இருள்

பானோ எங்கள் வீட்டை அடைவதற்கு மூன்று குறுக்குவழி கால்நடைப் பாதைகளைக் கடந்து வர வேண்டியிருந்தது. வந்தவுடன் கேட்பாள் – ” ஏதாவது தெரிந்ததா?” என் மனம் அவளிடம் பொய் சொல்லத் துடிக்கும். ” ஆமாம். தகவல் வந்துவிட்டது. நாங்கள் தில்லி போகப்போகிறோம் என்று சொல்லிவிட வேண்டும் போல இருக்கும். ஆனால் பானோ கெட்டிக்காரி. என் பொய்யை மிகச்சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவாள். எனவே, கண்களை மூடிக் கொண்டே படுத்துக் கிடப்பேன்.

வந்ததும், வழக்கம் போல, பானோ என் நெற்றியின் மீது கை வைத்துப் பார்த்தாள். அவளுடைய கை சில்லென்று இருந்தால், இன்னும் காய்ச்சல் இறங்கவில்லை என்று எனக்கு தெரிந்து விடும்.ஆனால், கை வெதுவெதுப்பாக இருந்தால் காய்ச்சல் இல்லை என்று என் மனம் உற்சாகமடையும். கண்களைத் திறந்து ஆர்வத்துடன் கேட்பேன,” பானோ நான் குணமடைந்து வருகிறேன் இல்லையா?” ஏமாற்றம் நிறைந்த குரலில், “இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனால், மாலைக்குள் மறுபடியும் அதிகமாகிவிடும்” என்பாள். காய்ச்சல் குறையாதவரை நான் அவளோடு சிம்லாவில் தான் இருப்பேன் என்று அவளுக்கு தெரியும் – காய்ச்சல் குறைய ஆரம்பித்தால் அவள் ஏமாற்றமடையத் தொடங்கி விடுவாள். சில சமயம் அவளுடைய காலடி ஓசையைக் கேட்ட உடனேயே, நான் ஈரத் துவாலையால் என் நெற்றியை நன்றாக அழுத்தி துடைத்துக் கொள்வேன். அவள் வந்ததும், அவளுடைய கையை நெற்றியின் மீது வைத்து பார்த்தாயா பானோ, எவ்வளவு சில்லென்று இருக்கிறது?” என்று கேட்பேன். பானோ மௌனமாக ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்து விடுவாள். ஜன்னலுக்கு வெளியே, மரங்களடரந்த காடும் அதைச்சுற்றி உயரமான மலை முகடுகளும் இருக்கின்றன.சில சமயம், காற்று, திரைச்சீலைகளை தள்ளிக்கொண்டு அறைக்குள் வரும்போது, வெகு தூரத்திலிருந்து காற்றில் மிதந்து வரும் கனவையொத்த நறுமணம், அறை முழுவதும் பரவும்.

“இந்த மலைகளுக்கு பின்னால் தான் தில்லி இருக்கிறது இல்லையா பானோ?” நான் கேட்டேன். பானோ மௌனமாக தலையசைத்தாள். அவளுக்கு தில்லியை குறித்த விஷயங்களில் பெரிதாக ஆர்வம் எதுவும் இல்லை. சில சமயம், எனக்கு அவளைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கும். பாவம், அவள் இதுவரை தில்லியை பார்த்ததே இல்லை. அவளுடைய தந்தையின் அலுவலகம் வருடம் முழுவதும் சிம்லாவிலி ருந்தே இயங்கியது.

“நான் இன்று ‘நம்ம வீட்டுக்கு’ போயிருந்தேன்” என்றாள் பானோ. முன்பாயிருந்தால், ‘நம்ம வீடு’ என்கிற வார்த்தையை கேட்டதுமே நான் உற்சாகத்தில் துள்ளி குதித்திருப்பேன். ஆனால் இன்று அதைக் கேட்டு என் மனதில் எந்தவித சந்தோஷமும் ஏற்படவில்லை.

“என் பங்கு ப்ளம்ஸ் பழங்களையும் நீயே வைத்துக்கொள் பானோ” நான் கண்களை மூடிப் படுத்தவாறே கூறினேன். “உன்னுடைய அழுகிப்போன ப்ளம்ஸ் பழங்கள் யாருக்கு வேண்டும்? தில்லி போகும் போது, மூட்டைக் கட்டிக் கொண்டு, நீயே எடுத்துக் கொண்டு போ” எரிச்சலுடன் கூறியவாறே பானோ வெளியே வராந்தாவுக்கு ஓடிவிட்டாள்.

எனக்குக் கோபம் வந்தது. ஆனால் நோய்வாய்ப்பட்டடிருக்கையில், கோபம் கூட விட்டு விட்டுத் தான் வருகிறது. எந்த உணர்வுமே அதன் முடிவு வரை போவதில்லை. நடுவிலேயே உலர்ந்து விடுகிறது. அழ தோன்றும் போது, அழுகை கூட வருவதில்லை. இமைகள் மட்டும் துடிக்கின்றன. சந்தோஷம் வரும் போதும் இதயம் வேகமாகத் துடிப்பதில்லை. உதடுகள் மட்டும் நடுங்கி அடங்கி விடுகின்றன.

இந்நாட்களில் பானோ என்னைப்பார்க்க, அறைக்குள் நுழைவதற்கு முன்பாக, புளிப்பு ப்ளம்ஸ் பழங்களையோ அல்லது இன்னமும் பழுக்காத ஆப்ரிகாட் பழங்களையோ மறைத்து வைத்திருக்கிறாளா என முழுமையாக பரிசோதிக்கப்படுகிறாள். அவளுடைய துப்பட்டாவின் நுனியில் உப்பும் மிளகாய்பொடியும் கலந்த பொட்டலம் ஒன்று முடிச்சுப் போடப் பட்டிருக்கும். நோய்வாய்ப் படுவதற்கு முன்பு, இனிப்பும் புளிப்புமான பிளம்ஸ் பழங்களை நாங்கள் அந்தப் பொடியில் தோய்த்துதான் சாப்பிடுவது வழக்கம்.

பானோ சற்று முன்பு “நம்ம வீடு” என்று குறிப்பிட்ட வீடு, பக்கத்தில் இருக்கும், வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் புதர் மண்டிக் கிடக்கும் பாழடைந்த பேய் வீடாகும். அந்த வீட்டில் வெள்ளைக்கார பெண்மணி ஒருத்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக சொல்வார்கள். அந்த வீட்டின் ஒரு அறை குளியலறையை ஒட்டி இருந்தது. அங்குதான் பானோவும் நானும், எங்களது பொக்கிஷமான ப்ளம்ஸ் பழங்களையும், முழுமையாகப் பழுக்காத ஆப்ரிகாட் பழங்களையும் ஒளித்து வைத்திருப்போம். எங்களுடைய இந்த ரகசிய வியாபாரத்தைக் குறித்து, எங்களைத் தவிர எந்த மூன்றாவது நபருக்கும் இதுவரையிலும் தெரிய வந்ததில்லை.

பானோ வராந்தாவிலி ருந்த ஊஞ்சலில் வெகுநேரம் வரை ஆடிக் கொண்டிருந்தாள். தலைமுடி காற்றில் பறக்க, அவள் ஊஞ்சலை மேலே கொண்டு செல்லும் போது, அவளுடைய சல்வார், பலூன் போல உப்பிக்கொள்ளும். ஊஞ்சல் மேலும் கீழுமாக போவதை பார்த்தவாறு நான் கண்ணயர்ந்தேன். எப்போது தூக்கம் வந்தது என்று நினைவில்லை. கண்ட கனவு மட்டும் நினைவிருந்தது. மதியம் தூங்கும் போது காணும் கனவுகள் மட்டும் எனக்கு எப்போதும் நினைவிருக்கும். அப்பாவின் அலுவலகத்திலிருந்து மதிய சாப்பாடு கொண்டு போக பியூன் வந்திருக்கிறான். அவன் சிரித்தவாறே, நாங்கள் தில்லி போகப் போகிறோம் என்கிற தகவலைக் கூறுகிறான். பாழடைந்த வீட்டின் அறையில் இருந்த ஜன்னல் வழியாக பானோ என்னுடைய பிளம்ஸ் பழங்களையும் ஆப்ரிகாட் பழங்களையும் வெளியே வீசி எறிந்து கொண்டிருக்கிறாள். தூரத்தில் தெரியும் கல்கா சிம்லா ரயில் வண்டியில், பாழடைந்த வீட்டில் இறந்து போன அதே வெள்ளைக்கார சீமாட்டி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பானோ தூக்கி எறிந்த ஒவ்வொரு பழத்தையும், அந்தப் பெண்மணி, ரயிலின் ஏதோ ஒரு பெட்டியின் ஜன்னல் வழியாக கைகளை வெளியே நீட்டி, பிடித்துக் கொண்டிருக்கிறார்.

நான் கண்விழித்தபோது பானோ போய் வெகு நேரமாகி விட்டிருந்தது.

மாலையில், அம்மா தேனீர் கொண்டு வந்த போது, நான் ப்யூன் வந்திருந்தானா என்று கேட்டேன். அம்மா ஆச்சரியத்துடன் “ஆமாம். ஏன் கேட்கிறாய்?” என்றார். அவன் ஏதேனும் கூறினானா என்று நான் கேட்டேன். “இல்லையே, என்ன விஷயம்? எதற்காகக் கேட்கிறாய்?” என்றார் அம்மா. நான் ஒன்றும் பேசாமல் தலையணையில் சாய்ந்தவாறு தேநீரைக் குடித்து முடித்தேன்.

அம்மா தெர்மாமீட்டரால் காய்ச்சல் இருக்கிறதா எனப் பார்த்துவிட்டு பிறகு அதை உதறி உள்ளே வைத்தார். முன்பெல்லாம் ஜுரம் எவ்வளவு இருக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்வேன். அம்மா பொய் சொல்கிறார் என தெரிந்ததும், கேட்பதை விடுத்து, வெறுமனே அவரது முக பாவத்தையே பார்த்து புரிந்து கொள்ள முயற்சிப்பேன். சில சமயம், அம்மா, என் கவலை தோய்ந்த முகத்தை பார்த்து “சீக்கிரமாக உடம்பை சரி செய்துக்கொள். பிறகு நாம் தில்லி சென்று விடலாம்” என்பார். அம்மா இதை இத்தனை எளிதாக சொல்வதைப் பார்த்தால், உடம்பை சரிசெய்து கொள்வது என்னவோ என் கையில் இருப்பது போலவும், நான்தான் வீணாக பிடிவாதம் பிடித்துக் கொண்டு சரிசெய்து கொள்ள மறுப்பது போலவும், அம்மா என்னிடம் கெஞ்சி உடம்பை சரிசெய்துகொள்ள மன்றாடுவது போலவும் தோன்றும். இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தும். நான் ஒருக்களித்து ஜன்னலை பார்த்தபடி முகத்தைத் திருப்பிக்கொள்வேன். ஆனால் அவருக்கோ வெகுநேரம் வரை நான் கோபித்துக் கொண்டிருப்பது கூடத் தெரியாது. நான் கால்களை விரைத்துக்கொண்டு, கை முஷ்ட்டிகளை இறுக்கிக்கொண்டு, பற்களை நறநற என கடித்தபடி, வேகவேகமாக மூச்சு விடுவேன். ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா மிகவும் பயந்து போவார். என் முகத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டவாறு என் தலைமாட்டில் உட்கார்ந்து கொள்வார். என் நடிப்பை அவர் புரிந்து கொண்டு விட்டார் என்பது எனக்கு எப்படியோ தெரிந்துவிடும். ஆனாலும் அவர் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளமாட்டார். மெதுவாக அலமாரியிலிருந்து காட்பரீஸ் சாக்லெட் ஒன்றை எடுத்து என் தலையணையின் கீழே வைத்தார். என் தலைமுடியை தன் விரல்களால் துழாவியவாறே “அப்பாவிடம் சொல்லிவிடாதே” என்றார். அடுத்த கணமே அவர் என்னை மறந்து விட்டார். அவரது விரல்களின் இயக்கம் நின்றுவிடுகையில், அவர் என்னை விட்டு எங்கோ வெகு தூரம் சென்று விட்டார் என்பது புரிந்துவிடும். சாக்லேட் கொடுப்பது என்பது என்னை மகிழச் செய்ய அல்ல, மாறாக என்னிடமிருந்து விடுதலையாகி, எந்தத் இடைஞ்சலுமின்றி தனக்குள்ளேயே அமிழ்ந்து கிடக்கத்தான். அத்தருணங்களில் நான் மௌனமாக அவரையே பார்த்துக் கொண்டி ருப்பேன். அப்படி நான் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பது கூட அவருக்குத் தெரியாது. அவரது முகத்தில் இருக்கும் கருநிற வரிகள் மறைந்து, தன் முன் விரிந்துகிடக்கும் சூனிய வெளியில் அவர் அமிழ்ந்திருப்பார். அவரது கண்கள் திரைக்குப் பின்னால் சிறு சுடர் ஜொலிப்பது போல எனக்கு தோன்றும். மறுகணமே அந்த பிரமை விலகி அவருக்குள் இன்னமும் லேசான ஈரம் ஜொலிப்பது போல எனக்குத் தோன்றும். அச்சமயம், அவருடைய சிந்தனைகளில்களில் எனக்கு துளியும் இடம் இல்லை என்பது நன்றாக தெரிந்திருந்த போதிலும், அவர் என்னுடைய நோயைக் குறித்து தான் கவலையுடன் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என நினைத்து என்னை நானே அடிக்கடி மகிழ்வித்துக் கொள்வேன்.

நான் மெதுவாக அவரது கைகளின் மீது என் கையை வைத்தேன். இதை எதிர்பாராததால், அவர் அதிர்ச்சியில் துணுக்குற்றார். எங்கோ வெகு தூரத்திலிருந்து நான் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்துவிட்டதைப் போல எனக்கு தோன்றியது. அவர் சிறிது நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு திடீரென என் உதட்டில் முத்தமிட்டார். நான் சட்டையால் என் உதடுகளை துடைத்துக் கொண்டேன். அவர் சிரித்தார்.

“குழந்தை, ஒரு விஷயம் கேட்கவா?”

“என்ன?”

“நான் உன்னை விட்டு விட்டு எங்காவது போய் விட்டால், நீ என்னை புரிந்து கொள்வாயா?”

அம்மா கண்கொட்டாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“நானும் உங்களோடு வருவேனா?”

“மாட்டாய்” அவர் தலையசைத்தார்.

“அப்பாவோடு போவீர்களா?”

“இல்லை”

“அப்படியென்றால்?”

நான் குழம்பிப் போய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் சிரித்தவாறே கட்டிலில் என் அருகே படுத்துக் கொண்டார்.

நான் என் கண்ணங்களை அவர் கன்னத்தோடு ஒட்டி வைத்துக் கொண்டேன். அம்மா மிகவும் அழகு. வீட்டில் அனைவரும் அவரிடம் பயப்படுவார்கள். அவரிடம் இருக்கும் எது எல்லோரையும் அவரிடம் பயம் கொள்ள வைக்கிறதென்று என்று எனக்கு சில சமயம் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அவர் என்னருகே அமர்ந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கும்போது அவரது கண்களை பார்க்க எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும்.

நான் வெகு நாட்கள் முன்பு அப்பாவுடன் அவருடைய நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். திரும்பி வரும்போது நாங்கள் மலையோடையை ஒட்டி மேலே ஏறி வர வேண்டி இருந்தது. மேலே ஏறி வந்ததும் நாங்கள் மரங்களின் நடுவே அடர் இருளில் சிறிது நேரம் இளைப்பாற நின்று கொண்டோம். அந்த இடத்தின் ஆளரவமற்ற அமைதி என்னை பயமுறுத்தியது.

இன்று எப்பொழுதாவது அம்மாவின் கண்களை சந்திக்க நேர்கையில், எனக்கு அடர்ந்த கானகத்தில் படர்ந்திருந்த இருளும், அசாதாரணமான அமைதியும் நினைவுக்கு வருகின்றன.

அம்மாவின் மிருதுவான பளிங்கு வெள்ளை கைகளை நான் வெட்கத்துடன் தொடுகிறேன். அவர் தன் தலைமுடியை இறுக்கிக் கட்டி இருப்பதில், அவரது நெற்றி இன்னமும் அகலமாகத் தெரிகிறது. பொம்மையின் காதுகளைப் போன்ற தன் மிகச்சிறிய காதுகளை அவர் தன் முடிக்குள் மறைத்து வைத்திருந்தார். எப்போதாவது அவர் என் அருகே படுத்தி ருக்கும்போது நான் அவருடைய காதுகளை முடியிலிருந்து வெளியே எடுத்து விடுவேன். எனக்கு பானோ சொன்னது நினைவுக்கு வந்ததும், உடல் முழுவதும் ஒரு வித சிலிர்ப்பு ஓடுகிறது. எவருடைய காதுகள் மிகச்சிறியதாக இருக்கின்றனவோ, அவர்கள் சீக்கிரமாகவே இறந்து விடுவார்கள் என்று பானோ ஒரு முறை என்னிடம் சொல்லி இருந்தாள். நான் அம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்லவில்லை. அம்மா இறக்கும் தருவாயில், அவருடைய சிறிய காதுகளே அவரது இறப்புக்கு காரணம் என்று சொல்லி விடுவேன்.

சில சமயம், என் உடல்நிலை குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லையோ என்று எனக்குத் தோன்றும். எனக்கு உடல் நிலை சரி இல்லை என்பதையே அவர் மறந்து விட்டாரோ என்று கூடத் தோன்றும். ஒருநாள் நான் கேக் சாப்பிட வேண்டும் என்கிற ஆசையை வெளிப்படுத்திய போது, அவர் அப்பாவை போலவோ அல்லது அத்தையை போலவோ, என்னுடைய தகாத ஆசையை எதிர்க்கவில்லை. ஒன்றும் பேசாமல் அலமாரியிலிருந்து கேக்கை ஒரு தட்டில் வைத்து அதை என் முன்னால் வைத்துவிட்டு, நாற்காலியில் கண்ணை மூடிக்கொண்டு படுத்துக் கொண்டுவிட்டார். கேக் சாப்பிட வேண்டும் என்கிற என்னுடைய ஆசை அந்தக்கணமே அடங்கிவிட்டது. தவறாக எதையாவது சாப்பிட்டு விட்டால், என்னுடைய உடல்நிலை சீர்கெடும் என்றும் அதனால் தில்லி செல்லும் நாள் இன்னும் தள்ளிப் போய்விடும் என்றும் நான் பயந்தேன்.

அம்மாவுக்கு தில்லி செல்வதில் விருப்பம் இல்லை என்பது எனக்கு தெரியும். இதற்கு என்ன காரணம் என்று எனக்கு இன்றுவரை தெரியாவிட்டாலும், அம்மா இப்படி ஒருமுறை ப்ரையன் சித்தப்பாவிடம் சொல்வதை நான் கேட்டிருந்தேன்.

சில சமயம் யாருக்கும் தெரியாமல் நான் அம்மாவின் அறைக்குச் போவதுண்டு. கடந்த சில மாதங்களாக அம்மாவும் அப்பாவும் தத்தம் அறைகளில் தனியாக உறங்குகிறார்கள். முதலில் இந்த விஷயம் எனக்கு கொஞ்சம் வித்யாசமாகத் தோன்றியது – இருப்பினும் சில விஷயங்களை நான் யாரிடமும் கேட்பதில்லை. மனதின் ஒரு மூலையில், அவற்றை யார் கண்ணிலும் படாமல் புதைத்து விடுகிறேன்.

அம்மாவின் அறை பால்கனியின் மறுகோடியில் இருந்தது. அவரது அறையின் இரண்டு ஜன்னல்களை என் அறையிலிருந்து பார்க்க முடியும். இரு ஜன்னல்களுக்கு இடையே இருந்த துண்டுச் சுவரில், மாலை நேரத்தில் இலைகளின் நிழல்கள் விழும். சிலசமயம், நீலத் திரைச்சீலை ஜன்னலிலிருந்து வெளியே படபடக்கும் போது, இலைகளின் நிழல், திரைச்சீலையின் மீது விழும். திறந்திருக்கும் ஜன்னலின் வழியே அம்மாவின் தலை தெரிகிறது. அவர் தலையை சற்றே உயர்த்தும்போது அவருடைய கொண்டை தங்க மயமாக ஜொலிக்கிறது அம்மா, ஜன்னலருகே நாற்காலியில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார் என நான் புரிந்து கொள்கிறேன்.

நான் பலமுறை அம்மாவின் அறைக்கு சென்றி ருக்கிறேன்.ஸோஃபாவின் மீது, கட்டிலின் மீது கட்டிலுக்கு பின்னால், தலையணைக்கருகே, புத்தகங்கள் சிதறிக் கிடக்கும். அம்மாவுக்கு தூக்கம் மிகக்குறைவாகத்தான் வரும் போலிருக்கிறது. இரவில் அவரது அறையில் விளக்கு எரிந்து கொண்டிருப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இந்தப் புத்தகங்களைத்தான் அவர் படித்துக் கொண்டிருக்க கூடும் என நான் நினைத்துக் கொள்வேன்.

ஒருமுறை நான் ஒரு புத்தகத்தை திறந்து பார்த்தபோது அதில் சின்னஞ்சிறிய, கோணல் மாணலான நீல நிற எழுத்துக்களில், ப்ரையன் சித்தப்பாவின் பெயர் எழுதப்பட்டிருந்தது. நான் மந்திர வயப்பட்டது போல உணர்ந்தேன். பின்னர் அந்தப் பெயரை அம்மாவின் அறையில் இருந்த பல புத்தகங்களில் பார்த்தேன்.

அம்மாவுடன் நான் ஒருமுறை போயிருந்த ப்ரையன் சித்தப்பாவின் குடில் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு பெரிய அறையில் கூரை வரை புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு அலமாரிக்கு அருகிலும் சிறிய ஏணி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறித்தான் புத்தகங்களை எடுக்க வேண்டும். மற்றொரு அறையில் வினோதமான படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அவற்றை பார்த்துக் கொண்டே நான் மெய்மறந்து நின்றிருந்தேன்.

யுத்தத்திற்கு முன்பு பிரையன் சித்தப்பா இந்த ஓவியங்களை ஐரோப்பாவிலிருந்து வாங்கியதாக அப்பா சொல்லியிருந்தார். ப்ரையன் சித்தப்பாவின் மீது எனக்கு சிலசமயம் ஆச்சரியமும் சிலசமயம் அனுதாபமும் ஏற்படும். அவரால் எப்படி, வருடம் முழுவதும், கோடையிலும் குளிரிலும், இந்த வீட்டில் தன்னந்தனியாக வசிக்க முடிகிறது?

அப்பாவின் நண்பர்களில் பிரையன் சித்தப்பாவுக்கு ஒரு தனி இடம் இருந்தது. அப்பா அவரை மட்டும்தான் என் அறைக்கு தேநீர் அருந்த அழைப்பார். மற்றவர்கள் வரவேற்பறையில் அமர்வார்கள். அவர் வருகிற நாட்களில் என்னை சீக்கிரமாக தூங்கச் சொல்லி வற்புறுத்த மாட்டார்கள். வெகுநேரம் வரை என் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். எனக்கு அவ்விரவுகள் மிகவும் இனிமையானவை.

ஒரு மாலை ப்ரையன் சித்தப்பா எங்கள் வீட்டுக்கு வந்தபோது அவர் அணிந்திருந்த ஆடையைப் பார்த்து என்னால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. முழங்கால் வரை வரும் பூட்ஸ், ஒரு தோளில் காக்கி நிறப் பை, மற்றொன்றில் கேமரா, தலையில் வெய்யிலை மறைக்க தொப்பி – இந்த உடையில் அவரது சிறிய ஆட்டுத் தாடி பொருத்தமின்றி செயற்கையாக இருந்தது. கால்சராயின் இரு பைகளிலும் புத்தகங்களைத் திணித்து வைத்திருந்தார்.

அவர் என் கட்டிலின் அருகே வந்து என்னிடம் கை குலுக்கினார். அவர் எப்போதும் இப்படித்தான். ஒருபோதும் என்னை நோயாளியாகக் கருதியதும் இல்லை என் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டதும் இல்லை.

அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அம்மா எதையோ பின்னிக் கொண்டிருந்தார். நிமிர்ந்து ப்ரையன் சித்தப்பாவை பார்த்து விட்டு, தலையை குனிந்து கொண்டார்.

அவர் குஃப்ரி போகப் போவதாகவும் ஓய்வு விடுதியில் ஒரு நாள் தங்கி விட்டு மறுநாள் மாலை திரும்பப்போவதாகவும் சொன்னார்.

ஓய்வு விடுதியின் காவல்காரன் மிகவும் திறமையானவன். கடந்த முப்பது வருடங்களாக அவன் குஃப்ரியில் தான் தங்கியிருக்கிறான். அவனுக்கு குஃப்ரியைக் குறித்த நிறைய தகவல்கள் தெரிந்தி ருக்கலாம்” என அவர் கூறினார்.

அம்மாவின் முகத்தில் லேசான புன்முறுவல் தோன்றி மறைந்தது. அவர் பிரையன் சித்தப்பா கூறிய எதையும் பொருட்படுத்தாதது போலத் தோன்றியது.

“இம்மாதிரியான நேர்காணல்களை நீயும் எத்தனை வருடங்களாக செய்து கொண்டு இருக்கிறாய்” அம்மா தலையைக் குனிந்தவாறே சொன்னார்.

“அப்படியானால் உனக்கு என் பேச்சில் நம்பிக்கை ஏற்படவில்லை, இல்லையா? என்னுடைய குறிப்புகளை நீ பார்க்க வேண்டும்” ப்ரையன் சித்தப்பாவின் நீல நிற கண்கள் ஒளிர்ந்தன. தன்னுடைய “சிம்லாவின் சரித்திரம்” புத்தகத்தைக் குறித்து அவர் எப்போது பேசினாலும், அம்மா அப்படித்தான் சிரிப்பார்.

“இந்த புத்தகத்திற்காக ஆராய்ச்சி செய்யும் போதும், தகவல்களை திரட்டும் போதும் சில சமயம் வினோதமான தகவல்கள் கிடைக்கின்றன”

“என்ன மாதிரியான தகவல்கள் சித்தப்பா?” நான் கேட்டேன். அவருடைய புத்தகத்தை குறித்து நான் எப்போதும் ஆர்வமாக கேட்பேன். அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என நான் அறிவேன்.

“மிகவும் பழைய புகைப்படம் ஒன்று கிடைத்திருக்கிறது – வெள்ளைக்காரர் எவரோ எடுத்திருக்கலாம்”

” அப்படி என்ன இருந்தது அந்த புகைப்படத்தில்?” தன் பின்னல் ஊசி களிலிருந்து கண்களை அகற்றி, அம்மா கேட்டார்.

“அந்தப் புகைப்படத்தில் ரேஸ்கோர்ஸின் கூட்டம் தெரிகிறது. நிறைய பேருடைய முகம் தெளிவாக இல்லை. ஆனால் ஒரு வெள்ளைக்கார சிறுமியின் முகம் மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவள் பெவிலியனுக்கருகே குடை பிடித்துக் கொண்டு நிற்கிறாள். மற்ற எல்லோருடைய கண்களும் ஓடுகின்ற குதிரைகளின் மீது பதிந்தி ருக்கையில், இவள் மட்டும் தன் பெரிய கண்களால் ஆர்வத்துடன் பின்புறம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் வித்தியாசமாக தோன்றியது”

ப்ரையன் சித்தப்பா திடீரென மௌனமானார். அம்மாவின் பின்னல் ஊசிகளும் சற்றே நின்றன.

“புகைப்படத்தின் கீழே ஆனடேல், சிம்லா, 1 903 என் எழுதியிருந்தது. 50 வருடங்கள் ஆன பின்னரும் அவள் இன்னமும் குடையைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தபடியே நின்று கொண்டிருக்கிறாள்”

தன்னுடைய பேச்சு சம்பந்தா சம்பந்தம் இல்லாதது போல தோன்றியதால் ப்ரையன் சித்தப்பா லேசாக சிரித்தார். அம்மா ஒன்றும் சொல்லாமல் அவரை பார்த்துக் கொண்டிருந்தார். சிலசமயம் ப்ரையன் சித்தப்பா ஏன் இப்படி அர்த்தமில்லாமல் பேசுகிறார் என்று நான் வியப்பதுண்டு.

“மனிதர்களைப்பற்றி எழுதுவதை விட, நகரங்களைப் பற்றி எழுதுவது மிகவும் கடினமான காரியம் என்று எனக்கு பல சமயங்களில் தோன்றுகிறது. என்னிடம் எத்தனையோ புகைப்படங்கள், குறிப்புகள், புத்தகங்கள் மற்றும் பயணிகள் எழுதிய பயண கட்டுரைகள் போன்றவை குவிந்து கிடக்கின்றன. ஆனால் ஒரு புத்தகத்தை எழுதி விட முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.”

“ஏன்?” அம்மா கேட்டார்.

“ஏனென்றால் ஒவ்வொரு நகரமும் தனக்குள்ளேயே மௌனமாக அமிழ்ந்து கிடக்கிறது.”ப்ரையன் சித்தப்பா மெதுவாக எழுந்து என் நெற்றியை தொட்டு பார்த்தார்.

“வரும் வழியில் டாக்டரைப் பார்த்தேன். இன்னும் இரண்டொரு நாட்களில் நீ எழுந்து நடமாட ஆரம்பித்து விடுவாய் என்றார்” என என்னிடம் குனிந்து சொன்னார்.

“கொஞ்சம் எழுந்து உட்கார்ந்து கொள். உன்னுடைய புகைப்படம் எப்படி வருகிறது என்று பார்க்கிறேன்.” அவர் தோளில் இருந்து காமிராவை வெளியே எடுத்தார். என்னை புகைப்படம் எடுத்த பின் அவர் தன்னுடைய தடியை எடுத்துக்கொண்டு கிளம்ப எத்தனித்தார்.

“எப்போது திரும்புவாய்?” அம்மா முதல் முறையாக அவரை நேரடியாகப் பார்த்தாள்.

“நாளை மாலைக்குள் – நாளை வந்து கொஞ்சநேரம் இருப்பேன்” ப்ரையன் சித்தப்பா அம்மாவை பார்க்கும் போது அவரது கண்கள் பளிச்சிடுகின்றன. அவர் வேறு பக்கம் தன் பார்வையைத் திருப்பிக்கொள்கிறார்.

“ப்ரையன் சித்தப்பா” நான் கூச்சத்தில் நெளிகிறேன்.

“என்ன வேண்டும் குழந்தை?” அவர் ஆச்சரியத்துடன் என்னைப் பார்க்கிறார்.

” நான் ஒரு புகைப்படம் நான் எடுக்கட்டுமா?”

ப்ரையன் சித்தப்பா சிரித்தவாறு கேமராவை என் கையில் தந்தார்.

நான் அம்மாவைப் பார்த்தேன்.

“வேண்டாம் குழந்தை. என்னைப் படம் பிடிக்காதே” பதற்றத்தில் அம்மாவின் வாய் குழறியது.

“நீங்கள் மட்டும் இல்லை. ப்ரையன் சித்தப்பாவும் இந்த படத்தில் இருப்பார்” என நான் கூறினேன். ப்ரையன் சித்தப்பாவின் முகம் ஒரு கணம் வெளிறியது – அவர் அம்மாவை பார்த்தார். இந்த முறை அம்மா மறுக்கவில்லை. நாற்காலியிலிருந்து எழுந்து வர “நீ வர வரரொம்ப பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டாய்” என்றார்.

“ப்ரையன் சித்தப்பா நீங்கள் பால்கனி கைப்பிடி அருகே நின்று கொள்ளுங்கள். அங்குதான் வெளிச்சம் வருகிறது. அம்மா, நீங்கள் வலப்புறமாக நில்லுங்கள்” நான் கட்டிலில் இருந்து எழுந்து சுவரில் சாய்ந்து நின்றேன். எனக்கு தலை சுற்றியது. ஆனாலும் புகைப்படம் நன்றாக வந்துவிட்டது. இன்றும் அந்த புகைப்படம் என்னிடம் இருக்கிறது.

அறைக்குள் இருட்டு எப்போது நுழைந்தது என்று தெரியவில்லை. ப்ரையன் சித்தப்பா வெகுநேரம் முன்பாகவே போய் விட்டிருந்தார். அம்மா எனக்கு அருகே நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். ப்ரையன் சித்தப்பா போனதிலிருந்து, அம்மா அசையாமல் நாற்காலியிலேயே உடம்பை குறுக்கிக் கொண்டு படுத்திருந்தார். எனக்கு அறையில் விளக்கு தேவைப்படவில்லை. அறையில் இருள் மெல்ல மெல்லப் பரவுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

திடீரென வெகுநாட்களுக்கு முந்தைய ஒரு மாலைப் பொழுது எனக்கு நினைவு வருகிறது. அப்போது நான் நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை. அன்று அம்மா என்னை ப்ரையன் சித்தப்பா வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தார்.

எங்களைப் பார்த்து ப்ரையன் சித்தப்பா மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். கதவை திறந்து விட்டு அம்மாவை மிகுந்த கூச்சத்துடன் பார்த்தார்.

“போனோ, நீயா?”அவர் ஒரு கணம் செயலற்று நின்றார். முதன்முறையாக அவர் என் முன்னால் அம்மாவை பெயரிட்டு அழைத்திருந்தார். அவர் அம்மாவை பெயரிட்டு அழைத்தது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அம்மா சிரித்தார். ஏனோ எனக்கு அம்மாவின் சிரிப்பு பிடிக்கவில்லை. அழுத்தம் கலந்த ஒரு கலவரம் என் மனதில் பரவியது.

“சற்றே உலாவி விட்டு வரலாம் என கிளம்பினோம். வழியில் உங்களையும் பார்த்துவிட்டு வரலாம் என நினைத்தோம்” என்றார் அம்மா. அன்றுதான் அம்மா பொய் சொல்வதை முதல் முறையாகப் பார்த்தேன்.

ப்ரையன் சித்தப்பாவின் கண்களில் லேசான சந்தேகம் மின்னி மறைவதைப் பார்த்தேன். பிறகு அவர் என் விரலைப் பிடித்துக் கொண்டு தன்னுடைய குடிலுக்குள் அழைத்துச் சென்றார்.

அங்குதான் நான் முதல் முறையாக அவரது நூலகத்தை பார்த்தேன் அவர் தனது புகைப்பட ஆல்பத்திலிருந்து, எழுதப்போகும் புத்தகத்திற்காக சேகரித்து வைத்திருந்த சிம்லாவின் மலைகள், பள்ளத்தாக்குகள், அருவிகள் ஆகியவற்றின் புகைப்படங்களை எனக்கு க் காண்பித்தார். மேஜையின் மீது குவிந்திருந்த புத்தகங்களின் அருகே வெளிர் நிற இரவு விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அவர் எனக்கு இரண்டு சாக்லெட்டுகளைக் கொடுத்த போது, எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.

” என்னிடம் நிறைய சாக்லேட்டுகள் இருக்கின்றன. பனிவிழும் நாட்களில் வெளியே போக முடியாது என்பதால் அவற்றை வாங்கி சேமித்து வைத்திருக்கிறேன்” என அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். நான் சில நொடிகள் அவரைப் பார்த்துக்கொண்டே நின்றேன். ப்ரையன் சித்தப்பா அப்பாவை விட எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார்! அப்பாவிடம் நான் காணும் பதற்றமோ, தீவிரத்தன்மையோ அல்லது அழுத்தமோ ப்ரையன் சித்தப்பாவிடம் இல்லை. அவரிடம் விவரிக்க முடியாத ஒரு மென்மை இருந்தது. அவரது தாடியின் மேல் இருக்கும் சின்னஞ்சிறு கண்கள, அவர் எதன் மீது தன் கவனத்தை குவித்தாலும் அது தன்னிலிருந்து தானாகவே உயிர்த்தெழுந்து ஒளிரும் என என்னிடம் மெதுவாகக் கூறுவது போல எனக்கு தோன்றியது.

மலைச்சிகரங்களின் மீது பனி படர்ந்திருப்பதை நீ எப்போதாவது அருகிலிருந்து பார்த்திருக்கிறாயா என அவர் கேட்டார். நான் இல்லை என்று தலை யசைத்தேன்.

“அங்கு பனி நீல நிறமாகக் காட்சியளிக்கும். நான் ஒரு வண்ணப் படம் எடுத்திருக்கிறேன்.” அவர் அந்தப் புகைப்படத்தை கொண்டுவருவதற்காக அடுத்த அறைக்குள் சென்றார். நான் மேஜையின் மீது இருந்த புகைப்பட ஆல்பங்களைப் புரட்ட ஆரம்பித்தேன். ஒவ்வொரு புகைப்படத்திலும் சிம்லாவின் ஏதாவது ஒரு காட்சியோ இடமோ இருந்தன. க்ளென், ஜாக்கூ, ஷாட்விக் அருவி. நான் இவ்விடங்களை எல்லாம் மிகச் சுலபமாக அடையாளம் கண்டு கொண்டேன்.ப்ரையன் சித்தப்பா திரும்பி வராததால், நான் கொஞ்ச நேரத்திலேயே சலிப்படைந்தேன். அருகிலிருந்த புத்தக அலமாரியின் ஒரு மூலையில் சிறிய ஆல்பம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதை திறந்து புரட்டியவுடன் ஒரு கணம் நான் இந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று எனக்கு தோன்றியது. என் கண்கள் நிலைகுத்தி நின்றன. அது அம்மாவின் புகைப்படம்!

அம்மா எப்போதாவது இப்படி இருந்திருப்பாரா? என் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது. அதே பரந்த நெற்றி. ஆனால் அதில் ஒரு சிறிய பொட்டு வைக்கப்பட்டிருந்தது. இப்போதெல்லாம் அம்மா பொட்டு வைத்துக் கொள்வதில்லை. இரட்டைப் பின்னல்கள் தோள்களில் தவழ்ந்து கொண்டி ருந்தன. முழுக்கை ஸ்வெட்டர் அணிந்து கொண்டிருந்தார். முடிக்குப் பின்னால் அதே சின்னஞ்சிறு காதுகள் மறைந்தி ருந்தன. புகைப்படத்தில் இருந்த இந்த அம்மாவோடு எனக்கோ அப்பாவுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை என்று எனக்கு திடீரென்று தோன்றியது.

புகைப்படம் அம்மாவுடைய தான் ஆனால் அதில் எனக்கு என் அம்மா தெரியவில்லை.

பிரைன் சித்தப்பாவின் காலடி ஓசை கேட்டது. நான், திருட்டுத்தனமாக ஆல்பத்தை பார்த்ததை மறைக்க, அவசர அவசரமாக அதை புத்தகங்களுக்கு நடுவே ஒளித்து வைத்தேன்.

நாங்கள் வாசல் புறத் தோட்டத்திற்கு வந்த போது, இருள் லேசாக பரவத் தொடங்கியிருந்தது. அம்மா சால்வையை போர்த்திக்கொண்டு கற்பாறைத் திண்ணையின் மீது அமர்ந்திருந்தார்.

எங்கிருந்தாய் இவ்வளவு நேரம் என கேட்டவாறே அவர் என்னை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டார். ப்ரையன் சித்தப்பா, அம்மாவின் காலடியில் புல் தரையில் அமர்ந்தார். நான் எதையோ தேட முயற்சிப்பது போல அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவின் கண்கள், வாய், நெற்றி என ஒவ்வொன்றையும் தனித்தனியாக பார்க்கும்போது அதே போலத்தான் இருந்தது, ஆனால் அவற்றை ஒரு சேர பார்க்கும்போது கிடைத்த உணர்வு, நான் சற்று முன்பு ப்ரைன் சித்தப்பாவின் ஆல்பத்தில் பார்த்த முகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது.

வித்யாசம் என்ன என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பெரும் இடைவெளியைக் குறுக்கி அருகே கொண்டுவந்த அதே நேரத்தில், சற்று தள்ளியே நிற்க வைத்த அந்த உணர்வை விரல் வைத்து தொட்டு காண்பிக்க என்னால் முடியவில்லை.

“என்ன ஆயிற்று குழந்தை?” அம்மா மெதுவாக என் தலைமுடியை வருடினார்.

நான் என்னை சுருக்கிக்கொண்டு, முகத்தை திருப்பிக் கொண்டேன்.

அம்மா மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. நாங்கள் மூவருமே தமக்குள் ஒதுங்கிக் கொண்டு மௌனத்தில் லயித்திருந்தோம். நாங்கள் வந்ததிலிருந்தே ப்ரையன் சித்தப்பா அம்மாவிடம் எதுவும் பேசவில்லை. முதலில் அது எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும் , அதைப்பற்றி நான் மேற்கொண்டு அதிகம் யோசிக்கவில்லை.

புல்வெளியின் மீது, இருள், நீல நிற இருள், மெல்ல மெல்ல இறங்கியது. தூரத்து மலைகளின் மீது மின்மினிப் பூச்சிகளைப் போல விளக்குகள் சிதறிக் கிடந்தன. மலைகள் இருட்டில் மறைந்து கிடக்கையில், வானம், மெல்ல நழுவி, கீழே இறங்கி விட்டது போலத் தோன்றியது. சில சமயம் நட்சத்திரங்கள் எவை, விளக்குகள் எவை என்கிற வித்தியாசத்தைக் கூட என்னால் உணர முடியவில்லை.

மற்ற மாலைகளிலிருந்து வித்தியாசப்படுகிற அளவுக்கு அன்று எதுவுமே நிகழ்ந்திராத போதிலும், நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களில், எனக்கு அந்த மாலை அடிக்கடி நினைவுக்கு வரும். நாங்கள் அங்கிருந்து திரும்பும்போது ப்ரையன் சித்தப்பா கொஞ்சதூரம் எங்களோடு நடந்து வந்தார். அம்மா நாங்கள் தாமாகவே போய் கொள்வோம் என்று சொன்னதும் அவர் திரும்பி விட்டார். நானும் அம்மாவும் கொஞ்ச தூரம் மேலே ஏறுகிற பாதையில் மௌனமாக ஏறினோம். நான் வேகவேகமாக அம்மாவுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தேன். கொஞ்ச தூரம் நடந்த பிறகு என் கால்கள் தாமாகவே நின்று விட்டன. அம்மா என் பின்னால் வரவில்லையோ என்று எனக்கு தோன்றியது. நான் திரும்பி இறங்க ஆரம்பித்தேன். இருட்டில் என் இதயம் வேக வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது.

கொஞ்ச தூரம் கீழே இறங்கியதும் என் கால்கள் தாமாகவே நின்றுவிட்டன – இருட்டில், கண்கள் விரிய சுய நினைவற்றுற்று நின்றிருந்தேன். அம்மா பாதையின் ஓரத்தில் இருந்த முள்வேலியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். காற்றில் படபடத்த முந்தானை, அவரது தோள்களை தழுவியது. தனக்குள்ளேயே மூழ்கியவர் போல, கண் கொட்டாமல் கீழே பார்த்துக்கொண்டிருந்தார்.

கீழே ப்ரையன் சித்தப்பாவின் குடில், மங்கிய மாலை இருளில், ஆளரவமற்று இருந்தது. நூலக அறையின் ஜன்னல் வெளியே தெரிந்த மங்கலான வெளிச்சம் தோட்டத்து புற்களின் மீது படிந்திருந்தது.

சற்று நேரம் நாங்கள் மங்கும் மாலை வெளிச்சத்தில் மௌனமாக நின்றிருந்தோம். பிறகு அம்மா சடாரெனத் திரும்பி மேலே நடக்க ஆரம்பித்தார். அவரது நடை, தூங்குகிக் கொண்டே நடப்பது போல, மிகவும் மெதுவாக இருந்தது.

அம்மா என் அருகே வந்தார். நீண்ட நேரம், துக்கமும் கையறு நிலையும் இணைந்த, விவரிக்கமுடியாத பார்வையால் என்னை கண்கொட்டாமல் பார்த்து கொண்டே இருந்தார். பிறகு சடாரென என்னை இழுத்து அணைத்துக் கொண்டு தன் உலர்ந்து குளிர்ந்திருந்த உதடுகளால் என்னை மீண்டும் மீண்டும் முத்தமிட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலை, எனக்கு வாய்ச்சுவை திரும்ப வநதது. உடலில் சுறுசுறுப்பு தோன்றியது. முன்பெல்லாம் வெயிலிலிருந்து தப்புவதற்காக நான் ஜன்னல் கதவை மூடி வைத்தி ருப்பேன், இருட்டு அறையில் கண்களை மூடி படுத்திருப்பது சுகமாக இருக்கும். இப்போது ஜன்னலைத் திறந்து திரைச்சீலைகளை விலக்கி வைத்தேன். வெளியிலிருந்து வந்த வெளிச்சம் என் கட்டிலைச்சுற்றி பரவியது. நான் கட்டிலிலிருந்து எழுந்து மேஜையை பிடித்துக்கொண்டு நின்றேன். முன்புபோல் தலைசுற்ற வில்லை, மிதியடியை நோக்கி ஒவ்வொரு அடியாக வைத்து நடக்கும் போது, வாழ்க்கையில் முதல்முறையாக நடக்கக் கற்றுக் கொண்டவனைப் போல உணர்ந்தேன்.

நான் மெதுவாக வாசல் வராந்தாவில் வந்து நின்றேன். சற்று தூரத்தில் அத்தை கொடியில் ஈரப் புடவையை உலர்த்திக் கொண்டிருந்தார். நான் அவர் கண்களில் படாமல், அப்பாவின் அறைக்கு பின்னால் இருக்கும் பால்கனி வழியாக அறைக்குள் எட்டிப்பார்த்தேன். அறைக் கதவும் ஜன்னல்களும் மூடப்பட்டிருக்கின்றன. அறைக்குள்ளே சிவப்பு நிற திரைச்சீலை தொங்க விடப்பட்டிருக்கிறது. அம்மா சித்தி வீட்டிற்கு போகும்போது அப்பா அந்த அறையை பூட்டி வைத்துவிடுவார். தன்னுடைய சாமான்களை மேல் மாடியில் இருக்கும் படிக்கும் அறைக்கு கொண்டு சென்று விடுவார். இரவில் அங்கேயே தூங்கி விடுவார்.

பால்கனி ஆளரவமற்று இருந்தது.கீழே அவுட் ஹவுஸின் அகலமான நீல நிற தகரக்கூரையின் மீது மலைப்பிரதேச சமையல்காரரின் மனைவி ஹீரா காய வைத்திருக்கும் வடகங்கள் வெய்யிலில் பளபளக்கின்றன. எதிரிலிருக்கும் மதரஸாவின் சிறிய மைதானத்தில் சிறுவர்கள், நான்கு பேர் கொண்ட சிறு குழுக்களாக, வரிசையில் நின்று கொண்டு, பிரார்த்தனை பாடல்களை சலிப்புடன் மூக்கால் பாடிக் கொண்டிருந்தார்கள். ” “உதடுகளில் உன் பெயர் எங்கள் ஆழ்மன விருப்பமாக ஒலிக்கிறது”

வறண்டு சோர்வுற்றிருக்கும் அவர்களது குரல் எனக்கு அலுத்துப் போகும் போது, தூரத்தில் தெரியும் வெள்ளைக்காரச் சீமாட்டியின் பாழடைந்த, மர்மங்கள் நிறைந்த பங்களாவைப் பார்த்தேன். அங்குதான் நாங்கள் பழுக்காத பிளம்ஸ் பழங்களை ஒளித்து வைப்போம். அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் மரங்களுக்கும் புதர்களுக்கும் நடுவே, பாம்பு போல வளைந்து செல்லும் பாதை, பானோவின் வீட்டிற்கு அருகில் இருக்கும் மேடு பள்ளங்களை சுற்றிய பின் மறைந்துவிடும். நான் என் அறையிலிருந்து அப்பாவின் பழைய தடியை எடுத்து வந்தேன். அதன் உச்சியில், அம்மாவின் சிவப்பு நிற புடவையின் சிறு துண்டு ஒன்றை கட்டி வைத்திருக்கிறேன். நான் வேலியிலிருந்து வெளியே கழுத்தை நீட்டி கைத்தடியை இடமும் வலமுமாக சுழற்றுகிறேன் – சிவப்பு பட்டு கொடி காற்றில் பறக்கிறது – பானோ என் சிவப்பு கொடியை பார்த்துவிட்டாள். அவள் கையை உயர்த்தி ஏதோ சொல்கிறாள் ஆனால் அதை என்னால் கேட்கவோ புரிந்துகொள்ளவோ முடியவில்லை. இது எனக்கும் பானோவுக்கும் மிகவும் பிடித்தமான பழைய விளையாட்டு. எங்கள் வீட்டுக்கிடையே இருக்கிற பள்ளத்தாக்கில் சில கடைகளும் பங்களாக்களும் இருந்தபோதிலும், எங்கள் வீடுகள் உயரத்தில் இருப்பதால், பால்கனியிலி ருந்தே நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடிகிறது. நாங்கள் எவ்வளவு தான் உரக்கக் கத்தினாலும், ஒருவர் பேசுவதை மற்றவர் கேட்க முடியாது. எனவேதான் ஜாடையில் பேசிக் கொள்வதற்காக நான் அப்பாவின் பழைய தடியை சிக்னல் போல உபயோகிக்கிறேன்.

பானோ தன் அம்மியை வராந்தாவிலிருந்து இழுத்து வந்தாள் – அம்மி கையசைத்து என்னை கூப்பிடுகிறார். இவ்வளவு தூரத்திலிருந்து அம்மி என்னைப் பார்க்க முடியாது என்ற போதிலும் எனக்கு வெட்கமாக இருக்கிறது. தடியை பால்கனியில் வீசிவிட்டு நான் என் அறைக்குள் ஓடிவிட்டேன்.

அப்பாவின் அறை வாசலில் என் கால்கள் தாமாகவே நின்றன. உள்ளே அப்பாவின் குரல் கேட்கிறது அப்பா என்னைத் தன் அறைக்கு வரச்சொன்னதாக வேலைக்காரன் கூறுகிறான்.

என் மனதில் ஆனந்த அலை பரவுகிறது. அப்பா தன்னுடைய அறைக்கு என்னை அழைத்து பேசுகிற சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதானவை. என் உடல் நிலையை பற்றி தெரிந்து கொள்ள அடிக்கடி அவர் தான் என் அறைக்கு வருவார். நான் அவசர அவசரமாக பற்களால் என் நகங்களைக் கடிக்கிறேன். அப்பா எப்போதும் என் கை நகங்களைத் தான் முதலில் கவனிப்பார். முகத்தை ஈரத் துவாலையால் துடைத்துக்கொண்டு, கைகளை வாயருகே வைத்து ஊதி, முகர்ந்து பார்க்கிறேன் – வாய் சுத்தமாக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ள. பிறகு கண்ணாடி பார்த்து தலை சீவிக் கொள்கிறேன். (அம்மா இல்லாததால், கொஞ்ச நாட்களாக இந்த வேலை எல்லாம் நானே தான் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது). தோள்களின் மீது உதிர்ந்து கிடக்கும் முடியைப் பார்க்கும்போது, எனக்கு என் மீதே ஆழ்ந்த கழிவிரக்கம் உண்டாகி, கண்ணீர் பெருகுகிறது.

வரவேற்பறையில் (வீட்டில் அதுதான் மிகப்பெரிய அறை என்பதால் நாங்கள் அப்போது அதை ஹால் என்று சொல்வோம்) விரிக்கப்பட்டிருந்த கம்பத்தின் மீது நடக்கையில் காலடி ஓசை எழாது என்ற போதிலும், நான் மிகவும் மெதுவாக நடந்து அப்பாவின் அறையை நோக்கி சென்றேன். காலையில் உடல்நிலை சரியாக இருந்த மாதிரித் தோன்றியது. ஆனால், இப்பொழுது காது மடலின் பின்புறத்திலிருந்து இரு புகைச்சுருள்கள் எழும்பி மண்டைக்குள்ளே நுழைய முயற்சிப்பது போலவும், பஞ்சு மேகம் ஒன்று இவ்விரண்டுக்கும் நடுவே வந்து தடுப்பது போலவும் இருந்தது.

நான் அவரது அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்தேன். கை பட்டு திரைச்சீலை வளையங்கள் மெலிதாக ஓசை எழுப்பின. அவர் நிமிர்ந்து பார்க்காமலேயே என்னை அறைக்குள் அழைத்தார். இன்னும் கொஞ்சம் முன்னால் நகர்ந்தேன். அப்பாவின் அறையை அடையாளம் காண்பது எவ்வளவு சுலபம்! சிகார் புகையின் சூடான மணம், நாற்புறமும் பரவியிருக்கும். ஆழ்ந்த கனத்த மௌனம், இரவும் பகலும் ஒரே மாதிரி பரவியிருக்கும் வித்யாசமான மங்கல் வெளிச்சம், நான் சாப்பிடும் மருந்தைப் போலவே புளித்த மற்றும் மக்கிய நாற்றம். அந்த நாற்றம் எனக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்று என்னால் ஒருபோதும் தீர்மானிக்க முடிவதில்லை. அது நாற்றம் இல்லை. அப்பாவின் அறைக் காற்றில் எப்போதும் மிதந்து கொண்டிருக்கும் மெல்லிய நிறம்.

“வெளியே என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்னால் அவரது குரலை புரிந்து கொள்ள முடியும். அதில் கோபம் இல்லை.

“பானோவை தேடிக்கொண்டிருந்தேன்” எனக்கு கூச்சத்தில் வாயடைத்துப்போனது.

“அப்பா” அவரது கண்கள் மேலே உயர்ந்தன.

“இன்று என் உடல்நிலை சரியாக இருக்கிறது. ஜுரம் இல்லை.”

அப்பா என் இரு கரங்களையும் தன் மடியில் வைத்துக் கொண்டார்.

“இன்னும் கொஞ்ச நாட்கள் நீ ஓய்வெடுக்க வேண்டும்” அவர் என்னுடைய கைகளை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து தன்னுடைய முடி நிறைந்த, பெரிய கைகளுக்குள் பொதிந்துக் கொண்டார்.

“அப்பா, நாம் எப்போது தில்லி போகப்போகிறோம்?” எனக்கு அவரிடம் பேச வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு முறையும் நான் தவறாமல் அவரிடம் இந்த கேள்வியை கேட்பேன்.

அவர் சிகாரை வாயிலிருந்து எடுத்து விரல்களுக்கிடையே வைத்துக் கொண்டார். கொஞ்ச நேரம் மௌனமாக, சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த காகிதத்தில் ஏதோ எழுதி இருப்பது போலவும் அதை கவனமாகப் படிப்பது போலவும் பார்த்துக் கொண்டிருந்தார்.

“குழந்தை, உனக்கு பயமாக இல்லையா?”

“பயமா? எதற்கு?” நான் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். அவருடைய கண்கள் சுவற்றிலிருந்து இறங்கி என் மீது படிந்தி ருந்தன.

“அம்மா வீட்டில் இல்லையே. அதனால் ஒருவேளை….”

” அம்மா இன்னும் கொஞ்ச நாட்களில் வந்துவிடுவார் இல்லையா?”அப்பா நான் சொன்னதை ஆமோதிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் அவரோ மௌனமாக என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஆம். வந்து விடுவார்.” அப்பாவின் குரல் மிகவும் மெதுவாக தூக்கத்தில் பேசுபவனைப்போலவும், தனக்குத்தானே சொல்லிக் கொள்வது போலவும் ஒலித்தது.

“குழந்தை”

“என்னப்பா?”

“உனக்கு அம்மாவைப் பார்க்க வேண்டுமா?”

அப்பாவின் குரல் மிகவும் கனத்திருந்தது. அவருடைய இந்த கேள்வி எனக்கு மிகவும் விசித்திரமாகவும் அர்த்தமற்றதாகவும் இருந்தது. ஒரு கணம், ” ஆம். நான் அவரிடம் போக விரும்புகிறேன்” என்று சொல்லி விடலாமா என நினைத்தேன். மறுகணம் அவருக்கு உண்மை தெரிந்திருந்தும், வேண்டுமென்றே, என்னை பொய் சொல்ல வைக்க விரும்புகிறார் என்றும் என் பதிலுக்காக அவர் காத்திருக்கவில்லை என்றும் எனக்குத் தோன்றியது.

நான் “இல்லை” என்று தலையசைத்தேன். அவர் சில கணங்கள் என்னை ஆச்சரியமாக பார்த்துவிட்டு என் கரங்களை அவர் மடியில் இருந்து அகற்றினார்.

“நல்லது, இப்போது நீ உன் அறைக்குப் போ. இன்னும் இரண்டு மூன்று நாட்கள், நீ வெளியே விளையாடப் போக வேண்டாம்” என்றார்.

அவர் நாற்காலியிலி ருந்து எழுந்து , என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு ஜன்னல் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்தார்.

நான் சற்று நேரம் அங்கேயே மௌனமாக நின்றுக் கொண்டிருந்தேன். என் மனதில் அவர் மீது இரக்கம் தோன்ற ஆரம்பித்தது. அம்மாவுடன் என் உறவு சரளமாகவும் சகஜமாக இருந்தது. அப்பாவிடம் இருக்கும் சங்கோஜமும் தயக்கமும் அம்மாவிடம் சற்றும் இருந்ததில்லை. அம்மா என்னுடைய விருப்பங்கள் அனைத்தையும் மறுத்துப் பேசாமல் நிறைவேற்றுவார். ஆனால் எனக்காக இவ்வளவு செய்த போதிலும், அவர் என்னிடமிருந்து விலகியே இருந்தார். ஒருபோதும் அழித்துவிட முடியாத ஒரு இடைவெளியை கடைப்பிடித்தார். அவருக்ககெதிரே நான் மிகவும் சிறிய, அசிங்கமான, பொருளற்ற ஜீவன் மட்டுமே என எனக்குத் தோன்றும். ஆனால் அப்பாவின் கதை வேறு. நான் அவரிடம் பயப்படுவேன். ஏதாவது வேண்டும் என்று அவரிடம் கேட்கும்போது என் இதயம் படபடக்கும். ஒருபோதும் மனம் விட்டு நான் அவரிடம் பேசியதில்லை. இத்தனைக்குப் பிறகும் அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவராகவும் நன்கு பரிச்சயமானவர் போலவும் தோன்றுகிறார். ஏதோ ஒன்று எங்கள் இருவரையும் அம்மாவிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. அதனால் தான் அம்மாவுக்கு, அவர் தானாகவே விரும்பினாலும் கூட, அப்பாவின் மீது இரக்கம் தோன்றுவதில்லை. எனக்கு அப்பாவிடம் பயம் இருந்தபோதும் கூட, சில சமயம் அவரைப் பார்க்கும்போது நான் தழுதழுத்து போகிறேன்.

அப்பா பின்னால் திரும்பி, என்னை கண்கொட்டாமல் பார்த்தார். சற்று நேரம் நான் இருந்ததை அவர் முற்றிலுமாக மறந்து விட்டது போல எனக்குத் தோன்றியது. இப்போது திடீரென என்னைப்பார்த்ததும், நான் யார்? அவருடைய அறையில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்று அவர் யோசிப்பது போலத் தோன்றியது.

நான் அறையை விட்டு வெளியே வந்தேன். சற்று நேரம் வெளிச் சுவரில் சாய்ந்து கொண்டு அப்பாவின் அறை வாயிலுக்கருகேயே நின்று கொண்டிருந்தேன். அறையிலிருந்து வெளியே வந்து அப்பா என்னிடம் ஏதேனும் சொல்லுவார் என நினைத்தேன் ஆனால் அது என் பிரமை மட்டுமே. அவரது அறையில் மௌனம் சூழ்ந்திருந்தது. மொத்த வீட்டின் மீதும் பரவியிருந்த ஆழ்ந்த கனத்த மௌனம்.

அந்த நொடி நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன். அப்பாவும் மிகவும் தனிமையாகத் தான் இருக்கிறார். அம்மா இல்லாமல் வீட்டின் ஒவ்வொரு மூலையும் வெறிச்சோடிக் கிடந்தது.

நான் சுவரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டேன்.

அம்மா என்னை விட்டுவிட்டு சித்தி வீட்டிற்ககு சென்றதற்கு முன்தினம், நள்ளிரவில் எனக்கு விழிப்பு வந்தது.

அறை இருட்டாக இருந்தது. ஜன்னல் திரைச்சீலை காற்றில் படபடத்து என் தலையணையின் மீது அடித்துக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் என் மனதை வினோதமான பிரமை சூழ்ந்திருந்தது. என் படுக்கையறை யிலிருந்த பொருட்கள் அனைத்தும் தம் பழைய இடத்தை விட்டுவிட்டு வேறொரு மூலைக்குச் சென்றுவிட்டது போல எனக்குத் தோன்றியது. என் இடப்புறம் இருந்த ஜன்னல், இருட்டில் மெல்ல நகர்ந்து எனக்கு நேரெதிரே இடம் பெயர்ந்திருந்தது. முன்பு என் கட்டிலிலிருந்து இரண்டு அடி தூரத்தில், சுவர் இருந்த இடத்தில், தற்போது கதவு நகர்ந்திருந்தது. கதவு பாதி திறந்திருந்தது. உள்ளே அப்பாவின் அறை வெளிச்சம், தெர்மாமீட்டரின் பளபளக்கும் பாதரசக் கம்பம் போல தரையில் விழுந்திருந்தது. கையால் தொட்டாலே உடைந்து, தண்ணீரைப் போல நாற்புறமும் பரவிவிடக்கூடிய மெலிதான வெளிச்சம்.

திடீரென அந்தக் கதவு, இரு பெரிய கரும் இறக்கைகளைக் கொண்ட பறவையைப்போல படபடத்து திறந்துகொண்டது. மெல்லிய வெளிச்சக் கோடு வேகமாக பாய்ந்து எதிரில் இருந்த சுவற்றின் மீது ஏறியது. கதவுக்குப் பின்புறம் இருந்த சிறிய வராந்தாவில் யாரோ மிக வேகமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில், கதவு காற்றின் வேகத்தில் திறந்து கொண்டது போலவும் அம்மா கதவைத் தாழிட வந்தது போலவும் தான் எனக்குத் தோன்றியது. ஆனால் கொஞ்ச நேரம் வரை யாரும் அறைக்குள் வரவில்லை. கதவின் பின்புறம் வராந்தாவில் கேட்ட சத்தம் சற்று நேரத்தில் அடங்கியது. குரல்கள் வெகுதூரத்தில் கிசுகிசுப்பது போலக் கேட்டது-சொற்களுக்கு பதிலாக காலடி ஓசை மட்டுமே கேட்டது. அதே குரல்கள் – சில சமயம் மிக அருகில் – இத்தனை அருகில் – என் காதுகளுக்க ருகே யாரோ ரகசியமாக முணுமுணுப்பது போல.

“நீ அறைக்குள் போக வேண்டாம்” நான் அப்பாவின் குரலை அடையாளம் கண்டு கொண்டேன்.

கூர்மையான விசும்பல் ஒலி, பளீரிடும் கண்ணாடித் துண்டை போல, இருட்டைக் கிழித்துக் கொண்டு சென்றது. அம்மாவுக்கு என்ன ஆயிற்று?ஏன் இப்படி வினோதமாக கிறீச்சென்ற குரலில் விசும்புகிறார்?

“விடுங்கள். என் கையை விடுங்கள்.”

“போனோ, நீ உள்ளே போக முடியாது”

“நீங்கள் யார் என்னை தடுப்பதற்கு? ச்சீ! வெட்கமாக இல்லை?”

“போனோ, அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். கூச்சல் போடாதே”

“நான் கூச்சல் போட மாட்டேன். என்னை உள்ளே போகவிடுங்கள்”

“இல்லை. இப்போது முடியாது.”

“என்னைப் பைத்தியம் என்று நினைத்தீர்களா? நான் அவனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன் என்று நினைத்தீர்களா?”


“போனோ, உன் அறைக்குத் திரும்பிப் போ. நான் எதையும் கேட்கத் தயாராக இல்லை. இப்பொழுது நீ உன் வசம் இல்லை.”

ஆனால் அப்பாவால் தான் சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல முடியவில்லை. நடுவிலேயே யாரோ பாய்ந்து திரைச்சீலையை அகற்றி விட்டார்கள். வராந்தாவின் வெளிச்சத்தில் என் படுக்கை ஒளிர்ந்தது. கட்டிலுக்கும் ஜன்னலுக்கும் இடையே இருந்த சுவர் இருட்டிலிருந்து வெளியே வந்தது.

பளிங்கு போன்ற இரு கைகள் திரைக்கு வெளியே காற்றில் விரிந்திருந்தன. பின்னால் ஒரு நிழல்- தேடலும் கலக்கமும் நிறைந்த இரு கண்கள். திரைச்சீலையை இறுகப் பிடித்து கசக்கிக் கொண்டிருக்கும் நீண்ட மெல்லிய விரல்கள். துடிக்கும் உதடுகளின் மேல் நட்சத்திரம் போல அமர்ந்திருக்கும், மின்னலின் ஒளியென மினுங்கும் மூக்குத்தி. இவை அனைத்தையும் நான் கனவு போன்ற மாயத் தோற்றத்துடன், பளீரென மின்னி மறைந்த, திரைச்சீலை பழையபடி இழுக்கப்படுவதற்கு முன்பான சிறு நொடிக்குள் கண்டேன். தொண்டையிலி ருந்து எழு முன்பே குரல்வளையில் கைவைத்து அழுத்தப்பட்டது போன்ற தழுதழுத்த குரல் காதில் கேட்டது.

அப்போது நான் கேட்ட ஓசைகளை என்னால் நம்ப முடியவில்லை. திரைச்சீலை க்குப்பின் யாரோ மெதுவாகச் சிரிப்பது போல எனக்கு தோன்றியது. இல்லை, இது அம்மாவாக இருக்க முடியாது அம்மாவுக்கு வலிப்பு வரும்போது பற்கள் மட்டுமே கிட்டிப்போகும். அவர் இப்படி விசித்திரமாக சிரித்து நான் ஒருபோதும் கேட்டதில்லை. இருப்பினும், அது அம்மாவின் குரல் தான் என நான் அறிந்திருந்தேன் – எனக்கு மேற்கொண்டு எதுவும் கேட்க வில்லை. அறையிலிருந்த இருட்டு அங்கிருந்து விலகி, அழுக்குத் கந்தல் துணியைப் போல என் கண்களை சுற்றி நாற்புறமும் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பளிங்கு போன்ற இருககைகள் கரிய ஏரியின் மேல் எழுகின்றன. பயபீதியுடன் அவை என்னை அழைக்கின்றன. மீண்டும் மீண்டும் என்னைத் தன் பக்கம் இழுக்கின்றன.

அன்று இரவு வெகுநேரம் வரை நான் படுக்கையில் அமர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தேன். வித்தியாசமான ஒரு குரல் காற்றோடு, ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்து, என் முகத்தை தொட்டு கொஞ்சி மெதுவாக சிரிக்க ஆரம்பிக்கிறது.

பானோ கூரையின் கீழ் விழுந்திருக்கும் ஆப்ரிக்காட் பழங்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறாள்.

” பானோ”

நான் மெதுவாக அழைக்கிறேன் – “பானோ”

சிம்லாவில் ஒரு மதியம் – நான் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டிருக்கிறேன் – இவை நோய் குணமான பிறகான நாட்கள். இப்போது என்னைப் பற்றி யாரும் கவலைப் படுவதேயில்லை. அப்பாவும் இப்போதெல்லாம் என் அறைக்கு தினமும் மாலையில் வருவது கிடையாது. ப்ரையன் சித்தப்பாவை வெகு நாட்களாகவே காணவில்லை. நான் குணம் ஆனதில் ஒருவேளை யாருக்கேனும் வருத்தம் இருக்கும் எனில், அது நிச்சயமாக பானோவுக்கு தான் – நான் குணமடையாதிருந்தால், நாங்கள் தில்லி போகும் நாள் தள்ளிப் போயிருக்கும்.

மாடியின் பின்புறம் இரு சிறு மலைகள், திறந்திருக்கும் கத்திரிக்கோலைப்போல வானை நோக்கி
விரிந்திருக்கின்றன. அவற்றினி டையே மரங்கள் வரிசையாக வெகு தூரம் வரை நீண்டி ருக்கின்றன. எப்பொழுதாவது கால்கா செல்லும் ரயில் வண்டி அந்த வழியாக போகும் போது, புகையின் ஒரு சுழல், வானின் முகத்தை மோதிப் பறக்கும்.

“பானோ நாங்கள் தில்லிக்கு போகிறோம்.”

தில்லி! இந்த ஒரு வார்த்தையில் எத்தனை நினைவுகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன! கோணல் மாணலான பாதைகளில், பாம்பு போன்று வளைந்து செல்லும் சிம்லா-கால்கா வண்டி, நீண்ட, இருண்ட சுரங்கப்பாதைகள், ரயில் பெட்டியின் ஜன்னலிலிருந்து வெளியே பார்க்க கிடைக்கிற, காற்றில் வழுக்கி ஓடும் இரும்புக் கம்பிகள். மாலை ஆவதற்குள் நான் கண்ணயர்ந்து விடுவேன்.” குழந்தை, எழுந்திரு” என அம்மா என் தோளை அசைத்து எழுப்பும்போது நான் பதற்றத்துடன் கண் விழிப்பேன். வெளியே, விரிந்து பரந்த இருட்டு மைதானத்தில், மின்மினிப் பூச்சிகளைப் போல ஒளிர்ந்துகொண்டிருக்கும் கால்காவின் வெளிச்சத்தைப் பார்க்கும்போது, வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் தரையில் இறங்கி சிதறிக் கிடப்பது போலத் தோன்றும்.

பானோ படி ஏறி மாடிக்கு எப்பொழுது வந்தாள் என்று தெரியவில்லை. அவள் தன் பாவாடையை உயரத் தூக்கி, பையைப்போல பிடித்துக்கொண்டிருந்தாள. அதில் ஆப்ரிகாட் பழங்கள் நிரம்பியிருந்தன. அணிந்திருந்த உள்ளாடையின் நாடாத் தடங்கள், அவளது வயிற்றில், சின்னஞ்சிறு மீன்களைப் போல, அங்கும் இங்கும் புடைத்திருந்தன.

அவள் பாவாடையை தாழ்த்தி பழங்களை கீழே கொட்டினாள். பழுத்த, பழுக்காத ஆப்ரிகாட் பழங்கள். பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில்.

“இந்தா, சாப்பிடு” என அவள் பழுத்த, மஞ்சள் நிற ஆப்ரிக்காட் பழம் ஒன்றை, என் முன் நீட்டினாள்.

நான் தலையசைத்து மறுத்தேன். அப்பா வெளியில் இருந்து எதையும் சாப்பிடக்கூடாது என தடை செய்திருந்தார்.

“இது பழுக்காத ஆப்ரிக்காட் இல்லை. இதைச் சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது”


அவள் என் அனுமதிக்காக காத்திராமல், எனக்கு தர விருந்த பழத்தை எந்தவித கூச்சமும் இன்றி சாப்பிட ஆரம்பித்தாள்.

அந்த பழத்தை நான் சாப்பிட்டி ருக்க முடியும். அப்பாவின் தடை என்பது ஒரு சாக்கு மட்டுமே. உண்மையான காரணம் வேறு. அது எவருக்கும் தெரியாது. பாவம், பானோவுக்கு கண்டிப்பாகத் தெரியாது. காய்ச்சல் விட்டதிலிருந்து, நான் எல்லோரையம் விட வித்தியாசமானவன், எல்லோரிடமிருந்தும் வேறுபட்டவன் என்கிற எண்ணம் எனக்கு தோன்றி கொண்டிருக்கிறது. பலவீனத்தின் காரணமாக தலை சுற்றும் போதோ அல்லது கால்கள் வெலவெலத்து நடுங்கும் போதோ நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மனதில் ஒருவித சந்தோஷம் கொப்பளிக்கிறது, என் மீதே எனக்கு பெருமிதம் ஏற்படுகிறது. எனக்குள் அற்புதமான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றும் நான் அசாதாரணமானவன் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. நோய்வாய்ப் படுவதற்கு முன்பும், அம்மா சித்தி வீட்டிற்கு போவதற்கு முன்பும் எனக்கென ஒரு வட்டம் இருந்தது. அதில் பானோ, அம்மா, ப்ரையன் சித்தப்பா மற்றும் அப்பா ஆகிய எல்லோரும் இருந்தார்கள். இந்த நீண்ட நோய்க் காலத்தில், அந்த வட்டம், எந்தக் கணத்தில் உடைந்ததெனத் தெரியவில்லை. கடந்த சில நாட்களாக, எல்லாவற்றையும் , நான் எந்த கோணத்திலிருந்து பார்க்கிறேனே, அதுபோல மற்றவர்கள் பார்ப்பதில்லை. முன்பெல்லாம் நான் அனைத்தையும் மற்றவர்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்த்ததில், கவலையேதுமின்றி இருந்தேன். இப்போது அதன் பின் ஒரு ரகசியம் இருக்கிறது; எனக்குள் ஒரு பயம் இருக்கிறது; அது எவரும் அறியாதது.

மாடியை சுற்றி இருக்கும் வட்ட வடிவ கூரையின் மீது தண்ணீர் சொட்டுவது போல டப் டப் என சத்தம் கேட்கிறது. நான் ஜன்னலில் இருந்து கையை வெளியே நீட்டினேன். அது மழை இல்லை. மலைப் பறவைகள் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிக்கு தத்தித்தத்தி செல்லும் சத்தம்.

பானோ ஆப்ரிக்காட் பழத்தை தன் வாய்க்குள் பம்பரம் போல சுழற்றுகிறாள். இப்படி குதப்பி சாப்பிடுவதால், வாயிலிருக்கும் எச்சில், பழத்தோடு கலந்து பழச்சாறாக மாறிவிடும் என்பாள்.

‘தில்லி செல்வது முடிவாகிவிட்டதா?”

“அம்மா திரும்பி வந்தபிறகு”

“உன் அம்மா எங்கே போயிருக்கிறார்?”

“சித்தி வீட்டுக்கு”

“அவர் சித்தி வீட்டுக்கு தான் போயிருக்கிறார் என்று உனக்கு நிச்சயமாக தெரியுமா?” பானோ ரகசியம் பொதிந்த கண்களோடு என்னைப் பார்த்தாள்.

“என்ன விஷயம் பானோ?” நான் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

“ஒன்றுமில்லை. சும்மாதான் கேட்டேன்” பானோ வெளியே வழியும் எச்சிலில் ஊறிய பழச் சாறை நாக்கால் நக்கியவாறே கூறினாள்.

“அம்மி உன்னிடம் எதுவும் சொல்லக் கூடாதெனத் தடை செய்திருக்கிறார்.”

நான் கையாலாகாத்தனத்துடன் முறுவலித்தேன். பானோ மீது எனக்கு மிகவும் கோபம் வருகிறது. நான் மன முதிர்ச்சி யற்றவன் என்றோ, சிறுமைகளால் நிரம்பியவன் என்றோ எவரும் நினைத்துக்கொண்டு விடாமலிருக்க, கோபம் வரும்போதெல்லாம், செயற்கையான புன்முறுவலில் அதை மறைத்துக் கொள்கிறேன்.

கருமேகங்கள் இறங்கி வருகின்றன. மாடிக்குப் பின்னால் தூரத்தில் தெரியும் மலைகள் பழுப்புபாகவும் கருப்பாகவும் மாறுகின்றன.மேகங்களின் நடுவிலிருந்து சூரியன் வெளியே தலை நீட்டும் போதெல்லாம், மெல்லிய நிழல்கள் கிழக்கிலிருந்து மேற்காகப் பாய்கின்றன.

மாடியைச் சுற்றி நாற்புறமும் இப்போது அமைதி சூழ்ந்திருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு இங்கு ஒரு வெள்ளைக்கார சீமாட்டி வசித்துக் கொண்டிருந்தார். அவர் இறந்த பிறகு தற்போது இங்கு எவரும் வசிப்பதில்லை. வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் – குளிரோ கோடையோ – அறைகள் பூட்டப்பட்டே இருக்கின்றன. வராந்தாவும் அதற்கு எதிரில் இருக்கிற ஒற்றையடிப்பாதையும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. நாங்கள் விருந்தினர் அறையின் பின்புறம் இருக்கும் படிகளில் ஏறி யாருக்கும் தெரியாமல் பெவிலியனுக்கு சென்றோம். அங்குதான் ஒரு மூலையில், எங்கள் பொக்கிஷங்களான பிளம்ஸ் பழங்களையும் ஆப்பிரிக்காட் பழங்களையும் சேர்த்து வைத்தி ருக்கிறோம்.

பானோஅப்படி எந்த விஷயத்தை என்னிடம் மறைக்க முயற்சிக்கிறாள்? அவளுடைய அம்மி உண்மையிலேயே என்னிடம் அதைச் சொல்லக் கூடாதென்று சொல்லியிருப்பாரா அல்லது எனக்கு எரிச்சல் மூட்டுவதற்காக பானோ வேண்டுமென்றே இப்படிச் செய்கிறாளா?

நான் மாடியில் படுத்தவாறு பாதி மூடிய கண்களால், அங்கிருந்து என் வீட்டு கூரையை பார்த்தேன். வலப்பக்கம் பால்கனியை ஒட்டிய அம்மாவின் அறையின் ஜன்னல் தெரிகிறது. அம்மா வீட்டில் இல்லாதபோது அந்த ஜன்னல் எப்போதும் மூடி இருக்கும். அம்மா ஏன் இன்னும் திரும்பவில்லை? இதற்கு முன்பு அவர் சித்தி வீட்டில் இத்தனை நாட்கள் இருந்ததில்லையே? நான் குணமாகி எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டேன் என்பது அவருக்கு தெரியுமா? அப்பா என்னை வெள்ளைக்கார சீமாட்டியின் பாழடைந்த வீடு வரை போக அனுமதித்து விட்டார் என்பதும் தெரிந்திருக்குமா?
அம்மா கூச்சலிட்டுக் கொண்டு என் அறைக்கு வந்தபோது, அப்பா அவரை உள்ளே வர விடாமல் தடுத்த அந்த இரவுக்குப் பிறகு நான் அவரைப் பார்க்கவில்லை. நான் கண்டது வெறும் கனவா அல்லது நிஜமாகவே அப்படி நடந்ததா என்று என்னால் இப்போது கூட உறுதியாக சொல்ல முடியவில்லை.

“தில்லி மலைகளுக்கு அப்பால் இருக்கிறது இல்லையா?” பானோ கேட்டாள்.

“தில்லி சமவெளியில் இருக்கிறது. அங்கு செல்வதற்கு முதலில் நாம் கீழே இறங்க வேண்டும்” என நான் கேள்விப்பட்ட விஷயத்தை, பெருமையாக அவளிடம் பகிர்ந்து கொண்டேன்.

பானோ நம்பிக்கைக்யின்றி என்னைப் பார்த்தாள்.

“கீழே ஆனடேல் மைதானம் இருக்கிறது. அதற்கு கீழே பள்ளத்தாக்கு. அப்படியென்றால், தில்லி பள்ளத்தாக்கிற்கு கீழே இருக்கிறதா?”

பானோ தில்லிக்குச் சென்றதில்லை. இந்த விஷயத்தில் எனக்கு அவள் மீது எப்போதும் பரிதாபம் ஏற்படும். நான் அவளது ஆர்வத்தை தணிக்க எந்த முயற்சியும் செய்யாமல், அக்கறையின்றி தலையைத் திருப்பிக் கொண்டேன்.

பானோ ஆப்ரிக்காட் பழக் கொட்டைகளை பெவிலியனுக்கு பின்புறமிருக்கும் விருந்தினர் அறைக்கருகே வீசி எறிந்து விட்டு, சற்று நேரம் கதவின் மீது சாய்ந்து கொண்டு நின்றாள்.

ஆப்ரிக்காட் மரங்களின் கிளைகள் காற்றில் கூரையின் மீது ஆடுகின்றன. ஆப்ரிகாட் பழங்கள் சில தரையிலும் சில பெவிலியனின் கூரை மீதும் “கட் கட்” என ஓசை எழுப்பியபடி விழுகின்றன.

பகலுக்கும் மாலைக்கும் இடையேயான பொழுதில் முழு சிம்லாவும் தனக்குள் ஒடுங்கிவிடுகிறது. ஆப்ரிகாட் பழங்கள் கீழே விழுகிற “கட் கட்” ஓசை மட்டும் மலைக்காற்றில் எதிரொலிக்கிறது.

பானோ கை ஜாடையால் என்னை தன்னருகே அழைத்தாள். விருந்தினர் அறை கதவின் உடைந்த ஜன்னல் ஒன்றின் வழியாக அவள் தலையை உள்ளே விட்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது தலைக்கு மேலே இருந்த சிறிய இடத்தில், நான் வலுக்கட்டாயமாக என் தலையை நுழைத்தேன்.

அறை முற்றிலும் காலியாக இருந்தது. சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த பூக்களும் கொடிகளும் நிறைந்த காகிதம் வெளிறி நிறமிழந்து கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது. கூரையின் ஒரு மூலையில், சிலந்தி வலை மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது. மூடிக்கிடந்த அறையில் பழைய காற்றின் மக்கல் நாற்றம் நாலாபுறமும் பரவியிருந்தது. தரையின் நடுவே பரவியிருந்த வட்ட வடிவ வெளிச்சம், சில சமயம் மஞ்சளாகவும் சில சமயம் அழுக்கு வெள்ளையாகவும் காட்சியளித்தது. இறங்கும் சூரியனின் மஞ்சள் வெளிச்சத்தில், அறையின் நடுவே பரவியிருந்த வெள்ளை வெளிச்சம், அச்சமூ ட்டுவதாக இருந்தது.

“அந்த வெள்ளைக்கார சீமாட்டி இந்த அறையில்தான் இருந்தி ருப்பாள்” பானோ கிசுகிசுத்த குரலில் கூறினாள்.

“ஒருவேளை இந்த அறையிலேயே இறந்திருக்கவும் கூடும்” இதைச் சொல்லும்போது என் உடலில் மின்னல் ஓடுவது போன்ற சிலிர்ப்பு ஏற்பட்டது. எதிரிலிருந்த காரை பெயர்ந்தி ருந்த சுவரிலிருந்து, அசிங்கமான முகம் ஒன்று எழும்பி வருவது போல எனக்குத் தோன்றியது. அது தன் திறந்த தாடைகளுடனும், தெறிக்கும் கண்களுடனும் என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு அந்த அறையில் இறந்து கிடந்த சீமாட்டியின் முகம் தானோ அது என நான் நினைத்தேன். அந்த சிரிப்பு, அன்றிரவு கதவுக்குப் பின்னால் அம்மா சிரித்தது போலவே இருந்தது.

உடைந்த கண்ணாடியின் வழியே உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த என் முகம் பானோவின் தலையின் மீது அழுந்தி இருந்தது.என் முகத்துக்கு சற்று கீழே பானோவின் ஆப்ரிக்காட் நிற முடி இருந்தது. அவளுடைய முடி, ஈர மண்ணைப்போல மணத்தது.முடியின் நடுவே சிறிய வகிடு – அம்மாவின் வகிட்டைப் போலவே. ஆனால் அம்மாவின் வகிடு சற்றே நீளமாகவும், முகம் எப்போதும் துயரத்தில் ஆழ்ந்திருப்பது போலவும் காட்சியளிக்கும்.

“பானோ?”

“என்ன?”

“அம்மி உன்னிடம் அம்மாவைப் பற்றி ஏதாவது சொன்னார்களா?”

“அதைப்பற்றி உனக்கென்ன?” பானோ எரிச்சலுடன் பதிலளித்தாள்.


ஆளரவமற்ற காலி வீட்டின் கதவுகள் காற்றில் அடித்துக் கொண்டன. தரையில் படிந்து கிடக்கும் வெள்ளைத் தூசி மெதுவாக மேலே பறந்தது.

“பானோ, நான் நோய்வாய்ப்பட்டிருந்த போது, சில சமயம் எனக்கு வித்யாசமான உணர்வுகள் தோன்றின.”

“எந்த மாதிரி?”

நானும் என் அம்மாவைப் போலவே தான் என்று தோன்றியது. அவரிடம் இருக்கும் ஏதோ ஒன்று என்னிடமும் இருக்கிறது என்று தோன்றியது.”

“என்ன அது?”

“எதை எல்லோரும் மறைக்கிறார்களோ அது”

பானோவின் தலை அதிர்கிறது.

“பனியால் போர்த்தப்பட்டது போன்ற ஒரு வெள்ளை நிழல் பானோ. இருட்டிலும் அது ஜொலிக்கிறது. காற்றில், எப்போதும் விரிந்திருக்கும் பளிங்கு போன்ற அதன் கைகள். சில சமயம் பின்புறமாக வந்து அது என்னை முழுவதுமாக இறுக்கிப் போர்த்திக்கொள்வது போலவும், நான் என்னிலி ருந்தே விலகிச் செல்வது போலவும் தோன்றும். உண்மையாக பானோ, நான் என்னிலி இருந்தே உடைந்து பிரிந்து போவது போல எனக்குத் தோன்றும்.”

பானோவின் உடல் இலைச்சருகைப்போல நடுங்கியது. அவளது கண்கள் பயத்தில் விரிந்தது போலவும் எனக்குத் தோன்றியது.

நான் சிரித்தேன்.

“பயந்து விட்டாயா பானோ?”

பானோ மௌனமாக நின்றாள். அவளுடைய சூடான மூச்சுக்காற்று, என்னுடைய உலர்ந்த உதடுகளைத் தொட்டது.

“பானோ நான் உன்னை விளையாட்டாக பயமுறுத்திப் பார்த்தேன். நான் சொன்னதெல்லாம் வெறும் பொய்” . பானோ ஒன்றும் பேசாமல் மாடிப்படிகளில் இறங்கி வேகமாக ஓடினாள்.

நான் ஓரிரு முறை அவளை அழைத்துப் பார்த்தேன். அவள் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

மழைத்துளிகள் பெவிலியனின்ன் கூரைமீது “டப் டப்” என்ற சத்தத்துடன் விழுகின்றன. என் கன்னத்தில் வழியும் நீர்த்துளிகள் மேகத்திலிருந்து வந்தவையா அல்லது முன்னமே அங்கு இருந்தவையா என்று எனக்கு புரியவில்லை.

வீட்டுச் சாமான்களையெல்லாம் ஒழுங்குபடுத்தி யாயிற்று. பெட்டிகள், பைகள் மற்றும் படுக்கைகளின் மீது பெரிய எழுத்துக்களில் “சிம்லா – தில்லி” என்றும், அதற்குக் கீழே அப்பாவின் பெயரும் எழுதப்பட்ட லேபிள்கள் ஒட்டப்பட்டு விட்டன. வீடு இரண்டு பட்டுக் கொண்டிருக்கிறது. வேலைக்காரர்கள், துப்புரவு தொழிலாளர்கள், கூலியாட்கள் மற்றும் அப்பாவின் அலுவலகத்தில் வேலை செய்யும் ப்யூன்கள் என எல்லோரும் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அம்மா மாடிய றையில் இருக்கிறார். இந்த முறை, அவர் எந்த வேலையும் செய்யவில்லை. அவரது உடல்நலம் சரியில்லை என்று நினைக்கிறேன். அப்பா என்னை அவரிடம் போக வேண்டாம் என சொல்லி இருக்கிறார்.அம்மா, சித்தி வீட்டிலிருந்து திரும்பியதிலிருந்து நான் அவரைப் பார்க்கவில்லை. ஒருவேளை அவர், இரவில் நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது வந்திருக்கக்கூடும்.

எல்லோரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். எனக்கு மட்டும்தான் ஒரு வேலையும் இல்லை. பால் கனிக்கும் வராந்தாவுக்கோ மாக மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தேன் என்னால் எந்த உபயோகமும் இல்லை. காலி அறைகள், வெற்றுச் சுவர்கள், மூலையில் குவித்து வைக்கப்பட்ட குப்பைகள். எனக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது. நான் அப்பாவின் கண்களிலிருந்து தப்பித்து வெளியே வந்தேன்.

ஒற்றையடிப்பாதை வழியாக கீழே இறங்கி பள்ளத்தாக்கை அடுத்திருக்கும் நீரோடையை ஒட்டியவாறே நடந்தேன். நீரோடையில் விழுந்து கிடக்கும் பைன் மரக் கூம்புகளை என்னுடைய காற்சட்டையின் பைகளில் திணித்துக் கொண்டேன். ரயில் ஜன்னலிலிருந்து வெளியே தெரியும் சிறு குளங்களில் நான் இந்த கூம்புகளை வீசுவேன். காற் சட்டையின் இரண்டு பைகளும் நிரம்பிய பிறகுதான் நான் வீட்டில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். சூரியன் மறைய தொடங்கி இருந்தபோதிலும், தூரத்து மலை உச்சிகளில் வெயில் இன்னமும் சோம்பலுடனும் களைப்புடனும் தவழ்ந்து கொண்டிருந்தது. நான் பாதி வழியிலேயே திரும்பி, சிறிய கால் நடைபாதை வழியாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கொஞ்ச தூரம் நடந்ததும் கால்கள் தாமாகவே நின்றன. கீழே, வலப்புறம் ப்ரையன் சித்தப்பாவின் குடில் தெரிந்தது. நாலாபுறமும் மரங்களும் புதர்களும் சூழப்பட்டிருந்த அந்த வீட்டை பார்த்ததும் எனக்கு அம்மாவுடன் இங்கு வந்தது நினைவுக்கு வந்தது. அம்மா தன் நிலை மறந்து, கீழே பார்த்துக்கொண்டிருக்கையில், நான் அம்மாவின் பின்னால் நின்றிருந்தேன். அம்மா , சித்தி வீட்டிற்கு போனபின், ப்ரையன் சித்தப்பா எங்கள் வீட்டிற்கு வரவில்லை. ஒரு முறை அப்பாவிடம் அவரைப் பற்றி கேட்டேன். ஆனால் அப்பாவின் முகம் உணர்ச்சிகளற்று, கொடூரமாக மாறியதால், மேற்கொண்டு அவரிடம் எதையும் கேட்க தைரியம் வரவில்லை.

இறங்கும் சூரியனின் வெளிச்சத்தில் குடிலின் கூரை, செக்கச்செவேலென ஒளிர்ந்து கொண்டிருந்தது. நான் தெரு ஓரத்தில் போடப்பட்டிருந்த கம்பியைப் பிடித்துக்கொண்டு மெதுவாக கீழே இறங்க ஆரம்பித்தேன்.

கதவு திறந்திருக்கிறது. நான் பதுங்கப் ஓசையெழுப்பாமல் உள்ளே நுழைந்தேன். காற்றில் தோட்டத்துப் புல்வெளியின் புற்கள் அசைகின்றன. புதர்களின் சரசரப்பு, சுற்றிலும் சூழ்ந்து கிடக்கும் அமைதியை மேலும் அடர்த்தியா க்குகிறது. தோட்டத்தை ஒட்டி அம்மா அன்று உட்கார்ந்திருந்த அதே கற் திண்ணை.

திரும்பிப் போய்விடலாமா என நினைத்தேன். இருந்தாலும், கால்கள், சரளைக்கற்கள் பாவிய அந்த பாதையில், ஆனி அடித்தது போல நின்று விட்டன.

கதவைத் தட்டி, மெதுவாக ப்ரையன் சித்தப்பா….ப்ரையன் சித்தப்பா என அழைக்கிறேன்.ஆளரவமற்ற அந்த குடிலில், என் குரல் எதிரொலித்து, என் குரலைப் பின்தொடர்ந்தது ஓடிவரும், முன்பின் தெரியாத எவருடைய குரலோ போலக் கேட்கிறது.

“குழந்தை, உள்ளே வா! கதவு திறந்துதான் இருக்கிறது.” ப்ரையன் சித்தப்பாவின் குரல் கேட்டது.

வாசற்படியை தாண்டி உள்ளே சென்றதுமே என் கால்கள் ஒருகணம் நின்றன. மேஜை விளக்கின் மங்கலான ஒளி, மேஜை மீது இருக்கும் காகிதங்களின் மீதும், புத்தகங்களின் மீதும் விழுந்து கொண்டிருக்கிறது. நான் வாசப்படியருகேயே நின்று கொண்டிருந்தேன். அப்போதுதான் அறை காலியாக இல்லை என்றும், ப்ரையன் சித்தப்பா, அறையின் ஒரு மூலையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார் என்பதையும் கண்டேன். அவர் உட்கார்ந்திருந்த இடம் இருட்டாக இருந்ததால், அறையில் நுழைந்தவுடன், அவர் என் கண்ணில் படவில்லை.

அவர் என்னைத் தன் கட்டிலின் மீது அமரச் சொன்னார். தன்னுடைய நாற்காலியை கட்டிலுக்கு அருகே இழுத்துக்கொண்டார்.

“இவ்வளவு தூரம் தனியாகவா வந்தாய்?” அவர் என் கைகளை தன் கைக்குள் வைத்துக்கொண்டு முறுவலித்தார். என் பார்வை, உப்பியிருந்த என் காற்சட்டை பைகளின் மீது தானாகவே படிந்தது. வெட்கத்தில் என் முகம் சிவந்தது.

“என்ன ரொப்பி வைத்திருக்கிறாய்? பைன் கூம்புகளா?” நான் மௌனமாக தலையசைத்தேன்.”இவற்றை என்ன செய்யப் போகிறாய்?”

“ரயிலுக்காக வைத்திருக்கிறேன்” என தடுமாற்றத்துடன் பதிலளித்தேன்.

“ரயிலுக்காகவா” ப்ரையன் சித்தப்பாவின் முகத்தில் கேள்விக்குறி தோன்றியது. ப்ரையன் சித்தப்பாவுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்று எனக்கு அப்போதுதான் தோன்றியது. என்னிடம் இருந்து தான் அவர் முதன்முதலாக செய்தியை அறிய போகிறார் என்பதில் எனக்கு உள்ளூர மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

“ப்ரையன் சித்தப்பா, இன்றிரவு நாங்கள் தில்லி செல்கிறோம்.”

அவர் நான் சொன்னதை கேட்காதது போல், சற்று நேரம் என்னையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு நாற்காலியிலிருந்து எழுந்து, அறையில் நான் இருப்பதையே பொருட்படுத்தாது, ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டு, வெளியே பார்க்க தொடங்கினார்.

கொஞ்ச நேரம் அறையில் அழுத்தமான அமைதி நிலவியது. ப்ரையன் சித்தப்பாவுக்கு இந்த விஷயம் முதலிலேயே தெரிந்திருந்ததனால்தான், எந்தவிதமான உற்சாகத்தையும் வெளிக்காட்டவில்லையோஎன்று எனக்குத் தோன்றியது.

அவர் ஜன்னலை விட்டு நகர்ந்தார்.


பழுப்பு நிற தாடிக்கு மேல், அவரது நீலநிறக் கண்கள் ஒளிர்ந்தன.” நீ அன்று ஒரு புகைப்படம் எடுத்தாய ல்லவா, அதை நான் சுத்தம் செய்து விட்டேன்…. பார்க்கிறாயா?”

அலமாரியில் இருந்து ஒரு சிறிய உரையை எடுத்து என் கையில் வைத்தார்.

“உன் கை வெகு சுத்தம்.துளி கூட அசைவில்லை. புகைப்படம் மிகத் தெளிவாக வந்திருக்கிறது”

நான் புகைப்படத்தை வெளியே எடுத்தேன். நான் சுத்தமாக மறந்து விட்டிருந்த, வெகுநாட்களுக்கு முந்தைய ஒரு கணம், முற்றிலும் பழைய மாதிரியே, என் முன் திரும்பி வந்திருப்பது போல எனக்குத் தோன்றியது.

பால்கனிக்கு பின்னால் கொடியில் அம்மாவின் புடவை காய்ந்து கொண்டிருக்கிறது. அதற்குப்பின்னால் மலைமுகடுகளில் மங்கலான கோடு, மின்சாரக் கம்பிகள், மூலையில் ஒதுங்கியிருக்கும் ஒரு துண்டு ஆகாயம். மீதி இருக்கும் இடத்தில் ப்ரையன் சித்தப்பா கொடியை ஒட்டி நின்று கொண்டிருக்கிறார். ஒரு கையால் தன்னை அறியாமலேயே அம்மாவின் புடவையை தொட்டு கொண்டிருக்கிறார்.அம்மா…. அம்மாவின் கண்கள் மூடி யிருக்கின்றன. அவரது உதடுகள், இறந்துபோன பட்டாம்பூச்சியின் இறக்கைகளைப்போல, பாதி விரிந்து கிடக்கின்றன, எதையோ சொல்லிக் கொண்டிருக்கையில் திடீரென பாதியிலேயே நிறுத்தி விட்டது போல.

நான் எவ்வளவு நேரம் அந்த புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை.

திடீரென, வெகு நேரம் ஆகி விட்டது போல தோன்றியது. ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. அப்பா எனக்காகக் காத்திருக்க கூடும்.

நான் வேகவேகமாக கட்டிலிலிருந்து இறங்கினேன்.”நல்லது, ப்ரையன் சித்தப்பா”என்னால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

ப்ரையன் சித்தப்பா சற்று நேரம் என்னையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். மெதுவாக என் அருகில் வந்து, என் தலையைக் கோதியவாறே மென்மையாக என் நெற்றியில் முத்தமிட்டார் – அன்றிரவு அம்மா என்னை முத்தமிட்ட அதே மாதிரி.

அவர் கதவை திறந்தார். நாங்கள் வராந்தாவுக்கு வந்தோம். “நான் உன் கூட வரட்டுமா நீ பயப்பட மாட்டாய் தானே?”. எனக்கு வீட்டுக்கு போக வழி தெரியும் என்பதால் நான் தலையசைத்து மறுத்தேன். கொஞ்ச நேரம் நாங்கள் வராந்தாவில் மௌனமாக நின்றிருந்தோம்.

“குழந்தை” ப்ரையன் சித்தப்பாவின் குரலைக் கேட்டு நான் துணுக்குற்றேன். நான் அவரைப் பார்த்தேன்.

“அம்மா ஒரு புத்தகம் கேட்டிருந்தார். எனக்கு நினைவி ருந்திருக்கவில்லை.” அவர் தயக்கத்துடன் சொல்லிவிட்டு மௌனமானார்.

“நீங்கள் என்னிடம் கொடுங்கள். நான் அம்மாவிடம் தந்து விடுகிறேன்.”

புத்தகத்தை கொடுக்கும் போது அவர் ஏதோ சொல்ல விழைவது போல எனக்குத் தோன்றியது. ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை. நான் வேகமாக வாயிலை நோக்கி நடந்தேன்.

குடிலை விட்டு வெகுதூரம் நடந்து வந்து நான் ஆளரவமற்ற குறுகலான பாதை ஒன்றில் சென்று கொண்டிருந்தேன். எதிரே மலையின் மீது மரங்களின் நீண்ட வரிசை ஒன்று இருந்தது. வானத்தில் அஸ்தமன சூரியனின் மஞ்சள், ரோஜா நிறம் மற்றும் தங்க கோடுகள் தீற்றப்ப்பட்டது போல் இருந்தது. நாற்புறமும் பசுமையான மெல்லிய புகை படர்ந்திருந்தது. வீட்டிற்கு கொஞ்சதூரம் முன்பு விளக்கு கம்பத்தின் கீழ் நின்று கொண்டு புத்தகத்தைப் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தேன்.

புத்தகத்தின் பக்கங்களுக்கு நடுவே புகைப்படம் இருந்த காகித உரை வைக்கப்பட்டிருந்தது.

மிகவும் பழைய புத்தகம். இன்றும் மஞ்சள் படிந்து உதிரத் தொடங்கியிருந்த அதன் பக்கங்கள் நினைவுக்கு வருகின்றன. “ஜார்ஜ் ஸான்ட்டிற்கு ஃப்ளாபர்ட்ஸின் கடிதங்கள்”. அந்நாட்களில் நான் ஃப்ளாபர்ட்ஸையோ ஜார்ஜ் ஸான்டையோ அறிந்திருக்கவில்லை.. பல வருடங்கள் கழித்து நான் அந்த புத்தகத்தைபா படித்த போது அம்மா உயிருடன் இல்லை. .ப்ரையன் சித்தப்பாவும் நெடுங்காலத்திற்கு முன்பே இத்தாலிக்கு சென்றுவிட்டிருந்தார்.

அன்று எனக்கு அந்த புத்தகத்தின் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை. அதைக் கையில் வைத்துக் கொண்டு வெகு நேரம் இருட்டில் எங்கள் வீட்டின் மாடி அறையை பார்த்தவாறே நின்றிருந்தேன்.

அம்மாவின் அறையின் ஜன்னல் மூடி இருந்தது. சோகையான, மஞ்சளும் வெள்ளையும் கலந்த மங்கலான வெளிச்சம், ஜன்னலின் மீது பட்டு, பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

அதுவே சிம்லாவில் எங்களது கடைசி மாலை.

***

இந்தி மூலக்கதையாசிரியர்: நிர்மல் வர்மா

புத்தகத் தலைப்பு: மேரீ ப்ரிய கஹானியான்’ என்ற தொகுப்பு.

இந்தியிலிருந்து தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

[இதே கதையின் இங்கிலிஷ் வடிவம் மாடர்ன் ஹிந்தி ஷார்ட் ஸ்டோரீஸ் என்ற தொகுப்பில் கிட்டுகிறது. ]

Series Navigation<< சின்னச்சின்ன தாஜ்மஹல்கள்டேய் தரங்கெட்டவனே! >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.