உசைனி

காருகுறிச்சியாரின் உசைனியைப் போன்ற கற்பனையைத் தூண்டக் கூடிய பதிவுகளைக் கேட்பதரிது.

ஒருநாள் சென்னையில் ராஜரத்தினம் பிள்ளை ஒரு பூங்கா வழியாய் செல்கிறார். அங்கிருக்கும் வானொலியில் ஒலிபரப்பாகும் உசைனி அவரை கட்டி இழுக்கிறது. காலை எடுத்து வைக்கப் பார்க்கிறார். அவர் உடல் ஒத்துழைக்க மறக்கிறது. நல்ல தஞ்சாவூர் திட்டு வார்த்தையில் இரண்டைச் சொல்லி, ‘வேலையைக் கெடுக்கறானே பாவி’ என்று சமைந்து நிற்கிறார். ராஜரத்தினம் பிள்ளை நிற்கிறார் என்கிறதும் மெதுமெதுவாய் அவரைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிடுகிறது. உச்சங்களைத் தொட்ட அந்த உசைனி முடியும்போது மெல்ல நகர ஆரம்பிக்கிறார் பிள்ளை. சுற்றி இருந்தக் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ‘என்னைக் குழி தோண்டிப் புதைக்க இவன் ஒருத்தன் போதும்’ என்று முகத்தில் பெருமை பொங்க நடந்து செல்கிறார் ராஜரத்தினம் பிள்ளை.

இது வரலாற்று உண்மையா? செவி வழிச் செய்தியின் நம்பகத்தன்மை என்ன என்றெல்லாம் சிலர் கேட்கக் கூடும்.

முழுக்க முழுக்க கற்பனையாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே. அந்த உசைனிக்குப் பொருத்தமான கற்பனைதானே என்று கதைக்கு வக்காலத்து வாங்கத் தோன்றுகிறது.

இதைச் சொல்லும் போதே ஒருநாள் அகாடமி கேண்டீனில் எனக்குத் தெரிந்த இரு ரசிகர்கள் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அந்த சம்பாஷணையிலும் உண்மை எவ்வளவு கற்பனை எவ்வளவு என்றெல்லாம் ஆராய்ந்து முடிவுக்கு வருவது கடினம். ஆனால் நாங்கள் அமர்ந்திருந்த சூழலை நிறைத்த உசைனி – அது சத்தியம்!

15/20 வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம். இருவருக்கும் வயது எண்பதுக்கு அருகில் இருக்கும்.

ஒருவர் சுத்தமான காவேரிக் கரை தஞ்சாவூர் ஜில்லா ரசிகர். கடைவாயில் வெற்றிலை எப்போதும் அரைந்தபடி இருக்கும். ‘ஹும்ம்ம், என்ன பெரிய’ என்று சொல்லிக் கொண்டே இருக்கும் இடுங்கிய கண்கள். ராஜரத்தினம் பிள்ளை என்ற பெயரைச் சொன்னால் மட்டும் விரிந்து மலரும் அந்தக் கண்கள்.

மற்றவர் தாமிரபரணி கரையில் வளர்ந்த திருநெல்வேலி ஜில்லாக்காரர். வெள்ளந்தியான மனிதர். தஞ்சாவூர்காரர் குறும்பை எல்லாம் சுத்தமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் காருகுறிச்சியார் புகழை நிறுத்தாமல் பாடுபவர். அன்றும் அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்.

“காருகுறிச்சியாரை மாதிரி உசைனிய வாசிக்க இனி யாரு வரப்போறா? நானே அஞ்சாறு தடவை நேரில கேட்டு இருக்கேன். கோயில்பட்டியில ஒரு கோயில் கச்சேரி. அன்னைக்கு உசேனியை எடுத்துட்டார். மணி போனதே தெரியலை. காருகுறிச்சியார் ஒவ்வொரு தடவை ஷட்ஜத்துக்கு வரும்போதும் ஒரு சுழிப்பு சுழிச்சு ஷட்ஜத்தைத் தொடுவார் பார்த்து இருக்கியா? அதுக்கு என்னென்னமோ ஸ்வரமெல்லாம் சொல்றாங்க, என்னைக் கேட்டா அதை உசைனி ஷட்ஜம்-னு சொல்லுவேன். வோலேடி கல்யாணி பாடும் போது நிஷாதத்தைப் பிடிச்சா மாதிரி யாருக்காவது அமைஞ்சுதா? அந்த மாதிரிதான் அந்த ஷட்ஜச் சுழிப்பு. காருகுறிச்சியாருக்கு மட்டும்தான் அந்த வளைவு அவ்வளவு அம்சமா அமைஞ்சுது. அந்த ரிக்கார்டைப் போட்டு போட்டு அப்புறம் வந்தவங்க எவ்வளவோ வாசிச்சாங்களே. அவருக்கு அமைஞ்சாப் போல யாருக்கும் அமையலை.”

உசைனியின் வளைவுகளில் மூழ்கி கதையை முடிக்காமல் விட்டுவிடுவாரோ என்று பயம் வர, அவருக்கு நினைவூட்டினேன்.

“ஆமாமாம்! அன்னிக்கும் அப்படித்தான். நாங்க எல்லாம் வாய்ல ஈ புகுந்தது தெரியாம பார்க்கறோம். ஆலாபனை முடிஞ்சு தவில்ல ஒரு அபிப்ராயம் வாசிக்கும் போது திடீர்-னு கூட்டத்துக்கு நடுவுல ஒரு ஆள் வேகமா மேடைக்குப் பக்கத்துல போறாரு. கையில ஒரு தடி. உடம்புல அவ்வளவு அழுக்கு. கந்தல்னா அபப்டியொரு கந்தல்ல ஒரு கன்னங்கறேல் வேட்டி. அவர் போன வேகத்தைப் பார்த்து எல்லாரும் மோகனாஸ்திரத்துல கட்டிப் போட்டா மாதிரி பார்த்துகிட்டே நிக்கறோம். ஒரு நொடியில் மேடைக்குப் போயி, “டேய் அருணாசலம்!”-னு கூப்பிடறார். அன்னிக்கி எலெக்‌ஷன் -ல நின்னு இருந்தா காருகுறிச்சியார் ஜெயிச்சு மந்திரியாக் கூட ஆகியிருப்பார். அவ்வளவு பேரு அவருக்கு. அவர் இருந்த ஊரில, அத்தனை பேர் மத்தியில் ஒருத்தர் அவ்வளவு தைரியமா ‘டேய்’-னு காருகுறிச்சியாரை கூப்பிடிறாரு. நாங்களும் கட்டிப்போட்டா பார்த்துகிட்டே இருக்கோம். “உசைனியை என்னமா வாசிச்சடா! உனக்குக் கொடுக்க என்கிட்ட இதுதான் இருக்கு வெச்சுக்கோ”-னு அவர்கிட்ட இருந்த ஒத்தக் காசை எடுத்து காருகுறிச்சியாருக்கு கொடுக்கறாரு.

அப்படிக் கொடுத்தவர் சாதாரண பிச்சைக்காரராக் கூட இருந்திருக்கலாம். அவர் கொடுத்ததை எழுந்து நின்னு, பவ்யமா கையைக் கூப்பி வாங்கிக்கிட்டதைப் பார்த்தா யாரோ ஒரு பெரிய சித்தர் வந்து காட்சிக் கொடுக்கறார்னு ஊரே எழுந்து நிக்குது. 

அடுத்த நொடி அந்த ஆளு இருந்த இடம் தெரியாம காணாம போயிட்டாரு. காருகுறிச்சியார் அந்தக் காசை வெச்சுப் பார்த்துகிட்டே இருந்தார். பத்து நிமிஷம் கழிச்சுதான் பாட்டையே எடுத்தார்.

எங்கப்பா காருகுறிச்சியாரை விட வயசுல பெரியவர். எங்க பார்த்தாலும், ‘அருணாசலம்! சுவாமிமலைல வாசிச்சா மாதிரி உசைனி வாசிப்பா’னு கேட்பாரு”, என்று அடுத்த கதைக்கு பீடிகை போட்டார்.

” தஞ்சாவூர் ஜில்லால மொத மொதல்ல காருகுறிச்சியாருக்கு பேர் வாங்கிக் கொடுத்ததே உசைனிதானே.

சாமிமலைல ஒரு மண்டகப்படி உண்டு. நாகஸ்வர வித்வான்கள் எல்லாம் சேர்ந்து செய்யற மண்டகப்படி. அதுக்கு எல்லா வருஷமும் ராஜரத்தினம் பிள்ளைதான் வாசிப்பாரு. அத்தனை நாகஸ்வர வித்வான்களும் விடிய விடிய கேட்டுட்டுப் போவாங்க.எங்க அப்பா வருஷம் தவறாம நாயனம் கேட்கவே சாமிமலைக்கு போவார்.  காருகுறிச்சியார் ரெண்டாம் நாயனம் வாசிச்ச சமயம் ஒரு மண்டகப்படிக்கு ராஜரத்தினம் பிள்ளை வாசிக்கறாரு. வழக்கம் போல ராகம் ஆறாப் பாயுது. மூணு மணி நேரம் வாசிச்சதும் ராஜரத்தினம் பிள்ளை ஜாகைக்குப் போய் ஓய்வெடுத்துக்கப் போயிட்டாரு. இன்னிக்கு கச்சேரி முடிஞ்சதுனு எல்லாரும் வண்டியைக் கட்டிக்கிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டாங்க. கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் திரும்பவும் நாகஸ்வர சத்தம் கேட்குது.

ராஜரத்தினம் பிள்ளை திரும்பி வந்துட்டார் போல இருக்குனு எல்லோரும் திரும்பி ஓட்டமா ஓடி வராங்க. வந்து பார்த்தா ஒரு பெரிய சாதராவைக் கட்டிகிட்டு காருகுறிச்சியார் வாசிக்கறாரு. ராஜரத்தினம் பிள்ளை , “இன்னிக்கு நீ போய் வாசிடா”-னு ஜாகைல வெச்சுச் சொன்னாராம். ராஜரத்தினம் பிள்ளை இல்லையே-னு ஏமாந்து போகாத படி வந்தவங்களை வெச்சு அன்னிக்கு அப்படி வாசிச்சு இருக்காரு காருகுறிச்சியார். அன்னிக்கும் உசைனியை எடுத்து மணிக்கணக்கா ஊதியிருக்கார். வழக்கமா காலைல விடிஞ்ச உடனே எடத்துக்கு போற சாமி அன்னிக்கு உசைனியைக் கேட்டுகிட்டு நின்னுகிட்டே இருந்ததுதான். மதியானம் ஆனவுடனேதேன் உசைனியை முடிச்சு சாமியை உள்ளுக்கு ஏத்துனாங்களாம். அன்னிக்குத்தான் காருகுறிச்சி அருணாசலம் யாருனு தஞ்சாவூர் ஜில்லாவுக்குத் தெரிஞ்சுது.”

தஞ்சாவூர் ஜில்லா என்றதும் சிலுப்பிக் கொண்டார் தஞ்சாவூர்காரர்.

“ஓய்! உமக்கு ஒரு விஷயம் தெரியுமா?”

“ம்?”, என்று விழிகளாலேயே கேட்டார் திருநெல்வேலிக்காரர்.

“காருகுறிச்சி உசைனி ரிக்கார்டு போடு போடு-னு இன்னிக்கும் போடுதே, அதைப் பத்தி விசாரிக்க எங்கூரு பத்திரிகைக்காரர் காருகுறிச்சியாரை போய் பார்த்து இருக்கார். அதுக்கு காருகுறிச்சியார் என்ன சொன்னார் தெரியுமா?”

“என்ன சொன்னார்?”

“ஐயா! நான் இன்னிக்கு வாசிக்கறது எல்லாமே எங்க குருநாதர் போட்ட பிச்சைதான். ஆனால் அந்த உசைனியைக் கேட்டீங்க பாருங்க, அதுல ஒரு விசேஷம் இருக்கு. எங்க குருநாதர் கிட்ட கத்துக்கிறதுன்னா உட்காத்தி வெச்சி அவரு சொல்லி கொடுப்பார்னு நினைச்சுகிடாதீங்க. அவர் பாட்டுக்கு கச்சேரியானாலும் சரி, வீடானாலும் சரி வந்தது வராம ராகத்தை எடுத்து ஊதிக்கிட்டே இருப்பார். அவருக்கு என்ன தோணிச்சோ தெரியலை, ஒருநாள் என்னைக் கூப்பிட்டு உட்காருன்னாரு. “உசைனி கொஞ்சம் வாசிக்கலாம். ஆரம்பி”-ன்னாரு. நான் வாசிக்க ஆரம்பிச்சதும், அவரும் வாசிக்க ஆரம்பிச்சாரு. அன்னிக்கு வாசிச்சோம் வாசிச்சோம் விடிய விடிய வாசிச்சோம். என்னை உட்காரை வெச்சு அவர் சொல்லிக் கொடுத்தது அந்த உசைனிதான்”, என்று தஞ்சாவூர்காரர் தன் வழக்கமான முத்தாய்ப்பை வைத்தார்.

பொதுவாக அவர் அப்படி எதையாவது சொன்னால் அதற்கு மறு பேச்சு சொல்ல முடியாது. அன்றைக்கு என்னமோ திருநெல்வேலிக்காரருக்கு ஒரு வேகம் வந்துவிட்டது.

“ஓய்! காருகுறிச்சியாருக்கு குரு பக்தி; அதனால அவர் எப்படி வேணா எடுத்துக்கட்டும். வெளியில இருந்து பார்க்கற உமக்குமா விவரம் புரியல?”

புருவத்தைத் தூக்கிப் பார்த்தார் தஞ்சாவூர்க்காரர்.

“ராஜரத்தினத்துக்கே காருகுறிச்சி வாசிச்சு உசைனியைக் கேட்கணும்னு ஆசை ஸ்வாமி. அவர் போய் எனக்குக் கேட்க ஆசைனு சொல்லுவாரா? அதான் என்னிக்கும் இல்லாத திருநாளா காருகுறிச்சியாரை கூப்பிட்டு உட்கார வெச்சு வாசிச்சு இருக்காரு. இது புரியாம…”, என்று வாக்கியத்தை முடிக்காமல் உதறி எழுந்தார் திருநெல்வேலிக்காரர். 

பளிச்சென்று இடத்தில் விழுந்த மோராவாய் அந்த உதறல் அன்று சம்பாஷணையை நிறைவு செய்தது.

3 Replies to “உசைனி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.