ஸர்கம் கோலா

நாய்களுக்குக் கார்த்திகை மாதம் எப்படியோ, அதேபோலத்தான் தில்லிக் குளிர்காலம், கலைக்கும் கலாச்சாரத்துக்கும். எங்கு பார்த்தாலும் வெள்ளைத்தோல் படைத்த சுற்றுலாப் பயணிகள் நிரம்பிக் கிடப்பார்கள். உரக்கப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், தமக்குள் மகிழ்ந்து கொண்டும், உற்சாகம் கொப்பளிக்க நகரை முற்றுகை இடுவார்கள். நமது கலாச்சாரம் சார்ந்த பொருள்களை பெரிய அளவில் வாங்குவதால், அவர்கள் சிறந்த கலை விற்பன்னர்களாகவும் கருதப்படுவார்கள். அதிக ஒப்பனைப் பொருட்களையும் உதட்டுச் சாயத்தையும் பூசிய, சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் சுண்ணாம்பு சுதைச் சித்திரங்களைப் போலத் தோற்றமளிக்கும் -மன்னிக்கவும், இச்சுதைச் சிற்பங்களை வெறுக்க குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை – மேல்தட்டுக் குடும்பப் பெண்கள், இந்த வெள்ளை தோல் வெளிநாட்டினர்களுக்கு அடுத்தபடியாக எங்கும் தென்படுவார்கள். இவர்கள், தம் குளிர்கால மாலை நேரங்களை, ஏதாவது கலையரங்கு களிலோ அல்லது நாடகம் பார்ப்பதிலோ செலவழிக்க அதிகம் விரும்புவார்கள். குளிர்காலம், கலைக்கும் கலாச்சாரத்துக்கும் மிக உகந்த பருவம்.

குளிர்காலத்தில், சூரியன் மிக விரைவாக அஸ்தமித்துவிடும். மிருதுவான கம்பளித் துணிகளைத் தழுவியபடி, உற்சாகம் தரும் காற்று, கலைக்கூடங் களையும், அரங்குகளையும் நிறைத்திருக்கும். அக்காற்றில் கலந்திருக்கும் மணம், ஆண்மையற்றவர்களை, ஆண்மை நிறைந்தவர்களாகவும், ஆண்மை மிகுந்தவர்களை ஆண்மை குறைந்தவர்களாகவும் மாற்றும் வல்லமை படைத்தது. மக்கள் கலைகளிலும் கலாச்சாரத்திலும் மூழ்கிக் கிடப்பார்கள். கலாச்சாரமும் கலைகளும் மக்களுக்குள் நிறைந்து ததும்பும்.

சங்கீத மாநாடு நடக்கும் இடத்தின் வாயில் அருகே நான்கு சிப்பாய்கள் அலுத்துக் களைத்து, கம்பைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் கழுத்தை முறுக்கிக் கொண்டு இரண்டு இன்ஸ்பெக்டர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஏனெனில் அவர்களுக்கு எதிரே நான்கு சிப்பாய்கள் நின்றுகொண்டிருந்தார்கள். இரண்டு சூட் அணிந்த நபர்களும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த சூட் ஒரேமாதிரி இருந்தது. அப்படி தைத்திருக்கக் கூடும். அவர்கள் பார்க்கவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தார்கள். மிகவும் கஷ்டப்பட்டு இவர்களை தேடிப்பிடித்திருக்கக்கூடும்.

கதவுக்கு எதிரே சரளைக் கல் பாதை ஒன்று இருந்தது. புதிதாக சரளைக்கல் பாவப்பட்ட பாதை. பூந்தொட்டிகள் தரையில் புதைக்கப்பட்டிருந்தன. விஷயம் அறியாதவர்கள், இந்த வறண்ட நிலத்தில் எப்படி பூ பூத்திருக்கிறது என்று ஆச்சரியப் படக் கூடும். வெள்ளை காகித பூக்களால் ஆன தோரணம் பாதைக்கு மேலே கட்டப்பட்டிருந்தது. சில வருடங்கள் முன்பு, இஸ்லாமியமத போதகர்களின் சமாதியின் மீது போர்த்தப்பட்டிருக்கும் பூக்களைப் போல, இப்பாதையின் மீதும் நிஜமான பூக்களால் ஆன தோரணம் கட்டப்பட்டிருந்தது. பிறகு திருமணங்களிலும் இம்மாதிரியான பூத் தோரணங்கள் கட்டுவதென்பது வழக்கமானது. மாநாட்டுக்குச் செல்லும் பாதையின் இருபுறமும், வண்ணத் துணிகளால் சுற்றப்பட்ட மூங்கில் கம்பங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றின்மீது குழல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. உள்ளே செல்பவர்கள் அந்த வழியாகத்தான் சென்று கொண்டிருந்தார்கள். வாயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த தாஸ்குப்தாவிற்கு இதை மட்டும் தான் பார்க்க முடிந்தது. அரங்கிற்கு உள்ளே என்ன நடக்கிறது என்பது கண்ணுக்கு தெரியவில்லை. உயரமான காலணிகளில் தங்களை நுழைத்துக் கொண்டு, இன்னும் உயரமாகக் காட்டிக் கொள்கிற முயற்சியில் வெற்றி பெறாத சிலர், மாநாட்டின் முழு ஏற்பாடும் அவர்களை மனதில் கொண்டே செய்யப்பட்டுள்ளது போன்ற தோரணையில், நிதானமாக உள்ளே சென்று கொண்டிருந்தனர். வெளிநாட்டு அலங்கார பொருட்களால், தங்களை மோசமாக அலங்கரித்துக் கொண்ட சில நடுவயதுப் பெண்களும் அங்கே இருந்தார்கள். சிவப்புப் புடவை, சிவப்பு ஐ- ஷாடோ: நீலப் புடவை நீல ஐ ஷாடோ: கருப்புடன் கருப்பு, மஞ்சளோடு மஞ்சள்… ஜப்பான் புடவையின் முந்தானையால் மூடிக் கொள்ளும் முயற்சியில் பாதி திறந்த மார்புடைய, கஷ்மீரத்து சால்வையை தோளிலிருந்து நழுவ விடாமல் அல்லது நேராக பார்த்துக் கொண்டே செல்லும் பெண்மணிகள். அல்லது ஜீன்சும் ஜாக்கெட்டும் அணிந்த கட் கட் கட் கட் பெண்மணிகள். இவைதான் செழுமையின் சின்னங்கள். தாஸ்குப்தா யோசித்தார். தீவிர மற்றும் அதி தீவிரச் சிந்தனையில் ஆழ்ந்த முகங்கள், மகிழ்ச்சியில் ஒளிரும் முகங்கள், பணம், புகழ், மரியாதையில் திருப்தியும் பெருமிதமும் கொண்ட முகங்கள், நிராகரிப்புகளிலிருந்தும் ஏமாற்றங்களிலிருந்தும் விடுதலை பெற்ற முகங்கள். இந்த நாட்டில் இத்தனை தன்னம்பிக்கையுடனிருக்க யாருக்கேனும் உரிமை உள்ளதா என்ன? தாஸ் குப்தாவின் தன்னம்பிக்கை மற்றும் உரிமை குறித்த அவதானிப்பு, சிறு முணுமுணுப்பாகவே வெளிவந்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். வினோதமான முடி அலங்காரத்துடன் ஹிப்பி பெண்கள். நைந்து போன ஜீன்ஸ். அவர்களை முகர்ந்த படியே அவர்கள் பின்னால் நாய்கள் கூட்டம்.

நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டிருந்தது. பீம்சென் ஜோஷியின் குரல் கேட்கத் தொடங்கியது. ஆனால் தாஸ் குப்தாவுக்கு எந்தக் குறுக்கு வழியும் புலப்படவில்லை. டிக்கெட் வாங்காமல் உள்ளே நுழைவதற்கான குறுக்குவழி.

வாயில், சரளைக் கல் பாவிய பாதை, கோட் சூட் அணிந்த வரவேற்புக் குழு உறுப்பினர்கள், போலீஸ்காரர்கள், இவை எல்லாவற்றிலிருந்தும் விலகி, சாலையின் எதிர்ப்புறம் அடர்ந்த மரத்தினடியில் அஜப் சிங்கின் வெற்றிலை பாக்கு சிகரெட் விற்கும் பெட்டிக் கடை இருந்தது. அதிசயம் ஆனால் உண்மை, இத்தனை பெரிய நகரத்தில், தாஸ்குப்தாவும் அஜப் சிங்கும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர். தாஸ்குப்தா அரங்கின் வாயிலிலிருந்து விலகி, அஜப் சிங்கின் கடைக்கருகே வந்து நின்று கொண்டார். குளிர் அதிகமாக இருந்ததால், அஜப் சிங், அதிக ஆழமற்ற உலோகத் தகட்டில் நெருப்பு மூட்டியிருந்தான்.

“பத்து பீடி கொ டப்பா”

“தாதா, இதுவரைக்கும் முப்பது பீடி ஆயாச்சு”

“ஆமாம். ஆயாச்சு நான் எப்ப சொன்னேன் இல்லைன்னு…. பைசா கொடுத்திடுவேன் பா”

தாஸ்குப்தா பீடியை எடுத்துக்கொண்டு, ஒரு பீடியை எரியும் நெருப்பில் பற்றவைத்துக் கொண்டார். நீளமாக புகையை இழுத்தார்.

” உள்ளே போக எந்த வழியும் கிடைக்கலையா தாதா”

“கிடைக்கும். கிடைக்கும்.”

“இப்ப வீட்டுக்கு போங்க. பதினோரு மணி ஆகப்போகுது.”

“எதுக்கு வீட்டுக்கு போகணும்? எனக்கு பீம்சென் ஜோஷி பாடறதைக் கேட்கணும்.”

“ரெண்டு பனாரஸி வெற்றிலை பாக்கு கொடு.”

உஸ்தாத் பீம்சென் ஜோஷியின் குரலின் சிறு துண்டு வெளியே தெறித்தது.

“வில்ஸ் கொடு. இது வேண்டாம், கிங் சைஸ்.”

தாஸ்குப்தா பெட்டி கடையை விட்டு நகர்ந்து நின்று கொண்டார். இப்பொழுது நன்றாக கேட்கும். ஆனால் குரல் நின்று விட்டிருந்தது. மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பந்தலின் பின்பக்க வழியாக உள்ளே நுழைந்தாலென்ன. பீடியை வேகவேகமாக இழுத்துவிட்டு, அவர் பந்தலின் பின்புறம் நுழைந்தார். இருட்டில் அவர் அடி மேல் அடி எடுத்து வைக்கும் பொழுது, அவர் மீது டார்ச் ஒளி பரவியது

யாருய்யா அது?

போலீஸ்காரர்களை தவிர வேறு யார் இப்படி பேச முடியும். தாஸ்குப்தா அவசரஅவசரமாக பேண்ட் பொத்தானை அவிழ்த்தார். ஸார்…ஒன்றுக்கு போக…. டார்ச் அணைந்தது. தாஸ் குப்தாவுக்கு இந்த போலீஸ்காரர்களின் மீது மூத்திரம் பெய்துவிடலாம் போல எரிச்சல் வந்தது. அயோக்கியர்கள். இங்கு கூடவா காவலிருப்பார்கள்? மூத்திரம் போலீஸ்காரரின் மீது விழுந்தது. அரங்கில் அமர்ந்திருந்த எல்லோர் மீதும் விழுந்து அவர்களை நனைத்தது. அத்தனை அயோக்கியர்களும் ஓட ஆரம்பித்தார்கள். தாஸ் குப்தாவுக்கு சிரிப்பு வந்தது.

அவர் திரும்பி பெட்டிக் கடைக்கருகே வந்து நின்று கொண்டார். அருகிலேயே சிறு பந்தலுக்குக் கீழ் தற்காலிக உணவகம் ஒன்று நடத்தப்பட்டு வந்தது. இரண்டு மேஜைகளும் காபி தயாரித்து வழங்கும் இயந்திரமும் இருந்தன. மேலே 200 வாட் பல்ப் எரிந்து கொண்டி ருந்தது. ஹாட் டாக், ஹாம்பர்கர், காப்பிக் கோப்பைகள், தாஸ்குப்தா திரும்பவும் உள்ளிருந்து வரும் இசையின் மீது கவனத்தைப் பதித்தார். இவையெல்லாமே உள்ளே இருப்பவர்களுக்காக. இசையைத் தெரிந்தவன் வெளியில் நின்று கொண்டிருக்கிறான், பைத்தியக்காரன். வெளியே, ஓசை கசிந்துவிடாத அளவுக்கு ஒலிபெருக்கியை வைத்திருக்கிறார்கள் திருடர்கள். உள்ளேயோ, அடி முட்டாள்களும் ஞான சூன்யங்களும் நிரம்பி இருக்கிறார்கள். பீம்சென் ஜோஷியை இவர்களுக்குப் புரியுமா? உஸ்தாதின் பாடல்களை இவர்களால் ரசிக்க முடியுமா? உஸ்தாத் ஜி, தனது இசையில், மந்த ஸப்தக்கிலிருந்து மத்யத்துக்கும், மத்ய ஸப்தக்கிலிருந்து தார ஸப்தக்கிற்கும் ஸ்வரங்களை வைத்தே கற்பனைப் பாலத்தை கட்டிவிடுவார் என்று இவர்களிடம் சொன்னால், இவர்கள் பயந்து ஓடி விடுவார்கள். இதெல்லாம் பீம்சென் ஜோஷிக்கு தெரிந்திருக்காதா என்ன? தெரிந்திருக்கும். கண்டிப்பாக தெரிந்திருக்கும். சங்கீதம் கேட்க வருகிறார்களாம் சங்கீதம்! இன்னும் பத்து நிமிடங்களில் எழுந்து போய்விடுவார்கள். மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுவார்கள்.பிறகு, இழுத்துப் போர்த்திக்கொண்டு, குறட்டை விட்டுக் கொண்டு தூங்குவார்கள்.

” தாதா, குளிர் அதிகமாக இருக்கிறது”

வெற்றிலை பாக்கு மடித்து மடித்து அஜப் சிங்கின் விரல்கள் குளிரில் விறைத்திருந்தன

“ஏன் குளிராது? டிசம்பர் மாசம் இல்லையா”

அஜப் சிங் ஒரு செங்கல்லை எடுத்து தாதாவிற்கு முன்னால், அவர் உட்காருவதற்காக வைத்தான். அவர் செங்கல்லின் மீது உட்கார்ந்து கொண்டார்.

சுற்றிலும் கூச்சல் குறைந்து அமைதி ஏற்பட்ட போது, உள்ளிருந்து ஓசை தெளிவாகக் கேட்டது. உஸ்தாத் பெரிய பாட்டு ஒன்றை ஆரம்பிக்கவிருந்தார். தாஸ்குப்தா, செங்கல்லின் மீது கவனமாக உட்கார்ந்துகொண்டார். “பக் லகன் தே…தீம்..தீம்..தகிட…திரிகிட தூம்..திரிகிட …தோம்”

யார் தபலா வாசிக்கிறார்கள்? தாஸ்குப்தா தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். என்ன அருமையான வாசிப்பு!

“யார் தபலா வாசிக்கிறார்கள்?” தாஸ்குப்தா, அஜப் சிங்கிடம் கேட்டார்.

எனக்கு என்ன தெரியும் என்றான் அவன்.எத்தனை அருமையான வாசிப்பு! விரல்கள் நடனமாடுகின்றன! மனதை ஊடுருவுகிற வாசிப்பு! டு ந க் தா!

“உன்னிடம் கேம் பா இருக்கிறதா?”

மூன்று பெண்களும் பையன்களும்களும் நின்றுகொண்டிருந்தார்கள். இரண்டு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து கொண்டிருந்தார்கள் அவர்களுடைய முடி இடுப்பைத் தொட்டது. மூன்றாவது பெண்ணின் முடி காதுவரை தான். ஒரு பையன் தோல் கோட்டையும் மற்ற இருவரும் அஸ்ஸாமிய கோட்டையும் அணிந்திருந்தனர். மூன்றாமவன், கருப்பு சால்வை போர்த்தி இருந்தான். ஒருவன், கால்கள் வெளியே தெரிகிற அளவுக்கு குட்டையான பேண்ட் அணிந்தி ருந்தான். நீண்ட முடி வாய்த்த பெண்களில் ஒருத்தி, அவசியம் இல்லாத போதிலும் தன் முடியை பின்புறம் தள்ளிவிட்டுக் கொண்டே இருந்தாள். மூன்றாமவள், தன் மூக்குத்தியைத் திருகிக் கொண்டிருந்தாள்.

வெளியே தெரியும் ஒல்லியான கால்களை கொண்ட பையன், வினோதமான ஆங்கில உச்சரிப்பில், கேண்டீனில் இருந் ஆளிடம் கேம்பா இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தான். அவன் ‘த’ வை ‘ட’ என்றும், ‘ஹ’ வோடு ‘ய’ வைச் சேர்த்தும் பேசிக்கொண்டிருந்தான். ‘ய’ வை சற்று நீளமாக இழுத்துக் கொண்டிருந்தான்.

“இல்லை, இப்போதுதான் தீர்ந்தது”

” ஓ! ஹௌ ஸில்லி! ” குட்டை முடிப்பெண் அலுத்துக்கொண்டாள்.

“வாட் எ ஸ்டுப்பிட் கேன்டீன் தே ஹாவ். வீ மஸ்ட் கம்ப்ளெய்ன்”

“லெட்ஸ் ஹாவ் காஃபி ஸ்வீட்டீஸ்,” நீண்ட கால்கள் கொண்ட பையன் ஸ்டைலாக சொன்னான்.

“பட் ஐ கான்ட் ஹாவ் காஃபி ஹியர்,” மூக்குத்தியை திருகி கொண்டிருந்த, மூன்று பெண்களில் சற்றே அழகாக இருந்த பெண் கூறினாள்.

“ஒய் மை டியர்?” ஒல்லிக் கால் பையன் அவளெதிரே குனிந்து கேட்டது மற்ற இரு பெண்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை எனத் தோன்றியது.

“ஐ ஆல்வேஸ் ஹாவ் காஃபி இன் மை ஹவுஸ் ஆர் இன் ஒபராய்ஸ்”

“ஃபைன். லெட்ஸ் கோ டு ஒபராய்ஸ் தென்”

ஒல்லிக் கால் பையன் அறிவிப்பு செய்வது போலக் கூறினான்.

“சார் சார் கேம்பா வந்துவிட்டது சார் ” என கேன்டீன் வேலைக்காரர், தூரத்தில் கேம்பா போத்தல்களை சுமந்து கொண்டு வரும் வேலைக்காரனை சுட்டிக்காட்டி கூறினர்.

“ஓ! கேம்பா ஹாஸ் கம்!” மற்ற இரண்டு பெண்களும் ஒரு சேர கோரஸாகக் கூவினார்கள். உள்ளேயிருந்து பீம்சென் ஜோஷி யின் குரலின் ஒரு துண்டு வெளியே விழுந்தது.

“ஓ! கேம்பா ஹாஸ் கம்!” மூன்று பேரும் பாட ஆரம்பித்தனர்.

கே….ஏ…ஏ….ம்பா

…பார் கரோ….கே…ம்பா அரஜ் ஸுனோ…ஓ…பார்…அரஜ்…..கேம்ப்….பா…பார்..கரோ….கே…ஏ…ஏ..ம்…பார்…கரோ…

“பட் நௌ ஐ வான்ட் டு ஹாவ் காஃபி இன் ஓபராய்ஸ்,” சற்றே அழகான பெண் சிணுங்கினாள்.

“பட் வீ கேம் ஹியர் டு லிஸன் டு பீம்சென் ஜோஷி.”

“முட்டாள்தனமா பேசாதே. அவர் ரா முழுக்க பாடிட்டு இருப்பார். நாம ஓபராய்ஸ்ல காபி குடிச்சிட்டு திரும்ப வரலாம். வேணும்னா வீட்டுக்குப் போய் தூங்கிட்டு கூட வரலாம்,” ஒல்லிக் கால் பையன் சாவிக்கொத்தை விரலில் சுழற்றியபடி முன்னே நடந்தான். பீம்சென் ஜோஷியின் வாதை நிரம்பிய குரல் வாயில் வரை கேட்டது. துக்கங்களும் குறைகளும் நிறைந்து விண்ணப்பம் செய்கிற பாடல். அரஜ்….ஸுனோ …மோரே… ஒரே நேரத்தில் கதவுகள் மூடிக் கொண்ட பின் வண்டி விரைந்தது.

மணி பன்னிரண்டு ஆகி விட்டிருந்தது.தெரு சத்தங்கள் இன்றி அமைதியாக இருந்தது. தெருவில் வெகு தூரம்வரை வண்டிகள் வரிசையாக நின்றிருந்தன. மக்கள் மெல்ல மெல்ல வெளியே வர ஆரம்பித்திருந்தார்கள். பெரும்பாலும் மத்திய வயதான, தீவிர யோசனையில் ஆழ்ந்த முகம் கொண்டவர்கள். தனக்குள்ளேயே மூழ்கிய, அலுத்துப்போன, பருமனான இடுப்பில் சதை பிதுங்கி வழிகிற, கொட்டாவி விடுகிற பெண்மணிகள். தூக்கம் வருதா உங்களுக்கு? டிக்கெட் பணத்தை இப்படி நாசம் பண்ணிட்டீங்களே? உஸ்தாத் ஜி இரண்டு மணிக்கு அப்புறம் தான் பாடுகிற மூடுக்கே வருவார். டிரைவரை அனுப்பி, இருப்பதிலேயே விலை உயர்ந்த டிக்கெட்டை வரவழைத்து, ஏதோ இரண்டு மூன்று மணிநேரம் உட்கார்ந்தாகிவிட்டது. பொதுமக்கள் தொடர்புப் பணியும் முடிந்து விட்டது, இவர்களுக்கெல்லாம் டிக்கெட் வாங்க அருகதையே இல்லை. பணத்தை வீணாக்கி விட்டார்கள். உஸ்தாதையும் விரயம் செய்து விட்டார்கள். இந்த லட்சணத்தில்தான் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். யார் புறப்பட்டு விட்டார்களோ, அவர்களுடைய இடம் காலி தானே. அவர்களுடைய இடத்தில் நம்மை உட்கார விடமாட்டார்கள். உனக்கு என்ன பிரச்சனை? உனக்குத்தான் பணம் முழுவதுமாக கிடைத்துவிட்டதே! இப்போது ஏன் உட்கார விடக்கூடாது?

தாஸ் குப்தாவுக்கு குளிர ஆரம்பித்தது. அவர் தனது பழைய பெரிய சைஸ் ஏர்போர்ஸ் கோட்டின் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக் கொண்டார். அஜப் சிங், காய்ந்த சருகுகளைத் தூவி நெருப்பை தூண்டி விட்டான். கலை அரங்கின் நிறுவனரும் வெளியேறிக் கொண்டிருந்தார். “அயோக்கிய ராஸ்கல்” தாஸ் குப்தா தன் மனதுக்குள்ளேயே அவரை வைதார். ஓவியங்களை விற்று பங்களாக்களை கட்டிவிட்டான்! இப்போது சானிட்டரி பிட்டிங் வியாபாரம் தொடங்கியிருக்கிறானாம். இவர்கள்தான் கலையை வளர்க்கிறார்கள்! பொதுமக்கள் தொடர்பில் இவர்கள் வல்லவர்கள். நாள்தோறும் ஒரு விருந்தளித்தால் போதும்! ஒரு கையால் போட்ட பணத்தை, மறு கையால் சம்பாதித்து விடுகிறார்கள். மனைவியின் பெயரில் இன்டீரியர் டெகரேஷன் செய்யும் காண்ட்ராக்ட்களை பிடித்து விடுகிறார்கள். யாரோ மூன்றாம் நபரிடம் வேலை வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஆயிரமோ இரண்டாயிரமோ எறிந்துவிட்டால் போதும். பெண்களை ஏற்பாடு செய்வதிலிருந்து, வாக்குகளை விலைக்கு வாங்குவது வரை எல்லா வேலைகளும் அத்துப்படி. ஜெகஜ்ஜால புரட்டன்! நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் எப்படி பவ்யமாக குனிந்து கார் கதவைத் திறக்கிறார் பாருங்கள்? நிகழ்ச்சியை ஒட்டி இவர்கள் வெளிக்கொணர்ந்திருக்கும் கையேட்டில் ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் விளம்பரம் கொடுத்திருப்பாரே, அதனால்தான். மலத்திலேயே உழலும் பன்றி, அதையே தின்பதைப் போலத்தான் இவர்கள் “கலாச்சாரத்தைப் பேணும்” தொழிலும். வியாபாரம் ஆரம்பிக்காதிருந்தால் ‘கலாச்சார மையம்’ தொடங்கி இருப்பார். வெளிநாட்டு காரின் கதவு சத்தமின்றி மூடிக்கொள்கிறது. குசும் குப்தா. திருமதியுமில்லை, குமாரியும் இல்லை. இவரிடம் பேசினால் என்ன என்று தாஸ்குப்தா எண்ணினார். அவர் வேகமாக வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரிடம் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும்.

கேன் யூ ப்ளீஸ்…

அவர் முழு பேச்சையும் கேட்க வில்லை. ஆனால், தாஸ்குப்தா என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்டு, அவர் தோள்களைக் குலுக்கினார்.

“மன்னிக்கவும். இந்த கலை நிகழ்ச்சியை நடத்துவதற்கு நாங்கள் முப்பதா யிரத்திற்கு மேல் செலவழித்திருக்கிறோம்.” என்று கூறியவாறு அவர் நடந்து சென்று அரங்கிற்குள் மறைந்தார். முப்பதாயிரம்… ஐம்பதாயிரம்… ஒரு லட்சம் … லாபத்தைத் தவிர இவர்களால் வேறு எதைப்பற்றியும் யோசிக்க முடியாது. அவர் திரும்ப வந்து செங்கல்லின் மீது உட்கார்ந்து கொண்டார். அஜப்சிங்கிடம் தொண்ணூறாம் நம்பர் வெற்றிலைபாக்கைத் தயாரித்து தரச் சொன்னார்.

“ஹௌ மீன் யூ ஆர்?”

குழந்தைத்தனமான முகம் கொண்ட இளைஞன் ஒருவனை, முதிர் கன்னி ஒருத்தி, தன்னுடைய ஹாம்பர்கரை அவளுடன் பகிர்ந்து கொள்ளாததற்காக குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாள். முதிர்கன்னி மறுபடியும் கை நீட்டியபோது, இளைஞன் தன் கைகளை பின்புறம் மறைத்துக் கொண்டான். அவர்களுடன் இருந்த இரு பெண்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“மீன்,” முதிர்கன்னி ஸ்டைலாகக் கூறினாள்.

“மீன்?” மீன் என்றால் கயமைத்தனம் என்றல்லவா பொருள்?. ஆனால் இவர்கள் அதை இனிமையான சொல்லைப் போலல்லவா உபயோகப்படுத்துகிறார்கள்? ஒருவேளை, இவர்களுக்கு இனிமையான சொல், கயமைத்தனமாக இருக்கக்கூடும்.

சற்றுநேரத்தில் அந்த வெள்ளந்திப் பையனும் முதிர்கன்னியும் ஒரே ஹேம்பர்கரை சாப்பிடத் தொடங்கினார்கள். கூட இருந்த இரண்டு பெண்களும், அவர்கள் புணர்ந்து கொண்டிருப்பதைப் பார்ப்பவர்கள் போல சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“சாவ்லா அளித்த விருந்துக்கு நீ போயிருந்தாயா?”

” இல்லை போக வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால்…”

“மெஹரா வீட்டினர் வழக்கமாக நல்ல விருந்து அளிப்பார்கள்.”

“ஹாய் பேபி”

“ஹாய் லிட்டி”

“ஹாய் ஜானி”

“ஹாய் கிட்டி”

“ஆமாம் மெஹரா வீட்டினர் நல்ல விருந்து அளிப்பார்கள். அவர்கள் வீட்டில் அதற்காக பெரிய புல்வெளி இருக்கிறது. சென்றமுறை மிகப் பிரமாதமான விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். சாப்பிடவும் குடிக்கவும் பல பொருட்கள் இருந்தன. நாங்கள் விடிகாலை இரண்டரை மணிக்குத் தான் திரும்பினோம். அவ்வளவு சீக்கிரம் ஏன் திரும்ப வேண்டி இருந்தது தெரியுமா? என் மாமியார் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். நீ அவர்களை பார்த்து இருக்கிறாயா? எழுபது வயதிலும் என்ன அழகு, என்ன வசீகரம் தெரியுமா?”

“இந்த இசை நிகழ்ச்சி உனக்குப் பிடித்திருந்ததா? இதைப் பற்றி உன் கருத்து என்ன?”

“ஓ! அவர் மிக அழகாக இருக்கிறார்.”

“அவர் அணிந்திருந்த மோதிரத்தை கவனித்தாயா?”

“கவனித்தேன் மிக அழகான மோதிரம்.”

“விலை உயர்ந்ததாக இருக்கக்கூடும்.”

“கண்டிப்பாக”

“என் அம்மாவின் மாமாவிடம் அதேபோன்ற மோதிரம் இருக்கிறது.”

“அது பிளாட்டின மோதிரம்.”

“வெயிட்டர், இரண்டு காஃபி.”

இசையைக் கேட்க விடமாட்டார்கள் இந்த பரதேசிகள். இப்போது உள்ளேயிருந்து கொஞ்சமாகத்தான் சத்தம் வந்து கொண்டிருந்தது. தாஸ்குப்தா செங்கல்லை எடுத்து நெருப்புக்கருகே போட்டுக்கொண்டார்.

“இப்போதுதான் ஐரோப்பாவில் இருந்து திரும்பியிருக்கிறார்.”

“அவருக்கு லண்டனில் ஒரு வீடு இருக்கிறது.”

“பெரிய பணக்காரர் போலத் தெரிகிறது.”

“ஆமாம். ஒரு கச்சேரிக்கு அவரது சம்பளம் பத்தாயிரம் ரூபாயாம்.”

“அப்படியானால்நமது திருமணத்திலும் அவரையே பாட அழைக்கிறேன்” வெள்ளந்தி இளைஞன், முதிர் கன்னியின் இடுப்பில் கைவைத்தவாறே கூறினான்.

இவனுடைய கைகளைப் பார். மணிக்கட்டைப் பார். இவனால் தன்னுடைய சொந்த உழைப்பில் ஒரு நயா பைசா கூட சம்பாதிக்க முடியாது என தாஸ்குப்தா நினைத்தார். தகப்பன் சேர்த்து வைத்திருக்கிற பணத் திமிரில் உஸ்தாதை தன் கல்யாணத்தில் பாட அழைப்பானாமே! அஜப் சிங் நெருப்பில் இன்னும் கொஞ்சம் உலர்ந்த இலைகளைப் போட்டான். பீடி குடித்தபடியே, ஒரு டிரைவர் வந்து நெருப்பினருகே உட்கார்ந்து கொண்டான். அவன் காக்கிச் சீருடை அணிந்திருந்தாள்.

“குளிர் ஐயா குளிர்’ அவன் கைகளை நெருப்பின் மேல் விரித்துக்கொண்டான். யாரும் எதுவும் பேசவில்லை.

“ஒன்றுக்கும் பயன் இல்லாத இந்த நிகழ்ச்சி எவ்வளவு நேரம் நடக்கிறது என்று பார்க்கலாம். இன்று நூற்றியைம்பது கிலோ மீட்டர் வண்டி ஓட்டியதில், உடம்பே ஆட்டம் கண்டு விட்டது. இந்த பைத்தியக்காரனுக்கு விடிகாலை இரண்டு மணிக்குபாட்டு கேட்கிற ஆசை வந்துவிட்டது.”

“காலை ஆறு மணி வரை நடக்கும்” அஜப் சிங் தானாகவே வலிய வந்து தகவலைத் தெரிவித்தான்.

” அப்படின்னா இன்னிக்கு வசமா மாட்டியாச்சுன்னு சொல்லு”

“அண்ணே உங்க கிட்ட பாஸ் ஏதாவது இருக்கா?” அஜப் சிங் டிரைவரிடம் கேட்டான்.

“பாஸா? உள்ளே போகவா?”

அஜப் சிங், தாஸ்குப்தாவை சுட்டிக்காட்டி, “தாதாவுக்கு உள்ள போகணுமாம் அண்ணே” என்றான்.

“ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்,” என்றான் டிரைவர்.

எழுந்து வேகமாக வாயிலை நோக்கிச் சென்றான். ஆறடி உயரமும் அதற்கு தகுந்த உடல்வாகும் ஹரியானா ஜாட். வாசலில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரரிடம் அவன் எதையோ சொல்ல அவர்கள் உள்ளே சென்று வரவேற்புக் குழு உறுப்பினரைக் கூட்டி வந்தார்கள். ” எஸ்.பி. க்ரைம் ப்ராஞ்ச், நார்த் டிஸ்ட்ரிக்டைக் கூட்டி வந்திருக்கிறேன். அவருடைய டிரைவர் நான். டி ஒய் எஸ் பி, டி டி சி பி குடும்பத்தினருக்கு பாஸ் வேண்டும்” என்று உரத்த குரலில் அனாயாசமாகக் கூறினான்.

கோட் சூட் அணிந்திருந்த வரவேற்புக் குழு உறுப்பினர், தனது பாக்கெட்டிலிருந்து நான்கு பாஸ்களை எடுத்து டிரைவரிடம் நீட்டினார். டிரைவர் வேகவேகமாக திரும்பி வந்தான்.

“என்ன குளிரய்யா இது” என்று பற்கள் கிட்ட, நான்கு பாஸ்களை நீட்டினான்.

“அட, இதுல நாலு பாஸ் இருக்குதே”

“எடுத்துக்கோங்க. இத வச்சு நான் என்ன ஊறுகாயாப் போட முடியும்?”

“நாலு பாஸை வச்சுக்கிட்டு நான் என்ன செய்யட்டும். எனக்கு ஒண்ணே போதும்” என்று அதிலிருந்து ஒன்றை தாஸ்குப்தா எடுத்துக்கொண்டார்.

ஹரியானா ஜாட் மிகவும் சோர்ந்து போயிருந்தான். எந்த எதிர்வினையும் ஆற்ற விரும்பவில்லை போலத் தெரிந்தது. மீதமிருந்த மூன்று பாஸ்களை எரியும் நெருப்பில் இட்டான். டிரைவரும் அஜப் சிங்கும் நெருப்புக்கெதிரே தங்கள் குளிர்ந்து விரைத்திருந்த கைகளை விரித்துக் கொண்டனர். தாஸ்குப்தா கேட்டை நோக்கி ஓடினார். உள்ளே இருந்து தெளிவாக குரல் கேட்டது.ஜா…கோ…உஸ்தாத் ஆலாபனை செய்து பைரவி ராகத்தை தொடங்க இருந்தார்.ஜா…கோ…மோஹன்…ப்யாரே….ஜா…கோ….மோ….ஹன்…..ப்யா….ரே….

* * *

அஸ்கர் வஜாஹத்

அஸ்கர் வஜாஹத் நவீன சிறுகதை இயக்கத்தின் முக்கிய படைப்பாளி. சிறுகதை நாவல் நாடகம் திரைக்கதை வசனம் போன்ற பல துறைகளில் முத்திரை பதித்தவர்.

இவரது “ஸர்கம் கோலா” சிறுகதை, பீஷ்ம ஸஹானி தொகுத்த ” நவீன இந்திய சிறுகதைகள் ” தொகுப்பிலிருந்து ஹிந்தி மூலம் வாயிலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

Series Navigation<< தபால் பெட்டி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.