நம் ஸ்திரத்தன்மைக்கான 9 எல்லைகள் என்ன?

This entry is part 17 of 23 in the series புவிச் சூடேற்றம்

பொதுவெளியில், இன்று விஞ்ஞானிகள், அரசாங்கங்கள் மற்றும் பொதுமக்களை பல விதத்திலும் பருவநிலை மாற்றங்களுக்காகச் சாடவே செய்கிறார்கள்.

  • புவி சூடேற்றத்தைக் கட்டுப்படுத்தும் பல வாய்ப்புகளைத் தவற விட்டு விட்டோம்
  • கடந்த 50 ஆண்டுகளாக விஞ்ஞானம் சொல்லுவதை உலகம் கேட்க மறுத்து விட்டது
  • பொறுப்பின்றி, மரங்களைச் சாய்க்கிறோம், காடுகளை அழிக்கிறோம்
  • தொல்லெச்ச எரிபொருள்களுக்கு மாற்று எரிபொருள் ஒன்றை கண்டறியாமல், உருவாக்கியதைச் சந்தைக்குக் கொண்டுவராமல் காலத்தை வீணாக்கி விட்டோம்
  • கரியை எரித்து மின்சாரம் உருவாக்குவது மிகவும் பொறுப்பற்ற செயல்

இது பெற்றோர், தங்களுடைய இளவயது குழந்தைகளுக்குச் சொல்லும் அறிவுரை போல, உலகத்திற்கு பட்டிருப்பது கடந்த 70 ஆண்டுகளாகத் தெளிவாகத் தெரிகிறது. உலகின் சாதாரணர்கள், கண்கூடாகப் பார்ப்பது சில விஷயங்களைத் தான்:

  • முன்பை விட அதிகமாக, வெள்ளங்கள் நம் நகரங்களைத் தாக்குகின்றன
  • கலிஃபோர்னியா, ஓரெகன், வாஷிங்டன், பிரிடிஷ் கொலம்பியா (வட அமெரிக்கா) மற்றும் ஆஸ்த்ரேலியா போன்ற இடங்களில், வருடா வருடம், காடுகள் தீப்பற்றி எரிந்து, நகரங்களைப் புகை மண்டலமாக்குகின்றன.
  • வளரும் நாடுகளான இந்தியா போன்ற நாடுகள், ஏராளமாக (உலகின் மூன்றாவது பெரிய கார் தேசம்) பெட்ரோல் ஊர்திகளைத் தயாரித்து, காற்றை ஏகத்துக்கும் மாசாக்கி விட்டன. சுத்தமான காற்று என்பது இந்திய நகரம் எதிலும் இன்று இல்லை
  • உலகின் பல்வேறு வடதுருவ தென் நகரங்களில், திடீரென்று பனிமழை பொழியத் தொடங்கிவிட்டன. உதாரணத்திற்கு, 2021 –ல், டால்லஸ் என்ற அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்துப் பாலைவன நகரின் விமான நிலையம் பனிமழை காரணத்தால் மூடப்பட்டது

இப்படித் தாறுமாறான பருவநிலைக்குக் காரணம், தனது முந்தைய சந்ததியினர் என்பது இன்றைய இளைஞர்/ஞி களின் வாதம். கண்கூடாகப் பார்க்கும் பருவநிலை சீர்கேட்டைச் சரி செய்ய ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்கள். ஆனால், பிரச்சினை எளிதாகப் பிடிபடுவதில்லை அத்துடன், எங்கு தொடங்குவது என்றும் தெரிவதில்லை.

நல்ல வேளையாக, சில கிழ விஞ்ஞானிகள் இந்த விஷயத்திலும் விஞ்ஞான ரீதியில் உதவ முன் வந்துள்ளார்கள். குறிப்பாக, யோகான் ராக்ஸ்ட்ரோம் (Johan Rockstrom) என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, மற்ற பல விஞ்ஞானிகளுடன் கடந்த 40 வருடங்களாக ஆராய்ச்சி செய்து, தங்களது முடிவுகளை வெளியிட்டுள்ளனர். பருவநிலை மாற்றத்திற்காக, ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பவர்கள், இந்தப் பகுதியை அவசியம் படிக்க வேண்டும்.

  1. பூமியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் என்று நாம் அறிவோம்.
  2. இந்த வரலாற்றில், கடந்த 10,000 ஆண்டுகளாக, பூமியின் சராசரி வெப்பநிலை 1 டிகிரியைத் (செல்சியஸ்) தாண்டவில்லை
  3. இந்த 10,000 ஆண்டுகளில், உலகில் உயிரினங்கள் (நாம் உட்பட) செழித்து வந்துள்ளன
  4. மிக ஸ்திரமான இந்த காலப்பகுதியை ஹோலோஸீன் (Holocene) என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்
  5. மனித நாகரீகம், விஞ்ஞானம், கலை மற்றும் பல வளர்ச்சிகளுக்கான முதுகெலும்பு இந்த ஸ்திரத்தன்மை
  6. கடந்த 50 ஆண்டுகளாக, நாம் ஹோலோஸீன் காலப்பகுதியைத் தாண்டி, ஆந்த்ரோபாஸீன் (Anthropocene) என்ற நிலைக்கு வந்து விட்டோம். அதாவது 1 டிகிரியை விட உலகின் சராசரி வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி 150 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், அளவை மீறிய காலம், கடந்த 50 ஆண்டுகள்
  7. நமது வளர்ச்சியின் அடிப்படைக் காரணம், சராசரி வெப்பநிலையின் ஸ்திரத்தன்மை. இந்த ஸ்திரத்தன்மையை எது முடிவு செய்கிறது?
  8. நம் பூமியின் பருவநிலை என்பது மிகவும் சிக்கலான விஷயம். ராக்ஸ்ட்ரோம் மற்றும் சக விஞ்ஞானிகள், இந்த ஸ்திரத்தன்மைக்கு 9 எல்லைகள் காரணம் என்கிறார்கள். இந்த 9 எல்லைகளை நாம் புரிந்து கொள்ளுதல், எந்த ஒரு பருவநிலை மாற்றக் கட்டுப்பாடு முடிவிற்கும் அவசியம்

வெள்ளை தாடியுடன், சோதனைச் சாலையில், பல கலர் திரவங்களைக் கலந்த வண்ணம், ”இதோ பூமியை பழைய நிலைக்குக் கொண்டுவர மருந்து!” என்று சொல்லும் டுபாகூர் வாட்ஸாப் விஞ்ஞானிகள் அல்ல இவர்கள்!

பூமியின் ஸ்திரத்தன்மையை கட்டுப்படுத்தும் 9 எல்லைகள் என்னவென்று விஞ்ஞானம் பட்டியலிட்டாலும், சில எல்லைகள் அளந்து முற்றிலும் கணக்கிட முடியாதது. ஆனால், முற்றிலும் அளக்க முடியாவிட்டாலும், எல்லையைக் கடந்து விட்டோம் என்பதைத் தெளிவாக சொல்ல முடியும்.

முதல் எல்லை – பூமியின் பனியுறைவு அளவு ஸ்திரமான 10,000 ஆண்டுகளும், பூமியின் வட மற்றும் தென் துருவங்களில் பனியுறைவு இருந்தது. இந்தப் பனியுறைவு பூமியின் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் அவசியம். நொடி ஒன்றிற்கு, 10,000 கியூபிக் அடி பனியுறைவை நாம் இன்று இழந்து வருகிறோம். துல்லியமாக எல்லையை இந்த விஷயத்தில் சொல்ல முடியாவிட்டாலும், எல்லையை மீறி, அபாய பிரதேசத்தில் நாம் இன்று இருக்கிறோம்.

இரண்டாவது எல்லை – கரியமில வாயுவின் அளவு. இந்த விஷயத்தில், நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளதால், அபாய அளவு 350 ppm எனறு தெரியும். ஆனால், இன்றைய அளவு, 350 –ஐக் கடந்து 415 ppm. இந்த விஞ்ஞானிகளின் பார்வையில், 450 ppm -ஐ தாண்டிவிட்டால், முற்றிலும் அழிவைத் தவிர வேறு வழியில்லை.

மூன்றாவது எல்லை – காடுகளின் அளவு. நாளுக்கு நாள் கூடி வரும் மனித மற்றும் கால்நடைகளுக்கு உணவு என்ற தேவைக்காக, கடந்த 10,000 ஆண்டுகளாக, காடுகளை மனிதர்கள் அழித்து வந்துள்ளார்கள். காடுகளை அழிப்பதால், பல்வேறு உபாதைகள் கூடவே வருகிறது. காட்டு விலங்குகள், பூச்சிகள் மற்றும் பறவைகள் முழுதும் அழிக்கப்படுகின்றன. நிலச்சரிவு மற்றும், நிலத்தடி நீர் போன்ற விஷயங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில், எல்லை, உலகின் 25% காடுகள் அழிக்கப்படுதல். ஆனால், இன்று, நாம் 40% சதவீத காடுகளை அழித்து, எல்லையை மீறி, அபாய வட்டத்துக்குள் வந்துவிட்டோம். உலகின் 68% வனவிலங்குகள், கடந்த 60 ஆண்டுகளில் மட்டும் அழிக்கப்பட்டுள்ளது.

நான்காவது எல்லை, பல்லுயிர்சூழலின் அளவு (biodiversity.) முந்தைய பகுதியில் பார்த்தை மீண்டும் இங்கே சொல்ல வேண்டியுள்ளது. உலகின் பறவைகளில், 70%, மனிதன் உணவிற்காக வளர்க்கும் கோழிகள். உலகின் பாலூட்டிகளில், 70%, மனிதன் உணவிற்காக வளர்க்கும் ஆடுகள் மற்றும் மாடுகள். நாம் நினைப்பதை விட அதிகமாக, நமது நல்வாழ்விற்கு, காட்டு விலங்குகள் தேவை. பெரிய விலங்குகளை மட்டுமே நாம் நினைக்கிறோம். காடுகள் அழிக்கப்படும் பொழுது, அங்குள்ள உணவுச் சங்கிலி துண்டிக்கப்படுகிறது. இதன் விளைவுகள், நாம் சற்றும் எதிர்பார்க்காதவைத. உணவிற்காக அழிக்கப்படும் ஒவ்வொரு ஏக்கர் காடும், நம்மை அழிவிற்கு அருகாமையில் கொண்டு செல்லுகிறது. மிகவும் சிக்கலான அளவு, பல்லுயிர்சூழல் அழிக்கப்படுகிறது. நிச்சயமாக நாம் அபாய எல்லையைக் கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது மட்டும் நிச்சயம்.

ஐந்தாவது எல்லை, குடிநீர் அளவு. நாம் ஒவ்வொருவரும், நாளொன்றைக்கு சராசரி, 3,000 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறோம். இந்தக் கணக்கில், பெரும் பங்கு, நம் உணவு மற்றும் பயன்படுத்தும் பொருட்களின் தயாரிப்பில் செலவாகும் குடிநீர். உலகின் பல்வேறு பகுதிகளில், குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடினாலும், சராசரி குடிநீர் அள்வின் எல்லையை இன்னும் பூமியில் நாம் தாண்டவில்லை. அப்பாடா, ஒரு விஷயத்திலாவது நாம் அபாய எல்லைக்கு வெளியே நாம் போகவில்லை என்று பெருமிதப்படத் தேவையில்லை. இதன் முக்கிய காரணம், முதல் காரணமான, பூமியின் பனியுறைவு எல்லையை நாம் மீறியது என்று கூட ஒரு வாதம் உள்ளது!

ஆறாவது எல்லை, ஊட்டச்சத்து அளவு. ஊட்டச்சத்து என்றவுடன், உணவு சார்ந்த விஷயம் என்று உங்களால், ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது அல்லவா? இங்கு சொல்லப்படும் ஊட்டச்சத்து, நாம் பயிர்களுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்தைக் குறிக்கும். பசுமைப் புரட்சி காலத்திலிருந்து (1970 முதல்) நாம், எல்லைக்கு அதிகமாக, ஃபாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் கலவைகளைப் பயன்படுத்தி வந்துள்ளோம். இதனால், தேவைக்கு அதிகமான உரங்கள், நமது நீர்நிலைகளில் கலந்து, சுற்றியுள்ள நிலத்தை பயனற்றதாக்கி விடுகிறது. இந்த எல்லையை நாம் கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஏழாவது எல்லை, கடலில் கலக்கும் கரியமில வாயு அளவு. மனிதர்களால் உருவாக்கப்படும் கரியமில வாயுவில் மூன்றில் ஒரு பங்கு கடலில் சேர்கிறது. கடல் நீருடன் சேர்ந்து, இந்த வாயு கார்பானிக் அமிலமாக மாறுகிறது. நம் கடல்கள், கடந்த 100 ஆண்டுகளில், 26% அதிக அமிலத்தன்மை கொண்டுள்ளதாக மாறியுள்ளது. கார்பானிக் அமிலம், கிளிஞ்சல் மற்றும் நத்தை மற்றும் சிப்பிக்களை கொன்று விடும் தன்மை கொண்டது. ஆஸ்த்ரேலியாவின் அருகே உள்ள பெரும் பவளத்திட்டு (Great barrier reef) இன்று கடல்நீர் அரிப்பால், அழிவடைய இதுவே காரணம். ஆயினும், கடலில் கலக்கும் கரியமில எல்லையை நாம் கடந்து விட்டாலும், அபாய நிலையில் இல்லை என்பதே விஞ்ஞானிகளின் வாதம்

எட்டாவது எல்லை, காற்றுத்துகள்களின் அளவு. காற்றுத்துகள், நகரங்களில், தொல்லெச்ச எரிபொருளைப் பயன்படுத்தும் ஊர்த்திகள் மற்றும் அனல் மின் நிலையங்களிலிருந்து காற்றில் கலக்கின்றது. வருடத்திற்கு 7.5 மில்லியன் மனிதர்கள் காற்று மாசினால் இறக்கிறார்கள். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் சராசரி ஆயுளில் 3 வருடம் இதனால் குறைகிறது. இந்த எல்லையையும் நாம் கடந்து, அபாய கட்டத்தில் இருக்கிறோம்.

ஒன்பதாவது எல்லை, ஓஸோன் அளவு. இது முழுவதும் எல்லைக்குள் உள்ளது. இந்த ஒன்பது எல்லைகளில், ஒழுங்காக மனிதர்கள் இயங்கிய ஒரே எல்லை இது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஏக்கமே, ஏன் மனிதர்களால் இன்னொரு ஓஸோன் கதையை உருவாக்க முடியவில்லை என்பதுதான்.

ஆக, உலகின் எல்லை மீறல் ரிப்போர்ட் சுருக்கமாக இங்கே:

ஆக, ஒன்பது எல்லைகளில், 6 எல்லைகளை கடந்த 60 ஆண்டுகளில் மீறிவிட்டோம். இப்படியே போனால், இந்த மீறல்களிலிருந்து மீளவே முடியாது. 2021 முதல் 2030 வரை நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நாம் இந்த எல்லை மீறல்களிலிருந்து மீள முடியுமா என்பதைத் தீர்மானிக்கும். நாம் அடுத்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் செய்தால், இந்த அத்து மீறல்களிலிருந்து நிவாரணம் பெறலாம் என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Series Navigation<< அசைவத்தை ஏன் கைவிடல் வேண்டும்?உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன? >>

One Reply to “நம் ஸ்திரத்தன்மைக்கான 9 எல்லைகள் என்ன?”

  1. மிகச் சிறந்த விழிப்புணர்வுத் தொடர்! இப்படி ஒரு கனத்த ஆய்வும் புள்ளிவிவரங்களும் கூடிய எழுத்தாக்கத்துக்காக எழுத்தாளர் ரவி நடராசன் அவர்களுக்கும் இதை அனைவரும் இலவசமாகப் படிக்கும் வகையில் இணையத்தில் வெளியிடும் ‘சொல்வனம்’ இதழினருக்கும் நனி நன்றி!

    ஆனால் இவ்வளவு சிறப்பு மிக்க தொடரில் ஏன் இவ்வளவு எழுத்துப் பிழைகள்? நீங்கள் தேவைப்பட்டால் என்னை அணுகலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.