சிலுவைப் பாதை

பள்ளி இறுதித்தேர்வுகள் தொடங்குவதற்கு இன்னும் நான்குவாரங்கள் இருந்தன. வெள்ளிக்கிழமை சாயுங்காலம் அது. இனி தேர்வுகள் முடிந்து விடுதியை விட்டு வெளியேறும் நாள் அன்றுதான் வீட்டிற்கு செல்லமுடியும் என்பதால் ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை அனைவரும் கிளம்பினார்கள். பதிவேட்டில் கையெழுத்திட நீண்ட வரிசை நின்றது. பத்தாம் வகுப்பு வரையான பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் காத்து நின்றார்கள்.

“நிஜமாலுமே நீ ஊருக்கு போகலியா ப்ரியா,” என்றபடி ப்ரியா பக்கத்தில் சாந்தி அமர்ந்தாள். விடுதியின் முன்பு இருந்த பெரிய வேப்பமரத்தின் அடியில் பழைய சிமெண்ட் மேடையில் இருவரும் அமர்ந்திருந்தனர். மேடையெங்கும் காய்ந்த வேப்பஞ்சருகுகள் மிகமெல்லிய காற்றுக்கும் நகர்ந்து நகர்ந்து இடம் மாறிக்கொண்டேயிருந்தன.

சற்றுநேரத்தில் அனைவரும் வெளியேறிய மைதானம் அமைதியாக இருந்தது. எதிரே இரண்டுமாடி பள்ளிக்கட்டிடம் இளம்சிவப்பு நிறத்தில் சலனமின்றி உயர்ந்து நின்றது.

ப்ரியா சாந்தியின் பக்கம் திரும்பி அமர்ந்து பேசத்தொடங்கினாள்.

“உனக்கு கஸ்ட்டமா இருக்குன்னு சொன்னியே.. அதான் உங்கூட இருக்கலான்ன.”

“ரெண்டுவருஷமா இங்கையே தானே இருக்கேன். பரீட்சை முடிஞ்ச பின்னாடி நான் திருச்சி போர்டிங்குக்கு போகனும். இதான் இங்க இருக்கப்போற லாஸ்ட் லீவ்டேஸ்.”

“ஒனக்கு மட்டுமா…ஸ்கூல் ஃபைனல் படிக்கற எல்லாருக்குமே இதான் லாஸ்ட்..திருச்சி போர்டிங்கும் இதுமாதிரி தானே இருக்கும்.”

“அது வயசான சிஸ்டர்ஸ், மதர்ஸ் தங்கற போர்டிங். இனிமே அங்கதான். படிக்கறதுக்காக இங்க அனுப்பினாங்க.”

“காலேஜ் படிக்க வைக்க மாட்டாங்களா?”

“அங்கருந்து ஹோலிகிராஸ் காலேஜ் இல்லாட்டி பிஷப் காலேஜ் எங்கியாச்சும் சேத்துவிடறதா மதர் சொல்லியிருக்காங்க. ஆனா அந்த போர்டிங்ல இருந்துதான் போகனுமாம்.”

“உனக்கு அதுதான் வீடா சாந்தி?”

“வயசான சிஸ்டர்ஸ் அங்க இருக்கற மத்தவங்கதான் என்னை வளர்த்தாங்க. நான் சின்னப்பிள்ளையா இருந்தப்ப என்கூட இருந்த சிஸ்டர்ஸ் யாரும் இப்ப இல்ல. நான் இங்க வந்தப் பிறகு மூணுபேர் ஆண்டவர்க்கிட்ட போயிட்டாங்க.”

“இங்க வந்தப்பிறகு திரும்ப அங்க போகவேயில்லையா?”

“இல்ல. அப்படியெல்லாம் நெனச்சதும் நீங்க வீட்டுக்கு போற மாதிரியெல்லாம் போக முடியாது. படிச்சு முடிச்சப் பின்னாடி இங்க இருக்கிற மதர் கையெழுத்துப்போட்டு என்னைய அனுப்பனும்.”

“திருச்சியில அத்தன ஸ்கூல் இருக்கறப்ப இங்க எப்படி அனுப்பினாங்க?”

“என்னைய நர்சிங் படிக்க வைக்கலான்னு நிறைய சிஸ்டர்க்கு ஆசை. டென்த்ல மார்க் கம்மியாயிருச்சா.. சயின்ஸ் குரூப் கிடைக்கல. அதான் முசிறி ஸ்கூல்ல எடம் இருக்குன்னு மதர் இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க.”

“அந்த போர்டிங் தான் ஒனக்கு பிடிக்குமா?”

“இங்க இருக்கறதுதான் பிடிச்சிருக்கு. அங்க ரொம்ப அமைதியா இருக்கும். சின்ன சத்தம் கேட்டாக்கூட பயமா இருக்கும்.எந்த சிஸ்ட்டருக்காவது ஒடம்பு சரியிருக்காது. யாராச்சும் செத்து போவாங்க. எல்லாரும் ரொம்ப வயசானவங்க. ரொம்ப கஸ்ட்டப்படுவாங்க..பாவமா இருக்கும். அழுகையா வரும். இங்க மாதிரி ஜாலியா இருக்க முடியாது.”

‘இங்க ஜாலியா இருக்கா?”

“ஆமா…”

இருவரையும் ஜெனிட்டா அக்கா சாப்பிட அழைத்தாள். அவள்தான் விடுதியில் உதவி பாதுகாவலர். ஆசிரியப்பயிற்சி முடித்திருந்தாள்.

ரசத்தில் மூழ்கிய சோறும், கேரட் பொரியலுமாக தட்டுகளை ஏந்திக்கொண்டு மறுபடியும் வேப்பமரத்தின் கீழ் அமர்ந்தார்கள். சூடுதாங்காமல் இருவரும் தட்டுகளை மணலில் வைத்தார்கள்.

“அங்கெல்லாம் நைட்டானா கஞ்சிதான் ப்ரியா,” என்றபடி சூடான சோற்றை தட்டின் ஓரத்திலிருந்து எடுத்து சாப்பிடத் தொடங்கினாள்.

சாப்பிட்டதும் தட்டுகளைக்கழுவி கடப்பைக்கல் அடுக்கில் கவிழ்த்துவிட்டு மைதானத்திற்கு வந்தார்கள். இரண்டு வேப்பமரங்களுக்கு அடுத்தததாக இருந்த மாதாகெபிக்கு முன்னால் மட்டும் மின்விளக்கு வெளிச்சம் இருந்தது. அங்கு சென்று அரைவட்டவடிவிலான அல்லிக்குளத்தின் கட்டைகளில் அமர்ந்தார்கள். குளம் முழுவதும் வட்ட வட்டமாக கரும்பச்சை இலைகள் மிதந்துகொண்டிருந்தன. அல்லிகள் சிவப்பாக மலர்ந்திருந்தன. இருவரும் தண்ணீரை அலைத்து அலைத்து இலைகளை கலைத்து விட்டனர்.

“டெய்லி ஸ்டடிக்கு ஒக்காந்திருக்கறதவிட இன்னிக்கு ஜாலியா இருக்கு சாந்தி. இந்த அல்லிப்பூலாம் ரொம்பஅழகா இருக்கு.”

“ஆமா…லீவ் டேஸ்ல இருக்கும் போது இங்க தனியா சுத்திக்கிட்டு இருப்பேன்.”

உறங்குவதற்காக ஜெனிட்டா அக்கா அழைத்தாள். முதல்தளத்திலிருந்த பனிரெண்டாம் வகுப்பிற்கான நீண்ட அறையிலிருந்து தங்களின் போர்வை தலையணைகளை எடுத்துக்கொண்டு ஓடிவந்தார்கள். ஜெனிட்டா அக்காவின் அறைக்கு பக்கத்திலுள்ள வழிபாட்டு அறையில் இயேசு திருவுருவத்தின் காலடிகளில் போர்வையை விரித்து படுத்துக்கொண்டார்கள். ஜன்னலின் வழியே வானத்தைப் பார்த்தபடி கால்களை ஆட்டிக்கொண்டு பேசிக்கொண்டே இருந்தார்கள்.

“சாந்தி…சர்ச்சுக்குப் போகனுல்ல எழுந்திரி….”

ஜெனிட்டா அக்காவின் குரல் கேட்டு ப்ரியா முதலில் எழுந்தாள். பாதி கட்டிய புடவையை இழுத்துப் பிடித்தபடி தலைக்குமேல் நின்றிருந்தாள்.

“நானும் வரேங்க்கா,” என்று எழுந்து உட்கார்ந்தாள்.

ஜெனிட்டா அக்கா தலையாட்டி விட்டு தன் சேலைமடிப்பை பிடித்துக்கொள்ள சொன்னாள். ப்ரியா உட்கார்ந்தபடியே பிடித்துக்கொண்டாள். ஜெனிட்டா அக்கா ஆரஞ்சு வண்ணப்புடவையில் அழகாக இருந்தாள். முடியை விரித்துவிட்டிருந்தாள்.

“ப்ரியா சீக்கிரம் கெளம்பனும்,”என்று கூறிய சாந்தி உற்சாகமாக எழுந்து இருவரின் போர்வை தலையணைகளை மடித்து வைத்தாள்.

இருவரும் கழிவறைக்கு ஓடிச்சென்று திரும்பி, விடுதி முன்பிருந்த குழாயில் முகத்தை கழுவிக்கொண்டார்கள். பெட்டிகள் இருக்கும் முதல் தளத்திற்குப் படிகளில் தாவி ஏறினார்கள்.

“ப்ரியா…நீ உன்னோட ப்ளு ஸ்கர்ட்டையும் டாப்பையும் போட்டுக்க..எனக்கு அதுதான் பிடிக்கும்.”

“கோயிலுக்கு போறோம். குட்டிப்பாவாடையா போடறது?”

“அதான் முட்டிக்கு கீழ இருக்கே…அழகா இருக்கும் அதையே போடு.”

சாந்தி மெரூன்வண்ண கவுனை அணிந்து கொண்டாள். சாந்திக்கு நீண்டு அடர்ந்த முடி. நீண்ட பின்னலின் நுனியை சுருட்டி சுருட்டி சடையை சிறியதாக்கி கருப்பு பேண்டை சுற்றி முதுகுவரை தொங்கவிட்டாள் . ப்ரியா விரிந்து சுருண்ட முடியை இரட்டை சடைக்காக பிரித்தாள்.

“சடை பின்னவேணாம்,” என்ற சாந்தி ப்ரியாவின் முடியை சீவி குதிரை வால் போட்டாள்.

சாந்தி தலையில் வெள்ளை துணியை முக்காடாக சுற்றிக்கொண்டதும் இருவரும் கைகோர்த்தபடி மைதானத்திற்கு வந்து நின்றார்கள். ப்ரியா சாந்தியின் கைகளை பிடித்துக்கொண்டு குனிந்து தன் கட்ஷீ விற்குள் கால்களை நுழைத்துக் கொண்டிருந்தாள்.

“இதுக்குதான் என்ன மாதிரி சிலிப்பர் போட்டுக்கனும். ஒனக்கு இதை போடறதே டெய்லி ஒருவேலையா இருக்குல்ல.”

“அப்பாதான் இனிமே சிலிப்பர் போட்டுட்டு வெளியப் போகக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்.”

விடுதியின் பின்புறத்திலிருந்த இருப்பிடத்திலிருந்து சிஸ்டர்கள் வரிசையாக கிளம்பி சென்று கொண்டிருந்தார்கள். இவர்களின் வணக்கத்திற்குத் தலையாட்டி விட்டு மதர் லீனா காவி நிறப்புடவையின் முந்தனையை செருகியபடி வேகமாக நடந்தார். அடுத்ததாக வெள்ளை, இளம் ஊதா அங்கிகள் அணிந்த சிஸ்டர்கள் பேசிச் சிரித்தபடி வயிறு வரை தொங்கிய சில்வர் சங்கிலியின் சிலுவையை பிடித்தபடி கடந்து சென்றார்கள்.

ஒவ்வொருவருக்கும் குட்மார்னிங் சொல்லியபடி ஜெனிட்டா அக்காவிற்காக காத்திருந்தார்கள்.

காவிப்புடவையில் வேகமாக நடந்து வந்த ஜீலி சிஸ்டர் மட்டும் நின்று, “என்ன குமரிங்களா… அழகா கிளம்பியிருக்கீங்களே, நீங்க என்ன கேட்டாலும் ஜீசஸ் கொடுப்பார் ,”என்று சிரித்துவிட்டு சென்றார்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்.

“ தினமும் தான அம்மா அப்பா வரனுன்னு கேக்கறேன்.”

“எப்பவாச்சும் வருவாங்க.”

சாந்தி திரும்பி மாதாகெபியைப் பார்த்து சிலுவைக் குறியை நெஞ்சில் போட்டுக்கொண்டு கண்களை மூடித்திறந்தாள்.

“அம்மா அப்பா வரனுன்னு வேண்டிக்கிட்டேன்.”என்றாள்.

“சாந்தி…டென்னிஸ் அண்ணா கோயிலுக்கு வருவரா?”

“அங்கதான் இருப்பாரு…”

“அந்தண்ணா பியானோ வாசிக்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும்.”

மூவரும் முசிறியின் சாலையில் வேகமாக நடந்தார்கள். காவல்நிலையத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த சிஸ்டர்களின் வரிசையுடன் இணைந்து கொண்டார்கள். அதிகாலையின் சில்லிப்பில் ப்ரியா கைகளை கட்டிக்கொண்டாள். நாற்சந்திப்பைக் கடக்கும் போது ப்ரியா இடதுபுறமாக எட்டிப்பார்த்து நின்றாள். காவிரி மணலாக விரிந்திருந்தது. அடுத்ததாக நீண்ட சுவர்களுக்குள் அரசு அலுவலகங்கள் கொண்ட வரிசை. எதிர்புறம் பழைய காலத்து காரைவீடுகள்.

“ஏ..விஜய்படம் ஓடுது.’

“டீ.வி ல ரெண்டுபடம் பாத்திருக்கேன். நீ தியேட்டருல பாப்பியா?”

“இல்ல..சிடி ப்ளேயருல தான் பாத்திருக்கேன். எங்கப்பா சிவாஜி கமல் படத்துக்குதான் கூட்டிட்டு போவார். ஜூராசிக் பார்க் மாதிரி படத்துக்கும்.”

தேவாலயத்தில் நுழையும் போதே பியானோவின் முனகல் கேட்டது.

“ஐ..”என்றபடி ப்ரியா படிகளில் குதித்து ஏறினாள். சாந்தி அவளைத் தொடர்ந்து ஓடி ஏறினாள்.

ஜூலி சிஸ்டர் சிரித்தபடி மேல் படியில் திரும்பி நின்று ஜாக்குலின் சிஸ்ட்டரிடம், “பாருங்க ஜாக்குலின்…நேத்துலருந்து பாத்துக்கிட்டே இருக்கேன். ரெண்டும் சிட்டுகுருவிங்க மாதிரி சேந்தே திரியுதுங்க…சிரிச்சுக்கிட்டே இருக்குங்க. ஸ்கூல் நாள்ல்ல பாத்தா உம்முன்னு இருக்குங்க,”என்றபடி உள்ளே சென்றார்.

இருவரும் பியானோ பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார்கள்.

“ஏன் கீழ ஒக்காரரீங்க. பெஞ்சுக்கு வாங்க,” என்று ஜெனிட்டாஅக்கா அழைத்தாள்.

“விடு ஜென்னி…அவங்களுக்கு பிடிச்ச எடத்துல ஒக்காரட்டும்,”என்ற ஜீலி சிஸ்டர் எழுந்து வந்து டென்னிஸிடம் பேசினார்.

டென்னிஸ் குனிந்து, “ஒம்பேரு என்ன?மறந்துட்டேன்,”என்றான்.

“ப்ரியாண்ணா..”

“ஒனக்குப் பிடிச்ச பாட்டு ஒன்னு சொல்லு,”

அவள் சாந்திபக்கம் திரும்பி சிரித்தாள்.

“பூவில் மலரும் தேவனே…”

“ஏ..நல்லபாட்டு. சாந்தி …இந்தப் பாட்டு பாடுறியா..”

“சரிண்ணே…”

அருள் நிறந்த மரியே வாழ்க

பெண்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவள் நீயே…..என்று ஜெபம் முடியப்போகும் தருணத்தில் ப்ரியா ஏசுவிடமிருந்து பியானோ பக்கமாக திரும்பிக்கொண்டாள்.

வழிபாடுகள் முடிந்து பாடல் நேரம் தொடங்கி இரண்டுபாடல்கள் முடிந்தப்பின் இறுதியாக சாந்தி எழுந்து சென்று ஒலிவாங்கி முன் நின்று பாடினாள். டென்னிஸ் குனிந்தபடி பியானோ வாசித்தான்.

பூவில் மலரும் தேவனே

காற்றில் பரவும் உன் நேசமே

கல்லைப் பூவாக்கும் தேவனே

உன் கரத்தில் என்னை ஏந்துமே

பூவாய் மலராய் ஆன தேவனே

உன் கரம் பூவாய் மாறுமே

சாந்தி கண்களை மூடிக்கொண்டு பாடினாள். ப்ரியா டென்னிஸின் கைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ஜெனிட்டா அக்கா பாதிரியாரை பார்க்க சென்றிருந்தாள்.

கூட்டத்திலிருந்து ஒரு பெரியவர் மெதுவாக நடந்து வந்து,“டென்னிஸ்…இந்த பையில இருக்கிற சட்டை பேண்ட்ல உனக்கு ஒத்துவர சைஸ்ஸ எடுத்துக்க. மிச்சத்த நாளைக்கு குடு,” என்று கொடுத்தார்.

அவன் குனிந்தபடி வாங்கிக்கொண்டு, “ தேங்ஸ் அங்கிள்,”என்றான். அவர் அங்கிருந்து சென்ற பின், “அண்ணா…எங்க வீட்லையும் இப்படித்தான். அத்த மாமா பெரியம்மா வீட்ல பிள்ளைகளுக்கு பத்தாத சட்டையெல்லாம் மாத்தி மாத்தி போட்டுப்போம்,” என்றாள். அவள் பேசுவது வரை அமைதியாக நின்ற ஜூலி சிஸ்டர் ப்ரியாவின் தலையில் கைவைத்து சிரித்தார்.

“ப்ரியா…நீ எந்த ஸ்டேண்டர்ட் படிக்கிற?”

”பிளஸ் டூ ண்ணா,”

“நாந்தான் இவளோட க்ளாஸ் டீச்சர். ப்யூர் சயின்ஸ் குரூப்,”

“ப்யூர் சயின்ஸ் ரொம்ப கஸ்ட்டம் சிஸ்டர். அதுக்கு மேத்ஸ் குரூப்பே ஓ.கே தான்,”

சிஸ்ட்ர் சிரித்தபடி அவன் தலையை நீவிவிட்டார்.

“நீ பியானோ வாசிக்கிறியா ப்ரியா..”

“எனக்கு வாசிக்கத் தெரியாதுண்ணா.”

“இங்க வந்து ஒக்காரு,”என்று சற்று உயரமான மரபீடத்திலிருந்து நகர்ந்து நின்றான்.

“டென்னிஸ் ஃபைனல் இயர் எக்ஸாம்ஸ் முடிஞ்சிருச்சுல்ல. அடுத்ததா நீ எங்க போகனும்?”

“சென்னைக்கு சிஸ்டர்.”

“எப்ப கிளம்பற?”

“ டீ. சி… மார்க் சீட் வாங்கின பிறகு போலான்னு ஃபாதர் சொன்னாரு. ஜீன் லாஸ்ட்ல கிளம்பிருவேன் சிஸ்டர்.”

“இனிமே நீ முசிறி வரைக்கும் வரத்துக்கான வேலையில்ல தானே….”

டென்னிஸின் முகம் கூம்பியது.

“எவ்வளவு பெரிய சர்ச்சாயிருந்தாலும் நீ தயக்கமில்லாம பியானோ வாசிக்க முன்னால போகனும். நீ கை வைச்சா பியானோல கர்த்தர் எழுந்து வருவாரு.”

“உங்க ப்ளசிங்ஸ் சிஸ்டர்…”

“எங்கிட்ட வரமாட்டாரா சிஸ்டர்.”

“உன்னோட பேச்சில கர்த்தர் இருக்காரு ப்ரியா.”

“சிஸ்டர்..உங்களோட சிரிப்புல இருக்காரு.”

சிஸ்டர் சிரித்தபடி நிமிர்ந்து கர்த்தரை பார்த்து சிலுவை இட்டுக்கொண்டு கைகளில் இருந்த ஜெபமாலையில் உள்ள சிலுவையை முத்தமிட்டார்.

“உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவோம் டென்னிஸ்..”

“நானும் காவிரியில குளிக்கறத மிஸ் பண்ணுவேன்…இந்த பியானோ ரொம்ப பிடிக்கும் சிஸ்டர்,”என்ற டென்னிஸ் கண்களை துடைத்துக்கொண்டான்.

“யாரு நம்மை கைவிட்டாலும் கர்த்தர் நம்ம கூடவே இருக்கார்…சின்னப்பிள்ளைங்கன்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும். அழக்கூடாது,”என்ற சிஸ்டர் மூவரின் தலையிலும் கைவைத்துவிட்டு சென்றார்.

டென்னிஸ் மரபீடத்தில் ப்ரியாவை அமர வைத்து ஒவ்வொரு விரலாக வைத்து அழுத்தி காட்டினான். அவளின் விரல்கள் தத்தி தத்தி தடுமாறின. பின்னால் நின்று குனிந்து அவள் இடது கையை ஒரு கட்டையில் வைத்து பிடித்தபடி வலது கையால் பியானோ கட்டைகளை தானே மாற்றி மாற்றி தொட்டான்.

பூவில் மலரும் தேவனே… என்று ப்ரியாவின் வாய் மெதுவாக இசையோடு முணுமுணுத்தது. அவளின் பயிற்சி இல்லாத பிசிறடிக்கும் குரல் அந்தத் தேவாலயத்தின் பெரிய தூண்களை, மேல் வளைவுகளைத் தொட்டுச் சென்றது. பாட்டு முடிந்ததும் சாந்தியும் டென்னிஸும் கைத்தட்டினார்கள்.

“தேங்க்ஸ்ண்ணா,” என்று சொல்லிவிட்டு ஜெனிட்டா அக்காவிடம் சென்றார்கள். விடுதிக்கு வரும் போது மணி ஏழாகியிருந்தது. குளிக்கும் வாளியை எடுத்துக்கொண்டு அகன்று விரிந்த மைதானத்தின் எல்லைக்கு கிளம்பினார்கள். புளியமரங்கள் புங்கை மரங்கள் என்று ஒவ்வொரு மரமாக தொட்டு பந்தயம் வைத்தபடி ஓடினார்கள்

நீண்ட பெரிய தொட்டியை சுற்றி துவைக்கும் கற்களும் சுற்றுசுவரும் உள்ள இடம். இருவரும் பெட்டிகோட்டுடன் துணிகளை துவைத்து வைத்துவிட்டு தொட்டிக்குள் இறங்கினார்கள்.

“அக்கா பாத்தா திட்டுவாங்க,”

“நாளைக்கு சண்டே தானே..தொட்டிய க்ளீன் பண்ணுவாங்க,” என்றபடி சாந்தி தண்ணீருக்குள் முழுகி எழுந்தாள். அவர்களின் தலைக்கு மேல் வானம் வெள்ளையாய் விரிந்திருந்தது.

“டென்னிஸ் அண்ணாவும் என்னை மாதிரிதான் ப்ரியா…அந்த அங்கிள் சர்ச்சுல இருக்க பிள்ளைகளுக்கு உதவி செய்யறவரு. என்னோட மெரூன் கவுன் கூட அவரு குடுத்ததுதான்.”

“அவரோட அங்கிள்ன்னு நெனச்சேன். உங்கம்மா அப்பா எங்க?”

“தெரியல ப்ரியா. ரெண்டாவது படிக்கறப்பவே காணாம போயிட்டாங்க. ரொம்ப நாளா வீட்டுக்கே வரல. எங்க ஊர் ஃபாதர்தான் என்னைய திருச்சியில கொண்டுவந்து விட்டார். அவரையும் அதுக்கப்புறம் பாக்கல.”

“ஊருக்கு போனதே இல்லையா?”

“யாரும் வந்து கூட்டிட்டு போகல.”

குளித்தபின் பெட்டிகோட் மாற்றிக்கொண்டு தலை துவட்டிக்கொண்டு வெயிலில் நின்றார்கள்.

அந்தப்பக்கமாக பூப்பறிப்பதற்காக வந்த ஜூலி சிஸ்டர், “குமரிங்களா…துண்டால முடிய நல்லா துவட்டிக் காய வைக்கனும்,” என்றபடி அருகில் வந்தார். பூக்களை நிழலில் இருந்த ஒரு துவைக்கும் கல்லில் வைத்தார்.

துண்டை வாங்கி சாந்தியின் அடர்ந்த முடியைத் துடைத்துவிட்டார். ப்ரியாவின் பெட்டிகோட் ஹூக்கை மாட்டிச் சரிசெய்தார்.

“ட்ரஸ் பண்றதுக்கு முன்னாடி பெட்டிகோட் ஹூக் எல்லாம் சரியா இருக்கான்னு பாக்கனும்,” என்று கன்னத்தில் தட்டினார்.

“ப்ரேக் ஃபாஸ்ட் குடுக்கறதுக்காக ஜெனி வெயிட் பண்ணுவா,”என்று கூறிவிட்டுப் பூக்களை எடுத்துக்கொண்டு சென்றார்.

துணிகளைக் காயவைத்தார்கள். ப்ரியா சந்தனநிறப் பாவாடை சட்டையை அணிந்து கொண்டாள். சாந்தி கையில்லாத பினோபார்ம் ஒன்றை அணிந்துகொண்டாள். ஒரு கையால் பாவாடையை விரித்துப் பிடித்துக்கொண்டு மைதானத்தில் ஓடும் ப்ரியாவை பார்த்து சாந்தி சிரித்தாள்.

இட்லிகளைத் தட்டில் வாங்கிக் கொண்டார்கள். பீட்ரூட் சட்னியை தனக்கு ஊற்றிக்கொண்ட ப்ரியா சாந்தியைப் பார்த்தாள். அவள் முகத்தைத் தூக்கி வைத்திருந்தாள்.

“தினமும் பீட்ரூட், கோஸ், முள்ளங்கி, சௌ சௌ ன்னு காய் சட்னியா போடறாங்க. எனக்கு காய் சட்னி பிடிக்கவே இல்ல. ரோசிஅக்கா பொட்டுக்கடலை சட்னி செய்வாங்கன்னு நெனச்சேன்,”

“என் கபோடுல பொடி, நல்லெண்ணெய் இருக்கு. எனக்கு வேணாம்…சாவி பேக்ல இருக்கு,”

“உங்கவீட்ல செய்யற பொடி காரமில்லாம இருக்கும்..இருக்கறதிலேயே காரமானதுன்னா சுகாசினி அம்மா செய்யறதுதான்,” என்றபடி ஓடினாள்.

உணவிற்கு பின் இருவரும் விடுதிக்கு பின்புறமிருந்த பெரிய இரும்புக் கதவின் சந்தில் நுழைந்து பள்ளி மைதானத்திற்குள் நடந்தார்கள். பெரிய பெரிய புளியமரங்களும் புங்கைகளும் நின்றன. நான்கு புளியமரங்களைக் கடந்து, அடுத்து நின்ற புங்கையின் அடியில் அமர்ந்தார்கள்.

“உனக்கு யாரு பெஸ்ட் ஃபிரண்ட்?”

“அப்படியெல்லாம் யாருமில்ல ப்ரியா..அப்பப்ப இருக்கிற க்ளாஸ்மெட்ஸ் தான்.”

“நம்ம க்ளாஸ்ல பாரேன்..தேவிக்கு ராஜீ,ஞானசுந்தரிக்கு ருக்மணி,ஸ்டெல்லாவுக்கு நிக்கோலாஸ் மேரி ன்னு பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. நமக்கெல்லாம் ஏன் இல்ல?”

“நீயும் மேனகாவும் பெஸ்ட் ஃபரண்ட்ஸா இருந்தீங்க தானே..”

“ஆமா..ராஜி வர்ற வரைக்கும். ராஜி வந்ததும் மேனகா எங்கூட பேசறத விட்டுட்டா.”

“அந்த ராஜிதான் உங்கூட பேசக்கூடாதுன்னு மேனகாக்கிட்ட சொல்வா..அவதான் ஒன்னாவது படிக்கும் போதே ஃப்ரண்டாம். பக்கத்துவீடு வேற. அவங்க வீட்ல… ரெண்டுபேரும் பிரியக்கூடாது எங்க போனாலும் ஒன்னாவே போகனுன்னு சொல்லிக்கிட்ட இருப்பாங்களாம். நீயும் மேனகாவும் எப்பலேருந்து ஃப்ரண்ட்ஸ்.”

ப்ரியாவின் முகம் மலர்ந்தது.

“நான் நயன்த் படிச்ச ஸ்கூல்லதான் மேனகாவ முதமுதலா சைக்கிள் ஸ்டேண்ட்ல பாத்தேன். பக்கத்து ஊரு. டூர் போனப்ப எம்பக்கத்து சீட். அந்த டூர்லதான் சேந்து படம் பாத்தோம். புளிசாதம் முழுசா சாப்பிட முடியலேன்னு ஷேர் பண்ணி சாப்பிட்டோம்.”

“ராஜி வரல?”

“இல்ல…அப்பறம் ஜெயிண்ட் வீல் சேந்து சுத்தினோம். லெவன்த் இங்க சேந்த பின்னாடிக்கூட நல்லாதான் பேசுவா. காலாண்டு பரிட்சைக்கு பின்னாடிதான் அவாய்ட் பண்ணா.”

“அவாய்ட் பண்றான்னு எப்படி கண்டுபிடிச்ச?”

“எனக்கு சரியா தெரியல. சுகாசினிதான் சொன்னா.”

“போனமாசம் அவளுக்கு ஸ்டமக் பெயின் வந்தப்ப நீ மாடிக்கு ஓடிப்போய் நாப்கின் எடுத்துட்டு வந்த தானே.. “

“ஆமா. ராஜீ ஊருக்கு போயிட்டால்ல. பாவமா இருந்துச்சு. யாருக்கிட்டயும் சொல்லாத.. அவ ஜட்டியெல்லாம் ப்ளீடிங் ஆயிருச்சுன்னு நடக்க முடியலன்னு அழுதா..நான் தான் கூடப்போய் க்ளீன் பண்ணிக்குடுத்தேன்.”

“நாலு நாளுக்கு முன்னாடி அவ பர்த் டேக்கு உனக்கு சாக்லெட் குடுக்கலதானே..”

ப்ரியா ஒன்றும் சொல்லாமல் குனிந்து கொண்டாள்.

‘சிஸ்டர் சொல்லுவாங்க…இயேசுவோட பேரால எல்லார் மேலேயும் அன்பா இருக்னுன்னு. ஆனா எனக்கு அவளைக் கண்டாவே கோவமா வருது,” என்ற சாந்தி புங்கை மரக்கிளையை ஆட்டினாள். சிறிய பூக்கள் மழைத்துளிகள் போல தரையில் விழுந்தன.

“அவளும் நல்லப்பொண்ணு தான். ஒருதடவை ஊருக்கு போறம்ப பஸ் ரொம்ப கும்பலா இருந்துச்சு. எனக்கும் அவதான் டிக்கெட் எடுத்தா. கம்பிய நல்லா பிடி ப்ரியான்னு ரெண்டு தடவ சொன்னா தெரியுமா.”

“ஏய்…அரையாண்டு பரீட்சைக்கு முன்னாடி ரெணடு பேருக்கும் சண்டை தானே. சிஸ்டர் கூப்பிட்டு முட்டி போட வச்சாங்கல்ல.”

“அன்னிக்கு அவளோட பக்கெட்ல தண்ணி பிடிச்சேன்னு கீழ ஊத்திட்டா. நான் அவ குவளையத் தூக்கி சுவத்துல வீசிட்டு வந்துட்டேன்.”

“அதானே எல்லாருக்குமே தெரியும்.”

“ஆமா… சிஸ்டர் அப்பாக்கிட்ட சொல்லிட்டாங்க.”

“அப்பா திட்டினாரா.”

“இல்ல. சிரிச்சாரு… மேனகாவை ரொம்ப பிடிக்குமான்னு கேட்டாரு. அப்படின்னா அவளை தொந்தரவு பண்ணாதன்னு சொன்னாரு…”

“ம்..”

“அவ பேசாம இருக்கறது கோவமா வருது சாந்தி. எங்க வீட்ல நிறைய பேரு. தினமும் கூட எதாவது சண்டை வரும். திட்டுவாங்க. ஆனா யாரும் பேசாம இருக்க மாட்டோம். இவதான் முதமுதலா என்னைய அவாய்ட் பண்றா,”என்றபடி கண்களை துடைத்துக் கொண்டாள்.

‘அய்ய..பப்பி ஷேம். ஹயர்செகண்டரி முடிக்கப்போற.. ஒருத்தர் பேசலன்னா விட்டுட்டு போவியா. இன்னும் மூணுமாசத்துல காலேஜ் போகனும்,”

“அதான் இனிமே காலேஜ் போனா எனக்குன்னு பெஸ்ட்ன்னு யாரும் வேணான்னு முடிவு பண்ணிட்டேன்,”

“சூப்பர். நானெல்லாம் எப்பவுமே அப்படிதான் நெனச்சுப்பேன். அழுகறதெல்லாம் எனக்கு பிடிக்காது. நான் ஒனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரேன்..வா.”

விடுதிக்கு நடந்தார்கள். மைதானம் முழுவதும் வெயில் நிரம்பி இருந்தது.

சாந்தி ப்ரியாவின் ஆட்டோகிராஃப் நோட்டை எடுத்து வந்தாள். வழிபாட்டு அறையில் காலையில் மடித்து வைத்திருந்த போர்வைகளை விரித்துப் படுத்துக் கொண்டார்கள்.

“நான் உனக்கு ஆட்டோகிராஃப் எழுதறேன். பரிட்சை எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு போய்தான் படிக்கனும்..ப்ராமிஸா,”

“ப்ராமிஸ்,”

அவள் அமர்ந்து எழுதத்தொடங்கினாள். இவள் படுத்துக்கொண்டாள். கண்முன்னால் அந்தரத்தில் சிலுவையில் தொங்கும் இயேசுவை பார்த்தபடியே காலாட்டிக் கொண்டுபடுத்திருந்தாள். சாந்தி இடையிடையே எட்டிப்பார்த்து சிரித்தபடி எழுதிக்கொண்டிருந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.