- ஹஸ்ரத் மோஹானி
- அல்லாமா இக்பால்

உருதுக் கவிதைகளை வாசிக்கையில் அங்கங்கே தென்படும் மதநல்லிணக்க வரிகளை எளிமையாகக் கடக்க இயலவில்லை. இன்னொரு மதத்தைப் பின்பற்றினாலும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக ஹஸ்ரத் மோஹானி, மகாகவி இக்பால், ஹாஃபீஸ் ஜலந்த்ரி, ஃபிராக் கரக்பூரி எனப் பல கவிஞர்கள் தங்களுடைய கவிதை வரிகளில் இராமனையும், கிருஷ்ணனையும் வடித்துள்ளனர்.
மகாகவி பாரதியின்,
அல்லா, அல்லா, அல்லா! பல்லாயிரம் கோடிகோடி அண்டங்கள் எல்லாத் திசையிலும் ஓர் எல்லையில்லா வெளி வானிலே நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன் சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி பாடலையும் இவ்வரிசையில் சேர்க்கலாம்.
இந்திய விடுதலைக்கு முன் வெளியாகியிருக்கும் மதநல்லிணக்கக் கவிதைகள் இன்றைய காலகட்டத்தில் அருகிவிட்டாலும், அவ்வப்போது திரைப்படங்களில் மட்டும் ஒலிக்கின்றன.
இந்தியத் திரைப் பாடல்களில் புகழ்பெற்ற ‘பஜன்’ பாடல் ‘மன் தடப்பத் ஹரி தர்ஷன்கோ ஆஜ்’ (ஹரியின் தரிசனத்துக்காக மனம் ஏங்குகிறது). இதனை எழுதியவர், கவிஞர் ஷகீல் பதாயுனி, இசையமைத்தவர் நௌஷாத் அலி, பாடியவர் மொஹம்மத் ரஃபி. இந்தக் கூட்டணி போட்டுத் தந்த பாதையில் திரையுலகம் இன்று வரையில் செல்கிறது.
தமிழ்த் திரையிலும்,
அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை நீதானே உலகின் எல்லை பாடலை வாலியும்,
பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாடவைத்தேனா பாடலை கா.மு.ஷரீஃபும் எழுதிய வரலாறு உண்டு.
வெகு சமீபத்தில், ரெமோ-டி-சௌசா இராமாயணக் காட்சிகளின் பின்னணியில் நடனம் அமைத்த ‘கலங்க்’ திரைப்படத்தின் பஜன் பாடல் ‘கர் மோரெ பர்தேசியா’வின் (வீட்டுக்குத் திரும்பிவிடு அன்னியனே) நடனம், 2019இன் சிறந்த நடனமாக விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1. ஹஸ்ரத் மோஹானி:
‘இன்குலாப் ஜிந்தாபாத்’ – இந்திய விடுதலை முழக்கத்தை எழுதியவர் ஹஸ்ரத் மோஹானி. தன்னுடைய பத்திரிகை ‘உருது-ஏ-முஅல்லா’வில் எகிப்தில் வெள்ளையரின் கல்விக் கொள்கையைக் காட்டமாக விமரிசித்து எழுதப்பட்ட கட்டுரையின் ஆசிரியரை அடையாளம் காட்டச்சொல்லி வெள்ளியர் அழுத்தம் கொடுத்தபோது, ஆசிரியரைக் காட்டிக்கொடுக்காமல், அதற்காக ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையை ஏற்றவர். முன்னணி அரசியல் அமைப்புகள் கிலாஃபத் இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் மூன்றிலும் செல்வாக்கு செல்வாக்கு பெற்றிருந்தவர். இவர் ஒரு கவிஞர். தன்னை முற்போக்கு முஸ்லிமாக அடையாளம் காட்டிக்கொண்டவர்.
இவருடைய கவிதைத் தொகுப்பில் கண்ணபிரானின் புகழைப் பாடும் கவிதைகள் சில உள்ளன. அவற்றுள் அதிகமாக மேற்கோளாகக் காட்டப்படும் கவிதை,
ஹஸ்ரத்தும் மதுராவுக்குச் செல்வான் கேள்விப்பட்டேன் நட்புள்ளோர் மீது இன்று நீ கருணை காட்டுகிறாயாம் ஹஸ்ரத் கிபி குபூல் ஹோ மதுராமேன் ஹாஜிரி சுன்தே ஹைன் ஆஷிக்கோன்பே துமாரா கரம் ஹை ஆஜ்
حسرتؔ کی بھی قبول ہو متھرا میں حاضری سنتے ہیں عاشقوں پہ تمہارا کرم ہے آج
இதில் இரண்டாம் அடியின் கடைசி வார்த்தையான ‘ஆஜ்’ (இன்று) என்பது பாடபேதமாக சில இடங்களில் ‘காஸ்’ (சிறப்பு) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று என முடித்திருப்பது கிருஷ்ண ஜெயந்தியைக் குறிப்பதாகவும், சிறப்பு என முடித்திருப்பது என்றும் கருணை கிடைப்பதைச் சொல்வதாகவும் கருத்து வேறுபாடு உள்ளது. அவருடைய கவிதைத் தொகுப்பு திவானில் உள்ளபடி ‘ஆஜ்’ (இன்று) சரியானதாக இருக்கலாம்.
‘நட்புக்கென இருப்பது மதுரா நகர் / மூச்சு முழுவதும் அதன் எண்ணம் நிறைகிறது’ (மதுரா கி நஜர் ஹை ஆஷிக்கீகா / தம் பர்த்தி ஹை ஆர்சூ இசீகா) எனத் துவங்கும் கவிதையில் கண்ணனுடைய புல்லாங்குழலிசை ஹஸ்ரத்தின் வரிகளில் அன்பின் அறிவிப்பாக சொல்லப்படுகிறது.
கண்ணனின் புல்லாங்குழல் இசைக்கும் ஒவ்வொரு பண்ணும் எல்லையில்லா அன்பின் செய்தியறிவிப்பு பைகாம்-ஏ-ஹயாத்-ஏ-ஜாவ்தான் தா ஹர் நக்மா-ஏ-கிஷன் பான்சுரி கா
پیغام حیات جاوداں تھا ہر نغمۂ کرشن بانسری کا
(தமிழில் அடிகள் முன் பின் மாற்றப்பட்டுள்ளன)
முற்போக்கு முஸ்லிமாகவும் தன்னை வெளிப்படுத்தி, அன்றைய காலகட்டத்து அரசியல் தலைவர்களுடன் நட்பில் இருந்து, இந்திய விடுதலைப் போரிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தன்னுடைய கவிதைகளில் கண்ணனைப் பாடுவதற்கு அசாத்தியத் துணிவும் மனப்பக்குவமும் தேவை. அது ஹஸ்ரத் மோஹானியிடம் இருந்துள்ளது, அன்றைய சமூகமும் அவரை ஏற்றுள்ளது.
கஜல் உலகில் ஹஸ்ரத் மோஹானியின் ‘சுப்கே சுப்கே ராத் தின் ஆஸும் பஹானா யாத் ஹை!’ (காரணமின்றி இரவும் பகலும் கண்ணீர் உகுத்தது நினைவிருக்கிறது) என்னும் கஜல் மிகவும் புகழ் பெற்றது. தனி கஜலாக ஒலித்தது திரைப்பாடலாக வெளியானதும் அதிகப் பிரபலமானது. கஜல் என்றாலே முதலில் சொல்லப்படும் வரியாக ‘சுப்கே சுப்கே ராத் தின்’ உள்ளது.
(தொடரும்)