பேரா.சுந்தரனார் விருது

This entry is part 10 of 10 in the series கி.ரா. - அ.ரா.

39

புதுவையிலிருந்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வந்த புதிதில் கி.ராஜநாராயணனைப் பல்கலைக்கழகத்திற்கு அழைக்கும் முயற்சிகளை ஒவ்வொரு ஆண்டும் செய்தேன். பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறையை ஆரம்பித்து என்னை முதல் முழுநேர ஆசிரியராகத் தேர்வுசெய்த துணைவேந்தர் முனைவர் வே.வசந்தி தேவி அதனைத் தொடர்ந்து தூண்டிக்கொண்டே இருந்தார். “ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை நமது பல்கலைக்கழகத்திலும் அவர் வருகைதரு பேராசிரியராக நியமிக்க முடியும்; வருவார் என்றால் ஏற்பாடு செய்வோம்” என்றார். புதுவைக்குப் போன பின்பு திரும்பவும் கோவில்பட்டிக்குத் திரும்புவதில்லை என்ற முடிவை மனதளவில் எடுத்திருந்ததால் அந்த அழைப்பை அவர் ஏற்கவில்லை. ஒரு கருத்தரங்கிற்காகவாவது அழைத்துவிடலாம் என்று முயன்றபோதும் அவர் வருவதைத் தவிர்த்துவிட்டார். அதனால் அந்த முயற்சியையே கைவிட்டுவிட்டேன்.

தொண்ணூற்றைந்தாவது பிறந்தநாள் விழாவைப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடிய நிலையில் அவரது படைப்புகள் குறித்து ஒரு விரிவான கருத்தரங்கம் ஏற்பாடு செய்து அவரை அழைக்கலாம் என்று முயற்சி செய்தோம். அதுவும் நடக்கவில்லை. கடைசியாக 2017 இல் பல்கலைக்கழகம் வழங்கும் உயரிய விருதான பேரா.சுந்தரனார் விருதை வழங்கிச் சிறப்பிப்பது என்று முடிவெடுத்துப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்தோம். அவரும் வருவதாக ஒத்துக்கொண்டார். அப்போது துணைவேந்தராக இருந்த பேரா.கி.பாஸ்கருக்கு மிகுந்த மகிழ்ச்சியோடு காத்திருந்தார்.

பேராசிரியர் சுந்தரனார் விருது 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போதைய துணைவேந்தர் முனைவர் அ.க. குமரகுருவின் முயற்சியில் ஓர் அறக்கட்டளை நிறுவப்பட்டு, அதன் வைப்புத்தொகையாக ரூ .25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட து. அதன் வட்டித்தொகையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாட்டுத்துறையில் சிறப்பான பங்களிப்பு செய்பவருக்கு ஒரு லட்சம் பணமுடிப்பும் ஒரு பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. தொடங்கப்பட்ட ஆண்டுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் பேராசிரியர்களுக்கே அவ்விருது வழங்கப்பட்டது. அதனைக் கொஞ்சம் திசை திருப்பி, வருகைதரு பேராசிரியராகவும் படைப்பாளியாகவும் விளங்கிய கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு வழங்குவது என்ற முடிவை எடுத்தபோது பலரும் பாராட்டினார்கள். அதேநேரம் சிலரிடமிருந்து எதிர்மறைக்கருத்துகளும் வந்தன. பொதுவாக எதிர்மறைக்கருத்துடையவர்களுக்கு அவரது மொழி இலக்கியப்பங்களிப்பு என்ன என்பது தெரியாமல் இருந்தது. அதனால் விழா அழைப்பிதழோடு அவரது பங்களிப்புகள் குறித்த சிற்றேடு ஒன்றைத்தயாரித்து அனைவருக்கும் வழங்கினோம்.

ஒரு லட்சம் விருதையும் பாராட்டுச் சான்றிதழையும் பெற்றுக்கொள்ள நேரில் வருவேன்; என்னைப் புதுச்சேரிக்கே வந்து அழைத்துச் சென்று திரும்பவும் புதுச்சேரியில் கொண்டுவந்து விடும் பொறுப்பை கழனியூரன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கடிதம் எழுதினார். கழனியூர் என்பது பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் ஒரு சிற்றூர். அந்த ஊரின் பெயரைத் தனது புனைபெயராகக்கொண்ட கழனியூரன் கி.ரா.வின் நாட்டுப்புறக்கதைத் தொகுப்பு வேலையிலும் வட்டார வழக்குச் சொல்லகராதி உருவாக்கத்திட்டத்திலும் பங்கேற்றவர். அவரது கதைசொல்லி இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். அவரும் என்னிடம் சொல்லிவிட்டுப் புதுவைக்குக் கிளம்பிப்போனார். கி.ரா. பல்கலைக்கழகத்திற்கு வரப்போகிறார் என்ற மகிழ்ச்சியில் எல்லா வேலைகளையும் செய்திருந்தோம். சிறப்பு அழைப்பாளராக அந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற வண்ணதாசனை அழைத்திருந்தோம். வண்ணதாசனும் கி.ரா.வும் அன்பால் நெருங்கியவர்கள். வண்ணதாசனின் தந்தை தி.க.சி. காலம் தொடங்கிக் குடும்ப நட்புகொண்டவர்கள். மகிழ்ச்சியோடு அவரும் ஒத்துக்கொண்டார்.

எல்லா மகிழ்ச்சியும் விழாவிற்கு முந்திய நாள் முடிந்துபோனது. தனிக் கார் ஒன்றில் பயணம் செய்து நெல்லைக்கு வரும் ஏற்பாட்டிற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனைக்காகச் சென்றபோது “இப்போது பயணம் செய்வது நல்லதல்ல; முடிந்தால் ரயில் பயணம் மேற்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டதாகவும், உடனடியாக ரயிலில் சிறப்பு இருக்கைகள் பெற இயலவில்லை; எனவே மகன் பிரபியும் கழனியூரனும் வருகிறார்கள்; மன்னிக்கவும்” என்று தொலைபேசியில் சொல்லிவிட்டார்.

பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. துணைவேந்தருக்கு எப்படிச் சமாதானம் சொல்வது என்பதுதான் பெரிய சிக்கல். அவரது ஏமாற்றத்தைத் தீவிரமாகக் காட்டினார். விழாவை ஒருவாரம் தள்ளிவைக்கலாம் என்றார். ஆனால் அப்போதும் அவர் வருவார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பது எனக்குத்தெரியும். எனவே துணைவேந்தரைச் சமாதானப்படுத்தி விழாவை நடத்தி பணமுடிப்பை அவரது மகனிடம் வழங்கி அனுப்பிவைத்தோம். எழுத்தாளர்களை பாராட்டுவது என்பது எழுத்திற்காகத்தானே என்ற தேற்றுதலோடு அவருக்குப் பேரா.சுந்தரனார் விருது 2016 -2017 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்டது.

கி.ரா.வின் சொந்தக் கிராமம் இடைசெவல். அந்தக் கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில் இருக்கும் பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். அதன் வளாகத்திற்குள் ஒருதடவையாவது அழைத்துவந்துவிட வேண்டும் என்று நினைத்த எனது நினைப்பும் பல்கலைக்கழகத்தின் ஆசையும் கடைசி வரை நிறைவேறவே இல்லை. என்றாலும் அவரது நாவல்களையும் சிறுகதைகளையும் பாடமாக்கிக் கற்பித்துக் கொண்டிருக்கிறது. முனைவர், ஆய்வியல் நிறைஞர் போன்ற பட்டங்களுக்கு ஆய்வாளர்கள் ஆய்வுசெய்து முடித்துள்ளார்கள். பாடத்திட்டத்தின் பகுதியாக வைத்து மாணாக்கர்களுக்குக் கற்பிக்கிறது.

**********

40

கி.ராஜநாராயணனைக் கடைசியாகப் பார்த்தது ஏப்ரல், 2019. இந்தக் கல்வி ஆண்டின் இறுதியில் – 30, ஜூன் 2019 இல் ஓய்வு பெறுகிறேன். அதன் பிறகு புதுச்சேரிக்கு வரும்போது குடும்பத்தோடு வர முயல்கிறேன். “அமெரிக்காவில் இருக்கும் மகன் ராகுலனும் வருவதாகச் சொல்லியிருக்கிறான். அவனது மனைவி/மருமகள் பானுரேகா உங்களின் கதைகளை வாசித்தவர். பேரன் பெயர் முகிலன். சென்னையில் இருக்கும் மகள் சிநேகலதாவும் வருவார். மருமகன் பிர்ஜித்துக்கும் பாண்டிச்சேரியோடு தொடர்புண்டு. புதுச்சேரி சந்நியாசி குப்பத்தில் இருக்கும் ரானே பிரேக் லைன் என்னும் மோட்டார் வாகன உதிரிப்பாகத் தொழிற்சாலையில் வேலைசெய்தவர். அந்த நேரத்தில் தான் திருமணம். அவர்கள் வழிப்பேரன் ஹர்ஜித் நந்தா. பேரன்கள் இருவரையும் உங்கள் மடியில் உட்காரவைத்துக் கதை கேட்க வேண்டும் என நினைக்கிறார்கள் எனது பிள்ளைகள். புதுச்சேரிக்கு நீங்கள் வந்தபோது சிறுவர்களாக இருந்த பிள்ளைகள்; உங்கள் மடியில் உட்கார்ந்து கதைகேட்ட பிள்ளைகள் இப்போது அவர்கள் பிள்ளைகளை உங்கள் மடியில் உட்காரவைத்துக் கதை கேட்க நினைக்கிறார்கள்” என்று சொன்னபோது ‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அழைத்துவந்துவிடுங்கள். நாமெ எவ்வளவு காலம் இருப்போம்’ னு யாருக்குத் தெரியும் என்று சொன்னார். அப்படிச் சொன்னாலும் நூறு ஆண்டுகள் கடக்க வேண்டுமென்று ஆசை இருந்தது என்பதையும் அந்த முகம் சொன்னது. அப்படிச் சொல்லிவிட்டு வந்தபிறகு பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு தேர்வு தொடர்பாகப் போனேன். அந்த முறை புதுச்சேரி ஊருக்குள் செல்லவேண்டிய குறிப்பான வேலை இல்லை. கி.ரா.வைப் பார்க்க மட்டுமே போக வேண்டும். காலையில் அந்த வேலைக்காகச் சென்னையிலிருந்துதான் கடற்கரைச் சாலை வழியாகப் பேருந்தில் வந்து இறங்கினேன். திரும்பவும் அதே பாதையில் பயணிக்க வேண்டும் என்பதால், பிற்பகல் பல்கலைக்கழகத்தின் முதன்மை வாசலுக்கு வந்த சென்னைக்குச் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் நின்ற போது ஒரு கார் அங்கே நின்றது. சென்னை மீனம்பாக்கத்தில் ‘ஏர்போர்ட் சவாரிக்காகப் போகிறது வண்டி; அடையார் அல்லது திருவான்மையூரில் இறங்கிக் கொள்ளலாம்; பேருந்து கட்டணத்தோடு 25 ரூபாய் அதிகம் என்றார். ஏறிவிட்டேன். ஊருக்குள் போகவில்லை. கி.ரா.வைப் பார்க்கவும் இல்லை. சில மாதங்கள் கழித்து கணவதி அம்மா மரணத்தின் போது எங்கும் போகமுடியாத நிலை. கண்ணுக்காக மருத்துவ மனையில் இருந்தேன். பின்னர் இலங்கைப் பயணம், கரோனா முதல் அலையில் வீடடங்கு. திருநெல்வேலியிலிருந்து திருமங்கலத்திற்கு என்று சொந்த அலைச்சல்கள்.

2019 ஆகஸ்டு அல்லது அக்டோபரில் பாண்டிச்சேரியில் போய் சில நாட்கள் தங்கிவிட்டுப் பழைய நினைவுகளை மீட்டுக்கொள்ள அவர்களும் தயாராகவே இருந்தனர். மீட்டப்படும் நினைவுகளில் ஒன்றாகக் கி.ரா. தாத்தாவைச் சந்திப்பதும் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டார்கள். பெரிய தேடுதல்களோ, திட்டமிடுதல்களோ இல்லாமல் மகள் சிநேகலதாவையும் மகன் ராகுலனையும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள முத்தியால் பேட்டை மடத்தா பள்ளியில் சேர்த்தேன். கத்தோலிக்க மடத்துச் சகோதரிகள் நடத்தும் அந்தப் பள்ளிக்குப் புனித ஜோசப் பள்ளி என்று பெயர் இருந்தாலும், அந்தப் பள்ளியை அந்தப் பெயரால் அழைப்பதில்லை. பெண்களால் நிர்வாகம் நடந்ததால் அனைவரும் மடத்தா பள்ளி என்றே அழைத்தனர். பெரிய பள்ளிகள் இருக்கும் இடங்களில் வீடுகள் வாடகைக்குக் கிடைக்கவில்லை. வீட்டு வாடகை குறைவாக இருந்த பகுதியில் பெரிய பள்ளிகள் இல்லை. நான் பணியாற்ற இருந்த நாடகத்துறை இருந்த பகுதி ஜமீந்தார் கார்டன் என்று அழைக்கப்பட்டது. பெரியபெரிய வீடுகள் இருந்தன. ஆனால் வாடகை அதிகம். முத்தியால்பேட்டை அங்காளங்குப்பம் பகுதியில் தான் வாடகை குறைவாக இருந்தது.

என்னோடு மதுரை காமராசர் பல்கலையில் முதுகலை படித்துவிட்டு, தஞ்சை மாவட்ட அரசர் கல்லூரியில் பணியாற்றியபின், புதுவைக்கு மாறிய நண்பர் ஆ.திருநாகலிங்கம் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக இருந்தார். அவரது வீடு அங்காளங்குப்பத்தைத் தாண்டிய சோலைநகரில் இருந்தது. அதுவும் கடலோரத்தில் இருந்த ஒரு குப்பம் தான். நாடகத்துறையில் பயிற்றுநராக இருந்த வ.ஆறுமுகமும் அங்குதான் இருந்தார். மீனவர்கள் வாழும் பகுதிகளைக் குப்பம் என்ற பெயரில் அழைத்தாலும் நடுத்தரவர்க்கம் அங்கு அதிகமாகும் பகுதிக்கு நகரெனப் பெயர் சூட்டிக்கொள்வது வழக்கமாக இருந்தது.

மகள் மடத்தா பள்ளியில் ஐந்து வகுப்புகள் முடிந்தவுடன் புதுவை ஏழாம் புனித நாள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தபோது மகனையும் மூன்றாம் வகுப்பில் சேர்த்தோம். அவன் நான்காம் வகுப்பு வரும்போது அதன் கிளையொன்றை முதலியார் பேட்டைப் பகுதியில் ஆரம்பித்து அங்கே மாற்றிவிட்டார்கள். பள்ளியை மாற்றவில்லை. பள்ளிக்கூட வாகனத்தில் காலை 7 மணிக்கு ஏற்றி அனுப்புவோம். மகளோ அப்போதே மிதிவண்டிப் பயணம். இருவருக்கும் அந்தப் பள்ளிகளைப் பார்க்கவேண்டும். அத்தோடு புதுச்சேரியில் 30 ஆண்டுகளில் நடந்துள்ள மாற்றங்களைப் பார்த்துவிட நினைத்தார்கள். அவர்கள் பார்க்க நினைத்த பட்டியலில் கி.ரா. தாத்தாவும் இருந்தார்.

தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றும் மகனுக்கு அமெரிக்காவில் பணி. அங்கு அவனது வேலைக்கான ஒப்பந்த காலம் ஆறு ஆண்டுகள். அதற்குள் வந்து போவதில் சில சிக்கல்கள். அமெரிக்காவின் ட்ரம்ப் போட்ட விதிகளில் பலரும் கலங்கியிருந்தார்கள். ஓய்வுக்குப் பின் நான் டிசம்பரில் இலங்கைக்குப் போகும் பயணத்திட்டம் ஒன்றை வைத்திருந்தேன். அதனால் புதுவை போகும் திட்டத்தை நானும் தள்ளிப்போட்டேன்.

இலங்கை போய்வந்து ஒரு மாதத்திற்குள் கரோனாவும் வந்து சேர்ந்துவிட்டது. 2020 பிப்ரவரி தொடக்கம் டிசம்பர் வரை ஊரடங்கு; வீடடங்கு எனப் பயணங்களே இல்லாத நாட்கள். அதற்குள் திருநெல்வேலியிலிருந்து திருமங்கலத்திற்கு இடப்பெயர்வு. 2020 பிப்ரவரியில் நடந்திருக்கவேண்டிய அந்தப் பெயர்வு டிசம்பரில் நடந்தது. இடையில் மருமகனும் மகளும் புனேவிற்கு இடம்பெயர்ந்தார்கள். எல்லாம் சேர்ந்து புதுச்சேரிக்குப் போகவே இல்லை. கி.ரா.வைப் பார்க்கவும் இல்லை. இடையில் கணவதி அம்மாவின் மரணச் செய்தியைக் கூடப் போய்ப் பார்த்து விசாரிக்க முடியவில்லை. இப்போது அவரது இறப்புச் செய்தி வரும்போது கரோனாவின் இரண்டாவது அலையின் பயமுறுத்தல். பாண்டிச்சேரி நினைவுகள் போலவே கி.ரா. வின் நினைவுகளும் காற்றிலேயே கரைந்துகொண்டிருக்கிறது.

***

Series Navigation<< கிராவின் திரைப்பட ரசனை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.