நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை – ஜமீலா நிஷாத்

புகைப்படம்: ப்ரியா டிஸூஸா
©
Sound & Picture Archives for Research on Women

எனது இமைகளின் தந்திகளை
அதிர்வூட்டும்
என்ன கருவி இது?
ஒலித் திரையில்
தோன்றி தோன்றி மறையும்
என்ன சித்திரம் அது?
மூட்டமான இந்த இதயத்தில்
விரிந்து பரவும் நிழல் என்ன நிழல்?
உனக்குத் தெரியும்
நான் நிழல்களை நேசிப்பவள் என்று.
ஆனால் இந்த நிழலின் சிறகு விரியும்போதோ
எனது குருதியில் பொங்கி எழுகிறது
எண்ணங்களின் அலை.
எனது பேனாவிலிருந்து
சொட்டத் துவங்குகிறது
குருதி.


முன்னுரை

ஜமீலா நிஷாத் ஒரு கவிஞர். பல வண்ணங்களிலும் வேறுபட்ட வடிவங்களிலும் கனவுப்படிமங்களாகக் கவிதைகள் தன்னிடம் உருக்கொள்வதாக அவர் கூறுகிறார். அவரது கவிதைகளில் காணப்படும் கனவுத்தன்மை இது சாத்தியம்தான் என்று நமக்கு உணர்த்துகிறது. தன்மீது 1992க்குப் பிறகு திணிக்கப்பட்டதாக அவர் கருதும் முஸ்லிம் அடையாளத்தை பரிசீலனை செய்யும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக அவர் இறங்கியுள்ளார். கோயில்களுக்குச் செல்வது, தர்கா விழாக்களில் கலந்து மகிழ்வது என்ற தோழமையும் பகிர்வுணர்வும் நிறைந்த சூழலில் வளர்ந்த அவரால் ஹைதராபாதில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நிலவிவரும் வெறுப்பையும் பகைமையுணர்வையும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஒரு படைப்பாளியாக இந்நிலைமையை மாற்ற அவர் முயன்று வருகிறார். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் பெண்கள் உள்ளாக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வளர்ந்த அவர் இளம் முஸ்லிம் பெண்களிடையே இதுபற்றிய பிரக்ஞையையும், மனவுறுதியையும், வலிமையையும் உருவாக்கும் பெரும் பணியில் முனைந்துள்ளார். முஸ்லிம் பெண்களைத் தங்களின் பிரச்சினைகளை பேசவைத்து அவர்களின் மனவேதனையைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

உருது மொழி அவர் எழுதப் பயின்ற மொழி என்பதாலும் அம்மொழி மடிந்து விடக்கூடாது என்று அவர் உணர்வதாலும் ஜமீலா உருது மொழியிலேயே எழுதி வருகிறார். மேலும், பெண்களிடையே புழங்கும் மொழியான தக்கனி மொழியை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டிய அவசியத்தை உணர்ந்து, அதன் வளர்ச்சியில் தன் பங்களிப்பாக அம்மொழியில் நாடகங்கள் எழுதி மேடையேற்றியிருக்கிறார் ஜமீலா.

1998 செப்டம்பர் 27 அன்று நடந்த ஸ்பாரோ வாய்மொழி வரலாற்று பயிலரங்கில் பவன்ஸ், சேத்னா, ஜெய்ஹிந்த், மித்திபாய், மகராஷ்டிரா, நேஷனல், வில்சன் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் மாணவர்களுடன் தன் வாழ்க்கை பற்றியும் படைப்புலகம் பற்றியும் பேசினார் ஜமீலா. தனது கவிதைகளையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இந்தச் சிறு வெளியீடு, பயிலரங்கின் போது பதிவு செய்யப்பட்ட பேச்சின் தேர்ந்தெடுத்த பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு உருப்பெற்றுள்ளது. ஜமீலாவின் வாய்மொழியாக இந்தப் புத்தகம் வடிவம் பெற்றிருக்கிறது. படிப்பதற்கு எளிதாக இருக்கவும், தெளிவின் பொருட்டும் சில பகுதிகள் வரிசை மாற்றப்பட்டு இடம் பெறுகின்றன.

நிஷாத் என்றால் மகிழ்ச்சி. ஆனால் ஜமீலாவின் கவிதைகளில் சோகம் இழையோடுகிறது. இது ஏனென்று அவருக்கே தெரியவில்லை. கவிதைகள் இவ்வாறுதான் அவரிடம் கனவுருக்கொள்கின்றன.

என் உடலின் கடல்விளிம்பில்
கழுவப்பட்ட களிமண் முகத்தில்
இரண்டு கண்கள்
ஒளிர்ந்தபடி
கவனிக்கின்றன
என் கனவின் பூக்களை எண்ணிக்கை செய்து
மணலில் தீட்ட
கடற்கரையில் திரிபவர்கள்
புரியாமல்
அறியாமல்
அப்பூக்களை மிதித்துக்
கடக்கின்றனர்

என்று அவர் எழுதும்போது இது போன்ற வித்தியாசமான கனவுகளுக்குச் சொந்தக்காரியைப் பற்றி படித்து அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் தோன்றும்.

ஜனவரி 1999

சி. எஸ். லக்ஷ்மி

நெஞ்சில் துயில் கொள்ளும் ஒரு கவிதை

ஜமீலா நிஷாத்

என்னைப் பற்றிச் சொல்வதற்குமுன் எனக்கு முந்தைய தலைமுறையைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். என் அப்பா ஓர் ஓவியர்; ஆனால் ஓவியராவதற்கு அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர் அவர். முஸ்லிம்கள் ஓவியம் தீட்டுவது அன்று அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் ஓவியம் தீட்டிக்கொண்டிருப்பது பாவமாகக் கருதப்பட்டது. இந்த விதமான சூழலில் என் அப்பா கழிவறைக்குச் சென்று அங்குள்ள சுவர்களில் ஓவியம் வரைந்துகொண்டிருப்பது வழக்கமாம். மணிக்கணக்காகக் கழிவறையில் ஓவியம் தீட்டியபடியே இருப்பாராம். அவரது பாலிய காலம் முடியும் வரையிலும் இது தொடர்ந்தது. வளர்ந்து பெரியவரானதும் தெருவில் கிடக்கும் காகிதங்களை எடுத்து வந்து அவற்றில் வரைந்து பார்ப்பார். சிறந்த உருவ ஓவியர் அவர். இவரது திறமையைக் கண்ட நவாப் ஒருவர் எல்லா உதவிகளையும் அளிக்க முன்வந்தார். இப்படியாக ஓவியக்கல்வி என் அப்பாவிற்குக் கிடைத்தது. நுண்கலைக் கல்லூரியில் சேர்ந்து ஐந்து வருடகாலம் டிப்ளோமா படித்து, பின்னர் அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியிலமர்த்தப்பட்டார். இப்படித்தான் அவரது வாழ்க்கை ஆரம்பித்தது. படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணமாகி குடும்பஸ்தரும் ஆகிவிட்டார். அவர் மணந்த பெண்ணோ மத்தியதரக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். அப்பாவோ ஏழைக்குடும்பம். எனவே வர்க்க வேறுபாடு இரு குடும்பங்களுக்கிடையே இருந்துகொண்டுதானிருந்தது. அம்மாவின் குடும்பத்தார் கல்வி கற்றவர்கள். என் தாத்தா அந்த காலத்திலேயே அரபி மொழிப் பேராசிரியராக இருந்தார். பிற்காலத்தில் நாங்கள் இரண்டு வெவ்வேறான குடும்பச் சூழலில் வளர்ந்தோம். ஒரு பக்கம் நல்ல கல்வி பெற்ற குடும்பம். என் அப்பாவோ கல்வியறிவு அதிகம் பெறாதவர்; பள்ளியிறுதித் தேர்வுகூட முடிக்கவில்லை அவர். ஆனால் பாசம் மிகுந்தவர். தன் ஓவியங்களுடன் உணர்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது ஓவியக்கலை அவருக்குச் சோறு போட்டது. ஓவியம் தீட்டுவதன் மூலமும் சம்பாதிக்க முடியும் என்பது தெரிந்ததால் அவர் ஓவியம் தீட்ட அனுமதிக்கப்பட்டார். இப்படித்தான் எல்லாம் துவங்கின. நாங்கள் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும். சிறு வயதிலிருந்தே ஒரு நாட்டியக் கலைஞராக வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது.

அப்பா வழியில் நாங்கள் ஆப்பிரிக்க இனத்தின் வழித் தோன்றல். எனவே நடனம் எங்கள் ரத்தத்திலிருந்தது. திருமணங்களின்போதோ விருந்துகளின் போதோ ஆண்கள் நடனமாடுவார்கள். ஆனால் பெண்கள் அங்கே அனுமதிக்கப்படவில்லை. பெண்கள், உள்ளே – திரைமறைவில் – ஆடுவார்கள். ஆண்களைப் பார்த்து அவர்களைப் போலவே ஆடுவார்கள். திருமணங்களின் போது டோலக் பாடல்களுக்கு இசைந்தாற்போல் அவர்கள் ஆடுவார்கள். ஓரு பெண் ஆணைப் போல தன்னை பாவித்துக்கொண்டு மற்றொரு பெண்ணுடன் ஆண் -பெண் உறவின் எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் ஆடுவாள். நானும் ஆரம்பத்தில் சலங்கை கட்டிக் கொண்டு – திரைப்படங்களில் வருவதுபோல – ஆட ஆரம்பித்தேன். அப்பா எனக்காகச் சலங்கை வாங்கித் தந்திருந்தார். அந்த அளவுக்கு எனக்கு அனுமதியளித்திருந்தார். நண்பர்களோடு அமர்ந்து பொழுதுபோக்குவது அவர் வழக்கம். அவர் நன்றாகத் தபேலா வாசிப்பார். அவர் தபேலா வாசிக்க, அதற்கேற்ப நான் நடனமாட, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். அந்த நாட்கள்தாம் எவ்வளவு இனிமையானவை! இவையெல்லாம் என் முதல் ஏழாண்டுகள் வரைதான். வெறும் ஏழு ஆண்டுகள்.

எனக்கு ஏழெட்டு வயதாகும் வரை அப்பா ஊக்கமும் உற்சாகமும் அளித்து வந்தார். அதன்பின் கொஞ்சங் கொஞ்சமாக நிறுத்திவிட்டார். பெண்கள் ஆடக்கூடாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். இப்படியாக என் நாட்டியத்திற்கு ஒரு முடிவு வந்தது. ஓவியம் தீட்டிப் பார்க்க ஆசைப்பட்டேன். அப்பா ஓவியத்துறையில் புதிய சோதனையில் ஈடுபட்டிருந்தார். பழைய தக்கனி சிற்றோவியங்களை ஒட்டிய பாணி அது. மார்பிளிங் என்று அழைக்கப்பட்டது. அப்பாவோ அதை ஆபிரி என்று அழைத்து வந்தார். வண்ணங்களை நீரில் பெய்து கான்வாஸில் ஏற்றும் முறை. ஆப் என்றால் தண்ணீர். நீருடன் வண்ணங்களைக் கலப்பதால் அவர் ஆபிரி என்று அழைத்தார். அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. ஓவியங்களைத் தீட்டி முடித்தவுடன், அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடுவார். அவர் தலை மறைந்ததும் நான் அங்கு சென்று என் மனத்திலிருக்கும் சித்திரங்களை எல்லாம் காகிதத்தில் வடிப்பேன். ஓவியம் தீட்டவும் என்னை அனுமதிக்கவில்லை. ஆனாலும் எனக்குள் இருந்த கலைஞர் போராடிக்கொண்டுதான் இருந்தார். என் தம்பி எனக்கு ரொம்ப உதவியாக இருந்தான். ஐந்து வயதான அவனிடம், நான் தீட்டிய ஓவியங்களில் அவன் பெயரை எழுதச் செய்வேன். நான் படைத்தவற்றையெல்லாம் அவன் படைத்ததாகச் சொல்வேன். மக்கள் ‘அவனுடைய’ கலையுணர்வை மெச்சிப் பாராட்டுவார்கள். இவ்வளவு சின்னப் பையன் எவ்வளவு பிரமாதமாக வரைந்திருக்கிறான் என்று வியந்து மகிழ்வார்கள். எப்படியோ என் படைப்பு பாராட்டப்படுவது எனக்குத் திருப்தியை உண்டாக்கியது. இப்படித்தான் என்னால் ஓவியம் தீட்டமுடிந்தது. நான் வளர்ந்து பருவமடைந்த பிறகு என்னை எழுதுவதற்கு அனுமதித்தார்கள்.

அப்பா என்னை நடனமாட அனுமதிக்காதது எனக்கு விழுந்த முதல் அடி. நான் ஆடவேண்டும் என்று ஆசைப்பட்டபோது எனக்கு வயது எட்டு. வாழ்ந்தாக வேண்டியிருக்கிறதே? எனவே என்னை மாற்றிக்கொள்ள வேண்டி வந்தது. ஆனால் ஆசை இன்றும் தொடர்கிறது. பன்னிரெண்டாம் வயதில் ஓவியம் தீட்ட ஆரம்பித்தேன். அதற்கும் தடை வந்தது. நான் தீட்டிய ஓவியங்களை என்னுடைய ஓவியங்கள் என்று உரிமை கொண்டாட முடியவில்லை. இதுதான் என்னை எப்போதும் வாட்டியது. எனக்குள்ளிருந்த ஓவியர் திருப்தி அடைந்தார் என்றாலும் இது என்னுடைய படைப்பு என்று சொல்ல முடியவில்லை. அப்பாவிடம் அவர் பணியாற்றும் கல்லூரியில் நான் சேர்ந்து படிக்கலாமா என்று கேட்டேன். “கூடாது, பெண்கள் கல்லூரிக்குப் போகக் கூடாது” என்று கூறி மறுத்துவிட்டார். “ஏன்? ஏன் போகக்கூடாது நாங்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “பெண்கள் நிர்வாணமாக அங்கு அமர்ந்திருப்பார்கள். பையன்கள் உருவத்தை வரைவார்கள். நீங்கள் ஆண்களோடு சேர்ந்திருக்க முடியாது. அவர்களுடன் அமர்ந்து உங்களால் வரைய முடியாது” என்று கூறினார். இத்துடன் என் ஓவிய வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளியிடப்பட்டது.

மாடல்கள் நிர்வாணமாக அமர்ந்திருக்கும்போது, மாணவர்கள் எல்லாவற்றையும் அளந்து பார்ப்பார்கள்; பெண்களால் அதைப் பார்த்துககொண்டிருக்க முடியாது என்று அவர் எண்ணி வந்தார். அதைப் பார்க்கக்கூட அருவருப்பாக இருக்கும் என்று கூறுவார் அவர். இப்போது பல பெண்கள் அந்தக் கல்லூரியில் பயிலுகின்றனர். அப்பாவுக்கும் நிறைய மாணவிகள் இருந்தார்கள். அவர்கள் எங்கள் வீட்டிற்கும் வருவதுண்டு. அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் அப்பா என்னை ஒரு கவிஞர் என்றே அறிமுகப்படுத்திவைப்பார். எனக்கு உண்மையிலேயே கஷ்டமாக இருக்கும். அவர்கள் ஓவியக் கலைஞர்களல்ல; நான் அவர்களைக் கலைஞர்களாக ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால் அப்பா அவர்களை பாராட்டிப் பேசுவார். பிற பெண்களுக்கு ஊக்கம் கொடுப்பார். ஆனால் தன் பெண்ணை அனுமதிக்கமாட்டார். இதை என்னால் உண்மையில் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவரால் ஒடுக்கப்பட்டவள்போல நான் உணர்ந்தேன். எனவே கவிதை எனக்குள் பீறிட்டுக் கிளம்பியது. இந்த மனஉளைச்சல், இந்தத் துக்கம் என் ரத்தத்திலும் கலந்துவிட்டது. எனது கவிதைகள் அனைத்திலும் எனது சோகத்தின் நிழல் இருக்கும். எனக்குச் சொல்லத் தெரியவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் நான் சந்தோஷமான வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறேன்; சௌகரியமாகவுமிருக்கிறேன். என் சகோதரர்களோடோ சகோதரிகளோடோ பெற்றோர்களோடோ அல்லது யாரோடும் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. இருந்தும் நான் சந்தோஷமாக இல்லை. என்னை நடனம் பயில அனுமதித்திருந்தால் ஒரு பாலே நாட்டியக் கலைஞராகப் பிரகாசித்திருப்பேன். என்னை ஓவியம் தீட்ட அனுமதித்திருந்தால் உலகின் மிகச்சிறந்த ஓவியராக ஆகியிருப்பேன். எனக்குத் தெரியவில்லை. என்னை எதற்கும் அனுமதிக்கவில்லை. எனவே நான் கவிதை எழுத ஆரம்பித்தேன். என்னுடைய தோழி ஒருத்தியினால்தான் நான் கவிதை எழுத ஆரம்பித்தேன். நிஷாத் என்று எனக்கு ஒரு தோழியிருந்தாள். என் இளம்பருவத்துத் தோழி.

அவளைச் சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை. எங்களிருவரின் குடும்பங்களுக்கிடையே ஏதோ சண்டையிருந்தது. எனவே நாங்கள் சந்தித்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதுவே கவிதை எழுத என்னை உந்தியது. இப்படித்தான் நான் எழுத ஆரம்பித்தேன். நிஷாத் என்றால் மகிழ்ச்சி.

இந்தியா எங்கும் பிரகாசமான வண்ணங்களைக் கொண்டிருக்கிறது. இயற்கையும் பிரகாசமான வண்ணங்களுடன் இருக்கிறது. அழகான, இனிமையான மஞ்சள் பூக்கள். பருவம் மாறும்போது பூக்களின் வண்ணங்களும் மாறுகின்றன. முஸ்லிமாக இருந்ததால் அப்பா பிரகாசமான வண்ணங்களைப் பயன்படுத்தியதே இல்லை. ஏனென்றால் அவை துலக்கமாகத் தெரிந்து பிறரைக் கவர்ந்திழுக்கும், சாதாரண வாழ்க்கையிலிருந்து விலக்கி வேறுபக்கம் செலுத்திவிடும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். எனவே அவர் மங்கலான வண்ணங்களையே பயன்படுத்தினார். அழுத்தமில்லாத வண்ணங்கள். நீலநிறம் அவருக்கு மிகவும் பிடித்தது. ஓவியம் பற்றி அவரிடம் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. நான் வேதியியல் பாடங்களைப் படிக்காமல் இந்தப் புத்தகங்களைப் படித்தபடியே இருப்பேன். நான் படிப்பில் சுட்டி. நல்ல மதிப்பெண்கள் வாங்கிவிடுவேன். அப்பா அஜந்தா, எல்லோரா ஓவியங்கள் வரைவார். எனவே எங்களுக்குப் பெரிய பெரிய ஓவியங்கள் பார்க்கக் கிடைக்கும். அவரது ஓவிய அறைதான் நாங்கள் படிக்கும் அறை. அவர் இல்லாதபோதெல்லாம் அவரது அறைக்குச் சென்று உட்கார்ந்து ஓவியங்களைப் பார்த்தபடி இருப்போம். எனவே வாசிப்பும் ஓவியமும் எனது வாழ்க்கையின் ஒரு பாகமாக இருந்தன. கண்கள் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்; கையிலிருப்பது வேதியியலாக இருக்கும். கண்ணெதிரே இவ்வளவு அழகான படைப்புகள் இருக்கும்போது, CO2 ஐயும் H2Oஐயும் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? எனவே H2Oஐ வாசிப்பேன்; வாழ்க்கையின் அழகைக் கண்டு களிப்பேன். இப்படித்தான் ஓவியங்களுக்கு நான் அறிமுகமானது. அப்பாவிடம் நிறைய நல்ல புத்தகங்கள் இருந்தன; பிக்காசோ மற்றும் பல புத்தகங்கள். ஓவியங்களைப் புத்தகங்களில்தாம் பார்த்திருக்கிறார். அவர் வெளிநாடுகள்கூட போயிருப்பார். பம்பாய் வந்திருக்கிறார். அவர் பல இடங்கள் சுற்றி வந்திருக்கிறார்; ஆனால் என் அம்மாவை எங்கும் உடன் அழைத்துச் சென்றதில்லை. ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 நிகழ்ச்சிக்குச் செல்வார். ஆனால் ஒருபோதும் அவர் அம்மாவை அழைத்துச் சென்றதில்லை. கேட்டால் “உன் அம்மாவிற்கு இதிலெல்லாம் ஆர்வம் கிடையாதே குழந்தாய். அவளுக்கு ரசனை கிடையாது. எனவே அழைத்துச் செல்வதில்லை” என்பார். அம்மா சதாசர்வகாலமும் பணக்கணக்கு போட்டபடியே இருப்பார். ஆரம்ப நாட்களில் அப்பாவுக்கு வேலையில்லாமல் பணத்திற்கு ரொம்பவும் கஷ்டப்பட்டார்கள் இருவரும். எனவே அம்மாவுக்கு பணத்தில் மட்டும்தான் அக்கறை இருந்தது. அந்தக் கணக்குகளில் அவர் சந்தோஷமும் அடைந்தார்.

அம்மாவிடம் எவ்வளவோ குறைபாடுகளிருந்தாலும், கலை பற்றிய நுண்ணறிவு இல்லாதிருந்தாலும், நாங்கள் எங்கள் சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். இன்று நான் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் அம்மாதான், என் அப்பா அன்று; அவர் எனக்கு

உள்தூண்டுதலாக இருந்தார் என்பது மட்டும் உண்மை. தன் பெண்கள் படிக்கவேண்டும் என்பதில் அம்மா மிகவும் குறியாக இருந்தார். இதுதான் முக்கியமான அம்சம். என் மூத்த சகோதரிக்குப் படிப்பில் அவ்வளவு ஆர்வமில்லை. ஆனாலும் அம்மா அவளை ஒரு கல்லூரியில் சேர்த்து, பட்டதாரி ஆக்கினார். இம்மாதிரியான மனஉறுதியை நாங்கள் அவரிடமிருந்துதான் பெற்றோம்.

எனக்கு பதிமூன்றே வயதிருக்கும்போது எனது முதல் கவிதையை எழுதினேன். பருவ வயதில் அனைவரும் சந்தோஷமாகத்தான் இருப்பார்கள். ஆனால் நான் ஒரு சோகமான கவிதையை எழுதினேன் :

வாழ்வு ஓர் இருட்டறை
அங்கு
எண்ணங்கள்
ஆசைகள்
பயங்கள் -
சந்தோஷம் என்னை அச்சமூட்டுகிறது.
இந்த அறையிலும்
சில நேரங்களில்
ஒருவிதமான அன்பு
ஜில்லிக்கும் துக்கம்
துடிப்புமிக்க இளமை
சலனப்படும்.
ஆசைகளின் படுக்கையில்
எண்ணங்கள் விரிந்து கிடக்கின்றன.
ஆன்மாவின் சூட்டில்
இளமை பொங்குகிறது.
தன்னை மறப்பதுதான்
வாழ்வு
குற்றவுணர்வும் ஆசைகளும்
குருட்டுக் குதிரைகளைப் போல
இந்த அறையைச் சுற்றி வருகின்றன.
இந்த அறைக்கு வெளியே
மிகத் தொலைவில்
ஒளி
மரணம்
இலக்கு.

அந்த நாட்களில் நான் கஜல்கள் எழுதி வந்தேன். இந்தக் கவிதையைப் படித்துவிட்டு அப்பா ரொம்பவும் கோபப்பட்டார். “ஏன் இதை எழுதினாய்? என்ன ஆயிற்று உனக்கு? ”என்று கேட்டார். ஏதோவிதத்தில் நான் காயப்பட்டிருப்பேனோ என்ற எண்ணம் அவருக்கிருந்தது. நாம் மனவருத்தத்தோடிருந்தால், ஏதோ காயப்பட்டிருப்பாள் என்று பெற்றோர்கள் எண்ணுவது சகஜம்தானே?

எனக்கு என் ஒன்றுவிட்ட தம்பி தங்கைகளை ரொம்ப பிடிக்கும். நாங்கள் எல்லோரும் சேர்ந்து சினிமாவுக்குப் போவது வழக்கம். இப்போதெல்லாம் குடும்பங்கள் தனித்தனியாக ஆகிவிட்டன. முன்பெல்லாம் எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தனர். பெண்கள் எல்லோரும் ஒரு பக்கமாக உறங்குவார்கள்; ஆண்கள் இன்னொரு பக்கமாக உறங்குவார்கள். நாங்கள் அங்குமிங்கும் சுற்றியபடி பெரியவர்களைத் தொந்தரவு செய்து கொண்டிருப்போம். ஒரு முறை எல்லோரும் மொகலே ஆஸம் பார்க்கப் போனோம். இன்னொரு முறை தர்மேந்திரா – மீனாகுமாரி நடித்த ஒரு சினிமாவுக்குப் போனதாக நினைவு; சினிமாவின் பெயர் ஞாபகமில்லை. அதில் அவர் ஒரு திருடன். ஆமாம். ஃபூல் அவுர் பத்தர். அப்பாதான் அந்தப் படத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். எங்களில் சிலரைத்தான் அந்தப் படத்திற்கு அழைத்துச் சென்றார்கள். சிலரை அழைத்துச் செல்லவில்லை. நான் திரும்பி வந்தபோது அவர்கள் என்னிடம் “என்ன பார்த்தாய்? சினிமா என்ன கதை?” என்று கேட்டார்கள்.

அப்பா எப்போதுமே உட்கார்ந்து அலசி ஆராய்வது வழக்கம். “உனக்கு சினிமாவில் என்ன புரிந்தது?” “அந்தப் படம் என்ன சொல்லுகிறது?” நான் ஒரே வரியில் “ஒரு திருடனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்ததும் அவன் நல்லவனாகத் திருந்திவிடுகிறான்” என்றேன். நான் பார்த்தது இதுதான். அப்பா “சரிதான். நன்றாகப் படத்தைப் புரிந்து கொண்டிருக்கிறாய்” என்றார். நான் ஏழாவது வகுப்பில்தான் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது. அதன் பிறகு அவர் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனாலும் நாங்கள் சினிமாவுக்குப் போவது தொடரத்தான் செய்தது. தனது கலை மூலமாகவே தான் வாழ வழிவகை செய்துகொள்ள வேண்டும் என்று எல்லாக் கலைஞர்களுமே விரும்புவார்கள். நான் முதன்முதலாக வானொலி நிலையத்திற்குப் போனபோது எனக்கு எழுபத்தைந்து ரூபாய் கொடுத்தார்கள். அன்று அது ஒரு பெரிய தொகை. நான் என் குடும்பம் முழுவதையும் ஒரு திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றேன். நாங்கள் படத்தைச் சந்தோஷமாகக் கண்டு களித்தோம்.

எம். எஃப் . ஹுசைன் எங்கள் குடும்ப நண்பர். அவர் வரும்போதெல்லாம் வீடியோ காமெராவுடன் வருவார். எங்களுக்கு வீடியோ காமெரா முன் எப்படி நிற்க வேண்டும் என்பதுகூடத் தெரியாது. அவர் படம் எடுப்பார். காமெரா முன்னால் என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் திகைப்பாக இருக்கும். நாங்கள் ஒரு வேலையும் செய்யாமல் வீட்டைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருப்போம். அவர் எனக்கு இன்னொரு தூண்டுதலாக இருந்தார். அவர் துணிச்சல்காரர் என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். அந்த நாட்களில் அவர் இனியவராக இருந்தார். ரொம்ப அமைதி. மரியாதைக்காரர். ஆனால் படைப்பூக்கமிக்கவராக இருந்தார். அவர் போகும் இடங்களிலெல்லாம் ஏதாவது படைத்துக்கொண்டேயிருப்பார். தெருக்களில் அவர் குதிரைகள் ஓவியம் தீட்டுவார். ஹைதராபாதில் அவர் நுழைந்த தெருமுனைகளிலெல்லாம் குதிரைகள் ஓவியமிருக்கும். அவர் செல்லும் கார்களில்கூட ஓவியங்கள் தீட்டியிருப்பார். நகரத்தின் எந்த மூலையில் அவர் இருந்தாலும் நமக்குத் தெரிந்துவிடும். அவரது உயரமும், கால்களும், அவரது காரும் ஹுசைன் யார், எங்கிருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாகக் காட்டிவிடும்.

என் அப்பா சிறந்த ஓவியராக இருந்தாலும், ஓர் ஓவியராக அவர் வெற்றி பெறவில்லை. ஹைதராபாதில் கவிதை வாசிக்கும் ஒரு கலாச்சாரமிருந்தது; முஷைரா – கூட்டுக் கவிதை வாசிப்பு. முஷைராவிற்கு நிறையபேர் வருவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரிய முஷைரா நடக்கும். கைஃபி ஆஸ்மி கலந்து கொள்ளும் அந்த முஷைராவிற்காக ஆண்டு முழுவதும் இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள். ஸாகிர் லூதியான்வி வருவார். ஷபானா ஆஸ்மிகூட வந்திருக்கிறார். இந்தக் கவிஞர்களுக்கெல்லாம் மக்கள் ஆதரவு இருப்பதாக அப்பா எண்ணுவதுண்டு. அவர்களால் மக்களுடன் உரையாட முடிகிறது. தான் ஓர் ஓவியராக இருந்தும், சம்பாதித்தும், மக்களைச் சென்று எட்ட முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கிருந்தது. மக்தூம் மொஹியுதீன் எங்களுக்கு நண்பர். அவர் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ரஸாக்கர்களுக்கு எதிராக போராடிய வலது கம்ம்யூனிஸ்ட்களில் அவரும் ஒருவர். 1947ல், விடுதலைக்கு முன்பு, நிஜாம் ஆட்சி ஹைதராபாத்தில் நிலவியது. நவாப்களும் நிஜாமின் விசுவாசிகளான முஸ்லிம்களும் ஹைதராபாத் இந்தியாவுடன் இணையக்கூடாது என்றும் அது தனிநாடாக இருக்கவேண்டும் என்றும் எண்ணம் கொண்டிருந்தார்கள். எனவே சுதந்திர இந்தியாவிற்கு எதிராக ரஸாக்கர் இயக்கம் எழுந்தது. மொஹியுதீன் சிறந்த கவிஞர். அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தார். மக்களை ரஸாக்கர்களுக்கு எதிராகத் திரட்டினார். அவர் கவிஞராக இருந்ததனாலேயே இது சாத்தியமாயிற்று. ரஸாக்கர்களுடன் ஒத்துழைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி அற்புதமான கவிதைகளை அவர் எழுதினார். அவருக்கு மக்கள் ஆதரவுமிருந்தது. அப்பா நான் ஓவியராகக் கூடாது என்று எண்ணியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கவேண்டும். நான் கவிஞராக வேண்டும் என்பது அவர் விருப்பம். இறுதிக் காலத்தில் அவரே கவிதைகள் எழுதினார்.

பல கவிஞர்களுடன் எங்களுக்கு நெருக்கமிருந்தது; சுலைமான் அரீப் , ஆலம் குமேரி போன்றோர். ஆலம் குமேரியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். தத்துவப் பேராசிரியராக இருந்தார் அவர். அவர் எங்களுக்கு மிகவும் வேண்டியவர். அக்தர் ஹுஸேன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர். அவர் சிறந்த விமர்சகரும், கவிஞரும்கூட. அவராக ஒரு பத்திரிகை நடத்தி வந்தார். இவர்களெல்லாம் ரஸாக்கர்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் உருதுவில் எழுதிவந்தார்கள். யாரும் இவர்களை ஏனென்று கேட்கவில்லை.

வீட்டிற்கு உருதுப் பத்திரிகைகள் வரும். ரெஹனுமாடெக்கான் வந்து கொண்டிருந்தது. தலைவர்களில் ஒருவரான ஷுஏபுல்லாகானுக்கும் அக்தர் ஹுஸேனுக்கும் சொந்தமாக நாளிதழ்கள் இருந்தன. எங்கள் வீட்டிற்கு இவையெல்லாம் வந்தன.

மொழித் தேட்டமும் கவிதைத் தேட்டமும்

வண்ணங்களுக்கு நான் ஏற்கனவே பழக்கப்பட்டிருந்தேன். கைஃபி ஆஸ்மியும் பிற கவிஞர்களும் எங்கள் வீட்டில் இரவு முழுவதும் இருப்பார்கள். ஆனால் பெண்களுக்கு அவர்களோடு அமர்ந்திருக்க அனுமதியில்லை. நாங்கள் சமையலறையில், திரைக்குப் பின்னால் எப்போதும் மறைந்திருப்போம். ஆண்கள் மது அருந்தியபடி பலவற்றைப் பற்றி ஆனந்தமாக விவாதிப்பார்கள். எனக்கு நான் அங்கில்லையே என்று கடுப்பாக இருக்கும். அப்பா என் சகோதரர்களை அவர்களுடன் உட்கார வைப்பார்; என்னை அனுமதித்ததேயில்லை. நான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளானேன். நான் எழுதிய முதல் கவிதை வரியை அவர்தான் எல்லோருக்கும் படித்துக் காண்பித்தார். இதன் பின்னர் அவர் என்னிடம் நடந்துகொண்ட விதத்தில் மாற்றமிருந்தது. “என்னை பல வண்ணங்களில் கண்டிருக்கலாம் ; ஆனால் அவை வெறும் வண்ணங்கள்தான். நானல்ல” என்று எழுதியிருந்தேன்.

சிறந்த பெண் விமர்சகர்களும் அன்றிருந்தார்கள். ஜீனத் ஸாஜிதா என்றொருவர் இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் பணியாற்றி வந்தார். அவர் எனக்குத் தூண்டுதலாக இருந்தார். அப்பா என்னை அவரிடம் அழைத்துச்செல்வது வழக்கம். ஹைதராபாதிலுள்ள கற்றவர்களுடன் – படித்த பெண்களுடன் – என்னை அறிமுகப்படுத்திவைத்தார். நான் அவர்களிடம் தொடர்பு வைத்திருந்தேன். இப்படித்தான் என் இலக்கிய ஆர்வம் – திருப்திகரமாக இல்லாவிட்டாலும் – வளர்ந்தது.

என் கவிதைகளின் தரம் பற்றி அப்பாவுக்கு உறுதியாக எதுவும் சொல்ல முடியவில்லை. உருதுக் கவிதைக்குச் சீர் தொடர்பான விதிகள் இருந்தன. கஜல் பாணி வேறு இருந்தது. வேறு வேறான பாவினங்கள் இருந்தன. எழுதுவதற்கும் ஒரு நெறிமுறை இருந்தது; எனது கவிதைகளை இலக்கண ரீதியாக படைத்திருந்தேன். அவருக்கு அடிகளும், அதிலுள்ள சீர்களும் அசைகளும் சரியாக உள்ளனவா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நான் என்னை அறியாமலேயே ஓசை நயத்துடன் எழுதியிருந்தேன். நான் முதன் முதலில் எழுதியபோது அப்பா ஜிலானி பானுவிடம் அழைத்துச் சென்று காண்பித்தார். அவரும் “இவளுக்குத் திறமையிருக்கிறது” என்றார். அஸீஸ் கைஸியும் “இவளுக்குத் திறமையிருக்கிறது” என்று சொன்னார். என் திறமையை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பிய அப்பா சிறந்த கவிஞர்களிடம் கற்றுக்கொள்ள அனுமதியளித்தார். செய்யுள் பற்றியும் ஓசை நயம் பற்றியும் நல்ல அறிவு வேண்டும். என் இளமையில் இவற்றைப் பலரிடமிருந்து கற்றேன் நான்.

ஜிலானி பானுவிற்குச் செய்யுளிலக்கணம் பற்றி அப்படி விசேஷமான அறிவு இருக்கவில்லை. அஸீஸ் கைஸிதான் என் கவிதையில் ஓசை நயம் இருக்கிறதா இல்லையா என்பதைச் சொன்னார். ஷாஸ் தம் கானத் என்ற பிரபலமான கஜல் கவிஞர் ஹைதராபாதிலிருந்தார். அவர் காதல் கவிதைகளே அதிகமும் எழுதிவந்தார். முஷைராக்களில் அவை மிகவும் பிரபலம். கஜல் முழுக்கமுழுக்கக் காதல் கவிதைகள்தாம். எனவே மக்கள், “வாஹ், வாஹ், என்ன ஒரு காதல், என்ன ஒரு வேதனை!” என்று ஆரவாரிப்பார்கள். அவர் அதை ரசித்தார். எனக்கு இலக்கணச் சுத்தமாக ஓசை நயத்துடன் எழுதுவது அவ்வளவு திருப்தியளிக்கவில்லை. எனக்குள்ளிருப்பவற்றை முழுமையாக வெளிப்படுத்த அவை போதுமானதாக இல்லை. எனவே இவற்றை உடைத்து விடுபடவேண்டும் என நான் எண்ணினேன். ஆகவே, வசன கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்.

என் கவிதைகளில் ஓசை நயமிருந்தாலும் அவை வசன கவிதைகள்தான். அக்தர் ஹுஸேன் என்னிடம் “உன் கவிதைகள் நன்றாக உள்ளன. இப்படியே எழுதிக் கொண்டிரு” என்று கூறினார். எனவே என் பதினைந்து வயதிலேயே முஷைராவில் கவிதை பாடத் தொடங்கிவிட்டேன். பல்லாயிரம் மக்கள்முன் நின்றுகொண்டு கவிதை வாசிக்க வேண்டும். எப்படியிருந்திருக்கும்? எனக்கு நடுக்கமாக இருக்கும். மேலும் கஜல் மட்டும்தான் பாடவேண்டும். அப்போதுதான் `கைதட்டல்’ கிடைக்கும். எனக்கு இதன்மேல் பிறகு வெறுப்பேற்பட்டது. நான் வளர்ந்து பெரியவளானதும் “போதும் போதும் முஷைராவில் நான் கவிதை வாசித்தது. இனி நான் போகப் போவதில்லை. வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். கவிதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொள்கிறேன். முஷைரா வேண்டவே வேண்டாம்” என்று கூறிவிட்டேன். முஷைராவில் கவிதை வாசிப்பதையும் நான் நிறுத்திவிட்டேன். முஷைராவிற்கு போவேன், கவிதை வாசிப்பைக் கேட்பேன். ஆனால் மேடையில் நின்று கவிதை வாசிக்கவில்லை. என் பதினைந்தாவது வயதில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நின்று என்னைக் கவிதை வாசிக்க வைத்தார்கள். நான் அதற்குத் தகுதியானவளல்ல என்று எண்ணினேன். கைஃபி ஆஸ்மிக்குச் சமமாக நிற்குமளவிற்கு நான் வளரவில்லை. கைஃபி ஆஸ்மி கவிதை வாசிக்கும் மேடையில், சர்தார் ஜாஃப்ரி பேசும் மேடையில், அஸீஸ் கைஸி உரையாற்றும் மேடையில் நான் எப்படி நிற்க முடியும்? அவர்கள் முன்னால், அனுபவத்தில் நான் வெறும் தூசு – பதினைந்து வயதான தூசு. நான் இதை விரும்பவேயில்லை. ஆனால் என் அப்பா என்னை வற்புறுத்தினார். அவருக்கு விளம்பர ஆசை. அது எனக்குத் தெரியாது. எனக்கு என்னைப் பற்றியே தெரியாது. எனவே முஷைராவுக்குப் போகக்கூடாது என்று முடிவுகட்டிவிட்டேன். வீட்டில் உட்கார்ந்து எழுதுவேன். வானொலியில் வாசிப்பேன். எனக்கு வானொலி நிகழ்ச்சிகள் தொடர்ந்து கிடைத்துவந்தன. எனது பதினைந்தாவது வயதிலிருந்து இன்றுவரை ஆறு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பத்து நிமிடங்கள் எனக்கு வானொலியில் நிகழ்ச்சிகள் கிடைத்து வருகின்றன. பல பெண்கள் என் கவிதைகளைக் கேட்டு ரசிக்கிறார்கள். பத்திரிகைகளுக்கும் நாளிதழ்களுக்கும் நான் கவிதைகள் அனுப்புவேன். இங்கு நல்ல பத்திரிகைகள் உள்ளன. எனவே அவற்றிற்கு என் கவிதைகளை அனுப்பினேன்.

நான் வசன கவிதைகள் எழுதத் துவங்கியபோது, என் அப்பா வண்ணங்களைப் பற்றி எழுதத் துவங்கியிருந்தார். கருப்பு வண்ணத்தைப் பற்றி ஒரு கவிதை, சிவப்பு பற்றி ஒன்று, மஞ்சள் பற்றி வேறொன்று. இப்படியாகப் பல வண்ணங்கள் பற்றியும். முஷைராவில் நாங்களிருவரும் இருக்கும் போது, “தந்தை இப்படி எழுதுகிறார், மகள் அப்படி எழுதுகிறாள்” என்று மக்கள் ஒப்பிட்டுப் பேசுவது வழக்கம். இது ஒரு போட்டியை போல இருந்தது; உண்மையில் நான் இதை விரும்பவில்லை. அப்பா கவிதை எழுத முனைந்ததே தவறு.

எனது சிறுவயதில் காலிப் தான் என் மனத்தைக் கவர்ந்தார். பின்னர் பெஹ்மிதா ரியாஸ், கிஷ்வர் நஹித் போன்ற பெண் கவிஞர்களின் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். கிஷ்வர் நஹித், பர்வீன் ஷகீர் இருவரைக் காட்டிலும் பெஹ்மிதா ரியாஸைத்தான் நான் நெருக்கமாக உணர்ந்தேன். அவருக்கு ஓர் இயக்கப் பின்னணி இருந்தது. அவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்; அதில் மிகத் தீவிரமாக இயங்கி வந்தவர். அவரது கவிதைகள் மிகவும் வெளிப்படையானவை. எனவே இந்தப் பாணிதான் சரியானது; நாமும் இதையே தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நான் உறுதி செய்துகொண்டேன். நான் அவர் கவிதைகளை மட்டும்தான் படித்திருந்தேன். அவரைப் பார்த்ததோ சந்தித்ததோ இல்லை. ஆனால் என் கவிதைகளுக்கு அடித்தளம் இட்டவர்களில் அவரும் ஒருவர். நான் இவ்வளவு உயர்ந்திருப்பதற்குக் காரணம் அவர்தான்.

எங்களுக்குத் தக்கனி என்ற அற்புதமான மொழி இருந்தது. நேற்று உங்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் `நகோ’, `ஹெள’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினீர்கள். இதே வார்த்தைகள் எங்களிடமும் உள்ளன. நாம் ஒரே மொழியைத்தான் பேசுகிறோம். `ஹெள’, `நகோ’ போன்ற பேச்சு வழக்குகள் எழுத்தில் வருவதில்லை. முன்பெல்லாம் அவை இலக்கியத்திலும் இடம் பெற்றன. குதூப் ஷாஹி காலத்தில் அருமையான கவிதைகள் எழுதப்பட்டன. பெண்களின் மொழியிலேயே கவிதை எழுதிய கவிஞர்கள் இருந்தார்கள். நிஜாமின் காலத்தில்தான் தூய உருது என்ற கருத்தாக்கம் எழுந்தது. குதூப் ஷாஹி காலத்து ஓவியக் கலையும் மொழியும் கொஞ்சங்கொஞ்சமாகப் புதைக்கப்பட்டு, தூய பாரசீக பாதிப்புமிக்க அராபிய மொழி – அதை பாரசீக உருது என்றே அழைப்பேன் – அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இது எவ்வளவு தூரத்திற்குப் போனது என்பதற்கு ஓர் உதாரணம்: ஹைதராபாதின் முதல் பெண் கவிஞர் `மே ஜாவூங்கி’ என்று பெண்பாலில் எழுதாமல் “மே ஜாவூங்கா” என்று ஆண்பாலில் எழுதினார்.

தக்கனி மொழியில் இன்று எஞ்சியிருப்பவற்றை வைத்து அதற்கு மீண்டும் உயிர்கொடுப்பதே எனது குறிக்கோள்.

திருமணம், மௌனம், மரணம்

எனக்கு பதினைந்து பதினாறு வயதிருக்கும் போதே, நான் மற்ற பெண்களிடமிருந்து வித்தியாசமானவள் என்பதை அப்பா புரிந்துகொண்டார்.இவளுக்குச் சிறிதளவு சுதந்திரம் அளிப்போம் என்று எண்ணினார். எனவே வரவேற்பறையில் ஆண்களுடன் அமர்ந்து உரையாடவும் எனது கவிதைகளைக் காட்டவும் அனுமதிக்கப்பட்டேன். அவர்களும் அவர்களின் படைப்புகளை என்னிடம் காண்பித்தனர். இவ்வாறு ஆண்களுடன் பழகும் சுதந்திரம் எனக்குக் கிடைத்தது. திருமண ஏற்பாடுகள் செய்வதற்கு முன்னால், அப்பா என்னிடம் “உனக்கு யாரையாவது பிடிக்கிறது, காதலிக்கிறாய் என்றால் அவனையே திருமணம் செய்து கொள். எனக்கு எந்த ஆட்சேபணையுமில்லை” என்று சொன்னார். “இல்லை, நான் யாரையும் காதலிக்கவில்லை,” என்று கூறிவிட்டேன். அதன் பின்னர்தான் அப்பா திருமண ஏற்பாடுகள் செய்தார். அதைச் சம்பிரதாயமான திருமணம் என்று சொல்லிவிட முடியாது. எனது கணவர் ஒரு படைப்பாளியையே மணந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினார். எனவே என்னைத் திருமணம் செய்து கொண்டார். அப்பா ஓர் ஓவியர்; மகள் ஓர் கவிஞர். எனவே எங்கள் குடும்பமே ஒரு கலைக்குடும்பம் என்று எண்ணிவிட்டார். வித்தியாசமானச் சூழல் நிலவும் என்றும் நம்பினார்.

ஓர் ஓவியராக வேண்டும் என்ற கனவு எனக்கு எப்போதும் உண்டு. எனவே ஒரு நல்ல ஓவியரைத் துணையாக பெறவேண்டும் என்று விரும்பினேன். ஆனால், ஒரு நல்ல ஓவியரோ, கவிஞரோ எனக்குக் கிடைக்கவில்லை. எனக்கு யாரையாவது ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமிருக்கவில்லை. ஆனால் இவர் மிகவும் விடாப்பிடியாக இருந்தார். ஓர் ஆண்டு காலம் அவர் தினமும் வந்துகொண்டிருந்தார். இந்தத் திருமண உறவு நிச்சயம் நன்றாக இருக்கும் என்று என்னை நம்பும்படி செய்தார். இறுதியாக நானும் சம்மதித்தேன்; எங்கள் திருமணமும் நடந்தது.

நான் முதல் நாள் அவரைச் சந்தித்தபோதே அவரிடம் “உங்களுக்கு மீசையில்லை. எனக்கு உங்களை பிடிக்கவில்லை” என்று சொன்னேன். அவருக்கு வழுக்கை வேறு இருந்தது. எங்கள் அப்பாவும் வழுக்கைதான். ஏனென்று தெரியவில்லை, மீசை மீது எனக்கு பெரிய வெறியே இருந்தது. எனக்கு மெலிதான மீசைகளே பிடிக்கும். அவரது பெயர் சயீத்-உர்-ரெஹ்மான்.

அப்பா வரதட்சணை கொடுப்பதில்லை என்று முடிவு செய்திருந்தார். உண்மையில் அவர் `இரட்டை வாழ்க்கை’ வாழ்ந்து வந்தார். கலைஞனாகவும் குடும்பஸ்தனாகவும். எனவே, “நான் வரதட்சணை கொடுக்கப்போவதில்லை. என் மகளை மணக்க வருபவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரவேண்டும்” என்று சொல்லிவிட்டார். அவர் அதிர்ஷ்டம் இரண்டு மருமகன்களும் அப்படியே அமைந்தனர்.

நான் அவர்கள் வீட்டில் புகுந்த நாளிலிருந்தே என் மாமியாரோடு போராட்டம் ஆரம்பித்துவிட்டது. என் கணவர் “எந்தச் சிக்கலுமில்லை. எனக்கு வரதட்சணை எதுவும் வேண்டாம். உங்கள் வீட்டிலிருந்து எதுவும் வேண்டாம். திருமணம் செய்து கொடுங்கள் போதும்” என்று கூறினார். நாங்களும் ஒத்துக்கொண்டோம். திருமணம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு என் மாமியாரைப் பார்த்து ஆசி வாங்கப் போனேன். என் மாமியார் ஏற்கனவே எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது என் கணவர் எங்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று அவரிடம் சொல்லியிருந்தார். எனவே அவர் வாயைத் திறக்கவில்லை. நான் மருமகளாக நுழைந்ததும் அவர் அதிகாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார். “ ஒன்றும் ஆசி வாங்க வேண்டாம்; என்னிடம் பேச வேண்டாம். உனக்கும் இந்தக் குடும்பத்திற்கும் எந்த பந்தமும் கிடையாது” என்று சொல்லிவிட்டார். ஆறுமாதங்கள் என் கணவரைத் தவிர வேறு யாருடனும் பேசாமல் அங்கேயே இருந்தேன். என் கொழுந்தன்மார் இருவரும் என்னிடம் பேசமாட்டார்கள்; என் நாத்தியும் பேசுவதில்லை; என் மாமியாரும் பேசுவதில்லை. நான் மனிதர்களோடு பழகப் பிரியப்படுபவள். எனவே நான்தான் தேநீர் தயார் செய்து அவர்களுக்குக் கொண்டு கொடுப்பேன். அவர்களோ அதை வாங்கிக் குடிப்பார்கள். என்னிடம் பேசமாட்டார்கள்.

திருமணத்திற்குப் பின்னர் நான் என் கணவரை மிகவும் நேசித்தேன். காதல்வயப்படுவேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஆனால் பாலுணர்ச்சி இருக்கிறதே. . . நமது உடலைப் பற்றி நாமே அறிந்து கொள்கிறோம்; நம்மை நாமே முதல் முறையாக நேசிக்க ஆரம்பிக்கிறோம். திருமணத்திற்கு முன் நாம் எப்படியிருக்கிறோம் என்று நமக்கே தெரியாது. வேறொருவரின் நெருக்கத்தில், தொடர்பில் நம்மை வேறாக உணர்கிறோம். இப்பொழுதெல்லாம் எல்லாவற்றையும் நாம் வரைமுறைப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம். தேனிலவு பன்னிரெண்டு நாட்கள். எனக்கோ தேனிலவு ஆறு மாதங்கள். ஆறு மாதமும் நடுப்பகல் ஒரு மணிக்குப் பிறகுதான் என் அறைக்கதவைத் திறப்பேன். என் மாமியாரைக் கோபமூட்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

இந்த நாட்களில் நான் கவிதையே எழுதவில்லை. நான் உணர்ந்ததை, அனுபவித்ததை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அவருக்கு எல்லாக் கலைகளிலும் ஈடுபாடு இருந்தது. ஓவியம், இசை எனப் பல விஷயங்கள். எங்கள் வீட்டில் பீதோவன் இசை இருந்தது. Sound of Music படப்பாடல்கள் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. எல்லாம் நயத்துடன் நன்றாக இருந்தன. எங்கள் வாழ்க்கையில் ஓர் இசைவு இருந்தது. இருபத்து நான்கு மணிநேரமும் இசையிலேயே இருந்தோம். அவர் என்னிடம், “ஜமீலா, உனக்கு நடனம் கற்கவேண்டுமா? நான் அனுமதி தருகிறேன். போய் கற்றுக்கொள். ஓவியம் பயில வேண்டுமா? நான் அனுமதி தருகிறேன். போய் வரையக் கற்றுக்கொள்” என்றார். ஆனால் நான் முழுமையாக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தேன். எனது கலையை பற்றி எனக்கு எண்ணத் தோன்றவில்லை. பல நாட்கள் – ஏழாண்டுகள் – நான் எதுவுமே எழுதவில்லை என்று நினைக்கிறேன். எழுதவே தோன்றவில்லை. நான் வாழ்க்கையை ரசித்துக்கொண்டிருந்தேன்.

ஒன்றரை வருடங்களில் நான் ஓர் அழகான குழந்தையைப் பெற்றெடுத்தேன். பிறருக்கு அது அழகாக இல்லாமலிருக்கலாம்; எனக்கு அழகாக இருந்தது. அது பிறந்தபோது நான் கனவு கண்டிருந்த குழந்தை இதுதான் என்று உணர்ந்தேன். எந்தக் குழந்தையை சதாசர்வகாலமும் கனவில் கண்டேனோ அதே குழந்தைதான் இது.

என் முதல் குழந்தை எனக்கு முக்கியமான குழந்தை. பின்னர் குடும்பக் கட்டுபாட்டு முறையைக் கடைப்பிடித்தேன். அடுத்த பத்தாண்டுகள் குழந்தைகள் இல்லை. அதன் பிறகு, ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்து அவளை பாலே நடனக்காரியாக ஆக்குவோம் என்று எண்ணினேன். அது ஒரு நவம்பர் மாதம். இந்திரா காந்தி நவம்பர் பத்தொன்பதாம் தேதி பிறந்தவர். எனவே பிறக்கபோகும் என் மகளும் சக்தி வாய்ந்தவளாக இருப்பாள் என்று எண்ணினேன். ஆனால் பிறந்தது ஆண் குழந்தை. ஸ்கானிங்கில், ஏழெட்டு மாதத்தில், அது பையன்தான் என்று தெரிந்துவிட்டது. நான் விதியின் கைகளில் விட்டுவிட்டேன். அதன் பிறகு நான் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.

என் முதல் மகனை சரியான நேரத்தில் நான் திசை திருப்பி இருந்தால் அவன் இன்று கட்டாயம் ஒரு பாலே நடனக்காரனாக வந்திருப்பான். இப்போதோ அவனுக்கு கம்ப்யூட்டரிலும் கணிதத்திலும்தான் ஆர்வமிருக்கிறது. எனவே அவன் போக்கிற்கே விட்டுவிட்டேன். அவனுக்காக நான் எதையும் தேர்ந்தெடுக்க முடியாது.

என் முதல் சகோதரி சிறுவயதிலிருந்தே சாது, அடங்கி நடப்பவள். அவளுக்குத் தான் ஒரு நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்வது, நல்ல சமையல், மனைவியல் பட்டம் இப்படித்தான் இருந்தன அவளது ஆசைகள். அந்த வாழ்க்கையில் அவள் சந்தோஷமடைந்தாள். அவள் குழந்தைகளை நன்கு நேசித்தாள். எனவே என் குழந்தைகளை அவள் நன்கு பார்த்துக்கொண்டாள்.

அப்பா அருகிலேயேதான் குடியிருந்து வந்தார். ஒவ்வொரு மாலையையும் நான் என் பெற்றோர்களுடன் கழிப்பேன். என் அப்பா, அம்மா, என் குடும்பம் மற்றும் என் கணவர். என் புகுந்த வீட்டுக்காரர்கள் எதிலுமில்லை. அப்பா அடிக்கடி “ஜமீலா, செய்வது கொஞ்சங்கூட நன்றாக இல்லை. கட்டாயம் எழுதத்தான் வேண்டும்” என்பார். நானோ “எழுத முடியவில்லை; ஏனோ தெரியவில்லை. முயன்று பார்க்கக்கூட முடியவில்லை” என்று சொன்னேன். நான் எழுதவுமில்லை.

அப்பாவிற்குக் காலில் புற்று வந்து பிறகு ஆபரேஷன் ஆயிற்று. அப்பா மிகவும் மனமுடைந்துபோயிருந்தார். அவருக்கு ஓவியம் வரையவேண்டும் என்ற ஆசையிருந்தது. எனவே நான் அவரிடம் “நீங்கள் இங்கேயே ஓவியம் வரைந்து கொண்டிருங்கள். நான் உதவி செய்கிறேன். வேண்டிய வசதிகள் செய்து தருகிறேன். வரையுங்கள்” என்றேன். ஆனாலும் அவருக்கு ஏதோ ஒரு மனக்குறை இருந்தது. சந்தோஷமாக இல்லை.

நான் என் கணவரோடு மிகுந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். என் அப்பா இதை எதிர்பார்க்கவில்லை. மற்ற பெண்களை போலத் திருமணமான பிறகும் பிறந்த வீட்டுக்கு வந்துபோய்க்கொண்டிருப்பேன், வந்து தங்கவும் செய்வேன் என்று அவர் எண்ணியிருந்தார். ஆனால் திருமணத்திற்கு பின் ஓர் இரவுகூட என் பெற்றோருடன் நான் தங்கியதில்லை. இரவுகளில் என் வீட்டில், அதுவும் என் அறையில்தான் இருக்க விரும்பினேன். என் பெற்றோர் வீட்டில் சென்று இருக்க விரும்பவில்லை. பகல் முழுக்க அங்கிருப்பேன். இரவானால் என் கணவருடன்தான். அப்பா இதனால் ரொம்பவும் மனமுடைந்து போயிருந்தார். எனது முதல் குழந்தை பிறப்பதற்கு முன்னால் என்று நினைக்கிறேன்; என் தேனிலவு நாட்கள் கழிந்தவுடன், அவர் என்னிடம் “விவாகரத்து வாங்கிக் கொள் ஜமீலா; திருமணம் என்றால் என்ன, வாழ்க்கை என்றால் என்ன என்றுதான் உனக்கு புரிந்துவிட்டதே” என்று சொன்னார். அதற்கு நான் “இல்லை, நான் இப்படியே வாழ விரும்புகிறேன்” என்றேன். அதற்கு அவர் “உனக்கு ஒரு படைப்பாளி, ஓர் ஓவியர் துணைவராக வரவேண்டும் என்று விரும்புகிறாய். நான் ஓர் ஓவியரைப் பார்த்து துணையாகத் தருகிறேன். விவாகரத்து வாங்கிக் கொள்” என்றார். நான் “முடியாது என்னால்” என்று சொல்லிவிட்டேன்.

அப்பா மெதுவாகச் செத்துக்கொண்டிருந்தார். மூன்று வருடங்களில் மரணமடைந்துவிடுவோம் என்று அவருக்குத் தெரியும். எனக்கும் மூன்று வருடங்களில் அவர் இறக்கப்போகிறார் என்று தெரியும். அவர் மெதுவாக இறந்துகொண்டிருந்தார். கடைசிப் பன்னிரெண்டு நாட்கள் அவர் கோமாவிலிருந்தார். அவரை நான் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். முடிந்ததெல்லாம் செய்தேன். இறுதி நாட்களில் அவர் என்னிடம் “நீ என் மகளல்ல; மகன்” என்று சொன்னார்.

என் சகோதரர்கள் வெளிநாட்டிலிருந்தார்கள். அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வரச் சொன்னேன். இதனால் அவர்களால் அப்பாவைப் பார்க்க முடிந்தது. எப்போதும் முதலடி நான்தான் வைப்பேன். அவர் உண்மையில் மிகவும் துக்கத்துடன் இருந்தார். என்னை அவர் ஒரு மகளாகத்தான் எப்போதும் எண்ணி வந்தார். இப்போதோ ஒரு மகன் ஸ்தானத்தில் நான். மகள்களை தங்களுக்கு கீழானவர்களாகத்தான் அவர்கள் எணணுவார்கள். மகனுக்குத்தான் சம அந்தஸ்து.

நான் ஒரு கவிதை எழுதினேன் : நான் ஓர் இச்சை. என்னை அனுபவித்து உணர்ந்து கொள், எனத் துவங்கும் ஒரு நீண்ட கவிதை. அவர் அந்தக் கவிதையை மிகவும் விரும்பி ரசித்தார். எனக்கு அந்தக் கவிதை பிடிக்கவேயில்லை. அதனால்தான் இன்று அதை நான் கொண்டு வரவில்லை. அந்தக் கவிதையைச் சொல்லி முடித்ததும் அவர் கோமாவில் ஆழ்ந்துவிட்டார். பன்னிரெண்டு நாட்கள் கோமாவிலிருந்தார். அவர் உடல் மரணப் படுக்கையில் உருகிக்கொண்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும். எனக்கு பயங்கரமாக இருந்தது. அவர் உடல் மருந்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை. உடல் முழுவதும் மென்மையாக இருந்தது. அதுவும் அவரது கண்கள். . . கோமாவிலிருப்பவர்கள் பேசிக்கொண்டேயிருப்பார்கள்; அவர்களை அறியாமலேயே. அப்பாவும் தொடர்ந்து பேசியபடியேயிருந்தார். அவரது ஆன்மா ஆழ்ந்த துக்கத்திலிருந்தது. அப்போதுதான் நான் அவர் இறக்கக்கூடாது என்று விரும்பினேன். ஒரு கலைஞன் இறக்கக்கூடாது. அவருக்குள் இருந்த கலைஞன்தான் அழுகிறான். அந்தக் கலைஞன் பேசுகிறான். கலைக்காக, ஓவியத்திற்காக ஏங்குகிறான். இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று. பன்னிரெண்டு நாட்கள் இதைப் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். மரணத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது எந்த அளவுக்கு நல்லதோ அந்த அளவுக்குத் தீங்கும்கூட.

அவரது மரணத்திற்குப் பின்னர் என் வாழ்க்கை மாறிவிட்டது. இனி வாழமுடியும் என்று எனக்குத் தோன்றியது. மரணம் எனக்கு புதிய வாழ்வைத் தந்தது. என் முன்னால் நிகழ்ந்த அந்த மரணம் எனக்கு முற்றிலும் புதிய வாழ்வைத் தந்தது.

ஓர் ஆறுமாதங்கள் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நான் கண்ணாடியைப் பார்ப்பேன். எனது முகத்தில் அவரது கண்கள் தெரியும். நான் படுக்கையில் கிடக்கும்போதும் அவரைக் காண்பேன். என்னைச் சுற்றிலும் அவரை உணர முடிந்தது. இத்தனைக்கும் அவர் என் வீட்டிற்கு வந்ததேயில்லை. இப்படியாகக் கழிந்த ஆறு மாதங்களும் எனக்கு மரண அவஸ்தையாக இருந்தன. முடிவாக திடீரென்று நான் என்னிடமே “ எழுதத் தொடங்கு. அதில்தான் உனக்குச் சாந்தி கிடைக்கும்” என்று சொல்லிக்கொண்டேன். பிறகு எழுதவும் ஆரம்பித்தேன். இப்படித்தான் படைப்பு ரீதியான மாற்றம் எனக்குள் நிகழ்ந்தது.

ஊர்சுற்றி நாட்களும் முஸ்லிம் அடையாளமும்

எனக்கு மணமானபோது நான் வெறும் பட்டதாரிதான். ஓர் அறிவியல் பட்டதாரி. நான் ஒரு நல்ல மாணவியுங்கூட. அம்மா என்னை ஒரு டாக்டராக்க விரும்பினார். நான் இண்டர்மீடியெட்டில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் அம்மா நான் எம்..பி. பி.எஸ். சேர வேண்டும் என்று விரும்பினார். அப்பா என்னை அனுமதிக்கவில்லை. ஏன்? மகள்களுக்கு அந்த அனுமதி இல்லை. நான் படித்து டாக்டரானால் நிறையப் பணம் சம்பாதிக்கமுடியும் என்று என் அம்மா எண்ணிக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரின் திட்டங்களிலும் எனக்கு ஈடுபாடில்லை. எனவே சத்தம் காட்டாமல் பி.எஸ்ஸி. சேர்ந்துவிட்டேன். உண்மையில் நான் உருதுவில் எம். ஏ. பண்ண வேண்டும் என்று விரும்பினேன். உருது எனக்குப் பிடித்திருந்தது. உருது எனது பேச்சு மொழி மட்டும். முறையாக நான் உருது பயிலவில்லை. எனவே அம்மொழியில் தேர்ச்சி பெற்று எம்.ஏ. பண்ண வேண்டும் என்று எண்ணினேன். என் ஆசிரியர்களோ மறுப்புத் தெரிவித்தனர். “உனக்குதான் உருது நன்றாகத் தெரியுமே. பின் எதற்காக உருதுவில் எம்.ஏ.? பேசாமல் பி.எஸ்ஸி.க்கு பிறகு எம்.எஸ்ஸி கெமிஸ்ட்ரி பண்ணு” என்றனர். நான் தொடர்ந்து படித்திருக்க முடியும். என் கணவரும் அனுமதியளித்தார். “ என்ன படிக்கவேண்டும் என்று விரும்புகிறாயோ அதைப் படி.” ஆனால் நான் வேதியியலில் பட்ட மேற்படிப்பு படிக்கவில்லை. அது அலுப்பு தருவது. எனவே ஆங்கிலத்தில் எம். ஏ. செய்ய எண்ணினேன். ஆனால் ஆங்கிலத்தில் எம். ஏ. மிகப் பின்னால்தான் படித்தேன். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு. திருமணத்திற்குப் பின் ஆறேழு ஆண்டுகள் நான் படிப்பைப் பற்றியே யோசிக்கவில்லை.

நான் என் கவிதைகளுக்காகத்தான் இலக்கியம் படித்தேன். வேறெதற்காகவும் அல்ல. ஜான் டன்னை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரைப் படித்த போதுதான் இலக்கியம் படிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பின்னர் ஷேக்ஸ்பியரைப் படித்தேன். அதன் பின்னர் எலியட் படித்தேன்.

எனக்கு எப்படியாவது வீட்டை விட்டு வெளியே போகவேண்டும். எனவே பி.எட். செய்தேன். மாமியாருடன் நாள் முழுவதும் இருப்பது என்பது பயங்கரம். எனவே வீட்டிலிருந்து வெளியே சென்றுவிடுவேன். என்னை என் மாமியார் “ஊர்சுற்றி” என்று அழைத்தார். என் பெயர் “ஊர்சுற்றி!”

அந்த நாட்களில் வேலை கிடைப்பது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. எனக்கு ஒரு மத்திய அரசுப் பள்ளியில் உடனடியாக வேலை கிடைத்தது. BHEL தொழிற்சாலையைச் சேர்ந்த பள்ளி. எனவே நான் சுற்றிக்கொண்டேயிருப்பேன். அதுவும் நகரத்திற்கு வெளியே. சுற்றிலும் மரங்கள், செடிகள், பூக்களென அருமையான இயற்கை. நான் இயற்கையை நேசிப்பவள். “நான் மேல் வகுப்புகளுக்கு எடுக்கமாட்டேன். ஏனென்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டால் அவர்கள் மனம் மாசுபட்டுவிடுகிறது. எனவே குழந்தைகளுக்குத்தான் எடுப்பேன்” என்று கூறிவிட்டேன். நான் அவர்களோடு விளையாடிக்கொண்டு சந்தோஷமாக இருப்பேன். நான் பாடம் கற்பிக்கிறேன் என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். நானோ அவர்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணி வந்தேன். என் மேலதிகாரிகளுக்கும் என் வேலையில் முழு திருப்தியிருந்ததால் அவர்கள் எந்த பிரச்சினையையும் எழுப்பவில்லை.

என் முஸ்லிம் அடையாளத்தைப் பொறுத்தவரை என் இளமைக்காலத்தில், நான் இன்டர்மீடியெட் படித்துக் கொண்டிருக்கும்போது நடந்து போய் வருவேன். ஒரு பையன் என் பின்னால் விசிலடித்துக்கொண்டே வருவான். அப்பா அதைப் பார்த்துவிட்டு என்னிடம் “இது மிகவும் மோசம். பெண்கள் புர்கா அணிந்து கொள்ளவேண்டும்” என்று சொல்லி உடனடியாக எனக்கு புர்காவும் அணிவித்தார். மூன்று ஆண்டுகள் புர்காவில்தான் இருந்தேன். அந்த நாட்களில் பெண்களுக்கென்று தனியாக பேருந்துகள் இருந்தன. அந்தப் பேருந்தைத்தான் நான் பிடிப்பேன். நான் என்ன செய்வேனென்றால், அப்பாவின் எதிரில் பேருந்தில் ஏறி, உள்ளே சென்றவுடன் புர்காவைக் கழற்றி எடுத்துப் பைக்குள் வைத்துக்கொள்வேன். பின்னர் அவருக்கு இது சரிப்பட்டு வராது என்று தோன்றிவிட்டது. எனவே என் போக்கிலேயே போக விட்டுவிட்டார். என் அம்மா புர்கா அணிந்ததே இல்லை. இப்போதும்கூட அணிவதில்லை. என் பாட்டி கட்டாயம் ஓர் இந்துவாகத்தான் இருந்திருக்கவேண்டும். எப்படிச் சொல்கிறேன் என்றால், நிஜமாபாத் கிராமத்தைச் சேர்ந்த அவர்கள் மனத்தை ஈர்க்கும் பல பண்பாட்டுச் சடங்குகளை அனுசரித்து வந்தார்கள். என் சிறுவயதில்கூட எங்கள் வீட்டில் புர்கா முறையை நான் பார்த்ததில்லை. அது கட்டாயமாக இருந்ததில்லை. மேலும் நடுத்தட்டுப் பெண்கள் புர்கா அணிவதே இல்லை. பழைமைப் பிடிப்புள்ள சிலர் மட்டுமே அணிந்து வந்தார்கள். அன்று முஸ்லிம் என்பதற்கு ஒரேயொரு வரையறைதான் இருந்தது. பக்ரீத், ரம்ஸான் ஆகிய இருதினங்கள் நமாஸ் செய்பவர்தான் முஸ்லிம். விசேஷ தினங்களில் மட்டும் பள்ளிக்குச் சென்று தொழுகை நடத்துவது. இன்றைக்கும் நான் அதைத்தான் செய்துவருகிறேன். அந்த விதத்தில் நான் ஒரு முஸ்லிம். மேலோட்டமாகப் பார்த்தால், எங்களுக்கு ரம்ஸான், பக்ரீத் ஆகிய இரு பண்டிகைகள்தான் இருப்பதுபோலத் தெரியும். *கியாரவீன் போன்ற பண்டிகைகள் இருக்கத்தான் செய்தன. தர்காக்களில் பலவிதமான விழாக்கள் உண்டு. அவை எல்லாம் இப்போது எனக்கு ஞாபகமில்லை. நான் எல்லாவற்றையும் அனுசரிப்பதில்லை. பிறர் பக்தியுடன் எல்லாவற்றையும் செய்வார்கள். நான் ரசித்து மகிழ்வேன். வாழ்க்கையில் ஒரு முறை நான் சூஃபியாக வேண்டும் என்று விரும்பினேன். தர்கா கலாச்சாரம் அற்புதமான கலாச்சாரம். நாம் நம் ஆன்மாவுடன் ஒன்றிவிடவேண்டும். எனவே அந்தக் கலாச்சாரம் உண்மையிலேயே என்னை மிகவும் கவர்ந்திழுத்தது.

வளைகுடா நாடுகளின் பாதிப்பால் புர்காவைப் பற்றிய பிரக்ஞை மக்களுக்கு அதிகமாகியது. மக்களுக்கு அவர்களது மதம் பற்றிய விழிப்பு ஏற்பட்டது. தர்காவுக்குச் செல்வது நின்றது. என் சிறுவயதிலெல்லாம் பெண்கள் – என் பாட்டிகூட – மிகுந்த நம்பிக்கையுடன் தர்காவிற்குப் போவார்கள். இந்துப் பெண்கள் கோவிலுக்குப் போவதுபோல்தான் இதுவும். எனக்கு இது ரொம்பப் பிடித்தமானது. என் பாட்டி இந்துக் குடும்பங்களில் இருப்பது போன்றே எல்லாச் சடங்குகளையும் அனுசரித்து வந்தார். எந்த வித்தியாசமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை பெண்கள் அனைவரும் ஒரேபோல்தான். ஆண்கள் வெளியிலிருந்து வந்தார்கள். பெண்கள் பூர்வீக இந்தியர்கள்தான். எல்லாப் பெண்களும் இந்துக்கள்தாம். என் பாட்டி நிச்சயம் ஓர் இந்து. எனவே நாங்களும் இந்துக்கள்தாம். வெளிநாட்டிலிருந்து ஒரு பெண் கூட வரவில்லை. ஆண்கள்தாம் வந்தார்கள். எனவே `நான் முஸ்லிம், அவள் இந்து’ என்று சொல்வதிலெல்லாம் எந்த அர்த்தமுமில்லை. என்னைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்றுதான். வளைகுடா கலாச்சாரம் நுழைந்த பின்தான் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின. சில விஷயங்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை போய்விட்டது. ரஸாக்கர்கள் இயக்கத்திற்குப் பின்னர் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் மத்தியில் இரண்டு போக்குகள் எழுந்தன. கம்யூனிஸ்ட்டுகள் ஒரு பிரிவினர். இவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. பிற்போக்காளர்களான ரஸாக்கர்கள் மற்றொரு பிரிவினர். ஓவைஸி முஸ்லிம்களின் தலைவர் இன்று.

1984ல் ஷானாஸ் ஷேக் பிரச்சினை எழுந்தது. அவர் விவாகரத்துச் செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கு பம்பாய் நீதிமன்றத்திற்கு வந்தது. பேப்பரில் நானும் படித்தேன். என் உறவுக்காரப் பெண் ஒருத்தியை வயதான கிழவருடன் முடிச்சுப்போட்டுவிட்டார்கள். பர்காஸ் என்ற பகுதியில் இது ஒரு தொடர்கதை. அங்குள்ள பதினைந்து பதினாறு வயதுப் பெண்கள் வயதானவர்களுக்கு மணமுடிக்கப்படுவதும் அதற்காக நிரம்பப் பணம் மெஹராகப் பெறுவதும் வழக்கமாக இருந்தது.

பலர் ஏராளமான பணத்துடன் வந்து, ஒரு குடும்பமே வாழும்படியான பணத்தைக் கொடுத்து பெண்களைக் கொண்டுசெல்வார்கள். குடும்பத்தினரும் ஒரு முழுக்குடும்பத்தையும் வைத்துக் காப்பாற்றும்படியான பணம் கிடைக்கும்போது பெண்ணை ஒரு கிழவனுக்கு மணம் முடித்துக்கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று எண்ணினார்கள். `நமது பணப் பிரச்சினை தீர்ந்துவிட்டது’ – இதுதான் அவர்கள் எண்ணம். பதினைந்து வயதுப் பெண்ணொருத்தியை எழுபது வயதுக் கிழவனுடன் பார்க்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கும். இதுபற்றி நான் நிறைய கவிதைகளும் ஒரு நாடகமும் எழுதினேன். இன்றும்கூட, ஹைதராபாதின் பர்காஸ் பிரதேசத்தில் பாதிக் குடும்பங்களாவது இந்த அனுபவத்திற்கு ஆளாகாமலில்லை. இந்தக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒரு பெண் திருமணமாகிப் போனால் போதும், நம் குடும்பம் பிழைத்துக் கொள்ளும் என்று நினைக்கின்றன. மகள் வெளியிலிருந்து பணம் அனுப்புவாள்; குடும்பம் இங்கு சௌகரியமாக இருக்கும். பையன்கள் படிப்பதில்லை. அவர்கள் ஊர் சுற்றிக்கொண்டும் ஏதாவது வம்புதும்புகள் செய்துகொண்டும் தங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் வீட்டிலுள்ள பெண்களைச் சார்ந்தே வாழ்கின்றனர். பெண்களே முழுக் குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார்கள். இது மிகப் பெரிய சோகம்தான். ஒரு கிழவனுக்கு வாழ்க்கைப்பட்ட அமீனா கேஸ் பின்னர்தான் தெரிய வந்தது.

வரதட்சணைப் பிரச்சினை காரணமாக பல பெண்கள் திருமணமாகாமலேயே இருக்கின்றனர். பெண்களுக்குப் போதுமான கல்வி அளிக்கப்படுவதில்லை. அவள் பெரிய பெண்ணானதும் வீட்டில் உட்கார்த்திவிடுகிறார்கள்; அவள் மனம் சோம்பிப் போய்விடுகிறது. சமைத்துப் போடுவது, தந்தையையும் சகோதரர்களையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வது – இதைத் தவிர வேறு வேலை கிடையாது. திருமணத்திற்காக காலங்காலமாகக் காத்திருப்பதே வேலையாகிவிடுகிறது. பெண்களுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும் என்று நாமே ஊகித்துக் கொள்ளலாம். வரதட்சணைப் பிரச்சினை வேறு. ஆந்திரர்கள் வந்த பின்னர்தான் இந்த வரதட்சணைப் பிரச்சினை தொடங்கியது. ஆந்திரர்களிடம் ஏராளமான பணமிருந்தது. சொத்து சுகங்கள் இருந்தன. எனவே கேட்ட வரதட்சணையைக் கொடுக்க முடிந்தது. ஆந்திரர்கள் கொடுக்க ஆரம்பித்தவுடன் ஹைதராபாதிலிருந்த முஸ்லிம்கள் தாங்களும் வரதட்சணை பெற்றுக்கொண்டால் என்ன என்று எண்ணத் தலைப்பட்டார்கள். எழுபத்தைந்தாயிரம் தந்து பெண் கொடுக்க வரும்போது, வரதட்சணை இல்லாமல் எதற்காக ஒரு பெண்ணை மணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. பெண்கள் திருமணமாகாமலிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். மேலும், இந்த நாட்களில், வளைகுடா நாட்டில் போய் வேலை செய்து வாழும் இளைஞர்கள் அழகான கதாநாயகியை விரும்புகிறார்கள். “வரதட்சணை வேண்டாம். வேறு ஒன்றும் வேண்டாம். நன்றாகச் சமைக்கத் தெரிந்த அழகான பெண் போதும். நல்ல மனைவியாக அவள் இருக்க வேண்டும். இதுதான் நான் விரும்புவது.” இதனாலேயே திருமணம் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. இவைதான் பெண்கள் இங்கு எதிர்கொள் ளும் இரண்டு பிரச்சினைகள்.

அமீனாவை ஒரு கிழட்டு அராபியனுக்கு விற்றுவிட்டார்கள். அவளுக்கு இந்தத் திருமணத்தில் ஈடுபாடு இருக்கவில்லை. ஒரு வழியாக ஓர் விமான பணிப்பெண்ணிடம் தன் நிலைமையை எடுத்துரைத்து தனக்கு மத்திய கிழக்கு நாட்டிற்குப் போக விருப்பமில்லை என்று அவள் சொன்னாள். அந்த பணிப்பெண் உடனடியாக உதவினார். அமீனாவும் திரும்பி வந்தாள். இந்த வழக்கு பிரபல்யம் அடைந்தது. ஆனால் வெளியே சொல்லமுடியாமல் தவிக்கும் நூற்றுக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்கிறார்கள். சில நேரங்களில் சிறுமிகள் திருமணமாகி அங்கு சென்ற சில நாட்களிலேயே மணமுடித்துச் சென்ற அராபியர்கள் இறந்து போய்விடுகின்றனர். இவர்களுக்குப் பேசக்கூட ஆள்துணை கிடையாது. இதனால் சித்தப்பிரமை ஏற்பட்டுவிடுகிறது. அவளை இங்கு திருப்பி அனுப்பக்கூட யாரும் ஈடுபாடு காட்டுவதில்லை. இம்மாதிரி ஏராளமான கேஸ்கள் உள்ளன. ஆஸ்ரா என்றொரு மருத்துவமனை இருக்கிறது. அங்குள்ள மனநோய் மருத்துவரைச் சந்தித்தேன். அவர் இம்மாதிரியான பல கேஸ்களை எனக்குக் காண்பித்தார். பயங்கரமான கேஸ்கள். உடலாலும் உள்ளத்தாலும் நைந்து போனவர்கள். துன்பம் துன்பம் துன்பந்தான். யாரோடும் பகிர்ந்துகொள்ள முடியாத துன்பம். அவர்களின் பெற்றோர்கள்கூட அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. மனம்விட்டுப் பேச அவர்களுக்கு யாருமில்லை. அவர்கள் படும் துன்பம் கொஞ்சநஞ்சமல்ல.

ஷாபானு வழக்கில், எழுபது வயதான அவரை அவரது கணவன் தலாக் செய்ததோடு அவருக்கு ஜீவனாம்சம் தரவும் மறுத்துவிட்டான். எழுபது வயதில் அவர் இனி யாரையாவது திருமணம் செய்துகொள்ள முடியுமா? விவாகரத்து ஆனவளுக்கு பையன் கிடைப்பதே கஷ்டம். அதுவும் எழுபது வயதில் யார் கிடைப்பார்கள்? அவரது பிரச்சினை இதுதான். இந்த முல்லாக்கள் இதைப் பெரிதுபடுத்தி இஷ்தெமா எனும் கூட்டம் கூட்டினர். ஷாபானுவுக்கு எதிராக மிகப் பெரிய கூட்டத்தைத் திரட்டினார்கள். ஷாபானு ஏதோ ஒரு பெரும் குற்றம் இழைத்துவிட்டவர்போல் ஆண்கள் தங்கள் மனைவியரை அழைத்து வந்து அந்தக் கூட்டத்தில் உட்காரவைத்து ஷாபானுவை ஏசினார்கள். அன்று எல்லாப் பெண்களும் அவருக்கு எதிராகத்தான் இருந்தார்கள். ஏதோ தங்கள் மதச்சட்டங்களுக்கு பங்கம் வந்துவிட்டதாக எண்ணிக்கொண்டார்கள் அவர்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையில்கூட இது நடக்கக்கூடும் என்று அவர்கள் சிந்திக்கவில்லை. விவாகரத்து பெரிய பிரச்சினையாக உருவெடுத்த பின்னர்தான் அதை பற்றிப் பலருக்கும் புரிய ஆரம்பித்தது. அதற்கு முன்பு வரை விவாகரத்து என்றால் முத்தலாக் வழங்குவது அவ்வளவுதான் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் ஆண்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாக நன்றாக பயன்படுத்திக்கொண்டார்கள். ஷாபானு வழக்கிற்குப் பிறகு அவர்களுக்கு இன்னும் எளிதாகிவிட்டது. இன்று மணமாகும் பெண்கள் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் முத்தலாக் அளிக்கப்பட்டு விரட்டப்பட்டுவிடலாம் என்று அஞ்சுகிறார்கள். இந்த அச்சம் திருமணமான முதல் நாளிலிருந்தே உருவாகிவிடுகிறது. இந்தப் பயத்தோடுதான் எப்போதும் அவள் வாழ்கிறாள். இதுதான் எங்களின் மிக பெரிய சோகம். சமீபத்தில் தலாக் பற்றி நான் கள ஆய்வு செய்து வருகையில், எந்தக் காரணமுமின்றி விவாகரத்து செய்யப்பட்ட பெண்களைச் சந்தித்தேன். எளிதான விவாகரத்து. முத்தலாக் சொல்லி விரட்டுவது ஆண்களுக்கு எளிதாக இருக்கிறது. ஏதோ பெயருக்கு ஜீவனாம்சம் கொடுத்தால் போதும். நிறைய வரதட்சணை வாங்கிக்கொண்டு சிறிதளவு பணம் அதிலிருந்து கொடுத்துவிடலாம். மிக எளிது. இது பற்றிக் கூட்டங்கள் போட வேண்டும் என்று எண்ணுவேன். ஆனால் ஒன்றும் கைகூடவில்லை.

1989ல் ஹைதராபாதில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது. எங்கு பார்த்தாலும் சாவுகள். என் பல கவிதைகளில் இதன் பாதிப்பு இருக்கிறது. ‘89 கலவரத்திற்குக் காரணம் காங்கிரஸ்தான். சென்னா ரெட்டி தனது அரசியல் ஆதாயங்களுக்காக இந்தப் பிரச்சினையைத் தூண்டிவிட்டார். வழக்கமாக ஹைதராபாதில் கலவரம் நடந்தால் பழைய ஹைதராபாத்-தான் பாதிக்கப்படும். இம்முறை புதிய ஹைதராபாதிலும் பிரச்சினைகள் எழுந்தன.

சார்மினார் அருகில்தான் பழைய ஹைதராபாத் இருந்தது; சார்மினார், குலி குதூப் ஷாவால் கட்டப்பட்ட நினைவுச் சின்னம். ஆரம்பத்தில் மக்கள் அங்குதான் வசித்துவந்தார்கள். மக்கள் தொகை பெருகியபோது, பலர் அங்கிருந்து பஞ்சாரா ஹில்ஸ்க்கும் மற்றப் பிரதேசங்களுக்கும் குடிபெயர்ந்தார்கள். ஹைதராபாத் முழுவதும் பாறைகளிலான பிரதேசம். எங்கு பார்த்தாலும் பாறைகளும் பறவைகளும். பஞ்சாரா ஹில்ஸை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பலர் உள்ளனர். மேட்டுக்குடியினரும், நடுத்தரப் பிரிவினரும் பழைய நகரத்திலிருந்து வெளியேறத் தொடங்கினார்கள். அங்கு நல்ல சாலைகள் கிடையாது. நல்ல கல்வியும் இல்லை. இந்துக்களும் முஸ்லிம்களும் அங்கிருந்து வெளியேறி புதிய நகரத்தில் காலூன்றினார்கள். முதல் காரணம் கல்வி; இரண்டாவது காரணம் வேலை வாய்ப்பு. அரசாங்கக் குடியிருப்புகள் அங்குதான் இருந்தன. குடியிருப்புகளில் அன்றாட வாழ்க்கை அமைதியாக இருந்தது. நான் பிறந்த இடமோ கலவரத்திற்குப் பேர் போனது. சுல்தான் ஷாஹி அந்த இடம். ஒவ்வொரு கலவரத்தின் போதும் குறைந்தது ஐம்பது பேர்களாவது கொல்லப்படுவார்கள்; வீடுகள், பள்ளிக்கூடங்கள் மொத்தமாக எரிக்கப்படும். இந்துக்கள் முஸ்லிம்களை தாக்குவார்கள். முஸ்லிம்கள் இந்துக்களைத் தாக்குவார்கள். ஒன்று மாற்றி ஒன்று நடந்து கொண்டேயிருக்கும். இந்தப் பகுதியில்தான் நான் பிறந்தேன். ஆந்திரர்கள் ஹைதராபாதிற்கு வரத் தொடங்கினார்கள். எனவே ஆந்திரர்கள் சூழ நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் தெலுங்கு நன்றாகப் பேசுவேன். எழுதப் படிக்க அவ்வளவு வராது. மிகவும் வித்தியாசமான சூழலில் நாங்கள் இருந்தோம். எங்களுக்கு இந்து நண்பர்கள் பலர் இருந்தார்கள். நாங்கள் ஆந்திரர் காலனியில் இருப்பது போன்றே இருந்தோம். எங்கள் வீட்டிற்கு நேரெதிரே தெலுங்குப் பேராசிரியர் ஒருவர் இருந்தார். எனது கவிதைகளை பேராசிரியர் வாங்கிப் படித்து பாராட்டுவார். அவருக்கு உருது தெரியும். எனவே எங்களுடன் தொடர்பு கொள்வதில் எந்தப் பிரச்சினையுமிருக்கவில்லை. தெலுங்கு மக்கள் எங்கள் வீட்டிற்கு வந்து போவார்கள். நாங்களும் அவர்கள் வீடுகளுக்குப் போய்வருவோம். இன்றும் கூட ஏதாவது நல்லது கெட்டது நடந்தால் எங்கள் வீட்டிற்குத்தான் ஓடோடி வருவார்கள். எங்கள் காலனியில் எந்தப் பிரச்சினையுமில்லை. நான் பிறந்த இடமான சுல்தான் ஷாஹி இன்றுகூட பதட்டம் நிலவும் இடம்தான்.

ஹைதராபாத் கலவரம் பற்றிப் பேசும்போதெல்லாம் ரஸாக்கர் இயக்கத்தோடு தொடர்புபடுத்தியே நான் குறிப்பிடுவேன். ரஸாக்கர் இயக்கத்திற்குப் பின் போலீஸ் கெடுபிடி அதிகமானது. 1948ல் போலீஸ் பல சட்டங்களைத் திணித்து முஸ்லிம்கள் பலரைக் கொன்றது. கொள்ளையடித்து வந்த ரஸாக்கர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருந்தது. ரஸாக்கர் கலவரத்தின்போது இந்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டனர். 1948ல் போலீஸ் இதே விஷயத்தை முஸ்லிம்கள்மீது நடத்தியது. தலைமறைவு வாழ்க்கை போலாகி விட்டது முஸ்லிம்களின் நிலைமை. கம்யூனிஸ்ட் கட்சியினர் – மக்தூம் மொஹியுதின் அல்ல, மற்ற சாதாரண கட்சி உறுப்பினர்கள் – இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டார்கள். மஜ்லீஸ்- ஏ -இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (M.I.M.) அமைப்பு மிகவும் பழமைப் பிடிப்புள்ளது. இத்தேஹாத் என்றால் ஒன்றுபடுதல் என்று பொருள். முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று பொருள். ரஸாக்கர் காலத்தில் ரஸாக்கர்கள் ஆர். எஸ். எஸ். காரர்களைப் போல அரை நிக்கர் அணிந்து சண்டைப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். சுதந்திர இந்தியாவிற்கு எதிராகப் போர்தொடுக்க அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். சுதந்திரமான ஹைதராபாதை அடைவதை லட்சியமாகக் கொண்டிருந்தார்கள். எனவே போலீஸ் நடவடிக்கைகளுக்குப் பிறகு அவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். ஹைதராபாதிலிருந்த முஸ்லிம்கள் பல காலம் மௌனம் காத்தார்கள். எந்த அறிவுஜீவியும் வாயைத் திறக்க முடியாது. இந்துக்களுக்கு எதிராகவோ முஸ்லிம்களுக்கு எதிராகவோ யாரும் பேசவில்லை. இது பல காலம் தொடர்ந்தது. மதவாதம் மக்களின் மனத்திலிருந்தது. ரஸாக்கர்களின் தலைவரான காஸீம் ரஸ்வி பாகிஸ்தான் சென்றபோது, அவர் தன் சொத்துக்களையும் தலைமைப் பொறுப்பையும், ரஸாக்கர் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த வக்கீலான மொளலானா அப்துல் வாஹித் ஓவைஸிக்குத் தந்துவிட்டார். அவரிடமிருந்து தலைமை பொறுப்பு அவர் மகன் ஸலாஹுதீன் ஓவைஸிக்குப் போயிற்று. அவர்தான் இன்று முஸ்லிம்களின் தலைவர். ராஸாக்கர்களின் வேர்கள் ரத்தத்தில் ஓடும் அவர் தீவிரமான அடிப்படைவாதி.

குண்டர்களின் அட்டகாசமும் வளர்ந்தது. அவர்களுக்கு ஆதரவு வேண்டியிருந்தது. சலாஹுதீன் ஓவைஸியின் கட்சியான எம். ஐ. எம்மில் சேர்ந்தார்கள். ஓவைஸி இப்போது பாராளுமன்றத்தில் ஓர் உறுப்பினர். முஸ்லிம்களின் தலைவரும் அவர்தான். ஆக மதவாதம் பதுங்கிக்கொண்டிருக்கிறது. பழைய நகரத்தில் வியாபாரிகள் அனைவரும் இந்துக்கள். இந்த முஸ்லிம்கள் தானே நம்மை முன்பு ஆட்சி செய்து துன்பத்திற்குள்ளாக்கினார்கள், அவர்களைப் பழி தீர்த்துக்கொள்வோம் என்று இவர்கள் எண்ணினார்கள். முஸ்லிம்களோ ஆட்சி அதிகாரத்தை இந்துக்கள் தங்கள் கைகளிலிருந்து பறித்து விட்டதாக எண்ணினார்கள். முஸ்லிம்கள் இந்துக்கள் இருவருமே ஆளவில்லை. இவர்களெல்லாம் வெறும் மனிதர்கள்; உண்மையில். நிஜாம்தான் ஆண்டு வந்தார். நிஜாமும் பிரிட்டிஷ்காரர்கள் கையில் ஒரு கைப்பாவைதான். ஆனால் யாரும் இதை புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் மனத்தில் இருந்ததெல்லாம் ஆளுவோராக இருந்த நம்மை இவர்கள் இன்று பழிவாங்குகிறார்களே என்ற உணர்ச்சிதான். என் இளமைக்காலத்திலெல்லாம் ஒவ்வொரு தசராவையும் தீபாவளியையும் இந்து நண்பர்களுடன் கொண்டாடுவேன். இன்று பிரிவினை வந்துவிட்டது. இந்துக்கள் ரம்ஸானுக்கு வருவதில்லை; முஸ்லிம்கள் தசராவுக்கோ தீபாவளிக்கோ போவதில்லை. இரண்டு பேருக்கும் இடையில் பேச்சு வார்த்தை இல்லாமல் போய்விட்டது. இந்த விரிசல் பெரிதாகிக் கொண்டே போனது. எண்பதுகளில் சென்னா ரெட்டி இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். அவரது கட்சியிலுள்ள குண்டர்கள் அனைவரும் முஸ்லிம்கள். தெலுங்கு தேசம் கட்சியிலும் இன்றுள்ள குண்டர்கள் முஸ்லிம்கள்தாம். இந்தக் குண்டாயிசம் மேலும் வளர்ந்தது. எல்லாக் கட்சிகளும் படிப்பறிவில்லாத முஸ்லிம்களை தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக்கொண்டன. ஐந்தாயிரம் ரூபாய்க்காக எதுவும் செய்ய அவர்கள் தயார். 1989 கலவரத்தின்போது பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் யார் வேண்டுமானாலும் ஒருவரைக் குத்திவிட்டு “நான் ஒரு முஸ்லீமைக் குத்தினேன்.” “நான் ஒரு இந்துவைக் குத்தினேன்” என்று கூறி ஐந்தாயிரம் ரூபாய் வாங்கிக்கொள்ளலாம். வேலையில்லாத் திண்டாட்டம்தான் பெரிய பிரச்சினை. சென்னா ரெட்டிக்கு இதிலெல்லாம் சந்தோஷம்தான். இந்தப் பையன்களையெல்லாம் சிறையிலடைத்தார்கள். பின்னர் அவர்களை விடுவித்துப் பணமும் அளிக்கப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் அமலுக்கு வந்தது. நாங்கள் எங்கேயும் போகமுடியாது. பம்பாயில் நீங்கள் பயங்கரமான சம்பவங்களை அனுபவித்திருக்கலாம். அதே போல 1989 எங்களுக்கு உண்மையிலேயே பயங்கரமானது. 1992ல் அவ்வளவு கலவரங்கள் நிகழவில்லை. 1989ல் இருந்தது போன்ற பிரச்சினைகள் இல்லை. நான் இந்தக் காலகட்டத்தில் சில கவிதைகள் எழுதினேன்.

ஆனால் 1992ல் எனக்கும் முஸ்லிம் என்ற முத்திரை குத்தப்பட்டது. முன்பெல்லாம் ரம்ஸானும் பக்ரீத்தும் கொண்டாடும் முஸ்லிமாகத்தான் என்னைக் கருதி வந்தேன். ஆனால் பிறகோ, நான் போகுமிடமெல்லாம் “உங்கள் பெயர் என்ன?” என்ற கேள்விக்கு “ஜமீலா” என்று நான் பதிலளித்ததும் “அப்படியானால் நீங்கள் ஒரு முஸ்லிம்!” என்ற குறிப்பு வரத் துவங்கியது. 1992க்கு பிறகு மக்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் என்று இனம்பிரிக்கத் தலைப்பட்டார்கள். இது உண்மையில் நல்லதல்ல என்று எண்ணினேன். நான் இதற்கு ஏதாவது செய்தாகவேண்டும். எனவே பழைய நகரத்தில் மத நல்லிணக்கத்திற்கான பணிகளில் ஈடுபட்டேன். 1992லிருந்து பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இயங்கிவருகிறேன். இப்போது அஸ்மிதா என்ற அமைப்புடன் இணைந்து இயங்கிவருகிறேன்.

1985 முதல் நான் நாடகங்கள் எழுதத் துவங்கினேன். நாற்பது நிமிட நாடகங்கள். முஸ்லிம் பெண்கள் நடிப்பதற்கு அனுமதியில்லை. முஸ்லிம்கள் மத்தியில் பெண்களுக்கு மேடையேறும் உரிமை கிடையாது. நாடகம் உடல் சார்ந்த ஊடகம். நம் உடல் மூலமாக நம்மை வெளிப்படுத்திக்கொள்ளவேண்டும். எனவே எனது நாடகங்கள் பெண்கள் சரியான ஒத்துழைப்பு அளித்தால்தான் வெற்றிகரமாக அமையும். சில நேரங்களில் தாயார்கள் பெண்களை அனுமதிப்பதில்லை. எனவே பெண்கள் வருவதை நிறுத்திக்கொண்டனர். நான் ஒரு நாடகக்குழு அமைத்தேன். அது பின்னர் சிதறிப் போய்விட்டது.

பெண்கள் திருமணமாகி வேறுவேறு இடங்களில் குடிபுகுந்துவிட்டனர். எனவே நாங்கள் மீண்டும் ஒரு குழுவை அமைத்தோம். ஒரு நாடகம் நடத்தினோம். ஓரே குழுவாக இருந்தோம் என்பது இல்லவே இல்லை. எனவே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பள்ளியைத் தேர்ந்தெடுத்தோம். ஏராளமான பள்ளிகள் முளைத்துக்கொண்டிருந்தன. எனவே நாடகங்கள் மீண்டும் நடத்தத் தீர்மானித்தோம். கருவிற்கு ஏற்றவாறு நாற்பது நிமிடம், இருபது நிமிடம் என்று நாடகங்கள் போட்டுவந்தோம்.

நான் அரசாங்கப் பள்ளியில் உருதுவழிக் கல்வி பயின்றேன். எல்லா அரசுப் பள்ளிகளிலும் உருதுவழி வகுப்புகள் உள்ளன. சாதாரணமாக உருது வழிக் கல்வி பெறும் பெண்களுக்கு வேறு கலாச்சாரங்கள் பற்றிய பரிச்சயமே கிடையாது. தெலுங்கும் அவர்களுக்குத் தெரியாது. வேறு எந்த மொழியும் தெரியாது. உருது பேசும் ஒருவருக்கும் மற்றவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருந்தது. எனவே அவர்களோடு கலந்துரையாடுவதற்கு ஒரு பேச்சுமொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது. உருதுதான் பேசினார்கள் என்றில்லை. தக்கனி என்ற ஹைதராபாத் மொழியும் அடிப்படையில் ஒரு பேச்சுமொழிதான். பின்னர் அந்த மொழி வேடிக்கைக்காக பேசப்படும் மொழியாகிவிட்டது. அந்த மொழியில் பேசினாலே மக்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். தக்கனிதான் என் மொழி. எனவே அதைத்தான் பயன்படுத்தினேன். அந்த மொழியில்தான் நாடகங்கள் போடப்பட்டன. எனவே மொழி நன்கு வசப்பட்டுவிட்டது. நாடகத்தின் கதைக்கரு இதுதான் என்று விளக்கியதும் பெண்கள் அவர்களாகவே வசனங்களை உருவாக்கி, பேசி நடித்தார்கள். நாடகமும் நன்றாக நடந்தது. அந்தப் பெண்கள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் அவர்கள் தொடர்ந்து நடிக்க அனுமதிக்கப்படவில்லை.

நான் சீரியஸான நாடகங்கள் எழுதினேன். மக்களோ அந்த மொழியைக் கேட்டவுடனேயே சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இப்படித்தான் அந்த மொழியை நான் வளர்த்தேன். எங்கள் பெண்கள் வீட்டில் தக்கனியில்தான் அழுதார்கள்; அதில்தான் பேசினார்கள்; அதில்தான் உணர்ந்தார்கள். எனவே வேடிக்கைக்குரிய மொழி என்று சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.

தக்காண வளர்ச்சி சங்கம் (Deccan Development Society) என்ற அமைப்போடு நான் இணைந்து பணியாற்றினேன். டபிர்புராவிலும், பாயிஸ்டவுனிலுமுள்ள பள்ளிகளில் நான் நாடகங்கள் போட்டேன். பர்காஸ் அருகில் ஜகனுமா பகுதியில் இருந்த பெண்களைக் கொண்டு ஒரு நாடகம் போட்டேன். பர்காஸிலிருந்து பல பெண்கள் வந்து நாடகத்தைப் பார்த்துப் பாராட்டிச் சென்றனர்.

ஒரு நாடகத்தில் ஒரு சிறுமி கிழட்டு ஷேக் ஒருவரை மணம் செய்து கொள்கிறாள். அந்தச் சிறுமியின் தந்தை எதிர்மறையான கதாபாத்திரம். சிறுமிதான் மையப் பாத்திரம். டோலக் கீதத்துடன் தக்கனியில் நாடகம் நடத்தவேண்டும் என்று கனவு கண்டிருந்தேன். டோலக் கீதமும் நான்தான் எழுதினேன். நானே இயக்கவும் செய்தேன். ஜகனுமாவில் ஒருமுறையும் டபிர்புராவில் ஒருமுறையும் மேடையேற்றினோம். இந்தக் கொடுமைக்கு ஆளான சமூகத்திலிருந்தே பெண்களை நடிக்க வைத்தேன். அவர்கள் உண்மையாகவே அனுபவித்து நடித்தார்கள். மக்களும் ரசித்துப் பார்த்தார்கள்.

அவர்கள் அனைவரும் புர்கா அணிந்திருந்தார்கள். இன்றும்கூட அணிந்திருக்கிறார்கள். ஆனால் மேடைக்கு வந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். கொடுத்த பணியை சந்தோஷமாக முடித்துக்கொடுத்தார்கள். அவர்கள் மேடையில் நடனமாடினார்கள். எனது நாடகத்தில் வரும் கனவுக்காட்சியில் நடனமிருந்தது. கடல்கன்னி ஒருத்தி மீனவர்கள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டு, தப்பிக்கப் போராடுகிறாள். இதுதான் கனவு. நான் அந்தப் பெண்ணை இசைக்கு ஏற்றவாறு அப்படியும் இப்படியும் ஆடச்சொன்னேன். அந்தப் பெண்ணும் சந்தோஷத்துடன் ஆடினாள். ஆனால் மேடையிலிருந்து இறங்கியதும் மீண்டும் புர்காவை அணிந்துகொண்டாள்.

நாடகத்தில் பங்கேற்கப் பெண்கள் சந்தோஷத்துடன் முன்வந்தார்கள். நான் ஒரு பள்ளித் தலைமையாசிரியையைச் சந்தித்தேன். அவரிடம் பொது நலனை முன் வைத்து நான் சில காரியங்கள் செய்ய விரும்புகிறேன் என்று கூறி அவரைச் சம்மதிக்கச் செய்தேன். அவரும் ஏற்றுக்கொண்டார். பெண்கள் உண்மையிலேயே துன்பப்படுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களின் சொந்த சினேகிதிகள், சகோதரிகள்கூட துன்பப்படுகிறார்கள். எனவே எல்லாவற்றையும் தொடர்புபடுத்திப் பார்க்கமுடிந்தது. ஒரு நெருக்க உணர்வைப் பெறமுடிந்தது.

ஐரிஷ் நாடகங்களை மொழிபெயர்த்தேன். பெண்களை மையமாகக் கொண்ட நாடகங்களைப் படிக்க நேர்ந்தால், அவற்றை மொழிபெயர்ப்பேன். சிறு நாடகங்கள் எழுதினேன். நாடக இயக்கத்திற்கான பயிற்சியை முடித்துக் கொண்டு அவற்றை மேடையேற்றினேன்.

பலவிதமான நாடகங்கள் போட்டோம்; ஆண் பெண் உறவை மையமாகக் கொண்டவை, சகோதர சகோதரி பாசத்தை மையமாகக் கொண்டவை என. இஸ்மத் சுக்தாய் எனக்குத் தூண்டுதலாக இருந்தவர்களில் ஒருவர். ஆனால் நாடகத்தில் உங்களுக்கென்று ஒரு வித்தியாசமான அம்சம் இருக்கவேண்டும். எனவே நான் விதவிதமான நாடங்களை இயக்கினேன். இப்சனின் நாடகங்கள், பிரெஞ்சு நாடகங்கள், ரஷ்ய நாடகங்கள். இவற்றை உருதுவிலும், தக்கனியிலும் மொழிபெயர்த்து அரங்கேற்றினேன்.

மொழி எனக்கொரு பிரச்சினையாக இருந்தது. உருது மொழி செத்துக்கொண்டிருந்தது. எனவே ஏதாவது செய்தாக வேண்டும் என்று எண்ணினேன். ஷேக்ஸ்பியரின் மொழி பேச்சுமொழிதான். அதையே இலக்கிய மொழியாக மாற்றினார் அவர். எனவே எனது பேச்சுமொழியான தக்கனியை இலக்கியத்துக்குரிய மொழியாக மாற்ற விரும்பினேன். ஷேக்ஸ்பியர்தான் எனக்கு முன்னுதாரணம். அதேபோல் எழுதவேண்டும் என்று எண்ணினேன். பின்னர் போபாலில் நடந்த பல நாடக விழாக்களைச் சென்று பார்த்தேன். பல நாடக விழாக்களிலும் கலந்துகொண்டேன். பாதல் சர்க்காரின் நாடகங்களைப் பார்த்த பிறகு வித்தியாசமாக எழுதவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. டெண்டுல்கரின் நாடகங்கள் அனைத்தையும் படித்தேன். முன்பெல்லாம் ஹைதராபாதில் நாடகவிழாக்கள் எப்போதும் நடந்து கொண்டிருக்கும். ஹபீப் தன்வீரின் நாடகங்களைப் பார்த்துவிட்டு அந்த பாணி சரியென்று பட்டதால் அவ்வாறே எழுதத் துவங்கினேன்.

எனது எல்லா நாடகங்களும் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்டிருந்தன. நாம் பெண்கள். எனவே நமது கண்கள் மூலமாகத்தான் விஷயங்களை பார்க்கமுடியும். ஆண்களின் கண்கொண்டு பார்க்க முடியாது. என்னால் முடியாது. தந்தை எனது நாடகங்களில் எதிர்மறையான பாத்திரமாகவே இருக்கிறார்.

பெண்கள்கூட தாய் சாதுவாகவும், அடங்கி நடப்பவளாகவும், ஒரு நல்ல சமையல்காரியாகவும், வீட்டு வேலைகளையெல்லாம் செய்துகொண்டு பராமரித்து வருபவளாகவும்தான் இருக்கவேண்டும் என்றும், தந்தைதான் வீட்டுத்தலைவன் என்றும் எண்ணுகிறார்கள். அவர் வீட்டுக்குள் வந்தால் வீடே கிடுகிடுக்கும். பழைய ஹைதராபாதில் இன்றும்கூட அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஆண் வீட்டிற்குள் நுழைந்தாலே பெண்கள் நடுங்குவார்கள். எந்த ஆண்களானாலும் சரி. கீழ்த்தட்டு மக்களிடையே இது இன்னும் அதிகம். மேல்தட்டு மக்களிடையே குறைவு. எனவே நான் நாடகம் நடத்தப் போகிறேன் என்று அறிவிப்பதே இல்லை. எதிர்பாராமல் அரங்கேற்றுவேன். நேரடியாகச் சென்று நாடகத்தைப் பார்க்க வருமாறு அழைப்போம். அவர்கள் ரசித்துப் பார்ப்பார்கள். நான் திருப்தியடைவேன். புகைப்படங்கள்கூட எடுப்பதில்லை. எனவே “போய்ப் பார்த்துவிட்டு வருவோம். அவள் தனது திருப்திக்காகச் செய்திருக்கிறாள்” என்பார்கள். நான் ஷாபானு போல குரலெழுப்புவேனோ என்ற கவலை அவர்களுக்கிருந்தது. நான் எந்த எதிர்ப்பும் ஏற்படாதவாறு நடந்துகொள்கிறேன். வீட்டிலேயே பயிற்சியளிப்பேன். ஒத்திகையும் வீட்டில்தான். என்ன செய்கிறோம் நாங்கள் என்று யாருக்குமே தெரியாது. பின்னர் நாடகத்தை மேடையேற்றி அந்தப் பள்ளியையோ கல்லூரியையோ சுற்றியுள்ள மக்களைச் சென்று அழைப்பேன். இது போன்று நாடகங்களை நடத்தினால் எல்லோரும் ரசிக்கத்தான் செய்வார்கள்.

ஹைதராபாதிலிருந்த ஆண்கள் என் பணியை விரும்பவில்லை. பெண்களும் சிறுமியரும் எப்போதும் பாராட்டினார்கள். தொலைதூரத்திலிருந்தெல்லாம் பெண்கள் வருகின்றனர். என்னிடமே வருகின்றனர். தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களின் பிரச்சினைகளை என்னிடம் பேசுவார்கள். என்னிடம் பகிர்ந்து கொள்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சிதான்; என்னிடம் பகிர்ந்துகொள்வதை அவர்கள் தங்கள் கணவரிடம் பகிர்ந்து கொள்ளமுடியாது.

ஜகானுமாவிலிருந்த மக்களோடுதான் நாங்கள் கூட்டங்கள் நடத்தினோம். எங்கு கூட்டங்களுக்குச் சென்றாலும் உள்ளூர் மக்களை அழைத்துப் பங்கேற்க வைப்போம். நான் வீடு வீடாகப் போய் “இன்று கூட்டமிருக்கிறது வாருங்கள்” என்று அழைத்துவருவேன். அவர்களும் சந்தோஷமாக வருவார்கள்.

எம். ஐ. எம். சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட பிற்போக்காளரான முஸ்லிம் ஒருவர் என்னிடம் வந்து “இதெல்லாம் வேண்டாம்” என்று எச்சரித்துச் சென்றார். “நான் எதுவுமே செய்யவில்லை. நான் அவர்களுக்குக் கற்பிக்கிறேன் அவ்வளவுதான். இது ஒருவகையான கல்விமுறை. நாங்கள் அவர்களை புர்கா அணிவதை விட்டுவிடுங்கள் என்று சொல்லுவதில்லை” என்று கூறிவிட்டேன். ஆனால் அவர் திருப்தியடையவில்லை. இப்படித்தான் அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

இந்தப் பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக நான் நிற்பதற்கு என் இளைய சகோதரியும் ஒரு காரணம். அவள் அவ்வளவு அழகாக இருக்கமாட்டாள். எனவே அவளுக்குத் திருமணம் செய்வது பெரிய பிரச்சினையாகத்தான் இருந்தது. திருமணமாகி ஒரு மாதத்திற்குள்ளாகவே அவள் கணவர் “தலாக் சொல்லிவிட்டு நான் போய்விடுவேன்” என்று மிரட்ட ஆரம்பித்துவிட்டார். எங்களால் அதைத் தாங்க முடியவில்லை. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்ன செய்வது? முன்பெல்லாம் அவள் சம்பாதித்துக் கொண்டிருந்தாள். அவள் கணிதவியல் பட்டதாரி. பி. எட். கூட இருந்தது. எனவே அவளால் சம்பாதிக்க முடிந்தது. அந்த சம்பாத்தியத்தைத் தானும் நன்கு அனுபவித்துக்கொண்டு அவளை மிரட்டிக்கொண்டும் இருந்தார். அவரது உள்ளாடைகளைக்கூட அவள் இஸ்திரி செய்து வைப்பாள். இப்போதும் அவள் அப்படித்தான் இருக்கிறாள். எனக்கு வேதனையாகத்தான் இருக்கிறது. எனது சகோதரியைத் திருத்தாத வரைக்கும் வாழ்க்கையில் நான் திருப்தியாக இருக்க முடியாது.

இப்போது அவள் இரண்டு பெண்களுக்குத் தாய். அவர்கள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள்; ஆனாலும், அவர் என்றாவது தலாக் செய்து விடுவார் என்ற பயத்தோடுதான் இன்றும் இருந்து வருகிறாள். நான் இதுபற்றி அவளிடம் கேட்கும்போதெல்லாம் “தலாக் பற்றிப் பேச்செடுக்காதே. எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசு. தலாக் பற்றி மட்டும் வேண்டாம்” என்று சொல்லிவிடுவாள்.

ஜிலானி பானு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் ஒரு கட்டத்தில் எண்ணினோம். ஜிலானி பானு நிற்பார் என்று நான் அறிவிப்பும் கொடுத்து விட்டேன். என் மேல் நம்பிக்கைக் கொண்ட சிலர் என்னிடம் வந்து, “ஜமீலா, நீயே தேர்தலில் நில்லேன். எங்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால், ஜிலானி பானு மட்டும் வேண்டாம்” என்றார்கள். “வேண்டாம், வேண்டாம். நான் தேர்தலில் நிற்கப் போவதில்லை. நீங்கள் ஜிலானி பானுவிற்கு ஓட்டுப் போடுவீர்கள் என்றால் நான் அவரைக் கட்டாயம் நிறுத்துகிறேன். சுயேட்சை வேட்பாளராக” என்று சொன்னேன். முன்பெல்லாம் கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் மக்கள் தலைவர்களாக இருந்தார்கள். அதேபோல் ஏன் இன்றும் நடக்கக்கூடாது? தேர்தலுக்கு முன்னதாக நாங்கள் ஒரு கூட்டம் போட்டோம். அறிவு ஜீவிகள் பலர் ஒன்றுகூடி அமர்ந்து விவாதித்து தேர்தலில் பங்கேற்பது என்ற முடிவுக்கு வந்தோம். ஆனால் ஜிலானி ஏராளமான பணம் செலவு செய்யவேண்டி வரும் என்பதால் போட்டியிடத் தயாராக இல்லை. அவர் வெற்றி பெறமாட்டார். முஸ்லிம்கள்கூட அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள். இப்படித்தான் இன்று எல்லாமிருக்கிறது. இதனால் எனக்கு அரசியலில் நம்பிக்கை இல்லை. பெண்களுக்காகப் பாடுபடுவோம்; அதில் ஆனந்தமும் விடுதலையுணர்வையும் பெறுவோம்.

மொழி, வெளிப்பாடு, அடையாளம் பற்றி

ஒவ்வொரு கிராமத்திலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்துக்களைப் போலவேதான் அவர்களும் வாழ்கிறார்கள். பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. நான் பண்பாட்டு வேறுபாடுகளைச் சொன்னேன். பண்பாட்டு ரீதியாக நாமெல்லாம் ஒன்று. ஆந்திராவைச் சேர்ந்த முஸ்லிம்களின் மொழி, தெலுங்கானா மொழிக்கு நெருக்கமானது. எனவே தெலுங்கு கலாச்சாரமும் அவர்களுக்கு நெருக்கம். அவர்களின் தாய் மொழி தெலுங்குதான். தெலுங்குவழிக் கல்விதான் பயின்றார்கள். எனவே தெலுங்கில் அழகான கவிதைகள் எழுதினார்கள். குலாம் யாஸின் ஒரு கவிஞர். ஹைதராபாதில் வந்து குடியேறினார். தெலுங்கில் அருமையான கவிதைகள் எழுதி வந்தார். ஆனால் முஸ்லிம்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். “தெலுங்கில் ஏன் அவர் எழுதினார்?” இதுதான் அவர்களது கேள்வி. ஒரு முஸ்லீமாக இருந்துகொண்டு தெலுங்கில் எழுத என்ன தைரியம் அவருக்கு? தெலுங்கு மொழியில் எழுதினார்; எனவே அவர் சுடப்பட வேண்டும். சாகும்போது அவருக்கு வயது இருபத்தி ஆறுதான்.

அவர்கள் உருது மொழியோடு தங்களை இனங்காணத் துவங்கினார்கள். “உருதுதான் எனது மொழி. உருது கலாச்சாரம்தான் எனது கலாச்சாரம், அதுதான் எனக்கு பற்றுக்கோடு” என்ற எண்ணத்தோடு எல்லா முஸ்லிம்களும் தங்கள் மாணவர்களுக்கும் வீட்டிலிருந்த அனைத்துப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உருதுவைக் கற்றுக்கொடுப்பதைத் தனது பெரும் பணியாக எடுத்துக் கொண்டார்கள். தெலுங்கு மொழி சொல்லிக்கொடுக்கப்படவில்லை. தெலுங்கு மொழி பற்றி உருதுவில் ஒரு வழக்கு உள்ளது : தேல் மே கூ (எண்ணெய்யில் மலம்). அதுதான் தெலுங்கு. எனவே அதன்மீது வெறுப்பு வளரத் தொடங்கியது. குழந்தைகள் இளம் பருவத்திலிருந்தே, அது நல்ல மொழியல்ல என்று போதனை செய்யப்பட்டனர். எனவே அவர்கள் அந்த மொழியை விரும்பவில்லை.

எனது கணவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்; ஆந்திராக்காரர் என்று சொல்ல முடியாது. ஆந்திராவின் எல்லைப் பகுதி. கமாங் என்ற பெயர் அந்த பகுதிக்கு. தெலுங்கானாவையும் ஆந்திராவையும் பிரிக்குமிடம். எனவே அவர் தெலுங்கு மொழிப் பள்ளியில் பயின்றார். தெலுங்கு கலாச்சாரத்தில், அதன் பெண் தெய்வங்களுடன், அவர் வளர்ந்தார். அவருக்கு இவை எல்லாம் ரொம்பப் பிடிக்கும். திருமணத்திற்குப் பிறகு நான் பெற்றவையெல்லாம் அவரிடமிருந்து பெற்றவையே. அவரிடமிருந்து நிறைய விஷயங்களை நான் பெற்றுக்கொண்டேன்; பெண் தெய்வங்கள், தெலுங்கு கலாச்சாரம், தெலுங்கு பேசும் நண்பர்கள் என. அவர் தெலுங்கு பேசும் நண்பர்களோடு அதிகம் பழகி வந்ததால் நானும் தெலுங்கு கற்றுக்கொண்டேன். எனக்குத் தெலுங்கு தெரியாது என்று நண்பர்களிடம் அவர் முதலில் கூறிவிடுவார். இதனால் அவர்கள் தங்களுக்குள் ஒளிவுமறைவில்லாமல் பேசுவார்கள். என்னைப் பற்றிக்கூட பேசுவார்கள். நானும் சந்தோஷமாக எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வேன். இப்படியாகத் தெலுங்கு கலாச்சாரம் எனக்குள்ளும் ஊறியது.

1992ல் எங்களை முஸ்லிம்கள் என்று முத்திரை குத்தினார்கள். அதை என்னால் மறக்கவே முடியாது. பேச்சும் குரலும் எல்லாமும் மாறிவிட்டன. கலைக்கு நேசத்தின் மொழிதான், ஒற்றுமையின் மொழிதான் தெரியும் என்று கருதிய நாங்கள் இதை உணர்த்தும் வகையில் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தோம்.

அஸ்மிதா அமைப்பு அந்தக் கண்காட்சிக்கு உதவியளித்தது. கண்காட்சி நடத்துவதென்றால் ஏராளம் பணம் தேவை. ஓவியங்களைச் சட்டமிட வேண்டும். பெரிய அரங்கு ஒன்றை வாடகைக்குப் பிடிக்க வேண்டும். இப்படிப் பல பிரச்சினைகள். மூன்று நாட்கள் நாங்கள் கண்காட்சி நடத்தினோம். உருதுக் கவிதைகளுக்கு தெலுங்கு ஓவியர்களைக் கொண்டு சித்திரம் தீட்டச் செய்தேன். அதேபோல் தெலுங்குக் கவிதைகளுக்கு முஸ்லிம் ஓவியர்களைக் கொண்டு. இவ்வாறு கவிதையையும் ஓவியத்தையும் ஒருங்கிணைத்து பெரிய அரங்கு ஒன்றில் கண்காட்சி நடத்தினோம். நல்ல வரவேற்பும் கிடைத்தது. எனக்கு அது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது.

என் அப்பா கவிதைப் பிரியர் என்று சொல்லியிருக்கிறேன். அவர் தனது இறுதிநாட்களில் கஜல்கள் எழுதினார். அவரது பல ஓவியங்களுக்குத் தலைப்பு கிடையாது. 1995ல் அவரது ஓவியங்களை வைத்துக் கண்காட்சி நடத்தினேன், அதற்கு ஹைதராபாதிலுள்ள ஓவியர்களை எல்லாம் அழைத்தேன். எல்லோரும் வந்திருந்தார்கள். இது ஒரு நல்ல அறிகுறி. அவரது ஓவியங்களுக்கெல்லாம் நான் தலைப்புக் கொடுத்தேன். இதனால் அவரது ஓவியங்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டன. அப்போதுதான் எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அவரது கவிதைகளிலிருந்து ஒரு வரியை எடுத்து ஓவியங்களோடு இணைத்தேன். ஒவ்வொரு ஓவியமும் அவரது கவிதைக்குச் சான்றாக நின்றன. அவரது கவிதைகளை வேறொருவர் குரலில் வாசிக்க வைத்துப் படமாக்கினேன். அந்தத் திரைப்படத்தை எங்குமே நான் திரையிடவில்லை. 12 நிமிடங்கள் ஓடும் அந்தப் படம் இன்றும் என்னிடமிருக்கிறது.

நான் ஒரு முறை எழுதி முடித்ததும் அதை அப்படியே மறந்துவிடுவேன். எழுதுவதற்கு முன்னால்தான் அதைப்பற்றிக் கனவு கண்டுகொண்டிருப்பேன். முழுக்கவிதையுமே ஒரு கனவைப் போல எனக்கு வரும். இதற்கு வேறு பல காரணங்கள் கட்டாயம் இருக்கும். ஆனால் காட்சியாகத்தான் கனவு வருகிறது. இதை எழுதவா அதை எழுதவா என்று யோசிக்காமல் அப்படியே நான் காகிதத்தில் படியெடுத்துவிடுவேன். பிரயத்தனங்கள் எதுவுமில்லாமல் நான் காணும் கனவையே காகிதத்திலும் பதிவு செய்கிறேன். எனக்கு வெளியீட்டு உத்திகளைக் காட்டிலும் உணர்ச்சிகளில்தாம் நம்பிக்கை இருக்கிறது. ஒன்றை உணரமுடிந்தால்தான் அதை எளிதாக வெளிப்படுத்த முடியும். வண்ணங்கள் நமக்குள் படிவது இவ்வாறுதான். நாமெல்லாம் வெற்றுக் கண்ணாடியைப்போல. பிறர் உங்களை எப்படிப் பார்க்க ஆசைப்படுகிறார்களோ அதேபோன்று நாம் நம்மை வெளிப்படுத்திக்கொள்கிறோம். ஓவியம் அடிப்படையில் அகம் சார்ந்த கலை. கவிதை ஓவியம் இரண்டும் அகம் சார்ந்தவைதாம். அவை முழுக்கமுழுக்க தனி வாழ்வோடு தொடர்புடையவை. ஆனால் புறம் சார்ந்தவற்றை பற்றியும் பேசவேண்டும். எனவே நாடகங்கள் எழுதத் தீர்மானித்தேன். பிறரது உணர்வுகளையும் என் படைப்பில் வெளிப்படுத்தவேண்டும். இதனால்தான் நாடகங்கள் எழுதத் தொடங்கினேன். 1992க்கு பிறகு நாடகங்களை நான் எழுதக் காரணம் இதுதான். என்னை முஸ்லிம் என்று முத்திரை குத்தியாயிற்று. எனவே நான் முஸ்லிம் பெண்களுக்காக சேவை செய்தேயாகவேண்டும். அவர்களுக்காக ஏதாவது செய்தேயாக வேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் வாழ்வைப் பற்றி நான் என்ன உணர்கிறேன் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கவாவது வேண்டும். நான் ஆசைப்பட்டதைச் சாதித்ததாக எண்ணிக்கொள்வேன். இப்படித்தான் புற விஷயங்களில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட ஆரம்பித்தேன். சில கள ஆய்வுகள் செய்தேன். மருத்துவர்களோடும் மனோவியலாளர்களோடும் வழக்கறிஞர்களோடும் இணைந்து பணியாற்றினேன். இஸ்லாமிய தனிச்சட்டம் என்பது சர்ச்சைக்குரியதாக இருந்து வருவது. இது தொடர்பாக WRAG க்காக இரண்டு வருடங்கள் கள ஆய்வு செய்தேன். பம்பாயிலுள்ள அமைப்பு அது. பெண்களுக்கான ஆராய்ச்சி மற்றும் நடவடிக்கைக்குழு (Women’s Research and Action Group). அவர்களுக்காக நான் செய்த கள ஆய்வைப் புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.

அடிப்படையில் கலைஞர்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள். சுதந்திரம் மிகவும் அவசியமானது. எந்தக் குழுவில் வேண்டுமானாலும் பணியாற்று; போதுமான சுதந்திரம் இருக்கவேண்டும். தரப்படவில்லையா. . . அவர்களோடு பணியாற்றாதே. தனிமனுஷியாக நம்மால் சாதிக்க முடிந்ததைச் சாதிப்போம். நான் எப்போதும் சுதந்திரத்தை விரும்பியவள். என் உள் மனத்திற்கு என்ன தோன்றியதோ அதைச் செய்வேன். இதுதான் எனக்கு முக்கியமாகப் பட்டது. எப்போதும் சுதந்திரமாக இருக்க விரும்பினேன். என்னால் முடிந்தவற்றைச் செய்து அதில் திருப்தியடைய வேண்டும். அப்போதுதான் என்னால் பிறருக்கும் இதைச் சொல்ல முடியும். அஸ்மிதா அமைப்போடு நான் இன்று இருப்பதற்குக் காரணம் அங்கு எனக்கிருக்கும் சுதந்திரம்தான். எனக்கு முழுச் சுதந்திரமும் அளிக்கப்பட்டிருக்கிறது. மத நல்லிணக்கத்தைப் பற்றி எனக்கு மனத்தில் பட்ட எந்த விதத்தில் நான் வெளிப்படுத்த விரும்பினாலும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். இப்படி ஒரு நாடகம் போடப் போகிறேன் என்று அவர்களிடம் சொன்னால் “அதற்கென்ன ஜமீலா, நடத்து” என்பார்கள். ஒரு கலைஞனுக்கு – ஏன் ஒரு மனிதனுக்குத் – தேவையான சுதந்திரம் இதுதான். ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரமான மனமும் தன்முயற்சியும் தேவை.

ஜான் டன் படிக்கக் கிடைத்தபோது நாள் முழுவதும் படித்துக்கொண்டிருந்தேன். சமைக்கவில்லை. உணவைப் பற்றியச் சிந்தனைகூட இல்லை. ஜான் டன்னோடு ஒன்றிவிட்டேன். பின் எல்லாவற்றையும் முழுமையாக மறந்துவிட்டேன். என் மனத்திற்குள் ஆழமாக அவை பதிந்துவிட்டன. மரணத்தைப் பற்றி அவர் நிறைய எழுதியிருக்கிறார். என் அப்பா இறந்துவிட்டதால் அந்தக் கவிதைகளை விரும்பி வாசித்தேன். என்னால் அவற்றைத் தொடர்புபடுத்திப் பார்க்கமுடிந்தது. பின்னர் எலியட்டைப் படித்தேன். சில்வியா பிளாத், வெர்ஜீனியா உல்ஃப் இவர்களைப் படித்தேன். மேலும் நகீப் மஹ்பூஸ் எனும் அராபியக் கவிஞருடைய கவிதைகளும் நன்றாக இருந்தன. ஒரு புத்தகத்தை எடுத்தால் அதை முடிக்காமல் வேறெதுவும் செய்வதில்லை. பின்னர் லோர்க்கா மற்றும் ஆப்பிரிக்க எழுத்தாளர்களைப் படித்தேன். முனைவர் ஹோஷங் மெர்சண்ட் ஓர் ஆங்கிலக் கவிஞர். அவர் எனக்காகப் புத்தகங்களைக் கொண்டுவருவார். எனக்கோ தேடிப்பிடித்து படிப்பதற்குச் சோம்பல். சில்வியா ப்ளாத் மற்றும் எமிலி டிக்கின்ஸனின் படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. எனது கவிதைகளுக்கு நான் தலைப்பிடாமலிருப்பதற்குக் காரணம் எமிலி டிக்கின்ஸனின் பாதிப்புதானோ என்னவோ. அவரது கவிதைகளைப் படித்தபோது அவருடனேயே சேர்ந்து அமர்ந்து படித்துப் பேசியது போன்ற உணர்வு எனக்கு. அதை வாசிப்பு என்று சொல்லமுடியாது. அவதானிப்பது, பிறகு மொத்தமாக மறந்துவிடுவது. ஆக்டேவியா பாஸின் அறிவுபூர்வமான படைப்புகள் என்னை பாதித்தன. நான் அவர் எழுதிய அனைத்தையும் படித்து உள்வாங்கிக்கொண்டேன். கவிதை என்னுள் பீறிட்டுக் கிளம்புவதில்லை. நான் படிப்பவற்றை மறந்தும் விடுவேன். நான் காணும் கனவு காகிதத்தில் பதிவாகிவிடும். கனவுகள், படிமங்கள், வண்ணங்கள், கவிதை. இவற்றிற்கெல்லாம் என்னால் தலைப்பிட முடியாது. தலைப்பு எனது படைப்பை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தாது. இப்படித்தான் நான் உணர்கிறேன்.

வயதான ஷேக்கைத் திருமணம் செய்து கொள்வதைக் கருவாகக் கொண்ட எனது முதல் நாடகத்தை நான் எழுதியவுடன், உதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஸுஸி தாருவைச் சென்று சந்தித்தேன். நான் ஒரு நாடகம் எழுதியிருக்கிறேன் என்று சொல்லி, படித்துக்காட்டினேன். ரமா மேல்கோட்டே, வீணா மற்றும் பலர் அங்கிருந்தார்கள். அவர்கள் கேட்டு விட்டு நன்றாக வந்திருப்பதாகக் கூறினார்கள். “இந்தப் பாத்திரத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதை நீ செய்” என்றுகூட பிரித்துக் கொண்டார்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை, அவர்கள் அந்த நாடகத்தைப் போடவில்லை. ஸுஸி தாரு என்னுடைய கவிதைகள் பற்றி பின்னர்தான் அறிந்தார். பெண்களின் படைப்புகள் மீது ஆய்வு செய்துவந்தார் அவர். எனது கவிதைகளும் சேர்க்கப்படவேண்டும் என்று எண்ணினார். ஆங்கில இலக்கியத்தோடு பரிச்சயமுடையவர்கள் அந்த மொழியில் ஈடுபாடு உள்ளவர்களைத்தானே தேடுவார்கள். பாரசீகம், பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த ஸிராஜுதீனை அழைத்தார். அவரிடம் பல பெண் கவிஞர்களின் கவிதைகளைக் கொடுத்து அவருக்குப் பிடித்த கவிதைகளை மொழிபெயர்க்கச் சொன்னார். அப்படி மொழிபெயர்க்கப்பட்டவற்றிலிருந்து தனக்குப் பிடித்தமானவற்றை ஸுஸி தேர்ந்தெடுத்தார். இப்படித்தான் என் கவிதைகள் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டன. அதற்குக் காரணம் ஸுஸி தாருதான். பின்னர் ஸிராஜுதீன் என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் கவிதைகளை ஒவ்வொன்றாகக் கொடுத்து மொழி பெயர்க்கச் சொன்னேன். அவரது மனப்போக்கிற்கு ஏற்ப மொழிபெயர்த்தார். ஸிராஜுதீன் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர்.

ஹைதராபாதில் பெண்கள் ஒன்றுகூடி கவிதைகள் வாசிக்கும் மெஹஃபில் ஏ கவாதின் என்ற கூடும் இடம் இருக்கிறது. எனது பதினைந்தாம் வயதில் நான் அதன் உறுப்பினராக இருந்தேன். இன்றும்கூட நான் சென்று கவிதைகள் வாசிப்பேன். அங்கு வரும் பெண்கள் நன்றாகக் குளித்து சென்ட் பூசிக்கொண்டு அலங்காரமாக வருவார்கள். வெற்றிலை போட்டபடியே பரஸ்பரம் கவிதைகளை ரசிப்பார்கள். கவிதைக்கும் அவர்களது சமூக வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எனவே, அது வம்பு மடமாகிவிட் டது. ஆனாலும் கவிதை எழுத வாசிக்க என்று பெண்கள் வரத்தான் செய்கிறார்கள். ஆனால் நல்ல கவிதைகள் எதுவும் வரவில்லை. நிறையக் கவிதைகள் எழுதப்படுகின்றன. எண்ணிக்கையில் பார்த்தால் மிக அதிகம். எல்லாமே கஜல்கள் – காதல் பாடல்கள். எல்லோரும் ஒரே விஷயத்தைப் பற்றியே எழுதுகிறார்கள். எனவே தரமற்றுப் போய்விடுகிறது.

இந்தப் பெண்களுக்கு நல்ல படைப்புகள் படைத்து பாராட்டுப் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது; பாரட்டப்படவேண்டும் என்ற ஆதங்கமிருக்கிறது. ஏனென்றால் பாராட்டு அவர்களின் கணவர்களிடமிருந்து கிடைக்கப் போவதில்லை. பரஸ்பரம் சந்தித்துப் பாராட்டிக்கொள்ள ஓர் இடம் வேண்டும். என் புடவை நன்றாக இருக்கிறது – உன் புடவை நன்றாக இருக்கிறது – இதுதான் இப்போது நடந்துகொண்டிருப்பது. அவர்கள் தங்கள் படைப்புத் தொழிலில் அவ்வளவு தீவிரமாக இல்லை. இது கலைப்படைப்பு, இன்னும் தீவிரமாகச் செயலாற்றுவோம் என்ற உணர்வு அவர்களிடம் இல்லை. மேலெழுந்தவாரியாக சிலவற்றைச் செய்து திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள்; அவ்வளவுதான். உருது மொழியில் பல இலக்கியப் பத்திரிகைகள் வருகின்றன. ஸப்ரஸ்இதாரா நூலக அமைப்பிலிருந்து வருகிறது. தக்கனியில் எழுதப்பட்ட ஏராளமான படைப்புகள் அங்குள்ளன. 1920, 1930, 1940 களைச் சேர்ந்த பல பத்திரிகைகள், நாளிதழ்கள் எல்லாம். நான் படைப்புகளை அனுப்புகிறேன். தில்லியிலிருந்து வரும் கிதாப்நாமா ரொம்பப் பிரபலம். வித்தியாசமான படைப்புகளைத் தேடிப்பிடித்து வெளியிடும் பத்திரிகை அது. இவை இரண்டும் தரமானவை. நான் இவற்றிற்கு படைப்புகள் அனுப்புகிறேன். ஸியாஸத் ஹைதராபாதில் எல்லா முஸ்லிம்களும் படிக்கும் செய்தித்தாள். எனவே எனக்கு ஏதேனும் பிரச்சனை தோன்றி அதைப் பெண்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றும் போதெல்லாம், நான் ஸியாஸத்திற்கு அனுப்புவேன். எல்லோருக்கும் படிக்கக் கிடைப்பதால் அதில் எனக்கொரு திருப்தி.

எல்லா வியாழக்கிழமைகளிலும் மகளிர் பக்கம் வரும். எல்லா நாளிதழ்களிலும் ஒரு பக்கம் இதற்காக ஒதுக்கப்படும். முன்ஸீஃப் செய்தித்தாள், ரெஹனுமா கவா தின் வாரப்பத்திரிகை, இன்னொரு அவாமி செய்தித்தாள் என்று பல நாளிதழ்களும், வாரப்பத்திரிகைகளும், மாதமிரு முறை வரும் பத்திரிகைகளும் உள்ளன. ஆனால் சிந்தனை வேறாக இருக்கிறது. இந்தப் பத்திரிகைகள் இன்னும் மதச் சார்பற்றவையாக மாறவேண்டும். இந்த விதத்தில் ஸியாஸத் சிறப்பாகப் பணியாற்றுகிறது. ஆனால் கணபதியைப் பற்றி ஒரு கவிதை எழுதி அதன் ஆசிரியரிடம் கொடுத்து “இதை ஸியாஸத்தில் பிரசுரிக்க வேண்டும்” என்று கூறினேன். அவர் “மன்னித்துக் கொள் ஜமீலா. கணபதி மீதான கவிதையை என்னால் பிரசுரிக்க இயலாது” என்று விட்டார். பரஸ்பரம் வெறுப்பு வளர்ந்துவருகிறது.

கமார் ஜமாலி என்ற பெண் எழுத்தாளர் தனாஸுர் என்ற பத்திரிகையைத் துவங்கத் திட்டமிட்டுள்ளார். அது தொடர்ந்து வெளிவருமென்று நம்புகிறேன். ஏனென்றால் அவர் கடுமையான உழைப்பாளி. அது வரும். பெண்களால் நடத்தப்படும் பத்திரிகைகள் என்று எதுவுமே இல்லை. பெண்களுக்கான பக்கங்கள்கூட ஆண்களால்தாம் தயாரிக்கப்படுகின்றன. அவர் உண்மையிலேயே உழைத்தார் என்றால் நிச்சயம் வெற்றி பெறுவார்.

முன்பெல்லாம் பெண்கள் எழுத்தாளர்களாக இருந்ததில்லை. அவர்கள் ஒருபோதும் படிக்க எழுத என்று உட்கார்ந்ததில்லை. பேச்சு பேச்சு பேச்சுதான்… கணவன் முஸ்லிமாக இருப்பான்; மனைவி இந்து. இவர்களிடையே பேச்சுப் பரிமாற்றம் நடந்திருக்குமல்லவா; அதுவே ஒரு பாஷையாக மாறியது. தக்கனி, கணவன் மனைவிக்கிடையேயான நேசமிக்க மொழியாகத்தான் இருக்கிறது. மனைவி தெலுங்குக்காரி; கணவன் முஸ்லிம். இப்படியாக உருதுவும் தெலுங்கும் கலந்து தக்கனியாக உருப்பெற்றிருக்கும். ஒரு பெண்ணின் குரலிலேயே எழுதிய ஒரு கவிஞர் இருந்திருக்கிறார்.

அவர் பார்வையிழந்தவர். பெண்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டபடி இருப்பார். அவருக்குப் பார்வையில்லாததால் அந்தப்புரங்களில் அனுமதிக்கப்பட்டார். அந்தப்புரங்களில் பெண்கள் மிகச் சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். பெண்களின் பேச்சுகளைக் கேட்ட அவர் அவர்களின் இச்சைகள் பற்றியும், உணர்ச்சிகள் பற்றியும், பரஸ்பரம் அவர்களுக்கிடையே நிலவிய போட்டி பொறாமைகள் பற்றியும் எழுதினார். இப்ராஹிம் அவரது பெயர்.

இதாரா எ அதாபியாத் எ உர்து என்ற ஒரு நூலகம் உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முந்தைய படைப்புகள்கூட அங்கிருக்கின்றன.

பானு தஹாரா சையத் ஒரு பெண் கவி. அவர் வயதானவர். கஜல் இயற்றுவதில் சிறந்தவர். ஆனால் எல்லாவற்றைப் பற்றியும் எழுதுவார் அவர். சிறப்பாக எழுதுபவர். ஜிலானி பானு இரானியப் பின்னணியுள்ளவர். அவரது கணவர் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அஸீசுன்னிஸா சபா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது படைப்புகள் மோசமில்லை, இப்போதும் எழுதுகிறார். கவிதைகள் எழுதி முஷைராக்களில் வாசிக்கவும் செய்கிறார். நான் எழுதத் துவங்கியபோது `நகோ’, `ஹெள’ போன்ற வார்த்தைகளை என் கவிதைகளில் பயன்படுத்தி வந்தேன். இன்று நான் அவ்வாறு எழுதாமலிருப்பதற்கு என் குருக்கள்தாம் காரணம். என் சின்ன வயதில் அவர்கள்தாம் “இப்படி எழுதக்கூடாது. கேட்டால் சிரிப்பார்கள்” என்று கூறினார்கள். எதை எழுதக் கூடாது என்ற கட்டுப்பாடு இப்படித்தான் என் மீது கவிழ்ந்தது. இப்போது உரைநடையில் இத்தகைய வார்த்தைகளை உள்வாங்கி எடுத்தாளத் துவங்கியிருக்கிறேன்.

தக்கனியில் சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். முஸ்லிம்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. உரைநடை மற்றும் கவிதைகளின் பகுதியாக இந்த அற்புதமான வார்த்தைகள் மாறிவிட்டன.

தக்கனி மொழியில் என்னால் எழுத முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. நான் எழுதுவேனா, எதை எழுதப்போகிறேன் என்பது எனக்கெப்படித் தெரியும்?

_______


* கியாரவீன் : முஸ்லிம் மாதம் ரபி உல் அவ்வலின் பதினோராம் நாள். பாக்தாத் சூஃபி ஞானியான ஹஜரத் சையத் அப்துல் காதர் ஜீலானியின் நினைவான அன்றைய தினம் இனிப்புகள் வினியோகிக்கப்படும்.

தொடர்புள்ள பதிவு: https://solvanam.com/?p=90785

ஆங்கிலப் பிரதி உருவாக்கம்: சி. எஸ். லக்ஷ்மி

நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதையை மொழிபெயர்த்தது: அ. ஸ்ரீனிவாசன்

புகைப்படங்கள்: ப்ரியா டிஸூஸா

நூலின் பதிப்பாசிரியர்கள்: அ. ஸ்ரீனிவாசன், எம். சிவசுப்பிரமணியன்

குறிப்பு:

ஜமீலா நிஷாத்தின் வாழ்க்கையைக் கூறும் ‘நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை’ பிரதியும் கவிதைகளும், புகைப்படங்களும் ஸ்பாரோ அமைப்பின் காப்புரிமைக்கு உட்பட்டவை. இவற்றை யாரும் எந்தத் தளத்திலும் வேறு எந்தப் பதிப்பிலும் உபயோகிக்க அனுமதி இல்லை.

Series Navigation<< நடவுகால உரையாடல் – சக்குபாய்ஜமீலா நிஷாத்தின் தலைப்பிடாத சில கவிதைகள் >>

2 Replies to “நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை – ஜமீலா நிஷாத்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.