அசைவத்தை ஏன் கைவிடல் வேண்டும்?

This entry is part 16 of 23 in the series புவிச் சூடேற்றம்

சென்ற பகுதியில், இளைஞர்கள் இயக்கங்களைப் பற்றிச் சொல்லிவிட்டு, கடைசியில் கனேடிய கிழவர் டேவிட் சுஸூக்கி பற்றி எழுதியிருந்தேன். சுஸூக்கியைவிட, இன்னும் வயதான இன்னொரு பருவநிலை மாற்ற ஆர்வக் கிழவரைப் பற்றி இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம். இவர், பிரபல பி.பி.சி. ஆவணப் பட இயக்குனர் டேவிட் ஆட்டன்பரோ. சுஸுக்கி, இவரைப் போல, சி.பி.சி. யின் ஆவணப் பட இயக்குனர்.

அட, சினிமா இயக்குனருக்கும் புவி சூடேற்றத்திற்கும் என்ன சம்பந்தம்? அதுவும், 93 வயதான பழம் பெரும் இயக்குனர் என்ன செய்து விடப் போகிறார்? இந்தக் கேள்விகள் உங்கள் மனதில் தோன்றுவதற்கு முன்பு, ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். டேவிட் சுஸூக்கியாகட்டும், ஆட்டன்பரோ ஆகட்டும், நம்மூர் மசாலா பட இயக்குனர்கள் அல்ல. ஆட்டன்பரோ, தன்னுடைய இளைமைப் பருவத்திலிருந்து, இயற்கையை பதிவு செய்யும் ஆவணப் பட இயக்குனர். இயற்கையை நேசிக்கும் இவர், சமீபத்தில், நெட்ஃப்ளிக்ஸில், தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதுடன் , அதை ஒரு வாக்குமூலமாகவும் வழங்கியுள்ளார். இயற்கை அழிவதால், இவருக்கு அதிக நஷ்டமில்லை. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வாழ்க்கை மிஞ்சியுள்ள இவர், பல சர்வதேச பருவநிலை கருத்தரங்குகளில், துடியாக, தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்; இந்தப் பிரச்சினைக்கான தீர்வுகளையும் முன் வைக்கிறார். ஒரு 70 ஆண்டுகளாக இந்தப் பிரச்சினையை மிகவும் நெருக்கமாகப் பார்த்த லாப நோக்கற்ற ஒருவரால் மட்டுமே, தீர்வுகளை முன் வைக்க முடியும்.

முதலில், பிரச்சினையை, தெளிவான புள்ளி விவரங்களுடன் முன் வைக்கிறார். பிறகு, அதற்கான தீர்வுகளையும் சொல்கிறார். சும்மா, நம்பிக்கையூட்டும் பூச்சுற்றல் அல்ல இது. இவர் சொல்லும் புள்ளி விவரங்கள் மற்றும் தீர்வுகள், இரண்டையும் இந்தப் பகுதியில் பார்ப்போம். என் அனுபவத்தில், முதன்முறையாக, ஒரு ஆவணப்படத்தைப் பல முறை பார்த்ததோடு, உட்கார்ந்து குறிப்புகளும் எடுத்துக் கொண்டேன். இந்தக் கட்டுரைக்காக அதைச் செய்தேன் – ஆவணப்பட இயக்குனராக அல்ல!

இவருடைய வாழ்க்கையை சில பகுதிகளாக பிரித்து, தன் வாழ்நாளில், இயற்கையை எப்படியெல்லாம் மனிதர் மாற்றியுள்ளார் என்று விவரிக்கிறார்.

பத்தாண்டு காலம்உலக மக்கட்தொகை (பில்லியன்)காற்றில் கரியமில அளவு (பி.பி.எம்.)பூமியின் வனப்பரப்புகுறிப்பு
19402.328066%அது ஒரு வனாக்காலம்!
19502.731064%
19603.031562%
19905.936046%முப்பதாண்டில், இரட்டிப்பு ஜனத்தொகை, பெருமளவு வனயிழப்பு
20207.841535%இயற்கை அழிப்பின் வேகம் தணியவில்லை
  • குறிப்பாக, இவர் ஆஃப்ரிக்க காடுகளில் தங்கி, வனவிலங்குகளைப் படம் பிடித்தவர். இங்கு, திறந்த வெளியில் மிக வேகமாக ஓடும் காட்டு எருமைகள் பல்லாயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் ஓடுபவை. இவற்றின், ஓட்டத்தால், நிலம் பண்படுகிறது. பண்பட்ட நிலத்தில், பல உயிர்கள் செழிக்கின்றன. இன்று, இந்த நிலப்பரப்பு, சில நூறு ஹெக்டேர் என்ற அளவிற்கு குறைந்து விட்டது மட்டுமல்லாமல், ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டதால், இங்கு வாழும் பல உயிரினங்கள் மறைந்து போய்விட்டன
  • எந்த ஒரு ஆரோக்கியமான காட்டிற்கும், ”பல்லுயிர்ச்சூழல்” (biodiversity) தேவை. ஒரு காட்டின், உணவுச் சங்கிலிக்கு, இது முக்கியம். இந்த உயிர் பரப்பு, நம் பூமியை சரியான சமநிலையில் (equilibrium) வைக்க மிகவும் முக்கியம். எந்த ஒரு உயிரினம் அழிந்தாலும், அத்துடன், அதைச் சார்ந்த உயிரினமும் பாதிக்கப்படும். இந்த பாதிப்பு, நமக்கு உடனே தெரிவதில்லை. உதாரணத்திற்கு, இந்தோனீசியாவில் உள்ள காடுகளில் குரங்குகள் (Orangutan) வேட்டையாடப்பட்டு, மிகவும் குறைந்துவிட்டன. இதனால், என்ன பாதிப்பு? இவை தாவித் திரிந்த மரங்களும் பாதிக்கப்படுகிறது. மரங்களை சுற்றியுள்ள சின்ன உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. இவற்றை அழிப்பதோடு நில்லாமல், காடுகளையும் அழித்தால், பல உணவுச் சங்கிலிகளையும், இந்த பூமியின் சமநிலையையும் குலைத்து விடுகிறோம்
  • காடுகளை அழித்து, பயிர்களை நடுகிறோம். பயிர்களும், கரியமில வாயுவை உறிஞ்சுகின்றன. இதனால், என்ன பெரிய மாற்றம் வரப் போகிறது? இவ்வாறு சொல்பவர்கள், பல விஷயங்களை விட்டு விடுகிறார்கள்.

1) பயிர் என்பது ஒரே வகையான செடி/மர வகை

2) பயிர்களால், உயிர்வாழக்கூடிய உயிரினங்கள், அதே பரப்பளவில் உள்ள காட்டைவிட, மிகக் குறைவு. உதாரணத்திற்கு, ஒரு ஹெக்டேர் நிலத்தில் பயிரிட்டால், நுண்ணுயிர்களைத் தவிர்த்து, அதில் செழிக்கும் மற்ற உயிர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், அதே ஒரு ஹெக்டேர் நிலப்பரப்புடைய காட்டில், பலநூறு மடங்கு உயிரிங்கள், உணவுச் சஞ்கிலியை உருவாக்கி வாழ்கின்றன.

3) பயிர், வருடம் முழுவதும், கரியமில வாயுவை உறிஞ்சுவதில்லை

  • கடந்த 100 ஆண்டுகளில், 3 டிரில்லியன் மரங்களை, மனிதர் வெட்டிவிட்டான் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை மீட்க மனிதரால் இயலாது.
  • நிலத்தில் மட்டுமல்ல, கடலிலும் இதே கதிதான். 1950 –களில், மிகப் பெரிய மீன் பிடிக்கும் எந்திரக் கப்பல்கள், அரசாங்கச் சலுகையுடன், கடலில் உள்ள பலவகையான உயிரினங்களை உணவிற்காக சகட்டு மேனிக்குக் கொல்லத் தொடங்கின. கடலின் ”பல்லுயிர்ச்சூழல்” இதனால் ஏராளமாகப் பாதிக்கப்பட்டது. கடலில் உள்ள உணவுச் சங்கிலி, காட்டைப் போல மிகவும் முக்கியம். சிறு மீன்கள் புழுக்களையும், சிறு மீன்களைப் பெரு மீன்களும், பெரு மீன்களை இன்னும் பெரிய சுறா/திமிங்கலம் போன்ற உயிரனங்களும், உணவாகக் கொண்டுள்ளன. ஒரு வகை மீனினம் முழுவதும் அழிக்கப்பட்டால், இந்த உணவுச் சங்கிலி பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது
  • கடலில் பிடித்த மீனை, இந்தக் கப்பல்கள் தரைக்கு கொண்டு செல்லுகின்றன. உணவுப் பகுதியைத் தவிர, இந்த உயிரினங்களின் எலும்புப் பகுதிகள் கடலுக்குப் போய் சேருவதில்லை. கடலில், இவை, கடலில் அடித்தளத்திற்குச் செல்லும். இவை சிறு உயிரினங்களுக்கு உணவாக மாறுகின்றன, கடலின் வெப்பத்தை சரி செய்யும் அமைப்பாகவும் அமைகின்றன. பெருமளவு மீன்பிடிப்பினால், கடலில் கரியமில வாயுவும் கூடுகிறது.
  • கடலில், மனித நடவடிக்கைகள், அதன் பல்லுயிர்ச்சூழலை 90% குறைத்துவிட்டன. இன்றைய கடலில் நீர் இருக்கிறதே தவிர, உயிர் இல்லை. முழுவதும் மனிதனால் வேட்டையாடப்பட்டுள்ளது. உயிரற்ற கடலின் எதிர் நடவடிக்கை என்னவாக இருக்கும்? உள்வாங்கிய ஏராளமான கரியமில வாயுவை வெளியேற்றுவது! கடலில் குடியிருந்த உயிரனங்களைக் கொன்ற மனிதனுக்கு, இயற்கையின் பதிலடி இது!
  • நாம் அறிந்தவரை, இதுவரை பூமியில் உயிர்கள் வாழத் தொடங்கிய காலத்திலிருந்து, ஐந்து மிகப் பெரிய உயிரழிவுகள் (mass extinctions) நடந்துள்ளன. இந்தப் பெரும் உயிரழிவுகள் ஒவ்வொன்றிற்கு முன்னரும் கரியமில வாயு அளவு உயர்வு ஏராளமாக இருந்தது. ஆனால், இன்றைய சூழ்நிலைக்கும், அதற்கும் ஒரு முக்கிய வித்தியாசம். அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு இடையே சில மில்லியன் ஆண்டுகள் இடைவெளி இருந்தது. ஆனால், தொல்லெச்ச எரிபொருள், வெறும் 200 ஆண்டுகளில், நம்மை விளிம்பிற்குத் தள்ளிவிட்டது!
  • இன்றைய உலகின் பறவைகள் நிலை என்ன? இன்றைய பறவைகளில் 70%, நாம் வளர்க்கும் கோழி மற்றும் குஞ்சுகள்! இயற்கையில், சுதந்திரமாக வலம் வந்த பறவைகள், மனிதனின் வேட்டையில் மடிந்து விட்டன.
  • சரி, உலகில் எத்தனையோ விதமான பாலூட்டிகள் (mammals) உள்ளன, அல்லவா? தவறு. உலகின் 33% பாலூட்டிகள், மனிதர்கள். 60%, நாம் உண்பதற்காக வளர்க்கும் ஆடு, மாடு, பன்றி போன்றவை! சின்ன எலியிலிருந்து, ராட்சச திமிங்கலம் வரை, வெறும் 4% தான்! வெற்றிகரமாக இயற்கையை அழித்துவிட்டதற்கு இதற்கு மேல் என்ன சாட்சி வேண்டும்?
  • 60% பண்ணைப் பிராணிகளை வளர்க்க நாம் என்னவெல்லாம் செய்கிறோம்? காடுகளை அழிக்கிறோம். அழித்த காடுகளில், பயிர் வளர்த்து, பண்ணைப் பிராணிகளுக்கு உணவாக அளிக்கிறோம். நதிகளைக் காலியாக்குகிறோம். இந்த பண்ணைப் பிராணிகளை, இறைச்சிக்காக, தொழிற்சாலை உற்பத்தி முறையில் பெருமளவில் சாகடிக்கிறோம். இறைச்சியை உண்டு நாம் உயிர் வாழ, நோய் நொடிகளுடன் போராடுகிறோம்

இதற்கெல்லாம் தீர்வு உண்டா? நிச்சயமாகத் தீர்வு உண்டு என்கிறார் ஆட்டன்பரோ. அவசரத்தில் நம் கிரகத்தைத் தொலைக்கத் தேவையில்லை; மன்னிக்கவும், நம்மைத் தொலைக்கத் தேவையில்லை.

  1. பூமியின் நிலத்தை ஏன், எதற்காக மனிதன் ஆக்கிரமித்தான்? உணவு உற்பத்தி செய்யவா? உலகின் பல்லுயிர் சூழலை எதற்காக மனிதன் அழித்தான்? உணவுக்காக. பூமியின் காடுகளை அழிக்க முக்கிய காரணம், ஏராளமான பிராணிகளை உணவிற்காக (domesticated animals) வளர்த்து, பிறகு அவற்றை உணவுக்காகக் கொல்வதற்காகத்தான். இந்தப் பண்ணைப் பிராணிகள் ஏராளமாக இனப்பெருக்கம் செய்யப்பட்டு, அவற்றின் உணவிற்காகக் காடுகள் அழிக்கப்படுகின்றன. மேற்குலகில் வளர்க்கப்படும் சோளம் மற்றும் கோதுமை தானியங்கள் மனிதர்களை விட பண்ணைப் பிராணிகளுக்கே உணவாக அளிக்கப்படுகின்றன. இயற்கையில் இத்தனை மாடுகள், பன்றிகள், ஆடுகள் மற்றும் கோழி சாத்தியமே இல்லை. இவை இறைச்சியாகும்வரை ஏராளமான நிலம், நீர் மற்றும் பல (மருந்துகள், ரசாயனங்கள்) வளங்கள் வீணாக்கப்படுகின்றன. பண்ணைப் பிராணிகள், இறைச்சிக்காக ராட்சச தொழிலகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுதல், அங்கு அவை எந்திரங்களால் கொல்லப்படுவது என்றுதொழில் மயமாக்கப்பட்ட மாமிச உற்பத்தி யாவுமே மிகப் பெரிய வள விரயம். இறைச்சியை பதப்படுத்துதல், மற்றும் குளிர் வசதிகள், மற்றும் ராட்சச லாரிகளில், பல கோடி கிலோ மீட்டர்கள், டீசலை எரித்து, அவசர உணவகங்களுக்கு கொண்டு செல்லுதல் என்று இந்த தொடரும் விரயச் சங்கிலி ஒரு மிகப் பெரிய கரியமில வாயு உற்பத்திக் கொடுமை. இதில், இந்த பிராணிகள் பராமரிப்புக்காக பிராணி வைத்தியர்கள், மற்றும் மாடுகள் வெளியேற்றும் மீதேன் புவி சூடேற்ற வாயு என்று இந்த விரயப் பட்டியல் நீளும்.

மனிதர்களில், 10%, வருடம் ஒன்றிற்கு சைவ உணவிற்கு மாறினால், உலகில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். நாம் விவரித்த வள விரயம் 10% குறைந்தால், இன்னும் 50 வருடங்களில், நம் கரியமில வெளியேற்றம் மிகப் பெரிய அளவில் குறைக்க முடியும்.

அத்துடன், சமீபத்தில் அபகரித்த காடுகளை, இயற்கையிடம் வருடத்திற்கு 5% வாக்கில், விட்டு விட்டால்கூட, இந்த மட்டுப்படுத்தல் இன்னும் மேம்படும். அசைவத்தைக் குறைத்து, பிறகு கைவிட்டால், அது, நம்மை நாமே காக்கும் செயலாகும். தவிர, பூமியில் வாழும் மனிதர்களுக்கு இத்தனை பயிர்கள் தேவையில்லை. நாம், தாரளமாக உற்பத்தியைக் குறைக்கலாம்.

இத்தகைய பிரச்சினைகள் உருவாவதில் மக்கட்தொகைப் பெருக்கம் ஒரு அங்கம் வகிக்கிறது. அதற்கும் தீர்வு உண்டு.

  1. சமீபத்தில் பயிர்நிலமாக மாற்றப்பட்ட நிலங்களை நாம் மீண்டும் காடுகள் உருவாக விட்டு விடுதல் அவசியம். கோஸ்ட ரீகா என்ற மத்திய அமெரிக்க தீவு, கடந்த 25 ஆண்டுகளில், இதை நிரூபித்துள்ளது. அதற்கு முன், அங்கும் பயிருக்காக, சகட்டு மேனிக்கு, காடுகளை அழித்து வந்தனர். கடந்த 25 ஆண்டுகளாக, அப்படி மாற்றப்பட்ட நிலத்தில் பாதி நிலம் காடுகளாக மீண்டும் மாறிவிட அங்கு அரசாங்கம் முடிவெடுத்தது. அங்கு பல்லுயிர்ச் சூழல் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

காடுகளில் வாழும் பல விதமான உயிர்கள், இயற்கையாக, பயிர்நிலத்தை விட அதிக கரியமில வாயுவை உறிஞ்சுகின்றன. உலகில் உள்ள பயிர்நிலங்களில், மூன்றில் ஒரு பங்கு நிலம் தேவையற்றது. நாம் அசைவம் உண்பதை நிறுத்திவிட்டால், நிச்சயமாக, இந்தப் பங்கை வனங்களாக மாற்ற முடியும். இவ்வாறு மாற்றப்பட்ட காடுகள், புதிய உயிரினங்களுக்கு இருப்பிடமாகவும் மாறும். அங்குள்ள மற்ற உயிரினங்களுடன், இந்த பூமியைச் செழிப்படையச் செய்யும் பணி, மேலும் துரிதமாகும்.

  1. பூமியின் இன்னொரு மிக முக்கியப் பிரச்சினை மக்கட்தொகை. நம் பூமியின் அளவும், வளங்களும் ஒரு அளவிற்கு உட்பட்டவை. தமிழ் கவிஞர்கள் பாடல்களில் இயற்கை அன்னை அளவில்லாமல் அள்ளித் தருபவள் என்பதெல்லாம் சும்மா.

இந்த அளவான வளங்களை அனுபவிக்க அளவில்லா மக்கட்தொகை சரிப்பட்டு வராது. என்னதான் மாற்றங்கள் செய்தாலும், மக்கட்தொகை வளர்ந்து கொண்டே போனால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. கடந்த 100 ஆண்டுகளின் மக்கட்தொகை வளர்ச்சி தொடர்ந்தால், 2100 –ஆம் ஆண்டில் பூமியில் 11 பில்லியன் மனிதர்கள் இருப்பார்கள். இந்த மக்கட்தொகை அளவைச் சமாளிக்க பூமியின் வளங்கள் போதாதவை. நிச்சயமாக, மனிதர்கள் முட்டாள்கள் அல்ல. மருத்துவம், கல்வி இரண்டும் வளர்ந்த எந்தப் பகுதியிலும், இந்த மக்கட்தொகை வளர்ச்சி ஏராளமாக அதிகரிக்கவில்லை.

உதாரணம், இந்தியாவின் உத்தராகண்ட், ஜார்கண்ட், பீஹார் மாநிலங்களில் கல்வி மற்றும் சுகாதாரம் பின் தங்கியிருப்பதால், இவற்றின் மக்கட்தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. தென் இந்தியாவில், கல்வி மற்றும் சுகாதாரம் வளர்ந்துள்ளதால், ஓரளவு ஜனத்தொகை வளர்ச்சி (பெரும்பாலும், நல்ல மருத்துவத்தால், நாம் முன்பைவிட அதிக்காலம் வாழ்கிறோம்) சமாளிப்பில் உள்ளது. இந்தப் பணிகளை வளரும் நாடுகளில் துரிதப்படுத்தினால், 2050 அல்லது 2060 –க்குள், நம் பூமியுடைய மக்கட்தொகை 9 பில்லியனைத் தொட்டு, பிறகு குறைவதற்கும் வாய்ப்புள்ளது.

  1. இயற்கை, என்றுமே பயன்படுத்துவது, புதுப்பிக்கக்கூடிய சக்தி மட்டுமே. ஒவ்வொரு நாளும் இயற்கை மூன்று டிரில்லியன் வாட் சூரிய சக்தியை, உலகில் உள்ள செடிகள், மரங்கள் பயன்படுத்துகின்றன. புதுப்பிக்கக்கூடிய சக்திகளைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் நம்மிடம் நிறைய உள்ளது. இயற்கையைப் போலவே, நாம், தொல்லெச்ச எரிபொருள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டும். சிலரது லாபநோக்குக்காக இயங்குவதை விடுத்து, மனிதகுலம் நிச்சயமாக பெரும் மக்கள் திரளுக்கான நல்ல தீர்வுகளை உருவாக்கும். நாளைய இளைஞர்கள், இந்த மாற்றுசக்தி முயற்சிகளுக்கு நிச்சயம் நல்ல பங்களிப்பதோடும் இன்றைய வயதானவர்கள் ஏன் இப்படியெல்லாம் சிந்திப்பதில்லை என்று வியக்க வைப்பார்கள்
  2. அடுத்த முக்கிய முயற்சி, கடலைப் பற்றியது. எந்திர மீன் பிடிக்கும் கப்பல்கள், சர்வதேச கடல் எல்லைகளைத் தாண்டி மீன் பிடிப்பதை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு நாடும், அதன் எல்லைக்குள் உள்ள கடலில் மீன் பிடித்தாலே போதும். இதை ஒரு பத்தாண்டுகள் கடைபிடித்தாலே போதும், மீண்டும் கடல், தன்னுடைய பழைய நிலைக்கு வரத் தொடங்கிவிடும். மறைந்த எல்லா உயிரினக் குடும்பங்களையும் (habitat) மீட்க முடியாமல் போகலாம். ஆனால், எஞ்சியுள்ள உயிரினக் குடும்பங்களை மீட்க இந்த முயற்சி பெரிதாக உதவும். இந்த உயிரினங்கள், கடலை மீண்டும் ஒரு கரியமில வாயு உறிஞ்சியாக மாற்றும் வாய்ப்பும் உள்ளது. ஐ.நா., இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நம் இனத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நாடுகள் இந்த முயற்சிக்கு உதவும் என்று நம்புவோம்
  3. ஆக, டேவிட் ஆட்டன்பரோ சொல்வது சுருக்கமாக, இதுதான்: நம் எதிர்காலம் நன்றாக இருக்க ஒரே வழி – நம் பூமியைக் காடுமயமாக்குவது.

வனங்களை மனிதமயமாக்காமல் மனித வாழ்வை வனவாசமாக, இயற்கைவசமாக, ஆக்குவதே நல்ல வழி.

Series Navigation<< பருவநிலை மாற்ற ஆர்வலர்கள்நம் ஸ்திரத்தன்மைக்கான 9 எல்லைகள் என்ன? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.