
நான்கு மாதங்களுக்கு முன்பாக என் பெண்ணிற்கு கண் பரிசோதனை செய்ய மருத்துவமனை சென்ற போது, சமீப மாதங்களாக கணிணி போன்றவற்றில் தட்டச்சு செய்யும் போது மெல்லிய திரை மறைப்பது போல் நான் உணர ஆரம்பித்திருந்ததால், எனக்கும் கண் பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனைகள் வழியே கண் புரை எனப்படும் cataract என் கண்களில் வளர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மூன்றிலிருந்து நான்கு மாதங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள், அதே சமயம் அறுவை சிகிச்சைக்கு முன்பாக, glaucoma எனப்படும் நீர் அழுத்தம் கண்ணில் மிகுதியாக இருப்பதால், அதற்கான சிறப்பு மருத்துவரையும் சென்று பாருங்கள் என்றனர்.
சமீபத்தில் என் மூத்த மகள் வசிக்கும் பெங்களூர் வந்தவுடன், பிரபா கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்றொரு மருத்துவமனையில் சென்று காண்பித்தோம். முதலில் Glaucoma எனப்படும் கண் நீர் அழுத்த மிகுதியை குறைப்பதற்கான சிகிச்சை மேற்கொண்டபின்தான் கண்புரை அறுவை சிகிச்சை பற்றி முடிவெடுக்க இயலும் என்று சொன்னார்கள்.
வெள்ளெழுத்து என்பதற்கு சாளேஸ்வரம் என்பது போல் இவற்றிற்கு நமது மூத்தோர் பரிபாஷையில் என்னென்ன பெயர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர்களை பார்ப்பதற்காக காத்திருந்தபோது எதிரே அகலத் திரையில் கண் மருத்துவம் பற்றி, கண்களில் எத்தனை விதமான நோய்கள் வருகிறது, அவை ஒவ்வொன்றையும் கையாளும் சிறப்பு மருத்துவர் யார் யார் என விவரித்து ஒரு காணொளி ஓடிக்கொண்டிருந்தது. பொதுவாக இன்று மருத்துவத்தில் உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கென தனியாக படித்த சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் கண்ணில் பலவகையான நோய்களும், அதற்கென தனித்தனியாக சிறப்பு மருத்துவர்களும் இருப்பதை இந்த மருத்துவமனை செய்திகளிலிருந்து தெரிந்து கொண்டேன்.
முதலில் கண்ணின் திறன் அறியும் நிலைகளை பரிசோதித்து அளந்தரிய முடிவு எடுத்தார்கள். அதற்கென ரூ.4100 செலுத்தியபின் ஒரு இயந்திரம் முன்பாக அமரவைத்து, அந்த கன்னட செவிலியரா பயிற்சி மருத்துவரா தெரியவில்லை, “கண்ணிற்கு நேரே தெரியும் சிவப்புப் புள்ளியை மட்டும் பார்க்க வேண்டும். இயந்திரம் தனது செயலைத் துவங்கியவுடன் அந்தப்புள்ளிக்கு மேலே, கீழே, பக்க வாட்டில் என அங்கங்கே ஒரு வெளிச்சம் வந்து போகும். ஒவ்வொரு முறை அத்தகைய வெள்ளை வெளிச்சத்தைப் பார்த்தவுடன் உங்கள் கையில் கொடுத்திருக்கும் சாதனத்தை ஒரு முறை அழுத்த வேண்டும். விழியை சுழற்றக் கூடாது, கண் நேராகப் பார்த்தவாறு இருக்க வேண்டும், ஆனால் சுற்றுப் புறத்தில் வெளிச்சப் புள்ளி தோன்றும் போதெல்லாம் இந்த சாதனத்தை அழுத்த வேண்டும்”, என கன்னடத்திலும் ஆங்கிலத்திலுமாக கலந்து சம்சாரித்ததை நானும் குண்ட்சாக புரிந்து கொண்டேன். அந்த சாதனத்தை ஆன் செய்து விட்டு அடுத்த இருக்கையில் அடுத்த நோயாளியை கவனிக்கச் சென்றுவிட்டாள்.
கண்ணெதிரே உள்ள கோளத்திற்குள் அங்கங்கே வெளிச்சப் புள்ளிகள் மின்னியதைப் பார்க்கையில் கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா என்ற வேதம் புதிது படப் பாடலின் முதல் வரி நினைவிற்கு வந்தது. ஐந்து நிமிடம் முடிந்தவுடன் மேலே, கீழே, பக்க வாட்டில் என எத்தனை முறை வெளிச்சம் தோன்றியது, அதை நான் எத்தனை சரியாக கணித்திருக்கிறேன் என்பதை செயற்கை நுண்ணறிவு இயந்திரம் அச்சடித்து துப்பிவிட்டது. அதைப் பார்வையிட்ட மருத்துவரும், என் கண் பார்வை அறியும் திறனில் பெரிதாக கோளாறு, பாதிப்பு ஏதுமில்லை என்ற முடிவிற்கு வந்தார். Glaucoma சிகிச்சையாக, இரண்டு சொட்டு மருந்துகள் 15 தினங்கள் போடச் சொன்னார்கள். அதில் நல்ல குணம் ஏற்பட்டு கண் நீர் அழுத்த அளவு மிகுதியாகக் குறைந்தது.

இருபது தினங்கள் கழித்து மீண்டும் பரிசோதனைக்குச் சென்றபோது, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம், அதற்கு முன்பாக டாக்டர் பிரவீன் அவர்களை பாருங்கள் என அனுப்பினார்கள். அவரும் உறுத்தாத ஆங்கிலத்தில், கண்புரை அறுவை சிகிச்சை பற்றி விளக்கியதோடு அதற்கு பின்னர் பொருத்தப்படும் லென்ஸ் ஆகியவை ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும் என்பதால், நீங்கள் சிகிச்சை செய்து கொள்வதாக இருந்தால், தயவு செய்து மற்றொரு கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட உறவுகள், நட்புகளுடன் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
உங்கள் கண்ணைப் பொறுத்தவரை கண்புரை என்பதோடு, கண் நீர் அழுத்தம் இருக்கிறது, எனவே உங்களுக்கு நான் அறுவை சிகிச்சைக்குப் பின் பொருத்தப்படும் லென்ஸ் தூரப் பார்வை, கிட்டப்பார்வை இரண்டிற்கும் பொருந்தும் விதத்திலான multiple power lens பரிந்துரைக்க மாட்டேன். உங்களுக்கு தூரப் பார்வைக்கான லென்ஸ் மட்டும் பொருத்திக் கொள்ளலாம், கிட்டப்பார்வை அதாவது படிப்பதற்கு, கணிணி உபயோகத்திற்கு தனியாக ஒரு கண்ணாடி பயன்படுத்திக் கொள்வது சரியாக இருக்கும் என்றும் விளக்கினார்.

இங்கு சாதாரண முறையிலும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது, நவீனத்துவமான லேசர் முறையிலும் செய்யப்படுகிறது. எந்த முறை எங்களுக்கு என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. அறுவை சிகிச்சைக்கு இரண்டு நாள் முன்பாக அளவுகள், ஸ்கேன் போன்றவை எடுக்க வேண்டும், மேலும் இரண்டு தினங்கள் ஒரு சொட்டு மருந்து போட வேண்டும் என்று தெரிவித்து, ஒவ்வொன்றாக மூன்று சாதனங்களின் முன்பாக அமர வைத்து பட்டனைத் தட்டினார்கள். இயந்திரக் கற்றலில் அது எல்லாவற்றையும் செய்து முடித்து பிரிண்ட் அவுட் ரிசல்ட் கொடுத்து விடுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பாக பென்சில்வேனியா தம்பி வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது, மருத்துவத் துறையில் இயந்திரக் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறைய சாதித்துக் கொண்டிருக்கிறது, குறிப்பாக கண் மருத்துவத்தில் எங்கோ சென்று கொணடிருக்கிறது என்றான். நிஜம்தான்.
அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்து, காலை 7.30 மணிக்கு வந்து விடுங்கள் என்றனர். குறிப்பிட்ட நாளும் வந்தது. காலை நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசலின்றி, 7 மணிக்கு மருத்துவமனை வாசலுக்குச் சென்றுவிட்டோம். அடுத்த கட்டிடமான உடுப்பி கிருஷ்ணாவில் கொஞ்சம் வெல்லம் போட்ட கர்நாடக சாம்பாரில் மிதந்த இட்லி, வடையை உள்ளே தள்ளிவிட்டு, மருத்துவ மனையின் முதல் தளத்திற்கு சென்று பெயரைச் சொன்னவுடன், சிவப்பழமாக நெற்றியில் திருநீறு, குங்குமம் சகிதம் ஒரு செவிலியர் அம்மா வந்தார். வலது கையில் ரக்க்ஷா பந்தன் போல் ஒரு அட்டையில் பெயர், வயது, வலது கண் என எழுதிய அட்டையை கட்டிவிட்டு, இரத்த அழுத்தம், எடை போன்றவற்றை சோதித்து குறித்துக் கொண்டார். முன்னதாக பாங்க் லோன் படிவத்தில் திருப்பிய பக்கமெல்லாம் கையெழுத்து பெறுவது போல், ஐந்தாறு பக்கங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்கள். ஏதேனும் வித்தியாசமாக நேர்ந்தால் மருத்துமனை பொறுப்பல்ல என்கிற வகையில் பொடி எழுத்து நிபந்தனைகளாக இருக்கும் என நினைக்கிறேன்.
கண்விழி (ஏற்கனவே பெரிதானதுதான்) சற்று அகலமாக இரண்டு சொட்டுக்கள் மருந்து விட்டு ஒரு அறையில் அமரவைத்தார். பத்து நிமிடம் கழித்து வந்து கண்ணில் ஒளி அடித்து பார்த்துவிட்டு, சட்டையை கழற்றச்சொன்னதோடு, செல்போன், பர்ஸ், பேனா, கண்ணாடி, என சகலத்தையும் உறவினரிடம் கொடுத்துவிடச் சொன்னார்கள். ஏறக்குறைய துறவு நிலைக்கு வந்தவுடன், ஏப்ரான் போல் ஒன்றை கட்டுவதுடன் சோடச உபசாரங்கள் துவங்கின. தலைக்கு ஒரு மெல்லிய வலை போன்ற குல்லா, கால்களில் செருப்பிற்கு பதிலாக இரண்டு மெல்லிய சாக்ஸ் போன்று ஏதேதோ. மெல்லிய துகள்கள் கண்ணிற்குள் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக நெற்றியிலிருந்த குங்குமத்தை அழித்துவிட்டு, இறுதியில் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள்.
சுத்தம், சுத்தம் எங்கெங்கு காணினும் சுத்தம். முகக் கவசத்தோடு வந்த டாக்டர் மிதமான குரலில், “நான் டாக்டர் பிரவீன், உங்களை உள்ளே அழைத்துச் சென்று படுக்க வைத்தவுடன் உங்கள் கண்ணை நெருங்குமாறு ஒரு சாதனத்தை அமைப்போம். அதை ஆன் செய்தவுடன் ஆறுபல்புகள் எரியும். நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்கும் போது லேசர் ஒளிக்கற்றை உங்கள் கண்புரையை சிறு சிறு துண்டுகளாக ஆக்கிவிடும். அதோடு என் பணி முடிந்தது. நீங்கள் டாக்டர் கெளரியிடம் அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கே அவர் உங்களின் கண்ணிலிருந்து அந்த புரை துண்டுகளை அகற்றிவிட்டு, உங்களுக்கு உரிய லென்ஸை பதித்து விடுவார்கள். கத்தியில்லை, ரத்தமில்லை, இயல்பாக இருங்கள்”, எனக் கூறிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.

இமைகள் இமைக்காமலிருக்க ஒரு கிளிப் போன்ற சாதனத்தை அமைத்ததோடு, கண் மட்டும் தெரியுமாறு வைத்து சுற்றிவர ஸ்டிக்கர் போல் உதவியாளர் எதையோ ஒட்டினார். கண் விழி மேல் ஒரு மெல்லிய மூடி போல் ஒரு கண்ணாடி சாதனத்தை வைத்தனர். அவர் சொன்னது போலவே 6 பல்புகளின் வெளிச்சம் பரவிய சில நொடிகளில் கண் விழியில் தெரிகிற மாதிரி 5 புள்ளி 6 வரிசை கோலம் போடுவது போல் கறுப்பு நெளிகள் ஓடி மறைந்தன. நன்றி உங்கள் சிகிச்சையின் என்பகுதி முடிந்தது என்று சொல்லிவிட்டு டாக்டர் பிரவீன் கழன்று கொண்டார். உதவியாளர் என் கையை பிடித்து இந்த வீல் சேரில் அமருங்கள் என்று அமர்த்தி, கண்ணை மூடியபடி இருங்கள் என்றார்.
பின்னர் என்னை அடுத்த தளத்திற்கு உருட்டிச் சென்றார்கள். அங்கு தயார் நிலையில் இருந்த டாக்டர் கெளரி தலைமையிலான குழுவினர் கண்ணைச் சுற்றி விடும் தண்ணீர் மற்றும் மருந்துப் பொருள் வழிந்து கழுத்தில் குறுகுறுப்பு ஏற்படாமலிருக்க சில பல மெத்தென்ற டிஷ்யூ போன்றவற்றை வைத்து, இமை மூடாமலிருக்க சாதனங்கள் அமைத்து, படுக்க வைத்தனர். இரத்த அழுத்த மானியை கையில் அமைத்துவிட்டு டாக்டர் பரபரவென்று இயங்கத் துவங்கினார். மயக்க மருந்து போன்ற எதுவும் இல்லை.
எனது கண்ணிலிருந்து இரண்டு மூன்று துண்டுகளாக, சாத்துக்குடி உள் வெள்ளைத் தோலி உரித்தெடுப்பது போல் வளர்ந்து படர்ந்திருந்த புரைகளை உரித்தார். ஒவ்வொன்று உரிக்கும் போதும் அருகிலிருந்த உதவியாளர் சிறிது ஜலம் விட்டுக் கொண்டே இருந்தார். மற்றொருவர் இரத்த அழுத்தத்தில் மாறுபாடு எதுவுமில்லை என்பதைச் சொல்லிக் கொண்டே இருந்தார். இந்தப் பணி முடிந்ததும், எனது வலது கண்ணிற்காக தீர்மானித்து வைத்திருந்த லென்சை உள்ளே வைத்து ஏதோ ஒரு மெல்லிய சாதனத்தால் வட்டமாக அழுத்திக் கொண்டே வந்தார். முடிந்தவுடன் மெழுகிப் பெருக்கி, ஜலம் தெளித்துவிட்டு கண்ணைச் சுற்றி ஒட்டியிருந்தவற்றையெல்லாம் உரித்தனர். கொஞ்சம் பஞ்சு வைத்து கண்ணை மூடி பிளாஸ்திரி ஒட்டி விட்டு, நன்றி போகலாம் என்றார் மருத்துவர்.
கீழே அறையில் ஒரு மணி நேரம் ஏதேனும் அலர்ஜி போன்றவையோ அல்லது தொந்தரவுகளோ ஏற்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக அமரச் செய்துவிட்டு, டிஸ்சார்ஜ் சம்மரி, போஸ்ட் ஆப்பரேட்டிவ் கிட், ஒரு அடர்த்தியான கூலிங் கிளாஸ் எல்லாம் கொடுத்து வீட்டிற்கு செல்லும் வரை பிளாஸ்திரி இருக்கட்டும், சென்றவுடன் நீக்கி விடலாம்,அதன் பிறகு வெளிச்சம் படாதவாறு கூலிங் கிளாஸ் போட்டுக் கொள்ளுங்கள், நாளை வாருங்கள் எனச்சொல்லி அனுப்பி வைத்தனர். 7.30 மணிக்கு உள்ளே சென்று, 10.30 மணிக்கு வெளியில் வந்து, 11.20ற்கு வீட்டிற்கே வந்தாகிவிட்டது.
மறுநாள் ஞாயிறு, மருத்துவ மனை விடுப்பு நாள். ஆனால் அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் மற்றும் முந்தைய நாள் அறுவை சிகிச்சை முடிந்து மறுநாள் வருபவர்கள் போன்றவர்களை பார்ப்பதற்காக ஒரு மருத்துவரும், சில உதவியாளர்களும் இருந்தனர். என் வலது கண்ணில் கண்நீர் அழுத்தம் போன்றவற்றை பரிசோதனை செய்துவிட்டு, மிகவும் இயல்பான அளவிற்கு குறைந்திருக்கிறது, நன்று, என தெரிவித்துவிட்டு, எதிரே மின்னணு பலகையில் பெரிய எழுத்திலிருந்து சிறிய அளவு வரை வாசிக்கச் சொல்ல, மள மளவென்று வாசிக்க முடிந்தது. மருத்துவ அறிவியல் ஏராளமாக முன்னேறியிருக்கிறது. மூன்று நாட்களில் இயல்பு திரும்பியது. வரும் வெள்ளியன்று மற்றொரு கண்ணிற்கு இதே போல் எல்லாம் நடக்க வேண்டும்.
மருத்துவக் காப்பீடு என்பதைப் பொறுத்தமட்டில் இந்தியா முழுவதிலும், எல்லா காப்பீட்டு நிறுவனங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் நடந்து கொள்கின்றன. காப்பீட்டிற்கான விளம்பரத்தின் போது வெறுங்கையோடு மருத்துவ மனைக்குச் சென்றுவிட்டு, சிகிச்சை முடிந்து திரும்பும் போது துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு வந்துவிடலாம் என்று தான் சொல்கின்றனர். ஆனால் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திற்கும் நுணுக்கமாக, பத்திர அலுவலக வழிகாட்டு விலை மதிப்பு போல், ஒரு ஆதிகாலத்து சொற்ப தொகையை நிர்ணயித்து வைத்திருக்கின்றனர். பணமில்லா மருத்துவம் என்கிற அட்டையைத் தேய்த்து மருத்துவமனையிலிருந்து காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பினால், மருத்துவமனை சொன்ன தொகையில் மூன்றில் ஒரு பங்குதான் அனுமதிக்கப்படுகிறது என பதில் வருகிறது. வலது கண்ணிற்கு மூத்த மகள் காப்பீடு, இடது கண்ணிற்கு அடுத்த மகள் காப்பீடு என நாங்களும் எங்களுக்குத் தெரிந்த அகட, விகட சாமர்த்தியத்தைப் பயன்படுத்தினோம். குழந்தைகள் பணிபுரியும் நிறுவனங்களின் காப்பீட்டு சகாயத்தில் ஏதாவது இதாவது வருகிறதே என திருப்திப்பட்டுக் கொண்டு மீதத் தொகையை செலுத்தினோம்.
அடுத்த வெள்ளிக் கிழமையும் வந்தது, இரண்டாவது கண்ணிற்கும் அதே போல் நடைமுறைகளைப் பின்பற்றி 20 நிமிடங்களில் லேசர் அறுவை சிகிச்சை முடிந்து மறு நாள் பரிசோதனையும் முடிந்தது. கண் அறுவை சிகிச்சை நடந்தாலும் நடந்தது, பத்துப் பனிரெண்டு தினங்களாக நல்ல சிசுருஷைகள் நடக்கிறது. காலையும், மதியமும் இருப்பிடத்திற்கு காபி வருகிறது. மொபைலை பார்க்காதீர்கள், உங்க அப்பா எதை செய்தாலும் இப்படித்தாண்டி என அவ்வப்போது அர்ச்சனை இருந்தாலும், மணாளனே மங்கையின் பாக்கியம் என, ஒரு மணிக் கொரு முறை, இரு மணிக் கொரு முறை நான்கு மணிக்கொரு முறை என கண்ணில் சொட்டு மருந்துகள் அயராது விட்டுக் கொண்டிருக்கிறாள் சகதர்மினி.
எல்லாவற்றிற்கும் முதன்மையாக ஒன்றைச் சொல்ல வேண்டும். என் மூத்த பெண்ணிற்கு அமைந்த இணை, மாப்”பிள்ளை” என்றில்லாமல் மற்றொரு பிள்ளை என்கிற வகையில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் போல் ஐந்தாறு முறை கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது, உடனிருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டது என்பது எல்லாம் பெரியவர்கள் ஆசிகளினால் கிடைத்த பேறு என நிச்சயம் மகிழ வேண்டும்.
நகைச்சுவை ததும்பும் நடை. விவரங்கள் விட்டுப் போகாமல், எல்லோரும் எளிமையாய் படித்து ரசிக்கும்படி எழுதியுள்ளார்.
Super Anna haven’t read a more descriptive personal account of a cataract operation..
Super anna. Padikkum bodhu Sujatha style la irundhadhu
ஒரு அறுவைச்சிகிச்சைக்கு இத்தனை அற்புதமான lவிளக்கமா? சின்னத்திரையில் பார்ப்பது போல் இருந்தது.