எனக்கு ஓர் அறிமுகம்

நான் அரசியல் அறிந்தவளல்லள்.
ஆனாலும்
அதிகாரத்தில் அமர்ந்தவர்கள்
அத்தனை பேரின்
பெயர் தெரிந்தவள்தான்.
நேருவில் தொடங்கி
எல்லோர் பெயரையும்
கிழமைகள் போல், மாதங்கள் போல்
என்னால் சொல்ல முடியும்.
நான் ஒரு இந்தியன்;பழுப்பு நிறத்தினள்.
மலபாரில் பிறந்த நான்
பேசுவது மூன்று மொழிகளில்;
எழுதுவது இரண்டில்;
கனவு காண்பதோ ஒன்றில்.

அவர்கள் சொன்னார்கள்
’ஆங்கிலத்தில் எழுதாதே.
அது உன் தாய் மொழியல்ல’.
உடன்பிறப்புகளே,நண்பர்களே.விமர்சகர்களே
நீங்கள் எல்லோரும்
என்னை விட்டுவிடுங்களேன்.
நான் விரும்பும் எந்த மொழியிலாவது
ஏன் பேசக்கூடாது?
நான் பேசும் மொழி
என்னுடையதாகிவிடுகிறது.
அதன் திரிபுகள்,அதன் விசித்திரங்கள்
எல்லாமே என்னுடையது.
என்னுடையது மட்டுமே.

அது அரைகுறை
இந்திய ஆங்கிலமாக இருக்கலாம்.
நகைக்கும் விதமாகவும் தோன்றலாம்.
உங்களுக்கு தெரியவில்லையா
ஆனால் அது நேர்மையானது;
என்னைப்போலவே அதுவும்
மானுடமானது என்று?
என்னுடைய
மகிழ்ச்சிகளை,ஏக்கங்களை,நம்பிக்கைகளை
அது பேசுகிறது.
காகத்தின் கரைதல் போல
சிங்கத்தின் கர்ஜனை போல
அதன் பயன்பாடு எனக்கு.
அது மானுடப் பேச்சு.
எங்கோ இல்லாமல்
இங்கேயே இருக்கும்
ஒரு மனதின் குரல்.
காட்சி,செவி,உணர்வு கொண்ட
ஒரு மனதின் குரல்.
புயலில் சிக்கிய மரங்கள்,
மாரிக்கால மேகங்கள்,
பொழியும் மழை
இவற்றின்
ஊமை மொழியோ
குருட்டு விழியோ அல்ல.
கொழுந்துவிட்டு எரியும்
இடுகாட்டுத் தீயின்
தெளிவற்ற முணுமுணுப்புகளும் அல்ல.

குழந்தையாய் இருந்தேன்.
பிறகு
என் உயரம் கூடியது;
கைகால்கள் பெருத்தது;
சில இடங்களில் முடி முளைத்தது.
நான் வளர்த்துவிட்டேன் என்றார்கள்

வேறு எதுவும் கேட்கத் தெரியாத
அப்பருவத்தில்
அன்பைக் கேட்டேன்.
அவனோ
பதினாறு வயதுப் பெண்ணை
படுக்கையறைக்குயைக்கு இழுத்து
தாளிட்டான்.
அவன் என்னை அடிக்கவில்லைதான்.
ஆனால் துக்கித்த என் பெண் உடல்
பெரும் அடியை உணர்ந்தது.
மார்பின் கனமும் கருப்பையின் கனமும்
என்னை அழுத்த
பரிதாபமாய் துவண்டு போனேன்..

அதன்பின்
ஆண்களின் சட்டையும்
சகோதரனின் கால் சராயும் அணிந்து,
முடியை குறைவாய் வெட்டி
என் பெண்மையை புறம் தள்ளினேன்.
புடவை உடுத்து;
பெண்ணாய் இரு;
மனைவியாய் மாறு;
என்றவர்கள் இயம்பினர்.
பூ வேலைப்பாடு செய்பவளாய்
சமையல்காரியாய்
பணியாட்களுடன் சண்டையிடுபவளாய்
இருக்க பணித்தனர்.
பொருந்தியிரு;ஒன்றியிரு என்று
வகமைபடுத்துவோர் ஓலமிட்டனர்.

மதில் மேல் அமராதே.
திரைச்சீலை மூடிய ஜன்னலை
விலக்கிப் பார்க்காதே.
அமியாகவோ கமலாவாகவோ இரு;
மாதவிக்குட்டியாக இருந்தால்
இன்னும் நல்லது.
ஒரு பெயரையும் கடமையயும்
தேர்ந்தெடுக்கும் நேரம் இது.
பாசாங்கு வேடிக்கைகளை நிறுத்து.
பைத்தியமாய் விளையாடாதே.
காம வெறி பிடித்தலையாதே.
காதலன் கைவிட்டால் ஊரறிய
கதறியழாதே.
ஒருவனை சந்தித்தேன்;
அவன் மேல் மையல் கொண்டேன்.
அவனை எந்தப் பெயரிட்டும்
அழைக்க வேண்டாம்.
எல்லோர் போல் அவனும்
ஒரு பெண்ணை விரும்பும் ஆண்.
நானோ எல்லாப் பெண்களைப் போலும்
அன்பை வேட்கும் பெண்.

அணைதிறந்த நதியாய்
அவனுள் அவசரப் பசி;
என்னுள்ளோ சோர்விலா
கடலின் காத்திருப்பு.
ஒவ்வொருவரையும் கேட்கிறேன்
’நீ யார்?’
நான் என்பதே விடையாய் கிடைத்தது.
எந்த இடத்திலும்,எல்லா இடத்திலும்
‘நான்’ என்று அழைப்பவனையே
காண்கின்றேன்.
இவ்வுலகில் அவன்,
உறையினுள் பிடிப்பாய் இருக்கும்
வாள் போல் உறைந்திருக்கிறான்.
நான் மட்டுமே தனியாய்
பழக்கமில்லா நகரத்து விடுதிகளில்
நள்ளிரவில் குடிக்கிறேன்.
சிரிப்பவள் நான்;
முயங்கிப் பின் நாணுபவளும் நானே
தொண்டையடைக்க சாகக் கிடப்பவளும் நானே.
பாவியும் நானே;புனிதனும் நானே.
நேசத்தையும் துரோகத்தையும்
ஒருங்கே அனுபவித்தவள் நான்.
உனக்கில்லா களிப்பு எனக்கில்லை.
உனக்கில்லா வலியும் எனக்கில்லை.
நானும் என்னை
நான் என்றே அழைத்துக் கொள்கிறேன்.


கமலா தாஸ் 1934ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர்.அவரது முதல் கவிதை தொகுதி ‘ Summer in Calcutta ‘1965 ஆம் ஆண்டில் வெளியானது.அவரது சுய சரிதை 1976 இல் வந்துள்ளது.1984 இல் அவரது தொகுக்கப்பட்ட கவிதை நூல் வெளியிடப்பட்டது.மலையாளத்தில் எழுதும்போது மாதவிக்குட்டி என்கிற பெயரிலும் ஆங்கிலத்தில் எழுதும்போது கமலா தாஸ் என்றும் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு கமலா சுரையா என்ற பெயரிலும் எழுதினார்.

அவரது படைப்புகளை பெண் படைப்பாளிகள், காலனி ஆதிக்கத் திற்குப் பிந்தைய தெற்காசிய/ பெண்ணிய படைப்புகள்,இந்திய தேசிய இலக்கிய மரபு, மலையாள இலக்கியம் என பலவகையாக பார்க்கலாம்.

‘ ஒரு அறிமுகம் ‘ எனும் இந்தக் கவிதை அவரது முதல் தொகுதியில் இடம் பெற்றது.

ஆசிரியர் குறிப்பும் பாடலும் ‘ Indian Writing in English ‘ Department of English
University of Delhi என்கிற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.