தபால் பெட்டி

ஹிந்தி வழி தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

இன்று எனக்கு வாராந்தர விடுமுறை. இன்று பொது விடுமுறை நாளும் கூட. நான் ரீகல் திரையரங்குக்கெதிரே உள்ள இரும்புக்கிராதியில் சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தேன். வெகு நாட்கள் கழித்து  இரும்புக்கிராதிகளுக்கருகே பெரிய சிவப்பு நிறத் தபால் பெட்டியை  பார்த்தேன். முன்பொரு சமயம்,  கடிதம் ஒன்றை அவசரமாக தபால் பெட்டியில் இட வேண்டி நான்  தேடியலைந்தபோது,  இந்தத் தபால் பெட்டி அங்கு இருந்திருக்கவில்லை. இரும்புக் கிராதிகளில் சாய்ந்தவண்ணம்,  நான் அந்தத் தபால் பெட்டியை பார்த்துக்கொண்டிருக்கையில்,  அது திடீரென அங்கு எப்படி முளைத்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கு நான் அடிக்கடி சந்திக்கும் இளைஞன் ஒருவனிடம், “இந்தத் தபால் பெட்டியை இங்கிருந்து அகற்றியிருந்தார்கள் இல்லையா?” என்று கேட்டேன். இளைஞன் சிவப்புத் தூணை வியப்புடன் பார்த்தபடியே “இந்தத் தபால் பெட்டியா? இதை நான் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்!” என்றான்.

மக்கள் தம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களை எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் என்பது வினோதமான விஷயம்தான். இன்று காலை தான்,  பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர், என்னிடம் “நான் உங்களை  இதற்கு முன்பார்த்திருக்கிறேனா?” என்று கேட்டார். யோசித்துப் பாருங்கள்! நான் அவரது பக்கத்து வீட்டில் பல வருடங்களாக வசித்து வருகிறேன்!  ஒருவேளை நான் உருவமற்றவனோ!  இந்த தபால் பெட்டியைப் போல. ஒரு பெண்மணியோ,  குழந்தையோ அல்லது ஆணோ,  என்னைக் கடந்து செல்லும்போது,  என்னை தபால்பெட்டி என நினைத்து,  என் பாக்கெட்டுக்குள் தபால்களை திணித்துவிட்டுப் போனால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை!

சிறு வயதில்,  நான் என் அண்ணனின் கடிதங்களை திருட்டுத்தனமாகப் படிப்பேன். நான்  அவ்வாறு படிப்பதை எவருமே பார்த்திராத போதிலும், அது அவனுக்கு  எப்படி தெரிந்து விடுகிறது என்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அதேபோல,  எங்கள் வீட்டுக்ககருகே வசித்த ஒரு பெண்ணுக்கு என்னிடம் மூன்று சட்டைகள் இருந்த விஷயம் தெரிந்திருந்தது. நீலம், மஞ்சள் மற்றும் வெள்ளைச் சட்டைகள். இச் சட்டைகளை நான ஒரே நேரத்தில் ஒரு போதும் அணிந்ததில்லை.

தபால் பெட்டியின் பளீர்ச் சிவப்பு நிறம் கண்களை உறுத்துகிறது. நான் இதுவரை சிவப்பு நிறத்தில் உடை அணிந்ததில்லை. என் அம்மா சில சமயம், சிவப்பு நிறப் புடவை உடுத்தியிருக்கிறார். ஆனால்,  என் பாட்டி எப்பொழுதும் வெள்ளை தான். வயதானவர்களிடம் சிவப்பு நிற புடவை இருக்காதா என நான் அடிக்கடி என்னையே கேட்டுக் கொள்வதுண்டு. ஒருநாள், நான் பாட்டியின் பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த சாமான்களை சோதனை செய்தேன். அதில் வெள்ளை நிற ஆடைகளைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. வெள்ளை நிற ஆடைகள் பரிசுத்தமாக காட்சியளிக்கின்றன. அந்த காலத்து மனிதர்கள் எப்படித் தூய்மையை பராமரித்தார்கள் என்பது எத்தனை ஆச்சரியமான விஷயம்! அவர்கள் அதை பெட்டிக்குள் மூடி வைத்திருந்தார்கள்!

ஒரு நாள் எங்கள் வீட்டில் இருந்த எல்லாப் பெட்டிகளும் திறந்து கிடப்பதைப் பார்த்தேன். எல்லாப் பெட்டிகளும் சுத்தமாக காலி செய்யப்பட்டிருந்தன. அவர்கள் மற்ற பொருட்களோடு என் பாட்டியின் பரிசுத்தத்தையும் திருடிக்கொண்டு சென்று விட்டிருந்தார்கள்!

அந்தப் பெண் பல விதமான வண்ணங்களில் பாவாடை அணிவது வழக்கம். வீசி அடிக்கும் காற்று,  ஒருநாள்,  அவளுடைய பாவாடையை,  என் தாத்தாவின் தலைகீழாகிப் போன குடையைப் போல, திருப்பிப் போட்டுவிடுமோ என நான் பயந்தேன். எங்கள் வீட்டில் ஒரு குடை தான் இருந்தது. தாத்தா அதை கைத்தடியைப் போல உபயோகிப்பார். குடை இல்லாமல் அவர் வெளியே கிளம்பியதேயில்லை. அவர் மறக்காமல் ஒவ்வொரு முறையும் குடையை எப்படி திரும்பக் கொண்டு வருகிறார் என்பது எனக்கு நிரந்தர ஆச்சரியமாக இருந்தது. ஒருநாள் அவர் குடையை எடுத்துச் செல்ல மறந்திருந்தார். அன்று அவர் திரும்பவில்லை. அவர் பல விஷயங்களை மறந்திருக்கிறார் என்று பின்னர் நான் தெரிந்துகொண்டேன். உதாரணமாக, அவரது கண்ணாடி, பாட்டியின் பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சில வெள்ளி நாணயங்கள் மற்றும் மோதிரங்கள்.

எங்கள் வீட்டில் திருட்டு போன பிறகு,  தாத்தாவின் மூக்கு கண்ணாடி மட்டும் தெருவில் விழுந்து கிடந்தது. பாட்டியின் பெட்டியிலிருந்து வெளியே வந்து,  தாத்தாவின் கண்ணாடி மட்டும் எப்படி தெருவில் விழுந்துகிடந்தது என்பது எனக்குப் புரியாத புதிராக இருந்தது.நான் அக்கம்பக்கத்து தெருக்களுக்கும் சென்று, தாத்தாவின் மூக்கு கண்ணாடியை போலவே,  அவரது வெள்ளி நாணயங்களும் மோதிரங்களும் கூட எங்கள் வீட்டை விட்டு தாமாகவே வெளியேறி தெருவில் ஏதேனும் ஒரு மூலையில் விழுந்து கிடக்கக்கூடுமோ என மிகவும் உன்னிப்பாக கவனித்தேன். இப்போதும்கூட,  நான் வீடு திரும்புகையில்,  என்னுடைய மேஜை நாற்காலிகள்,  நான் இல்லாத சமயத்தில்,  கால் முளைத்து வெளியே போய் விடுமோ என்று  நினைப்பதுண்டு. கதவருகே அவை தப்பித்துச்செல்லும் ஒரு வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருப்பது போல எனக்குத் தோன்றும்.

தபால் பெட்டி ஏன் எப்போதும் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று நான் நினைப்பதுண்டு. பெரும்பாலான சமயம் அப்பாவின் கண்கள் இரத்தச் சிவப்பாகத் தான் இருக்கும். நாற்சந்தி சிக்னலில் எரியும் சிவப்பு விளக்குகள் எனக்கு அவரது கண்களை நினைவூட்டும். சில சமயம்,  தெருவில் அவரை எதிர் கொண்டதுண்டு. அத்தருணங்களில் அவரிடமி ருந்து விடுபட்டுச் செல்வது மிகவும் கடினமான காரியம்.

அந்தப் பெண்ணுக்கு சிவப்பு ரோஜாக்கள் என்றால் மிகவும் விருப்பம். அவள் அடிக்கடி பல பூக்களின் பெயர்களை மிகச்சாதாரணமாக அடுக்குவாள். அப்போதெல்லாம் எனக்கு  உண்மையிலேயே  பூக்களுக்கு பெயர் உண்டா என்கிற சந்தேகம் எழும்.

எனக்கருகே நின்று கொண்டிருந்த இளைஞனின் உடையில் பாக்கெட்டுகள் எதுவுமில்லை. எனக்கு அது வினோதமாக தோன்றியது. எதையாவது வாங்க வேண்டியிருந்தால், அவன் எங்கே யிருந்து பணத்தை எடுப்பான்? என் அம்மாவும் அத்தைகளும் பணத்தை அவர்களது உடையில் பத்திரமாக முடிச்சிட்டு வைத்திருந்தார்கள். எல்லா பெண்களிடமும் ஒரு முடிச்சு இருக்கிறது. எவரேனும் அதை அவிழ்க்க முயற்சி செய்யும்போது மட்டுமே,   அவள் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள். ஒரு பாதி நிர்வாணமாகவும் மறுபாதி, முடிச்சுகள் ஏதுமற்ற ஒரு துணியால் மறைக்கப்பட்டது போல இருக்கும் ஒரு பெண்ணின் சிலையை நான் பார்த்திருக்கிறேன். அந்த துணி எந்த நேரத்திலும்  நழுவி விழுந்து,  அவளை நிர்வாணமாக்கி விடக்கூடும் என்று எனக்குத் தோன்றும். ஒருவேளை அப்படி நிகழ நேர்ந்தால்,  தன்னைக் காத்துக்கொள்ள அவளிடம் கைகள் இல்லை.

பாவாடை அணியும் அந்தப் பெண்ணின் வீட்டில் தான் நான் இந்த வீனஸ் சிலையைப் பார்த்தேன். அப்போது நான் இந்த முடிச்சு விவகாரம் குறித்து எதுவும் தெரியாத அப்பாவியாக இருந்தேன். அச்சிலைக்கு கைகள் இருந்தபோது,  கைகளில் ஆப்பிளை வைத்துக் கொண்டிருக்கக் கூடுமென்று அந்தப் பெண்ணின் தகப்பனார் கருதினார். அது ஏன் ஆப்பிளாக இருக்க வேண்டும்?  ஏன் மாம்பழமாக இருந்திருக்க முடியாது?  பாட்டி சொன்ன ஒரு கதையில், குழந்தைப் பேறில்லாத  ராணி ஒருத்தி மாம்பழம் சாப்பிட்டதும் குழந்தை பெற்றெடுக்கிறாள். என் அம்மா பல மாம்பழங்களை சாப்பிட்டிருக்கக்கூடும் என நான் நினைத்தேன். எங்கள் வீட்டில் குழந்தை பிறக்கும் போதெல்லாம்,  மாவிலைகளும் ரோஸ்வுட் மர இலைகளும்  வாயிற்படிக் கருகே இரைந்து கிடக்கும்.

வீட்டில் இருந்த எல்லா அலமாரிகளையும் அம்மா பெரிய பூட்டுகளால் பூட்டி வைப்பது எனக்கு நினைவுக்கு வருகிறது. மிகச் சிறிய சாவிகளை கொண்டு,  அந்த பெரிய பூட்டுகளை எப்படி திறக்க முடிகிறது என்று நான் வியப்பேன்.  பலமுறை அந்த சாவிகள் எங்கே வைக்கப்பட்டிருக்கின்றன என்று  நான் தேட முற்பட்டதுண்டு. ஆனால் ஒருபோதும் அவற்றை கண்டுபிடித்ததில்லை.

திடீரென அச்சாவிகளை கண்டுபிடித்து விட்டேன் என நான் உணர்ந்தேன்.  நெடுங்காலமாக  நகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும், என்னுடைய வீடும் மா மற்றும் ரோஸ்வுட் மர இலைகளையும் நினைவுபடுத்திக் கொள்ள முடிந்தது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

வீடு திரும்பியதும்,  முதல் காரியமாக இவற்றையெல்லாம் குறிப்பிட்டு அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் என முடிவு செய்தேன்.

 நாளை அந்த கடிதத்தை நான்  தபால் பெட்டியில் இட வரும்போது,  தபால் பெட்டி ஒருவேளை  நடந்து தெருவின் நடுவே சென்று நின்று கொண்டிருக்கக் கூடும். யார் கண்டது,  அதைச்சுற்றி  கூட்டமும் கூடி இருக்கக்கூடும். அல்லது தபால் பெட்டி க்கு பதிலாக, அதனிடத்தில் ரத்தத்தில் நனைந்த மனிதனொருவன் நின்று கொண்டிருக்கக் கூடும். அவனுடைய சட்டைப் பையிலிருந்து ரத்தக்கறை படிந்த சில உறைகள் அவனது  அடையாளத்தை வெளிப்படுத்துகிற வகையில், எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்.


The Letter-Box by Brajeshwar Madan

Brajeshwar Madan, born in Bhopalwala near Sialokot (now in Pakistan) in 1944, has had no formal education. He wrote regularly for various Hindi magazines. His collection of stories, The Letterbox, won an award from the Hindi Academy, Delhi. He won the Best Film Journalist’s award in 1988.

பிரஜேஷ்வர் மதன் போபால்வாலா என்னும் ஊரில் 1944-ல் பிறந்தவர். இது பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் அருகே உள்ளது. அவர் முறையாக கல்வி பயிலாவிட்டாலும் பல்வேறு ஹிந்திப் பத்திரிகைகளுக்கு தொடர்ச்சியாக எழுதி வந்தார். அவரின் தபால்-பெட்டி சிறுகதைத் தொகுப்பு டெல்லியில் உள்ள இந்தி அகாடெமியில் விருது பெற்றது. 1988-ல் சிறந்த சினிமாப் பத்திரிகையாளருக்கான விருதை வென்றார்.

நூல் விவரம்:

  • Modern Hindi Short Stories
  • ஆங்கிலத் தொகுப்பாசிரியர்: ஜெய் ரத்தன் (Jai Ratan)
  • ஆங்கில மொழியாக்கம்: பீஷம் சாஹ்னி (Bhisham Sahni)
  • ISBN:9788194241447, 8194241448
  • பக்கங்கள்: 240
  • முதல் வெளியீடு: 1990
  • தற்போதைய மறுபதிப்பு: ஆகஸ்ட் 24, 2020

This anthology spans almost half a century of literary endeavor in the field of Hindi fiction-a period of intense literary activity, varied in its approach and wide in its scope. In making the selection Jai Ratan has not only chosen from the veterans in the genre of the short story, such as Amarkant, Bhisham Sahni, Kaleshwar, Nirmal Verma and Mohan Rakesh, but included younger writers who will carry the torch forward. Of special interest are the works of women writers such as Krishna Sobti’s Encircling Clouds, Rita Shukla’s Agony and Mehrunissa Parvez’s Borrowed Sunshine among others.

About Author : Jai Ratan a retired senior business executive, and founder-member of Writers’ Workshop, Kolkata, besides writing in English, has extensively translated from Urdu, Hindi and Punjabi. His published works include the bulk of Krishan Chandar, Manto, Premchand’s Godan, Mohan Rakesh, and Jnanpith and Sahitya Akademi Award winners such as Amrita Pritam, Rajinder Singh Bedi, Bhisham Sahni, Dalip Kaur Tiwana and Gurdial Singh Bedi. He features regularly in English magazines in India, and has figured in several anthologies in India and abroad.

Series Navigation<< டேய் தரங்கெட்டவனே!ஸர்கம் கோலா >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.