"கொல்லப்படுபவனின் வலியை விட கொல்பவனின் வலி பெரிது" - - ஒரு புலி ஸ்னைப்பர்

1.ஒப்பறேசன் கதிர்காமர், கொழும்பு
அதுவொரு காட்டு ஊர். நகரத்திலிருந்து முப்பது கிலோமீற்றர் தூரத்திலிருந்தாலும் ஒரு புகையிரத நிலையமிருந்தாலும் சிற்றாறுகள் ஓடுகிற மலை ஊர்களின் நடுவிலிருந்த பள்ளமான ஊரில் சனங்கள் குறைவு. ஒரேயொரு மட்டரகமான மதுக்கள் கிடைக்கும் மதுச்சாலை. சிறு கடைகண்ணிகள் உள்ள ஒரு தெரு. ஒரேயொரு ஆரம்ப பாடசாலை. ஒரு கத்தோலிக்க தேவாலயம். இவைகள்தாம்.
காட்டு ஊரில் பைத்தியக்கார ஓவியன் டேவிட் ஒரு கபே திறந்தபோது அவனது நண்பர்களும் உறவினர்களும் அவனை எள்ளி நகையாடினார்கள். Google நிறுவனத்துக்கு ஓவியம் வரைந்து சர்வதேசப் புகழ்பெற்ற டேவிட் ஓவியன் மட்டுமல்ல. அவனுக்கு ஓவியத்தை விட கோப்பி உருவாக்கத்தைப்பற்றியும் நன்கு தெரியும். 35 வயதில் ஒரு வாகன விபத்தில் மூளை அடிபட்டதால் நினைவுகளை இழந்து வாழ்வை மறுபடியும் கற்றுத்தேறியவன். தன்னுடைய சப்பாத்தை எப்படிக் கட்டுவது எனபதையே பழையபடி படித்து வரவேண்டியிருந்தது என்று சொல்லியிருந்தான். விபத்துக்குப்பிறகு ஓவியனை எல்லோரும் கைவிட்டபிறகு அவன் நகரத்தில் ஒரு கோப்பிக்கடையில் வேலைக்கு சேர்ந்து தன் நினைவுகளை மீட்டு பழைய வாழ்வையும் மீட்டான். கோப்பி கலவை செய்யும் கலையையும் தொழில் நுட்பத்தையும் கற்றுத்தேறியவன் தன்னுடைய 60 வயதில் திறந்த Cafe அது.
நானொரு முன்னாள் மட்டக்களப்பு புலி உறுப்பினன். குறிபார்த்துச் சுடுதலில் சிறப்பான என்னை 2003ம் ஆண்டு பொட்டம்மான் தனக்கு ஒரு சிறப்பான ஸ்னைப்பர் தேவை என்று மட்டக்களப்பிலிருந்து வன்னிக்கு அழைத்தார். 1999ல் 15 வயதில் நான் இயக்கத்துக்குப் போனேன். 7ம் ஆண்டிலிருந்து நான் காதலித்த என் வயது யாழ்ப்பாணப் பெட்டை வானதியிடம் 9ம் வகுப்பில் என் காதலைச் சொன்னேன். அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு நாளும் ரியூசனில் கதைப்போம். இரட்டைப் பிறப்புக்கள் போல பல தடவைகள் எங்களது பரீட்சை பெறுபேறுகள் ஒரே எண்ணிக்கையிலிருந்திருக்கின்றன. நாங்கள் இருவரும் சிவப்பு பச்சை நிறங்களை அறியமுடியாத நிறக்குருடுகள். உண்மையாக அவள் மறுக்கும்வரை என் சாதி என்னவென்று எனக்குத் தெரியாது. இன்றும் தெரியாது. அம்மாவின் குடி மட்டுமே தெரியும். வானதி என்னை மறுத்த காரணம் இன்றுவரை எனக்குத்தெரியாது. நான் கறுப்பு என்பதே காரணம் என அப்போது நினைத்தேன். அசல் மட்டக்களப்பான் எல்லோரும் கறுப்பாயிருந்தார்கள். கருணா அம்மான், அம்மானின் அண்ணன் றெஜி, கௌசல்யன, ரமணன், ரமேஷ். சாதியோ பிரதேசமோ தான் காரணமாக இருக்கும் என்று இப்போ நம்புகிறேன். எங்கள் வகுப்பில் முதல் தர மாணவனாக இருந்த நான் காதல் முறிவில் இயக்கத்துக்கு போனது மட்டக்களப்பு நகரில் இன்றும் பிரபல்யமான செய்தி.
உலகத்து பல ராணுவங்கள் இன்று நிறக்குருடுகளை சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் புலிகளில் நிறக்குருடுகளுக்கு சிறப்பான கவனம் உண்டு. முதலில் அவர்களின் இராக்கால குறிபார்த்துச்சுடும் திறமை சோதிக்கப்படும். அதில் தேறாவிட்டால் உளவுத்துறைக்கு அனுப்பப்படுவார்கள். கருணா அம்மான் ஒரு தடவை என்னிடம் இதனை புள்ளி விபரங்களுடன் ஒப்புவித்தார். கிழக்கு மாகாணப் போராளிகளில் சிறப்பான ஸ்னைப்பரும் சிறப்பான உளவாளியும் நிறக்குருடாகவே இருந்திருக்கிறார்கள். இரவின் நிழல்களை பார்க்கத்தெரிந்த ஸ்னைப்பரும் இரவின் நிழல்களில் மறைந்து உளவுசெய்யத்தெரிந்தவனும் நிறக்குருடுகளே என்றார்.
நான் ஆயுதப்பயிற்சி எடுத்த நாளிலிருந்தே என் குறிபார்த்துச் சுடுதல் இயக்கத்தில் பிரபல்யமாகிவிட்டது. எந்தக் குறியையும் நான் தவறவிடடதில்லை. கருணா அம்மான் என்னை சமர்க்களத்துக்கு அனுப்பவில்லை. சின்னப்பொடியனாக இருந்தாலும் ஸ்னைப்பர் படைகளை பயிற்றுவிக்கும் மாஸ்ரர் ஆக்கினார்.
வன்னியில் பொட்டம்மான் என் திறமைகளை சோதித்தார். பொட்டம்மான் ஒரு சராசரி ஸ்னைப்பர். அவர் ஒரு தடவை என்னை தலைவரிடம் கூட்டிச்சென்றார். பதுங்குகுழியொன்றில் நான் தலைவர், அம்மான் மூவரும் இரவில் தேய்பிறை மங்கியதுபோன்ற லைற் செற்றிங்கில் குறிபார்த்துச் சுடும் விளையாட்டு ஆடினோம். நான் ஒரு குறியையும் தவறவிடவிலலை. தலைவர் ஒரேயொரு தடவை சுட்டார். குறி தப்பியது. பிறகு அவர் கலந்து கொள்ளவில்லை. நானும் பொட்டம்மானும் ஆடினோம். எனது குறி வெற்றி வீதம் 100. பொட்டம்மானினது 43.
2005ம் ஆண்டு கொழும்பில் ஸ்ரீலங்காவின் மிகப்பிரயல்மான வெளிவிகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை இரவில் குறிபார்த்துச் சுடடுக்கொன்றது மட்டுமே எனது ஒரேயொரு மனிதக்கொலை. நான் எண்ணுக்கணக்கில்லாத தொங்குமான், மான், மரை, முயல், பன்றி, பறவைகள், உடும்பு புறா, இன்னபிறவற்றை கொன்றிருக்கிறேன். எனது முதற் கொலை என்னுடைய ஒன்பது வயதில் எங்கள் மாந்தோட்டத்தில் வந்த தொங்குமானை அப்பாவின் கட்டுத்துவக்கால் தேய்பிறைக்கால இரவொன்றில் சுட்டுக் கொன்றது. அதற்கு முதல்நாள் பகலில்தான் எங்களது கிழட்டு பெட்டைநாய் ஜிம்மி நிலத்தில் ஓடிய ஒரு தாட்டாங்குரங்கை கொன்றிருந்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு அப்பா மூன்று நாட்கள் என்னுடன் பேசவில்லை. முதல் தடவையாக அன்றிரவு அம்மா எனக்கு அப்பா சாப்பிடுவதற்கு முதல் தனியாக இலை போட்டார். அம்மா நான் குரங்கு சுடுவதை பார்த்துக் கொண்டிருந்தார். குரங்கு நிலத்தில் வந்து விழுந்தபோது ஓடிவந்து பதட்டத்தோடும் பயத்தோடும் கட்டியணைத்து விட்டு அடுப்படிக்குள் ஓடிவிட்டார். அப்பா வெடிச்சத்தம் கேட்டு வந்தவர் என்மீதான காதலையும் கோபத்தையும் ஜிம்மி மீதே காட்டினார். ஜிம்மி அன்று மிகப்பரவசத்தில் நடனமாடியது. எனது களிசானை வாயால் இழுத்துவிட்டு அப்பாவின் சால்வையை பாய்ந்து கவ்வி என்னிடம் கொண்டுவந்தது. நான் அதனை எடுக்கமுதல் அடுப்படிக்குள் அப்பாவின் சால்வையை அம்மாவிடம் கொண்டு சேர்த்துவிட்டு வெளியில் வந்து செத்த குரங்கை வட்டமிட்டு குரைத்து நடனமாடியது. அப்பா ஜிம்மியை பறை வேசை என்று திட்டிக் கொண்டு தனது அறைக்குள் போனார்.
கதிர்காமரை முடிக்கும் ஒப்ரேசனில் நான் வெறும் ஸ்னைப்பர் மட்டுமே. வன்னியில் பொட்டம்மான் கதிர்காமரின் பல புகைப்படங்களை வீடியோக்களை காட்டினார். அவரது இளவயதுப் படங்கள். இப்போதைய படம். அவரது இப்போதைய உடல் உயரம், பருமன், நிறம், நடக்கும் வேகம், ஓடும் வேகம். நீந்தும் வேகம், தலை சாந்திருக்கும் கோணம் இப்படி இன்னபிற துல்லிய தகவல்கள் தந்தார். கதிர்காமர் உண்மையில் திருமணமாகாத என்னுடைய பெரியப்பா போலவே இருந்தார். அப்பாவைப்போல கறுப்பு. அப்பாவின் இரட்டை சகோதரன் போல.
ஒப்பரேசன் கதிர்காமர் நிகழ்ச்சிக்கு முதல் வாரமே நான் கொழும்புக்கு வந்தேன். எனது புலி உதவியாளன் ஜெகன் எல்லா ஏற்பாடுகளையும் கன கச்சிதமாக செய்திருந்தான்.
“கதிர்காமர் புதிதாக வாங்கிய வீட்டில் உள்ள நீச்சல் தடாகத்தில் அவர் நீந்தும்போது கொல்லவேண்டும். இரவில் விழக்கூடிய கொலை என்பதால் தான் நிறக்குருடான உன்னைத் தெரிவுசெய்தேன். இப்போது முழு உளவுத்தகவலும் வந்து சேராதபடியால் எந்த ஸ்னைப்பர் துப்பாக்கியை பாவிப்பது என்பது முடிவாகவில்லை. நீயறியாத பாவிக்காத துப்பாக்கியாகக் கூட இருக்கலாம். உன்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”
2005 ஆகஸ்ட் 5 அமாவாசை பின்னேரம் கிளிநொச்சியில் என்னை வழியனுப்பும்போது பொட்டம்மான் சொன்ன வரிகள்👆
அப்போது நோர்வே பேச்சுவார்த்தை சமாதான காலம். நான் வவுனியா நிலப்பாதையூடாக வருவது கண்காணிக்கப்படுவதையும் பொட்டம்மான் விரும்பவில்லை. காட்டுவழியால் புத்தளத்துக்கு போய் அங்கிருந்து மீன்பிடிப்படகில் நீர்கொழும்பு போனேன். நீர்கொழும்பு கடற்கரையில் ஜெகனை சந்திக்கும்போது இரவு பதினொரு மணியிருக்கும். ஒரு வெள்ளைவானில் அப்போதே கிளம்பினோம். ஜெகன் சரளமான சிங்களத்தில் வான் சாரதியோடு உரையாடிக்கொண்டிருந்தான். ஜெகன் என்னைத்தட்டி நான் விழித்தபோது கொக்கட்டிச்சோலை இரவு திருவிழா போல இருந்தது. நாங்கள் இறங்கினோம் ஜெகனிடம் இரண்டு பெரிய கிரிக்கெட் துடுப்பு மட்டை காவும் பைகள் இருந்தன. ஒன்றை என்னிடம் தந்தான்.
காட்டு வன்னியை விட மிக இதமான தென்றல் வீசிக்கொண்டிருந்த அதுதான் கொழும்பு என்றுணர எனக்கு நேரம் செல்லவில்லை. அப்போது நள்ளிரவு இருக்கும். பெரு நகரொன்றின் இரவு வாகன இரைச்சலும் புகைமணமும் மஞ்சள் மற்றும் மண்ணிற வீதித்தடுப்பு விளக்குகளில் வாகனங்கள் நிற்பதையும் காண எனக்கு பரபரப்பாயிருந்தது.
ஓரு பாலத்தில் சிற்றாறு ஓடும் ஓசை கேட்டது. அப்போது ஆங்கிலத்தில் சவோய் என்றெழுதப்பட்ட பல மின் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. வாயிலிலிருநத இரண்டு செக்கியூரிட்டிகள் ஜெகனிடம் ஓடிவந்தார்கள். ஜெகன் எங்களின் பைகளை அவர்கள் காவ அனுமதிக்கவில்லை.
நாங்கள் உள்ளே போனோம். இரண்டு சிங்கள சிப்பந்திகள் ” பாஸ்” என்று ஓடிவந்தார்கள். அப்போதும் எங்கள் பைகளை அவர்கள் காவ ஜெகன் அனுமதிக்கவில்லை.
சிங்களதேசமே உள்ளே ஒக்கம இருந்து கள்ளுக்குடித்துக்கொண்டிருந்தமாதிரி இருந்தது. ஓராயிரம் குடிகாரர்கள் அப்போதிருந்திருப்பார்கள்.
எங்களுக்கு ஆறு ஓடுவது தெரிய மூங்கில் இலைகளை சரசரக்கும் கண்ணாடி அருகில் ஒரு மேசை போட்டார்கள். ஜெகன் சிங்களத்தில்
” நண்பர்களே என்னை மன்னிக்கவேண்டும். இது என் மனைவியின் தம்பிக்காரன் லக்கி( ஒப்பரேசன் கதிர்காமருக்காக பொட்டம்மான் எனக்கு தெரிந்த சங்கேதப் பெயர்) இவன் குடிப்பதில்லை. எங்களுக்கு ஒரு டெவில் மாட்டு இறைச்சியும் ஒரு றால் கொத்துரொட்டியும் சாப்பிடத்தாருங்கள். இரண்டு கோழிக்க்கொத்துரொட்டிகளும் இரண்டு இரண்டு மாட்டுக்கொத்து ரொட்டிகளும் பாசல் கட்டித்தாருங்கள். எனக்கு நானருந்தும் காப்போத்தல் சாரயமும் தாருங்கள் போதும். நான் நாளை தனியே வருவேன்”
என்றான்.
ஜெகனின் சாரயப்போத்தல் வந்த கணமே அவன் ரகசியக்குரலில் சொன்னான்.
” லக்கி அரைமணித்தியாலத்தில் இவ்விடத்தை நாம் காலி பண்ணவேண்டும். சாராயக்கடைகளுக்கு வரும் வாகனங்களும் சாராயக்கடைகளிலிருந்து வெளியேறும் வாகனங்களும் ஸ்ரீலங்கா ஒற்றர்களின் றாடரில் விழாது. அதான் இந்த நாடகம்..
கடற்பயணக் களையில் 5 நிமிடத்தில் றால் கொத்துரொட்டியைக் காலிபண்ணினேன். ஜெகன் டெவில் மாட்டுறச்சியை பாதி சாராயத்தோடு காலி பண்ணினான். கொத்துரொட்டிப் பாசல் வந்ததும் பாதியருந்தாதிருந்த சாராயப் போத்தலை மூடி கொத்துரொட்டிகளோடு தன் பையில் வைத்தான். ஆயிரம் ரூபாய் ரிப்ஸ் வைத்தான். வெளியே வரும்போது நமக்கு ஓட்டோ பிடித்துவந்த இரண்டு செக்கியூரிட்டிகளின் பொக்கற்றுக்களில் இரண்டு ஐநூறு ரூபாய்த்தாள்களை செருகினான்.
இன்னொரு பணக்கார தமிழனின் வீடுதான் நான் கதிர்காமரை குறிபார்த்து கொல்லவேண்டிய “சென்றி” ஆக இருந்தது. கிழவனும் கிழவியும் கீழ்வீட்டில் வசித்தார்கள். அவர்கள் மேல் வீட்டைப்பாவிப்பதில்லை. அடுத்த ஆறு நிமிடத்தில் சந்தியொன்றில் இறங்கினோம். ஓட்டோ போய் மறைந்தபின் ஜெகன் சைகைகளால் என்னோடு பேசியபடி போக அந்த அமாவாசை இரவில் ரோட்டைக்கடந்து அடிமேல் அடிவைத்து ஒரு ஒழுங்கைக்குள் போனோம். ஒரு மதிலைக்காட்டிவிட்டு பூனையைப்போல ஓசை வராது பாய்ந்து குதித்தான். நானும் உள்ளே குதித்தேன். சில நிமிடம் சத்தம் ஏதும் வருகிறதா என்று ஜெகன் அவதானித்தான். பிறகு மேல்மாடி ஜன்னல் ஒன்றைக்காட்டிவிட்டு தனது பையையும் என்னிடம் தந்துவிட்டு அங்கிருந்த ஒரு பெருமரத்தில் ஏறினான். இரண்டு தடவை கிளையில் ஆடிவிட்டு குரங்கைப்போல தாவி சுவரில் மேலே போகும் தண்ணீர்க்குளாயில் பற்றி விறுவிறுவென்று ஒரு Spiderman போல ஏறி யன்னலைப்பிடித்து உள்ளே போனான். மேலிந்து ஒரு தடித்த நைலோன் கயிற்றை இறக்கினான். நான் இரண்டு பைகளையும் தோளில் போட்டுக்கொண்டு கயிற்றில் தொங்கி மேலே ஏறினேன்.
பெரிய அறை அளவிலிருந்த ஒரு குளியலறை அது. மலங்கழிக்கும் கொமோட், ஷவர், குளியல் தொட்டி, அலுமாரி, எல்லாமிருந்தது.
ஜெகன் விதிகளை எனக்குச்சொன்னான்.
1. ஒரு சொட்டு தண்ணீர் கூட கழுவவோ குடிக்கவோ இக்குழாய்களிலிருந்து பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் கீழே சத்தம் கேட்கும்.
2. குடிக்கமட்டும் போத்தல் தண்ணீர் நான் அலுமாரியில் வைத்திருக்கிறேன் என்று அலுமாரியை திறந்தான். அதில் 2 டசின் போத்தல் தண்ணீர், சொக்கலேட்டுகள், பிஸ்கெட்டுகள், குழந்தைகளின் மலந்துடைக்கும் ஈர நப்பிகள், சூயிங் கம், பொலித்தீன் பைகள் முதலியன இருந்தன.
3. மூத்திரம் பெய்து கட்டிவைக்க பொலித்தீன் பைகள் இவை. கக்கூசிருந்து கட்டிவைக்க மற்றப்பைகள்.
4. எந்த மின்சார விளக்குகளையும் பயன்படுத்தக்கூடாது. எநத மின்சார சுவிச்சையும் தொடக்கூடாது.
” இப்போ இரவில் ஆயுதத்தை உனக்கு காட்டமுடியாது . விடிந்தபின். இப்ப தரையில் படுப்போம்” என்றவாறு தூங்கிவிட்டான்.
விடிந்தும் விடியாது இருக்கிற பொழுதில் ஜெகன் என்னை எழுப்பினான். யன்னலைக்காட்டினான். அங்கிருந்து பார்க்க நீச்சல் தடாகத்தின் ஒரு மிகச்சிறிய கரைதான் தெரிந்தது. தெரிந்தது என்னவென்றால் சில மரக்கிளைகளின் மறைவுக்குப்பின்னாலிருந்த இரண்டு தூண்கள். நீச்சல் தடாகக் கரையில் பதித்த பளிங்குக்கற்கள்.
” அவன் நீந்தும்போது உன்னால் சுட வியூ இல்லை. எங்களுக்கு லக்கிருந்தால் எங்களுக்கு வியூ கிடைக்கும் பகுதிக்கு அவன் தப்பித்தவறி வரும்போது வெடிவைப்பதே”
என்ற ஜெகன் தனது கிரிக்கெட் பையைத்திறந்து கொல்லாயுதத்தின் பகுதிகளை எனக்கு தந்தான். எப்படி பூட்டுவது என்ற விளக்க நூலில்லை. சில நிமிடங்களில் அதனை நான் Assemble பண்ணிவிட்டேன். பிறகு பைனாகுலர், Tripod, சைலென்சர் முதலிய உதிரிகளை பரிசோதித்தேன்.
நான் ஒருபோதும் அறியாத துப்பாக்கி. புத்தம் புதிய துப்பாக்கி. ஆனால் 1960 கால டிசைன். பைனாகுலரில் பார்த்தபோது இலக்கு வெறும் 120 மீற்றகளிலேயே இருந்தது.
அம்மான் எனக்கு மிகத்தெளிவாகச் சொல்லியனுப்பினார். 24/7 நீ தெளிவாயிருக்கவேண்டும். நீ தூங்கலாம். தூங்கவேண்டும். உங்களிருவரில் ஒருவர் மட்டுமே தூங்கவேண்டும். மற்றவர் விழித்திருக்கவேண்டும். கதிர்காமர் ஒரு காட்டான். அவன் நண்பகலிலும் நீந்தலாம். நள்ளிரவிலும் நீந்தலாம்.”
கதிர்காமர் அந்தவீட்டை தான் நீந்த மட்டும்தான் பயன்படுத்தினார். அவர் பாதுகாப்பு படைகள் சூழ அவ்வீட்டுக்கு வருகிறார் என்றால் அப்பகுதியே களேபரம் ஆகிவிடும். வாகனச்சத்தங்கள், சைரன் ஒலிகள் கேட்கும். முதல் 6 நாட்களில் இரண்டு இரவுகள் மட்டுமே வந்தார். எங்கள் வியூவில் மெய்ப்பாதுகாப்பாளர்கள் மட்டுமே தெரிந்தார்கள். நீச்சல் தடாக மூலையில் தண்ணீர் ஆர்ப்பரிப்பது மட்டுமே எனக்கு தெரிந்தது.
ஏழாம் நாள் இரவு 10 மணிக்கு தூக்கத்திலிருந்த என்னை ஜெகன் எழுப்பினான். நித்திரைத் துயரில் பார்த்தேன். என் வியூவில் ஒரு மெய்ப்பாதுகாப்பாளன் தெரிந்தான். தடாக மூலையில் நீர் ஆடிக்கொண்டிருந்தது. கதிர்காமர் நீந்திக்கொண்டிருந்த ஒலி கேட்டது.
அந்நாள் ஆகஸ்ட் 12. வளர்பிறை 7ம் நாள் மங்கின நிலவு. கதிர்காமரின் புதுகாப்புக்காக அனைத்து மின்சார விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தது.
ஒரு அரை மணித்தியாலம் நமது அதிஸ்டத்துக்காகக் காத்திருந்தோம். அப்போது தான் அவதானித்தேன். இன்றுவரையும் கிடைக்காத ஒரு புதிய வியூ கிடைத்தது. முன்னர் அவ்விடத்தை மரக்கிளைகள் மறைத்துக்கொண்டிருந்தன. அவை இப்போது வெட்டப்பட்டிருந்தன. அக்கணத்தில் கதிர்காமர் அவ்விலக்கில் எனக்கு நீச்சல் அண்டவெயரோடு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றார். எதிரே இருந்த பூஞ்செடியை நிலவில் இரசித்துக்கொண்டிருந்தார்.
ஏன்கெனவே Tripod ல் ஏற்பாடு செய்து வைத்திருந்த கொல்லாயுதத்தின் நிலை அவ்விலக்குக்கு உடந்தையாக இல்லை. நான் ஓரு செக்கனில் ஆயுதத்தை Tripod இலிருந்து கழட்டி என் வலது தோளில் வைத்து இலக்கு பார்த்தேன்.
மண்டைக்கு வைப்பதைவிட இட முதுகுக்கு வெடிவைத்தேன். மூன்றே மூன்று வெடிகள். ஒரு வெடி அவரின் இதயத்தை துளைத்துச் சென்றிருக்கவேண்டும். கதிர்காமர் நெற்றி அடிபட விழுந்தார். அதே கணத்தில் என் வலது தோள்மூட்டு உடைந்ததுபோல பெருவலியை உணர்ந்தேன்.
முதல் ஏழு செக்கனில் கதிர்காமர் நிலத்தில் நெற்றியடிபட விழுந்தார். சைலென்சர் வெடி. அவர் மயங்கி விழுகிறார் என்று நினைத்து முதல் மெய்ப்பாதுகாவலன் அவரிடம் ஒடிவரும்போது 19 செக்கன்கள். அவரின் குருதியைக்கண்டு மெய்ப்பாதுகாவலன் சுதாகரிக்கும் போது 29 செக்கன்கள். மெய்ப்பாதுகாவலன் அலறியடித்து கத்தி மற்ற மெய்ப்பாதுகாவலர்கள் வந்து அவரைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடிப்போய் STF பாதுகாப்புப்படை வாகனத்தில் ஏற்றும்போது 3 நிமிடங்களாகிவிட்டது. அப்போது அவர் இறந்து கொண்டிருந்தார்..
அந்த மூன்றாவது நிமிடம் நானும் ஜெகனும் பௌத்தலோக மாவத்த வீதியில் எமக்காகக் காத்துக்கொண்டிருந்த வெள்ளை வானில் ஏறி வாகனம் ஓடத்தொடங்கி ஒரு நிமிடம் ஆகிவிட்டது .
2 வது நிமிடம் நாங்கள் கிரிக்கெட் பைகளோடு ஓடிக்கொண்டிருந்தோம். 59வது செக்கனில் நான் ஆயுதப் பையோடு மதிலேறிக் குதித்தேன். 49வது செக்கனில் ஜெகன் மதிலேறிக்குதித்தான். ஸ்னைப்பர் துப்பாக்கியை மடித்து கிரிக்கெட் பையில் போட்டு நைலோன் கயிற்றில் தொங்கி நான் இறங்கியபோது 29 செக்கன்ட். ஜெகன் கதிர்காமர் விழுந்த 7வது செக்கன்டே இறங்கிவிட்டான்.
பொரள்ளை, தெமட்டகொட வழியாக நாங்கள் கொழும்பு நகரை கடந்தது 9வது நிமிடம். பத்தாவது நிமிடம் நகரின் எல்லைகள் மூடப்பட ஆயிரம் ஸ்ரீலங்கா பொலிசார் இறக்கப்படுகிறார்கள். அதே நிமிடத்தில் ஹெலிகொப்டர்களும் வானில் தோன்றி எங்களை தேடத் தொடங்குகின்றன. 11வது நிமிடத்தில் கதிர்காமர் இறக்கிறார். இறந்த கதிர்காமரை 13 வது நிமிடத்தில் கொழும்பு வைத்திசாலை காடியோலிஜிட் உயிர்ப்பித்து Live Support ல் போடுகிறார். 23வது நிமிடத்தில் ஜனாதிபதி சந்திரிகா அம்மா செயற்கை உயிரில் மயக்கத்திலிருந்த கதிர்காமரை பார்த்துவிட்டு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் விம்மி வெடித்து அழுகின்றார்.
நாங்கள் நள்ளிரவு நேரம் நீர்கொழும்பை அடையும்போது சிங்கள ரேடியோவில் பிறேக்கிங் நியூஸ் என்று ஒரு அறிவிப்பு வந்தது. மத்திய கொழும்பு வைத்தியசாலை விபத்துப்பிரிவு வைத்திய அதிகாரி அனில் ஜயசிங்கவின் குரலில் வந்தது.
” ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் துப்பாக்கி சூட்டுக்காயங்களால் இன்றிரவு இறந்தார். அவரை வைத்தியசாலை பொறுப்பேற்கும்போதே இறந்து கொண்டிருந்தார். அவரின் உயிரைக்காப்பாற்றும் நம் வைத்தியர்களின் முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.”
மூனறு நாட்கள் நாங்கள் நீர்கொழும்பில் ஒரு தமிழ் மீனவரின் வீட்டில் தங்கியிருந்தோம். ஏழு நாட்களுக்குப்பின் அவ்விரவில் ஆசை அருமையாகக் குளித்துவிட்டுப் படுத்தேன். அந்த அதிகாலையே ஒரு மீன்பிடிப்படகில் போய் கடலில் ஜெகன் கதிர்காமரைச் சுட்ட அரிய துப்பாக்கியை கடலில் டம்ப் பண்ணிவிட்டான் என்ற செய்தியை அடுத்தநாள் காலை கடலிலிருந்து வந்து சொன்னான்.
பிறகு திட்டத்தின் படி நீர்கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஒரு கடத்தல் படகில் தப்பிச்சென்றோம். எங்கள் அடுத்த வேலை இந்தனேசியாவுக்குப் போய் அங்கிருந்து இயக்கத்தின் ஆயுதங்களை கொண்டுவரும் கப்பலை முல்லைத்தீவுக்கு கொண்டுசெல்லும் புலிகளின் மாலுமிகளோடு இணைவது. 2005 நவம்பர் மாதத்தில் நானும் ஜெகனும் விமானம் மூலம் ஜகார்தாவுக்கு போய்விட்டோம். டிசம்பர் மாதம் நத்தாருக்கு அடுத்தநாள் ஹோட்டலில் என்னோடு தங்கியிருந்த ஜெகன் காணாமல் போய்விட்டான். ஒரு வாரம் செய்வதறியாது காத்திருந்தேன். அப்போதுதான் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிந்தது. ஜெகன் தான் பொட்டம்மானின் தொடர்பாளர். அவன் காணாமல் போகவில்லை. நான் மட்டக்களப்பு என்பதால் கருணாவின் விசுவாசியாக இருக்கலாம் என்பதால் பொட்டம்மான் உத்தரவுப்படியே என்னை காய்வெட்டிவிட்டான். இந்த துரோகத்தை என்னால் தாங்கமுடியவில்லை. கனடாவிலிருக்கும் என் மாமாவிடம் என் நிலமைச் சொல்லி உதவி கேட்டேன். அவர்தான் என்னை ஏஜென்சிக்காரன் மூலம் ஒஸ்றேலியாவுக்கு அனுப்பினார்.
2. துரோகத்தின் பரிசு, வனவாசம், சிட்னி
“ இளமையை விடவா அழகு பெரிசு” - டேவிட், ஒஸ்றேலிய ஓவியன் 2006ம் ஆண்டு மார்ச் மாதம் படகு மூலம் ஒஸ்றேலியாவுக்கு அகதியாகப்போனேன். ஒரு மாதம் தடுப்பு முகாமிலிருந்தபின் என்னை அகதியாக ஏற்று சிட்னியில் வசிக்கவிட்டார்கள். சிட்னியில் இந்த காட்டு ஊருக்கு நான் வந்த கதை இதுதான். மாமா எனக்கு செலவமித்த காசை இரண்டு வருடத்திற்குள் திருப்பி கொடுக்கவேண்டும் என்பதுதான் எனது அப்போதைய இலட்சியமாக இருந்தது. முதலில் ஒரு கோழி இறைச்சி உரிக்கும் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. கோழிகளை கொல்லுகிற பகுதியில். இறக்கும்போது கோழிகள் பீச்சும். அதனை தாங்கலாம். ஆனால் ஒரு சினைப்பராக இருந்த எனக்கு நுற்றுக்கணக்கான கதியற்ற கோழிகளை இயந்திரங்கள் மூலம் கொல்வது அவமானமாகவும் கோழைத்தனமாகவுமிருந்தது. இதைவிட எனக்கு நிறைய பயங்களிருந்தது. எனது அடையாளம் ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்திருக்கலாம் என்பதால் நான் வருண் என்கிற ஒரு போலிப்பெயரிலேயே அகதியாகியிருந்தேன். யாராவது தமிழர்கள் போட்டுக்கொடுத்தாலும் என்று சிட்னியில் தமிழர்களோடு பழகுவதை குறைத்தேன். ஒரு சீனனுடைய வீட்டின் பின் அவுட் ஹவுஸ் - Granny Flat ல் வாடகைக்கு குடியிருந்தேன். எனக்கு நண்பர்களில்லை. இக்காலத்தில் தான் நான் குடிக்க பழகினேன். வேலையால் பின்னேரம் 4 மணிக்கு வீட்டுக்கு வருவேன். கிழமையில் 4 நாட்கள் சமைப்பேன். மிகுதி நேரம் அந்த காட்டு ஊரின் மதுச்சாலைக்கு போகத்தொடங்கினேன். அது வேறு உலகம். வாழ்வில் முதல்முறையாக நான் மது அருந்தியது ஒரு வசந்தகால சனிக்கிழமை பின்னேரம் ஏழரைக்கு. நவம்பர் மாத நடுப்பகுதி. அப்போதும் பகலாயிருந்தது. எனக்கு 22 வயது. Bar ல் எந்த பியரை வாங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. படமெடுத்தாடும் ஐந்து தலை நாகம்போல ஐந்து குழாய்களில் ஐந்து பியர்களிருந்தன. நான் நடுவிலிருந்த Victoria Bitter என்ற பியரைதொட்டுக் காட்டினேன். நீலக்கண்களும் பொன்னிற கேசங்களும் கொண்ட ஒரு பதினெட்டு வயது குட்டி வெண்ணுரை ததும்பும் பொன்னிற பியரை கண்ணாடிக் கிளாசொன்றில் பெரிய சடங்கொன்றுபோல விட்டுப் பரிமாறினாள். நான் இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப் பொழுதில் அதனை காவி வந்து மதுச்சாலையின் திறந்த வெளிக்கு வந்து அருந்தினேன். முதல் வாய் புளித்த அந்த பியர்தான் அவ்விரவை இனிதாக்கியது. அன்றிரவு எத்தனை பியர் அருந்தினேன் என்பது ஞாபகமில்லை. மதுச்சாலை அதிகாலை 3 மணிக்கு பூட்டும்வரை அருந்திக்கொண்டிருந்தேன். பிறகு அது பழக்கமாகிவிட்டது. மதுச்சாலையே என் வீடாகிவிட்டது. ஆறு நாளும் வேலையால் வந்து மதுச்சாலைக்கு போனேன். வேலை இல்லாத ஞாயிற்றுக்கிழமை மதுச்சாலை திறக்கின்ற காலை பத்து மணிக்குப்போவேன். எனது பெயர் சொல்லி Barmaid பெண்கள் அழைப்பார்கள். எனக்கு நிறைய வெள்ளைக்கார குடிகாரர்கள் நண்பனார்கள். ஒஸ்றேலியாவிலேயே மிக அழகான நகரம் கடற்கரை பட்டினம் சிட்னி. நான் எண்ணி நான்கே தடவைகள்தான் நகருக்குப்போயிருக்கிறேன். அதில் ஒரேயொரு தடவை பொண்டாய் கடற்கரைக்கு போயிருந்தேன். எனது பயங்கள் பெரிது. என்னோடு தடுப்பு முகாமிலிருந்த இலங்கை அகதிகள் மெல்பேண் நகருக்கு போக நான் மட்டும் மாமாவின் நண்பர் இந்த சிட்னி காட்டு ஊரிலிருந்ததால் இங்கு வந்தேன். அவரே இங்கு எனக்கு கோழிக்கொல்லறையில் வேலையும் அதே ஊரில் தங்குமிடமும் ஏற்பாடு செய்துதந்தார். வீட்டிலிருந்து 20 நிமிட நடைத்தூரத்தில் 6 நாட்கள் வேலை. ஆகவே எனக்கு வாகனமோ வாகன அனுமதிப்பத்திரமோ தேவைப்படவில்லை. தினமும் பஸ்ஸிலோ புகையிரதத்திலோ பயணிக்க வேண்டியிருக்கவில்லை. மாமாவின் கடனை நான் இரண்டு வருசத்திலேயே திருப்பிக் கொடுத்திருக்கலாம். என் குடிப்பழக்கத்தால் இரண்டரை வருடம் தேவைப்பட்டது. என் கடன் முடிந்தபின் எனக்கு வேறுபிரச்சனைகள் வந்தன. நான் போலி அடையாளத்தில் அகதியானவன் என்பதால் ஊருக்கு போகமுடியாது. அப்பா அம்மாவையும் இங்கு கூப்பிட முடியாது. எனக்கு வாழ்வில் இலட்சியம் என்று எதுவுமிருக்கவில்லை. வேலை முடிந்தபின் குடிப்பதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும். தனிய இருந்து குடிக்கும்போது ஒவ்வொருநாளும் பொட்டம்மானும் ஜெகனும் எனக்குச்செய்த துரோகம்தான் நினைவுக்கு வரும். ஒப்பரேசன் கதிர்காமரை செய்யும்போது நான் இயக்கத்துக்காக சாகத்தயாராக இருந்தவன். வெற்றிகரமாக நான் செய்த விசுவாசமான வேலைக்கு பொட்டம்மான் எனக்குச்செய்த கைமாறு துரோகம். 2008ல் ஊரில் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. புலிகளின் ஆயுதக்கப்பல்கள் ஒன்றும் ஊருக்குப்போய்சேரவில்லை. மூன்று பியர் இறங்கியதும் பொட்டன் அழியவேண்டும் அழிவான் என்று சபிக்கத்தொடங்கிவிடுவேன். 2009ல் யுத்தம் முடிந்தபின் தமிழ் பொடியள் அகதிகளாக ஒஸ்றேலியாவுக்கு வந்தபோது தான் என் பிரச்சனைகள் அதிகமாயின. வந்த தமிழ்பொடியள் அநேகர் இந்த காட்டு ஊரில்தான் குடியிருக்க வந்தார்கள். நிறைய மட்டக்களப்பான்களும் வந்தார்கள். நான் வேலை செய்கிற கோழிக்கொல்லறையிலேயே புதிதாக வந்த தமிழ் அகதிகள்தான் அதிகமாக வேலைசெய்தார்கள். நான் அப்போது ஒரு சூப்பவைசராகிவிட்டேன். இவனுகளோடுளோடு நான் அதிகம் கதை வைத்துக்கொள்ளவில்லை. நான் இயக்கத்திலிருந்தது அவனுகளுக்கு தெரியும்..ஆனால் ஒப்பரேசன் கதிர்காமர் அவங்களுக்கு தெரியாது. அது எப்போதாவது தெரிந்துவிடுமே என்ற பயம் என்னை வாட்டிக்கொண்டிருந்தது.. காட்டு ஊரே 2010 க்குப்பிறகு சிறீலங்கன் தமிழ் அகதிகளால் அல்லல் பட்டது. அங்கு நடந்த வாகன விபத்துக்கள் எல்லாவற்றுக்கும் நமது தமிழ் பொடியளே காரணமாக இருந்தனர். மதுச்சாலையிலும் அவங்களின் அட்டகாசமே.. ஒவ்வொரு நாளும் வெறிகூடியதும் கலாட்டா செய்யும் இவங்களை கலைப்பதே செக்கியூரிட்டி காட்டின் பணியானது. பலரை மதுச்சாலைக்கு வரக்கூடாது என்று தடைவிதித்தார்கள். நான் 2006 ல் இங்குவர மாமா ஐம்பது இலட்சம் இலங்கை காசு செலவளித்திருந்தார். இவையள் யுத்தம் முடிய ஐந்து லட்சம் கட்டி வந்தவங்கள். இவங்களில் பலருக்கு இயக்கம் எப்படி மணக்கும் என்பதே தெரியாது. இயக்கத்திலிருந்தவர்கள் மிகச்சிலரே அகதிகளாக வந்திருந்தார்கள். ஊரில் மைனர் குஞ்சுகளாக வாழ்வை அனுபவித்துக்கொண்டிருந்த பல வசதியான குடும்பத்தில் பிறந்த பொடியள் கிடைத்த படகில் நேரடியாக ஒஸ்றேலியாவுக்கு வந்தவர்கள். ஊருக்கு காசு அனுப்பத்தேவையில்லை. மைனர் குஞ்சுகள் வேலைக்கும் போவதில்லை. இங்கு பிறந்த தமிழ் பாடசாலைப் பெட்டைகளை 3 நாள் கதைத்தே மடக்கிவிடுவான்கள். அவளவையின்ரை சித்தப்பனைப்போல மாமனைப்போல அண்ணனைப்போல முகச்சாயலிலிருந்த இந்தப்பொடியளின் குரலிலும் உடல்மொழியிலும் கட்டுப்பட்டாளவை. முன்னர் அகதிகளாகவந்து இங்கு குடும்பம் நடத்தி பிள்ளை பெற்ற தமிழர்களே தங்களது திருமகள்களை இந்த "அகதிப்பொடியள்" தூக்கிறாங்கள் என்று என்னைப்போல புதிதாக வந்த அகதிகளை சபித்தார்கள். இதைவிட மேலே போய் ஒரு குரூப் வெள்ளைக்காரப் பெட்டைகளையும் சுண்டிச்சுண்டியே மடக்கினார்கள். இந்த குரூப் யாழ்ப்பாணம், மட்டக்களப்பிலிருந்து தென்னிலங்கையில் குடியேறி யுத்தம் என்பதே என்னவென்று தெரியாத பொடியள். இவங்கள் மதுச்சாலைக்கு வெள்ளைக்குட்டிகளை சாய்ச்சுக்கொண்டுவந்து பியர் பருகி ஸ்னூக்கர் விளையாடினாங்கள். ஆங்கில காபரே பாட்டு பாடினாங்கள். ஒரு தடவை தமிழ் அகதிப்பொடியனொருவன் 17 வயது வெள்ளைப்பெட்டைக்கு 18 வயது போலி லைசென்ஸ் சரிக்கட்டிக்குடுத்து மதுச்சாலைக்கு கிழப்பிக்கொண்டுவந்தான்.(சர்வதேசத்திலேயே பாஸ்போட்டில தலைமாத்துகிற தமிழனுக்கு இது சின்ன வேலை) அவள் தன் தாயோடு வாழ்பவள். தகப்பன் பிரிந்துவிட்டான். அன்று தகப்பன் எங்களோடு குடித்துக்கொண்டிருந்தவன் தன் 17 வயது மகள் எப்படி வந்தாள் என்று பொலீசை அழைத்துவிட்டான். பொலிஸ் வர தகப்பன் சாட்சி சொன்னான். பிறகென்ன வயது குறைந்த பெட்டையின் காதலனை 6 மாதம் சிறையிலடைத்து இலங்கைக்கு நாடு கடத்தினார்கள். .அம்மாவுக்கு நான் ஒரே பிள்ளை. நான் இங்கு எப்படி கஸ்ரப்படுவேன் என்பதை அவா கண்டுபிடிப்பதில் சிரமமிருக்கவில்லை. எனக்கு 25 வயதிலேயேயே கட்டிக்கொடுக்க விரும்பினார். எனது காதல் கதை அம்மாவுக்கு தெரியும் வானதி கலியாணம் கட்டி ஜெர்மனிக்கு போய்விட்டாள் என்பதை கதையோடு கதையாக அம்மா சொன்னா. ஒரு பேக் முகநூல் கணக்கில் வானதியை எப்போதும் அவதானித்துக்கொண்டிருந்த எனக்கு அவள் ஜெர்மனிக்கு போன இரண்டு வருடத்திலேயே ஒரு குழந்தை பெற்று விவாகரத்தும் பெற்று ஒண்டிக்கட்டையானதை அம்மாவிடம் சொல்லமுடியவில்லை. வானதியும் ஒரு போலி முகநூலில் என்னை அவதானித்துக்கொண்டிருப்பாள் என்பதையே நான் நம்பவிரும்பினேன். எனது முகநூலை நிறக்குருடு என்ற தமிழ் பெயரிலையே தொடங்கினேன். Profile Picture ல் அவளும் நானும் 14 வயதில் சந்தித்த படுவான்கரைப் பாலைமரக்காட்டுப் படம் மடடுமே போட்டேன். எனக்கு வெறும் 27 காட்டு ஊர் மதுச்சாலையில் சந்தித்த வெள்ளைக்குடிகார முகநூல் நண்பர்களே. வானதி இன்றுவரையும் எனக்கு நட்பு அழைப்பு அனுப்பவில்லை. காட்டு ஊரில் ஒரு வேசைவீடும் இல்லை. இவங்கள் எல்லாம் அடுத்த ஊரிலிருந்த வேசைவீட்டுக்குப் போய் அதன் வருமானத்தை அதிகரித்தார்கள். ஒவ்வொரு நாளும் மதுச்சாலைக்கு இவங்களின் பிரச்சனையில் பொலிஸ் வரும். காட்டு ஊர் மதுச்சாலைக்கு வரும் வெள்ளைக்காரர்கள் பலர் விளிம்பு நிலை வெள்ளைக்காரர்கள். வேலை இல்லாதவர்கள், அரசின் வாடகை குறைந்த வீடுகளிலிருப்பவர்கள். கிழவர்கள். இவர்கள் எனக்கு முன்னிலேயே ஸ்ரீலங்கன்கள் கெட்ட சாமான்கள் என்று திட்டிவிட்டு "ஆனால் நீ விதிவிலக்கு" என்றார்கள். கிறீ என்கிற 73 வயது பிரெஞ்ச் பேசும் கனடாக் காரனை நான் இந்த மதுச்சாலையில்தான் சந்தித்தேன். கிறீ புத்திஜீவியாக்கும். மொன்றியால் துறைமுகத்தில் தன் 15 வயதில் வீட்டைவிட்டு ஓடிவந்து ஒரு கப்பலில் வேலைக்கு சேர்ந்தவனாம். மிகப்பணக்கார பிரெஞ்சு தாய்க்குப் பிறந்த ஒரே மகன் அவன். ஒரு விபத்து கருத்தரிப்பாக பிறந்த தன்னை தாய் வெறுத்தாளாம். பிறகென்ன கப்பலில் உலகம் சுற்றிவிட்டு ஓஸ்றேலியாவில் கரை சேர்ந்து விட்டானாம். நான் மதுச்சாலையில் தனியே இருக்கும்போது யாராவது படித்துவிட்டுப்போன சிட்னி ஆங்கிலப்பத்திரிகை Sydney Morning Herald ஐ எடுத்துப் படிப்பேன். எனக்கு பெருமளவுக்கு ஆங்கிலம் புரியத்தொடங்கிய காலமது. ஒருநாள் பத்திரிகை படித்துக்கொண்டிருந்த என்னிடம் வந்து குடித்துக்கொண்டு கதைக்கத்தொடங்கினான். ஒரு ஸ்ரீலங்கன் வந்தேறி தரமான ஆங்கிலப்பத்திரிகை படிப்பதை கண்டு அவன் அதிசயப்பட்டிருக்கவேண்டும். கிறீக்கு தமிழர்கள் தமிழ்ப்புலிகள் பற்றி விலாவாரியாகத் தெரியும். ஒரு தமிழ் அகதியான என்னுடன் மிக்க அனுதாபமாகப் பேசினான் நான் ஒஸ்றேலியாவுக்கு வந்த ஐந்தாவது வருடத்தில் 2011ல் எனது குடிப்பழக்கத்தால் பெரிய பிரச்சனைகள் வந்தன. காட்டு ஊரின் மதுச்சாலை மூடுகிற அதிகாலை 3 மணிவரை குடித்துவிட்டு வெறும் 3 மணித்தியாலம் படுத்துவிட்டு வேலைக்கு போன நாளொன்றில் தொழிற்சாலையில் எனது அலட்சியத்தால் ஒருவன் படுகாயமடைந்த விபத்து நடந்தது. எனது Shift மனேஜர் நான் குடித்திருக்கிறேனா என்று கேட்டுச் சோதித்தார். நான் மாட்டினேன். அவர் என்னை வேலையைவிட்டு நீக்கியிருப்பார். அதிஸ்டவசமாக அன்று தொழிற்சாலையின் உரிமையாளரான மோல்ரா தேசத்து யூதக்கிழவி அன்று தொழிற்சாலையிலிருந்தாள். நான் சிறீலங்கன் தமிழ் என்று அவளுக்குத்தெரியும். என்னைத்தனியே ஒரு அறைக்குள் அழைத்துச்சென்று கேட்டாள். நான் பயத்தில் 7 நாட்களும் மூக்கு முட்டக்குடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன். " உனக்கு என்ன பிரச்சனை? நண்பர்களில்லையா? மனைவி, குடும்பம், Girl Friend இல்லையா? ஏன் இப்படிக்குடிக்கிறாய்?" என்று கேட்டாள். கிழவியின் தோல் நிறத்தைத்தவிர அவள் உடல்மொழி என் அம்மம்மாவினதைப் போலிருந்தது. முதல் தடவையாக நான் ஒரு புலி Assassin.... ஸ்ரீலங்காவின் வெளிநாட்டமைச்சரை சுட்டுக்கொன்றதிலிருந்து போலிப்பெயரில் அகதியானதையும் போட்டுடைத்தேன். கிழவி அதிர்ச்சியால் கதிரையிலிருந்து ஏதோ கோபத்தோடு சொல்ல எழுந்தாள். அதே வேகத்தில் கதவுவரை சென்றவள் மீண்டும் திரும்பிவந்தாள். நான் அப்போதும் என் கதிரையிலிருந்து எழுந்திருக்கவில்லை. மறுபடியும் கதிரையில் வந்தமர்ந்தாள். நான் அப்போதுதான் கூப்பிய கைகளை என் தலையில் வைத்தபடி " சொல்லக்கூடாத விடயங்களை சொல்லிவிட்டேன். என்னைக் காட்டிக்கொடுத்து ஸ்ரீலங்கா சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள் மேடம். நானே வேலையைவிட்டு விலகிவிடுகிறேன்" என்று அழத்தொடங்கினேன். மேசையிலிருந்த ரிசூக்களை எடுத்து நீட்டி என்னை ஆசுவாசப்படுத்தினாள். பிறகு " நான் உனக்காக அனுதாபப்படுகிறேன். நீ இப்போது சொன்ன விடயங்களை நீயும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. நான் சொல்லவருவது தெளிவாக விளங்குகிறதா" "யேஸ் மேடம்" "நீ என்னையும் மாட்டிவிடாதே. உனக்கு இருவாரங்கள் சம்பளத்தோடு கூடிய விடுமுறையில் குடிப்பிரச்சனைக்கான கவுன்சிலிங்க்கு நமது தொழிற்சாலையே ஏற்பாடு செய்யும். இரு வாரங்களில் நீ வேலைக்கு திரும்பி வா. அன்றைய தினம் நான் தற்செயலாக தொழிற்சாலைக்கு வருகிறமாதிரி வந்து உன்னைப்பார்ப்பேன். இப்ப நடந்த விடயங்களை நீ உன் Shift மனேஜர் உட்பட யாரிடமும் சொல்லக்கூடாது. எனது மோபைல் நம்பரை உனக்கு தரமுடியாதது ஏன் என்று உனக்கு விளங்கும். இன்னுமொரு முக்கியமான விடயம். சட்டப்படி நீ உண்மைகளை உன் கவுன்செலரிடம் சொல்லலாம். எனது ஆலோசனை தயவுசெய்து நீ அமைச்சரை கொன்றதை சொல்லாதே. பொதுப்படையாக புலி Assassin ஆக இருந்ததாகச் சொல்லு. போலிப்பெயரில் நீ அகதி அந்தஸ்து கோரியதையும் சொல்லாமல் தவிர்ப்பது நல்லது. நான் ஏன் உன்னோடு இப்படி சட்டத்தை மீறி அனுதாபப்படுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. நீ நேர்மையானவன் என்று நம்புகிறேன். இந்த அரிய புனர்வாழ்வை நீ சிறப்பாகப் பயன்படுத்தவேண்டும்." என்று சொல்லிவிட்டு கிழவி அவளை அறியாமலே தன் சிகரெட் பெட்டியை எடுத்து நீ புகைப்பாயா என்று கேட்டாள். நான் தலையசைக்க எனக்கும் ஒரு சிகரெட் தந்து என்னதை பற்றவைத்துவிட்டு தன்னதையும் பற்றவைத்தாள். "இன்றிரவு நீ குடிக்காமலிருக்கவேண்டும் என்று நான் கேட்கப்போவதில்லை. முடிந்தால் குடிக்காமலிரு" என்று சொன்னவள் " உனக்கு கோப்பி குடிக்கும் பழக்கமுண்டா? மதுவுக்கு பதிலாக கோப்பி குடித்துப்பாரு. சிகரெட் மதுவைவிட கெட்ட சாமான். ஆனால் மது சிகரெட்டை விட கெட்ட சாமான். கோப்பியை Try பண்ணிப்பார்" " மது, கோப்பி இரண்டும் உனக்கு கிக் தரும். இரண்டுக்கும் கிக் மட்டுமல்ல சுவையும் உண்டு. இரண்டையும் நீ வேண்டினால் நீ குடிகாரனாகமாட்டாய்" இந்த நாடகம் அன்று இனிதே முடிந்தது. கிழவி என்னை அழைத்துப்போய் என் Shift மனேஜரிடம் எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப் பரிந்துரைத்து பின் ஒரு ராக்சியை அழைத்து என்னை வீட்டுக்கு அனுப்பினாள். நண்பகலில் ராக்சியில் இன்ப அதிர்ச்சியில் வீடு வந்த நான் குளித்துவிட்டு பகலில் நித்திரை கொள்ளமுயன்றேன். முடியவில்லை. பிறகு வெளியே வந்து இனிமேல் மது அருந்தமாட்டேன் என்று சபதமெடுத்தேன். கிழவி சொன்னமாதிரி கோப்பி குடிக்கலாம் மதுவுக்கு பதிலாக என்று காட்டு ஊரில் ஒரு கோப்பிக்கடையை தேடி அலைந்தபோதுதான் நான் டேவிட்டின் cafe ஐக் கண்டடைந்தேன்.
3. புனர்வாழ்வு, கோப்பிக் கலையகம், ரூங்காபி
காட்டு ஊரில் நிறைய கடைகள் வாடகைக்கு யாருமின்றி வெற்றாகவே இருந்தன..புகையிரத நிலையத்திற்கு முன்னால் வெற்றாக தூசி மண்டியிருந்த சவச்சாலை போன்றிருந்த சிறிய கடையை டேவிட் வாடகைக்கு எடுத்து தானே பெயின்ற் பண்ணி கதவுகளையும் முகப்பையும் கண்ணாடிகள் போட்டு வெளியே பின்பக்கத்தில் அவுட்டோர் புகைக்கும் பகுதி, உள்ளே மின்சார விளக்குகள் எல்லாம் போட்டு நவீன கோப்பிக்கடையாக வடிவமைத்தான். டேவிட்டின் ஓவியங்கள் Graphics படங்கள் எல்லாம் சுவர்களில் தொங்கின. முதல்முறையாக ஒரு கோப்பி வாங்க நான் உள்ளே போனபோது அதன் அழகில் அசந்துவிட்டேன். ஐரோப்பிய அமெரிக்க படங்களில் வருகின்றமாதிரியாக அட்டகாசமாக இருந்தது. சும்மா சொல்லக்கூடாது. அன்றைய பிற்பகலை நான் வருந்தினாலும் அனுபவித்தேன். கிழவி சொன்ன கிக், சுவை இவைகளை பரிசோதிக்க இரண்டு மணியிலிருந்து டேவிட் கடையை பூட்டும் 5 மணிவரை 3 கோப்பி குடித்துப்பார்தேன். ஏதோ ஒரு நிதானமான கிக் கோப்பியிலிருந்து வந்தது. அது மது தரும் வரம்புமீறிய கிக் போல இல்லை. இரண்டையும் புகைத்தபடியே அனுபவித்தேன். எனக்கு அப்போது என் அம்மம்மா அடிக்கடி சொல்லும் "அரசனை நம்பி புருசனை கைவிட்ட பழமொழிதான் ஞாபகத்துக்கு வந்தது. பெண்ணுக்கு புருசன் தருகிற கிக் கோப்பி போல இருந்தால் அதே பெண்ணுக்கு அரசன் தருகிற கிக் மது போல இருக்குமாக்கும்.
அன்று காட்டு ஊரின் மதுக்கடைக்கு போகாமல் வீட்டுக்கு போவதுதான் என் திட்டம். ஆனால் டேவிட் 5 மணிக்கு கோப்பி கடையை மூடியபோது எனக்கு போக இடமிருக்கவில்லை. எனக்கென்றொரு வீடுதான் இதுவரை இல்லையே. இதற்கிடையில் இரண்டு என் வெள்ளைக்கார குடிகார நண்பர்கள் என்னைக் காணவில்லையே “ஆர் யூ ஓக்கே” என்று ரெக்ஸ் மெசேச் அனுப்பிவிட்டார்கள்.
மதுச்சாலைக்கு போகவே கூடாது என்ற சபதத்தோடு காட்டு ஊரின் சிற்றாறின் வழிபோகும் ஒற்றையடிப்பாதையில் நடந்தேன். கோப்பி தந்த கிக் கலைய பியர் குடிக்கவேண்டுமென்ற சபலம் வந்துகொண்டிருந்தது. இதற்கிடையில் கிறீயும் ” எங்கேயிருக்கிறாய் நீ” என்று ரெக்ஸ் அனுப்ப என் சபதம் உடைந்தது.
என் புனர்வாழ்வின் இரவு மறுபடியும் அதே மதுச்சாலையில் தொடங்கியது. என் கதையைக்கேட்ட என் வெள்ளைக்கார குடிகார நண்பர்கள் என் எனக்காக அனுதாபப்பட்டார்கள்.. கிறீ Take Care என்று ஆத்மார்த்தமாகச் சொன்னான். அன்று நானே அவனது பியர்களையும் வாங்கிக் கொடுத்தேன். இரண்டு பியர் உள்ளே போக நான் பழையபடி எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். இரவு 10 மணிக்கு எனக்கு இனந்தெரியாத ஒரு தொலைபேசி மிஸ்கோல் வந்தபோது என்னை கிலேசம் ஆட்கொண்டது. அது அந்த யூதக்கிழவியாய்த்தான் இருக்கவேண்டும். எப்படியோ வெள்ளை நண்பர்களை காய் வெட்டிவிட்டு வீட்டுக்குப்போய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டேன்.
அடுத்தாள் காலை 8 மணிக்கு எழும்பி குளித்து சாப்பிட்டு விட்டு 10மணிக்கு கவுன்செலிங் க்கு 7 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பரமட்டா என்ற சிறுநகருக்கு போனேன். 4 ஆண்டுகளுக்குப்பின் புகையிரதத்தில் அந்த பத்து நிமிடப் பயணம் போனேன். ஒரு புதிய நாட்டுக்கு போகிறமாதிரி உணர்ந்த பயணம். எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? 5 ஆண்டுகளாக ஒரு காட்டு ஊரிலையே வீடு, தொழிற்சாலை, மதுச்சாலை என்று ஒரு கிணற்றுத் தவளையாகவே வாழ்க்கை இருந்திருக்கிறது. எனது கவுன்செலர் எட் என்கிற ஒரு 45 வயது ரூசியாக்காரன். பிறநாட்டுக்காரனின் உச்சரிப்பிலேயே ஆங்கிலம் பேசினான். முதல் நாள் ஒருமணித்தியால உளவளச்சிகிச்சையில் நான் கவனமாகவே இருந்தேன். ஒன்றும் உளறவில்லை. புலியில் இருந்திருக்கிறேன். ஆயுதப்போராளியாக சமராடியிருக்கிறேன். இப்போது அந்த நினைவுகளை மீட்கிறபோது சிரமமாக இருக்கிறது. 6 நாள் வேலை, 7 நாளும் குடி, குடும்பம், மனைவி, Girlfriend, நெருக்கமான நண்பர்கள் என்று யாருமில்லை. இப்போது ஓஸ்றேலிய குடிமகனாகிவிட்டபோதும் காட்டு ஊரைவிட்டு எங்கும் போகவில்லை. ஊருக்கு ஒரு தடவையும் போகவில்லை. என்று நான் மிக்க கவனமாய்த் தயார்படுத்தி வைத்திருந்த கேஸை ஒப்புவித்தேன். எட் மிக்க சக்திமிக்க மந்திரவாதியைப்போல என் கதையைக்கேட்டு குறிப்பு எடுத்தான். பிறகு மிக வசியமான குரலில் என்னிடம் சில கேள்விகள் கேட்டான். இனி ஒவ்வொரு நாளும் ஒரு மணித்தியாலத்திற்கு சனி ஞாயிறு தவிர தொடர்ந்து பத்து நாட்களுக்கு எனக்கு உளச்சிகிச்சை தரவுள்ளதைச் சொன்னான். நான் தனக்கு சொல்கிற தகவல்கள் தன் தொழில் சட்டத்திற்கமைய இரகசியமாக வைக்கப்படும். எந்த அரச நிறுவனங்களுக்கோ உளவு தாபனங்களுக்கோ அவை போய்ச் சேராது. தப்பித்தவறி போய்ச்சேர்ந்தாலும் ரகசிய காப்பு ஒப்பந்த அடிப்படையில் நீ வழங்கிய தகவல்களை வைத்து இப்போது ஒஸ்றேலியக் குடியுரிமையை பெற்றுள்ள என்மீது ஆஸ்திரேலிய சர்வதேச சட்டங்கள் நடவடிக்கை எடுக்கமுடியாது என்றான். என்னுடைய குடிப்பிரச்சனைக்குரிய வேர்மூலங்களை கண்டுபிடித்து அதிலிருந்து மீள முதலில் உதவுவதாகச் சொன்னான். நான் உடற்பயிற்சி செய்வது குடியை விட உதவுமாம். பத்தாவது மாடியில் ஒரு மேசையிலிருந்தோம். என்னை கண்ணாடியருகே கூட்டிச்சென்று எதிரே தெரியும் பரமட்டா பூங்காவைக் காட்டினான். அது சிட்னியில் குளிர்காலக் கடைசிமாதமான ஆகஸ்டின் முதல்வாரம். வசந்தகாலம் இப்போதே வசந்தகால மலர்கள் முகிழ்த்துவிட்டதை காண்கிறாயல்லவா? அதோ தெரிகிறதே அந்த மஞ்சள் பூக்கள் அவைதான் ஒஸ்றேலியாவின் தேசிய பூவான தங்க வற்றில் பூக்கள். நீ என்ன செய்கிறாய் என்றால் இன்று வீடு போகமுதல் இந்த பூங்காவைச்சுற்றி ஒருக்கால் நடந்துவிட்டுப்போ. பூங்காவின் நடுவில் ஒரு அருமையான கோப்பிக் கடை உண்டு. கோப்பியோடு ஒரு சிகரெட் புகைத்துவிட்டு அந்த தங்க வற்றில் பூக்களின் நறுமணத்தை ஒருக்கால் முகர்ந்துபார். தேனீக்கள் அதில் தேன் எடுக்கும். உன் மோபைல் போனில் அதை படமெடுத்து வந்து நாளை காட்டு. அதைவிட நீ தினமும் டயறி எழுதப்பழகு. இன்றைய தினம் பூங்காவில் நீ நடக்கிறபோது மனதில் வருபவைகளை இன்றிரவு எழுதிவிட்டுப் படு. நீ நேற்றிரவு குறையக் குடித்ததே ஒரு நல்ல தொடக்கம். இன்று நீ குடிக்கமலிருக்க முடியாதிருப்பது கடினமென்று தெரியும். நேற்றையப்போல அல்லது அதைவிடக்குறைய குடிக்க முயலு.”
எட் சொன்னபடியே அன்றைய மதிய குளிர்கால இளவெய்யிலில் நான் பரமட்டா பூங்காவில் கோப்பி குடித்து நடந்தேன். இழந்த வாழ்வு கைக்கெட்டும் தூரத்திலிருக்கிறமாதிரியான பிரமை வந்தது. வானதி இந்த குளிர்கால நண்பகல் வெய்யிலில் என்னோடு கூட நடப்பாளா என்ற அங்கலாய்ப்பு வந்தது. அந்த 7 கிலோமீட்டர் வீடுவரையான தூரத்தையும் ரயில்பாதையோர வீதி வழியாக நடந்தே வந்தேன். வீட்டில் ஜஸ்மின் அருசியோடு Pork Belly கறிவைத்து உண்டேன். எனக்கே எனது சமையல் அதிசயமாக மிகச்சுவையாக இருந்தது. நல்ல தூக்கம் வர தூங்கினேன்.
எழுந்தபோது நேரம் பின்னேரம் 3 மணி. என்னசெய்வதென்று தெரியவில்லை. எழுந்து மூத்திரம் பெய்து முகம் கழுவிவிட்டு டேவிட்டின் கோப்பிக்கடைக்குப் போனேன்.
கோப்பிக் கடையில் டேவிட் இல்லை. வானதியின் முகக் களையழகு இல்லாவிட்டாலும் வானதியைப் போல நீள முகமும் நீக்கல் பற்களோடும் ஒரு வெள்ளைக்காரக் குட்டி நின்றாள். ஒரு கோப்பி வாங்கி புகைத்துக் கொண்டிருந்தபோது டேவிட் வந்தான். இது ஓலிவியா. கடையில் முதல் பரிஸ்டா ஆக வேலைக்கு வந்திருக்கிறாள் என்றான். இரண்டாவது கோப்பியும் வாங்கிப் புகைத்துக்கொண்டு குடித்தேன். ஒலிவியா போய்விட்டாள். நானும் டேவிட்டும் மட்டுமே இருந்தோம். கபே சுவரில் தொங்கிய ஓவியங்களைக்காட்டி இவை யாருடையவை என்றேன். அப்போதுதான் டேவிட் ஒரு ஓவியன் என்று எனக்குத்தெரிந்தது. Google க்காக டேவிட் வரைந்துகொடுத்த உலகப்பிரசித்தமான ஓவியத்தை எனக்கு காட்டிக்கொண்டிருக்கும்போது நான் ஒரு நிறக்குருடு என்று டேவிட் கண்டுபிடித்துவிட்டான். எனக்கு சிவப்புக்கும் பச்சைக்கும் வேறுபாடு காணத்தெரியாது என்று கண்டுபிடித்துவிட்டான்..
” என்னால் நம்பமுடியவில்லை. நேற்று 2 நிறக்குருடுகளை சந்தித்திருக்கிறேன். ஒன்று நீ. மற்றது இப்ப போன ஒலிவியா” உங்கள் இருவருக்கும் பச்சைக்கும் சிவப்புக்கும் வேறுபாடு காணத்தெரியாத நிறக்குருடு”
.ஐந்து மணிக்கு டேவிட் கடையை மூடியபின்னர் எனக்கு போக இடமிருக்கவில்லை. இருந்தாலும் என் கவுன்செலர் எட்டே வியக்கும்படி நான் இன்றிரவு குடிக்காமலிருக்க சபதமெடுத்தேன். எட் சொன்னபடி மேலும் நடந்தே இந்த இரவைக்கடக்க விரும்பினேன். காட்டு ஊரின் ஊடே ஓடுகிற சிற்றாறின் கரையோரம் போகும் ஒற்றையடிப்பாதையில் நடக்க ஆரம்பித்தேன். நான் நடக்க தொடங்கும்போதே அந்தி சாயத் தொடங்கிவிட்டது. ஒரு மணித்தியாலத்தில் வழி தொலைந்துவிட்டேன். இந்த சிற்றாறின் மூலம் ஒரு பெரிய செயற்கை ஏரி என்று வழியெங்கும் எழுதிவைத்திருந்தார்கள். அதற்குப் போகும் வழி தெரியவில்லை. இருட்டாகிவிட்டது. எனக்கு மறுபடியும் பியர் தாகம் வந்துவிட்டது. அருகில் உள்ள மதுச்சாலையை Google ல் தேடி நடந்தபோது ஒரு கிராமிய பண்ணைவீட்டின் மத்தியிலுள்ள அழகிய Royal Cricketers Arms மதுச்சாலைக்கு வந்தடைந்தேன்.
ஒரு பியர். ஓரேயொரு பியர் குடித்துவிட்டு ராக்சி பிடித்து வீடேகுவதுதான் என் திட்டம். ஆனால் அந்த கிராமிய மதுச்சாலையின் அழகு மட்டும் என்னை கட்டிப்போடவில்லை. ஏரிக்கரையில் இருக்கும் பப் என்று எழுதிவைத்திருந்தார்கள். ஒரு பழங்கால மாளிகையை மதுச்சாலை ஆக்கியிருந்தார்கள். மாளிகைக்கு முன்னும் கொல்லைப்புறத்திலும் சிறு சிறு குதிரைத் தொழுவங்கள் இருந்தன. குதிரைகளில்லை. அங்கெல்லாம் குடும்பங்களாக இருந்து மிக அழகாக உடுத்திய மக்கள் குடித்துக்கொண்டும் உணவருந்திக்கொண்டுமிருந்தார்கள். சில பழைய குதிரை வண்டிகளுமிருந்தன. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் இரண்டு பார்கள் இருந்தன. தனியாக இருந்து ஒரு சிறுகொட்டிலில் குடித்துக்கொண்டிருந்தது நான் மட்டுமே..எனக்கு மட்டுமேன் இப்படியெல்லாம் நடக்கிறது?
என் வீட்டிலிருந்து ஒன்றரை மணிநேர நடைத்தூரத்தில் இந்தச் சுவர்க்கமிருந்திருக்கிறது. அம்புலிமாமா கதைகளில் வருகிறமாதிரி ஒரு ஏணியைப்பிடித்து ஏறினால் சுவர்க்கம் என்கிற தூரத்தில்.
கடந்த 5 ஆண்டுகளாக காட்டு ஊரைவிட்டு நான் எங்கும் போகவில்லை. ஏரியிலிருந்து இளவெப்பமான தென்றல் வந்துகொண்டிருந்தது.
Old Speckled Hen என்றொரு அருமையான ஆங்கிலேயரின் பியர் அங்கு பருகக்கிடைத்தது. பரவசமடைந்துவிட்டேன். புகைப்பதற்காக வெளியே வந்தால் கருணா அம்மானின் தேனகம் மட்டக்களப்பு பண்ணைவீடு போலிந்தது. அப்ப நான் இதுவரை காட்டு ஊர் மதுச்சாலையில் குடித்தவை மட்டரகமானவைதானே. விலை அதிகம். ஆனால் கிளாஸ் அளவும் அதிகம். அன்றிரவு முடியும்வரை மது அருந்தி மட்டையாகியிருப்பேன். ஆனால் அந்த பண்ணை மதுச்சாலை இரவு பத்து மணிக்கு மூடிவிடுவார்கள். பிறகு ராக்சி பிடித்து 10 நிமிடத்தில் வீடுவந்துவிட்டேன். அழகான பயண அனுபவங்களோடு சாப்பிட்டுவிட்டு தூங்கினேன். நாளைக்கும் வேலைக்கு போகவேண்டியதில்லையே என்ற நினைப்பு சந்தோசமாக இருந்தது.
அடுத்தநாள் காலை எழும்பியபோது குடி உபாதைகள் எதுவுமிருக்கவில்லை. நிறையப்பசி எடுத்தது. வழமையாகச்சாப்பிடும் ஓட்ஸ், புல்லருசி, தினை, சாமைத்தினை கலந்த சீரியலை பாலும் தேனுங்கலந்து உண்டேன். என்றைக்குமில்லாதவாறு மிகச்சுவையாக இருந்தது. அதனோடு இரண்டு அவித்த முட்டையும் ஒரு வாழைப்பழமும் சாப்பிட என் பசி அடங்கியது. எட்டை சந்திக்கவிருப்பது பரவசமானதாகப்பட்டது. ரயில் பிடிக்காது அனுபவித்து நடந்தே போனேன்.
இரண்டாம் நாளிலிருந்து நானும் எட்டும் நெருக்கமாகிவிட்டோம். ஏழாம் நாள் முழு உண்மைகளையும் எட்டிடம் சொல்லிவிட்டேன். கதிர்காமர் கொலையை நான் செய்தது பொட்டம்மானுக்கும் ஜெகனுக்கும் மட்டுமே தெரியும். ஜெகன் இந்தோனேசியாவிலிருந்து சென்ற புலிகளின் ஆயுதக்கப்பலில் இலங்கைக்கு போகும்போது அங்கப்பல் முற்றாக அழிக்கப்பட்டதால் இறந்துவிட்டான். அம்மான் இறுதியுத்தத்தில் இறந்துவிட்டார். கதிர்காமர் கொலை வழக்கில் எதிரியாக எனது பெயர் இன்னமும் இல்லை. எனது பங்களிப்பு பற்றி இதுவரையில் எதுவும் இலங்கை விசாரணையாளர்களிடம் இல்லை. நான் இப்போது ஒரு போலிப்பெயரிலேயே ஒஸ்றேலிய குடிமகனாகியிருக்கிறேன். ஆகவே நானாக இந்த தகவல்களை ஒஸ்றேலிய சட்டத்துறையினரிடம் சொல்லாதவரை நான் பிடிபடுவதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு. என்னுடைய கெட்ட காலத்திற்கு நிலமை மோசமானாலும் ஒஸ்றேலியக் குடிமகனான என்னை இலங்கைக்கு நாடு கடத்த முடியாது. ஆகவே இந்தப்பயங்களால் எனது வாழ்வை நான் தொலைக்கக்கூடாது என்று எனது ரகசியங்களை கேட்டபின் எட் சொன்னான். எனக்குப் பெரிய நிம்மதியாக இருந்தது.
தினமும் காலையில் ஒன்றரை மணித்தியாலம் நடந்துபோவேன். 11 மதிக்கு கவுன்செலிங் முடிய எட் என்னை தன்னோடு மதியம் சாப்பிட பரமட்டாவுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய றெஸ்ரோரண்டுக்கு அழைத்துப்போவான். உண்மையில் அவன் அழைத்துப்போவதில்லை. நகரத்தில் சந்து பொந்து எங்கும் கமெராக்கள் உள்ளன. இந்தக்காலத்தில் நீ ஒருவனை கொல்லவேண்டுமென்றால் அவனை வசியம்பண்ணி காட்டுக்கு கூட்டிச்சென்று கொன்றால் தான் தப்பலாம் என்று சொல்லிவிட்டு நாம் சந்திக்கவேண்டிய றெஸ்ரோறன்ரின் பெயரைச் சொல்லுவான். இருவரும் தனித்தனியே வெளியேறுவோம். நான் ஸ்மாட்போன் கூகிள் படத்தை பார்த்து அங்கு போவேன் இன்னொரு 45 நிமிடங்கள் எட் எனக்காகச் செலவளித்தவைகள். அவன் தன் தொழில் தர்மத்தையே மீறி என்னோடு சட்டவிரோதமான எழுதப்படாத ரகசிய ஒப்பத்தந்தத்தை செய்ததில் எங்களிருவரினதும் பரஸ்பர நலன்கள் இருந்தன.
எட்டும் எனது தொழிற்சாலை உரிமையாளர் கிழவிபோல ஒரு யூதன்தான். அடுத்த வருடம் இலையுதிர்காலம் தொடங்கும்போது அவன் உலகப்பயங்கரவாதங்கள் பற்றி கலாநிதிப்பட்டம் படிக்க அவனுக்கு ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் கிடைத்திருக்காம். என்னை அவன் சந்தித்தது பெரும்பேறாம். என்னால் தனது கலாநிதிப்பட்டபடிப்பை தான் புலிகளைப்ப்றிச் செய்யப்போகிறானாம். என்னிடமிருந்து தான் புலிகளைப்பற்றிய தனது ஆய்வு ஈடுபாடு வந்ததாம்.
என்னுடைய பத்து நாள் கவுன்சிலிங்கும் ஒரு இன்பக்கனவுபோல் தோன்றி மறைந்தது. ஊரில நான் இயக்கத்துக்கு போகமுதல் வந்த சித்திரை மாத பள்ளி விடுமுறைபோல வந்ததும் போனதும் தெரியாமல் மறைந்த சந்தோசம். என்னால் ஒஸ்றேலியத் தினசரி Sydney Morning Herald வாசித்தனுபவிக்கமுடிகிறதை அறிந்த எட்தான் என்னை ஒருநாள் பரமட்டா நூலகத்திற்கும் அழைத்துப்போனான். அங்கு தமிழ் நூல்கள் இருந்தது நம்மிருவருக்கும் வியப்பு. நான் அவன் இனமான யூதர்களைப்பற்றி அறிய அதிக கேள்விகளை கேட்டதால் அந்நூலகத்தில் சிறுவர் பகுதியில் இருந்த ஒரு யூதர்களைப்பற்றிய ஆங்கில நூலை எனக்கு சிபார்சு செய்தான். நான் அன்றே அந்நூலக அங்கத்தவராகி அந்நூலை வீட்டுக்கு எடுத்துச் சென்றேன்.
இந்தப்பத்து நாளும் குளிர்காலம் இன்னும் முடியவில்லை. எட்டோடு மதியம் சாப்பிட்டுவிட்டு ஊரில் நிலவு பொழிகிறமாதிரியான சிட்னிக்குளிர்கால வெய்யிலில் மறுபடியும் இன்னொரு ஒன்றரை மணித்தியாலம் நடந்தே வீட்டுக்குப்போவேன். ஒவ்வொரு நாளும் இந்த நிலவில் வானதியோடு நான் நடந்துபோகக் கொடுத்துவைக்கவில்லையே என்று நினைப்பு வரும். எட் வளர்ந்த மருமகனுக்கு மாமா போல என்னோடு அன்று பேசிய அலையலையாய் வரும் உரையாடல்களை யோசித்துக்கொண்டு வீட்டுக்கு வர மனசார நல்ல நித்திரை வரும். தூங்கிவிடுவேன். ஒரு மணித்தியாலத்தில் நித்திரை முறியும்போது எட் இல்லையே இப்போது பேச என்கிற நித்திரைத்துயர் வரும். அதை மறக்க உடனே எழுந்து அவசர அவசரமாக முகங்கழுவி டேவிட் கோப்பிக் கடையை மூட முதல் அவனிடமோடுவேன். அங்கு ஒலிவியா போட்டுத் தரும் கோப்பிகளைக் குடித்துக்கொண்டு டேவிட்டோடும் ஒலிவியாவோடும் பேசுவதில் நேரம்போகும். ஐந்து மணிக்கு டேவிட் கடையை மூட அவனுக்கு உதவிவிட்டு வீட்டுக்கு வந்து சமைப்பேன். அடுத்தநாள் எட்டுடன் என்ன பேசலாம் என்ற நினைப்பே இருக்கும். நான் குடியை விட புனர்வாழ்வு பெற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதை என் வெள்ளைக்கார குடிகார நண்பர்களிடம் சொல்லியிருந்ததால் அவர்கள் தொலைபேசியிலழைத்து என்னை தொந்தரவு செய்ததில்லை. பின்னேரம் ஆறரைக்கு நான் சமைத்துமுடிய நல்ல பசிவரும். (இன்று மூன்று மணித்தியாலங்கள் நடந்திருக்கிறேனல்லவா) எனது சமையலை நானே வியந்து அனுபவித்து சாப்பிடுவேன். மடிக்கணினியில் ஏதாவது பார்த்துக்கொண்டிருக்க நல்ல நித்திரை வரும். ஒரு சிகரெட் புகைத்துவிட்டு எட்டு மணிக்குப்படுத்தால் அடுத்தநாள் காலை 7மணிக்குத்தான் எழும்புவேன்.
ஐந்தாம் நாள் வெள்ளிக்கிழமைதான் நான் கிலேசப்பட்டேன். 5 மணிக்கு டேவிட் கடையை மூடியபின்னர் நாளைக்கு சனிக்கிழமை ஆச்சே. எட்டை பார்க்கமுடியாது என்ற நினைப்பு வந்தபோது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதற்கிடையில் எனது கால்கள் என்னையறியாமலே ஒரு நிமிட நடைதூரத்திலுள்ள காட்டு ஊரின் மதுச்சாலைக்கு கொணர்ந்து சேர்த்துவிட்டது. அன்று வழமையான மற்ற வெள்ளைக்காரர்களைக் காணமுடியவில்லை. கிறீ மட்டும் தனியேயிருந்து குடித்துக் கொண்டிருந்தான். இருவருமே பரஸ்பரம் பரவசப்பட்டோம்.
எனது புனர்வாழ்வுக் கதையைச் சொன்னேன். மிக அனுதாபத்தோடு காதுகொடுத்துக்கேட்டான். மூன்று பியர் உள்ளே போனதும் அவனிடம் இரகசியம் காக்குமாறு சத்தியம் வேண்டிக்கொண்டு கதிர்காமரைக் கொன்றதையும் பொட்டம்மான் செய்த துரோகத்தையும் சொன்னேன். ஒவ்வொரு முறையும் என் ரகசியங்களை பயங்களை இன்னொருத்தரிடம் சொல்லும்போது நான் மிகவும் ஆசுவாசப்படுகிறேன். பெரிய விடுதலை அடைந்ததான உணர்வைப் பெறுகிறேன். இந்த ஏழு நாட்களில் மட்டும் எனது முதலாளிக் கிழவி, எனது கவுன்செலர், இப்போது இந்த குடிகாரக் கிழவன் கிறீ என்று மூவரிடம் சொல்லியிருக்கிறேன்.
எங்களுடைய மற்ற வெள்ளைக்கார நண்பர்கள் தாமதமாக வந்தார்கள். நானும் கிறீயும் குடித்துக்கொண்டிருந்த மேசைக்கு வந்த அவர்களை “வருணுக்கு குடியிலிருந்து விடுபட கவுன்சிலிங் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இது தனிப்பட்ட உரையாடல் மன்னிக்கவும்.” என்று கிறீ கலைத்துவிட்டான்.
” You mother fuckers. குடித்துக்கொண்டே குடியிலிருந்து விடுபட இன்னொரு ஸ்ரீலங்கன் வந்தேறி குடிகாரனுக்கு ஆலோசனை கொடுக்கிறாயா. Arseholes” என்று பக்கத்து மேசையிலிருந்து திட்டிக்கொண்டிருந்தார்கள்.
கிறீயின் மனதுக்கினிய எழுத்தாளன் யாரோ கனேடிய ஸ்ரீலங்கன் மைக்கல் ஒண்டாச்சியாம். ஒண்டாச்சி ஒரு தமிழ் பறங்கியனாம். இன்றிரவு எனது கதையேக்கேட்டவன்
” உனது கதை ஒரு ஒண்டாச்சியின் நாவலைப்படிப்பதுபோலவே இருக்கிறது” என்றான்.
கிறீ தனது கதையையும் சொன்னான். அது இப்போது ரகசிமில்லையாம்.
” உனக்குத் தெரியும் நான் கனடாவிலிருந்து என்னை பெற்றதை விரும்பாத என் அம்மாவிடமிருந்து தப்பியோடவே கப்பலில் 15 வயதில் வேலைக்குச்சேர்ந்து இங்கு வந்தது. உனக்குத் தெரியாதது நான் இப்போது கிழவனாகிவிட்டபோதும் எனக்கு முன்னர் வாழ்வும் வீடுகள் இருந்தபோதும் இப்போது எனக்கும் இப்போது உன்னைப்போல வீடு இல்லை. குடும்பம் இல்லை. எனக்கு முன்று மனைவிகளிடமிருந்து ஐந்து குழந்தைகள் உண்டு. எண்ணற்ற Girl Friends இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இரண்டு பேரக்குழந்தைகள் உண்டு. ஆனால் என்னிடம் பணமோ சொத்துக்களோ இல்லை. சின்ன வயசிலிருந்தே வாசிப்பில் ஈடுபாடு வந்ததால் சுயமாக இலக்கியம், அரசியல் என்று படித்து நான் ஒரு புத்திசீவியானேன். அது வேறு கதை. ஆனால் எனக்கு முறையான கல்வி இல்லை. என்னுடைய பிரெஞ்சு, ஆங்கில மொழியறிவுகள் மட்டுமே உண்டு. உன்னைப்போலவே 15/16 வயதில் வாழ்வைத் தொலைத்துவிட்டு இன்றும் நிம்மதியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
1955ம் ஆண்டு நான் கப்பலிலிருந்து வடக்கு ஒஸ்றேலியாவில் இறங்கியபோது ஒஸ்றேலியா நல்ல நாடுமல்ல. மோசமான நாடுமல்ல. ஆனால் என்னுடைய நாற்பது வயதில் 1975ல் ஒஸ்றேலியா செல்வச்செழிப்பாய் இருந்தது. ஆனால் எனக்கு எப்போதுபே இங்கு நிரத்தரத்தொழில் இருந்ததில்லை. உனக்குத்தெரியும் நான் அழகன். நான் போன ஒஸ்றேலிய நகரங்களிலெல்லாம் என்னை பெண்கள் துரத்தித்துரத்தி காதலித்தார்கள். என் இளமைக்காலப்பிரச்சனைகளும் இளமை தந்த அதீத நம்பிக்கைகளும் என்னைப் போதைக்கு அடிமையாகிவிட்டன. இலகுவாகப் பணம் சம்பாதிக்க நான் ஒஸ்றேலியாவில் அதிக காலம் போதைப்பொருள் வியாபாரிகளுக்கே வேலை செய்திருக்கிறேன். மூன்று தடவைகள் மொத்தமாக வெறும் 5 வருடங்கள் மட்டுமே என் சாமர்த்தியத்தால் சிறையிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். நீ என்னை அந்த ஏரிக்கரை பப்புக்கு உன்னோடு குடிக்கவரவேண்டுமென்று கேட்கிறாய். சிட்னியின் மிக அழகான மதுச்சாலைகளிலெல்லாம் அனுபவித்துக் குடித்தவன் நான். நான் இந்த கடைகெட்ட காட்டு ஊருக்கு வந்தது ஒரு விபத்து. 4 ஆண்டுகளுக்கு முதல் என் நீரழிவு நோய் முற்றி ஆஸ்பத்திரியிலிருந்து மீண்டபின் என் குழந்தைகள் தம்வாழ்வின் வசந்தங்களை உருவாக்கி பறந்துவிட்டார்கள். மனைவிகள், பெண் நண்பிகளைப்பற்றி பற்றி சொல்லவே வேண்டாம். எனக்கு வசிக்க அரசாங்கம் இந்த காட்டு ஊரில் ஒரு வீடு தந்ததால் இங்கு வந்தேன். நடைத்தூரத்தில் இந்த மதுச்சாலை இருப்பதால் இங்கு வருகிறேன். உண்மையில் சிட்னியில் உள்ள மிக மோசமான மதுச்சாலை இதுதான். இப்போதே பார். இந்த மதுச்சாலையில் மிகச்சொற்ப பெண்களே இருக்கிறார்கள். அவர்களும் கிழவிகளும் சூதாடிகளும். நீ சிட்னி நகருக்கள் பத்து மைல்தூரத்துள் உள்ள மதுச்சாலைகளுள் போய்ப்பார். பாதிப்பேர் இளம்பெண்களாயிருப்பார்கள். இந்த Pub ஒரு அவலமான நாடகக்கொட்டகை. எப்போதாவது உன்னைப்போல ஒரு சிலரைச் சந்திக்கிற இரவுகள் விதிவிலக்கு. மற்றப்படி பார் வருண். நம்மைத்திட்டிக்கொண்டு இப்போது குடித்துக்கொண்டிருக்கிற நமது அனைத்து குடிகார நண்பர்களும் White Trash என்கிற வெள்ளைக்காரன்களே.
உனது சிக்கல்கள் சிக்கலானவைதான். ஆனால் அதற்காகத்தானே நீ இப்போது உளவளச்சிகிச்சையும் புனர்வாழ்வும் பெற்றுக்கொண்டிருக்கிறாய். நீ இதிலிருந்து மீள்வாய். இளமையின் உச்சத்திலிருக்கிறாய். உனக்கு என்ன இப்ப 25 வயதிருக்குமா? ஏன் இந்த கேடுகெட்ட காட்டு ஊரிலிருக்கிறாய். இங்கிருந்து ஓடிவிடு. முடிந்தால் சிட்னியை விட்டே ஓடி மெல்பேணுக்கோ பிறிஸ்பேனுக்கோ ஒரு புதிய நகருக்கு ஓடிவிடு. ஒரு Girl Friend மாட்டுவது சிரமமான காரியமல்ல. நீ உன் கடந்த காலப்பேய்களிடமிருந்து மீளவேண்டும். “
இந்த விடயங்களை சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒலிவியா ஒரு பியரோடு வந்தாள். என்னைப்பார்த்து சிரித்துவிட்டு அருகிலிருந்த மேசையில் ஒரு சிகரெட் புகைத்தாள். அனைத்து ஆண்களும் அவளை ஒரு தடவை பார்த்தார்கள்.
“இந்தக்கோப்பிக்கடைக்காரியை உனக்குத்தெரியுமா” என்று கிறீ கேட்டான்.
நான் கோப்பிக்கடைக்கு இப்போது அனுதினமும் போவதைச்சொன்னேன்.
” அப்ப ஏன் நீ இவளையே மாட்டக்கூடாது. என்னாலேயே இவளை மாட்டமுடியும்”
என்றான்.
ஒரு நிறக்குருடான எனக்கு இரவுகள் பகலை விட அழகானவைகள். ஆனால் இந்த இரவு பேரழகானது. நானே கிறீக்கு அனைத்து பியர்களையும் வாங்கிக் கொடுத்தேன். கிறீக்கு புனிதமான நாள் சனிக்கிழமைகள். சிட்னியில் குதிரைப்பந்தய நாட்கள். ஆகவே அவன் வெளியேறி நாளைக்கு பகல் பத்துமணிக்கு இங்கு பந்தயப்பணம் கட்டவேண்டுமென்று வெளியேற அவனோடு கூடி நானும் வெளியேறும்போது நமது குடிகார நண்பர்கள்
” கிழட்டு கிறீ இந்த இளம் ஸ்ரீலங்கன் அகதியை வீட்டுக்கு கூட்டிக்கொண்டுபோய் ஓழ்” என்று சபித்தார்கள்.
அப்போது கடைசிப் புகையை இழுத்துவிட்டு ஒலிவியா என்னை ஒரக்கண்களால் பார்த்து புன்னகைத்தாள்.
அடுத்தவாரமும் இப்படியே போயிற்று. எட்டின் கவுன்சிலிங், டேவிட்டின் கோப்பிக்கடை, ஒலிவியா.. வெள்ளிக்கிழமை இரவு மட்டும் காட்டூர் பப்புக்கு போய்க்குடித்தேன். சனிக்கிழமை பரமட்டா நூலகத்துக்குப் போய் நாலு மணித்தியாலம் அங்கிருந்துவிட்டு வீட்டுக்கு வந்து மட்டக்களப்பில் அம்மாவோடும் கனடாவில் மாமாவோடும் தொலைபேசியில் அதிகளவுநேரம் கதைத்தேன். எனக்கே பெரிய குற்ற உணர்ச்சியாக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடை தூரத்திலிருந்த கிறீ வீட்டுக்கு காலையில் ஒரு நல்ல விலைகூடின வைன்போத்தலும் வாங்கிக்கொண்டு என் வீட்டு பிறிட்ச்சிலிருந்த மாட்டு ஸ்ரேக் இறைச்சியோடும் போனேன். ஸ்ரேக்கை வதக்கி உருளைக்கிழங்கை பேக் பண்ணி வைன் அருந்தினோம். கிறீ ஒரு கஞ்சா சுருட்டித்தந்தான். மட்டக்களப்பானான எனக்கு கஞ்சா புதினமல்ல. ஆனால் எங்கட இயக்க காலத்தில் எனக்கு ஒருக்காலும் கஞ்சா புகைக்கவோ கஞ்சாக்கோப்பி குடிக்கவோ எனக்கு கிடைக்கவில்லை. முதல் முறையாக கஞ்சாவை இழுத்தபோது எனக்கு இந்தோனேசியாவில் ஜெகன் என்னை நட்டாற்றில் விட்டுப்போன பயம்தான் வந்தது. சத்தியெடுக்கப் போகிற மாதிரியும் வந்தது. எனது வலது தோள்மூட்டு வலிக்கத்தொடங்கியது.
எல்லாம் முடிய பின்னேரம் தன்னோடு நானும் வந்து பப்பில் குடிப்பேன் என்று கிறீ எதிர்பார்த்திருந்தான். நான் அவனை வெட்டிவிட்டு வீட்டுக்கு வந்தேன். அம்மாவின் குரலைக்கேட்கவேண்டும் போலிருந்தது. இப்போதெல்லாம் புதிதாக பயம் அதிகமாகிறபோது எனக்கு அம்மாவின் குரலை பத்து நிமிசம் கேட்கவேண்டும் என்ற ஆதங்கம்தான் வருகிறது. ஏனென்று தெரியவில்லை.
முந்தநாள் எட் எனக்கு கடைசியாக விடைகொடுத்தபோது தனது தனிப்பட்ட மோபைல் நம்பரைத்தந்து நீ எப்போதும் என்னோடு பேசலாம். பேசு என்றான். நீ பேசவிட்டாலும் நான் உன்னோடு பேசுவேன் என்று எனது நம்பரைக்கேட்டுப் பதிந்தான்.
கடைசியாக ஒன்று சொன்னான். சொனானான் என்பதை விடக்கேட்டான். நீ எப்போதாவது தற்கொலை செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறாயா? அப்படி தற்கொலை எண்ணங்கள் வந்தால் நள்ளிரவானாலும் urgent என்று text message அனுப்பு. நான் உடனேயே உன் அழைப்புக்கு பதிலளிப்பேன். “உனக்கு என்னை தேவையைவிட எனக்கு இப்ப உன்னைத் தேவை என்பதுதான் உண்மை” இதுதான் நாங்கள் பிரியும்போது எட் சொன்ன கடைசி வார்த்தைகள்.
அவன் கேள்விக்கு எனக்கு விடைசொல்ல நேரமிருக்கவில்லை. அன்று வீட்டுக்கு நடந்துவரும்போதுதான் எனக்கு இங்கு பலதடவை தற்கொலைசெய்யும் எண்ணம் இலேசாக வந்தபோதும் அம்மாதான் அந்த கெட்ட எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்தார் என்ற யதார்த்தம் உறைத்தது.
அம்மா உயிரோடு இருக்கும்வரை என்னால் எந்த அவலத்திலும் தற்கொலைசெய்து கொள்ளமுடியாது. நான் இராணுவத்தாலோ வன்னிப்புலிகளாலோ , கருணா அம்மாவின் படைகளாலோ கொல்லப்பட்டாலோ அல்லது நான் காணாமல் போனால் கூட என் அம்மா அந்த உண்மையை வருந்தித் தேறி சீவிப்பார். ஆனால் ஒன்பது வயதில் இரவில் ஒரு குரங்கை கட்டுத்துவக்கால் சுட்டுவிழுத்திய தன் மகன் அவலத்தில் தன் உயிரைத் தானே மாய்த்தான் என்ற உண்மை அம்மாவுக்கு தெரிந்தால் அடுத்தகணமே அவரும் தற்கொலை செய்துகொள்வார். நான் இறந்தபின்னரும் என்னால் என் அம்மாவின் தற்கொலையை தாங்கமுடியாது.
திங்கட்கிழமை பழையபடி வேலைக்குப் போனேன். உணவு இடைவேளையில் முதலாளிக்கிழவி என்னோடு உணவு உண்ணும் சாட்டில் எல்லாவற்றையும் கேட்டாள். எனக்கு வழங்கப்பட்ட கடைசி சந்தர்ப்பத்தை இழக்காதே என்று எச்சரித்தாள். என்னோடு புகைத்துவிட்டு போய்விட்டாள்.
பிறகு நான் குடியைக்குறைத்து விட்டேன். அம்மா சொன்னா மாமிசம் 4 நாள் சாப்பிடாமல் விரதம் இருக்கும்படி. எனக்கு மாமிசம் குடி தானே. நான் திங்கள், வியாளன், சனிக்கிழமைகளில் மட்டுமே குடித்தேன். எல்லா நாளும் டேவிட்டின் கோப்பிக் கடையே தஞ்சம்.
வேலையிலிருந்து வீட்டுக்கு நடந்துவந்து குளித்துவிட்டு கோப்பிக்கடைக்கு வருவேன். டேவிட்டின் கோப்பி மகிமையால் வியாபாரம் பெருகியது. டேவிட் ஆறு மணிவரை கடையை திறந்து வைத்திருந்தான். நான் மூன்று/நாலு கோப்பி குடித்து பசிவந்தால் சாண்ட்விச/பேகல் எல்லாம் வாங்கிச் சுப்பிடுவேன். டேவிட்டின் கடையில் நிறைய புதையல்கள் இருந்தன. நிறைய புத்தகங்கள். ஐரோப்பிய ஓவியப் புத்தகங்கள், நிர்வாணப் புகைப்படப் புத்தகங்கள். Fashion புத்தகங்கள். இரகசியமாகப் புகைக்க கடைக்குப் பின்புறத் தோட்டத்திலும் ஒரு கொட்டகை போட்டான். அது எனக்கு வரப்பிரசாதம். காட்டு ஊரில் திரியும் தமிழர்களுக்கு தெரியாமல் நான் அங்கிருப்பேன். அப்படி ஒரு நாளில்தான் அங்கிருந்த ஒரு புத்தகம் என்னை விடுதலை செய்தது. American National Rifle Association 2009ல் வெளியிட்ட ஆயுதப்புத்தகம். இந்நாள் வரை வந்த அனைத்து துப்பாக்கிகளினதும் படங்களோடும் அவற்றின் வரலாறு இன்னபிறத் தகவல்களோடும் வந்த புத்தகம். அந்தப்புத்தகத்திலிருந்துதான் நான் கதிர்காமரைக் கொல்ல உபயோகித்த ஸ்னைப்பரின் பெயரும் விபரங்களும் எனக்குத் தெரியவந்தது. நான் பாவித்த ஸ்னைப்பரின் பெயர் Steyr 69 SSG. உலகில் முதல்முதலாக குறிபார்த்துச்சுடுவதற்காக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஸ்னைப்பர். இன்று எத்தனையோ நவீன ஸ்னைப்பர்கள் வந்துவிட்டபோதும் 1969ல் கண்டுபிடிக்கப்பட்ட இத்துப்பாக்கியின் துல்லியத்தை உடைக்கமுடியவில்லை. எனது குண்டுகள் கதிர்காமரை வலியே இல்லாமல் கொன்றிருக்க வாய்ப்பில்லை. எனக்கு தரப்பட்ட பயிற்சிகளின் அடிப்படையில் தலையை விட மார்பு என் றேன்ஞ்சில் பட்டதால் மார்பில் 3 தடவை சுட்டேன். எனக்கு அவரை வலியில்லாமல் மண்டையில் போடும் வாய்ப்புக்கிடைக்கவில்லை. என் குண்டுகளால் அவர் தடுமாறி தலையில் பலத்த அடிபடவிழுந்ததை நான் பார்த்தேன். முதல் வெடியிலேயே அவர் மயங்கி நினைவிழுந்திருப்பார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும்போதும் இறக்கும்போதும் அவர் மயக்கத்திலேயே இருந்திருக்கவேண்டும். இவைகளை நான் அறிந்தது நான் பயன்படுத்திய ஸ்னைப்பர் பற்றிய அறிமுகத்தாலேயே.
கதிர்காமரை நான் அவரின் நித்திரையில் point blank rangeல் மண்டையில் போட்டிருந்தால் அவரை வலியே இல்லாமல் கொன்றிருக்கலாம். எல்லா கொலைகாரர்களுக்கும் அவர்களின் இலக்குகளுக்கும் பரஸ்பர Comfort Zone ல் கொல்லும் தூரம்/Firing Range கிடைப்பதில்லையே.
கொல்லப்படுவனின் வலியை விட கொல்பவனின் வலி பெரிது என்பதை நான் அறிந்ததும் இந்தப் புத்தகத்திலிருந்துதான்.
இக்காலத்தில் டேவிட்டின் கோப்பிக்கடையின் புகழ் அயலூர்களுக்கும் பரவியது. காட்டு ஊரில் இந்தியன், ஸ்ரீலங்கன் முதலிய வந்தேறிகளே அதிகம். ஆனால் அயலூர்களிலிருந்து நிறைய நாகரீகமான வெள்ளைப் பெண்களும் ஆண்களும் குடும்பங்களும் கோப்பிக்கடைக்கு வந்தார்கள். சனி ஞாயிறு காலையில் கடை நிறையச் சனங்களிருப்பார்கள். ஒலிவியாவைவிட இன்னும் சிலரை டேவிட் வேலைக்குச் சேர்த்தான். அப்படியிருந்தும் சனி ஞாயிறுகளில் வாடிக்கையாளரை சமாளிக்கமுடியாமல் கடை திணறும். ஒரு சனிக்கிழமை டேவிட்டும் அவனது சிப்பந்திகளும் திணறும்போது நான் சாப்பிட்ட பாத்திரங்களை காலிசெய்தும் உணவை விநியோகித்தும் உதவிசெய்தேன். பிறகு டேவிட் எனக்கும் கோப்பிபோடப்பழக்கி என்னையும் வேலைக்கு சேர்த்தான். சனி ஞாயிறுகளில் காலை எட்டு மணியிலிருந்து 12 மணிவரை நானும் அரக்கப்பரக்க வேலைசெய்தேன். அது எனக்கு மிகப்பெரிய வரமாகவும் விடுதலையாகவும் இருந்தது. என்னை வருண் என வெள்ளைக்குட்டிகளும் முதிரிளம் பெண்களும் ஆடவர்களும் அன்பொழுக அழைத்து ஆடர்கள் சொல்வதை மனசார ரசித்தேன். கோப்பி குடித்தபடி அவர்களில் சிலர் தங்கள் இரகசியங்களை சொல்லி ஆறுதலடைவார்கள்.
“அல்ககோலிலிருந்து விடுதலைபெறவே நான் உன் கடைக்கு வருகிறேன். எனக்கு கூலி தேவையில்லை”
என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் டேவிட் ஒவ்வொரு வாரமும் 250 டொலர்களை என் பொக்கற்றினுள் செருகுவான். அதைவிட எனது கோப்பிக்கும் சாப்பாடுகளுக்கும் கட்டணம் வேண்டமாட்டான்.
” எனது கோப்பியை விட உன்னைப் பார்க்கவே நிறைய வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். நீயில்லாத கிழமை நாட்காலைகளிலும் “வருண் எங்கே” என்று விசாரிக்கிறார்கள் என்பான் டேவிட்.
ஆனால் என்னைவிட டேவிட்டுக்கு கிழமை நாட்களில் வேலைசெய்யும் மார்க் என்கிறவனைத்தான் அதிகம் பிடிக்கும் என்பது எனக்குத்தெரியும். மார்க் என் வயதுக்காரன்தான். உயரமான கவர்ச்சியான வெள்ளையன். கனடாக்காரன். இந்தக் காட்டு ஊரில் அரிதான ஒரு ஒஸ்றேலிய வெள்ளைக்குட்டியை முகநூலில் காதலியாகப் பிடித்து இங்கு 6 மாதகால விசிற்றிங் விசாவில் வந்தவன். விபரமானவன். சனி ஞாயிறுகளில் அவன் தன் காதலியோடு சிட்னி கடற்கரைகளில் அனுபவிக்கப்போய்விடுவான். மார்க்கும் டேவிட்டைப்போல ஓவியன். கோப்பிக்கடையின் கதிரைகளையும் மேசைகளையும் இன்னுஞ் சிறப்பாக நகர்த்திவைத்தான் மார்க்தான் டேவிட்டைவிட சுவையான கோப்பி வடிக்கத்தெரிந்தவன். மார்க்கினுடைய காதலி மற்றில்டாவை பல தடவைகள் கண்டிருக்கிறேன். ஹொலிவூட் நடிகை Keira Knightely இன் இரட்டைச்சகோதரி போலவே இருப்பாள். அழகிலும் குணத்திலும் ஒலிவியா மார்க்கின் காதலிக்கு கிட்டக்கூட இல்லை. ஆனால் மார்க்தான் ஒலிவியாவின் முதற்பலி. இது எப்படி நடந்திருக்கமுடியும் என்று டேவிட் இன்றும் புலம்புவதுண்டு. ஒலிவியா மார்க்கை வசியம்பண்ணி டேவிட்டுக்கு தெரியாமலே அவனோடு கள்ளுறவை ஆரம்பித்துவிட்டாள். மார்க்கின் காதலிக்கு சில மாதங்களில் இது தெரியவந்தபோது அவள் உறவை முறித்துவிட்டுக் கலைத்துவிட்டாள். மார்க்குக்கு வேறு வழியின்றி கனடாவுக்குப் போய்விட்டான். மார்க்கின் காதலியைவிட இதனால் அதிகம் மனமுடைந்தது டேவிட்தான். ஆனால் டேவிட் ஒலிவியாவை வேலையைவிட்டு நீக்கவில்லை. தன்னைக்கட்டிப்பிடித்து கெஞ்சி அழுது மன்னிப்புக்கேட்டாளாம்.
மார்க் இல்லாத முதல்வாரத்தில் டேவிட் மனச்சோர்வு வியாதியால் பாதிக்கப்பட்டு வருந்தினான். இது என்னையும் டேவிட்டையும் மிக நெருங்கவைத்தது. பின்னேரம் ஆறுமணிக்கு ஒலிவியாவும் மற்ற இரு சிப்பந்திகளும் வெளியேறியபின் கடையைப் பூட்டிவிட்டு நானும் டேவிட்டும் உள்ளேயிருப்போம். I Miss Mark Heaps என்று டேவிட் அழத்தொடங்குவான். நான் அவனுக்கும் எனக்கும் கோப்பி வடித்துக்கொண்டு அவனை ஆறுதல் படுத்த முனைவேன். இப்படியான ஒரு நாளில்தான் டேவிட் தனது கடையின் இரகசிய நிலவறைக்கு என்னை இறக்கி அழைத்துச்சென்றான்.
“இந்த இரகசிய அறை எனது மனைவிக்கு கூட தெரியாது. இதற்குள் இறங்குகிற மூன்றாவது நபர் நீதான்’ என்றான். அவனது கோப்பிக்கடைக்கட்டடம் காட்டூரில் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதால் அக்கால நடைமுறைப்படி ஒரு நிலவறை- Cellar ஐயும் அமைத்திருக்கிறார்கள். கடையை வாடகைக்கு எடுத்தபோது டேவிட் அதனைத் திறக்கவுமில்லை. மார்க் வேலைக்குச் சேர்ந்தபின் அதனைக்கண்டுபிடித்து கனடாவின் Basement என்று அதிசயித்து அதனை தூசிதட்டி புனரமைத்து வர்ணம்பூசி டேவிட்டின் ஸ்ரூடியோ ஆக்கியிருக்கிறான். நிலவறை- பங்கருக்குள் முதல்முறையாக இறக்கியபோது பொட்டம்மானும் தலைவரும் நானும் வன்னியில் தலைவரின் பங்கர் Shooting Gallery க்குப்போன பரபரப்புத்தான் வந்தது. அங்கு டேவிட்டின் இதுவரை எனக்குத்தெரியாத நிர்வாண ஓவியங்கள் தொங்கின. ஒரு மிகச்சிறிய மினி Bar இருந்தது. டேவிட்
” இது மிகவிலையுயர்ந்த தென் ஒஸ்றேலிய வைன். நம் இரகசியங்களையும் காக்கவும் நம் துன்பங்களிலிருந்து விடுதலை செய்யவும் இந்த இரவுக்கு என்று சொல்லி ஒரு செம்மதுப்புட்டியை உடைத்தான். செம்மதுவின் நிறம் எனக்கு எப்போதும் மண்ணிற வாய்க்கால் நீரினது நிறம்தான். வாழ்க்கையில் நான் ஒருபோதும் செம்மது அருந்தியதில்லை. அவனது செம்மது வேறு லெவல். நான் உண்மையிலேயே கால்கள் தரையில் படாது தேவர்கள் நடப்பதைப்போல உணர்ந்தேன். அவ்விரவில் அந்த பங்கரில் கதிர்காமரைக்கொன்று பொலிப்பெயரில் அகதியாக இருக்கும் ரகசியத்தை டேவிட்டிடமும் சொல்லிவிட்டேன். எனது ரகசியம் என்னைவிட டேவிட்டை அவ்விரவு விடுதலைசெய்தது என்பதுதான் உண்மை. அவன் உண்மையிலேயே எனது ரகசியத்தால் தான் மார்க்கை பிரிந்ததை மறந்து பரபரப்படைந்தான். கதிர்காமரின் கொலை சீனை உன்னையும் வைத்து ஒரு ஓவியம் வரையவேண்டும் என்றொரு உந்துதல் வருகிறது என்று கண்கள் மினுங்கச் சொன்னான்.
மார்க் போனபிறகு டேவிட் என்னோடு மிகநெருக்கமாகிவிட்டான் என்பது ஒலிவியாவுக்கு வடிவாகத் தெரியும். அவள் அதன் பிறகு டேவிட்டை விட என்னைக்கண்டு அதிகம் மிரண்டாள். மார்க்குக்காக வேறு இரண்டு ஆண்களை டேவிட் வேலைக்குச் சேர்த்தான். அவர்கள் முரட்டு ஆண்கள். அருகிலுள்ள ஒரு வேலைவாய்ப்பு அரசநிறுவனம் நீண்டகாலம் வேலை செய்யாதிருந்தவர்களை டேவிட் வேலைக்கு சேர்த்தால் முதலிருமாத சம்பளத்தை தாமே வழங்குவோம் என்று சொன்னதால் டேவிட் அவர்களை வேலைக்கு சேர்த்தான். அவர்களிருவரும் ஒலிவியாவின் காதலரானது கூட டேவிட்டுக்கு பிரச்சனையில்லை. ஓரிரவில் டேவிட்டின் ஒறிஜினல் ஓவியங்கள் சிலதையும் கல்லாப்பெட்டியிலிருந்த பணத்தையும் கடையிலிருந்த கம்பியூட்டர்கள், iPad களையும் கடையை பிரித்து கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள். அடுத்த மாநிலத்துக்கு அவர்கள் சென்றபோது வேகமாக காரோட்டியதால் பொலீசாரிடம் டேவிட்டின் கடைச்சாவிகளுடன் மாட்டினார்கள். கடையில் திருடப்பட்ட iPads ஒலிவியாவின் வீட்டிலிருப்பதாக பொலிஸ் டேவிட்டிடம் சொன்னது.
கடுங்கோடைகால சனவரி இரவு எட்டு மணிக்கும் சூரியவெளிச்சமிருந்தது. நானும் டேவிட்டும் கடையை பூட்டிவிட்டு உள்ளேயிருந்து செம்மதுவோடு அரிய தஸ்மானிய சீஸ் கொரித்துக்கொண்டிருந்தோம். கடையின் Tinted கண்ணாடிகளுக்கு வெளியே எதிரேயிருந்த பஸ் ஸ்ராண்டில் ஒலிவியா தனியாக அழுவாரைப்போல காத்துக்கொண்டிருந்தாள். அப்போது டேவிட் ஒலிவியாவை வேலையைவிட்டுக் கலைத்துவிட்டான். வானதியும் இப்போது பனிவிழும் பெர்லினில் தன் மகளோடு ஒரு பஸ்ராண்டில் காத்துக்கொண்டிருப்பாளே என்ற நினைப்பு வருத்தியது. கதிர்காமரைக்கொன்ற அந்த நாளிலிருந்தே எனது வலது தோள்மூட்டு வலி போகவில்லை. அது உண்மையிலேயே Steyr SSG 69 ன் கொல்பவனின் Recoiling Effect வலியா? அல்லது பிரமையா என்பது எனக்குத் தெரியாது. இந்தோனேசியாவில் ஜெகன் என்னை நட்டாட்டில் கைவிட்டுப் போனபோதும் வாழ்வில் முதல் தடவையாக கிறீயோடு கஞ்சா புகைத்தபோதும் எனது வலது தோள் மூட்டில்தான் வலித்தது. காட்டூரில் உள்ள எந்த தமிழ் மருத்துவரிடமும் போய் இந்த உண்மைகளைச் சொல்ல எனக்குத் துணிவில்லை.
டேவிட் ஒலிவியாவை வேலையைவிட்டுக் கலைத்தபின்னர் தான் அவளும் கிறீயும் நெருங்கியிருக்கவேண்டும். அப்போது கிறீ 75 வயதை தாண்டிவிட்டான். அவன் செத்துக்கொண்டிருந்த நாட்கள். ஒலிவியாவுக்கு 21 வயதுதான். இளமையிலிருந்தே அவனுக்கிருந்த நீரிழிவு நோயினாலும் அவனது குடி புகையினாலும் நோய் முத்தி அவனது இடது பாதத்தை வெட்டிவிட்டார்கள். செயற்கைக்காலுக்கு விலையுயர்ந்த Boots போட்டு வருவான். இதை விட அவனது குத புற்றுநோயும் முற்றிக்கொண்டிருந்தது. ஒரு குளிர்கால சனிக்கிழமை பின்னேரம் காட்டு ஊர் பப்புக்கு போனபோது தான் ஒலிவியாவும் கிறீயும் இப்போது காதலர்கள் என்ற உண்மை தெரியவந்தது. வேலை போனபின் அடிக்கடி காதலன்களை மாற்றிக்கொண்டிருக்கிற ஒலிவியாவுக்கு யாரும் பியர் வாங்கிக்கொடுக்க முன்வரவில்லையென்றும் கிழவனும் மகா கஞ்சனானவனுமான கிறீதான் அவளுக்கு பியர் வேண்டிக்கொடுத்து அவளை மாட்டினான் என்றும் மற்ற வெள்ளைக் குடிகார நண்பர்கள் எனக்கு கொச்சையாகச் சொன்னார்கள். நான் அதனை நம்பவில்லை. ஒலிவியாவுக்கு மட்டுமல்ல ஒலிவியாவின் தாய்க்கும் ஒலிவியாவின் தந்தை யார் என்று தெரியாது. அவள் தாயின் காதலர்கள் எல்லோரும் அவளை வெறுத்திருக்கிறார்கள். தன் காதலர்கள் எல்லோரிலும் ஒரு தந்தையைத் தேடித் தோற்றவள் ஒலிவியா என்பது எனக்கும் டேவிட்டுக்கும் மட்டுந்தான் தெரியும். கடைசியில் செத்துக்கொண்டிருக்கிற ஒரு கிழக்காதலனில் தான் ஒலிவியா தன் தந்தையைக் கண்டடைந்தாள். கிறீ எனக்கு சவால் விட்டதை நிறைவேற்றிவிட்டான்.
அடுத்தநாள் டேவிட்டிடம் இந்தக் காதல் புதினத்தை நான் உடைத்தபோது அவன் முதலில் நம்பவில்லை. அதிர்ச்சியடைந்தான். சக்கர நாற்காலியில் உலாவுகிற கிறீயா என்று கேட்டான். பிறகு
” வேலைக்கு வந்த முதல் நாளிலிருந்தே ஒலிவியா எனக்கும் எறிந்துகொண்டு உரசிக்கொண்டுதான் இருந்தாள். என் மகளைவிடக் குறைந்த வயசு என்பதோ அவள் அழகி என்பதில்லை என்பது கூட எனக்கு பிரச்சனையில்லை. இளமைவிடவா அழகு பெரிசு? நானொரு கலைஞன். ஓவியன். கலை ஓவியம் தெரியாத பெண்களை என்னால் நெருங்கமுடியாது. நீயும் மார்க்கும் ஆண்களாயிருந்தாலும் உங்களை என்னால் மிக நெருங்கமுடிகிறது. ஒலிவியா பாவம். Poor Girl”
4. காட்டு ஆடுகள் வேட்டை சாகசம், விடுதலை, குயீன்ஸ்லாந்து
டேவிட்டின் கோப்பிக்கடை திறந்து மூன்று ஆண்டுகள் சென்றிருக்கும். தன்னுடைய ஓவிய வாழ்வில் “இந்தக்கோப்பிக்கடையில் நான் கற்றனுபவித்தவைகள் வேறெங்கும் அனுபவித்ததில்லை” என்றொருநாள் தன் நிலவறை ஸ்ரூடியோவில் எனக்குச் சொன்னான். அவன் இறக்கும் வரை இந்தக்காட்டூரின் ஒரே அதிசயத்தை நடத்துவான் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் மாற்றங்கள் அதிசயவேகத்தில் நடந்துகொண்டிருந்தன. டேவிட்டின் கடைக்கு கிறிமினல் மோட்டபைக் கிளப் உறுப்பினர்களும் வரத்தொடங்கினார்கள். இவர்களில் சிலர் அவனின் ஓவியங்களால் கவரப்பட்டு தங்களது மோட்டார் சைக்கிள்களில் அதிக பணங்கொடுத்து கிராபிக்ஸ் பெயின்ரிங் பண்ண ஓடர் கொடுத்தார்கள். இதைவிட பல தனிப்பட்ட ஓவியங்கள் வரையும் கமிசன்களும் டேவிட்டிடம் வர அவனுக்கு கோப்பிக்கடைக்கு வரவே நேரமிருக்கவில்லை. கோப்பிக்கடையில் வரும் வருமானத்தை விட பலமடங்கு பணம் அவனுக்கு இந்த கமிசன்களிடமிருந்து வந்தது. சனி ஞாயிறுகளில் அவன் கோப்பிக்கடைக்கு வராததால் நானே மனேஞராக வேலைசெய்யவேண்டியிருந்தது.
உடம்பு முழுக்க பச்சை குத்திய ஜேம்ஸ் என்கிற மோட்டபைக் கிளப்காரன் என்னோடு நெருக்கமானது சனி ஞாயிறுகளில் நான் கோப்பிக்கடையை நடத்திக்கொண்டிருந்தபோதே. ஜேம்ஸ் அசல் வெள்ளைத்தோல் மனுசன். ஆனால் அவன் குயீன்சிலாந்து மாநில அபொரிஜனல் வம்சாவளியைச் சேர்ந்தவன். அவனுக்கு என்னைவிட பத்துவயது அதிகம். ஸ்னைப்பர் துப்பாக்கிகளின் மீதான அதீத காதலால் தான் ஜேம்ஸ் மோட்டபைக் கிளப்புகளில் சேர்ந்தான். தன் இளமைக்காலத்தை இந்தக் கிளப்புகளில் இழந்துவிட்டான் என்பதுதான் அவன் வருத்தம். அவன் கொலை ஏதும் செய்யவில்லை. இரு தடவைகள் ஆயுதங்களை கடத்தும்போது பிடிபட்டு இருவருடங்கள் சிறையிலிருந்தவன். இப்போது தன் எஞ்சிய முதிர் இளமையையாவது நல்லவழியில் செலவழிப்போம் என்று தன்னுடைய மூதாதையரின் பூமியான குயீன்சிலாந்து மாநிலத்தில் ஒரு பண்ணை, விவசாயம் செய்ய ஆசைப்படுகிறவன்.
“எனக்கு எத்தனை Girl Friends இருந்தது என்பது எனக்கே நினைவில்லை. பலருடைய பேரை நானே மறந்துவிட்டேன். எங்கோவோர் சாலைவளைவில் எப்போதாவது அவர்களை குடும்பம் குழந்தைகளோடு சந்திக்கிறபோது நான் உடனடியாக இனங்கண்டுவிடுவேன். அவளுகளும் இனங்கண்டுவிடுவாளவை. ஆனால் காட்டமாட்டாளவை போகும்போது எதேச்சயையாய் பார்க்கிறமாதிரித் திரும்பிப்பார்த்து என் நெஞ்சில் ரோஜாப்பூக்களின் முள்ளை சினைப்பர் துப்பாக்கி வைத்து சத்தமும் ரத்தமும் இல்லாமல் தைத்துப்போகிற வலியைத் தருவாளவை. என் மோட்டார் பைக்கிளப் இளமைக்காலத்து உச்சத்தில் என்னிடம் எப்போதும் கைநிறைய கறுப்புப் பணமும் கஞ்சாவும் ஹெரோயினும் இருந்தது. என்னோடு போதையையும் தம் இளமையையும் பகிர்ந்துகொண்ட பெண்ணில் ஒருவர் கூட இன்று என்னோடில்லை. அவளுகளுக்கு இன்று அன்பான புருசன், குழந்தைகள், வீடு, வேலை, செல்வம், சந்தோசம் எல்லாமுண்டு. என்னிடம் என் குற்ற வரலாற்றைவிட வேறெதுவுமில்லை. உலகத்திலேயே மிகமோசமான பெண்கள் சிட்னியின் வெள்ளைக்காரப் பெண்களே”
என்றொரு சனிக்கிழமை அவனும் நானும் கோப்பியும் சுருட்டும் அனுபவித்துக்கொண்டிருந்தபோது சொல்லியிருந்தான்.
நானும் ஜேம்சும் நெருக்கமானது (உங்களுக்கே தெரிந்திருக்கும்) சினைப்பர் துப்பாக்கிகள் பற்றிய உரையாடல்களால்தான். அவ்வாண்டு ஈஸ்டர் ஞாயிறு டேவிட்டின் கோப்பிக்கடை பூட்டு. ஜேம்ஸ் என்னை 150 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள தன் வெள்ளைக்கார நண்பன் லூக்கின் விவசாயப் பண்ணைக்கு அழைத்துப்போனான். மதியம் நண்பனின் அழகான இளம் குடும்பத்தோடு அரிய வைன் அருந்தி ஒரு முழுக் காட்டுப்பன்றியை தீயில்வதக்கிய இறைச்சியோடு அனுபவித்துண்டோம். லூக்கின் பேரழகியான மனைவியும் இரண்டு ஐந்து வயது, ஏழு வயது பெண்குழந்தைகளும் என்னை மிகப்பெரிய இளவரசனைப்போல மதித்தார்கள். அபொரிஜனல் ஜேம்ஸை அங்கிள் என்றதைப்போல என்னையும் அங்கிள் வருண் என்றழைத்தார்கள்.
(லூக்கின் பண்ணையில் காட்டு ஆடுகள் தொல்லை. அவற்றை கொல்லவேண்டுமென்றுதான் ஜேம்ஸ் என்னை அழைத்துப்போவதாகச் சொல்லியிருந்தான். ஏறத்தாள 300 ஆடுகள் லூக்கின் பண்ணைக்கு சேதம் விளைவித்து வருகின்றன. இதில் பாதியை இந்த ஸ்ரீலங்கன் வந்தேறி கொல்லுவான் என்று ஜேம்ஸ் தன் நண்பன் லூக்கிடம் உறுதியளித்தது எனக்கு தெரியாது)
மிக வெக்ககையான நாள் அது. விருந்தின் பின் லூக்கின் வீட்டு குளிரூட்ப்பட்ட விருந்தினர் அறையில் நானும் ஜேம்சும் தூங்கினோம். அன்று வானதி கனவில் வந்திருந்தாள். சத்தங்கள் கேட்டு நான் விழித்தபோது லூக்கின் பெண் குழந்தைகள் வேட்டை கொஸ்ரியூம்களிலிருந்தார்கள். லூக்கின் மனைவி தேநீரீம் கேக்கும் பரிமாறினாள். இனிய தேநீர். சுவையான கேக்.
லூக் என்னையும் ஜேம்ஸையும் தன் கொல்லைப்புற கராச்சுக்கு அழைத்துப்போனான். தன்னுடைய அப்பாவின் வேட்டைத்துப்பாக்கிகள் என்று மூன்று துப்பாக்கிகளைக் காட்டினான். இரு நவீன AR15 Panther Arms வேட்டைத் துப்பாக்களும் ஒரு பழங்கால Remington 700 துப்பாக்கியும். நான் Remington 700 துப்பாக்கியைத்தான் கையிலெடுத்தேன். என்னையும் கருணா அம்மானையும் நெருங்க வைத்ததே இந்த Remington துப்பாக்கிதான். தொப்பிகல மலைக்காட்டில் 1997 தை மாத இறுதியில் நானும் அவரும் மான் வேட்டைக்குப்போன இரவொன்றில் எங்களிருவரிடமிருந்தது இந்த வேட்டைத்துப்பாக்கிதான். ஒரு மானையும் விட்டுவைக்காது நான் வெடிவைத்தபோது அம்மான் சொன்னார்.
” டேய் , விதை நெல்லையும் தின்னுவியா. இவ்வளவு மான்களையும் தின்ன எங்கட பொடியளால முடியுமா”
ஆனால் இன்று இப்போது ஜேம்சும் லூக்கும் எனக்கு சொல்கிறார்கள். ” இந்த காட்டு ஆடுகள் ஓஸ்றேலியாவுக்கு உரியவை அல்ல. ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவந்த இவைகள் ஒஸ்றேலியாவின் சுற்றுச்சூழலுக்கு மிகப்பாதிப்பேற்படுத்துகின்றன. அனைத்தும் கொல்லப்படவேண்டியவை.
லூக் தன் மடிக்கணினியில் google Map Aerial view வில் தன் பண்ணையைப்போட்டுக்காட்டினான் பல நூறு ஏக்கர்கள் கொண்ட அவன் மாட்டுப்பண்ணையின் மேய்ச்சல் நிலம் ஒரு பீடபூமியில் அமைந்திருந்தது. மூன்று பக்கமும் ஏறத்தாள செங்குத்தான சரிவும் ஒருபக்கம் 45 பாகை சரிவும். பண்ணையைச்சுற்றி முன்று பக்கமாகவும் ஒரு சிற்றாறு ஒடுகிறது. ஒரேயொரு கணவாய் வழியாகவே லூக்கின் பண்ணைக்கு வரமுடியும். ஈஸ்டர் காலம்தான் காட்டு ஆடுகளின் இனப்பெருக்க காலம். ஈஸ்ரரில் பெருமழை பெய்தால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுக்கும். அக்காலத்தில் மறியாடுகள் ஏதோ காரணத்துக்காக கணவாய் வழியாக பண்ணையைசுற்றியோடும் ஆற்றுப் படுகைக்குள் வருகின்றன. மறியாடுகளைத்தொடர்ந்து கடாய்களும் உள்ளே வருகின்றன. இக்காலத்தில் பண்ணையின் மேச்சல் நிலத்துக்கு அவை செய்யும் சேதம் பெரிது செங்குத்தான சரிவுகளிலும் ஏறிவந்து பீடபூமியில் புற்தரைகளை தின்றுவிடுகின்றன.
லூக் சொன்னான்.
” உன்னிடம் துப்பாக்கி சுடும் உரிமம் இல்லை என்று நீ பயப்படவேண்டியதில்லை.. மேயர் எனக்கு மச்சான் முறையானவர். உள்ளூராட்சி சபையில் இன்றிரவு வேட்டையாட அனுமதி பெற்றுவிட்டேன். இது சிட்னி நகரமல்ல. ஒரேயொரு பொலிஸ்காரன் மட்டும்தான் இக்கிராமத்திலுள்ளான். அவனும் என் பள்ளித்தோழன். இதைவிட இவ்விரவு இரணடு அபொரிஜனல் தனியார் செக்கியூரிட்டிகளை கணவாயில் சென்றிக்கு போட்டிருக்கிறேன். அவங்களிடம் இரண்டு பிஸ்ரல்கள் உள்ளன. கணவாயில் நெருப்பெரித்து காவலிருப்பான்கள். காட்டு ஆடுகள் அவ்வழியாக தப்பமுடியாமல் அவ்வப்போது வெடிவைப்பதே அவங்களின் பணி. அவங்களிடமும் வோல்கி ரோக்கி உண்டு என்றவாறு என்னிடமும் ஜேம்சிடமும் ரேடியோக்களை தந்தான்.
நெஞ்சில் மகஸீன் பைகளை அணிந்து கொண்டிருக்கும்போது வேட்டை கொஸ்ரியூம்களில் லூக்கின் பெட்டைகளும் மனைவியும் வந்தார்கள். லூக்கின் மனைவி சாண்ட்விச்சுகளும் தேனீரும் தண்ணீரும் என்று மூன்று Back pack பைகளை எங்களிடம் தந்தாள். லூக்கின் கடைக்குட்டி ஒரு விளையாட்டு அம்பு லில்லோடு வந்திருந்தாள். Back pack பைகளில் லூக் மகஸீன்களை இட்டு நிரப்பினான்.
அப்போது பின்னேரம் 7 மணி. வெளிச்சமும் வெப்பமும் அப்போதுமிருந்தது. லூக்கின் டிஸ்கவறி 4 Wheeler பின்புறத்தில் எங்களுடைய துப்பாக்கிகளையும் வைத்தோம். லூக் எனக்காக முன்கதவை திறந்துவிட்டான். ஜேம்சும் லூக்கின் மனைவியும் இரண்டாம் வரிசையில் அமர்ந்தார்கள்.
பண்ணை வீட்டிலிருந்து லூக் வண்டில் பாதைகளில் வண்டியை ஓட்டினான். இருபுறமும் லூக்கின் ஆயிரம் மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. பண்ணை கடப்பு வாசலில் ஒரிளம் கறுப்பு அபொரிஜனல் பணியாளனும் வயதான வெள்ளைப் பணியாளனும் நின்றார்கள். கடப்பை அவர்கள் திறந்துவிடுகிறபோது லூக்
” எத்தனை ஆடுகள் உங்களுக்கு வேண்டும்” என்று கேட்டான்.
அடுத்த ஏழு நிமிடத்தில் கணவாய் சென்றிக்கு போனோம். லூக்கும் ஜேம்சும் நானும் வாகனத்திலிருந்து இறங்கி எங்கள் வோல்கி ரோக்கிகளை சரிபார்த்தோம். பிறகு சிறிதுதூரம் வண்டியோட்டிப்போய் வாகனத்தைவிட்டிறங்கி நடந்தோம். காட்டு ஆடுகள் அப்போதும் மேய்ந்துகொண்டிருந்தன.
இரவு வந்துகொண்டிருந்தது. நிலவும் வெகு தூரத்திலிலலை. லூக்கின் பெட்டைகளுக்காக 5 ஆடுகளைச் சுடடோம். தூக்கிவந்து காரில் போட்டோம். லூக் மனைவிக்கும் மகளுக்கும் விடைகொடுத்தான். அவர்கள் டிஸ்கவறி வாகனத்தில் ஏறி வீடேகியபின் வேட்டை தொடங்கியது.
ஈஸ்டர் நிலவில் நானும் ஜேம்சும் லூக்கும் பிளேன்ரீயுடன் ஒவ்வோரு சிகரெட் புகைத்தோம். பிறகு லூக்கின் பீடபூமி பண்ணையை அடிவாரத்தை சுற்றி நடந்து றெக்கி பார்த்தோம். பாதி தூரத்தை கடங்கவே முன்று மணிநேரம் ஆகிற்று. ஒவ்வொருவரும் ஒரு பாதி சாண்விச் சாப்பிட்டு விட்டு பிரிந்து போனோம்.
தேய்பிறை நாளாலும் இந்த புனித ஞாயிறு முழுநிலவிலிருந்து மூன்றாம் நாள் வந்திருந்தது. என்னால் ஆடுகள் இருக்கும் நிலையை மணக்க முடிந்தது. மலைச்சரிவிலிருந்து முதல் காணும் ஆட்டுக்கு சைலென்சர் போடாமல் வெடிவைப்பேன். பிறகு சைலன்சரை உடனடியாகப்போட்டு ஓடும் ஆடுகளுக்கு வெடிவைத்தேன். கொத்து கொத்தாக ஆடுகள் விழுந்தன.
நிறக்குருடான எனக்கு கடவுள் கண்ணை கொடுத்துவைக்கவில்லை. எனக்கு காதை மட்டும் பரிபூரணமாகக் கொடுத்தார். சைலன்சர் போட்டு Remington 700 ஆல் சுடும் என்னால் ஆட்டின் எப்பகுதியில் சூடு விழுந்தது என்பதை சத்தத்தை வைத்தே அறிய முடிந்தது. ஆட்டின் கொம்பிலோ வாலிலுலோ ஒரு Remington 700 வெடி விழுந்தால் மட்டுமே அவ்வாடு தப்ப வாய்ப்புண்டு. என் வெடிகள் ஒருபோதும் கொம்பிலோ வாலிலோ பட்டதில்லை. வேட்டையின் சுதியில் லூக்கையும் ஜேம்சையும் விட்டுப் பிரிந்துவிட்டு வெகுதூரம் போய்விட்டேன். என்னுடைய Back Pack இலிருந்த அனைத்து மகஸீன் கூடுகளும் வெற்றாகிய பின்னரே ஸ்மாட் போனில் லூக்கினதும் ஜேம்ஸினதும் லொக்கேசன்களைப் பார்த்தேன். அவர்களிடமிருந்த மகஸீன்களை அவர்கள் என்னிடம் கொண்டுவர குறைந்தது ஒரு மணிநேரமாவது ஆகும்.
மலையடிவார நிலவில் ஒரு கூலிபா மரத்தின் கீழிருந்து ஒரு முழுச் சாண்விச் சாப்பிட்டேன். பிறகு தேநீர் அருந்தியபடி சில சிகரெட்டுகள் புகைத்தேன். இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வானதி என்னோடு இருந்திருக்கவேண்டும். அப்படியே தூங்கிவிட்டேன். லூக்கும் ஜேம்சும் என்னை எழுப்பினார்கள். வழியெங்கும் ஏராளமான இறந்த ஆடுகள் இருந்தன என்றார்கள்.
அவர்கள் சாக்களையோடிருந்தார்கள். எனக்கு களைப்பே தெரியவில்லை. நான் லூக்கின் Panther Arms துப்பாக்கிக்கு மாறினேன். இதுவும் ஒரு மோசமான வேட்டைத்துப்பாக்கி அல்ல. Automatic காருக்கும் Manual காருக்கும் இடையிலான வேறுபாடு போன்றதே இத்துப்பாக்கிகளுக்கிடையிலான வேறுபாடுகள். மூவரும் சேர்ந்தே வேட்டையாடினோம். அனைத்து ரவைகளும் தீர்ந்தபின் அதிகாலை 5 மணியாகிவிட்டது. லூக்கின் வீட்டுக்கு நடந்து போக இன்னொரு 3 மணித்தியாலங்களாவது தேவை. இறுதி சாண்ட் விச்சுக்களைச் சாப்பிட்டுவிட்டு தேநீரோடு புகைத்தபோது ஜேம்ஸ் என்னுடைய வெற்று மகஸீன் கூடுகளை எண்ணிவிட்டு
” 250 ரவைகளை பாவித்திருக்கிறாய். எத்தனை ஆடுகள் இறந்திருக்கும்” என்றான்.
நான்
ஒரு ஆடுகளுமே தப்ப வாய்ப்பில்லை. ஆற்றின் மறுகரையில் பாதி ஆடுகள் சடலமாகக் கரையொதுங்கும் என்றேன்.
லூக்குக்கு தூக்கிவாரிப்போட்டது.
” நானும் ஜேம்சும் ஒரு ஐம்பது ஆடுகளை கொன்றிருப்போம். அப்ப முழு ஆடுகளும் காலி. ஆற்றின் மறுகரை வேறொரு உள்ளூராட்சி சபைக்கானது. இப்போதே என் முகநூலில் ஒரு பதிவு போடுகிறேன். அவர்கள் அந்த ஆடுகளை எடுத்து புசித்துண்ணட்டும். “
லூக் தன் முகநூலில் ஒரு பதிவு போட்டபின் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். கிழக்கு வெளுக்கத் தொடங்கியது. பாதிவழியில் தனது முகநூலை ஒரு தடவை லூக் பார்த்துவிட்டு
” வாவ் அதற்கிடையில் எனது வேட்டைப் பதிவுக்கு 190 லைக்கும் 85 shareம் ஆச்சு. மிக்க நன்றி வருண்” என்றான்.
கணவாய் சென்றியிலிருந்த இரண்டு அபொரிஜனல் செக்கியூரிட்டு காட்டுகளும் ஒரு ஆட்டை தீயில் வதக்கிக்கொண்டிருந்தார்கள். மிகப் பரபரப்போடும் மரியாதையோடும் எம்மை வரவேற்றார்கள்.
லூக் அவர்களிடம் பேசவில்லை. அவர்களின் இனமான ஜேம்ஸே அவர்களிடம் பேசினான் .
” சகோதரர்களே மொத்தமாக 300 ஆடுகள் பலி. பண்ணைக்கு 25 ஆடுகளை கொண்டுவருவதே உங்களது கடைசிப்பணி. மிகுதி ஆடுகள் முந்துபவர்களுக்கு. உடனேயே ஒரு cold Storage லொறியைப்பிடித்து ஒரு நூறு ஆடுகளையாவது நீங்கள் மீட்டால் அந்த வருமானம் உங்களுக்கு”
லூக் அப்போது 500 டாலர்களை காசாக அவர்களிடம் கொடுத்தான்.
நித்திரைத்துயரோடும் களைப்போடும் வந்த எங்களைக் கண்ட லூக்கின் பெண்குட்டிகள் ஒடிவந்தார்கள். கடைக்குட்டி லூக்கைமும் ஜேம்சையும் கட்டியணைத்தபின் என் இடுப்பிலேறி என் வலது தோள்மூட்டில் தன் தலையால் இடித்து ” அங்கிள் வருண். You are so great” என்றாள். களைப்பில் துப்பாக்கியின் பாரத்தில் நான் சிறிது ஆடிப்போயிருக்கவேண்டும். லூக்கின் மனைவி உடனே சுதாரித்து தன் மகளை என்னிடமிருந்து தூக்கினாள்.
(லூக்கின் ஒரு முகநூல் பதிவு வீடு, காடு, ஊர், நகர் எல்லாம் போய்ச்சேர்ந்துவிட்டது)
அப்போதுதான் அவதானித்தேன். அவள் தலையால் இடித்த என் வலது தோள்மூட்டில் எந்த வலியுமில்லை. வேட்டையிலும் தோளில் வைத்து சுட்ட எனக்கு எந்த வலியும் தெரியவில்லை. வானதியின் மகளுக்கும் இவளின் வயதுதான் இப்போதிருக்கும்.
லூக்கின் மனைவி எங்களுக்கு உடன் புழிந்த தோடம்பழ ரசம் கொணர்ந்து தந்துவிட்டு ” நீங்கள் குளித்தது வர முதல் ஆட்டு ஸ்ரேக் பிறேக் பாஸ்ற் றெடியாகிவிடும்” என்றாள்.
என் தேகம் எரிந்தது. நான் சுடுதண்ணீர் போடாமல் வெறும் பச்சைத் தண்ணியில் தோய்ந்தேன். எனது வலது தோள்மூட்டு வலி போனதை என்னாலேயே நம்பமுடியாதிருந்தது. சவர்க்காரம் போடும்போது மிக அழுத்தி வலது தோள்மூட்டில் போட்டுப்பார்த்தேன். வலியே இல்லை.
சாப்பாட்டு மேசைக்கு நான் வரும்போது ஒரு பொலீஸ்காரனும் இன்னொரு வயதான வெள்ளைக்காரனும் இருந்தார்கள். எனது பயத்தைப்போக்க முதலில் அந்த பொலீஸ்காரனே எழுந்து Congratulations சொன்னான். எல்லாமாக எட்டு பேரிருந்தார்கள். ஜேம்ஸ், லூக், லூக்கின் மனைவி, இரண்டு பெண் குட்டிகள், பொலீஸ்காரன், இன்னொரு வயதான வெள்ளைக்காரன், கடைசியில் நான்.
லூக்கின் மனைவி நான் அமர்ந்ததும் எழுந்தாள்.
” A rare Sri Lankan goat meat soup”
என்று பரிமாறினாள். அதே நேரத்தித்தில் லூக்
” வருண். இது என் மச்சான் மேயர். இது என் பள்ளித்தோழன் இவ்வூர் பொலிஸ்காரன் என்று அறிமுகம் செய்தான்.
தக்காளியும் spicesம் போட்டு slow cooking ல் சமைத்த ஆட்டு இறைச்சியில் நம்மூர் கஞ்சியருசியைக் கலந்து லூக்கின் மனைவி தந்த சூப் கஞ்சி அமிர்தம். மேயரும் லூக்கின் பெட்டைகளும் பொச்சடித்து அருந்தினார்கள். யாரும் பேசவில்லை.
பிறகு புதிய கோப்பைகளில் இரண்டு வரட்டிய பாண்துண்டுகள், ஒரு ஆட்டு ஸ்ரேக், இரண்டு பாதிவெந்த முட்டைகள், பாதி அவக்கடா, இரண்டு வதக்கிய தக்காளிகள் பரிமாறப்பட்டபோது மேயர் செருமியபின்
” வருண், பாராட்டுக்கள். நம்மூரின் ஆட்டுத்தொல்லையை ஓரிரவில் குறைத்தத்தற்கு மிக்க நன்றிகள். உன்னை இந்த ஊர் தத்தெடுக்க ஆசைப்படுகிறது. உனக்கு மணமாகிவிட்டதா?
” Your worship இன்னமும் இல்லை. நான் சிங்கிள்”
” இளைஞனே நீயேன் நம்மூரில் வந்து குடியேறக்கூடாது? நானே உனக்கு துப்பாக்கி உரிமம் பெற்றுத் தருகிறேன். உனக்கு முழுநேர வேலையும் எங்கள் உள்ளூராட்சி சபையில் போட்டுத்தருகிறேன். நம்மூரின் இளைஞர்கள் வயதுவந்தபின் சிட்னி நகருக்கு போய்விடுகிறார்கள். ஆண்கள் இல்லாத ஊராயிருக்கிறது நம்மூர். ஓரிரவில் நீ நம்மூரில் செலிபிறிட்டி ஆகிவிட்டாய். உனக்கு அழகிய ஒஸ்றேலியக் கிராமியக்காதல் மனைவி இவ்வூரில் கிடைப்பாள்.
பரவசப்பட்ட நான் புன்னகையோடு மேயருக்கு நன்றி சொன்னேன்.
காலை விருந்தின் பின் மேயர் தன் விசிட்டிங் காட்டை எடுத்து என்னிடம் தந்துவிட்டு ”
எந்த உதவியானாலும் என்னிடம் கேள். உனது அழைப்புக்காகக் காத்திருப்பேன்”
என்றபின் கிளம்பிவிட்டார்.
பிறகு லூக்கும் ஜேம்சும் பொலீஸ்காரனும் நானும் வெளியே வந்து பண்ணையில் கண்ணுக்கெட்டியதூரம் மேய்கின்ற மாடுகளைப் பார்த்துக்கொண்டு கோப்பி அருந்திக்கொண்டு சிகரெட் புகைத்தோம்.
பொலீஸ்காரனின் தொடைப்பட்டியிலிருந்த Glock பிஸ்ரலைக்கண்டு நானே என்னையறியாது
” இது Semi- automatic தானே”
என்று கேட்டுவிட்டேன். அவன் மறுகணமே தலையாட்டியபடி அதனை என் கையில் வைத்தான். நான் பரவசத்தோடு Trigger ல் கைவைத்து அதன் பாரத்தை அனுபவித்தேன். இயக்கத்திடம் இது இருந்தாலும் எனக்கு ஒரு தடவையும் தொட்டுப்பாக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
நான் துப்பாக்கியை அவனிடம் திருப்பிக்கொடுக்க அவன் தன் விசிட்டிங்காட்டை என்னிடம் தந்து
” சிட்னி நகரில் என்னோடு பொலிஸ் அக்கடமியில் படித்த பொலிஸ் நண்பர்கள் உள்ளார்கள். உனக்கு ஏதும் உதவி தேவையானால் தயங்காமல் என்னிடம் கேள்” என்றுவிட்டு அவனும் கிளம்பிவிட்டான்.
காலை பத்து மணிக்கு நாங்கள் மூவரும் தூங்கப்போனோம். போட்ட திட்டப்படி இவ்விரவையும் இவ்வூரிலேயே கழிப்பதே எம் திட்டம். எனக்கு அக்கணத்தில் பயம் பிடித்தது. நான் கதிர்காமரைக் கொன்ற இரகசியத்தை நான் கடைசியாகச் சொன்னது ஜேம்சிடம் தான். நானும் ஜேம்சும் தூங்கப்போன அறையில் நான் ஜேம்சிடம் சொன்னேன்.
” மச்சான், லூக் முதலில் முகநூலில் உளறிவிட்டான். இப்ப மேயரும் பொலிஸ்காரனும் போய் ஊர்முழுக்க பறைவான்கள். அடுத்தது என்ன? நாம் தூங்கி எழும்ப இவ்வூர் மீடியா வந்து என்னைப்படமெடுக்கும். Sri Lankan Sniper என்று என் படத்தோடு நாளை தலைப்பு செய்தி போடும். உன்னால் இப்போதே வண்டியோட்டமுடிந்தால் இப்பவே நாங்கள் சிட்னிக்கு புறப்படுவோம். இடைவழியில் காரில் தூங்குவோம்”
” மேற் ஒண்டுக்கும் பயப்படாதை. பின்னேரம் வெளிக்கிடுவம்” என்றவாறு தன்கட்டிலில் குப்புறப் படுத்துவிட்டான்.
களைப்பிலும் என் வலது தோள்மூட்டு வலிபோன இன்ப வலியிலும் நான் அயர்ந்து தூங்கியிருக்கவேண்டும். லூக்கின் பெண் குட்டிகளின் கிரீச்சிடும் ஒலிகள் கேட்டு நான் எழும்பும்போது பின்னேரம் 5 மணியிருக்கும். நான் எழுந்து மூத்திரம் பெய்ய அறைக்கு வெளியே வர ஜேம்ஸ் பயணத்திற்கு தயாரான உடையிலிருந்தான். லூக்கின் முதல் குட்டிக்கு நாடி விழுந்துவிட்டது. கடைக்குட்டி
” அங்கிள் வருண் Please Stay with us tonight” என்று விசும்பிக்கொண்டிருந்தாள்.
நான் முகங்கழுவிவிட்டு பயணத்திற்கு தயாரானேன். ஜேம்ஸ் மௌனமாகமேயிருந்தான். ஒரு தேநீர் கூட குடிக்க எங்களுக்கு நேரமிருக்கவில்லை. லூக் கைகொடுத்துவிட்டு என்னை Hug பண்ணினான். லூக்கின் மனைவி என்னை Hug பண்ணி நன்றி வருண் என்றாள். பிறகு லூக்கின் முதல் மகள் என்னை Hug பண்ணியபின். கடைக்குட்டி என் இடுப்பிலேறி Hug பண்ணும்போது அவள் மௌனமாக மூச்சிழுத்து விம்மலை அடக்கமுனைவதை உடல் பரிசத்தாலுணர்ந்தேன்.
ஜேம்ஸ் காரோட்டினான். சில நிமிடங்களுக்கு அவன் எதுவும் பேசவில்லை. அவனே பேசட்டும் என்று நான் காத்திருந்தேன். லூக்கின் பண்ணை கணவாயையை கடந்த பின் ஒரு சிகரெட்டை எடுத்து புகைத்துக்கொண்டு ஜேம்ஸ் சொன்னான்.
” வருண். I am sorry. You are fucking right. லூக்கின் வீட்டை மீடியாக்காரங்கள் பின்னேரம் 3 மணிக்கு முற்றுகை இட்ட சத்தம் கேட்டே நான் விழித்தேன் நீ அயர்ந்த தூக்கத்திலிருந்தாய். நிலமையைக் கட்டுப்படுத்த நான் உன் உண்மையை லூக்கிடம் சொல்லவேண்டியிருந்தது. அந்த பொலீஸ்காரனின் சொல்லை மீடியாக்காரன்கள் கேட்கவில்லை. நல்ல காலம் அப்போது நீ தூங்கிக்கொண்டிருந்தாய். பிறகு மேயர் வந்து “அந்த ஸ்ரீலங்கன் சிட்னிக்கு கொஞ்சம்முதல் தான் போய்விட்டான் என்று பொய்சொல்லி மிரட்டுயும் கெஞ்சி மண்டாடியுமே அவங்களைக் கலைத்தார்.”
இரண்டரை மணித்தியாலத்தில் என் காட்டு ஊர் வீட்டில் என்னை இறக்கிவிடும்போது இரவாகிவிட்டது. லூக்கின் மனைவி உனக்காகத் தந்தவை என்றொரு செம்மதுப் போத்தலையும் ஒரு பெரிய பெட்டியில் வதக்கிய ஆட்டு ஸ்ரேக் வதக்கலையும் இன்னொரு பெட்டியிலிருந்த சலாட், உருளைக்கிழங்கு கழியையும் தந்தான்.
எனக்கு பயம், பரவசம், பசி எல்லாமிருந்தது. ஒரு கோப்பையில் ஆட்டு வதக்கலையும் சலாட் உருளை கழியையும் போட்டு சூடாக்கினேன். லூக்கின் மனைவி தந்தவை எனக்கு 3 நாளைக்கு சாப்பிட காணும்.
உண்டபின் செம்மதுப்புட்டியை உடைத்து ஒரு வைன் கிளாசில் விட்டேன். இரண்டு வாய் குடித்ததுமே இருநாள் பயணம், வேட்டையாடிய இரவு, ஜேம்ஸ், லூக் , மனைவி பெண்குட்டிகள் அடங்கிய இன்பக்கனவு வந்தது. இனியென் வலதுதோள் வலியின்றி நிம்மதியாக தூங்குவேனே என்ற நினைப்போடு செற்றியிலேயே நான் தூங்கியிருக்கவேண்டும். வைகறையில் நான் மூத்திரம் பெய்ய எழும்பியபோது தண்ணீர் தாகமுமிருந்தது. பாதி வைன் கிளாசும் அப்படியே இருந்தது.
மூத்திரம் பெய்தபின் குடிக்க தண்ணீர் எடுக்கவே எனக்கு பஞ்சியாக இருந்தது. மீதிக் கிளாஸ் வைனை ஒரே முடக்காக தண்ணீராக குடித்துவிட்டு கட்டிலில் விழுந்து படுத்துவிட்டேன்.
ஈஸ்டர் செவ்வாய்க்கிழமை நான் தண்ணீர் தாகத்தில் விழிக்கும்போது கதகதப்பாயிருந்தது. நேரத்தைப்பார்த்தால் பதினொரு மணி. காட்டு ஊரில் வலது தோள்மூட்டு வலியும் கனவுகளின்றியும் இவ்வளவு நீண்ட நாழிகள் தூங்கியது இன்றுதான். ஒரு சிகரெட் புகைத்து குளித்து டேவிட்டின் கோப்பிக்கடைக்கு போனேன். எனக்கு முதலே அங்கு ஜேம்ஸ் வந்திருந்தான். அவர்கள் அப்போது Goat meat Steak சாண்ட்விச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
டேவிட் அடுத்த வாரத்திற்கான Special Menu வை எனக்கு காட்டினான். பாஸ்மதி சோறும் ஸ்ரீலங்கன் ஆட்டுக்கறியுமாம். இந்த சனிக்கிழமை நான் தான் தனக்கு ஆட்டுகறி சமைக்க காட்டித்தரவேண்டுமாம். (லூக் தோலுருத்து வெட்டி குளிர் பதனமிட்டுக்கொடுத்த 3 காட்டு ஆடுகளை ஜேம்ஸ் டேவிட்டிடம் கொடுத்ததை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்)
டேவிட்டும் ஜேம்சும் நானும் பின்புற திறந்த வெளி கதிரைகளிலிருந்து கோப்பி குடித்து சிகரெட் புகைத்தோம். ஈஸ்டர் மத்தியான சிட்னி தென்றலில் மார்க் டேவிட்டுக்காக சாடிகளில் வளர்த்துக்கொடுத்த 7 ஒலிவ் மரங்கள் ஆடிக்கொண்டிருந்தன.
டேவிட் சொன்னான்.
“வருண் என்னிடம் உனக்காக ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் உண்டு. கெட்ட செய்தி : என்னால் இனிமேல் இந்த கோப்பிக்கடையை நடத்தமுடியாது. தலைக்குமேல் ஓவியம் வரைய கமிசன்கள் வந்து குவிகின்றன. கடையை மூட முடிவு செய்துவிட்டேன். நல்ல செய்தி: இதனை வேறு யாருக்கும் விற்று கடையின் பெயர் கெட நான் தயாராகவில்லை. இதே பெயரோடு நான் டிசைன் பண்ணிய இதே இரண்டு கோப்பிகளையும் இதே சாப்பாடுகளையும் நீ விற்பாயானால் கடையை நீயே வாங்கலாம். ஒரு வருடத்திற்கு இலாபத்தில் மாதம் தலா 10 வீதமான வருமானத்தை நீ தந்தால் இரண்டாம் வருடம் கடை உனக்கு உரிமையாகும்”
” An offer too good to refuse” என்று மேசையைத் தட்டிவிட்டு எழுந்த ஜேம்ஸ் இரண்டு அடிவைத்துவிட்டு நின்றபடியே விழுந்து விழுந்து சிரித்தான். எனக்கும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
எங்கள் சிரிப்பு அடங்கும்வரை டேவிட் அதிர்ச்சியோடிருந்தான். மேசைக்கு திரும்பிவந்த ஜேம்ஸ் கதிரையிலமர்ந்தபின்னரும் சிரிப்பை அடக்க முயன்றான். முடியவில்லை. அவன் சிரித்துக் களைத்தபின் நான் லூக்கின் பண்ணையில் மீடியா என்னை வேட்டையாட வந்த கதையைச் சொன்னேன். எனக்கு அழுகையே வந்துவிட்டது.
அப்போதும் ஜேம்சுக்கு தன் சிரிப்பை அடக்கமுடியவில்லை. பிறகு சொன்னான்.
“Sri Lankan sharpshooter turned Barista. இப்படித்தான் Sydney Morning Herald ல் வருணின் கோப்பிக்கடை மதிப்புரைக்கு தலைப்பு எழுதுவாங்கள். வருண் உனக்கு இது தேவையா? கோப்பி வடிப்பதும் கைகளால். பழைய மகசீனை கழற்றி புதிய மகசீனைக் கொழுவது போலத்தான் பழைய கோப்பித்தூளை கொட்டிவிட்டு கிளீன் பண்ணிவிட்டு புதிய கோப்பித்தூளை போட்டு கொழுவிச் செருகுவதும். ஈஸ்டர் ஞாயிறு நிலவில் வருண் Panther Arms இன் வெற்று மகசீனை கழற்றுவிட்டு இலாவகமாக புதிய மகசீனை செருகும்போதுதான் அவதானித்தேன். கொலையும் ஒரு சொட் கோப்பியும் ஒரு சொட். எல்லாமே ஒரு கைராசிக்காரனின் கலை”
“ஆகவே கடையை மூடுவதை விட வேறு வழியில்லை” என்கிறபோது டேவிட்டுக்கு நாடி விழுந்துவிட்டது. சில நிமிடங்கள் நாங்கள் மூவரும் ஒன்றும் பேசவில்லை.
அன்று கடையில் வாடிக்கையாளர்கள் மிகக்குறைவு. கடை பறிஸ்டா சிப்பந்திகளான இரண்டு நேபாள மாணவிகளையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு டேவிட் இரண்டு மணிக்கே கடையை மூடினான். டேவிட்டினதும் எனதும் துயரத்தை பியரில் கரைப்போம் என்று ஜேம்ஸ் சொன்னான். ஒரு நிமிட நடையில் காட்டு ஊரின் மதுச்சாலைக்கு நாங்கள் போனோம். கிறீ அங்கிருப்பான். அவனிடம் என் வேட்டை சாகசத்தை சொல்லலாம் என்று நான் அவாவோடிருந்தேன்.
கிறீ அங்கில்லை. கிறீயின் குடிகார நண்பர்கள் இருந்தார்கள். நான் மூன்று Coopers sparkling beer(கிறீ அருந்தும் பியர்) வாங்கினேன். பியர் அருந்திக்கொண்டிருக்கும் போது கிறீயின் நண்பர்கள் எங்களோடு வந்திணைந்தார்கள். அந்த நாளில் நான் கேட்ட முதல் துயரச்செய்தி டேவிட்டின் கோப்பிக்கடை பூட்டப்படப்போகிறது. இரண்டாவது செய்தியை அவர்கள் சொன்னார்கள். கிறீ வைத்திய சாலையில் இறந்துகொண்டிருக்கிறானாம். இன்று பின்னேரம் அவர்கள் ஒரு Taxi வான் பிடித்து கிறீயை பார்க்க போகிறார்கள். என்னையும் ஜேம்சையும் வரச்சொன்னார்கள். கிறீக்கு டேவிட்டை பிடிக்காது. இருந்தாலும் டேவிட் தானும் வருவதாகச் சொன்னான்.
நான் ஏழு நாளும் வேலையால் ஒரு மாதமாக கிறீயை சந்திக்கவில்லை. எனக்கு பெரிய குற்ற உணர்ச்சியாக இருந்தது. மேலும் சில பியர்கள் அருந்தியபோது கிறீயின் மரணவீட்டிலிருந்து கதைப்பது போலவே இருந்தது. கிறீயின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டோம். ஒலிவியாவை சில நாட்கள் யாருமே காணவில்லை என்றார்கள். கடைசி பியரை நாங்கள் அனைவரும் வாங்கச்சென்றபோது மதுச்சாலை சொந்தக்காரனிடம்
” இதுதான் இன்றைய எங்கள் கடைசி பியர். கிறீயை வைத்தியசாலைக்கு பார்க்கப்போகிறோம். இன்னும் அரை மணித்தியாலத்தில் எங்களுக்கு ஒரு Taxi வான் அழைக்கச்சொன்னோம்.
நாங்கள் மூவர். கிறீயின் குடிகார நண்பர்கள் எழுவர். எல்லாமாக கிறீக்காக நாங்கள் அருந்திய கடைசி பத்து கூப்பர் பியர்களும் காட்டு ஊர் மதுச்சாலையின் கணக்கில் என்று கட்டணம் வாங்க மறுத்துவிட்டான் சொந்தக்காரன்.
ராக்சியை விட்டிறங்கி நாங்கள் வைத்தியசாலைக்குள் நடந்து 4ம் மாடியில் இறக்க காத்திருக்கும் கிறீயின் வாட்டுக்கு போகும் லிப்ற் ல் ஏறியபோது எங்கள் அனைவரினதும் மது வெறி இறங்கியிருந்தது. யாருமே பேசவில்லை.
ஒரு தாதி எங்களை கிறீயின் படுக்கைக்கு அழைத்துப்போனாள். கிறீயின் 7 நண்பர்களும் முதலில் போனார்கள். நான் குற்ற உணர்ச்சியில் கூட்டத்தில் கடைசி ஆளாக மறைந்து கொண்டிருந்தேன்.
கிறீ கண்விழித்தபடி மல்லாக்க தூங்கிக்கொண்டிருந்தான். அந்த 7 நண்பர்களையும் கிறீ இனங்காணவில்லை. ” உன் அபொரிஜனல் நண்பன் ஜேம்ஸ் என்று சொன்னபோது கிறீ அசைந்த மாதிரியிருந்தது. கடைசியாக ஜேம்ஸ் என்னை இழுத்து வருண் வருண் வருண் வந்திருக்கிறான் என்று சிறிது உரத்து கத்தினபோது ” வருண்” என்று கிறீ அனுங்கினான்.
அதற்குப்பிறகு எந்த அசுமாத்தமேயில்லை. அப்போதும் கிறீ விழித்தபடியே துங்கிக்கொண்டிருந்தான். அதிசயங்கள் ஏதும் நடக்கும் என்று நாங்கள் காத்திருக்க தாதிகள் எங்களை கலைத்துவிட்டார்கள்.
நாங்கள் கீழே இறங்கிவந்தோம். டேவிட்டை தவிர நாங்கள் எல்லோரும் புகைப்பவர்கள். ராக்சி வானின் அருகில் திறந்த வெளியில் நாங்கள் புகைத்துக்கொண்டிருக்கும்போது தூரத்தில் ஒரு பெண் தனியே புகைத்துக்கொண்டிருப்பதை கண்டேன். அது ஒலிவியாவே தான். அவள் தன் சிகரெட்டை பாதியில் போட்டு அணைத்து விட்டு எங்களை நோக்கி வந்தாள்.
ஒலிவியா என்னை இனங்கண்டுவிட்டாள். அவள் என்னிடமே நேராக வந்தாள்.
” கிறீயின் பிள்ளைகள் என்னை கடைசியாக ஒரு தடவையேனும் பார்க்க விடாமல் வைத்தியசாலையைக்கு ஆணை கொடுத்திருக்கிறார்கள். வருண் நீ சொன்னால் கேட்பார்கள். கிறீ சாவதற்கு முதல் ஒரு தடவை அவனை பார்க்க அவர்களிடம் கேட்டு அனுமதி பெற்றுத்தா. Please. நானென்ன கிறீயின் சொத்துக்களுக்கா உரிமை கேட்கிறேன்? என் தந்தையைப்போன்ற என் காதலன் கண்மூட முதல் அவன் கண்களை கடைசியாகப் பார்க்க விரும்புகிறேன்”
என்றபடி என்னைக்கட்டிப்பிடித்து உலுக்கி அழுதாள்.
(நான் ஒரு தடவையுமே கிறீயின் பிள்ளைகளை சந்தித்ததில்லை. என்னால் என்ன செய்யமுடியும்? கிறீயின் கனேடியத் தாயின் சொத்துப் பிரிப்புச் சண்டை அவன் இறக்க முதலே ஆரம்பித்துவிட்டது)
அக்களம் ஒலிவியாவுக்கு உவப்பானதல்ல. என்னோடு வந்தவர்கள் யாருமே பேசவில்லை. டேவிட் ஒரு கள்ளச்சிரிப்போடு முகத்தை திருப்பினான். ஒலிவியா என்னிடம் ஒரு சிகரெட் கேட்டாள். நான் என்னிடமிருந்த பாதி சிகரெட் பக்கற்றையே அவளிடம் கொடுத்து நீயே வைத்துக்கொள் என்றேன். அவள் வேகமாக அவ்விடத்தை விட்டு நடக்கத்தொடங்கினாள்.
டேவிட்டின் கோப்பிக்கடையில் நானும் டேவிடும் இறங்கினோம்.
டேவிட்
” வருண், உப்படித்தான் கண்ணீரும் மாய்மாலமுமாய் பல சீன் போட்டு மார்க்கை பலியெடுத்தாள் ஒலிவியா. அவள் ஒரு வேசை. அவளுடைய கடைசிப்பலியாக நீ ஆகிவிடாதே”
என்றான்.
நான் டேவிட்டை கடிந்துகொண்டேன்.
” உனக்கு என்னைத்தெரியாதா டேவிட்? இப்போதுதான் எனக்கு தெரியவருகிறது. ஒலிவியா முதலில் கிறீயோடு குடிக்கப்போனதே என்னை பொறாமைப்படுத்தி என்னை வசியப்படுத்தத்தான். நானும் கிறீயும் எவ்வளவு நெருக்கம். நானும் நீயும் எவ்வளவு நெருக்கம் என்பதெல்லாம் அவளுக்கு தெரியும். அக்காலங்களில் நான் உன் கோப்பிக்கடையில் பிஸி ஆகிவிட்டேன். அவள் தேடிய ஒரு தந்தையுமாக கிறீ இருந்ததால் அவனோடு நெருங்கிவிட்டாள். நீயும் அவளைக் கலைத்துவிட்டாய். ஒலிவியா வேசை அல்ல. அபலை. கிறீ கோமாவுக்கு போய்க்கொண்டிருக்கிற தருணத்தில் அவனைச்சந்திக்கிற அவளின் மனித உரிமை மறுக்கப்படுகிறது. இது நியாயம் அல்ல”
” வருண், உள்ளே வா. உனக்காக நான் வரைந்துகொண்டிருக்கிற ஒரு ஓவிய sketch ஐக்காட்டுகிறேன். A work in progress”
டேவிட் கடையைத்திறந்தான். நாங்கள் நிலவறை ஸ்ரூடியோவுக்குப் போனோம். தன்னுடைய மினி பாரிலிருந்து வைன் புட்டியொன்றுடைத்து இரண்டு செம்மது வார்ந்தான். இரண்டு கோப்பைகளில் சீஸ் துண்டுகள் வைத்தான்.
பின் தன் நிலவறை லைற்றிங் செற்றிங்கில் விளையாடினான். அதிகாலை விடிகிறமாதிரியான ஒரு ஒளி வந்தது. அவன் வரைந்துகொண்டிருக்கிற ஒரு ஓவிய Sketch ஜக்காட்டி இவர்களைத் தெரிகிறதா? என்றான்.
ஒரு 27 வயது இளைஞன் ஒரு மதுச்சாலை திறந்தவெளியில் தனித்துக் குடித்துக்கொண்டிருக்கிறான். எதிர் வீதியைக் கடந்து ஒரு பல்கனியிலிருநது ஒரு வெண்தாடிக் கிழவன் SSG 69 துவக்கு வைத்து அவனைக்கொல்ல இலக்கும் தருணமும் பார்துக்கொண்டிருக்கிறான். அந்த 27 வயது இளைஞன் நான். சினைப்பர் கிழவன் கிறீ.
செம்மதுவை அருந்திக்கொண்டிருக்கும் போது டேவிட்டே சொன்னான்
. “நம் பெருநட்புக்காக உன் சிநேகத்தின் உத்வேகத்தில் நான் வரையும் ஓவியம். எனக்கு இதனை வர்ண ஓவியமாக்கத்தான் விருப்பம். ஆனால் நீ ஒரு நிறக்குருடு என்பதால் கறுப்பு வெள்ளை கோட்டோவியமாக வரையவுள்ளேன். Final Touching செய்ய வேண்டியது மட்டுமே”
விதி வரையும் பாதைகள் விசித்திரம் ஆனவைகள். நானும் டேவிட்டும் மிக நெருங்கின நிலவறை இரவு இது. ஆனால் இந்த இரவுதான் நிலவறையில் நமது கடைசி இரவு என்பதை விதி ஏற்கெனவே வரைந்துவிட்டது.
இன்னும் ஒரு மாதத்தில் டேவிட் கடையை மூடிவிட முடிவெடுத்து விட்டதாகச் சொன்னான். நானும் சரியாக ஒரு மாதத்தில் காட்டு ஊரின் கோழிக்கொல்லறை வேலையை விட்டு ஜேம்சுடன் குயீன்சிலாந்து மாநிலத்துக்கு போக முடிவெடுத்துவிட்டேன் என்றேன்.
இரகசியங்களைக் கடையவும் காக்கவும் வல்லமை பெற்றவை மகத்தான தென் ஒஸ்றேலிய செம்மதுக்கள்.
ஒலிவியா மார்க்கை களவாடிய செய்தி அறிந்து மார்க்கை அவன் காதலி மற்றில்டா கலைத்துவிட்ட சில வாரங்களில் மற்றில்டா ஒரு சனிக்கிழமை டேவிட் இல்லாத நண்பகல் நேரம் கோப்பிக் கடைக்கு வந்தாள். அப்போது நானும் ஒலிவியாவுமே கடையிலிருந்தோம். மற்றில்டா ஒரு இளநீல Leggings ம் கறுப்பு இறுக்கிய ரீ சேட்டும் அணிந்து வந்திருந்தாள். பேரழகி அன்று இன்னும் மிகக்கவர்ச்சியாக இருந்தாள்.
அவள் முதலில் ஒரு கோப்பி வாங்கி பின்புற திறந்த வெளியிலிருந்து புகைத்தாள். பிறகு மேலும் கோப்பிகள் வாங்கி புகைத்துக்கொண்டிருந்தாள். கடை பிஸி ஆக இல்லாததால் நானும் அவளோடு இணைந்து கொம்பனி கொடுத்தேன். அவள் முதுகு மிகவும் கூனியிருந்தது. எனது கழுத்தில் கைபோட்டு உணர்ச்சிவசப்பட்டு அதிகமாகச் சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் போதைவஸ்தொன்றின் தாக்கத்திலிருக்கிறாள் என்று தெரிந்தது. எங்களுக்காக ஒலிவியா சாண்ட்விச்சும் கோப்பியும் கொண்டுவரும் போது இந்தக்காட்சியைத் தாங்கமுடியாது தடுமாறி கோப்பைகளை கீழே விழுத்திவிட்டாள். நான் ஒலிவியாவை புதிய கோப்பியும் சாண்ட்விச்சும் தயாரிக்கச் சொல்லிவிட்டு சிந்திச் சிதறியவற்றை சுத்தம் செய்தேன். பிறகு மற்றில்டாவுக்கு அருகில் வந்து நான் அமர்ந்தபோது மற்றில்டா
” Bitch வேணுமென்றுதான் நிலத்தில் போட்டாள்” என்று கத்தினாள்.
ஒலிவியா புதிய சாண்ட்விச் கோப்பிகளை கொணர்ந்து வைக்கும்போது மற்றில்டா குனிந்த படியிருந்தாள். ஒலிவியாவின் கண்கள் ஈரமாக இருந்தன.
என்னுடைய மோபைல் இலக்கம் மற்றில்டாவுக்கு தெரியும். இப்போதும் இதுதான் உன் நம்பரா என்று கேட்டாள்.
ஒரு சிகரெட்டை எடுத்து என்வாயில் வைத்தாள். இன்னொரு சிகரெட்டை எடுத்து தன்வாயிலும் வைத்து இரண்டடையும் பற்றவைத்துவிட்டு
“இன்றிரவு நீ என்ன செய்கிறாய். நீ பிறீ என்றால் இன்றிரவு மதுச்சாலைக்கு என்னோடு குடிக்க வருவாயா? அவசரப்பட்டு மார்க்கை நான் கலைத்துவிட்டேன். இப்போ தனிமை என்னைக்கொல்கிறது”
எனக்கு மற்றில்டாவை பிடிக்கும். ரொம்பப் பிடிக்கும். அவள் உயரம் பிடிக்கும். மற்றில்டாவின் நீலக்கண்களையும் பொன்னிற கேசங்களையும் பிடிக்கும். அவளின் நீளக் கைவிரல்கள் பிடிக்கும். நகங்கள் பிடிக்கும். அவளின் இரண்டு கால் பெருவிரல்களும் பிடிக்கும். குதிச்சப்பாத்து பூட்ஸ்களில் அவள் தன் குண்டிகளை ஆட்டி நடக்கும் அழகு பிடிக்கும். அவளின் நீண்ட பின் கழுத்து பிடிக்கும். அவள் பின் கழுத்தில் கொண்டையிலிருந்து தொங்கும் பொன் மயிர்கள் பிடிக்கும். இருந்தும் இவ்வளவு வேகத்தில் போதையில் அவள் காய் நகர்த்துவது எனக்கு பயத்தை தந்தது. என் வலது தோள்முட்டு அப்போது வலித்தது.
“இவ்வாரம் நான் பிஸி. அடுத்தவாரம் பார்க்கலாம்” என்று நான் ராஜதந்திரமாகச் சொன்னேன்.
” You too fucking this ugly Bitch ?”
என்று ஒலிவியாவைக் காட்டி பாதி தீராத தன் சிகரெட்டை தன் விரலும் சுட அணைத்துவிட்டு எழுந்து வேகமாக வழியிலிருந்த கதவுகளை சத்தமாகச் சாத்திவிட்டுப் போய்விட்டாள்.
இப்போது நிலவறையில் டேவிட்
“மற்றில்டா நல்ல பெண். அழகி. நீ அவள் காதலனானால் முதலில் சந்தோசப்படுபவன் நான்தான்”
” டேவிட் எனக்கு கூட அந்தக்கவலை இருக்கிறது. அன்று எனக்கிருந்த பயம் வேறு. எனது வலது தோள்மூட்டு வலி என் உள்ளுணர்வாக இருந்த காலம் அது. அன்றிரவு அமெரிக்காவிலிருந்து என் முன்னாள் உளவள ஆலோசனையாளன் எட் தொலைபேசியில் பேசினான். புலிகளை பற்றி Ph.D செய்யும் அவன் ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் என்னோடு பேசுவான். முதல் பாதி நேரம் எனக்கு உளவள ஆலோசனை சொல்லுவான். அடுத்த பாதி அவன் புலிகளைப்பற்றிய தன் சந்தேகங்களைக் கேட்பான். அவனிடம் நான் எந்த ரகசியங்களையும் மறைத்ததில்லை. மற்றில்டா என்னை டேற்றிங்குக்கு அழைத்த கதையை விலாவாரியாகக் கேட்டபின் எட் சொன்னது
லருண், நீ கெட்டிக்காரன், உன் உள்ளுணர்வை நம்பி இந்த விடயத்தில் முடிவெடுக்க உன்னால் முடியும். அவள் போதையில் வந்ததையும நீ இப்போதும் உன் பேய்களிலிருந்து மீண்டு வருவதையும் கருத்திலெடு. அவள் அழகி, நல்லவள் என்கிறாய். உன்னால் உன் High school ஊர்க்காதலியைக்கூட இப்பவும் மறக்கமுடியாதிருக்கிறது. முடிவு உன்னது. எடுத்த ஒரு முடிவு சரியோ பிழையோ அதைப்பற்றி நாம் வாழ்வில் பிறகு கவலைப்படக்கூடாது. Life is Short வருண்.
“டேவிட் கடைசியாக மற்றில்டா ஒரு சனிக்கிழமை 6 மாதத்திற்கு முதல் வந்தாள். அவளது நீலக்கண்களையும் அசல் பொன்னிற கேசத்தையும் வைத்து அக்கணமே இனங்கண்டுவிட்டேன். அப்போதும் நீயில்லை. ஓலிவியா இல்லை. நான் அப்போது கோப்பிக்கடை மனேஜர். மார்க்கை விட உயரமான ஒரு கனேடியக் கறுப்பனோடு குளிர்காலத்தில் பென்ஸ் காரில் வந்திறங்கினாள். கோப்பிக்கடை வாசலிலேயே அவர்களுக்கு Parking கிடைத்தது. Burberry Trench coat இலும் இளநீல ஜீன்சிலும் குதிச்சப்பாத்தோடு அவளிருந்தாள். அவள் கனேடியக் காதலன் வெறும் கறுப்பு ஜீன்சிலும் நீல லினன் சேட்டிலிருமேயிருந்தான்”
மற்றில்டா அன்று வந்தது எனக்கு ஒரு செய்தி சொல்ல. அவளை நான் அவமானப்படுத்தியதியதாக புறக்கணித்ததாக அவள் கருதியதற்கு எனக்கு பதில் சொல்ல. என்னை பழிவாங்க.
அவள் முறைப்பாடுகள் எதுவும் கொடுக்கக்கூடாது என்பதற்காக நானே அவர்களது கோப்பிகளை வடித்தேன். Breakfast இல் எதுவும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காக இரண்டு நேபாள பெண்களை விடாது நானே சமைத்தேன். இரண்டு கோப்பைகளையும் நான் பரிமாறியபோது மற்றில்டா
” நன்றி வருண். மார்க்கின் கோப்பிகளை விடச் சிறப்பாயிருந்தன. By the way this is Varun. My Ex Boyfriend’s best mate” என்று என்னை தன் கணவரிடம் அறிமுகம் செய்துவைத்தாள். கணவன் பென் மிக நாகரீகமாக எழுந்து எனக்கு கை கொடுத்தான். பொட்டம்மான் வன்னியில் எனக்கு காட்டிய கதிர்காமரின் இளவயது வீடியொக்களைப் போன்ற மிக நாகரீகமான தோற்றம் அவனது உடல்மொழி. கதிர்காமரை விட மிக உயரமானவனாக இருந்தாலும்.
மேலும் இரு Latte கோபபிகளுக்கு மற்றில்டா ஓடர் கொடுத்தாள். அந்தக் கோப்பிகளை நானே வடித்து அவர்களுக்கு பரிமாறும்போது
” மற்றில்டா வெளியே புகைபிடிக்கும் இடம் இப்போதும் உண்டு ”
” நான் இப்போது புகைப்பதை கைவிட்டுவிட்டேன். என் கறுப்பு கணவர் வாழ்வில் ஒரு தடவையும் புகைத்ததில்லை. குடித்ததில்லை.”
மற்றில்டாவின் இந்த பஞ்ச் டயலாக்கால் என் வலது தோள்மூட்டு வலித்தது.
மற்றில்டா தான் இப்போது சிட்னி நகரின் டார்லிங் காபரில் ஒரு உயர்ந்த தொடர்மாடியிலேயே தன் கணவருடன் வசிப்பதாகச் சொல்லி எனது பொறாமையைக் கிளறினாள்.
எனது நல்லகாலம். மற்றில்டா விடைகொடுக்கும்போது என் இடது தோள்மூட்டில் தலை வைத்தே Hug பண்ணினாள். அவள் கணவரும் என்னை Hug பண்ணியபின் வெளியே போய் வழியனுப்பிவேத்தேன். அவர்களின் கார் காட்டு ஊரின் புகையிரத பாலத்திலேறி மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன். (எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது)
இக்கணத்தில் நான் ஒரு சிகரெட் புகைக்க விரும்பியதை டேவிட் உணர்ந்தான். மேலே படிகளில் ஏறிப்போய் கொல்லைப்புற திறந்த வெளியில் புகைத்தேன். Such is life என்றான் டேவிட்..
அடுத்தநாள் காலை நான் கோழிக்கொல்லறையில் வேலையிலிருக்கும்போது
‘கிறீ இறந்துவிட்டான். மரணவீடு எப்போது என்று அறியத்தருகிறோம்” என்கிற வட்ஸ் அப் செய்தி வந்தது.
கிறீயின் பிள்ளைகள் மரணவீட்டை பிரத்தியேகமாக இரகசியமாகவே நடத்தினார்கள். ஒலிவியா மட்டுமல்ல நாங்களும் அவனது மரணவீட்டுக்கு போக அனுமதிக்கப்படவில்லை.
காட்டு ஊரின் கோப்பிக்கடையில் நான் மனேஜராக கடைசியாக வேலைசெய்த சனிக்கிழமை கடை பூட்டுகிறபோது டேவிட் வந்தான். எனக்கு இரண்டு பரிசுகள் தந்தான்.
1. American National Rifle Association வெளியிட்ட துப்பாக்கிகளைப் பற்றிய புத்தகம்.
2. என்னையும் கிறீயையும் வைத்து அவன் வரைந்த ஓவியம்.
இதைவிட
” உனக்கு தேவையான புத்தகங்களை இப்போதே எடு. நாளை மிகுதிப்புத்தகங்களையும் எனது ஓவியங்களையும் ஏலத்தில் போடவுள்ளேன்”
என்றான்.
நான் Black and White இலிருந்த ஒரு நிர்வாணப் புகைப்படங்களின் புத்தகம், பல Fashion புத்தகங்கள், சில ஐரோப்பிய நிர்வாண ஓவியப்புத்தகங்கள் என ஓரு இருபது புத்தகங்களை மூட்டை கட்டினேன்.
டேவிட்டின் கோப்பிக்கடையும் கிறீயும் மற்றில்டாவும் இல்லாத காட்டு ஊர் கடைசி வாரம் எனக்கு மயானம் போலிருந்தது
அந்த ஆண்டு சிட்னியில் குளிர் இறங்கிய வெசாக் முழுநிலவில், அது மே பதினெட்டா பத்தொன்பதா என்பது எனக்கு நினைவில்லை, அதிகாலை மூன்று மணிக்கு காட்டு ஊரைவிட்டு நான் ஓடிவிட்டேன். ஜேம்ஸின் புதிய வெற்று Cold Storage ட்றக்கில் அவனும் நானும் புதிய கனவுகளோடு குயீன்ஸ்லாந்து மாநிலத்துக்கு புறப்பட்டோம். குயீன்ஸ்லாந்து பண்ணைகளில் வாடகை ஹெலிகொப்டர்களிலிருந்து Panther Arms துப்பாக்கிகளால் காட்டு ஆடுகளை நான் வேட்டையாடுவதே எனக்கு ஜேம்ஸ் உறுதியளித்த வேலை.
(யாவும் கற்பனை😂)
வணக்கம். முதலில் எழுதியவர் பெயரை வாசித்தபோது, இப்படி ஒரு பெயரா என்று யோசித்தவாறு வாசிக்கத் துவங்கினேன். முழுமையாக வாசித்துவிடடு ஒரு கோப்பை டீ குடித்தேன். என்ன ஒரு நடை, அருமை.