- கலாஸ்ஸோவை வாசித்தல் – பாகம் I
- இந்தியத் தொன்மத்தின் மனவெளியில்
- கலாஸ்ஸோவின் டியெபோலோ பிங்க்: ஒளியின் நாடகம்
கலாஸ்ஸோவை வாசித்தல் (பாகம் II)
இக்கட்டுரைத் தொடரின் முதற்பகுதி கடற்கரையில் ஒரு காளையின் கொஞ்சு மொழியுடன் தொடங்கியதென்றால், இப்பகுதி விரல் நகங்களில் கடலாமையையும் யானையொன்றையும் பற்றியபடி, அலகில் பற்றியிருக்கும் மரக்கிளையில் அடர்ந்திருக்கும் அகலிலைகளுக்குப் பின்னே ஒளிரும் உற்று நோக்கும் கண்களுடன் வானத்தை கருக்கியபடி உயர்ந்தெழும் ஒரு பறவையுடன் தொடங்குகிறது. கலாஸ்ஸோவின் முந்தைய புத்தகமான த மேரேஜ் ஆஃப் கேட்மஸ் அண்ட் ஹார்மணி (The Marriage of Cadmus and Harmony) கிரேக்க தொன்மத்தின் சீரற்றதோ என்று சந்தேகிக்கும் அளவிற்குக் கிளைத்து விரியும் உலகைப் பிரமிக்கச் செய்யும் வகையில் அலசியதென்றால், அவரது அடுத்த புத்தகமான க (Ka) மேலும் கடினமான சவால்களை எதிர்கொள்ள விரும்புவது போல், இந்தியத் தொன்மத்தின் அடர்ந்த காடுகளிலும், அதன் மிகப் புராதன அறிவாய்வியல் சிந்தனைக் களஞ்சியங்களான வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்களுடன், புராணங்களிலும் துணிகரமாக அலைந்து திரிகிறது. முந்தைய புத்தகத்தைப் போல் க புத்தகமும் தன் மீள் சுழற்சிப் பாதையில் தொடங்கிய இடத்திற்கே திரும்பி தன்னை நிறைவு செய்துகொள்கிறது. ஆனால் இப்போது அப்பறவை தன் அலகில் ரிக் வேதத்தின் பத்தாம் புத்தகத்தில் வரும் 121-ஆவது சுலோகத்தைக் கவ்விப் பிடித்திருக்கிறது. அச்சுலோகத்தின் “யார் அந்த யார்” மீதுரைக் கேள்வியை அசைபோட்டபடியே அதன் யத்தனத்தை அப்போதே படித்து முடித்திருக்கும் வாசகனுடன் புத்தகம் அதுவரையிலும் கதைத்திருந்த சிந்தனை வெளியில் பறக்க ஆயத்தம் கொள்கிறது.

ஆனால் யார் அந்த பறவை? வனவாசம் சென்றுவிட்ட கஷ்யப ரிஷியின் இரண்டு மனைவிகளில் ஒருவரான, நூறு பாம்புகளைக் குழந்தைகளாகப் பெற்ற கத்ருவின் சகோதரியான வின்யாதாவின் மகன் கருடனே அப்பறவை. நாமெல்லோருமே எழுபதுகளில் ரசித்துப் படித்த பழைய அமர் சித்ரா காமிக்ஸ் கதைதான். தமக்கை தன் தந்திரத்தால் (தன் சர்ப்பப் புதல்வர்களில் ஒருவனை வெள்ளைப் புரவியின் வாலை இருட்டிக்க வைத்து) பந்தயத்தில் வென்று வின்யாதாவைத் தன் அடிமையாக்கிக் கொள்கிறாள். அவளை விடுவிக்கும் பொருட்டு, சர்ப்பங்களை மீட்கவல்ல சோம பானத்தை எடுத்துவருவதற்காகக் கருடன் தற்போது பறந்து கொண்டிருக்கிறான். ஆனால் அனைத்து வேள்விகளில் இடம்பெறுவதுபோல் இங்கேயும் வேள்வியை மேற்கொள்பவன் இறுதி இலக்கிற்கு அவனைத் தயார் செய்யும் சில கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறான். ஒரு பெரும் ஏரிக்கருகே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் யானையையும் கடலாமையையும் தேடிக் கைப்பற்றி பல நூறு அடிகள் வரையிலும் நீண்டு அடர்ந்திருக்கும் கிளைகளைக் கொண்ட ரௌஹீனா மரத்தின் மீதமர்ந்து அவற்றை உணவாக அருந்த வேண்டும் என்று தந்தை கஷ்யபரால் அவன் பணிக்கப்படுகிறான். நூதன -யானை கதம்ப உணவைப் பருகும் ஆர்வத்தில் கருடன் நூற்றுக்கணக்கான பிராஹ்மன்கள் (Brahman) வௌவாலைப் போல் தலைகீழாய் தொங்கிக் கொண்டிருக்கும் புனிதமான ரௌஹீனா மரத்தின் கிளையொன்றைத் துண்டித்து விடுகிறான். இது அவமானமும் குற்றவுணர்வும் மிகுந்திருக்கும் ஒரு சுழலை உந்திக் கிளப்புகிறது. ஏனெனில் “எதைச் செய்தாலும் ஒரு பிராஹ்மனை மட்டும் கொன்று விடாதே; பிராஹ்மன் உயிர் நெருப்பு, வெட்டுவாய், விடம்…” என்று தன் அன்னையின் போதனையை அவன் நினைவுகூர்கிறான். தற்போதைய ஜாதிய தேய்வழக்குக் குதிரைகளை நீங்கள் கட்டவிழ்ப்பதற்கு முன் இதையும் கூறிவிடுகிறேன். வரலாறு தோன்றுவதற்கும் முன்னால் வரும் விடயமிது. இங்கு பிராஹ்மன் என்று குறிப்பிடப்படுவது வரலாற்றில் பிற்காலத்தில் ஓர் உயர் ஜாதியாக உறைந்து அனைவராலும் கரித்துக் கொட்டப்படும் வைதீக பிராமணர்கள் அல்ல. வின்யாதாவின் விளக்கமும் கருடனின் எதிர்வினையும் இக்களத்தின் உருவகத் தன்மையை அடிக்கோடிடுகிறது:
“தொண்டையில் எரிகொள்ளியின் வெம்மையை உணருவாயின் அதுவே பிராஹ்மன் அல்லது கொக்கியொன்றை விழுங்கிவிட்டாய் என்று நீ உணர்ந்து கொள்ளும் தருணமே பிராஹ்மன்“
“ஆக, அவனை அனேகமாக விழுங்கும் வரையில் நம்மால் பிராஹ்மனை உணர்ந்து கொள்ள முடியாது அல்லவா?”
சரி, மீண்டும் அக்கதைக்கே திரும்பி, அது சுபமாக முடிந்ததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம்; அறிவிய தன்மையை வலிந்து அளித்துக் கொள்ள முனையும் எண்பதுகளின் திரைப்படங்களில் வரும் ஒரு யந்திரத்தைப் போல் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு பொறியிலிருந்து, உலோகச் சக்கரத்திற்குப் பின் கூர்ப்பல் விளிம்புகளுடன் தலைகீழாகச் சுழன்றுகொண்டிருக்கும் இரு தங்க கலசங்களின் வாய்க்கிடையே இருத்தப்பட்டிருக்கும் சோம பானத்தை மகன் கைப்பற்றி, சர்ப்பங்களுக்கு அளித்து தன் அன்னையை மீட்கிறான். சுபம்.

குத்துமதிப்பாக இக்கதைச் சுருக்கம் சரியென்றாலும் இது அவ்வளவு எளிமையாக சாத்தியப்படவில்லை. ஏனெனில் இடையில் இந்திரன் தோன்றி கருடனைக் கூட்டுக்களவாணியாக ஆக்குகிறான். திட்டமிட்டபடி கருடன் சோமபானத்தைத் தர்ப்பை புல்லின் மீது வைத்துவிட்டு அதைப் பருகுவதற்கு முன் புனித ஸ்நானமொன்றை மேற்கொள்ளும்படி பாம்புகளை அறிவுறுத்துகிறான். அவை குளித்துவிட்டு வருவதற்குள் இந்திரன் இடையில் புகுந்து சோமபானத்தை அபகரித்துச் செல்கிறான். குளித்துவிட்டுத் திரும்பும் பாம்புகள் சோம பானம் காணாமற் போய்விட்ட சோகத்தில் அது இருத்தப்பட்டிருந்த புல்லை வாஞ்சையுடன் நக்குகின்றன; ஒரு இன்மையே அவற்றிற்கு எஞ்சியிருக்கிறது, நமக்கோ அவற்றின் சுவை நாவிற்கான தொன்மக் காரணம்! அப்படியே இதையும் கூறிவிடுகிறேன். இந்திரனோடு கூட்டுச்சதி செய்ய சம்மதிப்பதற்கு முன் கருடன், தன் ஆழ்மனதில் பொதிந்திருக்கும் ஆசையொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏதாக ஒரு வரத்தை அவனிடமிருந்து பெற்றுக் கொள்கிறான். வேதங்களைக் கற்றறிய வேண்டுமென்பதே அந்த நெடுநாளைய ஆசை.
கிளைத்துப் பிரியும் இம்முதல் அத்தியாயம் கருடன் ரௌஹீன மரத்தின் அடர்கிளைகளில் புதையுண்டு, சுலோகங்கள் தன்னுள் கொழுந்துவிட்டெரிய, போதையிலும் கிறுகிறுப்பிலும் லயித்திருப்பதுடன் முடிகிறது. விண்ணுலகில் அவன் அச்சுறுத்திய, தனக்கு முன் தோன்றிய, அந்த முப்பத்து மூவரைப் பற்றிப் படிக்கிறான். வருணர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், வருணன், மித்திரன், த்வஸ்த்ர, சாவித்திர், பிருகஸ்பதி, சூரியன் என்று நீளும் பட்டியல். கவிந்திருக்கும் மௌனத்தில் பெயர்கள் சுழல்கின்றன. பிற பெயர்களைக் கொண்டிருந்தாலும் அவற்றுள் பல மற்றொரு பெயரால் மாற்றீடு செய்யத்தக்கவை. இப்போது நாம் ஆவிடின் (Ovid) உருமாற்றப் புலத்திற்கு வந்து விட்டோம், டெட் ஹியூஸின் அற்புத மொழியாக்கத்தின் வழியே:
Now I am ready to tell how bodies are changed
Into different bodies.
I summon the supernatural beings
Who first contrived
The transmogrifications
In the stuff of life.
You did it for your own amusement.
Descend again, be pleased to reanimate
This revival of those marvels.
Reveal, now, exactly
How they were performed
From the beginning
Up to this moment.
உடலங்கங்கள் வேறுடல்களாய் உருமாற்றப்படுவது எவ்வாறு
என்பதை கூறுவது என் சித்தம் இப்போது.
உயிர்க்கூறுகளை
உருட்டிப் பிடிக்கும் வித்தை
முதல் முறை தேர்ந்த
சித்த கணங்கள் எழுந்தருள்க
உங்கள் வேடிக்கைக்காகச் செய்தீர்கள்.
மீண்டும் இறங்கி வந்தருள்க,
அந்த அத்புதங்கள் இங்கு மீண்டும் உயிர் பெற
உணர்வூட்டி அருள்க.
புலப்படுத்துங்கள், இப்போது, தெள்ளென,
அவை எவ்வாறு நிகழ்த்தப்பட்டன,
துவக்கம் முதல்
இக்கணம் வரை என்பதை.
ஆனால் வெளிப்படும் பெயர்களோ ஒரு நிழலையும் உடனழத்து வருகின்றன, உச்சரிக்கப்படாத ஒரு பெயரை. அதுவரையில் உறுதிப்படுத்துவதாக இருந்த கொண்டாட்டத் தொனி இப்போது கூடுதல் சேர்மையுடன் வினவுத்தன்மை பொருந்திய ஒன்றாக உருமாறுகிறது. “பலிகளை நாம் படைத்தாக வேண்டிய அக்கடவுள் யார் (க)” என்ற ஒரே கேள்வியுடன் நிறைவுற்று “பிரஜாபதி” என்ற அதற்கான விடையைப் பத்தாவது பத்தியில் அளிக்கும் அந்த 121-ஆவது ஸ்லோகத்தின் மகத்தான பொலிவிற்கு…
ஆக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிறைவுற்ற ஒரு கதையின் நடுவில், பழம்பெரும் ஓட்டுச்சுவடியொன்றின், இந்தியத் தொன்ம வழமையைப் பற்றி அதிகம் அறிந்திராத ஒருவர் “குளறுபடியின் குழப்பமான நடுவில்” என்று விவரிக்கக்கூடும் வகையில், இடையிலிருந்தே கலாஸ்ஸோ துவங்குகிறார். நாமும் கருடனை போல் கூக்குரலிடுகிறோம்: “அய்யகோ, எத்தனை நிகழ்வுகள், ஒன்றிற்குள் ஒன்றாக எத்தனை எத்தனை கதைகள், அவற்றின் கண்ணிகள் ஒவ்வொன்றிலும் ஒளிந்திருக்கும் இன்னும் பல கதைகள்… நானோ இப்போதுதான் முட்டையிலிருந்து பொரித்திருக்கிறேன்.” இனி கலாஸ்ஸோ வழிநடத்துவாராக!

முதல் அத்தியாயத்தின் அடையாளம் அதன் மிகுதம் என்றால் அதன் முடிவிலிருந்து தொடங்கும் இரண்டாவது அத்தியாயமோ படைத்தலின் ஆதி தருணத்துடன், அதன் பூரண மௌனத்தில் தொடங்குகிறது. நாம் இப்போது இன்னமும் புலப்படும்படி வெளிப்படாத தனி “மனத்திற்குள்”, பிரஜாபதியின் மனத்திற்குள் அழைத்துச் செல்லப்படுகிறோம். அனைத்திற்கும் முன்னே வருவது “மனஸ்”. அதற்கோ, தான் இருக்கிறோமா இல்லையா என்பதுகூட தெரியாது. ஆதித்தருணத்தின் கடவுள், அதற்கு முதலில் பெயர் கூட கிடையாது, வெறும் “பிரஜைகளுக்கெல்லாம் அதிபதி” என்ற பட்டம் மட்டுமே. ஆனால் இதைக்கூட இந்திரன் பிற்காலத்தில் அதனிடம் “உங்களைப் போல் நான் ஆவதெப்படி” என்று கேட்கையில்தான் அது உணர்ந்து கொள்கிறது.
“ஆனால் நான் யார் (க)” என்ற கேள்வியுடன் பிரஜாபதி பதிலளிகிறார்.
“அதேதான், தாங்கள் தங்களை எவ்வாறு அழைத்துக் கொள்கிறீர்களோ அதுதான் நீங்கள், நீங்கள்தான் யார் (க) “ இந்திரன் பதிலளிக்கிறான். ஆக, பிரஜாபதி “க” வாகிறார்.
சிறுவயதில் நாம் கேட்டு மகிழ்ந்த விடுகதையை இது நினைவுறுத்துகிறது. கணக்கு சார்ந்ததாக விடுகதை கட்டமைக்கப்படுகிறது. பஸ் ஒன்று, பல்வேறு நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி இறக்கியவாறு போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஏறி இறங்கியவர் எண்ணிக்கையை விடுகதையைக் கூறுபவன் மிகச் சிரத்தையாக அளிப்பதால் கேட்பவர்கள் மும்முரமாக கூட்டிக் கழித்து ஒவ்வொரு நிறுத்தத்திலும் எவ்வளவு பயணிகள் எஞ்சியிருக்கிறார்கள் என்பதை நடப்புக் கணக்காக வைத்திருகிறார்கள். ஆனால் இறுதியில் கேட்கப் படும் கேள்வியோ அவர்களை ஸ்தம்பிக்கச் செய்கிறது, “ஒட்டுநரின் பெயர் என்ன?” இதுவரையில் கர்மசிரத்தையாக செய்த கணக்கெல்லாம் வீணாய்ப் போய்விட்ட எரிச்சலில் அவர்கள் தோல்வியை ஒப்புக் கொள்கையில் குறும்புடன் விடை அளிக்கப்படுகிறது” அதுதான் சொன்னேனே, ஓட்டுநரின் பெயர் என்னவென்று, அவன் பெயரே “என்ன” தான்!” ஒருகால் (இவ என்று அம்முனிவர்கள் முன்மொழிந்ததைப் போல்) நம் மிகு சிறுபிள்ளைத்தனமான செயல்களில்கூட இறைமையுடன் சந்தித்துக் கொள்கிறோம் போல! நம்மால் அழைக்கப்பட்டு பிரசன்னமாக அது எப்போதுமே காத்திருக்கிறது போல.
படைத்தோனே தன் இருப்பைச் சந்தேகிக்கும், ஒன்றையொன்று பரஸ்பரமாகப் பிறப்பித்துக் கொள்ளும் இந்த இந்திய ஆதித்தோற்ற நாடகம் புதிர்மைகளாலானது. கலாஸ்ஸோ இதைப் பிறகு வந்த ஒரு புத்தகத்தில் நினைவில் நிற்கும் வகையில் கச்சிதமாக கூறியிருக்கிறார்: “தோற்றத்தின் நாடகத்திற்கு முன் தோன்றுவோமா மாட்டோமா என்ற பயம் கலந்த சந்தேக நாடகமொன்று நிகழ்ந்தது”. ஆனால் இப்பரஸ்பரத்திற்கான காரணமென்ன? ஏனெனில் பிரஜாபதியே சப்தரிஷிகளின் (அல்லது ஸ்லோகங்களைக் “கண்டவர்கள்”) நெருக்கிச் சுருக்கும் ஓர் மிகையார்வச் செயலால் உருவானவர். அவர்களோ பிரஜாபதியிலிருந்து எழும் ஏழு பிராண வாயுக்களால் உருவானவர்கள். நேர்க்கோட்டுக் காலத்தின் தர்க்கத்தால் எழும் முரண்பாடுகளை சற்றே புறம் தள்ளிவிட்டோமென்றால் அசத் (வழமையான இல்லாமை, non-being என்ற மேலைய பொருட்படுத்தலைக் காட்டிலும் “இன்னமும் உருக்கொண்டு புலப்படாதது” (unmanifest) என்ற பொருளையே கலாஸ்ஸோ விரும்புகிறார்) தன்னையே எரித்துக் கொண்டு புலப்பட விழைவதாக இதை நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அவர் உருவாக்கிய உலகங்கள் அனைத்துமே தங்களுக்குள்ளேயே ஆழ்ந்து அவரை மறந்துவிடுவதே பிரஜாபதியின் துயர் நாடகம். அடையாளப்படுத்தப்படாத தனிமையில் அவர் வாடி வதங்குகிறார்,

அடையாளத்திற்காக ஏங்கும் “மந்தைகள் துறந்த மேய்ப்பராக” பாதுகாப்புகளற்று மெலிந்து நிற்கும் அவர் தன் கைகால்களையும் கண்களையும் எண்ணெயிட்டுக் கசக்கி கொள்கிறார் (அப்படியே மேக்கப்பை கண்டுபிடிக்கிறார் என்ற வேடிக்கையாக கலாஸ்ஸோ வியாக்கியானம் அளிக்கிறார்). அவரது இச்செய்கையால் கண்கள் வீக்கம் அடைந்து வெளியே விழுந்து விழுகின்றன. சதபத பிராமணம் வீங்கி விழும் அக்கண்ணை (அஸ்வாயத்) குதிரையாக உருவகம் செய்கிறது (அஸ்வா). குதிரையைப் பலி கொடுத்து (அஸ்வமேதா) தேவர்கள் பிரஜாபதியின் கண்ணை அவர் உடலில் மீண்டும் இணைத்து அவரை முழுமை செய்கிறார்கள். இச்செயலை யார் திரும்பச் செய்தாலும் அவர் தன் பழிகளனைத்தையும் தீர்த்து தன்னையே முழுமையாக்கிக் கொள்வார் என்பது ஐதீகம். ஆனால் அந்தக் கண் வெளியே விழுவதற்கான முதற்காரணம் என்ன? ஏனெனில் அது மற்றொரு கண்ணைச் சந்தித்து அதில் தன்னைப் பிரதிபலித்துக் கொள்ள விழைகிறது. இப்போதோ ஒரு பார்வை (குதிரையாய் உருமாறிய கண்ணின் பார்வை) உருவாகிவிட்டது அனால் அது தனக்குப் புறத்தே உள்ளது என்பதை அவர் உணர்கிறார். ஆனால் தன்னை நோக்கும் பார்வை தனக்குள்ளேயே அமைந்திருக்க வேண்டும் என்பதே பிரஜாபதியின் விழைவு – விழைவே இருமைக்கான மூலமாக, நான், என் சுயம் என்ற ஆதார இருமை, தன்னிலை உணர்வின் தொடக்கம். இடாலோ கல்வீனோவின் காஸ்மிகாமிக்ஸ் (Cosmicomics) புத்தகத்தில் வரும், பிரபஞ்சத்தையே ஒரு புள்ளியில் ஒடுக்கிக் கற்பனை செய்யத் துணியும், ஆல் அட் ஒன் பாயிண்ட் கதையை இது நினைவுறுத்தியது. அனைவரும் வெறுக்கும் Z’zu குடும்பத்தில் பிறந்திருந்தாலும் Mrs. Ph(i)nko கருணையும் தயவும் பொலியும் வகையில் இவ்வாறு கூறி அண்டத்துக்கே ஆதாரமான பெரு வெடிப்பிற்கான திட்டமிடாக் காரணியாகிறார்:
“அய்யோ பசங்களா, இன்னம் சிறிது இடம் மட்டும் இருந்திருந்தால், உங்களுக்கெல்லாம் கொஞ்சம் தல்யாடெல்லெ (tagliatelle) செய்து கொடுத்திருப்பேனே! “
இனவிருத்திக்கான விழைவு அவருள் எழுந்தவுடன் பிரஜாபதியின் வாயிலிருந்து அக்னி வெளிவருகிறார். அக்னியே உலகின் முதல் ஃபிராங்கன்ஸ்டைன், தன்னைப் படைத்த பிரஜாபதியைத் தவிர விழுங்குவதற்கு வேறு எதுவுமே இல்லாத முதல் விழுங்கி. விழுங்குவதற்கான அப்பேரவாவை எதிர்கொள்ளும் பிரஜாபதியை பேரச்சமொன்று தழுவி அவரிடமிருந்து ஒரு பிரிவை விளைவிக்கிறது. தன்னிடமிருந்து ஒரு “மகோன்னதத்தை” அவர் புறந்தள்ளுகிறார். இதுவே உலகின் முதல் பெண்மைக்கான ஆதார சுருதி, வாக் (Vac) அல்லது மொழி. விரைவில் தன் மகன் அக்னிக்கு ஏதாவது ஒன்றைத் தான் அளிக்கவில்லையெனில் தன்னையே அவன் விழுங்கிவிடுவான் என்பதை அவர் உணர்ந்தாலும், அளிப்பதற்கு ஏதுமில்லை என்பதையும் அவர் அறிந்திருந்தார். கவலையில் கைகளைக் கசக்குகையில் வேர்வையை உருவாக்கி அதை அக்னிக்கு அளிக்கலாமா என்று யோசிக்கிறார். அப்போது வாக் இடிமுழக்கத்தின் அதிர்வுடன் அதை அளிக்கும்படி அவரை அறிவுறுத்துகிறது. தான்தான் பேசினோம் என்ற சுய உணர்வுடன் அவர் அவ்வறிவுரையை நிறைவேற்றுகிறார்: வாக் என்ற அவரது மகத்துவம் (ஸ்வா, Sva) அவரிடம் பேசியதால் (ஆஹா, aaha) விளைந்த ஒரு செயல். எனவே தான் இன்று வரையிலும் சடங்குகளில் ஸ்வாஹா என்று உச்சாடனம் செய்தபடியே நாம் காணிக்கைகளைத் தீயிலிடுகிறோம். இதுவே குடும்பத் தலைவன் வாழ்நாள் முழுவதும் காலையிலும் மாலையிலும் தீயில் பாலைக் காணிக்கையாக அளிக்க வேண்டிய எளிமையும் ஐதீகமும் இணையும் அன்றாடச் சடங்கான “அக்னிஹோத்ர”த்திற்கான ஆதாரமும்கூட. ஆக, காணிக்கை முதலிலிருந்தே தற்காப்போடும் இருமையோடும் கைகோத்திருந்திருக்கிறது. உலகமும், பலியுமே இதன் விளைவு. பிரஜாபதி உலகைப் படைப்பதற்காக தன் உடலையே காணிக்கையாக்குகிறார், அதற்கு நன்றி செலுத்தும் வகையில், அவரை மீண்டும் முழுமையாக்குவதற்காக உலகம் காவு கொடுக்கிறது. பிரபஞ்சத்தையே இயக்கும் ஒரு மாற்றம் விளைவிக்கும் முறைமையாக, புலப்படுவதைப் புலப்படாததோடு இணைக்கும் பாலமாக நம்மெல்லோரிடத்தேயும் நெய்யப்பட்டிருக்கும் பந்துக்கள் என்ற பிணைப்பை மீள்பிறப்பிக்கும் ஒரு சக்தியாக இங்கு பலி தன்னை முதலிலேயே நிறுவிக் கொள்கிறது.

இந்திய வேத மறைகளிலிருந்து கலாஸ்ஸோ கடைந்தெடுக்கும் சாரம் இதுவே. இதன் மிகத் துணிகரமான மீப்பொருண்ம, வரலாற்றுப் பின் விளைவுகளை, வேதச் சிந்தனையின் மெய்யியல் மகோத்துவத்தில் தொடங்கி, அவற்றிலிருந்து உருவான சமயச் சடங்குகள், வேள்விகள், பலிகள் குறித்த குறியீட்டு விளக்கங்களான பிராமணங்கள், தத்துவ விசாரணைக் களஞ்சியங்களான உபநிடதங்கள் வழியே பகவத் கீதைக்கும், பௌத்தம் வழியே பக்தி பலிக்குப் பதிலியாக உருமாறும் நவீன ஹிந்து மதத்திற்கும் தனக்கே உரித்தான சுவரஸ்யமான கிளைபிரியும் வழியில் வார்த்தெடுக்கிறார். ஸ்டீராய்டுகளால் ஊதிப்பெருத்த ஒரு பக்க அணிமை வித்தகரைப் போல் (bricoleur) அனைத்தையும் அனைத்துடன்: பறவை, குதிரை, மரம், மலை, நீர், நெருப்பு, தெய்வங்கள், வேள்வித்தீ, மீந்திருக்கும் வேள்விச் சாம்பல், தத்துவங்கள், கவிதை… இத்யாதி என்று சகலத்தையும் இணைத்துப் பார்க்கிறார். முன்னொரு காலத்தில் பிரஜாபதி முன்னனுமானித்த பந்துக்கள் என்று எங்கும் வியாபித்திருக்கும் பிணைப்புகளைத் தன் க்ரியா சக்தியைக் காவுகொடுத்து வலுப்படுத்துவது போல் அவர் இதை மிக மூர்க்கமாகவே செய்கிறார். பின்-நவீனத்துவமாக இருப்பினும் அவரது உணர்வுத்திறன் (பின் நவீனத்துவம் என்ற பதத்தை பிரயோகிக்கும் அவசியம் தனக்கு ஏற்பட்டதில்லை என்று அவர் ஒருமுறை பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்) பேகன் (pagan) உலகின் குணாதிசயங்களையே விழைகிறது. முரண்படும் இப்பக்க அணிமையே அவர் புத்தகங்களை சுவாரஸ்யமான வகையில் அறிவைக் கிளர்த்துவனவாக மாற்றுகிறது.
அதைக் காட்டிலும் முக்கியமாக, சகலவிதமான பலிகளின் சடங்கு முறைமைகளின் அறிவியலாய்வு, மீபொருண்ம நுணுக்கங்களையும், காலம்தோறும் அவை உருமாறுவதையும், பலவிதமான உத்திகளை (பதிலி, பரிமாற்றம்) உள்வாங்கியடி தளர்த்திக் கொள்வதையும் அலசிவிட்டு, அதை முற்றிலும் நிராகரிப்பதைப் போல் பாவனை செய்யும் நவீன யுகத்தில் பலியின் இடமென்ன என்பதை மிகத் துணிகரமாக ஆராய்கிறார். அதைப் புறக்கணிப்பதற்காக நாம் மேற்கொள்ளும் அக்கறைமிக்க முயற்சிகளையும் மீறி உற்பத்தி, சோதனை போன்ற செயற்பாடுகள் வழியே நம் அன்றாடத்தில் அது தன்னைத் தந்திரமாக புகுத்திக் கொள்வதற்கான ஆதாரங்களை அகழ்ந்தெடுக்கிறார். இங்கு த ரூயின் ஆஃப் கஷ் என்ற பிற்காலப் புத்தகமொன்றில் அவர் கூறியதையே மேற்கோளாக அளிப்பதே பயனுள்ளதாக இருக்கும்:

“சோதனை (experimentation) என்பது பலியின் ஒரு வகைமையே, என்ன, அதில் பலியின் குற்றவுணர்வு புறந்தள்ளப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். பலிபீடத்தின் குருதி தோய்ந்த இளஞ்சூட்டுக் கற்களால் உயர்த்தப்படும் பலிக்-கூம்பகம் இப்போது விவரிக்க ஏதுமற்ற ஒரு நகரத்து மூலையில் ஒரு அகண்ட கசாப்புக்கொட்டிலாக கிடத்தப்பட்டிருக்கிறது. துண்டிக்கப்பட்ட தவளைகளின் துர்நாற்றம் கவிந்திருக்கும் இடைகழிகளைக் கொண்டிருக்கும், சிகாகோவின் கசாப்புக் கொட்டில்களும், பல்கலை பரிசோதனைக் கூடங்களும், பாலைவனங்களில் உருமறைப்பு செய்யப்பட்டிருக்கும் மின் உற்பத்தி நிலையங்களும், ஒரே சமயக் கோட்பாட்டுக் குழுவின் வெவ்வேறு மையங்களே. ஒரு வன்முறைச் செயலின் தயவாலும், கட்டுப்படுத்தும் திறனை மேன்மேலும் பூரணமாக்க அனைத்தையும் முறைமைகளைக் கொண்டு கட்டமைப்பதற்காக எடுக்கப்படும் முடிவுகளின் நிர்தாட்சண்யத்தாலும் அவை ஆற்றலை விநியோகம் செய்கின்றன. வேள்வித்தீயின் சபிக்கப்பட்ட பகுதி தொழில்நுட்பத்தின் அகண்ட சோதனைக் கழிவுக் குவியலாக உருமாறியிருக்கிறது. அனாமதேயத்தைப் பரிபாலிக்கும் ஒரு அனாமதேயக் கடவுளுக்காக இக்குவியல்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. பலியைப் போலவே இதிலும், எது மீட்க முடியாத அளவிற்கு அழிக்கப்படுகிறதோ, அதுவே வருங்கால வாழ்விற்கான ஆதாரமாக அமைகிறது.”
பண்டைய காலத்தவர்கள் பிரபஞ்சத்தை, கொடுத்தல் வாங்கலுக்கிடையே நிலவும் ஒரு நுண்ணிய சமநிலையாகக் கற்பனை செய்தார்கள். உலகின் ஒரு பகுதியை மனிதன் இறைமைக்குக் காணிக்கையாக அளிக்கிறான். பதிலுக்கு அவ்விறைமையும் உலகின் இதர பகுதிகளில் தன் அலகிலா விளையாட்டுணர்வின் இடையீட்டைக் கட்டுப்படுத்திக் கொள்ளச் சம்மதிக்கிறது, எப்போதுமே தராசு இறைமையின் பக்கமே சாய்ந்திருப்பினும், மனிதன் ஓரளவிற்கேனும் சுதந்திரத்தை போஷிக்க வேண்டுமாயின், புலப்படுவது புலப்படாதது இரண்டிற்குமிடையே பரிமாற்றம் நிகழ்ந்தபடியே இருக்க வேண்டும்.
ஆனால் பிரஜாபதிக்கு நிகழ்ந்ததையும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியையும் குறித்து நான் மேலே தொகுத்தளித்திருப்பது ஒரு பாடாந்தரம் மட்டுமே. ஆனால் வேத ரிஷிக்களுக்கோ அண்டத் தோற்றவியல் என்பதே பல திரிபுருக்களை அனுமதிக்கும் ஒரு இலக்கிய வகைமையே. மற்றொரு அல்லது ஒருகால் (இவ (इव) என்று அவர்கள் அடித்துக் கூறாமல் சாத்தியமாகக் கூறியது போல்) பிற்காலப் பாடாந்திரமொன்றில் தந்தை பிரஜாபதி தன் மகள் உஷஸ் (புலரி) புலர்வதில் லயித்து அவளை விழைகிறார். இதனால் அருவருப்படைந்த கடவுள்கள் தங்கள் ஆழங்களிலிருந்து மிகக் கொடூரமான உருவங்களை ஒன்று திரட்டி ருத்திரனைப் படைத்து பிரஜாபதியை நோக்கி அம்பெய்தும்படி அவனை ஏவுகிறார்கள். உஷஸை நோக்கி பிரஜாபதி செல்கையில் (இப்போது இருவரும் கலைமானாக உருமாறிவிட்டார்கள்) “பூரணம் தன் முழுமையில் ஒரு பிளவு உண்டாவதை உணர்கிறது, தந்தை மகள் உடல்களுக்கிடையே விரியும் ஒரு வெற்றிடத்தை. அதே வெற்றிடத்தில் ருத்திரனின் அம்பும் நடுங்கியபடி காத்திருக்கிறது. சற்று நேரத்தில் அது பிரஜாபதியை நோக்கி எய்யப்படும். அந்த கணப் பொழுது தாமதத்தில் காலம் பிறக்கிறது, அப்போதைய காலமும் இனி வரவிருக்கும் காலமனைத்தும். அம்பு வெற்றிடத்தை ஒரு காயமாக மாற்றுகிறது. ஏன் என்று ஒருவர் கேட்கக்கூடும். ஏனெனில் அனைத்துமே மனஸாக இருக்கையில், எண்ணமே செயலாகவும் இருந்தது. ஆனால் இருமை தோன்றியபின், அதாவது மனத்திற்கு வெளியே ஏதோவொன்று தோன்றியபின், எண்ணத்துக்கும் செயலுக்கும் இடையே காலம் தன்னைப் புகுத்திக் கொள்கிறது (இதைத்தான் டி.எஸ்.எலியட்டும் தன் பிரசித்தி பெற்ற ஹாலோ மென் (Hollow Men) கவிதையில் “எண்ணத்திற்கும் நிதர்சனத்திற்குமிடையே / அசைவிற்கும் செய்லிற்குமிடையே/ நிழல் வீழ்கிறது” என்று யாப்பித்தார்). கலாஸ்ஸோவின் எண்ணக் கோர்வையின் முடிவுகள் மிக அருமையான சந்த நயத்துடன் தொனிப்பவை; “அதன்பின், பிரஜாபதியின் கவட்டையில் பிளவுற்றிருக்கும் திறந்த காயத்தைப் போல், இன்னமும் திறந்திருக்கும் அப்பிளவினூடே எண்ணத்தாலானதொரு பிரபஞ்சத்திலிருந்து நாம் முற்றிலும் விடைபெறுகிறோம்.”
டைடன் க்ரோனஸ் (Titan Cronus, அதாவது காலத்தின் தந்தை) யுரேனஸை காயடித்தது, அக்காயத்திலிருந்து புவியில் சிந்திய ரத்தத்திலிருந்து எரின்யெஸ் அல்லது மூன்று பழிவாங்கும் அணங்குகள் (Furies) பிறந்த கதையையும் இங்கு நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் வேதகாலச் சிந்தனையில் கட்டற்ற ஒவ்வொரு கதையும் சடங்கின் வடிவியலாக உருமாற்றப்படுகிறது. ருத்திரனின் அம்பு பிரஜாபதியின் கவட்டையில் புதையும் தருணத்தில்தான் விலங்கின் காயமுறுதல் முதன்முதலாக உலகில் நிகழ்கிறது. கலைமானே காயமுற்ற முதல் உயிர். எனவே அதுவே முதலில் வேட்டையாடப்பட்டு பலி கொடுக்கப்படுகிறது. இரைகொல்லிகளுக்கு முதலில் இரையாக இருந்த காலத்தில் தங்களைக் கலைமான்களாக அர்த்தப்படுத்திக் கொண்டவர்கள், இப்போது தொழில்நுட்பத்தின் தயவால் இரைகொல்லியாகிவிட்டவர்கள், கலைமான்களைத்தான் முதலில் வேட்டையாடுகிறார்கள். கலைமான்களைக் கொல்கையில் ஏதோவொரு விதத்தில் தங்களையும் கொல்கிறார்கள் என்பதால், குற்றவுணர்வு பிறக்கிறது. இதனால்தான் சடங்கின் இலக்கணவாதிகள், கருப்புக் கலைமானின் சருமத்தை பலியின் அத்தியாவசியப் பொருளாக நிறுவினார்கள். இங்கு நாம் உலகின் முதல் பலி என்பது பிரஜாபதியின் தற்கொலைதான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த ஆதிச்சடங்கில் காவுகொடுப்பவனே காவு கொடுக்கப்பட்டதுமாகிறான். ஆனால் இச்செயலோ திரும்பிச் செய்யப்பட மாட்டாது. திரும்பிச் செய்தால் உலகம் அழிந்துவிடும் என்பதால், பதிலி என்ற கருத்து உருக்கொள்கிறது. நான் அல்லாது என்னைப் போல் மற்றொன்று.

ஆக, கதைகள் போய்க்கொண்டே இருக்கின்றன திரிபுருக்களை அதிகரித்தபடியே, ஒவ்வொரு திரிபுருவும் உலகத்தின் வேறொரு பரிமாணத்தை விளக்குவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது போல். கலாஸ்ஸொவிற்கோ “பிரஜாபதியைப் பற்றிய கதைகள் இவ்வளவு செறிவாக வேறுபட்டிருக்கவில்லை என்றால் உலகம் வீரியம் குன்றி உருமாற்றங்களுக்கு அதிகம் இடமளிக்காத வகையில் மிகவுமே வறிதாயிருக்கும். மூலங்களுக்கான சாத்தியங்கள் அதிகரிக்க அதிகரிக்க அனைத்துமே மேலும் மேலும் எளிதில் ஆழம் காணமுடியாத ஊடுபாவுத்தன்மையுடனும், அடர்த்தியுடனும் பொலியும்.” கதைகள் மாறுகையில், இறைமைகளும், இலக்கிய வகைமைகளும் மாறுகின்றன பிரஜாபதி பிரம்மாவாகிறார். ருத்திரன் சிவனாகிறார், ரிக்வேதத்தின் சுருக்கமாகச் சுட்டும் மறைமையிலிருந்தும், சதபத பிராமணங்களின் சடுதியில் திசைமாறும் கதையாடல்களிலிருந்தும் புராணங்களின் “மூர்க்கமான மிகைமைக்கு” பயணிக்கிறோம். அதே சமயத்தில் மிகவுமே கவனமாக இருக்க வேண்டிய சடங்காற்றுபவரிடமிருந்து (ஏனெனில் சடங்கின் பகுதியாக அவர் புதிர்களின் முடிச்சவிழ்க்க வேண்டும், தவறினால் அவரது தலை வெடித்துச் சிதறக்கூடும்) அதிகரித்துச் செல்லும் கதைகளைச் செவிமடுத்தே பலனை அதிகரித்துக் கொள்ளலாம் என்று ஐதீகமாகிவிட்ட பக்தி யுகத்திற்கும் நாம் பயணிக்கிறோம். மனஸின் படைத்தல் உலகிலிருந்து புணர்ச்சி வழியே அதிகரிக்கும் ஓர் உலகிற்கும், இன்பத்தைச் சுகித்தறியும் ஓர் உலகிற்கும் (இன்பம் எதற்காக? உலகின் மிளிர்வைத் தக்கவைப்பதற்காக), சந்தேகமில்லாமல் மரணத்தை அஞ்சும் ஓர் உலகிற்கும் (ம்ரித்யூ / யமன்).
தக்ஷன் (அதாவது செயல்திறன்மிக்கவன்) பிரம்மாவின் பிரதிநிதியாக புணர்ச்சி வழி படைத்தல் என்ற கடினமான காரியத்திற்காகப் பொறுப்பேற்கிறான். இதில் தொடங்கி நமக்கு தெரிந்த, தாத்தா பாட்டி மடிகளில் படுத்தபடியே உள்வாங்கிக் கொண்ட, சதி தக்ஷன் யாகத்தில் எரிந்து சாம்பலாகியது போன்ற எண்ணற்ற கதைகள். தொடக்கத்தின் புதிர்மையான மறைமையிலிருந்து இப்போது நாம் ஏ.பி. நாகராஜனின் திரைப்படச் சங்கதிகளுக்கு வந்துவிட்டோம்.
க புத்தகத்தில் அருமையான ஒரு பகுதி வருகிறது; அதில் குதிரையைப் பலி கொடுக்கும் அஸ்வமேத யாகத்திலிருந்து கதையாடலின் தொடக்கம் யோசித்துப் பார்க்கப்படுகிறது. ஆயத்தச் சடங்குகள் முடிந்துவிட்ட நிலையில் யாகத்தின் அடுத்த சடங்காக குதிரை கட்டவிழ்க்கப்பட்டு, ஒரு வருடத்திற்குத் தங்குதடையின்றி உலகில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக அலைந்து திரிய அனுமதிக்கப்படுகிறது. இவ்விடைவெளியில், அங்கு பண்ணைக் கொட்டிலில்(!) காவுகொடுக்கும் அரசனும் அவனது புரோகிதர்களும் பலிபீடத்தைச் சுற்றி அமர்ந்தபடி ஹோத்ரர் (hotr, அவிசிடுபவன்) கூறும் கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பண்டைய அரசர்களைப் பற்றிய கதைச் சுழற்சிகள், பத்து நாட்களின் முப்பத்தியாறு முறை என்ற விகிதத்தில் மீண்டும் மீண்டும் கூறப்படும் கதைகள். பரிப்லவா (pariplava) என அழைக்கப்பட்ட, மீண்டும் மீண்டும் முதலிலிருந்தே தொடங்கும் கதைகள். குதிரையின் மீள்வருகைக்காகக் காத்திருக்கையில் கதையாடல் தொடங்குகிறது, அதைப் போலவே இதுவும் அலைந்து திரிகிறது. அலையும் குதிரையுடன் யாகத்தின் தொடர்பு அறுந்து விடாமல் பாதுகாப்பதற்கான ஒரு முறைமையே இது. குதிரையைப் பற்றிய கற்பனை காவியம் (romance of the horse) கிளைத்துப் பிரியும் இக்கதையாடல்களுக்கெல்லாம் ஒரு பொதுச் சட்டகமாக அமைகிறது; கதைகளின் கதை, எவருமே கூறாதது. குதிரையின் ரகசியச் சிந்தனையே கதையாடல். ஒருகால் மகாபாரதத்தித்திற்கே இவை உருமாதிரிகளாக இருந்திருக்கலாமோ என்று கலாஸ்ஸோ யூகிக்கிறார்.
க புத்தகத்தின் மிக நீளமான எட்டாவது அத்தியாயம் சப்தரிஷிகளின் வட்டமேஜை கலந்துரையாடலைப் போல் அமைக்கப்பட்டிருக்கிறது: விஸ்வாமித்ரர், ஜமதக்னி, அத்ரி, வசிஷ்டர், கவுதமர், பரத்வாஜர், கஷ்யபர் இவர்களுடன் விருந்துரையாடல்காரர்களாக அந்த சாசுவத இடைத்தரகரான நாரதரும் பிரஹதாரண்யக உபநிடதத்தின் ஈடிணையற்ற ஞானியான யாக்ஞவல்க்யரும். மானுட இருப்புநிலை, தன்நிலையுணர்வு, அறிவாய்வியல் போன்றவற்றின் தொடக்கம் குறித்த மிக மறைமையான உரையாடலது. ரிஷி என்ற பதத்திற்கு “முனைப்பு, வெப்பத்தை உருவாக்கும் உராய்வு” என்று பல அர்த்தங்களுண்டு. வெப்பம் தவத்தின் உக்கிரத்திலிருந்து எழுகிறது, மனது மனத்தின் மீது செய்லாற்றுவதால். பெண்ணின் கருப்பை வழியே பிறக்காத அவர்களுக்கு வாழ்வதென்பதே “மனத்தில் பயணிப்பது” தான், சப்தரிஷி மண்டலம், பூமி இவை இரண்டிற்குமிடையே சதா பயணித்துக் கொண்டிருந்தது போல் அவர்கள் மனஸில் பயணித்தார்கள். அவர்களுக்கு உலகமும் இயற்கையும் அரிதான நிகழ்வுகள், மனத்தின் வேறுபாடுகள்.
சில பக்கங்களுக்குப் பின் கலந்துரையாடல் திடீரென்று முதல் இந்தோ-ஆரியர்கள் குறித்த ஒரு அற்புதமான விவரணைக்கு மாறுகிறது. பண்டைய காலத்தோரில் அவர்கள் மட்டுமே காலத்தால் அழிவுறாத கற்கோயில்களையோ, அரண்மனைகளையோ, சிலைகளையோ விட்டுச் செல்லவில்லை. மொழியின் மூலம் மட்டுமே அவர்கள் வருங்காலத்திற்குத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அவர்களை அடையாளப்படுத்தும் வேதா என்ற சொல் (வேத காலத்து, Vedic) அறிவு / ஞானம் என்று பொருள்படும். இவர்கள் ஞானத்தைக் “கண்”டறிந்து (seers, தீர்க்கதரிசிகள்) காதால் கேட்டறியக்கூடிய வார்த்தைகளில் (சுருதி) மனிதனல்லாத விழிப்புணர்வொன்றைக் (Apauruṣeyā, அபௌருஷேய) கடத்த முயன்றார்கள். மூர்க்கமான எளிமையைக் கடைப்பிடித்த அவர்களின் வாழ்வுகள் எப்போதுமே மாறாமல், மீண்டும் மீண்டும் செய்யப்படும் சில அடிப்படைகளாலானவை. அந்த அடிப்படைக் கூறுகளும் அவற்றின் வேறுபாடுகள் அளித்த முடிவிலா சாத்தியங்களும் அவர்களுக்குப் போதுமானவையாக இருந்தன.
அவற்றை அதிகரிக்க அவர்கள் முயலவில்லை. இறையாண்மையைப் பற்றி அவ்வளவு சிந்தித்தவர்கள் அதை நடைமுறையில் நிலைநாட்டத் துணியவில்லை. படிப்படியாகத் துறந்து செல்வதே அவர்கள் வரலாறு. இறையாண்மையின் அனைத்து நுணுக்கங்களையும் மனத்தின் வெப்பத்தில் கண்டறிந்து கடந்தவர்கள் தங்கள் மீது முதலில் படையெடுத்தவர்களிடத்தே ஆரவாரமின்றி அதைப் பறிகொடுத்தார்கள். புகழ்மிகு பிரதாபங்களைக் காட்டிலும் இலக்கணத்தில் ஆர்வம் கொண்டவர்கள், “ஒளி ஊடுருவிச் செல்லும்” அவர்களது மொழியின் ஒலியியலையும் சொல்லியலையும் ஆராய்ந்து அதன் உச்சத்தை பாணினியின் ஆக்கவியல் இலக்கணத்தில் எட்டினார்கள். இப்படியே கதைத்துக் கொண்டு செல்கையில் உரையாடல் திடீரென்று மீண்டும் பிராஹ்மன், தபஸ், சிந்தனையின் முதன்மை போன்ற கருப்பொருள்களுக்குத் திரும்புகிறது: சிந்தனை எவ்வளவு அபாயகரமானதென்றும் (யாக்ஞவல்க்யர்), “நாம் அறிந்ததே நாம்; எதைச் சிந்திக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம்” (வசிஷ்டர்) என்ற சுவாரஸ்யமான மேற்கோள் களஞ்சியமாக உரையாடல் தொடர்கிறது. பெண் இறைமையியலாளர்களுள் தலைசிறந்தவரும், யாக்ஞவல்க்யருடனேயே மோதி விவாதிக்கும் திறமையும் ஆற்றலும் கொண்ட அபாரமான கார்கியையும் நாம் இப்பகுதியில் சந்திக்கிறோம். “தெரிந்தவற்றிலிருந்தே தொடங்கு” என்பதற்கு இவரே சிறந்த முன்மாதிரி. அவர் ஒரு நெசவாளரும்கூட. அவர் யாக்ஞவல்க்யரிடம் கேட்கும் முதல் கேள்வியே மிகப் பொருத்தமாக நெசவுப் பதங்களாலானது: “நீரின் குறுக்கிழைகளால் அனைத்துமே நெய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், நீர் எதன் குறுக்கிழையால் நெய்யப்பட்டிருக்கிறது?”

கலாஸ்ஸோவின் வேதம் குறித்த எழுத்தில், கதைகள், சுவாரஸ்யமான ஊகங்கள், பெரும் தத்துவ விசாரங்கள் மண்டிக் கிடக்கினறன. அவற்றில் பெரும்பாலானவை அவ்வளவு அருமையாக இருப்பதால் அவற்றிலிருந்து சிறப்புத் தேர்வு செய்வதென்பது கடினமான காரியமே. கந்தர்வர்கள், சோமம், விருத்ரனை இந்திரன் மாய்ப்பது, ஊர்வசி- புரூரவஸுவின் காதல், கிருஷ்ணரின் தொன்மம், பிரிய கோபியர்களுடன் அவர் நிகழ்த்தும் ராஸலீலைகள் இப்படிப் பல தொன்மக் கதைகள் இப்புத்தகத்தில் மிக நுட்பமாக மீள்கூறப்பட்டிருக்கின்றன. மகாபாரதத்தின் நீளமான சுருக்கத்திற்குப் பின் (வேத மறைமைச் சிந்தனையை இன்னமும் தக்கவைத்துக் கொள்ள முடியாத கிருஷ்ணனின் காலம். மனிதர்கள் ஊடுபாவும் கதைகளுக்காக ஏங்கும் காலம், எனவே இலக்கியம் தொடங்கிய காலமும்கூட) மரபிலிருந்து அதன் சுருக்கி எளிமைப்படுத்தப்பட்ட விமர்சனமாக எழும் புத்தருடன் நாம் நவீன உலகில் காலடி எடுத்து வைக்கிறோம். புதியவை தோன்றுவதற்கு அடிமண்ணாய் விளங்கும் எச்சங்களை முற்றிலும் அழித்தொழிக்க விழையும் புத்தரின் வருகையுடன் பலி என்ற புராதன மரபு ஆட்டம் காண்கிறது (மீள்பிறப்பை அல்லது எஞ்சியிருக்கும் வாழ்வுகளை ஒழித்துக்கட்டும் நிர்வாணா.) வேத ரிஷிக்கு பந்துக்களே, அதாவது அனைத்தும் ஒன்றோடொன்று சார்ந்திருப்பதால் உருவாகும் தொடர்புகளே, பிரதானமானவை. அண்டத்தின் மீது வேயப்பட்டிருக்கும் பலியின் வலை, அதன் உறுப்புகளிடையே நிலவும் பரிவையும் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது. ஆனால் புத்தருக்கோ பந்து என்ற வலை ஒரு சபிக்கப்பட்ட நிதர்சனம். இழை இழையாக அவிழ்த்து அவ்வலையிலிருந்து நழுவி நிர்வாணமெனும் ஆனந்த நிலையை அடைவதே அவர் இலக்கு. புத்தர் “ஒவ்வொரு செயலையும் ஒரு செயல்வரிசையைக் கொண்டு, ஒவ்வொரு வாழ்வையும் ஓர் வாழ்க்கைத் தொடரைக் கொண்டு, ஒவ்வொரு இறப்பையும் ஓர் மரண வரிசையைக் கொண்டு நீர்க்கச் செய்கிறார். அதே சமயத்தில் அறிவாய்வியல் முறைமைகளைக் கொண்டு சுயத்தை அடியறுத்து அதை வழமையான வழியில் கூட்டித் தொகுக்கக்கூடிய வரிசை உறுப்புகளாக சுருக்குகிறார். எது சுருக்கப்படுகிறதோ அது இறுதியில் அர்த்தங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது. புத்தரின் பூரண நிர்வாணம் ஒரு விதத்தில் சூன்யமும்கூட. தொகுதிகளை அதன் உறுப்புப் பகுதிகளுக்கு சுருக்குவதால்தான் “உலர்ந்த, எச்சரிக்கையான, பகுத்தாயும் துறவி” என்ற அடைமொழியை கலாஸ்ஸோ அவருக்கு அளிக்கிறார். அவர்களை அப்புறப்படுத்த முயலாமலேயே இறைமைகளின் ஆற்றலை வடிகட்டி உறிஞ்சிவிடுவதாலேயே அவர் நவீன உலகிற்கு வழிவகுக்கிறார்.
அஸ்வமேதக் குதிரையைப் போல் மனம் போன போக்கில் இக் கட்டுரை அலைந்து திரிந்திருப்பதை இப்போதுதான் உணர்கிறேன். ஒருகால் (இவ) அக்குதிரையைப் பலிபீடத்திற்கு திரும்பி அழைத்துவந்து அதை முடிப்பதற்கான தருணம் வந்துவிட்டதோ என்னவோ. நான் முன்பு கூறியது போல் கலாஸ்ஸோவை வாசிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆதர்ச வாசகரை அனுமானித்து அவரிடம் பல கடினமான கோரிக்கைகளை இவர் வைப்பதால், சில சமயங்களில் இவரது கருக்கான சில முடிபுகள், பின்புலத்தையும் தொடர்புறுத்தும் கண்ணிகளையும் நாம் அறிந்திராததால், முந்தியவற்றுடன் தொடர்பற்ற non-sequiturகள் போல் நமக்குத் தோன்றுகின்றன. ஆனால் கலாஸ்ஸோவை வாசிப்பவர் ஒவ்வொருவரும் அவரது அறிவுச் சேகரிப்பால் எரியூட்டப்பட்ட மனத்தின் தகிப்பிற்கு அருகே அமர்ந்திருக்கும் அளப்பரிய சுகத்தை அனுபவிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. ரிக் வேத ஸலோகம் 1.164இன் அருமையான அந்த இரு பறவைகளுடன் முடித்துக் கொள்கிறேன்:
ஒரே அரச மரத்தில் புகலிடம் பேணி அமர்ந்திருக்கும், நட்பின் இழைகளால் பிணைக்கப்பட்ட, அழகிய இறகுகள் கொண்ட இரு பறவைகள்
ஒன்று அம்மரத்தின் இன்கடுங்கனியை உண்டபடி, மற்றொன்றோ எதையுமே உண்ணாது அதைப் பார்த்தபடி…
இருமையை உருவகிக்கும் அழகான கூட்டுப் படிமம், நான் / சுயம், ஜீவாத்மா / பரமாத்மா என்று பல அர்த்தங்களுடன் விரியும் படிமம். வியனுலகில் நலங்களைப் பொழியும் அந்த தாராள மரத்தின் கிளைகளில், தன்னையே உற்றிருக்கும் பிரஜாபதியை உற்றிருக்கும் கலாஸோவைக் கற்பனை செய்து பார்க்கிறேன். ஒருகால் பிரஜாபதியே அடோர்னோவை போல் இப்படி யோசித்திருப்பாரோ?
சுட்டிப் பயல், காலத்தின் தொடக்கத்திலிருந்து நான் நெய்த அத்தனை பந்துக்களையும் இவன் அறிந்திருக்கிறான். ஏன், நான் வருங்காலத்தில் வேய நினைத்திருப்பதையும் கூட!
“க”லாஸ் ஓ!

நம்பி கிருஷ்ணன், March 2022
மூலநூல்கள் / மேலும் படிக்க:
Calasso, Roberto, Ka, Vintage 1999
Calasso, Roberto, The Ruin of Kasch, Belknap Press 1994
Calasso, Roberto, Ardor, Farrar, Straus and Giroux 2016
Hughes, Ted, Tales from Ovid, Farrar, Straus and Giroux 1999