- எரியும் காடுகள் – 1
- எரியும் காடுகள் – 2
- எரியும் காடுகள்-3
- எரியும் காடுகள் – 4
நான் அங்கே இருந்து மூன்று வாரங்கள் ஆனபின்னரே அவர் அந்தத் தீவைப் பற்றிச் சொன்னார், என் கணக்கில் நாங்கள் உரையாடியதில் அது மூன்றாவது அல்லது நான்காவது தடவையாக இருக்கும். முதல் சில நாட்களுக்கு அவர் என்னை அணுகாமல் என் போக்கில் இருக்க விட்டார். அந்த ஓய்வு வாசஸ்தலத்தில் (அப்படி ஒரு வர்ணிப்பு பழைய காலத்து அர்த்தத்தில்தான் அந்த இடத்துக்குப் பொருந்தும். அது எங்கோ மலைகளடர்ந்த, எட்டாக்கையான ஒரு பிரதேசத்தில் இருக்கும், பாசி படர்ந்த, பழைய சிறுகுடில்களின் தொகுப்பாக இருந்தது) நான் சேர்ந்தபோது குளிராக, இருண்ட, மிக நேரமாகி விட்ட பின்மாலைப் பொழுதாக இருந்தது. அங்கு மரக்கட்டைகளின் புகை வாசம் பின்தங்கியிருந்தது. நான் ஒரு சிறு கைப்பெட்டியோடு, யார் சங்காத்தமும், உரையாடலும் என் தேவைகளில் சேரவில்லை என்று காட்டும் தோற்றத்தோடு வந்து சேர்ந்தேன். என்னைப் போல பலரை ரால்ஃப் முன்பே சந்தித்திருப்பாராயிருக்கும். பயணிகள் வராத தேக்க காலத்தில் யாரோ ஒருவரிடமிருந்து கிட்டும் வருமானம் அவருக்கு உவப்பாக இருந்திருக்கும், அவர் என் தோற்றம் குறித்துக் கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை.
தனது குடிலிலிருந்து ஆகத் தொலைவில் இருந்த ஒரு குடிலுக்கு என்னை அவர் இட்டுச் சென்றார், அவர் குடில் அந்த வளாகத்தின் நடுவில் இருந்தது, அது அலுவலகமாகவும் பயன்பட்டது. என்னுடையதில் ஓர் அமரும் இடம், சிறிய சமையலறை, படுக்கையறை, சாதாரண குளியலறை, முன்புறம் சிறு மரத்தளம் ஆகியன இருந்தன. ஓதம் காத்த மாதிரி வாடையடித்தது, ஆனால் அவர் பக்கவாட்டில் வெளியே சீராகக் குவிக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளைக் காட்டினார், கணப்படுப்பில் சில கட்டைகளைப் போட்டு நெருப்பு மூட்டினார், அங்கே என்னவெல்லாம் விளக்கப்படவிருந்தனவோ அவற்றை விளக்கினார். அருகில் உள்ளதான ஒரு கடை, சாலையில் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் இருந்தது என்றார், இது எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அங்கே நான் பியரும், சிகரெட்களும் அரை மணி முன்னதாகத்தான் வாங்கி இருந்தேன். அங்கே என் பொருட்களைச் சேகரித்துக் கொண்டு அவற்றுக்குக் காசு கொடுக்கும்போது என் தலைக் குல்லாயின் விளிம்பைத் தாழ்த்தி இருந்தேன். ரால்ஃப் மேலும் எனக்குத் தெரிவித்தவை, அருகில் இருந்த மதுபானக்கடை எதிர் திசையில் மூன்று மைல்கள் தள்ளி இருந்தது, அங்கே சாப்பாடு கிட்டும், ஆனால் அனேக நாட்களில் மதியத்திலிருந்து இரவு எட்டு மணிவரைதான் திறந்திருக்கும். அந்த உணவு சொல்லிக் கொள்ளும்படி இராது. முழுச் சிற்றூர் என்று பார்த்தால் கிட்டத்தில் உள்ள ஊர் ஒன்று அதே திசையில் இருபது மைல்கள் தள்ளித்தான் இருந்தது.
பிறகு என் போக்கில் இருக்க விட்டு அவர் தன் குடில் இருந்த திக்கில் போனார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் கதவு மூடிய சத்தத்தை நான் கேட்டேன்.
என் கைப்பெட்டியை சுவற்றலமாரியில் வைத்தேன், என் பெட்டியைப் பிரித்து பொருட்களை எடுத்து வைக்க ஐந்து நிமிடங்கள்தான் ஆகும் என்றாலும், அங்கே தங்கப்போகும் காலம் நிச்சயமாக இல்லாததால், அந்த வேலை அவசியமா என்று தெரியவில்லை. அதற்குப் பதில் ஒரு பியர் புட்டியைத் திறந்தேன், முன்வாசல் தளத்திற்கு எடுத்துப் போனேன், அங்கே இருந்த அடிபட்ட ஒரு நாற்காலியில் அமர்ந்து, புகை பிடித்தேன்.
அந்தக் குடிலைச் சுற்றி நான்கு புறமும் அங்குமிங்கும் மரங்கள் இருந்தன, அவற்றின் பின்னே காடு முழு மூச்சுடன் துவங்கியது. ஐம்பது கஜ தூரம் தள்ளி, ஒரு இலேசான சரிவின் முடிவில், ஓர் ஏரியின் கரை இருந்தது.
நான் அமர்ந்த இடத்திலிருந்து நான்கு குடில்களைப் பார்க்க முடிந்தது, ரால்ஃபுடையதைச் சேர்க்காமல். அவருடைய மேஜையின் பின்னால் ஒன்பது கொக்கிகள் சுவற்றில் இருந்ததால், மீதமுள்ள குடில்கள் என் பார்வைக் கோட்டில் வரவில்லை, வேறு எங்கோ பின்னே இருந்தன என்று ஊகித்தேன். அலுவலகத்தின் புகைபோக்கி வழியே மெலிதான புகை சுருளாக மேலேறிப் போயிற்று. மற்றவற்றில் எதையும் காணோம். நல்ல குளிராக ஏற்கனவே இருந்தது, ஒளி மங்கியதும் குளிர் இன்னும் நிறையவே கூடும். இது ரால்ஃப் என்னிடம் மொத்த இடமும் என் பயன்பாட்டுக்குத்தான் என்று சொன்னது உண்மைதான் என்று காட்டியது. அவரை நம்பாமல் இருக்க எனக்குக் காரணம் ஏதுமில்லை, ஆனால் நானே உறுதி செய்து கொள்ளும் வரை பெரும்பாலான விஷயங்களை நான் நம்புவதில்லை.
அங்கு மிகவும் அமைதி நிலவியது.
மரங்களின் இடையே இருந்தும், கடுங்குளிரான ஏரியின் திக்கிலிருந்தும், அந்தி வேளை கசிந்து என்னை நோக்கி வந்தது. அந்த ஏரியின் பெயரை அவர் எனக்குச் சொல்லி இருந்தார், ஆனால் அது அமெரிக்கப் பழங்குடியினரின் மூலப் பெயரை அடிப்படையாகக் கொண்ட ஒரு நீண்ட பெயர், அதை நான் உடனே மறந்து விட்டேன். அது மிகப் பெரியது, அதைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் காடு இருந்தது, அதன் நடுவே சிறு சிறு தீவுகள் இருந்தன. அது எனக்கு நேரெதிரே இருந்தது.
அதன் பெயரைத் தெரிந்து கொள்ள எனக்கு அவசியம் இருக்கவில்லை.
சில நாட்களில் நான் அங்கு பழகி விட்டேன். அலங்கோலமாகப் பராமரிக்கப்பட்ட அந்த ஜெனரல் ஸ்டோருக்கு நடந்து போனேன், அதன் சில அலமாரிகளிலிருந்து மேலும் மளிகைப் பொருட்களை வாங்கினேன். அந்தக் கடையில் பிரதானமாக டப்பிகளில் அடைத்த பண்டங்களும், மதுபானங்களும்தான் விற்கப்பட்டன. காடுகளுக்குள் சிறு குழுக்களான ஆண் நண்பர்கள் ஆட்டம் போட்டுக் களிக்க வருடந்தோறும் வரும்போது அவர்களுக்குத் தேவைப்படும் சில அடிப்படைப் பொருட்கள்தாம் அங்கே விற்கப்பட்டன. அவர்களின் பயணங்கள் பொதுவாக வனத்தின் விலங்கினங்களில் பலவற்றை நாசம் செய்வதற்காகவும் மேற்கொள்ளப்படுவன என்பதால் அந்தக் கடையில் துப்பாக்கிகளுக்குத் தேவையான தளவாடங்கள் விற்கப்பட்டன. நான் ஏதும் வாங்கவில்லை. ஆனாலும் இந்த முறை அந்தக் கடையின் ஊழியர் என் முகத்தைப் பார்க்க நான் அனுமதித்தேன். அவருக்கு அறியும் ஆர்வம் சிறிதும் இருக்கவில்லை.
சில பைகளில் சாமான்களுடன் திரும்பி வந்தேன், அவை சிலவகை அடிப்படை சாப்பாடாக மாற்றப்படக் கூடியவை. அவற்றை சமையலறையின் அலமாரியில் வைத்த போது, என் பெட்டியையும் திறந்து பொருட்களை வெளியே எடுத்து வைக்கலாம் என்று தீர்மானித்தேன். நான் அதைச் செய்து முடித்த போது என் குடிலின் கதவு தட்டப்பட்டது.
கதவைத் திறந்தபோது அங்கே ரால்ஃப் தயங்கியபடி முகப்புத் தளத்தில் நின்றிருந்தார். உயரமானவர், கோணங்களும், அகன்ற பரப்பும் கொண்ட முகம், பள்ளங்கள் கொண்ட முன்நெற்றி, விளக்கொளியில் எல்லாம் கூர்மைப்பட்டுத் தெரிந்தன. ஐம்பதுகளின் கடைசியில் இருப்பார். ‘உங்களுக்கு எல்லாம் வசதியா இருக்கான்னு சோதிக்க வந்தேன்.’
அந்த வாரத்தில் அவரை ஓரிரு தடவைகளே பார்த்திருந்தேன், அதுவும் தூரத்திலிருந்து, காட்டுக்குள் நான் என் சுற்றுதல்களுக்காகப் போகும்போதோ அல்லது திரும்பும்போதோ பார்த்ததுதான். அவை ஏதோ இயற்கையோடு உறவாடவென்று மேற்கொள்ளப்பட்டவை அல்ல, இயற்கையைப் பொறுத்து அது இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனக்கு ஒன்றுதான், மாறாக என் உடலை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளத்தான் அந்த நடை எல்லாம். ஒரு மணி நேரம் நடப்பேன், முப்பது நிமிடங்கள் ஓடுவேன், மறுபடி அதையே செய்வேன், என் குடிலுக்குத் திரும்ப நேரம் வரும் வரை அதை எல்லாம் செய்வேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திசையில் போவேன். பாதைகளைக் கண்டு பிடிக்க நான் முயற்சி செய்யவில்லை, ஏனெனில் அங்கு அப்படி ஏதும் இல்லை. நான் நிறைய மரங்களைக் கண்டிருந்தேன்.
தூரத்தே இருந்த சிறு தீவுகளைப் பார்த்துக் கொண்டு, ஏரிக்கரையிலும் நின்றிருந்தேன். வேண்டுமென்றால் ஒரு படகையோ, காயாக்கையோ நீர்ப்பரப்பை நோக்கி இழுத்துப் போய், அந்தத் தீவுகளிடையே ஓட்டிக்கொண்டு ஒரு நாளைக் கழித்திருக்கலாம். கோடையில், ஜனங்கள் அதைத்தான் செய்திருப்பார்கள் போல.
‘சரியா இருக்கு,’ நான் சொன்னேன். ‘இன்னும் கொஞ்சம் மரக்கட்டைகள் வேணும், அவ்ளோதான்.’
அவர் மரங்களை நோக்கிச் சுட்டினார். ‘முக்கியமான குவியல் அங்கே இருக்கு. இன்னி ராத்திரிக்கு வேணுங்கறது இருக்கில்லையா?’
‘ஆமாம்.’
‘நான் நாளைக்குக் காலைல கொண்டு வரேன்.’
‘நானே செஞ்சுக்குவேன், இப்ப எங்கே இருக்குன்னு தெரிஞ்சுடுத்தில்லியா.’
‘நான் இங்கே இருக்கறதே அதுக்குத்தானெ. வேற ஏதாவது வேணுமா?’
நான் தலையசைத்து மறுத்தேன். அவர் நடந்து போய்விட்டார். வானத்தைப் பார்த்துக் கொண்டு சில நிமிடங்கள் நின்றிருந்தேன். அது சாம்பல் நிறத்தில், பனி மூடியது போல இருந்தது. பனிப்பொழிவு வரப் போகிறதற்கு அறிகுறி.
அன்றிரவு விழவில்லை, அதனால் அடுத்த நாள் காலை நான் கடைக்குப் போய் திரும்பி வருகையில், துப்பாக்கிக்கான தளவாடங்கள் வாங்கி வந்தேன். அதிகமில்லை. போதுமான அளவு மட்டும்.

2
சில மாலைகள் கழித்து முதல் பனிப்பொழிவுகள் துவங்கின, தரையிலும், குடிலின் கூரையிலும் சில அங்குலங்கள் பனித் தூள் சேர்ந்தது. நான் முகப்புத் தளத்தில் அமர்ந்து பனி மெள்ள விழுவதைப் பார்த்திருந்தேன். சிறிது நேரம் கழித்து, ரால்ஃப் ஒவ்வொரு குடிலாகப் போய் வருவதை அந்த அரை ஒளியில் பார்த்தேன். அவை மேலும் வரப் போகிற கனமான பனிப்பொழிவைத் தாங்கும் வகையில் சரியாக மூடப்பட்டு காக்கப்பட்டிருக்கின்றனவா என்று சோதித்திருப்பார். அவர் என் குடிலைத் தாண்டும்போது மேலே இருந்த என்னைப் பார்த்தார்.
‘நல்ல நிலையில இருக்கா?’
‘அப்படித்தான் இருக்கணும்.’ அவர் சுற்றிலும் விழுந்த வெண்மை புள்ளியிட்ட இருட்டில் சுற்றிலும் இங்குமங்கும் பார்த்தபடி நின்றார். ‘நாங்க இப்ப மூடிட்டோம்,’ என்றார். ‘பனிக்காலத்துக்காக.’
‘ஆனா, நான் இருக்கலாமா?’
‘நான் பார்த்த வரையில, நீங்க இங்கே இருக்கறது இல்லாததை விடக் கூடுதலான தொந்தரவா இல்லை.’
என் நாற்காலிக்கு அருகில் தளத்தில் ஒரு கொத்தாக ஆறு டப்பாக்களில் பியர் வைத்திருந்தேன். ஒன்றைத் தூக்கி எடுத்தேன், உயர்த்திக் காட்டினேன். அவர் ஒரு கணம் யோசித்தார், மேலே வந்தார், இன்னொரு நாற்காலியில் அமர்ந்தார்.
நாங்கள் இருவரும் ஒன்றைக் குடித்தோம், மௌனமாக இருந்தோம், அவர் எழுந்து போனார்.
நான் வெளியே காட்டுக்குள் போனேன், அரை நாளுக்குத்தான். பனியில், ஓடுவது முடியாதது, கொஞ்ச தூரம் நடப்பதே சிரமமானது. ஏரியின் விளிம்பு ஒளி ஊடுருவாததாக ஆகிக் கொண்டிருந்தது. நிசப்தம் நிலவியது, அது அத்தனை ஆழமாக இருந்ததால் ரால்ஃபின் குடில் கதவு திறந்த போது எழுந்த க்ளிக் ஒலி கேட்டது. நான் தலை திருப்பி அங்கே பார்த்தேன், அவர் ஏன் வெளியே வந்தார் என்று அறியும் ஆர்வம். அவருக்குமே அது ஏன் என்று தெரியவில்லை என்பது போல இருந்தது. சில கஜ தூரம் தடுமாறி நடந்தார், பிறகு ஸ்தம்பித்து நின்றார், தன் கதவிற்கு மேல் இருந்த விளக்கு ஒளியின் விளிம்பில் தெரிந்தார். எதையோ கேட்க முயல்வது போல நின்றிருந்தார். பின் என் குடில் இருந்த திக்கில் பார்த்தார்.
நான் கையுயர்த்தினேன், என் கையில் பியர் பாட்டில் இருந்தது. அவர் அதை ஓர் அழைப்பாக எடுத்துக் கொண்டதாகத் தெரிந்தது. ஒருகால் அது அப்படித்தான் போல.
இந்த முறை நிறைய நேரம் இருந்தார், நாங்கள் கொஞ்சம் பேசினோம். அவருடைய அப்பாவிடமிருந்து இந்த இடத்தை சொத்தாக அவர் பெற்றார் என்றும், கடந்த முப்பது வருடங்களாக இதை நடத்திக் காலம் கழித்திருக்கிறார் என்றும் தெரிந்து கொண்டேன். இது கோடையில் விறுவிறுப்பாக இயங்கியது, ஜனங்கள் மீன் பிடிக்கவும், ஏரியில் காயாக்கில் பயணம் செய்யவும் வந்து போனார்கள். மாலைகளில் ஏராளமானவர்கள் உணவுகளை நெருப்பில் வாட்டுவதை மேற்கொண்டார்கள். அந்த மதுபானக் கடையில் எனக்கு எதையும் வாங்க முடியாததற்குக் காரணம் அந்தக் கடைக்காரர் ஒரு குடிகாரர், ஜனங்கள் வராத பனிக்காலங்களில் அவர் நாளில் பெரும்பகுதியைக் குடிபோதையில் கடையின் பின்னாலிருந்த ஒரு சாக்குப் பை மீது படுத்துக் கிடந்து கழித்தார் என்பதால் என்று விளக்கம் கிட்டியது. வாடிக்கைக்காரர்களுக்கு இது தெரியும் என்பதால் தாமே வேண்டியதை எடுத்துக் குடித்து விட்டு, அதற்கான கட்டணத்தை அங்கு கௌண்டரில் விட்டுச் செல்வார்கள், கொஞ்சம் ‘டிப்’ கூடக் கொடுப்பார்கள், ஏனெனில் அந்த முதலாளி அடிப்படையில் நல்ல மனிதர், அந்தக் கடை மூடி விட்டால், அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ள போக்கிடம் எதுவும் இல்லாமல் போகும், வாரக்கணக்கில் தம்முடைய அன்பான குடும்பத்தோடு சிறைப்பட்டுக் கிடப்பது எல்லாருக்குமே மிகவும் பாரமானதாகி விடும் என்று விளக்கம் கிட்டியது.
ரால்ஃப் நிறையப் படிக்கிறார் என்றும் தெரிந்து கொண்டேன், இருபது மைல் தூரத்தில் இருந்த ரெண்டன் நகருக்கு அவர் மாதம் ஒரு முறை தேவையான பொருட்களை வாங்க கார் ஓட்டிச் செல்வார். அங்கிருந்து கைகொள்ளாத அளவு புத்தகங்களை அள்ளி வருவார். அவருடைய மனைவி புற்று நோயில் பத்து வருடங்கள் முன்பு இறந்து போயிருந்தார். குழந்தைகள் இல்லை.
நாங்கள் தலா மூன்று பியர்களை, அவசரமே படாமல் குடித்தபடி இருக்கையில் இதையெல்லாம் தெரிந்து கொண்டேன். என்னைப் பற்றி அவர் எதையும் தெரிந்து கொள்ளவில்லை.
3
மேலும் நாட்கள் கழிந்தன. பனிப் பொழிவு நடந்தது, இரு முறை கனமான பொழிவு. காட்டுக்குள் நடப்பது சலிப்படையும் வேலையாக ஆகியது. இருந்தபோதும் நான் அதைச் செய்தேன், அனேகமாக நான் ஏரிக்கரையோரத்தோடு நடப்பதோடு நிறுத்திக் கொண்டேன். உறைபனி படிப்படியாக ஏரி நீர்ப்பரப்பில் தூரத்துக்குப் பரவிப் போயிற்று. ஒரு பிற்பகலில் அந்த உறைபனியூடே கீழே இருந்த கூழாங்கற்களையும், பாறைகளையும் பார்த்தபடி நின்றிருந்தேன், பிறகு குந்தி அமர்ந்து, என் முட்டியால் மெல்லிய உறைபனிப் படலத்தை உடைத்தேன், ஒரு கல்லை எடுத்து, என் சில்லிட்டுப் போயிருந்த விரல்களால் புரட்டிப் பார்த்தேன். அடையாளமற்ற ஒரு கல், லட்சக்கணக்கான வருடங்களால் உருட்டப்பட்ட வரலாறுள்ளது, அவை எதற்கும் ஒரு அர்த்தமும் இல்லை, அவற்றைப் பற்றி எதுவும் இனிமேலும் தெரியப் போவதில்லை. பூமியில் மனிதகுலம் வாழ்ந்த காலத்தை விட இருபது மடங்காவது நீண்ட காலத்தில் எண்ணற்ற சிறு சம்பவங்கள் இதைக் கடந்திருக்கும். இங்கே இப்போது கிடக்கிறது, கடும் குளிர் கொண்ட இந்த ஏரியின் விளிம்பில், ஒரு அத்துவான வெளியில் கிடக்கிறது, இதன் கடந்த காலமும், எதிர்காலமும் ஒரு பொருட்டுமற்றவை, ஏனெனில் அது எந்தக் குறிப்பிட்ட இடத்துக்கும் போகவில்லை. கடந்து வந்த பாதை ஏதும் இல்லை, போகும் பாதையும் இல்லை, காத்திருப்பது ஒன்றுக்காகத் தவிர வேறெதற்காகவும் இது காத்திருக்கவில்லை. இதைக் கவனித்த ஒரே நபர் நானாகத்தான் இருக்கும். அதை எடை போட, பரிசீலிக்க நான் ஒருத்தனே. எனக்கு மட்டும்தான் இது நிஜமாக இருக்கும். இதைப் போல எண்ணற்றவை இந்த ஏரியின் சுற்றுப் புறத்தில் எங்கும் கிடந்தன- சேறு பூசிய, குளிர்ந்த கற்கள், ஒரு முக்கியமும் இல்லாதவை- அவை உங்கள் படகின் அடிப்பாகத்தை உரசினாலொழிய நீங்கள் அவற்றைக் கவனிக்கப் போவதில்லை, அக்கறை கொள்ளப் போவதும் இல்லை.
அந்தக் கூழாங்கல்லை வைத்திருக்கலாம், அதை ஒரு பொருட்டாக ஆக்கலாம், சும்மா கிடக்கும் ஏதோவாக இருப்பதிலிருந்து, அதன் சகாக்களிடமிருந்து பிரித்து உயர்த்தலாம், என்று நினைத்தேன். ஆனால் எனக்கு அதை வைத்திருக்க ஒரு தேவையும் இல்லை, நான் எடுத்த இடத்திலிருந்து ஒரு கஜ தூரம் தள்ளி ஏரியில் அதைப் போட்டேன், காலத்தில் அதன் பயணத்தில் இன்னொரு தற்செயல் நிகழ்ச்சியாக.
நான் நடந்து விலகிப் போகும்போது அது என்னைக் கவனித்திருப்பதாக எனக்குத் தோன்றியது, ஆனால் என் இருப்பு அதன் வாழ்வில் ஒரு கண் சிமிட்டல் நேரம் கூட இராது என்றும் தோன்றியது. என்னைப் பற்றி கடவுளும் இப்படித்தான் உணர்வாரா என்று தோன்றியது.
அல்லது, நம்மைப் பற்றி அவர் யோசிக்கக் கூடுமா என்றும் இருந்தது.
அன்றிரவு நான் ரால்ஃபை என் குடிலுக்கு அழைக்க வேண்டி இருந்தது, ஏனெனில் என் ஸ்டொவ் சரியாக வேலை செய்யவில்லை. வழக்கமாக இதையெல்லாம் சீர் செய்வதை நானே செய்வதுதான் என் விருப்பம், ஆனால் ப்ரொபேன் எரிவாயுவை நான் அடிப்படையிலேயே நம்பத் தயாராக இல்லை.
அது சரியாக வேலை செய்யும் வரை அவர் எதையோ குடைந்து கொண்டிருந்தார். கருவிகளை உள்ளே போட தன் பையை அவர் திறந்த போது, அதற்குள் பியர் தகர டப்பிகள் ஆறு ஒரு கொத்தாக இருப்பதைப் பார்த்தேன். அவர் பையை மூட அவசரப் படவும் இல்லை. அவர் என் பியரைக் குடித்திருக்கிறார். அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று அவர் எண்ணுவார் என்று எனக்குத் தெரியும், இன்றிரவில்லை என்றால் இன்னொரு நாள். அது இன்றாகவே இருக்கட்டுமே.
‘அதுல இருக்கற சுமையைக் குறைக்க நான் உதவ முடியும்.’
‘அப்டி நடக்கும்னு நான் எதிர்பார்த்தேன்,’ அவர் சொன்னார்.
முன்புறத் தளத்தில் அமர முடியாமல் குளிராக இருந்தது. நான் கணப்பில் நெருப்பு மூட்டி இருந்தேன். அதனருகே எதிரெதிர் நாற்காலிகளில் அமர்ந்தோம்.
‘உங்களோட நடைக்கு இந்தப் பனி இடைஞ்சலா இருக்குமே, இல்லையா?’
‘இருந்தாலும் நாளைக்கு மறுபடி போவேன்.’
‘ஏதாவது தேடறீங்களா?’
‘என்னத்தை?’
‘எனக்குத் தெரியல,’ அவர் சொன்னார். ‘கொஞ்ச நாள் முன்னாடி நீங்க தொடர்ந்து எட்டு மணி நேரம் போல அங்க போயிருந்தீங்க. அது நிறைய நடை. சரி, நீங்க எதையோ தேடறீங்க போலன்னு நினைச்சேன்.’
‘எதையும் குறிப்பாத் தேடல்லை.’
‘ஏதாச்சும் கிட்டிச்சா?’
‘மரங்க.’
அவர் தலையசைத்தார், ஒரு மிடறு அருந்தினார். ‘முன்னெல்லாம் நானும் நிறைய நடந்ததுண்டு. என் பெண்டாட்டி உசிரோட இருந்தப்ப. எனக்குன்னு கொஞ்சம் நேரம் தனியா வேணுமுன்னு அப்ப தோணியிருந்தது. இப்ப அவ போய்ட்டா, அது ஒண்ணுதான் எனக்கு இருக்கு.’
‘ஒரு ஆளுக்கு இடம் வேண்டித்தான் இருக்கு.’
‘அப்டித்தான் போலருக்கு. ஆனா இப்ப எனக்குத் தோணுது, அது கொஞ்சம் குறைவா இருந்தாப் போதுமாயிருக்கும். நானும் எதையும் கண்டு பிடிக்கவும் இல்ல.’
‘மரங்களைத் தவிர.’
அவர் புன்னகைத்தார். ‘அதுங்க நிறையவே இருக்கு. ஆனாக்க, நான் ஏதோ ஒண்ணைத் தேடித்தான் போயிட்டிருந்தேன், சில தரம்.’
‘என்னது அது?’
‘எரியற காட்டை.’
‘என்னத்தை?’
அவர் வருத்தத்தோடு தலையை ஆட்டினார். ’என் அப்பா அதைப் பற்றி ஒரு தரம் என் கிட்ட சொன்னார். தூங்கப் போகறத்துக்கு முன்னால சொல்ற கதை மாதிரி. காட்ல ஒரு பங்கு நெருப்புப் பிடிச்சு எரியும்னு சொன்னார், அது எப்பவும் எரிஞ்சு கிட்டிருக்கும்னார்.’
‘அதெப்டி நடக்கும்?’
அவர் தோள்களைக் குலுக்கினார். ‘விசேஷமான மரங்கள், அவர் சொன்னபடி- அதுங்க வளரும், பின்னெ எரியும், மறுபடி சாம்பல்லேர்ந்து வளரும். சரியான திசைல நாம போனாக்க, அதைப் பார்க்கச் சரியான நேரம் நமக்கு இருக்குன்னு வச்சீங்கன்னா, அந்த இடத்துக்குப் போய்த் திரும்ப ஒரு நாளாகும்னு சொன்னார். அவர் சொல்லிக் கிட்டே இருக்கைல நான் தூங்கிட்டேன், அதால தான் ஒருவேளை அது என் மனசுல தங்கி இருக்கோ என்னவோ. பின்வாசலால என் புத்திக்குள்ள நுழைஞ்சு விட்டிருக்கு. எப்படியாவது அதைப் பார்க்க நான் தேடிப் போய்க்கிட்டிருந்தேன், அதெல்லாம் இன்னும் இருக்குன்னு நான் பாதி நம்பினேன்னு சொல்லலாம். என் வாழ்க்கைல பின்னாடி, நான் நிறைய நடை போக ஆரம்பிச்சப்ப மறுபடியும் தேட ஆரம்பிச்சேன். ஆனால் இப்போ, அதை நான் நம்பல்லை. இருந்தாலும் ஒருவேளை அதை நம்பணும்னு ஆசைப்பட்டிருப்பேன் போல.’
’வயசானாலும் பிள்ளைங்க சான்டா இருக்கறத்தை நம்பற மாதிரி பாவனை செய்வாங்களே, அதைப் போலருக்கு,’ நான் சொன்னேன். ‘ஏன்னாக்க, அது உண்மையா இருக்கற பட்சத்துல அது நல்லாருக்கும். சில நாள்லெ நமக்கு ஏதாவது ஒண்ணைத் தேடணும்னு இருக்கும். அது நிசம்மோ பொய்யோ.’
‘நீங்க சொன்ன ரெண்டும் உண்மைதான். ஆனா நா அதைக் கண்டு பிடிக்கல்லை.’
‘சில சமயம் அப்டி இருக்கறது நல்லதுதான்.’
‘இருக்கலாம். ஒருவேளை அது மொத்தமுமே என்னைப் பகல் வேளைல வீட்டை விட்டுக் கெளப்பி வெளியே போக வைக்கறதுக்காக இருக்கலாம். அப்பாக்களெல்லாம் அந்த மாதிரிக் கோல்மால் வேலை செய்றதுல தந்திரக்காரங்க. கொறஞ்சது, என் அப்பா அப்டி இருந்தார்.’
நாங்கள் இன்னும் கொஞ்சம் குடித்தோம், நெருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தோம். என் அப்பாவைப் பற்றி நினைத்தேன், ஆனால் எதையும் நினைவுபடுத்திக் கொள்வது கடினமாக இருந்தது.
‘அந்தத் தீவை ஒரு தரப்பொ நான் பார்த்தேன்னு எனக்கு நிச்சயமாத் தெரியும்,; என்றார் அவர்.
‘தீவா?’
அது எதாக இருந்தாலும், அதைச் சொல்லி இருக்கலாமா கூடாதா என்று அவர் யோசிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. நான் அதைத் தொடர்ந்து கேட்கவில்லை. ஆனால் இன்னும் இரண்டு பியர் பாட்டில்களைத் திறந்தேன். அவர் நெருப்பைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். கடைசியில் அவர் மறுபடி பேசினார்.
‘அது பாருங்க, என் தாத்தாதான் சொன்னார். அவர் எப்பவாவது என் அப்பா கிட்டே அதைச் சொன்னாரான்னு எனக்குத் தெரியாது. அப்பா அதை எங்கிட்ட சொன்னதே இல்லை.’
‘உங்க தாத்தா இந்த இடத்தை வச்சிட்டு இருந்தாரா முன்னே?’
‘அவர் இதைக் கட்டினார். நான் பார்த்தவங்கள்லெ, சகமனுசங்களைக் கண்டாலெ வெறுக்கறதுல அவர்தான் உச்சம். ஜனங்களை அவருக்குப் பிடிக்காது. ஆனாலும் அவங்களோட குடியிருப்புக்கு அருகாலதான் இந்த முகாமை அவர் கட்டினார். ஆனா அந்த முகாம் சரியா ஓடல்லை, அது என்னோட குடில் இருக்கற இடத்திலதான் முன்னெ இருந்தது. அதுனால அவர் வருஷம் பூரா அந்த ஜனங்களோடதான் பழக வேண்டி வந்தது. அவங்கள்லெ ரொம்பப் பேர், ஆனாலும் புத்தியில்லாத ஜனங்க.’
‘சம்பாரிக்க வேற வழியில்லையோ என்னவோ.’
‘இல்லெ. அவரால் முடிஞ்சிருக்கும். மிருகங்களைக் கண்ணி வச்சுப் பிடிக்கறதுல அவர் நம்பமுடியாதபடி சாமர்த்தியமான ஆள். காட்டுக்குள்ளெ எல்லாத் திக்கிலயும் அவர் வச்ச பொறிங்க வரிசையா நீண்டு போகும். எதை வேணாலும் அவரால பிடிக்க முடியும். பிடிச்சு, அதைத் தோலுரிச்சுடுவார், அப்புறம் பார்த்தால் அது சாகவே இல்லைங்கற மாதிரி அதை ஆக்கவும் தெரியும்.’
‘ஒரு குடும்பத்தைக் காப்பாத்தற அளவு அதால சம்பாதிக்க முடியுமா?’
ரால்ஃப் ஐயம் தொனிக்கத் தோள்களைக் குலுக்கினார். ‘ஒருகால் முடியல்லியோ என்னவோ. ஆனால் ஒரு தடவை நான் அவர் கிட்ட இந்த ஓய்விடத்தை ஏன் கட்டினாருன்னு கேட்டிருக்கேன். இந்த மாதிரி இடத்துல நாம வாழ்ந்தோம்னா, சுத்து வட்டாரத்துல கொஞ்சம் ஜனங்க இருக்கறது நல்லதுன்னு அவர் சொன்னார். சில வாரங்களுக்கப்புறம் அதையே மறுபடி வேற மாதிரி கேட்டேன், அப்ப ராவு நேரம், முகாம் நிரம்பி இருந்தது, எல்லாருமா சத்தமாக் கொண்டாடிக்கிட்டிருந்தாங்க. இத்தனை ஜனங்கள் அவருக்கு எதிராவே இப்படி ஆட்டம் போடறாங்க, அவரோ எப்பவும் தனியான ஆளு, நிறைய நாள்ல அவரோட குடும்பத்தோட இருக்கவே அவருக்குப் பொறுமை இருக்காதே, இதை எப்படி சகிச்சுகிட்டிருக்காருன்னு கேட்டேன். “இது எனக்குப் பிடிச்சிருக்குன்னு நா சொல்லலியே. இது ஒரு நல்ல யோசனைன்னுதான் சொன்னென்.” அப்படீன்னாரு.’
‘அவரோட பதிலுக்கு என்ன அர்த்தம்?’
‘எனக்கு அதைப் பத்தி ஒண்ணும் தெரியாது. அவர் ஏற்கனவே வரிசையா ரெண்டு கேள்விங்களுக்குப் பதில் சொல்லிட்டாரு. அதுக்குமேலெ நான் வளர்த்த விரும்பல்லை. என் தாத்தாவை உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, நீங்களும் அதுக்கு மேலெ போயிருக்க மாட்டீங்க. சில நேரம் அவர் சரியா இருப்பார், மத்த நேரத்துல அவர் ஏதோ ஒண்ணு வரணும்னு காத்துக்கிட்டிருக்காருங்கற மாதிரியே தெரியும், அது வரவே போறதில்லைன்னு அவருக்குத் தெரியும், அப்டி இருக்கறதுலெ அவருக்கும் சலிச்சுப் போயிட்டதுங்கற மாதிரி இருக்கும்.’
நான் மௌனமாக இருந்தேன், ரால்ஃப் முன்னே சொன்ன தீவைப் பற்றி மேலும் சொல்வாரென்று எதிர்பார்த்தேன். அவருடைய ஆறு தகர டப்பா பியர்களை முடித்திருந்தோம், ஆனால், என்னுடையதில் ஆரம்பித்திருந்தோம், அவருடைய மனம் மெதுவான வட்டங்களில் சுழல ஆரம்பித்திருந்தது.
’நான் என்னோட அப்பா கிட்டே எரியற காடுங்களைப் பத்தி இன்னொரு தடவை பேசினேன், அதுதான் என்னை இது இன்னொரு கதை இல்லைங்கற மாதிரி யோசிக்க வச்சுது. அவர் புத்து நோயால செத்துகிட்டிருந்தார், வலியைக் கொல்ல நிறைய மருந்துங்களைச் சாப்பிட்டு நிலை தடுமாறிப் போயிருந்தார், அதனால அவர் சொன்னதுல அர்த்தமில்லையோ என்னவோ. ஒருத்தர் இப்படிக் காலமாகிறாருன்னா நாம நிறைய காத்துகிட்டிருக்க வேண்டி இருக்கும். பேசறதுக்கு எதுவுமே இல்லாமக் கூடப் போயிடும். ஒரு நாள் மாலையில அவர் கிட்டே, நான் சின்னப் பையனா இருக்கையில எரியற காட்டைத் தேடிப் போயிருந்தேன்னு சொன்னேன். அப்போ எனக்கு இருபத்தி அஞ்சு வயசாயிருந்தது. அவர் தன் பொறுப்பை எல்லாம் கொடுக்க இருக்கிற நபர் இப்போ ஒரு குழந்தை இல்லைன்னு அவர் கிட்டே காட்ட நினைச்சிருப்பேனாயிருக்கும். அதெல்லாம் ஒரு ஜோக்குன்னு எனக்குப் புரிஞ்சிடுத்து, நான் இப்ப வளர்ந்துட்டேன். அவரோட இடத்துல அவருக்குப் பதிலா இருக்க நான் தயார்னு சொல்ல நினைச்சிருப்பேன். என் அப்பா தலையசைச்சார், அவருக்கு நான் சொல்ல வந்தது புரிஞ்சிருக்கலாம்னும் நெனச்சேன், ஒருவேளை இல்லையோன்னும் தோணிச்சு, அவர் தூங்கிப் போறாருன்னும் இருந்தது. ஆனால் அவர் அப்ப, ‘நான் அதைக் கிட்டத்தட்ட பார்த்துட்டேன்னு நினைக்கிறேன்,’ -னு சொன்னார்.’
‘ஆ..’
‘ஆமாம், சரியா. அதுனாலெ நான் அவர் கிட்டெ சொன்னென் – நீங்க சும்மா வெளயாட்டுக்குச் சொல்றீங்கன்னு நெனச்சேன். அவர் தலையை ஆட்டி இல்லைன்னார். அவரோட அப்பா அதைப் பத்தி அவருட்ட சொல்லி இருக்கார், என்னை மாதிரியே – அவருக்கு நான் அதைத் தேடிப் போயிருந்தேன், தெனம் தெனொமாப் போனேங்கறது தெரிஞ்சிருந்தது, நான் போனது அவருக்கு எப்படித் தெரியும்னு எனக்குத் தெரியல்லை, ஆனால் அவருக்குத் தெரிஞ்சிருந்தது – அவரும் அதைக் கண்டு பிடிக்க முயற்சி செய்தாராம். ஒருநா பிற்பகலிருக்கும், ரொம்பக் குளிரா இருந்திருக்கு, கடுமையா இருந்திருக்கு, ஆனால் ஆகாசம் புகை வெள்ளையா ஆகிட்டிருந்தது. சீக்கிரமே பனி கொட்டப் போறதுன்னு அவருக்குத் தெரிஞ்சிருந்தது, அதாலெ வழக்கத்தை விடக் கடுமையாவும், வேகமாவும் அவர் நடந்திருக்காரு, மதியம் நின்னு, திரும்பிப் போக ஆரம்பிக்காம- என் தாத்தா அவர்கிட்டே அது பாதி நாள் தூர நடைன்னு சொல்லி இருக்கார், அவரும் எங்கிட்டெ அதேதான் சொன்னாரு – அவர் மேலே போயிகிட்டே இருந்திருக்காரு. இதுக்கிடைல ஆகாயம் இன்னும் கனமாவும், இருட்டாவும் ஆகி, கீழே தாழ வந்துகிட்டிருக்கு. பின்னேரம் மூணு மணி ஆகைல, அவருக்குப் புரிஞ்சிடுத்து, தான் பெரிய சிக்கல்லெ மாட்டிகிடப் போறோம், இப்பவாவது திரும்பிடணும், ஏன்னாக்க அவருக்கு அதே நேரம் திரும்பிப் போகற நடை இருக்கு, அதோட அவரோட காலெல்லாம் முன்னைய விடக் களைச்சுப் போயிருக்கு. ஆனா அப்ப… அவர் எதையோ பாத்திருக்காரு.’
‘எதை?’
‘ஒரு வெளிச்சத்தை. தூரக்க மேலே, மரங்களோட இடுக்கில. இந்நேரம் நீங்க அந்த மரங்க நடுப்பற நிறைய நேரத்தைக் கழிச்சிருக்கீங்க. என்ன பார்க்க முடியும்னு உங்களுக்கே தெரியும்.’
‘வெள்ளி, கரும்பச்சை, சாம்பல், கருப்புகள்.’
‘சரியாச் சொன்னீங்க. மின்னறதுக்கு அங்கே ஒண்ணுமே இல்லை. ஒரு விதமான மஞ்சள் ஒளி, அதுல ஆரஞ்சு நிறமும் இருந்ததுன்னு அவர் சொன்னார். தொலை தூரத்தில மேப்பக்கம். இப்ப அவருக்கு என்ன செய்றதுன்னு தெரியல்லை. அவருக்கு நிஜமா மேக்கொண்டு போகணும்னு இருந்திருக்கு. அவரோட அப்பா எரியற காடுகளைப் பார்த்ததெ இல்லை. அதனால இவர் போகணும்னு ஆசைப்படறாரு. ஆனா இதுக்குள்ளே ரொம்ப கால தாமதம் ஆயிட்டிருக்கு. அந்த நேரம் கடேசியா பனி கொட்டவும் ஆரம்பிச்சிருக்கு. கொஞ்ச நேரம் மெல்லிசாத்தான் விழுந்திருந்தது, இங்கே போன வாரம் ஆரம்பிச்ச மாதிரியே. ஆனா வரவர கனமா பலமா விழ ஆரம்பிச்சிருக்கு. இப்பவே வீட்டுக்குத் திரும்பற வேலை கஷ்டமானது, அவருக்கு எதிரே நிக்கறது. இந்த மாதிரி பனி பெய்யறப்ப? அவர் இந்த காடுகளுக்கு நடுவுலதான் பொறந்து வளந்திருக்காரு, தான் அங்கே சுத்திகிட்டுத் திரியற ஒவ்வொரு நிமிஷமும் தன்னோட உசிரை ஆபத்துல சிக்க வைக்கிறோம்னு அவருக்குத் தெரியும்.’
‘அப்ப அவர் என்ன செய்தார்?’
‘திரும்பிட்டாரு. நல்ல முடிவுன்னு நான் சொல்வேன். இல்லைன்னா நான் இங்கே இப்பொ இருக்க மாட்டேனில்ல. அப்பிடியும் அவர் திரும்பப் பட்ட பாடு ரொம்ப. அந்த முதல் நாளும், ராத்திரியும் அங்கே முன்னெப்பவும் கொட்டாத அளவு பனி கொட்டியிருக்கு. காலைல ரெண்டு மணிக்குத்தான் அவர் வீட்டுக்குத் திரும்பியிருக்கார். பாதி செத்துப் போயிருந்தாராம், தன்னை அப்பிடி பயப்பட வச்சதுக்காக, அவரோட அம்மா அவரைத் திட்டித் தீர்க்கையில முக்கால்வாசி செத்துப் போயிருப்பார். என்னோட பாட்டி சின்ன உருவம்தான், ஆனா கள்ளுக்கடைல நடக்கற ஒரு சண்டையில அவருக்கு எதிரா நான் பந்தயம் கட்ட மாட்டேன்.’
‘உங்க அப்பா மறுபடி அங்கே போக முயற்சி பண்ணினாரா?’
‘பண்ணாமலா? ஆனா, அவருக்கு மறுபடி உடல் தெம்பு வர்றவரைக்கும், கொஞ்ச நாளைக்கு அங்கே போக முடியல்லை. ஆனா என்ன ஆயிருக்கும்னு நினைக்கிறீங்க?’
‘அவருக்கு அந்த வெளிச்சம் எங்கே இருந்ததுன்னு நினைவு இல்லயா?’
‘ஒரு துப்பும் இல்லை. அவர் திரும்பி வரும்போது வர வழியில கொஞ்சம் தடயத்தை குறிச்சு வச்சுகிட்டு வர முயற்சி செய்திருக்காரு. ஆனா கடேசில அதை எல்லாம் விட்டுட்டு, உசிரோட இருக்கறதுல கவனம் வச்சு வந்திருக்காரு. அவர் எங்கே தடயத்தை விட்டுட்டு வந்தாரோ அதெல்லாம் பல வாரங்களுக்கு பனிப் பொதியில மூடிப் போயிருந்திருக்கு. அதெல்லாம் உருகறத்துக்குள்ளே தடயமெல்லாம் போயிடுத்து. அவர் அந்த வெளிச்சத்தை மறுபடி காணவே இல்லை.’
‘அப்ப அது உண்மைதான்னு சொல்லலாமா?’
‘ஒருவேளை இல்லைன்னும் சொல்லலாமே. இந்தக் கதையை அவர் எங்கிட்டெ சொன்னப்புறம் கொஞ்சம் மணி நேரத்துல இறந்து போயிட்டார். ஒருவேளை அவர் குழம்பி இருந்திருக்கலாம், நிஜமா நடந்த எதோட நினைவாவும் அது இல்லாம, வேற ஏதோ ஒரு ராத்திரியைப் பத்தி நினச்சுப் பேசி இருக்கலாம். அவர் சாகவிருந்த அந்தப் பின்மாலையில அவர் தூரத்திலே பார்த்திருந்திருக்கக் கூடிய ஏதோ வெளிச்சத்தைப் பத்திச் சொல்லி இருக்கலாம்.’
ரால்ஃப் அந்தத் தீவைப் பற்றி மேலும் ஏதாவது சொல்வாரென்று நான் காத்திருந்துபார்த்தேன். ஆனால் அவர் தன் பியரைக் குடித்து முடித்து விட்டு, போய் விட்டார்.
(தொடரும்)