- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தேழு
1999 அம்பலப்புழை
திலீப் ராவ்ஜி விடியலில் சங்கரனை நினைத்தபடி எழுந்தார். அரசூர் சின்னச் சங்கரன். தெரிசா-சாரதாம்மாளை வைப்பாட்டியாக வைத்திருப்பவர். மருதுவின், அவன் லட்சியமே செய்யாவிட்டாலும், தகப்பன். ஓய்வு பெற்ற இந்திய அரசு துணை காரியதரிசி.
என்ன செய்திருப்பார்கள் அவரை? காத்மாண்டுவில் இருந்து தில்லி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகள் சின்னச் சங்கரனை இந்நேரம் சுட்டுக் கொன்றிருக்கலாம்.
ரிடையர் ஆன கிழவர்கள், எவ்வளவுதான் முக்கியப் பதவியை வகித்திருந்தாலும், ஓய்வு பெற்றவர் என்றால் கடுகளவு கூட முக்கியத்துவம் இல்லாமல் போன, பல் பிடுங்கப்பட்ட பாம்புகள். சுட்டுப் பொசுக்கி விளையாட சங்கரனின் சதை போட்டுப் பருத்த தென்னிந்திய உடம்பு வாகான ஒன்றாக இருக்கக் கூடும்.

சங்கரனைச் சுட்டுத் துளைத்துக் கொன்றிருந்தால் தெரிசாம்மாவுக்கு என்ன ஆறுதல் சொல்ல? அவள் லண்டனிலிருந்து வந்து கொண்டிருப்பாளோ? அம்பலப்புழை வந்து என்ன பிரயோஜனம்? தில்லியில் கேரள பிரமுகர்களை சந்தித்து ஏதாவது செய்ய முடியுமா என்று முயற்சி செய்வாளோ.
திலீப் ராவ்ஜிக்குத் தெரிந்த பிரமுகர்களை விட அதிகம் அரசு அதிகாரிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவள் அறிவாள் என்பதை திலீப் ராவ்ஜியும் அறிவார். அறுபதைத் தொடும் இந்த நாளிலும் தெரிசாவின் வசீகரத்தால் கவரப்படுகிறவர்கள் நிறைய என்பது அவருக்கு நினைவு வந்தது.
சின்னச் சங்கரன் பிழைத்துக் கிடக்கட்டும். அத்வானியும் வாஜ்பாயியும் அவரைப் பிழைப்பித்து வெளியே கொண்டு வருவார்கள். பிரதம மந்திரியும் உள்துறை அமைச்சரும் சங்கரனுக்கு மட்டுமில்லாமல் மற்ற பிரயாணிகளுக்கும் நல்க வேண்டிய அடிப்படை உதவி இல்லையா அது.
திலீப் ராவ்ஜி இன்றைய காரியங்கள் எவை என்று எண்ணிப் பார்த்தார். சின்னச் சங்கரன் விஷயம் நீங்கலாக மற்றவை சீராக நகர்ந்து கொண்டிருக்கும் தினமாதலால் எல்லாக் காரியங்களும் திட்டமிட்டபடி நடந்தேறுகின்றதைக் கவனித்து அவருக்கு சந்தோஷம் ஏற்பட்டது.
மீசையை நறுக்க வேண்டும் என்று ஒரு காரியம் மனதில் குறித்து வைத்திருந்தோமே, அது என்ன ஆயிற்று? மறந்து போச்சு. போகட்டும், செய்யாவிட்டால் உலகம் தலைகீழாகப் புரட்டப்பட்டு பிரளயம் ஏற்படுத்த வைப்பவை இல்லை அவருடைய காரியங்கள்.
முடி வெட்டி வரலாம் என்று மனதில் குறித்து வைத்தது நாலைந்து நாளாக அப்படியே இருக்கிறது. முடி வெட்டப் போக ஒரு சோம்பல். ஒவ்வொரு தடவை போகும்போதும் தலைக்கு சாயம் தேய்க்கணுமா சார் என்று முடிதிருத்தும் கடையில் கேட்பார்கள். அறுபத்தைந்து வயதில் சாயமும் மற்றதும் எதற்கு என்பார் திலீப். தன் எழுபதுகளில் தான் திலீப்பின் அப்பா பரமேஸ்வரன் விமானப் பயணத்தின் போது மறைந்து போனார். மகன் திலீப்புக்கு அறுபதுகளில் வயது சஞ்சரிக்கும்போது திரும்பி வந்து விட்டார்.
”அப்பா”. அவர் வீட்டு முன்வாசலில் நின்று அழைக்க பரமேஸ்வரன் தாங்குகட்டைகள் ஆதரவில் எழுந்து நின்று என்ன என்று பார்த்தார். அப்பாவுக்கு இன்று ஒரு சக்கர நாற்காலி வாங்கி வைக்க வேணும் என்று இன்னொரு காரியத்தை மனதில் குறித்துக் கொண்டார் திலீப் ராவ்ஜி.
”அப்பா நான் வெளியே எங்க ஸ்பைசஸ் எக்ஸ்போர்ட் ட்ரேடர்ஸ் கம்பெனிக்குப் போய்ட்டு வரேன். மிளகு நாளைக்கோ மறுநாளோ டெலிவரி ஆகப் போறது கர்னாடகத்துலே இருந்து. இங்கே கோழிக்கோடு, தலைச்சேரி விளைச்சல் வர இன்னும் ஒரு வாரம் பிடிக்கும். ஈரப்பதம் கொஞ்சம் அதிகம். உலர வைக்க மெஷின் போடணும். இடம் ஏற்பாடு செய்யணும். ஒருபாடு ஜோலி”.
பரமேஸ்வரன் என்ற பரமன், திலீப் அவருக்குப் புரியாத ஏதோ மொழியில் என்ன என்று அறிய முடியாத ஏதோ விஷயம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிற பாவம் முகத்தில் எழுதி இருக்க, ”என்னப்பா கூப்பிட்டியே” என்றார்,
“ஒண்ணும் இல்லே அப்பா. ஏதோ நினைச்சுண்டு உங்கள் கிட்டே சொல்லிண்டிருக்கேன் நான் கம்பெனிக்கு போயிட்டு வரேன். உங்களுக்கு குளிக்க உதவி பண்ண கோரன்னு ஒருத்தனை வரச் சொல்லி இருக்கேன். பாடி கார்ட் மாதிரி இருப்பான். இந்த நாலுநாள்லே பெர்பார்மன்ஸ் பார்த்துண்டு வேலையிலே வச்சுக்கலாம்”.
”எதுக்குப்பா எனக்கு உதவிக்கு ஆள் அம்புன்னு ஆயிரம்? நான் பாத்ரூம்லே உக்கார்ந்து மெல்ல நேரம் எடுத்து குளிச்சுடுவேன். ஷவர்லே தண்ணி வருது இல்லே?” என்றார் அவசரமாகப் பரமன்.
”கொட்டுகொட்டுன்னு கொட்டறது அப்பா. கோரன் அதோ வந்துட்டிருக்கான்”.
வாசலில் பார்த்துவிட்டுச் சொன்னார் திலீப். ஏழடி உயரமும் மெலிந்த தேகமுமாக தலையில் வழுக்கை விழுந்த ஒரு நாற்பது வயதுக்காரர் வாசல் படியேறி வந்து கொண்டிருந்தார்.
”யாரைக் குளிப்பாட்டணும் சார்?”
அவர் திலீப்பை கேட்டார்.
“என்னைத்தான் குளிப்பாட்டணும்னு என் பிள்ளை அடம் பிடிக்கறான். நான் வேணாம்கறேன்”.
பரமேஸ்வரன் நாற்காலியில் துணித் துண்டு போல் சரிந்து பரவி இருந்தபடி சொன்னார்.
”உங்களைக் குளிப்பாட்டறது குழந்தையை ஸ்னானம் செய்துவிக்கிற மாதிரி எளுப்பமான காரியம். இடுப்பிலே தூக்கிட்டுப் போய் வாஷ் பேசின்லே வச்சே குளிச்சு விட்டுடுவேன்” என்றபடி பரமேஸ்வரனை நெருங்கினார் கோரன்.
“அட அதெல்லாம் வேணாம்” என்றபடி சங்கோஜத்தோடு விலகி உட்கார்ந்தார் பரமேஸ்வரன்.
”கோரன் மலையாளத்திலே கவிதை எழுதறார். புஸ்தகம் கூடப் போட்டிருக்கார்” என்றார் திலீப் ராவ்ஜி. இருகை கூப்பி வணக்கம் சொன்னார் பரமேஸ்வரன்.
”நான் இப்போதைக்கு குளிக்கல்லே அடுத்த மாசம் தேவைன்னா உங்க சர்வீஸ் வாங்கிக்கறேன்”. பரமேஸ்வரன் சொல்ல கோரன் கைகாட்டினார்.
”ஐயரே பாத்ரூம் கொண்டு விடறது கூட நான் பண்ணியிருக்கேன். டி.சி பெப்பர் டிரேடர்ஸ் முதலாளி நாணு சாருக்கு போன மாசம் வரை கிரமமா குழந்தை மாதிரி எல்லாம் பண்ணிட்டிருந்தேன். ஜெரியார்டிக் கேர் சீப் அண்ட் பெஸ்ட் சர்வீசஸ் பை கோரன் எஸ் காளி. மே ஒண்ணாந்தேதி தொழிலாளார் தினம் விடிகாலையிலே அவர் போய்ச் சேர்ந்தாச்சு”,
”கோரன், இவர் எங்கப்பா பரமேஸ்வரன். ஐயர்னு கூப்பிட்டா கோவிச்சுக்க மாட்டார். சகான்னு கூப்பிட்டா சந்தோஷப் படுவார். முப்பத்தைந்து வருஷம் முந்தி பம்பாய்லே இடதுசாரியாக இயங்கிட்டு இருந்தவர்”.
”ரொம்ப சந்தோஷம். நான் எப்ப வரணுமோ சொல்லி விடுங்க. ஃபோன் நம்பர் இதோ இருக்கு”.
கோரன் மலையாளத்திலும் இங்க்லீஷிலும் அடித்த பிசினஸ் கார்ட் ஒன்றை திலீப் ராவ்ஜியிடமும், மற்றொன்றை பரமேஸ்வரனிடம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.
கோரன் போனபோது இது கர்க்கடக மாதத்து மழை என்றார் பரமேஸ்வரன்.
“பின்னே இல்லையா? ரெபல்லியஸ் லெஃப்டிஸ்ட் அப்படித்தான் கவிதைப் புத்தகத்து அட்டையிலே போட்டிருக்கார். காண்பிக்கறேன் பாருங்கோ”.
அவர் காஃபி டேபிள் கீழ் வரிசையாக வைத்திருந்த புத்தகங்களை குவியலாக அள்ளி எடுத்து உரக்கப் பெயர் குறிப்பிட்டார்.
“எதுக்கு திலீப்? நான் மலையாளம் படிக்கலே. தமிழும் இங்க்லீஷும் மராத்தியும் கொஞ்சம் இந்தியும் தெரியும். அவ்வளவுதான்”.
புத்தகத்தைத் தேடி எடுத்து தூசி தட்டி ஓரமாக ஜன்னல் கம்பிக்கு நடுவே செருகியிருந்த துணிச் சுருணையால் துடைத்தபடி பரமேஸ்வரனிடம் கொடுத்தார் திலீப். அதில் பின் அட்டையில் கிரீடம் அணிந்த கோரன் படம்.
திரும்ப வாங்கிப் புத்தகப் பக்கங்களைப் புரட்டினார் திலீப்.
“இது பாருங்கோ. எல்லும் உறும்பும்.. எலும்பும் எறும்பும்.. என்ன மாதிரி கவிதை எழுதறார்ங்கறதுக்கு சாம்பிள்.
எலும்பும் எறும்பும் -------------------- நிறைய யோசித்து எழுதினான்: ’எறும்பு எலும்பாகும் எனினும் எலும்பு சிலவேளை தான் எறும்பாகும் எலும்புப் புற்றில் கடியெலும்பும் சேவக எலும்பும் உண்டு’. ’மழைக்காலத்துக்காகச் சேமிக்க எலும்புகள் இரையை இருநூறு முன்னூறாக இழுத்துப் போகின்றன மழை வரும்போது எலும்பு இருக்குமோ’. ’அதெல்லாம் எலும்பில்லை எறும்பு’ சத்தம் போட்ட இன்னொருத்தன் வெளியேற்றப் பட்டான் எலும்புகளின் புற்றில் சர்வாதிகாரம் பற்றி எறும்புகள் கட்டிவைத்த உடல்களோடு எல்லோரும் சர்ச்சையில் இருந்தார்கள். எலும்பில்லை எறும்பு சில நேரம் எறும்பில்லை எலும்பு இன்னும் சில நேரம் வலது கை அசைத்தால் எலும்பு இடக்கை அசைத்தால் எறும்பு எறும்பு எலும்புதான் எலும்பு எறும்பு இல்லை”
கவிதை வாசித்து முடிந்தபிறகு அப்பாவைப் பார்த்து திலீப் கேட்டார் –
“என்ன தோண்றது கவிதையைப் பற்றி?”
“நானே குளிச்சுக்கறேன்ப்பா” அவர் தாங்குகோல்களைச் சேர்த்தெடுத்து வைத்துக்கொண்டு கள்ளச் சிரிப்போடு சொன்னார்.
”சரி அப்பா நீங்க ரெஸ்ட் எடுங்கோ. உட்கார்ந்து குளிக்க முடியலேன்னா நான் இன்னும் ரெண்டு மணி நேரத்துலே வந்து குளிப்பாட்டறேன். அதுக்குள்ளே பசிச்சா, சிறுபசிக்கு ஆகாரமாக வாழைப்பழம், கேக், அரிசிப் பொரி உருண்டை எல்லாம் வாங்கி டைனிங் டேபிள்லே வச்சிருக்கேன். நான் ரெண்டு மணிக்கு வந்துடுவேன். வந்து லஞ்ச் சாப்பிடலாம். வரட்டுமா?”
’அப்படியாவது கம்பெனிக்குப் போகத்தான் வேண்டுமா? இன்றைக்கு ஒரு நாள் போகாவிட்டால் ஏற்றுமதி வேலையே நின்று போகுமா’ என்று திலீப் ராவ்ஜியின் ஒரு மனசு சொல்ல. மற்றது, ’வீட்டிலேயே அடைந்து கிடந்தால் வெளியே போகும்போது கஷ்டமாக இருக்கும் யாரோடும் பேசிப் பழக. போய்விட்டு வரலாம்’ என்றது. ஏதோ ஒரு மனம் மோர் குடிக்கலாம் என்றது.
”சம்பாரம் குடிக்கலாமா அப்பா?”
திலீப் செருப்பிலிருந்து காலை விடுவித்துக் கொண்டு மறுபடி உள்ளே வரும்போது கேட்டார். அப்படீன்னா? அப்பா புரியாமல் பார்த்தார்.
“மோர் அப்பா”.
“அப்படியா? முப்பத்தைந்து வருடத்திலே நீ ஒரேயடியா மலையாளி ஆகிட்டே. வீட்டுலே சாதாரணமா பேசறது தமிழ்லேயா, மலையாளத்திலேயா?”
திலீப் சிரித்துக்கொண்டு ரெப்ரிஜிரேட்டர் கதவைத் திறந்தார். பனிப்புகை படிந்து இருக்கும் தட்டுகளிலும் கண்ணாடிப் பேழையிலும் கைகளால் குளிர்ச்சியை அனுபவித்தபடி தேடி ஒரு ஸ்டெயின்லெஸ் பாத்திரத்தை மெல்ல வெளியே எடுத்தார். டைனிங் டேபிளில் வைத்தபடி சொன்னார் –
“அதை ஏன் கேட்கறேள். இங்கே வந்து குழந்தைகள் பிறக்க முன்பு நானும் அகல்யாவும் மட்டும் இருந்தவரைக்கும் பம்பாய் பாண்டுப் சால் குடித்தனத்தைத்தான் நடத்திட்டு இருந்தோம். அதுனாலே பெரும்பாலும் மராட்டி தான் பேசினது. கூடவே பம்பாய் இந்தியும். குழந்தைகள் ஏற்பட்டு, ஸ்கூல் போக ஆரம்பிச்சதிலே இருந்து அக்கம் பக்கத்திலும் ஸ்கூல்லேயும் பேசிப் பேசி பசங்களுக்கு வாயிலே மலையாளம் சர்வசாதாரணமாக வந்துடுத்து. நானும் அகல்யாவும் கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு வழியா மலையாளி ஆகிட்டோம். இன்னும் தமிழ் உச்சரிப்பிலே தான் மலையாளம். தோசை சாப்பிடணும்னு சொன்னா நம்ம ஹோட்டல் சர்வர்கூட சிரிக்கறான். கல்பா கேட்கிறா – அப்பா நீங்க தோஷன்னு சொல்ல மாட்டீங்களா?- ’இல்லேடி கண்ணு தோசைதான் அது மெட்றாஸ் பிரதேசத்துலே’ங்கறேன். அதே போல் வீட்டு வேலைக்கு வச்சிருக்கற அம்மாவுக்கு மரகதம் இல்லையாம் பெயர். மரதகம்னு சொல்லணுமாம்”.
”அப்படியாவது கஷ்டப்பட்டு எதுக்கு ஒரு மொழியிலே சரளமாக பேச வரணும்?” அப்பா புரியாமல் கேட்டார்.
“நான் கொஞ்சம் வேறே மாதிரி யோசிச்சேன் அப்பா” என்றார் திலீப் . மோர்ப் பாத்திரம் சற்றே சராசரி அறை வெப்பத்துக்கு வரட்டுமென்று டைனிங் டேபிளில் வைத்தார். தேர்ந்த அரசியல்வாதி தன் தரப்பு நியாயத்தை நிலைநிறுத்துகிற குரலில் பேசத் தொடங்கினார்.
”ஒரே பேச்சு மொழி, மலையாளம், ஒரே கலாச்சாரம், மலையாளி இப்படி இருக்கப் பார்க்கறது, பொதுவான அடையாளத்தை பூசிண்டு கூட்டத்திலே இருந்து தனியா நிற்காமல், முடிந்த வரைக்கும் கலந்து, தனித்தனி அடையாளம் தவிர்க்கற ஜாக்கிரதை தான். சுய பாதுகாப்புக்காக நேரமும் யத்னமும் தனித்தனியாக செலவழிக்க வேண்டாம். அந்த நேரத்தையும், முயற்சியையும் தனக்குன்னு, குடும்பத்துக்குன்னு செலவழிச்சுக்கலாம். கலந்து பழகறது இப்படி, ஆனா சாப்பிடறது தனிப்பட்ட விஷயம் என்பதாலேயோ என்னமோ இன்னும் நான் தமிழ்நாடும் மகாராஷ்ட்ரமும் கலந்த ஆகார ரசனைதான் கொண்டிருக்கேன். பார்க்கற சினிமாவும் கொஞ்சம் போலத்தான் மலையாளம். எழுதறது, முலுண்ட் தமிழ் பள்ளிக்கூடத்திலே எப்போவோ கத்துண்ட இங்க்லீஷும், தமிழும், மராட்டியும் தான். இதுலே தமிழ் கொஞ்சமாவது அனந்தனுக்கும், கல்பாவுக்கும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போக முடிஞ்சுது. மராட்டி ஒரு தடமே இல்லாம நம்ம வீட்டுலே இருந்து வெளியே போயிடுத்து”.
திலீப் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வாசலில் இருந்து அழைப்புமணி.
“நான் போய்த் திறந்துட்டு வரேன்”.
அப்பா பரமேஸ்வரன் திலீப் சொன்னதைக் கேட்காமல் தாங்குகட்டைகளோடு வாசலுக்குப் போக, வந்திருக்கிறவர்களிடமிருந்து அனுதாப வாக்கு அவருக்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு என்று திலீப் நினைத்துப் பார்த்தார்.
‘கால் வழங்காத பெரியவரை வாசல் கதவைத் திறக்க அனுப்பிட்டு இந்த ஆள் சட்டமாக உட்கார்ந்திருக்காரே, என்ன மனுசன்’ என்று அவர்கள் திரும்பிப் போகும்போது வியப்போடு பேசிக்கொண்டு போகலாம்.
வாசலில் மெலிந்து உயர்ந்து கருத்த இளைஞன் ஒருத்தன் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் கொஞ்சம் ஐரோப்பியச் சாயலும், மெல்லிய பெண் தன்மையும் தென்பட்டது.
திலீப்பைப் பார்த்து இருகை கூப்பி வணங்கி அங்கே இருந்தபடியே உள்ளே பார்த்து அப்பா பரமேஸ்வரனையும் பார்த்துத் தலை தாழ்த்தி நிமிர்ந்து காலை வணக்கம் சொன்னான். எந்தப் பொருள் விற்க வந்திருப்பான் என்று ஊகித்தபடி திலீப் எந்த நிமிடமும் கதவைத் திரும்ப அடைத்து விட்டு உள்ளே வருவதை எதிர்பார்த்தபடி இருந்தார் பரமேஸ்வரன்.
”நான் அனந்தனோட ஃப்ரண்ட். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இங்கே உங்களையும் தாத்தாவையும் சந்திக்க வரணும்னு இருந்தோம். அவன் டிவி சேனல்லே அவசர எக்சிக்யூட்டிவ் மீட்டிங்காம். நீ முதல்லே போ, நான் பனிரெண்டு மணியைப் போல வந்துடறேன்னான் அனந்தன்”.
”அப்படியா அப்படியா” என்று திரும்பத் திரும்பச் சொல்லியபடி இருந்தார் திலீப் ராவ்ஜி. ”வா, வாசல்லே நின்னே பேசிட்டிருக்கியே. உள்ளே வா” என்று வரவேற்றுவிட்டு அப்பா இது அனந்தன் ப்ரண்ட் பெயர் அவன் தொடர்ந்தான் –
“ வாசு”.
“வாசு என்னவாக இருக்கே?”. திலீப் ராவ்ஜி கேட்டார்.
“நான் யூனிவர்சிட்டியிலே சோஷல் ஹிஸ்டரி அசிஸ்டெண்ட் ஃப்ரபசரா இருக்கேன். விஜய நகர பேரரசு பற்றியும் அவங்க பாதுகாப்பிலே இருந்த குறுநில மன்னர்கள் பற்றியும் ஆராய்ச்சி செஞ்சிருக்கேன்”.
வாசு பேசியபடியே உள்ளே வந்து அமர்ந்தான்.
“வாசு, நான் பரமேஸ்வரன். திலீப்போட அப்பா. நாற்பது வருடமா குடும்பத்தோடு இருக்காமல் போய்ட்டு இப்போ திரும்பி வந்திருக்கேன். வயசு கொஞ்சம் அதிகம், நூற்றுப் பத்து”.
அவன் ஆச்சரியப்படுவான் அல்லது திலீப்பிடம் மட்டும் பேசிவிட்டு இந்தக் கிழவரைத் தவிர்க்க முயற்சி செய்வான் என்று எதிர்பார்த்தார் அப்பா பரமேஸ்வரன். அவனோ அப்பாவிடம் அவர் மாசேதுங்கின் சிவப்புப் புத்தகத்தை மராட்டியில் மொழி பெயர்த்த அனுபவங்களையும், கூடவே லெனினுடைய கடிதங்களை மராட்டி மொழியாக்கியது எவ்வளவு நாள் பிடித்தது என்றும் பாதி பேசி நிறுத்திய உரையாடலைத் தொடர்வது போன்ற தொனியில் பேச முனைந்தான்.
அதை எல்லாம் யாரவது படிக்கிறார்களா என்று முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்டுவிட்டுச் சிரித்து உடனே அடக்கி சாரி சொன்னான். நிமிஷத்துக்கு நிமிஷம் சிறகு விரித்து ஒவ்வொரு திசையும் திரும்பச் சிறகு காட்டி ஆடும் மயில் போல் அவன் பேச்சு விரிந்து கொண்டு போனது.
”மாசேதுங் இருக்கட்டும். உன் டாக்டரேட் தீசிஸ் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளவேண்டும். என்ன ஆய்வு செய்திருக்கிறாய் என்று கேட்கவும் குறிப்பாக ஆர்வம்” என்றார் அப்பா பரமேஸ்வரன்.
“அது ஒரு சுவாரசியமான நிகழ்வு. அங்கே ஒரு ஊரே, ஊர் என்று கூடச் சொல்லக் கூடாது, ஒரு நகரமே அடையாளம் தெரியாமல் செல்லரித்து உதிர்ந்து போய்விட்டது. இத்தனைக்கும் யாரும் எதிரிகள் அழிக்கவில்லை அந்த நகரத்தை. அங்கே இருந்தவர்களே நகரைக் காலி செய்து வெறும் கட்டிடங்களின் தொகுதியாக அது கூட இல்லை, பெரிய கட்டிடங்களையும் வீதிகளையும் காணாமல் போக்கிவிட்டு அவர்களும் கூட்டம் கூட்டமாக வரலாற்றுப் புத்தகங்களின் அடிக்குறிப்புகளிலிருந்து விழுந்து விட்டார்கள்” என்றான் வாசு.
”அப்பா உங்களுக்கு ஹிஸ்டரியிலே அதிக ஆர்வம் உண்டு போல இருக்கே. நான் அறிந்தவரைக்கும் மொழிபெயர்ப்பும், மார்க்சிஸமும், கர்னாடக இசையும் கிரிக்கெட்டும் உங்களுக்கு ரொம்பப் பிடித்தது என்று அம்மாவும் கற்பகம் பாட்டியும் சொல்லிக்கேட்டிருக்கேன். இந்த விஜயநகர பேரரசு பித்து எப்போ பிடிச்சது?’
திலீப் ராவ்ஜி கேட்டபடி மோர்ப் பாத்திரத்தில் இருந்து இன்னொரு குவளை டம்ளரில் வார்க்க முற்பட்டு மூக்குக்கண்ணாடியை எங்கே கழற்றி வைத்தோம் என்று மறந்து கண்களால் தேடினார். வாசு அவரிடமிருந்து மோர்ப் பாத்திரத்தை வாங்கி சமையலறைக்கு எடுத்துப்போய் ஆளுக்கொரு டம்ப்ளர் மோராக ஒரு ஸ்டெயின்லெஸ் தட்டில் வைத்து எடுத்து வந்தான்.
”அந்தப் பிரதேசம் அதன் செழிப்பும் அழகும் மக்கள் தொகைப் பெருக்கமுமாக இருந்த காலத்தை நான் பார்த்திருக்கிறேன்னு தோணறது”.
பரமேஸ்வரன் சொன்னதைத் தலையசைத்து அனுதாபத்தோடு கேட்டுக் கொண்டிருந்தான் வாசு. திலீப்புக்கு சந்தோஷமாக இருந்தது. அப்பாவின் மனநிலை பிறழ்வு ஒரு வழியாக வெளியாகிறது போல். அது முழுக்கத் தெரிந்ததும் அவரை மனநலக் காப்பகத்தில் விடுவதா அல்லது வீட்டில் வைத்துப் பராமரிப்பதா என்பதை முடிவு செய்யலாம்.
திலீப் ராவ்ஜி எதுவும் பேசாமல் வாசுவையும் அப்பாவையும் பார்த்தபடி இருந்தார். இன்றைக்கு இனிமேல் கம்பெனிக்குப் போக முடியாது என்றாலும் அப்பா பிரச்சனை தீர்ந்து போகும் என்று தோன்றியது.
எங்கேயோ போனார், எங்கிருந்தோ திரும்பினார், எங்கேயோ போக இருக்கிறார் என்று அவர் வந்ததும், இருந்ததும் நினைவின் சிறு துளியாகி விரைவில் மறைந்து போகட்டும். அவரை அன்போடும் கௌரவத்தோடும் கவனித்துக் கொண்டதும் அவரோடு நீண்ட உரையாடல் நடத்த வாய்ப்புக் கிடைத்ததும் மனதில் என்றும் தங்கி இருக்கட்டும்.
அப்பா எதுவும் பேசாமல் மோர் குடித்துக் கொண்டிருந்தார். வாசு அவரிடம் மால்பே என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அவர் இப்போது வேண்டாம் என்பது போல் கையைக் காட்டினார். வாசு உடனே பேச்சை நிறுத்தி ”உங்களுக்கு சின்னச் சங்கரன் என்ற ரிடையர்ட் கேபினட் செக்ரெட்டரி திரு அரசூர் சங்கரன் உறவுதானே” என்று கேட்டான்.
”ஆமாம்” என்றார் பரமேஸ்வரன். ”சுற்றி வளைத்து உறவு. சின்னச் சங்கரனின் தாத்தா பெரிய சங்கரனுக்கு எங்கள் தாத்தா அம்மான்சேய் -மாமா பிள்ளை- உறவு. பெரிய சங்கரனின் பெண்டாட்டியும், சின்னச் சங்கரனின் பாட்டியுமான பகவதிக்கு பெரியண்ணா குப்புசாமி ஐயர். அவருடைய மகன் மகாதேவ ஐயர், குடும்பத்தோடு காலம் என்ற பரிமாணத்தில் காசர்கோட்டில் இருந்து மங்கலாபுரம் என்ற மங்களூர் போகும்போது தொலைந்து போனது போல் நான் நாற்பது வருடம் காணாமல் போனேன். தில்லியில் இருந்து பம்பாய்க்கு வரும் விமானத்தில் நாக்பூரில் விமானம் மெயில் கொடுக்க, எடுத்துக்க இறங்கி மறுபடி பறப்பதற்கு இடையே பத்து நிமிடம் தரை இறங்கியபோது பரமேஸ்வரன் என்ற நான் காணாமல் போனேன். காலப் பரிமாணம் தன்னிச்சையாக மாறியதால் நான் வேறு காலத்துக்குப் போய்விட்டேன்”.
ஸ்பஷ்டமாகச் சொன்னார் அப்பா பரமேஸ்வரன். அவர் கண்கள் சந்நதம் வந்தவர் போல் நேரே பார்த்துக் கொண்டிருந்தன.
”ஹொன்னாவர்” என்றார் அப்பா.
”ஹொன்னாவர் இனிப்பு அங்காடி. ஜெரஸோப்பா இனிப்புக்கடை. ஜெயவிஜயீபவன்னு மதுர பலகாரம். பண்ணிப் பண்ணிக் கை வலிக்கறது” என்றார். தித்திப்பான வருமானம் என்று அவர் அடுத்து மெல்லச் சொன்னார்.
எங்கேயோ யாரோ சிறுவனோ சிறுமியோ ”அப்பா, அப்பா” என்று விளிக்கும் ஒலி மங்கிக் கேட்கிறது. பரமேஸ்வரன் கண்மூடி வியர்த்துப் போனார்.
திலீப் ராவ்ஜிக்கு ஒன்றும் புரியவில்லை. மருண்டு நோக்கியபடி இருந்தார் அவர். வாசு புறப்படத் தயாராக எழுந்து நின்றான்.
”நீ இரேன் வாசு. எனக்கு இப்படி சர்ரியலிச சூழல் எல்லாம் படிக்கப் பிடிக்கும். லூயி புனுவல் சினிமாவாக பார்க்கவும் இஷ்டம் தான். ஆனா, அதுலே பங்கெடுக்கப் பிடிக்காது. இப்ப எங்கப்பா அந்தரத்திலே லெவிடேட் ஆனார்னா எப்படி இருக்கும்னு நினைக்கவே முடியலே. மை காட் . லுக் லுக் அட் ஹிம்”.
திலீப் ராவ்ஜி சத்தம் போட வாசு, பரமேஸ்வரன் பக்கம் ஓடிப் போய் நின்றான். அவர் இருந்தபடி கனவு காண்கிறவர் போல நாற்காலியில் உட்கார்ந்து கண்மூடி இருந்தார்.
வாசு அவர் காதருகில் குனிந்து ”தாத்தா இன்னொரு கிளாஸ் சம்பாரம் குடிக்கறீங்களா?” என்று விசாரித்தான்.
கொடு என்று கை நீள பரமேஸ்வரன் எழுந்து நின்றபிறகு தாங்கு கட்டைகள் கண்ணில் பட அங்கே இதுக்கு தேவையே இருக்கலே என்றார் தன் கட்டைகளைக் காட்டி.
வாசலில் அழைப்பு மணி ஒலிப்பது அனந்தனாக இருக்கக் கூடும். வாசு கதவைத் திறந்து வைத்து அனந்தனோடு உள்ளே வர, திலீப் ராவ்ஜியும் அவர் அப்பாவும் பள்ளிக்கூடத்தில் ஹெட்மாஸ்டர் வந்தபோது கப்சிப்பென்று இருக்கும் சின்னப் பசங்க மாதிரி ஒரு வார்த்தை பேசாமல், ஒரு செய்கை இல்லாமல் இருந்தார்கள்.
”அப்பா என்ன ஆச்சு, வாசு சொன்னதுலே நீங்களும் பரமுத் தாத்தாவும் அதிர்ச்சி அடைஞ்சுட்டீங்களா? அப்பா அப்படி ஆனா கலாசார அதிர்ச்சின்னு கடந்து போய்க்கலாம். பரமுத் தாத்தா கூடவா?”
திலீப் ராவ்ஜி கைகாட்டி நிறுத்தினார் அனந்தனை.
“வாசு எது பற்றியும் பேசவே இல்லையே”. தாத்தா பரமேஸ்வரன் சொன்னார். வாசு மோர் இருந்த இன்னொரு டம்ளரை அனந்தனுக்குக் கொடுக்க எடுத்து வந்தான்.
”என்ன பேசிட்டிருந்தீங்க?” அனந்தன் கேட்டான்.
”நாங்க டைம் ஸ்பேஸ் கண்ட்டினூயம் time space continuum பற்றிப் பேசிட்டு இருந்தோம்” என்றார் தாத்தா. அப்படீன்னா? அனந்தன் புரியாமல் பார்த்தான்.
திலீப் ராவ்ஜி பரமேஸ்வரனைக் காண்பித்துச் சிரித்தபடி சொன்னார்.
“உங்க தாத்தா காலக் குமிழ்லே அகப்பட்டு நானூறு வருஷம் முந்தின உத்தர கன்னட பிரதேசத்துலே தூக்கியெறியப் பட்டாராம். இப்போ ரெண்டு நாள் முந்தி இங்கே திரும்பி வந்துட்டாராம். அவர் சொல்றதை நம்பித்தான் ஆகணும்னு சொல்றார். நான் அவரை மனநல மருத்துவமனையிலே சிகிச்சை ஆரம்பிக்கக் கொண்டு போய்ச் சேர்க்கணும்னு சொல்றேன்”.
”எதுக்குப்பா அதெல்லாம். நான் பாட்டுக்கு ஒரு மூலையிலே இங்கே இருந்துடறேனே. யாருக்கும் உபத்திரவம் பண்ண மாட்டேன். குளிக்கறது, பாத்ரூம் போறதெல்லாம் சுவரைப் பிடிச்சுண்டு தத்தித் தத்திப் போய் நானே பார்த்துக்கறேன். யாரும் உதவிக்கு வேணாம். சாப்பாடு என்ன கொடுத்தாலும் சரி. எவ்வளவு கொடுத்தாலும் சரிதான்”. பரமேஸ்வரன் கெஞ்சினார்.
திலீப் அவர் கையைத் தொட்டு வணங்கி, ”அப்பா உங்களுக்கு ஏன் அப்படி நான் குரூரமானவனா இருப்பேன்கிற மாதிரி நினைப்பு எல்லாம் வரணும்? உங்களை அப்படி விட்டுடுவேனா? ஹாஸ்பிடல்லாம் வேணாம்னா வேணாம்”.
வாசு அனந்தனை அடுத்துப் போய் தான் கொண்டு வந்த துணிப்பையை அவனிடம் கொடுத்தான். மோர் கொண்டு வந்த ஸ்டெயின்லெஸ் தட்டை ஒரு தடவை துடைத்து விட்டு பைக்குள் இருந்து ஆப்பிள், ஆரஞ்சு, மலை வாழைப்பழங்களை எடுத்து வைத்தாள் வாசு. அனந்தனோடு அந்தத் தட்டை ஏந்திப் போய் திலீப் மற்றும் அப்பா முன் வைத்து சம்பிரதாயமாக வணங்கும்போது அனந்தன் சொன்னான் –
“பெரியவங்க ஆசி வேண்டும். இன்னிக்கு வாசுவுக்குப் பிறந்த தினமும் கூட. நாங்க உங்க ஆசிகளோடு வரும் இருபதாம் தேதி அதாவது அடுத்ததற்கு அடுத்த புதன்கிழமை கல்யாணம் செய்துக்கப் போறோம். சேம் செக்ஸ் மேரேஜ். ஓர்பாலினக் கல்யாணம்”.
திலீப் பரமேஸ்வரனைப் பார்க்க, அவர் கனமான குரலில் தீர்க்காயுசு பெற வாழ்த்து சொல்லும் சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை நினைவு வந்தவரை சொல்லி ஆசிர்வதித்தார். நமஹ என்று திலீப்பும் சேர்ந்து கொண்டார். அவர் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
“உங்கள்லே மாப்பிள்ளை யார், பொண்ணு யாரு? தாலியா கல்யாண மோதிரமா?”
பரமேஸ்வரன் பகடியை எடுத்து விட அனந்தனும் வாசுவும் மரியாதைக்காகச் சிரித்தார்கள். திலீப் சிரிக்கவில்லை. இந்தக் கல்யாணத்தை எப்படி நண்பர்கள் சக தொழிலதிபர்கள் வட்டாரங்களில் சொல்லப் போகிறோம் என்று தெரியவில்லை அவருக்கு. அகல்யாவிடம் எப்படிச் சொல்வது? கூடத்தில் மாட்டியிருந்த அகல்யாவின் புகைப்படத்தைப் பார்த்தபடி நின்றார் அவர்.
ஜான் கிட்டாவய்யர் சைவ ஹோட்டல் வேன் வந்து நிற்க, மூன்று தலைமுறைக்கும் மதிய உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள்.
”போறது. ஸ்மார்த்தர்கள் ரெண்டு தரப்பிலும். வைஷ்ணவா யாரும் இல்லியே”.
அப்பா பரமேஸ்வரன் தொடர்ந்து நகைச்சுவை உதிர்த்துக் கொண்டிருந்தார்.
வீடு முழுக்க மிளகு மணத்தது. இன்னிக்கு ஸ்பெஷல் ஐட்டம் பெப்பர் பாத் என்று உணவு கொண்டு வந்தவன் சொன்னான். கண்கள் மூடி அப்பா ஆழ்ந்து சுவாசத்தை உள்ளுக்கிழுத்தார்.
“இன்னும் துளி உப்பு அதிகமாகக் கலந்திருக்கலாம். நான் சமைத்தால் அப்படித்தான் செய்வேன்.” அப்பா ஆர்வத்தோடு சொன்னார். அது கரகரத்த குரலில் இருந்தது.
***