‘மகர குண்டலமாடவும், அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும், மிகவும் எழில் ஆகவும், காற்றில் மிளிரும் கொடி போலவும், அகமகிழ்ந்துலகும் நிலவொளி தனிலே தனை மறந்து புள்ளினம் கூட, அசைந்தாடி மிக இசைந்தோடி வரும் நலம் காண ஒரு மனம் நாட, தகுமிகு என ஒரு பதம் பாட, தகிட தத்திமி என நடனமாடும்
ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் காம்போதி இராகப் பாடல்
துவாரகையின் கண்ணனைக் காண நான் உங்களை அழைக்கிறேன். இராஜஸ்தானைச் சேர்ந்த நான் ஏன் குஜராத்திலுள்ள துவாரகா அதிபனைப் பற்றிப் பேசுகிறேன்?
நான் இதே துவாரகையில் கிரிதாரியுடன் கலந்தேன். எத்தனை உயிரோட்டத்துடன் அவன் கோயில் அமைந்திருக்கிறது! கடல் மட்டத்திலிருந்து நாற்பதடி உயரத்தில் கோமதி ஆற்றங்கரையில் மேற்குத் திசை நோக்கி எழுந்துள்ள இந்தக் கோயில் முதலில் கண்ணனின் பேரனால், கண்ணன் வசித்த ‘ஹரி நிவாசை’ கோயிலாக்கிக் கட்டப்பட்டது. ராப்டி தேவியின் (முதல் கட்டுரையில் வந்த பெண்) கணவரைப் போரில் வென்ற முகம்மது பெகேடா தான் இந்தக் கோயிலையும் இடித்து அழித்தார்.
பின்னர் 15-16 நூற்றாண்டுகளில் சாளுக்கிய கலை நுட்பம் கொண்டு மீள எழுப்பப்பட்டது அவன் கோயில். அதை ‘ஜகத் மந்திர்’ என்று அழைக்கிறார்கள். ஐந்து தளங்கள், 72 தூண்கள், 52 மீட்டர் உயர்ந்த கோபுரம் உச்சியில் பறக்கும் சூரிய சந்திர முக்கோண வடிவக் கொடி, தாலாட்டும் நீலக் கடலலைகள், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மாறும் அலங்காரம், மறைவில் அவனுக்குத் தரப்படும் ராஜ உணவு.. ஆனால் அவன் எளிய யாதவன். அந்தக் கொடியை ஒரு நாளில் நான்கு முறை மாற்றுகிறார்கள். நாற்திசையும் அவன் கொடியல்லவா?
மற்றுமொரு வழக்கமும் இங்கிருக்கிறது. மதியம் கொடியேற்றும் போது தேங்காயை உச்சியிலிருந்து சிதர்க்காயாகப் போடுகிறார்கள். பிரகாரத்தில் உள்ளவர்கள் பத்தடி தள்ளி நிற்கிறார்கள்; அந்தத் தேங்காய்ச் சிதறலை அவன் ஆசி என்று பூமியிலிருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.
இராதை, ஜாம்பவீ, ருக்மிணி, சத்யபாமா, பலராமர் என்று தனித்தனி சன்னதிகள் இருக்க, இந்த மீராவிற்கு ஏனோ தனி சன்னதி இல்லை. ஆனாலும், இரு நுழைவாயில் உள்ள கோயிலில், ஒரு வாயிலின் வழி நான் உள் நுழைந்த நிகழ்வை, அவன் சன்னதியில் ஆடிப்பாடி ஒரு தீபமாக அவனுள் ஐக்கியமானதை இன்றும் சொல்வது மகிழ்ச்சியாக உள்ளது.
பால்கா தீர்த்தத்தில் அவனை வேடன் ஒருவன் தவறாகக் கொன்று விடுகிறான். அதைக் கேட்ட கோபிகைகள், கோபி தலாபில் விழுந்து உயிரை விட்டுவிட்டார்கள். இந்த மீராவிற்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை அவர்கள். அந்தத் தலாபின் மண்ணிலிருந்து கோபி சந்தனம் தயாரிக்கிறார்கள். இந்த மண்ணில் தொன்மம் நடைமுறையாகி மீண்டும் பலவேறு வகைகளில் கிளைக்கிறது.

துவாரகாதீசனை தரிசிக்க வரும் சில குடும்பத்தினர் ஒரு பீடத்தில் தவழும் குழந்தைக் கண்ணனை ஏந்திக் கொண்டு கோயிலை வலம் வருகிறார்கள். அவர்கள் வீட்டில் குடியேறப் போகும் குழந்தைக்கு அவர்கள் ‘ராஜ தரிசனம்’ செய்து வைக்கிறார்களாம்! அரையில் கிண்கிணி அணிந்து, தலையில் பீலி சூடி, நீலப்பட்டுத் துணி போடப்பட்டிருக்கும் அந்த பீடத் தொட்டிலில் தவழ்ந்து கொண்டே அவன் குறும்புடன் துவரகாதீசனைப் பார்க்கிறான். எத்தனை விதமான பக்திகள்! கடவுள் அவர்களுக்குக் குழந்தை, எனக்கோ அவன் காதலன். கோல வண்ணம் காட்டி, குழலிசையைக் கூட்டிய அழகன்; அன்றலர்ந்த நறுமண மலர் அவன், மெல்லிய மலரிதழும் அவன்; அந்த மதி முகத்தில் மயங்கிய மதியற்ற பிச்சி நான்.
‘பேட் துவாரகா’வில் அவனது மற்றுமொரு அழகிய ஆலயம். படகுச் சவாரி செய்து தீவினுள் இருக்கும் இந்த ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். கடற் பறவைகள் உல்லாசமாகக் கூச்சலிட்டு கேள்வி கேட்கின்றன- எந்த நிறத்தவன் அவன்? கறுப்பா, நீலமா? இந்த கேள்விகளெல்லாம் குசேலருக்கு இல்லை, அவர் வந்தவுடன் இள வயது நட்பைக் கொண்டாடிய கண்ணனுக்கோ, அந்தக் குசேலரின் பெயரால் அட்சதைகள் தந்து பணம் பறிக்கும் கும்பலுக்கோ இல்லை. என்னைப் பொறுத்த வரை அவன் வான் நீலமும், கடல் நீலமும் கலந்தவன்.
அவன் அரசாண்ட மாபெரும் நகரம் கடலடியில் உள்ளதாக அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் சொல்கிறார்கள்; கட்டுரைகளும் வெளி வந்துள்ளன. கடலடியிலிருந்து சில தூண்களும், கல் பதாகைகளும் எடுக்கப்பட்டுள்ளன. காலம் அவனை நமக்கு வரலாற்றுப் புதைவுகளின் மூலம் வெளிக்காட்டலாம். ஒரு யாதவன், ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தவன், கம்சனை அழித்து அரசினை மீட்டவன், அண்ணன் பலராமனைத் தந்தை என்றே மதித்தவன், ஆறுகள் செழித்தோடும் மேய்ச்சல் நிலங்களை விட்டு புது நகரம் நிர்மாணித்தவன், கடல் வழி வணிகத்தை வாழ்வென அமைத்துக் கொடுத்தவன், அனைத்திற்கும் மேலே கீதை சொன்னவன், அவனே என் காதலன்.
சூழ்நிலைக் காரணத்தால் நான் மேவார் ராணாவைத் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், என் வாழ்வு, என் உரிமை என வாழ்ந்த புரட்சிப் பெண் நான். அக்பரும், தான்சேனும் மாறு வேடத்தில் வந்து என் பஜனைகளில் மயங்கி கிரிதாரியின் காலில் விலை மதிப்பற்ற அட்டிகையை வைத்துச் சென்றார்களாம்; எனக்கெப்படித் தெரியும்? கண்ணனைத் தவிர வேறு யாரை நான் கண்டேன்?
‘ஜனம் ஜனம் கி புஞ்சி பாயீ ஜக் மே சபீ கோவாயோ பாயோஜீ மேனே ஷ்யாம் ரதன் தன் பாயோ கர்ச் ந லாகே கோயி சோர் ந லூட்டே தின் தின் ஹாட் சவாயோ பாயோஜீ மேனே ஷ்யாம் ரதன் தன் பாயோ சத்கி நாம் கேவாயா சத் குரு கரி க்ருபா அப்னாயோ பாயோஜீ மேனே ஷ்யாம் ரதன் தன் பாயோ மீரா கே ப்ரபு கிரிதர் நாகர் ஹர்ஷி ஹர்ஷி ஜாஸ் காயோ பாயோஜீ மேனே ஷ்யாம் ரதன் தன் பாயோ’
என் நினைவில் வாழும் கிரிதாரியுடன், என் இராஜஸ்தானும் வாழ்கிறது. என் நிலத்தில் நீங்கள் ஒட்டகத்தில் பயணிக்கலாம். ஆல்பெர்ட் ஹாலில் (அரண்மனையில் அமைந்துள்ள ம்யூசியம்) சில அரிய வகை இசைக் கருவிகள், வண்ண ஓவியங்கள், போன்றவை எங்களின் கலைத் திறனை உங்களுக்குக் காட்டுபவை. கோட்டைகள் கட்டப்பட்டிருக்கும் விதம் நிச்சயமாக உங்களை அதிசயிக்க வைக்கும். வெள்ளைப் பளிங்குக் கற்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புது ஜெய்ப்பூர் கண்களைக் கவர்கிறது. ரோஜா நிறப் பளிங்கோ பழைய நகரின் எழில். காற்று மாளிகையின் தொழில் நுட்ப அமைப்பும், அதன் சித்திர வேலைப்பாடுகளும் பயணியர்களைக் கவர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அருகே இராஜஸ்தானி மணப்பெண், மற்றும் மணமகன் அணியும் ஆடைகளை அணிந்து கொண்டு சிரித்து மகிழ்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள் வயது வித்தியாசமின்றி பயணிகள்.
புஷ்கர் மேளாவை நீங்கள் அறிவீர்கள். அங்கேயுள்ள பிரும்ம தேவனின் கோயிலை? மிகப் பெரிதாக அமைந்துள்ள அந்தக் கோயில் அகில உலகத்திலும் அவருக்கு இருக்கும் ஒரே கோயில். அவரது மனைவியரில் ஒருவரான சாவித்ரி, அவர் காயத்ரியை மணம் செய்ததும் கோபம் கொண்டு பிரும்மனை சபித்தாரம். அதுவும் எப்படி- அவருக்கு பூவுலகில் ஒரே ஒரு கோயில் மட்டுமே அமையும்-அதிலும் அர்ச்சனைகள் நடை பெறாது! அங்குள்ள அழகிய பிரும்ம தீர்த்தத்தில் நீராடி முன்னோர்களை நினைப்போருக்கு நல்ல தலைவிதி அமையும் என்னும் வரத்தையும் சாவித்திரி தருகிறார். எந்த நிகழ்விலும் இருக்கும் பல விளைவுகளை இது சொல்கிறதல்லவா?
ஆஜ்மீரின் தர்க்காவும் புனித இடமாகக் கருதப்படுகிறது. இங்கே உறையும் இறையை ‘பாபா’ என அழைக்கிறார்கள். அதிக நறுமணமுள்ள பன்னீர் ரோஜாக்களை அங்கே ‘பாபா’விற்குச் சமர்ப்பிக்கிறார்கள். அத்தரின் மணம் எங்கும் பரவி நிறைகிறது. மிகப் பெரும் உணவுக் கலன்கள் வளாகத்தில் பதிக்கப்பட்டுள்ளன. ஊரார் மற்றும் பயணியரின் கொடையால் மதிய உணவு அதில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
எங்கள் நிலம் பசுமை குறைந்த ஒன்றுதான். அதை நாங்கள் வண்ணங்களால் நிறைத்துக் கொள்கிறோம். சின்னச்சின்ன வண்ணக் குயில், கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதம்மா. கிரிதாரி என்று கூவுதம்மா.