எலும்புக்குள் குடிகொண்டிருக்கும் அசுரன்- மல்லிகார்ஜுன் மன்சூர்

ஆபீஸ் கிளம்புவதற்கு என் மாருதி 800 காரை ஆன் செய்து காசெட் ப்ளேயரில் ஒரு காசேட்டை நுழைத்தேன். கார் கிளம்பிய ஒரு சில நொடிகளில் கம்மலான குரலில் ஒருவர் ஹிந்துஸ்தானி இசை பாட ஆரம்பித்தார். அவர் பாடிய முதல் வரி, கடற்கரை ஓரமாக நடப்பவன் முகத்தில் கல்லில் பட்டு எழும்பிய அலை அடித்தது போல் இருந்தது. அதிர்ச்சி, பரவசம், ஆச்சரியம், புத்துணர்ச்சி என்று பலவித கலவையான உணர்ச்சிகள் என் மனதில் ஒரே சமயத்தில் குடிகொண்டன. கௌட் மல்ஹார் என்ற ராகத்தில், ‘மான் ந கரியே’ என்ற கயாலை பாடிக்கொண்டிருந்தவர் மல்லிகார்ஜுன் மன்சூர். பெங்களூரில் ஒரு இதமான குளிர் படர்ந்திருக்கும் காலை பொழுதில் இப்படித்தான் மல்லிகார்ஜுன் மன்சூர் எனக்கு பரிச்சயமானார்.

ஹிந்துஸ்தானி இசை எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாத காலம் அது. அதுவரையில் நான் சினிமா இசை மற்றும், கர்நாடக இசையில் நாட்டம் கொண்டிருந்தேன். 1998 காலகட்டம் இது. அப்பொழுது நான் பெங்களூரில் ஒரு அலுவலகத்தில் சேர சென்னையை விட்டு குடிபெயர்ந்திருந்தேன். இந்த அலுவலகத்தில் இணைய தொடர்பு முதல் முறையாகக் கிடைத்தது. அதன் விளைவாக RMIC என்று பெயருள்ள ஒரு இணைய குழுவில் சேர்ந்தேன். இது இந்திய செவ்வியல் இசையைக்குறித்து விவாதிப்பதற்காக உருவாக்கப்பட்ட குழு. ஆனால் இதில் ஹிந்துஸ்தானி இசைப்பற்றி தான் அதிகம் விவாதிக்கப்பட்டது. அப்பொழுதுதான் ஹிந்துஸ்தானி இசையின் பால் எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்ப்பட்டது.

“நான் மன்சூரின் பாட்டை பல முறை கேட்டிருக்கிறேன். ஆனால் ஏனோ அவர் பாட்டு மட்டும் எனக்கு பிடிப்பதில்லை. எனக்கு பல பாடகர்களை பிடிக்கும் ஆனால் மன்சூரின் பாட்டை என்னால் ரசிக்க முடியவில்லை”. இப்படி சொன்னவர் எழுபது வயது தாண்டிய ஸாம். (அவர் இயற்பெயர் சாமிநாதனாக இருந்திருக்கலாம் ஆனால் கனடாவில் வாசித்த இவர் தன்னை ஸாம் என்று தான் அறிமுகப்படுத்திக்கொண்டார். நான் அவரை பெங்களூரில் வாசித்த அவர் சகோதரி இல்லத்தில் சந்தித்தேன்.) தேர்ந்த இசை ரசிகனான அவர் மன்சூரின் ரசிகனான என்னிடம் இதை சொன்னப்பொழுது எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. யோசித்தப் பார்த்த போது அவர் சொன்னதற்கான காரணங்கள் விளங்க ஆரம்பித்தன.

ஒரு பாடகரின் இசை உங்களை உடனே ஈர்க்கவேண்டும் என்றால் அதற்கு இந்த மூன்றில் ஒன்று தேவை: இனிமையான குரல், கம்பீரமான குரல் அல்லது அவருடைய ஆளுமை (Stage presence). மல்லிகார்ஜுன் மன்சூருக்கு இந்த மூன்றில் ஒன்று கூட இல்லை என்று தான் சொல்லவேண்டும். கம்மலான அவர் குரலை இனிமையான குரல் என்றோ, கம்பீரமான குரல் என்றோ கூற முடியாது. அவர் மேடையில் உட்கார்ந்தால் ஸ்டேஜ் பிரெசென்ஸ் கிடையாது. பலர் கூறுவது போல் அவர் மேடையில் ஒரு சராசரி அரசு ஊழியர் போல் தோற்றமளித்தார். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் வெகு எளிமையாக இருப்பார். இதனாலோ என்னவோ சிலருக்கு அவர் பாட்டு பிடிக்காமல் போயிருக்கிறது. அது அவர்களின் துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

இப்பொழுது எண்ணி பார்க்கும்பொழுது நான் சரியான தருணத்தில் தான் மல்லிகார்ஜுன் மன்சூரின் இசையை கேட்டிருக்கிறேன் என்று எனக்கு தோன்றுகிறது. குரல் வளத்தை கவனிக்காமல் பாடகர் எவ்வாறு ராகத்தை அணுகுகிறார் என்று கவனிக்கத் தொடங்கிய காலமது. அதனால் மன்சூர் என்னை உடனே கவர்ந்தார். இளவயதில் மன்சூரை கேட்டிருந்தால் எனக்கும் ஒரு வேளை பிடிக்காமல் போயிருக்குமோ?

மன்சூர் கௌட் மல்ஹார் ராகத்தில் பாடிய முதல் வரியை கேட்டு நான் அதிர்ந்து போனேன். என்ன ஒரு பாட்டு என்று மனது நினைத்தாலும், இன்னும் அரை மணி நேரத்திற்கு இதே தீவிரத்துடன் இவரால் பாட முடியுமா என்று ஒரு ஐயம் ஏற்பட்டது. நான் சந்தேகப்பட்டிருக்கவேண்டாம். பாட்டில் தீவிரம் கூடியதே தவிர குறையவில்லை. ஒவ்வொரு முறை அவர் ஒரு ஆவர்த்தனம் பாடிமுடிக்கும்போது சபாஷ் என்று என்னை மறந்து கத்திக்கொண்டிருந்தேன். அவர் அந்த கயாலை முடித்தவுடன் ஏதோ அருவியில் குளித்துவிட்டு வெளியே வந்த புத்துணர்ச்சியுடன் அலுவலகத்துக்குள் நுழைந்தேன். 

மல்லிகார்ஜுன் மன்சூர் பாடிய கௌட் மல்ஹார் என்னை ஏன் கவர்ந்தது என்று என்னால் எனக்கே விளக்கிக்கொள்ள முடியவில்லை. சில வருடங்களுக்கு பிறகு, எனக்காவே இவர் எழுதியிருப்பரோ என்று சந்தேகப்படும்படி, இசைப்பிரியரும், இசை விமர்சகருமான ராஜன் பாரிக்கர் ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருந்தார், “We return to maana na kare ri in what is indisputably the greatest performance of Gaud Malhar on record. Mallikarjun Mansur‘s tour de force is manna for the soul. This manner of singing can only come to those in whose bones the daemon of ‘madness’ has taken refuge. This cannot be the handiwork of rational beings.” இதில் வரும் ‘daemon of ‘madness’ ‘ என்னும் பதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எலும்புக்குள் குடிகொண்டிருக்கும் பூதம் என்று அர்த்தம் கொள்ளலாம். ஆம். ஒருவனுக்கு பித்து பிடித்தால் தான் மன்சூரை போல் பாட முடியும். நம் அறிவினால் மட்டுமே தெளிவாக்கிக்கொள்ளமுடியாத பாட்டு அது. 

அடுத்ததாக மன்சூர் பாடி நான் கேட்டு அசந்து போன ராகத்தின் பெயர், ‘ஸாவனி’. இந்த ஒலிப்பதிவு AIR நடத்திய மகாஃபில் ஒன்றில் அவர் பாடியதா தெரியவருகிறது. மகாஃபில் என்றால் ஒரு சிறு தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்திற்கு நடுவில் நடைபெறும் நிகழ்ச்சி. இந்த நிகழிச்சிலும் அவர் ஆரம்பித்த முதல் வரியிலிருந்தே நான் அவர் இசைக்கு கட்டுப்பட்டவனாக இருந்தேன். இந்த ஒலிப்பதிவில் ஒவ்வொரு வரிக்கும் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் ‘வா வா’, ‘வா வா’ எனக் கூறி ரசிப்பதை நீங்கள் கேட்கலாம்.

என் நண்பன் முகுந்துக்கு விடுமுறையில் சிக்கிம் செல்லுமாறு நான் பரிந்துரைத்திருந்தேன். அங்கிருந்து அவன் என்னை தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு, “சுரேஷ், இந்த இடம் அருமையாக இருக்கிறது. இதைவிட அற்புதமான காட்சியை இனி நாம் காணமுடியாது என்று நினைக்கும் தருணத்தில், சாலையில் ஓர் வளைவு வருகிறது. அதை தாண்டியபிறகு இன்னொரு அதி அற்புதமான கட்சி நம் கண் முன் விரிகிறது. இது என்ன மாய லோகம் என்று புரியவில்லை”. மன்சூரின் ஸாவனி ராகம் நமக்கு இதே போல் ஒரு அனுபவம் கொடுக்கும். ஆஹா, ராகத்தை எவ்வளவு அழகாக நமக்கு காட்டிவிட்டார் என்று நாம் நினைக்கும்போது சட்டென்று ஒரு திருப்பம் வரும். ஒரு புது காட்சி நாம் முன் விரியும். அது நாம் எதிர்ப்பார்க்காத திருப்பமாக இருக்கும். நாம் நினைத்து பார்க்கமுடியாத ஒரு உலகத்தை நமக்கு காட்டும். அவர் முன் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பவர்களின் பரவாசத்தை AIRஇல் துல்லியமாக பதிவு செய்திருப்பார்கள். 

அவருக்கு இனிமையான குரல் இல்லை, கம்பீரமான குரல் இல்லை, ஸ்டேஜ் பிரசென்ஸ் இல்லை. இப்படியிருக்க உங்களுக்கு அவர் பாட்டு எப்படி பிடித்தது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அவர் பாட்டில் உள்ள தீவிரம். இன்னொன்று அவர் ராகத்தை நமக்கு காட்டிய விதம். மன்சூர் என்றைக்கும் அவர் பாடலில் அவரை முன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவர் ராகத்தையே முன் நிறுத்தினார். என் குரல் வளத்தை பார், நான் எவ்வளவு உச்சத்தில் இருக்கிறேன் பார் என்று அவர் என்றைக்கும் பாடியது இல்லை. குரலை ராகத்தின் அடிமையாகதான் அவர் பார்த்தார். ஒவ்வொரு பிரயோகமும் ராகத்தை விஸ்தாரபடுத்தி காட்டியதே தவிர அவர் குரல் வளத்தை முன் நிறுத்தவில்லை. இதனால் அவர் குரல் வளம் இல்லை என்று நீங்கள் நினைக்கவேண்டாம். ஸிதார் மேதை ரவிசங்கர், மன்சூரை பற்றி பேசும்போது, “நான் முதல் முறை இவர் பாட்டை கேட்டபோது அசந்துவிட்டேன். ஒரு மூச்சில் இவர் பல ஆவர்தனங்களை கடக்கிறார்” என்று ஆச்சரியப்பட்டார். அவர் குரல் எதையும் பேசும் வல்லமை கொண்டதாக இருந்தது. ஆனால் அவர் அதை எல்லாவற்றையும் பேசவிடாமல் ராகத்தை மட்டும் பேசவைத்தார்.

இளையராஜாவின் ‘திருவாசகம்’ சி‌டி பல முறை கேட்ட பின் என் நண்பனிடம் சொன்னேன், “இளையராஜா நம்மை மாணிக்கவாசகரின் மனதுக்குள் அழைத்து சென்றுவிட்டார். மாணிக்கவாசகர் அந்த வரிகளை பாடும்போது எவ்வளவு பரவசம் அடைந்திருப்பரோ அந்த பரவாசத்தை நமக்கு கொடுக்கிறார். பாடல்களை கேட்க கேட்க இளையராஜா என்பவர் மறைகிறார். திருவாசகமே முன் நிற்கிறது”. ஒரு மகத்தான கலைஞன் கலையின் பேசு பொருளையே முன் நிறுத்துகிறான். மன்சூர் அது போன்ற ஒரு மஹா கலைஞன். அவர் பாடி முடித்தவுடன் முதலில் நாம் சொல்வது, “என்ன ஒரு அற்புதமான ராகம்”. அதில் தான் மன்சூரின் வெற்றி இருக்கிறது. உதாரணமாக ராஜன் பாரிக்கர் மன்சூர் பாடிய பகதூரி தோடி என்ற ராகத்தை பற்றி இப்படி கூறுகிறார், “At the end of it all the raga emerges effulgent.” அதாவது, “கடைசியில் ராகம் மிளிர்கிறது”. அதே போல், மன்சூர் பாடிய அற்புதமான ‘ஷிவ்மத் பைரவ்’ பற்றி எழுதும் பொழுது, “He was the man who reified this raga’. அதாவது ஸ்தூலமாக இருந்த ஒன்றை நிஜமாக்கி காட்டியவர் என்று பொருள்பட கூறியிருக்கிறார். 

அடுத்ததாக அவர் பாட்டில் உள்ள தீவிரம். அவர் பாட்டை ஆங்கிலத்தில் விமர்சிப்பவர்கள், ‘austere’ என்ற வார்த்தை அதிகம் பயன்ப்படுத்துகிறார்கள். இதை தமிழில் எப்படி மொழிப்பெயர்ப்பது என்று எனக்கு குழப்பமமாக இருக்கிறந்து. கடினம், கண்டிப்பு, இறுக்கம் என்று பல வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் எதுவும் மன்சூரின் பாட்டுக்கு பொருந்தும் என்று எனக்கு தோனவில்லை. பாட்டை பொறுத்தவரை மன்சூர் ஒரு ஸ்ட்ரிக்ட் கல்லூரி ஆசிரியர் போல் இருந்தார். பாடத்தை தவிர அவர் எதையும் அனாவசியமாக பேசுவதில்லை. துணுக்குகள் சொல்லி உங்களை மகிழ்விக்கவோ, பாடத்தின் நடுவில் கலகலப்பு கூட்ட ஒரு ஜோக் அடிக்கவோ அவர் பிரயாத்னப்படுவதில்லை. அவர் அன்றைய பாடத்தை நடத்துவத்தில் மட்டும் குறியாக இருக்கிறார். மன்சூர் தன் கச்சேரிகளில் இதை தான் கடைப்பிடித்தார். அவர் ரசிகர்களை கவர வேண்டும் என்று எதையும் செய்ததில்லை. தன் கடமை ராகத்தை விஸ்தார்ப்படுத்திக்காட்டுவது. அதை மட்டுமே ஒரு தீவிரத்துடன் செய்தார். இந்த தீவிரம் கூட சிலரை அவர் பாட்டிலிருந்து விலக்கியிருக்கலாம். மகத்தான கலை என்றால் ரசிகன் அதை உட்கொள்ள உழைக்கவேண்டும். மன்சூரின் பாடலை ரசிக்க நாமும் உழைக்கவேண்டும். ஏனென்றால் ராகம் என்னும் ஹிமாலய மலைத்தொடரின் விஸ்தாரத்தை நமக்கு காட்டிவிடவேண்டும் என்ற தீவிரத்துடன் அவர் ஒவ்வொரு முறையும் பாடுகிறார். நம் கவனம் சற்று சிதறினாலும், அற்புதமான காட்சி ஒன்று நமக்கு கிடைக்காமல் போகும்.

ஹிந்துஸ்தானி இசையில் கயால் என்ற வடிவம் தான் அதிகம் பாடப்படுகிறது. இதில் படா கயால் மாற்று சோட்டா கயால் என்று இரு பிரிவுகள் இருக்கும். படா கயால் என்பது சௌக்க காலத்தில் (மெதுவாகப் பாடுவது) விஸ்தாரமாக பாட வேண்டிய ஒன்று. சோட்டா கயால் என்பது படா கயால் பாடிய பிறகு பாடுவார்கள். இது வேகமாக பாடவேண்டிய ஒன்று. இது வேகமாக பாடுவதால் ஜனரஞ்சகமாக இருக்கும். எளிதில் கைத்தட்டலை பெற்றுக்கொடுக்கும். ஜெய்பூர் கரானாவில் வந்த பல பாடகர்கள் சோட்டா கயால் அதிகம் கையாளுவதில்லை. கேசர்பாய், மன்சூர் போன்றவர்கள் சோட்டா கயால் அதிகம் பாடியதில்லை. இதனால் கூட அவர்கள் பாட்டு தீவிரமான பாட்டு என்று எண்ணுபவர்கள் இருக்கலாம்.    

மன்சூர் ஒவ்வொரு ராகத்தையும் அதன் தன்மை உணர்த்து அணுகுகிறார். அவர் பாடிய ஷிவ்மத் பைரவ், தேஸ்கார், யமன், பட்பிஹாக், ராம்தாஸி மல்ஹார், கட், பீம்ப்லாஸ் போன்ற ராகங்களை கேட்டால் புரிந்துக்கொள்ளலாம். அந்தந்த ராகத்துடைய ஆன்மாவை பொறுத்து அந்த ராகங்களை அணுகுவார். ஷிவ்மத் பைரவ் பாடும் பொழுது அதில் அற்புதமான மீண்ட் ஒலிக்கும். (மீண்ட் என்பதை கர்நாடக இசையில் ஜாரு என்கிறோம். இது ஹிந்துஸ்தானி இசையில் அதிகமாக கையாளப்படுகிறது. ஒரு ஸ்வரத்திலிருந்து இன்னோரு ஸ்வரத்திற்கு வரும்போது நடுவில் உள்ள ஸ்வரங்களை தொட்டுக்கொண்டு வரும் ஒரு உத்தி இது) ஷிவ்மத் பைரவ் ராகத்தில் மன்சூர் பாடிய ‘பிரதம அல்லாஹ்’ என்னும் கயாலில் ‘அல்லாஹ்’ என்னும் இடத்தில் அவர் பஞ்சமத்திலிருது ஷட்ஜத்திற்கு வரும் பொது வரும் அந்த மீண்ட் அதி அற்புதமாக இருக்கும். இதை பற்றி எழுதும் ராஜன் பாரிக்கர் இவ்வாறு கூறுகிறார்,

“The huge meend from P back to S spanning the P->M->G->r->S locus betrays an unusually developed musical intelligence”.  

ராகதிற்கு ஏற்ப பல உத்திகளை கையாண்டு அந்த ராகத்தை மிளிர வைக்கிறார்.

கர்நாடக சங்கீததில் மூழ்கியிருந்த என்னை மன்சூரின் பாட்டு ஈர்த்த காரணம் அவர் பாடும் காலப்ரமாணம் ஒரு காரணமாக இருக்கலாம். கிட்டதட்ட எல்லா ஹிந்துஸ்தானி பாடகர்களும் படா கயால் மிக விஸ்தாரமாக ஆனால் வெகு நிதானமாக பாடுவார்கள். கர்நாடக இசை ரசிகர்கள், “இவர் பாட்டு பாடுவாரா இல்ல இப்படியே இழுத்து இழுத்து கச்சேரி முடித்துவிடுவாரா?” என்று கிண்டல் செய்வது உண்டு. மன்சூர் தனக்கென்று ஒரு கால பிரமானத்தை நிர்ணயித்துக்கொண்டார். அது மிதமான வேகத்தில் செல்லும் வாகனம் போன்ற ஒரு கால பிரமாணம். ராகத்தை பாட ஆரம்பித்தவுடன் அந்த ராகத்தின் முழு ஸ்வரூபமும் காட்டிவிடுவார். இதுவும் கர்நாடக இசையில் திளைத்திருந்த என் செவிகளுக்கு அமுதமாக இருந்தது.

மன்சூர் ஜெய்பூர் கரானாவை சேர்ந்தவர். பல அரிய ராகங்களை இந்த கரானவில் கற்ற பாடகர்கள் மட்டுமே பாடுவார்கள். அரிய ராகங்களை வெகு எளிதாக பாடுவதில் புகழ்பெற்றவர் மன்சூர். கட், பகதூரி தோடி, ஷிவ்மத் பைரவ், பஸந்தி கேதார், சம்பூர்ண மால்கௌன்ஸ், கபிரீ பைரவ், பிஹாகடா போன்ற ராகங்களை அற்புதமாக பாடியது மற்றும் அல்லாமல் இது போன்ற அரிய ராகங்களுக்கு எப்படி உயிர் கொடுக்க வேண்டும் என்று எல்லோருக்கும் சொல்லிக்கொடுப்பது போல் பாடிவிட்டு சென்றிருக்கிறார். 

இதை எல்லாவற்றையும் மீறி, மல்லிகார்ஜுன் மன்சூரை எனக்கு பிடித்த காரணம் அவர் தன் ஆன்மாவை தான் பாட்டில் கரைய விடுகிறார். அவர் ஆன்மாக்குள் ராகம் நுழைந்ததா அல்லது ராகத்துக்குள் அவர் ஆன்மா நுழைந்ததா என்று தெரியாத அளவிற்கு இரண்டர கலந்திருக்கும். இப்பொழுது பாடும் பலர் அமோகமான குரல் வலம் கொண்டவர்கள், பல உத்திகளை நேர்த்தியாக கையாள கூடியவர்கள். ஆனால் அவர்கள் பாடும்போது கை தட்ட தோன்றுகிறதே தவிர அந்த பாட்டு நம்மை தூங்கவிடாமல் செய்வதில்லை. ஹிமாலைய பிரதேசத்திற்கு சென்று, குளிர் காற்று நம் முகத்தை வருட எதிரே உயர்த்து நிற்கும் பனிமலையை காண்பதற்கும் அதே பனிமலைகளை டி‌வியில் காண்பதற்குமான வித்தியாசம் இது. 

ஒரு மகத்தான இசை கலைஞனை பற்றி எழுதுவது ஒரு சிக்கலான காரியம். முதலில் அவரின் இசையை எழுத மொழி நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அப்படி இருந்தாலும், எல்லாம் எழுதி முடித்த பிறகும் நாம் எதுவும் எழுதவில்லை என்று தோணும். மன்சூர் போன்ற மேதைகள் தங்கள் ஆன்மாவை இசையில் கலந்ததை எப்படி வார்தைகளால் வர்ணிக்க முடியும்? அதை உணர அவர் பாடலை கேட்கவேண்டும். அது கேட்பதற்கு சங்கீத ஞானம் நமக்கு இறைவன் அருளியிருக்க வேண்டும். மன்சூர் போன்ற பாடகர்கள் மட்டும் சரஸ்வதி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அல்ல. அந்த இசையில் திளைக்கும் நாமும் தான். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.