இயற்கைப் பரிமாற்றம்

தமிழாக்கம்: ஷியாமா

டென்னிஸ் கோர்ட்டுக்கு பின்னால் வளர்ந்திருந்த புல்வெளி சுத்தம் செய்யப்பட்டிருந்தது, வீணாவுக்கு வசதியாக இருந்தது. ஒன்றரை வாரங்களுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு குடி பெயர்ந்ததிலிருந்து, இறக்கைகள் சிதைந்திராத மானார்க் வகை பட்டாம்பூச்சி ஒன்றையும், சுண்டெலியின் பாதி மண்டை ஓட்டையும் அவள் கண்டெடுத்திருந்தாள்.

இன்று, அவளுக்கு அதிர்ஷ்டம் குறைவுதான்.

கைப்பிடியளவு பச்சை நிற கொப்பு வைத்த ஏக்கார்ன் கொட்டைகளையும், இரண்டு பைன் கூம்புகளையும் மட்டுமே அவளால் சேகரிக்க முடிந்தது. அவள் புல்வெளியின் நடுவே ஏதோ பளபளப்பதைப் பார்த்தாள். பல வண்ணங்களில் மிளிரும் கிளிஞ்சல். ஃப்ளோரிடா அல்லது கலிஃபோர்னியா கடற்கரைகளில் விடுமுறையைக் கழித்துவிட்டு வந்த ஏதோ ஒரு குழந்தைதான் கண்டிப்பாக இந்தக் கிளிஞ்சலை தவற விட்டிருக்க வேண்டும்.

“ஹாய்”

குரல் கேட்டுத் திரும்பியபோது, தனக்குப் பின்னால், நான்கு வயது கூட ஆகியிராத சிறுவன் ஒருவன் நிற்பதைப் பார்த்தாள். ஒளிரும் பழுப்பு நிறக் கண்கள்.

“நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என அவன் கேட்டான். நீளமான பொன்னிற முடி, கண்களில் விழாமலிருக்க, நீல நிற துவாலைத் துணியாலான நெற்றிப்பட்டையை அவன் அணிந்திருந்தான்.

தட்டையான மார்பகங்கள் கொண்ட பெண்ணொருத்தி அவனருகே நின்றிருந்தாள்.

புருவங்களை உயர்த்தி, அவள் வீணாவிடம் மன்னிப்பு கேட்டாள். ” இவனுக்குப் பேசுவதென்பது மிகவும் பிடிக்கும்,” ஒரே சமயத்தில் மன்னிப்பும், பெருமிதமும் கலந்த புன்னகையோடு அவள் வீணாவிடம் கூறினாள்.

“நான் எதையோ தொலைத்து விட்டேன்,” என்று வீணா அந்தச் சிறுவனிடம் கூறினாள்.

“நான் அதைத் தேடுவதில் உங்களுக்கு உதவ முடியும். எனக்கு நன்றாகத் தேடத் தெரியும்,” என்று அவன் கூறினான்.

சற்று முன் கண்டெடுத்த கிளிஞ்சலை அவனிடம் கொடுத்து விடலாமா என அவள் ஒரு கணம் யோசித்தாள். கிளிஞ்சல் அவளது வலது கைப்பிடிக்குள்தான் இருந்தது. அதன் முனைகள், அவளது உள்ளங்கையை அழுத்திக்கொண்டிருந்தன. இன்னொரு கையால் அவள் தன் இடுப்பைத் தேய்த்துவிட்டுக் கொண்டாள். நகராமல் நிற்கும்போது மட்டுமே இடுப்பில் வலி ஏற்படுகிறது என்பதை அவள் கவனித்தாள்.

“கண்டு பிடித்தவர்களே வைத்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்,” என்று ஒரு குரல் அவளது மண்டைக்குள் ஒலித்தது.

“இல்லை, உன்னால் முடியாது,” என உரக்கக் கூறியபடியே, அவள் மறுபடியும் தன் இடுப்பைத் தடவிக் கொண்டாள். அவள் அப்படிச் செய்வதை அந்தச் சிறுவன் கவனித்தான்.

அவனுடைய அம்மா, அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“நாம் போகலாம். நமது நடைப்பயிற்சியை முடிக்கலாம். இந்தப் பெண்மணியும் அவரது நடைப்பயிற்சியை முடிக்கட்டும்.”

வீணா திரும்பிப் போக முயற்சித்தபோதும், சிறுவன் அவளை விடவில்லை.

“நீங்கள் எதைத் தொலைத்தீர்கள்?”


அவளுடைய பிரத்தியேகமான படுக்கையறை கதவுக் குமிழில் தொங்கிக்கொண்டிருந்த தோள் பையில், அவள் அன்றைய காலை வேட்டையில் கண்டெடுத்த பொருட்களை வைத்தாள். தோள் பையில் அவளது மகன் நீல் கண்டெடுத்த பொருட்களின் கணிசமான

ஒரு பகுதியும் இருந்தன. மற்றவை அவளுடைய பெட்டிகளில் இருந்தன. அவளும் மிஷலும் பிரிவதற்கு முன்பு, அந்தப் பை அவர்களுடைய படுக்கை அறையின் கதவுக்குமிழில் தொங்கிக் கொண்டிருக்கும். அதன் கனத்தில், ஒருநாள், கதவுக்குமிழ் உடைந்து கையோடு வந்துவிடப் போகிறது என்று மிஷல் அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பான். ஆனால் அப்பையை அங்கிருந்து அகற்றும்படி அவளிடம் ஒருபோதும் சொன்னதில்லை.

அவர்கள் கடைசியாக, நீல் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, அவனை இயற்கை மையத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு. அப்போது அவனுக்கு ஏழு வயது. இயற்கை மையத்தின் வாயிலுக்கருகே இருந்த ஒரு பெரிய ஒற்றை அறையில்தான் அப்போது அந்த இயற்கைப் பரிமாற்ற மையம் இயங்கி வந்தது. குழந்தைகள், தாங்கள் கண்டெடுத்த இயற்கைப் பொருட்களைக் கொடுத்துவிட்டு, அவற்றைப் பெரிய பரிசுகளைப் பெற உதவும் ஊக்கப் புள்ளிகளாக மாற்றிக்கொள்ளவோ அல்லது வேறு பொருட்களைப் பண்டமாற்று முறையில் பெற்றுச் செல்லவோ முடியும். எல்லாமே இயற்கையிடமிருந்துதான். அலமாரியில் நேர்த்தியாக அடுக்கப்பட்ட தொட்டிகளும் இழுப்பறைகளும் இருக்கும். உலர்ந்த தாமரைக் காய்கள், பதக்கம் போன்று தட்டையான வடிவத்தில் ஒற்றைக்கண் கொண்ட, பாடம் செய்து வைக்கப்பட்டிருந்த நீர் வாழ் உயிர்கள், ஒட்டிக்கொள்ளும் கடல் பாசி, கடல் தாவரங்கள், கொக்கி வடிவ முட்கள் நிறைந்திருப்பதால், “பிசாசின் நகங்கள்” என அழைக்கப்படும் முட்செடிகள், பைன் மரக் கூம்புகள், காகித குளவிக் கூடுகள், பதப்படுத்தப்பட்ட இறந்த பூச்சிகள், பட்டாம் பூச்சிகள், வண்டுகள், வெட்டுக்கிளிகள், கரப்பான் பூச்சி இனத்தை சேர்ந்த சிறு பூச்சிகள் மற்றும் ஈக்கள். பூச்சிகளின் அறிவியல் பெயர் சிறு காகிதத் துண்டுகளில் எழுதப்பட்டு குண்டூசியால் அவற்றின் உடல்களின் நடுவே குத்தப்பட்டிருக்கும். டெர்மா பெட்ரா, முஸ்கா தொமெஸ்டிகா சீலிஃபெரா. சில பொருட்கள் உள்ளூர் சரக்கு. மற்றவை நிச்சயமாக மொத்த வியாபாரிகளிடமிருந்து அதிக அளவில் தருவிக்கப்பட்டவை.

ஒவ்வொன்றுக்கும் ஊக்கப் புள்ளிகளைக் கொண்டு மாற்றிக் கொள்ளக்கூடிய விலை இருந்தது.

சிப்பிகள், கிளிஞ்சல்கள், நத்தை ஓடுகள் போன்ற சாதாரண சிறிய பொருட்களின் விலை இருபது ஊக்கப் புள்ளிகள். சுறாமீனின் கண் போன்ற வடிவம் கொண்ட கிளிஞ்சல்களுக்கு இருபத்தி ஐந்து புள்ளிகள். பெரிய மற்றும் வித்தியாசமான கிளிஞ்சல்களின் விலை, இருநூறு வரை கூட இருக்கும். ஒரு நேரத்தில் ஒன்று மட்டுமே பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் பெரிய சங்கின் விலை ஆயிரம். மெருகேற்றப்பட்ட சிறிய கற்கள் ஐம்பது. உட்புறம் வெற்றிடம் கொண்ட சிறு கனிம அல்லது சுண்ணாம்பு வடிவங்கள், ஐநூறு. இவற்றில் நடுத்தர வகை இரண்டாயிரமும், பெரியது நாலாயிரமும். அறையின் பிற்புறச் சுவரை ஒட்டியிருந்த அலமாரியின் மேல் தட்டில் காட்டெருமைக் கொம்புகள் வைக்கப்பட்டிருந்தன. ஏழடி உயரம் கொண்ட மனிதர்களாலோ அல்லது படி ஏணியை உபயோகித்தோதான் அவற்றை தொட முடியும். அதன் விலை பத்தாயிரம் புள்ளிகள். ஒவ்வொரு புறமும் நான்கு கிளைகளும் கூர்முனைகளும் கொண்ட அவை, மெருகேற்றப்பட்டு பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. வேட்டையாடுவதில் விருப்பமுள்ள ஒரு குடும்பத்தின் அன்பளிப்பு.

நீல், அந்த கடைசி ஞாயிறன்று இயற்கை மையத்துக்கு சென்றபோது, மேஜையின் பின்புறம் நின்றுகொண்டிருந்த முடி நரைத்த பெண்மணி, “ஆ! காட்டெருமைக் கொம்பை கைப்பற்றக் காத்திருக்கும் இளைஞன்,” என்று கூறி அவனை வரவேற்றார். அவர் பெயர் ரோஸ்மேரி.

அவர் மிஷலையும் வீணாவையும் பார்த்து, ” எனக்கு இவனை மிகவும் பிடிக்கும்,” என்றார். ராஸ்ப்பெர்ரி பழ நிறத்தில் சாயம் பூசப்பட்டிருந்த அவரது உதடுகள் வேண்டுமென்றே அசைந்தன. அவர் கடற்சிப்பி படம் போட்ட சட்டையை அணிந்திருந்தார். அந்த மையத்தில் வேலை செய்கிற மற்ற பணியாளர்களைப் போலவேதான் அவரும். பொறுமை நிறைந்த வயதானவர், இயற்கையின் மீது காதலும், அக் காதலை அடுத்த தலைமுறையிடம் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமும் கொண்டவர். அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் எப்போதும் மையத்தில் காணக் கிடைப்பார். அவர் அணிகிற சட்டைகள் எல்லாவற்றையும் வீணா அறிந்திருந்தாள் – கிரகங்களின் படம் போட்டது, டைனோசர் படம் போட்டது, சிற்றுயிர்களின் படம் போட்டது, சவானா சதுப்பு நிலத்தின் பாலூட்டிகளின் படம் போட்டது – இப்படி அவர் அணியும் எல்லாச் சட்டைகளையும் வீணா அறிவாள்.

நீல் ஒவ்வொரு அலமாரியாக நகர்ந்து, அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த எல்லா பொருட்களையும் நோட்டமிட்டான். இழுப்பறையைத் திறந்து, கூர்மையான பைன் கூம்பின் ஓரங்களைத் தன் சிறு விரல்களால் தடவினான். பதக்கம் போன்று தட்டையான வடிவத்தில் ஒற்றைக்கண் கொண்ட, பாடம் செய்து வைக்கப்பட்டிருந்த நீர் வாழ் உயிரின் வாய்க்குள்ளே எட்டிப் பார்த்தான். கண்களின் மீது விழும் முடியை வாயால் ஊதி விலக்கினான். முடி வெட்டிக்கொள்ள அவனை அழைத்துச் செல்ல வேண்டும்.

பிறகு திடீரென, வார்த்தைகள் ஏதும் இன்றி, எப்பொழுதும் போலவே,தன் வேலை முடிந்து விட்டதை அறிவிக்கும் வகையில், அவன் திருப்திப் பெருமூச்சு விட்டான். தன்னுடைய கேன்வாஸ் பையை ரோஸ்மேரிக்கருகே கொண்டு சென்று, மிகவும் கவனமாக, பண்டமாற்று செய்வதற்காகக் கொண்டு வந்திருந்த மூன்று பாறைக் கற்களை மேஜையின் மீது சீரான இடைவெளி விட்டு நேர்த்தியாக அடுக்கினான். ஒரு நாளில் மூன்று பொருட்களை மட்டுமே பண்டமாற்று செய்து கொள்ள முடியும்.

பளபளப்பான, மிக மெல்லிய தகடு போன்ற முனைகள் கொண்ட பாறையை ரோஸ்மேரி கையில் எடுப்பதை அவன் பார்த்தான்.

“இதைப் பற்றிச் சொல்” என்றார் அவர்.

நீல் தன் பையிலிருந்து சிறிய நோட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்து, தனக்கு வேண்டிய தகவல்கள் நிறைந்த பக்கம் வரும்வரை, பக்கங்களைத் திருப்பிக் கொண்டிருந்தான். நோட்டுப் புத்தகத்தில் மிகக்குறைவாகவே எழுதப்பட்டிருந்தது. சிறிய படங்களும் ஒன்றிரண்டு வார்த்தைகளும் மட்டுமே. ஆனால் அவனது வாய்மொழி விளக்கங்கள் மிகவும் கச்சிதமாக இருந்தன.

“டோபி கொடுத்த பரிசு. அவனுடைய பாட்டி வீட்டின் பின்புறக் கொல்லையிலிருந்து கண்டெடுத்தது. மைக்கா நிறைந்தது. எரியும் தன்மை கொண்டது.”

“நீ சொல்வது சரிதான் என நினைக்கிறேன்,” ரோஸ்மேரி தலையசைத்தார்.

ரோஸ்மேரி அந்தக் கல்லை வேறு இடத்தில் மாற்றி வைத்தபோது, நீல் அதை திரும்பவும் தான் வைத்த இடத்திலேயே வைத்தான்.

“சாரி” ரோஸ்மேரி மன்னிப்பு கேட்டார். அவர் குரலில் இருந்த கனிவை வீணாவால் கேட்க முடிந்தது. ரோஸ்மேரி நீலைப் புரிந்து கொண்டிருந்தார். பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ரோஸ்மேரி வேறொரு கல்லை எடுத்து, “இது?” என்றார்.

“போன வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு, என் வீட்டுக் கொல்லைப்புறத்தில் கண்டெடுத்தது. புதைபடிவக் கடல் ஓடு. சீமைச் சுண்ணாம்பு வகையைச் சார்ந்தது.”

“இது அச்சு தானே?” என்றார்.

“நிச்சயமாக. வார்ப்பு இல்லை” என நீல் சொன்னான்.

ரோஸ்மேரி மேஜையின் மீது குனிந்து கொண்டார்.

புதைபடிவக் கடல் ஓட்டை இன்னமும் கையில் பிடித்தபடியே ரோஸ் மேரி, மூன்றாவது கல்லைச் சுட்டிக்காட்டினார்.

“பப்ளிக்ஸின் வண்டி நிறுத்தும் இடத்தில், அம்மா வீட்டுச் சாமான்களை வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்கையில் கண்டெடுத்தது.” சாதாரண சரளைக்கல் தான். ஆனால் நீலத் திமிங்கலத்தைப் போன்ற உருவம் கொண்டது.

“அதிசயம் என்பது சிறு சரளைக் கல்லைப்போல போல சாதாரணமாகவும் இருக்கக்கூடும்,” என்றார் ரோஸ்மேரி.

ரோஸ்மேரியைப் பொருத்தவரை இந்த கேள்விகள் நடைமுறை நெறிப்படி கேட்கப்பட வேண்டியவை. தம்மைச் சுற்றியுள்ள இயற்கை உலகத்தை குழந்தைகள், ஆர்வத்துடனும், பிற உயிர்களின் மீது மதிப்புடனும் கூர்ந்து கவனிக்கும் அதே சமயத்தில் அம்முயற்சிகளில், மகிழ்ச்சிக்கும் கேளிக்கைகளுக்கும் இடமிருக்க வேண்டும் என்பதே மையத்தின் முக்கிய குறிக்கோள். தங்கள் தேடலில் அவர்கள் உயிரோடு இருக்கும் எதையும் தொந்தரவு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், இவ்வாறு கேள்விகள் கேட்பது ரோஸ்மேரிக்கு அவசியமாக இருந்தது.

“இன்று எல்லாமே உயிரற்றவை, இல்லையா நீல்?”

மிகச்சாதாரணக் கேள்வி தான். ஆனால் நீலின் பதில் பெரியதாக இருந்தது. அவன் உயிரற்ற பொருட்களின் அறிவியல் வரையறையை விளக்கினான்: தானாக வளர முடியாதவை, நகர முடியாத அல்லது மூச்சுவிட முடியாதவை. உயிருள்ளவற்றுக்கு உணவும் நீரும் தேவைப்படும். அவை கழிவுப் பொருட்களையும் வெளியேற்றும்.

நீல் பேசிக்கொண்டிருக்கும்போது ரோஸ்மேரியின் கண்கள் அவனைப் பார்க்கவில்லை. அதில் கேலிச் சிரிப்பில்லை. மாறாக நீலின் புத்திசாலித்தனத்தை அங்கீகரிப்பதுபோல அவர் வீணாவைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“எனவே உயிரற்றவைகளும் உயிருள்ளவை தான். ஏனென்றால், ஒரு காலத்தில் அவை உயிருடன் இருந்தன,” என நீல் தன் விளக்கத்தை முடித்தான்.

‘மிகச் சரி. இப்போது நாம் உன் பொருட்களின் மதிப்பை கணிக்கலாமா?”

ரோஸ்மேரி பொருட்களின் மதிப்பை கணித்துக் கொண்டிருக்கும் போது, அவரது வேலையை மேற்பார்வை செய்பவன் போல, நீல் மேஜைக்கருகே சென்று நின்று கொண்டான். தனிமனித வெளி எனும் கருத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை என அவனது பள்ளி ஆலோசகர் கருதினார். அதைப் புரியவைக்க அவர் அவனுக்கு உதவியும் செய்துகொண்டிருந்தார்.

” பின்னால் நகர்ந்து கொள்,” என வீணா நீலிடம் சொன்னாள். அவனது சூடான மூச்சு, அவரது கழுத்தில் விழும் அளவுக்கு, நீல் ரோஸ்மேரிக்கருகே நின்று கொண்டிருந்தான்.

” இருக்கட்டும். பரவாயில்லை,” என்றார் ரோஸ்மேரி.

நீல், தான் சேகரித்து வைத்திருந்த ஊக்கப்புள்ளிகளை சற்றே பெரிய பதக்க வடிவ நீருருவுக்கும், பட்டு போன்ற மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தில், மெருகேற்றப்பட்ட புலிக்கண்ணிற்கும், பிறைச் சந்திர வடிவ வெள்ளை நிற நரிப் பல்லுக்கும் செலவழித்தான். அதிகம் செலவழித்து விடக்கூடாது என்பதில் அவன் எப்போதும் கவனமாக இருந்தான்.

“என்னுடைய தற்போதைய மொத்தக் கூட்டுத்தொகை என்ன?” என அவன் கேட்டான்.

“இன்று நீ வாங்கிய பொருட்களுக்கான விலையை கழித்த பிறகு, உன்னுடைய தற்போதைய ஊக்கப் புள்ளிகளின் கூட்டுத்தொகை மூயிரத்து நானூற்று தொண்ணுத்தி எட்டு,” என்றார் ரோஸ்மேரி.

” கவலையில்லை. இன்னும் நிறைய மீதம் இருக்கிறது,” என்றான் அவன்.

இயற்கை மையத்துக்கு சென்றபிறகு வீணாவும், மிஷலும், நீலும் நகரின் வடக்கு மூலையில் இருந்த ராஸ்வெலில் வசிக்கும் வீணாவின் பெற்றோரைச் சந்தித்து வர எண்ணியிருந்தனர். ஆனால், முதலில் அவர்கள் காலை உணவருந்த “டாக்கோ பிளானெட் ” டிற்கு சென்று, மூவரும, தங்களுக்கென தனித்தனியாக மிகாஸ் டாக்கோஸை ஆர்டர் செய்தனர்.

“அம்மம்மா – தாத்தா வீட்டிற்கு இன்றே தான் போகவேண்டுமா? நான் இன்று டோபியுடன் விளையாட எண்ணியிருந்தேன்,” என்றான் நீல்.

“நீ டோபியுடன் நாளைக்கு விளையாடிக் கொள்ளலாம். நான் என் தாத்தா பாட்டியை ஒரு சில முறைகளே பார்த்திருக்கிறேன் தெரியுமா? நாங்கள் அடிக்கடி இந்தியா போனதில்லை,” என்றாள் வீணா.

“தெரியும்,” என்றான் நீல். மிஷல் அவனது முதுகில் தட்டினான்.

“தாத்தா பாட்டியின் வீட்டருகிலேயே வசிக்க நீ அதிர்ஷ்டம் செய்திருக்கிறாய்!” என்றாள் வீணா.

“மிகவும் அதிர்ஷ்டக்காரன் ” என்று கூறியபடியே நீல் கண்களை மேல்நோக்கி உருட்டினான். சமீபகாலமாக, அவன் இப்படிச் செய்ய ஆரம்பித்திருக்கிறான்.


குளியலறை தூவாலைக் குழாயிலிருந்து சுடுநீர் வீணாவின் உடல் மீது விழ ஆரம்பித்தது. வீணா நீரை மேலும் சூடாக்கிக் கொண்டு, தூவாலைக்குழாயின் சுடு நீர் முதுகை கன்றச்செய்து காயமேற்படுத்த அனுமதித்தாள்.

அவள் இன்று இயற்கை மையத்துக்கு போக வேண்டுமென நினைத்தாள். ஒரு நாளைக்கு மூன்று பொருட்களை மட்டுமே பண்டமாற்று செய்ய முடியும் என்கிற சட்டம், அவளை அங்கு அடிக்கடி போக வைத்தது. மிஷலும் ஒத்துழைத்து அவனும் நீலின் கணக்கில் மேலும் அதிக புள்ளிகளை சேர்க்க முயற்சி செய்தானெனில், வேலை மிகவும் எளிதாகி விடும். ஆனால் அவன் உதவ மாட்டான்.

தான் புதிதாகக் குடி போகப் போகிற வீட்டின் முகவரியையும், அது இயற்கை மையத்திற்கு எவ்வளவு அருகே இருக்கிறது என்றும் வீணா மிஷலிடம் கூறியபோது, அவன், “நீ எல்லாவற்றையும் சற்றே நிறுத்திவிட வேண்டும்,” என்றான்.

நீல் இறந்த முதல் இரண்டு மாதங்களில், நீலின் உடல், எமரி பல்கலைக்கழக மருத்துவ மனையின் பிரேதக் கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த இரவிலிருந்து, அநேகமாக ஒவ்வொரு இரவும், வீணாவும் மிஷலும் உடலுறவு கொண்டார்கள். அவள்தான் அவனை முதலில் அழைத்தாள். குளிர்ந்து கிடந்த போர்வையின் கீழே, கைகளால் அவன் தோள்களைக் கட்டிக்கொண்டு, துக்கம் நிரம்பி இருந்த போதிலும், ஒரு சொட்டு கூட கண்ணீர் விடாமல், அவனது முடியிலும் மணத்திலும் தன்னைத் தொலைத்து விட முடியுமென்று அவள் நம்பினாள். மற்ற எதுவுமே முடியாததாக இருந்தது – நடத்தல், சிரித்தல், சாப்பிடுதல், கடிதங்களைப் படித்தல் – ஆனால் உடலுறவு போதையைப் போலிருந்தது, தாற்காலிகத் துயர் நீக்கி, எவ்வளவு தேவையாக இருந்ததோ, அவ்வளவு அவலமானதாகவும் இருந்தது.

பிறகு, இரண்டு மாதங்கள் கழித்து அது நின்றுபோனது – துயர் நீக்கியும், தேவையும், காமமும். மிஷல் அவளைத் தொட முயற்சிக்கையில், அவள் குதித்துத் தூர விலகினாள். அவன் முத்தமிட வருகையில், அவள் தன்னை இழுத்து விலக்கிக் கொண்டாள். அவனது அண்மை, அவளால் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது.


வீணா, பொருள் விநியோக தொடர் சேவைத் துறையில் வேலை செய்து வருகிறாள். பல வருடங்களாக. இருபத்தி ஒன்பது வயதில் நீல் பிறந்தபோது வேலையை விட்டு விட்டு ஐந்து வருடம் கழித்து நீல் மழலையர் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின், மறுபடியும் அதே வேலையில் சேர்ந்தாள். அவள் வேலை பார்த்த நிறுவனத்தின் மென்பொருள், ஒரு பொருளின் வாழ்க்கையை – பிறப்பிலிருந்து இறப்பு வரை – பின் தொடர்ந்தது. ஆரஞ்சுப்பழம் – மரத்திலிருந்து- சரக்கு வண்டிக்கு – பின் பப்ளிக்ஸுக்கு – அதன் பின் பழுப்பு நிற காகிதப் பை வரை. ஷாம்பூ குப்பி: விநியோகஸ்தரிடமிருந்து- கிடங்குகளுக்கு- நாட்டிலுள்ள எல்லா முடிதிருத்தகங்களுக்கும், அழகு நிலையங்களுக்கும் செல்லும் வரை.

அவளது வேலை, நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைத் திருப்தியாக வைத்திருப்பது, ஆரஞ்சுகளையும், ஷாம்பூ குப்பிகளையும், புத்தகங்களையும், பணப்பைகளையும், மின்கலத்தால் இயங்கும் குட்டிக்கரணம் போடுகிற நாய்களையும், அவள் வேலை செய்யும் நிறுவனத்தின் மென்பொருள், சரிவரக் கண்காணிக்கிறதா என்பதை உறுதி செய்வது. இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அவள் உதவிக்கு வருவாள்.

தனது நிறுவனத்தின் வாடிக்கையாளரான, மிகப்பெரிய சில்லறை வியாபாரத் தொடர் பிரிவின் கார்பரேட் அலுவலகத்தில், அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஆய்வாளர்கள் தாமாகவே செய்து கொள்ளக்கூடிய வேலையை, அவள் செய்து வந்தாள். தொலைவிலிருந்து இயக்கப்படக்கூடிய கார் ஒன்றை ஒமாஹாவுக்கு பதிலாக டஸ்கனில் இருக்கும் கிடங்குக்கு அனுப்பும் வேலைக்கேற்றவாறு, தனது நிறுவனத்தின் மென்பொருளச் சரி செய்ய முயற்சிக்கையில், கண்களை உட்புறமாக உருட்டிக்கொள்வதை அவளால் தவிர்க்க முடியவில்லை. கன்சாஸ் நகரத்துக்கு அனுப்ப வேண்டிய முகக் களிம்பை, இரண்டு மடங்காக கூட்டியும், டேட்டன் நகருக்கு அனுப்பவேண்டிய சரக்கை பாதியாகக் குறைத்தும் அனுப்பிய பிறகு தான், அது வாடிக்கையாளரின் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆய்வாளர்களின் தவறல்ல, மாறாக அவளது நிறுவனத்தின் மென்பொருளின் தவறு தான் என, செயல்முறையின் கடைசிக் கட்டத்தில்தான் அவளால் உணர முடிந்தது.

அவள் வேலையை மதியத்திற்குள் முடித்து விட்டு, தனக்கு உடல்நிலை சரி இல்லை எனவும் மதியம் நடக்கவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்க முடியாது எனவும் தனது அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவித்தாள். பிறகு வீடு திரும்பி, பசியில் வயிறு குழைந்த போதும், சாப்பிட வேண்டாமென முடிவெடுத்து, படுக்கையில் விழுந்தாள். இப்போதெல்லாம் அடிக்கடி மதிய உணவை தவிர்த்து விடுகிறாள். இன்னும் சில மாதங்களில் அவளுக்கு முப்பத்தியெட்டு வயதாகிவிடும். மேலும் அவளது ஜீரண சக்தியும் குறைந்து கொண்டே வருகிறது.

அவள் எழுந்திருக்கும் போதே தலைவலியுடன் எழுந்தாள். ஐப்யுப்ரோஃபென் மாத்திரையை விழுங்கினாள். உடனடியாகக் கிளம்பினால்தான் இயற்கை மையம் மூடுவதற்கு முன் போய்ச் சேரமுடியும். ஜீன்ஸையும் டி-ஷர்ட்டையும் அணிந்துகொண்டு காரை நோக்கிச் சென்றாள்.


இயற்கை மையத்தில் ரோஸ்மேரி அவளை வரவேற்றார்.

வெள்ளைமுடி அவரது தோள்களைத் தழுவியது. அவர் அணிந்திருந்த சட்டை பாலூட்டிகளால் நிறைந்திருந்தது. வீணா சிலவற்றை அடையாளம் கண்டுகொண்டாள். சில அடையாளம் தெரியவில்லை. எல்லா பாலூட்டிகளுமே வயிற்றுப் பையில் குட்டிகளை சுமந்திருக்கின்றன.

“நான் இப்போது பக்கத்திலேயே குடி பெயர்ந்துவிட்டேன். இனி அடிக்கடி வருவேன்” என்றாள் வீணா. மிஷலைப் பற்றியோ, அவர்கள் பிரிந்து விட்டதைப் பற்றியோ, அவள் எதுவும் சொல்லவில்லை. பையிலிருந்து பொருட்களை எடுத்து, ரோஸ் மேரியின் மேஜையின் மீது வைத்தாள். வழக்கம்போல, பார்வையை உயர்த்தி காட்டெருமைக் கொம்பு இருக்கிறதா என உறுதி செய்துகொண்டாள். அவை, ஜொலித்துக் கொண்டு, இன்னமும் அங்கேயேதான் இருந்தன.

“கவலைப்படாதீர்கள். அவை பத்திரமாக இருக்கின்றன” என ரோஸ்மேரி கூறினார். வீணா என்ன கொண்டு வந்திருக்கிறாள் என அவர் பார்த்தார். அபலான் கிளிஞ்சல், சுண்டெலியின் மண்டை ஓடு, இறந்த பட்டாம் பூச்சி.

ரோஸ்மேரி பொருட்களை குறித்து கேள்வி எதுவும் கேட்கவில்லை. அவர் நீலின் கணக்கில் ஊக்கப் புள்ளிகளை குறிக்கிறார். அவை மிகவும் அதிகம் என்பது வீணாவுக்குத் தெரியும். அது ஒரு மௌனப் பரிவர்த்தனை. கருணையால் நிரம்பியதும், விதிகளை மீறிய தும் கூட.

மனதில் மகத்தான நன்றியுணர்வு இருந்தபோதிலும், வீணா ரோஸ்மேரிக்கு நன்றி செலுத்தவில்லை. இருவரில் எவர் மீதும் பழி விழுமாறு, அவள் எவருக்கும் எந்த சிறிய வாய்ப்பையும் கொடுத்து விடக்கூடாது.


“நம்மிடம் தொலைபேசியிலேயே நிலைமையைப் பகிர்ந்து கொள்வது அவ்வளவு சரியாக இருக்குமா?” என்று மிஷல் கேட்டான்.

தொலைபேசி அழைப்பு வந்த பத்து நிமிடத்திலேயே மிஷலும் வீணாவும், சட்டகத்திற்குள் பிணைத்துக் கட்டப்பட்ட கால்களுடன், கண்மூடி, மயங்கிக் கிடந்த நீலுக்கருகே இருந்தார்கள். அவன் சில முறை கொட்டாவி விட்டான். கொட்டாவி விடு கையில், அவனது வாய், குழந்தையின் O வடிவ வாய் போல விரிந்தது. நுரையீரல்கள் காற்றுக்காகத் தவித்தன. உள்ளுக்குள் ஏதோ கொப்பளிப்பது போன்ற மெல்லிய ஓசை கேட்டது. அவ்வளவுதான்.

அவனது பள்ளிப் பை, எப்படியோ மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தது. பைக்குள் அவனது மதிய உணவு பெட்டி இருந்தது. அதில் வீணா காலையில் சாப்பிடத் தந்திருந்த ப்ரௌனி பாதி சாப்பிடப்பட்டிருந்தது. மருத்துவமனை பணியாளர்கள் நீலை கொண்டு செல்லுமுன், அவனது மூடிய கண்களையும், இனி எப்போதுமே வெட்டப்படத் தேவையிராத தலைமுடியையும் பார்த்தவாறே, வீணா, மீதமிருந்த ப்ரௌனியை மென்று தின்றாள். மிஷலுக்குக் கொடுக்கவில்லை.

நீலைக் கொன்றவன் நாற்பத்தியிரண்டு வயதானவன். ஐந்து வயது சிறுவனுக்குத் தகப்பன். ஆறு மாதங்கள் கழித்து, அவன் சிறையில் அடைக்கப்பட்டான். தண்டனை அறிவிக்கப்பட்ட இரவன்று, அளிக்கப்பட்ட தண்டனை போதாதென்று நினைத்ததால் மிஷலும், இனி எப்போதுமே எதுவுமே போதாமல் தான் இருக்குமென்று தெரிந்திருந்ததால் வீணாவும் தூங்கவில்லை.


நாட்களும் வாரங்களும் மாதங்களும் கழிந்தன. வசந்தம் கோடையாக மாறியது.

கோயம்புத்தூரில் நோய்வாய்ப்பட்டிருக்கும் வீணாவின் பாட்டியைப் பார்ப்பதற்காக, அவளது பெற்றோர் இந்தியாவிற்கு சென்றார்கள்.

“நாங்கள் இல்லாத போது, எங்கள் செடிகொடிகளை பார்த்துக் கொள்ள முடியுமா?” என்று வீணாவின் அம்மா அவளிடம் கேட்டார்.

“எனக்குத் தெரியவில்லை” என்று வீணா பதிலளித்தாள். அதுவே உண்மையான பதிலும் கூட.

“வீணா, அம்மம்மா இறந்து கொண்டிருக்கிறார். செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்” என்றார் வீணாவின் அம்மா.

“சரி” என்றாள் வீணா.

“வீணா?”

“என்ன?”

“நாங்கள் ஊரில் இல்லாதபோது நீ உன்னைப் பத்திரமாகப் பார்த்த்துக் கொள்” என்றார். இலையுதிர் காலம் வந்தது. வீணா ஓடிஓடிப் பொருட்களை சேகரித்துக்கொண்டு இயற்கை மையத்துக்கு சென்றாள். மொத்தவிலைக்கடையில் வாங்கிய ஆயத்த உணவுகளையோ அல்லது கடைகளில் தயாரித்து கட்டித் தரப்படும் உணவுகளையோ வாங்கி உண்டாள். இடுப்பு விடாமல் வலித்தது. ஆனால், வலிக்கு அவள் தன்னைப் பழக்கிக் கொண்டாள். 7,438 ஊக்க புள்ளிகள் வரை சேகரிக்க, ரோஸ்மேரி அவளுக்கு உதவினார்.

இயற்கை மையத்துக்கு கொண்டு செல்வதற்காக, வீணா, பொருட்களை இணைய வழியாகவும் தருவிக்கத் தொடங்கினாள். கிளிஞ்சல்கள், சிப்பிகள், ஓநாய் நகங்கள் மற்றும் 24.99 டாலருக்கு நரி முகம் கொண்ட பாலூட்டி வகை விலங்கின் மண்டையோடு போன்றவற்றை வாங்கினாள். ஒரு நாள், தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், அரிசோனாவிலிருந்து, நூற்றியைம்பது டாலருக்கு, மூன்று நடுத்தர, கனிமத்தாலான, படிக அடற்பாறைக் கற்களைத் தருவித்தாள்.

ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஞாயிறன்று அவள் தன் பிறந்த வீட்டுக்கு, அம்மாவின் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும், அம்மா கூறியபடி பட்டுப்போன இலைகளைக் கிள்ளி எறியவும் சென்றாள். “புதிய வளர்ச்சியை ஊக்குவிக்க, பழையதை அகற்றுவது மிக அவசியம்” என அம்மா சொல்லி இருந்தார்.

அம்மா, இந்து முறைப்படி, நீலின் உடல் எரியூட்டப்பட வேண்டும் என விரும்பினார். ஆனால், வீணாவும் மிஷலும், டல்லாஸிலிருந்த மிஷலின் குடும்பக் கல்லறையில், நீலைப் புதைத்தார்கள்.

“பால் பற்கள் இன்னமும் விழுந்திராத குழந்தைகளைத் தான் நாம் புதைப்பது வழக்கம். நீல் வயதுக் குழந்தைகளை எரிக்கத்தான் வேண்டும். அவர்களது உடல்களை நாம் பத்திரப்படுத்துவதில்லை வீணா. அவன் அமைதியாக ஓய்வெடுக்க முடியாது,” என்றார் அம்மா.

அந்த விஷயத்தில் தான் அவளும் அம்மாவும் சண்டையிட்டுக்கொண்டார்கள். இரண்டு வருடங்களாகியும் அவர்களால் அதிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியவில்லை. பால் பற்கள். நீல் என்ன சொல்லியிருப்பான்? ஜீவனுள்ளவை.


“உங்கள் மகன் உங்களோடு வரவில்லையா? அவனுக்கு உடல்நிலை ஏதும் சரியில்லையா?” என அவள் கேட்டாள். ஜவ்வு மிட்டாயை சுவைக்கையில், அவளது தாடைகள் வேகமாக அசைந்தன.

“ஆம்” என்றாள் வீணா.

“என்ன ஆயிற்று?”

“கால் எலும்பு முறிந்துவிட்டது”

“ஏற்கனவே உடல் நிலை சரியில்லை. அத்துடன், எலும்பு முறிவு வேறா? பாவம் குழந்தை!”

வீணா தலையசைத்தபடியே, தான் கொண்டு வந்திருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்தாள். தட்டையான, மெருகேற்றப்பட்ட பாறாங்கல். மிகவும் நீளமான பைன் மரக் கூம்பு மற்றும் மூன்று விரற் கடை பாம்புத் தோல்.

அந்தப் பெண் ஒரு காகித துண்டில் ஏதோ ஒரு எண்ணை எழுதி வீணாவின் கைகளில் கொடுத்தாள்.

“கணினி வேலை செய்யவில்லை. எனவே நான் இதை வேறொரு சமயம் பதிவு செய்துகொள்கிறேன். இருப்பினும் நீங்கள் உங்கள் மகனுடைய பெயரைச் சொல்லி விட்டுச் செல்லுங்கள்” என்றாள்.

“இவ்வளவுதானா? இத்தனை பொருட்களுக்கும் சேர்த்து இருபத்தைந்து ஊக்கப் புள்ளிகள் மட்டும் தானா?” என்றாள் வீணா.

அந்தப் பெண் ஜவ்வு மிட்டாயை குமிழி போல ஊதி அதை தன் நாக்கால் உடைத்தாள். “இப்படித்தான் நாங்கள் கணக்கிடுவோம். நான் வரைமுறை புத்தகத்தின்படி சரியாகத்தான் செய்துள்ளேன்” என்றாள்.

நீலின் பெயரை அந்த துண்டு காகிதத்தில் எழுதி , வீணா அந்தப் பெண்ணிடம் தள்ளினாள்.

“இதுதான் இங்கு கணக்கு வைத்திருப்பவரின் பெயர்”

“அதாவது, உங்கள் மகனின் பெயர் இல்லையா? இங்கிருந்து ஏதாவது கொண்டு செல்ல விரும்புகிறீர்களா? பாவம், உங்கள் மகன் எதையேனும் எதிர்பார்த்து காத்தி ருக்கக்கூடுமல்லவா!”

“அவனுக்கு காட்டெருமைக் கொம்புகள் தான் வேண்டும்”

“பத்தாயிரம் ஊக்கப் புள்ளிகள்”

“தெரியும். அதற்காகத்தான் சேமித்து வருகிறோம்.”

“ஓ! அப்படியா! நல்லது! ஆனால் அதை பெற்றுக் கொள்ள உங்கள் மகன் நேரடியாக வரவேண்டியிருக்கும். காட்டெருமைக் கொம்பு போன்ற பெரிய பரிசுப் பொருளை வழங்குகையில், அதுவே நாங்கள் கடைபிடிக்கும் நியதி” அந்தப் பெண் அதிகார தோரணையில் கூறினாள்.

“இன்னும் சில மாதங்கள் அவன் குணமாக வாய்ப்பில்லை” என்றாள் வீணா.

“தேவையான ஊக்கப் புள்ளிகளை சேகரிக்கவும் உங்களுக்கு பல மாதங்கள் ஆகும் தானே”

“அவன் வர முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.”

“நீங்கள் காட்டெருமைக் கொம்பைத் தான் வாங்கப் போகிறீர்கள் என்று முடிவு செய்துவிட்டீர்களானால், நாங்கள் அதை உங்களுக்காக சில காலம் நிறுத்தி வைத்துக்கொள்ள முடியும்,” அந்தப்பெண் புருவத்தை சுளித்தவாறே கூறினாள்.

“அவன் இறந்து விட்டான். அவன் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன” என்றாள் வீணா.

அந்தப் பெண் ஜவ்வுமிட்டாய் தின்பதை நிறுத்தினாள்.

அவனுடைய கால் எலும்பும் முறிந்திருந்தது. முறிந்த கால் எலும்போடு தான் அவன் இறந்தான்,” ஆரம்பத்திலேயே இத்தோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமோ என யோசித்தவாறே, வீணா கூறினாள்.

அந்தப் பெண், சிப்பிகள் நிரம்பியிருக்கும் ஒரு தொட்டியில் கைவிட்டு எடுத்து வீணாவின் பழுப்பு நிற காகித உறைக்குள் அவற்றை போட ஆரம்பித்தாள்.

“இவற்றை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். என் மேலாளரிடம் நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்றாள் அவள்.


நீல் இறந்தபிறகு, ஆரம்பத்தில், வீணா பல விஷயங்களை முயற்சி செய்து பார்த்தாள். யோகப் பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தாள். பெண் ஓவியர் ஒருவரின் உதவியுடன் தன் வெற்றுடலில், துயரத்தின் வண்ணங்களை வரைந்து கொண்டாள். அந்த ஓவியரும் ஒரு வருடம் முன்பு தான் தன் குழந்தையை இழந்திருந்தார். தளர்வான தரையில் புரள கூடிய ஆடைகளையும், காதில் பெரிய வளையங்களையும் அவர் அணிந்திருந்தார். அவரது தாமிர நிறத் தலைமுடி நீளமாகவும் கட்டற்றும் இருந்தது.

“தம் குழந்தைகள் பெரியவர்களாவதை விரும்பாத தாய்மார்களை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்களை காலத்தில் உறைய வைத்து எப்போதும் தன் பிடியில் இறுக்கிக் கொள்ள விழைபவர்கள்,” அந்த ஓவியர், வீணாவின் தொப்புளிலிருந்து, கீழே முடி வளர்ந்திருந்த மேடு வரை, பச்சை நிறக் கோடொன்றை இழுத்தவாறே கூறினாள்.

“உங்கள் உடலில் பிரசவத் தழும்புகளே இல்லை” என ஓவியர் வீணாவிடம் கூறினார்.

“நான் தினமும் தழும்புகளை அகற்றும் களிம்பை உபயோகப்படுத்தினேன். நான் அதை செய்யாதிருந்திருக்கலாமோவென இப்போது வருந்துகிறேன்” என்றாள் வீணா.

முடிந்த பின், சுவற்றில் பொருத்தப்பட்டி ருந்த ஆளுயர கண்ணாடியில், வீணா தன்னைப் பார்த்துக் கொண்டாள். அது ஒரு மலிவு விலை கண்ணாடி. வீணாவை, உண்மைக்கு மாறாக, ஒல்லியாகக் காட்டியது. அவள் அந்த ஓவியத்தைப் பார்த்தவாறு காய்ந்துபோன வண்ணங்களை தன் விரல்களால் வருடினாள்.அவளது ஞாபகார்த்தத்திற்காக, அந்த ஓவியம் போட்டோ எடுக்கப்பட்டு மறுநாள் தண்ணீரில் அழிக்கப்படும்.

துயரம், ஊதா நிற ஃபாக்ஸ்க்ளவ் மலரைப் போல நீண்டிருந்தது. அதன் சிறு மொட்டுக்கள் உயிருடன் இருந்தபோதிலும், வாடித் தொங்கிக் கொண்டிருந்தன. ஓவியம், சிறு பாறைகளின் கூட்டத்தைப் போல இருந்தது. எரியும் தன்மை கொண்டவை என நீல் சொல்லியிருந்திருப்பான். சிவப்பு நிற டூலிப் மலர்கள். ஒரு சிறிய நீர் ஊற்று. பாறைகளின் மீது இரண்டு பழுப்பு நிற கோடுகள் வரையப்பட்டிருந்தன. தெளிவாகப் புரியாத வகையில், இரண்டு அணில்களும் காட்சியளித்தன. காற்றுவெளியில் மூன்று கோடுகள். பட்டாம் பூச்சிகளோ?

“ஏன் இவ்வளவு மலர்கள்?” வீணா கேட்டாள்.

“துயரம் இன்னமும் உயிருடன் இருக்கிறது” ஓவியர் பதிலளித்தார்.”அது எல்லா இடத்திலும் இருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” ஓவியரின் கண்களில் சோகம் தெரிந்தது.

“ஓவியம் மிகவும் அழகாக இருக்கிறது. இதன் அழகை, ஒரு நொடியேனும், எந்தத் துயருமின்றி நான் அனுபவித்திருக்க முடியாதா என எண்ணுகிறேன்” என்றாள் வீணா.

அன்று மாலை மிஷலுக்கு அந்த ஓவியத்தை காட்டியபோது, அவனைக் குருடாக்க வருபவளைப் போல அவளை பாவித்து, அவளுடைய வெற்றுடலிலிருந்து தன் பார்வையை அகற்றிக் கொண்டான்.

“உனக்கு என்ன செய்யத் தோன்றுகிறதோ அதைச் செய்,” என்றான்.

” உனக்கு துயரமாக இ ல்லையா?” என்று அவள் கேட்டாள். அவன் அவளை நிமிர்ந்து பார்த்தபோது, அவனது கண்கள் நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்தன.”நீ என் துயரத்தை அதிகமாக்குகிறாய்,” என்றான்.

இருவருக்குமே போராளிகளாக மாறுவதிலோ, துப்பாக்கி கலாச்சாரத்தையோ அல்லது பள்ளியில் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளை எதிர்த்து பொதுவெளியில் போராடுவதிலோ அதிக நாட்டம் இல்லை. காலமும், இக்கலாச்சாரத்தை மாற்ற எதையும் செய்துவிடவில்லை. முன்பின் தெரியாத சிலர் அவ்வப்போது அழைத்தார்கள்:

சாண்டி ஹூக்கிலிருந்து ஒரு தந்தை: ரெட் லேக்கிலிருந்து ஒரு பாதிரி: கொலம்பைனிலிருந்து ஒரு தாய், துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிரான இயக்கத்தில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்தார்கள்.

மாறாக, அவர்கள் தாராள மனத்துடன் காசோலைகளை வழங்கினார்கள். “எங்களால் இப்போது செய்ய முடிந்தது இவ்வளவுதான்,” மிஷல் இருவருக்குமாகப் பேசினான்.

நீல் இறந்து ஆறு மாதங்கள் கழிந்து, தண்டனை அறிவிக்கப்பட்டதும், வீணா நீலின் ஆரம்பப் பள்ளியில், ஒரு நீள் இருக்கையை நிறுவினாள. அந்த இருக்கையின் மீது கடற்கரையும், அலைகளும், வானில் பறக்கும் பறவைகளுமாக, கடற்புறக் காட்சி வரையப்பட்டிருந்தது. தாயும் மகனும் இயற்கையின் மீது காதல் கொண்டிருந்தார்கள். கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு வீணா சில காலம் நீர்வாழ் உயிர் காட்சி சாலை ஒன்றில் வேலை செய்ததுண்டு.

நீள் இருக்கை திறப்பு விழா நிகழ்ச்சியில் நீலின் மொத்த வகுப்பும் கலந்து கொண்டது. வகுப்பில் இருபத்தி மூன்று குழந்தைகள் இருந்தார்கள். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு, மிச்சிகனில் இருந்து மாறி வந்த, பழுப்பு நிறத் தலை முடி கொண்ட ஒரு பெண், நீலின் இடத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தாள்.

குழந்தைகள், இருக்கைக்கு அருகே ஒக் மரக்கன்று ஒன்றை நட்டனர். நீலின் வகுப்பாசிரியை திருமதி ஹேக் பார்த், கன்று நடுவதற்கான குழியைத் தோண்ட ஆரம்பித்தார். வகுப்பில் இருந்த ஒவ்வொரு குழந்தையும், குழி தோண்டுவதில் பங்கேற்றார்கள். இரண்டு குழந்தைகள் மரக்கன்றை நட்டதும், மற்ற குழந்தைகள் அனைவரும், ஒருவர் பின் ஒருவராக, கன்றைச் சுற்றி மண்ணை நிரப்பினார்கள். அவர்களுடைய சின்னஞ்சிறு கைகள் வேகமாகவும் ஆர்வத்துடனும் செயல்பட்டன. மிஷல், வியாபாரப் பயணமாக நகரை விட்டு வெளியே போயிருந்தான். வீணா அவனுக்காக நிகழ்ச்சியை ஒத்தி வைக்கவும் தயாராக இருந்தாள்.

“நான் மிக விரைவிலேயே வந்து பார்ப்பேன்” என அவன் உறுதியளித்தான்.

கன்று நட்ட பிறகு திருமதி.ஹேக்பர்த் வீணாவை அணைத்துக்கொண்டார். வகுப்பில் இருந்த குழந்தைகளையும் ஒருவர் பின் ஒருவராக வீணாவை அணைத்துக்கொள்ள அனுப்பினார். டோபி அவளை அணைத்துக்கொள்ள வந்தபோது, வீணா அவனை சற்று நேரம் அதிகமாகவே அணைத்துக் கொண்டு, தன் மகன் விட்டுச்சென்ற நறுமணம், டோபியிடம் இன்னமும் இருக்கிறதா என முகர்ந்து பார்த்தாள். பிறகு ஆசிரியையும் குழந்தைகளும் வரிசையாக வகுப்புக்கு திரும்பினர். வீணா விளையாட்டு மைதானத்தில், அந்த இருக்கையில் சற்று நேரம் தனியாக அமர்ந்து கொண்டிருந்தாள்.

இப்போதும்கூட, மாதம் ஒருமுறை, பள்ளிக்குப் போய் அவள் அந்த இருக்கையில் அமர்நதுவிட்டு வருகிறாள். தன் உடலில் வண்ணம் தீட்டிய ஓவியரையும் அவள் ஒரு முறை அழைத்தாள். ஆனால் அவர் வரவில்லை. மிஷல் ஓரிரு முறை மட்டுமே வந்தான். அதற்குப் பிறகு அவனும் வரவில்லை.

“சிலர் தம் காயங்களை ஆற அனுமதிக்கிறார்கள். சிலர் அதை குத்தி குத்தி ரணமாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள். என்னால் ரணமாக்கிக் கொள்ள முடியாது” என்றான் அவன்.

இந்த மாதம், அவள் நேரம் செலவழித்து, ஈரத் துடைப்பான்களால் இருக்கையின் கால்களையும், உட்காரும் இடத்தையும் சுத்தம் செய்தாள். பிறகு அவள் இருக்கையில் அமர்ந்து கொண்டு காத்திருந்தாள். ஒருவரும் வரவில்லை.


அக்டோபர் மாத ஆரம்பத்தில் வீணா இயற்கை மையத்துக்கு சென்றபோது ஜவ்வு மிட்டாய் தின்று கொண்டிருந்த அதே பெண், அங்கே இருந்தாள்.

“ஹே” அந்தப்பெண் வீணாவை வரவேற்றாள்.

“நான் சில நல்ல பொருட்களை கொண்டு வந்திருக்கிறேன்” வீணா உற்சாகமாகக் கூறினாள். கண் பழுப்பு நிற பையைத் திறந்து, அரிசோனாவிலி ருந்து தருவித்த மூன்று பொருட்களையும் வெளியே எடுத்தாள்.

“நான் உங்களுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் உங்கள் மகனின் கணக்கு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது” என்றாள் அவள்.

“அப்படி என்றால் என்ன அர்த்தம்?”

“இந்தக் கணக்கில் சேகரிக்கப்பட்ட ஊக்கப் புள்ளிகள் உங்கள் மகனுக்கு சொந்தமானவை. ஆனால், அவன் இப்போது இல்லை என்பதால், கணக்கு முடக்கப்பட்டு விட்டது”

அந்தப் பெண் பொய் சொல்கிறாளா என வீணாவால் நிச்சயிக்க முடியவில்லை. அவள், அச்சொற்களை தனக்குத்தானே படித்துக் கொள்வது போலவும், யாரோ அவற்றை தட்டச்சு செய்து அவளிடம் கொடுத்தது போலவும் உணர்ந்தாள்.

“ரோஸ்மேரி எங்கே?”

அந்தப் பெண் நீண்ட பெருமூச்சு விட்டாள். இன்று அவள் ஜவ்வு மிட்டாய் சாப்பிடவில்லை. “எனக்கு இது குறித்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் என்ன செய்யட்டும்? விதிமுறைகளை நான் உண்டாக்கவில்லையே”

“ரோஸ்மேரி எங்கே?”

“அவர் விடுமுறையில் தன் பேரக் குழந்தைகளை பார்க்கப் போயிருக்கிறார். இதற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.”

நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ள இந்தப் பெண்ணுக்கு வயது போதாது.

வீணா, இயற்கை மையக் குடும்பஉறுப்பினர் உரிமையிலிருந்து நீலின் பெயரை அகற்றாமல், தொலைபேசி வாயிலாக, இரண்டு வருடங்களுக்கு புதுப்பித்திருந்தாள்.

“உங்களுக்கு வேறு குழந்தைகள் இருந்தால், இந்த ஊக்கப் புள்ளிகளை நான் அவர்கள் பெயரில் மாற்றித் தரமுடியும்” என்று அந்தப் பெண் சொன்னாள்.

“எனக்கு வேறு குழந்தைகள் இல்லை” என்றாள் வீணா.


ஆனால் மறு நாளே, அவள் வேலைக்குப் போகாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு இயற்கை மையத்துக்குச் சென்றாள். இயற்கை பண்டமாற்று மையத்தைக் கடந்து, நேராக விளக்கக் காட்சிகள் நடக்கும் பொது அறைக்கு சென்று முதல் வரிசையில் அமர்ந்து கொண்டாள். அறை பெரும்பாலும் காலியாக இருந்தாலும், சில குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். இந்த ஆமை விளக்கக்காட்சி உரையை அவள் நீலுடன் பலமுறை பார்த்திருக்கிறாள்.

பிடிக்கப்பட்டுள்ள ஆமையின் பெயர் ஃஃபெலிக்ஸ். காக்கி கால்சட்டையும் டி-சர்ட்டும் அணிந்த, பார்பரா என்னும் பெயர் அட்டையை மார்பில் அணிந்த பெண், ஆழமான மரப்பெட்டியில் இருந்து ஃஃபெலிக்ஸை வெளியே எடுத்தாள். ஆமை கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் நகர்ந்தது.

ஃஃபெலிக்ஸ் க்கு ஃபெலீஸியா என்னும் பெயருடைய, இன்னொரு சிறைப்பிடிக்கப்பட்ட ஆமைத் தோழி இருப்பதாக பார்பரா சொன்னாள். அவர்கள் பத்து வருடங்களாகச் சேர்ந்து இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒன்பது வயது இருக்கக்கூடிய ஒரு குழந்தை, கையைத் தூக்கி, “அவர்களுக்கு குழந்தை இருக்கிறதா” என்று கேட்கிறது.

பார்பரா, ” நல்ல கேள்வி” என்று தலையை அசைத்தாள். குனிந்து, மெதுவாக விலகிச் சென்று கொண்டிருக்கும் ஃபெலிக்ஸை பின்னால் இழுத்தாள்.

“நாங்கள் எவ்வளவுதான் நன்றாக கவனித்துக் கொண்டாலும், சிறைப்பட்டிருக்கும் போது, அவை அதிக அழுத்தத்திற்கு ஆளாகின்றன”என பார்பரா கூறினாள். அவள் தன்னையே பார்ப்பது போல வீணாவுக்கு தோன்றுகிறது.”அதிக அழுத்தம் நிறைந்த சூழலில் இருக்கும் போது, இனப்பெருக்கம் செய்வதென்பது மிகவும் கடினம்.”

சிறுவனின் கை மறுபடியும் மேல்நோக்கி உயர்கிறது.

“அவை சந்தோஷமாக இருக்கின்றனவா?” சிறுவன் கேட்கிறான்.

“அவை சௌகரியமாக இருக்கின்றன,” என பார்பரா பதிலளித்தாள்.


நீலின் மறைவுக்குப் பிறகு, மற்ற குழந்தைகளற்ற தம்பதியர் போல வீணாவுக்கும் மிஷலுக்கும், மாலையில் சீக்கிரமாக வீடு திரும்ப எந்த காரணமும் இருந்திருக்கவில்லை. வேலை முடிந்த பிறகு கிடைக்கக்கூடிய நேரத்தை, நிதானமாக எதையேனும் செய்யவோ, சற்றே ஓய்வெடுக்கவோ, புத்தகம் படிக்கவோ, வீட்டை விட்டு வெளியே சென்று சிறிது நேரம் ஓட்டப் பயிற்சி செய்துவிட்டு வரவோ, அல்லது சற்று நேரம் உறங்கவோ உபயோகிக்க முடிந்தது. மிஷலுக்கு இவற்றிலெல்லாம் ஒருவித நிம்மதி கிடைத்தது. ஆனால் வீணாவுக்கு அப்படியில்லை.

வருடத்தின் சில பகுதிகள், மற்றவற்றை விடக் கொடியனவாக இருந்தன. மிஷலோ வீணாவோ கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களோடு வளரவில்லை – மிஷல் யூத இனத்தைச் சேர்ந்தவன் – அவர்கள் சான்டா குறித்தோ, கிறிஸ்துமஸ் பரிசுகள் குறித்தோ பெரிதாகக் கவலைப்பட்டதில்லை. சொல்லப்போனால், கிறிஸ்மஸ் பண்டிகையை விட, ஹேலோவீனை எதிர் கொள்வதுதான் இப்போது வீணாவுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவை எத்தனை கொடூரமான விடுமுறை நாட்கள்! சாவையும் சவப்பெட்டியையும் சிறுமைப்படுத்திப் புறந்தள்ளி, ரத்தம் கசியும் காயங்களை புதுப்பித்து, கூட்டம் கூட்டமாக உற்சாகத் துள்ளலுடன் வரும் சிறுவர்களை அவள் வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தியதே!

ஒருவேளை, அதனால்தான் மிஷல் ஹேலோவீன் தினத்தன்று காலை, அவளை தொலைபேசியில் அழைத்தானோ? அவள் புது வீட்டிற்கு குடியேறிய பிறகு, கடந்த இரண்டு மாதங்களில் இதுதான் அவனுடைய முதல் அழைப்பு. அவள் அவனை அன்று மாலை வீட்டிற்கு வரும்படி அழைத்தாள். அவன் வர ஒப்புக் கொண்டது அவளுக்கு ஆச்சரியமளித்தது.

அவர்கள் வரவேற்பறையில் அமர்ந்து, குழந்தைகள் வருவதற்காக காத்திருந்தவாறே, கலுவா பானத்தை க்ரீம் சோடாவில் கலந்து, உயரமான கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றிக் குடித்தார்கள். ஜன்னல்கள் திறந்திருந்ததால், வெளியிலிருந்து குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டில், வால்நட் குடும்பத்தைச் சேர்ந்த ஹிக்கோரி மரக்கட்டைகள் எரியும் மணமும் காற்றில் கலந்து, அந்த இரவை ” ட்ரிக் அல்லது ட்ரீட்”டுக்கு மிகப் பொருத்தமானதாக ஆக்கியிருந்தது.

ஆரம்பத்தில் யாருமே கதவை தட்டவில்லை. வீணா பதட்டம் அடைந்தாள். பிறகு டஜன் கணக்கில் குழந்தைகள் வர ஆரம்பித்தனர். சிலர் தங்கள் பெற்றோருடனும் சிலர் நண்பர்களுடன் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட சிறு குழுக்களாக வந்தனர். கோல்டிலாக்ஸ, ஆனி, தன் தலையை தானே பிடித்துக்கொண்ட தலை துண்டிக்கப்பட்ட எறும்பு, வாத்துக்களின் கூட்டம், பென்சில் மற்றும் நாஜி ராணுவத்தைச் சேர்ந்த கொடூரமான ஸ்ட்ராம் ட்ரூப்பர்கள்.

கையிலிருக்கும் மிட்டாய்கள் தீர்ந்து போய், கதவு மணி மறுபடியும் ஒலிக்கையில், வீணா பதறிப் போனாள். மிஷலிடம், கதவைத்திறந்து குழந்தைகளைக் காத்திருக்கும்படி சொல்லச் சொன்னாள். மாடியிலிருந்து நீலின் தோள்ப் பையை எடுத்துக் கொண்டு வந்தாள்.

மாறுவேடம் அணிந்து கதவருகே நிற்கும் குழந்தைகளிடம், நீலின் தோளப் பையை திறந்து காட்டினாள்.முளை விட ஆரம்பித்து, பயங்கரமான தோற்றத்துடன் உருளைக்கிழங்கு, ‘ஸாம்பி ராக்ஸ்டார்’ இசைக் குழுவைச் சேர்ந்த பாடகன், தவறான பக்கத்தில் தழும்பு கொண்ட ஹாரிபாட்டர். அவர்கள் பைக்குள் கைவிட்டு, சிறு பாறாங்கல்லையும், கிளிஞ்சல் களையும், பைன் மரக் கூம்புகளையும் எடுத்தார்கள். உருளைக்கிழங்கு, ‘கூல்’ எனவும் ஹாரிபாட்டர், ‘ஆஸ்சியோ’ எனவும் கூவினார்கள்.

எட்டு மணிக்குப் பிறகு, சிறுவர்கள் வருவது நின்று விடுகிறது. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வர ஆரம்பித்தார்கள். பெரிய குழந்தைகள் தங்கள் மாறுவேடத்திற்கென அதிக கவனம் செலுத்தவில்லை. வீடற்ற அகதி, மஞ்சள் நிற பனியன் அணிந்து கையில் “வாழைப்பழம்” என்று எழுதப்பட்ட காகிதத்தை பிடித்துக் கொண்டிருந்த பெண்,”மாறுவேடத்தில் பெரிதாக ஆர்வம் இல்லை” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பனியன் அணிந்த பையன்.

“இவர்கள் ஹாலோவீன் விளையாடும் வயதைக் கடந்தவர்கள்” என வீணா, தன் பின்னால் கண்ணாடி கிளாசுடன் நிற்கும் மிஷலிடம் கிசுகிசுத்தாள். அவர்களிடம் “உங்களுக்கு கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை” என்றாள். வீணா கதவை மூட முயற்சிக்கையில், மிஷல் அவளை தடுத்து, நீலின் தோள் பையை அவர்களிடம் நீட்டினான்.

“இதிலிருந்து எதையேனும் எடுத்துக் கொள்ளுங்கள்” என அவன் உத்தரவிட்டான்.

அப்பதின்ம வயதினர்கள், பையிலிருந்து, கல்லைப் போல இறுகி இருக்கும் கடல் கண்ணாடித் துண்டொ ன்றையும், கூர்மையான அம்பு முனையையும், துரும்பு நிறத்தில் காய்ந்து இறுகிய தாமரை விதைகளையும் எடுத்தனர்.

“வாழைப்பழப் பெண்” தாமரை விதைகளை தரையில் வீசி எறிந்து, அவற்றை தன்னுடைய மஞ்சள் நிறக் காலணி முனையால் நசுக்கினாள்.

“போகலாம். நமக்கு இங்கே எதுவும் இல்லை.”

ஒரு பையன் அம்பு முனையை புதருக்குள் வீசி எறிந்தான்.

“வினோதமானவர்கள்” என மற்றவன் கூறினான்.

“உங்களுக்குத் தேவையில்லை யெனில் திரும்பக் கொடுத்து விடுங்கள்”என வீணா அவர்களைப் பார்த்து கத்தினாள்.

ஒரு பாறாங்கல் பறந்துவந்து அவளது இடுப்பின் வலிக்கும் பகுதியை பதம் பார்த்தது.

வீணா அவர்களை நோக்கிக் கூச்சலிட்டதும் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். மிஷல், வீணாவை கைத்தாங்கலாக உள்ளே அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தான்.

அவள் மறுப்பேதும் சொல்லவில்லை.

மிஷல் அவளது ஜீனை தளர்த்தி காயம் ஏதும் பட்டிருக்கிறதா என பரிசோதித்தான். சிறிய சிவப்பு நிற காயம். அவன் அதை தொட்டதும் அவள் சிணுங்கினாள்.

அவன் மார்பில் தலை பதித்து இயற்கை மையக் கணக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதை அவனுக்குத் தெரிவித்தாள். காட்டெருமைக் கொம்பை வாங்காமல் இருப்பது அவளை எப்படி பாதிக்கிறது என்றும் விவரித்தாள். தனக்கு வேறு எதுவுமே தேவையில்லை என்றும் கூறி விட்டு அழத்தொடங்கினாள்.

“நான் அந்த காட்டெருமைக் கொம்புகளை உனக்கு வாங்கித் தருகிறேன்” என்று கூறியவாறே, மிஷல், முதலில் வீணாவின் கண்ணிமைகள் மீதும் பிறகு உதட்டிலும் முத்தமிட்டான். ” நான் அதை உனக்கு நிச்சயம் தருவித்து தருகிறேன்” என்று கூறியபடி அவனும் அழ ஆரம்பித்தான்.

“எனக்கு அந்த காட்டெருமைக் கொம்புகள் கண்டிப்பாக வேண்டும். அவை நீலின் காட்டெருமைக் கொம்புகள்.”

“சரி, நான் அதை உனக்கு நிச்சயமாக வாங்கி தருகிறேன்” என்றான் அவன்.

அவனது வார்த்தைகள் அலட்சியமாகக் கூறப்பட்டவை போல இருந்த போதும், அவளுக்கு அது மிகுந்த நம்பிக்கையை அளித்தது.

அவள் தனது கண்ணீரின் உப்புச் சுவையை நக்கியபடியே, கிசுகிசுத்த குரலில் அவனை மாடிக்கு அழைத்தாள்.


அவள் கடைசி முறையாக இயற்கை மையத்துக்கு மிஷலுடன் சென்றாள். அன்று ஞாயிற்றுக்கிழமை. திட்டம் மிஷலுடையதுதான். இயற்கை மையத்துக்குச் சென்று பெரிய தொகை ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக காட்டெருமை கொம்புகளைக் கேட்பது.

“அவர்கள் என்ன கேட்கிறார்களோ, அதை நான் கொடுத்து விடுகிறேன்,” என்றான் அவன்.

வண்டியில் செல்லும் போது ஒருவிதமான சாகச உணர்வும் தேடலும் அவளை நிரப்பியது. ஆனால், மையத்துக்கு சென்றபோது அவர்களால் அந்த காட்டெருமைக் கொம்புகளை காண முடியல்லை. ஜவ்வு மிட்டாய் மெல்லும் பெண் மட்டுமே மேஜைக்கருகே நின்று கொண்டிருந்தாள். வீணாவுக்கு அவள் பெயர் ஞாபகம் இருக்கவில்லை. சென்ற சந்திப்புக்குப் பிறகு, அந்தப் பெண், புதிதாக தன் காதுமடல்களில் துளை செய்து கொண்டிருப்பதை வீணா கவனித்தாள்.

“இந்த வாரம் தான் யாரோ அதை எடுத்துக் கொண்டு சென்றார்கள்” என அந்தப் பெண் கூறினாள்.

“நீ அதைப் பின்னறையில் ஒளித்து வைத்திருக்கிறாய். எனக்கு நிச்சயமாகத் தெரியும்” என வீணா குற்றம்சாட்டினாள்.

அந்தப்பெண் இல்லையென மறுத்தாள்.

வீணா வேகமாக அந்தப் பெண் நின்று கொண்டிருக்கும் மேஜையை கடந்து “பணியாட்களுக்கு மட்டும்” என்று எழுதப்பட்டிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள். ” நீ என்னிடமிருந்து அதை மறைத்து வைத்திருக்கிறாய். நான் நிச்சயமாகக் கண்டுபிடித்துவிடுவேன்” என்றாள் வீணா.

இவ்வளவு அருகில் நெருங்கி விட்டு, இப்படிப் பாதியில் கைவிட்டுச் செல்ல அவளால் எப்படி முடியும்? அவள் தன்னை இரண்டு வீணாக்களாக உணர்ந்தாள். ஒரு பதிப்பு, மற்றதை கட்டுப்படுத்த முடியாமல்.

“ஹே! நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்றாள் அந்தப் பெண். மிஷலிடம் நீங்கள் அவரைத் தடுத்து நிறுத்துங்கள்” என்றாள்.

“வீணா, கண்ணே, சொல்வதைக் கேள்” என்றபடியே மிஷல் அவளைப் பின் தொடர்ந்தான்.

“எனக்கு உதவ முடியுமானால் உதவி செய். இல்லாவிடில் தள்ளி இரு” என்றாள் வீணா.

அந்தப் பெண் தொலைபேசி வாயிலாக யாரையோ உதவிக்கு அழைத்தாள்.

பின் பக்க அறை, அலமாரிகள் நிறைந்த பண்டகசாலை போல காட்சி அளித்தது. வீணா அறையின் முன்னும் பின்னும் நான்கு புறமும் நடந்தாள். இருப்பதிலேயே பெரிய பிளாஸ்டிக் தொட்டி யைத் திறந்து காட்டெருமை கொம்புகள் அதனுள் வைக்கப்பட்டு இருக்கிறதாவெனத் தேடினாள். அவள் மிகவும் வேகமாகச் செயல்பட்டாள். மிஷல் அவளை நெருங்கி தன் கரங்களால் அவளை இறுகப் பற்றிக் கொண்டான். அவள் அவன் பிடியிலிருந்து விலகத் திமிறினாள்.

“நிறுத்து வீணா! நிறுத்து!”

“நான் அதைத் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும்.”

அந்தப் பெண்ணும் இப்போது பின்பக்க அறைக்குள் நுழைந்திருந்தாள். ரோஸ் மேரியும் அங்கே வந்திருந்தார். வீணா, மிஷலின் பிடியிலிருந்து விலக முயற்சிப்பதை நிறுத்தி, ரோஸ்மேரி அணிந்திருக்கும் சட்டையை கவனமாகப் பார்த்தாள். அது ஓக் மர கொட்டைகளான அக்கார்ன்களால் நிறைந்திருந்தது. நீல் அவற்றை வெறுத்தான். மிகவும் அதிகமாக இருப்பதாலும், மிகவும் சுலபமாக கிடைத்து விடுவதாலும் நீல் அவற்றை வெறுத்தான். அவை சுவாரஸ்யமற்றவை.

வீணா மிஷலிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, மறுபடியும் தொட்டிகளை திறந்து பார்க்க ஆரம்பித்தாள். தன் பொறுப்பற்ற தன்மையை கண்டு ஆச்சரியமடைந்த அதேசமயம் தொட்டியில் இருந்த பொருட்களை பெரும் சீற்றத்துடன் தரையில் தூக்கி எறிந்தாள்.

“அவற்றை எங்கே வைத்திருக்கிறாய் என்று சொல்” என அந்தப் பெண்ணை நோக்கி கூச்சலிட்டாள். அவள் ஜவ்வுமிட்டாய் மெல்வதை நிறுத்தியி ருந்தாள். “சொல்” என வீணா மறுபடியும் உறுமினாள்.

ரோஸ்மேரி மெதுவாக நடந்து வந்து, வீணாவுக்கு அருகே, மூக்குகள் உரசிக்கொள்ளும் தூரத்தில் நின்றார். இதுவரைக்கும் வீணா, ரோஸ்மேரி பூசியிருக்கும் நறுமணத்தை முகர்ந்து விட முடிகிற அளவு, இவ்வளவு அருகே நின்றதில்லை. லாவண்டர் நறுமணத்திற்குக் கீழே பழையதாகிப்போன மற்றும் புழுக்க நாற்றம் மறைந்திருந்தது. ரோஸ்மேரி ராஸ்பெர்ரி பழ வண்ணத்தில் உதட்டுச் சாயம் பூசியிருந்தார். அவரது சுவாசத்தில் ஆரஞ்சுப்பழ மணம் அடித்தது. முகவாய்க்கட்டையில் நீளமான வெள்ளை முடி ஒன்று முளைத்திருந்தது.”ஜீவனுள்ளவை” வீணா வால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

“காட்டெருமைக் கொம்புகள் இருக்கின்றன. இங்கே இல்லை என்பதால் அவை எங்கும் இல்லவேயில்லை என்றாகாது” என்றார் ரோஸ்மேரி.

வீணாவால் வெகுநேரம் நிற்க முடியவில்லை. அவள் தரையில் சரிந்து விழுந்து, தன் முட்டிகளை இழுத்து மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு, முன்னும் பின்னும் குலுங்கினாள். சிறு பாறாங்கற்களும், கிளிஞ்சல்களும், பைன் மரக் கூம்புகளும், காட்டெருமைக் கொம்புகளும், இவை அனைத்துமே, ஒரு காலத்தில் உயிரோடிருந்தவற்றுக்குச் சொந்தமானவை. அதைத்தான் ரோஸ்மேரி குறிப்பிட்டார், இல்லையா?

லேசாக தலை சுற்றியது. அவள் தலையை உயர்த்திப் பார்த்தாள். அவர்கள் அவளைப்பற்றி என்ன நினைத்திருக்கக்கூடும் என்று அவளுக்குத் தெரிந்தது. அவர்களுடைய முகங்கள், எல்லோருடைய முகங்களும், இரக்கத்தில் இறுகியிருந்தன. மூத்தவளுக்கு அவளுடைய வலி புரிகிறது: இளையவளோ பயப்படுகிறாள்.மிஷல், நிகழ்காலத்தில் ஜீவனோடு இருக்கிறான். ஆனால் தொடர்ந்து அவளோடு இருக்க வேண்டியிருப்பின், ஒருநாள் இல்லையேல் ஒருநாள், அவன் அழுகிச் சிதைந்து போவான்.

இப்போது தான் இருக்கும் இடத்தில் தொடர்வதைத் தவிர, அவள் முன் வேறு தெரிவுகள் இல்லை. உயிர் வாழ, சாவை அவள் தேர்ந்தெடுக்காதது போல, வாழ்வையும் அவளால் தேர்ந்தெடுக்க முடியாது.

‘ஏன்? ஏன் வேறொருவருக்கு அது கிடைக்க வேண்டும்?”

ஒருவேளை, வேறு எவரேனும் பதில் அளிக்க முற்பட்டால், அவள் அதைக் கேட்காமல் போகக்கூடும். மாறாக, அவளுடைய குரலே அவளிடம் பேசுகிறது. அவளுக்குச் சொந்தமாக இருப்பதில் காட்டெருமைக் கொம்புகளுக்கு எந்த வித எதிர்காலமும் இல்லை. அவை, பூங்காவில் கண்ட பையனின் வீட்டுக்கோ,டோபிக்கோ, மிகுந்த கவனத்துடன் ஊக்க புள்ளிகளை சேகரித்து கர்வத்துடன் அவற்றின் மீது உரிமை கோர வந்த, சுறுசுறுப்பான, ஆர்வமுள்ள, ஜீவனுள்ள ஒரு குழந்தையின் வீட்டு புத்தக அலமாரியை அலங்கரிக்கவோ ஏற்பட்டவை.

மிஷல், கனிவும் பொறுமையும் நிறைந்த குரலில், கைகளை நீட்டி வா என அவளை அழைத்தான். அவர்கள் கைகளை கோர்த்துக்கொண்டு வண்டி நிறுத்தப்பட்டிருக்கும் இடம் வரை சென்றார்கள். அவர்கள் வீடு திரும்பியதும், அவன் உள்ளே வர மாட்டான் என்பதை அவள் நன்கு அறிவாள்.


  • தலைப்பு: Seeking Fortune Elsewhere
  • by Sindya Bhanoo
  • ASIN ‏ : ‎ B095JNQ54R
  • Publisher ‏ : ‎ Catapult (March 8, 2022)
  • Publication date ‏ : ‎ March 8, 2022
  • Language ‏ : ‎ English
  • Print length ‏ : ‎ 241 pages
  • ISBN-13: 9781646220878
  • $26.00

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.