கடலைப் பயிரும் கார்வரும்

விவசாய நிலத்தை ஆறு மாதங்கள் பராமரித்து அந்நிலவளத்தை மேம்படுத்தியவர்கள் அந்நிலத்தை   வாங்கலாம் என்னும் அமெரிக்க கூட்டாட்சியின் நில உரிமைச் சட்டத்தின் பேரில் (Preemption Act of 1841) 1, ஓஹையோ மாநிலத்தைச் சேர்ந்த மோஸஸ் கார்வர் (Moses Carver) 1838 ல் மிசௌரி மாநிலத்தில் 240  ஏக்கர் நிலம்  வாங்கி குடும்பத்துடன் அம்மாநிலத்தின் டயமண்ட் நகருக்கு  வந்தார்.

கருப்பின அடிமைகளை விலைக்கு வாங்கிப் பணியில் அமர்த்துவது அப்போது பொதுவான வழக்கமாக இருந்தது மோஸஸ் கார்வருக்கு அதில் விருப்பமில்லை எனினும் அவரது  நீர்வளம் மிகுந்த செழிப்பான பண்ணைக்கு ஆட்கள் தேவைப்பட்டதால் அவரும் அடிமைகளைப் பண்ணையில் வேலைக்கு அமர்த்திக்கொண்டார். அப்படி மோஸஸின் பக்கத்துப் பண்ணைக்காரரான  வில்லியம் மக்ஜின்னிஸ் (William P. McGinnis)  என்பவரிடமிருந்து  13 வயதான மேரியை அக்டோபர் 9, 1855 அன்று  700  டாலர்களுக்கு வாங்கினார்.

மேரியை அவர்களின் வீட்டுப்பெண்ணைப் போலவே மோஸஸ் மற்றும் அவரது மனைவி சூஸன் நடத்தினார்கள் மேரிக்கும் பக்கத்துப் பண்ணையின் மற்றொரு கருப்பினப் பணியாளருக்கும் பிறந்த ஏராளமான குழந்தைகளும் மோஸஸின் பண்ணையிலேயே இருந்தார்கள். 

அமெரிக்க உள்நாட்டுப் போர் முடியும் தருவாயில்  பிறந்த மேரியின் ஆண் குழந்தைக்கு ஜார்ஜ்  என்று பெயரிடப்பட்டது. அப்போது அடிமைகளைக் கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்கும் கொள்ளை நடந்துகொண்டிருந்தது. ஓரிரவில் அந்த  கொள்ளைக்கும்பல் (bushwhackers) மோஸஸின் பண்ணையிலிருந்து பல அடிமைகளைக்  கடத்திச் சென்றனர்  கடத்தப்பட்டவர்களில் மேரியும், பச்சிளம் குழந்தை ஜார்ஜும், மேரியின் மகளும் இருந்தனர். ஜார்ஜின் சகோதரன் ஜேம்ஸ் பாதுகாப்பான் இடத்தில் மறைந்து கொண்டதால் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பித்தான்.

மேரியைத் தேட மோஸஸ் கடும் முயற்சியை மேற்கொண்டார். கடத்தப்பட்ட அடிமைகள் கெண்டக்கி மாநிலத்தில் விற்கப்பட்ட தகவலறிந்து, அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஜான்  என்பவரை நியமித்தார் எனினும், ஜான் குழந்தையான ஜார்ஜை மட்டுமே கண்டுபிடித்தார், கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு பண்ணையின் உயர்ந்த இனக் குதிரைகளைக் கொடுத்து பதிலுக்கு  ஜார்ஜை மீண்டும் மோஸஸ் வாங்கிக்கொண்டார். ஜானுக்கும் தகுந்த சன்மானம் அளிக்கப்பட்டது.

மிசௌரியில் 1865 ல் அடிமைமுறை ஒழிக்கப்பட்ட பின்னர்  மோஸஸ் கார்வரும், அவரது மனைவி சூஸனும், ஜார்ஜையும் அவரது சகோதரன் ஜேம்ஸையும் அவர்களது சொந்தக் குழந்தைகளைப் போலவே வளர்த்தார்கள். பலவீனமான உடல் கொண்டிருந்த ஜார்ஜ் பண்ணை வேலைகளுக்குச் செல்லாமல் சூஸனுடன் சமையலறையிலும் தோட்டத்திலும் உடனிருந்தார் .ஜார்ஜுக்கு இயற்கையைப் போற்றவும் எளிய மூலிகை மருந்துகள் தயாரிக்கவும் சூஸன் கற்றுக்கொடுத்தார். தினசரி வெகுதூரம் நடப்பதையும், திரும்புகையில் மலர்களையும் அழகிய தாவரங்களையும் சேகரித்துக் கொண்டு வீடு திரும்புவதையும் ஜார்ஜ் வழக்கமாகக் கொண்டிருந்தார். சகோதரர்கள் இருவருக்கும் அடிப்படைக் கல்வியையும் கற்றுக்கொடுத்த சூஸன், ஜார்ஜின் கற்றல் ஆர்வத்தைக் கவனித்து அவரை முறையான கல்வி கற்க அனுப்ப முடிவு செய்தார்.

அப்போது டயமண்ட் நகரில் கருப்பினக் குழந்தைகளுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது எனவே  ஜார்ஜ் அங்கிருந்து கிழக்கே  16 கி மீ தூரத்தில் இருந்த   கருப்பினத்தவர்களுக்கான  பள்ளியில்  படிக்கச் சென்றார்,

கால்நடையாகவே தன்னந்தனியாக  அங்கே சென்ற  முதல் நாளில், தான் சந்தித்த மரியா வாட்கின்ஸ் (Mariah Watkins) என்பவரிடம் தன்னை ’’கார்வரின் வீட்டிலிருந்து  ஜார்ஜ்’’ என்று அறிமுகப்படுத்திக் கொண்ட போது,  அப்பெண்மணியால் இனிமேல் ’’ஜார்ஜ் கார்வர்’’ என்று பெயர் சொல்லும்படி அறிவுறுத்தப்பட்டார்

மரியா  கார்வரிடம் ’’உன்னால் எவ்வளவு கற்க முடியுமோ அத்தனையும் கற்றுக்கொண்டு பின்னர் உன் உலகிற்குச் சென்று உன் மக்களுக்கு அவற்றை திரும்பக் கொடு,’’ என்று சொன்னதை  ஜார்ஜ்  கார்வர் ஒருபோதும் மறக்கவில்லை. 

13 வயதில் உயர் கல்வியின் பொருட்டு கான்ஸஸ் மாநிலத்திலிருந்த மற்றுமொரு குடும்பத்திற்கு தத்துக் கொடுக்கப்பட்ட ஜார்ஜ், ஒரு வன்முறைக் கும்பலால் கருப்பினத்தவர் ஒருவர் கொடூரமாகக்  கொல்லப்பட்டதை நேரில்காண நேர்ந்தபோது அங்கிருந்து வெளியேறினார். பின்னர் பல பள்ளிகளில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். 

கல்லூரிப் படிப்புக்குத் தேவையான மதிப்பெண்கள் பெற்றிருந்தும் ஜார்ஜ் விண்ணப்பித்திருந்த பல கல்லூரிகளில் அவர் கருப்பினத்தவர் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. படிப்பைத் தொடர முடியாத கார்வர் ஆகஸ்ட் 1886ல், கான்ஸஸின் ஒதுக்குப்புற  கிராமமொன்றில் 17 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தான் ஒருவராகவே அந்த நிலத்தை உழுது பூக்களும் மூலிகைகளும் நிறைந்த ஒரு தோட்டத்தை உருவாக்கினார். பின்னர் அந்நிலத்தில் அரிசி, மக்காச்சோளம், கனிமரங்கள் ஆகியவற்றையும் பயிரிடத் துவங்கினார்

1888ல் கார்வருக்கு அயோவா மாநிலத்திலிருந்த சிம்ஸன் கல்லூரியில் கலைத் துறையில் நுழைவனுமதி கிடைத்த பின்னர் அந்த தோட்டத்தை விட்டு அவர் சிம்ஸன் கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்லூரியின் முதல் கருப்பின மாணவர்  கார்வர்தான். பிறரின் துணிகளைத் துவைத்துக் கொடுப்பது, சமையல் வேலை, முடி திருத்துவது மற்றும் அவரது ஓவியங்களை விற்றதின் மூலமாக கிடைத்த பணத்தினால் கல்வியைத் தொடர்ந்தார். 

கார்வரின் ஆசிரியை எட்டா புட் அவரது அசாதாரணமான  அறிவைக் கண்டு, அயோவா மாநில விவசாயக் கல்லூரியில் அவரை தாவரவியல் படிப்பைத் தொடரச் சொல்லி அறிவுறுத்தினார். எட்டா ஓவியங்கள் வரைவதில் அவருக்கிருந்த  கலையார்வத்தையும அடையாளம் கண்டுகொண்டார். அயோவா விவசாயக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் கருப்பின  மாணவரும் இவரே.   பட்டப்பிடிப்பில் அவர் சமர்ப்பித்த  ’’மனிதனால் மாற்றப்பட்ட தாவரங்கள்’’ என்னும் ஆய்வேடு அவருக்கு அங்கேயே 1894ல் பட்ட மேற்படிப்பு படிக்க வாய்ப்பளித்தது.

கார்வருக்கு தாவரங்கள் குறித்து இருந்த அறிவினால் அவர் அங்கு மிகவும் பிரபலமாக இருந்தார். அருகிலிருந்த வயல்களில் உருவாகும் தாவர நோய்களுக்கு சிகிச்சை அளித்து அவற்றைக் காப்பாற்றியதால் அனைவரும் கார்வரைத் தாவர டாக்டர் என்று அழைத்தார்கள்.

மேற்படிப்பின் போது லூயிஸ் பாமெல்  (Louis Pammel)  என்னும் கனிவான பேராசிரியரின் வழிகாட்டுதலில் கார்வெர் பூஞ்சையியல் மற்றும் தாவர நோயியலில் பல ஆய்வுகளை செய்தார். 1896ல் முதுகலைப் பட்டம் வாங்கும் முன்பே கார்வர் ஒரு சிறந்த தாவரவியலாளராக அங்கிருந்தோரால் அறியப்பட்டார். அயோவா மாநில கல்லூரியின் முதல் கருப்பினப் பேராசிரியரும் ஆனார் கார்வர்.

 1896இல் டஸ்கெகீ  நிறுவனத்தின் (இப்போது Tuskegee University), தலைவரான புக்கர் டி வாஷிங்டன் (Booker T. Washington )  ஜார்ஜ் கார்வரை அங்கு வரும்படி அழைத்தார். 

கார்வர் அங்கு வரவேண்டும் என்பதற்காக வாஷிங்டன் அப்போது அங்கிருக்கும் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருததை விடவும் மிக அதிகமான ஊதியத்தை அளித்ததோடு, அந்நிறுவனப் பணியாளர்கள் விதிவிலக்கின்றி ஒற்றை அறையில் இருவராக தங்கிக்கொண்டிருந்த போது, கார்வருக்கென  இரு அறைகளை வளாகத்திலேயே ஒதுக்கியும் இருந்தார்.  டஸ்கெகீயில் ஜார்ஜ் கார்வெர் தனது இறுதிக்காலம் வரை, 47 ஆண்டுகள் இருந்து, சிறப்பாகப் பணிபுரிந்தார். அவருக்களிக்கப்பட்ட துறையை ஆய்வு மையமாக்கி மிக முக்கியமான பல கண்டுபிடிப்புகளையும் ஆய்வுகளையும் செய்தார்

சாதாரண விஷயங்களை அசாதாரணமாகச் செய்யவேண்டும் என மாணவர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருப்பார். கனிவான தோற்றமும் வசீகரிக்கும் குரலுடனும்  இருந்த அவருடன் எப்போதும் மாணவர்களும் விவசாயிகளும் அரசு உயர்மட்ட அதிகாரிகளும் செல்வந்தர்களும் நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள்.

டஸ்கெகீயில் பணியாற்றுகையில் கார்வர் அருகிலிருந்த விவசாய முறைகளைக் கவனித்தார். பல ஆண்டுகளாக அங்கிருந்த நிலங்களில் பருத்தியே பயிராகிக்கொண்டிருந்தது. ஒற்றைப்பயிர் சாகுபடியில் வளம்குறைந்த மண் மிகக் குறைவான மகசூலைக் கொடுத்ததால்  அங்கிருந்த அனைத்து விவசாயிகளும் வறுமையிலிருந்தார்கள்

தென்னமெரிக்காவுக்குரியது எனக் கருதப்படும் நிலக்கடலைப் பயிர் ஆப்பிரிக்காவிற்கு செல்லும் வழியில் ஐரோப்பிய இயற்கையாளர்களால் ஸ்பெயினுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு அடிமைகளைக் கொண்டு சென்ற கப்பல்கள் வழியே உலகின் பிற பாகங்களுக்கு கடலைப்பயிர் அறிமுகமானது.1800களில் அமெரிக்காவின் முதன்மைப் பயிர்களில் ஒன்றாக நிலக்கடலை இருந்தது. அச்சமயத்தில்தான் கார்வர் அயோவா விவசாயக் கல்லூரியில் முதுநிலைத் தாவரவியல் படித்துக்கொண்டிருந்தார். 

கார்வர் முதன்முறையாக  அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களில்  பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்தி பருத்திக்கு மாற்றாக நிலக்கடலை பயிரிட கற்றுக்கொடுத்தார். பயிற்சுழற்சி முறையில் அடுத்தடுத்து மாற்றுப் பயிர்கள் குறிப்பாக பயறு வகைகளை பயிரிடுகையில் அவற்றின் வேர் முடிச்சுகளில் இருக்கும் நுண்ணுயிரிகள் நிலத்தின் நைட்ரஜன் சத்துக்களை மேம்படுத்துவதால் நிலவளம் குறையாமலிருக்கும். 

கார்வர் பருத்திக்கு மாற்றாக நிலக்கடலையுடன் சோயாபீன்ஸ், தட்டைப்பயறு, சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் ஆகியவற்றையும் பயிரிடும் முறையை அறிமுகம் செய்தார். பயிரிடுவதோடு மட்டுமல்லாது சத்தான பயறு வகைகளை விவசாயிகள் உணவாக எடுத்துக் கொள்வதன் அவசியத்தையும்  புரிய வைத்தார்.

வறுமையில் வாடிக் கொண்டிருந்த அப்பகுதி விவசாயிகளின்  சொந்த உணவுத்தேவைக்கும் வாழ்வாதாரத்திற்கும் கார்வர் காட்டிய பயிர் சுழற்சி வழி மிக உதவியாக இருந்தது அம்முறைகளைப் பின்பற்றி நல்ல மகசூல் கிடைத்து ஏராளமான நிலக்கடலையும், சர்க்கரை வள்ளிக்கிழங்குகளும் கிடைத்தபோது அவற்றிலிருந்து பலநூறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் கார்வர் கண்டறிந்தார்.2 அங்கிருந்த பல கருப்பின விவசாயிகளுக்குத் தலைமுறைகளாகச் செழிப்பான விவசாயம் செய்யும் வழியை அவர் காட்டினார்.

கடலைப்பால், கடலைப்பாலாடைக்கட்டி, நிலக்கடலை உலர்  மாவு, நிலக்கடலை விழுது, முகச்சவர கிரீம்கள், காகிதங்கள்,  சாயங்கள், குளியல் சோப், சரும அழகுப்பசைகள், மை ஆகியவை நிலக்கடலையில் இருந்து அவர் உருவாக்கிய 300 பொருட்களில் சில.

நிலக்கடலையிலிருந்து சில நோய்களுக்கு மருந்துகளையும் அவர் உருவாக்கினார். சர்க்கரை வள்ளிக்கிழங்குகளிலிருந்து கார்வர் 73 வகையான சாயங்கள், கயிறு, காலை உணவுக்குருணைகள், ஷுக்களுக்குக் கருப்பு பாலிஷ், பட்டை ஒத்த நூலிழை ஆகியவற்றையும் உருவாக்கினார்

பல இடங்களுக்குப் பயணித்து பயிர் சுழற்சி முறை, இயற்கைப் பூச்சிக்கொல்லி தயாரிப்பு, நிலக்கடலையிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் செய்வது ஆகியவை குறித்து கற்றுக் கொடுத்தார். 

 ஒரு பெரிய கூண்டு வண்டியை நகரும்  வகுப்பறையாகவும் ஆய்வகமுமாக அவரே வடிவமைத்து  இந்த கற்பித்தலுக்குப்  பயன்படுத்தினார். நியூயார்க்கின் பரோபகாரியான மோரிஸ் கெட்சம் ஜெசப் (Morris Ketchum Jesup) நகரும் வகுப்பறையாகப் பயன்பட்டஇந்த வேனுக்கு பொருளுதவி அளித்ததால் அந்த வண்டிக்கு  ஜெசப் வண்டி (Jesup wagon)  என்று பெயரிட்டார். குதிரை வண்டியான அது பின்னாளில் மோட்டார் வாகனமாகியது. 3 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதுடன் சூழல்பாதுகாப்பிலும் கார்வர் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இனவெறி உச்சத்திலிருந்த அந்தக்காலத்தில் கூட, கருப்பினத்தவர்களக் கடந்தும் அவர் புகழ் பரவியது. அவரது சூழல் பங்களிப்புகளுக்கும், கண்டுபிடிப்புக்களுக்கும் வெள்ளையர்களால் பல விருதுகள் அளிக்கப்பட்டன.

1916ல் கார்வர் நிலக்கடலை சாகுபடி நுட்பங்கள் மற்றும் 105 கடலை உணவுகளுக்கான செய்முறை என்னும் செய்திமடலை பிரசுரித்தார்

அவரது ஆய்வுக்கூடத்தில் அவரும் அவரது மாணவர்களும் அலபாமாவின் களிமண்ணும், நிலக்கடலை எண்ணெய்யும் கலந்த இயற்கைச் சாயத்தை உபயோகித்துப் பல இயற்கைக்  காட்சிகளின்  ஓவியங்களை வரைந்தார்கள். ஓவியங்கள் மட்டுமல்லாது கடலைத் தோலில் செய்யப்பட்ட கழுத்தணிகள், கோழியின் இறகில் செய்யப்பட்ட கலைப் பொருட்கள், இயற்கை நாரிழைகளில் பின்னப்பட்ட பொருட்கள், சாயமேற்றப்பட்ட விதைகள், சணல் பையில் தையல் வேலைப்பாடுகள்  என அறிவியல் ஆய்வுகளுக்கு மத்தியிலும் கார்வர்  செய்துகொண்டிருந்தார்.

அவரது ஓவியங்களுக்கு இயற்கைச் சாயங்களை உபயோகித்ததோடு உள்ளூர் விவசாயிகளின் எளிய வீடுகளை இயற்கைச் சாயங்களால் அழகுபடுத்தவும் கற்றுக்கொடுத்தார். டஸ்கெகீ நிறுவனம் கருப்பினத்தவர்களின் விடிவுக்கான பொன் வாசல் என்றுமவர் கருதினார். ஒரு தேவாலயம் முழுதாகவே களிமண்ணில் இருந்து அவர் உருவாக்கிய இயற்கைச் சாயத்தினால் வர்ணமடித்தார். 

தங்களுக்குள் இருக்கும் திறனையும் சூழலின் பேராற்றலையும் உணர்ந்து கொள்ளுமாறு தொடர்ந்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

மண் வள மேம்பாடு, இயற்கை உரத்தின் பயன்பாடு மற்றும் பயிர்சுழற்சி இம்மூன்றையும் அவர் மக்களிடம் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக்கொண்டே இருந்தார். கருப்பினக் குழந்தைகளுக்கு ஓய்வு நேரங்களில் தாவரவியலும்,  விவசாயமும் இறையியலும் கற்றுக்கொடுத்தார், குப்பைகளை உரமாக்குவது, தாவர எரிபொருள் தயாரிப்பு ஆகியவற்றிலும் ஈடுபட்டிருந்தார்.  களைகள் எனக் கருதப்பட்ட டேன்டலையன் மலர்களை, பர்சிலன் (Purslane) கீரைகளைச் சேகரிக்கவும், சமைக்காமல் உணவில் சேர்த்துக் கொள்ளவும் பயிற்றுவித்தார். 

விவசாயிகளை அவர்களின் நிலங்களின் மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வகத்துக்கு கொண்டு வரச்சொல்லி, அவற்றிலிருந்த குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளையும் கால்நடைகளை முறையாகப் பராமரிக்கவும் கற்றுக்கொடுத்தார்.

தாமஸ் ஆல்வா எடிசன் இவர் சிறப்பியல்புகளை கேள்விப்பட்டு நியூஜெர்சியில் உள்ள தனது ஆய்வகத்தில் இணைந்து கொள்ளுமாறு ஆண்டு ஊதியமாக 100,000 டாலர் தருவதாகவும்  கூறி கார்வருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் கார்வர் அப்பணியினை ஏற்க மறுத்துவிட்டார்.

கார்வர் வேர்க்கடலை கண்டுபிடிப்புக்களையும் செய்முறைகளையும்  “பேராசிரியர் கார்வரின் ஆலோசனை” என்ற  செய்தித்தாள் பத்தியில் வெளியிட்டார். ஓவியங்கள் வரையவும் கம்பளி பின்னவும், அலங்காரத் தையல் கலையிலும் நேரம் செலவழித்தார். அவற்றை அவரது நண்பர்களுக்குப் பரிசளித்தார். தன்னை சுற்றி இருந்த உலகை மிகப் பெருமையுடனும், அன்புடனும் கவனித்த கார்வருக்கு அன்பு செலுத்த பல்லாயிரம் காரணங்கள் இருந்தனவே ஒழிய புகார்களே இல்லை. கார்வர் திருமணம் செய்துகொள்ளவில்லை. வாழ்நாள் முழுவதையுமே மண் வளத்தைக் காப்பாற்றவும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மக்கள் தன்னிறைவுடன் வாழ உதவிசெய்யவுமே அர்ப்பணித்துக்கொண்டார். 

1920ல் கார்வர் அமெரிக்க நிலக்கடலை விவசாயிகள் சங்கத்தில் கடலைப்பயிர் பாதுகாப்பு குறித்து ஒரு உரை ஆற்றினார், பயிர் பாதுகாப்பு நிதி குறித்த அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டு 1922ல் அந்தச் சட்டம் அமலுக்கு வந்தது.அதன் பிறகு  அனைவராலும் அன்புடன் கடலை மனிதர் என்றே அழைக்கப்பட்ட கார்வர் இனங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான யுனைடட் ஸ்டேட்ஸ் கமிஷனின் பேச்சாளராகவும்  (Speaker for the United States Commission on Interracial Cooperation) தேர்ந்தெடுக்கப்பட்டு 1933வரை அப்பதவியிலிருந்தார். 

உலகப்போரின் போது சாயப்பற்றாக்குறை நிலவியது. கார்வர் சுமார் 30 இயற்கைச் சாயங்களை அலபாமா மண்ணிலிருந்து மட்டுமே  உருவாகி அமெரிக்க டெக்ஸ்டைல் தொழிற்சாலைகளுக்கு அளித்து உதவினார்.  வளரும் நாடுகளுக்கான ஊட்டச்சத்துப் பயிர்கள் சாகுபடி குறித்துப் பேச இந்தியாவிற்கு வந்த கார்வர்,  காந்தியையும் சந்தித்திருந்தார்.

முதல் உலகப் போரின் போது கார்வர் ஹென்ரிஃபோர்டுடன் இணைந்து ரப்பருக்கான மாற்றுப்பொருளை கண்டறியும் ஆய்வைத் தொடங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஹென்றி ஃபோர்டும் கார்வரும் நண்பர்களாக இருந்தார்கள். அவரது இறுதிக்காலத்தில் நண்பருக்கு ஹென்ரி ஃபோர்டு ஒரு மின்தூக்கியை அவரது ஆய்வகத்தில் நிறுவி  பரிசாக அளித்தார்.

1935ல் அமெரிக்க விவசாய அமைச்சகத்தின் பூஞ்சையியல் மற்றும் தாவர நோயியல் துறையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்வர் பூஞ்சைத் தொற்றுகளில் பல முக்கிய ஆய்வுகள் செய்து, ஏராளமான பூஞ்சைகளைக் கண்டறிந்தார். இரண்டு பூஞ்சைகளுக்கு கார்வரின் பெயரிடப்பட்டிருக்கிறது. Metasphaeria carveri  Cercospora carveriana ஆகியன அவை.

மிகப்பழைய  கோட்டும், ஒட்டு போடப்பட்டிருந்த ஏப்ரனுமாக எளிய தோற்றத்தில் இப்போதும் நினைவு கூறப்படும் கார்வர் ஜனவரி 5, 1943 ல் இறந்தபோது, தனது வாழ்நாள் சேமிப்பான 60ஆயிரம் டாலர்களையும், மற்ற அனைத்து சேமிப்புகளையும் டஸ்கெகீ பல்கலைக் கழகத்துக்கு விட்டுச் சென்றார்.

1943 ல் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், ஜார்ஜ் கார்வரைக் கௌரவிக்கும் பொருட்டு அவர் பிறந்த ஊரான   டயமண்ட் நகரில்  நினைவுச்சின்னம் எழுப்ப நிதி ஒதுக்கினார். அமெரிக்க அதிபர் அல்லாதவர்களுக்கான சிலைகளில் இவருடையதே முதல் சிலை. கார்வரின் பெயரில் அமெரிக்க தேசிய பூங்கா தொடங்கப்பட்டது அதில்தான்  9 அடி உயர சிறுவனாக கார்வரின் உருவச்சிலை அங்கு அழகாக அமைந்திருக்கிறது. 

1948லும் 1998லும் கார்வரைக் கெளரவிக்கும் பொருட்டு தபால்தலைகள் வெளியிடப்பட்டன. 1951-54 வரையிலும் புழக்கத்தில் இருந்த அரை டாலர் நாணயத்தில் கார்வரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இரண்டு அமெரிக்க ராணுவ நீர்மூழ்கி கப்பல்களுக்கும் கார்வரின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது  

அவரது பெயரில் பல பூங்காக்கள் அருங்காட்சியகங்கள், அறக்கட்டளைகள் ஆகியவை இன்றும் செயல்படுகின்றன.1944 லிருந்து ஜனவரி 5 ஆம் தேதி கார்வரின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.    1941ல், TIME சஞ்சிகை கார்வரை குறித்த சிறப்புக்கட்டுரை வெளியிட்டு அவரை  ‘Black Leonardo’என்று போற்றியிருந்தது. 

 புக்கர் வாஷிங்டனும், கார்வரும் நெருங்கிய நண்பர்களாயிருந்தனர்.  தனது பெயரில் இந்த நட்பின் அடையாளமாகவே வாஷிங்டன் என்னும் பெயரை சேர்த்துக்கொண்டார் ஜார்ஜ் கார்வர்.  இப்போது ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என அறியப்படுகிறார். இருவருமே டஸ்கெகீ பல்கலை வளாகத்தில் அடுத்தடுத்த இடங்களில் அடக்கம் செய்யப்பட்டனர்.  

 நிலக்ககடலை  மனிதரென்று அன்புடன் அழைக்கபட்ட கார்வர் மண் வளமே மக்கள் வளமென்று உறுதியாக நம்பினார்.     

மோஸஸ் கார்வரின்  பண்ணை இப்போது அரசுடைமையாக்கப்பட்டு ஜார்ஜ் கார்வர் நினைவுப்பூங்காவாக பராமரிக்கப்படுகிறது.1947ல்  ஜார்ஜ் கார்வரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு The Peanut Man  எனும் அமெரிக்க திரைப்படம் வெளியானது. இதில் கார்வராக  நடித்த Clarence Muse இந்த 45 நிமிட திரைப்படத்திற்காக ’சர்வதேச  இனங்களுக்கிடையிலான ஒற்றுமை விருது’ பெற்றார்

ஜார்ஜ் பிறந்த தேதி எங்கும் ஆவணப்படுத்தப்படவில்லை எனினும் 1864 ஜூன் மாதமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஜார்ஜின் தாய் மற்றும் சகோதரியைக் குறித்த தகவல்கள்  கடைசி வரை கிடைக்கவில்லை. 

13 வயதில் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டு, கல்வி கற்கையிலும் பணிபுரிகையிலும் இனக்காழ்ப்புக்குத் தொடர்ந்து ஆளானவர். குடும்பம் எனும் அமைப்பே இல்லாதவர், ஆனால் அமெரிக்க அதிபர், மகாத்மா காந்தி, ஹென்றிபோர்டு என்று பல உயர்மட்ட ஆளுமைகளுடன் தொடர்பிலும் நட்பிலும் இருந்த கார்வர் 1930 ல் தனது நண்பருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ’’இயற்கையோடு நாம் தொடர்பிலிருக்கவென்றே கடவுள் பல்லாயிரக்கணக்கான தாவரங்களை படைத்திருக்கிறார் ஆனால் நாம் அவற்றை கவனிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்,’’ என்றார். நாம் அந்த திறன் பெற்றிருக்கிறோமா என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய சமயம் இது.

*** 

1. Preemption Act of 1841 

2.  the list truly goes on and on.

3.  the Jesup Wagon.

பரவலாக நம்பப்படுவது போல பீ நட் பட்டர் எனப்படும் கடலை விழுது கார்வரால் உருவாக்கப்படவில்லை இன்கா பழங்குடியினர் அதை கிமு  950 லேயெ கண்டுபிடித்திருந்தனர்.,அதன் மேம்பட்ட வடிவத்தை 1895ல் ஜான் ஹார்விகெல்லாக் (Dr. John Harvey Kellogg,) கண்டறிந்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.