இனக்கலவர நினைவுகள்: குமுறும் குரல்கள்

ஒளிந்து கொண்டதே
சூரியன்

வானம் முழுதும்
சிவப்பு மெழுகல்

இன் டிபென்ஸ் ஆப் அவர் செக்குலர் டிரெடிஷன் என்ற தலைப்பில் ஸஹமத் அமைப்பு வெளியிட்ட சுவரொட்டிகளில் ஒன்று.
ஓவியர்: அர்பிதா சிங்
©
Sound & Picture Archives for Research on Women

மீண்டும் ஒளியை
ஏற்றும் பரமனே

உன்னில் அடைந்தேன்
பரவசமே

– புல்லே ஷாஹ்

இந்தியாவில் சிலரது உயிருக்கு இன்று மதிப்பில்லை; அன்றாட வாழ்வை இவர்கள் பயத்துடனும் வேதனையுடனும் வெளிக்காட்ட முடியாத கோபத்துடனும்தான் கடத்த வேண்டியிருக்கிறது என்பதுதான் இந்தியாவின் இன்றைய மிகப் பெரிய சோகம்.இந்தப் புத்தகத்தில் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிகழ்ந்தவற்றை நினைவு கூர்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சிலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு சம்பவங்களை அலசி ஆராய்ந்து இந்திய வாழ்வின் அடிப்படை என காலங்காலமாகச் சொல்லப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வரும் சிலவற்றை கேள்விக்குள்ளாக்குகின்றார்கள்.

முன்னுரை

சில நினைவுகள் நம் மனத்தில் ஆறாத ரணங்களாகத் தங்கி விடுகின்றன. விகாரமான சில மனங்கள் எதைச் செய்யவும் தயங்காதவை என்பதற்குச் சாட்சி இந்த நினைவுகள். 1994ல் கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் ஸ்பாரோ ஏற்பாடு செய்திருந்த  ‘இனவாதம், வன்முறை மற்றும் பெண்கள்’ பயிலரங்கு இதுபோன்ற பயிலரங்குகளை அவ்வப்போது நடத்தவேண்டியதன் அவசியத்தை எங்களுக்கு உணர்த்தியது. ஏனென்றால் நம் சமகால வரலாற்றின் சில பகுதிகளை நாம் மறந்துவிடக்கூடாது. நமது தேசத்தையும் மக்களையும் சரியான கோணத்தில் பார்த்துப் புரிந்து கொள்ள இவை உதவுகின்றன.

1999 ஜனவரி 9, 10 தேதிகளில் ஸ்பாரோ  ‘அமைதியும் மத நல்லிணக்கமும்’ என்ற பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது. மாணவ மாணவியர் பிரச்சினைகளின் தீவிரத்தை உணர்ந்துகொள்வதற்காக குல்சாரின் மாசீஸ், சயீத் மிர்ஸாவின் நஸீம் ஆகிய படங்கள் முதல் நாள் திரையிடப்பட்டன. இதுவரை நடந்திராத வகையில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்ட 1984 தில்லி கலவரத்தில் பாதிப்படைந்த பக்தி கௌரையும், ஹர்பன்ஸ் கௌரையும் பிரதான பயிலரங்கில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்தோம். இந்த நவம்பர் படுகொலையில் தங்கள் வீட்டு ஆண்களையும் கணவன்மார்களையும் குழந்தைகளையும் தந்தையரையும் பறிகொடுத்த பல பெண்களுக்கு  “வெளிமனிதர்கள் அத்துமீறமுடியாத பாதுகாப்பு அரணாக அதுவரை அவர்கள் கருதிவந்த வீடே கொலைக்களமாக மாறிய கொடுமை” மனத்தில் ஆழமாக பதிந்துவிட்டது என்று வரலாற்றாசிரியரும் டெல்லி ரையட்ஸ் என்ற புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர் உமா சக்ரவர்த்தி தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். பக்தி கௌரும் ஹர்பன்ஸ் கௌரும், வாழ்ந்த வீட்டையே கல்லறைகளாக மாற்றிய இந்தச் சம்பவங்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றிவிட்டன என்பதையும் தங்களையும் குடும்பத்தாரையும் இவற்றின் நிழல்கள் எப்படி விடாமல் சுற்றிவருகின்றன என்பதையும் விவரித்தார்கள். சின்னாபின்னமாகிப் போன தங்கள் வாழ்க்கையை ஒன்றிணைக்கத் தாங்கள் பட்ட கஷ்டங்களையும் எடுத்துரைத்தார்கள். பக்தி, ஹர்பன்ஸ் இருவருடனும் பயிலரங்கில் உரையாடிய ஜெயா ஸ்ரீவாத்ஸவ் அங்கூர் என்ற சமூக நிறுவனத்தின் இயக்குநர். அவர் தானும் தன்னைப் போன்ற பிறரும் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகள் பற்றி விளக்கினார். படுகொலையைக் கண்ணால் கண்ட குழந்தைகளைப் பற்றியும் அவர்களின் கோபம், வெறுப்பு, மனக்கசப்பு போன்ற உணர்ச்சிகளை நிதானத்துடன் அவர்களுக்கு புரியவைக்க அவரது அமைப்பினர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றியும் அவர் பேசிய பேச்சு பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1992 டிசம்பரில் சூரத்தில் நிகழ்ந்த கலவரங்களுக்குப் பிறகு அங்கு மறுவாழ்வுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்ட டாக்டர் கல்பனா ஷா கலவர அனுபவங்களையும் இக்கலவரங்களால் மனிதர்களுக்கு நேர்ந்த அவலங்களையும்  விவரித்தார். சூரத் ஓர் அமைதியான நகரம் என்ற எண்ணத்தைச் சுக்குநூறாக்கிய அனுபவங்கள் அவை என்று குறிப்பிட்டார். சுஷோபா பர்வே 1992-93 கலவரங்களின் போது தாராவி குடிசைப் பகுதிகளில் பணியாற்றியவர். அவர் இமாம்வாடா பகுதியில் மோதலில் ஈடுபட்டிருந்த இரண்டு குழுக்களோடு தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் அவர்கள் மத்தியில் சுமுகமான உறவுக்காக தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் பேசினார்.

கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் கடந்த இரண்டு வருடங்களாக ஸ்பாரோ ஏற்பாடு செய்துவந்த பயிலரங்குகளில் இதுதான் கடைசிப் பயிலரங்கு. பக்தி கௌரும் ஹர்பன்ஸ் கௌரும் பேசிமுடித்த போது கண்ணீர் நிறையாத கண்கள் அங்கிருக்கவில்லை. டாக்டர் கல்பனா ஷா பேசியபோது, பார்வையாளர்கள் அனைவருமே  “இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்” என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டனர். சுஷோபா பர்வே இறுதியாக அளித்த உரை நாமும் ஏதோ செய்ய முடியும் என்ற நம்பிக்கையைத் தருவதாகவும் என்ன செய்யலாம் என்று செயல்பாட்டிற்கு வழிகாட்டுவதாகவும் அமைந்தது என்றும் கூறினர் மாணவியர் மற்றும் மாணவர். இந்த மனித அவலத்தை தாங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்போவதாகவும் இதன் பாதிப்பு தங்கள் மனத்தில் எப்போதும் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்கள்.

சி. எஸ். லக்ஷ்மி

டிசம்பர் 1999


இனக்கலவர நினைவுகள்

குமுறும் குரல்கள்

பக்தி கௌர்
©
Sound & Picture Archives for Research on Women

பக்தி கௌர்

எனது பெற்றோர் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள். இந்துஸ்தான் பாகிஸ்தான் என்ற பிரிவினை ஏற்பட்டதும், ராஜஸ்தானில் உள்ள பரத்பூரில் குடியேறினர். நான் அங்குதான் பிறந்தேன். எனது பெற்றோருக்கு ஏழு குழந்தைகள் – ஒரு பையன் ஆறு பெண்கள். இதனால் எங்களை வளர்த்து ஆளாக்கவும் திருமணம் செய்து வைக்கவும் மிகவும் சிரமப்பட்டிருப்பார்கள். எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. சிறு வயதில் எனது சகோதரனும் சகோதரிகளும் படித்துக் கொண்டிருக்கும்போது நான் அவர்களுடன் சும்மா உட்கார்ந்திருப்பேன். அப்படியாகச் சிறிதளவு எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டேன். அந்தக் காலத்தில் இந்திதான் பொதுவாகக் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆகவே ஓரளவிற்கு இந்தி கற்றுக்கொண்டேன். அந்த நாட்களில் எழுதப் படிக்கத் தெரிவதன் நன்மை குறித்து யாரும் சிந்திக்கவில்லை. இப்போது அதற்காக வருத்தப்படுகிறோம். படித்திருந்தால் நல்ல நிலையில் இருந்திருப்பேன் என்று இப்போது தோன்றுகிறது. இன்று நான்காம் நிலை அரசு ஊழியராகப் பணிபுரிகிறேன். மேசையில் உட்கார்ந்து பணியாற்ற எனக்குத் தகுதியில்லை. ஒவ்வொருவரும் இடும் வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது. என் வேலைக்கு எந்த மதிப்புமில்லை. படித்தவர்களுக்குத்தான் மதிப்பிருக்கிறது. அவர்களின் பேனாவிற்கு அதிகாரமிருப்பதால் அவர்கள் எது சொன்னாலும் சரி என்றாகி விடுகிறது.

எனது ஊர் அல்வர் பகுதியில் இருக்கிறது. அங்குதான் எனக்குத் திருமணம் நடந்தது. என் திருமணம் பதினைந்து வயதில் நடந்ததாக நினைவு. என் அக்காவிற்கு இதைவிட இளம் வயதில்  – பதிமூன்றோ பதினான்கோ வயதில் –  திருமணம் நடந்தது. அவளுடைய மாமியார் சற்று ஊனமுற்றவள். அதனால் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் வீட்டு வேலைக்கு ஆள் கிடைத்துவிடுமே என்று நினைத்தாள். ஆனால் எனது மற்ற ஐந்து சகோதரிகளுக்கும் பதினைந்து பதினாறு வயதில் திருமணம் நடந்தது. அந்தக் காலத்தில் நிலைமை அப்படித்தான் இருந்தது. இப்போதுதான் சட்டங்களும் சம்பிரதாயங்களும் மாறியிருக்கின்றன. பெண்களுக்கு பதினெட்டு வயதிற்கும் ஆண்களுக்கு இருபத்திரண்டு வயதிற்கும் முன் திருமணம் செய்யக்கூடாது என்கிறார்கள். முன்பெல்லாம் திருமணங்கள் மிக இளம் வயதிலேயே நடந்தன.

எங்கள் நிலத்தில் விவசாயம் செய்துகொண்டு அமைதியாக வாழ்ந்தோம். விவசாயி சில நேரம் அழுவான்; சில நேரம் சிரிப்பான். பயிர்கள் சில நேரம் செழித்து வளரும். சில நேரம் வீணாகிப் போகும். வாழ்க்கை நடத்துவது நாளுக்கு நாள் சிரமமாகிக் கொண்டிருந்ததாலும், குடும்பத்தினர் அனைவரும் நிலத்தில் பாடுபட வேண்டியிருந்ததாலும் நகரங்களை நோக்கிப் போகலாம் என என் கணவர் நினைத்தார். டில்லிக்குப் போய் நன்றாகச் சம்பாதித்துக் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கலாம் என எண்ணினோம். இதுதான் நாங்கள் டில்லிக்கு வந்ததன் காரணம். இதற்குள் எனக்கு நான்கு குழந்தைகள் ஆகிவிட்டது. அதில் ஒரு பையன் இறந்தும் போய்விட்டான். இரண்டு பையன்களுடனும் ஒரு பெண்ணுடனும் டில்லிக்கு வந்தேன். நாங்கள் ஷஹாத்ராவில் ஒரு குடிசை போட்டு அதில் குடியிருந்தோம். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களையெல்லாம் ஊரில் விட்டுவிட்டு நாங்கள் மட்டும் ஷஹாத்ராவுக்கு பிழைக்க வந்தோம். அங்கு எனக்கு மேலும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.

1976இல் நெருக்கடி நிலையின்போது எங்கள் குடிசைகள் அகற்றப்பட்டு நாங்கள் திரிலோக்புரிக்கு அனுப்பப்பட்டோம். அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருபத்தைந்து சதுர கஜம் வீட்டுமனையும் தலா இரண்டாயிரம் ரூபாய் கடனும் வழங்கியது. அங்கு அமைதியாக வாழ்ந்தோம். மொத்தக் குடும்பமும் வயிறாரச் சாப்பிட்டோம். என் கணவர் ஒரு டிரைவர். லாரி, ஆட்டோ ஓட்டுவார். சில நாட்கள் டிரக் ஓட்டுவார். ஏற்றிச் செல்ல சரக்குகள் எதுவுமில்லையென்றால் வீட்டில் சும்மாதானே உட்கார வேண்டும்? எனவே அந்த நேரங்களில் ஆட்டோ ஓட்டப்போவார். இதுதான் அவரது தொழிலாக இருந்தது.

இந்திரா காந்தி இறந்த 31ஆம் தேதி ஏதோ நடக்கப் போவதை உணர்ந்தோம். ஆங்காங்கே மோதல்கள் நடந்து கொண்டிருந்தன. ஆட்டோவில் திரும்பி வந்த என் கணவர் தான் கண்டதை விவரித்தார்.

 “டில்லி முழுவதும் மயான அமைதி நிலவுகிறது. ஏதாவது சண்டை சச்சரவுகள் நடக்கலாம் என்று தோன்றுகிறது. நாளை நாம் வெளியே தலை காட்டக்கூடாது. சீக்கியர்களுக்கு அது மிக மோசமான நாளாக இருக்கும்.”

 ‘பெரிதாக அப்படியொன்றும் நடந்து விடாது’ என்று நாங்கள் நினைத்தோம். அரசர்களுக்கும் பேரரசர்களுக்கும் சாவு இப்படித்தானே வந்திருக்கிறது? இந்திரா காந்தி இறந்த விதத்தில் புதிதாக என்ன இருக்கிறது? அந்தக் காலத்தில் அரசர்கள் இந்த மாதிரி இறந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்திரா காந்தி ராணி ஒன்றும் இல்லையே; பிரதமர் தானே என்று நினைத்தோம். அன்றிரவு நாங்கள் சாப்பிட்டு விட்டுத் தூங்கப் போனோம். காலையில் சத்தீஸ்பூர் குருத்வாராவிலிருந்து பெரும் கூக்குரலைக் கேட்டோம். அக்கம் பக்கத்தினர் கத்திக்கொண்டே ஓடினர்.  “குருத்வாராவைக் காப்பாற்றுங்கள். அவர்கள் வந்துவிட்டார்கள். குருத்வாராவை எரித்துக் கொண்டிருக்கிறார்கள்.”

எங்கள் காலனி முழுவதும் சீக்கியர் இருந்தனர். திரிலோக்புரியில் சுமார் முந்நூறு குடும்பங்கள் வசித்து வந்தன. பதட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்த மக்கள்,  “அவர்கள் நமக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். அடுத்த குறி நாம் தான். நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்,” என்றனர். எல்லோரும் வெளியே வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தனர். தெருமுனையில் எல்லோரும் கூடி,  “நமக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் நாமும் பதிலடி கொடுக்க வேண்டும்” என்று பேசிக்கொண்டனர். ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஏதாவது செய்துதானே ஆகவேண்டும்? ஜனங்கள், ‘நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என்று நினைத்தனர். நாங்கள் ஒருபக்கம் குழுமிக் கொண்டிருக்கும்போதே மறுபக்கம் கொலைகாரர்கள் சூழ்ந்து விட்டனர். நாங்கள் குழந்தை குட்டிகளுடன் அங்கிருந்தோம். ஏதோ புயல் வருவதைப் போல எங்கும் ஒரே இரைச்சலாக இருந்தது.

பின்னர் காவல்துறையினர் வந்தனர். எங்களுக்கும் அவர்களுக்கும் நடுவில் அணிவகுத்து நின்றனர். காவல்துறையினர் மத்தியஸ்தம் செய்து வைக்கத்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைத்தோம். அவர்கள் எங்கள் ஒவ்வொருவரின் வேண்டுகோளையும் கேட்டதால் மோதல் எதையும் அனுமதிக்கமாட்டார்கள், எங்களைப் பாதுகாப்பார்கள் என்று கருதினோம். ஆனால் காவல்துறையினரோ எங்களை வீட்டுக்குச் செல்லுமாறு கூறினர். எங்களையும் அவர்களையும் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் எங்கள் சர்தார்கள் வீடுகளுக்குள் செல்ல விரும்பவில்லை. அவர்கள் எங்களை வீட்டிற்குள் வைத்துக் கொன்று விடுவார்கள் என்று நினைத்தார்கள், எனவே தெருவிலேயே நின்றுகொண்டிருந்தோம். ஆனால் காவல்துறையினர் எங்களை மிரட்டினர்.  “நாங்கள் சொல்வதை ஏன் கேட்கமாட்டேன் என்கிறீர்கள்? எல்லோரும் மரியாதையாக உள்ளே போங்கள். இல்லாவிட்டால் நாங்கள் உங்களைச் சுட வேண்டியிருக்கும்.”  ‘அவர்களும் நமது சகோதரர்கள்தாம். அவர்கள் சிரைத்துக் கொண்ட மோனா சீக்கியர்கள்; நாம் முடி வளர்த்துக் கொண்ட சீக்கியர்கள்’ என்று நினைத்தார் என் கணவர். நாங்களும் இந்துக்கள்தாம். அவர்கள் மோனாக்கள். நாங்கள் சர்தார்கள். இந்த வித்தியாசங்கள் இருந்தன.  “நாம் பேசாமல் வீட்டிற்குள் போய் விடுவோம். காவல்துறையினரின் பேச்சை நாம் கேட்காவிட்டால் அவர்கள் நம்மைத் தாக்கக்கூடும்” என்றார் என் கணவர். நாங்கள் வீடுகளுக்குள் சென்றதும் காவல் துறையினர் கலவரக்காரர்களை அழைத்தனர். எங்கள் வீடுகளுக்குள் பெட்ரோலும் எரியும் டயர்களும் வீசப்பட்டன. எங்கள் சகோதர சகோதரிகள் பலர் தங்கள் மானத்தை இழந்தனர். மக்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். உயிருடன் கொளுத்தப்பட்டனர்.

நாங்கள் வீட்டிற்குள் இருந்த சமயம் அவர்கள் மூன்று முறை என் கணவரைத் தேடிவிட்டு போனார்கள். நாங்கள் அவரை கட்டிலுக்கடியில் ஒளிந்து கொள்ளச் செய்திருந்தோம். மூன்றாவது முறை வீடு முழுவதும் தேடிப் பார்த்தனர். மெத்தைகளை வைப்பதற்கான பெரிய பெட்டியொன்று எங்கள் வீட்டில் இருந்தது. அதற்குள் யாரும் ஒளிந்திருக்கிறார்களா என்று திறந்து பார்த்தனர். ஓரிடம் விடாமல் மொட்டை மாடியில்கூட ஏறிப் பார்த்தனர். அவர்களால் கட்டிலுக்கடியிலிருந்த அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என் மகன் ஹரியும்கூட அங்குதான் இருந்தான். பதினோரு மணிக்கு மீண்டும் வந்தார்கள். இரண்டுமுறை வந்துவிட்டு போனார்கள்.

எத்தனை பேர் வந்துவிட்டு போனார்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை. எங்களால் எண்ணக்கூட முடியாதபடி காலனி முழுக்க அவர்கள் நிறைந்திருந்தனர். ஒரு வீட்டிற்குள் பத்து பதினைந்து பேர் நுழைவார்கள். நான் அப்போதிருந்த நிலையில் அவர்களை அடையாளம் காண முடியுமா என்ன? என் மனத்தில் ஓடிய ஒரே சிந்தனை இதுதான் – ‘ நாங்கள் உயிர் பிழைக்க வேண்டும். பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். என் கணவர் உயிர் தப்பவேண்டும். இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டும்.’ எங்களுக்கு ஒரே குழப்பமும் கவலையுமாக இருந்தது.

எங்களைச் சுற்றிலும் நெருப்பு பற்றி எரிந்துகொண்டிருந்தது. என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று எதுவும் புரியவில்லை. நாங்கள் மின் தொடர்பை துண்டித்திருந்ததால் இந்த முறை அவர்கள் டார்ச் விளக்குடன் வந்தனர். அவர்கள் கட்டிலுக்குக் கீழ் டார்ச்சை அடித்துப் பார்த்த போது மெத்தையால் மறைத்து வைக்கப்பட்டிருந்த என் கணவரைக் கண்டுபிடித்து விட்டனர்.  “இங்கே ஒளிந்திருக்கிறான். அவனை வெளியே இழு” என்று கத்தினர். என் கணவரை நோக்கி,  “சர்தார்ஜி, வெளியே வா” என்றனர். அவர் வெளியே வந்து எழுந்து நின்று இரு கைகளையும் கூப்பி,  “சகோதரர்களே, இங்கிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். என் ஆறு பிள்ளைகளுக்காக என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சினார்.  “இல்லை இல்லை. முதலில் வெளியே வா” என்றனர்.

என் கணவரை வீட்டிற்கு வெளியே வருமாறு வற்புறுத்தியபோது  “வெளியே நிறைய பேர் இருக்கிறார்கள். என்னைக் கொன்று விடுவார்கள்,” என்று கெஞ்சினார்.  “நாங்கள் வெளியே போகிறோம். பின்னால் வா,” என்று கூறிவிட்டு அவர்கள் வெளியேறியதும் என் கணவர் கதவை மூடித் தாழிட்டுவிட்டார். அவர்கள் கடப்பாரைகளையும் கம்புகளையும் கொண்டு கதவை உடைத்தனர். கதவின் தாழ்ப்பாள் சுழன்று விழுந்தது. கதவின் பக்கத்தில் என் கணவர் நின்று கொண்டிருந்ததால் அவரைச் செங்கல்லால் தாக்கினார்கள். அவர் படுக்கையில் சரிந்து அப்படியே மயங்கிவிட்டார். கடப்பாரைகளோடும் கசாப்புக் கத்திகளோடும் அவர்கள் உள்ளே  நுழைந்தனர். இரக்கமின்றி அவரைக் கூறுபோடத் துவங்கினர். அவர் பெருங்குரலில் ஓலமிட்டார். கதறியபடி என்னையும் குழந்தைகளையும் அழைத்தார். என்ன நடக்கிறதென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அரவம் ஓய்ந்ததும் நான் உள்ளே சென்று பார்த்தேன். அவர்கள் அவரை பலமாக அடித்து போட்டுவிட்டுச் சென்றிருந்தனர். அவர் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அவர் வலியால் கத்தியபோது,  “இவன் இன்னும் உயிரோடிருக்கிறான்” என்று மீண்டும் தாக்கினர். மீண்டும் அவர் மயக்கமுற்றபோது அவர் இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து அகன்றனர். பத்து பதினைந்து நிமிடங்கள் சென்று அவருக்கு நினைவு திரும்பியது. நினைவு திரும்பியதும் வலியால் கத்தியபடி என்னையும் என் மகன் ஹரியையும் அழைக்கத் தொடங்கினார். என் மகன் பெயர் ஜஸ்வந்த்; ஹரி என்று அழைப்போம். அவர் எங்களை அருகில் அழைத்து அணைத்தபோது துக்கம் தாங்காமல் அவர் மேல் நாங்கள் விழுந்து அழுதோம்.  “அமைதியாக இருங்கள். சத்தம் போட்டு அழாதீர்கள். கத்தாதீர்கள். மீண்டும் அவர்கள் திரும்பி வந்து உங்களை அடிப்பார்கள்” என்று சொல்லிக்கொண்டேயிருந்தோம். ஆனால் அவரால் தாங்கமுடியவில்லை. வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் மீண்டும் வந்தனர்.  “இந்த நாய்ப்பயல் இன்னும் சாகவில்லையா? இன்னும் நன்றாகச் சாத்து” என்றனர். பிறகு என்னை நோக்கி,  “ இங்கிருந்து போகாவிட்டால் உன்னை பலாத்காரம் செய்வோம்” என்றனர். என்னுடன் எனது ஒன்பது வயது மகளும் இருந்தாள். அவர்கள் என்னை மட்டுமல்லாமல் என் மகளையும் பலாத்காரம் செய்துவிடுவார்கள் என்று பயந்தேன். வேறு வழியின்றி என் கணவரை விட்டுவிட்டு என் குழந்தைகளுடன் ஒரு வீட்டிற்குப் புகலிடம் தேடிப் போனேன். அதன்பின் என் கணவர் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று இதுவரையில் எனக்குத் தெரியாது. அவரது உடலைக்கூட நாங்கள் பார்க்கவில்லை.

அவர் எங்களை விட்டுப் போய்விட்டார். அவ்வளவுதான். எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது குழந்தைகள் இருக்கிறார்கள். நான் அவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நான் வீட்டைவிட்டு வெளியே போய் வேலை பார்க்காவிட்டால் எனக்கு மதிப்பிருந்திருக்காது. என்னுடைய குழந்தைகளைச் சரியாக வளர்த்திருக்க முடியாது. அவர்களுக்குச் சாப்பாடோ வேலையோ கிடைத்திருக்காது. நான் அவர்களுக்காக வாழ்ந்திருக்காவிட்டால் அவர்கள் எப்படி வளர்ந்து ஆளாகியிருப்பார்கள்? அவர்கள் வாழ்வு எப்படி மலர்ந்திருக்கும்?

நான் தைரியத்தை வளர்த்துக்கொண்டேன். (ஜெயா ஸ்ரீவாத்ஸவாவை நோக்கி) உங்களுக்கு என்னைத் தெரியும். உங்களோடு நான் குழந்தைகள் காப்பகத்தில் வேலை செய்திருக்கிறேன். கைக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதுதான் அங்கு முக்கியமான வேலையாக இருந்தது. என் குழந்தைகளைப் போல் அந்தக் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டேன். அந்தக் குழந்தைகளின் மலஜலத்தைக் கழுவினேன். அவர்களுக்கு உணவு சமைத்து ஊட்டினேன். தொட்டிலிட்டுத் தாலாட்டினேன். அவர்களிடம் அன்பு காட்டினேன். கலவரம் நடந்தபோது இரண்டு மூன்று மாத கைக்குழந்தைகளுடன் பெண்கள் அங்கிருந்தனர். அப்போது இந்த அக்கா எங்களிடம், “நீங்கள் எல்லோரும் வெளியே வேலைக்குச் செல்லுங்கள். அழுவதினால் பயனில்லை. வேலை செய்தால்தான் வருமானம் கிடைக்கும். மேலும் மற்றவர்களோடு பேசவும் சிரிக்கவும் வாய்ப்புக் கிடைக்கும்.  நீங்கள் வெறுமனே பேசாமல் உட்கார்ந்திருந்தால் நோய்தான் வரும். உங்கள் மன அழுத்தம் உங்களுக்குள்ளே புதைந்து விடும். உங்களுக்கென்று ஒரு வாழ்க்கையே இல்லாமல் போகும். வெளியே வந்தால் உங்களுக்கு நல்லது.” அக்கா இப்படி எங்களிடம் ஆதரவாகப் பேசியபோது அங்கிருந்த பெண்கள் –  விதவைகள் –  “எங்கள் குழந்தைகளை எங்கே விட்டுச் செல்வோம்?” என்று கேட்டார்கள். அதற்கு அக்கா,  ‘நாம் ஒரு குழந்தைகள் காப்பகத்தைத் தொடங்குவோம். அதற்கு ஒரு ஆயாவைப் போட்டு குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்வோம். குழந்தைகள் அழும்போது நீங்கள் அங்கு சென்று பாலூட்டிவிட்டுத் திரும்பலாம்” என்றார்.

பெண்களுக்குத் தையல், பூவேலை, பின்னல் வேலை போன்ற வேலைகள் கொடுக்கப்பட்டன. குழந்தைகள் காப்பகத்தில் வேலை செய்த பின்னர் எனக்கு ஒரு அரசாங்க வேலை கிடைத்தது. என் குழந்தைகளை வளர்ப்பதற்காகத் தொடர்ந்து உழைத்தேன். ஆரம்பத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தபோது வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவும் பயங்கரமானதாகவும் இருக்குமென்று நினைத்தேன். நெடுந்தூரம் எங்கேயாவது போனபோது திரும்பி வருவோமா மாட்டோமா என்று திகைப்பாயிருந்தது. சகோதரிகள் எங்களுக்குக் கற்றுத் தந்தவற்றின் மூலம் புதிய பாதை துலங்கியது. தொடர்ந்து அவ்வழியில் முன்னோக்கிச் சென்றோம். அது எனக்குப் பிடித்திருந்தது.

நான் வெளியே சென்று வேலை பார்ப்பேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. எனக்கு வீட்டில் இருந்தபடியே எல்லாம் கிடைத்துவிடும் என்றும், என் கணவர் வாழ்நாள் முழுக்கச் சோறு போடுவார் என்றும் நினைத்திருந்தேன். குழந்தைகள் இருக்கும்போது பெற்றோர்கள் தனது மகனோ மகளோ சம்பாதித்துச் சோறு போடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் இப்படி ஒரு மலை என் மேல் இடிந்து விழும் என்று நான் நினைத்ததுகூட இல்லை. நான் வீட்டிற்கு வெளியே போவேன், என் குழந்தைகளை நானே வளர்ப்பேன் என்று கொஞ்சமும் கற்பனை செய்து பார்த்ததில்லை.

ஆரம்பத்தில் எனக்கு எதுவும் அதிகம் தெரியாது. இப்போதோ எனக்கு இடப்படும் எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்து முடித்துவிடுவேன். அதனால் மேலதிகாரிகளின் பாராட்டும் எனக்குக் கிடைத்தது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அங்கே நம்பிக்கைக்கு இடமிருந்தது. என்னாலும் ஏதாவது செய்யமுடியும் என்று உணர்ந்து கொண்டேன். நான் பின்தங்க முடியாது. எது எப்படியானாலும் என் உடலில் தெம்பு இருக்கும்வரை நான் உழைத்தே உண்பேன். வயதான பிறகு ஓய்ந்து உட்காரத்தானே வேண்டும்? என் உடலில் பலவற்றைச் செய்து முடிக்கும் தெம்பு இருக்கிறது. என் மனதிலும்கூட. இது நம்மைப் பொறுத்தது. ஒருவர் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். உழைக்காமல் நம்மால் வாழ முடியாது.

நினைவுகள் மனத்தை விட்டு நீங்குவதில்லை. சந்தோஷமான தருணங்கள் எனது வாழ்க்கையிலும், எனது குழந்தைகள் வாழ்க்கையிலும் வரத்தான் செய்தன. ஆனால் எங்கள் மனம் சந்தோஷத்தில் துள்ளவில்லை. எனது ஐந்து குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைத்தேன். ஆனால் கண்ணீருடன். எனது கணவர் இருந்திருந்தால் பூரித்துப் போயிருப்பார். எங்கள் இதயங்களில் இருக்கும் காயங்கள் ஆறவில்லை. ஏதோ வாழ வேண்டுமே என்பதற்காகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

என் குழந்தைகளிடம்  “வெறுப்பை எல்லாம் விட்டு ஒழியுங்கள். ஏன் வெறுக்க வேண்டும்? என்ன நடக்கவேண்டும் என்று நம் தலையில் எழுதியிருந்ததோ அதுதான் நடந்தது” என்று அடிக்கடி சொல்கிறேன். இப்படித்தான் என் குழந்தைகளை நான் தேற்றுகிறேன். என்னையும் அவ்வாறே நான் தேற்றிக்கொள்கிறேன். அந்தக் காட்சிகள் கண்களில் விரியும்போது ஆறிய காயங்கள் மீண்டும் திறந்து கொள்கின்றன. காயங்களில் எவ்வளவுதான் மருந்திட்டாலும் வடுக்கள் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. கடவுள் கொடுத்த அந்த மென்மையான தோல் அதே போன்று இருப்பதில்லை. ஒரு புண் ஆறிய இடத்தில் தோல் தடித்துப் போய் விடுவது போல மனத்தில் ஏற்படும் ரணமும் ஆகிவிடுகிறது. என் இதயம் தகிக்கும்போது அதில் மீண்டும் ஜுவாலைகள் எழுகின்றன. ஆனால் எனக்கு இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதில் விருப்பமில்லை. என் குழந்தைகளை இந்துக்களுக்கு எதிராகத் தூண்டிவிட மாட்டேன். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் எல்லோரையும் ஒன்று போல்தான் பார்க்கவேண்டும். எங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்கு நாங்கள் எந்தத் தீங்கும் செய்யவில்லை. அவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவர்களை ஆசீர்வதிக்கிறேன்:  “நீங்கள் மகிழ்ச்சியாயிருங்கள். நாங்கள்தான் நடைப்பிணங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எதற்காக உங்களுக்கு அந்த நிலை? கடவுள் உங்களைச் சந்தோஷமாக வைத்திருக்கட்டும்.” இதுதான் நான் விரும்புவது.

எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. எல்லோரும் எனக்கு உடன் பிறந்தவர்கள் போலத்தான். இந்துக்கள் மீதோ முஸ்லிம்கள் மீதோ எனக்கு எந்தக் கோபமும் இல்லை. எனது கோபம் எல்லாம் இந்திரா காந்தியின் குடும்பத்தின் மீதுதான். இந்திரா இறந்தபோது  “பெரிய மரம் சாயும்போது பூமி சற்று அதிரத்தான் செய்யும்” என்று கூறினார் ராஜீவ் காந்தி.  “இரத்தத்திற்கு இரத்தம்” என்ற கோஷம் எழுந்தது அதன் பின்னர்தான்.

எங்கள் குடும்பத்தில் மொத்தம் பன்னிரண்டு ஆண்களை இழந்துள்ளோம். என் மாமனார், அவரது மூன்று மகன்கள், இரண்டு பேரன்கள், இரண்டு மருமகன்கள் மற்றும் என் சகோதரியின் மகன் என என் குடும்பத்திலும், என் கணவர் குடும்பத்திலுமாக மொத்தம் பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டனர். ஒரே நாளில் ஒருவரின் குடும்பத்தில் பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டால் அதன் பிறகு அவர் இதயம் எப்படியெல்லாம் துடிக்கும்? அவரால் சிரிக்கவோ, சந்தோஷமாக வாழவோ முடியுமா? நீங்களே சொல்லுங்கள்.


ஹர்பன்ஸ் கௌர்

ஹர்பன்ஸ் கௌர்
©
Sound & Picture Archives for Research on Women

னது அப்பா ராஜஸ்தானைச் சேர்ந்தவர். 1947இல் பிரிவினையையொட்டி நடந்த கலவரத்தின்போது இந்து மற்றும் சீக்கிய அகதிகள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்தனர். என் அப்பா முதலில் பம்பாய்க்கு வந்து கல்யாண் என்ற இடத்தில் குடியேறினார். கல்யாணில் இருந்தவர்கள் பின்னர் ராஜஸ்தான் அல்லது உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு அகதிகள் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். ராஜஸ்தானில் கோட்டா என்ற கிராமத்தில் நிலம் வழங்கப்பட்டது. பிரிவினையின்போதுதான் என் அப்பாவின் திருமணம் நடந்தது. அப்போது அவருக்கு வயது பதிமூன்றோ அல்லது பதினான்கோ. என் அம்மாவிற்கு பன்னிரண்டு வயதுதான். விவசாயம்தான் அவர்களின் தொழில். அப்பாவின் இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் அங்குதான் இருந்தனர். விவசாயத்திலிருந்து வரும் வருமானம் போதுமானதாக இல்லை என்று அப்பாவிற்குப் பட்டது. எனவே குடும்பம் தில்லிக்குக் குடிபெயர்ந்தது.

அப்பா மட்டும் முதலில் தில்லிக்கு வந்தார். அங்கு தச்சு வேலை செய்தார். பின்னர் அம்மாவையும் அழைத்துக் கொண்டார். அவர்களுக்கு தில்லியில் குடியிருக்க சரியான இடம் கிடையாது. இரண்டு பெண் குழந்தைகள் வேறு இருந்தனர். தில்லி வரும்போது அந்தப் பெண்களையும் உடனழைத்து வந்திருந்தார். வீடு கிடைப்பது பெரும் பிரச்சினையாக இருந்தது. பழைய தில்லியிலுள்ள ஜம்னா பஜார் ஏழைகள் வசிக்கும் பகுதி. அங்கு அதிக இடம் இல்லாததால் நாங்கள் வசிப்பதற்கு ஒரு குடிசை போட்டார். அங்கிருந்து அவர் வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார். சுமார் பதினான்கு பதினைந்து வருடங்கள் அவர்கள் அங்கு வாழ்ந்தனர். இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. பின்னர் குடிசைகள் அகற்றப்பட்டபோது அவர்களுக்கு குடியிருப்பு வழங்கப்பட்டது. பழைய தில்லியில் சாஃப்ராபாத் என்னும் இடத்தில் நூறு சதுர கஜம் வீட்டு மனை ஒன்றை அப்பா வாங்கினார். பின்னர் என் சித்தப்பாவையும் தில்லிக்கு வரவழைத்தார். என் சித்தப்பாவுக்கும் திருமணமாகியிருந்தது. நிலம் மலிவாக இருந்ததால் அப்பாவும் சித்தப்பாவும் நிலம் வாங்கி ஒன்றாக வசித்தனர். நான் சாஃப்ராபாதில் 1968இல் பிறந்தேன்.

அப்பாவிற்கு வருமானம் ஒன்றும் அதிகமில்லை. அவ்வப்போது கொஞ்சம் சம்பாதித்துக் கொண்டு வருவார். அவர் எங்களை ஓரளவுக்குப் படிக்க வைத்தார். என் அக்கா ஒன்பதாம் வகுப்பு வரை படித்தாள். நானும் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். நாங்கள் இருவரும் மேலே படிக்க விரும்பினோம். எங்களுக்குக் கீழே இரண்டு தம்பிகளும் தங்கைகளும் இருந்தனர். தச்சு வேலை பார்த்த அப்பாவின் வருமானம் மிகக் குறைவாக இருந்தது. எல்லாக் குழந்தைகளையும் அவரால் படிக்க வைக்க முடியவில்லை. ஆனாலும் நாங்கள் அனைவரும் ஓரளவு படிக்கவே செய்தோம்.

என் அக்கா மேலே படிக்க விரும்பியபோது அப்பா தன்னால் முடியாது என்று கூறிவிட்டார். ஆனால் அவள் பிடிவாதமாக இருந்தாள். தில்லியில் உள்ள I.T.I.யில் தையல் படித்தாள். நானும் மேலே படிக்க விரும்பினேன். பத்தாம் வகுப்பில் சேர்ந்து ஆறு மாதங்கள் போனேன். அப்போது எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. பையனின் குடும்பத்தினர் நான் மேற்கொண்டு படிப்பதை விரும்பவில்லை. எனவே என் படிப்பு நிறுத்தப்பட்டது. அவர்கள் பேச்சைக் கேட்டுத்தானே ஆகவேண்டும்? 1984 மே மாதம் 20ம் தேதி என் திருமணம் நடந்தது. எனது கணவரின் வீடு மங்கோல்புரியில் இருந்தது.

1984 கலவரத்தில் எங்கள் வீடு எரிக்கப்பட்டது. எங்களது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பெண்கள் எல்லோரும் வீட்டின் மேல்தளத்தில் போய் இருந்துகொண்டோம். தெரிந்தவர்கள் எங்களுக்கு யாராவது தண்ணீர், தேநீர், உணவு இவற்றைக் கொண்டு வந்து தருவார்கள். ஒருநாள் விடியற்காலை நான்கு மணி இருக்கும். சுமார் முப்பது நாற்பது பேர் வந்தனர். எங்களைப் பிடித்து உலுக்கி,  “எங்கே உங்கள் வீட்டு ஆண்கள்? எங்கே உங்கள் சர்தார்கள்?” என்று கேட்டனர்.  “அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதுகூட எங்களுக்குத் தெரியாது” என்றோம். எங்கள் வாயிலிருந்து ஏதாவது வரவழைக்க வற்புறுத்தித் துன்புறுத்தினர். ஆனால் உண்மையில் யாரும் எங்களுடன் இல்லை. அவர்கள் வலுக்கட்டாயமாக இரும்புப் பெட்டியிலும், கழிவறையிலும், குளியலறையிலும் தேடிப் பார்த்தனர்.  “சர்தார்கள் இங்குதான் ஒளிந்திருக்க வேண்டும். அக்கம் பக்கத்து வீடுகளில் ஒளிந்திருப்பார்கள். உங்களுக்குச் சாப்பாடு கொடுத்தது யார்?” என்று கேட்டனர். எங்களால் சாப்பிடக்கூட முடியாததால் அக்கம்பக்கத்தினர் அளித்த உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தன.  “யார் உங்களுக்கு உதவி செய்தது? உங்களுக்குச் சாப்பாடு கொடுத்தது யார்?” என்று கேட்டனர்.  “உங்களைப் போன்ற சிலர் இங்கே வந்து இதையெல்லாம் கொடுத்தனர். ஆனால் எங்களால் சாப்பிடக்கூட முடியாததால் மீந்து கிடக்கின்றன” என்றோம். மூன்று நாட்கள் இவ்வாறாகக் கழித்தோம். நவம்பர் மூன்றாம் தேதி ராணுவம் நிலைமையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. ராணுவ வாகனங்களில் நாங்கள் நானக்சர் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டோம்.

எனது கணவர் மங்கோல்புரியில் இருந்தார். அவரைப் பற்றி ஆறு ஏழு நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. அதுவும் நாகரிக் ஏக்தா மன்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த சகோதரிகள் மூலம் தெரிய வந்தது. அந்த அமைப்பினர் தந்தி போன்றவற்றின் உதவியோடு தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். எங்களிடம், நாங்கள் எப்படியிருக்கிறோம், எங்கிருக்கிறோம், எங்கள் குடும்பம் எங்கிருக்கிறது என்பதைக் கேட்டறிந்தனர். எங்களிடம் இருந்து கடிதங்கள் பெற்று மங்கோல்புரியில் இருந்த உறவினர்களிடம் சேர்த்தனர். மங்கோல்புரியிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்திருந்தன என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். பின்னர் அவர்களிடம் என் கணவர் எப்படியிருக்கிறார் என்று கேட்டேன்.

அக்கம்பக்கத்தினர் அவர்களிடம் எங்கள் குடும்பத்தினர் ஒரு முகாமிற்குக் கொண்டு போகப்பட்டதாகவும் எனது கணவரும் அவரது அண்ணனும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் கூறியதாகத் தெரிவித்தனர்.

என் கணவர் அண்டை வீட்டில் ஒளிந்து கொண்டிருந்திருக்கிறார். அந்த வீட்டார் பழைய பேப்பர் சாமான்கள் வாங்கி விற்பவர்கள். அவர்களுடன் எங்களுக்கு நல்ல பழக்கம் இருந்தது. எங்கள் வீடுகள் எதிரெதிரே இருந்தன. என் மாமியாரின் இன்னொரு மகன் தனியாக வசித்து வந்தார். என் மாமியார் எனது கணவரை அந்த வீட்டார் பாதுகாப்பில் விட்டிருந்தார். அந்த நான்காம் தேதியன்று வீடு வாங்கத் தீர்மானித்திருந்தோம். நான்காம் தேதி நெருங்கிக் கொண்டிருந்ததால் பத்திரம் முடிப்பதற்காகக் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தோம். அது ஒரு டிரங்க் பெட்டியில் இருந்தது. எனது மாமியார் எனது கணவரை அங்கு விட்டு விட்டு அந்த டிரங்க் பெட்டியையும் ஒப்படைத்து,  “ரஞ்சித், இந்த டிரங்க் பெட்டியை கவனத்துடன் பார்த்துக் கொள். பத்திரம்” என்று கூறியிருந்தார். அக்கம் பக்கத்தினருக்கு என் கணவர்தான் குடும்பத்திற்குப் பொறுப்பானவர் என்பதும், அவரது அண்ணன் எங்கள் குடும்பத்துடன் இல்லை என்பதும், அவரது தந்தை வயதானவர் என்பதும் தெரியும். நாங்கள் வீடு வாங்கப்போவதும் தெரியும். அதனால்தான் என் கணவரை அவர்கள் வைத்துக்கொள்ளச் சம்மதித்தார்கள். கலவரக்காரர்கள் இரவில் வந்திருக்க வேண்டும். அந்த வீட்டுக்காரர்கள் என் கணவரை வெளியேற்றினார்களா, அந்தக் கும்பல் அவரை இழுத்துச் சென்றதா என்று எனக்குத் தெரியாது. அடுத்த நாள் காலை அவர்கள் என் மாமியாரிடம்  “உங்கள் மகனை அவர்கள் கொண்டு போய் விட்டார்கள்” என்று கூறினார்கள். இந்தத் தகவலை எதிர் வீட்டில் இருந்த என் மாமியாருக்கு இரவே அவர்கள் தெரிவித்திருக்க முடியும். ஆனால் நாங்கள் கொடுத்து வைத்திருந்த பணம் அவர்களை நேர்மையற்றவர்களாக்கி விட்டது.

அந்தப் பகுதியில் இருந்த என் கொழுந்தனாரையும் காப்பாற்ற முடியவில்லை. எனது மாமனார் மட்டும் காப்பாற்றப்பட்டார். அவர் மோதிநகர் குருத்துவாராவில் தங்குவது வழக்கம். அதனால் அவர் உயிர் பிழைத்தார். என் கணவரின் தம்பியும் எனது நாத்தனாரின் கணவரும் காப்பாற்றப்பட்டனர். ஆறேழு நாட்களுக்குப் பின்னர்தான் இந்த விவரம் எனக்குத் தெரிய வந்தது. அப்போதுதான் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் பற்றியும் எங்களுக்குச் சொல்லப்பட்டது. என் கணவர் நலம் பற்றி எப்படிக் கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை. பின்னர் நான் முகாமில் இருந்தபோதுதான் அவர் இறந்து போனதாக எனக்குத் தெரியவந்தது.

தில்லியில் கலவரம் ஏழைகள் வசித்த பகுதிகளில்தான் நடந்தது. அவர்கள் தினக்கூலிகள். வியாபாரிகளுக்கும் முதலாளிகளுக்கும் பெரிய கஷ்டமொன்றும் இல்லை. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். ஏழைகளுக்கு மேல்மட்டத்தினருடன் தொடர்பு இல்லை. இந்தக் கலவரத்தைத் தூண்டியதும் அரசியல் கட்சிகள்தாம். சாமானிய மக்கள் வெறும் கருவிகள்தான். ஏழை தினக்கூலிகளுக்குப் பணம் கொடுத்துப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதிகார வர்க்கத்தின் ஆதரவு இல்லாமல் சாமானிய மக்கள் இந்தக் காரியத்தைச் செய்திருக்க முடியாது.

பின்னர்  நீதிமன்றத்தில் நாங்கள் சாட்சியம் அளித்தபோது அங்கே வினோதமான கேள்விகள் கேட்கப்பட்டன. உதாரணமாக,  “கொலைகாரர்கள் அந்தச் சமயத்தில் என்ன உடை அணிந்திருந்தனர்?” என்று கேட்டனர். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு  “சட்டை, பேண்ட்டின் நிறம் என்ன? அப்போது நேரம் என்ன? அதிலும் சரியான நேரம் என்ன?” என்பது போன்ற அபத்தமான கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களுக்குச் சரியான நேரம் தெரியவேண்டுமாம். அந்தச் சமயம் கைகளில் கடிகாரம் இல்லையென்று பதில் சொன்னோம். எங்கள் கவனம் எங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதில்தான் இருந்ததே தவிர அவர்கள் அணிந்திருந்த ஆடையில் அல்ல.

நான் கர்ப்பமாக இருந்தது அப்போது எனக்குத் தெரியாது. கர்ப்பமுற்று ஒரு மாதம்தான் ஆகியிருக்கவேண்டும். ஒரு நாள் நான் மயங்கி விழுந்தேன். முகாம் டாக்டர்கள் வந்து பரிசோதித்துப் பார்த்தனர். நான் கர்ப்பமாக இருப்பதைத் தெரிவித்தனர். பலரும் என் அப்பா அம்மாவிடம் கருவைக் கலைத்து விடும்படியும் ஒரு மாத கர்ப்பம்தான் என்பதால் அது சுலபம் என்றும் கூறினர். அப்பா அம்மா இருவருமே பழைய கண்ணோட்டம் உடையவர்கள்.  “நாங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. அவள் கணவன் ஏற்கனவே இறந்து விட்டான். அவளுக்கும் ஏதாவது ஆகிவிட்டால் நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவோம்” என்று கூறி மறுத்துவிட்டனர்.

நான் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்புவரை படித்திருந்தேன். மேற்கொண்டு படிக்க விரும்பினேன். ஆனால் யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. ஆகவே மேற்கொண்டு என்னால் படிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் இந்தச் சகோதரிகள் நடத்திய மையத்தில் எனக்கு ஒரு வேலை கிடைத்தது.

நான் அந்த மையத்தில் பணியாற்றியபின் ஒரு அரசாங்க வேலைக்குப் போனேன். மக்களிடையே வேலை செய்யும் வாய்ப்பை அந்த வேலை தரும் என்று நினைத்தேன். மேற்கொண்டு படிக்க விரும்பினேன். (ஜெயாவை நோக்கி) உங்களை போன்ற சிலர் என்னை ஊக்கப்படுத்தினர். நான் புத்திசாலியாக இருந்ததாலோ என்னவோ நீங்களும் என்னை மேலே படிக்குமாறு சொன்னீர்கள். வீட்டிலிருந்தபடியே படித்து நான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். பின்னர் பன்னிரண்டாம் வகுப்பும் தேறினேன். தட்டச்சுப் பயிற்சியும் பெற்றேன். மேற்கொண்டு படிக்க விரும்பினேன். ஆனால் எனக்கு உதவி செய்து கொண்டிருந்தவர் திடீரென்று காலமாகிவிட்டார். அவர் ஒரு இந்தி ஆசிரியர். அவரது பெயரும் எனது பெயரும் ஒன்றேதான்  – ஹர்பன்ஸ் சிங். படிப்பறிவற்ற பதினைந்து இருபது பெண்கள் அவரது உதவியினால் கல்வி பெற்றோம். அவரது மரணத்திற்குப் பிறகு இளங்கலைப் படிப்பிற்கான விண்ணப்பப் படிவத்தை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. நான் அதை எடுத்துக்கொண்டு பல இடங்களுக்கும் அலைந்தேன். கார் விபத்தில் தன் மனைவியுடன் இறந்துபோன அந்த இந்தி ஆசிரியர் பணிபுரிந்த சேவா ஸன்ஸ்தான் அமைப்புக்கும் சென்றேன்.

அவர்களிடம் சென்று,  “நான் மேலே படிக்க விரும்புகிறேன். இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய உதவுங்கள்” என்றேன். அவர்கள் மனப்பான்மையே வேறாக இருந்தது.  “ மேலே படித்து என்ன செய்யப் போகிறாய்? மேற்கொண்டு படிக்கும் எண்ணத்தை விட்டுவிடு. உன் வாழ்க்கையைப் பற்றி யோசி” என்றனர். அதற்கு நான்,  “என்னுடைய வாழ்க்கையைப் பற்றி யோசிக்க இப்போது என்ன இருக்கிறது? நடக்க வேண்டியதெல்லாம் நடந்து விட்டது; முடிந்துவிட்டது” என்றேன். அவர்களது பேச்சு எனது படிக்கும் ஆர்வத்தை அடித்துவிட்டது அப்போது. ஆனால் இப்போதுகூட யாராவது உதவி செய்தால் படிப்பதற்குத் தயாராக இருக்கிறேன். அந்த ஆசை இப்போதும் என் மனத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இதெல்லாம் நடந்து முடிந்த சில நாட்களிலேயே என் மாமனாரும் மற்றவர்களும் என் கணவரின் தம்பிக்கு என்னை மறுமணம் செய்து வைக்க முயற்சி செய்தனர். என் மகள் அப்போது பிறந்திருக்கவில்லை. அவர்கள் தீவிரமாக வற்புறுத்தியபோதும் எனக்கு விருப்பமில்லை என்று கூறி மறுத்து விட்டேன். அந்தத் துயரச் சம்பவம் நடந்து ஆறு மாதங்கள்தாம் ஆகியிருந்தன. ஆனாலும் அவர்கள் என்னைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்தனர். என் அப்பாவும்  “அவளை அனுப்புவதாயிருந்தால் அந்தக் குடும்பத்திற்குத்தான் அனுப்ப வேண்டும்” என்று சொன்னார்.

திருமணமாகி ஐந்து மாதங்களிலேயே என் மாமியார் என்னை மோசமாக நடத்தியிருந்தாள். அப்படிப்பட்டவர் வீட்டில் மீண்டும் போய் வாழ முடியும் என்று தோன்றவில்லை. என் கணவர் மிகவும் நல்லவர். அதனால்தான் நான் அங்கிருக்க முடிந்தது. அவர் இருந்திருந்தால் ஒருவேளை நான் அங்கு வாழ்ந்திருக்கக்கூடும். ஆனால் இப்போதோ என் மாமியாரின் சுபாவம் எனக்குத் தெரிந்துவிட்டது. இரண்டாவது முறை நான் அங்கு வாழ்க்கைப்பட்டால் அவள் என்னை என்ன செய்வாள் என்று எனக்குத் தெரியாது. அதனால் எனக்கு அங்கு செல்ல விருப்பம் இருக்கவில்லை. மேலும் என் கணவரின் தம்பிக்கு பன்னிரண்டு பதினான்கு வயதுதான் இருக்கும். மன நிலை சரியில்லாதவன் வேறு.

நான் ஆறு ஏழு மாத கர்ப்பமாக இருந்தபோது என் கணவர் வீட்டார் ஒரு நாள் வந்திருந்தார்கள். எங்களை அதிகாரம் பண்ண முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. எனக்குக் குடியிருக்க ஒரு வீடும் இருபதாயிரம் ரூபாய் பணமும் அப்போது கிடைத்திருந்தன. என்னிடமிருந்த பணத்தையோ இடத்தையோ எப்படியாவது பிடுங்கிக் கொள்ளவேண்டும் என்பதில் குறியாயிருந்தார்கள் அவர்கள். வழக்கமாக அப்பாவும் அம்மாவும் இருப்பார்கள். அன்றைய தினம் அவர்களது வீடு தொடர்பான வேலையாக அவசரமாக வெளியே சென்றிருந்தார்கள். வீட்டில் என் சகோதரியும் அண்ணியும் இருந்தனர். தடதடவென்று உள்ளே நுழைந்த என் கணவன் வீட்டார் என்னை அடிக்கத் தொடங்கினர். நான் கதவருகே தைத்துக் கொண்டிருந்தேன். என்னையும் தையல் இயந்திரத்தையும் தள்ளி விட்டு, சாமான்களை அள்ளி எறிந்தனர். பின்னர்,  “இங்கிருந்து வெளியே போ . . . இனி நாங்கள் இங்கிருக்க போகிறோம்” என்றனர். அதற்கு,  “நான் ஏன் வெளியே போக வேண்டும்? எப்படி நீங்கள் இங்கிருக்க முடியும்? இந்த வீடு எனக்குக் கொடுக்கப்பட்டது” என்றேன். என்னை அடித்தனர். நான் மயங்கி கீழே விழுந்த பிறகும் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தனர். நான் கர்ப்பிணியாக இருந்ததால் இதைப் பார்த்துக் கொண்டிருந்த அக்கம்பக்கத்தினர், இவளுக்கோ இவள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கோ ஏதாவது ஆகி விட்டால் காவல்துறை நம்மைத்தானே என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேள்வி கேட்கும் என்று நினைத்தனர்.

பின்னர் என் கணவன் வீட்டார் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் என் புகுந்தவீட்டாரிடம் என்னோடு அவர்கள் ஏன் சேர்ந்திருக்க விரும்புகிறார்கள் என்று கேட்டார்கள் அவர்கள்,  “எங்கள் மகன் போய்விட்டான். இவள் மீண்டும் கலியாணம் செய்து கொண்டால் எங்களுக்கு வீடோ பணமோ கிடைக்காது. எங்கள் இளைய மகனை அவள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்” என்றனர். அதற்குக் காவல்துறையினர்,  “அவளுக்குப் பிடிக்காவிட்டால் அவளை நீங்கள் வற்புறுத்த முடியாது. அவள் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளட்டும். இது அவளுடைய வாழ்க்கை. அதில் குறுக்கிட  நீங்கள் யார்?” என்றனர். என் கணவன் வீட்டார் என்னைப் படுத்தியிருக்கும் பாட்டைக் கண்ட காவல்துறையினர் அவர்களை நோக்கி,  “ நீங்களாக இவள் வீட்டைவிட்டு வெளியே போகிறீர்களா இல்லை, உங்களை லாக்கப்பில் போடட்டுமா?” என்று கேட்டனர். இந்த மிரட்டலுக்குப் பலன் இருந்தது. அவர்கள் அங்கிருந்து போய்விட்டனர்.

பின்னர் மூன்று நான்கு வருடங்கள் திருமணத்தில் எனக்கு எந்த நாட்டமுமில்லை. அதன் பின்னர் சுற்றியுள்ளவர்களைப் பற்றி எனக்கு நல்லவிதமாகப் பட்டதும், பார்க்கலாம் என்று எண்ணினேன். நான் வேலை பார்த்த இடத்திலிருந்த உங்களைப் போன்றவர்கள்,  “உனக்குச் சின்ன வயதுதான்; திருமணம் செய்து கொள்” என்றனர். சிலர் என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததுடன் வீட்டிற்கு வந்து பேசட்டுமா என்றும் கேட்டனர்.  “ நீங்கள் வரத் தேவையில்லை, நானே பேசுகிறேன்” என்றேன். நான் இதைப் பற்றி வீட்டில் பேசியபோது,            “திருமணம் செய்தால் நம் சாதியில்தான் செய்ய வேண்டும். வேறு சாதியில் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றனர். அதனால் நான் அமைதியாயிருந்தேன். குடும்பத்தினரும் சில சம்பந்தங்களைக் கொண்டு வந்தனர். சிலர்  “மகளை நாங்கள் பார்த்துக் கொள்ள முடியாது” என்றனர். வேறு சிலர்  “பணத்தையோ வீட்டையோ எங்கள் பெயருக்கு மாற்றித் தந்தால்தான் திருமணம் செய்து கொள்வோம்” என்று கூறினர். எனக்கு என்ன செய்வது என்று திகைப்பாக இருந்தது. என் மகளையோ வீட்டையோ என்னால் விட்டுத்தர முடியாது. எனவே,  “எனக்குத் திருமணம் செய்துகொள்ள விருப்பம்தான். ஆனால் பணமோ வீடோ தர முடியாது. என் மகளையும் நான் விடமாட்டேன். இந்த வீடும் பணமும் என் மகளுக்குச் சொந்தமானது. இதற்குச் சம்மதித்தால் சரி, இல்லாவிட்டால் வேண்டாம்” என்று கூறிவிட்டேன்.

இப்படியாகத் தொடர்ந்தது. இப்போது எனக்கு எந்த ஆசையும் இல்லை. ஆசையெல்லாம் செத்துவிட்டது. இப்போது என் மகள் வளர்ந்து விட்டாள். என்னளவிற்கு உயரமாக இருக்கிறாள்.

எங்களுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு ஒரு பையன், இரண்டு பெண்கள். அவள் தன் கொழுந்தனை மறுமணம் செய்து கொண்டாள். அவன் மூலம் ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் பிறந்தன. அதில் ஒரு குழந்தை ஊனம். இப்போது அந்த ஆள் தனக்குப் பிறக்காத குழந்தைகளைப் போட்டு அடிக்கிறான். அவனுக்கு அவள் பணத்தின் மீதுதான் கண்.

இன்னொரு பெண்ணுக்கு ஐந்து பெண்கள். அவள் இன்னொருவனை விரும்பித் திருமணம் செய்துகொண்டாள். அவன் அவளுடைய மூத்த மகளை பலாத்காரம் செய்ய முயன்றான். இதையெல்லாம் பார்த்தபின் என் ஆசைகள் முற்றிலுமாக மடிந்துவிட்டன. இத்தகைய ஆண்களுடன் எப்படி வாழ முடியும்? அவன் எனது மகளைத் தனது மகளாக நினைக்கப் போவதில்லை. எனவே நான் இப்படியே வாழ முடிவு செய்துவிட்டேன்.


கல்பனா ஷா

கல்பனா ஷா
©
Sound & Picture Archives for Research on Women

என் பெற்றோர் பரோடாவில் வசித்து வந்தனர். நானும் என் சகோதரனும் அவர்களுடன் இருந்தோம். வீட்டில் ஒரே பெண். என் அப்பா ஒரு முற்போக்காளர். காந்தியவாதியும்கூட. அவர் தன் ஆளுமையை வலியுறுத்துபவராக இருந்தாலும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார் என்றுதான் சொல்லவேண்டும். நான் மிகுந்த கட்டுப்பாடுடனும் திட்டமிட்ட வகையிலும் இருக்க வேண்டுமென்று விரும்பினார். பொது விஷயங்களையும் நல்ல விஷயங்களையும் அறிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.  ‘நல்ல விஷயங்கள்’ என்றால் அவருக்கு நல்லதாகப்பட்டவை. எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு விளையாட்டு மைதானம் இருந்தது. அதில் சிலர் காங்கிரஸ் சேவாதளத்தின் கேந்திர பிரவர்த்தியை நடத்திக் கொண்டிருந்தனர். இளம் மாணவர்கள் பங்கேற்கும் களமாக அது அமைந்தது. சேவாதளத்தினர் சின்னக்குழந்தைகளை ஒன்று சேர்த்து அவர்களை விளையாட்டுகளில் ஈடுபடவும், போட்டிகள் மூலமாகவும், பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக்காட்டுவதன் மூலமாகவும் பல விஷயங்களைப் பற்றிய அறிவைப் பெறவும் வழிவகை செய்தனர். வேறு குழுக்களுடன் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தனர். பரோடாவிற்கு வெளியேகூடச் சென்று போட்டிகளில் பங்கு கொள்ள ஊக்குவித்தனர். நான் அவர்களின் செயல்பாடுகளில் பங்கேற்றதுடன் அதன் தாக்கத்திற்கும் ஆட்பட்டேன். வீணாகச் சுற்றித் திரியாமல் சரியான பாதையில் நான் செல்வதாக எனது பெற்றோர்கள் சந்தோஷப்பட்டனர்.

என் படிப்பிலும் இந்தத் தாக்கம் வெளிப்பட்டது. அதனால் வகுப்பில் முதலாவதாகவோ இரண்டாவதாக ஐந்தாவதாகவோ வந்தேன் என்று பொருளல்ல. கேந்திர பிரவர்த்தி மூலம் நான் சில துறைகளில் பெற்ற அறிவினால் இரண்டாம் வகுப்பு பெறும் மாணவியாக இருந்தேன் எனலாம். அவ்வாறு தாக்கம் ஏற்படுத்தியவர்களில் நான் இன்றும் குறிப்பிடக்கூடியவர் தாகூர் வைஷக். அவர் ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமானது. அவர் என்னிடம் மிகுந்த அக்கறை காட்டினார். நான் விளையாட்டில் சிறந்து விளங்கினேன். கிராமிய நடனத்திலும் எனக்கு நல்ல திறமை இருந்ததால் அவர் என்னைத் தொடர்ந்து நடனமாட ஊக்கப்படுத்தினார். என்னை ஊக்கப்படுத்தியதோடு நிற்காமல் கோ-கோ விளையாட்டில் சிறந்த பயிற்சி அளிக்கக்கூடிய இடத்திற்கு என்னை அழைத்துச் செல்வதற்கு மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டார். கோ-கோ, ஹுத்துத்தூ, Dodge Ball  போன்ற விளையாட்டுகளில் அகில இந்திய அளவில் சாம்பியனாகத் திகழ்ந்தேன். அந்தப் பெருமையெல்லாம் தாகூர் வைஷக்கைத்தான் சாரும். அவர்தான் வெளியுலகிற்கு என்னைப் பரிச்சயப்படுத்தினார். கேந்திர பிரவர்த்தியின் மைதானம் எங்கேயிருந்தது என்பதை இங்கு சொல்வது அவசியம். அந்த இடம் தாழ்த்தப்பட்டவர்களும், முஸ்லிம்களும், சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்களும் வசித்த இடத்திற்கு மிக அருகாமையில் இருந்தது. அந்தக் குழந்தைகளும் அங்கு வந்து எங்களுடன் எவ்வித சாதி மதத் தடையுமின்றிப் பழகினர். நான் இந்தச் சூழலில் வளர்ந்தேன். எங்களில் யாராவது யாரையாவது,  “இவர் ஒரு முஸ்லிம், இவர் ஒரு கிறிஸ்தவர், இவர் ஒரு கீழ்சாதிக்காரர்” என்று சொன்னால் உடனே தாகூர் வைஷக்கோ, நவீன் வைஷக்கோ, நர்ஹரி வைஷக்கோ எங்களை அடக்குவார்கள்.  “ நீங்கள் இந்த மாதிரி பேசக்கூடாது. அவர்களும் உங்களைப் போன்றவர்கள்தாம்” என்பார்கள். இந்தச் சூழலில் வளர்ந்த நான் அவர்களோடு ஒன்றாக விளையாடி, விளையாட்டின் வெற்றி தோல்விகளையும் சகல இன்ப துன்பங்களையும் பகிர்ந்திருக்கிறேன். சேவாதள் கோடை விடுமுறையில் பதினைந்து நாள், இருபத்தியொரு நாள் மற்றும் ஒரு மாத முகாம்களை நடத்தும்போது எல்லோரும் ஒன்று கூடுவோம். எங்களிடம் எந்த வேற்றுமையும் இருந்ததில்லை.

நாள் வளர்ந்த பிறகு என் சக மாணவரையே திருமணம் செய்து கொண்டேன். அவரும் நுட்பமான சமூகப் பிரஞ்ஞை கொண்டவராக இருந்தார். அதுமட்டுமின்றி 1968இல் குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களைப் பற்றி ஆய்வு செய்திருந்தார். அப்போது நாங்கள் சூரத்தில் இல்லை; டில்லியில் இருந்தோம். அந்தக் கலவரம் எங்கள் இருவரின் கண்களையும் திறந்தது. இந்துக்களின் சாந்தம், அமைதி, அகிம்சை பற்றிய எங்கள் அனைத்து நம்பிக்கைகளும் சிதறின. என் கணவர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மக்களைப் பேட்டி கண்டார். அதன்மூலம் இந்துக்களை அவ்வளவு சுலபமாய் நினைத்துவிட முடியாது என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது. நாம் நமது கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். நாங்கள் இருவரும் சமூகவியலாளர்களாக இருந்தோம். சேவாதள் பிரவர்த்தி மூலம் பல இடங்களுக்கு நான் சென்றிருந்தாலும், பிறகு எங்கள் ஆய்வுக்காகவும் பல கிராமங்களுக்கு, தேர்தல் சமயத்தில் நாங்கள் போயிருந்தோம். தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகப் பணிபுரிகிறேன். அதுதவிர மகளிர் பற்றிய ஆய்வுகளிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. அது சம்பந்தமாக கிராமப்புறங்களுக்குத் தொடர்ந்து போகிறேன். அது மக்களைப் பற்றி உணர்வுள்ளவளாக என்னை மாற்றியிருக்கிறது.

1992 டிசம்பர் 6ஆம் தேதி சூரத்தில் பதட்ட நிலை இருந்தது. ஏழாம்தேதி அந்தப் பதட்டம் மேலும் அதிகரித்தது. அன்று மாலை சில இடங்களில் கலவரங்கள் நடந்ததாகக் கேள்விப்பட்டோம். எட்டாம் தேதி காலை சூரத் பற்றியெரிந்தது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நானும் எனது மகள் நேஹா ஷாவும், எனது தோழி ஸ்மிதா ஷாவும் எங்கும் செல்ல முடியாமல் உட்கார்ந்திருந்தோம். என் மகள் என்னுடன் இணை பதிப்பாளராக இருக்கிறாள்.

டிசம்பர் 11ஆம் தேதி ஊரடங்கு இரண்டு மணி நேரத்திற்குத் தளர்த்தப்பட்டது. சூரத்திலிருந்த பிற மாநில மக்களில் பெரும்பாலானோர் வெளியேறிக் கொண்டிருப்பதாகச் செய்தித்தாள்கள் கூறின. அது உண்மைதானா எனத் தெரிந்து கொள்ளும் ஆவலில் நாங்கள் மூவரும் ரயில் நிலையத்திற்குச் சென்று பார்த்தோம். அங்கு பீஹார், ஒரிஸ்ஸா, ஆந்திரா மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சூரத்திலிருந்து வெளியேறுவதற்காக ரயிலை எதிர்பார்த்து பிளாட்பாரத்தில் காத்துக் கிடந்தனர். எங்கும் குழப்பம் நிலவியது. மக்கள் நடைபாதைகளில் உட்கார்ந்திருப்பதைக் கண்டோம். கடைகளெல்லாம் மூடப்பட்டிருந்தன. பிஸ்கட், ரொட்டி, பருப்புக்கறி எதுவும் கிடைக்கவில்லை. கடைக்காரர்கள் நகரத்தில் நிலவிய குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை லாபம் அடிப்பதற்காகப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தனர். டிசம்பர் 8ஆம் தேதிக்கும் 11ஆம் தேதிக்கும் இடையில் கொலைகள்  – மிகக் கொடூரமான கொலைகள் – நிகழத் தொடங்கின. மாவட்ட ஆட்சித்தலைவர் எதிலும் பட்டுக்கொள்ள விரும்பவில்லை. நடைபாதைகளில் பட்டினியோடு இருந்தவர்களுக்கு கிச்சடியாவது விநியோகிக்கலாம் என்று முடிவு செய்தோம். கடைகள் எதுவும் திறக்கப்படாததால் மக்கள் பட்டினி கிடந்தனர். குளிர் நிறைந்த அந்த டிசம்பர் மாதத்தில் நாங்கள் எங்கள் சொந்த முயற்சியில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியதும், பல மத்தியவர்க்கப் பெண்கள் கிச்சடி அளிக்கத் துவங்கினர். மக்கள் சாப்பிட முடியாத அளவிற்கு ஏராளமான கிச்சடி எங்களிடம் இருந்தது. பெண்கள் முன்முயற்சி எடுத்துச் செய்த இந்தப் பணியைக் காவல்துறையினர் தடுக்கவில்லை. நாங்கள் மனிதாபிமான நடவடிக்கைகள் தவிர வேறெதிலும் ஈடுபடவில்லை என்பதால் எங்களுக்கு அனுமதி கிடைத்தது. சூரத்தில் மேலும் பல கொடூரமான கொலைகள் நடந்திருப்பதைப் பின்னர் அறிந்துகொண்டோம். டிசம்பர் 11ஆம் தேதி முதல் வேறு பல நிவாரண முகாம்கள் தொடங்கியிருந்தன. எனவே நாங்கள் உணவு வழங்கும் எங்கள் பணியை நிறுத்திவிட்டு வேறு இடத்திற்குச் சென்றோம். மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளாயிருந்த விஜயநகரப் பகுதியிலுள்ள சில இடங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் நான்கு மணிநேரத்தில் சென்று வரலாம் என்று திட்டமிட்டிருந்தோம். அங்கு ஓரிடத்தில் முஸ்லிம்கள் வாழும் குடியிருப்பொன்று இந்துக்களின் குடியிருப்புக்கு அடுத்தாற்போல இருந்தது. அந்த முஸ்லிம் குடியிருப்பு முழுமையாக எரிக்கப்பட்டது. மரணமோ கொலையோ நிகழாத வீடு அங்கு ஒன்றுகூட இல்லை.

விஜயநகரிலும் மிகக் கொடுரமான கொலைகள் நடந்திருந்தன. டிசம்பர் 13ஆம் தேதி நாங்கள் அங்கு சென்ற போது வீடுகளிலிருந்து இன்னும் புகை வந்து கொண்டிருந்தது. பிணங்கள் அகற்றப்பட்டிருந்த போதும் கருகிய உடல்களின் தடயங்கள் அங்கு காணப்பட்டன. இது போன்றதொரு காட்சியை நான் அப்போதுதான் முதன்முதலாகக் கண்டேன். பிரிவினையின் போதும் கலவரங்களின் போதும் நிகழ்ந்த இத்தகைய சம்பவங்களைப் பற்றிப் படித்திருக்கிறேனே தவிர அதுவரை நேரில் கண்டதில்லை. நாங்கள் இந்த வேலையை ஏதோ ஒரு ஆர்வத்தில்தான் தொடங்கினோம். ஆனால் நாங்கள் மேலும் ஆழ்ந்து ஈடுபட ஈடுபடத்தான் சமூகம் குறித்தும், சூரத் குறித்தும், கூடிவரும் மக்கள் குறித்தும் நாங்கள் அதுவரை அறிந்திராத பலவிஷயங்கள் எங்களுக்குத் தெரிந்தன. ஆனால் போகப்போக சமூகத்தைப் பற்றி, சூரத்தைப் பற்றி, மக்கள் சேர்ந்து வாழ்வதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதையும் தெரிந்து கொண்டோம். பாதிக்கப்பட்ட மக்களைப் பேட்டி கண்டோம். பெரும்பாலான பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சூரத்திலுள்ள ராணி தலாவ் நிவாராண முகாமில் இருப்பதாக அறிந்து அங்கு விரைந்தோம்.

அப்போது கலவரம் நடந்து இரண்டு மூன்று நாட்களாகியிருந்தன. 10, 11 தேதிகளில் சூரத் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நாட்களில் பாலியல் வன்முறைக்கு ஆளான மூன்று பெண்களைச் சந்தித்தோம். அந்த முகாமில் இளம் வயதினரும் முதியவர்களும் தங்கியிருந்தனர். வயதான பெண்கள் நடுங்கிக் கொண்டிருந்தனர். தங்கள் குடும்பத்தினர் எங்கு போனார்கள், என்ன ஆனார்கள் என்று எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. பாலியல் வன்முறைக்கு ஆளான யாஸ்மின் என்ற பெண்ணை முதலில் நான் சந்தித்துப் பேசினேன். ரத்தக்கறை படிந்த ஆடைகளை அவள் எங்களிடம் காண்பித்தாள். அவள் கூறுவது உண்மைதான் என்று உறுதிப்பட்டது. அவள் தான் பலாத்காரம் செய்யப்பட்ட முழு சம்பவத்தையும் என்னிடம் கூறினாள். தன்னை பலாத்காரம் செய்த எட்டு நபர்களின் பெயர்களும் தனக்குத் தெரியும் என்று கூறிய அவள் என்னிடம் அந்தப் பெயர்களையும் சொன்னாள். தன் எதிரிலேயே அவளது அம்மா பலாத்காரம் செய்யப்பட்டதுடன் அவளது அப்பா, ஒரு சகோதரி, ஒரு சகோதரன் ஆகியோர் கொல்லப்பட்டதையும் பார்த்திருந்தாள். அவளும் அவளுடைய இளைய சகோதரியும் சகோதரனும் எப்படியோ தப்பிப் பிழைத்து தனித் தனியே அந்த நிவாரண முகாமிற்கு வந்து சேர்ந்திருந்தனர். இதுதான் அவளுடைய கதை. இந்தக் கதை வெளியிடப்பட்டாலும் தான் அதற்குச் சாட்சி சொல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாள். இது அந்த நேரத்திலும் அவளுக்கிருந்த மனதிடத்தைக் காட்டுவதாக இருந்தது.  “நான் அவர்களைப் பார்த்திருக்கிறேன். அடையாளம் காட்டத் தயாராயிருக்கிறேன்” என்று கூறினாள் அவள். அந்த நிவாரண முகாமின் அமைப்பாளர் சூரத்தில் செல்வாக்குமிக்க, பெயர் பெற்ற ஒரு முஸ்லிம் செல்வந்தர். அவர் பெயர் ஹமீத் பாய். அவர் என்னிடம் கொல்லப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் நூற்றி ஐம்பது புகைப்படங்களைக் காட்டினார்.

கலவரம் டிசம்பரில் நடந்தது. யாஸ்மினுக்கு ஜனவரியில் திருமணம் நடக்கவிருந்தது. அவள் என்னிடம்,  “எனக்குத் திருமணம் நடக்கவிருந்தது. அதற்கான வரதட்சணை, தங்க நகைகள் எல்லாம் தயாராக இருந்தன. எனக்கும் என் சகோதரனுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்து விட்டார்கள். சகலத்தையும் எரித்து விட்டார்கள். என்னுடைய அம்மா இருந்தாள். அவளை பலாத்காரம் செய்யுமுன் அவளது ஆடைகளை அவளையே கழற்ற வைத்து சில அடிகள் நடக்கச் சொன்னார்கள். அதன்பின் பலாத்காரம் செய்தார்கள். அதன் பிறகு அவள் கை கால்களை வெட்டினார்கள். பின்னர் அவள் எரிக்கப்பட்டாள்” என்று தெரிவித்தாள். நான் அவள் அம்மாவின் புகைப்படத்தை அடையாளத்திற்காக எடுக்கப்பட்ட இதர புகைப்படங்களுடன் பின்னர் பார்த்தேன். டிசம்பர் 8 முதல் 15 வரை நடந்த விஷயங்கள் இவை. டிசம்பர் 13ஆம் தேதி நான் நிவாரண முகாமில் இருந்தேன். மற்றவர்களிடமும் விசாரிக்கத் துவங்கினேன். அடையாளப் புகைப்படங்களிலிருந்து அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் போன்ற சில விஷயங்கள் தெரிய வந்தன.

சூரத்திற்குத் தெற்கில் பாண்டேஸரா என்ற தொழிற்சாலைப் பகுதி இருந்தது. விஜயநகர் சூரத்திற்கு வடக்கில் இருக்கிறது. மேற்படி சம்பவங்கள் பாண்டேஸராவிலும் நிகழ்ந்திருந்ததால் நாங்கள் அங்கு விரைந்து சென்றோம். சூரத்தில் செல்வந்தர்கள் வசித்த பகுதியில்தான் நானும் வாழ்ந்து வந்தேன். அந்தப் பகுதியில் எனக்குத் தெரிந்தவரையில் ஓரே ஓரு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மட்டுமே வசித்து வந்தார். மற்றபடி பெரும்பாலும் அங்கு இந்துக்களே இருந்தோம். 12ஆம் தேதி இரவு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அது திடீரென்று நிகழ்ந்தது. யாரோ ஒருவர் என்னிடம் தொலைபேசியில், சிலர் மாருதி காரில் அங்கு வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களிடம் துப்பாக்கிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். எங்கள் பகுதியில் ஒரு அம்மன் கோயில் இருந்தது. செய்தி தெரிவித்தவர் அந்த அம்மன் கோயில் தாக்கப்படப்போகிறது என்றார். லட்சக்கணக்கான இந்துக்கள் வாழும் பகுதியில் எத்தனை பேர் ஒரு மாருதி காரில் வந்துவிட முடியும்? அதிகபட்சமாக எட்டு அல்லது பத்து பேர் வர முடியுமா? எத்தனை துப்பாக்கிகளை அவர்கள் வைத்திருப்பார்கள்? அவர்கள் என்ன துணிச்சலுடன் வருவார்கள்? கண்டிப்பாக இது ஒரு வதந்தியாகத்தான் இருக்கவேண்டும். நிச்சயம் வதந்திதான். ஆனால் இவற்றைப் பற்றியெல்லாம் யாரும் யோசிக்கத் தயாராக இல்லை. மக்கள் மூங்கில் கழிகள், இரும்புக் கம்பிகள் என்று கையில் கிடைத்தவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு குழும ஆரம்பித்தார்கள். அவர்கள் இரவு இரண்டு மணிக்கு வந்தார்கள். பாண்டேஸராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்துகொண்டோம். பாண்டேஸரா சமீபத்தில் வளர்ச்சியடைந்த ஒரு பகுதி. விஜயநகரும் சமீபத்தில் உருவான பகுதிதான். சூரத்தில் குடியேறிருந்தவர்கள் இந்தப் பகுதியில் தங்கியிருந்தார்கள். எனவே இந்தப் பகுதி பூர்வீக சூரத்வாசிகளைக் கொண்டதல்ல. இவர்கள் குஜராத் மற்றும் அதற்கு வெளியே உள்ள பிரதேசங்களைச் சார்ந்தவர்கள். எனவே தொழில்பகுதியான பாண்டேஸரா சாதி, மத, இன ரீதியாக பல்வேறு வகைப்பட்டத் தொழிலாளிகள் கலந்து வாழும் பிரதேசமாக இருந்தது.

அங்கு குஜராத்தி பேசும் மக்களை விடப் பிற மொழி பேசுவோர் அதிகமாக வசித்து வந்தனர். விஜயநகர் அளவிற்கு பாண்டேஸராவில் குஜராத்தி பேசுபவர்கள் இல்லை. விஜயநகரில் சௌராஷ்டிரர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். சௌராஷ்டிரா குஜராத்தின் ஒரு பகுதியாதலால் குஜராத்திகள் விஜயநகரில் பெருமளவில் இருந்தனர். பாண்டேஸராவில் வெளியே இருந்து வந்தவர்கள் குறிப்பாக, இந்தி பேசுவோர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகம். இவ்வாறு மொத்தம் அங்கு இருநூற்று முப்பத்தேழு வீடுகள் இருந்தன. 13ஆம் தேதி காலை நான் அங்கு சென்றபோது நகரின் மத்தியில் ஒரு கோயில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. கோயில் கட்டுமானப் பணிகளுக்காக தண்ணீர் ஒரு பைப் வழியாக ரஷீத்பாய் வீட்டுக் குழாயிலிருந்து வந்துகொண்டிருக்கும் காட்சியைக் கண்டேன்.

மக்களிடம் உரையாடத் தொடங்கினேன். ஒருவரும் பேசத் தயாராக இல்லை. முஸ்லிம்களின் வீடுகள் ஒட்டு மொத்தமாக எரிக்கப்பட்டிருந்தன. குரானின் பிரதிகளும், வசதியான முஸ்லிம்களின் பாஸ்போர்ட்டுகளும் எரிந்து கிடந்ததை நாங்கள் சென்றபோது காண முடிந்தது. இவர்கள் சூரத்திற்கு அடுத்துள்ள கிராமத்திலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். முதலில் கலவரம் பற்றி இந்துக்களிடம் பேசினோம். ஆரம்பத்தில் அவர்கள் எதுவும் பேசத் தயாராக இல்லை. அடுத்தடுத்த சந்திப்புகளில் மெல்ல வாயைத் திறந்தனர். எனது முதல் கேள்வியாக நான் முதல் நாள் கண்ட ரஷீத்பாய் வீட்டிலிருந்து கோயிலுக்கு வரும் தண்ணீரைப் பற்றிக் கேட்டேன்  “அது ரஷீத்பாயின் வீட்டிலிருந்து வருவதன் அர்த்தம் என்ன?” என்றும் கேட்டேன்.

அவர்களோடுப் பேசிப் பார்த்த போது ரஷீத்பாய்தான் அந்தக் கோயிலைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. அவர் ஒரு காண்டிராக்டர். எனவே அவர் மணல், சிமெண்ட், செங்கல், இவற்றுடன் இருபத்தி நான்கு மணிநேரம் தண்ணீரும் கொடுத்து கொண்டிருந்தார். முஸ்லிம்களோடு அவர்களுக்குள்ள உறவு பற்றிக் கேட்டேன். ரஷீத்பாய் பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர் என்று தெரிவித்தனர். மேலும் அவ்வட்டாரச் சங்கச் செயலாளராக இருந்த ரசூல்பாய் பற்றியும் தங்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினர். அவர் அங்குள்ள அனைவருக்கும் குடும்ப அட்டைகள் வாங்கிக் கொடுத்திருந்தார். அவர்கள் மின்கட்டணத்தைச் செலுத்துவதிலும் உதவினார். அவர்களில் யாருக்காவது ஏதாவது பிரச்சினை என்றால் ரசூல்பாய் முன்னின்று உதவுவது வழக்கம். நான் அவர்களிடம்,  “ரசூல்பாய் நல்லவர் என்று சொல்கிறீர்கள். உங்கள் அக்கம்பக்கமுள்ள முஸ்லிம்களும் நல்லவர்கள்தான் என்று உங்களுக்குத் தெரிகிறது. அப்படி யிருக்கும்போது எப்படி முஸ்லிம்கள் மோசமானவர்கள் என்று கூறுகிறீர்கள்?” என்று கேட்டபோது,  “முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்” என்ற பதிலையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களுடனான அவர்களின் அனுபவமோ வேறுவிதமாக இருந்தது. இதிலிருந்து அவர்கள் சொந்த அனுபவத்திலிருந்து பேசவில்லை என்று தெரிகிறது. அரசியல்வாதிகளாலும் மத நூல்களாலும் அவர்கள் மனத்தில் சிறிதுசிறிதாக ஏற்றப்பட்ட எண்ணங்களின் அடிப்படையில் அவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் தங்களைச் சமூகத்தில் பொருத்திக் கொள்ளும் செயல்பாடு என்ன விதத்தில் அமைந்தது என்று எனக்குத் தெரிகிறது. ஆனால், பிற சமய நம்பிக்கைகளைப் பற்றிய அவர்களின் அபிப்பிராயத்தை உருவாக்குவதில் மேல் சொன்ன எண்ணங்கள் முக்கியப் பங்காற்றின. ஒருவர்கூட தங்கள் அக்கம் பக்கத்தவர்கள் மோசமானவர்கள் என்று கூறவில்லை.  “பிறகு ஏன் நீங்கள் யாரும் அவர்களைக் காப்பாற்றப் போகவில்லை?” என்று கேட்டால்,  “நாங்கள் எப்படிப் போக முடியும்? எந்த இந்துவாவது முஸ்லிம்களைக் காப்பாற்ற முயன்றால் முதலில் அந்த நபர் கொல்லப்படுவார் என்று கோவிலிலிருந்து மிரட்டல் அறிவிப்பு வந்து கொண்டிருந்தது” என்றனர். விஜயநகர் மக்களும் இதையே கூறுவதும் ஆச்சரியமான விஷயம். விஜயநகரில் சில இந்துக் குடும்பங்கள் முஸ்லிம்களைக் காப்பாற்றிய சம்பவங்களும் நடந்தன. விஜயநகர் குடியிருப்புகளின் அமைப்பு இதற்கு ஒரு காரணம். அங்கு சில வீடுகள் மத்தியதர வர்க்கத்திற்கேயுரிய வரிசை வீடுகளாக அமைந்திருந்தன. முஸ்லிம்களுடனான அவர்களது அனுபவம் நல்லவிதமாகவே இருந்துவந்தது. முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்குமிடையே ஒரு மோசமான சம்பவம்கூட நடந்திருக்கவில்லை. ஆனால் 1992இல்தான் இந்துக்கள் வேறுவிதமாகப் பேசத்தொடங்கினார்கள் என்று தோன்றியது. அவர்களிடம் கேட்டால்  “முஸ்லிம்கள் மோசமானவர்கள்”,  “பொது சிவில் சட்டம் வர வேண்டும்”,  “ஷா பானு என்ன செய்தாள்,” என்றெல்லாம் பதில்கள் வரும். நாங்கள் அவர்களிடம்  “ஷா பானுவுக்கு என்னதான் நடந்தது?” என்று கேட்டபோது,  “எங்களுக்குத் தெரியாது” என்ற பதில்தான் வந்தது. அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.  “பொது சிவில் சட்டத்தில் என்ன இடம் பெறவேண்டும்?” என்று கேட்டால்  “எங்களுக்குத் தெரியாது” என்பார்கள்.  “உங்களுக்கு என்னதான் அதைப் பற்றித் தெரியும்”  என்று கேட்டால்  “எல்லோரும் அதைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்” என்பார்கள். பொது சிவில் சட்டமும் ஷா பானு வழக்கும் அவர்கள் நுனிநாக்கில் புரண்டு கொண்டிருந்தன. எதைக் கேட்டாலும்,  “ஷா பானு என்ன செய்தாள்?” என்பார்கள் உடனே. ஷா பானு செய்தது எதுவும் அவர்களுக்கு எதிராக இல்லை. ஆனால் விவரம் அறியாது பேசினார்கள். இப்படி இருந்தது நிலைமை.

மிகக் கொடூரமான ஒரு சம்பவம் பி. பி. சி. மூலம் சர்வதேச கவனத்தையும் பெற்றது. ஆனால் பி. பி. சி. வெளியிட்ட செய்தியும்கூடத் தவறானதாகவே இருந்தது. அது ஆயிஷா பேகம் என்ற 14 வயதுப் பெண்ணைப் பற்றிய செய்தி. அவள் உதகாவிலிருந்து நந்தேர்பாருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தாள். கலவரம் நடந்து கொண்டிருந்ததால் அவளது குடும்பத்தினர் அசர்பூருக்குச் சென்றுவிடத் தீர்மானித்தனர். முதலில் ஆயிஷா, அவளது அண்ணன், அண்ணி, சின்னத்தம்பி ஆகியோரை சூரத்தை விட்டுப் பாதுகாப்பாக அனுப்பிவிட எண்ணினர் அவளது பெற்றோர். அன்றைக்கு 14ஆம் தேதி. 13ஆம் தேதியிலிருந்தே அங்கு கடுமையான ஊரடங்கு உத்திரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது. எனவே ஏதாவது பிரச்சினை வரலாம் என்று நினைத்தனர். ரயில் சூரத்திற்குள் நுழைந்ததும் சிலர் அதை நிறுத்தினார்கள். எல்லோரும் கூச்சலிட்டபடி இருந்தார்கள். அனைவரையும் ரயிலை விட்டு இறங்கும்படி ரயிலை நிறுத்தியவர்கள் கூறினர். இந்த நால்வரும் கீழே இறங்கவில்லை. இவர்களை முஸ்லிம்கள் என்று வந்தவர்கள் இனங்கண்டு கொண்டனர். ஆயிஷாவின் அண்ணி கையில் ஒரு கைக்குழந்தையும் இருந்தது. அவர்கள் அவளிடம்  ‘ நீங்கள் முஸ்லிம்களா இந்துக்களா’ என்று கேட்டனர். உடனே அவள், தான் இந்து என்று பதிலளித்தாள். அவர்கள் அதை நம்பவில்லை. முதலில் ஆயிஷாவின் சகோதரனை இழுத்துச் சென்று மோசமாகத் தாக்கினர். பிறகு அவர்கள் ஆயிஷாவின் பக்கம் திரும்பினர். நான் பின்னர் கடுமையான பொலீஸ் பாதுகாப்பில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஆயிஷாவைப் போய் பார்த்தேன். யாரும் அவளைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. நான் எனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவளைச் சந்தித்தேன். அவள் கூறியதை அப்படியே இங்கு சொல்கிறேன். இரும்புக் கம்பியால் அவள் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தாள். அவள் தனது உடலிலிருந்த காயங்களையும் வெந்து புண்ணாகியிருந்த முதுகையும் காட்டினாள். முதலில் நான்கு பேர் அவளை பலாத்காரம் செய்து விட்டு பின்னர் கடப்பாரையால் தாக்கியிருக்கின்றனர். அவர்கள் அதோடு விடவில்லை. தீ மூட்ட ஆரம்பித்தனர். அந்தத் தீ எரிந்த வண்ணமே இருந்தது. அந்தத் தீக்குள் எல்லோரையும் தூக்கிப்போட்டனர். இதுதான் அவர்கள் கொலை செய்யும் முறை.

பதினான்கே வயதான ஆயிஷா கலவரத்தின் மிக மோசமான ஒரு உதாரணம். மறுநாள் செய்தித்தாள்களில் ஒரு இந்துப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆயிஷாவை மருத்துவமனையில் சென்று அவளைச் சந்தித்து வந்ததால் நான் மட்டுமே வேறுவிதமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். சுமார் இருபது இருபத்தைந்து நாட்களுக்கு பின்னர் புகழ் பெற்ற காந்தியவாதிகளில் ஒருவரான உஷாபென் மேத்தா அவரது குழுவினருடன் வந்திருந்தார். நான் அவரை ஆயிஷாவைப் பார்க்க அழைத்துச் சென்றிருந்தேன். அங்கு ஆயிஷாவின் தந்தையும் இருந்தார். அவருக்குப் பணம்தான் குறியாக இருந்ததே தவிர ஆயிஷாவிற்கு நடந்ததைப் பற்றி எந்தக் கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை. நான் மருத்துவரிடம் பேசிய போது ஆயிஷா மிருகத்தனமான முறையில் கூட்டாகப் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். பின்னர் அவள் என்ன ஆனாள் என்று எனக்குத் தெரியாது.

சூரத்தின் மக்கள் தொகையில் நாற்பது சதவீதம் முஸ்லிம்கள். அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுபவர்கள். 6,7 தேதிகளில் அவர்கள் சற்றும் எதிர்பாராமல் மாட்டிக்கொண்டனர். ஆனால் உடனடியாகக் கலவரங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், கலவரக்காரர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், மக்களைச் சந்திக்கவும் தொடங்கினர். நிவாரண நிதி உடனடியாக வந்து சேரவில்லை. ராணி தலாவில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம் பற்றி நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நான் பார்த்தவற்றிலேயே அதுதான் மிகப் பெரிய நிவாரண முகாம். அது சூரத்தின் மையமான பகுதியில் அமைந்திருந்தது. அது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் வர்த்தகப் பகுதி. அது ஏழை முஸ்லிம்கள் வாழும் பகுதியல்ல. பாண்டேஸராவில் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களாக முஸ்லிம்கள் இருந்தபோதும் அவர்களுடைய சொத்துக்கள் இந்துக்களின் பொறுப்பில் இருந்தன. அதேபோல இந்து நிலச்சுவான்தாரர்களின் சொத்துக்கள் முஸ்லிம்களின் பொறுப்பில் இருந்தன. இது சூரத்தில் இருந்த நிலை.

1992இல் நடந்த கலவரம்தான் சூரத்தில் நடந்த முதல் கலவரம். அது திட்டமிட்டு குஜராத் முழுவதும் நடத்தப்பட்டது. முகாமில் இருந்தவர்கள் எங்களிடம்,  “இந்துக்களுக்குச் சொந்தமான இந்தச் சொத்துக்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினர். கலவரம் நடக்காத சூழலில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். ஆனால் இந்துக்கள் முஸ்லிம்களோடு சேர்ந்து இருந்தோம் என்றோ, இனி சேர்ந்து இருக்க விரும்புகிறோம் என்றோ வெளிப்படையாகப் பேச விரும்பவில்லை. மொஹல்லாக்களில் இரண்டு பிரிவினருமே இருந்தனர். ராணி தலாவ், விஜய நகர் மற்றும் ராந்தேட் கூட முஸ்லிம்களின் பகுதிதான். ஆனால் முஸ்லிம்களுக்கு இந்துக்களுக்கு என்று தனித்தனிக் குடியிருப்புகள் ஏதுவும் கிடையாது. இரு சமூகத்தினரின் வீடு, வியாபாரம் போன்ற சொத்துக்களும் அடுத்தடுத்து இருந்தன.

நான் எழுதிய கட்டுரையில் அவர்கள் முஸ்லிம்களின் வீடுகளை அருகில் இருந்த இந்துக்களின் வீட்டின் – அவற்றின் இரும்பு, மரம் உட்பட – எந்த பொருளுக்கும் –  சேதம் ஏற்படாமல் திறமையுடன் எரித்தார்கள் என்பதை விளக்கியிருக்கிறேன். கலவரத்திற்கு முன்பாக அவர்கள் ரேஷன் கார்டு பட்டியலைக் கையில் எடுத்துக் கொண்டனர். மூன்று மாதங்களாக இப்படி ஒவ்வொரு குடியிருப்புகளிலுமுள்ளவர்கள் பற்றிய பட்டியலைத் தயார் செய்தார்கள். இதனால்தான், இந்தக் கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்று என்று நான் குறிப்பிடவேண்டியிருக்கிறது. முஸ்லிம்கள் வீடு எது, இந்துக்கள் வீடு எது என்ற பட்டியல் அவர்களிடம் தயாராக இருந்தது. முஸ்லிம்களின் சொத்துக்களை அழிக்க இந்தப் பட்டியல் அவர்களுக்கு உதவியாக இருந்தது. இந்துக்கள் உடனே தங்கள் வீட்டுக் கதவில்  ‘ஸ்ரீராம்’ என்றோ  ‘இந்த வீடு இந்துக்களுக்குச் சொந்தமானது’ என்றோ எழுதி வைத்தனர். முஸ்லிம்களும் அவ்வாறே செய்தனர். எங்கெல்லாம்  ‘ஸ்ரீராம்’ என்று எழுதப்பட்டிருந்ததோ அந்த வீடுகள் தப்பின. அவை முஸ்லிம்களின் வீடாக இருந்தாலும் அவர்கள் அதைத் தாக்காமல் சென்றனர். இவ்விதத்தில்தான் நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் சூரத்தின் பொருளாதாரம் முக்கியமானது. அங்கு வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள் அதிகமாக இருந்தனர். முஸ்லிம்களும் குடியேறியவர்கள்தான். அவர்கள் உள்ளூர் முஸ்லிம்கள் –  சூரத் முஸ்லிம்கள் அல்ல. அவர்கள் சௌராஷ்டிரா, கட்சு, தெற்கு குஜராத் ஆகிய இடங்களிலிருந்தும் குஜராத்திற்கு வெளியே பீஹார், உத்திரப்பிரதேசம், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களிலிருந்தும் வந்து சூரத்தில் குடியேறியவர்கள். 1980களில் சூரத்தின் மக்கள் தொகை பெருமளவிற்கு அதிகரித்தது. முஸ்லிம்கள் பெருவாரியாக வந்து குடியேறியதால் இந்த மக்கள்தொகை அதிகரிப்பின் விகிதாச்சாரத்தைக் கூறுவது கடினம். சூரத்தின் பொருளாதாரம் நம்பிக்கையூட்டும் விதத்தில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த காலகட்டம் அது. வைரத் தொழிலும், ஜவுளித் தொழிலும் இன்னும் இதர தொழில்களும் வாபிக்கும் பரூச்சிற்குமிடையில் உருவாயின. இந்த பகுதியில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்தன. எனவே சௌராஷ்டிரா பகுதியிலுள்ள ஓரே கிராமங்களைச் சேர்ந்த குஜராத்தி இந்துக்களும், முஸ்லிம்களும் சூரத்திற்கு வந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் நீண்டகாலமாக அறிந்தவர்கள்; அவர்கள் பரஸ்பரம் அன்னியர்களல்ல. விஜயநகரப் பகுதியிலிருந்த இந்துக்களும் முஸ்லிம்களும் கூட ஒரே கிராமங்களிலிருந்து வந்து குடியேறியவர்களே. நான்  ‘குஜராத்தி முஸ்லிம்கள்’ என்ற பதத்தைப் பிரயோகிப்பதன் காரணம் அவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே. தொழில் நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு மிகக் குறைவாகவே இருந்தது. அங்கு அவர்களுக்குப் பொதுவாக வேலை அளிக்கப்படவில்லை. எனவே முஸ்லிம்கள் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டனர். எண்பதுகளில் தொழில் வளர்ச்சி மிகுந்த உத்வேகம் பெற்றிருந்த காலத்தில் சுயத்தொழிலில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் அதிக வருமானம் ஈட்டினர். தொண்ணூறுகளில் ஜவுளி மற்றும் வைரத் தொழில் நிறுவனங்களில் மந்த நிலை உருவாயிற்று. ஆடை மற்றும் எழுது பொருள்கள் வியாபாரங்களில் ஈடுபட்டு சுயதொழில் செய்து வந்த முஸ்லிம்கள் இந்த பொருளாதாரத் தேக்கத்தால் பாதிக்கப்படவில்லை. பொருளாதாரத் தேக்கம் வேலையிலிருந்தவர்களுக்கும் வேலையற்றவர்களுக்குமிடையே பெரும் பொறாமையை உருவாக்கியது. மோதல்களுக்கான காரணங்களில் அதுவும் ஒன்றாக இருக்கலாம். பொருளாதாரச் சூழலே அதைத் தூண்டுகிற ஒன்றாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் பரஸ்பரம் நன்கறிந்தவர்களாக, பல காலம் அமைதியாகச் சேர்ந்து கூடி வாழ்ந்தவர்கள்.

பின்னர் சூரத்தில் கலவரங்கள் நிகழ்ந்ததற்கு மக்கள் தமக்குள் குழுக்களை அமைத்துக் கொண்டதும் ஒரு காரணம். எனது முஸ்லிம் மாணவிகளில் ஒருத்தி மெர்ஸியா. அவள் ஒருநாள் என் வீட்டிற்கு வந்து விட்டுப் பின்னர் பல்கலைக் கழகத்திற்கு வந்தாள். கவலையடைந்த நான், ஏன் கலவர சமயத்தில் வெளியே வருகிறாய் என்று கேட்டதற்கு அவள்,  “கவலைப்படாதீர்கள். நான் பயப்டவில்லை. ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொள்வதற்காக முஸ்லிம்களும் இந்துக்களும் ஒன்று சேர்ந்து இருப்பதால்தான் நான் இங்கு வந்தேன்” என்றாள். விஜயநகரில் 5ஆம் தேதி இரவு கூட எல்லாம் அமைதியாகவே இருந்தது. 7ஆம் தேதி அவர்கள் ஒருவர் மற்றவர் வீட்டின் மீது கற்களையும், இரும்புக் கம்பிகளையும், விறகுக் கட்டைகளையும் எறிந்து தாக்கத் தொடங்கினர். இந்தச் சம்பவங்கள் தன்னியல்பாக நடந்தவை என்றால் திடீரென அவர்களுக்கு அவ்வளவு பெரிய கற்களும் கடப்பாறைகளும் கிடைத்தது ஆச்சர்யமில்லையா? தொலைபேசிக் கம்பிகள் இரண்டு மூன்று மணி நேரத்தில் எவ்வாறு துண்டிக்கப்பட்டன? திட்டமிடப்படாமல் இவையெல்லாம் எப்படி நடந்திருக்க முடியும்? அந்தப் பகுதியிலிருந்து வெளியே செல்ல ஒரேயொரு பாதைதான் இருந்தது. அதுவும் இந்துக்களின் குடியிருப்புகளின் வழியே சென்றது. அந்தப் பாதையும் இந்து கலவரக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் தப்பி ஓடியபோது இந்துப் பெண்கள் தம் வீட்டு மாடத்திலிருந்து அவர்கள் மேல் கொதிக்கும் வெந்நீரைக் கொட்டினார்கள். மண்ணெண்ணெயில் தோய்க்கப்பட்ட எரியும் விறகுகள் அவர்கள் மேல் எறியப்பட்டன. முன் தயாரிப்பின்றி இவற்றையெல்லாம் அவர்கள் செய்திருக்க முடியுமா?

விஜயநகர் பகுதியில் இருந்த மக்களில் பெரும்பாலானோர் சௌராஷ்டிராவிலிருந்தும் அதற்கு அருகாமையிலிருந்த வராச்சா, வேத்தோர் போன்ற பகுதிகளிலிருந்தும் வந்து குடியேறியவர்கள். விஜயநகரை ஒரு குட்டி சௌராஷ்டிரா என்றே சொல்லலாம். குஜராத்திகளோடு ஒப்பிடும்போது சௌராஷ்டிரர்கள் மிகவும் பழமைவாதிகளாகவும் பிற சமூகங்கள் மேல் வெறுப்புணர்ச்சி கொண்டவர்களாகவும் இருந்தனர். சூரத்தின் தன்மை இதுவல்ல. ஆங்கிலேயருடன் வர்த்தகம் மற்றும் பிற பொருளாதாரச் செயல்பாடுகள் கொண்ட இடம் அது. எனவே பூர்வீக சூரத்வாசிகள் வியாபாரம், பொருளாதாரம் சார்ந்த பல காரணங்களால் இன்றும் ஒன்றுபட்டு வாழ்கின்றனர். அவர்கள் வேறுவிதமாக இருக்க முடியாது. கனபி (Kanabi)  கத்ரி (Khatri), கோலா (Gola), கச்சி (Ghachi) ஆகிய வகுப்பினரின் மேலாதிக்கம் உள்ள நகரம் சூரத். இடைப்பட்ட சாதியைச் சேர்ந்த இவ்வகுப்பினர் கைவினைஞர்கள் ஆவர். உயர்சாதி பனியாக்களோ, பிராமணர்களோ அல்லாத சூரத்தின் இந்த நான்கு வகுப்பினரும் முஸ்லிம்களுடன் மிகுந்த நல்லுறவு கொண்டிருந்தனர். ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் வீடுகளுக்குச் சென்று அவர்களோடு சேர்ந்து கறி, மீன் முதலானவற்றைக்கூட உண்டு உறவாடி வந்தனர். இது அவர்கள் புதிதாக ஏற்படுத்திக் கொண்ட வழக்கம் அல்ல. பாரம்பரியமாகவே அவ்வாறு இருந்து வந்திருக்கிறது. பொருளாதாரப் பரிமாற்றங்களுடன் சமூகப் பரிமாற்றங்களும் இருந்து வந்துள்ளன. இந்த ஒற்றுமையுணர்வு சௌராஷ்டிராவிலிருந்து வந்தவர்களிடம் காணப்படவில்லை. எனவே கலவரங்கள் எல்லாம் சௌராஷ்டிராவிலிருந்து வந்தவர்கள் குடியேறிய பகுதிகளிலும், தொழிற்சாலைகள் நிறைந்த பாண்டேஸராவிலும்தான் உருவாயின. இன்றும் அதுதான் தொழிற்பிரதேசம். ஆழ்ந்த மதவெறுப்புடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர். இந்து சௌராஷ்டிரர்கள் குஜராத்தில்  ‘கஸியாக்கள்’ (Ghazias) என்று அழைக்கப்பட்டனர். இதில்  ‘ஹீரா கஸியாக்கள்’, வைரம் பட்டை தீட்டுபவர்கள். 1980களில் கஸியாக்கள் கடைக்குச் சென்று சாக்ஸ், ஷு, பேண்ட், துணி வாங்கினால் கடைக்கார்கள் நமக்கு விற்பதை விட நாலைந்து மடங்கு அதிகமாக அவர்களுக்கு விலை கூறுவார்கள். அவர்களும் விலையைப் பற்றி எதுவும் கேட்க மாட்டார்கள். ஒருவரது பளபளப்பான காலணிகளையும், பாலியெஸ்டர் சட்டையையும், தங்கச் சங்கிலியையும் பார்த்ததுமே அவர் ஒரு  ‘கஸியா’ என்று சொல்லிவிட முடியும். காய்கறிக் கடைக்காரனுக்குக்கூட அது தெரியும். வைரம் பட்டை தீட்டும் தொழிலின் பொற்காலம் அது. அன்றைய சூழல் இவ்வாறுதான் இருந்தது.

பொருளாதாரத் தேக்கத்தால் வைரம் பட்டை தீட்டும் தொழிலில் மந்தம் ஏற்பட்டபோது வேலையில்லாத் திண்டாட்டமும், ஊதியமின்மையும் தலை விரித்தாடின. வந்து குடியேறியவர்களில் இந்துக்கள் வைரம் பட்டை தீட்டும் தொழிலும், முஸ்லிம்கள் சுயத் தொழிலிலும் ஈடுபட்டனர். வைரம் பட்டை தீட்டும் தொழிலில் முஸ்லிம்கள் ஈடுபடவில்லை. பட்டங்கள் தயாரித்து விற்பனை செய்துவந்தனர். ஜவுளி ஆலைகளில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுமே பணிபுரிந்தனர். புடவைகளை வெட்டும் வேலையை முஸ்லிம்கள் செய்தனர்.  ‘பாபி’னால் கோர்ப்பதை முஸ்லிம் பெண்கள் செய்தனர். இந்துக்கள் சேலைகளை விற்பனை செய்தனர். அங்கு நிலவிய வேலைப் பிரிவினைக்கு இது ஒரு உதாரணம். தொழிற்சாலை உரிமையாளர் ஒரு இந்துவாக இருந்தால் அவர் முஸ்லிம் தொழிலாளிகளின்றித் தொழில் நடத்த முடியாது. இதெல்லாம் சிறிய தொழில் அதிபர்களுக்குத்தான். பெரிய முதலாளிகளுக்கு அல்ல.

விஜயநகர் பகுதியில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் ஒரே போலிருந்தன. அவர்கள் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது, குரானை நாசமாக்குவது, அவர்களின் மதத் தலைவர்களான இமாம்களைத் தாக்குவது – இவைதான் அவர்களின் முக்கிய குறிக்கோள்களாக இருந்தன. அங்கிருந்த ஒவ்வொரு குடியிருப்புக்கும் ஒரு இமாம் இருப்பார். இமாமையும் அவரது மனைவியையும் தாக்குவது அவர்களின் தாக்குமுறையாக இருந்தது. விஜயநகரில் ஒரு இமாமை இழுத்து மின் விசிறியில் தொங்கவிட்டு நன்றாக அடித்து அவருக்குத் தீயும் வைத்தனர். பதினாறே வயதான இமாமின் மனைவி மணிப்பூரைச் சேர்ந்தவள். அண்டை வீட்டாரின் கூற்றுப்படி அவள் வீட்டைவிட்டு வெளியே வந்ததேயில்லை. அவள் எப்போதும் உள்ளேயேயிருந்தாள். அவள் முகத்தை ஏன், கால் விரலைக்கூட யாரும் பார்த்ததில்லை. அவளைப் பற்றி அறிந்திருந்த கலவரக்காரர்கள் அவளை வீட்டிலிருந்து வெளியே இழுத்துவந்து பலாத்காரம் செய்ததுடன், உயிருடன் கொளுத்தவும் முற்பட்டனர். 80 சதவீத தீக்காயங்களுடன் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். நான் அவளைப் போய்ப் பார்த்தபோது மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். அதற்குப் பத்து தினங்கள் கழித்து அவள் இறந்துபோனாள். அவளிடம் எதையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவளுக்கு இந்தி, குஜராத்தி, ஆங்கிலம் என எதுவுமே புரியவில்லை. எனவே அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. எல்லாக் குடியிருப்புகளிலும் தாக்குதலின் முதல் இலக்காக இமாம்கள் இருந்தனர்.

நாங்கள் முஸ்லிம் குடியிருப்புகளுக்கு மட்டும் சென்றோம் என்பதில்லை. ஓர் இந்துக் குடியிருப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக அறிந்து நாங்கள் அங்கு சென்றோம். செய்தித்தாளில் வந்த செய்திகளின் அடிப்படையில், மிக மோசமாக பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இந்துக் குடியிருப்புகளுக்கு நாங்கள் சென்றோம். ஆனால் இரண்டு சமூகங்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது என்று இன்று நான் உறுதியாகச் சொல்கிறேன். முஸ்லிம்களின் இழப்போடு ஒப்பிடும்போது இந்துக்களின் இழப்புகள் ஒன்றுமேயில்லை. நாங்கள் முதலில் சென்றிருந்தபோது ஒரு இந்து எங்களிடம்,  “அவர்கள் எங்களை எப்படி அடித்திருக்கிறார் பாருங்கள்” என்றார். ஒருவரை அழைத்து வந்து  “அவரது கட்டை விரலை பாருங்கள்” என்றார். அவரது கட்டை விரல் வெட்டப்பட்டு நான்கு தையல் போடப்பட்டிருந்தது. அது ஒரு காயம்தான். ஏதோ இந்துக்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமலிருந்தார்கள் என்று இதற்கு அர்த்தமில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையைவிட அதிகம். முஸ்லிம்கள் நிறைந்த ராந்தேட் பகுதியில் இருந்த இந்துக்களின் நிவாரண முகாமிற்கு எவ்வித முன்னறிவிப்புமின்றிச் சென்றோம். அங்கிருந்தவர்கள் முகாம் செயல்படும் விதத்தை மிகுந்த சந்தோஷத்துடன் விளக்கிக் கூறினர். பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்தவர்கள்; நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவர்களது நிலை முஸ்லிம்களின் முகாமில் இருந்தவர்களைப் போன்றதல்ல. ராணி தலாவ் முஸ்லிம்கள் நிவாரண முகாமிற்கு நான் முன்பு சென்றபோது அங்கிருந்தவர்களுக்குத் தங்கள் குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்றேத் தெரியவில்லை. ஆனால் இங்கு இந்துக்களின் முகாமில் எல்லோரும் அவரவர் குடும்பத்துடன் இருந்தனர். மீண்டும் நான் ராணி தலாவ் முகாமிற்குச் சென்றபோது, பலாத்காரம் செய்யப்பட்ட யாஸ்மின் தனது சகோதரியும் வந்து விட்டதாகக் கூறினாள். யாஸ்மினைப் பற்றி ஒன்றை நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அவளது சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகள் அவள் மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை வெகு வேகமாக மேற்கொண்டன. மதச் சார்பற்ற அமைப்புகளும், நிறுவனங்களும் உதவிக்கு அங்கே விரைந்து வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் கிச்சடி விநியோகித்தோம். ஆனால் மனோரீதியாக அவர்கள் முற்றிலும் நொறுங்கிப் போயிருந்தனர். பாண்டேஸராவில் இருந்து மூன்று குழந்தைகள் வந்திருந்தனர். ஒன்று ஏழு மாதக் குழந்தை, ஒன்றுக்கு இரண்டு வயது, மற்றொன்று ஆறு வயது. நாங்கள் அக்குழந்தைகளைப் பார்த்துப் பேசினோம். அவர்களுக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அக்குழந்தைகளின் பெற்றோரும் இரண்டு சகோதரர்களும் கொல்லப்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். பத்து நாட்களுக்குப் பிறகு பெரிய பையன் தாங்கள் ஒரு குழாய்க்குள் ஒளிந்து கொண்டிருந்ததால் தப்பியதாகத் தெரிவித்தான். அவன் தனது பெற்றோரும் அண்ணன்களும் கொல்லப்பட்டதைத் தன் கண்களால் பார்த்திருந்தான்.  “பய்யாவைக் கொன்று விட்டார்கள்” என்று எங்களிடம் கூறினான் அந்த பையன். இந்த மூன்று குழந்தைகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவரிடமிருந்து தலா இரண்டு லட்ச ரூபாய் கிடைத்தது. பிற உறவினர்கள் இதனால் அந்தக் குழந்தைகளுக்குச் சொந்தம் கொண்டாடி வந்தனர். ஆறு வயது கூட நிரம்பாத அந்தச் சிறுவனுக்கு தனது உண்மையான உறவினர் யார் என்றுகூடத் தெரியவில்லை.

பாதிக்கப்பட்ட குழந்தைகளை யாரும் தேடி வருகிறார்களா இல்லையா என்று தெரியாத நிலையில் ஒரு பெண்மணி முதலிலிருந்தே தனது நான்கு குழந்தைகளுடன் சேர்த்து இவர்களையும் கவனித்துக் கொண்டாள். நாங்கள் அவளிடம் பேசியபோது,  “அல்லா இதைச் செய்திருக்கிறார். நான் இவர்களைக் கைவிட முடியாது. நான் எப்படி அதைச் செய்ய முடியும்? எனது நான்கு குழந்தைகளுக்கு என்ன நடக்கிறதோ அது இந்த மூன்று குழந்தைகளுக்கும் நடக்கட்டும். இந்த நான்கு குழந்தைகளுக்கும் சாப்பாடு போடுகிறவர் இந்தக் குழந்தைகளுக்கும் படியளக்கட்டும்” என்றாள். அங்கே நடந்தது வேறெங்கும் நடக்கவில்லை. இப்போது அந்தக் குழந்தைகள் நன்றாக உள்ளனர். லக்னோவில் உள்ள அவர்கள் சித்தப்பாவிடம் வளர்கின்றனர். அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அமைப்பினர் லக்னோவிற்கு இரண்டு பேரை அனுப்பி சித்தப்பா என்று சொந்தம் கொண்டாடி வந்த நபர் உண்மையான ஆளா அல்லது நடிப்பா என்று விசாரித்து அவர் உண்மையான நபர்தான் என்று அறிந்து கொண்டனர். பின்னர் அக்குழந்தைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த இரண்டு லட்ச ரூபாயை சித்தப்பாவிடம் வழங்கவில்லை. வங்கி இணைக்கணக்கில் மாவட்ட ஆட்சியர், அந்த அமைப்பின் முக்கிய நபர்கள் இவர்கள் கையொப்பத்துடன் குழந்தைகள் பெயரில் போடப்பட்டது. குழந்தைகளுக்கு 21 வயது ஆகும் போது அந்தப் பணம் அவர்களுக்குக் கிடைக்கும். சித்தப்பாவிற்குக் கிடைக்காது. அந்தச் சமூக அமைப்பின் தலையீட்டினால்தான் இது நடந்தது.

யாஸ்மின் பற்றி அந்த அமைப்பினரிடம் கேட்டபோது அவர்கள்,  “அவளுக்கு எங்கள் மதத்திலேயே திருமணம் செய்து வைப்போம். மதத்திற்கு வெளியே அவளை அனுப்ப மாட்டோம்” என்றனர். முஸ்லிம்களின் சமுதாய அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் உடனடி நிவாரணத்திற்கும் மறுவாழ்விற்கும் பொறுப்பேற்று செயல்பட்டன. யாஸ்மினின் திருமணம் இப்போது நடந்து முடிந்து விட்டது. அவள் நன்றாக இருக்கிறாள்.

பெரும்பான்மையான இந்துக்களும் முஸ்லிம்களும் அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பிப் போக விரும்பவில்லை. இரு சமூகத்தினரின் உணர்வுமே இவ்வாறுதான் இருந்தது. நாங்கள் இது பற்றி அவர்களிடம் கேட்டபோது,  “பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வெறுங்கையுடன் இங்கு வந்தோம். சூரத்தில் கை நிறைய சம்பாதித்தோம். எங்களுடைய பொருளாதார நிலை மிகவும் உயர்ந்திருந்தது. இந்தக் காலகட்டத்தில் மிகவும் பெருமிதம் கொண்டவர்களாக இருந்தோம். எங்கள் சொந்த ஊருக்குப் போகும்போது உறவினர்கள் எங்களைக் கொண்டாடினார்கள். ஏனென்றால் எங்களிடம் நிறைய பணம் இருந்தது. நாங்கள் அவர்களுக்குச் சேலைகளும் பரிசுப் பொருட்களும் வாங்கிச் செல்வது வழக்கம். இப்போது எங்களிடம் ஒன்றுமில்லை. அகதிகளாக அங்கே போனால் அதே மரியாதை கிடைக்குமா என்று தெரியவில்லை,” என்றனர். அவர்களிடம் சஞ்சலம் நிலவியது. இது அவர்களின் எல்லா உரையாடல்களிலும் வெளிப்பட்டது. ஆனால் நாங்கள் மீண்டும் பிப்ரவரியில் விசாரித்தபோது அவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டது தெரிய வந்தது. இரண்டாம் கட்டக் கலவரத்தில் சூரத் நகரமே மூழ்கடிக்கப்பட்டிருந்ததால் அவர்களுக்கு அந்நகரில் வாழ்வது சாத்தியமற்றதாகிவிட்டிருந்தது. அவர்கள் வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருந்தனர்.

முதலமைச்சர் சிமன்பாய் பட்டேலின் அறிக்கைகூட எதுவுமே நடக்கவில்லை என்றுதான் கூறியது.  “எல்லோரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி விட்டார்கள். எதுவும் நடக்கவில்லை. கலவரம் பற்றி சும்மா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.”  நாங்கள் மூவரும் அந்த இடங்களைச் சென்று பார்த்தோம். எங்கள் அறிக்கையை எல்லா குஜராத்தி செய்தித்தாள்களிலும் வெளியிட்டோம். முதலமைச்சரின் அறிக்கை தவறானது என்பதைச் சுட்டிக் காட்டினோம். நாங்களே கண்கூடாக பார்த்தோம். அங்கே எதுவுமில்லை, ஒருவரும் எஞ்சியிருக்கவில்லை. வீடுகளில் கதவுகளோ, ஜன்னல்களோ, தாழ்ப்பாள்களோ இல்லை. எதுவுமே இல்லாத இடத்திற்கு பதற்றம் இன்னும் தணியாத நிலையில் எப்படி மக்கள் திரும்ப முடியும்? மறுநாள் நான் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன். நான் உடனே வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் என்னிடம்,  “மேடம், நீங்கள் ஏன் இதிலெல்லாம் தலையிடுகிறீர்கள்?”  என்று கேட்டார். நான் அவரிடம்,  “நீங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர். நீங்கள் விஜயநகருக்கு வந்து பார்த்திருப்பீர்கள். அதன் பிறகுமா நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள்? என்னுடன் வந்து எந்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று எனக்குக் காட்டுங்கள். அந்த வீடுகள் வாழத் தகுந்ததாக இருக்கிறது என்றும் அதன் சொந்தக்காரர்கள் இன்றிரவே அங்கே திரும்பலாம் என்றும் என்னை நம்ப வையுங்கள்” என்றேன். அந்த வீடுகள் நிச்சயமாக நல்ல நிலையில் இல்லை. எல்லா வீடுகளையும் நானே நேரில் சென்று பார்த்தேன். நான் இதைப் பற்றித் தவறாக எதுவும் கூறிவிடவில்லை. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் இதில் தலையிட்டார். முதலமைச்சர் உடனடியாக உதவித்தொகை வழங்கினார். எனினும் அந்தத் தாக்குதல் பற்றிய அச்சம் அங்கு நிலவிக் கொண்டிருந்தது. முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களின் வீடுகளும் வாழுமிடங்களும் ஒன்றோடொன்று இணைந்து சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்ந்த நிலை இனியும் நீடித்திருக்க முடியாது. நீடித்திருக்காது. இப்போது அங்கே இது முஸ்லிம்களின் பகுதி, அது இந்துக்களின் பகுதி என்ற நிலை உருவாகிவிட்டது. விஜயநகரும் இப்போது முழுமையாக இந்துக்களின் சமூகமாகிவிட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் காலத்திலிருந்து முஸ்லிம்கள் மேலாதிக்கம் பெற்றிருந்த ராந்தேட் பகுதியில் இஸ்லாமியர்கள் குடியேறினர். மக்களிடையே பரிமாற்றம் இறுதியில் இப்படி முடிந்திருக்கிறது.

1972இல் நான் சூரத்திற்குச் சென்றபோது எல்லோரிடமும்,  “நீங்கள் நள்ளிரவில்கூட சூரத்தில் ரயில்நிலையத்திற்குச் செல்லலாம். அங்கே எந்த பயமும் இல்லை” என்று சொல்வது வழக்கம். பெண்கள் சாலையில் செல்லும்போது பொதுவாக கேலி, கிண்டல் செய்யும் பழக்கம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. நான் தில்லியிலிருந்து வந்தவள். பரோடாவில் வளர்க்கப்பட்டவள். சூரத்தில் பெண்களைக் கேலி செய்யும் காட்சியை நான் கண்டதேயில்லை. நான் சூரத்தைப் பற்றி மிகவும் பெருமைப்பட்டிருக்கிறேன். மும்பையைப் பற்றிச் சொல்லும்போது.  ‘அங்கே பணமிருக்கிறது. வீடில்லை’ என்பார்கள். சூரத்திலோ ஒருவருக்கு வீடும் கிடைக்கும், பணமும் சம்பாதிக்கலாம். பொருளாதார முன்னேற்றத்துடன் இணைந்து கலவரங்கள் நடந்திருக்கின்றன என்பது என் கவனத்துக்கு இப்போது வருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகள் பயங்கரமான பகுதிகளாக மாறிவிட்டன.

தொழிலாளர்கள் திரும்பி வந்திருக்கின்றனர். குறிப்பாக ஒரிஸ்ஸா மற்றும் ஆந்திரத் தொழிலாளர்கள். தொழிற்சாலைகளை எவ்வாறு தொழிலாளர்கள் இன்றி நடத்த முடியும்? இந்தத் தொழிலாளர்கள் உண்மையான கைவினைஞர்கள். எனவே தொழில் அதிபர்கள் ஒன்றுகூடிப் பேசினர். இந்து, முஸ்லிம் இருதரப்பினரும் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில், தொழிலாளர்களின் சொந்த ஊருக்குச் சென்று அவர்கள் மீண்டும் இங்கு திரும்பி வருவதற்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின் கட்டாயம் இதைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். நான்கைந்து பேர் கொண்ட ஒரு குழு சென்று தொழிலாளர்களைச் சந்தித்து சூரத்திற்குத் திரும்ப வருமாறு அழைத்ததாகக் கேள்விப்பட்டேன்.


சுஷோபா பர்வே

சுஷோபா பர்வே
©
Sound & Picture Archives for Research on Women

இந்த நகரத்தில் எங்கள் பணியை பேண்டி பஜாரில் உள்ள இமாம்வாடா பகுதியில் மொஹல்லா கமிட்டிகள் மூலமாக நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இந்த இமாம்வாடாவுக்கு ஒரு நூற்றாண்டுகால வரலாறு உள்ளது. ஆங்கிலேயர்கள் மும்பையில் முதல் ரயில் பாதையை அமைத்தபோது கொங்கணிலிருந்து ஆட்கள் கொண்டு வரப்பட்டனர். மக்கள் நாலைந்து கிராமங்களிலிருந்து வந்தனர். அவர்களில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனிக் குடியிருப்புகளை அளித்திருந்தனர். நான் ஒரு சிறு வரலாற்றுச் சம்பவத்தைத்தான் கூறுகிறேன். ஆங்கிலேயர்கள் என்ன காரணங்களுக்காக அன்று அவ்வாறு செய்தார்கள் என்பதை நான் ஆராயப் புகவில்லை. அந்த மக்கள் ஒரே கிராமங்களிலிருந்து வந்தவர்கள். எனவே நண்பர்களாக இருந்தவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரே பள்ளிக்கு அனுப்பினர். குழந்தைகள் மத்தியிலும் அந்த நட்பு தோன்றித் தழைத்தது. சுதந்திரப் போராட்டத்தின் போது 1945, 46ஆம் ஆண்டுகளிலும், சுதந்திரத்திற்குப் பின் 55ஆம் ஆண்டிலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்தப் பிரச்சினைகள் காரணமாக இரு சமூகங்களும் பரஸ்பரம் இடைவெளியை உணரத் தொடங்கினர். வேறு சில விஷயங்களும் நடக்கத் தொடங்கின. 1992ஆம் ஆண்டு கலவரத்தில் இந்த வேற்றுமை முழுமையாக உறுதிப்பட்டுவிட்டது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இப்போது நாம் அதற்குள் போக  வேண்டாம்.

92 – 93 கலவரங்கள் முடிவடைந்து விட்டன. ஆனால் இமாம்வாடாவில் 95 ஜுலை வரையிலும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஏதேனும் கலவரம் நடந்து கொண்டிருந்தது. பம்பாய் காவல்துறைக்கு இது பெரும் தலைவலியாகி விட்டது. 92 டிசம்பருக்குப் பிறகு அங்கு மாநில ஆயுதப் படையின் ஒரு பிரிவு நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கே ஒரு காம்பவுண்ட் போன்ற வளாகத்தில் பத்து பதினைந்து அடுக்கு மாடிக் கட்டிடங்கள் உள்ளன. மூன்று நான்கு கட்டிடங்களில் உள்ள இளைஞர்களுக்கிடையில் தகராறு நடந்துகொண்டிருந்தது. அற்பக் காரணங்களுக்காக அவர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். கடலைக்காரனிடம் இரு பையன்கள் சென்று கடலை கேட்டு, அவர் முதலில் கடலை கொடுத்த பையன் யதேச்சையாக இந்துவாக இருந்தால் முஸ்லிம் பையன்கள் திரண்டு போய் தகராறு செய்வார்கள். அதுபோல ஸ்கூட்டர் சரிபார்க்குமிடத்தில் ரிப்பேர் செய்ய வந்த இருவரில் ஒருவர் இந்துவாகவும் மற்றொருவர் முஸ்லீமாகவுமிருந்து, கடைக்காரர் முதலில் முஸ்லிம் பையனுக்குச் சரிசெய்து கொடுத்தால் இந்துக்கள் தகராறு செய்வார்கள். 95 ஜுலை கலவரத்திற்குக் காரணம் யாரோ மூக்கைச் சிந்தியதுதான். என்ன நடந்ததென்றால் யாரோ வீட்டின் இரண்டாவது தளத்திலிருந்து மூக்கைச் சிந்தி எறிய அது இன்னொரு சமூகத்தைச் சார்ந்த பையன்களின் தோளில் பட்டுவிட்டது. பின்னர் அரைமணி நேரம் கற்களும் பாட்டில்களும் வீசப்பட்டன. மாநில ஆயுதப்படை அங்கு நிறுத்தப்பட்டது. அங்கிருந்தவர்களைக் கலைந்து போகச் செய்ய ஆகாயத்தை நோக்கிச் சுட வேண்டியதாயிற்று. அடுத்த நாள் செய்தித்தாள்களில் தலைப்புகள் இவ்வாறு இருந்தன :  “பேண்டி பஜாரில் கலவரம்.”

எதற்காக இந்தக் கலவரம்? அதைப் பற்றி யாரும் எழுதவில்லை. பேண்டி பஜாரில் உருவான பதட்டங்களின் மூல வேர் எப்போதும் இமாம்வாடாவில் இருந்தது. மேற்படி செய்தித் தலைப்பைப் பார்த்ததும் நான் பொலீஸ் கமிஷனரை தொலைபேசியில் தொடர்புகொண்டு,  “நான் தாராவியில் செய்த சில சோதனை முயற்சிகளை இங்கே செய்து பார்க்க விரும்புகிறேன்” என்றேன். அவர்,  “ஏதாவது செய்யுங்கள். இந்தக் கலவரத்தை எப்படி நிறுத்துவது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்றார். நான் என் பணியைத் துணை பொலீஸ் கமிஷனர் மற்றும் உள்ளூர் பொலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து ஆரம்பித்தேன். முதலில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் அழைத்து ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். ஆனால் அதை நடத்த ஒரு பொதுவான இடம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. முஸ்லிம் பகுதியில் நடத்தினால் இந்துக்கள் அங்கே வர மாட்டார்கள். இந்துக்களின் பகுதியில் நடத்தினால் முஸ்லிம்கள் அங்கே வரமாட்டார்கள். அருகில் இருந்த பொதுவான இடம் காவல் நிலையம்தான். எனவே அவர்களை நான் காவல் நிலையத்திற்கு அழைத்தபோது வந்து கலந்து கொண்டனர். காவல்துறைதான் எல்லாக் கலவரங்களுக்கும் காரணம் என்றனர். நீண்ட நேரம் அவர்கள் கூறியவற்றை நாங்கள் கேட்டோம். பின்னர் நான் அவர்களிடம், அவர்கள் கூறுவதையெல்லாம் அப்படியே ஏற்க முடியாது என்று சொல்லி,  “உங்கள் மனத்தில் உள்ள கோபம் என்னவென்று கூறுங்கள். இந்தக் கோபத்திற்கு என்ன காரணம்? அற்பக் காரணங்களுக்காகக் கலவரத்தில் ஈடுபட வேண்டுமா? நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்” என்றேன். அங்கே உட்கார்ந்திருந்த வயதான சிலர் எங்களைப் பார்த்து,  “எங்களிடம் ஏன் இந்தக் கேள்விகளைக் கேட்கிறீர்கள்? யார் கலவரத்தில் ஈடுபட்டார்களோ அவர்களைப் போய்க் கேளுங்கள்” என்றனர். நான்,  “அப்படியானால் அந்தக் கலவரத்திற்குக் காரணமானவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,  “இளைஞர்கள்” என்றனர். நாங்கள் அவர்களிடம்,  “அப்படியானால் அந்தப் பையன்களை அழைத்து வாருங்கள். நாங்கள் அவர்களிடம் பேசுகிறோம்” என்றோம். அதற்கு அவர்கள்,  “பையன்கள் பொலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் வரமாட்டார்கள்” என்றனர்.  “அப்படியானால் நாங்கள் அந்தப் பையன்கள் இருக்குமிடத்திற்குச் செல்கிறோம்” என்றோம். அப்படி நாங்கள் போவதால் மீண்டும் ஏதாவது பிரச்சினைகள் ஆரம்பிக்கலாம் என காவல்துறையினர் யோசித்தனர்.  “துணிச்சலுடன் அதைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும்” என்று கூறினேன். அடுத்த நாளிலிருந்து வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களின் குடியிருப்புகளுக்குச் சென்று கூட்டங்கள் நடத்த அங்கிருந்த எல்லோரும் முடிவு செய்தோம்.

நாங்கள் அங்கு போய் அவர்களுக்கு பிரசங்கம் செய்ய விரும்பவில்லை. நாங்கள் அவர்களின் உள்ளத்தில் இருந்த குறைகளையும் புகார்களையும் கேட்டு அறிய விரும்பினோம். எங்கள் பணியை அடுத்த நாளிலிருந்து ஆரம்பித்தோம். இமாம்வாடாவின் வரலாற்றிலேயே ஒரு மூத்த காவல் அதிகாரி அவர்களின் குறைகளைக் கேட்கப் போனது அதுதான் முதல் தடவை. இதற்குமுன் காவல்துறையினர் மக்களைக் கைது செய்ய போயிருக்கின்றார்களே தவிர அவர்களது கஷ்டங்கள், புகார்கள் பற்றிக் கேட்க ஒரு போதும் போனதில்லை. அந்தக் காவல்துறை துணை ஆணையர் மிகவும் இனிய மனிதர். நாகலாந்தில் பணிபுரிந்த அவர் பம்பாய்க்கு மாற்றப்பட்டு இந்தப் பகுதிக்கு நியமிக்கப்பட்டார். நாங்கள் இந்தக் கூட்டத்தை எவ்வாறு நடத்துவது என்று முடிவு செய்து கொண்டோம். காலை ஒன்பதரை பத்து மணியளவிற்கு ஆரம்பித்த கூட்டம் மதியம் பன்னிரண்டரை வரை சென்றது. ஒவ்வொருவரும் அவர்கள் விரும்புவதை முழுமையாகச் சொல்லி முடிக்கும்வரை நாங்கள் அங்கே அமர்ந்திருந்தோம்.

நாங்கள் இத்தகைய கூட்டங்களை பதிமூன்று – பதினான்கு நாட்கள் நடத்தினோம். இந்துக்களின் குடியிருப்பில், முஸ்லிம்களின் குடியிருப்பில், இளைஞர்கள் மத்தியில், பெண்கள் மத்தியில் எனத் தனியாகக் கூட்டங்கள் நடத்தினோம். ஆரம்பத்தில் பிற சமூகத்தினர் மேல் ஆத்திரத்தையும் வெறுப்பையும் அவர்கள் வெளிப்படுத்தினர். பின்னர் இமாம்வாடாவின் வரலாற்றையும், நூறு வருடங்களுக்கு முன் கொங்கணிலிருந்து இங்கு வந்து எவ்வாறு வெவ்வேறு குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர் என்பதையும், 1935, 42, 45, 47, 55 மற்றும் 65ஆம் ஆண்டுகளில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் அவர்கள் மூலம் அறிந்து கொண்டோம். காவல்துறையினரும் தங்கள் கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தினர். இமாம்வாடாவிலிருந்துதான் இந்த விவரங்களெல்லாம் தெரிய வந்தன. முஸ்லிம்கள் 92 – 93இல் தமக்கு என்ன நடந்தது என்பதைக் கூறினர். எல்லா விஷயங்களையும் பேசிக் களைத்த நிலையில் இளைஞர்கள் தங்கள் சிரமங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினர். தாங்கள் பத்துக்கு பன்னிரண்டு சதுர அடி அளவிலான சின்ன அறையில் வாழ்க்கை நடத்துவதாகக் கூறினார்கள். அங்குள்ள குடியிருப்புகள் அப்படித்தான் இருந்தன.  ‘சால்’ எனப்படும் அந்தக் குடியிருப்புச் சத்திரத்தில் ஒரு தளத்தில் நாற்பது முதல் நாற்பத்தைந்து அறைகள் இருக்கும். பொதுக் கழிப்பறைகள்தான் இருக்கும். அவர்கள் எங்களிடம்,  “இத்தகைய அறைகளில் வாழும் எங்களால் பள்ளியை விட்டுத் திரும்பியதும் படிக்க முடியாது. ஒழுங்காகப் படிக்க முடியாததால் தேர்வுகளை நல்ல முறையில் எழுதி பாஸ் செய்ய முடியவில்லை. தேர்வுகளில் இரண்டு முறை தவறியதும் பள்ளியை விட்டு நின்றுவிடுகிறோம்” என்று கூறினர். அவர்கள் சுட்டிக் காட்டிய முக்கியமான விஷயம் மாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தால் அவர்கள் விளையாட இமாம்வாடாவில் ஒரு மைதானம்கூடக் கிடையாது.  “எங்களால் வீட்டில் படிக்கவும் முடியாது, வெளியில் விளையாடவும் முடியாது. வேறு என்னதான் செய்வது? அந்த நேரங்களில் கட்டிடங்களுக்கு இடையிலான சிறு சந்துகளில் நின்று கொண்டிருப்போம். அற்பக் காரணங்களுக்காகச் சண்டை வரும். பெரியவர்கள், அங்கே போய் நிற்காதீர்கள், உங்களால்தான் பிரச்சனைகள் வருகிறது என்பார்கள். அப்படியானால் நாங்கள் என்னதான் செய்வது?” அங்கே பள்ளியை விட்டுப் பாதியில் நின்ற பலர் இருந்தனர். அந்தப் பையன்கள் திரும்பத் திரும்பக் கலவரங்களில் சம்பந்தப்பட்டு பொலீஸில் சிக்கிக் கொள்கின்றனர். அங்கிருந்த பெரியவர்கள் எங்களிடம் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைத்தாலே அமைதியும் சமாதானமும் இமாம்வாடாவில் உருவாகிவிடும் என்றனர்.

பின்னர் எங்கள் குழுவினர் ஒருநாள் கூடினோம். காவல்துறை ஆணையர் திரு. ரிபெல்லோவும் அங்கிருந்தார். நாங்கள் பத்துநாள் கூட்டங்களில் அறிய வந்தவற்றைப் பற்றி விவாதித்தோம். இமாம்வாடா மக்களால் எங்கள் முன் வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் மத நல்லிணக்கம் பற்றி அவர்களிடம் உரையாற்றுவதில் பயனில்லை என்பதை உணர்ந்தோம். அப்பிரச்சினைகள் தீராமல் அங்கு அமைதியும் சமாதானமும் நிலவாது என்பது எங்களுக்குப் புரிந்தது. என்னுடைய 1984ஆம் ஆண்டு அனுபவத்தை அவர்கள் முன் வைப்பதில் என்ன பயன்? எனவே அங்கு ஒரு சமுதாய மையத்தை உருவாக்குவது பற்றி யோசித்தோம். அப்பகுதிக்கு அருகே ஒரு மாநகராட்சிப் பள்ளி இருந்தது. அதில் மூன்று அறைகள் பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடந்தன. நாங்கள் அவர்களிடம் அனுமதி பெற்று அந்த இடத்தில் ஒரு சமுதாய மையத்தை ஆரம்பித்தோம். அங்கு ஒரு படிப்பறையை உருவாக்கினோம். இப்போது இமாம்வாடாவைச் சேர்ந்த குழந்தைகள் அங்கே அமர்ந்து இரவு பத்தரை பதினொரு மணிவரை படிக்கின்றனர். இன்னொரு அறையில் காவல்துறை ஆணையர் பரிசாகக் கொடுத்த டேபிள் டென்னிஸ் மேசையைப் போட்டோம். அவர்கள் அவரிடம், இது போன்ற விளையாட்டுக்களைத் தாங்கள் ஆட விரும்பியதாகவும், டேபிள் டென்னிஸ் விளையாடுவது அவர்களின் கனவாக இருந்தது என்றும் சொன்னதன்பேரில் அவர்களுக்கு அந்த மேசை வழங்கப்பட்டது. கலவரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் டேபிள் டென்னிஸ் ஆடத் தொடங்கியதும் அது அவர்கள் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது அந்தப் பையன்கள் கல்லூரிக்குப் போகின்றனர். கடந்த ஆண்டு அவர்களது கல்லூரிகளின் சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றனர். அவர்கள் நன்றாக விளையாடியதால் அந்தக் கல்லூரிகளிலிருந்து பரிசுகள் கிடைத்தன. மூன்றாவதாக நாங்கள் செய்த விஷயம்  ‘சாபூ சித்திக் இன்ஸ்டிட்யூட்’ என்ற பாலிடெக்னிக்கிற்குச் சென்று இந்த விஷயம் பற்றிப் பேசினோம். நிறுவன முதல்வரிடமும் நிர்வாகத்திடமும் பேசி, பாதியில் படிப்பைவிட்ட இளைஞர்களுக்கான ஒரு திட்டத்தை உருவாக்கினோம். அவர்கள் அந்தக் கல்வி நிலையங்களுக்குப் போகத் தொடங்கினர். கடந்த மூன்று ஆண்டுகளில் 165 மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

நாங்கள் ஜுலை 95இல் எங்கள் பணியைத் தொடங்கினோம். டிசம்பர் 95இல் பம்பாய் காவல்துறையின் மாநில ஆயுதப்படை விலகிக் கொண்டது. இன்றுவரை அங்கே எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் முயற்சிகளை அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அங்குள்ள தண்ணீர் பிரச்சினையைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினர். கட்டடம் நூறாண்டு பழையதாக இருந்தது. அங்கு ஒரு மொஹல்லாக் கமிட்டி அமைத்தனர். நகராட்சியின் நீரியல் பொறியாளரிடம் சென்றனர். தலைமை காவல்துறை அதிகாரியும் அவர்களுடன் சென்றார். அந்தப் பகுதி கவுன்சிலரையும் உடன் அழைத்துச் சென்றனர். அவர்கள் நீரியல் பொறியாளரிடம்,  “இதுவரை நாங்கள் எங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். இப்போது உங்களுடன் சண்டைபோட வந்திருக்கிறோம். எனவே நீங்கள் எங்களுக்கு தண்ணீர்க் குழாய் அமைத்துத் தர வேண்டும்” என்றனர். அந்த மனிதர் அதற்கு ஒப்புதல் அளித்ததோடு, இரண்டே மாதங்களில் குழாய் அமைத்துக் கொடுத்தார். 1995 டிசம்பர் இறுதியில் இதெல்லாம் தங்கள் ஒற்றுமையின் விளைவு என்பதை உணரத் தொடங்கினர். நீங்கள் பார்க்கும் இதெல்லாம் படிப்படியாக நடந்த முன்னேற்றங்கள்.

பெண்களுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். இமாம்வாடாவில் பெண்கள் கலவரங்களின் போது எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தார்கள் என்று சொல்லவேண்டும். குறிப்பாகத் தாய்மார்கள். பையன்கள் கல்லை விட்டெறிந்தால் பின்னால் நின்றுகொண்டு கல்லை எடுத்துக் கொடுத்தவர்கள் இந்தத் தாய்மார்கள். நாங்கள் பெண்களுக்கிடையே ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அவர்களுக்குள் கிட்டத்தட்ட அடிபிடிச் சண்டையே வந்துவிட்டது. இத்தனைக்கும் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் வேறு உடனிருந்தார். நான் தனியாகத்தான் போயிருந்தேன். இன்னொரு நாள், என்னுடன் வந்திருக்கவேண்டிய இரண்டு பெண்கள் வரமுடியாமல் போனதால்,  “இவர்கள் உங்களோடு இருக்கட்டும். அந்தப் பெண்கள் கூட்டத்தில் என்ன செய்வார்கள் என்று சொல்லமுடியாது. முஸ்லிம் பெண்களும் இந்துப் பெண்களும் ஒரே அறையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது இதுதான் முதல் தடவை” என்று சொல்லியனுப்பினார்கள். ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் போவதை வருவதை பார்த்திருக்கின்றனர். ஆனால் சேர்ந்திருந்ததேயில்லை. அந்த அறை சிறியது. நாங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தோம். நான் அவர்களிடம்  “நீங்கள் உங்கள் மனத்தில் பட்டதைத் தாராளமாக இன்று பேசலாம்” என்று சொன்னேன். “நீங்கள் எங்கள் ஆண்களைச் சந்தித்துப் பலமுறை பேசினீர்கள் என்று கேள்விப்பட்டோம். இப்போது இங்கு அமைதி நிலவுகிறது. மக்கள் சமாதானமாகிக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் அமைதியைத்தான் விரும்புகிறோம். ஆனால். . .” இந்த விதமான நீண்ட உரைக்குப் பின்னர் அவர்கள் என்னிடம்,  “ஆனால் அவர்களிடம் கண்டிப்பாகச் சொல்லிவிடுங்கள். எங்களைப் பழி போடவேண்டாம் என்று” என்றார்கள். இப்படிச் சொல்லக் கூடாதென்று சொல்லுங்கள், அப்படிச் சொல்லக்கூடாதென்று சொல்லுங்கள், இப்படி ஆரம்பித்து அவள் இதைச் சொன்னாள், இவள் அதைச் சொன்னாள், சக்வேகர் கொல்லப்பட்டபோது, ரத்தத்திற்கு ரத்தம் காணாமல் விடமாட்டோம் என்று சொன்னார்கள்; நாங்கள் அப்படிச் செய்வோம், இப்படிச் செய்வோம் என்று பேச்சு வளர்ந்து கொண்டே போய் சண்டை துவங்கிவிட்டது. இவற்றைத் தூண்டிவிடுவதற்கு இந்து முஸ்லிம் இருதரப்பிலும் ஒவ்வொருவர் இருந்தனர். இந்த மோதல்களைப் பெண்கள் மத்தியில் தூண்டிவிடுபவர்கள் யார் என்று நாங்கள் அறிந்து கொண்டோம். மற்றவர்கள் முன்னிலையில் இவர்கள் சண்டை போட்டுக்கொண்டு தங்களை வெளிக்காட்டிக் கொள்ளட்டும் என்று நாங்கள் விட்டுவிட்டோம். ஒருத்தி பேசிக்கொண்டிருந்தபோது, மற்றொருத்தி எழுந்து சென்று அவளருகில் போய் நின்றாள். ஆரம்பத்தில் எல்லோரும் உட்கார்ந்துதானிருந்தோம். பின்னர் ஒவ்வொருவராக எழுந்து நின்று கைகளை நீட்டிப் பேசத் துவங்கினார்கள். ஒருவரையொருவர் நெருங்கி வரத் துவங்கினார்கள். என்னருகில் அமர்ந்திருந்த காவலர் எழுவதற்கு எத்தனித்தார். நான் அவரிடம்,  “அவர்கள் அடித்துக் கொள்ளட்டும். வேறு என்ன நடக்கப் போகிறது? எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படட்டும் அவர்கள்” என்றேன். அந்த இரண்டு பெண்களும் மோதிக் கொள்ளத் தயாராக அருகருகே வந்தபோது, நான்  “இமாம்வாடாவில் எப்படிக் கலவரங்கள் உருவாகின்றன, யார் அதற்கு பொறுப்பாளி என்று தெரிகிறது” என்றேன். நான் இப்படிச் சொன்னதுதான் தாமதம் அவர்கள் சண்டையை நிறுத்திவிட்டு, என்னிடம்,  “என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்கள்? எங்களைக் குற்றம் சாட்டுகிறீர்களா?” என்றனர். அதற்கு நான்,  “நான் யாரையும் எதுவும் சொல்லவில்லையே? இமாம்வாடாவில் கலவரங்கள் எப்படி ஆரம்பிக்கின்றன, யார் அதற்கு பொறுப்பாளி என்று தெரிகிறது என்றுதானே சொன்னேன்?” என்றேன். அப்போது ஒருத்தி  “அவர்களுக்குப் புரியவையுங்கள் முதலில்” என்றாள்.  “யாரிடமும் நான் விளக்கப் போவதில்லை. நீங்களே உங்களைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று கூறிய நான் மேலும்,  “நான்கு நாட்களாக நான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். இளைஞர்களிடம் பேசினேன். என்னிடம் அவர்கள்  ‘எங்கள் அம்மாக்கள் எங்களிடம் அவர்கள் மோசமானவர்கள், அவர்களோடு விளையாடப்  போகாதீர்கள், இப்படி அப்படி’ என்று சொல்வதாகக் கூறினார்கள். அவர்களின் மனத்தில் நஞ்சை ஏற்றுவது நீங்கள்தான். நீங்களே சொல்லுங்கள்: இமாம்வாடா எப்படியிருக்க வேண்டும்? சமாதானமும் அமைதியும் உண்மையில் ஏற்பட வேண்டுமா வேண்டாமா? நீங்கள்தான் இங்கே இருக்கப் போகிறீர்கள். எல்லாம் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. காலை நேரங்களில் மோதல்கள் உருவாகும்போது, நீங்கள் அங்கிருக்கிறீர்கள். அவர்களைப் பரஸ்பரம் புரிந்துகொள்ள நீங்கள் உதவலாம் இல்லை, தூண்டி விடலாம். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று சொல்லும் வரையிலும் நாங்கள் இந்த இடத்தைவிட்டு எழுந்து போகப் போவதில்லை” என்றேன். பெண்களுடனான எங்கள் கருத்துப் பரிமாற்றம் இப்படித்தான் துவங்கியது. இதன் பின்னர் பொரம்பாடாவிலும் இதே போல் பெண்கள் குழுக்களை உருவாக்கியிருக்கிறோம்.

மாற்றங்கள் எதுவும் ஒரு கூட்டம் போட்ட மாத்திரத்திலேயே நடந்துவிடவில்லை. இது தொடர்ச்சியாக நடக்க வேண்டியது. நாம் உடனடியாக மாற்றத்தை எதிர்பார்க்கவும் கூடாது. அப்படியே உடனடியான மாற்றங்கள் நிகழ்ந்தால் நாம் உண்மையிலேயே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையா? நூறு சதவீத மாற்றத்தை நாம் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. மூன்று வருடங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நான் சொன்னதன் பொருள் காவல் துறையினரின் தேவை வரவில்லை என்பதுதான். இமாம்வாடாவில் காவல்துறைக்கு வேலையே இல்லாமல் போய் விட்டது. ஆனால் அவ்வப்போது நடந்த ஒன்றிரண்டு சம்பவங்கள் நாங்கள் இதுவரை கட்டியெழுப்பியவற்றையெல்லாம் தகர்த்துவிடுமோ என்ற உணர்வை எங்களிடம் ஏற்படுத்தின. எல்லாமே முடிந்துபோய்விடும் என்று எண்ணச் செய்தன. போன வருடம் ஒரு மௌல்வி மதிய நேரத் தொழுகைக்காகப் போய்க் கொண்டிருந்தார். இந்துக்கள் குடியிருப்பிலிருந்து யாரோ எறிந்த மீன் குழம்பு அவர்மேல் விழுந்து தலைமுதல் கால்வரை நனைத்ததோடு அவரது உடையையும் பாழாக்கியது. பையன்கள் சிலர் அவரருகில் வரத் துவங்கினர். முதலில் நான்குபேர் வந்தனர். பின்னர் அது ஐந்தானது. அப்படியே பத்து இருபதாக பெருகியது. ஐம்பது பேர் அவரைச் சுற்றிக் குழுமியபோது மொஹல்லாக் கமிட்டி உறுப்பினர் ஒருவர் இறங்கி வந்தார். அவர் பையன்களிடம்,  “என்ன நடக்கிறது இங்கு? எல்லோரும் போகலாம்” என்று சொன்னார். அவர்கள், அவரது சொல்லிற்கு இணங்கி அகன்றனர். அவர் பின்னர் மௌல்வியை இந்துக் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார். இதைப் பார்த்துக் கொண்டேயிருந்த பெண்கள்  “அவரது குர்தாவைத் தாருங்கள். நாங்கள் துவைத்துத் தருகிறோம்” என்றனர். மேலும் மீன்குழம்பை எறிந்தவர்களுக்கு நன்றாக வசவும் கொடுத்தார்கள். பதினைந்து இருபது நிமிடங்களில் எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டது. மௌல்வி தொழுகைக்குப் போய்விட்டார். யாரோ ஒருவர் அவருக்குத் தனது குர்தாவை அணியக் கொடுத்தார். இருபது நிமிடங்களுக்குப் பிறகு அங்கு வந்தபோது முழு அமைதி நிலவியது. 95க்கு முன்பு மட்டும் இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் பெரிய கலவரமே மூண்டிருக்கும்.

தசரா பண்டிகையின்போது மற்றொரு சம்பவம் நடந்தது. சிவசேனாவைச் சேர்ந்த பையன்கள் சிலர் ஆறாயிரம் ஏழாயிரம் ரூபாய் மதிப்புள்ள வெடிகளை வாங்கி வந்து ஒரு முஸ்லிம் வீட்டுச் சன்னல் அருகில் வெடித்தனர். ஒரு முக்கால் மணி நேரம் பட்டாசு வெடிகள் வெடித்துக்கொண்டேயிருந்தன. அத்தனையும் குண்டுவெடிகள். முஸ்லிம் பையன்கள் இதனால் ஆத்திரமடைந்தனர். அவர்கள் கோபம் ஏறிக்கொண்டே போனது. அன்று பார்த்து ஜே. ஜே. சாலைக் காவல்துறையினர் வேறு இடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். ஜே. ஜே. மருத்துவமனையில் மருத்துவ மாணவர்களுக்கும் துறை ஆசிரியர்களுக்குமிடையில் ஏதோ ஒரு தகராறு. எனவே பொலீஸார் அனைவரும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தச் சம்பவம் இரண்டு மணி நேரம் கழித்துதான் அவர்களின் கவனத்திற்கு வந்தது. முஸ்லிம் பையன்கள் மேலும் ஆத்திரமடைந்தனர். அவர்களைச் சமாதானப்படுத்தி கோபத்தை மட்டுப்படுத்த எங்களுக்கு முழுமையாக பதினெட்டு நாட்கள் பிடித்தன. முஸ்லிம் பையன்களோ நாங்கள் முஸ்லிம்கள் என்பதால்தான் பொலீஸ் அசிரத்தையாக இருந்தது என்று எண்ணினார்கள்.  “கண்ட்ரோல் ரூமில் யாரும் நாங்கள் சொல்வதைச் சிரத்தையுடன் கேட்கவில்லை” என்றார்கள். ஆனால் நடந்ததோ வேறு. பொலீஸார் வேறு இடத்தில் பணியிலிருந்தார்கள் என்பது ஓரு பக்கமிருக்க, கண்ட்ரோல் அறையிலிருந்தவர்கள் இந்த நிகழ்ச்சியைப் பெரிய விஷயமாக நினைக்கவில்லை. கண்ட்ரோல் அறையிலிருந்தவர்  ‘பட்டாசுதானே வெடிக்கிறார்கள்? இதில் ஆத்திரமடைய என்ன இருக்கிறது? யாரும் வேண்டுமென்று இப்படிச் செய்திருக்கமாட்டார்கள்’ என்று தவறாக எடை போட்டுவிட்டார். விளைவு அச்சம்பவத்தில் ஈடுபட்ட பையன் யார், அவன் பெயரென்ன, அவன் இதுபோன்ற சம்பவங்களில் முன்பும் ஈடுபட்டிருக்கிறானா என்பதையெல்லாம் சரியாக அறிந்துகொள்ள எங்களுக்குக் கொஞ்சகாலம் பிடித்தது. அவ்வப்போது இப்படி ஏதாவது நிகழ்கிறது. எனவேதான் அமைதியைக் கொண்டு வருவது தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய ஒரு முயற்சி.

ஸ்பாரோ பயிலரங்கில் ஹர்பன்ஸ் கவுர் மற்றும் பக்தி கௌர் உடன் ஜெயா ஸ்ரீவாஸ்தவ்
©
Sound & Picture Archives for Research on Women

SPARROW : ஸ்பாரோ – SOUND & PICTURE ARCHIVES FOR RESEARCH ON WOMEN

(மகளிர் பற்றிய ஆராய்ச்சிக்கான ஒலி மற்றும் ஒளிப்பதிவுகளின் ஆவணகம்)

குப்பையைக் கிளறி ஒரு நெல்மணியைத் தேடி எடுத்த குருவியின் கதையைக் குழந்தைகளாக இருந்தபோது நாம் அனைவருமே கேட்டிருப்போம். ஸ்பாரோவும் அந்தப் பறவையைப் போல எளியது. இதுவும் வரலாற்றின் இடுக்குகளிலிருந்து பெண்களின் வாழ்வு, வரலாறு மற்றும் மொழி தொடர்பான தகவல்கள் என்னும் தானிய மணிகளைத் தேடிக் கொண்டிருக்கிறது.

பெண்களின் மீதான ஆராய்ச்சியை ஆழப்படுத்த, இதுவரைக் கண்டறியப்படாத அனுபவங்களையும் வெளிப்பாடுகளையும் கவனம் பெறவைப்பதில் ஆர்வமும், வாய்மொழி வரலாற்றையும் காட்சி ரூப வடிவங்களையும் உட்படுத்துவதில் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் கொன்டவர்களால் நடத்தப்படும் அமைப்பு ஸ்பாரோ. அது வெறும் ஆவணக் காப்பகமோ ஆலோசனை மையமோ மட்டும் அல்ல. பெண்களை விவாதத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஒருங்கிணைத்து பிரச்சினைகளின் தீவிரத்தை உணர வைப்பது அதன் பணி. பல கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஸ்பாரோவின் பணியைப் பாராட்டிப் பல வழிகளில் உதவி வருகிறார்கள்.

ஸ்பாரோவின் குறிக்கோள்கள்

1. பெண்களின் வாழ்வோடும் பணியோடும் தொடர்புடைய வாய்மொழி வரலாறு, ஒலிநாடாக்கள், இசைத் தொகுப்புகள், புகைப்படங்கள், ஓவியங்கள், சுவரொட்டிகள், படங்கள், ஒளி நாடாக்கள் போன்றவற்றைச் சேகரிப்பது.

2. பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை, வரலாறு, மேம்பாடு தொடர்பான விவரணைப் படங்கள், ஒளி நாடாக்கள் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிப்பது.

3. பெண்களுக்கான தகவல் மையமாகச் செயல்படுவது.

4. பெண்ணிய வரலாற்றில் ஆர்வம் கொண்ட ஆய்வாளர்களுக்கு விவாதத்திற்கான வெளியை உருவாக்குவது.

5. பெண்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய பயிலரங்குகளை ஏற்பாடு செய்வது மற்றும் பெண்களோடு தொடர்புடைய பண்பாட்டுப் பொருட்களை பாதுகாப்பது.

ஸ்பாரோவின் சேகரிப்பில் சில விலை மதிப்பற்ற புகைப்படங்களும், வாய்மொழி வரலாற்று ஆவணங்களும், சுவரொட்டிகளும் ஒளி நாடாக்களும் உள்ளன. 1994இல் ஸ்பாரோ கல்லூரி மாணவர்களிடையே  ‘இனவாதம், வன்முறை, பெண்கள்’ என்ற மூன்று நாள் வாய்மொழி வரலாற்று மற்றும் காட்சி ரூப பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது. பாடல்கள், திரைப்படங்கள், ஓவியங்கள், சுவரொட்டிகள், அனுபவப் பதிவுகள் என இது நிகழ்ந்தது.

ஸ்பாரோவிற்கு இன்னும் பல எதிர்காலத் திட்டங்கள் உள்ளன.

கீழே குறிப்பிட்டுள்ள செயல்பாடுகளுக்கு ஆதரவு கிடைக்கும் என்று அது நம்புகிறது.

1. வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள்.

2. ஒலி-ஒளிப் பதிவுகள்.

3. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கருத்தரங்கங்கள், பயிலரங்குகள்.

4. அச்சு ஆவணங்கள் சேகரிப்பு.

5. கட்டிட நிதி ஏற்படுத்துதல்.

6. அமைப்பின் பராமரிப்பு.

7. வெளியீடுகள்

1997 முதல் 99 வரை ஸ்பாரோ பட்டப் படிப்பு மாணவர்களுக்காக ஆறு வாய்மொழி வரலாற்று பயிலரங்குகளும் ஆறு காட்சிவடிவ வரலாற்று பயிலரங்குகளும் நடத்தியது. இது தவிர, உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவி மாணவர்களுக்காக இரண்டு திரைக்காட்சிப் பயிலரங்குகளும் நடத்தியிருக்கிறது. இதுவரை பதினான்கு புத்தகங்கள், இந்தப் பயிலரங்குகளில் செய்யப்பட்ட பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு, வெளியிடப்பட்டுள்ளன. பிரமீளா என்ற நடிகை, கனகா மூர்த்தி என்ற சிற்பி, தமயந்தி ஜோஷி என்ற நாட்டியக்கலைஞர், சுஷ்மா தேஷ் பாண்டே என்ற அரங்கவியல் செய்தியாளர், மாயா ராவ் என்ற நாட்டிய, நாடகக் கலைஞர் மற்றும் நீலா பஞ்ச் என்ற பாரம்பரிய ஓவியர் ஆகியோரைப் பற்றிய ஒரு மணி நேர ஒளிப்படங்கள், ஒளித்திரைக் குறிப்புகள் என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளன.

முதல் மகளிர் ஆவணகத்தை உருவாக்கும் முயற்சியில் வரும் ஆண்டுகளில் ஸ்பாரோ தன்னை ஈடுபடுத்த உள்ளது. ஸ்பாரோ பெண்களோடு தொடர்புடைய பொருள்களையும் படைப்புகளையும் தொகுத்துப் பாதுகாப்பதோடு, வரலாற்றுப் பயிலரங்குகள், ஒலி-ஒளிப் பதிவு முயற்சிகள், மாணவியர் மற்றும் ஆசிரியர்களோடு இணைந்த பயிலரங்குகள், வெளியீடுகள் மற்றும் மைக்ரோஃபிலிம் பதிவுகள் என தனக்குத் தேவையானவற்றை தானே உருவாக்கிக் கொள்ளும் பணியைத் துவங்கும். திரைப்பட விழாக்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சிகள் இவற்றிற்கு ஏற்பாடு செய்வதும் ஸ்பாரோவின் எதிர்காலச் செயல்திட்டங்களில் ஒரு பகுதியாகும்.

இன்றுவரை ஸ்பாரோவிற்கென்று சௌகரியமான கூடு ஒன்று இல்லை. விரைவில் கிடைத்துவிடும் என்று அது நம்புகிறது.


ஆங்கிலப் பிரதி உருவாக்கம்: சி. எஸ். லக்ஷ்மி

இனக்கலவர நினைவுகள்: குமுறும் குரல்களை மொழிபெயர்த்தது: மனுஷ்யபுத்திரன்

புகைப்படங்கள்: ப்ரியா டிஸூஸா

நூலின் பதிப்பாசிரியர்கள்: அ. ஸ்ரீனிவாசன், எம். சிவசுப்பிரமணியன்

குறிப்பு:

இந்தப் பிரதியும் கவிதைகளும், புகைப்படங்களும் ஸ்பாரோ அமைப்பின் காப்புரிமைக்கு உட்பட்டவை. இவற்றை யாரும் எந்தத் தளத்திலும் வேறு எந்தப் பதிப்பிலும் உபயோகிக்க அனுமதி இல்லை.

Series Navigation<< ஜமீலா நிஷாத்தின் தலைப்பிடாத சில கவிதைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.