விதைக்குள்ளும் இருப்பது

நேற்றைய காலை விடியும் பொழுது தேவாலயத்தின் முன் நான் பயந்து நின்றிருக்க அதன் உச்சியில் கட்டியிருந்த ஒலிப்பெருக்கியில் “மனம் திருந்தி குழந்தைகளாகுங்கள்” என்ற வசனம் ஒலிக்க ஆரம்பித்தது. அசாதாரணமாக அந்த ஒலி வானின் மேகங்களுக்கிடைவழி காற்றில் ஊடுருவி எழும்போது , சூரியனின் கதிர்களை விலக்கியபடி தலைக்குப்பின்னால் ஒளிவட்டம் மின்ன என்னருகில் வந்து நின்று சிரித்த அந்த மெலிந்த நெஞ்சுக்கூட்டுடன் துல்லியமாய் தெரிந்த மீசையில்லாத சிறுவனின் உருவத்தை , இப்பொழுது இருள் பரவிய கட்டிலில் படுத்தபடி பயங்கரமான பேராலமரத்துடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. அவன் தன்னை காட்சன் என அடையாளப்படுத்திக்கொண்டான். கொஞ்சம் ஆழமாக யோசித்துப்பார்த்தால் அந்த பத்து வயதிற்குள்ளிருக்கும் காட்சனுடன் நேற்றிரவு செய்ததை நான் துளியும் விரும்பவில்லை என்பதும் அவன் உந்துதலும் நம்பிக்கையும் அதற்கு தூண்டுதலாக இருந்ததையும் உணரமுடிகிறது. அதிகாலை மூன்று மணிக்கு நிலவற்ற , இருள் கருமேகங்கள் சூழ்ந்து கிடக்கும் இந்த நீண்ட நெடிய வானை ஜன்னல் வழி பார்த்தபடி கட்டிலில் எழுந்து அமர்ந்திருக்கிறேன். தெருவிளக்கின் ஒளி ஜன்னல் கம்பியின் நிழலாக என்னை துண்டு துண்டாக பிரித்திருந்தது.

என் வீடிருந்த ஆட்களற்ற கைவிடப்பட்ட அனாதைத் தெருவில் கடைசியாயிருந்தது ஓர் பாழடைந்து சிதைந்த நான்கு தூண்களுடைய கல் மண்டபம். நேற்றிரவு அதன் பின்புறமிருந்த பாறையிடுக்கில் நாங்கள் இருவரும் செல்வதை அருகிலிருந்த ஆலமரத் தலைகீழ் வௌவால் பார்த்துக்கொண்டிருந்தது. ஆந்தை அலறும் இரவின் முடிவிற்காகக் காத்திருக்காமல் அந்த இடுக்கில் நுழைந்ததும் ஒற்றை அறை போன்ற பெருங்குழியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவன் எங்களை கண்டு மூச்சுவிட முடியாமல் திணறினான். தெரு விளக்கின் மஞ்சள் எங்கிருந்தென அறியமுடியாத இடைவெளி வழியாக அந்த அறைபோன்ற அமைப்பை மங்கல் வெளிச்சமாக்கியது. என் மனம் எரிந்து காந்தியதைத் தணிக்கமுடியாமல் உடல் வியர்த்தது.

காட்சன் “மொலாளி , நான் சொன்னது ஓர்மையிருக்குல்ல. மூச்ச நல்லா இழுத்து வச்சிக்கிடணும். கண்ண மூடக்கூடாது. அவனுக்க மொகம், அந்த ஒரு விசயத்த மட்டுந்தான் மண்டைல வரவைக்கணும். உடம்பு நல்ல கம்பி கணக்கா இருக்கதா நெனச்சிக்கிடுங்க. கையில் கெடக்கும்போ அடிச்சு பிரிச்சிறணும். அதுக்கு மட்டும் பயரவே கூடாது,” என்றான்.

கைகளை இறுக்கி நெஞ்சினுள் மூச்சை அழுத்தி வைத்து உடம்பை அமானுடத் தன்மையுடையதாகக் கற்பனை செய்தேன். ஆனால் அவனை அடிக்க முடியவில்லை. உடல் தளர்ந்து மின்சாரமற்ற இயந்திரமாகியது.

“என்ன மொலாளி செய்யீங்க ? இந்தா அடிச்சுக் காட்டுகேன்” என அந்த நோஞ்சான் சிறுவன் செம்மண் கட்டிகள் காலில் சரசரக்க அவனருகில் சென்று நெஞ்சில் கைகளை மடக்கி குத்தினான். அடிவாங்கியவன் மூச்சை வெளிவிடமுடியாமல் தன் கட்டிவைக்கப்பட்ட கைகளால் உடலைத் தடவிக்கொடுத்து சமாதானப்படுத்த முயன்று, தீப்பட்ட பிளாஸ்டிக் பையென சுருண்டான்.

தரையைப்பார்த்தபடி தலை குனிந்து நின்றேன்.

“அடின்னா இப்புடி இருக்கணும் மொலாளி. நம்ம கையில் ஒலக்கை இருக்குல்ல அப்போ எதுக்கு பயரனும். பசிக்குது, வடசேரி அமுதம் பீப் கடைக்கி போவமா” என்ற சிறுவனின் கண்களை உற்றுப்பார்த்தேன். அதில் முலையிலிருந்து வாயெடுக்காமல் மடியில் சரிந்துகிடக்கும் மதலையின் புன்னகை குதித்தது. நான் தலையசைத்ததும் இருவரும் வெளியேறி சாலைவழியாகச் செல்லாமல் ஓட்டுப்புரைத் தெருவழியாக மேடேறிச்சென்றொம். அலைந்த நாய்கள் அனைத்தும் அவனுக்கு பழகியிருந்தன அல்லது கண்ட நொடியில் பழகி வாலாட்டிக்கொண்டன.

“மண்டைல அடிச்சி கொண்டுவரும்போதே கேக்கணும்னு நெனச்சேன் , யாரு அந்தாளு ? ஒத்த அடிக்கி நிக்க மாட்டாம்போலையே. ஒம்புடிஞ்சாம்பய”

“எங்கம்மா சம்பாதிச்ச பைசாவ இல்லாம ஆக்குன ஆள் அவன். கொளத்து பஸ் ஸ்டாண்டு பின்னால பள்ளத்துக்குள்ள இருக்குத சிட் பண்டுல ஒன்னுக்கு பத்துன்னு தரதா சொல்லி காசு வாங்குனான். பொறவு ஆளு அரவமில்லாம ஓடிட்டான். கேசு போட்ட எங்கப்பாவ சந்தைக்குள்ள குத்திப்போட்டாங்க. இப்போ வருசம் பத்தாச்சி. ஊருல எல்லாரும் மறந்துட்டாங்க. என்னால முடியல. பத்து வருசத்துக்குப் பொறவு தெருவுல ஒய்யாரமா வந்தான் பீத்திண்ணி பன்னி மாரி. பாத்த ஒடனே நல்லாருக்கியான்னு கேக்கான். வந்த வெப்ராளத்துக்கு உடம்பு வெசர்த்து நடுங்க ஆரம்பிச்சுட்டு. கண்ணு முளிச்சு பா க்கும்போ ஒரு பழக்கடைக்கி கீழ் வேட்டி விரிஞ்சி சட்டி தெரிய கெடந்தேன்,” அவன் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து அதிகமாக அவனுக்கு புரியாத விசயம் பேசியதற்காக என்னை நானே நொந்துகொண்டேன்.

“எனக்க அம்மாவும் கையில இருந்த காசெல்லாம் போட்டு அப்பனுக்கு பண்டுவம் பாத்தா. அந்த நாயிக்கி என்ன ரோகமோ ஒரு யழவும் தெரியல்ல. அவன் செத்து ஒண்ணுமில்லாம தெருவுல நிக்கும்போ அந்தா… தெரியிதுல்ல பர்னிச்சர் கட , வாசல்ல என்ன போட்டுட்டு எவன் கூடயோ ஓடிட்டா” அவன் குரல் புன்னகைக்கும் படைக்குருவியின் அலகு விரிப்பென தோன்றியது.

“எப்புடி சொல்லுக ? அவ உன்ன விட்டுட்டு செத்துருக்கலாம்லா?”

“அதுக்கு வழியேயில்ல மொலாளி , அப்பா சீக்குல கெடக்கும்போ ஒருத்தன் வருவான். அவங்கூடத்தான் போயிருக்கனும்”

என் அம்மாவின் மீதான கற்பனைகளை அவன் மேல் திணிக்க விருப்பமில்லாமல் அமைதியாக அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“அவளாவது நல்லா வாழட்டும். என்ன போட்டு சொமக்கல்லன்னு இப்பொ யாரு அழுதா,” என்று அவனும் அமைதியானான்.

கூட்டமில்லாத அமுதம் பீப் கடையின் முன்னிருந்த விறகடுப்பு தட்டையான வட்டஇரும்புக் கல்லை தாங்கி புகைந்தது. கரிபிடித்த உத்திரத்தின் கீழ் கால் நடுங்கும் மேசையில் கண்களில் நீர் வழிய குழம்பின் எரிப்பை வாங்கிக்கொண்டு இலையிலிருந்து கண்ணெடுக்காமல் அவன் ஓர் அசுரனைபோல இலையில் வைத்த அனைத்தையும் உள்ளிழுத்துக்கொண்டான். பல நாட்களாக முழுமையாக நிரம்பாத வயிறு அவனுடையதாக இருக்க வேண்டும்.

கடையிலிருந்து வெளிவந்ததும் புடைத்த அடிவயிற்றை தடவிக்கொடுத்தபடி “பீப் ரோஸ்ட் நல்லா பஞ்சுமாரி கரைஞ்சி தொண்டைல இறங்ச்சி. மொலாளிக்கி சோஸ்திரம்” என பல்லைக்காட்டி சிரித்தான். கைகளை விரித்து பறவையென மேலும் கீழும் ஆட்டி ஆடினான்.

மேல் வரிசை நடுப்பல் விழுந்து இப்பொழுதுதான் வளர ஆரம்பித்திருந்தது.

என் கண்களை தீவிரமாக பார்த்தபடி “அவன் கொன்னுப்போட்டா உங்க ஆத்திரம் அடங்கீருமா?” என்றான்

“தெரியல்ல , ஆனா என்னமாம் செய்யனும்.”

“தலைய அறுக்குறொம். துண்டா துடிக்கிது ரெண்டும்,” என நாக்கை வெளித்தள்ளிக் கண்மூடித் தலையை துடிக்கவிட்டுப் பிணமென காண்பித்தான்.

என்னுடல் நடுங்குவதைக் காட்டிக்கொள்ளாமலிருக்க வேகமாக நடக்க ஆரம்பித்தேன். அணில் பிள்ளையின் வேகத்தில் அவன் கால்கள் நகர்ந்தன. இவனை ஏன் இதற்குள் இணைத்துக்கொண்டேன், என்னால் முடியாத ஒன்றைச் சாதாரணச் செயலாக பாவனை செய்கிறான். என்னால் முடியுமென நம்பவும் வைக்கிறான்.

“போன வாரம் நம்ம முத்து தியேட்டருக்கு பொறத்த இருக்குத வயல்ல ஒரு ஒந்தானப் புடிச்சி கழுத்த அறுத்துப்போட்டென். என்னா நீளம் தெரியுமா அதுக்க வாலு! தல துண்டானதும் சூடா பச்ச கலர்ல ரத்தம் பீச்சிட்டு வரும். வாலு மட்டும் தனியா ஆடும்,” என வாய்பொத்தி சிரித்தான் “அந்த மாரிதான் மொலாளி. நான் அறுக்கேன். நீங்க நின்னு பாருங்க கூத்த”

“அது தப்பில்லையா?”

“அப்புடீன்னா?”

“இல்ல அந்தாளுக்கு வலிக்கும்ல?”

“அது தெரியாமலா கொல்லுதோம். என்ன மொலாளி பச்சப்புள்ள மாதிரி பேசிட்டு. அவன அடிக்கும்போ வலிக்கும், எரியும், கத்துவான், செத்தொழிஞ்சா பரவால்லன்னு இருக்கும். எங்கப்பா என்ன போட்டு அந்தடி அடிச்சுருக்கான். ஒருதடவ தூக்கித் திண்ணைல எறிஞ்சிட்டான். நைட்டு எங்கம்ம அவன்கூட படுத்து உருளத கண்ணால பாத்தேன். என்ன அந்தாளு தூக்கி எறிஞ்ச ஒடன அழுத அழுகையவிட நெறைய சந்தோசம் இருந்த அவளுக்க மொகத்த பாக்கணுமே!” இதைச்சொல்லும் போது அவன் குரல் ஓர் கிழவனுடையதைப்போல் ஒலித்தது.

எனக்கு மூச்சு நின்றுவிட்டதைப்போலிருந்தது. வியர்த்து ஒழுகியதில் முதுகு நனைந்து சட்டை ஒட்டிக்கொண்டது. எதிரில் நிற்கும் உருவத்தின் உள்ளிருக்கும் உயிர் வளர்ந்து பெரிதாகி பயம்காட்டியது.

“பயராதீங்க மொலாளி” என எலிப்பற்கள் தெரிய வாய் திறந்து சிரித்து சாலையில் கிடந்த வண்ணக் காகிதங்கள் ஒட்டியிருந்த அழுக்கடைந்த அட்டையை எடுத்து அதனை ஆச்சரியமாகப் பார்க்க ஆரம்பித்தான்.

“இந்த மாதிரி அட்ட எனக்கு ரொம்ப புடிக்கும் மொலாளி. எனக்க ஹாஸ்டல் கட்டுலுக்குக் கீழ நெறைய சேத்து வச்சிருக்கேன். நாளைக்கி வாங்க காட்டுதேன் எல்லாத்தையும். நாளைக்கும் பீப் உண்டுல்ல மொலாளி” என பொய்யாய் கெஞ்சும் முகத்தை வைத்துக்கொண்டான்.

பாழடைந்த மண்டபத்தை அடையும் போது நிலா எங்கள் தலைக்குப்பின்னால் சாய்ந்து இறங்கியிருந்தது. இருவரும் சத்தமின்றி மண்டபத்தூணில் சாய்ந்து அமர்ந்தபடி தூரமாய் தெரிந்த தேவாலயத்தின் உச்சியை பார்த்துக்கொண்டிருந்தோம்.

“மொலாளி, நீங்க அதக் கேட்டிருக்கீங்களா? மணிக்கூருக்கு ஒருதிருப்பு போடுவானே வசனம்.”

ஒருமுறை நாங்கள் கொல்லப்போகும் உயிரிருக்கும் குழியைத் திரும்பிப் பார்த்துக்கொண்டேன். அது நடக்கப்போவதின் தடயமின்றி அமைதியாகக் காத்திருந்தது. “கேட்டுருக்கேன், எப்பொவும் கேப்பேன். எனக்கு நிம்மதி தரக்கூடிய ஒண்ணெ ஒண்ணு அதுதான். வாழ்க்கைல பிடிப்போட நடக்க இதொண்ணுதான் தொண.”

“நீங்க இன்னும் சின்னப்பிள்ள மொலாளி. எனக்கு இதுல்ல நம்பிக்கையில்ல. எசுக்க ரத்தம் பாவத்த கழுவும், வந்து காலுல விழுங்க எல்லாம் செரியாகும், அந்தாளுக்கு பயப்படுங்க. இதெல்லாம் செரியான காமெடி.”

“நீ அங்கதான வளந்த! உனக்கு நம்பிக்கையில்லையா?”

“எத நம்பி அந்தாளு மேல நம்பிக்க வைக்க? எல்லாத்தையும் செரியாக்கி தாரும்னு காலுல விழுந்து தெவிங்கி தெவிப்க்கி அழுத நாளிருக்கு. இப்பொ கண்ணுல கண்டா அவன் திரும்ப சிலுவைல ஏத்திருவேன் ஆமா..”

“இந்தாளக் கொன்னுட்டா உனக்கு ஒண்ணுமே தோணாதா? பாவம் பண்ணிட்டன்னு” என பிறையிடுக்கைக் கைகட்டினேன்.

“எனக்கென்ன தோணதுக்கு இருக்கு, இவன் சாகவேண்டிவன் அவ்வளவுதான?”

“நான் பொய் சொல்லிருந்தா? இவனுக்கு பொண்டாட்டிய நான் கொண்டுட்டு ஓடதுக்கு இடைஞ்சலுன்னு கொல்ல நெனச்சிருக்கலாம்ல”

“மொலாளி , நீங்க சொன்ன காரணத்துக்கு இவன கொல்ல ஒத்துக்கிட்டேன்னு நீங்க நெனைச்சா , உங்கள மாரி பாவப்பட்ட ஆளு இந்த ஒலகத்துல் இல்ல. காலைல முட்டுக்கண்ணி போட்டு அய்யோ அம்மான்னு சர்ச்சுல நின்னு பொலம்பத பாத்தேன், வந்தேன்”

“ரூவா வேணுமா?”

“அதான் பீப் தின்னாச்சுல்ல. அது காணாதா”

“அந்தாள விட்டுருவோம். நீ கெளம்பி அனாத மடம் ஹாஸ்டலுக்கு போ. காலைல அங்க வாரேன் பேசலாம்.”

“என்னால முடியாது மொலாளி, எனக்கு அவன அடிச்சிக்கொல்லனும். நமக்கு அதான வேணும்?”

“நமக்கில்ல.”

“ஆமா எனக்கு அவனக் கொல்லணும்.”

மீண்டும் அவனொரு கிழவனைப்போல் உருக்கொண்டான். வெண் விழி சிவக்க கருவிழி பழுத்ததைப்போலிருந்தது. எழுந்து அவனை அங்கெயே அப்படியே விட்டுவிட்டுச்செல்ல மனம் உள்ளுக்குள் பிதற்றியும் எழும்பாமல் அமைதியாக தூணில் தலைசாய்த்து விட்டத்து நீள்கற்களினிடையில் முளைத்துத் தொங்கிய ஆல மரப்பிஞ்சொன்றை பார்த்திருந்தேன். அதன் எதிர்காலத்தைய வளர்ந்த கிளைகள், வேர்கள், விழுதுகளுடன் நிற்கும் உருவம் என்னை பயமுறுத்தியது. அந்த வீரியம் அதன் விதைக்குள் என்றுமிருக்குமெனத் தோன்றியது.

“நீங்க வரலைனாலும் நான் போறேன்,” என்று எழுந்து சென்றவனின் பின்னால் குஞ்சுக்கோழியென நடந்தேன்.

நாங்கள் கட்டிவைத்திருந்த அதே நிலையில் அவன் தூங்கியிருந்தான். காட்சன் கைகள் கைக்குள் அடங்கும் பொருளைத் தேடி பரபரத்தது. காலில் தடுக்கிய கல்லொன்றை எடுத்து கிடந்தவனின் கைவிரலில் ஓங்கி அடித்ததில் நடுவிரல் நகம் கழன்று விழுந்தது. மௌன அலறல் கேட்க முடியாமல் நான் வெளியே வந்துவிட்டதை அவன் கவனிக்கவில்லை. வெளிவந்த குருதி வடிந்து மண்ணில் ஊர்வதை பார்த்துக்கொண்டே அதேயிடத்தில் மேலுமொரு அடியடித்ததில் கிடந்தவன் மயங்கி மண்ணில் முகம் புதைய விழுந்தான். ஒரு முறை எட்டிப்பார்த்ததில் காட்சனின் உருவம் வெறிவந்த விலங்கென “இந்தக் கைதான, இந்தக் கைதான என்ன விட்டுட்டு போச்சி,” என அடித்தொண்டையில் உறுமியது.

நான் மீண்டும் மண்டபத்தில் அமைதியாக அந்த ஆலமரச் செடியை பார்க்க ஆரம்பித்தேன். அது காற்றுக்குத் தலையாட்டி உடலசைத்தது. என் எதிரில் வந்தமர்ந்த காட்சன் குருதி வழியும் கைகளை துடைத்தபடி “யம்மா…என்னா ரத்தம் வருகு. நிக்காம பைப்பு தண்ணி கணக்கா ஓடுகு,” எனச் சிரித்தான்.

“ஜீவனிருக்கா இன்னும்?”

“அனக்கம் இருக்கு”

“ஒண்ணும் செய்யாண்டாம்னு நான் சொல்லியும் நீ கேக்கல்ல”

“எனக்கு செய்ய வேண்டிய கட்டாயமிருக்கு. நீங்க இவன கட்டிப்போட வேண்டிய இடத்துல எனக்க அம்மைய கட்டிருக்கணும்,” சொல்லக்கூடாததை, தவிர்க்க நினைப்பதைப் பேசும் பதற்றத்துடன் என்னை பேசுவதற்கு அனுமதிக்காதது போல் தொடர்ந்தான். “உங்களப் பாக்கதுக்கு முன்னாடி அவள இண்ணைக்கி காலைல சர்ச்சுக்குள்ள பாத்தேன். அவளுக்க கலர் கலர் சாரியும் கழுத்துல தொங்குன சங்கிலிக்க சைசும். அங்கருந்து போகது வரைக்கும் சிரிச்சுட்டே இருக்கா. என்ன பாத்துட்டு யாருன்னே தெரியாத பொடிப்பயல பாக்கது கணக்கா நிக்கா. வெறி வந்துட்டு. அவள அங்கவச்சி அடிக்க முடியாது , என்ன அடிச்சுப்போடுவா குண்டச்சி. இறுக்கி கட்டிவச்சி அடிச்சுக்கொல்லனும். எங்கப்பன்ன கொன்னுட்டு என்னையும் விட்டுட்டு போயிட்டு இப்பொ ஜாலியா இருக்கா குண்டச்சி.”

“உங்கம்மா சந்தோசமா இருந்தா உனக்கும் சந்தோசந்தான?”

“மயிரு சந்தோசம்” என்றவன் வார்த்தை மீறியதாக உணர்ந்து என் முகத்தைப் பார்க்க முடியாமல் மண்ணைப்பார்க்க ஆரம்பித்தான்.

இருவரின் தனிமையில் இருள் நெருடும் சத்தத்துடன் வியாபித்திருந்தது. அவனிடத்தில் என்னை நிறுத்தி என் அம்மாவை அப்படிப் பார்க்க முயன்றதும் உடல் உலுக்கி குமட்டியது. கண்களை மூடிக்கொண்டு என் அம்மாவின் உருவத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். அவளதில் ஓர் காய்ந்த பனையோலைக் குவியலென கைவிடப்பட்டு நின்றாள். காட்சன் அதட்டிய குரல் என்னை மீட்டுக்கொண்டுவந்தது.

“ஜீவன் இழுத்துட்டு கெடக்கு வாங்க,” என என் கைகளை அழுத்திப் பிடித்து இழுத்துச்சென்றான். குருதியில் தோய்ந்து கிடந்தவனின் உடல் இடப்பக்கமாக இழுத்துக்கொண்டிருந்தது. அவன் வலுக்கட்டாயமாக கையில் திணித்த பனந்தடி கனமாக என்னால் தூக்க முடியாததாய் இருந்தது. கிடந்தவனின் நெற்றியைக் காட்டி ஓங்கி அடிக்குமாறு கைதூக்கி சைகை காட்டி தள்ளி நின்றான். மூடிய கண்களுக்குள் அம்மாவின் உருவம் மீண்டும் அதே கைவிடப்பட்ட நிலையில் ஆழத்து நீரில் மேல் அசைவுகள் தெளிய அலையென தெரிந்ததும் என் கைகள் உயர்ந்ததை உணர்ந்தேன்.

நாங்கள் வெளிவரும் போது நான் அழுததைப் பொருட்படுத்தாமல் அவன் பேசிக்கொண்டிருந்தான். “செரியான அடி மொலாளி, நான் அடிச்சிருந்தாலும் இந்த மாரி கணிசமா விழுந்திருக்காது. தடி மண்டைல பட்டதும் மூச்சு நின்னுட்டு பாத்தீங்களா,” என நான் அடித்தது போல செய்து காட்டிச் சிரித்தான்.

“எப்புடி இந்த கொகையப் புடிச்சீங்க! உள்ள இருக்கும்போ அம்மைக்கி வயித்துக்குள்ள இருக்குத மாரியிருக்கு. செரி காலைல பாப்போம்” என்றவன் எதிர்த் திசையில் நடக்கும் போது அவனுடல் முழுமையான திருப்தியில் அசைவதாய் எனக்குத் தோன்றியது. அறைக்குள் கட்டிலில் படுத்து சுழலும் மின் விசிறியை பார்த்ததும் விதைக்குள் உயிர்ப்புடனிருக்கும் பயங்கரமான ஆலமரத்தின் உருவம் எண்ணங்களை ஆக்கிரமித்து விரிவதை என்னால் நிறுத்த முடியவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.