ஸ்”

  1. அண்மைக் காலத்தில் படிக்கக் கிடைத்த சிறந்த சிறுகதைகளில் ஒன்று. இந்தக் கதாசிரியரின் மற்றக் கதைகளையும் வாசிக்க ஆவல்.

    ஷியாமாவின் மொழிபெயர்ப்பு ஓர் உறுத்தல் இல்லாமல், சஞ்சய் சுப்ரமணியன் பாட்டுக்கு வயலின் பக்கவாத்தியமாக வாசிக்கும் வரதராஜனின் வில்வித்தை போல் சிறப்பு.

    அதென்ன பாவப்பட்ட குளியலறைகள்? just pulling your leg 🙂

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.