பருவநிலை மாற்ற ஆர்வலர்கள்

This entry is part 15 of 23 in the series புவிச் சூடேற்றம்

பருவநிலை மாற்றத்தால் உருவாகியுள்ள தாக்கங்களுக்கு அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் எந்த முன்னேற்றமும் வரவிடாமல் இழுபறி நிலையைக் கண்ட இன்றைய இளைய சமூகம் களத்தில் இறங்கியுள்ளது.

இவர்களை, ‘பருவநிலை மாற்ற ஆர்வலர்கள்’ என்று சொல்லலாம் (climate change activists). சமூகத்தின் மூத்தவர்கள், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், இந்த பூமி அழிவதை வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது இவர்களது வாதம்.

25 வயதிற்குள்ளவர்கள், இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. உலகின் மூத்த அரசியல் மற்றும் நிறுவனத் தலைவர்கள் என்று யாரையும் இவர்கள் விடுவதில்லை. பல நகரங்களில், நாடுகளில், இவர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதியில், இத்தகைய சில இயக்கங்கள் மற்றும் இளைஞ(ஞி)ர்கள் பற்றி அலசுவோம்.

பொதுவாக இவ்வகை இயக்கங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:

  1. தீர்வால் உந்தப்பட்ட இயக்கங்கள் (solution driven activism): இந்த வகைப் போராட்டங்கள், ஒரு மாற்றுத் தீர்வுக்காக போராடும் முயற்சி. உதாரணத்திற்கு, ஒரு அடர்ந்த காடு வழியாக எண்ணெயைத் தாங்கிச் செல்லும் குழாய்களை எதிர்க்கும் சில குழுக்கள், மாற்றாக, கடல் வழியாக ஏன் அதே எண்ணெயை எடுத்துச் செல்லக் கூடாது என்று போராடுவது
  2. மாற்றத்தால் உந்தப்பட்ட இயக்கங்கள் (change driven activism): இந்த வகைப் போராட்டங்கள், ஒரு அரசாங்கச் சட்டம், அல்லது வழக்கத்தை மாற்றுவதை மையமாகக் கொண்டவை. உதாரணத்திற்கு, அரசாங்கம், பல நாடுகளிலும் தொல்லெச்ச எரிபொருள் தயாரிப்பாளர்களுக்கு வழங்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற போராட்டம், இவ்வகையில் அடங்கும்.
  3. புரட்சியால் உந்தப்பட்ட இயக்கங்கள் (revolution driven activism): இந்த வகைப் போராட்டங்கள், மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வர முயலும் இயக்கங்கள். அதாவது, இருக்கும் முறைகளை அறவே கிள்ளி எறிந்துவிடத் தூண்டும் முயற்சி இது. பருவநிலை மாற்றம் சார்ந்த போராட்டம் இல்லையென்றாலும், உஉதாரணத்திற்கு, ஹாங்காங்கில் உரிமைகளை இழந்த நகரவாசிகள், தங்களுடைய தார்மீக உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்று போராடுவது இந்த வகை எனலாம். நல்ல வேளையாக, இன்றுவரை இவ்வகை பருவநிலை மாற்றம் சார்ந்த போராட்டங்கள் உலகில் பெரிதாக முளைவிடவில்லை.

பருவநிலை மாற்ற ஆர்வலர்கள், தீர்வையும், மாற்றத்தையும் மையமாகக் கொண்டவர்கள். இதனால்தான், உயிர் மற்றும் சொத்து இழப்பு என்பது இவ்வகைப் போராட்டங்களில் இன்று வரை நிகழவில்லை. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அரசாங்கங்கள் இழுத்தடித்தால், இந்த இயக்கங்கள், புரட்சி இயக்கங்களாக மாற வழி உள்ளது.

2020 நவம்பரில் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், பருவநிலை மாற்றத்திற்காக இரண்டு டிரில்லியன் டாலர் திட்டத்திற்கு உதவியவர் வர்ஷினி பிரகாஷ் (உதயசூரியன் இயக்கம்) என்னும் பாஸ்டனைச் சேர்ந்த இளைஞி. இன்றைய பருவநிலை மாற்ற இயக்கங்களில் ஈடுபட்டுள்ள இளைய சமுதாயம், மிகவும் தெளிவாக உள்ளார்கள். இவர்கள் பாராட்டுக்களால் மயங்குவதில்லை. பிர்ச்சினை எவ்வளவு பெரியது, சிக்கலானது என்பதை முற்றிலும் அறிந்தவர்கள் இவர்கள். இந்த இயக்கங்களை, சரியான முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் மட்டுமே திருப்திப்படுத்தும்.

2018 –ல் ஸ்வீடனைச் சேர்ந்த கிரெடா தன்பர்க், ஐ.நா. வின் பொதுச் சபையில் உலக தலைவர்கள் முன், பருவநிலை மாற்றத்தின் அபாயம் பற்றியும், உடன் நடவடிக்கை தேவையைப் பற்றியும் உரையாற்றினார். அப்பொழுது கிரெடாவின் வயது 16.

”நம்முடைய முதிர்ந்த அரசியல் தலைவர்கள் குழந்தைகள் போலச் செயல்படுவதால், குழந்தைகளான நாங்கள், இவர்கள் தட்டிக் கழித்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.”

என்றார்.

இவர், பல பள்ளி வேலை நிறுத்தங்களை ஒருங்கிணைத்தவர். இது போல, பல இளைஞர்கள் அணிகள் அமெரிக்கா மற்றும் யூரோப்பில் இயங்கி வருகின்றன. 2020 –ல் இவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது மாற்றம் பற்றிய நம்பிக்கையை வளர்த்து வருகிறது. ஜோ பைடன் தலைமையிலான புதிய அரசாங்கமும் மாற்றங்களுக்கு உதவும் என்று நம்ப வாய்ப்புள்ளது. டிரம்ப் அரசாங்கம், அமெரிக்காவை, பல ஆண்டுகள், இந்தத் துறையில் பின்தங்க வைத்த பிற்போக்கு அரசாங்கம். முதல் வேலையாக, டிரம்ப் அரசாங்கம் செய்த பருவநிலை மாற்ற கொள்கை தில்லாலங்கடிகளைச் சரி செய்ய வேண்டும்.

2019 –ல், ஒரு மில்லியன் மாணவர்கள் ஒரே நாளில், பருவநிலை மாற்றம் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிளர்ச்சி செய்தனர். இவர்களது கிளர்ச்சி, அரசியல் தலைமையை நடவடிக்கை எடுக்கத் தூண்டுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். சில நாட்களுக்கு சமூகத்தில் வயதானவர்கள் சற்று தர்மசங்கடப்பட்டுவிட்டு, பிறகு அவரவர் தொல்லெச்ச எரிபொருள் காரில் ஏறி, வேலையைப் பார்க்கச் சென்று விடுவது நம் சமூகத்தின் சாபக்கேடு. இவர்களது கோரிக்கைகள் என்ன?

  1. தொல்லெச்ச எரிபொருள்கள் 100% குறைக்க வேண்டும்
  2. தொல்லெச்ச எரிபொருள் தயாரிப்பாளர்களுக்கான மானியம் நிறுத்தப்பட வேண்டும்
  3. எல்லா சக்தியும் புதுப்பிக்கக்கூடிய சக்தியாக மாற வேண்டும்

பிளவு அரசியல் களமான அமெரிக்காவில், பருவநிலை மாற்ற ஆதரவான, ஜனநாயக கட்சியில், வெறும் 48% காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமே, இதை ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதினர். குடியரசுக் கட்சியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். 10% 0க்கும் குறைவான காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமே இப்படி நினைக்கிறார்கள்.

கரியமில வாயுவிற்கு வரி நிலவும் கனடா அருகே உள்ள வாஷிங்டன் மாநிலம், இவ்வகை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த முயற்சியை முடங்கச் செய்தது. இத்தனைக்கும், இது ஒரு ஜனநாயக கட்சி ஆண்டு வரும் மாநிலம்.

ஃப்ரான்ஸ் நாட்டில், தொல்லெச்ச எரிபொருளுக்கான வரியிலிருந்து அதிபர் மாக்கரோன் பின்வாங்கியுள்ளார். இந்த நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன?

கனடா போன்ற சில நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் உதட்டளவில் பருவநிலை மாற்றம் தடுக்கப்பட வேண்டும் என்று பேசி வருகிறார்கள். ஆனால், அதற்காக, எந்தவித நடவடிக்கைக்கும் வரி கட்டத் தயாராக இல்லை. உலகின் மிக அதிக அளவில் படித்தவர்கள் வாழும் நாடான கனடாவின் மக்கள், (world’s highest post-secondary educated population) இந்த நடவடிக்கைகள் பிடிக்காவிட்டாலும், அவற்றின் அவசியத்தைப் புரிந்து கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது.

இந்த இளைஞர்களின் வாதம்,

”மனிதகுலம் அழிந்துவிடும் அபாயம் எங்கள் கண்முன் தெரிகிறது. ஆனால், அரசியல் தலைவர்கள், தொடர் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பேசி, பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள்.”

நல்ல வேளையாக, இந்த இளைஞர்கள், நம் எதிர்கால அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இன்னும் சில ஆண்டுகளில் பெறுவார்கள். இன்றும், பல அரசியல் தலைவர்கள், 2050 –ற்குள், பூஜ்ஜிய உமிழ் (zero emission target) என்ற நிலையை எட்டி விடுவோம் என்று சொல்லிக் காலம் தள்ளுகிறார்கள். அடுத்த 30 ஆண்டுகளில், நாம் இன்னும் காற்று மண்டலத்தில் சேர்க்கவிருக்கும் கரியமில வாயு நீங்க, குறைந்தபட்சம் இன்னும் 100 முதல் 150 வருடங்களாகும்.

ஐஸ்லாந்து, ஸ்வீடன், ஃபின்லாந்து போன்ற சில நாடுகள் தவிர்த்து, புதுப்பிக்கக்கூடிய சக்திக்கு மாறும் நாடுகள் இன்னும் குறைவாகவே உள்ளன. பொதுவாக, உலக அரசியல் தலைவர்கள், தொலைநோக்குடன் செயல்படத் தயங்குகின்றனர். ஒரு புறம், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இளைய சமூகத்தினர் முன் வைத்தாலும், அரசியல் தலைமையின் தயக்கம் கடந்த 20 ஆண்டுகளின் இழுபறி நிலைக்குக் காரணம்.

அரசியல் தலைவர்கள், நடவடிக்கை எடுக்க, ஏன் தயங்குகிறார்கள்? பெரும்பாலான நடவடிக்கைகள், ஏதோ ஒரு விதத்தில், வரிகளை உயர்த்த வேண்டிய கட்டாயம், இவர்களது தேர்தல் வாய்ப்புகளை பாதிக்கும் என்று அஞ்சுகிறார்கள். இளைஞர்கள் கேட்கும் கேள்வி, நீங்கள் அரசியல்வாதிகளா அல்லது உண்மையான தலைவர்களா?

வாகனத் தொழிலின் பழைய பெருச்சாளியான ஜி.எம்., இன்னும் ஐந்து ஆண்டுகளில் பெரும்பாலும் மின்னூர்த்திகளையே விற்போம் என்று சொல்லியுள்ளது. இதை நம்ப யாரும் தயாராக இல்லை. 2018 –ல், உமிழ் கட்டுப்பாட்டை நீக்கப் போராடி டிரம்ப் அரசிடம் வெற்றி பெற்ற அதே ஜி,எம். இது!

பல இளைஞர்களைப் பற்றி இங்கு சொன்னாலும், பல விஞ்ஞானிகள் மற்றும் வயதானவர்கள் சிலரும் இந்த விஷயத்தில் அயராது உழைத்து வருகின்றனர். கனேடிய விஞ்ஞானி டேவிட் சுஸூக்கி, பல ஆண்டுகளாக, கனேடிய தொலைக்காட்சிகளில், இயற்கை மற்றும் பருவநிலை மாற்றம் பற்றி ஆராய்வதோடு, இளைஞர்களையும் கை கோர்த்து, கனேடிய அரசாங்கத்தை மாறச் செய்வதில் வெற்றியும் பெற்றுள்ளார்:

இன்றும் இவர் கனேடியர்களுக்கு சொல்வது இதுதான்:

“கரோனாவுடன் போராடுகிறோம், பருவநிலை மாற்றப் போராட்டத்திற்கு எங்களிடம் நேரமில்லை என்று மட்டும் சொல்லாதீர்கள். பருவநிலை மாற்றத்திற்கான போராட்டம் ஒன்றும், இந்த ஆண்டு விடுமுறையைத் தள்ளிப் போடுவது போன்ற விஷயமல்ல”

இளைஞர்கள் சுருக்கமாகச் சொல்வது இதுதான்:

  1. மாமிசம் சாப்பிடுவதை விட்டு விடுங்கள்
  2. விமானத்தில் பறக்காதீர்கள்
  3. தொல்லெச்ச எரிபொருளில் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்தாதீர்கள்

இந்த மூன்று விஷயத்தையும் பணக்கார நாடுகளில் வாழும் அனைவரும் ஒரு வாதத்திற்கு, பின்பற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதனால், எப்படிப்பட்ட மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கிறது?

  • மேற்கத்திய மனிதர்கள் மாமிசம் உண்பதை விட்டு விட்டால், பெரிய மாற்றம் வர வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், இந்த மூன்று மாற்றத்திலும், மிகவும் கடினமானது இந்த மாற்றம்தான்
  • இன்றிலிருந்து உலகின் 4.5 பில்லியன் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டால், 2100 –ஆம் ஆண்டிற்குள், பூமியின் சராசரி வெப்பம், 0.054 டிகிரி குறையும்
  • அடுத்த 11 ஆண்டுகளில், மின்சாரக் கார்கள் 130 மில்லியன் என்ற அளவிற்கு உயர்ந்தால், பூமியின் கரியமில வாயுவின் உமிழ் அளவு வெறும் 0.4% மட்டுமே குறையும்

இதிலிருந்து தெரிவது, வளர்ந்த நாடுகளில், தனிநபர்கள் தங்களது பழக்கங்களை மாற்றிக் கொள்வதால், சில முன்னேற்றங்கள் இருந்தாலும், மிகப் பெரிய மாற்றம், உணவு பழக்கத்திலிருந்து மற்றும் வளரும் நாடுகளிடமிருந்து வர வேண்டும்.

இன்று உலகின் மிகப் பெரிய அனல்மின் நிலையங்கள் மூலம் கரியமில உமிழ்வு சைனா மற்றும் இந்தியாவிலிருந்து உருவாகிறது. எந்த ஒரு பெரிய மாற்றமும், உலகின் மக்கள் தொகையில் பாதி மனிதர்கள் வசிக்கும் இந்த இரு நாடுகளில் தொடங்கினால், பெரிய தாக்கம் ஏற்படும்.

இந்த நாடுகள் கரியமில வரியை விதித்தால், ஓரளவு இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க முடியும். ஏன் ஓரளவு? உதாரணத்திற்கு, 1970 –களில், உணவுப் பற்றாக்குறையை எப்படி உலகம் சமாளித்த்து? எல்லோரையும் குறைவாக சாப்பிடச் சொல்லியா? அல்ல. பசுமைப் புரட்சி என்ற புதிய முறையினால், அதிக உணவை பயிர் செய்து, பிரச்சினையைத் தீர்த்தோம். அதே போல, இந்தப் பிரச்சினைக்கும் புதிய சிந்தனை, முறைகள் தேவை. ஏழை நாடுகள், புதுப்பிக்கக்கூடிய சக்தியைப் பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும். புதிய சமயல், போக்குவரத்து மற்றும் சக்தி உருவாக்கம் நம்முடைய கரியமில உமிழ்வை குறைக்க வழி செய்யும். இது போன்ற இன்னும் சில தீர்வுகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Series Navigation<< புவி சூடேற்றம் பாகம்-14அசைவத்தை ஏன் கைவிடல் வேண்டும்? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.