
அல்லாமா இக்பாலின் பெயரைச் சொன்னதும் அனைவருக்கும் நினைவுக்கு வரும் பாடல் /சாரே ஜஹான்சே அச்சா/ஹிந்துஸ்தான் ஹமாரா/. இந்தியப் பிரிவினைக்குப் பின் அல்லாமா இக்பால் இந்தியாவைப் பிரிந்தாலும் இக்பாலின் கவிதைகளை இந்தியர்கள் பிரியவில்லை. கவித்துவத்தை ரசிக்க நாட்டின் எல்லைக் கோடுகள் தடையாக இருக்கவில்லை.
இக்பாலின் ‘இறைவனுக்கு ஒரு கேள்வி’ (ஷிக்வா, புகார்) கவிதை வெளியானபோது அதில் நாத்திகம் ஒலித்தததைக் கண்டு மார்க்க அறிஞர்கள் குழம்பினர். இக்பாலுக்கு இறைவனை நோக்கிக் கேள்வியெழுப்பும் தைரியத்தைக் கொடுத்து எது? எதனால் இக்பால் இப்படி எழுதினார்? என ஐயத்துடன் ‘ஷிக்வா’வை அணுகினர். இக்பாலை இறை எதிர்ப்பாளராகவும் பேசத் தயங்கவில்லை. அதன் பின்னர் ‘கேள்விக்கு பதில்’ (ஜவாப்-ஏ-ஷிக்வா, புகாருக்கு விளக்கம்) கவிதையில் முன்னம் தான் இறைவனை நோக்கிக் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இறைவன் பதில் அளிக்கும் வகையில் எழுதினார். அந்தக் கவிதைக்குப் பிறகு, இக்பாலின் ஷிக்வா, ஜவாப்-ஏ-ஷிக்வா இரண்டும் இஸ்லாமிய இலக்கியத்தில் சிறந்த படைப்புகளுள் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. இரண்டு கவிதைகளுக்கும் இடையில் நான்கு ஆண்டுகள் இடைவெளி இருந்தது.
இந்தியப் பிரிவினைக்கு முன்பும் இந்தியப் பிரிவினைக்குப் பின்பும் உருது இலக்கியப் பங்களிப்புக்காகவும், அறிவார்ந்த நோக்கில் இஸ்லாமை அணுகியதற்காகவும் இந்தியாவிலும் போற்றப்படுபவர் அல்லாமா இக்பால்.
புகழ் பெற்ற ஆளுமைகளின் பெயரால் அவர்கள் சொல்லாத குட்டிக் கதைகளும் மேற்கோள்களும் பரவிக்கிடப்பதைப் போல, இக்பால் பெயரிலும் பல குட்டிக்கதைகளும் மேற்கோள்களும் கிடைக்கின்றன. எது உண்மை எது போலி எனப் பிரித்துச் சொல்ல முடியாத அளவுக்கு அவை கலந்துள்ளன. பிரதமராக இருந்த காலத்தில் இம்ரான் கானும் இதில் வீழ்ந்துள்ளார். இன்னொரு கவிஞர் எழுதிய கவிதையை இக்பால் எழுதியதாக அவர் சொல்ல, ஆர்வலர்கள் அந்தத் தவறைச் சுட்டிக்காட்டிய பின் இம்ரான் கான் தவறுக்கு வருந்தினார்.
குட்டிக் கதைகளிலும் இக்பால் பள்ளிக்கூடச் சிறுவனாக இருந்தபோது வகுப்புக்குத் தாமதமாகச் செல்ல, ‘ஏன் தாமதம்?’ – ஆசிரியர் கேள்வியெழுப்ப,
‘அதிர்ஷ்டம் அல்லவா தாமதமாகத்தான் வரும்’
என பதில் சொன்னதாக சுவாரசியமான குட்டிக்கதை உண்டு. இக்பால் என்ற சொல்லுக்கு அதிர்ஷ்டம், நல்ல காலம் எனப் பொருள். கேட்பதற்கு இக்பாலின் மாணவ பருவம் நாவன்மை மிக்கதாக சுவாரசியமாக இருந்ததாகக் கொண்டாலும், இக்கதையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியது.
ஜனவரி 5, 1929இல் சென்னைக்கு (மதராஸ்) வந்து மதராஸ் முஸ்லிம் அசோஷியேஷனில் உரையாற்றியபோது, ‘இஸ்லாமியத் தத்துவக் கோட்பாட்டு மரபுக்கும் அண்மைக்காலத்தில் வளர்ந்துள்ள அறிவார்ந்த சமூகத்துக்கும் ஏற்ப, இஸ்லாமிய மதத் தத்துவங்களை நோக்கவேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய மதத்தை அறிவார்ந்து நோக்கிய பெருந்தலைவர்களுள் அல்லாமா இக்பால் முக்கியமானவர். அன்றைய அரசியல் சூழலில், பாகிஸ்தானுக்குச் செல்லும் நிலைபாட்டை எடுக்கு முன் இந்திய தேசிய காங்கிரசையும் முஸ்லிம் லீகையும் விடுத்து கிலாஃபத் இயக்கத்தை ஆதரித்துள்ளார்.
இக்பாலின் கவிதைகளில், இராமன் குறித்த இக்பாலின் கவிதை இன்றைக்கும் பலரால் நினைக்கப்படுகிறது. முதல் முறை கேள்விப்படுவோருக்கு வியப்பாகவும் இருக்கும். தன்னுடைய கவிதையில் இக்பால் இராமனை ‘இமாம்-ஏ-ஹிந்த்’ (ஹிந்துஸ்தானின் முதல்வன்) எனக் குறிப்பிட்டுள்ளார். ‘மேற்கத்திய உலகின் தத்துவங்கள் ஏற்றுக்கொண்ட இந்திய மெய் இராமன்’ (சப் ஃபல்சஃபி ஹைன் கிதா-ஏ-மக்ரிப் கா ராம்-ஏ-ஹிந்த்).
நக்ம் என்னும் யாப்பைத் தமிழில் இயைபுத்தொடையில் அமைந்த விருத்தம் எனலாம். இக்பாலின் ‘இராமன்’ கவிதை நக்ம் யாப்பில் அமைந்துள்ளது. கவிதையின் இயைபு ஹிந்த் (இந்துஸ்தான்). உருது யாப்பில் சொல்லப்படும் இரட்டை இயைபுகளின் அடிப்படையில் பார்த்தால், இக்கவிதையின் இயைபுகள், ஜாம்-ஏ-ஹிந்த், நாம்-ஏ-ஹிந்த், பாம்-ஏ-ஹிந்த், இமாம்-ஏ-ஹிந்த் இப்படிச் செல்கின்றன.
கவிதையின் மொழியாக்கம்:
இராமன் இந்திய மதுக்குவளைகள் மெய்யால் நிரம்பி வழிகின்றன மேற்கின் தத்துவங்கள் ஏற்றுக்கொண்ட இந்திய மெய், இராமன் அம்மெய் இந்தியரின் உயர்சிந்தனையின் தாக்கம் விண்ணிலும் உயர்ந்த சிந்தனை அது இங்கு தோன்றிய ஆயிரமாயிரம் மன்னர்களின் துணிவால் இந்தியாவின் புகழ் எழுதப்பட்டிருக்கிறது இராமனின் ஆளுமையால் இந்தியா பெருமிதமடைகிறது மக்கள் நோக்கம் அவனைத் தலைவனாகக் காண்கிறது புரிதலின் மகத்துவம் செய்யும் விந்தை இந்திய அந்திப்பொழுதும் மற்றவரின் காலைகளைவிட ஒளி நிறைந்தது வாள் வீச்சிலும் திடமனத்திலும் ஒப்பற்றவன் அவன் ஒழுக்கத்திலும் அன்பின் வீரியத்திலும் = அல்லாமா இக்பால்
மாறியிருக்கும் அரசியல் சூழலில் இந்த வரிகள் யாரால் எப்படி உள்வாங்கப்படும், பொருள் விளக்கப்படும், ஆராயப்படும் என்பதைக் கணிக்க முடியாது, ஆனால் இவ்வரிகள் இக்பாலால் எழுதப்பட்டு காலத்தைக் கடந்து இன்றும் நினைத்துப் பார்க்கப்படும் மெய்.