துயரிலும் குன்றா அன்பு

பாடல் 14: துயரிலும் குன்றா அன்பு

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்

陸奥の

しのぶもぢずり

誰ゆゑに

乱れそめにし

われならなくに

கனா எழுத்துருக்களில்

みちのくの

しのぶもぢずり

たれゆゑに

みだれそめにし

われならなくに

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: அமைச்சர் தோரு
காலம்: கி.பி. 822-895.

தலைநகர் கியோத்தோவை நிர்வாக வசதிக்காக மூன்று மாவட்டங்களாகப் பிரித்திருந்தார்கள். இடது, நடு, வலது எனப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஒவ்வோர் அமைச்சர் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு இடது மாவட்டத்தின் அமைச்சராக இருந்தவர்தான் இப்பாடலின் ஆசிரியர். இத்தொடரின் 11வது பாடலை இயற்றிய அறிஞர் தக்காமரோவை நாடுகடத்த உத்தரவிட்ட பேரரசர் சாகாவின் மகன் இவர். ஆனால் சாகாவின் 30 மனைவிகளில் 19வது மனைவிக்குப் பிறந்த 32வது மகன் என்பதால் இளவரசுப் பட்டம் சூட்டப்படாமல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் ஒரு மிகப்பெரிய கலாரசிகர் என்பது இவரது சமகாலத்தில் எழுதப்பட்ட இசே மோனொகதாரி (இசேவின் கதைகள்) என்ற நூலின் மூலம் தெரியவருகிறது. அந்நூலின் ஆசிரியரும் நாயகனுமான நராஹிராவும் இத்தொகுப்பில் ஒரு பாடலை (17வது) எழுதியுள்ளார். அந்நூலின் நாயகன் முதல் அத்தியாயத்திலேயே தன் காதலை வெளிப்படுத்த இப்பாடலைப் பயன்படுத்துகிறார்.

பாடுபொருள்:

சீரற்ற வண்ணமிடப்பட்ட பட்டுத்துணியைப் போல் கலங்கிக் கிடக்கும் உள்ளம்

பாடலின் பொருள்: தூரத்து வடகிழக்குத் திசையில் இருக்கும் ஷினோபு நகரத்தில் மொஜிஜுரி முறையில் வண்ணமிடப்பட்ட பட்டுத்துணியைப் போல் என் உள்ளம் காதலால் கலங்கிக் கிடக்கிறது. ஆனால் அதன் காரணமாகவெல்லாம் நான் உன் மீது வைத்த காதல் மாறிவிடாது.

இத்தொடரில் நம் சங்க இலக்கியங்களைப் போலவே அக்கால வாழ்க்கை முறையையும் புவியியல் தகவல்களையும் தன்னுள் பொதித்து வைத்திருக்கும் இன்னொரு அகப்பாடல். முதலடியில் குறிக்கப்பெறும் மிச்சினொக்கு என்பது தற்போதைய வடகிழக்கு மாகாணங்களான அகிதா, ஃபுகுஷிமா, மியாகி, இவாதெ, அவோமொரி ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பரப்பைக் குறிக்க அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சொல். அப்பகுதியிலுள்ள ஷினோபு என்ற மலைநகரில் பட்டுத்துணிகளுக்கு வண்ணமிட ஒரு மாறுபட்ட முறையைப் பின்பற்றி வந்தார்கள். ஒரு பாறையின்மீது வண்ணமிட வேண்டிய பட்டுத்துணியைப் பரப்பிவைத்து அதன்மேல் பச்சிலைகளைப் பரப்பி அழுத்தம் கொடுப்பதால் ஒழுங்கற்ற முறையில் ஒரு வடிவம் அத்துணியின்மீது படியும். இன்று நாம் மாடர்ன் ஆர்ட் என்று சொல்லக்கூடிய ஓவியங்களைப்போல் காண்போர் பார்வைக்கேற்பப் பொருள்படும். இந்த முறைதான் மொஜிஜுரி எனப்படுவது.

இவ்வாறு வண்ணமிடப்படும் துணி எவ்வாறு ஒழுங்கற்றுக் காணப்படுமோ அவ்வாறு என் உள்ளம் கலங்கிக் கிடக்கிறது. இதற்கு உரையாசிரியர்கள் இரண்டு விதமான பொருள்களைத் தருகிறார்கள். காதலி தன் காதலின் நேர்மையைச் சந்தேகித்ததால் உள்ளம் கலங்குகிறது என்றும் பெருந்திணைக் கைக்கிளைக் காதல் ஒன்றை எப்படி வெளிப்படுத்துவது எனத் தவித்துக் குழம்பிக் கிடப்பதாகவும் கூறுகிறார்கள். ஷினோபு என்ற சொல்லுக்கு இலைகள் கொண்ட கொடி, காதல், ரகசிய ஆசை என மூன்று பொருள்கள் உள்ளன. இதுதான் உரையாசிரியர்களை இருவிதமாகப் பொருள்கொள்ள வைத்திருக்கிறது.

மொஜிஜுரி வண்ணம்போல் என் உள்ளம் கலங்குவதற்கு நீதான் காரணம். ஏன் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கினாய்? உன்னால் நான் துன்பம் அனுபவித்தாலும் அது என் காதலைக் குறைத்துவிடாது எனக் கடைசி இரு வரிகள் கூறுகின்றன. அதற்கு உவமையாகக் கூறப்படும் மொஜிஜுரி முறை முதல் மூன்று அடிகளில் விளக்கப்பட்டுள்ளது.

வெண்பா:

பாறைமேல் போர்த்து கொடியின் இடைப்பட்ட
கூறையுறு வண்ண வடிவெனத் - தூறாய்க்
கசங்கிய உள்ளந் தருவித்தோய் ஆயினும்
உன்மேற் குறையுமோ அன்பு

கூறை - ஆடை; தூறு - ஒழுங்கற்றது

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

Series Navigation<< ஜப்பானியப் பழங்குறுநூறுஉனக்காக உறைபனியில் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.