புவி சூடேற்றம் பாகம்-13

This entry is part 13 of 23 in the series புவிச் சூடேற்றம்

(பருவநிலை மாற்றம் சார்ந்த விஞ்ஞான திரித்தல்கள் தொடர்)

மேலும், சில சாதுரியமான பருவநிலை மாற்றம் பற்றிய திரித்தல்களை அலசுவோம். 

பருவநிலை மாற்ற மாதிரியுருக்கள் மிகவும் தோல்வி மனப்பான்மை கொண்டவை (pessimistic models)”

முதலில், விஞ்ஞானம், வியாபாரம் போன்ற விஷயமல்ல. வியாபாரத்தில், பல விஷயங்களை ஊதி வாசிப்பது, மற்றும் மிகவும் நம்பிக்கையான அணுகுமுறை (optimism) அவசியமாகக் கருதப்படுகிறது. ஈலான் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு சொல்லும் அபாயங்களைப் பற்றி அதிகம் பேச மாட்டார். அவரது வியாபாரப் பணி (இவர் பெளதிகம் படித்தவர்), முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பது. இதே மஸ்க், ஃபால்கன் ராகெட் வெடித்தால், இந்தத் துறையில் இவ்வகை அபாயங்கள் சகஜம் என்றும் சொல்லுவார்!

இந்த வகை திரித்தல்களில் ஈடுபடுபவர்கள், விஞ்ஞானிகள், வியாபாரிகளைப் போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். வியாபாரத்தில், எந்த ஒரு விற்பனை மாதிரியுருவும், மூன்று குறிக்கோள்களை முன் வைக்கும். நம்பிக்கை நிறைந்த, அவநம்பிக்கை கொண்ட  மற்றும் நடைமுறையை ஒத்த (எதார்த்தமான) குறிக்கோள்கள் அவை. இதை optimistic, pessimistic and realistic என்று சொல்வதுண்டு. 

விஞ்ஞானத்தில் உருவாக்கப்படும் மாதிரியுருக்கள் இவ்வாறு குழப்புவதில்லை. இயற்கையிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர்கள் விஞ்ஞானிகள். அபாயமிருந்தால், அதைச் சொல்ல வேண்டும்; முழுவதும் புரியவில்லை என்றால், அதையும் சொல்ல வேண்டும். வேண்டுமென்றே மறைக்க இதில் ஒன்றும் இல்லை. 

அத்துடன், விஞ்ஞானத்தைத் திரிப்பவர்களிடமிருந்து நமக்குக் கிட்டுவது பெருமளவும் ஒரு இரண்டாம் கட்டத் தாக்குதல். 

முதல் கட்டம், மாதிரியுருக்கள் நம்பத்தகுந்தவை அல்ல என்று சொல்வது. 

இந்த வாதம் வேகாத பட்சத்தில், இரண்டாம் கட்டமாக, மாதிரியுருக்கள் தோல்வி மனப்பான்மை படைத்தவை என்று குழப்புவது.

பருவநிலை மாற்ற மாதிரியுருக்கள், என் பார்வையில், சற்று நம்பிக்கை நிறைந்த மாதிரியுருக்கள். இந்த மாதிரியுருக்களின் கணிப்பு, பூமியின் சராசரி வெப்பம் 2020 –ஆ அண்டில், 1 டிகிரி உயரும் என்பது. உண்மை அதுவல்ல; இன்னும் மோசமான 1.5 டிகிரி என்று இன்று தெரிய வந்துள்ளது. 

ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு நாம் மனதில் கொள்ள வேண்டும். பருவநிலை மாற்ற விஞ்ஞானிகள், நீண்ட காலப் பார்வையுடன், எதிர்காலம் பற்றிய கருத்தைத் தெரிவிப்பவர்கள். ஏதோ ஒரு பழைய காலம் பற்றிய விஷயங்களுக்கு சாட்சியங்கள் கொண்டு வருவது எளிது. எதிர்காலம் அப்படியல்ல. இதனால், பொதுவாக சற்று அவநம்பிக்கை இந்த கருத்துக்களைக் குறித்து உருவாவது இயற்கை. ஆனாலும், விஞ்ஞானிகளின் பல கருத்துக்கள் நம்பிக்கை கொண்ட பார்வை உள்ள்வை என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

Arctic sea ice melt

உதாரணத்திற்கு,  ஆர்க்டிக் பெருங்கடலில் குன்றி வரும் பனிப்பாறைகள் பற்றிப் பார்த்தோம். விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பை விட (மாதிரியுருக்களின் உதவியுடன்) இந்த பனிப்பாறைகள் அதிகமாகவே உருகியுள்ளன. உண்மையாகச் சொல்வதானால், விஞ்ஞானிகளின் பருவநிலை மாற்ற மாதிரியுருக்கள், சற்று கூடுதலாகவே நம்பிக்கையூட்டுபவையாக உள்ளன!

அதிக கரியமில வாயு மனிதகுலத்திற்கு நல்லதே

இதைச் சொல்லுவதோடு, இரு விதமான நிரூபணங்களையும் முன் வைக்கிறார்கள். பசுமைக் குடில்களை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு, கரியமில வாயு, வெப்பத்தைக் கூட்டுகையில், செடிகள் நன்றாகவே வளர்ந்து பயன் தருகின்றன. அது போலவே, இந்த பூமி ஒரு பசுமைக் குடில். கரியமில வாயு அதிகமானால், அது ஒன்றும் பிரச்சினை அல்ல. 

மேலோட்டமாகப் பார்த்தால், இந்த வாதம் சரியானது போலப் படும். ஆனால் நிஜத்தில் அது சரியில்லை. எதிர் வாதங்களைப் பார்ப்போம். 

முதல் விஷயம், இந்தப் பசுமைக் குடில்களில், செடிகளுக்கு வேண்டிய சத்துக்கள், நீர் யாவும் சரியான அளவில் செலுத்தப்படுகின்றன. இந்த பூமி, பசுமைக் குடிலைப் போல, கட்டுப்பாடான அமைப்பல்ல. பசுமைக் குடிலில் மலையில்லை, பனிப்பாறை இல்லை, பருவமழை இல்லை, வெள்ளமில்லை, காட்டுத் தீயில்லை, ஓடும் நதிகளில்லை, ஏரிகள் இல்லை. 

இந்த மிகச் சிக்கலான பூமி என்ற சூழலில், கரியமில வாயு செய்யும் வேதியல் மாற்றங்கள், பசுமைக் குடிலைப் பார்க்கையில், மிகவும் வேறுபட்டது. அதிகமான வெப்பநிலையில் தண்ணீரே ஒரு பிரச்சினை – வளர்ச்சி சத்துக்களை விடுங்கள். அத்துடன், நதிகள், மலைகள், பனிப்பாறைகள், கடல் எல்லாம் இந்த சிக்கலான பருவநிலையைத் தீர்மானிக்கின்றன. கரியமில வாயுவின் அதிகரிப்பு, பல்வேறு எதிர்பார்க்க முடியாத மாற்றங்களை இயற்கையில் உருவாக்குகிறது. பசுமைக்குடிலைப் போல, நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

50 மில்லியன் வருடங்களுக்கு முன், பூமியில், சில காலங்களுக்கு கரியமில வாயு அதிகரித்ததை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்ளுகிறார்கள். இந்த காலத்தில், உயிர்கள் தழைத்தன. மடியவில்லை. இதனால், கரியமில வாயு அதிகரிப்பால், நாம் தழைப்போம், மடிய மாட்டோம்!

இதுவும் அருமையான ஒரு வாதம் போலத் தோன்றும். இதற்காகத் தான், ஆரம்பத்தில் சுருக்கமாக,  பூமியின் பருவநிலை பற்றிய வரலாற்றைச் சொல்லியிருந்தேன்.  

LIP and extinctions

முதலாவதாக, 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், மனிதர்கள் இந்த பூமியில் இல்லை. உயிர்கள் தழைத்தன என்பதை எதை வைத்துக் கொண்டு சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. இன்றைய தொல்லெச்ச எரிபொருள்கள் உருவாவதற்குக் காரணமே, அந்த காலங்களில் மறைந்த உயிர்களே! நாம் அறிந்தவரையில், 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்த பூமியை ஆண்ட டைனோசர்கள் மறைந்தது மட்டும்தான். இந்த விளக்கப்படம் என்ன காட்டுகிறது? பூமியின் எந்த ஒரு மிகப் பெரிய புவியியல் நிகழ்விலும், கரியமில வாயு உயர்வதைக் காட்டுகிறது. 

ஆனால், இவ்வகை நிகழ்வுகள், சில மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்ந்துள்ளன. உயிரினங்களுக்குத் தங்கள் வாழ்வைச் சீரமைத்துக் கொள்ள நேரம் கிடைத்தது. நாம் இன்று எதிர்கொள்வது, வெறும் 150 ஆண்டுகளில் பெருமளவிலும், துரிதமாகவும் நடக்கும்  கரியமில வாயு அளவின் மாற்றம். இது போல வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. இதனால் உருவாகும் மாற்றங்களை ஓரளவே நம்மால் ஊகிக்க முடியும். 

அத்துடன் விளைவுகளை மாற்றுவதும் நம் கையில் இல்லை. அதனால், நம்மிடம் உள்ள ஒரே வழி, கரியமில வாயு, காற்றில் கலக்கும் அளவைக் குறைத்தல்.

பருவநிலை மாற்ற விளைவுகள் நம்மைத் தாக்க பல நூறு ஆண்டுகள் பிடிக்கும். நாம் ஏன் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?”

இவ்வாறு திரித்து விடுபவர்கள், பெரும்பாலும், தொல்லெச்ச எரிபொருள் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கும். மறைமுகமாக இவர்களின் இந்த திரித்தலுக்கு உள் காரணம், தன் வாழ்நாள் வரை லாபம் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே. மற்றபடி விஞ்ஞான ரீதியில் பார்த்தால் இவர்கள் சொல்வது, சரியான வாதமே அல்ல.

இது எதிர்காலத்தில் அல்ல,  இன்றே இப்போதே உள்ள  நிகழ்வு. உலகமெங்கும், நாம் முன்பைவிட அதிக வறட்சி, தீவிரப் புயல்கள், ராட்சச வெள்ளம்/ மழை,  கட்டுக்கடங்காத காட்டுத்தீ மற்றும் நிலச்சரிவுகளைப் பார்த்து வருகிறோம். கீழே உள்ள விளக்கப்படம் இதைத் தெளிவாக்குகிறது.

காப்பீடு நிறுவனங்கள் இவ்வகைத் தரவுகளைச் சேகரிக்கின்றன. நாம் இங்கு ‘முன்பு’ என்று சொல்லுவது, 1990 -லிருந்து என்பது நோக்கினாலே தெரியவரும். அதெல்லாம் அகஸ்மாத்தாக நிகழ்ந்த விஷயம், சும்மா பெரிது படுத்தக்கூடாது என்று திரித்தல்காரர்கள் சொல்லுவதில் அர்த்தம் இல்லை. ஏனெனில், இந்தத் தகவல், தொல்லெச்ச எரிபொருள் நிறுவனங்கள், தங்களுடைய எந்திரங்களைக் காப்பீடு செய்வதற்குப் பயன்படும் முக்கியத் தரவு!

அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மயாமி போன்ற நகரங்கள், லூயிஸியானா போன்ற மாநிலங்கள், கனடாவின் கிழக்கு மாநிலங்கள், அமெரிக்க தென்மேற்கு மாநிலங்கள் யாவும் அன்றாடப் பருவநிலை மாற்றத்தை எப்படிச் சமாளிப்பது என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன. இந்த முயற்சிகளுக்கு மைய அரசிடமிருந்து உதவி கேட்டு நொந்து போய், வேறு வழியில்லாமல், உள்ளூர் வரிகளைக் கூட்டுவதே வழி என்ற இன்றைய நிலை வேதனைக்குரியது.

பருவநிலை விஞ்ஞானம் தவறுகள் நிறைந்தது. தரவுகளில் ஒட்டுறவு இருப்பது (correlation), புவி சூடேற்றத்தின் தூண்டு காரணம் (causation) ஆகாது

மற்ற திரித்தல்களை விட இது கொஞ்சம் பலவீனமானது. ஆனால், இப்படிச் சொல்லிவிட்டால், சந்தேகத்தை சிலரது மனதில் எளிதாக உருவாக்க முடியும். உண்மை என்ன? கடந்த 50 ஆண்டுகளில்: 

  • மனித நடவடிக்கைகளால் உருவாகும் கரியமில வாயு இரட்டிப்பானது
  • காற்று மண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு 25% அதிகமானது
  • பூமியின் சராசரி மேல்பரப்பு வெபம் 1 டிகிரி அதிகரித்துள்ளது
  • நம் கடல்களில் தேக்கப்பட்ட வெப்பம் 2 x 1023 ஜூல்களாக உயர்ந்துள்ளது. உலகின் இன்றைய அளவுபடி, இது சராசரி 300 ஆண்டுகளின் வெப்ப அளவு
  • கடல்கள், சராசரியாக, 10 செ.மீ. உயர்ந்துள்ளது
  • வெள்ளம், புயல், காட்டுத்தீ, மற்றும் வறட்சி இவற்றின் தாக்கம் மூன்று மடங்கு அதிகமாகியுள்ளது.
  • ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள், 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 6 மடங்கு அதிகமாக உருகி வருகின்றன.

மேலே சொன்ன விஷயங்கள் யாவும் பல விஞ்ஞானிகளாலும் துல்லியமாக அளக்கப்பட்டு, ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம். 

இதைத் திரித்து, எப்படித்தான் கதை கட்டுகிறார்களோ?

அடுத்த பனியுறை பருவம் இன்னும் சில ஆண்டுகளில் தொடங்கும். எல்லாம் சரியாகிவிடும்

இப்படி திரித்து விடுபவர்களின் நோக்கம், கால்பந்தைப் பிறரிடம் தட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதைப் போன்றது. அதாவது, பொறுப்பைத் தட்டிக் கழிப்பது. இப்படித் திரித்து விடுபவர்களுக்கு, பனியுறை யுகத்தைப் பற்றிய வரலாற்றுப் பார்வை கூடக் கிடையாது. முதலில், எப்படி, ஏன் பனியுறை யுகம் உருவாகிறது என்று யாருக்கும் முழுவதும் விஞ்ஞான ரீதியில் தெரியாது. பனியுறை யுகங்களின் வரலாறு மற்றும் மிலன்காவிட்ச் சக்கரத்தின் (Milankavitch cycle) அடிப்படையில், இன்னும் 50,000 வருடங்களுக்கு இன்னொரு பனியுறை யுகம் ஆரம்பிக்காது என்பதே பருவநிலை விஞ்ஞானிகளின் கருத்து. இங்கு புவி சூடேற்றம் பற்றி நாம் சொல்லி வருவது, இன்னும் அடுத்த நூறு ஆண்டுகளில் நம் பூமி மனிதர்களற்ற ஒரு கிரகம் ஆகிவிடும் என்பது. இது ஒன்றும் அவ்வளவு சீக்கிரத்தில் இயற்கையால் சரி செய்யக் கூடிய ஒரு விஷயமல்ல. அவரசரப்பட்டு அழித்த பூமியை மீட்பது மனிதர்களின் கடமை.

***

Series Navigation<< புவி சூடேற்றம் பற்றிய திரிபுகள்புவி சூடேற்றம் பாகம்-14 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.