ரா. கிரிதரனின் “ராக மாலிகை”

This entry is part 6 of 48 in the series நூறு நூல்கள்

இசைஞானி இளையராஜாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, ” உங்களுக்கு மிகவும் பிடித்த இசைக்கருவி எது?” அதற்கு அவர் அளித்த பதில், ” மனம் தான் பிரபஞ்சத்தின் மிகச்சிறந்த வாத்தியக்கருவி. மனம் என்ற கருவியை வாசித்து எழுப்பக்கூடிய இசையின் சாத்தியங்களும் ஆச்சரியங்களும் முடிவற்றவை. ஆதலால் மனமே எனக்கு பிடித்த இசைக்கருவி”. எழுத்தாளர் ரா.கிரிதரனின் “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தவுடன் இளையராஜா சொன்ன பதில்தான் நினைவுக்கு வந்தது. இசையால் அல்லது எழுத்தால் மனங்களை டியூன் செய்வது ஒரு வகையென்றால், இசையை எழுத்துக்குள் பிரயோகித்து மனங்களை மீட்டுவது இன்னொரு வகை. எழுத்தாளர் ரா.கிரிதரன் இரண்டாவது வகை. “காற்றோவியம்” மற்றும் “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” போன்ற முதன்மையான படைப்புகளை இசைத்தமிழில் நமக்களித்து, இசையிலக்கியம் என்ற வகைமையின் முன்னோடியென ரா.கிரிதரன் தன்னை பிரகடனம் செய்து விட்டார்.

அவரது சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையும், முதல் கதையுமான “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” இரண்டாம் உலகப்போர் பின்னணியில் ஜெர்மனி வதைமுகாமில் நிகழ்கிறது. சிறையில் சிக்க நேர்ந்த பொதுஜனங்கள், வாழ்வுக்கும் சாவுக்குமிடையே போராடும் அவலங்களை விவரித்தபடி துவங்குகிறது கதை. யுத்தங்கள் உருவாக்கும் அபத்த கணங்களை, மானுடத்தின் இருண்ட பக்கங்களை, கடும்பனியில் உறைகின்ற நம்பிக்கைகளை, கலைந்து போன கனவுகளை, ஓலங்களை, கண்ணீரை காண்பித்தபடி நிதானமாய் நகர்கிறது ஆசிரியரின் எழுத்துகள். வாசிக்கும் நாம்தான் சமநிலை இழக்கிறோம். நம் இதயத்தின் துடிப்பொலி வழக்கமான அதன் தாள-லயத்தை மறந்து, ‘இருள்-ஒளி’ ‘இருள்-ஒளி’ என படபடக்கும் மின்மினியாய் மாறி அலைபாய்கிறது கிரிதரனின் நுண்சித்தரிப்புகளால்.

இப்படியொரு வினோதமான சிறைச்சூழலில் அறிமுகமாகிறார் ஃப்ரெஞ்சு இசைமேதை ஆலிவர் மெஸ்ஸையன். சாகப்போகும் நேரத்தில் இசை அவசியமா என்று சிறையில் சிலர் கூச்சலிட, இசை இல்லாமல் போனால் செத்து விடுவேன் என்று ஆலிவர் கூறுவது நெகிழ்ச்சியான தருணம்.

சிறையில் எழும் எதிர்ப்புகள், சண்டைகள், வாக்குவாதங்களால் நிலைகுலைந்து போகும் ஆலிவர், பின்னர் அவை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு இசையாக வெளிப்படுத்துகிறார். பசியில் அழுகின்ற குழந்தையின் ஒலி, முதுமையின் வலி, இளமையின் இயலாமை, மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மனிதர்களின் மனநிலை என சிறையின் அத்தனை அபத்தங்களும் குழப்பங்களும் நம்பிக்கைகளும் பிணைந்து ஆலிவரின் இசையை முழுமை செய்கிறது.

மேற்கத்திய செவ்வியல் இசையில் எத்தனை வகை வாத்தியங்கள் பங்கேற்கின்றன என்பதை வைத்து ஸோலோ (ஒருவர்), டூயட் ( இருவர்), ட்ரையோ (மூவர்), க்வார்டட் (நால்வர்) என பெயரிட்டு, பன்னிரண்டு வகை கருவிகள் வரை சென்று பலவிதமாய் இசையை கட்டமைக்கிறார்கள். ஆலிவர் மெஸ்ஸையனின் ‘Quartet for ending of time’ ஒரு பியானோ, ஒரு வயலின், ஒரு செல்லோ, ஒரு கிளாரினெட் என நால்வகை வாத்தியங்களால் உருவான இசை.

இறந்து போனால் தூக்கி செல்ல நாலு பேர் வேண்டும் என்பார்கள். மரணத்தின் பிடியில் சிக்கித் தவித்த மனிதர்களை பாடுவதற்கு மெஸ்ஸையன் நால்வரை (க்வார்டட் வகை இசையை) அதனால்தான் தேர்ந்தெடுத்தாரோ?

டைட்டானிக் திரைப்படத்தில் ஒரு காட்சி. கப்பல் உடைந்து கடலுக்குள் மூழ்க துவங்க, பயணிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிதறிக் கதறி ஒடிக் கொண்டிருக்க, நான்கு இசைக்கலைஞர்கள் மட்டும் நிதானமாய் வயலின் வாசித்துக் கொண்டிருப்பார்கள். எந்தவொரு பேரழிவிலும் பெருந்துயரத்திலும், மரணத்தை பதட்டமின்றி எதிர்கொள்ள இசையால் மட்டுமே சாத்தியப்படுகிறது. இசையின் மூலம் மரணத்தை வென்ற ஆலிவர் மெஸ்ஸையனின் சிறை வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்ட “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” தமிழ் சிறுகதை உலகில், முற்றிலும் புதிய களம் மற்றும் வாசிப்பனுபவம் கூட.

தொகுப்பின் இரண்டாவது சிறுகதையான ‘இருள் முனகும் பாதை’, கவிஞர் பிரமீளின் கவிதை வரியொன்றை தலைப்பாக சூடிக்கொண்டு, இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதையாக வந்திருக்கிறது. ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய The Road Not Taken கவிதையில் வரும் பயணத்தின் பாதை ஒரு புள்ளியில் இரண்டாக பிரிந்து இரண்டு திசையில் செல்லும். ஒரு பாதை பெரும்பான்மையான மானுடம் சென்று புழங்கிய எளிய பாதை. மற்றொரு பாதையோ யாரும் அதிகம் பயணிக்காத இருள் முனகும் பாதை. தனக்கான பாதை எதுவென கவிஞர் சற்று குழம்பி, கடைசியில் மானுடம் அதிகம் செல்லாத கடினமான பாதையை தேர்ந்தெடுப்பார். பிற்காலத்தில் அந்த முடிவுதான் கவிஞரின் வாழ்வை அர்த்தப் படுத்தியதாகவும், சாமான்யர்களிடமிருந்து வேறுபடுத்தியதாகவும் முடித்திருப்பார்.

‘இருள் முனகும் பாதை’ ஜெர்மன் இசைமேதைகளும் தம்பதிகளுமான ராபர்ட் ஷூமன், க்ளாரா ஷூமன் இருவரின் வாழ்க்கைச் சம்பவங்களால் வரையப்பட்ட கோட்டோவியம். சிறுவனும் சிறுமியுமாய் இசைப்பள்ளியில் இசை கற்பதில் துவங்கி, இளமையில் காதலித்து, பின் திருமணமாகி குழந்தைகள் பெற்று, இசையின் இருவேறு பாதைகளில் பயணித்து, அவர்கள் சந்தித்த ஆளுமைகள், அனுபவங்கள், வெற்றிகள், வீழ்ச்சிகள் என ஒரு சிம்பொனியின் இசைக்குறிப்புகள் போன்று பல அடுக்குகளை கொண்டிருக்கிறது இக்கதை.

நவீனத்துவ பாணியில் அவர்களது வாழ்க்கை சித்திரத்தை கலைத்து போட்டு விளையாடுகிறார் எழுத்தாளர் கிரிதரன். ராபர்ட் க்ளாராவுக்கு எழுதும் அழகிய காதல் கடிதத்தில் துவங்குகிறது கதை. கடிதங்கள், நாட்குறிப்புகள், இசைக் கருவிகள், தேவாலய சித்தரிப்புகள், ஆன்மீக உரையாடல்கள், அழகியல் வர்ணனைகள், கவித்துவ உச்சங்கள், இசையை காட்சிப் படிமங்களாய் குறியீடுகளாய் எழுத்தில் கொணர்ந்தது, இருள் முனகும் பாதையில் அலைந்து திரியும் ராபர்ட் பித்து நிலையில் சுயமிழப்பது, குடும்பத்தையும் லெளகீக உலகின் மீதுள்ள பிடியையும் இழந்த கணவனை கண்டு பரிதவிக்கும் க்ளாராவின் கையறு நிலை என இக்கதை திறக்கும் சாளரங்களும் சாத்தியங்களும் ஏராளம்.

ராபர்ட், க்ளாரா தவிர்த்து இக்கதையில் மொஸார்ட், ஷூபர்ட், மென்டல்ஸன், ஐசக், ப்ரம்ஸ், கதே, என பல ஆளுமைகளின் குறிப்புகள் வருகிறது. க்ளாராவும் கதேவும் சந்திக்கும் புள்ளியில் அறிவும் திறமையும் தர்க்கமும் வெற்றியும் அதை அடைவதற்கு தேவையான பயிற்சியும் வெளிப்பட, ராபர்ட்டும் ஐசக்கும் சந்திக்கும் புள்ளியில் இயற்கையும், இசையின் ஆதாரமும், பிரபஞ்சமும், ஆன்மீகமும் வெளிப்படுகிறது. ஆசிரியர் கிரிதரன் கலையின் புதிர் துண்டுகளை கலைத்து கலைத்து போட்டபடி, இருள் முனகும் பாதையை கடந்து செல்ல கைவிளக்கு ஒன்றையும் நமக்கு தந்து விடுகிறார். கைவிளக்கின் ஒளியும், ஒளியில் தெரிகின்ற நிழல்களும், மீண்டும் நம் இதயத்தை மின்மினியாய் படபடக்க வைக்கிறது. கதை முடிவில் நம்பிக்கையின் வடிவமாய் வரும் அந்த ராபின் பறவை ஒரு அழகியல் சித்திரம்.

க்ளாரா, ராபர்ட் தம்பதிகளை மேலும் நன்றாக அறிந்து கொள்ள நாம் மொஸார்ட் எனும் பேராளுமையை அணுக வேண்டியிருக்கிறது. ஐந்து வயதிலேயே இசைமேதையென அடையாளம் காணப்பட்டு தன் தந்தையுடன் ஐரோப்பா முழுவதும் சுற்றி மக்களை மகிழ்வித்தவர் மொஸார்ட். கருப்பு துணியால் கண்களை மறைத்தபடி வாசிப்பது, இரண்டு கையால் இரண்டு பியானோக்களில் வாசிப்பது, திரும்பி நின்றபடி, படுத்து கொண்டே வாசிப்பது என இசையில் பல வித்தைகள் புரிந்தவர். ஆனால் பதின்பருவத்தில் இந்த குரங்கு வித்தை, கரடி வித்தை பயிற்சிகளில் சலிப்படைந்து, தந்தையை விட்டு விலகி சென்று விடுகிறார். அதன் பிறகு அவர் உருவாக்கிய அனைத்துமே காலத்தை மீறிய படைப்புகள். மொஸார்ட் நினைத்திருந்தால் பணமும் புகழும் அரசாங்க பதவியுடன் வசதியாய் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவற்றை நிராகரித்துவிட்டு, கற்பனைக்கும் எட்டாத இசையின் மாயங்களை உச்சங்களை கண்டடைந்து மானுடத்துக்கு கொடையளித்து முப்பத்தைந்து வயதில் வறுமையில் மாண்டு போனார். மொஸார்ட் இறந்தபின் அவரது உடலை புதைக்க நாலு பேர் கூட இருக்கவில்லை என்பது துன்ப சரித்திரம்.

க்ளாராவின் வாழ்க்கையை மொஸார்ட்டின் முதல் பகுதியுடனும், ராபர்ட்டின் வாழ்க்கையை மொஸார்ட்டின் இரண்டாவது பகுதியுடனும் பொருத்தி பார்ப்பதின் மூலம் நாம் இந்த தம்பதிகளின் சிடுக்குகளை மேலதிகமாய் புரிந்து கொள்ளலாம். இசைக் கலைஞர்களின் ப்ரக்ஞைக்குள் நுழைந்து அவர்களது மனவோட்டத்தை எழுத்தாக ப்ரதிபலித்தபடி, தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக மிளிர்கிறது ‘இருள் முனகும் பாதை’.

தொகுப்பின் மூன்றாவது கதை ‘திறப்பு’. இக்கதையை சுவாரஸியமாக்கும் விஷயங்கள் இதில் மறைவாக பொதிந்திருக்கும் மஹாபாரதமும் ராமாயணமும். மற்றும் கதை நிகழும் களமான புதுவை நகரம். சென்னை போன்ற பெருநகரங்களில் நிகழ்கின்ற இசைக் கச்சேரிகள், அதை ஒருங்கிணைக்கும் சபாக்கள், அந்த மேடைகளில் கிடைக்கக்கூடிய அங்கீகாரங்களை நோக்கி அம்புகள் எய்து முயற்சிக்கும் சிறுநகரங்களின் சிக்கல்களை, அவை சந்திக்கும் அரசியலை சூசகமாய் சொல்லி செல்கிறது இக்கதை. நன்றாக பாடும் அக்கா ஜெயந்தியும், அவள் தம்பி ரங்கனும் கச்சிதமான பாத்திர படைப்புகள். ஒரு அந்திப்பொழுதில் நடந்து முடிந்து விடுகிறது கதை.

வீட்டில் நடக்கும் மஹாபாரதத்தை தாங்க முடியாமல் கோவிலுக்கு போகும் ஜெயந்திக்கு அங்கு நிகழும் ராமர் பண்டிகை உற்சவங்கள் மூலம் புதிய திறப்பு கிடைக்கிறது. இசையின் இலக்கண சரிகள், சுருதி சுத்தங்கள், பயிற்சி துல்லியங்கள் இவைகளிலிருந்து பக்திபாவத்தை நோக்கி உந்தப்பட்டு உருகிப்போய் கண்ணீர் விடுகிறாள். கோவிலில் சற்று நேரம் ரங்கனை தொலைத்து தேடும் ஜெயந்தி, பின்னர் கண்டடைவது அவளது தம்பியை மட்டுமல்ல, தன்னையும் கூட.

இத்தொகுப்பில் நான்கு சிறுகதைகள் புதுவை நகரத்தை களமாய் கொண்டுள்ளது. புதுவை மக்களின் வாழ்க்கை முறையை, அவர்களின் மொழியை, தெருக்களை, வரலாற்றை மிகச் சிறப்பாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார். புதுச்சேரியில் ரேணுகா தியேட்டர், அஜந்தா தியேட்டர் எல்லாம் இடிக்கப்பட்டு, அவை இன்று உல்லாச விடுதி, ஷாப்பிங் மால் என மாறிவிட்டது. ஜெயந்தி தன் தம்பியின் கையை பிடித்தக் கொண்டு ரேணுகா தியேட்டர் துவங்கி அஜந்தா தியேட்டர் வழியே பெருமாள் கோவிலுக்கு நடந்து செல்லும் காட்சி புதுவை வாசகர்கள் மனதில் இனி நீங்காத சித்திரமாய் நிலைத்திருக்கும்.

இசையில் ஆரோகணம் அவரோகணம் என்பார்கள். ‘தர்ப்பை’ கதையில் வரும் இளைஞன் மரபை மீறி செல்ல துடிப்பதும் , ‘மௌனகோபுரம்’ கதையில் வரும் முதியவர் தன் மரணத்துக்கு பின்னரும் மரபு அழியாமல் இருப்பதற்கு போராடுவதும், வாசிக்கும் நமக்கு ஆரோகண அவரோகண அனுபவங்களை தருகிறது. இந்த அனுபவம் ‘பலி’, ‘நிர்வாணம்’ மற்றும் ‘அகதி’ கதைகளிலும் உண்டு. நல்லதொரு குடும்ப அமைப்பில் வளர்கின்ற குழந்தையும், அதே சமயம் குடும்பம் அல்லது சமூகம் என்ற கட்டமைப்பு சிதையும் போது அதில் ‘பலி’யாகும் குழந்தைகள் ‘அகதி’யாகவோ ‘புத்தனாகவோ’ மாறக்கூடிய சூழல்களின் ஏற்ற இறக்கங்களை காண்பிக்கிறது.

இத்தொகுப்பின் அற்புத கதைகளை பத்து வருடங்கள் முன்பே கிரிதரன் எழுதிவிட்டாலும், புத்தக வடிவில் இப்பொழுதுதான் நம்மை வந்தடைந்திருக்கிறது. சென்ற சில வருடங்களில் அவர் எழுதிய பல்கலனும் யாம் அணிவோம், மரணத்தை கடத்தல் ஆமோ, நந்தாதேவி, நீர் பிம்பத்துடன் ஓர் உரையாடல், போன்ற கதைகளில் நவீனத்துவத்தின் தாக்கமும், பரிசோதனை முயற்சியும், சிதறல் தன்மையும் மேலோங்கி உள்ளதால், அவை வாசிப்பவரிடம் மிகுந்த கவனத்தையும் உழைப்பையும் கோருகிறது. காட்டுக்குள் மறைந்திருக்கும் அரிய மூங்கில்களை புல்லாங்குழலாக்கி தமிழ் வாசகப் பரப்பை நோக்கி புதிய வகை கானங்களை வாசிக்கிறார் கிரிதரன். ஆபேரி, பாவனி, கல்யாணி, தோடி, தர்பார் என சில ராகங்களை இந்த கதைகளின் ஜீவனுடன் பொருத்தி பார்த்து ரசிக்க கூடிய சாத்தியங்களும் உண்டு.

நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்துக்கும் ஒரு இளையராஜா பாடல் இருப்பது போன்று, மானுடத்தின் அபூர்வ கணங்களை, மனித மனங்களில் எழும் ராகங்களை கோர்த்து கதைகளாக்கி ஒரு ராகமாலிகையாய் இச்சிறுகதை தொகுப்பு ஒலிக்கிறது. இளையராஜா தன்னுடைய How to Name it ஆல்பத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வருமென அறிவித்துள்ளார். கிரிதரனும் தன் அடுத்த புனைவை விரைவில் வெளியிடுவார் என்று தமிழிலக்கிய உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது. ஆசிரியர் கிரிதரனுக்கு வாழ்த்துகள்.

Series Navigation<< நிறமாலைலஜ்ஜா: அவமானம் >>

One Reply to “ரா. கிரிதரனின் “ராக மாலிகை””

  1. எழுத்தாளர்/கதை சொல்லி பவா சொல்லத்துரை , பெரும்பாலும் கதை சொல்லும் போது, அந்த கதையை அப்படியே ஒப்பிக்காமல். அந்த கதையின் மையக்கருத்தை தன் நடையில், தன்னுடைய எண்ணங்களின் குவியல்களாக, கேட்கும் வாசகனின் மனதில் பதித்துவிடுவார். பெரும்பாலும் வாசகனால் தூங்க முடியாது, அடுத்த நாளே அந்தப் புத்தகத்தை வாங்கவோ படிக்கவோ தொடங்கிவிடுவான். அதே போல் தான் உங்கள் எழுத்து நடை உள்ளது ராஜா. ஆங்கிலத்தில் Art for Art’s sake doesn’t work என்று சொல்வார்கள், மாவோ கலை மக்களுக்கானது என்று சொல்வார், உங்கள் எழுத்தைப் படித்தால் கலை ரசிகனுக்கானது என்று எனக்கு தோன்றுகிறது. நன்றி ராஜா !!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.