
யாருக்கும் தெரியாது
என்ன நடக்கிறது என்று
வேவு பார்த்துக் கொண்டிருக்கும்
கண்களுக்குச் சொந்தக்காரன்
யார் என்று தெரியவரும்போது
ஒரு பயனும் இருக்காது
ஒன்றும் செய்ய முடியாத ஒன்று
எப்பொழுதும் அவனைச்
சுற்றிச் சுற்றி வருகிறது
யார் யார் எல்லாம் காரணமோ
அவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை
வாழ்வது அவனது சாதனை
அவன் எழுதி
முடிக்கப்படாமல் இருக்கும்
கவிதையின் பொருட்டு
அணுகப்போகும் தேவைகள்
இவ்வுலகை அலங்கரிக்கக்கூடும்
அவைகள் வார்த்தைகளும் அல்லாத
சொற்களும் அல்லாத பொருட்கள்
சதுரங்க காய்களாக
ஆட்டத்தின் விதிகளுக்குள்
சிக்கித் தவிக்கும் மானிடர்கள்
தொடர்ந்து இயங்க
காத்திருக்கும் அத்துமீறல்கள்
சமநிலை தவறாத உயிரினங்கள்
விருப்பம்
எவ்வாறு இதைச் சரி செய்யப் போகிறேன்
அப்படி ஒன்று இருக்கிறதா
எனக்குத் தெரியாது
என் தசைகளின்
வலியை இலகுவாக்கினால்
இன்னும் நன்றாக
என் அனுபவத்தைச் சொல்லுவேன்
என் விருப்பத்தை நிறைவேற்றினால்
அது ஆபத்தில் தான் பொய் முடிகிறது
எந்த பிரதிமைக்கும் இடமளிக்காமல்
நான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
இதயத்தை வலிக்கச் செய்ய
நான் விரும்பவில்லை என்றால்
நான் தோற்றுப் போவேன்
விழிக்க வேண்டி
மாற்றத்தை நோக்கி வெட்கமில்லாமல்
என் விருப்பத்தின்
சாவியைத் தேடுகிறேன்
முழு இருளில்
எனக்குக் கிடைக்கும்
அர்த்தம் தான் வெளிச்சம்
இவற்றிற்கும் நான்
முழு பொறுப்பேற்க முடியாது
மெல்ல மெல்ல
மலையின் ஒரு பகுதியில்
நான் ஏறிக்கொண்டிருக்கிறேன்