- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
1999 கந்த்ஹர்
சின்னச் சங்கரனை இறுக்கிப் பிடித்து விமானத்தின் முதல் வரிசை இருக்கையில் உட்காரும்படி தூக்கிப் போட்டார்கள். எக்சிக்யூட்டிவ் கிளாஸ் இருக்கை என்பதால் ரொம்பப் பெரியதாக இருந்தது.
மற்ற எத்தனையோ பயணங்களின் போது, எகானமி கிளாஸில் இருந்து எக்சிக்யூட்டிவ் க்ளாஸுக்கு ஏதாவது காரணம் சொல்லி டிக்கெட்டை மேலதிகக் கட்டணம் வாங்காமல், உயர்நிலைக்கு ஏற்றிக் கொடுக்க மாட்டார்களா என்று ஆவலோடு வந்திருக்கிறார் அவர்.
பிராணிகளின் வகுப்பு என்ற எகானமி கிளாஸ் தான் அரசாங்க அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்டது. இலவசமாக வந்தால் எக்சிக்யூட்டிவ் கிளாஸ் அதே செலவுக்கு கிடைத்தால் சர்க்காருக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. இப்போதோ சங்கரன் கேட்காமலேயே மேலேற்றப் பட்டிருக்கிறார்.
அவர் உயிர் இருந்தாலும் போனாலும் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை. முன்னாள் அரசுத்துறை காரியதரிசி, மற்றும் அரசு ஆலோசகர். இது போதாது அதிகபட்ச பாதுகாப்பு தர. சங்கரன் அரையில் சிறுநீர் கழித்து தரையில் உருட்டப்பட்டு இருக்கையோடு கட்டி வைக்கப்படட்டும்.
வாக்கிடாக்கி உயிர் பெற்றது.
”இன்னும் பத்து நிமிடத்தில் விமானத்துக்கு எரிபொருள் அடைத்துத் தராவிட்டால் முன்வரிசையில் நீங்கள் பார்க்கும் நான்கு பயணிகளும் சுட்டுக் கொல்லப்படுவார்கள். எச்சரிக்கை, எச்சரிக்கை”.
சங்கரன் குரல் தீனமாக ஒலித்தது. ”ஐயோ விமானத்துக்கு சீக்கிரம் எரிபொருள் நிரப்புங்கள். எங்கள் உயிர் போகப் போகிறது. தயவு செய்யுங்கள்”.

அவர் கண்ணில் தென்படாத யாரிடமோ – அவர் பெரும்பாலும் வயதான ஓர் சீக்கியராக இருக்கக் கூடும் – வேண்டினார்.
அமிர்தசரஸ் விமான நிலையம் என்று அடையாளம் காட்டப்பட்ட இந்த விமான நிலையத்தில் வேகமாக வேலை முடித்து சங்கரனின் ஆயுசை நீட்டிக்கவோ, மெல்லச் செயலாற்றி சங்கரன் உடனடியாகக் குண்டடிபட்டு இறக்கவோ செய்யக் கூடியவர் அவர்.
சங்கரனின் அரசூர் பரம்பரையே அவரைக் கைகூப்பி வணங்கும். சங்கரன் சார்பில் என்றென்றும் நன்றி சொல்லும். அவருடைய மனைவி வசந்தியும், மகள் பகவதியும், ஆவி ரூபமாக பகவதிப் பாட்டியும், இன்னும் யாராரோ ஆண்களும் பெண்களும் மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சடசடவென்று கலாஷ்னிகோவ் ரைஃபில் துப்பாக்கிகள் உயிர்த்து நிலை கொள்ளும் ஒலி. சங்கரனின் பற்கள் தடதடவென்று அதிர்ந்து வரிசை கலந்து மோதி உடைந்து விழப் போகின்றன. வாயில் பல் இல்லாமல் இறந்து போவாரா சங்கரன்?
அம்பலப்புழை கோவிலிலும், அரசூர் அம்பலத்திலும் எல்லா வழிபாடும் நடத்த சங்கரன் ஏற்பாடு செய்வார். விரதம் இருக்கவும், பால் பாயசம் விநியோகிக்கவும், அரசூர் அய்யன் கோவில் வாசலில் முடி காணிக்கை செலுத்தவும் சின்னச் சங்கரன் எல்லா நடவடிக்கையும் மேற்கொள்வார்.
ஷூட் என்று பலமான குரல். ஐயோ என்று உயிர் பிரியப் போகிற வாதனையோடு நெஞ்சடைக்க சாவின் எல்லைக்குக் கடந்தார் சின்னச் சங்கரன்.
ஒரு பலமான சிரிப்பு. ”சும்மா விளையாட்டுக்கு. நீங்க இப்போ சாக வேண்டாம்”. ஒரு தீவிரவாதி சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள். உடம்பு வியர்வையில் குளிக்க சங்கரன் ஐயோ என்று கூக்குரல் எழுப்பும்முன் அவர் வாயில் துணிப்பந்து அடைபட்டது
நாய்கள் என்று தீவிரவாதி காறி உமிழ்ந்தான். சங்கரன் முகத்தில் எச்சில் பட்டது. துடைக்கக் கூட முடியாமல் அவர் கைகள் கட்டப்பட்டு விமான இருக்கை முதல் வரிசையில் தன்னை ஒரு பன்றியாகக் கண்டுகொண்டு சங்கரன் சரிந்து உட்கார்ந்திருந்தார்.
ஏர்கண்டிஷனிங் நின்று போன விமான உட்புறத்தில் குழந்தைகள் அழும் சத்தம். அவசரமாக அவற்றின் வாயைப் பொத்தி அன்னையர்கள் அழாதே, அழுதால் செத்துப் போயிடுவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தது அடுத்து எங்கேயோ கேட்டது.
”அமிர்தசரஸ் ஏர்போர்ட் சோம்பேறிகளின் உலகம். எரிபொருள் நிறைக்க முடியாததால் விமானம் கிளம்புகிறது”. ஒரு தீவிரவாதி சொல்ல, மதகோஷம் போட்டான் இன்னொருவன்.
துப்பாக்கியால் முதல் வரிசையில் கட்டி வைத்திருந்த சங்கரனையும் மற்ற மூன்று பயணிகளையும் முகத்தை நிமிர்த்தி மத கோஷம் சத்தமாகப் போடச் சொன்னான் அவன்.
சங்கரன் தன் உயிரே இந்தக் கூவலில் தான் இருக்கிறது என்று உணர்ந்து வயிற்றிலிருந்து குரல் எடுத்துத் தீனமாகப் பிளிற, மற்றவர்களும் அதேபடி கத்தினார்கள். கடைசி பயணிக்கு வாயைத் திறந்து பேச முடியாமல் மேலண்ணத்தில் நாவு ஒட்டிக் கொள்ள சைகைகளால் பேச முடியாமல் போனதை உணர்த்தினார்.
“யோவ் கத்துய்யா. இல்லேன்னா சாவுதான் உனக்கும்” என்று சங்கரன் தெருவிலே வித்தைக்காரன் போல சத்தம் போட்டு ’சரியா எஜமானே’ என்று தீவிரவாதியைப் பார்க்க அவன் ’போடா மயிரே’ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
விடாமல் பத்து நிமிடம் கோஷம் போட்டது முடிய அவர்கள் கைகள் விடுவிக்கப்பட்டன. முதுகில் உதைத்து எழுந்து நிற்க வைத்து, அவருடைய இருக்கைக்கு காலால் பிருஷ்டத்தில் உதைத்துக் கொண்டு செலுத்தப்பட்டார் சங்கரன். அவர் கடியாரம் மாலை 7:50 நேரம் காட்டியது.
”லாகூர் போய்ட்டிருக்கோம். போய்ச் சேரும் வரை யாரும் அசையக்கூடாது. இன்னும் ஒரே ஒரு தடவை பாத்ரூம் போகலாம். லாகூர் வர்றவரைக்கும் அப்புறம் நிற்கவோ நடக்கவோ கூடாது.
ராத்திரி பத்தேகால் மணி என்று சங்கரன் இடது கையில் கட்டியிருந்த கடியாரம் சொன்னது. வீட்டில் வசந்தியும் பகவதியும் அண்டை அயலும் சேர்ந்து உட்கார்ந்து டெலிவிஷனில் செய்தி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
சங்கரன் பெயர் சொல்லும்போதெல்லாம் அவர்கள் சத்தமிட்டு, ராமனையும் கிருஷ்ணனையும் பராசக்தியையும் சங்கரனின் விடுதலைக்கு வேண்டியபடி, வசந்தி கொடுத்த தேநீர் குடித்துக் கொண்டிருப்பார்கள். விமானத்தில் டாய்லெட் அடைத்துக்கொண்ட மாதிரி வீட்டிலும் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கும்.
லாகூர் வந்துவிட்டது. லாகூரோ எதோ ஏர்போர்ட்டோ. விமானம் கடகடவென்று ஆடியபடி இருண்ட ரன்வேயில் அப்படி இப்படி அசைந்து தொட்டு, நீள ஓடி நின்ற இடத்துக்குக் கைதொடும் தூரத்தில் கார்கள் ஊர்ந்து கொண்டிருந்த பெருவழி.
‘ஹைவே பக்கம் ப்ளேன் லாண்ட் ஆகியிருக்கு’ என்று யாரோ அடுத்து முணுமுணுத்தார்கள். ரன்வே விளக்குகள் ஏற்றப்பட்டன. வரிசையாக வந்த எரிபொருள் வண்டிகள் விமானத்தின் வயிற்றில் எரிபொருள் நிரப்ப மறுபடி விமானம் புறப்பட்டது. இரவு 8:07 என்றது சங்கரனின் கடியாரம்.
பக்கத்தில் இருந்த வயதானவர் எப்போ சாப்பாடு வரும் என்று சமய சந்தர்ப்பம் தெரியாமல் பெருங்குரலில் கேட்க, ஒரு தீவிரவாதி பையில் இருந்து எடுத்த குறுவாளோடு பக்கத்தில் வந்தான்.
“பூண்டும் வெங்காயமும் போடாதீங்க. சூடா இருக்கணும். இல்லேன்னா கம்ப்ளெயிண் பண்ணுவேன்”.
அவர் குரல் நடுங்க ஒலி எழுப்பினார். சுருள்கத்தி பின்னங்கழுத்தில் கீறியிருந்த இடத்தில் இருந்து ரத்தம் சொட்டுச் சொட்டாக சங்கரனின் பேண்ட் மேல் விழுந்தது.
கையை வைத்துப் பார்த்தார். கொழகொழவென்று நிணவாடையோடு ரத்தம். சங்கரனின் கைகள் நடுங்க அடுத்து இருந்த வயதான பயணி குழந்தை மாதிரி கழுத்தைப் பிடித்தபடி பசிக்குது, பசிக்குது என்று கேவத் தொடங்கி விட்டார்.
‘சுப் ரஹோ’ என்று கூக்குரலிட்டார்கள் அடுத்து வந்து நின்ற தீவிரவாதிகள். திரும்ப ’பூக் லக்தா ஹை’ – பசிக்குது – என்று பெரியவர் பரிதாபமாக ஒலி எழுப்ப, கழுத்தில் இன்னொரு முறை கத்தி வைக்கப்பட்டது. ஆனால் கீறிக் காயம் ஏற்படுத்தவில்லை. .
கிட்டத்தட்ட நடுராத்திரிக்கு துபாயில் விமானம் இறக்கப்பட்டது.
சங்கரனின் பக்கத்தில் இருந்த கழுத்தில் கத்திக்காயம் பட்ட பெரியவரும், இன்னும் இருபது பெண்களும் குழந்தைகளும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு துபாய் விமானநிலைய அதிகாரிகள் சுற்றி நடக்க, விமான நிலையத்துக்குள் கூட்டிச் செல்லப்பட்டார்கள்.
அவர்கள் நடப்பதை ஜன்னல்கள் வழியே ஏக்கத்தோடு பார்த்த மற்றப் பயணிகள் கண்ணீர் மல்கத் தங்கள் இருக்கைகளில் இருந்தார்கள். ஹைஜாக் செய்தவர்களின் குழுவைக் கைதட்டிப் பாராட்டும்படி வாக்கிடாக்கி உயிர்பெற்று ஊக்கப்படுத்தியது.
இன்னொரு முறை தூண்ட வேண்டிய தேவை இல்லாமல் எல்லாப் பயணிகளும் தொடர்ந்து கரகோஷம் செய்தபடி மிரண்டிருக்க நடுராத்திரி என்றாலும் விமானம் திரும்பவும் பறந்தது.
’ஆஃப்கானிஸ்தான் நகரம் கந்த்ஹர் விமான நிலையத்தில் வந்திறங்கி இருக்கிறோம்’ என்ற அறிவிப்பு சங்கரன் வயிற்றில் கிலியை ஏற்படுத்தியது.
“நாங்கள் எங்கள் நண்பர்களான தாலிபான் வீரர்களோடு ஒன்றுபட்டு விட்டோம். இனி உங்கள் அனைவரின் விதியையும் தாலிபான் தியாகிகள் அறிவிப்பார்கள். யாருக்கு எப்போது சொர்க்கம் புக நேரம் வருமோ வராமல் போகுமோ அதை நண்பர்கள் தீர்மானிப்பார்கள். இந்த சந்தோஷமான தகவலை அறிந்த மகிழ்ச்சியைக் கைதட்டிக் கொண்டாடுங்கள்” என்றான் ஒரு தீவிரவாதி.
அபத்தமான நேரத்தில் அபத்தமாக ஒலிக்கும் கைதட்டல்கள் விமானத்தில் எதிரொலிக்க, ’போதும்’ என்று சொல்வதை எதிர்பார்த்து, உயிருக்காக யாசிக்கிறவர்கள் கைதட்டிக் கொண்டிருந்தார்கள். தீவிரவாதிகளுக்குப் பாதுகாப்பு கொடுத்து ஆதரவும் தரும் தாலிபான்கள் விமானத்தைச் சூழ்ந்து கொண்டார்கள்.
”இந்திய சர்க்காரிடம் சில ஆணைகள் பிறப்பித்திருக்கிறோம். அதன்படி நடந்தால் நீங்கள் விடுதலை அடையலாம்”.
ஒற்றைக் கைதட்டு ஒலித்தது. உடனே நின்றது. தன்னை மறந்து கைதட்டியவர் சங்கரன் தான்.
“இந்தப் பன்றிதான் சத்தம் போட்டிருக்கிறது” என்று பக்கத்தில் வந்த தீவிரவாதிகள் பேசியபடி மூச்சை உறிஞ்சினார்கள்.
“சைத்தானே, மூத்திரம் போக உன் உடுப்புதான் கிடைத்ததா? கேட்டிருந்தால் அனுமதி கொடுத்திருக்க மாட்டோமா?”
ஒருத்தன் சங்கரன் கொட்டையில் கால் உயர்த்தி உதைத்தான். சங்கரனுக்கு கண்கள் இருள தலை சுற்றியது. மயக்கத்தில் விழுந்தார் அவர். விடிந்ததும் ராத்திரி வந்ததும் மறுபடி விடிந்ததும் தெரியாத நீண்ட மயக்கம் அது.
அவர் கண் விழித்தபோது அழுது வீர்த்த கண்களும், கசங்கிய சேலையும், சிக்குப் பிடித்த தலைமுடியுமாக பெண்கள் ஒவ்வொரு இருக்கையில் இருக்கப்பட்டவர்களுக்கும் நாலு நாலு ரொட்டித் துண்டு வழங்கிப் போனார்கள்.
நாசுக்கும் நளினமுமாக விமானத்துக்குள் வளைய வரும் ஏர் ஹோஸ்டஸ்கள் அவர்கள் என்று புலப்பட சங்கரனுக்கு ஆச்சரியம். ஒரு வினாடி தான் அது.
இந்த நாலு நாளில் பயணிகள் யாரும் இறந்து போனதாகத் தெரியவில்லை. ஆனால் இனியும் இப்படியே இருக்கும் என்று யாரும் சொல்ல முடியாது.
தீவிரவாதிகளை விட தாலிபான் வெறியர்கள் சின்னத்தனமும், மதத்தை கூறுகெட்ட மாதிரி சகலத்திலும் நுழைத்து சொர்க்கம் போகத் தீவிரமானவர்களாகக் காட்டுவதில் ஏனோ ஆர்வம் மிக்கவர்களாகவும் இருந்தார்கள்.
தினம் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போது சின்னக் குழந்தைகள் தவிர்த்து மற்ற பயணிகள், இருகையும் விரித்தபடி நிற்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தப்பட்டார்கள்.
பகலில் வேறெதுவும் செய்ய இல்லாவிட்டால், தீவிரவாதிகள் பயணிகளை ஒவ்வொருவராகக் கூப்பிட்டு, அவர்கள் உயிருக்கு உயிராக வழிபடும் தெய்வங்களை காது கூசும் வார்த்தைகளால் நிந்திக்கக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். பெண்களை அசிங்கமான வார்த்தைகளை உபயோகித்து, தெய்வங்கள் அவர்களோடு உறவு கொண்டதாக உரக்கச் சொல்லச் சொன்னார்கள்.
அந்தப் பெண்கள் ஓ என்று அழுதபடி கண்ணில் கட்டு மறுபடி ஏற விமானத்துக்குள் பின்பகுதியில் அவரவர் இருக்கைக்குப் போகும்போது மற்றப் பயணிகள் எல்லோரும் கைதட்டிப் பாராட்டியபடி இருக்கவும் கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.
ஒரு பத்து பேர் மட்டும் அடுத்து விடுதலை செய்யப்பட்டார்கள். அதற்கு முன் ஒவ்வொரு பயணியும் ’ஐயா சாமி என் உசிரைக் காப்பாத்துங்க’ என்றிப்படி காலைப் பிடித்து வேண்டி அந்த அழுக்கான பாதங்களில் முத்தமிட நிர்பந்திக்கப் பட்டார்கள். அதிகம் பிச்சை எடுப்பவர்கள் உயிர் ஒரு வேளை காப்பாற்றப்படலாம் என்று கூறப்பட்டது.
அந்த முதல் பத்தில் சங்கரன் பெயர் இல்லை.
சங்கரனை அவர்கள் விடுவிக்கும்போது எட்டு நாள் விமானத்திலே புழு பூச்சி போல சுருண்டு கிடந்து விட்டு சகல துர்க்கந்தத்தோடும் அவர் மீண்டு வந்தார். உயிரின் விலையில்லா, ஒப்புவமை இல்லாத நறுமணம் அது.
அவரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வேன் கந்த்ஹர் விமான நிலையத்தில் ஓர் ஓரமான ரன்வேயில் காத்திருந்த இந்திய விமானத்தின் அருகில் போய் நின்றது.
விமானத்தில் ஏறியபோது அந்த இந்திய விமானப் படிகளைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு அழுதார் சங்கரன். இந்தப் பத்து நாளில் சகலமானதுக்கும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தை குறைவாக, சந்தேசங்கள் அதிகமாக, அவற்றை மிகையுணர்ச்சியோடு வெளிப்படுத்த அவருக்கு வெகு சுலபமாக வந்திருந்தது.
“எனக்கென்ன கவலை? ஹரி ஒரு சின்னப் பையனாக, அப்பா அப்பான்னு மூலப் பரபிரும்மத்தை கூப்பிட்டுண்டு என் கூடவே இருந்தான். அவன் மேலே நல்ல மிளகு வாடை அடிச்சுது. இனிமேலும் என் கூட, மிளகு வாடையடிக்க இருப்பான்” என்று எல்லோரிடமும் சொன்னார் அவர்.
விமானம் தில்லியை நோக்கிப் பறக்க , சொல்லச் சொல்லக் கேட்காமல் ’ஹரி ஓம், ஹரி ஓம்’ என்று உரக்க பாடியபடி, கையைத் தட்டித் தாளம் போட்டுக்கொண்டு வந்தவர் அவர்தான்.
***