
பூர்வாசிரமத்தில் நான் முயலாகத்தானிருந்தேன்.
ஒவ்வொருவனும் என்னைக் குழம்பு வைத்துண்ணவே விரும்பினான்.
தற்காப்புக்காக முள்ளம்பன்றியாய் என்னை மாற்றிக்கொண்டேன்.
இப்போது எவனும் என் காதைத் திருகுவதில்லை.
என் காலை ஒடிக்க வளைப்பதுமில்லை.
வேட்டைக்காரன்கள் என் எல்லைக்குள் வந்தால்
முட்களை விரிக்கிறேன். ஒருமுறை ஒரு புலியின்
தாடையைக் கிழித்தேன். அதுமுதல் வேட்டைக்காரன்களின்
அதிகாரத்துக்கு எதிராயிருக்கிறேன்.
நீ எதிரணியிலிருக்கிறாய்.
அதிகாரத்தின் கிளியாயிருக்கிறாய். சிலசமயம்
அதன் அம்பாயிருக்கிறாய்.
அதிகாரத்தின் பிறப்பிடம் நீதியின் புதைகுழியென்பது
உனக்குப்புரியும் நாளொன்று வரும்.
உன் சுதந்திரத்துக்கும் என் உரிமைக்கும்
எதிரானதென்று புரியும். அன்று
நீயும் முள்ளம்பன்றியாவாய்.