
பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி
மகிமைத் தேர்தல்!
ஆளும் ஆசை அற்றுப் போமோ?
வேட்பாளர் சிலருக்கு ஒற்றை வாக்கும்
பதிவாக வில்லையாம்!
சில கட்சிக்குப் பல தொகுதியில்
காப்பீட்டுத் தொகையும் காணாமல் ஆச்சாம்!
முன்னாள் ஈட்டிய கும்பலின் கணவரை
இந்நாள் ஈட்டும் கும்பலின் மனைவி
கனத்த போட்டியில் புறம் கண்டாளாம்!
ஐந்து கோடி செலவும் ஆகி
ஆறு வாக்கில் தோல்வியும் ஆச்சாம்!
வெற்றிச் செய்தி கேட்ட ஒருவர்
மாரடைப்பில் மரணம் உற்றாராம்!
தலைவர் தேர்தலில் முன்னாள் இந்நாள்
மந்திரி மக்கள் ஏறு தழுவலாம்!
ஆதரவளிக்கும் உறுப்பினருக்கு
வீட்டுமனையாம் கைச்செலவுக்கு
முப்பது இலக்கம் உல்லாசப் பயணம்
பல் திறக் கேளிக்கைப் பயனும் உண்டாம்!
பிறகு
மக்கட்பணி ஆற்றுவ தெங்ஙனம்?
பணி செய்யாமல் உயிர் தரித்தல் எங்ஙனம்?
வெற்றி பெற்றபின் விருந்து கொடுக்க
பத்து டன் ஆட்டுக்கறியாம்!
எமக்கென்ன என்று இருக்கலாம் நாமும்
பாவம் தானே ஆடுகள் ஐயா!