நடவுகால உரையாடல் – சக்குபாய்

ஆதிவாசிக் குடும்பங்களில் வீட்டிலுள்ள உணவுத் தானியங்கள் தீர்ந்து போய்விட்டால், தங்கள் சிறுமிகளை வேறு வீடுகளுக்குக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்கு அனுப்புவார்கள்; இதற்குக் கூலியாகத் தானியம் கிடைக்கும். சக்குபாயும் சிறுவயதில் இந்த வேலைக்கு அனுப்பப்பட்டாள். சிறுமியான அவளால் குழந்தையைத் தூக்கக்கூட முடியாது; அவளால் முடிந்ததெல்லாம் தொட்டிலை ஆட்டுவதுதான். ஏன், எதற்கு என்று உணராமலேயே வாழ்க்கையின் பல அனுபவங்களினுள் தள்ளப்பட்டிருக்கிறாள் சக்குபாய். ஆனால் இவற்றிலிருந்து ஒரு போராளியாக சக்குபாய் மீண்டு வந்திருக்கிறார். `கஷ்டகரி சங்கட்டனா’வின் உறுப்பினர் என்ற நிலையில் இன்று அவரால் எதையும் தைரியமாகக் கேள்விக்குள்ளாக்கவும் எல்லாவிதமான சுரண்டல்களையும் எதிர்த்துப் போராடவும் முடிகிறது. தான் தாக்கப்படலாம் என்றோ, சூனியக்காரி என்ற பழி தன்மேல் விழும் என்றோ, சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்படலாம் என்றோ சில நேரம் அவருக்கு அச்சம் தோன்றாமலில்லை. என்றாலும், தான் தனித்துப் போராடவில்லை என்று அவர் அறிந்திருப்பதால், போராட்டத்தை இன்னும் தொடர்கிறார். வரலாற்றின் ஒரு பகுதி சக்குபாயின் வாழ்க்கை. நாம் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

முன்னுரை

ஆதிவாசி சமூகத்தவரான சக்குபாய் காவித் தஹானு தாலுகாவிலுள்ள பந்த்கரைச் சேர்ந்தவர். சிறு விவசாயிகளுக்காகவும் நிலமற்ற கூலித்தொழிலாளர்களுக்காகவும் போராடி வரும் கஷ்டகரி சங்கட்டனா (பாட்டாளிகள் சங்கம்) என்ற மக்களமைப்போடு கடந்த பத்தாண்டுகளாகப் பணியாற்றி வருபவர். அவரது கிராமத்தில் `சங்கட்டனா’ உருவாகுவதற்கு சக்குபாய்தான் ஊர் மக்களின் ஆதரவைப் பெற்றுத்தந்தார். கடினமான வாழ்க்கை அவருடையது. ஆனால் அந்த வாழ்க்கை அவரை மன உறுதியுள்ளவராக்கியிருக்கிறது. ஜூலையில் நடக்கவிருந்த வாய்மொழி வரலாற்றுப் பயிலரங்கில் பங்கேற்கும்படி அழைப்பதற்காக நாங்கள் பந்த்கர் சென்றபோது அவர் நடவு வேலையில் மும்முரமாக இருந்தார். முதலில் சிறிது தயங்கிய அவர் ஷிராஸ் பல்ஸாராவும் மீனா தோதடேயும் அவரோடு உரையாடப் போகிறார்கள் என்று சொன்ன பிறகு வருவதற்குச் சம்மதித்தார்.

ஷிராஸ் பல்ஸாரா பல வருடங்களாக கஷ்டகரி சங்கட்டனாவின் செயல்பாடுகளில் தீவிரமாகப் பங்கேற்று வருபவர். ஷிராஸ் மற்றும் கணவர் பிரதீப் இருவரின் பொறுப்பில் வளர்ந்தவர் மீனா தோதடே. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கல்வி பெறுவது மிகக் கஷ்டமான விஷயம். ஜில்லா பரிஷத் பள்ளிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான். மேலும் வேலைக்காக வருடத்தில் ஒன்பது மாதங்கள் வழக்கமாக வெளியிடங்களுக்குச் சென்றுவிடுவார்கள் மக்கள். இடையில் மூன்று மாதங்கள் பயிர் செய்வதற்காக ஊரில் வந்து இருப்பார்கள். பழங்குடியினர் நலத்துறையால் திறக்கப்பட்ட ஆஷ்ரம் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. மீனாவின் தந்தை காலுராம் தோதடே பால்கரில் சோசலிச இயக்கத்தைக் கூட்டியெழுப்பிய மூத்த தலைவர்களில் ஒருவர். அவரது இயக்கம் பூமி சேனா என்றழைக்கப்பட்டது. நிலத்தகராறுகள் மற்றும் விவசாயிகளின் கடன் பிரச்சினைகள் ஆகியவற்றை முன்னெடுத்துப் போராடி வந்தார் அவர். இயக்கத்தில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்ட அவரால் குழந்தைகளின் படிப்பில் கவனம் காட்ட முடியவில்லை. மீனா ஒரு ஆஷ்ரம் பள்ளியில் கற்றார். அங்கேயே வளர்ந்து வந்த அவரைப் பின்னர் ஷிராஸ் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு கல்வி அளித்து வந்தார்.

சக்குபாய் மீனாவுக்கும் ஷிராஸிற்கும் மிகவும் நெருங்கியவர். பல கல்லூரிகளைச் சேர்ந்த முக்கியமான இருபத்தைந்து மாணவியரும், மாணவரும் கலந்து கொண்ட ஸ்பாரோ பயிலரங்கு 1998 ஜுலை 26ல் நடந்தது. மீனா மற்றும் ஷிராஸ் இவர்களுடன் சக்குபாய் தயக்கமின்றி கலந்துரையாடினார். அவர் அதிகமாகப் பேசுபவரல்ல என்றாலும் தன் வாழ்க்கை, தொழில் பற்றி எந்தத் தடையுமின்றிப் பேசினார். அது ஒரு மழை நாள். அவரைப் பொறுத்த வரையில் நடவு செய்வதற்கு ஏற்ற நாள். இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் அவர் நடவு செய்ய விரும்புவாரா அல்லது உரையாடுவதற்கு விரும்புவாரா என்று அவரிடம் கேட்டபோது, நடவு செய்வதுதான் பேசுவதைவிட எளிய வேலை என்றார். அன்று மாலை அவர் மிகவும் சோர்வுற்றுக் காணப்பட்டாலும், நடவு செய்ய அருமையான நாள் ஒன்றை எங்களுக்கு மனமுவந்து ஒதுக்கித் தந்ததில் எந்த வருத்தமும் அவர் முகத்தில் தென்படவில்லை.

சக்குபாயின் விவரணை வடிவத்தில் இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சேர்த்துள்ள நாட்டார் கதைகள் அஞ்சலி மான்டேரோ மற்றும் பி. ஜயசங்கர் இணைந்து இயக்கிய கஹாண்கார் – அஹாண்கார் என்ற குறும்படத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

அக்டோபர் 1998 சி. எஸ். லக்ஷ்மி

புகைப்படம்: ப்ரியா டிஸூஸா
©
Sound & Picture Archives for Research on Women

மஹாதேவனும் கங்காகௌரியும்

மொழிபெயர்ப்பு: அருண்மொழி நங்கை

தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொண்ட ஆதி தம்பதியினர் மஹாதேவரும் அவரது துணைவியான கங்கா கௌரியும். மஹாதேவன் என்றால் `கடவுள்களுக்கெல்லாம் கட வுள்’ என்று அர்த்தம். அவர்கள் இந்தப் பிரபஞ்சத்தையும் மற்றச் சிறிய கடவுள்களையும் படைத்து அவர்களுக்கு வெவ்வேறு ராச்சியங்களையும் கொடுத்தனர். எல்லாம் சுமுகமாகவே நடந்தது. ஆனால் அவர்களில் சிலர் மஹாதேவரின் அழைப்பை அலட்சியம் செய்து அவருடைய அவைக்குச் செல்லவில்லை. எனவே மஹாதேவர் மிகவும் கோபமடைந்து இந்தப் பிரபஞ்சத்தை நீரில் முழ்கச் செய்தார். சிலர் மட்டும் பிரளயத்தில் எஞ்சினர். புலி (வாக்)யின் குகைக்குள் அடைக்கலம் புகுந்தவர்கள் `வாகட்’ என்ற குடும்பப்பெயரால் அழைக்கப்பட்டனர். கத்தரிக்காய்(வாங்கி)யை பிடித்து மிதந்து கரையேறியவர்கள் `வாங்கட்’ என்று அழைக்கப்பட்டனர். `குராடஸ்’ எனப்படுபவர்கள் மிதக்கும் கோடரி (குராட்)யைப் பிடித்துக் கரையேறியவர்கள். தங்கிவிட்டவர்கள் (தாக்கா) `தாக்கரே’.

சக்குபாய்: நான் சுகதம்பா என்ற இடத்திலிருந்து வருகிறேன். அங்குதான் என் பெற்றோர் வசிக்கின்றனர். நாங்கள் எட்டு குழந்தைகள். நான் ரொம்பச் சின்னவளாக, ஐந்தோ ஆறோ அதற்கும் குறைவான வயதில் இருக்கும்போதே, என்னுடைய மூத்த சகோதரிகள் மூவருக்கும் திருமணமாகிவிட்டது.

என்னுடைய தாய் தந்தையர் ஏழை விவசாயிகள். அதனால் அவர்கள் என்னையும் என்னுடைய சகோதரனையும் பிற வீடுகளுக்கு பொராய் வேலை செய்ய அனுப்பி வைத்தனர். பொராய் என்றால் மற்றவர்களின் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் நபர் என்று அர்த்தம். நான் தெஹேராவில் உள்ள என்னுடைய சகோதரியின் வீட்டில் குழந்தையைக் கவனித்துக்கொள்ள அனுப்பப்பட்டேன். நான் மிகச் சிறியவளாக இருந்ததால் அவள் குழந்தையைத் தூக்க முடியவில்லை. அதற்காக என் சகோதரியிடம் அடி வாங்கினேன். ஒருநாள் என் பெற்றோர் வீட்டுக்குக் கிளம்பிவிட்டேன். நாள் முழுவதும் நடந்தால்தான் எங்கள் வீட்டுக்குப் போக முடியும். ஆனாலும் நான் நடக்கத் தொடங்கினேன். பாதி நாள் நடந்து பாதி தூரம் வந்தபோது என்னுடைய அக்காளின் கணவன் என்னைப் பிடித்துவிட்டான்.

என் கையைப் பிடித்து திரும்பி வருமாறு வற்புறுத்தினான். நான் மறுத்தேன். என்னை அடித்துத் திரும்பக் கூட்டிச்சென்றான். பிறகு வெகுகாலம் கழித்து நான் என் பெற்றோரிடம் திரும்பினேன்.

நான் திரும்பி வந்தபோது, மழைக்காலம் தொடங்கியிருந்தது. வீட்டிலிருந்த எல்லா தானியங்களையும் என் பெற்றோர் தீர்த்து விட்டிருந்தனர். ஆகவே திரும்பவும் நான் தீபாவளி வரைக்கும் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் வேலைக்காக இன்னொரு வீட்டிற்கு அனுப்பப்பட்டேன். இதற்காக என் பெற்றோர் இரண்டு அல்லது ஒன்றரை மணங்கு அரிசியைப் பெற்றுக்கொண்டனர். அது அவர்களுக்குத் தீபாவளி வரைக்கும் போதுமானதாக இருந்தது. நான் வேலை பார்த்த வீட்டில் எனக்கு உணவும், தீபாவளிக்குத் துணியும் கிடைத்தன. நான் அப்போதும் ஒரு குழந்தையைத் தூக்க முடியாத அளவு சிறியவளாயிருந்தேன். ஆனால் என்னால் தொட் டிலை ஆட்ட முடிந்தது. அதைச் செய்தேன். தீபாவளி முடிந்ததும் நான் வீடு திரும்பினேன். பிறகு மாடு மேய்க்க அனுப்பப்பட்டேன்.

தலைச் சும்மாடு

வெகுகாலம் முன்பு ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். கணவன் காலையில் வயலுக்குச் செல்வான். மனைவி, தானியங்களைக் குத்துவது, குழந்தைகளைக் குளிப்பாட்டிச் சோறூட்டுவது, சமைப்பது, தண்ணீர் எடுப்பது, துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளை செய்து முடிப்பாள். பிறகு கணவனுக்கு மதியச் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வயலுக்குச் சென்று வயல் வேலைகளில் அவனுடன் சேர்ந்துகொள்வாள்.
அவள் கணவன் அவள் எப்போதும் உணவைத் தாமதமாக எடுத்துக்கொண்டு வருகிறாள் என்று குறை கூறுவது வழக்கம். அவள் சலிப்படைந்து ``ஒருநாள் என் வேலையைச் செய்; உன் வேலையை நான் செய்கிறேன்” என்றாள். அவனும் சம்மதித்தான். மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து அவள் மக்காச்சோளத்தை பொடித்து மாவாக்கி குழந்தைக்கு ஊட்டிவிட்டு அதையும் தூக்கிக்கொண்டு வயலுக்குச் சென்றாள். அவள் கணவன் மீதி வீட்டுவேலைகளை முடித்த போது மிகவும் தாமதமாகியிருந்தது. துரிதமாக அவன் ஒரு துணியை எடுத்துச் சும்மாடாக்கித் தலையில் வைத்தான். அதன்மீது பாத்திரங்களை அடுக்கிக்கொண்டு கிளம்பினான்.
வழியில் நிறைய மனிதர்களைச் சந்தித்தான். அவன் அவர்களைக் கடக்கும்போது அவர்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டு சென்றனர். ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று அவனுக்கு ஒரே வியப்பு. கடைசியாக அவன் ஒரு கிழவியைச் சந்தித்தான். அவள் ``மகனே, உன் தலையில் என்ன சுமந்துகொண்டு போகிறாய்?” என்று கேட்டாள். ``மதிய உணவுக்கு பாக்ரி (ரொட்டி) கொண்டு போகிறேன்” என்றான் அவன். ``அதற்கும் கீழே?” என்று கேட்டாள் அவள். ``பருப்புக்கறி” என்றான் அவன். ``அதற்கும் கீழே?” என்றாள் அவள். ``என்னுடைய சும்மாடு”. ``சரி, அதற்கும் கீழே?” என்றாள். தன்னையே கீழ்நோக்கி பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி. முழு நிர்வாணமாக இருந்தான் அவன். வீட்டு வேலை அவசரத்தில் தன்னுடைய கோவணத் துணியை எடுத்துத் தலைமேல் சும்மாடாக வைத்திருக்கிறான். பிறகு அவன் வயலுக்குப் போய்ச் சேர்ந்தபோது அவன் மனைவி அவனைப் பார்த்துவிட்டு அமைதியாகத் தொடுவானத்தைச் சுட்டிக்காட்டினாள். அங்கே சூரியன் மறைந்து கொண்டிருந்தான்.

சக்குபாய்: பத்து வயதில் திருமணத்தைப் பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. தினமும் மாடுகளை மேய்த்துவந்தேன். ஒரு பெண்மணி பந்த்கரிலிருந்து கட்சிரோலிக்கு தினமும் சென்று தன் மகனுக்கு உணவு கொடுத்துவந்தாள். ஒருநாள் அவள் போகிற வழியில் என் வீட்டுக்கு வந்தாள். என்னைப் பார்த்தாள். பிறகு ஒருநாள் அவள் நான்கைந்து பேர்களுடன் வந்து என்னை அவள் மகனுக்கு மணப்பெண்ணாக நிச்சயித்துவிட்டுச் சென்றாள். என்னுடைய மாமாவும் மாமியும் இத்தனை சிறிய வயதில் எனக்குத் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் என் தந்தை மிகுதியாகக் குடித்திருந்ததால் அதைக் கேட்கும் நிலையில் இல்லை. எனக்குத் திருமணம் நிச்சயம் ஆனதுகூட எனக்குத் தெரியாது. நான் திருமணம் புரியப்போகும் ஆளையும் நான் பார்த்திருக்கவில்லை.

அவன் என்னைவிட வயதில் ரொம்ப பெரியவன். எத்தனை வயது என்னைவிட அவன் அதிகம் என்றுகூட எனக்குத் தெரியாது. அவனுடைய தங்கைக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தாள். அப்போதும் அவன் பள்ளி சென்று கொண்டிருந்தான். அவன் பள்ளிக் கல்வியை முடித்தபிறகு சிறிதுகாலம் மாடுமேய்க்கச் சென்றான். அதன்பிறகு ஒரு பள்ளி ஆசிரியன் ஆனான். அவன் இருபது அல்லது இருபத்தைந்து வயது என்னைவிட பெரியவனாக இருக்கலாம். ஊனமுற்றவனும் கூட. அவனுடைய ஒரு கையும் ஒரு காலும் சற்று குட்டையானவை. என்னை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தார்கள்.

இந்தத் திருமண வாழ்க்கையில் பல வேதனைகள். ஆனால் என்னுடைய மாமியார் தங்கமானவள். அவள் எனக்குத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டிவிடுவாள்; என்னுடைய புடவைகளைத் துவைத்துப்போடுவாள்; என்னை அலங்கரிப்பாள். “என் மகனைவிட்டு எங்கேயும் போய்விடாதே” என்று அடிக்கடி சொல்லுவாள். தினமும் அவள் என்னை ஆற்றுக்கு அழைத்துச் சென்று, குளிப்பாட்டிவிடுவாள். சாப்பிடும்போது என் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வாள். திருமணத்துக்கு வேறு ஓர் அர்த்தமும் இருந்தது. என் கணவனோடு `பேசுவது’. கணவன் என்னுடன் `பேச’ விரும்பும்போது என்னை ஓர் அறையில் போட்டு அடைப்பதும் நான் இணங்க மறுப்பதும் வழக்கமாக இருந்தது. அவன் என்னை அடிப்பான். காலையில் கதவு திறந்ததும் நான் பாய்ந்து வெளியேறுவேன். என்னைவிட மிகவும் வயதில் மூத்த அவன் வற்புறுத்திய அந்த நாட்களில் நான் வயதுக்குக்கூட வந்திருக்கவில்லை.

ஒருநாள் நான் காட்டுக்குப் போய் ஒளிந்து கொண்டேன். என்னுடைய கணவனின் மைத்துனனும், எனக்கு ஒருவிதத்தில் சொந்தக்காரனுமான மேகே, விளக்கை எடுத்துக்கொண்டு என்னைத் தேடி வந்தான். அவன் என்னைக் கண்டுபிடித்தபோது “ ஓடினால் துப்பாக்கியால் உன்னைச் சுட்டு விடுவேன். வீட்டுக்கு வந்து ஒழுங்காக இரு. இல்லாவிடில் கொன்று விடுவேன். உன் அப்பா அம்மாவிடம் எனக்குப் பயமில்லை” என்றான். என்னுடைய பெற்றோரிடமும் என்னால் திரும்பி போக முடியவில்லை. காரணம் அவர்கள் நான் இருக்க வேண்டியது கணவனுடைய வீட்டில்தான் என்றார்கள். நான் ஓடிப்போவதும் திரும்ப அழைத்துவரப்படுவதும் அடிக்கடி நடந்தது.

என்னுடைய மாமியார் இறந்ததும் நிலைமை இன்னும் மோசமாகியது. நான் பெரியவளான அதே வருடம், எனக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. குழந்தை மிகவும் பலவீனமாக இருந்ததால் இறந்துபோயிற்று. என்னுடைய மாமியார் இறந்த பிறகு என்னுடைய பவலானி (என் கணவனின் மூத்த சகோதரனின் மனைவி) என்னை நல்ல வேலை வாங்கிவிட்டு நிறையத் தண்ணீர் சேர்த்த ஆம்பில் (கேழ்வரகுக்கூழ்) கொடுப்பாள். அவர்கள் சப்பாத்தி சாப்பிடும்போது எனக்கு ஆம்பில்தான் கிடைக்கும். நான் அழுவேன். வேறு வழியில்லையாதலால் பொறுத்துக்கொள்வேன். எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன : ஒரு மகளும், இரண்டு மகன்களும்.

ஜம், மரணதேவன்

முன்பு ஒரு காலத்தில் ஒரு பிராமணன் தன் மனைவி மகளுடன் வாழ்ந்து வந்தான். அவர்கள் வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளை (கர்_ஜவாய்) ஒருவன் வேண்டும் என்று விரும்பினர். தரகன் ஒருவனோடு ஓர் ஆதிவாசி மாப்பிள்ளையைப் பார்க்கக் கிளம்பினர். ஏனென்றால் ஆதிவாசிகள் கடின உழைப்புக்குப் பேர்போனவர்கள். இறுதியில் ஓர் ஏழை ஆதிவாசி விதவையின் மகனைக் கண்டுபிடித்து, கல்யாணமும் நடந்தது. அந்த ஆதிவாசி மணமகன் மாமனார், மாமியாரை ஒருபோதும் விட்டுப் போவதில்லை என்று சத்தியம் செய்தான். அதை சத்தியவாக்குபோல வைத்து கொண்டு அவன் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். விரைவிலேயே வயதான பிராமணனும் அவன் மனைவியும் தங்கள் மகளிடம் மருமகனின் சோம்பேறித்தனத்தைப் பற்றிக் குறைகூறத் தொடங்கினர். மகள் இதைக் கணவனிடம் தெரிவித்தாள். உடனே அவன் ``உன் தந்தையை ஒரு கொல்லனிடம் போய் தச்சனுக்கு வேண்டிய கருவிகளையெல்லாம் வாங்கி வரச் சொல்” என்றான். எல்லா உபகரணங்களோடும் ஆதிவாசி காட்டுக்குள் சென்று ஓர் அழகான, நவீனமான அலமாரி ஒன்றைச் செய்தான். இதே நேரம் மரணத்துக்கு அதிபதியான ஜம்மின் அவையில் இன்னொரு கதை நடந்துகொண்டிருந்தது. கால், வேல் என்ற தன்னுடைய இரு தூதர்களிடமும் அந்த பிராமணனின் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாக ஜம் கூறினான். கால், வேல் என்ற இரண்டு தூதர்களும் பிராமணனை அவைக்கு அழைத்துவரச் சென்றனர். அப்போது பிராமணன் வீட்டில் இல்லை. மருமகன் அவர்களை எளிதில் மரணதேவனின் தூதர்களெனக் கண்டுகொண்டான். மருமகன் அவர்களிடம் ``பிராமணன் காட்டிற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான். நான் உங்களை அங்கே அழைத்துப் போகிறேன்” என்றான். தூதர்கள் அவனைப் பின்தொடர்ந்தனர். அங்கு சென்றதும் அவன் அந்த அலமாரியை அவர்களுக்குக் காட்டினான். அதனுள் பிராமணன் ஒளிந்திருப்பதாகக் கூறினான். அவனைப் பிடிப்பதற்கு அலமாரியின் உள்ளே அவர்கள் நுழைந்ததும் மருமகன் இரு தூதர்களையும் உள்ளே வைத்துப் பூட்டிவிட்டான்.
தூதர்களிடமிருந்து எந்தத் தகவலும் வராது போகவே, என்ன நடந்திருக்கும் என்று அறிய ஜம் தானே பூமிக்கு வர முடிவு செய்தான். ஒரு பார்சி மது வியாபாரியாக தன்னை வேடம் மாற்றிக்கொண்டு ஒரு மதுக்கடையை அந்த கிராமத்தில் திறந்தான். அவன் வாடிக்கை பெருகும் பொருட்டு அங்கு மதுவருந்த வருபவர்களுக்கு முதல் கோப்பை மது இலவசம் என்று அறிவித்தான். இது கடையை மிகவும் பிரபலப்படுத்தியதோடல்லாமல் நிறையக் குடிகாரர்களின் உளறல்களும், உரையாடல்களும் காதில் விழ வழி செய்தது. ஆதிவாசியும் அவனது மாமனாரும் அங்கே போய் இலவசமாகக் குடித்தனர். கொஞ்சம் குடித்து முடிந்ததும் அவர்கள் இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர். மருமகன் அலமாரி ரகசியத்தை உளறிவிட்டான். மது வியாபாரியாக இருந்த ஜம் எல்லாவற்றையும் உற்றுக் கேட்டான். இந்தக் கதையை நம்பாதவன்போல் நடித்தான் ஜம். இறுதியில் ஜம்மை மருமகன் காட்டிற்கு அழைத்துச் சென்றான்.
ஜம் அலமாரியைத் திறந்தான். காலும், வேலும் விடுதலை செய்யப்பட்டனர். ``நாம் இந்த இளைஞனின் உயிரை எடுத்துக்கொண்டு போகலாம். இவன் பிராமணனைவிட புத்திசாலியாக இருக்கிறான்” என்று ஜம் சொன்னான். இப்படியாக மது வியாபாரியாக வந்த ஜம் ஆதிவாசியின் மரணத்துக்குக் காரணமானான்.

சக்குபாய்: என்னுடைய மகள் சவிதாவுக்கும் எங்கள் வழக்கப்படி பனிரெண்டு வயதில் திருமணம் நடந்தது. ஆனால் அவளது மாமனார் அவளை மோசமாக நடத்தினார். நான் என் மருமகனிடம் “வேண்டுமானால் உன் தந்தையுடன் தங்கியிரு. என் மகளை என்னுடன் தங்கவைத்து நான் கவனித்துக் கொள்வேன்” என்று சொன்னேன். என் மகளின் மாமனார் அடிக்கடி அவள் சீதனம் எதுவும் கொண்டுவரவில்லை என்று குறை கூறிக்கொண்டிருந்தார். என் மருமகன் எந்த வேலையும் செய்யவில்லை. அவனுக்கு விவசாயம் செய்யவும் தெரியவில்லை. அதனால்தான் `உன் தந்தையுடன் இரு’ என்று சொன்னேன். ஆனால் என் மருமகன் என்னுடன் வந்து தங்குவதற்கு விருப்பமிருப்பதாகத் தெரிவித்தான். எனவே என் மகளும் மருமகனும் என்னுடன் வந்து தங்கினர். விவசாயமே தெரியவில்லை அவனுக்கு. ஆனால் நான் படிப்படியாகச் சொல்லிக்கொடுத்தேன். இப்போது அவனுக்கு எப்படி அறுவடை செய்வது என்று தெரியும். என்னுடைய மகளுக்கு இரண்டு குழந்தைகள்.

நான் என்னுடைய மகன்களை அவர்களின் சிறப்பான எதிர்காலத்துக்காகப் படிக்கவைத்தேன். ஆனால் அவர்கள் நன்றாகப் படிக்கவில்லை. மூத்தமகன் பனிரெண்டாம் வகுப்பிலும் இளையவன் பத்தாம் வகுப்பிலும் தோற்றனர். அவர்கள் எந்த வேலையும் செய்யமாட்டார்கள். கெட்ட சகவாசம் வைத்துக்கொண்டு வீடியோ படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நான் ஏதாவது சொன்னால் என்னைத் திட்டுவார்கள். அவர்களுக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. என்னுடைய கணவரும் இப்போது வேலை செய்வதில்லை. வேலை செய்யாவிட்டால் அவர்களுக்குச் சோறு போட என்னால் முடியாது என்று அவர்களிடம் சொல்லக்கூட முடியாது. காரணம் நான் நாள் முழுவதும் வயல்வேலைக்குப் போயிருப்பேன். அவர்கள் தாங்கள் விரும்பியதைச் சமைத்து உண்பார்கள். இப்பொழுது என்னுடைய மூத்த மகனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. என்னுடைய மகள் மட்டும்தான் எனக்கு வயலிலும் மற்ற வேலைகளிலும் உதவுகிறாள். ஏன் மக்கள் ஆண் குழந்தைகளை விரும்புகிறார்கள், பெண் குழந்தைகளைக் கொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மகள்தான் என்றைக்கும் அம்மாவுக்கு உதவுவாள்.

எலி

ஒரு காலத்தில் ஒரு எலி இருந்தது. அதற்கு வாலில் ஒரு முள் குத்திவிட்டது. அது யாரை உதவிக்குக் கூப்பிடலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தது. விறகைத் தலைச்சுமையாகச் சுமந்துசெல்லும் ஒரு பெண்ணை அது பார்த்தது. ``சகோதரியே, இந்த முள்ளை எடுத்துவிடு, தயவு செய்து எடுத்துவிடேன்” என்றது எலி.
அவள் அரிவாளால் அதன் வாலைச் சிறிது பிளந்து அந்த முள்ளை எடுக்க முயன்றாள். அந்த அரிவாள் கை தவறி விழுந்து வாலின் நுனியை அறுத்துவிட்டது. எலிக்குக் கோபம் வந்தது. ``என்னுடைய வாலைத் திருப்பிக்கொடு அல்லது உன்னுடைய அரிவாளை எனக்குக் கொடு” என்றது. அந்த ஏழைப்பெண் தன் அரிவாளை இழந்தாள். எலி அரிவாளை எடுத்துக்கொண்டு போய்விட்டது. வாலில் முள்ளுடன் இருந்த எலி அரிவாள் உள்ள எலியாக மாறியது.
அரிவாளைச் சுமந்து கொண்டு வந்த எலி கூடை முடைபவர்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. அவர்கள் மூங்கிலைத் தங்கள் பற்களால் பிளந்துகொண்டிருந்தனர். ``என்னுடைய அரிவாளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலை எளிதாகப் போய்விடும்” என்றது எலி. இந்த உபகாரத்திற்கு அவர்கள் நன்றி சொன்னார்கள். விரைவிலேயே அரிவாள் உடைந்தது. உடனே எலி ``என்னுடைய அரிவாளைத் திருப்பித் தாருங்கள் அல்லது உங்கள் கூடைகளைத் தாருங்கள்” என்று நிபந்தனை போட்டது. அவர்களுடைய கூடைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றது. வாலில் முள்ளுடன் இருந்த எலி சில கூடைகள் உள்ள எலியாக மாறியது.
எலியின் அடுத்த விஜயம் குயவர்கள் நிரம்பிய கிராமம். குயவர்கள் களிமண்ணைக் கைகளில் சுமந்து சென்று கொண்டிருந்தனர்.  “என்னுடைய கூடைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வேலை எளிதாகப் போய்விடும்” என்றது. அவர்களும் நன்றி தெரிவித்தனர். அன்றைய தினம் அவர்கள் நிறைய பானைகள் செய்தனர். விரைவிலேயே கூடைகள் எல்லாம் நைந்துவிட்டன. உடனே எலி ``என்னுடைய கூடைகளைத் திருப்பித் தாருங்கள் அல்லது பானைகளைத் தாருங்கள்” என்றது. இப்படியாக வாலில் முள்ளுடன் இருந்த எலி பானைகள் உள்ள எலியாக ஆகியது.
அடுத்தக் கிராமத்தில் மக்கள் காய்கறிகள் பயிரிட்டனர். செடிகளுக்கு அவர்கள் நீர் இறைக்கச் சிறிய பாத்திரங்களைப் பயன்படுத்தினர். நிறைய பானைகளுடைய இந்த எலி ``என்னுடைய பானைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலை எளிதாகப் போய்விடும்” என்றது. அவர்கள் உதவிக்கு நன்றி தெரிவித்தனர். பானைகள் உடைந்தன. ``என்னுடைய பானைகளைத் திருப்பித் தாருங்கள் அல்லது உங்களுடைய காய்கறிகளைத் தாருங்கள்” என்றது எலி. இப்படியாக வாலில் முள்ளுடன் இருந்த எலி காய்கறிகள் உள்ள எலியாக மாறியது.
பிறகு எலி பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மாடு மேய்ப்பவர்களின் கிராமத்திற்கு வந்தது. அவர்களிடம் ``என்னுடைய காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல விருந்து சாப்பிடுங்கள்” என்றது எலி. விருந்து முடிந்தவுடன் ``என்னுடைய காய்கறிகளைத் திருப்பித் தாருங்கள் அல்லது உங்களுடைய மாட்டைத் தாருங்கள்” என்றது. வாலில் முள்ளுடன் இருந்த எலி ஒரு காளை மாட்டுக்குச் சொந்தக்காரனான எலியாக ஆனது.
எலி காளைமாட்டுடன் வரும் வழியில் ஆதிவாசி விவசாயி ஒருவனைப் பார்த்தது. அவனிடம் இளைத்த ஒரேயொரு காளை மட்டுமே இருந்தது. உழும்போது இன்னொரு நுகத்தில் மாட்ட காளையில்லாததால் தன் மனைவியை மற்ற முனையில் கட்டியிருந்தான். அதை பார்த்த எலி ``இப்படியா உன்னுடைய நிலத்தை உழுகிறாய்? என்னுடைய காளையை எடுத்துக் கொள். உன்னுடைய வேலை எளிதாகும்” என்றது. விவசாயி எலிக்கு நன்றி சொன்னான். ஏற்கனவே பஞ்சத்தில் அடிபட்டிருந்த எலியின் காளை சீக்கிரமே இறந்துபோயிற்று. எலியும் வழக்கம்போலவே ``என்னுடைய காளையைத் திருப்பித் தா அல்லது உன் மனைவியைத் தா” என்று சொல்லி அவனுடைய மனைவியைப் பெற்றது.
இ படியாக வாலில் முள்ளுடன், அரிவாளுடன், கூடைகளுடன், நிறைய பானைகளுடன், நிறைய காய்கறிகளுடன், பெரிய காளைமாட்டுடன் இருந்த எலி கடைசியில் ஆதிவாசியின் மனைவியை உரிமையாக்கிக்கொண்ட எலியாக மாறியது.

சக்குபாய்: `கஷ்டகரிசங்கட்டனா’ என்னுடைய சொந்த ஊரான சுகதம்பாவில் பழங்குடியினருக்காக சேவை செய்து வந்தது. என்னுடைய சகோதரனும் மற்ற உறவினர்களும் அதன் உறுப்பினர்களாக இருந்தார்கள். என்னையும் அதில் பங்கெடுக்கச் சொன்னார்கள். ஆனால் என் கணவன் அரசு ஊழியன், ஆசிரியன். நான் சங்கட்டனா நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் வேலையை இழக்க நேரிடும் என்று பயந்தான். அதனால் அவன் என்னைச் சேர அனுமதிக்கவில்லை.

பந்த்கரில் ஓர் ஆள் இருந்தான். அவன் வனத்துறைக்குச் சொந்தமான ஓரிடத்தில் வீடு கட்டியதால் அவர்கள் அவனுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். அவன் என்னிடம் வந்து “நாம் சுகதம்பாவிற்குப் போய் சங்கட்டனா ஆட்களிடம் பேசிப் பார்க்கலாம்” என்று சொன்னான். அங்கிருந்த சங்கட்டனாவின் உறுப்பினர்கள் சங்கட்டனாவை அவரவர் சொந்தக் கிராமத்தில் உருவாக்குவதே சிறந்தது என்று சொன்னார்கள். நாங்களும் ஒத்துக்கொண்டோம். பிஜுர்பாடாவில் ஆறு நாட்கள் முகாம் ஒன்றிற்கு காலுராம்பாவும், பிரதீப்பாவும் ஏற்பாடு செய்தார்கள். இந்த முகாமில் என்ன நிகழ்ந்தது என்று சரியாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் சங்கட்டனா எங்கள் கிராமம் ஒன்றில் உருவானது. வனத்துறை ஊழியர்கள், காவல் நிலையம் ஆகிய இரண்டுக்கும் எதிராக நாங்கள் நடத்திய போராட்டங்கள் எனக்கு நன்றாக நினைவில் உள்ளன.

எங்களுடைய சாதியில் பெண்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. சில ஆண்கள் இருதாரமுடையவர்கள். ஆண் உயிருடன் இருக்கும்வரை எல்லாம் சரியாக இருக்கும். அவன் இறந்த கணமே பெண்கள் ஒருவரோடொருவர் சண்டைபோட ஆரம்பித்துவிடுவார்கள். இந்த மாதிரியான திருமணங்களைத் தடுக்க நாங்கள் போராடினோம். இரண்டு ஆண்களை இரண்டாம் திருமணம் வேண்டாம் என்று கூறி இணங்க வைத்தோம். இன்னும் மூன்று ஆண்கள் எங்களை மீறி திருமணம் புரிந்துகொண்டார்கள். அவர்கள் என் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எல்லா ஆண்களும் நாங்கள் சொல்வதைச் செவிமடுக்கவில்லை. “நீங்கள் ஒன்றும் எங்களுக்குச் சோறு போடவில்லை” என்பார்கள் சிலநேரம்.

பந்த்கரில் ஒருவன் இருந்தான். திருமணமாகி ஐந்து வருடம் கழிந்தவுடன் அவன் தன் மனைவி சவிதாவிடம் “உன்னால் ஒரு குழந்தையைப் பெற்றுத் தர முடியவில்லை. நான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்” என்று சொல்ல ஆரம்பித்தான். இருவருமே மருத்துவமனைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று சொல்லிப் பார்த்தாள் அவள். ஆனால் அவள் கணவன் அவளால் கருத்தரிக்க முடியாது என்றே சொல்லி வந்தான். உண்மையில் அவன் இன்னொரு பெண்ணைப் பார்த்து வைத்திருந்தான். ஒருநாள் அவன் போய் அந்த புதிய மணப்பெண்ணைத் தன்னோடு கூட்டி வந்தான். எங்களுடைய கொங்கணி சாதியில் ஒரு வழக்கமுண்டு. புதிதாகத் திருமணமாகி வரும் பெண் கணவன் வீடு புகும்போது முதல் மனைவி ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும்.

சவிதா உண்மையில் நிறையத் துன்பப்பட்டாள். நாங்கள் அவள் கணவனிடம் வீட்டிலும் நிலத்திலும் அவளுக்குப் பங்கு கேட்டோம். அவன் “உங்களுக்கு என்ன ஆயிற்று? இதில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்? என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள். நான் இரண்டு என்ன, பத்து பெண்களைக் கூடத் திருமணம் செய்து கொள்வேன்” என்றான். சவிதா அவனுடனேயே தங்கினாள். அவளுடைய வீட்டிலிருந்து எந்த ஆதரவும் இல்லை. ஒருமுறை அவன் அவளை அடித்தான். அவள் கீழே விழ மண்டை உடைந்து ரத்தம் பெருக ஆரம்பித்தது. ஆனாலும் அவள் அவனை விட்டுப் போக முடியவில்லை. என்னைப் போலவே அவளுக்கும் அவள் சகோதரனிடமிருந்து எந்த உதவியும் இல்லை. எனவே அவள் அவனுடைய அடிகளையெல்லாம் பொறுத்துக்கொண்டாள். அவள் கணவன் சங்கட்டனாவில் உறுப்பினராக இருந்தான். இறுதியில் அவன் இயக்கத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டான்.

நியாயவிலைக் கடை ஒன்றை வைத்திருந்தான் ஒருவன். வியாபாரத்தின் போது அவனுக்கு ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டது. அவள் கருவுற்றாள். பிறகு அவன் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தான். இதற்கு முன்னால் பலமுறை அவன் முதல் மனைவி சுனிதாவிடம் அவளால் கருத்தரிக்க இயலாது என்று கூறியிருக்கிறான். அவள் மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்று யோசனை கூறிய போதெல்லாம் அவன் அவளைக் கிராமத்தில் உள்ள நாட்டுவைத்தியனிடம் கூட்டிப் போவான். பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் அவள் வயிற்றில் சூடு போட்டான் அந்த வைத்தியன். கொப்பளம் கட்டிச் சீழ் பிடித்தால் அவள் உடம்பிலுள்ள கெடுதல் எல்லாம் வெளியேறிவிடும் என்றும் சொன்னான். அதை நாங்கள் சூட்டுத் தழும்பு (டாம்ப் ) என்போம். சுனிதாவுக்கு அதுபோல் பதினாறு தழும்புகள் வயிற்றின் மேல் பகுதியில் இருந்தன. சுனிதா அதைத் தாங்கிக்கொண்டாள். அவளுடைய தினசரி வேலைகளையும் அவள் இந்தப் புண்களுடனேயே கவனிக்க வேண்டியிருந்தது. இடுப்பில் சேலையைக் கூடக் கட்டமுடியாது அவளுக்கு. அதனால் மார்பில் பாவாடையைக் கட்டிக்கொண்டு வேலை செய்வாள். அவன் இன்னொரு பெண்ணைக் கூட்டி வந்தபோது அவள் தன் பெற்றோரிடம் போய்விட்டாள். ஆனால் அவன் அவளைத் திரும்ப அழைத்து வந்தான்.

சுனிதா திரும்பி வந்தபோது, நாங்கள் அவள் கணவனுக்கு எதிராக செக்ஷன் 498 அ _ வின் கீழ் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தோம். அவனுக்கெதிராகப் புகார் கொடுத்ததால் அவள் அவனுடன் தங்கக் கூடாது என்று ஊர்மக்கள் சொன்னார்கள். ஆனால் அவள் பெற்றோர் அவளைத் திரும்ப அழைக்க மறுத்துவிட்டதால் அவள் அவனுடனே தங்கவேண்டியிருந்தது.

சங்கட்டனாவின் மற்றப் போராட்டங்களில் நானும் பங்கெடுத்தேன். முக்கியப் போராட்டம் நிலம் குறித்துத்தான். வனப் பகுதியில் உள்ள நிலங்களை எங்களில் சிலர் விவசாயம் செய்துவந்தனர். ஆனால் அது எங்களுக்குச் சொந்தமில்லை என்று கூறப்பட்டது. நாங்கள் கையில் கல்லெடுத்துக்கொண்டு வன அதிகாரிகளை அடித்து விரட்டுவோம்.

ஷிராஸ் : இவ்வனப் பகுதி முன்பு தரிசுநிலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதிக உணவு உற்பத்தி இயக்கத்தின்போது அவர்கள் அந்நிலங்களில் விவசாயம் செய்து வந்தனர். பிறகு வனத்துறை அவர்களை அந்நிலங்களிலிருந்து கிளப்ப விரும்பியது. ஏற்கனவே அவர்கள் கணிசமான உழைப்பைச் செலுத்தி வரப்புகள் அமைத்து நிலங்களைப் பண்படுத்தியிருந்தனர். 1978 இல் மகாராஷ்டிர அரசு பிறப்பித்த உத்தரவின்படி 1972-1978 கால அளவில் இந்நிலங்களை விவசாயம் செய்தவர்களுக்கு நில உரிமைப் பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது நடைபெறவில்லை. நில அளவை நடத்தப்படவோ பட்டாக்கள் வழங்கப்படவோ இல்லை. வனத்துறையினர் அடிக்கடி கிராமங்களுக்கு வந்து விவசாயம் செய்யப்பட்டிருந்த நிலங்களிலிருந்து மக்களைத் துரத்தியடிக்க முயன்றனர். பெரும்பாலும் அவர்கள் மிகவும் மூர்க்கமாக நடந்துகொண்டதுடன் இந்த வெளியேற்றத்தின் போது கடுமையான வன்முறைகள் கையாளப்பட்டன.

சக்குபாய்: நாங்கள் எப்போதும் துவரம்பருப்பு, உளுந்து, நெல், நாசனி (ராகி) முதலியவற்றைப் பயிரிடுவது வழக்கம். வனத் துறையினர் அவ்வப்போது துவரம் பருப்பு, கோழி, நெல், பணம் என்று பலவற்றைக் கேட்பார்கள். நாங்கள் கொடுக்கவில்லையென்றால் அவர்கள் எங்களுடைய நிலங்களைப் பறித்துக்கொள்வதாக மிரட்டுவார்கள். சிலசமயம் மக்கள் கடன் வாங்கியாவது அவர்களுக்குப் பணம் கொடுப்பார்கள். வனத்துறையினர் எங்களுடைய பயிரை அழித்துவிடுவதும் உண்டு. பயிர் முதிர்ந்தவுடன் அறுத்துப்போட்டு விடுவார்கள். சிலசமயம் அணையை உடைத்துவிடுவார்கள். அதுமட்டுமல்ல; அவர்களே பயிரிடவும் ஆரம்பித்தார்கள். கால்நடைகளைக் கொண்டுபோய் மேய்ப்பார்கள். அவர்கள் உரத்தில் அமிலத்தை விட்டுவிடுவதாக பயமுறுத்தினர் என்று ஷிராஸ் சொல்கிறாள். ஆனால் அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

வனத்துறை ஆட்களை நாங்கள் பெண்கள் எல்லோரும் கல் எறிந்து துரத்தினோம். நாங்கள் அவர்களுக்கு எதிராகப் பாட்டுகள் கட்டினோம்.

வனஅதிகாரி ஆசாமி ரொம்பவும் அழகுதான்
சந்திரன் பக்கம் உலகம் போக
இவரு கண்ணு கோழியில
போலீஸ்காரன் ரொம்பவும் மிடுக்குதான்
சந்திரன் பக்கம் உலகம் போக
இவரு கண்ணு கள்ளுல

காட்டைப் பாதுகாப்பது என்றால் என்ன என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். நாங்கள் எல்லோரிடமும் விறகுக்காக மரங்களை வெட்டக்கூடாது என்றும், சுள்ளிகளை மட்டுமே பயன்படுத்துமாறும் கூறுவோம். நாங்கள் காடுகளைப் பாதுகாப்பது என்று தீர்மானம் செய்திருக்கிறோம். இன்று நாங்கள் காடுகளைப் பாதுகாத்தால்தான் நாளை எங்கள் குழந்தைகள் அதில் வேலை செய்யமுடியும். பெண்களில் சிலர் ஆறுபேர் அல்லது பத்துபேர் கொண்ட ஒரு குழுவாகக் காடுகளுக்குள் நுழைந்து வெவ்வேறு நாட்களில் காவல் புரிவோம். வனத்திருட்டை ஒழிக்க நாங்கள் முறை வைத்துக் காடுகளைச் சுற்றி வந்து பாதுகாத்தோம். வெளியாட்களும், மரவியாபாரிகளும் காடுகளிலுள்ள மரங்களைக் கடத்துவார்கள். பெரியபெரிய மரத்துண்டுகள் ட்ரக்குகளில் எடுத்துச்செல்லப்படும். சுகதம்பாவில் ஒருமுறை தடிகளை ஏற்றிக்கொண்டு வெளியில் சென்ற வண்டி ஒன்றைப் பெண்கள் நிறுத்தினார்கள். அவர்கள் அதைப் பற்றி வனத்துறைக்குப் புகார் செய்யவில்லை. அதனால் எந்தப் பலனும் இருக்காது என்பதால் தாங்களே அதை கவனித்துக்கொண்டனர். பெரிய தேக்கு மரத்துண்டுகளை சிறிய சிறிய விறகுக் கட்டைகளாக வெட்டி மரவியாபாரிகளுக்குப் பயன்படாத வகையில் செய்துவிட்டு அவர்கள் விரும்பினால் எடுத்துப்போகலாம் என்று சொன்னார்கள். ஒருவன் கட்டைகளை அள்ளிச்செல்ல முயன்றபோது அவர்களில் ஒருத்தி அவன் கால் சட்டையைப் பிடித்துக்கொண்டாள். ஆனால் எங்கள் கிராமங்களில் எல்லோரும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனென்றால் பெரும்பாலோர் அரசு ஊழியர்கள். அவர்களுக்கு இந்தக் காட்டை வைத்து ஒன்றும் ஆக வேண்டியதில்லை.

சங்கட்டனாவில் உறுப்பினர்களான நாங்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சர்க்கரை, அரிசியை வெளியில் விற்கும் ரேஷன் கடைக்காரர்களுக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தினோம். அவர்கள் பணக்கார மார்வாடிகளிடம் அதை விற்றுவிடுகின்றனர். இன்னமும் அப்படிச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

எங்கள் சாதியில் சீதனம் என்ற வழக்கம் இல்லை. சீதனம் வாங்குவது ஒரு மோசமான விஷயம் என்றே எனக்குத் தோன்றுகிறது. சீதனம் வாங்கும் ஆண்மகன் மிகவும் சோம்பேறியாகவே இருப்பான். அவன் ஒரு பிச்சைக்காரன் போலத்தான். ஒரு பெண் அவளுடைய புகுந்த வீட்டாரிடம் நிறையக் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. எங்களுடைய அமைப்பு இதுபற்றி மிக உறுதியாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். சீதனம் வாங்குபவனை நாம் உதைக்கவேண்டும். அது போன்ற ஒருவனை உதைக்க நான் தயார். இதுபற்றி மற்றப் பெண்களிடமும் சொல்லி ஒன்றுபடச் செய்யவேண்டும்.

சுகாதார சேவகியாக எங்கள் ஊருக்கு வந்தாள் ஒருத்தி. சில ஊர்களில் பெண் குழந்தை பிறந்தால், உறவினர்கள் அதன் முகத்தைக் கூட தங்களுக்குக் காண்பிக்க வேண்டாம் என்று தாதியிடம் சொல்வார்களாம். அந்தக் குழந்தையின் தலையைத் தண்ணீர்க் குடத்தில் முக்கி அதைச் சாகடித்து விடுவார்களாம். இதுபோல் ஆறு பெண் சிசுக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அவள் கூறினாள். ஆட்கள் தங்கள் கொல்லைப்புறத்தைத் தோண்டியபோது சிறிய குழந்தைகளின் எலும்புகள் இருந்தனவாம். இதைப் பற்றிக் கேட்கும்போது எனக்கு மிகக் கஷ்டமாக இருந்தது. அந்தப் பெண் குழந்தைகள் உயிருடன் இருந்திருந்தால் இப்போது வளர்ந்து பெரியவர்களாகி படித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் எந்த வேலையாவது செய்து சொந்தக் காலில் நிற்கக் கற்றிருப்பார்கள்.

நானும் ஒரு சுகாதார சேவகிதான். சாய்பானில் அரசு சுகாதார மையம் ஒன்று உள்ளது. ஆனால் மருத்துவர் காலாவதியான மருந்துகளையே கொண்டுவருவார். மருத்துவர்கள் நோயாளிகளைத் தொடக்கூட மாட்டார்கள். இலவசமாகக் கிடைக்க வழியிருந்தும்கூட, எங்களிடம் மருந்துகளை வெளியில் வாங்கிக்கொள்ளச் சொல்வார்கள். சிலசமயம் நோயாளிகள் கஸேராவுக்கு எடுத்துச்செல்லப்படுவார்கள். சிலர் வழியில் இறந்துவிடுவார்கள். சுகாதார மையத்தில் நோயாளிக்குத் தலைவலி, வயிற்றுவலி, அயர்ச்சி என்று எதற்குப் போனாலும் அவர்கள் சலைன் ஏற்றுவார்கள். நோயாளியிடம் கட்டணம் வசூலித்ததால் அரசு மருத்துவமனைக்கு எதிராக நாங்கள் ஒரு போராட்டம் நடத்தினோம். பிறகு மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் மலேரியா, வயிற்றுவலி, காலரா, தலைவலி இவற்றைப் பற்றியெல்லாம் சொல்லித் தந்தார்கள். என்ன என்ன மருந்துகள் கொடுக்கவேண்டும் என்றும் சொல்லிக்கொடுத்தார்கள். ஏழை மக்கள், முக்கியமாகப் பெண்கள் எங்களிடம் வந்தனர். நாங்கள் ஒரு சங்கம் அமைத்து ஒவ்வொருவரிடமும் 50 ரூபாய் வசூலித்து மருந்துகள் வாங்கினோம்.

மாற்றப்படவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. எங்கள் கிராமத்தில் இளைஞர்கள் சீட்டு ஆடிக்கொண்டும் வீடியோ படங்களை பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். பெண்கள் எல்லோரும் இதைக் கடுமையாக எதிர்க்கிறோம். வீடியோவை எங்கள் கிராமத்துக்குக் கொண்டுவருவதையே நாங்கள் விரும்பவில்லை.

ஷிராஸ் : இந்தப் பகுதியில் பாலியல் ரீதியாக பலர் பயன்படுத்தப்படுவது இங்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. கோது தாய் (கோதாவரி) பாரூலேகர் நாற்பதுகளில் எழுதிய “ஜேவா மானுஸ் ஜாகா ஹோத்தோ” ( ‘மனிதர்கள் விழித்தெழும்போது’) என்ற நூலில் அவர் ஜமீன்தார்களின் முதலிரவு உரிமைகளைப் பற்றிச் சொல்கிறார். இவை அவர்களுக்குச் சடங்காகவும் உரிமையாகவும் இருந்திருக்கின்றன. ஏனெனில் மணமகன் திருமணத்துக்காக நில உரிமையாளரிடம் கடன் வாங்கியிருப்பான். அதனால் அவன் தன் மனைவியை அந்த நிலக்கிழாரின் வீட்டு வாசலில் அடமானமாக வைக்கவேண்டியிருக்கும். நில உரிமையாளர் அவளைப் பல நாட்கள் வேண்டியவரை அனுபவித்துவிட்டு பிறகு அவள் கணவனிடம் திருப்பி அனுப்பிவிடுவார். நில உரிமையாளர் வீட்டுக்குப் புது மனைவியை அனுப்ப மறுத்த கணவர்கள் அனுபவித்த சித்திரவதைகள் பற்றி நிறையச் செய்திகள் வந்துள்ளன. அப்படி எதிர்த்த ஒருவனைத் தலைகீழாகத் தொங்கவிட்டு மிளகாய் வத்தலை எரித்தார்கள்; இருமி இருமியே அவன் இறந்தான் என்று கதை போலச் சொல்வார்கள். தானே மாவட்டத்தின் காடுகளில் ஏராளமாக மரக்கரி பெறப்பட்ட காலம் அது. இப்படி அனுப்ப மறுத்தவர்களை மரக்கரி சூளைகளில் வீசி உயிரோடு எரிப்பதும் நடந்திருக்கிறது. இது போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே பாலியல் பலாத்காரம் ஒன்றும் புதிதல்ல. கொத்தடிமை முறை, பாலியல் சுரண்டல் ஆகிய மிக முக்கியமான அநீதிகளுக்கு எதிராகத்தான் முதல் வர்லி கிளர்ச்சி எழுந்தது. இந்த எழுச்சிக்குப் பிறகும் இவை அடியோடு மறைந்துபோய்விட்டன என்று சொல்லிவிட முடியாது. அவை மறைந்து போய்விடவில்லை. திரைமறைவாக இன்னமும் தொடர்கின்றன. வன்முறைக் கொடூரச் செயல்களும் இருக்கின்றன. ஆனால் வெளிப்படையாக இல்லை; அவ்வளவுதான். மிக நுட்பமான முறையில் அவை வெளிப்படுகின்றன. இன்றும் வழக்கிலிருக்கும் இன்னொரு விஷயத்தைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். பழங்குடியினரிடம் பாரஸ் மற்றும் பொஹாடா என்று கூறப்படும் வழக்கம் இருக்கிறது. வார்லி பழங்குடியினர் பாரஸ் என்றும், கொங்கணிப் பழங்குடியினர் பொஹாடா என்றும் இதைக் குறிப்பிடுவார்கள். பாரஸ் மற்றும் பொஹாடா நிகழ்வுகளில் அவர்கள் ஸுட் என்ற வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள். அதற்குச் சுதந்திரம் என்று அர்த்தம். இச்சடங்கு நிகழும் நாளில் எந்தப் பெண்ணும் அவள் விரும்பும் யாருடன் வேண்டுமானாலும் இரவைக் கழிக்கலாம். இது ஒருவருக்கொருவர் சம்மதித்துச் செய்வது; வன்புணர்வு அல்ல. ஒருவகையில் இது தாம்பத்தியத்திற்கு வெளியே, ஆனால் சமூகத்திற்குள்ளேயே வேறு உறவு வைத்துக் கொள்ளவும், குழந்தைகளற்ற தம்பதியினருக்குக் குழந்தை பெற்றுக் கொள்ளவும் அளிக்கப்படும் ஓர் அருமையான சந்தர்ப்பம். ஆணுக்கு உடல்குறை ஏதேனும் இருந்து மனைவியால் குழந்தை பெற முடியாத நிலை இருக்குமென்றால் அவள் வேறு ஒருவனிடம் உறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம். பாரஸ், பொஹாடா நாட்களில் அவள் அனேகமாகக் கருவுறுவாள். இவ்வாறு சமூகவியல் குறிப்பிடும் `நிறுவனப்படுத்தப்பட்ட வடிகால் முறை’ களாக இவை செயல்படுகின்றன. இப்போது பாரஸ் நடக்கும்போது பம்பாயிலிருந்து இளைஞர்கள் கார்களில் வந்து பழங்குடிப் பெண்களைப் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்வதைக் காணலாம். இன்று இந்த நிகழ்வுக்குப் பயத்துடன்தான் போகவேண்டியிருக்கிறது. சந்தோஷத்துடன் சுதந்திரமாக போய்வர முடிவதில்லை. இப்படித்தான் புறஉலகத்தின் ஊடுருவல் ஆதிவாசி சமூகங்களில் நிகழ்கிறது. ஆதிவாசிப் பெண்கள் இந்தச் சுதந்திரத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்தார்கள். ஏனெனில் அவர்கள் சமூகத்தில் பாலியல் பலாத்காரம் என்பதே கிட்டத்தட்ட இல்லையென்றுதான் சொல்லவேண்டும். பெண்களை ஒருவிதமான அச்சத்தில் எப்போதும் வைத்திருக்க ஆண்கள் கைக்கொள்ளும் ஓர் வழிமுறைதான் பாலியல் பலாத்காரம் என்று கொள்வோமானால், இந்த அடக்குமுறை பாலியல் பலாத்காரம் மூலமாக இல்லை, சூனியக்காரிகள் என்று பெண்களை வேட்டையாடுவதன் மூலமாகத்தான் ஆதிவாசி சமூகத்தில் நிகழ்கிறது.

மூன்று பழத்தோட்டங்களுக்குச் சொந்தக்காரர் ஒருவர் இருக்கிறார். பாலியல் அடக்குமுறைக்கான இடங்களாக இவை இருக்கின்றன. நாங்கள் இந்த பிரச்சினையை எடுத்துக்கொண்டோம். துரதிருஷ்டவசமாக பிற இரண்டு தோட்டங்களிலும் கஷ்டகரி சங்கட்டனா போராட்டம் நடத்துமளவுக்கு வலுப்பெற்றிருக்கவில்லை. எனவே அவர்களை ஒருங்கிணைப்பது என்பது இயலாத காரியமாக இருந்தது. ஆனால் பென்காவ் என்ற கிராமத்தில் உள்ளூர் வாடியைக் குத்தகைக்கு எடுத்திருந்தவன் மீது நாலைந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் இருந்தன. நாங்கள் போலீஸில் இதுபற்றிப் புகார் கொடுத்தோம். ஒரு போராட்டமும் நடத்தினோம்.

ஆனால் அதில் எதிர்பார்த்த அளவு பலனில்லை. உண்மையில் நாங்கள் இந்த பிரச்சினைகளைத் தொடர்ந்து கண்காணித்துவர வேண்டியிருக்கிறது. சக்குபாய் பென்காவில் நடந்தவற்றைத்தான் உங்களிடம் விவரித்துக்கொண்டிருந்தாள். இது போன்ற ஆசாமிகளுக்குப் போதிய பாதுகாப்பு கிடைத்து வந்துள்ளது. வாடியின் முதலாளி ஓர் அரசியல்வாதி. எனவே, ஒரு பண்பாளரின் தோற்றத்தைப் பூண்டு வந்து பணத்தைக் கொடுத்துப் பிரச்சினையைத் தீர்க்கவே அவர்கள் விரும்புவார்கள். இரண்டு மூன்று சம்பவங்களில் நாங்கள் இதைப் பிரச்சினையாக எழுப்ப முயன்றபோது பணம் கொடுக்கப்பட்டு பொதுமக்களின் வாய்கள் அடைக்கப்பட்டன. அவர்கள் இந்தப் பிரச்சினையைகூட அரசியலாக்க முயன்றார்கள். “சரி, நாம் உள்ளூர் கிராமத் தலைவரை இதற்கு நியாயம் சொல்லக் கூப்பிடுவோம்” என்பார்கள். கிராமத் தலைவனுக்கு நிறையப் பணம் கிடைக்கும். அந்த மக்களை ஒடுக்கவும், அந்தப் பெண்ணின் குடும்பத்தை அடக்கவும் கிராமத் தலைவனைப் பயன்படுத்துவார்கள். மிகவும் ஏழை மக்கள் வாழும் கிராமங்களில் பெரும்பாலோர் அடிக்கடி பஞ்சம் பிழைக்க வெளியே செல்பவர்களாக இருப்பார்கள். இந்த மாதிரிச் சமயங்களில் மேலும் நடவடிக்கைகளைத் தொடருவது மிகமிகச் சிரமமாக இருக்கும். நாம் ஒரு வழக்கைப் பதிவு செய்துவிட்டு அவர்களைத் தேடினால் அவர்கள் ஐந்தாறு மாதங்களுக்கு எங்காவது இடம்பெயர்ந்து போயிருப்பார்கள். அந்தக் குறிப்பிட்ட ஆள் திரும்பி வரும்பொழுது போலீஸ் அதிகாரி மாறிப் போயிருப்பார். பிறகு திரும்பவும் முதலிலிருந்தே தொடங்க வேண்டும். இப்படியாக விஷயம் சாணேறி முழம் சறுக்கிக் கொண்டிருக்கும். இந்த நிலைமையிலும் ஒரு வழியாக வழக்கு ஒன்றை நாங்கள் பதிவு செய்தோம். ஆனால் அந்த ஆள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இம்முறை நடவு முடிந்து எல்லோரும் ஊரில் இருக்கும் பொழுது அந்த மனிதனைக் கைது செய்யக் கோரி இந்தப் பிரச்சினையை முன்வைத்து ஒரு பெரிய சத்யாகிரகத்தை நடத்தலாம் என்று நினைத்திருக்கிறோம்.

சக்குபாய்: கிராமத்திற்கு வெளியில் வேலைக்காகப் போகும் பெண்களில் சிலர் இன்னோர் உயிரைத் தாங்கி வருவார்கள். அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்பதில்லை. ஒவ்வொருவரும் பெண்ணை ஏமாற்றுகிறார்கள். ஒரு பெண் காவல் நிலையம் சென்றால், காவலன் ஆணை வெளியில் நிற்க வைத்துவிட்டு பெண்ணை உள்ளே அழைப்பான். அந்தப் பெண்ணை அவர்கள் பலாத்காரம் செய்வார்கள். நிலப்பிரபு, வனத்துறை ஊழியன், குத்தகைக்காரன் யார் வேண்டுமானாலும் அவளை ஏமாற்றலாம். யாரும் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை. அவள் தன்னுடைய சகோதரனுடைய இடத்துக்குப் போகவும் முடியாது. விஷமருந்திச் சாகக்கூட அவளால் முடியாது. அவளால் வாழவும் முடியாது, சாகவும் முடியாது.

கன்சாரி

மேகங்களின் கடவுளான மிரிக் `சஞ்சரிக்கும் கடவுள்’ என்று அழைக்கப்படுகிறான். அவனுடைய மனைவி கன்சாரி எங்கேயும் செல்லாமல் ஒரே இடத்திலிருந்து வயல்களை கவனித்துக் கொள்பவள். ஒருநாள் மிரிக், கன்சாரியிடம் விதைப்பதிலும் நடுவதிலும் அவளுக்கு உதவி செய்வதாகக் கூறினான். பருவம் தொடங்கியதும் இருவரும் சேர்ந்து வயலில் விதைக்கத் தொடங்கினர். சீக்கிரமே விதைகள் எல்லாம் முளைவிட்டன. மிரிக் கன்சாரியிடம் ``நாம் இருவரும் நாற்றுகளை இரண்டு சம பாகங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.  நீ ஒரு பாதியைப்  பார்த்துக் கொள். நான் மற்றொரு பாதியைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றான். அவனால் அதைச் செய்ய இயலாது என்று எச்சரித்தாள் கன்சாரி. ஆனால் அவன் வற்புறுத்தினான். கடைசியாக கன்சாரி இணங்கினாள்.
மிரிக் ஒவ்வொரு நாற்றையும் இருபாதியாக வெட்டினான். ஒரு பகுதி பசுமையான அழகிய தண்டு பகுதி. மறுபகுதி பழுப்பு நிறமான சேறு நிறைந்த வேர்ப்பகுதி. கன்சாரிக்கு வேர்ப்பகுதியைக் கொடுத்துவிட்டு அவன் தண்டுப் பகுதியை தன்னுடைய பங்காக எடுத்துக்கொண்டு வயல்களில் நட்டான். பசிய தண்டுப் பகுதி காற்றில் அசைந்தாடுவதையும், சலசலப்பதையும் பார்த்து அவன் பெருமையில் பூரித்தான். ``எனக்கு நிச்சயம் நல்ல அறுவடை கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு வழக்கமான ஊர் சுற்றலுக்குப் போய்விட்டான். கன்சாரி வேர்ப்பகுதியை நட்டுவிட்டு புதிய முளைகள் வரும்வரை காத்திருந்தாள். அறுவடைக் காலம் வந்தபொழுது கன்சாரியின் வயல்களில் நெல்தண்டுகள் நிறைய நெல்மணிகளுடன் இருந்தன. மிரிக்கின் வயல்களோ காய்ந்து போய்க் கிடந்தன.
மிரிக் திரும்பி வந்தபோது அவனுடைய வயல் வெறுமையாகவும் கன்சாரியுடைய வயல் நெல்மணிகள் நிறைந்து இருப்பதையும் கண்டு மிகவும் கோபமடைந்தான். பயங்கரக் கோபத்துடன் அவன் சொன்னான் : ``நிச்சயமாக கன்சாரி ஒரு சூனியக்காரிதான். என்னுடைய அழகிய பசுமையான வயலில் அவள் ஏதோ செய்வினை செய்திருப்பாள். அவளுக்கு அழுகிய வேர்கள் மட்டுமே இருந்தன. இருந்தும் அவள் நல்ல விளைச்சல் எடுத்திருக்கிறாள்.” இதுதான் உலகின் முதல் சூனியக்காரி பிறந்த கதை.

சக்குபாய்: எல்லோரும் சொல்லுகிற பேய்கள் உண்மையில் உண்டா இல்லையா என்று எனக்குத் தெரியாது. இதுவரை நான் அவற்றைப் பார்த்ததுமில்லை. நான் ஷிராஸ்தாயியிடம் ”பேயைப் பற்றிக் கேட்டால் நான் சோற்றைப் பற்றிப் பேசுவேன்” என்று சொன்னேன். எனக்கு சூனியக்காரிகள் பற்றியும் ஒன்றும் தெரியாது. எங்கள் கிராமத்தில் யாராவது நோயில் படுத்தால் ஒரு பெண்ணை சூனியக்காரி என்று சொல்லித் திட்டி அடிப்பார்கள். நானும் சில விஷயங்களை எதிர்த்துப் போராடி வருவதால் என்னையும் சூனியக்காரியாக்கி அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்துவிடுவார்கள் என்றும் எனக்குப் பயம் இருக்கிறது. நான் எல்லோருடனும் சண்டை போடுவதில்லை. ஆனால் ஒரு மனிதனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தாலோ அல்லது ஒருவன் தன் மனைவியை அடித்தாலோ நான் நிச்சயமாக அந்த மனிதனை எதிர்த்துப் போராடுவேன்.

ஷிராஸ் : நான் அந்த ஊரில் தங்கியபோது ஒரு விஷயத்தைக் கவனித்தேன். குறிப்பிட்ட சிலவகைப் பெண்களே சூனியக்காரிகளாக வேட்டையாடப்படுகிறார்கள். ஒன்றில் அவர்கள் சமூகப் பாதுகாப்பில்லாத பலவீனமான பெண்களாக இருப்பார் கள் ஆண் துணையில்லாத விதவைகளும் வயதான பெண்களும். இவர்கள் மீதுதான் சூனியக்காரிகளை வேட்டையாடுபவர்களுக்குக் கண். மிகவும் பலமான பெண்களையும் அடக்கி ஒடுக்கும் பொருட்டு சூனியக்காரிகளாகக் கற்பித்துவிடுவதுண்டு. நான் சக்குவை அவர்கள் உன்னை சூனியக்காரியாக்கி ஒடுக்க நினைத்தால் பயப்படுவாயா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “ஆமாம், நான் அச்சப்படுகிறேன். நான் எப்போதும் போராடிக்கொண்டிருக்கிறேன். இரண்டு மனைவிக்காரர்களிடம் போராடுகிறேன். மனைவிகளை அடிக்கும் மனிதர்களிடமும் நான் போராடுகிறேன். இந்த ஆசாமிகள் குடிகாரர்கள். ஒருநாள் அவர்கள் எல்லோரும் எனக்கெதிராக `சக்கு ஒரு சூனியக்காரி’ என்று சொல்லி அவர்களின் உணர்ச்சிவேகத்தை எனக்கு எதிராகத் திருப்பிவிட்டு, என்னை ஒடுக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது” என்றாள். எங்களுடைய களப் பணியாளர்கள் பலருக்கும் சூனியக்காரிகள் என்று அழைக்கப்பட்ட அனுபவம் உண்டு. என்னைக்கூட சூனியக்காரி என்றிருக்கிறார்கள். எனக்கும்கூட அப்படி இருக்க ஆசைதான்! (சிரிப்பு) எட்டு வருடத்திற்கு முன்பு ஜவஹரில் நாங்கள் பாலிய விவாகத்திற்கு எதிராகப் போராடியபோது பெண்கள்தான் அம்மாதிரி திருமணத்தை எதிர்த்து மிகவும் உறுதியாக இருந்தார்கள். எங்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவர் மகளுக்கும் இன்னொரு தலைவர் மகனுக்கும் இத்தகைய திருமணம் நடந்தது. பெண்ணின் தாயாரும் பாட்டியும்தான் இதை மிகவும் எதிர்த்தவர்கள். அப்போது பெருமளவில் ஆண்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நாங்கள் போராடவேண்டியதாயிற்று. அந்த சமயம் ஷிராஸ் ஒரு சூனியக்காரி என்றும், அவள் நிறைய பிசாசுகளைப் பெண்களின் தலையில் திணிக்கிறாள் என்றும் பரப்பப்பட்டது. அவளை நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆகவே நம் பெண்களைச் சரியாக அடித்து அவர்கள் தலைக்குள் உள்ள பேய்களை நீக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். நீங்கள் மிகவும் ஆழமாக அவதானிக்க வேண்டிய விஷயம் இது. நிறைய பெண்கள் குறிப்பாக விதவைகள் இந்தக் கொடுமைகளுக்கு ஆளாவதைக் கண்டிருக்கிறேன். அவர்களுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்களாக இருந்தால் அவர்களுடைய நிலங்களை பறித்துக்கொள்ள விரும்புபவர்கள் அவளை சூனியக்காரி என்று கூறி வதந்தி பரப்பிவிடுவது மிகவும் எளிது. என்னுடைய முதல் அனுபவங்களில் ஒன்று கைநாட் என்ற கிராமத்தில் நடந்தது. அங்கே ஒரு நிலச்சுவான்தார் இருந்தான். குத்தகைக்கு விட்ட நிலத்தை ஒழுங்குபடுத்துவது சம்பந்தமாக அங்குள்ள நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்திருந்தோம். அந்தப் பெண்ணுடைய கணவன் இறந்ததும், அவளுடைய நிலத்தைக் கைப்படுத்துவதற்கானச் சிறந்த வழியாக அவனுக்குத் தெரிந்தது அவள் ஒரு சூனியக்காரி என்ற புரளியைக் கிளப்பிவிடுவதுதான். பிறகு நாங்கள் இந்தப் புரளியின் ஊற்றுக்கண் எது என்பதைக் கண்டறிந்து அதை கிராமத்தாருக்குத் தெரியப்படுத்தினோம். இவையெல்லாம் சூனியக்காரிகளாக வேட்டையாடப்படுவதற்கான ஒருசில காரணங்கள்.

சக்குபாய்: சுகாதாரத் திட்டங்களினால் வியாதிகளும், சூனியக்காரிகள் எனப் பெண்கள் வேட்டையாடப்படுவதும் குறைந்தன. ஆனால் நான் இன்னமும் பயந்து கொண்டுதானிருக்கிறேன், ஏனென்றால் இந்த மக்கள் குடிகாரர்கள். எந்த நிமிஷமும் என்னைச் சுட்டிக் காண்பித்து என்னை ஒரு சூனியக்காரி என்று சொல்லிவிடலாம்.

முப்பத்தாறு பெண் தந்திரங்கள்

முன்பு ஒரு காலத்தில் ஒரு சோம்பேறி வாழ்ந்துவந்தான். அவனுடைய நேரம் முழுவதையும் கதை சொல்பவனிடம் கதை கேட்பதிலேயே செலவிடுவான். அந்த கதைசொல்லி பெண்களைப் பற்றிய கதைகளையே சொல்லிக் கொண்டு வந்தான். ஒவ்வொரு கதையின் சாரமும் ஆண்கள் எப்போதும் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. காரணம் பெண்களுக்குத்தான் ஆண்களின் கண்களை மறைத்துவிடுவதற்கு ஏகப்பட்ட வித்தைகள் தெரியுமே. அவன் `சத்தீஸ் நக்ரே’ என்ற ஒரு சொற்றொடரை அடிக்கடி சொல்வான். அது பெண்களின் முப்பத்தாறு வகையான தந்திரங்களைக் குறிக்கும். ஒவ்வொரு நாளும் கதை கேட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் அவன் தன் மனைவியைப் போட்டு அடிப்பான். அவளுடைய முப்பத்தாறு தந்திரங்களையும் காட்டச்சொல்லித் திட்டுவான். அவள் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டாள். தன் கணவனைக் கதைசொல்லியிடம் போவதை நிறுத்த முயன்று தோல்வியடைந்தாள். அந்த முட்டாள் கணவனுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கவேண்டுமென்று முடிவு செய்தாள்.

அது ஒரு மழைக்காலம். ஒவ்வொருவரும் வயல்வேலைகளில் மும்முரமாயிருந்தனர். அதனால் கதை சொல்வது நின்றிருந்தது. எனவே அந்த மனைவிக்கு கணவனிடமிருந்து தற்காலிக விடுதலை கிடைத்திருந்தது. அவள் இதே நிம்மதியை அப்படியே தக்கவைக்கும் வழிகளை யோசிக்கத் தொடங்கினாள். அவர்களுடைய வயல் குன்றுகளின் சரிவில் இருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் கணவன் மாடுகளை அங்கே ஓட்டிச் செல்வான். மனைவி எல்லா வீட்டுவேலைகளையும் முடித்துவிட்டு அவனுக்கு மதிய உணவையும் எடுத்துக் கொண்டு வயலுக்குச் செல்வாள். ஒருநாள் குன்றின் அடிவாரத்தில் உள்ள ஒரு வயலில் சில மீன்களைப் பார்த்தாள். அதில் கொஞ்சம் மீன்களை பிடித்துத் தண்ணீர்ப்பானைக்குள் போட்டு, குன்றின்மேல் ஏறி வயலுக்குச் சென்றாள். கணவன் வேலையில் மும்முரமாக இருந்தபோது மெதுவாக மீன்களை வெளியேவிட்டாள். கணவனிடம் ``இன்றைக்கு நம் வயலில் என்ன விளைந்திருக்கிறது என்று பாருங்கள்” என்றாள். அந்த இடத்தில் மீன்களைப் பார்த்து அவன் ஆச்சரியமடைந்தான். அவர்கள் ஒவ்வொன்றாக எல்லா மீன்களையும் பிடித்தார்கள். அவன் இந்த நிகழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்று விரும்பினான். தன் மனைவியிடம் விரைவில் வீட்டுக்குப் போய் மீனைச் சமைக்குமாறு சொன்னான்.

அவன் ஒரு புட்டி சாராயம் வாங்கச் சென்றான். அவள் மீனைச் சமைத்து அதைப் பரணில் ஒளித்து வைத்தாள். கணவன் மிகுந்த உற்சாகம் பொங்க மதுவுடன் வந்தான். மீனைக் கொண்டுவரச் சொன்னான். அவள் வியப்படைந்தவள் போல் நடித்தாள். அவனுக்கு மிகுந்த கோபம் வந்தது. அவளை அடிக்க ஆரம்பித்தான். அவளே எல்லா மீன்களையும் தின்று விட்டதாகத் திட்டினான். அவள் வெளியில் ஓடிச்சென்று கதறி அழுது உதவிக்காகக் கத்தினாள். அக்கம் பக்கத்திலிருந்து அனைவரும் குழுமிவிட்டார்கள். முதலில் எல்லா ஆண்களும் கணவன் பக்கமே பேசினார்கள். கணவன் வயலில் மீனைக் கண்டுபிடித்ததை அவர்களுக்குச் சொல்லி விளக்க ஆரம்பித்தான். மீன்கள் ஒரு போதும் உயர்ந்த குன்றுப் பகுதிகளில் உள்ள நிலங்களில் இருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. அவன் குடித்திருப்பதை உணர்ந்து எல்லோரும் அவனை நையப்புடைத்தார்கள்.

எல்லோரும் போய் அவர்கள் இருவரும் தனித்திருந்த பொழுது, அவள் மீனைப் பரணிலிருந்து எடுத்து அவன்முன் வைத்தாள். அவனிடம் ``இன்று என்னுடைய முப்பத்தாறு தந்திரங்களில் ஒன்றை மட்டுமே பார்த்திருக்கிறாய். இனி ஒழுங்காக இருந்து கொள். இன்னமும் முப்பத்தைந்து தந்திரங்கள் பாக்கி வைத்திருக்கிறேன்” என்று சொன்னாள்.

சக்குபாய்: ஓர் அமைப்பாக இருந்து செயல்படுவதில் நல்ல பலன் இருக்கத்தான் செய்கிறது. கஷ்டகரி சங்கட்டனா எங்கள் கிராமத்துக்கு வந்ததிலிருந்து நிலைமைகள் மாற ஆரம்பித்தன. இந்த அமைப்பு வருவதற்கு முன்பு, பெண்கள் தங்கள் கணவர்களால் கொடுமைக்குள்ளானார்கள். அவர்கள் வயலில் மிகவும் கடுமையாக வேலை செய்ததோடல்லாமல் கணவர்களின் கட்டளைகளுக்கிணங்கி தண்ணீர், சாராயம் மற்றும் வேண்டிய பொருட்களை எடுத்துக் கொடுக்கவும் வேண்டும். கணவர்கள் பெண்களை அடிக்கவும் செய்வார்கள். பந்த்கரில் இந்த அமைப்பு வந்திருப்பதால் நாங்கள் இப்போது கணவர்களைக் கண்டு நடுங்குவதில்லை. இப்போது காவல் துறையினருக்கோ, வனத் துறையினருக்கோ பயப்படுவதில்லை. கணவர்களிடம்கூட எங்களுக்கு பயமில்லை. இந்த அமைப்பு எங்கள் கிராமத்திற்கு வருவதற்கு முன் என் கணவன் என்னை அடிப்பது வழக்கம். ஆனால் இப்போது என்னை அடிக்க அவன் கை உயர்த்தினால் நானும் கை ஓங்குவேன். “நானும் திருப்பி உனக்குத் தருவேன். எனக்கு உன்னிடம் பயமொன்றும் இல்லை” என்பேன்.

கதை சொல்லி- கதை விரும்பி

முன்பு ஒரு காலத்தில் இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவன் கஹாண்கார் - கதை சொல்பவன். இன்னொருவன் அஹாண்கார் - கதை கேட்பவன். அவர்கள் காட்டில் வெகுதூரம் போய் உட்கார்ந்துகொண்டு கதை மேல் கதையாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். உணவு குளிர்ந்து போனதை அவர்கள் கவனிக்கவில்லை. நாட்கள் கடந்தன. அதையும் அவர்கள் கவனிக்கவில்லை. அந்த உணவு கெட்டுப்போனது. அதையும் கவனிக்கவில்லை. அவர்கள் தங்களுடைய கதைகளில் ஆழ்ந்திருந்தனர். அவர்கள் அந்தக் காட்டிலேயே பசியால் இறந்தனர். அந்த வழியே சில வழிப்போக்கர்கள் வந்தார்கள்.

 “இறந்து கிடக்கும் இவர்கள் யார்?” ``யாரோ வெகுதூரத்திலிருந்து வந்தவர்களாக இருக்கும்” என்று பேசிக்கொண்டனர். அந்த இருவரையும் தங்களுடைய கிராமத்திற்குக் கொண்டு சென்று புதைத்தனர்.
கஹாண்காரும், அஹாண்காரும் நீண்ட நாட்கள் காணாமல் போகவே அவர்களுடைய மனைவிகள் இருவரும் அவர்களைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டனர். காட்டினூடே தேடிக்கொண்டு வரும்போது ஓர் இடுகாட்டைக் கண்டு இருவரும் கிராமத்து மக்களிடம் ``தலைவரே, இது எங்கள் கணவர்கள்தாமா, சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.
உடனே ஊர்த்தலைவரும் ``அவர்களின் இறந்த உடல்களைத்தாம் நாங்கள் பார்த்தோம். உணவு சாப்பிடப்படாமல் அப்படியே இருந்தது. அவர்கள் இருவரையும் ஒன்றாக இந்த இடத்தில் புதைத்தோம்” என்று சொன்னார். அவர்களுடைய எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன.

``தலைவரே, இதில் யார் கதை சொல்லி, யார் கதை கேட்டவன் சொல்லுங்கள்” என்று கேட்டனர் மனைவியர்.
ஒருவருக்கும் தெரியவில்லை. ஆகவே இரு பெண்களும் எலும்புகளை ஒரு பையில் போட்டு ஒரு குளத்திற்கு எடுத்துச் சென்றனர். எலும்புகளைத் தண்ணீரில் இட்டனர். நிறையக் கதைகளைக் கேட்டுக்கேட்டு அஹாண்காரின் எலும்புகள் கனமாக இருந்ததால் அவை மூழ்கிப் போயின. கதைகள் சொல்லிச்சொல்லி தன்னையே காலியாக்கிக் கொண்ட கஹாண்காரின் எலும்புகள் இலேசாக இருந்ததால் நீரில் மிதந்தன.

``உங்கள் கணவர்களின் எலும்புகளை வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். இப்போது யார் யார் என்று உங்களுக்குத் தெரிந்துவிட்டது. பாரம் இறக்கியவனும் பாரம் ஏற்றவனும்; சொன்னவனும் கேட்டவனும்; கஹாண்காரும், அஹாண்காரும். . .”

ஆங்கிலப் பிரதி உருவாக்கம்: சி. எஸ். லக்ஷ்மி

நடவு கால உரையாடலை மொழிபெயர்த்தது அருண்மொழி நங்கை

புகைப்படங்கள்: ப்ரியா டிஸூஸா

நூலின் பதிப்பாசிரியர்கள்: அ. ஸ்ரீனிவாசன், எம். சிவசுப்பிரமணியன்

Series Navigation<< ஊர்மிளா பவாரின் இரண்டு சிறுகதைகள்நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை – ஜமீலா நிஷாத் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.