வாழ்வெனும் களிநடனம்: அமெரிக்கக் கவிஞர்கள்

ஒருவரையும் நான் தொடாத வருடம்

இலை நரம்பாழத்தில் நீரின் செயலோ

அதன் தோலுள் திசுக்களில் ஒளியின் செயலோ போல்,

தனியாய் நீள்சதுரக் குளியல் தொட்டியின்

உட்புறத்தைப் புதிதாய் மணந்த என்,

கால் பெருவிரல், திறக்கும் குழாயை.

நாங்கள் யாரையும் தொட்டிராத

வருடமது, ஆனால் ஒவ்வோர் இரவும்

ஒருவரையொருவர் தொட்டோம்,

பருவம் பருவமாய் கடந்து, பிறகு

இன்னொரு வசந்தத்திலும்.

பெத் பாக்மான்

Beth Bachmann is the author of three books, all published by the University of Pittsburgh Press: Temper (2009), Do Not Rise (2015), and CEASE (2018). A recipient of a Guggenheim fellowship in Poetry and VQR’s Emily Clark Balch Prize for Poetry, she lives in Nashville and New York City.


காடுகளுக்கு இரங்கற்பா, மேலும் கரவின்மை

(ஜெரிகோ ப்ரௌனின் சுவட்டில்)

யூகலிப்டஸ். செகோயா. பைன்.

எவை இந்நகரை நாற்புறமும் சூழ்ந்தவையோ,

இலைகளில், மடிந்த பத்திரங்களில் சத்தமற்ற காலடி. 

பாய்ஸன் ஓக். மில்க்வீட். ஆலிஸ்ஸம். காட்டுத் தீக்களின்

வாடைகள், புகையில் உயர்ந்து நெளியும் இலைகள்.

அன்னியத் தாவரங்களையும், கட்டுப்படுத்திய

எரிப்பையும் பேசுகிறார்கள் வனக்காவலர்,

எதிர்ப்புச் சுவரொட்டிகள் உயர்த்துகிறார்கள்

உள்ளூரார். ஃபாக்ஸ்டெயில்கள். கோல்டன்ராட். ஸேஜ்.

பதிவானதிலேயே உச்சச் சூடு இந்தக் கோடைதானென

செய்திகள் வலியுறுத்தும், ஜ்வாலைகள் அடங்காதென்னும்,

வறட்சி நீளுமென்னும். நாங்கள் தூவாலைக் குளியலைச்

சுருக்க முடிக்கிறோம், புற்றரையை மரத்துண்டுகளாய்,

கான்க்ரீட்டாய் மாற்றுகிறோம். பாஸ்தா சமைத்த நீரை

மூலிகைச் செடிகளுக்கு ஊற்றுகிறாள் என் அம்மா.

புகைவாசனை போலொரு பெண்ணை

நீந்தும் ஆழ்சுனையில் நான் சந்திக்கிறேன்.

கடுகு விதை. சோளப் பூ. காரப்பூண்டு. அந்தக் கூளத்தில்

ஒரு குழந்தை பெயரிடப்படுவதை நாங்கள்

பார்க்கிறோம், வெள்ளையாடை அணிந்த அவன்

குடும்பத்தினர், கடலோரம் பெருகி வளர்கிறது

நீலப்பச்சைப் பாசி. உள்ளூர்ப்

பூங்காவில் காற்றில் உலர்கிறோம் நாங்கள்,

வெற்று முதுகுகளில்  முள் போலிருக்கும் ரை தானியப் புல்.

ஒருவர் மற்றவரின் வாய்க்குள் நீரைத் தேடுகிறோம்,

தோல்மீது நெருப்பு உயர்ந்தெழுகையில்.

பார்லி. திஸில். பாவம்.

டெஸ்பி பௌட்ரிஸ்

(மொ.பெயர்ப்பாளர் குறிப்பு: ரை, பார்லி, திஸில் ஆகிய தாவரங்களில் முள் உண்டு)

Despy Boutris’s writing has appeared in Copper NickelColorado ReviewThe American Poetry ReviewThe Gettysburg ReviewThe JournalPrairie Schooner, and elsewhere. She teaches at the University of Houston and is editor-in-chief of The West Review


இறந்த லூபெனுடன் சுய சந்தேகம்

கோடைக்குப் பின், என் பூம்பாத்திகளில்

சிறுமைப்பட்ட பிணங்களை ஒழிக்கிறேன்: கரடான வின்கா, உலர்ந்த

சாமந்தி, உக்கிப்போய் வண்ணமிழந்த லூபென், அது

செடிப்பேன்கள் இனிப்புச் சாரத்தை உறிஞ்சிட 

வற்றிப் போனது, எனக்குக் காலங்கடந்து கிட்டிய தகவலது. 

குழவியாக என் முலை மறுத்த மகன், இன்னும் அனேக

உணவை மறுக்கிறான். குச்சியாய் இருக்கிறான், மிட்டாய் நிறப்

பூக்குவியல்களைக் கண்டு பூனை போலக் கரையுமிந்த மென்வயிறுப்

பூச்சிகள் போலச் சிறிதுமில்லை அவன். எனக்குத் தெரியும், முதல் முறை 

அவனை விட்டகன்று ஓட்டிப் போனபோதே எங்கள் 

பிணைப்பு அறுமென, என் நாளங்கள் உலருமென – 

அந்த நிச்சயம் மட்டுப்படுத்தவில்லை, பால் மறந்த பின்னும் 

என் முலைகள் வாரம் முழுதும் அழுதன. 

முன்பு என் சட்டைக்குள் துழாவிய பையன்களிடம் சொல்வேன், 

அங்கே ஏதும் அதிகமில்லை, ஏமாற்றத்தை நாங்கள்

பகிர்ந்து கொள்ள வேண்டுமென நம்பி.

லூபென் செடியை நெறிக்கிறேன், வேரோடு பிய்க்கிறேன்,

நெடுஞ்சாலையருகே பச்சைமாறாச் செடிகள், ஃபெரணிகள் நடுவே

கட்டற்று வளர்ந்த அது எனக்கு ஆச்சரியம் 

தந்த ஜூன் மாதம் நினைவு வருகிறது. அங்கே அதன் 

ஊதா நிறத் தருக்கை, பல்கும் அதன் திறனைக் கண்டேன். 

அது உயிருடன் இருந்திருக்க வேண்டும்.

                                          -டானியெல் காதெனா ட்யூலென்

DANIELLE CADENA DEULEN is currently a Jay C. and Ruth Halls Poetry Fellow through the Wisconsin Institute for Creative Writing at the University of Wisconsin, Madison.  She is a graduate of George Mason University’s MFA program in Poetry, the recipient of two Dorothy Sargent Rosenberg Poetry prizes, and a former fellow at the Virginia Center for Creative Arts.  Her work has appeared in journals such as Cimarron Review, The Cream City Review, The Louisville Review, West Branch, Sou’wester, and others


ஹாம்போவின் ஒரு வரியுடன் பொருளின் நிரந்தரம் 

(அல்லது)

பொருளின் நிரந்தரமும் ஹாம்போவின் ஒரு வரியும்

நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்  என்னைத் தேர்ந்தெடுக்கத் தவறிய வாழ்வுகளைப் பற்றி.

இரவின் பிரம்மாண்ட நடனசபை, அதன் திக்கிச் சுடரும் சரவிளக்குகள்.

குளிர்பதனப் பெட்டிக் காந்தச் சில்லுகளின் கீழ் பழம்படிவமாயின

காலமான விலைச் சலுகைச் சீட்டுகளின் பகற்கனவுகள், விதியின் சுற்றறிக்கைப்

பக்கங்களில் கத்தரித்தவை.

                                             அப்படி நடந்திருந்தால் என்பதில் நாம் வாழ்ந்திருக்க முடியாது

ஆனால் அங்கே விடுமுறைக்குப் போகலாம், மாட்டோமா?

என் ஏணையின் ஒரு முனையை முடிவிலியில் உள்ள

முடிவில் பிணைத்தேன், மற்றதை இச்சையின் மணிக்கட்டில் இழைத்தேன்

அவை இரண்டும் தம் மஞ்சத்தில் சயனித்திருக்கையில்.

                                                                                                                        அந்தக் காதல்

ஒரு காலப் பங்கீடு. அந்தத் தேர்வு ஓர் ஊகச் சோதனை.

ஒரு மரத் துண்டு தான் வயலின் எனக் கண்டு பிடித்தால்?

என் இதயத்துடிப்போலி அதன் எதிரொலியால் கண்டு

உன்னை அழைத்தால்?

                                குகைச் சுவராவதா அல்லது ஆப்பெழுத்தாயிருப்பதா

எது சுலபமென யோசிக்கிறேன். மழையாக இருப்பதா

இல்லை தொப்பலாய் நனைவதற்கான சொல்லாய் இருப்பதா.

                 என்னைத் தேர்ந்தெடுக்கத் தவறிய வாழ்க்கை ஒரு வானமாய்

வேறொரு கால வலயத்தை அலங்கரிக்கிறது.   

                                                                                          ஒளியெச்சத்தைத்தான்

நான் காண்கிறேன் என் கண்களை மூடுகையில்.

லாரா எக்கர்

Lara Egger is an Australian native who now lives in Boston, MA. Her debut collection of poems, How to Love Everyone and Almost Get Away with It, won the Juniper Prize for Poetry (University of Massachusetts Press, 2021). Egger is a recipient of a Massachusetts Cultural Council fellowship, winner of the Arts & Letters Rumi Prize for Poetry and a two-time Pushcart nominee. Her poems have appeared, or will soon appear, in Verse Daily, West Branch, Ninth Letter, New Ohio Review, Washington Square Review and elsewhere. She received her BA from Emerson College and her MFA from the Warren Wilson Program for Writers. Egger is the co-owner of Estragon Tapas Bar.

***

தமிழாக்கம்: மைத்ரேயன் / ஜனவரி- ஃபிப்ரவரி 2022

மொழி பெயர்ப்பாளர் குறிப்பு: அமெரிக்கக் கிழக்குக் கடற்கரையின் நகரங்களில் ஒன்றான பாஸ்டனில், நிறையவே பல்கலை வளாகங்கள் உள்ளன. பெரும் பல்கலைகளோடு, சிறு கல்லூரிகளும் உண்டு. எமெர்ஸன் கல்லூரி அப்படி ஒரு சிறு கல்லூரி. எமெர்ஸன் கல்லூரியின் அசாதாரணச் செயல்பாடுகளில் ஒன்று காலாண்டு இதழாக அது வெளியிடும் ப்ளாவ்ஷேர்ஸ் (Ploughshares) என்கிற இலக்கிய இதழ். எளிய பெயராகத் தெரியும் இந்தச் சொல்லுக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட இலக்கிய மூலாதாரம் உண்டு. (ஒரு விளக்கத்தை இங்கே காணலாம்: https://idioms.thefreedictionary.com/ploughshares) சுமார் 47 வருடங்களாக வெளிவரும் இந்த இலக்கியப் பத்திரிகை எண்ணற்ற எழுத்தாளர்களை முன்னிலைக்குக் கொணர்ந்திருக்கிறது.

இதன் 47 ஆம் ஆண்டான 2021 ஆம் வருடத்தில், கடைசிக் காலாண்டுக்கான இதழாக, பனிக்காலத்துப் பிரசுரமாக வந்த இதழில் கிட்டிய சில கவிதைகள் மேலே கொடுக்கப்பட்டவை. நிறைய இதழ்களுக்கு, புகழ்பெற்ற எழுத்தாளர்கள்/ பதிப்பாசிரியர்கள், அழைப்பின் பேரில் வந்து பதிப்பாசிரியராக இருந்து இதழை வழி நடத்திக் கொடுக்கும் வழக்கமும் உண்டு. இந்த இதழுக்குத் தற்போதைய பதிப்பாசிரியராக இருப்பவர் லாடெட் ராண்டால்ஃப். இவரும் ஜான் ஸ்கொயில்ஸ் என்பவருமாக இணைந்து பதித்த இதழ் 2021 ஆம் வருடத்தின் பனிக்கால இதழ். 36 கவிஞர்களின் படைப்புகளை வெளியிட்டிருக்கிற இதழ் இது. ஜான் ஸ்கொயில்ஸ் ஒரு கவிஞர், பேராசிரியர். (https://johnskoyles.org/ ) லாடெட் ராண்டால்ஃப் கதைகளும் நாவல்களும் எழுதியவர். (https://www.ladetterandolph.com/about )

One Reply to “வாழ்வெனும் களிநடனம்: அமெரிக்கக் கவிஞர்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.