
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்களைப் பார்ப்பது போல் அனைத்தையும், என்னையுமே பார்க்கிறேன்.
அழகான நதிக் கரையோரத்தில் அந்த யுக புருஷனை நான் சந்தித்து வணங்கிய முதல் நாள் உங்கள் சரித்திரத்தில் இல்லை. ஆனால், ஒரு புன்முறுவலில் நாங்கள் நிலை கொண்டோம். இன்று தந்தை என்று சொல்லிக்கொண்டே நீங்கள் கூறு போடுவதை நான் கொதிப்போடும், அவர் அமைதியாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த சபர்மதி நதியின் மடியில், அகண்ட ஒன்றுபட்ட இந்துஸ்தானத்தைக் கனவு கண்ட, அதற்காக உயிரையும் கொடுத்த அந்த மகானிடமிருந்து சுதந்திர இந்தியாவின் வாரிசுகள் எதைப் பெற்றிருக்கிறார்கள் என்பது என்னைப் பொறுத்த மட்டில் விடையற்ற கேள்வி. வரலாறும், உணர்ச்சியும் பிணையும் இத் தருணத்தைக் கோட்டை விட்டவர்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.
புன்னகை தவழும் அவர் புகைப்படத்தினருகே காட்சிப்பட்டிருக்கும் அந்தப் பத்து மொழி கையொப்பங்களில் தமிழும் இடம் பெற்றிருப்பதை ஒரு பயணி கண்களில் நீருடன் பார்த்தார். பயனெதுவும் கேட்காத மக்கள் திரளை, தன்னுரிமை கேட்க வைத்த மாபெரும் கூட்டங்களை அவர் நடத்திய விதத்தை, வரைந்த அந்த ஒவியர்களின் கை வண்ணம் தான் என்ன! இராட்டை, நுண்னோக்கி, வளாகத்தினுள் அமைந்துள்ள சின்னஞ்சிறு சிவன் கோயில், பணிவை வலியுறுத்தும் குறைந்த உயரம் கொண்ட நுழைவாயில், எளிமையே வலிமையல்லவா? தூய்மை கோலோச்சுகிறது. வினோபா குடில், மீரா பென் குடில், மகானின் அலுவலகம் என்று விரிந்து பரந்திருக்கிறது.
அந்த நர்மதையைப் போல காலத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவளும் நானல்லவா? வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்குமான விகிதங்களைத் தலைகீழாகப் புரிந்து வைத்திருக்கும் இன்றைய இந்த உலகை, குறிப்பாக இந்தியாவைப் பற்றி, இரும்பு மனிதர் என்ன நினைக்கிறார்? அவரது உருவச் சிலை 182 மீட்டர் உயரம். உலகின் மிகப் பெரும் சிலை இதுவே. பொருத்தமாக ‘ஒற்றுமைச் சிலை’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். பல சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே நாடென்று அமைத்தவர் அவரல்லவா? அணைக்கட்டும் சர்தார் சரோவர் என்ற பெயரில் எழும்பி நிற்கிறது. அக்டோபர் 21013-ல் தொடங்கிய பணி அக்டோபர் 2018-ல் நிறைவு பெற்றுள்ளது. ராம் வி சுதர் என்பவர் சிலையை வடிவமைத்தவர். வல்லபாய் படேலும் ‘சப்கோ சன்மதி தே பகவான்’ என்ற பள்ளியைச் சேர்ந்தவர். மிகப் பெரும் சிலை வடிவில் கம்பீரமாக நிற்கும் அவர் கண்களில் இணைந்த இந்தியா தெரிகிறது; அது இனியும் இணைந்திருக்கக்கூடாது என்று எண்ணும் சிறுமதியாளர்கள், நம் சுதந்திரப் போராளிகளின் ஈடு இணையற்ற, முன்னோக்கிய சிந்தனைகளை அறிவார்களா? நதி மாலையெனத் தழுவுகிறது, வண்ண வண்ணப் பூக்கள் ஒரே தோட்டமாகக் காணக் கிடைக்கிறது, மாசும், தூசும் ஒடிவிட வேண்டும். இது இன்றைய இந்தியா செலுத்தும் நன்றிக் கடன். நாம் ஒரு உன்னதமான வரலாறு உள்ளவர்கள், வசுதேவக் குடும்பத்தினர் என மீண்டும் மீண்டும் நமக்கு நாமே சொல்லிக் கொண்டு பீடு நடை போட வேண்டிய இடமிது.
உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கச் சொல்லும் வாழ்வியல் நமக்கு. லிட்டில் ரான் ஆஃப் கட்ச்சில் உப்பள வயல்கள், தண்டியை உங்கள் நினைவில் எழுப்புகிறதா? குறைந்த பட்சம் வேதாரண்யத்தையாவது? சிறு நரிகள், கழுதைக்கும், குதிரைக்கும் இடைப்பட்ட இனமெனக் காட்சி தரும் வலிய கழுதைகள், காணும் இடமெங்கும் வெண்பழுப்பு நிற மணல்வெளி, நீர் வற்றி வெடித்த நிலப் பரப்பு, மீதமிருக்கும் ஏரியில் செங்கால் நாரைகள் (ஓருக்கால் நீள் கொக்குகளோ?), சிறு மணற்குன்றில் குட்டிக் குட்டிப் புதர்களில் சிறு மலர்கள் , அந்தி வருவதோ மாலை ஏழு மணிக்கு, உடனே கவியும் இருள் போர்வை, மீறி நகைக்கும் விண்மீன்கள், காண வேண்டாமோ?
தேவாலயாவில் மரமேறும் சிறுத்தை மனிதர்களைப் பொருட்படுத்துவதில்லை; கிர் காட்டிலோ சிங்கங்கள் கொஞ்சி விளையாடுகின்றான. மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி தன் இணையோடு குலவியது. ஒன்றின் முதுகில் ஒன்று ஏறி சறுக்கி விளையாடும் இணைகள், இயற்கை உல்லாசம். பரதனுடன் ஆடிய அந்தக் குலத்தின் எத்தனையாவது வழித் தோன்றல் இது என அதிசயிக்கிறோம். விடைத்த காதுகளோடு புள்ளி மான்கள், கலை மான்கள் காற்றில் தாவி, தாழும் மரக்கிளைகளைப் பற்றுகின்றன. ’என்னைப் பார், என் அழகைப் பார்’ என்று கூவி அழைத்து ஆடிக் காட்டும் மயில்கள் இவற்றையெல்லாம் பார்க்கும் எனக்கு உயிர்ப்பு என்பதன் பொருள் புரிகிறது.
இந்த மண்ணில் இராமாயணமும், மகாபாரதமும் எங்கெங்கும் பரவியிருக்கின்றன. தமிழக மல்லையில் அர்ச்சுனன் தவம் சிலையெனக் கவர்ந்தால், குஜராத்தின் பாவ் நகரில் பாண்டவர்கள் ஐவரும் ஐந்து லிங்கங்களை வழிபட்ட இடம் கடலினுள் காணக்கிடைக்கிறது. பெரும்பாலும் காலை 10 மணி முதல் மதியம் நான்கு மணிவரை கடல் உள் வாங்குகிற நேரம்; கிட்டத்தட்ட 1.5 கி மீட்டர் கல்லில், கூழாங்கற்களில், சறுக்கும் மணலில் மனிதர்கள்,நடந்து வருகிறார்கள். கடற் பறைவைகள் காத்திருக்கின்றன. கடல் நீரெடுத்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறார்கள். தொன்மத்தையும், ஆன்மீகத்தையும் இணைக்கும் இந்த சடங்கின் இனிமை அழகு, அதன் வெள்ளந்தித்தனம் அருமை. இயற்கையும், வரலாறும், புராணமும் சங்கமிக்கும் முக்கூடல்.
முகம்மது கஜினி கொள்ளை கொண்ட பின்னர் புனரமைக்கப்பட்டஅந்த சோமனாதர் ஆலயம், அதன் அலங்கார வளைவுகள், அதன் விதானங்கள், தூண்கள், சுவர்கள் ஆகியவற்றில் சிற்பிகளின் கை வண்ணங்கள், அதன் சுற்றுச் சுவற்றினை அணைத்துச் செல்லும் அராபியக் கடல் அனைத்தும் அகண்ட பாரதத்தை கண் முன்னே எழுப்புகின்றன. இந்த அலைகள் நம் சகோதரர்களிடம், நாம் பிரியக் கூடாதவர்கள் என தூது சொல்லாதோ?
ஆம், இவ்வளவு பேசும் நான் யார்? ராப்டி தேவி என்பது என் பெயர். படிக்கிணறு ஐந்து தளங்களில் அமைந்துள்ள ‘அதாலத்’ என் இடம். என் கணவர் மாபெரும் தளபதி வீர்சிங் வகேலா. நல்ல அரசரும் கூட . எங்கள் நாட்டைக் கைப்பற்ற இஸ்லாமியர்கள் முயன்றனர். போரில் வீர்சிங் வீரமரணமடைந்தார். என்னைக் காமக் கிழத்தியாக்க முகம்மது பெஜெடா மிக முயன்றார். என்னுடன் 108 யுவதிகள் அவர்கள் கைகளில் அகப்படக்கூடாதென்று தற்கொலை செய்து கொண்டோம். என் அழகால் காமமுற்றவரும், என் இறப்பால் அதிர்ந்தவரும், என் கணவர் அமைத்த ஊர்ப் பெருங்கிணற்றினை ஐந்து அடுக்குகள் கொண்ட படிக்கிணறாக அமைத்தனர். எண்கோண வடிவில் இருக்கும் கிணற்றில் இன்றும் நீர் உள்ளது. பல படிகள் வழியாக இறங்கி உள்ளே வரவர வெப்பம் குறைந்து வருவதை நீங்கள் உணரலாம். மூன்று நுழைவாயில்கள், நவக்கிரஹங்கள், இந்து புராண, வரலாற்றுக்,கற் செதுக்கல்கள், இந்து-இஸ்லாமிய கட்டடக் கலையில் எழுப்பப்பட்ட 15-ம் நூற்றாண்டின் எழில் சின்னத்தின் அடையாளம் நான். 1411-லிருந்து இன்று வரை அதிகச் சேதமில்லை; என்னிடம் வரும் அனைவரையும் அன்னையென வரவேற்கிறேன். வகேலா நிறைவாக உணர்கிறார்.
வாய் மொழிப் பாடல்களில் நான் இன்னமும் இருக்கிறேன். என் வரலாறு பலரால், பலவிதங்களில் சொல்லப்படுவதைக் கேட்டுப் புன்னகைக்கிறேன்.
இந்த மண்ணின் மைந்தர்களின் மூச்சில் இருக்கிறேன். அவர்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.
Adalaj Ni Vav: Gujarat Tourism
2 Replies to “எங்கிருந்தோ”