
(1)
ஒரே
பாழ் வெளி-
ஒரு மரம்
இருக்கக் கூடாதா?
நிழலுக்கு
ஒதுங்க அல்ல.
கூட
வெயிலுக்கு,
ஒரு துணைக்கு.
(2)
ஒரே
பாழ் வெளி
ஒரு மரம்
இருக்கக் கூடாதா?
ஒன்று
மில்லாததற்கு
ஒரு
காவலுக்கு
(3)
ஒரே
பாழ்வெளி
ஒரு மரம்
இருக்கக் கூடாதா?
ஒரு
சிறு பறவை
வான் முழுதும் தன்
சிறகுகளில் வசப்படுத்தி
வந்தமர்வதற்கு-
அமர்ந்தவுடனே
பறப்பதற்கு.
(4)
ஒரே
பாழ் வெளி
ஒரு மரம்
இருக்கக் கூடாதா?
ஒருசக்கர
சூரிய சைக்கிளில்
ஓட்டிப் பழகும் சூன்யம்
தப்பித் தவறி
முட்டி மோதி
நிற்பதற்கு
(5)
ஒரே
பாழ் வெளி
ஒரு மரம்
இருக்கக் கூடாதா?
வேறெதற்
கில்லையாயினும்
ஒரு வேளை
பாழ்வெளியே
நிர்க்கதியில்
சுருக்கில்
தொங்கித்
தற்கொலை
செய்து கொள்வதற்கு.