ஈக்கோசிஸ்டம் (சூழல்சார் தொகுதி)

முன்னுரை

ஈக்கோசிஸ்டம் (Ecosystem ) என்னும் சொல், சூழல்சார் தொகுதியைக் குறிக்கிறது. சூழலியல் (Ecology) என்பது சூழல் தொகுதிகள் பற்றிய கல்வி. ஈக்கோ சிஸ்டங்கள், இயற்கை வாழ்விடம் (Habitat), சூழல் உயிரினக் குழுமம் (Biome ), மற்றும் உயிர்க்கோளம் (Biosphere ) என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. ஈக்கோ சிஸ்டம் என்னும் சொல்லுக்கு, Oxford Languages தரும் அதிகார பூர்வ வரையறுப்பு: இடைவினைகள் (interactions) மேற்கொள்ளும் உயிரினங்களையும் (தாவரங்கள், விலங்குகள் மற்றும் சிதைப்புயிரிகள் ) அவற்றின் பௌதீக (உயிரற்ற) சுற்றுச்சூழலையும் (காற்று, நீர் மற்றும் மண் ) உள்ளடக்கிய ஓரிடத்து உயிரிய சமூகம். (Biological community of interacting organisms and their physical environment.) (சிதைப்புயிரி=decomposer, micro organism). ஒவ்வொரு தனித்துவம் வாய்ந்த ஈக்கோசிஸ்டமும் தன் உயிரிய வாழ்வின் நீட்டிப்புக்காக தன் அமைப்பில் ஒரு உயிரினம் மற்றொன்றை சார்ந்திருக்கக் கூடிய பல்லுயிர் சங்கிலியை உருவாக்குகிறது என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

சுற்றுச்சூழல் (Environment) எதிர்(vs) சூழல் சார் தொகுதி (ecosystem)

சுற்றுச்சூழல் என்னும் சொல் சுற்றுப்புறத்தைக் குறிக்கிறது. அதாவது நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிரிகளையும் மண், காற்று, நீர், சூரிய ஒளி, வானிலை தட்பவெப்பம் போன்ற உயிரற்ற பொருட்களையும் குறிக்கிறது. சூழல்சார் தொகுதி என்பது ஓரிடத்தில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற வஸ்துக்கள் தமக்குள் இடைவினைகளை மேற்கொள்ளும் ஒரு சமூக அமைப்பைக் குறிக்கிறது. சூழல்சார் தொகுதிகளின் எடுத்துக் காட்டுகள் :பாலைவனம் ,காடு, பவளப்பாறை, சாவன்னாப் புல்வெளி,ஊசியிலைக் காடு, துருவப் பகுதி போன்றவை. சூழல்சார் தொகுதியில், ஒவ்வொரு உயிரிக்கும் ஒரு அலுவல் அல்லது சமூகப் பங்கேற்பு உண்டு. புவிக்கோள் அமைப்பின் நான்கு கோளங்களில் ஒன்றான உயிர்க்கோளத்தின் (biosphere ) அடித்தளம் எண்ணற்ற சூழல்சார் தொகுதிகளால் கட்டமைக்கப் பட்டிருப்பதால் அவை முழு புவிக்கோள் அமைப்பின் நலத்தையும் தீர்மானிக்கின்றன.

ஈக்கோ சிஸ்டம் பத உருவாக்கம்

சர் ஆர்தர் டேன்சலே (1871-1955) என்னும் இங்கிலிஷ் தாவரவியலாளர், 1935-ல் உயிரியல் படிப்பில் சூழல்சார் தொகுதி என்னும் கருத்துப் படிவத்தை அறிமுகப் படுத்தினார். ஒரு சூழல்சார் தொகுதி உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை ஓரளவுக்கு உறுதிச் சமநிலையில் உள்ளடக்கி இருக்கும் என்பது அவர் இயற்றிய கருதுகோள். உயிரினங்களும் சுற்றுச்சூழலும் மேற்கொள்ளும் இடையீடுகளின் நடைமுறை சார்ந்த அடிப்படை அலகுதான் சூழல்சார் தொகுதி என்கிறார் இக் கருத்தை முன்னெடுத்துச் சென்ற E.P.odum என்னும் அமெரிக்க உயிரியலாளர்.

ஈக்கோ சிஸ்டம் ஒரு திறந்த அமைப்பு (open system)

சூழல்சார் தொகுதியில் உயிருள்ள கூறுகளும் உயிரற்ற கூறுகளும் பிரிக்க முடியாதபடி ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளன.. இக்கூறுகள் ஒன்றோடு ஒன்று இடையீடு செய்கின்றன. சூழல்சார் தொகுதி ஒரு திறந்த அமைப்பு (open system); இதில் சக்தி மற்றும் கூறுகள் எல்லைக் கோடு முழுவதிலும் தங்குதடையின்றி நுழையவும் வெளியேறவும் கூடும்.

சூழல்சார் தொகுதியின் அகண்ட வகைப்பாடுகள்

சூழல்சார் தொகுதிகள் முக்கியமாக இருவகைப்படும்:

1.நிலம் சார்ந்த தொகுதிகள்: இவை நிலத்தில் உண்டாகி இருக்கும் தொகுதிகள். இவற்றிலும் மூன்று வகைகள் உண்டு:

  • காடு சூழல்சார் தொகுதி
  • புல்வெளி சூழல்சார் தொகுதி
  • பாலைவனம் சூழல்சார் தொகுதி

2. நீர் சார்ந்த சூழல் தொகுதிகள் : இவை நீரால் உண்டாகியுள்ள தொகுதிகள். இவற்றின் இருவகைகள் வருமாறு :

  • நன்னீர் சூழலியல்சார் தொகுதி (குளம் ,குட்டை,,ஏரி அல்லது ஆறு சூழலியல்சார் தொகுதிகள்)
  • கடலுக்குரிய சூழலியல்சார் தொகுதி

இவை அனைத்தும் பொதுவான வகைப்பாடுகள் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு சூழல் சார் தொகுதியும் தனிச்சிறப்பு கொண்டவை. வரும் பத்திகளில் அவை விவரிக்கப்பட்டுள்ளன.

தனித்துவமான ஈக்கோ சிஸ்டங்கள்

உலகில் இங்கும் அங்குமாக சுமார் 10 வெவ்வேறு தனித்துவமான ஈக்கோசிஸ்டங்கள் காணப்படுகின்றன. அவையாவன:

1. வடமுனை (Arctic) :

வடமுனைப் பிரதேசம் கனடா, கிரீன்லாந்து,ஐஸ்லந்து, நார்வே, ஸ்வீடன், ஃ பின்லாந்து, ரஷ்யா, மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகள் ஆகிய 9 நாடுகளில் பரவி இருக்கிறது. மைனஸ் 30 டிகிரிபாரென்ஹீட் -க்கும் கீழ் போகக்கூடிய மிகக் குறைவான வெப்பநிலையும் , ஆண்டில் பெரும்பகுதி உறைபனி மூடிய நிலப் பரப்பும் கொண்டது. சூழ்நிலை கடுமையானதாக இருப்பினும், மக்கள் மற்றும் பிற உயிர்கள் பிழைத்திருக்க முடியாத அளவுக்குக் கடுமையானதல்ல. பக்கவாட்டில் அமைந்துள்ள ஆர்க்டிக் பெருங்கடல் வேறுபட்ட தனித்துவமான கடல் மற்றும் கடலோர ஈக்கோசிஸ்டம்-களைக் கொண்டிருக்கிறது. உயர்ந்து வரும் வெப்பநிலை, மாசுபாடு மற்றும் வானிலை நிகழ்வுகள், ஆர்க்டிக் பிரதேசத்தை சார்ந்திருக்கும் அனைத்து உயிரினங்களின் பிழைப்புக்கு அச்சுறுத்தலாகி வருகிறது, பனி உருகலால் ஆர்க்டிக் ஈக்கோ சிஸ்டம் அழிவடைந்தால் அதைச் சார்ந்த சுற்றுவட்டாரத்து ஈக்கோசிஸ்டம்களும் அழிவுறும்.

2. நீர் வாழ் உயிர் (Aquatic):

உலகின் 70% நிலப் பரப்பு நீரால் மூடப் பட்டுள்ளது. இதில் aquatic (நீர்வாழ்) மற்றும் marine (கடல் சார்) உயிர் என இரு பிரிவுகள் உள்ளன; நீர் வாழ் உயிரின் வாழிடங்கள்: ஆறுகள், ஏரிகள்,குளங்கள், சதுப்பு நிலம் மற்றும் நன்செய் நிலம். இவை பல்வேறு உயிரினங்களின் உயிர்வாழ்வை உறுதி செய்கின்றன. எனவே பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆரோக்கியமான வாழ்விடங்கள் இல்லாவிட்டால் மீன் பிடிப்பு போன்ற தொழில்கள் நலிவடையும். பெரும்பாலும் பொறுப்பற்ற தொழில் துறைகளின் செயல்பாடுகளால் நீர் மாசடைகிறது.

3. கடலோரம் வாழ் உயிரினம்:

கடலோரப் பகுதிகள் உலகின் நிலப் பரப்பில் வெறும் 7% ஆக இருந்த போதிலும் அவை நம்பமுடியாத அளவில் உயிரிய வாழ்க்கையைத் தக்க வைக்கின்றன. கழிமுகங்கள்(estuaries), கடற்கரைகள், பாறையடிக் குட்டைகள்(rock pools), மணல் குன்றுகள்(sand dunes) மற்றும் கரையோரக் காடுகள் ஆகியவை வெவ்வேறு கடல் கரையோர வாழிடங்கள். பவளப் பாறைகளும் சதுப்பு நிலங்களும் பிற கரையோர வாழிடங்கள். உலகின் மொத்த பல்லுயிரியத்தின் (biodiversity) 20% அளவுக்கு கடலோர வாழிடங்கள் ஆதரவளிக்கின்றன. எனவே தான் இவற்றின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

4. பாலை நிலம் (desert):

பாலை நிலங்களின் பரப்பு தோராயமாக உலகின் மொத்த நிலப் பரப்பில் 35%. இவை ஆண்டு முழுவதும் சொற்ப மழையே பெய்யும் வறண்ட கடுமையான வகை நிலப் பரப்புகள். முன்னொரு காலத்தில் செழிப்புடன் இருந்தவை. பகலில் மிகு வெப்பம் காணப்பட்டாலும், ஞாயிறு மறைதலின் பின் காற்று பலமாக வீசுவதால் பாலை நிலங்கள் இரவில் குளிர் அடைகின்றன. ஈரம் தக்கவைத்துக் கொள்ளும் தாவரங்கள், ஒரு சில பாலைவனச்சோலைகள், இரவில் மட்டும் வெளிப்படும் விலங்குகள்-இவையே பாலை வாழிடத்தின் சிறப்புக் கூறுகள்.

5. காடு:

காடுகள் ஈக்கோ சிஸ்டம் உலகின் மொத்த நிலப் பரப்பில் சுமார் 31% ஆக இருக்கிறது. வெப்ப மண்டலக் காடுகள், மித வெப்ப மண்டலக் காடுகள் மற்றும் சிறு விலங்குகள் வசிக்கக் கூடிய மரங்களைக் கொண்ட காடுகள் என மூவகைக் காடுகள். மரங்கள் அடர்ந்துள்ள காடுகளால் உருவாக்கப்படும் சுற்றுச் சூழல் நிலைமையே காடுகளில் காணப்படும் அதிக ஈரத்தன்மைக்கும் பெரு மழைக்கும் காரணம். காடுகளை ஆண்டுக்கு 1% என்ற விகிதத்தில் இழந்து வருகிறோம். காடுகள் ஈக்கோ சிஸ்டம்-களில் முன்பிருந்ததில் மூன்றில் ஒரு பங்கை இழந்திருக்கிறோம். பெருகி வரும் காடழிப்பு இந்த ஈக்கோ சிஸ்டத்துக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

6. புல்வெளி நிலம் (grass land):

புல்வெளிநில வாழிடங்கள் உலக நிலப்பரப்பில் 20-40% ஆக இருக்கின்றன.வட அமெரிக்காவின் பிரையரிக்கள் மற்றும் ஆப்பிரிக்காவின் சாவன்னா புல்வெளி நிலங்கள் சூழலுக்கான இரு முக்கிய எடுத்துக்காட்டுகள். இங்கு வெவ்வேறு புல் வகைகள் வளர்ந்து கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களாகப் பயன்பட்டு வருகின்றன. பெரிய வாழிடமாக இருந்த புல்வெளி நிலங்கள், ஒவ்வொரு ஆண்டிலும் வெகுவேகமாக அழிவுற்று வந்ததால் தற்போது வெறும் 10% மட்டுமே எஞ்சியுள்ளன. வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவை அழிவுக்கான இயற்கைக் காரணிகள். புவி சூடாதல் காரணமாக இயற்கை தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகலாம்

7. துருவப் பகுதிகள் (tundras):

உலகின் மொத்த நிலப் பரப்பில் 10% ஆக இருக்கும் இந்த துருவப்பகுதிகள் உறைபனிப் பாலைவனங்களாகக் கருதப்படுகின்றன. உலகின் எல்லாக் கடும் குளிர் பிரதேசங்களிலும் (கனடா, அலாஸ்கா போன்றவை) உறைபனிப் பாலைவனங்கள் உள்ளன. துருவப் பகுதி என்னும் சூழல் தொகுதியில் மனிதர்கள் ஜீவித்திருப்பது பெருத்த சவாலாக இருந்து வருகிறது. ஆனால் சில சில குறிப்பிட்ட உயிரினங்களால் எளிதில் தகவமைத்துக் கொள்ள முடிகிறது. அவையாவன: லேப்ரடார் டீ, ஆர்க்டிக் கசகசா செடி, பருத்தி புல் (cotton grass), மற்றும் கரிபு பாசி (caribou moss ) போன்ற தாவர வகைகள், துருவக் கரடி, ஆர்க்டிக் நரி, பனிக்கலைமான் (reindeer) மற்றும் வெள்ளாந்தை (snowy owl) போன்ற விலங்கினங்கள்.

8. மலைத்தொடர்கள்:

உலகெங்கும் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஹிமாலயா மற்றும் ஆண்டீஸ் மலைத்தொடர்கள் பிரசித்தி பெற்றவை மற்றும் பேரழிவு ஆபத்தில் இருக்கும் ஈக்கோ சிஸ்டங்களும் கூட. பொதுவாக அதிக உயரங்களில் நிலைமைகள் கடுமையானதாக இருக்கும். காற்றழுத்தக் குறைவால் மனிதர்களுக்கு நடமாட்டமும், மூச்சு விடுதலும், சில அடிப்படை வேலைகளைச் செய்வதும் கடினமானதாக இருக்கும். ஆனால் சில தாவரங்கள் மற்றும் விலங்குகள் மலைப் பிரதேசங்களை வாழிடமாகக் கொண்டு பல்கிப் பெருகுகின்றன. அவையாவன: பைன், ஸ்ப்ரூஸ் மற்றும் ஜூனிபர் மரங்கள், பனிச்சிறுத்தை, கூகர் (பூனை இனத்தை சேர்ந்த கொடு விலங்கு), யாக் (மலை எருது) மற்றும் லாமா என்னும் கம்பளி ஒட்டக இனம் போன்ற விலங்குகள்.

9. ஸ்டெப்பி புல்வெளிகள்:

துருவப் பிரதேசங்களுக்கும் வெப்ப பிரதேசங்களுக்கும் இடையிலுள்ள மரங்களற்ற புல்வெளி நிலங்கள் ஸ்டெப்பிகள் எனப்படும். பொதுவாக யுரேசிய

புல்வெளிகள் மட்டுமே ஸ்டெப்பிக்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. துளையிடும் கொறித்துண்ணிகள் (ரோடென்ட்ஸ்) முதல் சதைப்பற்றுள்ள தாவரங்கள் வரையான பல்வகை உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இங்குள்ள சுற்றுச்சூழல் நிலைமைகள் மனித வாழ்க்கைக்கு உகந்ததல்ல. எனினும் இங்கு பற்பல விலங்கினங்கள் இந்நிலம் தமக்கு கச்சிதமானது என ஏற்றுக்கொண்டுள்ளன . கழுகுகள், ப்ரைரி நாய்கள் (நாய் போல் குறைக்கும் கொறிப்பன வகை விலங்கு ), காட்டெருமைகள், கருப்புமான்கள் (antelopes), மற்றும் அணில்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன. இவையும் காலநிலை மாற்றத்தால் அருகிவரும் இனங்களாகி வருகின்றன.

10. ஈர நிலங்கள் (wetlands):

ஆண்டுக்கு குறைந்தது ஆறு மாதம் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் இயற்கையாகவோ செயற்கையாகவோ நீர் தங்கும் நீர்சார் நிலப்பரப்பு ஈரநிலம் எனப் படுகிறது. (விக்கி). தங்கும் நீர், நன்னீர் அல்லது உவர் நீர் அல்லது கடல் நீராகவும் இருக்கலாம். உலகெங்கிலும் உள்ள ஈரமான புல்வெளிகள், ஆறுகள், கழிமுகங்கள், கடலோரப் பகுதிகள், பவளத் திட்டுகள், தாழ்வான நிலங்கள்,குளம், குட்டை, ஏரி,மீன்குளங்கள், நெல்வயல்கள்,சதுப்பு நிலக்காடுகள் உள்ளிட்டவையே ஈர நிலங்கள். உலகின் மொத்த நிலப்பரப்பில் வெறும் 7% ஆக உள்ள ஈர நிலம், உலகின் மிகச் சிறிய ஈக்கோ சிஸ்டமும் ஆகும். இங்கு காணப்படும் தனித்துவமான உயிர்ச் சூழலும் நீர்த்தாவரங்களும் இந்நிலத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றன. நாரைகள், நீர்நாய்கள், முதலைகள், மற்றும் கொக்குகள் ஆகியவை ஈரநில ஈக்கோ சிஸ்டத்தில் காணப்படும் விலங்குகளில் சிலவாகும்.உலகின் பிற சூழல்சார் தொகுதிகள் சரிவர செயல் படுவதற்கு ஈரநில ஈக்கோ சிஸ்ட செயல்பாடு மிக அவசியமானது. அவை நீரைத் தூய்மைப் படுத்துவதோடு நீரிழப்பை ஈடு செய்கின்றன. மேலும் பில்லியன் கணக்கில் உள்ள மனித இனத்தினருக்குத் தேவையான மீன் மற்றும் உணவுப் பொருள் விளைவிக்க உதவுகின்றன. அவை இயற்கை நுரைப்பஞ்சு போல செயல்பட்டு உலகைப் பெருவெள்ளம் அல்லது வறட்சியிலிருந்து பாதுகாக்கின்றன. கடலரிப்பைத் தவிர்ப்பதோடு கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் உதவுகின்றன.

ஈக்கோசிஸ்டம் அளவுகோல்கள்

ஈக்கோசிஸ்டங்கள் பல்வேறு பரிமாணங்களில் காணப்படுகின்றன. அது ஒரு பாறைக்கு அடியில் அல்லது உங்கள் ஊர் குளத்தில் அல்லது சிதிலமடைந்த அடிமரத்தில் உள்ள சிறு பரப்பில் அமைந்திருக்கலாம். அல்லது ஒரு முழு மழைக்காடு போன்ற பெரிய அமைப்பாகவும் இருக்கலாம்.புவிக்கோள் முழுவதுமே ஒரு மாபெரும் ஈக்கோசிஸ்டம் என்று குறிப்பிடுவது அறிவியல் பூர்வமாக சரியானது. ஈக்கோசிஸ்டங்களை 3 முக்கிய அளவுகோல்களில் வகைப் படுத்தலாம்.

  • மைக்ரோ (micro) : சிறு சூழல்சார் தொகுதி-குளம்,குட்டை , உளுத்துப் போன அடிமரம், பாறையடி அமைப்புகள் போன்றவை.
  • மேஸோ (Messo) : நடுத்தர ஈக்கோ சிஸ்டம் -காடு, பெரிய ஏரி போன்றவை.
  • பயோம் (Biome): ஒரு மிகப் பெரிய ஈக்கோசிஸ்டம் அல்லது ஒத்த உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுபாடுகளைக் கொண்ட ஈக்கோ சிஸ்டங்களின் திரட்சி- மில்லியன்கள் கணக்கில் விலங்குகள், மரங்கள் மற்றும் நிலப் பரப்பில் இங்குமங்குமாக வெவ்வேறு விதமான பற்பல நீர்நிலைகள் அனைத்தையும் கொண்டிருக்கும் மழைக்காடு போன்ற சுற்றுச்சூழல் அமைப்பு.

ஈக்கோ சிஸ்டம் அழிவு

இயற்கை சூழலியல்சார் தொகுதிகளுக்குள் புதிய சூழலுக்குரிய காரணிகள் அல்லது இனங்களை அறிமுகப்படுத்துவது விபரீதமான விளைவுகளை உண்டாக்கக் கூடும். இறுதியில் அது ஈக்கோ சிஸ்ட அழிவுக்கும் அதன் இயல்வாழ் உயிரினங்களின் மரணத்துக்கும் வழிவகுக்கும்.

செயற்கை சூழல்சார் தொகுதிகள்

மேலே சொல்லப்பட்ட இயற்கை சூழலியல்சார் தொகுதிகளைத் தவிர சில செயற்கை சூழலியல்சார் தொகுதிகளும் உள்ளன. சாகுபடி நிலம், பூங்கா, மீன் காட்சியகம், விலங்கியல் பூங்கா போன்றவை.

வணிக ஈக்கோசிஸ்டம்

வணிக ஈக்கோசிஸ்டம் என்பது நிறுவனங்களின் வலைப்பின்னலைக் (network) குறிக்கும். ஒரு குறிப்பிட்ட உற்பத்திப் பொருள் அல்லது சேவை வழங்கலில் ஒத்துழைக்கவோ அல்லது போட்டியிடவோ ஈடுபட்டுள்ள வழங்குநர்கள் , விநியோகஸ்தர்கள், நுகர்வோர், போட்டியாளர்கள், அரசு முகமைகள் மற்றும் பலரைக் குறிக்கும். இதன் கருத்து: இயற்கை ஈக்கோசிஸ்டத்துக்கு உட்பட்ட அமைப்புகள் ஒவ்வொன்றும் மற்றவற்றைப் பாதித்தும் அல்லது அவற்றால் பாதிக்கப் பட்டும் மாற்றமின்றி பரிணமித்து வரும் உறவுகளை உருவாக்கி வளர்ச்சி அடைகின்றன. உயிரிய சூழியல்சார் தொகுதிகளைப் போல் வணிக நிறுவனங்களும் பிழைத்திருக்க வேண்டுமானால் அவை இயல்பாக இணக்கமுள்ளதாகவும், தம்மைப் பொருத்தமாக்கிக் கொள்ளும் தன்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்றுணர்ந்த வணிக வியூக வல்லுனரான ஜேம்ஸ் மூர் 1993-ல் பிசினஸ் ஈக்கோசிஸ்டம் என்னும் கோட்பாட்டை உருவாக்கினார். இக்கோட்பாடு எந்த அளவுக்கு வணிக மேலாண்மைக்குப் பயன்பட்டது எனத் தெரியவில்லை.

அர்த்தமும் அனர்த்தமும்

ஈக்கோசிஸ்டம் என்னும் ஆசாரமான சொல்லின் பயன்பாடு, இப்போது பெரும்பாலும் வலைச்சுற்று (network), உற்பத்திப் பொருள் குழுமம்(product group), சுற்றுச்சூழல், சமூகம்(community), நிறுவனம் ஆகிய தொழில்/வணிகச் சொற்களின் இணைபொருட்சொல் (Synonym) ஆக மாறி இருக்கிறது. கம்பெனிகளின் ஆண்டறிக்கைகளில் மட்டும் ஈக்கோசிஸ்டம் என்னும் பதத்தின் பயன்பாடு கடந்த 10 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரித்துள்ளது. அது குழுமொழி (jargon) மற்றும் குறிச்சொல் (buzzword) ஆக பரிணமித்து மிகைப் பயன்பாட்டுக்கு உள்ளாகி இருக்கிறது. அதன்படி எதையும் ஈக்கோசிஸ்டம் என்று குறிப்பிட்டு விடலாம் என்று நினைக்கிறார்கள். கீழ்காண்பவை சில எடுத்துக்காட்டுகள்:

  • சீனா உலகின் இரண்டாவது வலிய ஈக்கோசிஸ்டம் நாடு என்று இங்கு பொருள்படும்
  • HR ஈக்கோசிஸ்டம்துணை செயற்பாடு (support function ) இங்கே ஈக்கோசிஸ்டம் ஆகி விட்டது
  • 5 தயாரிப்புகள் கொண்ட Darico ஈக்கோசிஸ்டம் – உற்பத்திப் பொருள் தொகுப்பை ஈக்கோசிஸ்டம் என்கிறார்கள்
  • மக்களை மகிழ்விக்கும் சேவைகளின் கற்றை (bundle) ஒரு Happiness ஈக்கோசிஸ்டம் என்று குறிப்பிடப் படுகிறது

குறிப்பிடல்

A business ecosystem is the network of organizations—including suppliers, distributors, customers, competitors, government agencies, and so on—involved in the delivery of a specific product or service through both competition and cooperation.

Series Navigation<< ஏரோசால் (தூசிப் படலம்)புலம்பெயரும் பவளப்பாறைகள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.