ஜப்பானியப் பழங்குறுநூறு

நூல் அறிமுகம்

பழந்தமிழரின் வாழ்வைக்கூறும் நம் இலக்கியங்களைப் போலவே ஜப்பானிய மொழியிலும் இலக்கியங்கள் உள்ளன. நம்மைப் போலவே, புலவர்கள் மட்டுமின்றிப் புரவலர்களும் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். கி.பி. 7ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை ஜப்பானை ஆண்ட பல அரசர்களும் அரசியரும் நிலப்பிரபுக்களும் மதகுருக்களும் இயற்றிய பாடல்களில் சிறந்த 100 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த சதாய்யே என்ற மன்னர் கி.பி. 1235ல் 百人一首 (Hyaku nin isshu – Verses from Hundred people) என்ற நூலாகத் தொகுத்திருக்கிறார். இவர் இயற்றிய ஒரு பாடலும் 97வது பாடலாக இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.

இவை அனைத்தும் தான்கா என்னும் பாடல் வகையைச் சேர்ந்தவை. 5 அடிகளில் அமையும் இப்பாவகையின் சீர்கள் 5-7-5-7-7 என்ற வடிவைக் கொண்டிருக்கும். இந்த நூறு பாடல்களில் சிலவற்றைத் தமிழாக்கி வெண்பா வடிவில் தரவிரும்பும் அடியேனின் சிறுமுயற்சியே இக்கட்டுரைத்தொடர். இத்தொடரின் முதல் 10 செய்யுள்களை வரலாறு.காம் மின்னிதழில் கீழ்க்கண்ட சுட்டிகளில் காணலாம்.

ஜப்பானியப் பழங்குறுநூறு – 1 (துளியுதிர் இரவு)
ஜப்பானியப் பழங்குறுநூறு – 2 (தோகை உலரும் வரை)
ஜப்பானியப் பழங்குறுநூறு – 3 (பீலியன்ன நீள் இரவு)
ஜப்பானியப் பழங்குறுநூறு – 4 (முகடில் பொழியும் வெண்மழை)
ஜப்பானியப் பழங்குறுநூறு – 5 (தனிமையின் வலியறிவார் யார்?)
ஜப்பானியப் பழங்குறுநூறு – 6 (உறைபனி கூட்டும் அழகு)
ஜப்பானியப் பழங்குறுநூறு – 7 (அன்று வந்ததும் இதே நிலா)
ஜப்பானியப் பழங்குறுநூறு – 8 (தான் மட்டுமே அறியும் அமைதி)
ஜப்பானியப் பழங்குறுநூறு – 9 (இணையற்ற அழகும் நிலையற்றதே)
ஜப்பானியப் பழங்குறுநூறு – 10 (பிறத்தலே இறத்தலின் முதல்படி)

பாடல் 11: என் நிலை உரைப்பார் யாரோ?

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்

わたの原

八十島かけて

漕ぎ出でぬと

人には告げよ

あまのつり舟

கனா எழுத்துருக்களில்

わたのはら

やそしまかけて

こぎいでぬと

ひとにはつげよ

あまのつりぶね

ஆசிரியர் குறிப்பு

பெயர்: அறிஞர் தக்காமுரா

காலம்: கி.பி. 802 – 853.

இத்தொகுப்பின் 7வது பாடலை இயற்றிய கவிஞர் நக்காமரோவைப் போலவே இவரும் சீனாவுக்குச் செல்லும் கலாச்சாரத் தூதுக்குழுவில் ஓர் அறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீன மொழியிலும் இவர் புலமை பெற்றிருந்தது இத்தேர்வுக்கு வழிகோலியது. இந்தத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கியவர் ட்சுனேட்சுகு என்பவர். கி.பி 833ல் ட்சுனேட்சுகுவைத் தலைவராகக் கொண்டு பேரரசர் நின்ம்யோ அமைத்த குழுவில் 834ல் தக்காமுரா துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். எல்லாத்துறை அறிஞர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு 836ல் சீனாவுக்குப் பயணம் துவங்குவதாகத் திட்டம். பயணம் துவங்க வேண்டிய நாளும் வந்தது. கித்தானோ என்ற இடத்திலிருந்த ஷிண்டோ மதக் கோயிலில் பயணம் வெற்றி பெறுவதற்கான வழிபாடுகளும் நடத்தி முடிக்கப்பட்டன. ஆனால் துறைமுகத்திலிருந்து கிளம்பிய தூதுக்குழு ஓரிரு நாட்களிலேயே திரும்பி வந்தன. மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் கப்பல் சேதமடைந்ததுதான் காரணம்.

அதன் பின்னர் குழு உறுப்பினர்கள் உற்சாகமிழந்து மீண்டும் சீனா செல்ல ஆர்வமின்றி இருந்தனர். தலைவர் ட்சுனேட்சுகு அனைவரையும் தேற்றி, உற்சாகப்படுத்தி மீண்டும் 838ல் தூதுக்குழுவின் பயணத்தைத் தொடங்கினார். இம்முறை நேரடியாகச் சீனாவுக்குச் செல்லாமல் கொரியாவுக்குச் சென்று அதிகத் தரம்வாய்ந்த கப்பலைப் பெற்றுக்கொண்டு சீனாவுக்குக் கிளம்பினர். 839ன் தொடக்கத்தில் குழு சீனாவை அடைந்தது. ஆனால் தக்காமுரா மட்டும் இல்லாமல். குழு உறுப்பினர்கள் எல்லோரையும் சமாதானப்படுத்திய தலைவரால் தக்காமுராவை மட்டும் எவ்வளவு முயன்றும் உடன் அழைத்துச் செல்லமுடியவில்லை. உடல்நிலை சரியில்லாததுபோல் நடித்து ஜப்பானிலேயே தங்கிவிட்டார். இதை அறிந்த முன்னாள் பேரரசர் சாகா கடுங்கோபம் கொண்டு இவரை ஒக்கி தீவுக்கு நாடுகடத்தினார். அப்போதுதான் நடுவழியில் யாராவது காப்பாற்ற மாட்டார்களா என ஏங்கி இப்பாடலை எழுதினார். அப்போது சாகா பேரரசராக இல்லாவிட்டாலும் தண்டனை விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். சாகாவின் வரலாறு சுவாரசியமானது.

கி.பி 781 முதல் 806 வரை ஜப்பானை ஆண்ட பேரரசர் கன்முவின் இரண்டாவது மகன் சாகா. அரசர் இறந்தவுடன் அவரது முதல் மகன் ஹெய்செய் (1989 முதல் 2019 வரை ஜப்பானின் 125வது அரசராக இருந்த அகிஹிதோவைக் குறிக்கும் ஹெய்செய்க்கும் இவருக்கும் தொடர்பில்லை) அரியணை ஏறினார். ஆனால் அவர் நான்காவது ஆண்டிலேயே நோய்வாய்ப்பட்டார். இனிமேல் தான் பிழைக்கமாட்டோம் என நினைத்துத் தன் தம்பி சாகாவிடம் 809ல் பொறுப்பை ஒப்படைத்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இவருக்கு உடல்நிலை சரியாயிற்று. ஆனால் சாகாவின் உடல்நிலை நலியத் தொடங்கியது. இதைப் பயன்படுத்தி ஆட்சியைத் திரும்பப் பெற விரும்பினார். சாகா அதற்குச் சம்மதிக்காமல் போகவே, அவரது மனைவி குசுகோவும் மைத்துனன் நகானாரியும் இணைந்து உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டினார்கள். ஆனால் சாகா, தனது விசுவாசமிக்க படைத்தளபதி தமுராமரோ உதவியுடன் கலவரத்தை அடக்கினார். இந்தத் தமுராமரோ என்பவர் சாகாவின் மாற்றாந்தாய் ஹருகோவின் தந்தை ஆவார். குசுகோ விஷம் வைத்தும் நகானாரி மரணதண்டனை விதித்தும் கொல்லப்பட்டனர். 23 வயதில் அரசரான சாகா 37வது வயதில் அரசவாழ்வில் ஆர்வமிழந்து ஆட்சியைத் தனது தம்பி ஜுன்னாவிடம் ஒப்படைத்தார். 57வது வயதில் இறந்த சாகாவுக்கு 30 மனைவியர், 49 குழந்தைகள். இந்த 30 பேரில் தனது தந்தை கன்முவின் இன்னொரு மனைவி மதக்கோ எனும் மாற்றாந்தாயின் மகளான தகாட்சுவும் ஒருவர். இவரது மகள் செய்ஷி பின்னாளில் தனது சித்தப்பா பேரரசர் ஜுன்னாவை மணந்தார்.

பாடுபொருள்

சார்ந்தோருக்குத் துயரநிலையைத் தெரிவிக்கக் கோருதல்

பாடலின் பொருள்

ஓ, மீனவப் படகுகளே! நான் தனிமையில் பெருங்கடலுக்குள் இருக்கும் தீவுக்கூட்டத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறேன் என்பதை ஊருக்குள் இருப்பவர்களிடம் தெரிவிப்பீர்களா?

சொல் அலங்காரங்கள் ஏதுமற்ற எளிமையான இப்பாடலின் பின்புலத்தை அறியாமல் இப்பாடலில் கையாளப்பட்டிருக்கும் சொற்களை மட்டும் வாசித்துப் பார்த்தால், இரண்டு விதமான பொருள்களைத் தரலாம். ஏதோ வீரதீரச் செயல் செய்யத் தனியாகக் கடலில் பயணம் செல்வதாக ஒரு பொருளும் பிரிவின் காரணமாகத் துயரக்கடலில் உழன்று கொண்டிருப்பதைக் காதலியிடம் சொல்லுமாறு இன்னொரு பொருளும் தொனிக்கும்.

இவர் பயணம் செய்த கப்பல் கிளம்பியது ஓசகாவின் நாம்பா துறைமுகத்திலிருந்து. தரைவழியே ஜப்பானைக் குறுக்காகக் கடந்து தொத்தோரிக்குச் சென்று அங்கிருந்து கப்பலில் சென்றால் விரைவாக அடைந்துவிடக்கூடிய ஒக்கி தீவுக்கூட்டத்துக்கு முழுக்க முழுக்கக் கடல்வழியே ஜப்பானின் தென்மேற்கு எல்லையைச் சுற்றிக்கொண்டு வந்துசேரச் சில மாதங்கள் ஆயின. எதற்காக இப்படிப்பட்ட பாதை தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது பேரரசர் சாகாவைத்தவிர யாருக்கும் தெரியவில்லை. எங்குக் கொண்டுசெல்லப்படுகிறார் என்பது தக்காமுராவுக்குத் தெரிவிக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை. இந்தப்பாதை கீழே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.

பின்கதை: இந்நிகழ்வுக்கு 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இவரது குற்றம் மன்னிக்கப்பட்டுச் சீனாவிலிருந்து வரும் வணிகக்கப்பல்களைச் சோதனையிடும் சுங்கச்சாவடியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

வெண்பா

அலைகடல் மேவும் கயல்கொள் கலங்காள்
குலையா உறுதிகொள் நெஞ்சில் - கலையாத்
தனிமையும் சூழ்ந்து செலுத்தும் பரிசல்ப்
பயணம் உரையீரோ ஊர்க்கு

பாடல் 12: கொண்டல் விலக்காயோ கொண்டலே!

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்

天つ風

雲のかよひ路

吹きとぢよ

をとめの姿

しばしとどめむ

கனா எழுத்துருக்களில்

あまつかぜ

くものかよひぢ

ふきとぢよ

をとめのすがた

しばしとどめむ

ஆசிரியர் குறிப்பு

பெயர்: மதகுரு ஹென்ஜோ

காலம்: கி.பி. 816 – 890.

இவரது இயற்பெயர் முனேசதா. காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியல், புலவர் ட்சுராயுக்கி தலைமையில் தொகுக்கப்பட்ட ஜப்பானின் ஆறு பழம்புலவர்களின் பட்டியல் என இரண்டிலும் இடம்பெற்று இருக்கும் வெகுசிலரில் இவரும் ஒருவர். இத்தொகுப்பின் 9வது பாடலை இயற்றிய பெண்பாற் புலவர் கொமாச்சி ஓனோவுடன் இவருக்குக் காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் பேரரசர் கன்முவின் கடைசி மகன் யசுயோவின் மகன். யசுயோவின் தாயார் பட்டம் சூட்டப்படாமல் அந்தப்புரத்துத் துணைவியரில் ஒருவராக மட்டுமே இருந்ததால் யசுயோவுக்கு இளவரசுப் பட்டம் மறுக்கப்பட்டு அதிகாரியாக மட்டுமே அரசவையில் பணியாற்றி வந்தார். யசுயோவின் மகன் முனேசதாவும் பேரரசர் நின்ம்யோவின் அவையில் முதல்நிலை அதிகாரியாக அரசருக்கு நெருக்கமாகப் பணியாற்றினார். கி.பி 850ல் நின்ம்யோ இறந்த பிறகு இவரும் அரசுப் பதவியைத் துறந்து புத்தமதத் துறவி ஆனார். அப்போது இவருக்குச் சூட்டப்பட்ட பெயர்தான் ஹென்ஜோ என்பது.

தலைநகர் கியோத்தோவுக்குத் தென்கிழக்கில் காங்யோஜி எனும் கோயிலையும் கியோத்தோவுக்கு வடக்கே உரின்யின் எனும் கோயிலையும் கட்டி இரண்டையும் நிர்வகித்து வந்தார். இவரது இறப்பு குறித்த தகவல் ஒன்று செவிவழிக் கதையாக உலாவருகிறது. 40 ஆண்டுகால ஆன்மிக வாழ்வுக்குப் பின்னர் தனது இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்ததாலோ என்னவோ, தான் எப்படி இறக்கவேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதன்படி இவருக்கு உயிருடன் ஒரு கல்லறை கட்டப்பட்டு அதனுள் அவரது வாயிலிருந்து ஒரு குழாய் மட்டும் வெளியே நீண்டுவந்து சுவாசிக்க ஏதுவாக அமைக்கப்பட்டது. பின்னர்ப் பட்டினியாலும் தாகத்தாலும் இறந்தார் என முடிகிறது அக்கதை.

பாடுபொருள்

நடனம் இன்னும் கொஞ்ச நேரம் தொடர வேண்டுதல்

பாடலின் பொருள்

வானுலகையும் பூவுலகையும் இணைக்கும் மேகக்கூட்டங்களின் வழியே தேவதைகள் பயணம் செய்கிறார்கள். சொர்க்கத்தைக் குளிர்விக்கும் காற்றே, மேகக்கூட்டத்தை ஊதித்தள்ளி அப்பாதையை விலக்குவாயாக! வானிலிருந்து வந்து இங்கு நடமிடும் தேவதையையொத்த இந்த அழகுப்பெண்கள் வானுலகுக்குத் திரும்ப இயலாமல் இன்னும் சற்று நேரம் இங்கேயே எம் கண்களுக்கு விருந்தாகட்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கொசெச்சி என்றொரு நடனம் புகழ்பெற்றிருந்தது. ஒவ்வோர் அரசரும் அரியணை ஏறும் விழாவிலும் ஆண்டுக்கொருமுறை நவம்பர் மாதம் 23ம் தேதியன்று வரும் நீனாமே விழாவிலும் இந்நடனம் ஆடப்பெறும். நீனாமே விழா என்பது அந்த ஆண்டு கிடைத்த அறுவடைக்காக அரசர் ஷிண்டோ மதக் கடவுள்களுக்கு நன்றிகூறி அடுத்த ஆண்டின் அறுவடையும் செழிப்பாக இருக்கவேண்டி வழிபடும் விழா. கொசெச்சி நடனத்தில் 4 அல்லது 5 பெண்கள் கலந்து கொள்வார்கள். அரச குடும்பத்திலிருந்து 2 இளம்பெண்கள், அரசு அதிகாரிகளின் குடும்பங்களிலிருந்து 2 இளம்பெண்கள், எப்போதாவது 5வதாகப் பட்டத்து ராணி ஆகியோர் கலந்து கொள்வதுண்டு.

பேரரசர் நின்ம்யோ இறப்பதற்கு முந்தைய ஆண்டு நீனாமே விழாவில் இந்த நடனத்தைக் கண்டுகளித்து அப்பெண்களின் அழகை விதந்தோதி ஹென்ஜோ இயற்றிய பாடல் இது என்பதால் கி.பி 849, நவம்பர் 23 என இப்பாடல் பிறந்த தினத்தைக் கூறலாம். வெறுமனே ஆடல்பெண்டிர் மிகவும் அழகானவர்கள் எனக் கூறாமல் காற்றையும் மேகத்தையும் துணைக்கழைத்துப் பாடலையும் அழகாக்கி இருக்கிறார் ஹென்ஜோ.

வெண்பா

வெண்டிரை போர்த்தன்னத் தேவதையர் கீழிறங்கு
கொண்டலைச் சற்றே விலக்காயோ - கொண்டலே
வான்செல்லாத் தேவியிவர் நல்கு பெருவிருந்தோ
கண்ணில் நிறையும் அழகு 
Series Navigationதுயரிலும் குன்றா அன்பு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.