கலைச்செல்வி – நேர்காணல்

1.ஹரிலால் நாவல் எழுத உங்களுக்கு உந்துதலாக இருந்தது எது?

சமீபத்தில் யாவரும் பதிப்பகத்தின் வழியாக வெளியான எனது ‘ஆலகாலம்’ என்ற நாவலில் காந்தியடிகளை ஒரு கதாபாத்திரமாக்கியிருந்தேன். அந்நாவல் சங்ககாலத்திலிருந்து சமகாலம் வரை பயணித்திருந்தது. அதில் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தை எழுதியபோது அதில் காந்தியடிகளை ஒரு கதாபாத்திரமாக்கியிருந்தேன். அதற்காக காந்தியடிகள் எழுதிய நுால்கள், காந்தியடிகளை பற்றி எழுதப்பட்ட நுால்கள் என ஏராளமானவற்றை வாசிக்க வேண்டியிருந்தது. அதன் ஊடாக காந்தியை நான் உணரத் தொடங்கினேன். அது என்னை உள்ளிழுத்து போடவே, அந்த புள்ளியில் ஆலகாலத்தை நிறுத்தி விட்டு காந்திய சிறுகதைகளை எழுத தொடங்கினேன். காந்திக்கும் அவரது மூத்த மகன் ஹரிலாலுக்குமிடையே நிலவிய முரண்பட்ட உறவுமுறை குறித்தும் சிறுகதை எழுதும் ஆர்வம் வந்தது. ஆனால் அதற்கான தகவல்கள் போதாத நிலையில் பல நுால்களை தரவிறக்கியும் மொழி பெயர்த்தும் வாசிக்கத் தொடங்கினேன். அது எழுத்தாக வெளிப்பட்டபோது சிறுகதைக்குள் அடங்கவியலாததாக இருந்தது. நாவலாக எழுதத் தொடங்கினேன். அதற்கு காலமும் நேரமும் கைக் கொடுத்தது என்பேன். அப்போது கொரோனா பாதிப்பிலிருந்ததால் நேரம் ஓரளவு என் கைக்குள் இருந்தது. இரண்டு மாதக் காலத்திற்குள் அது நாவலென உருமாறியபோது மீண்டும் நிறைவு பெறாததொரு தொனி அதனுள்ளிருந்தது. இப்போது இந்நாவலி்ன் இரண்டாம் பாகம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

2.காந்தி மாதிரியான பொதுவெளி ஆளுமையை எழுதும்போது கவனமாக இருக்க வேண்டியிருக்கும். புனைவு நம் கையை மீறி சென்று கொண்டே இருக்கும். எப்படி கையாண்டீர்கள்?

உண்மைதான். வரலாற்று உண்மைகள் புனைவு எழுத்தாளரை கட்டிப் போட்டு விடும். அதிலும் காந்தியைப் போன்று உலகமறிந்த பேராளுமைகளை எழுத்தில் வார்க்கும்போது அதிக கவனம் கொள்ள வேண்டும். மேலும் எண்ணற்ற சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், தொடர்புகள், போராட்டங்கள் என ஒரே ஒருவரின் வாழ்க்கையில் இத்தனை விஷயங்கள் இருக்க முடியுமா என்பதே ஆச்சர்யபபட வைக்கும். புதுமையான போராட்டம், விசித்திரமான மனவோட்டம், அவரை குறித்து ஆன்மீகவாதியா, அகிம்சைவாதியா, அரசியல்வாதியா, அறவாளரா, துறவாளரா, குடும்பஸ்தரா, சமூக நீதி காவலரா என்று எதை கேட்டாலும் ஆம்.. ஆம்.. ஆம்… என்று கூறிக் கொண்டே போகலாம். அதே சமயம் அவர் ஏதொன்றிலும் நிலை பெறுபவர் அல்ல. விரிக்க விரிக்க விரிந்தும் எடுக்க எடுக்கப் பெருகியும் விளையாடும் வித்தகர். எதையொன்றை முடிவு செய்து கொண்டு அவரை அணுகினாலும் அதனை மீறி நழுவிச் செல்பவர். ஆழம் துழாவி அகழ்ந்தெடுத்தாலும் மிச்சமென நிறைபவர். அவரைக் குறித்து நான் உணர்ந்தவற்றையே எழுத்தாக்கினேன். புனைவாசிரியரின் வழக்கமான போக்கு இதிலெல்லாம் எடுபடாது என்றே தோன்றுகிறது. இரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் என்னென்ன சாத்தியப்பாடுகள் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொள்ளும் வரைமுறைக்குள்ளிருந்து நாம் கவனமாக விலகக்கூடாது.

3.தன் மனைவி குழந்தைகளுக்கானவராக காந்தி இல்லை என்ற பொதுத்தளகருத்திற்கு மாற்று தரப்பாக இந்தநாவல் உள்ளதே…அதைப்பற்றி

அவர் தன்னை போலவே பிறரையும் நேசித்தவர். போலவே, தன்னிடம் தான் எதிர்பார்ப்பவற்றையே பிறரிடமும் எதிர்பார்த்தவர். அந்தப் பிறரில் மனைவி பிள்ளைகள் எல்லோருமே அடக்கம். யாரொருவரும் அவரின் தனி கவனத்துக்குரியவரல்ல. இதனைக் குடும்பத்தார் ஏற்றுக் கொண்டதே பெரிய தியாகம்தான். அந்த தியாகத்தைத் தன்னுள் கட்டாயப்படுத்திக் கொள்ளவியலாமல் போனதே ஹரிலாலின் தோல்வி.

4. ‘அவன் விரலை நகர்த்தி அவரைத் தொட்டுவிட்டான். அப்போது அவர் கைகளை மடித்து அவன் விரல்களை சிறைப்பிடித்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை’என்று நாவலில் வரும். அது நடக்காமல் ஆனது எப்படி என்பது தான் நாவலாகியிருக்கிறதா?

இருவருக்குமான உறவு என்பது அன்பும் வெறுப்புமானது. பொதுவெளியில் முக்கியமான ஆளுமையாக நடமாடும் ஒருவரின் மகன் நடத்தை குறைபாடுகள் கொண்டவராகவும் அந்த ஆளுமையைத் தூற்றுவதுமாக இருக்கிறார். குடும்பச்சண்டையை பொதுவெளிக்குக் கொண்டு வந்து செய்தித்தாள்களில் திறந்த கடிதங்கள் எழுதுகிறார். எப்படியாவது தகப்பனை ஈர்த்து விட வேண்டும் என்று அவர் எண்ணியிருக்கலாம். காந்தியும் மகனின் பிடிக்கு அகப்படாதவராக நழுவுகிறார். ஆனாலும் தான் அறி்ந்தவரையிலும் இயன்றவரையிலும் மகனைப் பார்த்துக் கொள்கிறார். ஆனால் அது மகனுக்கு போதுமானதாக இல்லை. இருவரும் ஒட்டி வரவுமில்லை. விட்டு விலகவுமில்லை. ஹரிலால் மீது பரிதாபம் ஏற்படும்போதே அவர் படுத்திய பாடுகளும் கூடவே நினைவுக்கு வந்து விடும். எப்பேர்ப்பட்ட ஆளுமையின் குடும்ப வாழ்வின் தோல்வி அவரை நிழலெனப் பின் தொடர்கிறதே என்று காந்தியின் மீது பரிதாபம் கொள்ளும்போது ஏன்… அதில் அவருக்கு பங்கில்லையா… என்று தோன்றும். அது அப்படித்தான். விமர்சிக்க ஏதுமில்லை.

5.காந்தியின் கருத்துகள்தான் சாதாரண தந்தைக்குரியதாக இல்லாது வேறுமாதிரியாக உள்ளனவே தவிர அவர் தந்தையாக, கணவராக நல்ல அக்கறை உள்ளவராகவே இருக்கிறார் இல்லையா…

அவர் தன் கருத்துகள் மற்றும் கொள்கைகள் மீது கொண்டிருந்த பிடிவாதத் தனமைதான் அவர்களுக்கிடையே அரணை எழுப்பியதே தவிர குடும்பத்தார் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராகவே தெரிகிறார். ஒருமுறை ஜபல்பூர் மெயிலில் மனைவியுடன் வந்துக் கொண்டிருந்தபோது ஹரிலால் தனது தாயாருக்கு மட்டும் ஆரஞ்சுப்பழத்தை கொண்டு வந்து நீட்டியபோது தனக்கேதும் இல்லையா… என்று தழுதழுத்த போதும் சரி… தென்னாப்பிரிக்காவில் மகன் தன்னிடமிருந்து விலகி இந்தியா செல்லத் தலைப்பட்டபோது அவரை வழியனுப்பி வைத்த விதமும் சரி… (இப்படி நிறைய இடங்களை குறிப்பிடலாம்) அவர் பாசக்காரத் தகப்பன்தான்.

6.பொதுத்தன்மையிலிருந்து விலகிய பரிட்சார்த்தமான யோசனைகளைத் தன் குடும்பத்தில் செயல்படுத்தப் பார்க்கிறார். குறிப்பாக, கல்வி விஷயங்களில்… அதுதான் ஹரிலால் தன் தந்தையிடமிருந்து விலகக் காரணமாகிறது இல்லையா

ஆமாம்.. அவர் வாழ்வே பரிசோதனைதானே. சிறுவயதிலிருந்து தகப்பனும் மகனும் இணைந்து வாழும் தருணங்கள் அவர்கள் வாழ்வில் அதிகம் நிகழாமல் போய் விட்டன. ஹரிலாலுக்குத் தன் தகப்பனாரைக் குறித்து நல்லதொரு பிம்பம் மனதில் பதிவாகியிருக்கலாம். அது அவர் பொதுவெளியிலிருந்து பெற்றுக் கொண்டதாகவும் இருக்கலாம். மகன் வளரிளம் பருவத்தில் நின்றபோது தகப்பனார் முப்பதுகளின் மத்தியில் மட்டுமே இருந்தது கூட புரிதல் குறைவிற்கான காரணமாக இருக்கலாம். கல்வி விஷயத்தில் அது சற்று வெளிப்படையாகத் தெரிந்திருக்கலாம். சிறுவயதில் ஹரியையும் உறவினர் சிறுவனான கோபால்தாஸையும் பள்ளியில் சேர்த்து விடுகிறார். ஹரிலாலை கோண்டாலில் இருக்கும் பள்ளியிலும் அந்த சிறுவனை பனாரஸிலும் சேர்த்து விட்டவர் பிறகு மகனை மட்டும் திரும்ப அழைத்துக் கொள்கிறார். பின்னாட்களில் மகன் மிகவும் விரும்பிய பாரிஸ்டர் படிப்புக்கும் அனுப்பவில்லை. அவரை அனுப்பாதது மட்டுமன்றி அதே வாய்ப்பை அவர் கண்ணெதிரே மற்றவருக்கு அளித்து விட்டு அதற்கு ஹரியின் தகுதிக் குறைபாட்டை பட்டியல் இடுகிறார். மகன் அசாதாரணரிடம் இயல்பான எதிர்பார்ப்புக் கொண்டிருந்ததும் தகப்பன் இயல்பானவரிடமிருந்து அசாதாரணங்களை எதிர்பார்த்ததும் இங்கு பிழைகளாக நின்று கொண்டிருக்கின்றன.

7.காந்தி அவரவர்களுக்குரியதை அவரவருக்குக் கொடுக்க நினைக்கிறார். குறிப்பாக இந்த நாவலில் பாரிஸ்டர் படிப்பிற்காக ஒருவரை அனுப்பும் வாய்ப்பு கிடைக்கும்போது தன் மகனுக்காக என்று நினைக்க முடியாதவராக இருக்கிறார்… இந்தத் தடுமாற்றங்கள்தான் காந்தியை காந்தியாக மாற்றுகிறதா?

இதைத் தடுமாற்றம் என்று சொல்லவியலாது. இது அவரது இயல்பு. அதை அவர் உணர்ந்தேயிருந்தார். அதுதானே காந்தி.

8.காந்தி ஹரிலால் இருவரையும் சார்ந்து சரியான புரிதலை இந்நாவல் ஏற்படுத்துகிறது. இருவருமே விலகவோ இணையவோ முடியாத துருவங்களில்லையா?

விலகவும் இணையவும் இருவருமே விரும்பவில்லையோ? அதேசமயம் நினைத்திருந்தால் ஒருவரை விட்டு ஒருவர் விலகியிருக்கவும் முடியும். ஆனால் அதையும் அவர்கள் நினைத்திருக்கவில்லை என்பது தான் அவர்கள் உறவின் விசித்திரம்.

9.தென்னாப்பிரிக்காவில் ஹரிலால் தானாக பொதுகாரியங்களில் ஈடுபடாது தந்தையின் பார்வைக்காக ஈடுபடுவதாலேயே போராட்டங்கள் சார்ந்து சோர்வடைகிறாரா?

அப்படி நான் கருதவில்லை. தன்முனைப்பும் தந்தையார் மீதான உயர் பிரேமையும் அவரை போராட்டங்களில் ஈர்த்திருக்கலாம். அப்பாவின் தொழிலை மகன் கற்றுக் கொள்வதுபோல இயல்பாகவும் கனிந்திருக்கலாம். இளைய காந்தி என்று அவரைக் கொண்டாடும்போது பெருமை கொள்கிறார். பின்னாட்களில் அவரது சிக்கலான மனநிலை, பொருளாதார சீரின்மை, மனைவியின் இழப்பு போன்ற பல காரணிகள் அவரது வாழ்வை தாறுமாறாக்கி போராட்டங்களிலிருந்து நகர்த்தி விட்டிருக்கலாம்.

10.ஒரு தாயாக கஸ்தூரிபாய் ஹரிலாலிடம் தந்தையைப் பற்றிய மகனின் கேள்விகளுக்காகப் பேசிக் கொண்டே இருக்கிறார்…அதுபற்றி…

அப்படிதானே இருக்க முடியும் என்ற அனுமானத்தில்தான் அந்த உரையாடல்களை வைத்தேன். மேலும் திசைக்கொன்றாக நிற்கும் கணவனும் மகனும் ‘தாய்’ என்ற புள்ளியில்தானே இயல்பாக இணைய முடியும்?

11.படிப்பு, வேலை என்று இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் அதே சவாலை ஹரிலால் எதிர் கொள்கிறார்… காந்தி என்றைக்குமாக விட்டுச் சென்றுள்ள விஷயங்களைப் போலவே ஹரிலாலின் வாழ்க்கையும் இன்றுவரை நடைமுறையில் உள்ளது என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. அதுவும் இந்திய சமுதாய அமைப்பில் மூடாக்குப் போட்டு கொள்ளும் உறவுகளுக்குள் இம்மாதிரியான பிளவுகள் சாதாரணம்தானே?

12.காந்தியை விட்டுத் தான் விலகிச் செல்வது குறித்த குற்றவுணர்வே ஹரிலாலை மேலும் மேலும் தன்னிறைவற்றவராக மாற்றி தீயப்பழக்கங்களுக்கு இட்டு செல்கிறதில்லையா?

சமுதாயத்தில் மிக பெரிய ஆளுமை அவரது தந்தை. நாடுகள் கடந்து மொழிகள் கடந்து நட்பு பாராட்டுவர். அரசியல் ஆன்மிக ஞானியாக வாழ்ந்த அவரை தேடி வந்துக் கொண்டேயிருக்கும் மனிதர்கள் ஒரு புறம். அரசியல் அதிகாரத்தின் மிகப் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுடனான அவரது நேரடிப் பழக்கங்கள், பணக்காரர்களுடனான நட்பு, அவரின் அசைவுகளுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம், ரயில் வண்டியின் தலைமை எஞ்சினாக சுதந்திரப்போராட்டத்தை அழைத்துச் சென்றது, சத்தியாகிரகம், அகிம்சை (காந்தி இதை மலையளவு பழமையானது என்பார்) என்று விடுதலைப் போரை இயக்கும் உத்திகள்… இவையெல்லாம் ஒருங்கே வாய்த்த மகாத்மாதான் தன் தந்தை என்பது அவருக்கு பெருமையாக இருந்திருக்கும்தானே? ஆனால் அவற்றை அதே புள்ளியில் நிறுத்தி விட்டு தந்தை-மகன் உறவு நிலையில் பொருத்திப் பார்க்கும்போது ஏற்படும் விரிசல்… தந்தையாரின் கவனத்தைத் தன்னை நோக்கி ஈர்க்க வேண்டும் என்ற ஆவல். எதுவுமே நிறைவேறாதது குறித்த வெறுமை, துணையை இழந்த நின்ற அவலம்… எல்லாமேதான் அவரை தீயப்பழக்கங்களுக்கு அடிமைப்படுத்தி விட்டது என்று நினைக்கிறேன்.

13.மகனாக இருந்தாலும் இன்னொரு தனிமனித ஆளுமை உருவாக்கத்தில் ஒரு எல்லைக்கு மேல் ஒன்றும் செய்ய முடியாதில்லையா?

ஆமாம். அக உணர்வும் புறச்சூழல்களும் தனி மனித ஆளுமையை உருவாக்குகின்றன எனலாம். இயல்பாக வர வேண்டிய ஒன்றின் மீது மற்றவர் எப்படி ஆதிக்கம் செலுத்த முடியும்?

14.நாராயணன் என்ற கதாபாத்திரம் காந்தி மீது மகன் என்ற பொசசிவ் உணர்வோடு இருப்பதை காந்தி உணர்கிறார்… அதேபோலதான் ஹரியையும் உணர்ந்திருப்பார். அதற்கான சலுகைகளை அவர் அளிக்கவில்லைதானே…

அளிக்கவேயில்லை. ஆனால் பாசம் கொண்டிருந்தார்.

15.ஹரியை மட்டும் எப்படி சொல்ல முடியும் சில இடங்களில் கஸ்தூரிபாய் கூட வீட்டுக்கான மனிதராக மட்டும் காந்தி இருக்கவே நினைக்கிறார்தானே?

தன் எண்ணங்கள் இப்படிதான் இருக்குமென்று கஸ்துார் எதையும் பதிவு செய்யவில்லை என்றே நினைக்கிறேன். அவரைப் பற்றி எழுதப்பட்டவைகளின் வழியே அவரை ஏகதேசம் அடையும்போது அந்த எண்ணம் எப்போதாவது எழுந்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் உருவாகி வந்து விட்ட பிறகு அதுவே வாழ்க்கையென்று ஆகி விட்ட பிறகு அதுவே பழகிவிடும் அல்லவா? நம் சமுதாய அமைப்பும் அதைதானே மனைவிகளுக்கு அறிவுறுத்துகிறது. உப்பு சத்தியாகிரகத்தின் போது சிறையில் அடைப்பட்டிருக்கும் தன் மகன்களைக் காண சென்றபோது அவர் வெகு இயல்பாகத்தான் இருந்தாராம். இப்படியான நிறைய சம்பவங்களின் வழியேதான் அவரை அணுக முடிகிறது.

16.சில நேரங்களில் காந்தியின் அகிம்சை பற்றிய நம்பிக்கைகள், செயல்பாடுகளை அவரின் நெருங்கிய நண்பர்களே‘ விதண்டாவாதத்திற்காக எதுவும் பேசலாம் மிஸ்டர்காந்தி,’ என்கிறார்கள்.

ஆமாம். அவரின் வார்த்தைகளே அவருக்குப் போதுமான எதிரி. ஆனால் இயலாதவைகளைக் கூட நடைமுறை சாத்தியத்துக்கு கொண்டு வந்து விடுகிறார் அல்லவா?

17.வயதில் இளையவரான ஹரிலால் மீது காந்தி இன்னும் நெகிழ்வாக நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது… அன்றைய வழக்கமான தந்தையைப் போல மகனிடம் அன்பை வெளிப்படுதுவதில் தயக்கம் கொண்டவராகவே காந்தியும் இருந்திருப்பாரோ?

நிச்சயமாக நெகிழ்வாக நடந்திருக்கலாம். இருவருக்குமான கடிதங்களை வாசிக்கும் போது எக்காலத்தில் இவர்கள் ஒருவரையொருவர் தொட்டிருக்கவே முடியாது என்று தோன்றுகிறது.

18.காந்தி நத்தைக்கு மேலுள்ள ஓடு மாதிரி புலனடக்கம் பற்றிய விதிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்… அந்த ஓடு உருவாகும்வரை ஹரிலாலை தன்கைகளின் கதகதப்பிற்குள் வைத்திருக்கலாமோ என்று நாவலை வாசிக்கும்போது தோன்றியது

இம்மாதிரி விஷயங்களில் ஹரிலால் தன் தந்தையை மிகவும் அனுசரித்தே நடந்துக் கொண்டார். அவருடைய ஒவ்வொரு நடத்தையும் இனி அவர் தகப்பனுடனான தன்னுறவை வெட்டிக் கொண்டு விட்டார் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அடுத்த கடிதமே மன்னிப்புக் கடிதமாக இருக்கும். காந்தியும் அப்படிதான். ஆனால் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் மகன் சற்று கனியட்டும் என்று தகப்பன் காத்திருந்திருக்கலாம்.

ஆனால் இதற்கு காந்திக்கு ‘காந்தி’’’’யாக சில நியாயங்கள் இருந்திருக்கும்.

பொதுவாகவே அவர் வசதியும் சௌகரியமும் இறைவனை விட்டு விலகிச் செல்லும் பாதைகள். நமது உடம்பு அதன் போக்கில் சௌகரியமான புலனின்பத்தைக் கேட்பதை நாம் ஏன் அனுமதிக்க வேண்டும் என்பவர். ஒருவேளை அவர் ஹரியை ‘தான்’ என்பதாகவே பார்த்திருக்கலாம். அவருடைய எதிர்பார்ப்பைத் தாங்கவியலாதவராக கருகி விடுகிறார் ஹரிலால்.

19.பொது சமையலறை, ஆசிரம கூட்டு வாழ்க்கை போன்ற கனவிலிருக்கும் காந்தியிடம் எனக்காக என்னுடன் இருங்கள் என்று ஹரி கேட்பதும், இருந்திருக்கலாம் என்று இன்று நாம் சொல்வதும் சரியாக இருக்கலாம் ஆனால் காந்திக்கு அது முடியாதில்லையா?

ஆமாம். குடும்பத்தின் தலைவன் எவ்வழியோ அவ்வழியே மனைவியும் மகவுகளும் என்ற நம் சமுதாய அமைப்பின் வழி காந்தியின் குடும்பம் நடந்து கொண்டாலும் அதிலிருந்து அடங்க மறுத்துத் தெறித்த சிறு துளியென விலகிப் போகிறார் ஹரிலால். காந்தி குடும்பத்தின் தலைவனாக இருக்கும் பட்சத்திலும் ‘காந்தி’ யாக இருப்பதனாலும் அது அவருக்கு இயலாத ஒன்றுதான்.

20.மகன்களின் கல்வி விஷயத்தில் காந்தி கடுமையாக நடந்து கொண்டார். அவரின் ஆளுமையே அவரின் படிப்பால் உண்டானதுதானே. எனக்கு ஏன் அதை மறுக்கிறார் என்று ஹரி கேட்பது சரிதானே?

பொதுவான நியாயத்தின்படி ஹரி கேட்பது முற்றிலும் சரியே. அதுவும், தான் கேட்டுக் கொண்டேயிருக்கும் ஒரு பொருளைத் தூக்கி அப்படியே இன்னொருவரிடம் கொடுத்து விட்டால் நாம் என்ன மாதிரியான மனநிலைக்கு ஆட்படுவோம்? அப்போது, கொடுத்தவர் மீதும் பெற்றுக் கொண்டவர் மீதும் கோபம் வருவது இயல்பு. ஆனால் ஹரிலாலுக்குப் பிணக்கு தந்தையுடன்தான். அதை மற்றவரிடம் காட்டவில்லை.

21.தென்ஆஃப்ரிக்காவின் ஒரு சமூகத்திற்கே தன் சத்தியாகிரக போராட்டத்தால் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் திரும்பி வரும் காந்திக்கு அவருடைய ஆன்மபலத்திற்கான சோதனையாக இந்தியாவில் முதலில் மகன்தான் நிற்கிறார்… ஒரேநேரத்தில் காந்தியை நேசிக்கவும் அப்பொழுதே அவரை மறுதலிக்கவுமாக இருக்கக் கூடிய ஹரிலால்களுடன்தான் இன்றுவரைகாந்தி இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஹரிலால் நாவலின் இரண்டாம் பாகம் வருகிறதா?

நிச்சயமாக. இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. முதல் பாகத்தை அந்நிய நிலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதியிருந்தேன். இரண்டாம் பாகம் காந்தியடிகள் இந்தியாவுக்கு திரும்பிய நாளிலிருந்து தொடங்குகிறது. தெரிந்த கதையின் அறியாத இடைவெளிகளை முடிந்தவரை நிரப்ப முயல்கிறேன். முதல் பாகத்தை விட கால அளவு நீண்டது என்பதால் நாவலும் அதை விட பக்க அளவில் கூடுதலாகவே வந்துள்ளது.

22.வாழ்வே என் செய்தி என்று சொல்வதற்கு ஏற்ப காந்தி சொல்லும் அடிப்படைகளைச் சிந்திக்காமல் அதற்கு எதிர்திசையில் சென்றால் ஹரி மாதிரி ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று தோன்றுகிறது…

இரு வேறு ஆளுமைகளின் தோல்விகளின் வெற்றி என்று சொல்லலாம்.

23.அடிப்படையில் ஹரிலாலின் சிக்கல்களை காந்தியும் எதிர் கொண்டிக்கிறார். அதிலிருந்து மீண்டவர் என்பதால் ஹரிலாலின் இளமைக்குரிய சிக்கல்களை மடைமாற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் போனது ஒரு வரலாற்று துயரம்தானே?

இதற்கு விடைதான் இந்த நாவல் என்று நினைக்கிறேன்.

24.காந்தி உங்களுக்கு என்னவாக இருக்கிறார்?

கடந்து விட முடியாத பேராளுமையாக. வினாக்களாக.. விடைகளாக..

One Reply to “கலைச்செல்வி – நேர்காணல்”

  1. மிக அருமையான..அதே நேரம் தேவையான தனது கருத்துகளை ஆசிரியர் இதன் வழி வெளிப்படுத்தியிருக்கிறார். இந் நூலினை எவ்வாறு பெற்றுக் கொள்ள இயலும் என்பதையும் தெரிவித்திருக்கலாம். உலகில் வெவ்வேறு பாகங்களில் வாழும் வாசகர்கள் பயனடைவார்கள். இதன் இரண்டாவது பகுதியினை எதிர்பார்த்திருக்கிறோம்… ஆசிரியரின் பேட்டியையும் கூட….!
    ‘சொல்வன’த்திற்கு நன்றியும்… பாராட்டுதல்களும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.