இளமைக் காலம் – புஷ்பால ஜெயக்குமார்

நான் சிறுவனாக இருந்த போது
நகரத்தில் இருக்கும் சாலைகளைப் போல்
எண்ணற்ற வாழ்க்கைப் பாதையிலிருந்து
ஒரு பயணத்தை நானாக
எதுவும் தொடங்கவில்லை
இன்றோ நான் அனாதியாய்
ஒன்றும் இல்லாதவனாய்
அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்
நான் இருப்பதை
யாராவது நம்பினால்
மட்டுமே நான் இருக்கிறேன்
என் இளமைக் காலம் சிறியது
அதன் சுதந்திரம் மிகப் பெரியது
அன்று நடந்த சாலைகளில்
இருக்கும் மிச்சம் மீதிகள்
இன்றும் என் இளமையைத்
தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன
அந்த வெய்யிலில்
என் கடந்த காலத்திற்கு
நான் ஒரு முறை போய் வந்தேன்
என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை
என்றாலும் சில இடங்கள்
இன்னும் அப்படியே இருந்தன
நான் என்னும் அவனை உருமாற்றி
வெகு காலத்திற்கு அப்பால்
ஒரு கிழவனாய்
என்னுடன் அழைத்துச் செல்கிறேன்
******************************************************************************************
தாகம் – ஸ்ரீதரன் ராஜகுரு

இலையில் தூங்கும்
பொட்டு நீரில்
காட்டின் பிம்பம்…
அதை பருகுகிறது
சிறு ஈ.