
“நான் உன்னை அகழ்கிறேன். அதற்காக உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். உன்னுள் வாழும் உயிர்கள் இதனால் தங்கள் வாழ்விடங்களை, உறுப்புக்களை, ஏன் உயிரையும் கூட இழக்க நேரிடலாம். நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பைக் கோருகிறேன். என் வசிப்பிடம் நல்ல முறையில் எழும்பட்டும். அனைத்து ஜீவராசிகளுக்கும் அடைக்கலம் அதில் கிடைக்கட்டும்.”
ஆகம சாஸ்திரத்தில் மேற்கூறிய வேண்டுதல் சொல்லப்படுகிறது. வீடோ, கோயிலோ, பள்ளியோ, குளமோ, செயற்கை ஏரியோ, எந்த ஒர் கட்டுமானத்திலும் இதை உணர்ந்து ஓதுவது இந்திய நடைமுறை.
தனது ‘ஜகத் சித்திரம்’ என்ற வசன கவிதையில் பாரதி சொல்கிறார்:
காற்று: உயிர் வளங்கொடுத்தேன்; உயிரால் வெல்க இந்திரன்: மதிவலி கொடுத்தேன்; வசுபதி வாழ்க சூரியன்: அறிவிலே ஒளியை அமைத்தேன்; வாழ்க தேவர்: பயன் வரும் செய்கையே அறமாம்.
உலகம் பல்லுயிர்களால் இயங்குகிறது. பசியற்ற போது சிங்கம் வேட்டையாடுவதில்லை. ஆனால், நாகரீகம் அடைந்துள்ளதாகப் பெருமைப்படும் மனிதன் உலகின் ஆதிவாசிகளை, அவர்கள் நிலங்களை, அவர்களின் மொழிகளை, வாழியல் வகைகளைத் தன் பேராசையால் அழிக்கிறான்.
90 நாடுகளில் கிட்டத்தட்ட 30 கோடி ஆதிவாசிகள் இருக்கிறார்கள், அதாவது உலக மக்கள் தொகையில் 5% பேர். 5000க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள், 4000 மொழிகள், தங்கள் குருதியைச் சிந்தி தங்கள் வாழ்க்கையை மீட்கப் போராடிவருகிறார்கள். வளங்கள் நிறைந்த அவர்களின் நிலம், அந்தப் பரப்பில் உயிர்க்கும் பல்லுயிரிகளின் பாதுகாப்பு, இயற்கையோடு இணைந்த அவர்களின் வாழ்க்கை, இவற்றைக் காக்கப் போராடும் அவர்களுக்கு சட்ட முறைப்படி கூட நீதி கிடைப்பதில்லை; அப்படிக் கிடைத்தாலும் அது அவர்களது தொல் வாழ்வியல் முறைகளைத் தொடர்வதில் சிக்கல்கள் ஏற்படுத்தும் ஒன்றாகத்தான் இருக்கிறது.
உலகில் ஒரே ஒரு தனித்த மனிதன் 22 ஆண்டுகளாக பிரேசிலின் ரான்டோனியாவில், (Rondonia) மரத்தில் வசிக்கிறார். அவர் இனம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. கோடாரியைக் கொண்டு மரங்களில் வசிப்பிடம் அமைத்துக் கொள்கிறார். முன்னர் கீழே விழும் பெரும் மரக் கிளைகளைக் கொண்டு குடிசை கட்டிக் கொண்ட அவர் தற்போது மரங்களிலேயே இருக்கிறார். கிட்டத்தட்ட 50 வயது, முற்றானத் தனிமை; அவரை அணுகக் கூடாது என்றும், அவரை நாகரீக மனிதனாக்கும் முயற்சியும் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நினைத்துப் பாருங்கள், அந்த வளமிக்கக் காடுகளை அபகரிப்பதற்காக முழு இனம் ஒன்று கொன்று குவிக்கப்பட்டிருக்கிறது. அதில் தப்பிய ஒரே மனிதர் தனியாக வாழ்கிறார்.
ஆம், யார் இந்த ஆதிவாசிகள்?
-அப்படித் தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள்.
-தங்கள் நிலங்களுக்கும், சூழ் பயிர்களுக்கும் உள்ள உறவை அறிந்தவர்கள்.
-தனி மொழி, தனியான கலாச்சாரம், இனப் பெருமிதம், கூட்டு வாழ்க்கை முறை கொண்டவர்கள்.
இயற்கையை நேசிப்பவர்கள். அதன் சமிஞ்கைகளை அறிந்தவர்கள். (அந்தமான்- நிகோபார் தீவுகளில் பி பி சியைச் சேர்ந்த பெண் நிருபர் சென்று தங்கி அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவர்கள் நல்ல வெயில் இருக்கும் மதியத்தில் ‘இன்னும் சிறிது நேரத்தில் பெரும் மழை வரும். கூடாரத்திற்குக் திரும்புங்கள்.’ என்று சொன்னது போலவே வெள்ளப் பெரு மழை பெய்ததாம்.) இயற்கையை அணுக்கமாக அறிந்தவர்கள் இவர்கள். பல்வேறு நாடுகளில் பலப் பெயர்களால் இவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்-ஆதிவாசி, மூத்தவன், ஜனஜாதி, பழங்குடியினர் போன்றவை சில.
அவர்கள் வாழும் நிலத்தில் உலகின் 80% வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன; குறிப்பாக, எண்ணை, மரம், அரிய இரத்தினங்கள், தாதுப் பொருட்கள். அவர்கள் அந்த வளங்களைத் தேவைக்கேற்ப மிகக் குறைந்த அளவில் பயன்படுத்துகிறார்கள்- உதாரணமாக அரிய வகை மூலிகைகள், மரப்பட்டைகள், விலங்குக் கழிவுகள், தாதுச் சக்தி மிகுந்திருக்கும் நீர் நிலைகள். ஆனால், அரசுகளும், பெரும் தொழிலதிபர்களும் ஆதிவாசிகளின் நிலத்தை அபகரித்து விவசாயப் பண்ணைகளைப் பெருமளவில் நிறுவுகிறார்கள்; அதன் எண்ணை வளங்களுக்காக பெரும் இயந்திரங்களைக் கொண்டு கரி உமிழும் தொழிற் சாலைகளைக் கட்டுகிறார்கள். இப்பணிகளுக்காக வெளி நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு அங்கே குடியேறியவர்களும், நிலத்தை இழந்த ஆதிவாசிகளும் தங்களுக்குள்ளே போரிட்டு மடிய, முதலாளிகள், பணக்காரர்கள், வரி விலக்கு, மான்யம், போன்ற சலுகைகளைப் பெற்றுக் கொண்டு செல்வத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இக்கட்டுரையில் சில நிலைமைகளைப் பார்க்கலாம்.
இனியும் ஒரு துளி இரத்தம் சிந்தலாகாது
‘அபகரித்துச் சேர்த்தல்’ என்ற தாரக மந்திரம் முதலியச் சிந்தனையே. அமெசானின் மழைக்காடுகளை தொழிற்மயமாக்குவதின் மூலம், அவர்கள் ஆதிவாசிகளின் நிலத்தை மட்டும் கையகப்படுத்துவதில்லை, பூமியின் இயற்கைச் சம நிலையை சீர்குலைத்து அதன் வெப்பத்தையும் அதிகரிக்கிறார்கள்.
‘காற்றும், நிலவும், வானும் நீரும் பொதுவில் இருக்குது; மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது’ என்றொரு சினிமா பாடலுண்டு. இன்றைய வான்வெளிப் போரில், நிலவின் இருண்ட பக்கத்தில் சீனா நடத்தும் சோதனைகள், விண்வெளிக் குடியேற்ற ஆயத்தங்கள், பணத்திற்குக் கிடைக்கும் சுத்தமான உயிர்வாயு, (தாதுப் பொருட்கள் நீக்கப்பட்டு) காசு கொடுத்தால் வழங்கப்படும் தூயத் தண்ணீர் அனைத்துமே மனித இனத்தின் சரிவைச் சுட்டுகின்றன. அந்தப் பாடல் இன்றைய நிலைக்குப் பொருந்தவில்லை. இதில் நிலமும், அதன் ஆதி உடைமையாளரும், அவர்களின் உரிமைகளும் கண்காணாமல் போய்விடுகிற அவலத்தை என்னவென்று சொல்வது?
இதற்கான காரணம் என்ன? பின் காலனியத்துவம் முழு முதற் காரணம். காலனி ஆதிக்கத்தில் பறிக்கப்பட்ட ஆதிவாசிகளின் நிலம், உடல், கலாசாரம், இன்றும் தொடர்ந்து வேறு வகைகளில் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகின்றன. அந்தமானில் வில்லேந்திய ஆதிவாசிகளை துப்பாக்கிகள் கொண்டு கொன்றொழித்த சம்பவங்கள் மறக்கக் கூடியவை அல்லவே? அரசுகளையும், தொழிலதிபர்களையும் பொறுத்த வரை ‘இந்த நிலங்கள் பயன்படுத்தப் படாமல் வீணாகின்றன; அவற்றின் வருவாய் மதிப்பை அறியாதவர் இருந்தென்ன, இறந்தென்ன? இதில் ஆலைகள் அமைக்கலாம், எண்ணைக் கிணறுகள் தோண்டலாம், போக்கு வரத்திற்கென்று சிமென்ட் சாலைகள் போடலாம். இதனால் புவியின் வெப்பம் மேலும் எகிறும் என்று சூழியலாளர்கள் சொல்வார்கள்தான்; அதைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? நாங்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டாமா? எங்கள் வாகனங்கள் விரைந்து செல்ல சிமென்ட் சாலைகள் அவசியமே- இவையெல்லாம் ஏற்படுத்தும் வேலை வாய்ப்புகளைச் சிந்தியுங்கள். ஒற்றைப் பயிரினங்கள் நல்ல மகசூலைத் தரும், மேய்ச்சல் நிலம் கால் நடைகளுக்கு, அதன் மூலம் மதிப்பு மிக்கக் கூட்டுப் பொருளுக்குத் தேவையே. ஒற்றைக் கல்வி முறை ஒருங்கமைந்த சமூகத்தை ஏற்படுத்தும், ஒற்றைப் பண்பாடு முன்னேற்றம் தரும்.’ எத்தனை இனிப்பு நிறைந்த வார்த்தைகள். ஆனால், பூமித்தாய் ஒற்றைப் பயிரினத்தைத்தான் உற்பத்தி செய்கிறாளா? ஒற்றையான தட்டை வடிவமா அவளுக்கு?
Articulação dos Povos de Indígenas do Brasil (APIB) என்பது பிரேசிலின் ஆதிவாசிகளின் இயக்கம். அதன் செயல்பாட்டார்களில் ஒருவரும், பிரேசிலில் உப ஜனாதிபதியாக நிற்கப் பரிந்துரைக்கப்பட்டவருமான சோனியா க்வாகஹாராவிடம் (Sônia Guajajara,) ப்ரான்சிஸ் (Fronesis) நிகழ்த்திய உரையாடல் நமக்குப் பல விஷயங்களைத் தெளிவு படுத்துகிறது.
ஜுலை 2019-ல் ஐக்கிய யூரோப்பாவிற்கும், தென் அமெரிக்க வர்த்தகக் குழுவான மெர்கோசருக்கும் (Mercosur) இடையே உருவாகி தற்போது நடைமுறைக்கு வந்துள்ள செயல்முறைகள் எந்த அளவிற்கு பழங்குடியினரை பாதிக்கும் என்றும், சுற்றுச் சூழல் எத்தனை சீர்கேடடையும் என்றும் எடுத்துச் சொல்வதற்காக APIBயின் 15 உறுப்பினர்கள், 12 யுரோப்பிய நாடுகளுக்கு ‘பழங்குடியினர்- இனி ஒரு துளி குருதி சிந்தப் போவதில்லை’ என்ற முழக்கத்துடன் பயணித்தனர்.
சோனியா க்வாகஹாரா, பிரேசிலின் க்வாகஹாரா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இந்த ஆதிவாசிகள் பல நூற்றாண்டுகளாகப் பிந்தோ (Pindaré ) நதிக்கரை காடுகளில் வசித்து வந்தவர்கள். 1611-ல் ஃப்ரெஞ்ச் தேசம் இவர்களை வென்றது; பின்னர் 1614-ல் போர்சுக்கல் இதை கையகப்படுத்தியது. இந்தப் பழங்குடியினரின் முக்கியக் குடியிருப்பான சாவோ லூயிஸ் தோ மாராஹோ, (São Luís do Maranhão), பிந்தோ, க்ராஜூ, மேரிம் (Pindaré, Grajaú and Merim) நதிகளின் முகத்துவாரத்தில் அமைந்திருப்பது போர்த்துகீசியர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. அவர்கள் மிக விரைவில் இந்த நிலத்தை தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்து ஆதிவாசிகளை குறைந்த ஊதியத்தில் கிட்டத்தட்ட அடிமைத் தொழிலாளியாக்கினார்கள். 1822-ல் பிரேசில் விடுதலை பெற்ற பின்னரும் கூட பழங்குடியினரின் பண்பாடுகள் சிதைவுறுவதும், அவர்கள் நிலங்களில் குடியேறிய அன்னிய தேசத்தவர் உரிமை பெற்று செல்வ வம்சாவளியினாரகத் தொடர்வதும் இன்று வரை நடை பெறுகிறது. இதில் வருத்தமான செய்தி என்னவென்றால், பெரும் ஆக்கிரமிப்பாளருடன் மோத வேண்டிய நிலையை மறந்து பழங்குடியினர் தங்கள் இனக் குழுக்களுடன் மோதுவதுதான். ஏன் இவ்வாறு நடக்கிறது? பிரித்தாள்வது மேலை நாட்டினரின் திறன்; அவர்களுக்குத் துணை நிற்கிறது அரசு. தங்கள் சிறு, குறு நிலங்களை இத்தகைய ஆக்கிரமிப்பாளரிடம் இழந்த ஆதிவாசிகள், வறுமையின் காரணமாக தங்கள் மரங்களை வெட்டிக் கடத்துகிறார்கள் (செம்மரக் கடத்தல் நினைவில் வருகிறதா?-கைலியோ, சாய வேட்டியோ அணிந்து கொண்டு குந்தி அமர்ந்திருக்கும் அவர்கள் மரம் வெட்டி கடத்துகிறார்கள்; காவல் துறையினரிடம் சிக்கி வதை படுகிறார்கள்; இவர்களைப் பயன்படுத்தும் அந்தப் பெரிய சக்திகள் எந்த ஆபத்தையும் எதிர் கொள்வதில்லை)
கிறிஸ்துவப் பள்ளிகளில் பயிற்றுவிற்பதற்காக, அதன் மூலம் தங்கள் மதத்தை பரப்புவதற்காக க்வாகஹாராக் குழந்தைகளைக் கடத்திய கிறிஸ்துவ மிஷினரிகளுக்கு எதிராக 1911-ல் ஆதிவாசிகள் போராடத் தொடங்கினார்கள். சாவோ பீட்ரோ தோஸ் கேஸேரிஸ் (São Pedro dos Cacetes) என்ற இடத்தில் மீண்டும் உள் கலவரம் வெடித்தது. இந்த நகரத்தில் சட்ட பூர்வ அங்கீகாரமற்ற யூரோப்பியர்கள் 1950லிருந்தே குடியேறி பூர்வ குடிகளின் நிலங்களை, வாழ்வியலை, பண்பாட்டை அழித்து வருகிறார்கள். 1979-ல் ஒன்பது க்வாகஹாரா கர்ப்பிணிப் பெண்களை இந்த ஆக்கிரமிப்பாளர்கள் கொன்ற பிறகு, அவர்களை மாற்று இடங்களுக்குக் குடி பெயர்த்த அரசு, க்வாகஹாரா இனத்தினரை தம் இருப்பிடத்திலேயே வாழ அனுமதித்தது. ஆனாலும், இது பெயரளவிலான ஒரு முயற்சிதான். இந்தத் திட்டம் 1992 வரை செயல்படுத்தப்படாத போது, கிளர்ச்சி உச்சத்தை எட்டியது. க்வாகஹாராவினர் 400 நபர்களை பிணைக்கைதிகளாக்கி தங்கள் நிலத்திற்கான உரிமைகளைக் கோரினர். 1995-ல், கிட்டத்தட்ட முதல் எழுச்சியின் 50 ஆண்டுகள் கழிந்த பின்னர் வந்தேறிகளை, க்வாகஹாராவின் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றியது அரசு.
1,10,400 சதுர கி மீ பரப்பளவிலிருந்த மரன்ஹௌ (Maranhão) பிரதேச மழைக் காடுகளில் இப்போது 25% தான் எஞ்சியிருக்கிறது. 1960களில் இராணுவ ஆட்சி நடை பெற்ற போது காடுகளை அழித்து, பெரும் பெரும் விவசாய நிலங்களாக மாற்றுவோருக்கும், மேய்ச்சல் நிலங்களை ஏற்படுத்துவோருக்கும் ஊக்கத் தொகைகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டன. சுரங்கத் தொழிலை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகள், இரயில் போக்குவரத்துகள், இன்னும் சில கட்டுமானங்கள், பணி நிமித்தம் புலம் பெயர்ந்து ஆதிவாசிகளின் இடங்களில் தம் வசிப்பிடத்தை ஏற்படுத்திக்கொண்டதால் அதிகரித்த மக்கள் தொகை, அனைத்தும் ஆதிவாசிகளை நேரடியாகவும், உலகத்தை மறைமுகமாகவும் பாதித்தன; பாதித்தும் வருகின்றன.
முதலாளித்துவம், இதுகாறும் ஆர்ப்பரிக்காத, புதிய நிலத்தின் வளம், மனித வளம், புதுச் சந்தைக்கு இரையென உருவாக்கும் இப்போக்கினை கார்ல் மார்க்ஸ் ‘பழமைக் குவிப்பு” ( primitive accumulation) எனச் சுட்டுகிறார். நிலங்களை ஆதிவாசிகள் பயனற்றுப் போகச் செய்கின்றனர் என்றும், பொருளாதாரம் என்றால் என்னவென்று அறியாமல் வாழ்கிறார்கள் என்றும் ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். இயற்கையின் கொடையை தங்க முட்டையிடும் வாத்தினை அறுத்த மனிதனைப் போல் அழித்தார்கள். தொடர்ந்து நடைபெறும் இவ்வழிப்பினை மார்க்சியரான டேவிட் ஹார்வி (David Harvey ) ‘அபகரித்துக் குவித்தல்’ (accumulation by dispossession) என்று சொல்கிறார். சோனியா, தன் இன மக்களின் நிலங்கள் பறிபோவதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் சொல்கிறார்:
- அரசு, ஆதிவாசிகளின் நிலம் உற்பத்திக் களமாக இல்லை எனக் கருதுவது
- நில வளங்களையும், மனித வளங்களையும் தனியாரான முதலாளிகளின் வசம் அதிக அளவில் ஒப்படைப்பதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் நிகழும் என்ற எண்ணம்.
- ஆதிவாசிகளைப் பண்படுத்துதல்.
மிகவும் வேதனையான ஒன்று என்னவென்றால், நாம் வாழும் பூமியை நாம் எப்படி அறம் சார்ந்து பயன்படுத்துவது என்ற எண்ணமில்லாமல், அதை நம் செல்வக்குவிப்பிற்காக மட்டுமே பயன்படுத்தும் கீழ்மையில் இறங்கியதுதான்.
பாதுகாக்கப்படவேண்டியது எதுவானாலும், அது அமெசனோ, செராடோவோ, அட்லாண்டிகாவோ (Amazon, Cerrado, Mata Atlantica) ‘நிலத்தைக் கைப்பற்றுங்கள், வளங்களை உறிஞ்சுங்கள்’ என்பதே பொருளாதார மேம்பாடு என்று கருதுகிறார்கள்.
பெருந்தொகுப்பு நிலங்கள் பெருவாரியாகக் கைப்பற்றப்பட்டு பெரும் நிலக்கிழார்கள் வசம் செல்ல, ஏழை ஆதிவாசிகளை அந்த நிலங்களின் மரங்களை வெட்டிச் சமன்படுத்தி உழவிற்கு ஏற்ற வகையில் மாற்றும் பணியில் ஈடுபடுத்தினார்கள். உலக வங்கி இச்செயலை ஆதரிக்க, கால் நடைகளை அதிக அளவில் வளர்த்து பாலும், மாமிசமும் விற்கும் தொழிலோ 1960-70 களில் பெருமிதமாய் வளர்ந்தது.
நிலத் தொகை அதிக அளவில் சிறு சதவீத முதலாளிகளிடம் இருக்க, அவர்களின் மரங்களை வாழ்வாதாரம் வேண்டி வெட்டிய மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் மோதல் ஒருபுறமென்றால், நிலமற்ற விவசாயிகளுக்கும், பழங்குடியினருக்கும் இடையே அதே நிலத்திற்கான மோதல் உருவாயிற்று. நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்துவதை காலம் காலமாகப் பார்த்து வருகிறோமே.
அராரிபௌவ (Arariboia) என்ற அமெசான் பிரதேசத்தில் ‘காடுகளின் காப்பாளர்’ என்று அழைக்கப்படும் பௌலோ பௌலின்ஹோ (Paulo Paulinho Guajajara) நவம்பர் 2019ல், திருட்டுத்தனமாக மரம் வெட்டிய கும்பலுடன் மோதியதில் படுகொலை செய்யப்பட்டார். சில வாரங்களுக்குப் பிறகு மேலும் இரு க்வாகஹாராக்களும், ஏப்ரல் 2022ல் மற்றொருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். தங்கள் உடலையும், உயிரையும் கொடுத்து நிலத்தைக் காக்க க்வாகஹாராக்கள் போராடுவதாக சோனியா சொல்கிறார். அது அவர்களுக்கே உரித்தான வழிமுறை என்றும் சொல்கிறார்.
‘இன்று எங்கள் போர் அதிபர் போல்சனேரோவை (Bolsonaro ) எதிர்த்து நடை பெறுகிறது என்றாலும், நாங்கள் எப்போதுமே இந்தத் தவறான பொருளாதார முன்னுதாரணத்தை எதிர்த்தே செயல்பட்டிருக்கிறோம்; இந்தப் பொருளாதாரச் சிந்தனை, பழங்குடியினரின் நிலத்தைப் பறிக்கிறது, இயற்கை வளங்களை அதிக அளவில் உறிஞ்சி வற்றச் செய்கிறது, பண்பாட்டைச் சிதைக்கிறது, எங்கள் இனத்தைக் கொன்று குவிக்கிறது.
இப்போது நடைபெறும் கொலைகளுக்கு அரசியல் பின்னணி இருக்கிறது. எங்கள் இறையாண்மை எங்கள் பாதுகாப்பினை உறுதிப் படுத்துவதாக மொழிந்தாலும், அது பெரும்பாலும் ஏட்டளவிலே இருக்கிறது. பழங்குடியினருக்கு இழைக்கப்படும் அநீதிகளும், எங்கள் பிரதேசத்தில் நடத்தப்படும் வன்முறைகளும் தண்டிக்கப்படுவதில்லை. எங்கள் நிலங்களை, இயந்திரமயமான விவசாயத்திற்கும், எண்ணைக் கிணறுகள் அமைக்கவும், சுரங்கங்களிலிருந்து கனிம வளங்களை சுரண்டவும் அனுமதிக்கும் போல்சனேரோ, எங்களை இரண்டாம் தர இனமாகக் கருதுகிறார். எங்களது அரசியல் இயக்கங்கள் இவ்விழிவுகளுக்கெல்லாம் எதிராகச் செயல்படும் நிலையை அடைந்துள்ளன.
16-ம் நூற்றாண்டின் காலனி ஆதிக்கம் தொடங்கியது முதல், தேசிய முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் பழங்குடிகளை வெளியேற்றுவது, அவர்களின் உடைமைகளைப் பறிப்பது, இன ஒழிப்பு ஆகிய மூன்றையும் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன. ஆக்கிரமிப்பாளர்களும், ஆட்சியாளர்களும் இதில் ஒத்த சிந்தனையுடன் இருக்கின்றனர். நாங்கள் மோதுவது மிகப் பெரும் அமைப்புடன் என்றாலும் சுற்றுச் சூழல் சீர்கேட்டினைத் தரும் பெலோ மான்(ட்)டே அணையின் மோசமான விளைவினை உலகிற்கே எடுத்துச் சொல்லியுள்ளோம். பிரேசிலின் அமெசானின் பகுதியான பாராவில் ஜிங்கு ஆற்றின் குறுக்கே 20,000 மெகாவாட் நீர் மின்சாரத்திற்காக இந்த அணை கட்டப்பட்டது. அதன் பயன்களை விட அதன் கேடுகள் அதிகம். நன்னீர் மீன்கள் அழிந்தன. ஆற்றுப்படுகையில் வண்டல் இல்லாமலாயிற்று. நீர் ததும்பிய ஆறு வற்றிப் போய்க்கொண்டே இருக்கிறது. நாங்கள் சோஷியலிஸ்ட் மற்றும் லிபரல்கள். பார்டிடோ சோஷியலிஸ்மோ இ லிபர்டாடே எங்கள் இயக்கம்.( Partido Socialismo e Liberdade- PSOL) துணை அதிபர் பதவிக்காக எங்கள் குழுவின் சார்பில் போட்டியிட்டேன். எங்கள் அமைப்பு வலுவானது, எங்கள் நோக்கம் தெளிவானது. கிராமப்புறத்திலிருந்து நகரம் வரையிலான கட்டுக்கோப்பான அரசியல் இயக்கம் இது. தொடந்து செயல்படுகிறோம், தொடர்பில் இருக்கிறோம். 2017-ல் பழங்குடியினருக்கும் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் வேண்டும் எனக் குரல் கொடுத்தோம். அரசினையும், ஆக்ரமிப்பாளர்களையும் எதிர்ப்பதில் இது ஒரு நல்ல வழியாகத் தென்பட்டது. பழங்குடிப் பெண்ணான ஜோனியா வாபிக்ஸனா (Joenia Wapixana ) முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.’
தங்கள் வழமையான நடைமுறையின் செறிவினை உலகம் இப்போது புரிந்து கொள்ளத் தொடங்கியிருப்பதும், சுற்றுச் சூழலைப் பற்றிய மேம்பட்ட அறிதலும் தங்கள் இயக்கங்களை வலிமை பெறச் செய்வதாக சோனியா சொல்கிறார்.
2018-ல் நாங்கள் பழங்குடியினரை நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட அழைத்தோம். 130 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதன் மூலம் ‘வீடற்றோர் குழு, மிடியா நிஞ்ஜா, 342அமெசானியா ( MTST movement, Midia Ninja, 342Amazonia) போன்றோருடன் இணைந்து செயல் புரிய முடிந்தது. உலக அளவில் இந்தோனேஷியா, மத்திய அமெரிக்கா, அமெசான் ஆகிய நாடுகளுடன் இணைந்து பணி செய்கிறோம். இத்தகைய நாடுகளிலுள்ள வனக் காவலர்கள் இடையே இதன் மூலம் தொடர்புகள் உருவாயின.
பழங்குடியினரின் போராட்டங்களை ‘இருத்தலியல் தேவைகள்’ என்றே சித்தரிக்கிறார்கள். இது சில குண இயல்புகளுடன் பழங்குடியினரை சம்பந்தப்படுத்தி பேசுவதால் சில எதிர்மறை உருவாக்கங்களை ஏற்படுத்தினாலும், இதுவும் ஒடுக்கப்பட்டவர்களின் பேராயுதம் தான். இதை காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவேக் (Gayatri Chakravorty Spivak) வலிமையான தாரக மந்திரம் என்று சொல்கிறார். குறிப்பிட்ட ஒரு இடத்தின் உரிமையைக் கோரும் இனக்குழுவை சொல்லாட்சி வகைகளைக் கொண்டு அடையாளப்படுத்தலாம்.
இந்த உபாய அடிப்படையானது இரு அணுகு முறைகளைக் கொண்டுள்ளது. ஒன்று, பிரேசிலின் பழங்குடியினரை, அவர்களது பழமையான வரலாற்றின் அடிப்படையில் அந்த நிலங்கள் அந்தப் பழங்குடியைச் சார்ந்தவை என அடையாளப்படுத்துவது; மற்றொன்று வாழ்வை தக்க வைத்துக் கொள்ள அவர்கள் மேற்கொண்டுள்ள வாழ்வியல் முறைகளை சிதைக்காமல் இருப்பது.
முந்தைய யூரோப்பிய காலனி ஆதிக்கத்திற்கும், இன்றைய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எதிராக பழங்குடியினர் நடத்தும் போராட்டத்தை சிறந்த முன்னுதாரணம் என்று சொல்லும் சூழியலாளர்கள், இயற்கைச் சூழலைப் பேணும் பெரும் பொறுப்பையும் பூர்வகுடிகளிடம் தள்ளுகிறார்கள். இதைச் சொல்லும் அதே வேளையில், அமெசானில் நடைபெறும் காடழிப்பை நிறுத்த, பழங்குடியினருக்கு நில உடைமை தேவை. இரண்டும் தொடர்புள்ளவையே. எங்கெல்லாம் பழங்குடியினர் உள்ளனரோ அங்கெல்லாம் பூமியின் தட்பவெப்பம், சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுவது உறுதி. நாம் அனைவரும் இணைந்து பூமியைக் காப்போம். காலனியாதிக்கதிற்குப் பின்னான இந்த அழிவுச் செயல்பாடுகளை நிறுத்த, நிலவுடமைக் கேள்விக்கு விடை தேவை.
பழங்குடியினரின் உரிமைகள் பற்றிய அறிக்கை ஐக்கிய நாட்டு அமைப்பால் 2007-ல் வெளியிடப்பட்டது. அவர்களது சமூக, பொருளாதார, பண்பாடு, கல்வி, சுகாதாரம் சார்ந்த ஒரு நிரந்தர அமைப்பும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் 2000த்திலிருந்து இயங்குகிறது. சர்வதேச சட்டங்களின் படி பழங்குடியினரின் பூரண சம்மதமில்லாமல், அவர்களுக்கு விவரங்கள் சொல்லாமல் அவர்களை இடம் பெயர்க்கக்கூடாது.
பெருவில் நடந்தது
மேக்ஸ்மா அக்யூனியா அடலாயா (Máxima Acuña Atalaya) ஒரு பழங்குடி விவசாயி. அவரது நிலத்தை அபகரிக்கப் பார்த்த உலகின் மிகப் பெரிய தங்கச் சுரங்க நிறுவனம் அந்தப் பெண்ணிற்கு அளித்த தொல்லைகள் அனேகம். ஐந்து ஆண்டுகள் நீண்ட சட்டப் போராட்டத்தில் அவர் மீது போடப்பட்ட குற்ற வழக்கும் அடங்கும். இறுதியில் அவர் வென்று தன் நிலத்தை மீண்டும் பெற்றார்.
அந்தமான் நிகோபார் தீவுகள்
இந்திய அரசும் மறைமுகமாக இந்தப் பசுமைத் தீவுகளில் பெரும் தொழிற்சாலைகளை அமைப்பதை ஊக்குவிக்கும் வண்ணம் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஜெராவா, சென்டினல் போன்ற ஆதிவாசிகளின் வசிப்பிடம். இவை. அவர்கள் அயலார் வருகையை விரும்புவதில்லை. இந்தத் தீவுகள் கடற் சீற்றத்திலிருந்து நிலத்தைப் பாதுகாக்கும் இயற்கை அரண்கள். அங்கே கரி உமிழும் தொழிற்சாலைகள் அமைப்பது சூழல் சீர்கேடுகளை கொண்டு வரும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ஆனாலும், இந்தத் தீவுகளில் சில இடங்களை சிறந்த சுற்றுலா மையமாக்க அரசு நினைக்கிறது. பயணிகள் தங்கள் நெகிழிக் குப்பைகளால் அதன் சூழலையே பாதித்துவிடுவார்கள். அந்தத் தட்பவெப்பத்தில் பெருகி வாழும் பல்லுயிரிகளும் பாதிக்கப்படும்.
ஜான் ஆலன் சாவ் (John Allen Chau) என்ற அமெரிக்கர், சென்டினல் இனத்தவர்களால் அம்பினால் கொல்லப்பட்டார். பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லையென்றும், மீனவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து மறைவாகப் பயணித்தார் என்றும், முக்கிய நோக்கம் அவர்களை பண்பாடுள்ளவர்களாக மாற்றி க்றிஸ்துவத்தைத் தழுவச் செய்வதாகும் என்றும் சொல்லப்படுகிறது. அவரது உடல் கிடைக்கவில்லை.
வானையும், கடலையும், நிலத்தையும், நீரையும், இயற்கையையும் வழிபடுவோருக்கு எந்தக் கடவுள் வேண்டும்? அவர்கள் வாழ்வில் நாம் தலையிடாதிருப்பதே புவிக்கு நாம் செய்யும் நன்றி.
“என்றும் அன்னையவள்; இயற்கையில் அனைத்து உயிரையும் பேணுபவள்; முத்துக்கள், பவழங்கள் சூடியிருக்கிறாள்: ஒளி விளக்காக சூரிய சந்திரர்களைக் கொண்டுள்ளாள்; மலை முகடுகள் அவள் தனங்கள்; கடலோ இடையாபரணம்; அவள் அளித்த கொடையால், நிலமிருக்கிறது, அதில் வளமிருக்கிறது, அதைப் பேணுவோம்.’ (காஷ்யப க்ருஷி சூக்தி)
நிலத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், உடல் நிறத்தின் பெயரால் இனி ஒரு துளிக் குருதியும் சிந்தப்படக்கூடாது.
இந்தக் கட்டுரை கீழ்க் காணும் வலைத் தளங்கள் மற்றும் செய்தித்தாள்கள், பி பி சி எர்த் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.
https://www.eurozine.com/not-one-more-drop-of-blood/ Sônia Guajajara in discussion with Fronesis
Carolina Pettersson 11 April 2022
பானுமதி ந
Good article.
Thanks,Sir