பானுகூல் சமையலறை ராகங்கள்

தமிழில்: புஷ்பா மணி

முன்குறிப்பு: குமார் கந்தர்வன்

ஆம், இந்துஸ்தானி இசையின் வான்புகழ் கந்தர்வன் தான் இவர். குமார் கந்தர்வ் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்ற இவர், இந்துஸ்தானி இசை உலகில் மாபெரும் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். பத்ம பூசன், பத்ம விபூசன், காளிதாஸ் சம்மான் போன்ற விருதுகள் பல இவரைத் தேடி வந்தன.

கலாபினீ கோம்கலீ அவர்கள், ’க்வாலியர் கரானா’ மாமேதை குமார் கந்தர்வ் அவர்களின் மகள், அத்துடன் சிஷ்யையும் கூட. இவரும் இன்றைய முன்னணிப் பாடகர்களில் ஒருவர். இவர் குமார் கந்தர்வா சங்கீத் அகாடெமியின் அறங்காப்பாளராக இருக்கிறார்.

குமார் கந்தர்வ், மத்தியப் பிரதேசத்தின் தேவஸ் என்னும் இடத்தில் ஒரு வீட்டைக் கட்டி, அதற்கு ‘பானுகுல்’ என்று பெயரிட்டு, தன் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார்.

இசையுலகின் கந்தர்வன் ஆன குமார் கந்தர்வ் அவர்களின் இல்லத்தில் சுருதியும் லயமும் ஒன்றிணைந்து இனிய இசையை வழங்குவது போல், பல்வேறு கலாச்சார ருசிகளும் பல வகை செய்முறைகளும் சேர்ந்து நாவுக்கினிய, ருசியும் மணமுமான உணவும் செய்யப்பட்டது. செவிக்கினிய இசையும் வயிற்றுக்கான அறுசுவை உணவும் ஊடும் பாவும் போல இணைந்து உறவாடின. இதோ, குமார் கந்தர்வ் அவர்களின் மகள் கலாபினீ அதைப் பற்றி சுவைபடக் கூறுகிறார்:

பானுகுல் இல்லத்து சமையலறை ராகங்கள்

அதிகாலையில் காசி, மாலையில் அவத், இரவில் மால்வா,,,என்று பிரபலமான சொலவடை ஒன்று உண்டு. மற்ற பகுதிகளோடு ஒப்பிட்டால், இங்கு காற்று சில்லென்று, இதமாக வீசும். நீர் தூய்மையானதாக இருக்கும்; சுற்றுப்புறங்கள் இந்த மாநிலத்தின் மற்ற எல்லா பகுதிகளையும் விட அழகுடன் இருக்கும். இதன் கறுத்த மண் வளமிக்கது. ஒவ்வொரு அடியிலும் தண்ணீர் காணப்படும். இப்படிப்பட்ட மால்வாவில்தான் நான் பிறந்தேன்.

நான் பிறந்து, வளர்ந்த சூழலில், இசை என்னைச் சுற்றிலும் இடையறாது ஒலித்துக் கொண்டே இருந்தது. இசையின் வெவ்வேறு கரானாக்களின் தனிச்சிறப்புகளை எப்படிப் பாராட்டிப் பரவசப் பட்டார்களோ, அதே போல அங்கு வெவ்வேறு கலாச்சாரங்களின் ருசிகளும் ஒன்றிணைந்து சங்கமம் ஆயின,,,

நான் பாபா என்றழைக்கும் என் தந்தை திரு குமார் கந்தர்வ் கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர், இசைப்பயிற்சி மும்பையில் நடந்தது. அதனால் அவருடைய உணவுப் பழக்கவழக்கங்களில் கன்னடம் மற்றும் மராத்திய உணவு வகைகள் முக்கிய இடம் பிடித்தன.

பானுமதியம்மா(பெரியம்மா) சாரஸ்வத், அதாவது கர்நாடக மாநிலத்து எல்லைப் பக்கத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவர் பிறந்தது கராச்சியில், படிப்பும் இசைப்பயிற்சியும் மும்பையில். அதன் பலனாக, எங்கள் இல்லத்தில் சில சாரஸ்வத் முறை உணவுகளும், சில சிந்த் பகுதியின் வகைகளும் கரம் கோர்த்து வளைய வந்தன.

பானுமதியம்மாவின் மறைவுக்குப் பிறகு குமார் அவர்கள், என் தாயார் ஆன வசுந்தரா அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். வசுந்தராவோ, மராத்தியக் குடும்பத்தில் பிறந்தவர், கொல்கத்தாவில் ஆரம்பக்கல்வியைப் பெற்றார், பிறகு இசையில் கற்று மேம்படுவதற்காக மும்பை வந்து சேர்ந்தார். அவருக்குப் பிடித்தமான சமையல் வகைகளில் மராத்திய உணவு வகைகளுடன், வங்காளத்தின் தாளித்தலும், காரசார வகைகளும், வங்காள சமையல் முறைகளும் வளைய வந்தன.

குமார் அவர்கள், பானுமதியம்மா, வசுந்தராம்மா மூவருமே அவரவர் வாழ்க்கையில் பயணித்தபடி, இறுதியாக ஒரு கட்டத்தில் மால்வாவின் தேவஸில் வந்து சேர்ந்தார்கள், உண்மையைக் கூறினால், இந்த ஊரைத் தங்கள் சொந்த ஊராகவே பாவித்து வந்தார்கள்.

அப்பாவின் உடல்நிலையைக் கருத்தில் வைத்துதான் அம்மா சமையலைப் பெரும்பாலும் திட்டமிடுவார்கள். இசைக் கலைஞரின் இல்லம் என்பதால், புளிப்பு, காரம், எண்ணை இவை என்றுமே கூடுதலாக இருக்காது. எந்தெந்த புளிப்புச் சுவைகளால் குரல் கம்மிப் போகும் அபாயம் ஏற்படுமோ-உதாரணமாக, புளி, எலுமிச்சை, புளிப்பான பழங்கள், புளிப்பு திராட்சை, இவை முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டன, ஆனால் ஒன்று,,விதவிதமான ஊறுகாய்களும் முரப்பா எனப்படும் இனிப்புப்பாகு ஊறுகாய்களும் நிச்சயமாகத் தயாரிக்கப்பட்டன. எண்ணையில் வறுக்கப்படும் வகைகளை சாப்பிடுவதோ, பிறருக்கு செய்து கொடுப்பதோ பொதுவாகவே அபூர்வம்தான். பெரும்பாலான நாட்களில், மராத்திய-கர்நாடக சமையல் முறைகளில் செய்யப்படும் சமச்சீரான உணவுதான் சமைக்கப்பட்டது.

எங்கள் வீட்டில், சமையல் மன்னன் அல்லது ராணி என்ற பட்டத்தைப் பெறுவதற்கான போட்டி ஒருபோதும் இருந்ததில்லை, ஆனால், உணவு எதுவாக இருந்தாலும், முழு கவனத்தோடு, கைத்திறன் வாய்ந்தவர்களால்தான் செய்யப்பட்டது.

என்னுடைய இளம் பருவ நினைவுகளுக்கு எட்டியவரை, மூன்று அல்லது நான்கு வயது முதலே எனக்கு சமையல் கலையில் நாட்டம் இருந்திருக்கிறது.

என்னை கவனித்துக் கொள்வதற்காக ஒரு ஆயா வருவார், அவர் பெயர் நூர்பானோ,, நாங்கள் நூர் அம்மா என்று அழைப்போம். அவர் வெளுத்த நிறத்துடன், மிகவும் சுத்தமாக இருப்பார். ஜொலிக்கும் வெள்ளை நிற சல்வார்-கமீசுடன், தலையை சுற்றி மல்மல் துணியின் துப்பட்டாவும் இருக்கும். ஹஜ் யாத்திரையின்போது கொண்டு வந்த தஸ்பீஹ், அதாவது மாலை கையை அலங்கரிக்கும். நூர் அம்மா என் மனதின் மகிழ்ச்சிக்காக, தன் நடுங்கும் குரலில், ஏதாவது ஜோடித்துச் சொல்லியபடி இருப்பாள்.

அம்மா எனக்காக சமையலுக்கான சொப்புகள் அனைத்தையும் வாங்கி வைத்திருந்தாள். மராத்தியில் அவற்றுக்கு ‘பட்டுகலி’ என்பார்கள். சமையலுக்கான எல்லா வகைகளும்,அதாவது, தட்டம், கிண்ணம், கரண்டி, தோசைக்கல், அடுப்பு, கேஸ், டீ மற்றும் பால் கொதிக்க வைப்பதற்கான பாத்திரங்கள், இடுக்கி, இவை போதாதென்று, பீங்கான் கப்புகள், தட்டங்கள், மேசை, நாற்காலி,,,,ஒன்று விடாமல் எல்லாமே இருந்தன. நான் நூர் அம்மாவுடன் சேர்ந்து, இந்தப் பாத்திரங்களில் விளையாட்டுச் சமையல் செய்வேன். நூர் அம்மாவின் சுருக்கங்கள் நிறைந்த கைகளும் நடுங்கும் குரலும் இன்றும் என் உள்ளுணர்வில் உறைந்திருக்கிறது.

அவள் சொல்லுவாள், “ சரி, இப்ப இலுப்பச்சட்டில எண்ணை ஊத்து,,இரு இரு,,அது நல்லா காயட்டும்,,,சரி, இப்ப கொஞ்சம் சீரகம் போடு,,,அப்புறம் இதோ இது,,,,,,கடைசியா இது”,,,,,இப்படித்தான் என்னுடைய பயிற்சி துவங்கியது, நூர் அம்மா சமையல் கலையில் எனக்கு முதல் குருநாதர்..

எங்கள் வீட்டில் எப்போதுமே, சாத்வீகமான, ருசிகரமான சைவ உணவுதான் செய்யப்பட்டு வருகிறது. அம்மாவின் கையால் செய்யப்பட்ட, ருசியான’ஆம்டி’ (புளிப்பும் இனிப்புமான, தனி வகை பருப்புக்குழம்பு), மற்றும் எண்ணையோ நெய்யோ சேர்க்கப்படாத பராத்தா, இது மராத்தியச் சமையல் வகைகளில் தனிச்சிறப்பானது), இவற்றின் ருசியை மிஞ்சுகிற உணவை இன்று வரை நான் சாப்பிட்டதில்லை.

வீட்டில் அப்பா, அம்மா, அண்ணன் முகுல், அப்புறம் நான். எங்களைத் தவிர இன்னொரு முக்கியமான நபர் இருந்தார். அவர்தான் கண்ணன் மாமா. அதாவது கிருஷ்ணன் நம்பியார்! கேரளத்தைச் சேர்ந்த இவர், பானுமதியம்மாவுடன் தேவஸ் வந்து சேர்ந்தார். எங்கள் குடும்பத்தில் மிகுந்த மரியாதைக்குரிய மூத்தவர். சகலகலா வல்லவர். சமையலறையில் எப்போதும் அம்மாவுக்கு உதவியாக இருப்பார், அவர் அறிமுகப் படுத்திய சில உணவு வகைகள் இப்போது எங்கள் குடும்பத்தின் இன்றியமையாத, பரம்பரை உணவுகளாகக் கருதப்படுகின்றன.

பாட்டு பாடுவோர் சாப்பாட்டிலும் கை தேர்ந்தவர் என்று சொல்வார்கள்.

ஆனால், உண்மையில், அப்பா, அம்மாவின் விஷயம் இதற்கு நேர்மாறானது. எப்போதும் அளவான, சைவ உணவு மட்டுமே அருந்துவார்கள். ஆனால் ஒன்று, மற்றவர்களை சாப்பிட வைப்பதில் அதீத ஆனந்தம் அடைவார்கள்.

மிகவும் பழைய, அதாவது 1947ஆம் ஆண்டின் நாட்குறிப்புப் புத்தகம் ஒன்று இருந்தது. அதில் முக்கியமான பல சமையல் வகைகளின் செய்முறைக் குறிப்புகள் எழுதப் பட்டிருந்தன. சிந்து, மகாராஷ்டிரம், கர்நாடக மாநிலம், பஞ்சாப், மற்றும் பல பகுதிகளின் குறிப்பிட்ட சில சமையல் விவரங்கள் அவ்வப்போது எழுதிச் சேர்க்கப்பட்டன.

இந்துஸ்தானி இசை பயிலும் மாணவர்களுக்கான ஆரம்பப்பாடமாக, ‘பத்கண்டே சங்கீத பத்ததி’, அல்லது கர்நாடக இசைமுறையில் ஆரம்ப வகுப்புகளின் சரளி வரிசையைப் போல, சமையல் கலையில் என்னைப் பொறுத்தவரை, இந்தப் புத்தகம் ஒரு கீதையாக இருந்தது. நாளடைவில், இந்த ஒரு புத்தகம் பல புத்தகங்களாக அவதாரம் எடுத்தது. வெவ்வேறு வட்டாரங்களைத் தவிர, வெவ்வேறு கலாச்சாரங்களின் உணவு வகைகளும் இதில் எழுதிச் சேர்க்கப்பட்டன. அந்தச் செயல்பாடும் இன்று வரை நீடிக்கிறது.

உணவருந்த அமரும்போது, சாப்பாட்டுத் தட்டங்களில் எத்தகைய உணவை, எப்படி பரிமாற வேண்டும் என்பதற்கும் எழுதப்படாத விதி என்று உண்டு. அதைப் பின்பற்றியே உணவு பரிமாறப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம், வீட்டில் எந்த வகை உணவு சமைக்கப்பட்டாலும், அனைவருக்கும் ஒரு போலவே செய்யப்பட்டது. நானும் மற்ற குழந்தைகளும் தட்டத்தில் பரிமாறப்பட்ட ஒவ்வொரு உணவையும் சாப்பிட்டே ஆக வேண்டும், அதில் எந்த சலுகையும் இல்லை

பாகற்காயோ, கோவைக்காயோ, தமிழ்நாட்டு ரசமோ, சாரஸ்வத் பகுதியின் தமளியோ, பெல்காவ் பக்கத்து பச்சடி ஹுக்கியோ, சோளம் போன்ற சிறு தானிய மாவின் சப்பாத்தியோ, பீர்க்கங்காய், வங்காளத்தின் கத்தரிக்காய் கறி,,,எதுவானாலும் சாப்பிட்டே ஆக வேண்டும்.

இதனால் விளைந்த நன்மை என்னவென்றால் நாங்கள் எல்லா உணவையும் சாப்பிடப் பழகி விட்டோம்

சிறு வயதில் நான் பள்ளிக்கூடத்திற்குப் பகல் உணவில் பாகற்காய் பொரியல் கொண்டு போக விரும்பினேன். அது இன்றும் நினைவிருக்கிறது.

வசுந்தரா அம்மா திருமணத்திற்குப் பிறகு 1963இல் மும்பையிலிருந்து தேவஸ் வந்தபோது, இட்லி போன்ற வகைகளுக்கான மாவை அரைக்கும் ஆட்டுக்கல்லையும் தன்னுடன் கொண்டு வந்தார். அவர் தென்னிந்திய உணவு வகைகளை மிகவும் விரும்புவார். தேவஸ் ஒரு சிறிய நகரம். பருப்பு போன்றவைகளை அரைப்பதற்கு வழி இருக்குமோ என்றுதான்,,,!( அன்றைய நாட்களில் வீடுகளில் மிக்சர் கிரைண்டர் பிரவேசம் செய்திருக்கவில்லை). அதனால் அவர் ஆட்டுக்கல்லை கையோடு கொண்டு வந்தார், பல வருடங்கள் வரை, அரைக்கும் வேலை அதில்தான் நடந்தது, இப்போது கூட எனக்கு நினைவிருக்கிறது.

எங்கள் இல்லத்தில் வெகு காலம் வரை கேஸ் அடுப்பு, டீயும் காப்பியும் போடுவதற்கு மட்டுந்தான் பயன்பட்டது. உணவு வகைகள் பெரும்பாலும் கரியடுப்பு அல்லது குமிட்டியில்தான் சமைக்கப்பட்டன. காலை உணவு முடிந்ததுமே அம்மா குமிட்டியை மூட்டி விடுவாள், மத்தியான வேளையின் இறுதியில் சுடச்சுட ரொட்டி அல்லது சப்பாத்தியோ, அல்லது சில சமயம் சிறு துளைகள் கொண்ட, மண்ணால் ஆன தோசைக்கல்லில் உப்புகிற சப்பாத்தி செய்து பரிமாறுவாள். குறிப்பாக, அப்பா வெளியூர் இசை நிகழ்ச்சிகளை முடித்து, பலநாட்களுக்குப் பிறகு வீடு திரும்பும்போது மிகவும் களைத்து, சோர்ந்து போயிருப்பார். அவருக்கு ஆம்ட்டீ எனப்படும் பருப்புக் குழம்பு சாதமும், கோஷிம்பீர் எனப்படும் பொரியல் வகையும், சப்பாத்தியும் செய்து கொடுக்க, அவரும் திருப்தியாக சாப்பிடுவார்.

சிக்கனம் என்பதன் உள்ளர்த்தம் அவர்களுக்கு முழுவதுமாகப் புரிந்திருந்தது. அவர் உடைகளிலோ, வாழும் முறைகளிலோ, உணவு வகைகளிலோ, எல்லை மீறிய படாடோபம், அல்லது ஆடம்பரத்தை ஒருபோதும் விரும்பியதில்லை. அவர் இயல்பாகவே, எங்கும் எதிலும் அழகின் ரசிகர், அதே சமயம் எதிலும் பற்றற்ற மனப்பான்மையும் இருந்தது.

குமிட்டி அடுப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லி விடுகிறேன்- அந்நாட்களில், அதாவது அறுபது, எழுபதுகளின் காலகட்டத்தில், கேஸ் பற்ற வைப்பதற்கு லைட்டர் கிடையாது. மண்ணெண்ணையில் எரியும் ஒரு சிறிய சிம்னி விளக்கு சமையலறையின் ஒரு மூலையில் எப்போதும் எரிந்தபடி இருக்கும். கண்ணன் மாமா ப்ரூக் பாண்ட் தேயிலை தீர்ந்து, காலியான காகித டப்பாவைக் கிழித்து, நீள நீளமான பட்டைகள் செய்து வைப்பார். தீப்பெட்டியின் தீக்குச்சிகளுக்கு பதிலாக, இந்த நீளப் பட்டையை சிம்னியில் பற்ற வைத்து, அதன் மூலம் கேஸ் அடுப்பை பற்ற வைப்பார்கள்.

எங்கள் வீட்டில் ஒரு மாவரைக்கும் எந்திரக் கல்லும் இருந்தது. வீட்டு வேலை செய்யும் அஜுத்யா பாயிடம் சொல்லி, அம்மா அதன் விளிம்புகளில் மஞ்சள் நிற மண்ணைக் குழைத்து, நாலாபுறமும் ஓரங்கட்ட வைப்பார், அப்போதுதான் பொடியான மாவு கீழே விழுந்து சிதறாமல் இருக்கும். அதன் நடுவில் மரத்தாலான கைப்பிடி இருக்கும், அதனைப் பிடித்துதான் சுழற்றுவார்கள். அந்த எந்திரக்கல்லில் சக்ளி எனப்படும் மாராத்திய முறுக்கு செய்வதற்கான மாவு அரைக்கப்பட்டது. மனந்திறந்து சொல்கிறேன்,,,,அந்த ‘முறுமுறு’ முறுக்குக்கு ஈடு இணையே இல்லை,,,,

அறுபது, எழுபதுகளின் காலத்திலும் தேவஸ் ஒரு சிறு நகரமாகவே இருந்தது. இப்போதுள்ளது போல், எல்லா விதமான காய்கறிகளும் வருடம் முழுவதும் எல்லா மாதமும் கிடைப்பது அபூர்வம்தான். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது,,குளிர் காலத்தில் தக்காளி மலிவாகவும், ஏராளமாகவும் கிடைக்கும் என்பதால், அம்மாவும் கண்ணன் மாமாவும் முற்றத்தில் பெரிய அடுப்பை மூட்டி, குழந்தைகளுக்காக தக்காளி சாஸ் தயார் செய்வார்கள். அதை விட ஆச்சரியமான விஷயம், அப்பா கேட்டார் என்பதற்காக மொத்தம் நூறு வகை மூலிகை மருந்துகளை இடித்துச் சேர்த்து, ஸ்யவனப்ராசம் லேகியத்தை வீட்டிலேயே தயார் செய்து விட்டார்கள்! அதுவும் வெறும் மூன்றே நாட்களில்!

,

சாப்பாட்டு வேளையில் எப்போதுமே, யாராவது விருந்தினர், அல்லது, அப்போதுதான் வீடு தேடி வந்த எதிர்பாரா விருந்தாளி யாராவது இருப்பார். அம்மாவும் என்றுமே முகம் கோணியதில்லை. அப்பா மிகவும் ரசனையுடன், மெதுவாக, ருசியை அனுபவித்து,,” ஆஹா,,அருமை” என்று மெச்சியபடியே உணவருந்துவார், ஏதேனும் மனதுக்குப் பிடித்திருந்தால், அது மிகச் சிறிய விஷயமானாலும் கூட, பாராட்டுகளை வஞ்சனையின்றி வாரி வழங்குவார்.

ஒரு முறை என்ன நடந்ததென்றால்—எங்கள் வீட்டு மாமரத்தில் காய்க்கத் தொடங்கியிருக்கவில்லை; திடீரென்று ஒரு நாள் எங்கிருந்தோ ஒரு மாங்காய் கிடைத்தது. அப்பா அந்த ஒற்றை மாங்காயை நல்லா கூரான கத்தியால் வெட்டி, நீளத் துண்டுகளாக நறுக்கினார், உப்பு, சிவந்த மிளகாய்ப்பொடி தடவி, சாப்பிடத் தயாராக உட்கார்ந்திருக்கும் அனைவருக்கும் பரிமாறினார். அதுவும்,,” ஆஹா,,,பிரமாதம்” என்று சொல்லியபடியே,,,!மிகச் சிறிய, சாதாரண விஷயத்தைக் கூட மெச்சி, பாராட்டும் அவருடைய இயல்பு மகத்தானது!

பானுகூல் இல்லத்தின் கதவுகள் என்றும் எவரையும் வரவேற்கத் திறந்தே இருக்கும். தேவஸில் அப்பாவின் உயிர்நண்பர் எழுத்தாளர்-பத்திரிகையாளர் ராஹுல் பார்புதே, ஓவியக்கலைஞர் குருஜி சின்சால்கர், சந்து நாஃபடே, நாடகக் கலைஞர் பாபா டிகே, கவிஞரும் சாகித்ய வல்லுநரும் ஆன அஷோக் வாஜ்பேய், எழுத்தாளரும் நாடகக் கலைஞரும் ஆன ஃபு.ல. தேஷ்பாண்டே, இசைக்கலைஞர் வசந்த்ராவ் தேஷ்பாண்டே, பத்மகுமார் மந்த்ரி, பத்திரிகையாளர் ப்ரபாஷ் ஜோஷி, ராமூபையா தாதே, இவர்களின் குடும்பங்கள், மேலும், நாட்டின் வெவ்வேறு பாகங்களில் வசிக்கும் நண்பர்கள், ரசிகர்கள், மற்ற எல்லா கலைஞர்களும் வந்து போவது வாடிக்கையான விஷயம்.

என்னுடைய நினைவு மடல்களில் விரியும் சில காட்சிகள் : பண்டிட் ரவிசங்கர் அவர்களும் உஸ்தாத் அல்லாராக்கா கான்சாஹப் அவர்களும் வந்திருந்தார்கள். ,இசை நிகழ்ச்சிக்குப் பிறகு விடிவதற்கு முன்பே கிளம்பிச் சென்றாக வேண்டும். அதனால் நள்ளிரவு நேரத்தில் அம்மா அவர்களுக்கு உணவு பரிமாறினார். ,இன்னொரு நாள், பண்டிட் பீம்சேன் அவர்கள் இரவு நேரத்தில் அப்பாவின் அறையில் அமர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார், அது முடிந்து இரவு இரண்டு மணிக்கு உணவு! பரோடாவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் மாதவ் ஆச்வல் அவர்களும் சிற்பக்கலை வல்லுநர் ர. கு. ஃபட்கே அவர்களும் பல நாட்கள் வரை குமார் அவர்களுடன் தங்கி, உரையாடிக் கொண்டிருந்தார்கள். நாக்பூரின் கவிஞர் அனில் எனப்படும் ஆத்மாராம் ராவ்ஜி தேஷ்பாண்டே சுமார் பதினைந்து நாட்கள் இங்கேயே தங்கியிருந்தார், கவ்வாலி கலைஞர் ஷங்கர் ஷம்பு அவர்களும் வந்து, தங்கியதுண்டு. ஃபு.ல அவர்களும் வசந்த்ராவ்ஜி தேஷ்பாண்டே அவர்களும் அப்பாவின் அறையிலேயே டேரா போட்டு விடுவார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இவர்களில் ஒருவர் கூட எந்த ஒரு விஷயத்திற்கும் அளவுக்கதிகமாக வற்புறுத்தியதோ, எதிர்பார்த்ததோ இல்லை. அப்பாவின் பிறந்தநாளை ஒட்டி வீட்டிற்கு வருகிற நண்பர்கள், அவர்கள் குடும்பத்தினருக்காக வீட்டிலேயே பாலை குறுக்கி, ஷ்ரீகண்ட் செய்யப்படும். என்னுடைய பிறந்தநாளன்றும் முகுல் அண்ணனின் பிறந்தநாளன்றும் எங்களுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு போளியும் ஜிலேபியும் செய்யப்படும்.

அப்பா இசை நிகழ்ச்சிகளுக்காக நாட்டின் வெவ்வேறு பகுதிகளின் அழகான நகரங்களுக்கு இடை விடாமல் பயணம் மேற்கொள்ளுவார். பயணம் பெரும்பாலும் ரயிலில்தான். ஏசி கம்பார்ட்மென்ட்டுகள் இருந்திராத காலம் அது. முதல் வகுப்பின் கீழ் பெர்த் அப்பாவுக்காக முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். இரண்டு தம்புராக்களையும் நடுவில் இருக்கும் குட்டி மேசையின் இரு பக்கமும் ஒவ்வொன்றாக நிறுத்தி வைத்து, கட்டி வைப்பார்கள், அல்லது பல தடவை மேல் பெர்த்தில் நீட்டமாகப் படுக்க வைப்பதும் உண்டு.

அன்றெல்லாம், குரலைப் பற்றிய பிரத்தியேக கவனம் இருந்ததால், பயணத்தின்போது தேவைப்படும் தண்ணீர் தெர்மாஸ், மற்றும் உணவுக்காக மூன்று டப்பாக்களைக் கொண்ட கேரியர் இவை வீட்டிலிருந்தே கொண்டு செல்லப்பட்டன.

இரண்டு வேளைக்கான உணவு; அதில், உருளைக்கிழங்கு பொரியல், துவையல், பாலில் மாவைப் பிசைந்து செய்யப்படும் மகா மிருதுவான சப்பாத்தி, சலாட் எனப்படும் பச்சை காய்கறிகளுக்காக முழு காய்கறிகள், உப்பு, சிறிதளவு இனிப்பு வகைகள், இவை அனைத்திலும் முக்கியமாக பெல்காவ் தயாரிப்பான தயிர்சாதம், அதற்கு ‘புத்தி’ என்று சொல்லுவார்கள். அப்பா பயணங்களின்போது மிகவும் ரசித்து சாப்பிடுவார். சில சமயம் தனியாகச் செல்வார், பல பயணங்களில் அம்மாவும் உடன் இருப்பாள். சில இசைக் கலைஞர்களும் ஆங்காங்கே அதே ரயிலில் ஏறிக் கொள்வார்கள். அன்றைய முதல் வகுப்புப் பெட்டியில் வீட்டுச் சாப்பாடு எடுத்து சாப்பிடுவதை நினைத்தால் இன்று கூட வாயில் நீர் சுரக்கிறது. பத்தியம் அவசியம் என்று கருதி, அப்பாவும் அம்மாவும் பயணங்களின்போது வெளியே எங்கும் எதுவும் வாங்கிச் சாப்பிட மாட்டார்கள். புதிய வகை உணவு ஏதேனும் பிடித்திருந்தால், வீடு திரும்பியதும் அதைப் பற்றிக் கலந்து பேசுவார்கள். அம்மா மூளையைக் கசக்கிக் கொண்டு, அதே போலவே செய்வதற்கு முயற்சிப்பாள்.

ஒரு சம்பவம் என் மனதில் நிழலோடுகிறது-

அப்பா எங்கள் குடும்ப நண்பர் ஏக்நாத் காமத் மற்றும் அவரது துணைவியார் நிருபமா அவர்களை பங்களூருவில் சந்தித்து விட்டுத் திரும்பி வந்த வேளை.

அம்மாவிடம், “ நிருபமா வீட்டில வெண்ணை மாதிரி மிருதுவான பாசிப்பருப்பு இட்லி சாப்பிட்டேன்” என்று சொன்னார். அன்றைய நாட்களில் தொலைபேசியில் அழைப்பது அவ்வளவு சகஜமானதல்ல, பழக்கமான விஷயமும் அல்ல. அது கைபேசியின் காலமும் அல்ல, யூடியூபில் கொட்டிக் கிடக்கும் சமையல் குறிப்புகளைப் பார்த்து சுலபமாக எதுவும் செய்து விடும் வசதியும் இருக்கவில்லை. அம்மா சுயமாக கூட்டியும் கழித்தும், எப்படியோ அந்த பாசிப்பருப்பு இட்லிகளை செய்து அசத்தி விட்டாள்.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அம்மா தன்னுடைய தனிப்பட்ட

சாதகம், பயிற்சி, அப்பாவுடன் இணைந்து நடத்தும் இசை நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகள், பாடல்களின் சுர வரிசைகளைக் குறிப்பெடுப்பது இவ்வளவையும் செய்து கொண்டே சமையலிலும் அமர்க்களப் படுத்துவாள். இன்று அதையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது!

சிஷ்யர்கள் பலர் எங்கள் வீட்டுக்கு வந்து போவது வாடிக்கையான விஷயம். அவர்கள் அனைவரும் எங்கள் குடும்பத்து அங்கத்தினர்கள் அல்லவா! சமையலறையில் கைவேலையாக இருந்தபடியே அம்மா சிஷ்யர்கள் சாதகம் செய்வதையும் கேட்பாள். பல முறை சாப்பாட்டு மேசையின் பக்கம் அமர்ந்தபடியே அப்பா சன்னக் குரலில் பாடுவார், அம்மாவைக் கூப்பிட்டு, “ மிகவும் அருமையான பாட்டு,,,இதோ கேள்” என்பார்.

பானுகுல் இல்லத்தின் நாலாபக்கமும் கிளைகள் நிறைந்து நிழல் பரப்பும் அடர்ந்த மரங்கள் சூழ்ந்திருக்கும். பல வகையான பழ மரங்களும் பூச்செடிகளும் ஏராளமாக இருந்தன. உணவில் சேர்க்கக் கூடிய மூங்கில் வகை ஒன்று இருந்தது. அம்மாவின் விருப்பத்திற்கிணங்கியே அப்பா அதனை நட்டார்.

1984-85களின் காலகட்டத்தில்தான் இந்தியாவில் மூங்கில் செழிக்கத் தொடங்கியது. இன்னொரு விசித்திரமான விஷயமும் உண்டு; மூங்கிலில் நாற்பது வருடங்களுக்கு ஒரு முறைதான் பூக்கும்அதிலிருந்து உருவாகும் விதைகளை மூங்கில் அரிசி என்பார்கள். இந்த அபூர்வ வகை அரிசி பல மருத்துவ நற்குணங்களை உடையது. யாரோ ஒருவர் அப்பாவிடம் மூங்கில் அரிசி கொண்டு வந்து கொடுத்தார். அவர் வழக்கம் போல, அருகில் வாழும் சில நண்பர்களை அழைத்து, பாயசம் செய்து பகிர்ந்து கொடுத்தார். அம்மா மழைக்காலத்தில் நிலத்தில் முளைத்து வளரும் இளம் மூங்கிலை எடுத்து ருசியான கறி செய்யும் முறையைக் கற்றறிந்தார். தேங்காய் சேர்த்த மசாலாவில் செய்யப்படும் ‘பானுகுல் ஸ்பெஷல்’ . அவதரித்தது!

மழை பல நாட்கள் வரை ஓயாமல் கொட்டும் நாட்களில் முற்றத்தில் ஒரு குண்டா வைக்கப்படும், வானத்திலிருந்து கம்பி இழையாய் பெய்யும் மழை நீர் அதில் நிரம்பும்,,அதனைக் கொதிக்க வைத்து டீ போடுவார்கள். அந்த டீயின் மணமும் சுவையும் அலாதிதான்!

நாளடைவில் நான் சமையல் பணிகளில் ஆர்வம் காட்ட முற்பட்டதும், அம்மா சிறிது சிறிதாக வேலைகளை என்னிடம் ஒப்படைக்கத் தொடங்கினாள். ஆனாலும் அவள் கையால் செய்த சப்பாத்தி, ஆம்ட்டீ எனப்படும் பருப்புக்குழம்பு, பூரணம் வைத்து செய்த போளி, முறுக்கு, சோல்கடி, பல வகை ஊறுகாய்கள் இவற்றைப் பற்றி என்னென்று சொல்ல! அம்மாவின் கைகளில் அப்படி என்னதான் மாயம் இருந்தது! அவள் கைப்பக்குவத்தில் மிளிரும் ருசி,,,,உண்மையைச் சொன்னால், எங்களைப் பொறுத்தவரை, சமையல் பொருட்களுடன் சேர்ந்து அம்மாவின் பாசம் உணவிற்குக் கூடுதல் சுவை சேர்த்தது.

காலம் மிகவும் மாறி விட்டது. எப்படி ஏராளமான ராகங்களையும் ,அவற்றில் அமைந்த பாடல்களையும் குருநாதரிடமிருந்து நேரடியாகக் கற்கும் வாய்ப்பை இழந்தது ஒரு மாறாத சோகமானதோ, அதே போல, வேறு பல விஷயங்கள், குறிப்புகளைக் கற்கும் வாய்ப்பும் கைவிட்டுப் போனது. இனிமேல் அவரவர் முயற்சியில்தான் ராகங்களையும் பாடல்களையும் கற்றுத் தேற வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உணவுகளின் மூலப்பொருட்கள் சமையலறை எங்கும் நிறைந்திருக்கின்றன……வீட்டுச் சமையலறை ஒரு பரிசோதனைசாலை போல் உள்ளது. இந்த எல்லா பொருட்களையும் பயன்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கடந்த சில காலமாக என் சகோதரன் மகன் புவனேஷின் மனைவி உத்தரா எனக்கு உதவி செய்கிறாள். அம்மாவின் கைமணத்தில் மிளிரும் சில உணவு வகைகளை உத்தராவும் நன்றாகக் கற்றுக்கொண்டு விட்டாள்.

குமார் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது, வசுந்தரா அம்மாவும் காலமாகி ஆறு வருடங்கள் ஓடி விட்டன….பானுகுல் இல்லத்தில் சுவை மிகுந்த பல உணவுகளின் சங்கமம் சுருதியோடு சேர்ந்த இசையாக எங்கும் பரிமளிக்கிறது, இப்போது மால்வாவின் உணவும் பெருமளவில் இடம் பெறுகிறது.

முன்பெல்லாம் மால்வாவின் தால் பாஃப்லே, சூர்மா போன்றவை அவ்வப்போது தலைகாட்டி வந்தன. இப்போது எங்கள் வாழ்க்கையில் மால்வாவின் பங்கு அதிகமாக இருப்பதால், மால்வாவின் ஆரோகணமும் அவரோகணமும் சமையலில் இடையறாது இசைக்கப்படுகின்றன என்றே சொல்லலாம்!

எங்கள் குடும்பத்தின் வேர்கள் கர்நாடக மாநிலம், மகாராஷ்டிரம், சிந்த் பகுதி, வங்காளம் இங்கெல்லாம் இருந்தாலும் கூட, நாங்கள் மால்வாக்காரர்கள்தான், சந்தேகமே இல்லை!

—————-

பின்குறிப்பு: ‘பானுகுல் கிச்சன் ராகா’ என்னும் இந்தக் கட்டுரை oneating.in என்ற இணைய இதழில் வெளியானது.

One Reply to “பானுகூல் சமையலறை ராகங்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.