- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
ராத்திரி முழுக்க நிற்காமல் மழை பெய்து பூமி குளிர்ந்து போயிருந்தது. மிர்ஜான் கோட்டை நிதானமாக விழித்து எழுந்து கொண்டிருந்தது.
சென்னா கண் விழித்தபோது படுக்கையறைப் பலகணிகளில் ஒன்று தாழ்ப்பாள் இளகி மழைக் காற்றில் அவ்வப்போது அடித்துக் கொண்டிருந்தது.
கோட்டைக்குள் வேறு அறை, மண்டபம், நடைபாதையில் எங்கேயாவது இப்படி ஆகியிருந்தால் ராத்திரியோடு ராத்திரியாக அந்தப் பழுது சரிசெய்யப் பட்டிருக்கும். சென்னபைரதேவி ராணியின் பிரத்யேகமான படுக்கையறை என்பதால் அப்படி வந்து போக முடியாது. ஆகவே வந்திருக்க மாட்டார்கள்.
நினைக்கும்போதே வேறு நினைப்பு குறுக்கே மறிக்க வேகமாக அறைவாசலுக்கு நான்கடி நடந்து வாசல் கதவை அணிசெய்த நான்கு கொண்டித் தாழ்ப்பாள்களை விரசாக ஒரே அசைவில் திறந்து வெளியே பார்க்க, இரண்டு வீரர்கள் கையில் சுத்தியல்,சிறு ரம்பம், வெவ்வேறு வடிவத்தில் மரத் துண்டுகளோடு படுக்கையறை வாசலில் காத்து நின்றார்கள்.
அறை வாசல் இருக்கும் ஆளோடியில் வீரர்கள் அவர்கள் இருந்ததைக் காணவில்லை என்பது போல் நேரே நோக்கி கவாத்து பழகி நகர்ந்து போனார்கள்.
அரசி படுக்கையறை வாசலில் நிற்பதைக் கவனித்த நடை பழகும் வீரர்களும், ஜன்னல் சரி செய்ய வந்திருப்பவர்களும் உடனே அவரவர் நிற்குமிடத்தில் மண்டியிட்டு இருந்து ஜய விஜயீ பவ முழங்கினார்கள்.
அவர்களை எழும்படி சைகை செய்து விட்டு மிளகு ராணி உள்ளே போய் விசையை இழுக்க கோட்டை மணி ஒலித்தது. அரசியின் மெய்க்காப்பாளர்கள் அடுத்த இரு நிமிடங்களில் அங்கே இருந்தார்கள்.
”அம்மா தங்கள் சயன அறையில் ஜன்னலை சரி பண்ண நாங்கள் போகலாமா?”
அதிகாரி அனுமதி கேட்டு நிற்க சரி என்று தலையசைத்தாள் சென்னபைரதேவி.
அவர்களின் பாதுகாப்பு வளையத்தின் நடுவே மெல்ல நடந்தபடி சென்னா படுக்கையறையைத் திரும்பிப் பார்க்க கோட்டை அதிகாரிகளில் ஒருவர் தலைமையில் இரண்டு தச்சுப் பணியாளர்களின் குழு உள்ளே நுழைந்து கதவைச் சார்த்திக் கொண்டிருந்ததைக் கண்டாள். சரியானதும் செய்தி உடனுக்குடன் சென்னாவுக்கு அறியத் தரப்படும். சென்னா மராமத்துப் பணி பூர்த்தி ஆனது குறித்து மனநிறைவு தெரிவித்தாலே வேலை முடிந்ததாக அரண்மனை ஆவணங்களில் குறிக்கப்படும்.

கோட்டை மண்டபத்தில் இருக்க நினைத்து வேண்டாம் என்று வைத்து உள்ளே சமையலறையும், உணவுப் பொருட்கள், காய்கறிகள் சேமிக்கும் அறைகளும், பாத்திரங்கள் அடுக்கியிருக்கும் பெரிய அலமாரிகள் வரிசையாக நீண்ட ஈரமான அறைகளுமாக விளங்கும் பிரதேசத்திற்குள் நடந்தாள் அவள்.
மெய்க்காப்பாளர்கள் அவளுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாகச் சென்னாவைத் தொடர்ந்து ஓடிவந்தார்கள்.
எந்தக் கசடும் குப்பையும் இல்லாத சமையலறையில் பெரிய அக்னிக் குண்டங்கள் போல் கோட்டையடுப்புகள் எரிய குளித்துச் சுத்தமாகத் தெரியும் சமையல்காரர்கள் காலை உணவைப் பாகம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஆளோடி இறுதியில் ஒரு ஓர அறை ஆகாயத்தைப் பார்தது கூரை இல்லாமல் நீண்டிருக்க, அங்கே உத்தியோகம் செய்கிறவர்கள், உபயோகித்த பாத்திரங்களைக் தேய்த்துக் கழுவித் தூய்மைப் படுத்தித் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.
குசினி வாசலில் நின்றபோது பிரதம சமையல்காரர் ஒரு வினாடி தன் உதவியாளனிடம் அடுப்பைக் காட்டிச் சொல்லியபடி ராணிக்கு மரியாதை செலுத்த ஓடி வந்தார்.
”எல்லாம் சரியாக நடக்கிறது தானே?”
”ஆமாம் அம்மா”.
”காலை உணவு என்ன சமைத்துக் கொண்டிருக்கிறீர்கள்”?
”இட்டலிகளும் தோசையும் துவையலும் பாகம் செய்துகொண்டிருக்கிறோம் அம்மா. வெண்பொங்கலும் வெந்துகொண்டிருக்கிறது. இன்று வெள்ளி என்பதால் பூஜை நைவேத்தியமாகப் படைக்கப் பலாப்பழப் பாயசமும் சமைத்து வைத்தாகி விட்டது அம்மா. நீங்கள் சொன்னபடி குறைந்த அளவு சர்க்கரையே சேர்த்துச் செய்தோம். துரை அவர்கள் காணிக்கையாகத் தந்த கொய்யாப் பழங்களையும் துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கிறோம்”.
”ரொம்ப நல்லது. எனக்கு வேண்டிய தினசரி பானம் அனுப்புகிறீர்களா?”
”நிச்சயமாக அம்மா. உங்கள் தினசரி வழக்கப்படி எலுமிச்சைச் சாறும் தேனும் வென்னீரில் கலந்து வைத்திருக்கிறது. இன்று தேன் சேர்க்க வேண்டாம் என்றால் தேனில்லாமல் கருப்பட்டிக் கூழ் சேர்த்த இன்னொரு குவளையும் உண்டு. இரண்டையும் தங்கள் திருமனசுப்படி அனுப்புகிறேன்”.
”தேனை நாம் விலக்கவில்லை. அடிகளார் வந்தபோது அவருக்கு விலக்கு என்பதால் சொன்னோம். இப்போது தேன் தயக்கமின்றி பயன்படுத்தலாம்”.
மண்டபத்தில் நேமிநாதன் நின்றபடி சென்னா வரக் காத்திருந்தான். வலதுகைச் சுட்டி விரலில் வெள்ளைத் துணியால் கட்டி வைத்திருந்ததை முதுகுக்குப்பின் மறைத்துக் கொண்டாலும் சென்னா கண்ணில் அது படத் தவறவில்லை. தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள் சென்னா.
”வணக்கம் அம்மா, நன்றாக உறங்கினீர்களா? நேற்று முன் தினம் அவ்வப்போது எட்டிப் பார்த்ததே அந்தக் குத்திருமல் கட்டுப்பட்டதா? வயிறு சீரணப் பிரச்சனை இன்றி சீராக இயங்குகிறதா?”
அவன் சொல்லச் சொல்ல ஆம் என்று தலையசைத்தாள் சென்னா. வயிறு பற்றிய ஆம் உதிர்த்த உடன், அவனை இருக்கச் சொல்லி விட்டு தாதியைப் பார்த்தாள் சென்னா.
”கொல்லைக்குப் போக கூட்டு எதுக்குன்னு பழஞ்சொல் தமிழ்லே உண்டு. ஆனா எனக்கு அறுபது வயசாகி எல்லா சீக்கும் வந்து சேர்ந்திருக்கு. கொல்லையிலே கழிப்பறையிலே கொண்டு போய் விட்டு காத்திருந்து திரும்பக் கூட்டிவர தாதி இருந்தால் மனசு ஆறுதலோட இருக்கு. சுத்தப்படுத்தறதெல்லாம் நானே தான் இதுவரைக்கும் செய்துக்கறது. வெறும் துணைதான். நான் போயிட்டு தோட்டம் போறேன். நேமி, நீ எட்டரைக்கு காரியாலயம் வந்துவிடு”
”சரி அம்மா, அப்படியே ஆகட்டும். காலைச் சாப்பாடு?”
அவன் தயங்கி நின்றான்.
”என்ன சந்தேகம்? எப்பவும் போல சேர்ந்துதான். ரஞ்சனாவும் இருக்கட்டும். எட்டு மணிக்கு காலை ஆகாரம் இன்னிக்கு. அரை மணி நேரம் முன்னதாக”.
பிடவை இடுப்பு மடிப்பில் வைத்திருந்த கடியாரத்தை எடுத்து மணி பார்த்தபடி சொல்லி விட்டு ஜாக்கிரதையாக தாதியிடம் கொடுத்தாள் சென்னா. தாதி அவளை அணைத்துக் கழிப்பறைக்குக் கூட்டிப் போக மெல்ல நடந்தாள். தாதியிடம் ஏதோ சொல்லி சென்னா கம்பீரமாகவும் தாதி தயங்கியும் சிரிக்கும் சத்தம் அடுத்துக் கேட்டது.
வயிறு சீராக இயங்கும் சந்தோஷத்தோடு கோட்டைத் தோட்டம் போகும் ஒற்றையடிப் பாதையில் நடந்தாள் சென்னா. அறுபது வயதில் கொல்லைக்குப் போய் அடிவயிற்றுக் கழிவு வெளியேற்றினாலே அந்த தினம் கொண்டாடப்பட வேண்டியது. நாள் முழுக்க சிறப்பாகப் போகும் என்று நம்பிக்கை வருகிறது. இன்று வந்தது.
மெய்க்காவலரை விலக்கித் தாதி மிங்குவை மாத்திரம் கூட இருத்திக்கொண்டு தோட்டம் பார்க்கப் புறப்பட்டாள் சென்னா.
“ஏக் அஸ்லி காய்..” Ek asli gaai
கொங்கணி மொழியில் ஒரு குழந்தைப் பாடலை உரக்க முணுமுணுத்தபடி சென்னா தோட்டத்துக்குப் போகும்போது தாதி மிங்குவைப் பார்த்து பாடுடீ என்று புன்சிரிப்போடு கட்டளையிட்டாள்.
”மகாராணி ஐயையோ நான் மாட்டேன்” என்று பயந்து நாலு திசையும் அவசரமாகப் பார்த்தாள் மிங்கு. அடுத்த நிமிடம் இரண்டு குழந்தைகள் நகரத்துக்கு வந்த பசுவைச் சேர்ந்து வரவேற்றபடிக் கை கோர்த்துத் தோட்டத்துக்குள் நடந்தன.
”மிங்கு இங்கே இருந்த மல்லிகைப்பூச் செடி எங்கே?” சென்னா கேட்டாள்.
“இங்கே மல்லிகைப் பூச்செடியே கிடையாதே ராணியம்மா?”
“என் பூவை எல்லாம் பறிச்சு செடியையும் மறைச்சு வச்சிருக்கியாடி கழுதை?”
“கழுதைக்கு எதுக்கு மல்லிகைப் பூ அம்மா? மல்லிகைச் செடியே நம்ம தோட்டத்திலே கிடையாதே”.
சட்டென்று சென்னாவுக்கு நினைவு வந்தது. ஜெர்ஸோப்பா மாளிகைத் தோட்டத்தில் தான் மல்லிகைச் செடிகள் ஒரு வரிசை நிறையப் பூத்துக் குலுங்கி நிற்கின்றன. வயது ஏற ஏற காலம், இடம், ஆளுமை என்று எல்லாம் குழம்பித் தெரியத் தொடங்கி விட்டது.
”அம்மா, ஜெருஸோப்பா அரண்மனைத் தோட்டத்தில் பூத்த மல்லிகையைப் பார்த்த நினைவை இங்கே பதியன் போட்டுட்டீங்களா?’
தாதி கலகலவென்று சிரிக்க, ”என்ன சிரிப்பு, எங்கே இருந்தால் என்ன? உனக்குத் தெரிந்திருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தேன். தேறி விட்டாய் பிழைத்துப் போ” என்று புன்சிரிப்போடு சொன்னாள் சென்னா.
”சொல்லியிருக்காவிட்டால் பிழைத்துப் போக விட்டிருக்க மாட்டீங்களா மகாராணி? யானைக் காலில் மிதிக்கச் சொல்லுவீங்களா?”
”இந்த ஆனைக்கால் விஷயம் எப்படி தெரிந்தது உனக்கு? வைத்தியன் சொல்வதாச்சே இது? உனக்கும் அவனுக்கும் என்ன பழக்கம்?”
”சரியாப் போச்சு அவர் என் வீட்டுக்காரர் தானே. எங்கிட்டே சொல்லாத பொது விஷயம் எதுவும் இல்லையே?”
’என்ன வைத்தியனும் நீயும் கல்யாணம் கழிச்சாச்சா? எப்போடீ?”
”அம்மா போன மேட மாதம் ஹொன்னாவர்லே ஆச்சே. நீங்க வந்து சிறப்பித்திருந்தீர்களே?”
சட்டென்று பேச்சை நிறுத்தினாள் தாதி. சென்னா அவளை நையாண்டி செய்கிறாள் என்று புரிந்ததும் அவளும் சிரிக்க ஆரம்பித்தாள்.
”போங்கம்மா என்னைக் களியாக்கி கிறுக்கச்சியாக்கணும் உங்களுக்கு இன்னிக்கு நான் தான் விளையாட்டு பொம்மை”.
”உன் மூஞ்சிலே ஏமாத்து ஏமாத்துன்னு எழுதி ஒட்டியிருக்கே. அதான் காலைப் பிடித்திழுத்தேன்”.
”சிவசிவ என் காலை நீங்க பிடிக்கறதாவது. மாப்பு மாப்பு”.
தன் வலது உள்ளங்கையில் துப்பித் தலையில் பூசுகிற பாவனை செய்து குழந்தைப் பெண்ணாக மறுபடி அவதாரம் எடுத்தாள் தாதி.
”மீங்கு மீங்கு நீ ரொம்ப வெகுளிப் பொண்ணுடி’.
சாமந்திப் பூக்களைத் தொடாமல் செடியோடு வைத்துப் பார்த்தபடி நின்றாள் சென்னபைரதேவி ராணி. இதை ஒரு சித்திரமாக எழுதணும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் மிளகு ராணி.
”ஆக நான் உன் கல்யாணத்துக்கு வந்திருந்தேன். அப்படித்தானா?”
”வந்து மட்டும் போனீர்களா? உங்களைப் போக விட்டிருப்போமா? என்ன அருமையான வாழ்த்து, அருமையிலும் அருமையான பரிசுப் பொருட்கள். உங்களை எம் அன்னையான மகாராணியாகக் கொண்டிருக்க நாங்கள் என்ன தவம் செய்தோமோ”.
சிரிப்பு மெய்மறந்த கேவலாக மாற, தாதி மிங்கு அரசியாரின் வலத் கரத்தைக் கண்ணில் ஒற்றி வணங்கிச் சொன்னாள். அந்தக் கல்யாணம் நினைவில் வருகிறது. நாற்பதை எட்டும் மணமகனும், முப்பதில் மணமகளுமாகக் கொஞ்சம் தாமதமான கல்யாணம் அது.
வாசலில் இருந்து விரைந்து நடந்து வந்த கோட்டைப் பேரதிகாரியைப் பார்த்ததும் சென்னா அமைதியாக நின்றாள். தாதியும் விலகி நின்றாள்.
”ஜெய விஜயீ பவ”.
குனிந்து வணங்கிய அதிகாரி பணிவோடு தெரிவித்தார் –
“மகாராணி அம்மா, பன்குடி அரசர் வீர நரசிம்மர் வந்திருக்கார்”.
”வீர நரசிம்மரா? அவரை இருக்கச் சொல்லுங்கள். காலையில் நீராடி பூஜை செய்யாமல் நான் அரசாங்கக் காரியம் எதுவும் பார்ப்பதில்லை என்று அவரிடம் சொல்லவில்லையா?”
அதிகாரி தயங்கி இருந்தார். பின் மெதுவாகக் கூறினார் –
”ஏதோ அவசரத்தில் வந்தவராகத் தெரிகின்றார் அம்மா. அதனால் தான் வாசல் முன் மண்டபத்தில் அமர்த்தி உபசாரம் செய்வித்து வந்தேன்”.
”நல்லது. அவரை இங்கே வரச் சொல்லுங்கள்”.
சென்னா சொல்ல வியப்போடு பார்த்தார் அதிகாரி.
”இங்கேயா? தோட்டத்தில் வைத்தா?”
”ஆமாம், அவசரத்துக்குத் தோஷமில்லை. இங்கே இரண்டு ஆசனங்களை இடச் சொல்லுங்கள். என் மண்டப நாற்காலி வரட்டும். டீ மிங்கு, எங்கே, பூஞ்சிட்டாட்டம் உள்ளே ஓடி, என் சரிகைத்துணி போர்வையை எடுத்து வா, பார்க்கலாம். நீ வந்ததும் தான் நான் விருந்தாளியை இங்கே வரச்சொல்லிச் சொல்லி விடவேணும். ஓடுடி”.
மிங்கு கலகலவெனச் சிரித்தபடி ஓடினாள்.
அதிகாரி திரும்பப் போகும்போது தான் புரிந்து கொண்டது சரிதானா என்று சோதித்துக் கொள்ள அதிகாரி மருட்சியோடு கேட்டார் –
“இன்னொரு முறை மகாராணி மன்னிக்க வேண்டும். பன்குடி மன்னர் இந்தக் கோட்டைத் தோட்டத்தில் தங்களைச் சந்திக்க வேண்டும் இல்லையா?”
“ஆமாம், அதிலென்ன சந்தேகம்?” என்று அவர் மேல் பரிதாபத்தோடு பொறுமையாகச் சொன்னாள் சென்னா. தவறாகப் புரிந்து கொண்டால் அதன் விளைவுகள் புரிந்த அதிகாரி அவர். இளையவர் என்றாலும் முகத்தில் குடும்பஸ்தன் களை தீர்க்கமாக ஓடிக் கொண்டிருப்பதைச் சென்னா பார்த்தாள். அவர் நன்றி சொல்லி ஓட்டமும் நடையுமாக வாசலுக்குப் போனார்.
ஏதோ யாரிடமோ கேட்க நினைத்து மறந்து போனது என்பது மட்டும் நினைவு வந்தது. எதை, யாரிடம்?
ஒரு வழியாக நினைவு வந்தது. நேமிநாதன் விரலில் துணி சுற்றி இருந்தது என்ன காரணம் என்று அவனிடம் கேட்க மறந்து போனது நினைவு வந்தது சென்னாவுக்கு. கழிவறைக்கு விரையும் வேகத்தில் வேறு எதுவும் மனதில் நிற்க மாட்டேன் என்கிறது. நேமியை இங்கே வரச்சொல்லிக் கேட்டுப் போகலாமா? வீர நரசிம்மன் இருப்பானே.
வேண்டாம், அவன் கூடிய மட்டும் பல விதத்திலும் பலரோடு விரோதம் செய்து கொள்ளும், அவ்வப்போது தேவைப்படும்போது இரண்டு கையும் கூப்பி ஓடிவரத் தயங்காத வீர நரசிம்மன் போன்ற வினோதமான ஆளுமைகளோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்று.
என்ன ஆகியிருக்கும்? பழம் நறுக்கக் கத்தியை எடுத்து விரலை வெட்டிக்கொண்டிருப்பான். ரஞ்சனாவுடன் விளையாடும்போது இசகுபிசகாகக் கத்தி கையில் பட்டிருக்கும். அவன் அப்பா போலவே பெண்நெடிக்கு அலைய ஆரம்பித்திருக்கிறான். அவள்கள் விளையாட்டோ.
பெரிய காயம் என்றால் வைத்தியன் அரசியை அறிவித்திருப்பானே. மாட்டான் அவன் தன் பெண்டாட்டி தாதி மிங்குவிடம் தான் முதலில் சொல்வானாம்.
ராணியை விட அதிக விஷயம் தெரிந்தவள் அவளுடைய பணிப்பெண். அவளைக் கேட்கலாமா? வெடித்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
”சென்னம்மா, தோட்டத்தில் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறீரா? நான் நேரத்தைப் பாழ்படுத்தி விட்டேனா?”
கேட்டபடி வீர நரசிம்மன் தோட்டத்துக்குள் வந்தார்.
அந்த அரை மரியாதை கூட வேண்டாத நட்பு சென்னாவுக்கும் வீர நரசிம்மருக்கும் வாய்ந்தது. சென்னாவின் தகப்பனார் குறுநில மன்னராக அரசாண்டு தற்போது சென்னா ஆளும் விஜயநகரப் பேரரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது ஜெருஸோப்பா பிரதேசம். அதை அடுத்து வீர நரசிம்மர் ஆளும் சின்னஞ்சிறு பன்குடி தேசமும் உண்டு. அப்பக்காவின் தந்தை குறுநில மன்னராக ஆட்சி செய்த உள்ளால் பிரதேசமும் அருகில் தான்.
சென்னாவும் வீராவும் சேர்ந்தே ஜெர்ஸோப்பா அரண்மனையிலிருந்து கல்வி கற்றார்கள். சென்னா தந்தையின் அரசுப் பிரதேசத்தை அவருக்குப்பின் ஆள உடனடியாக உரிமை பெற்றாள். அப்பக்கா அதேபோல் உள்ளால் தலைநகரான குறுநிலத்தின் அரசியாக ஆள உரிமை பெற்றாள். வீர நரசிம்மன் பற்றி எதிர்மறையான கருத்து விஜயநகர பேரரசுக்கு மட்டுமில்லை, பொதுவாகவே பரவி இருந்தது.
என்றாலும் வீராவுக்கு பன்குடி அரசுரிமை கிடைக்க விஜயநகரப் பேரரசில் இருந்த சில பிரதானிகள் காரணம். அப்பத்தைப் பிய்த்த மாதிரி பன்குடியில் இருந்து பல ஊர்களை பிய்த்தெடுத்து அகற்றி விட்டு வீராவுக்கு அரசுரிமை கொடுத்தார்கள்.
அப்பக்காவும் சென்னாவும் கூட நல்ல நண்பர்கள் ஆனதால் சென்னாவுக்கும் அந்தத் தம்பதிகளுக்கும் இடையில் மிக நல்ல உறவு உலவியது. இப்போது வீராவும் அப்பக்காவும் பிரிந்து இருந்தாலும் சென்னா மறுபடி அவர்கள் ஒன்று சேர இன்னும் முயற்சி செய்கிறாள். மிளகை சென்னாவும் வெல்லத்தையும் சாயம் தேய்த்த கைத்தறித் துணியையும் அப்பக்காவும் இந்த வடக்கு கன்னடப் பிரதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்வதை ஒருங்கிணைத்து பிரம்மாண்டமாக வியாபாரம் வளர்த்தால் விஜயநகரப் பேரரசு கூட பிரமித்துப் போய் பார்க்கலாமே தவிர வேறேதுவும் செய்ய முடியாது.
”உம் நேரத்தைப் பாழாக்கி விட்டேனா எனக் கேட்டேன். பதில் தரமாட்டீரா?” வீர நரசிம்மரின் குரல் சென்னாவை தரைக்கு இழுத்து வந்தது
”வீரு இது என்ன மரியாதை எல்லாம் எனக்கு? நான் உனக்கு பால்ய கால சிநேகிதி சென்னாதான் எப்பவும். நீ என்றே சொல்லு”.
வீர நரசிம்மர் அப்படியே ஆகட்டும் சென்னா என்று குனிந்து வணங்கினார்.
”இன்னும் அதே குறும்புக்கார சக மாணவன் வீருதானே நீ” என்றாள் சென்னா.
”என்ன ஆச்சு காலையிலேயே இப்படி அலங்கோலமாக வந்திருக்கியே. யார் கூடவாவது வீதியிலே வெட்டிச் சண்டை ஏதாவது நடந்ததா?”
அவர் இல்லையென்று தலையாட்டினார்.
”அப்போ மதுசாலைக்குப் போயிருந்தே. அப்படித்தானே?”
அவளுக்கு நேற்று இரவே அதற்கு முன்தினம் வீரு உள்ளால் மதுக்கடையில் கலவரம் உண்டாக்கி வெளியேற்றப்பட்டது செய்தியாக வந்து சேர்ந்திருந்தது. குடியினால் அழிந்த ராஜாங்கம் வீருவுடையது.
அப்பக்கா அவரை விட்டுத் தனியாகத் தன் தகப்பனாரிடமிருந்து வாரிசு உரிமை பெற்று உள்ளால் அரசியானதும், விஜயநகர பேரரசு பன்குடி ராஜ்ஜியத்தின் அளவை காலே அரைக்காலாக வெட்டிக் குறைத்து, மிச்சத்தை அப்பக்காவே அரசாள வைத்தது. அதற்கும் வீர நரசிம்மன் குடித்துக் குடித்து தன்னையும் அரசாங்கத்தையும் சிதைத்துக் கொண்டது தான் காரணம்.
”நீர் ஆண்டால் என்ன, உம் பெண்ஜாதி ஆண்டால் என்ன, உம் குடும்பத்தில் தானே இரண்டு பிரதேசங்களுக்குமான ஆட்சி அதிகாரம் இருக்கிறது? நீர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு உள்ளாலையும் பனகுடியையும் சேர்த்து பெரிய நிலப்பரப்பாக்கி அரசரானால் ஜயவிஜயீ பவ சொல்லி வாழ்த்துவது நாங்களாகத்தான் இருக்கும்” என்று விஜயநகர பிரதானிகள் சொன்னார்கள்.
ஆனாலும் அப்பக்கா சொன்னது-
”கல்யாணம் ஆனது. நல்லது. இனித் தொடர்ந்து நான் உள்ளால் ராணியாகவே இருப்பேன். என் கணவர் பனகுடி அரசராக இருப்பார். யாருக்கு என்ன கஷ்டம் இதில்”, என்று பட்டுக் கத்தரித்தது போல் பேசி விட்டாள்.
வீர நரசிம்மன் பற்றித் தெரிந்தவர்கள் அது நல்ல முடிவுதான் என்று ஒட்டு மொத்தமாகச் சொல்லி விட்டார்கள். அத்தனைக்கு வீரு தன் பெயரைப் பாழாக்கி இருந்தார்.
நேற்று கள்ளுக் குடிக்கப் போன இடத்தில் தகறார். அது நாட்டு மதுக்கடை. அரசன் என்ற மரியாதை காரணம் சும்மா அனுப்பி விட்டார்கள். அடுத்து அவர் படியேறியதோ வெளிநாட்டார், என்றால் போர்த்துகீசியர்களுக்கும் கொஞ்சம் போல் அராபியர்களுக்கும், இஸ்பானியர்களுக்கும் மட்டும் மது விற்றுக்
குடிக்க இடம் தரும் மதுசாலை. வீரா அரசன் என்பதால் அனுமதி உண்டு. அங்கே ஒயினும் பிராந்தியும் குடித்து இருந்த உயர்குடி பிரபுக்களோடு போட ஆரம்பித்த வாய் வார்த்தைச் சண்டை, பணவரவு குறைந்த, பஞ்சும் பியரும் மாந்தும் கடைநிலை துரைகளோடு கட்டிப் புரண்டு சண்டை போடுவதில் முடிய வீராவின் குப்பாயத்தைக் கிழித்து வெளியே அனுப்பியதாக அவர் வந்து சேர்வதற்கு முன் செய்தி சென்னாவை எட்டி விட்டது. அப்பக்காவுக்கும் போயிருக்கும்.
”அறுபது வயசிலேயும் நீ அழகா இருக்கே சென்னா”.
வீரு சென்னாவைத் தலையில் இருந்து கால் வரை ரசித்துப் பார்க்க அவளுக்கு ஆடை இல்லாமல் இவன் முன் நிற்பது போல் வெட்கம் வந்து சேர்ந்தது. அரண்மனையில் கணிதமும், வானியலும் சொல்லித் தர ஆசிரியர் வந்து கற்பித்து பாதி வகுப்பில் ஐந்து நிமிடம் இடைவெளி கொடுத்து வெற்றிலை மென்றிடப் போகும்போது சென்னாவின் அருகே வந்து கண்ணில் நோக்கி சென்னா நீ அழகி என்று வீரா எத்தனை தடவை சொல்லியிருக்கிறான். அந்த மென்மையான உணர்வுகள் கொண்ட வீரா இல்லை இப்போது சென்னாவின் அறுபதாம் வயதில் முன்னால் நிற்பது.
”பிறந்தநாளுக்கு வருவேன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்”.
சென்னா மெல்லச் சொல்லி இன்னும் சொல்ல வேண்டியது இருப்பதாகக் கோடிகாட்டி நிறுத்தினாள். உடனே திரும்ப எடுக்கவும் செய்தாள்.
”நீயும் வரல்லே. அப்பக்காவும் வரலே. அவளும் நீயும் தனித்தனியாகத்தான் எப்படியாவது வந்துடுவீங்கன்னு சாயந்திரம் வரைக்கும் நம்பிக்கையோடு காத்திருந்தேன். வரல்லே”.
”பனகுடி அரசு இருக்கு. குதிரை இல்லே. சாரட் வண்டி இல்லே. எப்படி வருவேன் சொல்லு சென்னா”.
வீரு சொல்ல, ”வாயில் இருக்கு வார்த்தை, நினைச்சிருந்தா வந்திருக்கலாம்”, என்றாள் சிரித்தபடி சென்னா. அப்பக்கா கிட்டேயும் இதான் சொல்லணும்.
”நான் வரப் போறேன்னு அவ வந்திருக்க மாட்டா”.
அது உண்மைதான் என்று சொல்ல நினைத்து சும்மா இருந்தாள் சென்னா.
”அப்பக்கா எப்படி இருக்கா?”
வீரு கண்ணில் ஒரு வினாடி ஆர்வமும் அன்பும் மின்னி மறுபடி அவற்றில் அந்தகாரம் சூழ்ந்த மாதிரி நிலைகுத்தி சூன்யத்தில் வெறிப்பு.
”உன் பொண்டாட்டி எப்படி இருக்கான்னு மூணாவது மனுஷி எங்கிட்டே கேக்கறியே இதெல்லாம் நல்லா இருக்கா? அப்படி என்ன கருத்து வேற்றுமை உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே?”
”இத்தனை வருஷமா பிரிஞ்சிருக்கோம் இன்னும் உனக்குத் தெரியாதா சென்னா? இதிலே எங்களுக்கு ஒரு பெண் பிறந்து அம்மாவோடவே இருந்து வளர்ந்து கல்யாணமும் ரெண்டு வருஷம் முந்தி ஆயிடுத்து”.
வீரு முக்கியமான தகவலை சாதாரணமாகச் சொல்வது போல் பேசினார்.
”இப்படி பெண்ணைப் பெத்து கல்யாணமும் செய்து கொடுத்த அப்புறமும் சிக்கலா? ஏன்னு உன் வாயாலே சொல்லணும்னு எதிர்பார்க்கறேன். அப்பக்காவும் சரியா சொல்ல மாட்டேங்கிறா. போகுது. நான் காரியாலயம் போகணும். அடுத்து ஹொன்னாவர் போய்த் திரும்பணும். ஒருபாடு காரியங்கள் இருக்கு. நான் என்ன செய்யணும் உனக்கு வீரா?”
”அப்பக்கா கிட்டே சொல்லி உள்ளால் அரண்மனை அவளுக்கே அவளுக்கானதாக இருக்கட்டும். ஆனா, புட்டிகே அரசு மாளிகையை எனக்குத் தரச் சொல்லணும் சென்னா. இன்னிக்கு உள்ளால் அரண்மனைக்குப் போனேன். அப்பக்காவை, என் பெண்டாட்டியை சந்திக்கப் போனேன். அவ இல்லே அதனாலே யாரையும் அனுமதிக்கக் கூடாதாம், எனக்குக் கூட அனுமதி இல்லையாம். கோபத்துலே நான் அப்பக்காவின் பாதுகாப்பு படை வீரர்களை அடிக்க என்னை திரும்பி அடிச்சுட்டாங்க. பனகுடி அரசன்னு பெயர் தான். இருந்த நூறு கிராமத்திலே எழுபதை விஜயநகர பேரரசு எடுத்துக்கிட்டு அப்பக்கா கிட்டே அதில் துணி நெய்து ஏற்றுமதி செய்யற பல கிராமங்களை மாத்தி விட்டுட்டாங்க. வெல்லம் காய்ச்சற ஊரெல்லாம் விஜயநகர் கையிலே இருக்கு. கேலடி நாயக்க அரசுலே சேர்த்துடுவாங்களாம். எனக்கு என்னை மாதிரி பரம தரித்திரமா பத்து பதினஞ்சு கிராமம். அங்கே தான் என் ஆட்சி. நான் சாப்பிட்டு தூங்க ஒரு இடம் வேணாமா? கூரையும் குடிசையுமா ஏதோ எழுப்பி உட்கார்ந்திருக்கேன். ஊர் இல்லாத ராஜா. மனைவி இல்லாத, குழந்தை இல்லாத குடும்பம். ஏதோ போய்க்கிட்டிருக்கு”.
அவன் குரல் ஏமாற்றத்தின் சாயல் பூசி ஒலித்தது.
”ஒண்ணு செய். நீ இங்கே இருந்து குளிச்சு சாப்பிடு. நேமிநாதன் புது வேட்டியும் மேல்முண்டும், சீமைக் குப்பாயமும் பிறந்தநாள் விழாவுக்கு வாங்கி தச்சது ஏழெட்டு இருக்கு, உனக்கு தரச் சொல்றேன். நான் சாயந்திரம் வந்து விவரமாக பேசலாம். சரிதானா வீரா?”
”இல்லே சென்னா நான் போறேன்”.
”இன்னிக்கு ஒரு நாள் இரேன். பழைய கதை எல்லாம் பேச, பிரியமான ஒரே ஒரு பிள்ளைப் பிராய சிநேகிதன் இல்லையா நீ?”
”நிச்சயமா. நம்ம சிநேகிதம் நமக்குத்தான் முழுசாத் தெரியும் அப்பக்காவுக்குக் கூட தெரியாது. இருக்கட்டும். நான் இன்னொரு நாள் வரேன் சென்னா. பட்டம் விட்டதும் காற்றாடி சுத்தினதும் பெண் விளையாட்டுன்னாலும் நானும் உன்னோடு கோடு கிழிச்சுத் தாண்டி பாண்டி விளையாடினாலும், ஐரோப்பாவில் இருந்து வந்த கால்பந்தை பையன்கள் விளையாட்டுன்னாலும் நீயும் பாவாடையை இடுப்பிலே செருகிக்கிட்டு உதைச்சு விளையாடினதும் பத்தி பேச எவ்வளவு இருக்கு. ரெண்டு பேரும் ஆரோக்கியமாக சுவாசிச்சுட்டு இருக்கற நேரத்திலே பேசிடுவோம். வரட்டுமா என் ப்ரியமான களித்தோழி?”
அவன் புறப்பட்டான்.
உள்ளே போகத் திரும்பினாள். சென்னா என்று வீராவின் குரல்.
“ஒரு நூறு வராகன் கொடு அவசரமா வேண்டியிருக்கு”.
சென்னா கைதட்ட கோட்டை அதிகாரி அவசரமாக வந்து நின்றார். அவரிடம் மெதுவான குரலில் பணம் எடுத்துவரச் சொன்னாள் ராணி.
“எங்கே போகணும் இப்போ?” சென்னா கேட்டாள் வீராவை.
’நானா, ஜெர்ஸோப்பா போகணும்”.
’எப்படி போகப் போறே?”
’பெருவழி ஓரமா நின்னா, அரசன் நிக்கறான்னு போகிற வர்ற சாரட் எதுவாவது நிக்காதா என்ன? இன்னிக்கு அரசனை தெருவிலே பார்த்தேன். கொஞ்ச தூரம் நம்ம சாரட்டுலே என்னோட சவாரி பண்ணி இறங்கிப் போனார்னு ராத்திரி சாப்பாட்டுக்கு குடும்பம் ஒண்ணு கூடி இருக்கறபோது பெருமையா சொல்லிக்க அந்தக் குடிமகனுக்கு ஆசை இருக்காதா? ஜெர்ஸோப்பா போக எத்தனையோ வண்டி அப்படி வந்து நிக்குமே! வேறே எங்கேயாவது போகிற வண்டியாக இருந்துதுன்னா? இருக்கட்டுமே. என்னை பாதி தூரமாவது கொண்டு போய் இறக்கி விடற மாதிரி தான் இங்கே இருந்து போகிற பாதை எல்லாம் இருக்கு. அதுவும் சென்னா, நீ இருக்கப்பட்ட பாதை எல்லாம் ஜெர்ஸோப்பா துறைமுகத்துக்குப் போகிறதா போட்டு வச்சிருக்கே. அப்பக்கா உள்ளால் துறைமுகம் போகிறதா பாதை போட்டிருக்கா. மிளகை நீயும் ஏலத்தையும் வெல்லத்தையும் அவளும் கப்பல்லே ஏத்தி ஏத்தி ஐரோப்பாவிலும் அரேபியாவிலும் விற்று உங்க ரெண்டு தேசமும் வலுவா இருக்கு. நான் தான் ஒண்ணுமில்லாமே போயிட்டேன்”.
”நீ கொஞ்சம் உன் குடியை நிறுத்தி அரசாங்கத்திலே கவனம் செலுத்தினா உன் தேசமும் அப்படி ஆகும்”.
”எங்கே? ஒரு பத்து கிராமம். அதான் என் அரசு”.
பணத்தை எண்ணாமல் துணிப் பொதியில் போட்டுக் கொடுத்தாள் சென்னா.
”சென்னா, இதை நான் திருப்பிக் கொடுத்திடுவேன். ரொம்ப நன்றி. அப்பக்கா கிட்டே ரொம்ப கேட்டதா சொல்லு. வெறுங்காலோட நடக்க வேணாம்னு நான் சொன்னதா சொல்லு அவ கிட்டே. காலில் சேற்றுப்புண் வந்து நடக்க சிரமப் படறான்னு தகவல் வந்தது. பாவம் அவளால் எப்படி தாங்க முடியுதோ. எங்க மகள் பிள்ளைப்பேற்றுக்கு எப்போ உள்ளால் வரப் போறாளாம்? கிருஷ்ணன் மாதிரி குழந்தை பெத்துக்கணும். நேரிலே போய்ப் பார்க்க எனக்குத்தான் வாய்க்கலே. சரி என் பிரலாபம் இருக்கவே இருக்கு. உங்கப்பாவை பார்த்தேன் தெரியுமோ? நிஜமாத்தான்”.
பணத்தை வாங்கிக் கொண்டு போகும்போது வீரா சொன்னது இது. அதைக் காதில் சரியாக வாங்கியோ இல்லாமலோ சென்னா உள்ளே நடந்து விட்டாள்.
அது ஏன் வீராவும் ஆள்காட்டி விரலில் துணி சுற்றிக் கொண்டிருக்கிறான்? திடீரென்று ஆண்கள் ஆள்காட்டி விரலுக்கு என்ன ஆனது?
அந்தக் குடிகாரன் தெருவில் விழுந்து கையைக் காயப்படுத்திக் கொண்டிருக்கக் கூடும். நேமிநாதன் மதுவருந்துவானா? இந்த அரண்மனையையும் ஜெர்ஸோப்பா அரண்மனையையும் ஜெர்ஸோப்பா துறைமுகத்தையும் ஹொன்னாவரையும் தவிர அவன் எங்கே போக நேரம் கிடைத்தது? கிடைத்தாலும் ஓர் இனிய பிசாசு போல் ரஞ்சனா அவனைக் கையும் காலும் தன் வசீகரத்தால் பிணைத்து மாரோடு கட்டி வைத்திருக்க, மதுசாலை வேறெதற்குப் போக வேண்டும் அவன்?
மதுசாலை ஒன்றுக்குள்ளாவது போய் எப்படி இயங்குகிறது என்று பார்த்துவர சென்னாவுக்கு ஆசை. லிஸ்பன் போக முடிந்தால் அதுவும் பார்க்க வேண்டிய சமாசாரங்களில் ஒன்றாகப் பட்டியலில் சேர்க்கச் சொல்லலாம்.
வென்னீர் கிடாங்களில் நிரப்பி சென்னா வரத் தாதி காத்திருந்தாள்.
”தேடினீர்களா அம்மா?” தாதி மீங்கு கேட்டாள்.
”அடி மீங்கு நான் தேடினால் தான் வருவாயா? காலையில் என் காரியங்கள் என்ன என்று தெரியாதா என்ன உனக்கு? இப்போது குளிக்கும் நேரம். அடுத்து நவ்கர் மந்திரம் சொல்வது. அதற்கடுத்து பூஜை. அதற்கடுத்து முப்பது நிமிடம் ராமாயணம் வாசிப்பது. அடுத்து வைத்தியர் சந்திப்பு. உன் புருஷன் தான்”.
”அப்புறம் கசப்பு மருந்து கொடுக்கறதுக்காக என் வீட்டுக்காரரைத் திட்டுவது, அடுத்து தோசை ஓரமாக வேகாததற்காக என்னைத் திட்டுவது. இனிப்புப் பனிக்கட்டியை யார் மரத்தூள் பெட்டியில் வைத்தது என்று திட்டிக் கொண்டே ஒரு கட்டி எடுத்து அவசரமாக மறைத்துச் சாப்பிடுவது”.
மீங்கு சிரிக்காமல் சொன்னாள். சென்னாவுக்கு சந்தோஷமாக இருந்தது. இந்தக் காலை நேரத்தை வீர நரசிம்மனோ வேறே யாரோ நினைத்தாலும் பாழ்படுத்த முடியாது.
”வென்னீர் சூடு போதுமா அம்மா?”
தாதி கேட்க, குளிர்ந்த தண்ணீரில் குளிக்கணும்னு தோண்றது என்றபடி முக்காலியில் இருந்து எழுந்த போது மறதி காரணமோ என்னமோ துணி துறந்திருந்தாள்.