எரியும் காடுகள் – 2

This entry is part 2 of 4 in the series எரியும் காடுகள்

4

அடுத்த நாள் பின் மதியத்தில் அந்த ஏரியின் விளிம்பில் நிற்பவனாக இருந்தேன். இந்த தடவை நான் கற்களைப் பார்த்துக் கொண்டு நிற்கவில்லை, ஆனால் தண்ணீரைப் பார்த்திருந்தேன். அது சாம்பல்/ நீலமாயிருந்தது. தீவுகளில் மிக அருகே இருந்தது நூற்றுக் கணக்கான அடிகள் தள்ளி இருந்தது. அது சிறு தீவு, ஆறே ஆறு மரங்கள் அதில் இருந்தன, நேராக, உயர்ந்து நின்ற அவை, சற்றுத் தள்ளி அருகில் இருந்த காட்டில் இருந்த பல லட்சம் மரங்களின் பின்னணியில் பொருளிழந்தவையாகத் தெரிந்தன.

இருந்தாலும், ஒரு தீவு என்பதில் ஏதோ இருக்கிறது. நிலப்பரப்பிலிருந்து தனித்து நிற்கிறது என்பதும், நீரிலிருந்தும் உயர்ந்து நிற்கிறது என்பதும், பிற தீவுகளிலிருந்தும் தனித்து இருக்கிறது என்பதும்- அவை எத்தனைக்கு ஒரே மாதிரி இருந்தன என்றாலும், கிட்டேயோ தூரத்திலோ இருந்தாலும் – அதற்கு ஒரு தனித்தன்மையைக் கொடுக்கவே செய்கின்றன. ஒவ்வொரு தீவும் பிற தீவுகளிலிருந்து வேறானது, அது ஒரு தீவு என்பதாலேயே அப்படி.

மேலும் ஜான் டான் சொன்னது தவறு. ஒவ்வொரு மனிதனும் ஒரு கண்டத்தின் பகுதி அல்ல, அல்லது மையத்தின் ஒரு பகுதி இல்லை. சில மனிதர்கள் வெறும் தீவுகளே. நமக்கு அது தெரியும். முதலாவதாக, அதனால்தான் நாம் தீவுகளின் பால் ஈர்க்கப்படுகிறோம். ஒரு தீவில் இருக்கும் இன்னொரு தீவாக இருக்கலாம் என்ற எண்ணம்தான் அதில் இருப்பது.

நம்முடைய மணியைத் தவிர வேறு எந்த மணி அடிப்பதையும் கேட்கத் தேவை இல்லாமல் இருக்க. அந்த மணியையும் கேட்கும்போது ஏற்கனவே நம்மால் செய்ய முடிவது ஏதுமில்லாமல், காலம் கடந்து விட்டிருக்கும், நமக்கு மீதி இருக்கக் கூடியது அந்த ஒலியோடு பாடிக் கொண்டிருப்பது மட்டும்.

***

நான் ஏரிக்குள் போகலாமென்று யோசிப்பதாகச் சொன்னபோது அதில் ரால்ஃபுக்கு ஏதும் வியப்பு எழுந்ததாகத் தெரியவில்லை. அவர் அதை எதிர்பார்த்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

’அங்கே தீவுங்கள்ளாம் இருக்கு,’ என்றார். ‘அதுல ஒண்ணுல காலை வைக்கணுங்கற ஆசையை எதிர்த்து நிக்க ஒரு ஆளுக்கு ஒரு கட்டம் வரைக்கும்தான் முடியும்.’

காயாக் ஒன்றை நான் முன்பு பயன்படுத்தி இருக்கிறேனா என்று கேட்டார். நான் ஆமாம் என்று சொன்னேன். அங்கேயிருந்த கொட்டகைக்கு அழைத்துப் போனார், அவை பனிக்காலத்துக்காக அங்கே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன, அங்கே மிதவை அணி ஒன்றைக் கொடுத்தார். எங்கள் இருவருக்குமே நான் அதை அணியப் போவதில்லை என்று,தெரியும். அந்தப் படகைத் தண்ணீர் அருகே இழுத்துப் போக எனக்கு உதவி தேவையா என்றுகேட்டார், நான் வேண்டாம் என்றேன்.

‘பியர், அப்புறமா?’

‘நிச்சயமா,’ என்றேன்.

காயாக்கை இழுப்பதற்காக அதில் கட்டி இருந்த கயிறு வளையத்தைப் பிடித்துக் கொண்டு, அந்த காயாக்கை பனி மீது இழுத்துப் போனேன். கொஞ்ச நேரம் அதை இழுத்துப் போக வேண்டி இருந்தது, ஏரி கரையிலிருந்து இருபது கஜ தூரம் வரை பனிக்கட்டியாக உறைந்து போயிருந்ததால், அப்போதும் மேலும் இருபது கஜ தூரத்துக்கு அதை மிதக்க விடுமளவு ஆழம் இருக்கவில்லை.

நான் அணிந்திருந்த கையுறைகள் தடித்தவையாக இல்லை, நான் காயாக்கில் ஏறி அமரும்போது என் கைகள் மிகவும் குளிர்ந்து போயிருந்தன. என் பாரம் அதை கற்களின் மீது அழுத்தியது, நான் சில தினங்கள் முன்பு பார்த்த கூழாங்கல்லின் நினைவு வந்தது. ஏரியின் தரையில் பல முறை துடுப்பால் உந்த வேண்டி இருந்தது, பிறகுதான் காயாக் சுலபமாக நகரத் தொடங்கியது.

ஆனால் சட்டென்று அது மிதந்தது, என்னை நிசப்தத்துக்குள் சுமந்து சென்றது. ஆகாயம் தாழ்ந்து, வெண்மையாக இருந்தது. தண்ணீர் வெள்ளி-சாம்பல் நிறமாக இருந்தது. என் துடுப்பு நீரைத் தொட்ட கணத்தைத் தவிர மற்றபோது எல்லாமே சுத்தமாகச் சத்தமே இல்லாமல் இருந்தது, நான் இருந்த எந்த இடத்தையும் விட உச்ச நிலை அமைதியோடு அந்த இடம் இருந்தது.

அங்கு பறவைகளே இல்லை.

ஏரியில் ஒரு மணி நேரம் இருந்தபோது ஒரு தீவை நோக்கிச் செல்ல நான் முடிவு செய்தேன். பல நாட்களாக பனிக் குவிப்பில் எட்டு எட்டாக எடுத்து வைத்து நடந்து போன பின், வாரக்கணக்காக காட்டில் தரையெங்கும் படர்ந்திருந்த புதர்களின் வழியே நடந்து களைத்திருந்த எனக்கு, சுதந்திரமாக நீரில் மிதப்பதால் கிடைத்த விறுவிறுப்பிலிருந்து மீள்வதற்கு அத்தனை நேரம் ஆயிருந்தது. என்றென்றுமாக இப்படித் துடுப்பு வலித்தபடியே இருக்கலாம் என்று இருந்தது, ஆனால் அது ஒரு பிரமை என்றும் புரிந்திருந்தது. நான் ஏற்கனவே செய்திருந்ததே போதுமானது, அடுத்த நாள் பூராவும் என் கைகளிலும் தோள்களிலும் இதன் தாக்கத்தை உணரவிருந்தேன். இதை நினைவு வைத்திருப்பது அவசியம்- நாம் வாழ்வில் எதைச் செய்தாலும் இது பொருந்தும் – நாம் தொடர்ந்து வெளி நோக்கியே போய்க் கொண்டிருக்கப் போவதில்லை. நாம் துவங்கிய இடத்துக்குத் திரும்ப வேண்டி நம் சக்தியை நாம் சேமித்து வைக்க வேண்டி இருக்கும். அந்த இடம் எங்கே இருந்தது என்பது நமக்கு நினைவிருப்பதும் அவசியம்.

கிட்ட இருந்த தீவு நூறு கஜ தூரமிருந்தது. அது முப்பது கஜ நீளம், குறுக்கே இருபது கஜம், கரையே இல்லாமல் ஏரிக்குள் செங்குத்தாக இறங்கியது. அதைச் சுற்றி துடுப்பு வலித்துப் போனேன், ஓரிடத்தில் மரமொன்றின் வேர் அணுகும்படி இருந்தது, அதில் படகைக் கட்டினேன். உறையும் குளிராக இருந்த ஏரியின் நீரில் நான் விழுவதற்கு வாய்ப்பு அதிகம் என்று எனக்குத் தெரிந்திருந்தது, அதனால் காயாக்கை என்னால் ஆன மட்டிலும் அசையாமல் ஆக்கினேன், பிறகு அந்த வேரை எட்டிப் பிடித்தேன். இதை விடச் சுலபமாக இருக்கும் இன்னொரு தீவுக்குப் போவது மேலா என்று நினைத்தேன், ஆனால் அது தோற்று விட்ட உணர்வைத் தரும்.

அதனால் நான் வலுவாக இழுத்தேன், என் கால்களால் மேலே உந்தி ஏறினேன். காயாக் பின்னால் பறந்து ஓடவிருந்தது, ஆனால் என் முடிச்சு பிடித்துக் கொண்டிருந்தது.

நான் இழுத்தபடியே, கை நீட்டி, இன்னொரு வேரை என் மற்ற கையால் பிடித்துக் கொண்டேன், ஒரு காலை சேற்றில் திணித்துக் கொண்டேன். கீழே விழவில்லை. ஆனால், வழுக்குகிற வேர்களில் என் கையுறை அணிந்த கைகள் பாதுகாப்பாக உணரவில்லை, அதனால் அந்தச் சரிவின் மீது தத்தித் தத்தி ஏறினேன், சறுக்கி விழாமல் இருக்கவென்று என் நகர்வுகளை முடிந்த மட்டில் நிலையாகவும், சமமாகவும் கொண்டிருந்தேன்.

அந்தத் தீவின் ஒரு முனை சில மரங்களைக் கொண்டிருந்தது, ஏரியைச் சுற்றி இருந்த காட்டை நிரப்பி இருந்த அதே கரும்பச்சை நிற பைன் மரங்கள்தான் அவை. மீதமெல்லாம் பாசி படர்ந்த பாறை. நான் அதைச் சுற்றி நடந்தேன். இடவெளியாக அது போதாததாக இருந்தது- அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்ததால்- ஆனால் நசுக்குவதாக உணர வைக்கவில்லை. எப்படியும், நம்மில் அனேகர் நம் வாழ்க்கையில் பெரும்பகுதியைக் கழிக்கிற அதே அளவு பரப்புதான் அங்கு இருந்தது: சிறு கொல்லைப் புறத்தோடு உள்ள ஒரு வீட்டின் பரப்பளவு அது. நமக்குப் பழக்கமான வெளி அது. சராசரி மனிதரின் கூண்டின் அளவு.

நான் என்ன சாதித்தேன் என்று தெளிவாகப் புரியவில்லை, காயாக்கில் திரும்பி ஏறுவது என்பது அதிலிருந்து இறங்கியதை விட மிகக் கடினமாக இருக்கப் போகிறது. அதனால் நான் இன்னும் கொஞ்ச நேரம் அங்கேயே உலாவினேன், புகை பிடித்தபடி ஏரியைப் பார்த்திருந்தேன். நான் வந்த பக்கத்திலேயே நின்றிருந்தேன், பிறகு மறுபக்கத்தில் போய் நின்றேன். அந்த வேறுபாடு தெளிவாகத் தெரிந்தது, நாம் முன்பிருந்த இடத்தை விட்டு உண்மையாகவே நீங்காத போது, நாம் புறப்படும் இடத்திலிருந்து எத்தனை தூரம் போனால் இப்படி வேறுபாட்டை உணர்வது நிற்கும்,  என்று யோசித்தேன். எந்த இடத்தில் நாம் விலகியதை உணர்ந்து ஏற்போம். இதைக் கணக்கிடக் கூடிய கணித வழி ஏதுமிருக்க வாய்ப்பில்லை. நாம் எத்தனையை பின்னே விட்டு விட்டுப் போகிறோம் என்பதை, நாம் எத்தகைய மனிதர் என்பதை, மற்றும் நாம் என்ன கண்டுபிடிக்க – அப்படி ஏதுமிருந்தால் –மறுதிக்கில் போகிறோம் என்பதை எல்லாம் பொறுத்தது அது. திரும்பிப் பாராமல், எத்தனை தூரம் நடந்து கொண்டே இருக்க நாம் தயாராக இருப்போம் என்பதைப் பொறுத்துமிருக்கும்.

சம்பவம் ஏதுமின்றி காயாக்கில் ஏறி விட எனக்கு முடிந்தது. ஓய்வு வாசஸ்தலத்தை நோக்கி துடுப்பு வலித்தேன், அந்தப் பின்னேரத்தின் மீதத்தை கணப்பின் முன் அமர்ந்து கழித்தேன், நெருப்பின் ஜ்வாலைகளைப் பார்த்தபடி இருந்தேன். மாலையில் ரால்ஃப் வந்தார், சில பியர்களைக் குடித்தார், ஆனால் அதிகம் பேசவில்லை.

நன்றாகத் தூங்குவேன் என்று நினைத்தேன், ஆனால் இல்லை. அணைந்து போகவிருக்கும் நெருப்பிலிருந்து புகை அந்தக் குடிலில் நிரம்பி இருந்ததாகத் தோன்றியது, என் மீது ஒரு போர்வை போலக் கவிந்திருந்தது. நடு இரவில் துப்பாக்கி சுடுவது போன்ற ஒலி கேட்டு விழித்தெழுந்தேன், அது மிக அருகில் கேட்டது, ஏதோ என் அறையிலேயே இருந்தது போலத் தோன்றியது. பனியின் கனம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விழுந்திருக்க வேண்டும்.

ஆனால் அதன் எதிரொலி வெகுநேரம் கேட்டபடி இருந்தாற்போலத் தெரிந்தது.

5

அடுத்த நாள் காலை நான் எழுந்த போது, ஆகாயம் தாழ்ந்து கனமாகத் தெரிந்தது. என் கைகளும் தோள்களும் இறுகி விட்டதாக உணர்ந்தேன். இவற்றால், மறுபடியும் தண்ணீரில் போவதற்குப் பதிலாக, காட்டுக்குள் நடப்பது நல்லது என்று தோன்றியது. அல்லது சும்மாவே அறைக்குள்ளேயே இருக்கலாம்.

நான் காயாக்கை ஏரிக் கரையை நோக்கி இழுத்து வந்தபோது, ரால்ஃப் தன் குடிலுக்கருகே நின்று புகை பிடித்துக் கொண்டிருந்தார். அவருடைய மனைவிக்கு அந்த வாடை பிடிக்காது என்று சொல்லி இருந்தார், அதனால் அவர் எப்போதுமே வெளியே நின்றுதான் புகை பிடித்திருந்திருக்கிறார். பத்து வருடங்களாக தனியாக வாழ்ந்த பின்னும், அது இன்னமும் உண்மையாகவே இருந்தது. வாழ்ந்திருப்போரை விட இறந்தவர்கள்தான் தம் விருப்பத்தை அடைகிறார்கள் போலிருக்கிறது.

அவர் மேல் நோக்கி வானைப் பார்த்தார். நான் ஏதும் சொல்லவில்லை.

நான் முதலில் அலட்டிக் கொள்ளாமல் இருந்தேன். இலக்கு ஏதும் இன்றி இருப்பதன் பல வசதிகளில் ஒன்று, மெதுவாகப் போவதும் வேகமாகப் போவதைப் போலவே அதே நேரத்தில் அங்கே கொண்டு சேர்க்கும்.

முந்திய நாளில் நான் சென்றிருந்த தீவைச் சீக்கிரமே கடந்து விட்டேன். அவ்வளவு தூரம் ஒரு தடவை போய்விட்டால், அதுவே இப்போது கிட்ட இருப்பது போல ஆகி விடுகிறது, இதைத் தாண்டினால் என்ன இருக்கும் என்று யோசிப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. நான் மேலே போய்க் கொண்டிருந்தேன்.

அடுத்த சில தீவுகள் சிறியனவாக இருந்தன, ஒன்று அவற்றுள் சில கஜ தூரம் கூட குறுக்களவில் இல்லை, ஒரே ஒரு மரத்தின் இருப்பிடமாக அது இருந்தது. நான் பார்த்ததிலேயே மிகத் தனிமைப்பட்ட ஒன்றாக அது இருந்தது, ஜான் டான் அதைப் பற்றி என்ன சொல்லி இருப்பார் என்று நான் யோசித்தேன்.

பிறகு அங்கே தண்ணீர்ப் பரப்பு விரிந்திருந்தது, ஆனால் நான் முடித்து விட்டதாக நினைக்கவில்லை.  அந்தப் பரப்பினுள் துடுப்பு வலித்துக் கொண்டு போன போது, முதல் பனித் துகள்கள் விழத் தொடங்கின.  பனி சுற்றிலும் விழுகையில், நீர்ப்பரப்பில் கிட்டத்தட்ட நிசப்தமாக மிதந்து போவது அலாதியான அனுபவம்.

பனி வீழ்தல் இலேசாக இருந்தது. அதே விதமாகவே இன்னும் நிறைய நேரம் இருக்கும் என்று நான் ஊகித்தேன்.

நான் இன்னொரு தீவை எட்டியபோது, பனி விடாமல் கொட்ட ஆரம்பித்தது. அங்கே நான் போய் சில நிமிடங்கள்தான் ஆகி இருந்தன, ஆனால் நான் அதை விட்டு நீங்கத் தீர்மானித்திருந்தேன் – அதற்குள் நான் போக ஒரே காரணம், அதன் ஒரு பக்கத்தில் இருந்த சரிவு பதனமானதாக, வசதியாக இருந்தது. அதன் கரையில் சில அடிகளே பாறை விளிம்பு இருந்தது, முந்தி இறங்கிய தீவைப் போலன்றி எளிதாகக் கரை சேர முடிந்தது. ஆனால் அங்கு பார்க்க ஏதுமில்லை. அதில் இறங்கி நின்ற முதல் நபர் நான் தான் என்ற தனித்தன்மை கூடச் சேர்க்க முடியாத வெறும் பாறை அது. அங்கே நான் கொண்டு வந்திருந்த சாண்ட்விச்சில் பாதியைத் தின்றேன், வேலை முடிந்தது கிளம்பலாம் என்று தீர்மானித்தேன்.

காயாக்கை நோக்கி நடக்கவாரம்பித்த போது, பனி கொட்டும் அளவு அதிகரித்தது, திடீரென்று, ஏகமாகச் சேர்ந்து கொட்டியது, யாரோ ஒரு கைப்பிடியைத் திருப்பியது போல. பனிப்புயல் அளவு இல்லை – மானியில் அதிகபட்சம் ஆறுதான் இருக்கும், முழு தூரம் போய் பத்தை எட்டவில்லை – ஆனால் கடுமையாகத்தான் இருந்தது.

நான் காயாக்குள் அமர்ந்தேன், பின்னே தள்ளினேன், இது வீட்டுக்குத் திரும்பும் நேரமாகி விட்டது என்று தெரிந்திருந்தது. ஆனால் அங்கு மிக எழிலாக இருந்தது. சில நிமிடங்களில் நான் விட்டு வந்த தீவை என்னால் பார்க்கக் கூட முடியவில்லை- அது மட்டுமில்லை, எதையுமே பார்க்க முடியவில்லை. தொடர்ந்து விழும் வெள்ளைத் திரைதான் எதிரே இருந்தது, இரும்பும் ஈயமுமாக இருந்த வானிலிருந்து இப்படி வெண்மை விழுவது ஏதோ மாயாஜாலம் போல இருந்தது. வானம் அத்தனை தாழ்ந்து தெரிந்தது, கை நீட்டினால் நான் அதைத் தொட்டு விட முடியும் போலத் தெரிந்தது.

என் பின்னே தள்ளும் துடுப்பு அசைவுகள் அரை வட்டமாக ஆகும் வரை விட்டு வைத்தேன், பிறகு முன்னே போகத் தொடங்கினேன். மெதுவாக, ஆனால் அளவான முன்னும் பின்னுமான துடுப்புத் தள்ளல்கள், நிரந்தரமானது போலத் தெரிந்த லயம் ஒன்று கிட்டும் வரை அப்படிச் செய்தேன், வெண்மைக்குள் ஊடுருவிச் சென்றேன், அது என் கண்ணில் விழாமலிருக்கக் கண்களைக் குறுக்கிக் கொண்டிருந்தேன்.

நான் எந்தத் திக்கில் போகிறேன் என்பது பற்றி எனக்கு ஒரு புரிதலும் இல்லை, அது ஒரு பொருட்டாக இல்லை. அங்கு ஒரு இலக்கும் தெரியவில்லை. என் புத்தி வெற்றாக ஆகி இருந்தது, ஆனால் என் தசைகள் இயங்கின, ஏதோ அங்கு நிலவிய நிச்சலனத்தில் என் வேலையைச்  செய்ய அவை ஒரு தடவையாவது இயங்க முன்வந்தது போல. ஒரு பாதையை நாம் தேர்ந்தெடுத்து விட்டு, அதில் போய்க் கொண்டிருந்தால், சிந்திக்க முயல்வதை நாம் நிறுத்தும்போது, அது பெரும் ஆறுதலாக, ஆசீர்வதிக்கப்பட்ட நிலை போல இருக்கிறது. நிச்சயமாக, நெடுநாளைக்குப் பிறகு நான் அமைதியாக உணர்வதற்கு மிக அருகில் வந்தது அப்போதுதான். கொஞ்ச நேரத்துக்கு அப்பால், நான் எங்கிருக்கிறேன், அல்லது என்ன செய்கிறேன் என்பது பற்றி ஏதும் புரியாதவனாக ஆகி விட்டிருந்தேன்.

6

நான் மறுபடி என்னுள் திரும்பியபோது எத்தனை நேரம் கழிந்திருந்தது என்பது எனக்குத் தெரியாது.

அந்த மாறுதல் திடீரென்று நடந்தது. நான் என் தலைக்குள் எங்கோ ஆழத்தில் போயிருந்தேன், இப்போது திடீரென்று எதார்த்தத்திற்குத் திரும்பி இருந்தேன் – என் மேலங்கிக்குள் உடல் சூடாக இருந்தது, ஆனால் உடலின் விளிம்புகளில் மிகவும் குளிர்ந்து போயிருந்தது, காதுகள் வலித்தன, என்னைச் சுற்றி வீழும் பனிமழை முன்னை விட இன்னும் கனமானதாக ஆகியிருந்ததை நான் அறிந்தேன். காயாக்கின் முன்புறத்தில் ஒரு அங்குலம் பனித்துகள் குவிந்திருந்தது.

நான் துடுப்புப் போடுவதை நிறுத்தினேன், படகு அதன் வேகத்தில் செல்ல விட்டேன். சுற்றி நோக்கினேன்.

என்னால் எதையும் காண முடியவில்லை.

முந்தைய நாளில், ஏரியில் நான் பயணம் போனபோது, கரையோ அல்லது தீவோ, தூரத்திலிருந்தாலும், சிறியதாகத் தெரிந்தாலும், கண்ணில் படும்படியாக இருந்தன. இப்போதோ எந்தத் திக்கிலும் ஏதும் கண்ணுக்குப் புலப்படவில்லை, அது ஓரளவுக்கு, பனிப்பொழிவு 30 அடிக்கு மேல் எதுவும் தெரியாதபடி பார்வையை மறைத்ததால், ஆனால் நான் ஏரியில் தீவுகளே இல்லாத பகுதிக்குப் போய் விட்டிருக்கிறேனா என்பது எனக்கு விடை தெரியாத கேள்வி. அதனால்தான் எதையும் பார்த்து அதை வைத்துத் திசையறிந்து படகைச் செலுத்த வழியில்லையா.

இந்த எண்ணம் எனக்குத் தோன்றியதும், நான் ஒரு மடையன் என்று உணர்ந்தேன். காலக் கணக்கு தெரியாத ஒரு இடைவெளியில் (நான் கைக்கடிகாரம் அணிவதில்லை, ஆனால் என் புத்தியில் இருந்த ஏதோ ஒரு கடிகாரம், அரை மணி நேரமாவது இருக்கும், கூடவும் இருக்கும் என்றது) நான் ஏதுமில்லாத பக்கத்தை நோக்கி என் படகைச் செலுத்தி இருக்கிறேன். அது கருத்தளவில் நேர்கோட்டுப் பயணம், ஆனால் என் காயாக் செலுத்தும் திறன் அத்தனை நேர்த்தியானதல்ல, அதனால் அது கச்சிதமான நேர்கோடாக இருந்திராது, அதனால் நான் இப்போது எங்கே இருக்கிறேன் என்பதை ஊகிப்பதும் இயலாதது, வேறு ஏதோ நிலையான இடம் தென்பட்டாலும், நான் அதன் எதிரே இருக்கிறேன் என்பதைத் தவிர வேறெதையும் எனக்குத் தெரிவிக்காது.

உச்சம் என்பது எண் பத்து என்றால், கொட்டும் பனியளவு இப்போது எண் எட்டு ஆக இருந்தது, கொட்டும் அளவும் சிறிதும் குறையவில்லை, நான் சிக்கலான நிலையில் அகப்பட்டுக் கொண்டேன் என்ற உண்மையை ஒத்துக் கொண்டேன்.

நாம் இளைஞராக இருக்கையில், எல்லாமே சரியாக்கப்பட முடியும், மறுபடி சரியான பாதையில் பொருத்தப்பட முடியும் என்பன வெளிப்படையாகப் பேசப்படாத முன்முடிவுகள்.  நாம் இப்படி உணரக் காரணம், நாம் செய்யக் கூடிய தவறான நடத்தைகள், உண்மையில், மிகச் சிறியனவாக இருக்கும், பொதுவான மனிதப் பிழைகளின் வரம்புகளுக்குள் அடங்குவனவாக இருக்கும், நமக்கு இதர மனிதர்கள் இருப்பார்கள் – வழக்கமாக நம் பெற்றோர் – அனுபவமும், கரிசனமும் உள்ளவர்கள், கை நீட்டி, தூக்கி விட்டு, நம்மை மறுபடி சீரான பாதையில் பொருத்துவார்கள்.

நமக்கு வயது கூடி வரவர, சில செய்கைகளிலிருந்து மீண்டு வர, அவற்றின் விளைவை ரத்து செய்யும் விசை நம்மிடம் இல்லை என்பதை, நம் அனுபவம் நமக்குக் காட்டுகிறது. இவற்றில் பெரும்பாலானவற்றுடைய பின் விளைவுகளை, தாக்கத்தை நாம் ஏற்கத் தயாராகி விடுகிறோம். அவை சில நேரம் பெரும் தாக்கமாக இருக்கும், அவற்றிலிருந்து நாம் ஜாக்கிரதையாக முன்னேறி மாற்றப்பட்ட ஒரு எதிர்காலத்துக்குள் செல்கிறோம்.

ஆனால் சில இருண்ட பகல்களிலும், இரவுகளிலும், நம் துடுப்பு வலிப்பு முயற்சி நம்மை உலகின் விளிம்பைத் தாண்டி வீழ்ச்சி அடையும் இடத்திற்கு இட்டுப் போய் விட்டது என்பதை நாம் உணர்வோம். அப்போது நமக்கு இருக்கும் ஒரு தேர்வை நாம் மேலும் தொடர்ந்து செய்கிறோம், அது முன்பு தொடர்ந்து துடுப்பு வலித்தது இயற்கையானதாக, சரியானதாகத் தெரிந்தது போலவே இப்போதும் இருக்கும். ஆனால், அங்கு திரும்பிப் போகப் பாதை இல்லை, ஒவ்வொரு அடி எடுத்து வைத்தபோதும் கடந்து வந்த பாதையை நாம் எரித்து விட்டோம்- இப்போது எந்தத் தடுப்பும், பிடிமானமும் இல்லாது கீழே விழுகிறோம் என்பதை நாம் காண்போம்.

நான் அத்தனை மோசமான சிக்கலில் இருந்ததாக அப்போது நினைக்கவில்லை. அங்கு கடும் குளிர் நிலவியது உண்மை, ஆனால் துடுப்பு வலித்தபடி இருக்கும்வரை, என் உடலின் மையத்தில் சூடு உயர்ந்தே இருக்கும். காயாக் தடிமனான ப்ளாஸ்டிக்கால் செய்யப்பட்டது, கடந்த காலத்தில் நிறைய அடிபட்டு இருந்தாலும் சிறிதும் நீர் கசியாமல் இருந்தது. என்னிடம் கொஞ்சமாகத்தான் சாப்பாடு இருந்தது, ஆனால் நிலைமை இதை விட மோசமாக ஆகவில்லை.

எனக்கு இரண்டு தேர்வுகள் இருந்தன. பனி விழுவது குறையும், வெளியைப் பார்க்க முடியும் நிலை திரும்பும் என்ற நம்பிக்கையில் இருந்த இடத்திலேயே இருப்பது என்பது ஒன்று. அதெல்லாம் சமீபத்தில் நடக்கும் என்று நினைப்பதற்கு ஒரு காரணமும் அங்கு இல்லை. ரால்ஃப் முன்பு சொன்னதில், சில வருடங்களில் இரண்டு நாட்கள் பூராவும் பனி கொட்டியது உண்டு என்பது என் நினைவிலிருந்தது. மாற்று வழி, துவங்கிய இடத்தை அடைவதற்கு என்னால் முடிந்தவரை நன்றாக இயங்கி, திரும்பிப் போக முயல்வது.

இந்தக் கேள்விகளைப் பரிசீலிக்கையில் நான் காயாக்கை தன் போக்கில் போக விட்டிருந்தேன். ஆனால் இந்தத் தேர்வுகள் என் மனதில் எழுந்ததுமே நான் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். துடுப்பு என் மடியில் பத்திரமாக இருப்பதை உறுதி செய்து கொண்டேன், மிச்சமிருந்த சாண்ட்விச்சை வெளியே எடுத்தேன். ஒரு துண்டு விடாமல் எல்லாவற்றையும் சாப்பிட்டேன், பின்னர் அதைச் சுற்றி வந்த மேல் காகிதத்தைப் பயன்படுத்தி, பனித் துகளைச் சேகரித்து அதை வாய்க்குள் திணித்துக் கொண்டு சாப்பிட்டேன். நான் ஏற்கனவே நிறைய வியர்த்திருந்தேன், பசியை விட உடலில் நீரிழப்பு என்பது மோசமாகப் பாதிக்கும், நான் இருக்கும் இடத்தை உத்தேசித்தால் அப்படி நடப்பது அங்கதச் சுவை கொண்டதாகத்தான் இருக்கும். ஏரித்தண்ணீர் குடிக்கக் கூடியதாக இருந்திருக்கும், ஆனால் நான் ஏற்கனவே வேண்டுகிற அளவு ஆபத்தை மேற்கொண்டிருந்தேன்.

அப்போது துடுப்பை எடுத்துக் கொண்டு, எச்சரிக்கையோடு நூற்று எண்பது டிகிரிகளுக்கு அல்லது என்னால் கணிக்க முடிந்த வரை அவ்வளவுக்கு, படகைத் திருப்பினேன்.

இந்த திக்கிலும் காட்சி எதிரே முன்போலவேதான் இருந்தது. பனி இன்னமும் இடைவிடாது கொட்டியது. என் கீழ் வயிறு பீதியில் ஒரு தடவை திருகிக் கொண்டது, நான் அது கடக்கும் வரை பொறுத்திருந்தேன். வேகமாகக் கிளம்பிப் போவது முட்டாள்தனமான யோசனையாக இருக்கும். அந்த உணர்வு வடிந்தது.

துடுப்பின் வலது நுனியை நீரில் இட்டேன், பின்னோக்கி வலித்தேன். பிறகு மறுபுறம் அதையே செய்தேன்.

காயாக் வேகம் பெற வழக்கத்தை விட நேரம் ஆனது போல, தண்ணீர் அடர்த்தியானதைப் போல, உறைய ஆரம்பித்திருப்பதைப் போல இருந்தது. அது சரியானதாகத் தெரியவில்லை. அல்லது அது நடக்கவில்லை என்று நான் நம்பினேன். அதை விடப் பொருத்தமான காரணம் என்னவென்றால், குளிர்ச்சி அடைந்திருந்த என் கைகள் மறுபடி வேலையில் ஈடுபடுத்தப்படுவதை எதிர்க்கின்றன என்று இருக்கும். இன்றிரவு படுக்கையில் நான் வலியால் துன்பப்படப் போகிறேன்.

அதற்கு, நான் திரும்பிப் போய்ச் சேர்வேன் என்று நம்ப வேண்டும்.

சில நிமிடங்களில் நான் சூடாக ஆகத் தொடங்கினேன், காயாக் சரியான திக்கு என்று நான் நம்பிய திக்கில் வழுக்கிச் சென்றது. மெதுவாகவும் சீராகவும் போனால், நான் இருந்த இடத்துக்கு அருகில் பொதுவாக எங்காவது கொண்டு விடும்.

அது எந்த இடமாக இருந்தாலும் சரி.

என் புத்தியில் சந்தேகப்படும் பகுதிகளை வாயை மூடச் சொன்னேன், இடைவிடாத வேலையில் இறங்கினேன். சில நிமிடங்களில் நான் அதை நிறுத்தி விட்டு, எதிரே இருந்த பனியை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.

முதலில் அது ஒருகால் விசேஷமாகக் கனமாக இருந்த பனிப்பொழிவா என்று ஐயப்பட்டேன். காற்று வேகம் பிடிக்கத் தொடங்கியது, பனியை அடர்த்தியிலும், திசைகளிலும் குழப்பமாக விழும்படி ஆக்கியது.

ஆனால், காயாக் முன்னே போய்க் கொண்டிருந்தது, சீக்கிரமே ஏதோ அங்கே இருப்பது புலனாகியது.

ஒரு தீவு.

கட்புலன் இன்னும் மோசமாக இருந்ததால், அது எத்தனை பெரியது என்பதைச் சொல்ல முடியவில்லை, ஆனால் அதன் கடும் பாறைகளாலான பக்கத்தின் வளைவும், அதன் மேல் பகுதியில் இருந்த மரங்களின் அளவும், நான் முன்பு பார்த்தவற்றை விட நிறையவே பெரிய தீவு என்று சுட்டியது.

நான் போகிற வாக்கில் அதன் மீது நேரே மோதவிருந்தேன். அது நல்லதாக இராது. இதன் பொருள், நான் காயாக்கைக் கருக்காகத் திருப்பி இருக்கவில்லை என்பதே, ஏனெனில் இப்போது நான் நின்று இருந்த இடத்தை அடைய அந்தத் தீவின் நேர் குறுக்கே படகில் வந்திருக்க வேண்டும்.  நூற்று எண்பது டிகிரிகள் திருப்ப எண்ணியதை நான் சரியாகச் செய்திருக்கவில்லை என்பது புரிந்தது. ஆனால் தர்க்கப்படி பார்த்தால், நான் இந்தத் தீவைக் கடந்து வந்திருக்க வேண்டும், அதன் பக்கவாட்டில் போதுமான அளவு பயணித்திருக்க வேண்டும், ஆனால் பனியால் அதைப் பார்த்திருக்க முடியவில்லை. அதனால் நான் இப்போது செய்ய வேண்டியது, இடது பக்கம் திரும்பி, அந்தத் திக்கில் பயணிப்பதுதான்.

இது கூட நல்ல செய்திதானோ என்னவோ. அந்தத் தீவு இருந்து என் திரும்பும் முயற்சியின் பிழையைச் சுட்டாதிருந்தால், நான் துடுப்பு வலித்த திக்கில் சென்றிருப்பேன், அது குறைந்தது இருபது டிகிரிகள் தவறான திக்காக இருந்திருக்கும்.

நான் அந்த மாற்றத்தைச் செய்து, மறுபடி துவங்கிப் போனேன்.

தீவின் பக்கங்களைப் பார்த்தபடி அதன் அருகாகத் துடுப்பு வலித்துப் படகோட்டினேன். இன்னொரு தேர்வாக, அந்தத் தீவில் பனி நிற்கும் வரை தங்குவது இருப்பதை உணர்ந்தேன். பனிப்பொழிவு ஓய எத்தனை நேரம் ஆகும் என்று எனக்குத் தெரியவில்லை, அந்த மரங்களிடையே ஒதுங்க இடம் கிட்டும் என்றலும், பல மணி நேரம் அங்கே தங்குவது கடும் குளிர் நடுவே ஆக இருக்கும், அனேகமாக இரவு பூராவும் ஆகலாம். அப்போது மாலை நெருங்கி வந்தது, அதன் பொருள், இன்னும் ஓரிரு மணி நேரம்தான் ஒளி கிட்டும். வாசஸ்தலத்துக்குப் பனிப்புயலில் திரும்பிப் போக துடுப்பு வலிப்பது முட்டாள்தனம் என்றால், இருட்டில் அதைச் செய்ய முயல்வது இரட்டிப்பு முட்டாள்தனமாக இருக்கும். மேலான வழி இரண்டு முட்டாள்தனங்களில் குறைவான ஒன்றைச் செய்வதுதான். அதுவும் அந்தத் தீவு நீர்ப்பரப்பிலிருந்து சுமார் ஐம்பது அடிகள் உயரத்துக்குத் தொடர்ந்து செங்குத்தான பாறை முகத்தையே காட்டிக் கொண்டிருந்த போது, எங்கும் காயாக்கைக் கரையிறக்க வழி இல்லை, அதனால் மேலே ஏறுவதற்கும் வழி ஏதும் இல்லை என்பதால் தொடர்ந்து துடுப்பு வலித்துப் போவது மேல்.

சில நிமிடங்கள் கழித்து அந்தத் தீவு வளைந்து அகன்று போகத் தொடங்கியது. சீக்கிரமே அது நான் போக வேண்டிய திக்கைச் சுட்டக் கூடியதாக இராது என்று உணர்ந்தேன், அதைப் பின்னே விட்டுப் போன பின்பு, ஒரே திக்கில் தவறில்லாமல் பயணிக்க என்ன வழி என்று தீர்மானிக்க முயன்றேன். என்னால் அது இயலவில்லை, மாறாக நான் மறுபடி பிரமையில் ஆழாமல் இருந்தால், எதிரே ஏதும் அடையாளம் காட்டாவிட்டாலும், நான் நேர்கோட்டில் துடுப்பு வலிக்க முடியும் என்று நம்பத் தீர்மானித்தேன்.

அந்தத் தீவை விட்டு விலகிப் போக எனக்குத் தயக்கமாக இருந்தது என்று புரிந்தது, ஆனால் என் பாதையைச் சிறிது வலது பக்கம் வளைய விட்டதில், அது அங்கே இருந்த வரை,  அதிலிருந்து ஒரே தூரத்தை என்னால் தக்க வைக்க முடிந்தது.  

நான் வேகமிழக்கச் செய்கிறேன் என்று அறிந்தேன்.

***

நான் முப்பது கஜ தூரத்தில் இருந்தேன், விழும் பனி அதற்கும் எனக்கும் இடையே இருந்த தூரத்தில், காரீய நிறத்தில் இருந்த மொத்தையான உருக்கள் சில அங்கே இருந்ததாகக் காட்டியது, வேறொன்றும் தெரியவில்லை. அந்தத் தீவு வேறாக இப்போது காட்சி அளித்ததை நான் உணர்ந்தேன் – அது ஏன் என்றும் புரிந்தது.

அதில் ஒரு வீடு இருந்தது.

நீண்ட கட்டடம், பல தளங்கள், பெரும்பாலும் சாம்பல் நிற மரத்தாலானது. இது வெறும் குடில் இல்லை, நூறு வருடங்கள் முன்பு தட்டிக் கொட்டி எழுப்பிய கட்டடம் இல்லை. காலத்தையும், புயல்களையும் தாங்கி வந்திருக்கிற ஒன்றைப் போலப் பார்க்க இருந்தாலும், அது ஒரு கட்டடக் கலை நிபுணராலோ அல்லது இயற்கையாகவே திறமையுள்ளவராலோ எழுப்பப்பட்டிருக்க வேண்டும். குறைவான நிதி அளவில், அந்தத் தீவில் என்ன கிட்டுகிறதோ அந்தப் பொருட்களை மட்டும் கொண்டு கட்டச் சொன்னால், ஃப்ராங்க் லாய்ட் ரைட் போன்ற ஒரு நிபுணர் இப்படி ஒன்றைத்தான் எழுப்பி இருப்பார், அது புரியக் கூடியதாகவும் இருந்தது. வெளியிலிருந்து பொருட்களை இந்தத் தீவுக்குக் கொண்டு வருவது மிகுந்த செலவைக் கேட்கும், கால அளவும் நிறையத் தேவைப்பட்டிருக்கும். அதை நான் உற்று நோக்கியபோது, எனக்கு ஏற்கனவே இருந்த உந்து விசை என் படகை மீதி இருக்கிற தூரத்தைக் கடக்கச் செய்தது, சில பாறைகள் அந்தக் கட்டடத்தில் ஏற்கனவே பகுதியாகப் பயன்பட்டிருந்தது தெரிந்தது. இறுதியில் தண்ணீரில் பத்து அடிகள் நீட்டிக் கொண்டிருந்த ஒரு மரத் தளம் கண்ணில் பட்டது.

அதில் யாரோ ஒருவர் நின்றிருந்தார்.

அந்த மரத்தளம் என் தலைக்கு மேல் அறுபது அடி உயரமாவது இருந்திருக்கும், பனி அதை ஒரு கருப்பு வெளுப்புத் திரைப்படத்தில் காணப்பட்ட காட்சி போலத் தோன்றச் செய்தது. நெடுவாக்கில், நடுங்கும் கோடுகள் அந்தக் காட்சியைச் சிதறடித்தன. ஒரு பெண் அங்கு நின்றார். கரிய முடி, சுருண்டிருந்தது, நீளம் இல்லை. அவர் என்ன அணிந்திருந்தார் என்று என்னால் அறிய முடியவில்லை. அவர் அங்கிருந்த கைப்பிடிக் கிராதிகள் மீது சாய்ந்திருந்தார், கைகளை மடித்துக் கட்டியபடி, பனிப் பொழிவுக்குள் நோக்கியிருந்தார்.

‘ஹேய்.’

அவர் அதைக் கேட்டதாகத் தெரியவில்லை. நான் மேலும் உரக்கக் கத்தினேன், அதேதான் விளைவு, இதற்குள் நான் அவருக்கு நேர் கீழே வந்திருந்தேன்.

அவர் கைகளைக் குறுக்கே கட்டியபடி நின்றிருந்தார், விழும் வெண்பனியை நோக்கியபடி இருந்தார், எதிரே என்ன இருந்தது என்பதைக் கவனிக்காதவர் போலவும், ஏதோ ஒன்றை எதிர்பார்த்து நோக்குபவராகவும், அதைத் தவிர மற்றெதையும் கவனிக்க மாட்டாதவர் போலவும் தெரிந்தார். மற்றதெல்லாம் கவனத்தில் படாது என்பது போல இருந்தார்.

நான் துடுப்பு வலிப்பதை நிறுத்தினேன். அந்த வீடும், அந்தப் பெண்ணும், அந்தத் தீவுக்குள் நுழைய வழி இருந்திருக்க வேண்டும் என்று சுட்டின. அங்கே தங்குமிடம் இருந்தது. உஷ்ணமும், உணவும் கூடக் கிட்டலாம்.

நான் மறுபடி இரைந்தேன், அவர் இன்னமும் என் குரலைக் கேட்கவில்லை. அந்த பாறைச் சுவரிலிருந்து அகன்று சில அடிகள் பின்னே போகும்படி துடுப்பு வலித்தேன், அந்த முனையின் மறுபக்கத்துக்குப் போனேன், அங்கே கரையிறங்க ஏதாவது வழி இருகும் என்று எனக்குத் தெரிந்தது.

***

ஆனால் அங்கே ஏதுமில்லை.

நான் கிட்டேயே இருந்தேன், பனி கனமாக விழுந்ததால் அது தொடர்ச்சியாக இருப்பதாகத் தெரிந்தது. காயாக்கின் முகப்பில் ஏற்கனவே மூன்று அங்குல உயரம் சேர்ந்திருந்தது, தீவிலிருந்து பத்தடி தூரத்துக்குள் இருக்க வேண்டி இருந்தது, அல்லது என்னால் அந்தத் தீவைக் காண முடியவில்லை.

சுற்றி வரத் துடுப்பு வலித்து, நீண்ட பக்கத்தைத் தாண்டி, மறுபுறத்தைக் கடந்து, மறுபடியும் நான் ஏற்கனவே இருந்த பக்கத்திற்கே வந்து சேர்ந்தது குழப்பம் காரணமாக. அங்கே ஒரு கரையும் காணப்படவில்லை, படகுத்துறையும் இல்லை. எங்கும் அதே வழுக்கலான, கரடு முரடான் பாறைதான் தீவு முழுதும்.

அந்த மரத்தளத்துக்கு வந்து சேர்ந்த போது, அதில் யாரும் இப்போது நிற்கவில்லை.

நான் கரை இறங்க முடியவில்லை, அங்கேயே இருப்பதும் சாத்தியமில்லை.

காயாக்கைத் திருப்பினேன், மறுபடி வெண்மைக்குள் பயணம் போனேன்.

7

அங்கே எத்தனை நேரம் இருந்தேன் என்பது பற்றி எனக்கு எந்தப் புரிதலும் இல்லை. பல மணிகள்? எவ்வளவானாலும், அதன் நேரம் நீண்டது, மாறி மாறி பிடிவாதமாக உழைப்பதும், கூடி வரும் பீதியால் நிலை குலைவதுமாக அந்த நேரத்தைக் கடந்தேன். சளைப்பு மேலோங்கும் அளவு நேரமாகி இருந்தது. என் கைகளையோ, விரல்களையோ உணர முடியாத நிலைக்கு வந்திருந்தேன். என் கால்விரல்களும், கால்களுமே உணரப்பட முடியவில்லை. முகத்தில் சில பகுதிகளும் உணர்விழந்திருந்தன. பனித்துகள்கள் விழுந்து கண்களில் குத்தாமல் இருக்க இமைகளை நெடுநேரம் மூடி வைத்திருக்க வேண்டி இருந்தது. என் காதுகள் கூர்மையான, ஆழ்ந்த வலியால் ரீங்கரித்தன.

தண்ணீர் உறைந்த பாகு போல இருந்தது. ஒரு திசையில் அதோடு நீண்ட நேரம் போராடினேன், பின் என் நம்பிக்கை இழந்த நிலையில் மனம் தோன்றியபடி திசைகளை மாற்றினேன், வேறு திசையில் அதே போலப் போராடினேன். கொஞ்ச நேரம் கழிந்த பின், இதெல்லாம் ஏற்கனவே முட்டாள்தனமான முடிவுகளால் நிரம்பிய நாளில், மேலும் முட்டாள்தனமான முடிவுகளைச் சுமத்துவதாக எனக்குத் தோன்றியது. என் முதல் தேர்வான திசையிலேயே மறுபடி செல்ல முடிவு செய்தேன், ஆனால் அது எனக்கு இயலவில்லை – அதுவும் அங்கே இருந்த கொஞ்சநஞ்ச ஒளியும் மங்கத் தொடங்கி விட்ட பிறகு சாத்தியமாக இல்லை. பனிப் பொழிவு உள்புறமிருந்து ஒளியூட்டப்பட்டது போலத் தெரிந்தது மாறி, சாம்பல் நிறமாக ஆயிற்று: முதலில் இலேசாக, பிறகு மேன்மேலும் கருமை பூசப்பட்டதாக ஆனது- இறுதியில் நான் காரிருளில் துடுப்பு வலித்துக் கொண்டிருந்தேன், முகத்தில் விழுந்த பனித் துகளின் சில்லிப்புதான் பனி இன்னும் பொழிகிறது என்று எனக்குக் காட்டியது.

என் துடுப்பின் சத்தங்கள் உடைந்து கேட்டது மட்டும்தான் ஒலியாக இருந்தது, ஒவ்வொரு முறையும் தன்னுள் எல்லாம் அடங்கிய ஒலியாகக் கேட்டது, திரும்பத் திரும்பக் கேட்ட ஒலித் தாக்கம். திரும்பி, அந்தத் தீவை நோக்கிப் போகலாம் என்று யோசித்தேன். ஆனால் இதற்குள் அந்தத் தீவு எந்தத் திக்கில் இருக்கிறது என்பதுமே எனக்குத் தெரியாமல் போயிருந்தது. எனக்குத் தெரிந்த வரை, நான் ஏற்கனவே அங்கே திரும்பி விட்டேன், அது சில கஜங்களே தள்ளி இருந்தது, இப்போது பிணைக்கிற, உணர்வுகளை மரக்கடிக்கிற இருட்டில் நான் அதைச் சுற்றிச் சுற்றி துடுப்பு வலிக்கிறேன் , அதன் ஈர்ப்பு விசையில் அகப்பட்டுக் கொண்டு அதை விட்டு நீங்க முடியாமல் இருக்கிறேன்.

               முயற்சியைக் கைவிட்டு விட்டு, செத்துப் போ என்று என் உடல் சொன்னது, ஆனால் மனம் விடுவதாய் இல்லை. பிறகு என் மனமும் அதையே சொன்னது, ஆனால் உடல் தன் நிலையை மறு பரிசீலனை செய்திருந்தது, அது விடுவதாய் இல்லை. குளிர் அத்தனை கடுமையாக இறங்கியதில் என் காதுகள் அத்தனை மோசமாய் வலித்தன, சிறிது நேரம் குளித்த பிறகு தன்னை விட மிகப் பெரியதான துண்டில் சுற்றப்பட்டு, என்றென்றும் வாழப் போகிற ஒரு வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டதாகவும், அங்கு எப்போதும் இருக்கப் போகிற வளர்ந்தவர்களால் மகிழ்ச்சியாகவும் உணரும் ஒரு பெண் குழந்தை, தன் தலையை வாரியபடி கவனம் செலுத்தாமல் பாடுகிற ஒரு பாட்டைக் கேட்பதாகக் கொஞ்ச நேரம் உணர்ந்தேன்.

மேலும் போய்க் கொண்டே இருந்தேன், துடுப்பு இழுப்பதை மாற்றி மாற்றிச் செய்தேன், மாற்றமே தெரியாத காரிருளில், கடும் குளிரில் என் கண்கள் மின்னின, விழித் திரையில் தன்னிச்சையாக நேரும் மின்னல்களுக்குப் பதில் வேறேதோ நிஜமான ஒன்று சிறிது தூரத்தில் தெரிவதாக அறிந்தேன்.

தீவு. அதாகத்தான் இருக்க வேண்டும்.

திடீரென்று நான் நினைத்தது சரி என்று புரிந்து கொண்டேன், நான் எப்படியோ அந்தத் தீவைச் சுற்றிச் சுற்றி வந்திருந்திருக்கிறேன், சில நேரம் நெருங்கி, சில நேரம் தள்ளிப் போய், எங்காவது போய்ச் சேர்வதற்கும், எங்காவது பாதுகாப்பாக இருக்கவும் தீவிரமாக ஆசைப்படும் என் ஆத்மாவால் அதன் வட்டத்துக்குள் பிடிக்கப்பட்டிருக்கிறேன்.

அந்த விளக்கொளியை நோக்கிச் சென்றேன், அந்தப் பெண் மரத்தளத்துக்கு மறுபடி வந்து விட்டாள் என்று தெரிந்தவனாய் இருந்தேன். என் துடுப்பின் ஓசை அவளை எட்டியிருக்க வேண்டும். நான் விளக்கை நோக்கித் துடுப்பு வலித்தேன், அவள் இந்த முறை கீழ் நோக்கிக் குரல் கொடுப்பார், தீவுக்குள் இறங்க எளிய ஒரு வழியை நான் கவனிக்கவில்லை, எங்கே போக வேண்டும், எப்படி காயாக்கிலிருந்து இறங்க வேண்டும், நிலத்தில் ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்வார். என் முகம் உறைந்த முகமூடி போலாகி இருந்தது, முயற்சியால் முனகியபடி, அவள் எனக்கு வழி காட்டுகிறாள், என்னை வீடு நோக்கிச் செலுத்துகிறாள், என் வலுவில் எஞ்சியதை வைத்துத் துடுப்பு வலித்தேன்.

ஆனால் அது அவள் அல்ல என்று கண்டேன்.

அது ரால்ஃப், ஏரியின் விளிம்பில் வாசஸ்தலத்தின் அருகில் கரையோரம் நின்றபடி, ஒரு விளக்கைப் பிடித்துக் கொண்டு நின்றார்.

(தொடரும்)

Series Navigation<< எரியும் காடுகள் – 1எரியும் காடுகள்-3 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.