
நகரம்
இத்தனை மனிதர்கள்
நகரங்களில் அல்லாடுவதைப்
பொருளாதாரத்தின் கணக்குப்பிள்ளை
கூட்டிக் கழித்து
கணக்கு பார்த்துக் கொண்டிருந்தான்
கட்டிடங்களின் கற்கள் போலியாய்
கண்ணாடியை உற்பத்தி செய்தது
குளிரூட்டப்பட்ட அறையில்
ரசாயன தனிமையில்
அப்பழுக்கற்ற சுவர்களில்
நீதியின் விதிகள் எழுதப்பட்டிருந்தது
அவர்கள் வாகனங்களை ஓட்டுவதில்
முனைப்பாக இருந்தார்கள்
வீட்டில் இருப்பவர்களைத்
தொலைக்காட்சி பிம்பங்களின் வழியே
இலகுவாக ஆட்சி செய்தது
மனித மனங்கள் மேலோட்டமாக
நல்லதுபோல் தோன்றுவது மட்டுமே
இன்றைய தேதியின் மிச்சம் மீதி
நல்லவனாக இருப்பவன்
கிணற்றில் தவறி விழுந்து விட்டது போல் துடிக்கிறான்
கொதித்துக் கொண்டே இருக்கிறது
சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்
அவன்
ஆனாலும் ஆகாவிட்டாலும்
எது நடந்தாலும் நடக்கவில்லை என்றாலும்
அது இறந்த காலம்
எதிலும் சிக்காமல் இருப்பது
ஏற்கனவே சிக்கியிருப்பதின் பொருட்டு
சாத்தியம் ஆகிறது
யார் நான் என்ன வேண்டும் எனக்கு
என்பதற்கு ஒரு போதும்
பதில் இல்லை இங்கே
உரையாடல் உரையாடல்
அவன் தலையில் என்றும்
ஓயாத உரையாடல்
அவனது கேள்விக்கு அவனே பதில்
வெளியே கேட்கும் கேள்விகளுக்கு
மூட்டை மூட்டையாய் பதில்கள்
மூட்டை மூட்டையாய் அர்த்தங்கள்
எதுவும் சிந்தாமல்
சிதறாமல் பார்த்துக்கொள்கிறான்
வாழ்நாள் எல்லாம் கலைடோஸ்கோப்
காட்சிகளாக அவனை மாற்றிக்கொண்டே இருப்பது யார்
ஆதார சுருதி
அவன் இறப்புக்கு அப்பால் இருந்தால்
அது இப்பொழுதும் இருக்கிறது
கவிதை
முதலில் நான் அதன் உருவத்தைப் பார்த்ததும்
அது ஒரு கவிதை என்பதை
அதைப் படிக்காமலே தெரிந்துகொண்டேன்
ஒரு பாம்பைப் பார்ப்பது போல்.
என்றைக்கும் படிக்கக்கூடிய சொற்றொடரை
யாரோ எழுதிவிட்டது போலவும்,
என்றும் புதிதாய்
இனிவரும் எழுத்து மனிதர்களுக்கு
வழி விடுவது போலும்,
சரித்திரத்தின் பாதையில்
என்னை ஒரு ஓரமாக அழைத்துச் செல்லும்
அந்தக் கவிதையின் பொருட்டு
ஒரு குகை மனிதன்
எழுதிய வார்த்தைகளாகக்
குறைந்த ஒளியில்
அதை நான் படிக்கத் தொடங்கினேன்.
இப்பொழுது நான் புரிந்து கொண்டேன்,
உலகில் உள்ள அனைத்தையும்
சுருக்கிய ஒரு வார்த்தை தான்
கவிதை என்பதை.
அலையலையாய் படிந்து கிடக்கும்
அடுக்குகளை நான் நகர்த்தினேன்
அம்பை எய்தது போல்
சொற்கள் வந்து தைத்தன
அப்பொழுதும் அதற்கு அப்பாலும்.