வீடு

முன்றெப்பொழுதும் காணாத கனா ஒன்று நேற்று கண்டேன். நான் இளமையில் வசித்த எங்கள் சொந்த வீடு என்னிடம் கேள்வி கேட்டது.

பொதுவாக வீடுகளை பற்றி எனக்கு வரும் கனவுகளில் சில சுவாரசியமான கால முரண்பாடுகள். வீடோ பழையது, கதாபாத்திரங்களோ பழையதும் புதியதுமாய். கலர் டிவியே பார்த்திராத எனது தாத்தா ஐ ஃபோனில் PUBG ஆடிக்கொண்டிருப்பார். அவரை பார்த்தே இராத என் குழந்தைகள் அவரோடு ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருப்பர். இக்கால அண்டை வீட்டு பென் எங்கள் புழக்கடை வாவியில் தண்ணி இறைத்துக்கொண்டிருப்பார். இது போல.

மற்றொரு வகை கனவும் வருவதுண்டு. இந்த வகை கனவில் வருவன விதவிதமான வீடுகள், எவையுமே முன்பின் பார்த்திராதவை. வீட்டின் ஒரு பகுதி மட்டும் திறக்கப்படாமலேயே இருக்கும். அந்த பகுதியில் அனைத்து சாமான்களும் புத்தம் புதிதாய்.

நாங்கள் சிறுவயதில் வசித்தது ஒரு ஒண்டுகுடித்தன வீடு – அரதப் பழையது. இரு தெருவிடையே நீண்டது. 

மூன்று அழகான வளைவுகள் கொண்ட காம்பவுண்ட் சுவர் — ரொம்ப உயரம் இல்லை. அதை ஒட்டி ‘ட’ வடிவிலான திண்ணை. திண்ணையை எல்லையாய் கொண்ட சிமெண்ட் தரையிலான வெராண்டா, அதில் தான் எங்கள் கிரிக்கெட். அப்புறம் தான் வாசப்படியே. பச்சை நிறத்தில், நீட்டுப் போக்கில் கம்பி வைத்த இரு கதவுகள் – கிரிக்கெட் பந்து பட்டே பல இடங்களில் உண்டை வாங்கி, தகரத்தால் கவசம் அணிந்தவையாய். வீட்டின் முன் சுவரில் தான் ஸ்டம்புகள் வரைந்திருப்போம். முதல் அறை முதலில் அப்பாவின் அலுவலக அறையாய் இருந்து, பின் எங்கள் படிக்கும் அறை ஆயிற்று. அதில் தான் ஆண் பிள்ளைகள் படுப்போம். நான் சாப்பிடும் பொழுதே முக்கால்வாசி தூங்கிவிடுவேனாம். அப்பா தான் தூக்கி இங்கே படுக்க வைப்பார். நான் பன்னிரண்டாவது படிக்கும் பொழுது கூட என்னை பத்து மணி வரைக்குமாவது முழிக்க வைக்க அண்ணா ஆப்பிள் எல்லாம் லஞ்சம் தந்திருக்கிரார். வெகு நேரம் கண் விழித்து படித்ததெல்லாம் ரொம்ப சொற்பம். 

அதிலிருந்து நுழைந்தால் அடுத்த அறையில்  —  ஒரு கட்டில் மற்றும் டிவி பார்க்க, அனைவரும் உட்கார்ந்து சாப்பிட கொஞ்சம் இடம். இதற்கு மேலே ஒரு உத்தரம். அது வழியே கொஞ்சமாய் வரும் வெளிச்சம் தான் இயற்கை வெளிச்சமே. வேறு எந்த சன்னலே இல்லாத வீடு அது. 

அதைத் தாண்டி உள்ளே போனால் பூஜை மற்றும் ஸ்டோர் ரூம். பின் சமையல் அறை. அதையும் தாண்டி போனால் சதுரமான முற்றம். அங்கு தான் எல்லா குடித்தனங்களுக்குமான கிணறு. அதற்கு பக்கத்திலேயே குளியல் அறை. அந்த அறைக்குள் வீட்டு ஓனர் வீட்டிற்கு தண்ணி supply செய்யும் மோட்டார். அதன் சத்தமே பூதாகரமாய் இருக்கும். சமையல் அறைக்கும் முற்றத்துக்கும் இடையே எப்பொழுதும் பூட்டப் பட்டிருக்கும் அறை — அதில் என்னவோ இருக்கும், ஆனால் என்னவென்று கடைசி வரை பார்த்தது இல்லை. 

இந்த முற்றம் வரை எங்கள் குடித்தனப் பகுதி. அதற்கு வெளியாய் தான் எல்லோருக்குமான கழிவறை. முற்றத்தைச் சுற்றியிருக்கும் சுவரெல்லாம் பெயர்ந்து போயிருக்கும். பின் வாசலுக்கு மேலே சுவரிலேயே பப்பாளி மரம் எல்லாம் வளர்நதிருக்கும். தூங்கப் போகும் முன் எலிகள் வராமலிருக்க பின் வாசல் கதவின் கீழ் செங்கற்களை வைத்து அண்டை கொடுப்பது அப்பாவின் இரவு நேர ritualகளில் ஒன்று. அப்பாவில் தலை மாட்டில் டார்ச் லைட் எப்போதும் இருக்கும். அமெரிக்கா வரும் பொழுது கூடவே வைத்துக் கொண்டிருப்பார். இப்பொழுது அவ்வப்பொழுது என் மகனும்.

பின் வாசலைத் தாண்டிப் போனால் இன்னும் நிறைய இடம். வீட்டு ஓனர் வளர்த்த நந்தினி என்ற பெரிய பசு மாடு கட்டப்பட்டிருக்கும். கிட்டத்தில் போனாலேயே முட்ட வரும், எனக்கெல்லாம் ரொம்ப பயம். அதைத் தாண்டி போனால் எங்கள் ஊரின் ஒரே ஜிம் இருந்தது. நடத்திக் கொண்டிருந்தவர் மாஸ்டர் ரத்தினம். வெறும் நாலு சுவர்கள், ஒரு கூரை, ஒரு குண்டு பல்பு, நிறைய கர்லா கட்டைகள், டம்ப் பெல்கள், சில பார்பெல்கள். சுவற்றில் அர்னால்ட் ஸ்வார்சுநேகர், ஆக்ஷன் கிங் அர்ஜூன், மற்றும் மாஸ்டர் ரத்தினம்.

மேலும் நான் படித்த பள்ளியின் ஒரு பகுதியும், பள்ளியில் ஆயாவாய் வேலை பார்த்த சுசீலா அக்காவின் குடிசையும். அந்த பகுதியில் இரண்டாவது வரையிலான வகுப்புகள் நடந்துக் கொண்டிருந்தன. அதையும் தாண்டிப் போனால் அடுத்த தெருவே வந்து விடும். 

பின்னர் நாங்கள் சொந்தமாய் கட்டிய வீட்டைப் பற்றி எவ்வளவோ நினைவுகள். வீட்டின் அளவுகள் சரியாய் நினைவிலில்லை. வடக்கே பார்த்த வீடு. ஆனால், மொத்தமாய் 2400 சதுர அடியிலான இடத்தில் முன்னே ஒரு பத்தடி, பின்னே ஒரு இருபது அடி, மேலும் மேற்கு பக்கமும் நிறையவும் இடம் விட்டு கட்டப் பட்டிருந்தது.

வீடு ஒரு நீள் சதுரம்; அகலத்தை விட நீளம் சற்றே அதிகம். இடப்பக்கம் ஒரு போர்டிகோ, முன் வாசல். நுழைந்தால் ஹால். அதற்குப்பின் டைனிங்க் ரூம். வலது பக்கம் படுக்கையறை, அதற்குப்பின் பூஜை அறை, அப்புறம் சமையல் அறை. வீட்டிற்கு பின் புறம் தான் குளியல் அறை, கழிப்பிடம், மற்றும் கிணறு.

புதுமனை புகு விழா கோலாகலமாய் நடந்தது. பந்தியில் வேகமாய் தீர்ந்து போன போண்டா, களைப்பில் பரணில் போட்ட தூக்கம், முதன்முதலாக மண்வெட்டி பிடித்து வெட்டிய கால்வாய், இவையாவும் மனதிலே மூடுபனியில் கண்ணாமூச்சியாடும் சியாட்டல் ஸ்பேஸ் நீடல் கோபுரமாய்.

வீடு முழுவதும் சிமெண்ட் தரை தான். வீடு குடிபுகுந்த பொழுதில் வெளிப்புறம் முழுவதும் நிறைவடையவில்லை. இரண்டொரு வருடம் கழித்து தான் வெளியே பெயிண்ட் அடித்தோம். சில வருடங்களுக்குப் பின்னர் காம்பவுண்ட் சுவரும். அதுவரை செடிகளே வேலியாய்.

முதல் இரண்டு மூன்று வருடம் வெயில் காலத்தில் கிணறு சுத்தமாய் வற்றி விடும். பக்கத்தில் இருந்த அரிசி மில்லில் இருந்து தான் குடம் குடமாய் தண்ணீர் எடுத்து வருவோம். அண்ணா குடத்தை எல்லாம் ‘quantum packets of energy’ என்று ஓட்டுவார். கிணற்றை ஆழப்படுத்த வெடி வைக்கப்போய் அண்டை வீட்டாருடன் பெரிய தகராறனதெல்லாம் பெருங்கதை. அப்புறம் தானாகவே சரியாயின கிணறும் சண்டையும். 

முன் பக்கம், வீட்டின் வலப்புறம் சில செடிகள் நட்டோம்  —  ஜாதி மல்லி, செண்டு மல்லி, மற்றும் ரோஜா. மல்லிக்கொடி மேல்மாடி வரை வளர்ந்தது, அம்மாவின் பூஜைக்கு பூக்கள் தந்த படி. செண்டு மல்லியினால் பூக்களை விட எறும்புக்கடிகள் தான் அதிகம்.

இடப்பக்கம் ஒரு கொய்யா மரமும். அது பெரிதான பின் போவோர் வருவோர் தெருவிலிருந்தே பழம் பறித்துக் கொள்வர். கொய்யாவிற்குப் பக்கத்திலேயே மேல்மாடிக்குப் படிகள்.

பின்புறமும் மேற்குப்பக்கமும் தான் எத்தனை மரம், செடி, கொடிகள். மரங்களில் மா, பலா, வாழை, தென்னை, முருங்கை, கொய்யா. மா மரத்திற்கு கீழே சின்னதாய் துளசி மாடம். செடி, கொடிகளில்  — அவரை, தக்காளி, வெண்டை, புடலை. வீடு குடி புகுந்த வருடம் அவரைக் கொடியே பெரிய வேலி மாதிரி வளர்ந்தது. தக்காளி கிலோக்கிலோவாய்க் காய்த்தது.

கத்தரி மற்றும் வரவே இல்லை. அது மாதிரி மா, பலா, தென்னையும் அவ்வளவாய் காய்க்கவே இல்லை. கொரோனாக்கு முன்னர் ஒருமுறை அந்த வீட்டைப் பார்த்து வந்தேன் – எவ்வளவு மாங்காய்கள்! தென்னையும் பலாவும் நன்றாக காய்ப்பதாய் சொன்னார்கள். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் — மரம் நடச் சிறந்த நேரம் இருபது வருடங்களுக்கு முந்தி. இரண்டாவது சிறந்த நேரம் என்றால் அது இப்போது.

அந்த வீடு பெருமையாய் இருந்ததே ஒழிய அன்றாட வாழ்க்கைக்கு நிறையவே கஷ்டம். எது வேண்டுமானாலும் 2–3 கிலோ மீட்டர் தள்ளி உள்ள டவுனிற்குத்தான் போய் வாங்க வேண்டும். அம்மா சரியாக லிஸ்ட் போட்டு அனுப்புவார், எனக்கு நினைவறிந்து தவறியதே இல்லை. ஒரே ஒரு முறை மட்டும் டவுன் வரை திரும்பப் போக வேண்டியிருந்ததாக அப்பா மட்டும் சொன்னார், அமெரிக்கா எல்லாம் வந்த பிறகு.

அங்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சுவாரசியம். கிணறு விசயத்தில் சண்டை போட்ட அண்டை வீட்டுக்காரர் இரண்டு மாடிகள் எழுப்பி வாடக்கைக்கு விட்டிருந்தார். ஒரு வீட்டிலோ முழுமையாய் கட்டாமல் ஓரிரண்டு அறைகளிலேயே இருந்தனர். வேறொரு வீட்டில் புது மனை புகாததால் சமையல் மட்டும் வீட்டிற்கு வெளியே. இந்த குடியிருப்பில் முதன்முதலாய் வீடு கட்டியவர் வீட்டில் கோபர் காஸ். இது மாதிரி.

ஒருமுறை இருவீட்டாரிடையே பலத்த சண்டை, தெருவிலிறங்கி. இருவருமே ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தும் முகங்கொடுத்து பேசாதவர். அது மாதிரி சண்டை இங்கே ஒருமுறை ஹோம் ஓனர் சங்கத்திலும் பார்த்தேன். எங்கே சென்றாலும் மனிதன் மனிதன் தான்!

பல வருடம் கழித்து, நான் கல்லூரியில் படிக்கும் பொழுது தான் காம்பவுண்ட் சுவர், மாடிப்படிகளுக்கு கூஜா வைத்த தடுப்புச் சுவர் எல்லாம் கட்டினோம். அப்புறம் போர் போட்டு, பைப்பு எல்லாம். நாங்கள் வளர வளர, ஏரியாவும் வளர்ந்தது. சன் டிவியும் கேபிளும் வந்தன. தொலைபேசி தொடர்பு வரத்தான் குட்டிக்கரணம் போட வேண்டியிருந்தது. அதுவரை பக்கத்து வீட்டு தொலைபேசி தான். ஒருவாறாக அதுவும் வந்தது. அந்தத் தொலைபேசியிலும் துணிந்து இண்டர்நெட் வாங்கியது நாங்களாய்த்தான் இருக்கும். நான் கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் வரை அந்த வீட்டில் தான் இருந்தோம். பின் சென்னைக்கு மாறி வந்த உடன் வாடகைக்கு விட்டு, பின் சில வருடம் கழித்து விற்றே விட்டோம். 

அந்த வீடு தான் நேற்று என் கனவில் கேட்டது –

“வீடென்றால்  வெறும் மணல், செங்கல், சிமெண்ட், ஜல்லி, இரும்பு இவைகளால் கட்டப்பட்ட ஒன்றா? இல்லை அதற்கும் மேலா?”

***

4 Replies to “வீடு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.