வாராதே இனி வார்தா

“ராகு காலத்துக்கு முன்னால கிளம்பிடுங்கோ. ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணு. அடையார் ட்ராவல்ஸ்ல சொல்லிட்டேன்.. ஏழரைக்கு வந்துடுவான்”

அம்மாவின் பேச்சுக்கு தலையாட்டியபடியே கடைசி நேரத்தில் வாங்கிய பொடி,அப்பளம் போன்றவற்றைக் கைப்பையில் வைத்தேன்.

குடும்பமாக கணவர் மகனோடு, வந்திருந்த மூன்று வாரங்கள் காற்றில் பறந்த இறகாய் கண்ணை விட்டு மறைந்தே போய்விட்டன.

அம்மா எப்போதும் தைரிய லட்சுமி தான். என்னை ராஜஸ்தானுக்கு அனுப்பினாலும் சரி, சிங்கப்பூருக்கு அனுப்பினாலும் சரி, விண்வெளிக்கே அனுப்பினாலும் அழுவதாய் காட்டிக்கொள்ளமாட்டாள். பற்கள் தெரியும் முகம் நிறைந்த புன்னகை.

பளீர் மஞ்சள் நிற சூரியனுக்கு முகம் காட்டிக்கொண்டே எங்கள் ஜாஸ்மின் என்கிளேவ் குடியிருப்பின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்திருந்த சனீஸ்வர ஸ்வரூபங்கள்,” கா கா” என்று கத்திய கத்தலுக்கு, என் அம்மா அரை இட்லியைப் பேரன் கையில் கொடுத்து போட வைத்து விடைகொடுத்தாள். பேரனும் பாட்டியுமாக, குடியிருப்பைச்சுற்றி நடைபோட்டார்கள்.

இந்த மூன்று வாரங்களில் அது அவர்களின் தினசரி வழக்கமாக மாறிவிட்ட ஒன்று. வரும்போது முன்வாசலிலிருந்து வெற்றிலைகளைப் பறித்து வந்தாள்.

அதற்குள் நானும் குளித்துக் கிளம்பியிருந்தேன்.

அப்பாவுக்கு நான் ஊருக்கு போய் இறங்குமுன்னரே, பேரனுக்கு முறுக்கு, ஜாங்கிரி, தட்டை வாங்கி சம்படங்களில் அடுக்கியிருக்க வேண்டும்.

மனதால் விடை கொடுக்க முடியாமல் கனத்துப்போகும் பொழுதுகள் இவை தான். இருவரும் நான் வந்திறங்கிய இரு நாட்களில் ஐந்து வயது பேரனின் கன்னத்தில் அங்கங்கே இருக்கும் கொசுவின் பல் தடங்களைக்கண்டு பதறிப்போனார்கள்.

சூரியனைச் சுற்றும் கோள்களைப்போல என் மகனைச் சுற்றி தான் அம்மா அப்பாவின் முழு கவனமும் இருக்கிறது.

சில நாட்கள் நாங்கள் யாரும் எழுமுன்னரே அப்பா லட்சுமி சாகரில் இட்லி, வடை, இடியாப்பம், பொங்கல் என்று நடக்கப்போகும் போதே வாங்கி வந்துவிடுவார்.

நான் ஏதேதோ யோசனையில் நின்றிருக்க, அம்மா என் கணவருக்கு இட்லிகளைத் தட்டில் வைத்து சூடாகப் பரிமாறினார். ஒரு பக்கம் மிளகாய் பொடியும், மற்றொரு பக்கம் மணமான கொத்தமல்லி சட்னியும் என. 

அம்மா வீடு தரும் சுகம், தாய்ப்பறவையின் இறக்கைக்குள் இருக்கும் கதகதப்பு. அதை என் அம்மா, ஒவ்வொரு முறை என்னை அழுந்த கட்டி, முத்தமிடும்போதும் உணர்ந்திருக்கிறேன்.

“இந்தா நீயும் சாப்பிடு. இப்போ தானே பாலைக் குடிச்சான் .குழந்தைக்கும் தனியா இட்லி வெச்சுருக்கேன்!”

என்று பொட்டலத்தையும் நீட்டிய முகத்தில் முதுமை தன் கரங்களைப் பதிக்க ஆரம்பித்திருந்தது.

எப்போது இந்தியா போனாலும், அம்மா தான் தங்கவேல் நாடார் கடையில் தொடங்கி, தகரத்தில் செய்த கிளிப் வரை வாங்க உடன் வருவாள். அப்பாவுக்கு நான் பொருள்களை வாங்கிக் குவிக்கிறேன் என்று அவ்வப்போது கோவம் வரும். எல்லா அப்பாக்களுக்கும் இப்படியும் முகம் இருக்கிறது!

சிங்கப்பூரில் கட்டிய பெட்டியில், அம்மாவுக்கென, கொண்டு வரும் அரிசி சேவை, வியட்நாம் பில்டர், யா குன் காயா காபி, குங்குமப்பூ, மேடைத்துடைக்க துணி, முஸ்தபா வழுவழு புடவைகள், பிஸ்கட் வகைகள், கைப்பைகள், தேன் போன்றவற்றை எடுத்து அம்மாவிடம் நீட்டும் பொழுதுகள், என் சிறிய நன்றி பாராட்டும் தருணமாக இருக்கும்.

நான் இழக்கும் 340 நாட்களை, இந்த இருபது நாட்களுக்குள் சமன் செய்யும் துலாபாரம் உலகில் எங்கும் இல்லை என்றாலும் முயற்சி செய்கிறேன். அம்மா என்னோடு தான் புது மெட்டி மாற்றுவார்; சேலைகள் வாங்குவார். நாற்காலிகளுக்கான சிறுமெத்தைகளை மாற்றுவது, வீட்டின் பரண்களில் உள்ளவற்றை சுத்தம் செய்வது, புது செடிகள் வாங்கி வருவது, மாலை நேர பெசன்ட்நகர் கடற்கரையில் அலையில் நிற்பது, கபாலீஸ்வரரை தரிசிப்பது என்று எங்களால் முடிந்த வரை பொழுதுகளை நிரப்பிக்கொள்வோம். அடுத்த ஆண்டு வரை காற்று போகாமல் இருக்க!

ஆசீர்வாதம் செய்து, திருநீறு பூசி வாசல் வரை வந்தவர்களிடம்,

“பை தாத்தா, பை பாட்டி, அப்புறமா வரேன்” என்று மழலை மொழியில் சொன்ன பரத்தை, முத்தமிட்டுத் தீர்த்தார்கள்.

விமான நிலையம் வரை யாரும் பேசவில்லை.

ட்ராலியில் மூன்று கனமான பெட்டிகளையும் கைப்பைகளையும் வைத்து ஏர் இந்தியா சேவை முனையை அடைந்தோம். பெட்டிகளை அனுப்பிவிட்டு, கைப்பைகளோடு, குடியேறல் சோதனையை கடந்தோம்.  பரத் இயேசு நாதர் போல கைகளைப் பிரித்து சோதனைக்கு ஒத்துழைத்தான். ஹிக்கின்போதம்ஸ், கைத்தறி அங்காடிகள் என்று சுற்றியாயிற்று. காலை பத்தரைமணிக்கு விமானம். இன்னும் ஒன்றும் சொல்லவில்லை.

மற்ற விமானங்களுக்கு மட்டும் அழைப்புகள் வந்தபடியிருந்தன.

11:45 மணிக்கு, 

“ஏர் இந்தியா விமானம் AI346இல் சிங்கப்பூர் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு:

 சிங்கப்பூரிலிருந்து வரும் விமானம் தாமதம் அடைந்திருப்பதால், சிங்கப்பூருக்கு செல்லும் விமானம் தாமதமாகும். நாங்கள் விமானம் மதியம் இரண்டு மணிக்கு புறப்படும். ன எதிர்பார்க்கிறோம். தாமதத்திற்கு வருந்துகிறோம். பயணிகள் அனைவரும் உங்கள் மதிய உணவை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.நன்றி”

என்ற அழைப்பு கவனம் ஈர்த்தது.

அங்கங்கே அமர்ந்திருந்த பயணிகள், அனுமதிச்சீட்டோடு வரிசையில் நின்றார்கள். விமானத்தில் கொடுக்கப்பட இருந்த உணவை இங்கேயே விழுங்கினோம்.

வழக்கமான மதிய நேர வெயில் இல்லாமல், வானம் மேகமூட்டமாக மாறியது. அங்கிருந்த தொலைபேசியில் அம்மாவுக்கு விவரம் சொன்னேன்.

மாலை நான்கு வரை ஏர் இந்தியாவிலிருந்து ஒருவரையும் காணவில்லை.

குழந்தைகள் விளையாட தொடங்கினார்கள். கல்யாண மண்டபமோ, சர்வதேச விமான நிலையமோ, குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமும் இல்லை.

ஆறு மணி ஆனதும், ஒரு சில குடும்பங்கள், வீட்டுக்குத்திரும்பி போனார்கள்.

“புயல் வரப்போகுதாம் சார். நியூஸ்ல சொன்னானாம்”

அவ்வளவாக மழையில்லை.

சுரேஷ் என்பவர் எங்கள் அருகில் அமர்ந்திருந்தார். அவர் மகள் வர்ஷாவும், பரத்தும் தான் விளையாடிக் கொண்டிருந்தனர். 

கொஞ்ச நேரம் காணாமல் போன சுரேஷ், கையில் ஜுர மருந்தும், குரங்கு குல்லா, போர்வை, இத்தியாதிகளோடு வந்தார். பெட்டியிலிருந்து மகளுக்காக எடுத்து வந்தாராம்.

பீகார் மாநிலத்தில், விதவை பெண்ணுக்கு, சொத்து கிடைக்கக் கூடாதென்று, அவளைச் சூனியக்காரி என்று சொல்லி கல்லால் அடித்துகொல்வார்களாம்.

சூனியக்காரியாக சென்னையை நனைத்த மழையின் கற்றைகள் கல் அடியாக புதிய விமானநிலையத்தின் கண்ணாடி சுவர்களில் அடிக்க ஆரம்பித்தன.

வட திசை, குட திசை, குண திசை, தென்திசை

திசைகள் எல்லாம் தொலைந்தது போல தான் இருந்தது.

பல மணிநேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து வெறித்திருப்பதன் பலன், மனம் பதினாறு திசைகளிலும் புரவியின் வேகத்தில் பறப்பது தான்.

சும்மா இருக்க நாங்கள் என்ன அருணகிரிநாதரின் வம்சமா!

“இப்போ தான் ஞாபகம் வருது..சான்றிதழ்கள் எல்லாமே பெட்டிக்குள்ள தான் இருக்கு. நானும் போய் கேட்டுப்பாக்கறேன்.”

எழுமைக்கும் ஏமாப்புடைய கல்வி என்று அய்யன் சொன்னாலும், சான்றிதழ் இல்லாமல் அறிவாளி என்று இங்கு யார் வேலையில் அமர்த்துகிறார்கள்?

பெட்டிகள் அடுக்கிய பக்கமெல்லாம் தண்ணீர் தான். என் கணவர் போய் எடுத்து வந்தார்.

அம்மா வீட்டில் ஒரு தரைவழி தொலைபேசி வைத்திருந்தது இந்த நேரத்திலும் ஆறுதலாக இருந்தது.

“அம்மா. கொஞ்சம் பேர் வீட்டுக்கு போயிட்டாங்கமா”

“வழி எல்லாம் மரம் நிறைய விழ ஆரம்பிச்சிருக்கு. இங்கே இப்போ மெழுகுவத்தி தான் ஏத்தி வெச்சிருக்கேன். நீ இப்போ கிளம்பாதே”

“நீ பத்திரமா இருமா”

வயதானவர்கள் இப்படி சட்டென வரும் புயலை எப்படித்தனியே சமாளிப்பார்கள்?

அக்கம்பக்கம் இருப்பவர்கள் எல்லாரோடும் என் அம்மாவுக்கு நல்ல நட்பு உண்டு. பக்கத்துவீட்டு அக்காவுக்கும் சொல்லிவைத்தேன்.

“பட் பட் பட் பட்”

“மடேல்”.

எங்களுக்குப் பக்கத்திலிருந்த கதவு எண் 17 . காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் நொறுங்கியது.

இன்னும் பலமான காற்று எங்களை நடுங்கவைத்த போது, எங்கே போனார்கள் விமான நிலைய அதிகாரிகள் என்று எல்லாரும் தேடினார்கள்.

வெள்ளை நிற சட்டை, கருநீல நிறத்தில் கால் சட்டை அணிந்த அலுவலர் எங்கள் எல்லாரையும் பழைய விமானநிலையைக்கட்டிடம் நோக்கி நகர்த்தினார். கண்ணாடிக் கூரைகளின் புகழ் தான் நடிகர் விவேக் உலகறிய சொல்லி விட்டாரே!

மதிய உணவின் மீதங்களை எடுத்து உண்டோம்.

இரவு முழுவதும் இருக்கையில் இடுங்கியபடி குழந்தைகளை மடியில் கிடத்தி அமர்ந்திருந்தோம்.

அறிமுகமானவர்களில் சிங்கப்பூரில் ஓய்வு பெற்ற ஆசிரியரின் குடும்பமும், ஃபிரெஞ்சுக்காரர் ஒருவரும் இருந்தார்கள்.

வீட்டுத்தொலைபேசியில் பதில் இல்லாமல் போகவே, அப்பாவின் அலைபேசியில் அழைத்தேன்.

“அம்மா என்ன பண்றே மா?”

“மழை ரொம்ப கொட்டித்தீர்க்கறது. நான் ராஜியாத்துக்கு அப்பாவோட வந்துட்டேன்”

ராஜி பக்கத்து வீட்டு அக்கா.

 என்ன தான் வெளிநாட்டு வாழ்க்கை சுகமாக இருந்தாலும், பெற்றவர்களைத் தனியே தவிக்கவிட்டு போகும் இந்த வாழ்க்கை உயர்வில் முழு நிம்மதி என்றும் இல்லை. 

வயதான முதியவர்கள், என்ன உடல் நிலை இருந்தாலும், காலம் கருதி எல்லாருடனும் முகமலர்ச்சியோடு பேசவேண்டியிருக்கிறது.

பெரும்பாலான குடியிருப்புகளில், பிள்ளைகள் வெளிதேசங்களிலிருந்து வந்து போகும் வேடந்தாங்கல் பறவைகளாகவும், முதியவர்கள் வயதானாலும் அவர்களுக்கு நிழல்தரும் கனிமரங்களாகவும் மாறிவிட்ட காலத்தின் கோலம்.

விழுதுகள் வேர்களைத்தாங்கி பிடிக்கமுடியவில்லை.

இருதலைக்கொள்ளியாக வெளிநாட்டில் கால் ஊன்றி வளர ஆரம்பித்த பிறகு, மீண்டு வந்து சேர்ந்துவிட வேண்டும். ன்று எண்ணும்போது, ஊழலும், சாதி சார்ந்த புறந்தள்ளல்களும், எங்கோ இருப்பதே மேல் என்று நினைக்கவைக்கின்றன.

புயலிலே ஒரு தோணியாக, சென்னை நகரம் இரவு முழுதும் தத்தளித்திருந்தது. கிட்டத்தட்ட பத்தாயிரம் மரங்கள் விழுந்திருந்தன. பல வீடுகளில் தண்ணீர் புகுந்திருந்தது.

பிரளயத்தின் பிம்பத்தை இயற்கைக்காட்டி மனித மனதுக்குள் பயத்தை நுனி வரை நிரப்பியிருந்தது.

காலை சூரியன் முன்னாளின் இயற்கை சண்டைகளை மறந்து உதித்து வந்தது.

“உங்க கிட்ட பேஸ்ட் இருக்கா?”

திருமண மண்டபத்தில் கடன் வாங்கும் உறவினர் கூட்டம் போல, எல்லாரும் பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

ஒன்பது மணி வரைக்கும் ஒரு தகவலும் இல்லை. மீண்டும் நாங்கள் வெளியேறி, குடியேறலுக்கான வரிசையில் நிற்கவேண்டுமென்றார்கள். அன்றைய விமானத்தில் பயணம் செய்ய வாய்மையைத் தீட்டிக்கொண்டு, குதிரைவால் தலையும், குதிகால் செருப்புகளுமாக வரிசையில் பெட்டியோடு நின்றவர்களைப்பார்த்து கோபம் வந்தது.

போர்க்கால சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் போல, கலைந்த தலையும், சிவந்த கண்களுமாக நாங்களும், புதிதாக பிறந்தவர்கள் போன்ற உற்சாகத்தோடு நின்ற அவர்களும் என்று விமான நிலையம் ஸ்வரபேதங்களோடுத் தடுமாறியது.

“எங்களுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும்” என்று சட்டையைப்பிடிக்காத குறையாக ஒரு சிலர் விமான ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

சிங்கப்பூர் ஆசிரியர் முன்னிரவே தன் தூதரகத்தோடு பேசியிருந்தார்.

ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?. நாங்கள் காத்திருந்து வானத்திலிருந்து பறந்து வந்த வெள்ளையும் சிவப்பு நிற வாலும் கொண்ட வெண்பறவையைத் தொலைக்கத் தயாராக இல்லை.

இதுவரை வீட்டிலிருந்து கிளம்பாதவர்களுக்கு, இன்றைய விமானத்தில் இடமில்லை என்று செய்தி அனுப்பி எங்களை இருக்கைகளில் அமர்த்தினார்கள்.

விமானம் புறப்படுவதற்குள், AI346 வாட்ஸாப்ப் குழுமம் தொடங்கப்பட்டது.

ஃபிரெஞ்சுக்காரர் வீடுகளின் உள்புற வடிவமைப்பாளர். சிங்கப்பூர் ஆசிரியரின் மகளும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் தான்.

விமானத்திற்குள் சென்றாலும், புழுக்கத்தில் நெளிந்தபடி ஓரிரு மணிநேரங்கள் சென்றன. முடிவாக மதியம் இரண்டு மணியளவில், “அம்மா கிளம்பப்போறேன்மா. நீயும் அப்பாவும் ஜாக்கிரதை” சொல்லும்போதே சில நேரங்களில் எந்த ஜாக்கிரதையும் உதவாது என்பது என் மரமண்டைக்கு உறைக்க, கண்ணீரோடு, கைபேசியை அணைத்தேன்.

சிங்காரச் சென்னையின் மேலெழுந்த விமானம், அண்ணா சமாதி, கடற்கரையைத் தாண்ட மேகங்கள் சூழ விரைந்தது.

விமானம் சாங்கி வந்தடைந்தபின், எல்லாரும் வழக்கமாக அவரவர் வழியில் போகாமல், ஒரு நாள் உறவாக இருந்தாலும், காத்திருந்து. விமானியோடு குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

இனி எத்தனை முறை விமானத்தில் பயணித்தாலும், வார்தா என்று யாரும் கூப்பிட்டால், நாங்களும் திரும்புவோம்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.